அகக்கண் தியானம் என்றால் என்ன…?

Polaris Nebula

அகக்கண் தியானம் – உயிர் வழி சுவாசம்

  1. துருவ நட்சத்திரத்தின் இயல்பு

சிறிதளவு விஷத்தைக் கண்டாலும் அதனுடைய செயலாக்கத்தை அடக்கி எரித்துப் பொசுக்கி ஒளியாக மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.

துருவ நட்சத்திரத்தின் அருகில் இன்றைய அணுகுண்டுகளோ அணுக் கதிரியக்கங்களோ செல்ல முடியாது. அதை அடக்கிவிடும். அதன் செயலாக்கத்தைத் தணித்துவிடும். தனக்குள் ஒளிச் சுடராக மாற்றிவிடும்.

சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் தன் செயலாக்கங்களை இழக்காது. அந்த துருவ நட்சத்திரம், அகண்ட அண்டத்தில் வரும் எத்தகைய நஞ்சினையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.

ஆசைகளையும், குரோதங்களையும் வளர்க்கின்றவரிடத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அணுகாது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளின் உணர்வுகளை வளர்த்தவரிடத்தில் ஆசைகளும் குரோதங்களும் அணுகாது.

  1. “முதல் தெய்வங்களின்” (குரு) அருள் பெறவேண்டும்

உங்கள் தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி அவர்கள் அருளாசி பெறவேண்டும் என்று முதலில் ஏங்குங்கள். அவர்களுடைய அருளால் குருவின் அருள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

  1. துருவ நட்சத்திரத்திற்குள் ஊடுருவிச் செல்லவேண்டிய முறை (METHOD)

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை எண்ணி கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வாருங்கள்.

உங்கள் உடலில் உள்ள எல்லா எண்ணங்களையும் உணர்வுகளையும் குணங்களையும் ஒன்றாகத் திரட்டி.., “அழுத்தமாக” துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்.

அவ்வாறு திரட்டிய உணர்வுகளை ஒன்றாகக் குவித்து ஒரு வில்லில் (தனுசு) அம்பை ஏற்றுவது போன்று நாணை நிதானமாக இழுத்துப் பூமியின் வடகிழக்கு திசையில் விண்ணிலே இருக்கும் “துருவ நட்சத்திரத்தை இலக்காகக் குறிவைத்து” புருவ மத்தியிலிருந்து இழுத்து விடுங்கள்.

புருவ மத்தியிலிருந்து ஏக்கத்துடன் வீசும் நம்முடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்திற்குள் நேரடியாக அம்பாகத் தைக்கின்றது.

  1. துருவ நட்சத்திரத்தின் எதிர் அலை (“ECHO”) நீல நிற ஒளி நம் மீது மோதும்

ஒரு இசைக் கருவியை உதாரணமாக வீணையை நாம் தட்டினோம் என்றால் நாதம் எழும்பும். அதே சமயத்தில் அதனுடைய அதிர்வுகள் அலை அலையாக வரும்.

இதைப் போன்று துருவ நட்சத்திரத்தில் மோதும் நம் உணர்வுகள் பாய்ந்து அதிர்வாகி (ECHO) அங்கிருந்து துருவ நட்சத்திரத்தின் அலைகள் உயிரில் உள்ள காந்தம் ஈர்ப்பதால் திரும்ப வந்து புருவ மத்தியில் மோதுகின்றது.

ஆக, திரும்பத் திரும்ப நாம் நம் உணர்வுகளைக் குவித்து புருவ மத்தியிலிருந்து அம்பாக துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தச் செலுத்த அப்படி மோதும் உணர்வின் அதிர்வுகள் அலை அலையாக மாறி அலைத் தொடர்பாக மாறி அலை வரிசையாகின்றது. (FREQUENCY).

இது தொடர் வரிசையாகி துருவ நட்சத்திரத்துடன் நேரடித் தொடர்பு (LINK) நம் உயிருக்கு – நமக்குக் கிடைக்கின்றது.

ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் எப்படிப் “பளீர்..,” என்று வெளிச்சமாகின்றதோ அதைப் போன்று துருவ நட்சத்திரத்துடன் நாம் மோதும் இத்தகைய உணர்வுகள் நம் உயிரிலே இளம் நீல நிறத்தில் ஒளி வீசும்.

அந்த சமயத்தில் புருவ மத்தி சிறிது கனமாகவும் இருக்கும். நாம் புருவ மத்தியிலிருந்து இழுத்து சுவாசிக்கும் பொழுது அலைகள் நமக்குள் “ஜிவ்., ஜிவ்.,” என்று இழுப்பதைப் பார்க்கலாம், உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரொளி இப்பொழுது உயிர் வழி சுவாசமாகி அந்த உணர்வுகள் வாயிலே உமிழ்நீராகக் கரைகின்றது.

  1. துருவ நட்சத்திரத்தின் பேரருளை உடலில் உள்ள அணுக்களின் முகப்பில் இணைக்க வேண்டும்

இவ்வாறு வரும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை கண்ணின் நினைவு கொண்டு எங்கள் ரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்குங்கள்.

இப்பொழுது நம் உடலில் இருக்கும் சுமார் 5 அல்லது 6 லிட்டர் ரத்தம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகள் படர்கின்றது.

அடுத்து, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களிலும், அறியாது உட்புகுந்த ஜீவ ஆன்மாக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

இப்பொழுது, ரத்தத்தில் இருக்கும் பல கோடி ஜீவ அணுக்களின் முகப்புகளிலும் அந்த சக்தி இணைகின்றது.

அதே சமயத்தில் ஜீவ ஆன்மாக்களின் முகப்பிலும் அந்த சக்தி இணைகின்றது.

திரும்பவும், புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்கு அம்பு போன்று நினைவைச் செலுத்துங்கள். துருவ நட்சத்திரத்தில் மோதி, அங்கிருந்து வரும் எதிரலை (ECHO) அதை உயிரின் வழியாக இழுத்து சுவாசியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் பரவச் செய்து, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாகச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.

  1. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நம் ஆன்மாவிற்குள் கொண்டுவரும் முறை

திரும்பத் திரும்ப “நினைவு”

  1. புருவ மத்தியிலிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செல்லவும்,
  2. துருவ நட்சத்திரத்திலிருந்து உயிர் வழி இழுத்து சுவாசிக்கவும்,
  3. கண்ணின் நினைவு கொண்டு அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்யவும்,
  4. அந்த சக்தி பெறவேண்டும் என்று மறுபடி புருவ மத்திக்குக் கொண்டு வந்து உயிரான ஈசனிடம் வேண்டுவதும்தான் “தியானம் செய்யவேண்டிய முறை”

அதாவது வட்டம் போன்று (CIRCULATION) புருவ மத்தியில் ஆரம்பித்து புருவ மத்தியிலே முடிக்கும்போது அலை அலையாக இழுக்கும் பொழுது துருவ நட்சத்திர சுவாசமானது உடல் முழுவதும் சுழன்று வருகிறது.

இப்படி சுழலச் சுழல உடலின் வெப்பத்தால் கொதித்து அந்த துருவ நட்சத்திர அலைகள் உடலிருந்து மணங்களாக வெளிப்படத் தொடங்குகின்றது.

உடலிலிருந்து வெளிப்படும் துருவ நட்சத்திரத்தின் மணம் ஏற்கனவே நம் உடலைச் சுற்றியிருக்கும் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் அலைகளைப் பிளந்து நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து கழற்றி வெளியே தள்ளிவிடுகின்றது.

நம் உடலைச் சுற்றியிருக்கும் காற்று மண்டலம், அதாவது நம் ஈர்ப்பு வட்டம் தான் “ஆன்மா”.

நாம் கண் வழி உற்றுப் பார்த்த உணர்வுகள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த உணர்வலைகளைக் கவரும் பொழுது நம் ஈர்ப்புக்கு வரும் உணர்வலைகள் நமது ஆன்மாவாக மாறுகின்றது.

நம் ஆன்மாவில் அதாவது நம் ஈர்ப்பு வட்டத்திற்குள் எதைக் கவர்கின்றோமோ அதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம்.

அது புருவமத்தியில் உயிரில் பட்டவுடன் நாதமாகி எண்ணங்களாகி சொல்லாகவும் செயலாகவும் இயக்கச் செய்கின்றது.

இப்படி உருவான அணுக்களின் மலம்தான் நம் உடலாக உருவாகியுள்ளது. உருவான அந்த அணுக்களுக்கு நம் உயிர் இந்த பூமியின் காற்று மண்டலத்திலிருந்து உணவை எடுத்து நம் ஆன்மாவாக மாற்றி தொடர்ந்து அதைச் சுவாசிக்கச் செய்கின்றது.

ஆக, எத்தனையோ விதமான இந்த உணர்வுகள் அனைத்தும் நம் ஆன்மாவாக மாறிவிடுகின்றது. அந்த ஆன்மாவில் உள்ளவற்றைத் தூய்மைப்படுத்தும் நிலைதான் உயிர் வழி சுவாசமான மேலே குறிப்பிட்டுள்ள தியானம் செய்யும் முறை.

இப்படி தியானிக்கும் பொழுது நம் ஆன்மாவில் துருவ நட்சத்திர அலைகள்தான் இருக்கும். பிற உணர்வுகள் நம் ஆன்மாவிக்குள் வர முடியாது. நம் ஆன்மா பரிசுத்தமாகின்றது.

  1. துருவ நட்சத்திர ஈர்ப்பு வட்டத்திற்குள் நாம் வாழத் தொடங்குகின்றோம்

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் சேர்க்கும் பொழுது நம்மிடமிருந்து வெளிப்படும் மணம் அனைத்து விஷங்களையும் வெல்லக் கூடியதாக இருக்கும்.

உயிர் வழி அதாவது புருவ மத்தியின் வழி விண்ணின் ஆற்றலைச் சுவாசித்துப் பழகிக் கொண்டால் நம் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை அடைகின்றது.

நாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழத் தொடங்குகின்றோம்.நமக்கு இன்னொரு பிறவி (உடல்) இல்லை.

எந்தத் துருவ நட்சத்திரத்தைக் குறி வைத்து இழுத்து சுவாசிக்கின்றோமோ அந்த மணம் நம் ஆன்மாவில் பெருகி அதன் முலாமாக உயிரிலே சேர்ந்து யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் நமது உயிர்.

அங்கே சென்று பேரின்ப பெருவாழ்வு பெற்று ஏகாந்தநிலை அடைந்து எத்தகைய இன்னலும் இல்லாது எதிர்ப்பும் இல்லாது என்றும் பதினாறு என்ற அழியா ஒளி சரீரம் பெறமுடியும்.

இது இறுதியானதும், உறுதியானதும், மனிதன் நாம் எல்லோராலும் சாத்தியமாகக் கூடிய ஒன்றாகும்.

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் எல்லா மகரிஷிகளின் அருளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.

ஓ..ம் ஈஸ்வரா குருதேவா

ஞானக் கதவு…

mystical-door

ஞானக் கதவு…

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் உணர்வுகளைப் படிக்கும் சமயத்தில் பல உணர்வுடன் இருப்பார்கள்.

  1. என் குடும்பத்தில் கஷ்டம்,..,
  2. என் குடும்பத்தில் தொல்லை..,
  3. என் குடும்பத்தில் சண்டை..,
  4. என் பையனின் நிலைகள் இப்படி..,
  5. நான் கடன் கொடுத்தவன் ஏமாற்றுகின்றான்..,
  6. அவன் தரவே முடியாது என்கிறான்..,
  7. என் உடல் நிலை சரியில்லை..,
  8. என் குடும்பத்தில் என்னை எல்லோரும் எதிர்க்கிறார்கள்

என்று இப்படிப் பல சிக்கல்களின் உணர்வு கொண்டு தான் இதைப் படிக்கின்றோம்.

எம்முடைய அருள்ஞான உபதேசங்களைப் படிக்கும் நேரம் அந்த மாதிரி அணுக்களானால் அந்த அணுவெல்லாம் தன் உணவாக எதைக் கேட்கும்?

எவர் மேல் பகைமை கொண்டு சிக்கல்கள் ஆகி இந்த உணர்வின் தன்மை அணுவாக ஆனதோ.., “அது அது..,” தன் உணர்ச்சிகளை உந்தும்.

உபதேசிக்கும் உணர்வை எடுக்கவிடாது.., “அது உந்தித் தடைப்படுத்தும்”. “நல்ல உண்மைகளைப் பெறமுடியாதபடி.., தடைப்படுத்திக் கொண்டிருக்கும்”.

தடைப்படுத்தும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்… “எப்படியும் நீங்கள் அதிலிருந்து மீண்டிட வேண்டும்” என்று தான் வலிமையான உணர்வு கொண்டு “உங்கள் கவனத்தை இங்கே திருப்பி” அருள் உணர்வு கொண்டு உங்களுக்குள் பதிவு செய்து கொண்டுள்ளோம்.

ஆக, அந்த மெய்ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் “அணுக்களாக விளைந்து” பகைமையற்ற உணர்வுகள் உங்கள் உடலிலே விளைய வேண்டும் என்ற நிலைக்கு உபதேசிக்கின்றோம்.

உங்கள் பார்வை பகைமையை உட்புகாது தடுக்கும் நிலையாக வர வேண்டும் என்றும்.., “உங்கள் பார்வை” எங்கே பகைமை உருவாகின்றதோ “அங்கேயே.., அதை அடக்கிடும் சக்தி” பெறவேண்டும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

பகைமை என்றால் விஷத் தன்மை கொண்ட விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்திய உணர்வுகள் “எத்தனையோ.., எத்தனையோ” நமக்கு முன் சந்தர்ப்பத்தால் வந்து கொண்டே இருக்கின்றது.

அத்தகையை தீமை செய்யும் நிலைகளை நாம் காண நேர்கின்றது. செவி வழி கேட்கவும் நேர்கின்றது.

இதைப் போல “செவி கொண்டு கேட்டுணர்ந்த உணர்வுகள் உடலுக்குள் பதிவாகி.., கண் வழி கொண்டு நுகர்ந்தறிந்து..,” அதன் வழி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்.., இயற்கையின் செயலாக்கங்களிலிருந்து “நம்மை எப்படி மீட்டிக் கொள்ள வேண்டும்..?” என்பதைத்தான் குருநாதர் காட்டிய வழிகளில் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

சூரியன் எவ்வாறு தன் உணர்வின் தன்மை கொண்டு மற்றவைகளை வளர்க்கின்றதோ அதைப் போன்று குருநாதர் நாம் எல்லோரும் அருள் ஞானம் பெறவேண்டும் என்ற ஆசையில் வளர்க்கின்றார்.

அவர் இன்று சூரியனாக இருக்கின்றார். அகஸ்தியன் பெற்ற உண்மைகளை அவர் கண்டார். அவர் வாழ்க்கையில் அறிந்துணர்ந்தார். அவர் வழியில் அவர் கண்ட உண்மையும் அதன் உணர்வை எனக்குள் பதியச் செய்தார்.

“பதிந்த உணர்வுகளை..,” மீண்டும் நினைவு கொண்டேன். அதை நுகரும்.., அறியும்.., சந்தர்ப்பத்தை எனக்குள் உருவாக்கினார்.

அதன் உணர்வின் தன்மை பெருகும் நிலைகளில்.., “அவர் கவர்ந்து கொண்ட உண்மைகள்.., அவர் வெளிப்படுதிய உணர்வுகள் எதுவோ” அதை நான் பருகினேன்.

எனக்குள் அந்த அணுவின் தன்மையை உருவாக்கினார். அது அணுவான பின் தன் உணவுக்காக ஏங்குகின்றது. அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது.

உணர்வை அறிகின்றேன். “அதையே” இங்கே உங்களிடம் சொல் வடிவில் வெளிப்படுத்துகின்றேன்.

அதைக் கேட்கும் பொழுதும்.., படிக்கும்பொழுதும் உங்களுக்குள் அந்த உணர்ச்சிகளை உந்துகின்றது. இதை உங்களுக்குள் அணுவாக மாற்றிவிட்டால் தெளிந்த மனம் வரும்.

ஏற்றுக் கொள்ளும் பண்பு.., உங்களுக்கு வேண்டும்.

ஆனால், “கதவை அடைத்துவிட்டால்..,! என்ன செய்யும்? யாம் உணவைக் கொடுத்தால் அதை நீங்கள் உட்கொண்டால் தானே உங்களுக்குள் அது சத்தாக மாறும்.

யாம் பதிவு செய்யும் அந்த ஞான வித்துக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உரமாக ஏற்றுங்கள்.

தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்கி அவர்கள் அருளால் குரு அருள் பெற்று குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொருவரும் ஏங்கிப் பெறுங்கள்.

அதனின் துணை கொண்டு தீமைகளை ஒடுங்கச் செய்யுங்கள். மகிழ்ந்து வாழ்ந்திடும் அருளாற்றல் பெறுங்கள். உங்கள் பார்வை எண்ணம் சொல் செயல் அனைத்தும் புனிதம் பெறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நமக்குள் மோதச் செய்ய வேண்டும்

தியானிக்கும் முறை

நல்ல சக்திகளை நமக்குள் சேர்க்கும் முறையும், தீமைகளை அப்புறப்படுத்தும் முறையும்

1. துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நமக்குள் மோதச் செய்யவேண்டும்

எப்படி நாம் காற்றடிக்கும் பம்பை வைத்துக் காற்றடிக்கின்றோமோ.., பெட்ரோல் இன்ஜின் ஓடும் பொழுது.., “அதிலுள்ள பிஸ்டன்” இழுத்துத் தனக்குள் எடுத்துக் கொள்கின்றதோ.., இதைப் போல நம் உயிரின் ஈர்ப்பு அது துடிக்கும் பொழுது.., அதனின் “ஈர்ப்பின் சக்தி” அதிகமாகின்றது.

நாம் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் அழுத்தமாக எண்ணி உயிரின் துடிப்பின் நிலைகளைக் கூட்டும் பொழுது நம் உயிரின் துடிப்பின் வேகம் கூடுகின்றது.

அப்பொழுது, பூமியின் வடக்குத் திசையில் துருவப் பகுதியில் கண்ணின் நினைவைச் செலுத்தி அந்த துருவ நட்சத்திரத்தை எண்ண வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருக்க வேண்டும்.

நம் நினைவுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி நினைவுகளை அதிலே நிலை நிறுத்தி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியைப் புருவ மத்தி வழியாக நுகர வேண்டும்,

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் இளம் நீல ஒளி அலைகளை உயிர் வழியாக

  1. நாம் நுகர்ந்து.., சுவாசித்து
  2. கவர்ந்து..,
  3. இழுத்து..,
  4. புருவ மத்தியில் (நமக்குள்) மோதச் செய்ய வேண்டும்.

“இப்படி மோதச் செய்யும் பொழுது” ஏற்கனவே இருந்த துடிப்பைக் காட்டிலும் அதிகமான நிலைகளை நமக்குள் சேர்க்கப்படுகின்றது.

அப்பொழுது நம் உடலிலே “காந்த சக்தி” கூடுகின்றது. இந்த வேகத்துடிப்புடன் நம் சுவாசத்தை மேல் நோக்கி எண்ண வேண்டும்.

  1. சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை உடல் முழுவதும் பாய்ச்ச வேண்டும்

அவ்வாறு இழுத்துச் சுவாசித்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் “நம் உயிருடன் சுழற்சியாகி” அந்தச் சுழற்சிக்குள் பட்டவுடன் உயிரின் காந்தத் துடிப்புக்குள் மோதியவுடன்.., “அதனுடைய நுண்ணிய அணுக்கள்” அந்த உணர்வினுடைய நிலைகளைக் கவரச் செய்கின்றது.

புருவ மத்தியிலே நம் உயிர் இருப்பதனாலே நம் கண்ணின் புலனறிவை “ஈஸ்வரா.., என்று புருவ மத்தியில் எண்ணி.., உடலுக்குள் அந்த நினைவைச் செலுத்தும் பொழுது” எந்த பாகத்தில் அந்த நினைவைச் செலுத்துகின்றோமோ அங்கே அந்த உணர்வின் நிலைகள் “ஊடுருவிச் செல்லும்” நிலைகள் இருக்கின்றது.

இந்த அலைகள் நம் சுவாச நாளங்களில் ஊடுருவி உடல் முழுவதற்கும் செல்கின்றது. அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம் உடல் முழுவதற்கும் பரப்பச் செய்கின்றது.

இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும்.

தீமைகளைக் கண்ட அடுத்த கணம் மேலே சொன்ன முறைப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கவர்ந்தால் உடனடியாக அந்தத் தீமையான உணர்வலைகள் நம் ஈர்ப்பை விட்டுக் கடந்து செல்லும்.

ஒரு மேக்னட் ஈர்க்கும் நிலையை மாற்றிவிட்டால் எப்படி விலக்கிச் செல்கின்றதோ அதைப் போல நமக்குள் தீமை புகும் நிலையை தீமை புகாது தடுக்கும் பாதுகாப்பு அரணாக அமையும்.

இவ்வாறு நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும். “நம் ஆன்மா நலமானால்..,” உயிர், உடல், எண்ணம், உணர்வு, சொல், செயல் அனைத்துமே நலமாகும்.

செய்து பாருங்கள்.

engine

நாரதன் எல்லா லோகத்திற்கும் சென்று “ஒவ்வொருவரையும் சந்திக்கின்றான்” – விளக்கம்

Narad muni

இன்று விஞ்ஞானிகள் கம்ப்யூட்டர் என்ற சாதனைத்தை உருவாக்கி அதிலே எந்தெந்த உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றனரோ அதை வைத்து இயக்குகின்றனர்.

“அப்படிப் பதிவாக்கிய நிலைகள் கொண்டு” அடுத்துச் செயல்படுத்தும் பொழுது அதிலே பிழைகள் வந்தால் அந்தப் “பிழைகளைத் திருத்தி.., அது எப்படி இருக்க வேண்டும்..,?” என்று மாற்றியமைக்கின்றனர்.

இதைப் போல் தான் உங்கள் உடல்களில் அருள் ஞானிகளின் உணர்வுகளை ஆழப்பதிவு செய்கின்றோம்.

அதைப் பதிவாக்கிவிட்டால் எப்பொழுது துயரம் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா.., என்று உங்கள் உயிரான ஈசனை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் கவர்வீர்கள் என்றால் அந்த உணர்வுகள் வலுப் பெறும்.

அந்த உணர்வுகள் வீரியமடைந்து.., “தவறு நாம் செய்தோமா..,? அல்லது மற்றவர்கள் தவறு செய்கின்றனரா..,?” என்ற நிலையைச் சிந்தித்து மற்றவர்களுக்கும் நல்வழி காட்டும்.

அப்பொழுது, “நமக்குக் கோபம் வராத நிலையும்.., அல்லது அவர்கள் கோபப்படும் நிலைகளிலிருந்து.., கோபப்படாத நிலையைச் செயல்படுத்தச் செய்யும்” நிலைகளும் வரும்.

ஆகவே, தவறுகள் நமக்குள் வராதபடி அருள்ஞானத்தின் உணர்வின் தன்மை பெறும்.

இதைத்தான் காவியங்களில் ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும் அவன்.., “கலகப்பிரியன்” என்றும் காட்டியிருப்பார்கள்.

மனிதனின் வாழ்க்கையில் இருளை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

தீமைகளை ஒடுக்கி இருளை அகற்றி சிந்திக்கச் செய்யும் அந்தச் செயலின் உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்திக் கொண்டுள்ள உணர்வினை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தினோம் என்றால் நம்மை அறியாமல் பகைமை உணர்ச்சிகளை ஊட்டும் உணர்வுகளிலிருந்து விடுபடச் செய்து சிந்திக்கச் செய்யும் தன்மை நமக்குள் வரும்.

“நாம் ஏன் கோபிக்க வேண்டும்..,?” என்ற நிலையில் உணர்வைச் சமப்படுத்தி அந்தத் தீமையை அடக்கிவிட்டால்.., “பிறர் செய்யும் தீமையான உணர்வுகள்.., நமக்குள் வளராது தடுக்கப்படுகின்றது”.

இவ்வாறு தடுத்துக் கொண்டு சிறிது நேரத்தில் அடங்கிவிட்டால் “அவருக்குள்.., சிந்திக்கும் தன்மை வர வேண்டும்” என்ற உணர்வை நாம் ஊட்டிவிட்டால் அவர் செய்யும் தவறான உணர்வுகள் இங்கே வராது.

அதே போன்று நாம் பண்பு கொண்டு பரிவு கொண்டு ஒரு நோயாளியின் உணர்வைப் பாசத்தால் நுகர நேர்ந்து விட்டால் அந்த வேதனை உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலந்து நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

ஆனால், அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தநாளங்களில் கலந்து அந்த உணர்வுகளை வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

நாம் பெருக்கிய அந்த அருள் உணர்வின் வலுவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அவர் உடலில் படர்ந்து அவர் உடல் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அவருக்குப் பூரண குணம் கிடைக்க வேண்டும் பண்புள்ள நிலைகள் பெறவேண்டும் என்ற இந்த உணர்வுகளை நாம் எடுத்து அங்கே அவரிடம் செவி வழி ஓதும் பொழுது நாம் சொல்லும் உணர்வுகள் அந்த உடலில் ஊடுருவுகின்றது.

அப்பொழுது அது அவரின் வேதனைகளை மாற்றி அவரை நல்லவராக்கும் தன்மை வருகின்றது. நமக்குள் அந்த வேதனை புகாதபடி தடுக்கப்பட்டு அவர்கள் நல்லவராக வேண்டும் என்ற நிலையைத்தான் காட்டுகின்றது.

இங்கே நாரதன் கலகப்பிரியனாகின்றான்.., கலகமோ நன்மையில் முடிகின்றது.

இதைத்தான் நாரதன் என்ன செய்கின்றான்? எல்லோரிடத்திலும் செல்கின்றான். எல்லோரையும் சந்திக்கின்றான்.

ஆக, ஒருவருக்கொருவர் சந்தித்து ஒருவரின் உணர்வுகள் ஒருவருக்குள் கல்க்கப்படும் பொழுது அந்தப் பகைமை உணர்வுகள் எப்படி மாறுகின்றது? பகைமைகளிலிருந்து எப்படி ஒன்று சேர்க்கின்றது என்ற நிலையை அங்கே நாரதனாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மனித உடலுக்கும் காரணப் பெயர்களை வைத்து நாராயணன் என்றும் ரிஷி என்றும் நாரதன் என்றும் காட்டுகின்றனர்.

நாரதன் ஒருவருடன் ஒருவர் சந்தித்து மீண்டும் மற்றவருடன் சந்தித்து.., ஏனென்றால் கண்ணனிடமும் செல்வான்.., கண்ணனுக்கும் சில உபாயங்களைச் சொல்வான்…, மற்றவர்களுக்கும் சில உபாயங்களைச் சொல்வான்.

நமது கண் மற்றவர்களுடைய தீமைகளை நுகர்ந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகிவிடுகின்றது. மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சியால் அந்த தீமை என்ற நிலைகள் வருகின்றது.

அப்பொழுது கண்ணனிடத்தில் இந்த நாரதன் என்ற உணர்வுகள் சென்று “கண்ணன் மாற்றியமைக்கும் உணர்வுகள் எப்படி..,?” என்று உணர்த்துவதற்குத்தான் காவியப் படைப்புகளைப் படைத்துக் காட்டுகின்றனர்.

கண் கொண்டு அந்தத் தீமை செய்யும் உணர்வுகளை நாம் நுகர்ந்தபின் நம் உடலில் எத்தகைய செயல்கள் செயல்படுகின்றது?

இதிலிருந்தெல்லாம் எப்படி விடுபட வேண்டும் என்பதற்குத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமான புத்திரன் என்றும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாதபடி தடுக்கும் மார்க்கத்தை சாதாரண மக்களுக்கும் உணர்த்தப்பட்டது.

தீமைகள் வந்தால் அதிலிருந்து விடுபட ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர வேண்டும் என்று உணர்த்தினார்கள்.

நமக்குள் ஏற்கனவே அறியாத நிலைகள் இருந்தாலும் நாம் பகைமை உணர்வு கொண்டோரைப் பார்க்கும்பொழுதெல்லாம் பகைமை வரும்.

குழந்தை மேல் பாசம் வைத்திருந்தாலும்.., “தன் சொன்னபடி கேட்கவில்லை என்றால்.., அவன் மீது வெறுப்பின் உணர்ச்சியே தான் வருகின்றது”.

இதைப் போன்ற நிலைகளைக் கூட்டாதபடி தடுப்பதற்கு நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துச் சிந்திக்கும் தன்மைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று தன் குழந்தை சிந்திக்கும் ஆற்றல் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படுபவனாக வரவேண்டும். பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டு இந்தச் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவன் செவிகளில் பட்டு அவன் செய்யும் தவறுகளிலிருந்து விடுபடச் செய்யும் இந்த நாரதன் என்ற அருள் உணர்வுகள்.

நாரதன் கலகப்பிரியன்.., கலகமோ நன்மையில் முடியும்.

உயர்ந்த உணர்வின் தன்மை அங்கே சொல்லப்படும் பொழுது அவனுக்குள் தீமையின் உணர்வை நீக்கி தாய் தந்தை சொல்லும் உணர்வைச் சிந்தித்து “அதைச் செயல்படுத்தும் நிலைக்குக் குழந்தை வருகின்றான்.

ஆகையினால் தான் காவியங்களை இவ்வாறு படைத்து உருவங்களை அமைத்துக் கொடுத்து அதன் மூலம் அருவத்தின் செயலைக் காட்டினார்கள் ஞானிகள். உண்மையின் உணர்வைத் தெரியப்படுத்துவதற்காக இப்படி உருவாக்கினார்கள் ஞானிகள்.

இருந்தாலும் அதிலே மாற்றமாகி “நாரதனுக்குச் சக்தி உண்டு.., அதனால் எல்லோரிடத்திலும் செல்கின்றான்..,” என்ற இந்த உணர்வுகளைத்தான் நினைக்கின்றோமே தவிர நாம் ஞானிகள் காட்டிய அருள் வழிகளை அறியவில்லை. அறியவிடாது திசை திருப்பியது இந்த உடல் பற்றுத்தான்.

இனியாவது உயிர் பற்று கொண்டு நாம் அந்த மெய்ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி வாழ்வோம். தீமைகளை வென்று ஒளியின் சரீரம் பெறுவோம். பிறவியில்லா பெரு நிலையை அடைவோம்.

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்வதால் பாதிப்புகள் ஏற்படுமா…?

maharishi

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்வதால் பாதிப்புகள் ஏற்படுமா…?

1.நம்முடைய மூச்சலைகள் என்ன செய்கின்றது..?

நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது “பிறருடைய கடுமையான உணர்வலைகள்” அவர்களுக்குள் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது.

அதனால் அவர்கள் நல்ல உணர்வின் எண்ணங்களையும் அது மாற்றி குடும்பத்திற்குள் ஊடுருவி.., வீட்டிற்குள் “தீய வினைகளாக” உண்டாக்கி விடுகின்றது.

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்க்கும் உணர்வுகள் தோன்றுகின்றது.

பின், வெறுப்பான உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது சுவர்களிலும் தரைகளிலும் பதிவாகிவிடுகின்றது. அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருப்பதால் இங்கே நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலும் பதிந்துவிடுகின்றது.

அப்படிப் பதிந்தபின்.., “நம் உடலிலிருந்து வந்த.., இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு” ஒருவருக்கொருவர் கடுகடுப்பாகப் பேசும் நிலைகளையும் அதனால் வெறுப்படையும் எண்ணங்களையும் நாம் தோற்றுவித்து விடுகிறோம்.

அப்பொழுது நம் காரியங்கள் தடைபடுகின்றது. நாம் எண்ணிய நல்ல காரியங்கள் “இப்படித் தடைபடுகின்றதே..,” என்று வேதனையும் சஞ்சலமும் பட்டுக்கொண்டே இருப்போம்.

ஆக, நாம் எதற்குள் இருக்கின்றோம்?

இப்படி எடுத்துக் கொண்ட தீமையான உணர்வுகளுக்கு மத்தியில் தான் இருக்கின்றோம்.

ஆக, நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வையே.., “மீண்டும் மீண்டும் சுவாசித்து.., நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்”.

பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமி விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைக் கவர்ந்து வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான் சந்தர்ப்பத்தால் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து.., “நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று” ஆகிவிடுகின்றது.

இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து இதைப் போக்க வேண்டும்.

2. கூட்டுத் தியானத்தின் மூலம் வீட்டிற்குள் மகிழ்ச்சியான அலைகளைப் பெருக்க முடியும்

இதைப் போன்று நம்மையறியாமலேயே சேரும் தீமையான உணர்வலைகளை நாம் மாற்ற வேண்டும் என்றால் தீமைகளை வென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள்.

உங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள். வீட்டிலே படரச் செய்யுங்கள்.

உங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உயிராத்மாக்களை எண்ணி “அந்த உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் அழியா ஒளி சரீரம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் சக்தியை நாங்கள் பெறவேண்டும்”. இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இணைத்து உங்கள் உடலைத் தியானித்து விட்டு உங்கள் மூச்சலைகளைப் படரவிடுங்கள்.

நாங்கள் குடியிருக்கும் இந்த வீடு முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். தரைகளிலும்.., சுவர்களிலும்.., மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும்.

எங்கள் வீட்டிற்கு வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று “உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்”.

இந்த உணர்வாலே.., “இழுக்கப்பட்ட அந்தச் சக்திகள்” உங்கள் மூச்சலகள் மூலமாக வீட்டிற்குள் பதிவாகின்றது.

அதே சமயம் தீமை செய்யும் உணர்வலைகள் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும்.

இவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் நம் வீட்டையும், உடலையும், ஆன்மாவையும் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கொண்டு சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.

தினசரி, நாம் நம்மைச் சுத்தப்படுத்துகின்றோம், உடைகளைத் தூய்மைப்படுத்துகின்றோம், வீட்டையும் தூய்மைப்படுத்துகின்றோம். இதுவெல்லாம் “புறத்தால் செய்வது”

ஆனால், “அகத்துக்குள்” வரும் தீமைகளைப் பற்றித் தெரியாமலேயே இருக்கின்றோம். அதை அகற்றவில்லை என்றால் நமக்குள் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் அறியாமலேயே தான் இருக்கின்றோம்.

ஆகவே, இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் மிகவும் நல்லது.

ஏமாற்றுபவர்கள் ஆசை வார்த்தைகளில் சிக்காதீர்கள்…!

LightWorkerKryonAbstract

ஏமாற்றுபவர்கள் ஆசை வார்த்தைகளில் சிக்காதீர்கள்…!

இன்றைய உலகில் நிறையப் பேர் ஆசையில் சிக்கி ஏமாற்றப்பட்டுக் கொண்டுள்ளார்கள். ஆக, ஆசைகளை ஊட்டி மயங்கச் செய்து வாய் பேசாது மூடும்படி ஆக்கிவிடுகின்றனர்.

இன்றைய விஞ்ஞான உலகில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் “ஏமாற்றம் தான் வருகின்றது”. கஷ்டம் அதிகமாகின்றது.., ஆனால் ஏமாறிக் கொண்டேயிருக்கின்றோம்.

நீங்கள் வயலில் விதையை விதைத்துவிட்டுப் போய் ஜோதிடரிடம் கேட்கிறீர்கள். அவர்.., நிறைய வெள்ளாமை “கொட்டும்” என்று சொல்கிறார்.

கேட்டுவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டால்.., “என்ன கொட்டும்?” தரித்திரத்தைத்தான் கொட்டும். செடிகள் அனைத்தும் பட்டுப் போகும்.

ஏனென்றால், தன் பிழைப்பிற்காக ஆசை வார்த்தைகளைச் சொல்லி நமக்குள் ஆசையை ஊட்டி அதன் வழியில் அவர்கள் வாழ்கின்றனர்.

ஜாதகமோ, மந்திர தந்திரம் செய்பவர்களையோ, மற்றவைகளையோ பார்த்தபின் உங்களுக்கு இந்தத் தடவை “அமோகமான விளைச்சல்.., அது அப்படி வரும்.., இப்படி வரும்” என்று சொல்லியபின்.., அப்படியே வந்து பேசாமல் இருங்கள்.

வெள்ளாமை வருமா.., பார்க்கலாம்..!

இதுவெல்லாம் என்ன என்றால்.., நம்முடைய ஆசை கொண்டு நம்மைத் திரை மறைவாக்கி உண்மையை மறைக்கச் செய்யும் நிலைகள் தான்.

ஆக, அந்த ஆசையிலேயே தவழ்ந்து கடைசியில் “ஒன்றும் கிடைக்கவில்லையே..,” என்று வேதனை தான் வரும்.

வேதனைகள் அதிகமாகிவிட்டால் இந்த உடலிலே கடும் விளைவுகளாகி இந்த மனித உடலையே இழக்கச் செய்து அடுத்து விஷமான ஜெந்துக்களாகப் பிறக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிவிடுகின்றது நம் உயிர்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்குத்தான்.., “அவ்வளவு பெரிய சக்தியை” உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாக ஊட்டுகின்றோம்.

நீங்கள் இதை வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் “உங்களைக் காக்க.., உங்கள் எண்ணம்” அது உதவும்.

நீங்கள் ஒன்றுமே செய்யவேண்டியதில்லை…, “மெய்ஞானிகளின் ஞான வித்துக்களை” உங்களிடம் ரிக்கார்டு செய்கின்றோம்.., அவ்வளவு தான்…!

ஒரு விதையைக் கொண்டு பூமியில் விதைத்துவிட்டால் அது என்ன செய்கின்றது?

அந்த வித்தின் தன்மை எதுவோ பூமியின் துணை கொண்டு “தன் தாய்ச் செடியின் சத்தை எடுத்து நுகர்ந்து.., மள.., மள..,” என்று வளரத் தொடங்குகின்றது.

அதிலே எந்தெந்த நேரத்தில் என்ன பருவமோ அதிலே உரமோ, மருந்தோ மற்றதோ அதைப் போட வேண்டும் என்றால் அதைச் சரியாகப் போட்டுவிட்டால் நிச்சயம் நன்றாக விளைகின்றது. அந்தப் பலனைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான், உங்களுக்குப் பருவம் யாம் என்ன சொல்கிறோம்?

“கஷ்டம் வரும் பொழுது.., அந்தக் கஷ்டத்தை விட்டுவிடுங்கள்”. அந்த அருள் ஒளியைப் பெறவேண்டும் என்ற இந்த உணர்வை எடுங்கள்.

பல வகைகளிலும் திரும்பத் திரும்ப உங்களுக்குள் அந்த மெய்ஞானிகளின் வித்துக்களை ஊன்றிக் கொண்டேயிருக்கின்றோம் அல்லவா.

அப்படி ஊன்றி இருக்கும் பொழுது.., “அதற்கு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இந்த உரத்தைக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்.

அது போதும்.

இப்படிச் செய்து கொண்டே வந்தோம் என்றால் உங்கள் உடலில் “ஊழ்வினை என்ற வித்து” வளர்ச்சி அடைந்து கொண்டே வரும். உங்களுக்குள் அந்தப் பலன் கிடைக்கும்.

வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபடக்கூடிய ஞானம் தன்னாலே வரும். மன பலமும் மன தைரியமும் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகையை இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்தும் விடுபட்டு மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.

காணாமல் போகும் அல்லது காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்கும் உபாயம்…!

Lord krishna

காணாமல் போகும் அல்லது காணாமல் போன பொருளைக் கண்டுபிடிக்கும் உபாயம்…!

ஒரு பொருளைக் காணாமல் போட்டால் என்ன செய்கிறோம்? எங்கே வைத்தேனோ..,? என்று தலையைச் சொறிகின்றோம்.

“எங்கே தான் வைத்தனோ..,?” என்று எண்ணினால் சங்கடம் தான் வரும்.

“கீழே பார்த்தீர்கள்..,” என்றால் என்ன நடக்கும்?

ஆன்மாவில் இருக்கும் அந்த உணர்வை அதை நுகரப்படும்போது நமக்கு என்ன செய்கிறது? அப்பொழுது சங்கடம்தான் வருகிறது.

ஆனால் அதே சமயம், “எங்கே வைத்தோம்?” என்று சிறிது நேரம் நம் சிந்தனையைச் செலுத்தினோம் என்றால் இந்த ஆன்மாவை விட்டு அகன்று புற நிலைகளில் நுகரும்.

இந்தச் சிந்தனையின் தன்மை வரப்படும்போது நாம் பொருளை வைத்த உணர்வின் தன்மை அங்கே படர்ந்திருக்கும்.

அந்த உணர்வை நாம் நுகர்வோம். அதை நுகரப்படும்போது.., “பொருளை நாம் இந்த இடத்தில் வைத்தோம்..,?” என்று உணர்ச்சி கொண்டு அதை அறியலாம்.

ஆனால், பொருளை எங்கே வைத்தோம் என்று “தெரியவில்லையே..!” என்று சங்கடமாக எண்ணிணீர்கள் என்றால் உங்களுக்குள் அந்த உணர்ச்சியே வராது. உணர்வை அறியவே முடியாது.

தலையைச் சொறிந்து கொண்டே இருப்போம்.

அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டால் “என்ன…, எதைத் தேடுகிறீர்கள்?” என்பார்.

ஒரு பொருளை வைத்தேன்.., எங்கே வைத்தேன் என்றே இப்பொழுது தெரியவில்லை..! என்போம்.

அவரும் நம்மிடம்.., எங்கே வைத்தீர்கள் என்பார்?

“இங்கே தான்.., வைத்தேன்” என்று வெறுப்பாகத் தான் சொல்ல முடியுமே தவிர.., தேடும் நிலையை ஞாபகப்படுத்தினாலும்.., “காணோம்…!” என்ற உணர்வே இயக்கும், சிந்திக்கும் திறன் இருக்காது.

பொருளை எங்கே வைத்தீர்கள்? வைத்துவிட்டு எங்கிருந்து (எந்த வழியாக) வந்தீர்கள் என்று சிறிது யோசனை செய்து பாருங்கள்..,! என்று சொன்னவுடன் அந்தச் சிந்தனை வரும்.

அங்கே படர்ந்த உணர்வலைகள்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வும்
2.கையிலிருந்து போன அந்த இரண்டு உணர்வும் கலந்து
3.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

அப்பொழுது அந்த உணர்வு வரப்படும்போது அந்த எண்ணங்கள் வரும்.

“ஆஹா.., இந்த இடத்தில் தான் வைத்தேன்..,” என்ற நினைவு வரும். “பொருளைத் தேடி எடுத்து விட்டேன்” என்று சொல்ல முடியும்.

ஆகவே, இதைத்தான் வியாசகர் கண்ணனைக் காட்டி “அதோ வருகிறான்..,” நாரதன்.., ரிஷியின் மகன் நாரதன், நாராயணனின் அபிமான புத்திரன்.

அவனிடம் கேட்டால்.., “தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை அவன் காட்டுவான்” என்று கண்ணன் சொல்வதாகக் காவியப் படைப்புகளாகக் காட்டினார்.

“சாதாரண படிக்காத மக்களுக்கும்.., புரியும் விதமாகக் காட்டியுள்ளார்”.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வலைகளை சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி பரவச் செய்கிறது.

அதைத்தான் ரிஷியின் மகனாக நாராயணனின் (நாராயணன் என்றால் சூரியன்) அபிமான புத்திரனாக வியாசகர் காட்டியுள்ளார்.

அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகி அகண்ட அண்டத்தில் வரும் எத்தகையை நஞ்சினையும் உணவாக எடுத்து ஒளியின் சுடராக பேரொளியாக மாற்றி என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்று வாழ்ந்து கொண்டுள்ளது.

“நம் வாழ்க்கையில் தீமைகள் வரும்போழுதெல்லாம்..,”
1.நம் கண்ணின் நினைவுகள் எங்கே செல்ல வேண்டும்..?
2.எதை எண்ண வேண்டும்..?
3.எதை நுகர வேண்டும்..?
4.தீமையை நீக்கிடும் ஆற்றலை எப்படிப் பெறவேண்டும்..,? என்று
5.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்க்கும் மார்க்கத்தைக் காட்டினார் “வியாசகர்”.

ஒவ்வொரு கால கட்டத்திலும்.., “நம் பூமியில் தோன்றிய ஞானிகள்” அனைவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்துத் தான் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அடைந்த நிலையை அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானியாக நாம் ஆகும் மார்க்கத்தைத்தான் வியாசகர் இவ்வாறு காட்டியுள்ளார்.

தீமை வரும் நேரத்தில் அதை உடனுக்குடன் மாற்றியமைக்கும் “ஆயுதம் (சக்தி)” கொடுக்கின்றோம்

Image

தீமையை நீக்கும் ஆயுதம்

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள்.., நாம் வேடிக்கை பார்க்கின்றோம். அதைப் பார்த்தவுடன் நமக்கும் கோபம் வருகின்றது.

ஒருவன் வலுவான நிலைகளில் அடிக்கின்றான். அடி வாங்கியவன் “ஐய்யய்யோ..,” என்று அலறிக் கொண்டு செல்கிறான். “இருடா.., நான் உன்னைப் பார்க்கின்றான்..,” என்று கோபமாகத் தாக்குகின்றான்.

“இரண்டையும் பார்த்தவுடன்..,” சும்மா போகின்றவனை இப்படி அடிக்கின்றானே என்று நம்மையறியாமலே அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

அடிபடுபவனைப் பார்த்தவுடன் பாசம் வருகின்றது. அடிப்பவனைப் பார்த்தவுடன் கடுமையாகின்றது.

இந்த இரண்டையும் சேர்த்து அவன் மேல் குறி வைத்து ஓடுபவனை நாம் பார்க்கப்படும் பொழுது துணிந்து போய்.., “சும்மா போகிறவனை ஏனப்பா அடிக்கின்றாய்..?” என்று கேட்போம்.

ஆனால், அதே சமயத்தில் அடிப்பவன் முரட்டு ஆளாகத் தெரிந்தால்.., “கேட்டால்.., நம்மையும் உதைத்துவிடுவான்” என்று இந்த உணர்வுகளை எடுக்கும் பொழுது பயமான உணர்வுகளும் வரும்.

இப்படி இரண்டு நிலையும் வரும்.

ஆனால், பய உணர்வு வந்துவிட்டால் என்ன ஆகும்? அடுத்தாற்போல் யாராவது கோபமாகப் பேசினால் “கிடு.., கிடு.., என்று நடுக்கமாகும்.

ஆக, ஏன் பேசுகிறார்கள் எதற்காகப் பேசுகின்றார்கள் என்ற உணர்வு வராது. பய உணர்வுகள் வந்த பின்.., ஒரு பொருளே கீழே விழுந்துவிட்டால் அந்தச் சப்தத்தால் “அதிர்வின் தன்மை ஆகி..,” நம்முடைய சிந்திக்கும் நிலையை இழக்கச் செய்துவிடும்.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் பிறிதொரு உணர்வின் இயக்கங்களாக (இன்னொரு உடலில் ஏற்கனவே விளைந்த உணர்வுகள்) “சிவ தனுசாக” நம்மைத் தாக்குகின்றது.

அதை நாம் மாற்ற வேண்டுமல்லவா..,?

அதற்குத்தான் சக்திவாய்ந்த நிலையை நமது குருநாதர் எமக்குக் கொடுத்ததை உங்களிடம் உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.

எப்படித் தீமைகள் வருகின்றது என்ற நிலைகளை குருநாதர் உணரச் செய்து.., ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை மாற்றியமைக்கும் சக்தியைக் கொடுத்தார்.

அவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள்ளும் பதியச் செய்து உங்களை எல்லாம் “ஆயுள் கால மெம்பராக.., அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே இருக்கின்றேன்”.

ஆக, நீங்கள் எதிலே அதில் மெம்பராகச் சேர்கின்றீர்களோ அதன் வழி கொண்டு பிறவியில்லா நிலை அடைய முடியும். இது.., “விஷ்ணு தனுசு”.

எப்படிப் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இந்த உயிர் தீமைகளை வென்றிடும் சக்தி பெற்ற மனிதனாக நம்மை உருவாக்கியதோ மனிதனான பின் நம் உணர்வுகளை ஒளியாக மாற்ற வேண்டும்.

உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கும் அந்த மகா ஞானிகளின் உணர்வுகளை “அந்த ஆயுதத்தை” அடிக்கடி நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

சண்டை போடுபவர்களை பார்த்தவுடன் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா.., அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலுக்குள் செலுத்த வேண்டும்.

நாம் பார்த்த சண்டை போடுபவரின் உணர்வை கண்ணின் கருவிழி இங்கே பதிவாக்குகின்றது. அடுத்து அதே கண்ணின் நினைவை நாம் துருவ நட்சத்திரத்தின் பால் கொண்டு செல்லும் பொழுது அதை அடக்கி “இது மேலே வந்துவிடுகின்றது”.

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம். “அடடா.., இப்படி ஆகிவிட்டதே..,” என்று “வேகமாக” அந்தப் பாசம் இயக்குகின்றது.

அடுத்த கணம் “ஈஸ்வரா..,” என்று உயிரிடம் வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று இந்த நினைவினைக் கூட்டி “அந்த வேகத்தின் தன்மையைத் தணித்து” தீமையை நீக்கிடும் வீரியத்தின் தன்மையைக் கொண்டு வருதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று நுகரும்பொழுது அந்த வேதனைப்படும் உணர்வுகள் உடலுக்குள் பரவுவதற்கு முன் இதை மாற்றிவிடுகின்றோம்.

அந்த நோயாளி உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படரவேண்டும், அவர் உடல் நலம் பெறவேண்டும் அவர் மகிழ்ச்சிக்குரிய நிலைகளாகப் பெறவேண்டும் என்று இப்படி மாற்றிக் கொள்ள வேண்டும்.

சண்டை போடுபவர்களைப் பார்த்தபின் நமக்குள் வெறுப்பின் உணர்வுகள் வரும்.

அந்த வெறுப்பின் உணர்வுகள் வந்தபின் நாம் ஏதாவது ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்யும் பொழுது சிறிது தடைபட்டால் போதும். என்ன செய்வோம்?

உடனே அந்தப் பொருளைத் “தூக்கியெறி..,” என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதே மாதிரி வெறுப்பான உணர்வுகள் வரும் பொழுது வீட்டில் மனைவி சாப்பாடு எடுத்து வரச் சிறிது நேரமானால்..,போதும். நீ எப்பொழுது பார்த்தாலும் “இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றாய்..,” என்ற நிலையில் வெறுத்துப் பேசும் நிலை வந்துவிடும்.

பொறுமை என்ற நிலையை மாற்றி அதை இழக்கச் செய்துவிடும். இதையெல்லாம் மாற்றவேண்டும் அல்லவா..,?

“பத்தாவது நிலை.., கல்கி” என்ற ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் முழுமையாகப் பெற்று இந்த இருண்ட உலகிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும்.

விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து நம்மைக் காத்து அனைவரும் நலம் பெறவேண்டும் என்பதற்காக “விஷ்ணு தனுசு” என்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் எடுத்துப் பழகுதல் வேண்டும்.

ஆதிசங்கரர் மந்திரத்தால் அவருக்குள் ஏவல் செய்ததை முறியடித்துக் காட்டினார்

adi_shankaracharya_wallpaperஆதிசங்கரர் மந்திரத்தால் அவருக்குள் ஏவல் செய்ததை எப்படி முறியடித்துக் காட்டினார்?

அக்காலத்தில், அரசர்களுடைய நிலைகள் துவைதக் கொள்கையாக இருந்தது. ஆகையால், ஆதிசங்கரர் மீது மந்திர ஒலிகளை ஏவி அவருக்கு “வயிற்று வலியை” உருவாக்கினர்.

“நீ விநாயகருக்கு யாகங்கள் செய்தால்.., உன் வயிற்று வலி நீங்கும்” என்றும் கூறினார்கள்.

அப்போது ஆதிசங்கரர், “இதுவல்ல.., உண்மையான யாகம்” நமக்குள் இருக்கும் உயிரான நெருப்புக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வைச் செலுத்துவதே உண்மையான யாகம் என்றார்.

என்னை இயக்கிக் கொண்டிருக்கும் எனக்குள் ஜீவன் பெறச் செய்து கொண்டிருக்கும் என் உயிரான நெருப்புக்குள், அந்த மகாஞானியின் உணர்வைச் செலுத்துவேனென்றால்.., “என் உடலுக்குள் நீங்கள் ஏற்படுத்திய தீமையின் விளைவை.., என்னால் மாற்றிக் கொள்ள முடியும்” என்றார்.

“நீ புறத் தீயிட்டு.., அதில் பொருளைப் போட்டு.., அதனில் வரும் கருகிய மணத்தை நுகர்ந்தால்.., எனக்குள் அது வராது”.

தீமையை அகற்றிடும் தீமையை அகற்றிட்ட அந்த மெய்ஞானியின் உணர்வை என் உயிரான நெருப்புக்குள் போட்டு அந்த உணர்வின் தன்மையை அலைகளாகப் பாய்ச்சும்போது எனக்குள் விளைந்த தீதினை  “என்னால் அகற்றிட முடியும்.., என்று செய்து காட்டினார்.., ஆதிசங்கரர்”.

இந்தத் துவைதவாதிகள், “எமக்கு அது இல்லை” என்றனர்.

பின் ஆதிசங்கரர் கங்கைக்கரை சென்றவர்தான். அதற்குப்பின் அவர் சரித்திரம் இல்லை.

ஆனால், அவருக்குப்பின் அரசர்கள் துவைதம் என்ற நிலைகளிலேயே யாக கேள்விகள் போன்ற முறைகளிலேயே அரசாட்சி செய்து வந்தனர்.

உண்மையில் ஒவ்வொறு மனிதனையும் கடவுளாக மதி என்றும், அதனின் உணர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொன்ன ஆதிசங்கரருடைய நிலைகள் மாறிவிட்டது.

அவரது இறுதிக் காலம் எப்படிப்பட்டது..? எங்கே சென்றார்…? எங்கே இருந்தார்..,? என்பது யாருக்கும் தெரியவில்லை.

சரித்திரத்தைச் சொல்லச் சொல்லுங்கள். அவருடைய சீடர்களாக இருப்பவர்கள்.., இன்று அந்த உண்மையான நிலைகளை.., “ஏன் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை..?”

அன்று இந்த மக்களுடைய நிலைகளை “அறியாது தீது  விளைவிக்கும் அரச நிலைகளிலிருந்து.., மக்களை நீ மனிதனாக்கு.., அந்த மனிதனை முழுமையாக்கு..,” என்று அன்று சொன்னாரே ஆதிசங்கரர்.

“அதனுடைய நல்ல உணர்வின் தன்மையை” ஏன் பிறரைப் பருகச் செய்யவில்லை?

ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். அதில் பூஜிக்க வரும் மக்களிடம் “காசு வாங்கிப் பிழைப்பேன்..,” என்ற நிலைகளில்தான் ஒவ்வொருவரும் செய்து வருகின்றார்களே தவிர அங்கே வருபவர்கள் நன்மை பெறுவார் என்ற நிலைகள் யாருக்கும் இல்லை.

“நீங்கள் நன்மை பெறுவீர்கள்.., என்று ஆசையை ஊட்டி..,” அதனின் மறைவிலே காசைத்தேடி உண்மையுடைய நிலைகளை மறைக்க முடிகின்றதே தவிர மறைந்த பொருளை கண்டுணரச் செய்யும் நிலை இல்லை.

ஆக, நம்மையறியாது தீது விளைவிக்கும் நிலைகளிலிருந்து காத்துக் கொள்ள முடிகின்றதா? என்றால் அது இல்லை.

இன்றும், விஞ்ஞான உலகில் மனித உணர்வு அனைத்திலும் அழிந்திடும் வெறித்தன்மையைத்தான் ஊட்டுகின்றார்கள்.

“மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்”. ஒவ்வொரு மனிதனும் அவன் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும். அவர்கள் உயர்ந்த குணங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை நாம் நமக்குள் வளர்த்துக் கொண்டால்.., “நாம் அதுவாகின்றோம்…, அவனையும் அதுவாக்க வேண்டும்.”

இந்த உணர்வின் தன்மையை நாம் பரப்பப்படும் பொழுது உடலில் வரும் தீதினை நீக்கிவிட முடியும்.

“மனிதா.., நீ ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்கும் உயிரைக் கடவுளாக மதி” அங்கே கடவுள் வீற்றிருக்கும் ஆலயம் “அது புனிதம் பெறவேண்டும்.. என்று எண்ணு.”

எந்த மனிதன் இங்கே தீது செய்கின்றானோ அந்த உணர்வு அவருக்குள் அறியாது உட்புகுந்து தீதினை விளைவிக்கின்றது. உடலான ஆலயத்தை மாசுபடுத்துகின்றது.

அப்பொழுது அங்கு ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கு தீதான மணங்கள் சேர்ப்பிக்கும் நிலையிலிருந்து அதைத் துடைத்திடும் நோக்கமாக.., “நீ இவ்வாறு செய்..,” என்று தான் அந்த மகாஞானி ஆதிசங்கரர் சொன்னார்.

சிவ தத்துவம்

Image

Eswara Darshan.gif

காலையில் எழும்போதே “ஈஸ்வர தரிசனம்” செய்ய வேண்டும்

கோவிலை அமைத்து அதில் ஈசனுக்குச் சிலைகள் வைத்து அபிஷேகம் ஆராதனைகள் செய்து தேங்காய் பழம் வைத்து நாம் கும்பிட்டுவிட்டால் அதுதான் ஈஸ்வர தரிசனம் என்று நாம் நினைக்கின்றோம்.

ஈஸ்வர தரிசனத்திற்கு இன்று நாம் எப்படிச் செல்கிறோம்?

தேங்காய் பழம் கொண்டு செல்கிறோம். சுவையான நைவேத்தியங்களைச் செய்கிறோம். பின், ஆலயத்திற்குள் வணங்கும்போது எப்படி வணங்குகின்றோம்?

அங்கே தெய்வச் சிலைக்குப் படைக்கப்பட்டிருக்கும் கனிகளை மலர்களை சுவைமிக்க பதார்த்தங்களை நாம் எண்ணுவதில்லை. மாறாக நாம் எதை எண்ணுகின்றோம்?

நம் வாழ்க்கையில் “ஒருவர் நமக்கு இடைஞ்சல் செய்திருந்தால்.., அல்லது ஒருவர் நம்மைக் கோபித்திருந்தால்..,” அவர்களைப் பற்றிய நினைவுகளையே அங்கே ஆலயத்தில் எண்ணிக் கொண்டிருப்போம்.

“கோபித்தவர்களையும்.., இடைஞ்சல் செய்தவர்களையும்..,” ஆலயத்திற்குள் நாம் எண்ணினால் நமக்குக் கோப உணர்வுகள்தான் வரும்.

ஒரு குழம்பு வைக்கும்போது பல சுவையுள்ள பொருகளைப் போட்டு அதில் சிறிது காரத்தை அதிகமாகப் போட்டால் குழம்பில் காரத்தின் சுவையே அதிகமாக இருக்கும்.

இதைப் போன்றுதான் நாம் தெய்வச் சிலைக்கு முன் சுவையான பலகாரங்களையும், நறுமணமான மலர்களையும் வைத்திருந்தாலும் “நமக்கு இடையூறு செய்தவர்களை நாம் எண்ணும்போது.., நமக்குக் கோப உணர்வுகள்தான் வரும்”.

தெய்வ வடிவங்களை உருவாக்கி “ஈஸ்வர சக்தி எது..,” என்ற நிலைகளில் கதைகளை எழுதி “ஈஸ்வரன்…, இந்த நிலைகளில் அனைவரையும் காப்பாற்றுவான்..,” என்று ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால், ஆண்டவனுக்குத் தேங்காய் பழம், நைவேத்தியம் படைத்து ஆண்டவனிடம் உன்னுடைய குறைகளைச் சொல்லிவிட்டால் ஆண்டவன் உன்னைக் காப்பாற்றுவான் என்று மற்றவர்கள் “சாங்கிய சாஸ்திரங்களை” எழுதிவிட்டார்கள்.

நமது உயிரை ஈஸ்வரன் என்றும் நாம் எண்ணிய எண்ணங்கள் எவையோ அவை அனைத்தையும் உயிர் ஈசனாக இருந்து ஜீவ அணுக்களை உருவாக்கி நமது உடலாக மாற்றுகின்றது என்பதை ஞானிகள் காண்பித்தனர்.

உயிரை ஈஸ்வரன் என்றும் உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வின் சத்தை உடலை சிவம் என்றும் காண்பித்தனர் ஞானிகள்.

சிவனுக்கு வாகனமாக மாட்டை வைத்து அதற்கு நந்தீஸ்வரன் என்று பெயரிட்டனர் ஞானிகள்.

சிவனின் கணக்குப் பிள்ளை நந்தீஸ்வரன். நாம் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் போனவுடன் நந்தீஸ்வரா.., அதாவது சுவாசித்த உணர்வின் குணம் நம் உடலுக்குள் உணர்வின் சத்தாக விளைகின்றது.

இப்பொழுது இந்த மனித உடலில் நாம் எந்த குணத்தை அதிகமாக எண்ணி நமக்குள் சேர்த்துக் கொண்டோமோ அந்த உணர்வின் தன்மைக்கொப்ப நந்தீஸ்வரனின் கணக்கின் பிரகாரம் நமது உயிர் நமது அடுத்த உடலை உருவாக்குகிறது என்று “ஈஸ்வர தரிசனத்தில்” ஞானிகள் தெளிவாகக் காண்பித்துள்ளார்கள்.

இந்த மனித வாழ்க்கையிலுள்ள சூட்சம இயக்கங்களை மனிதருக்கு உணர்த்தும் விதமாக “உடலைச் சிவமாக.., உயிரை ஈசனாக..,” காண்பித்தார்கள் ஞானிகள்.

ஆகவே, நம் உயிரான ஈசனை நினைவிற்குக் கொண்டு வருவது தான் ஈஸ்வர தரிசனம் என்றனர் ஞானிகள்.

இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், ஈஸ்வர தரிசனம் என்பதன் மூலம் நமது உயிரை எண்ணும்படிச் செய்தார்கள் ஞானிகள்.

நாம் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தபின் மகரிஷிகள் காண்பித்த அருள் வழியில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி நாம் வணங்க வேண்டும்.

இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டபின்
1.எங்கள் பார்வை பிறர் தீமைகளை நீக்குவதாக இருக்க வேண்டும்,
2.எங்கள் சொல் பிறர் கஷ்டங்களைப் போக்குவதாக இருக்க வேண்டும்,
3.எங்கள் பார்வை பிறரை நல்லவர்களாக்கும் நிலை பெறவேண்டும்,
4.எங்களைப் பார்ப்போரெல்லாம் உயர்ந்த எண்ணங்கள் பெறவேண்டும்
என்று இவ்வாறுதான் நாம் அனைவரும் எண்ணவேண்டும்.

நாம் காலையில் தூக்கதிலிருந்து எழுந்தவுடன் ஈஸ்வர தரிசனம் எனும் நிலையில் நமது உயிரை எண்ண வேண்டும்.

நம் கண்கள் உயிரின் இயக்கத்தின் தொடர் கொண்டு இது நல்லது இது கெட்டது என்று காண்பிக்கின்றது.

நமக்கு ஒருவர் நன்மைகள் செய்திருந்தால் அவரை நாம் அதிகமாக எண்ணுவதில்லை.

ஒருவர் நமக்குத் தீங்கு செய்திருந்தால்.., “நமக்குத் தீமை செய்தானே பாவி…,” என்று “அடிக்கடி” அவரைப் பற்றி எண்ணுவோம்.

இப்படிப்பட்ட உணர்வுகளை காலையில் படுக்கையை விட்டு எழும்போது எண்ணினால் “வேதனை” தான் வரும்.

காலையில் படுக்கையில் உடல் சோர்வடைந்திருக்கும் வேளையில் வேதனை என்ற உணர்வுகள் சுவாசிக்கப்பட்டு நம் உயிரில் மோதும்போது நம் உடலில் வேதனை உருவாகிறது.

அப்பொழுது நம்முடைய ஈஸ்வர தரிசனம் எதுவாகின்றது?

நாம் வேதனை உணர்வு ஒன்றைக் கண் கொண்டு பார்த்து நமக்குள் பதிவு செய்து கொண்டபின் நம்மிடத்தில் வேதனையை உருவாக்கும் நினைவாற்றல் வருகின்றது.

நமக்கு ஒருவர் தீங்கு செய்திருந்து அதன் உணர்வுகள் நமக்குள் பதிவாகியிருந்தால் “நமக்குத் தீங்கு செய்தவர் பற்றிய நினைவே..,” நம்மிடத்தில் வருகின்றது.

இதனின் தொடர் கொண்டு காலையில் நாம் படுக்கையிலிருந்து எழுந்தவுடன்.., இனம் புரியாது “பாவிகள்.., எனக்கு ஏன் இப்படித் தீங்கு செய்கிறார்கள்?” என்ற வேதனை உணர்ச்சிகளைத் தூண்டும்.

வேதனைகளை நாம் எண்ணும்போது நம்முள் உள்ள வேதனையை உருவாக்கும் அணுக்களுக்கு உணவினை அதிகமாக ஊட்டி நமக்குள் வேதனைகளை உருவாக்கும் நோய்களை நஞ்சின் தன்மைகளை வளரச் செய்கின்றது.

இதனை மாற்றுவதற்குத்தான் சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வண்ணம் ஈஸ்வர தரிசனம் என்று காட்டி காலையில் “எழுந்திருக்கும்போதே.., நினைவின் ஆற்றலை நமது உயிரின்பால் கொண்டு செல்ல வேண்டும்..,” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அடுத்து இந்தப் பூமியில் மனிதராகப் பிறந்து மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை வென்று உயிரில் ஒன்றிய உணர்வினை ஒளியின் உணர்வாக மாற்றி இன்று விண்ணில் ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ள “துருவ நட்சத்திரத்தை எண்ண வேண்டும்”.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று பல முறை திரும்பத் திரும்ப எண்ணி தியானிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து எங்கள் சொல்லைக் கேட்போர் எல்லாம் வாழ்வில் இனிமை பெறவேண்டும், எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும், அவர்கள் மன நலம் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இது நம் ஈஸ்வர தரிசனமாக இருக்க வேண்டும். இவ்வாறு நாம் எண்ணும்பொழுது
1.பிறர் நமக்குச் செய்த தீமைகளை மறக்கின்றோம்,
2.பிறருடைய துன்பங்களை மறக்கின்றோம்,
3.மற்ற குடும்பத்தினர் நமக்குச் செய்த இடைஞ்சல்களை மறக்கின்றோம்.

ஆகவே, இது போன்ற உயர்ந்த உணர்வின் தன்மைகளை நமது உயிரில் இணைக்கும்போது நமது உடலில் மகிழ்ந்திடும் உணர்வுகளுக்கு அமுது கிடைக்கின்றது.

மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெறுகின்றோம். ஏகாந்த வாழ்க்கை வாழ முடியும். உடலுக்குப்பின் அழியா ஒளிச்சரீரம் பெறமுடியும்.