காலையில் கண் விழித்ததுமே நாம் செய்ய வேண்டியது என்ன…?

Morning star Polaris

காலையில் கண் விழித்ததுமே நாம் செய்ய வேண்டியது என்ன…?

 

மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பலருக்கும் நாம் பல நன்மைகளைச் செய்கிறோம். நன்மைகள் செய்வதைக் கண்டு நாம் மகிழவும் செய்கின்றோம். இருந்தாலும் நம்மால் நன்மைகள் பெற்றவரோ சந்தர்ப்ப பேதத்தால் தவறு செய்கின்றார்.

அல்லது வேதனைப்படும்படி ஒரு சொல்லைச் சொல்கின்றார் அல்லது வேதனைப்படும்படி ஒரு செயலைச் செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

வேதனை என்பது விஷம். விஷத்தை உட்கொண்டால்
1.நம்மை எப்படி மயங்கச் செய்கின்றதோ
2.இருளடையச் செய்கின்றதோ
3.சிந்திக்கும் தன்மை இழக்கச் செய்கின்றதோ அதைப் போல
4.வேதனைப்படும் உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் நம் சிந்தனை குறைகின்றது.
5.அடுத்தாற்போல் நம் சொல்லும் நல்ல சொல்லாக வராது.

நல்ல சொல் மறைந்தபின் எவ்வளவு தான் மற்றவர்களுக்கு உபதேசம் கொடுத்தாலும் நல்ல வழியைச் சொன்னாலும் அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலிலே விஷம் பட்டபின்… விஷத்தை மீண்டும் பாலிலே சேர்க்கப்படும் போது விஷத்தின் தன்மையே கூடும்.
1.ஆனால் விஷத்தின் தன்மை கூட்டினாலும்
2.நல்ல பாலை அதற்குள் அதிகமாகக் கூட்டும் போது தான் அந்த விஷத்தின் தன்மை குறையும்.

சாதாரணமாக ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அந்தக் குடத்தில் உள்ல பால் எல்லாமே பாழாகி விடுகின்றது. விஷத்தின் தன்மை பாலை ஆக்கிரமித்துக் கொள்கின்றது.

அதற்குள் பல ஆயிரம் குடம் நல்ல பாலை ஊற்றினால் அதற்குள் விஷம் சிறுத்து விடுகிறது. அப்போது விஷம் சிறுத்து விட்டால் பாலிற்கு வீரிய சக்தி கொடுக்கின்றது.
1.அதாவது அந்த விஷம் பாலிற்கு மிகவும் வீரிய சக்திகளைக் கொடுக்கிறது.
2.அது போல பல ஆயிரம் நல்ல குணங்களை நாம் எடுத்தால் தான் வேதனைப்பட்ட உணர்வை மாற்ற முடியும்.

அது வரையிலும் நம்மால் அந்த வேதனையைத் தாங்க முடியுமா…? முடியாது. அதற்குண்டான மனம் இல்லை. வேதனையே ஆக்கிரமிப்பு சக்தியாக மாறுகிறது.

அப்படிக் கடுமையான வேதனைப்படும் நேரங்களில் நம் கண்களைப் பார்த்தோம் என்றால் கரு நீலமாகத் தெரியும். ஒளி மங்கியே தெரியும். அத்தகைய வேதனையான நேரங்களில்
1.ஒரு எழுத்தைப் பார்த்தாலும் அந்த எழுத்து சீராகத் தெரியாது.
2.அதைப் படித்தாலும் சிந்திக்கும் தன்மை இழந்து தப்பு தப்பாகப் படிக்க வேண்டி வரும்.

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்வது…?

காலையில் கண் விழித்ததுமே “ஈஸ்வரா…!” என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தத் துருவ தியானத்தை எடுத்து அந்தச் சக்தியை நமக்குள் வலு ஏற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையில் இதைச் செய்ய வேண்டும்.

ஒருவருக்கு நாம் பல உதவிகளைச் செய்தோம். அவர் தவறான நிலைகள் செயல்படுத்தும் போது அதைக் கண்டு நாம் வேதனை கொள்கிறோம். சந்தர்ப்பம் நாம் நுகரும் உணர்வுகள் வேதனையை உருவாக்கும் அணுவாக உருவாகி விடுகிறது.

அந்த வேதனையை உருவாக்கும் அணுவாக நம் உடலுக்குள் உருவாவதற்கு முன்
1.அவருடைய தவறான செயலைப் பார்த்தவுடனே
2.காலை துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட சக்திப் பிரகாரம்
3.”ஈஸ்வரா…” என்று இடைமறித்து நம் உயிருடன் ஒன்றி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
5.அந்த உணர்வினைக் கொஞ்ச நேரம் நம் உடலுக்குள் ஈர்த்திட வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் என்று அந்த நினைவின் ஆற்றலை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்திக் கொண்ட பின் யார் நம்மை வேதனைப்படும்படி செய்தார்களோ.. துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்
1.அவர்களுக்குள் அறியாத இருள் நீங்க வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலை பெற வேண்டும்
3.அவர்கள் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று
4.அவரைப் பற்றி நாம் எண்ணி வேதனைப்பட்ட உணர்வை இவ்வழியில் நமக்குள் இணைத்து
5.அந்தப் பேரருள் பேரொளியின் அணுவாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு நாம் எண்ணூவது அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நமது உயிர் ஓ…! என்று நம் உடலுக்குள் ஜீவ அணுவாக ஒளியாக மாற்றும்.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் எந்த வேதனை வந்தாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்த விஷமான உணர்வை முறித்து ஒளியாக நாம் மாற்றிட முடியும்.

மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியை நிச்சயம் பெற முடியும்.

நடந்தவைகளை நினைத்துக் கொண்டேயிருப்பதும்… நடக்கப் போவதைக் கனவு கொண்டேயிருப்பதும் ஞான நிலைக்கும் ரிஷி நிலைக்கும் உகந்ததல்ல…!

past and future

நடந்தவைகளை நினைத்துக் கொண்டேயிருப்பதும்… நடக்கப் போவதைக் கனவு கொண்டேயிருப்பதும் ஞான நிலைக்கும் ரிஷி நிலைக்கும் உகந்ததல்ல…!

 

சிறு சிறு மழைத் துளிகள் தான் பெரும் வெள்ளமாகச் செல்கிறது. நாற்று நட்டுப் பயிர் செய்து.. அந்தப் பயிரை விளைய வைத்து… அதை எடுத்து வந்து நாம் சமைத்துப் பக்குவப்படுத்திய பின் தான்… நாம் உணவை உட்கொள்ள முடிகின்றது.

அதே போல் தான் இந்தத் தியான முறையிலும் நம்மை நாம் சிறுகச் சிறுகப் பக்குவ நிலைக்குப் பதப்படுத்தித்தான் அந்த நிலைக்கு நாம் வழியமைத்து வந்திட முடியும்.
1.அவசரப்பட்டும்…
2.இருக்கும் நிலையில் கசப்புடனும்…
3.ஆவல் நிலையில் ஆசைப்பட்டும் வருவதல்ல தியான நிலை.

மெய் ஞானத்தைப் பெறும் தியான நிலையின் பக்குவம் என்ன…?
1.தன் வாழ்க்கையுடன் ஒன்றி உயர்ந்து
2.சிறு சிறு நிலைக்கும் நம் எண்ணத்தையும் செயலையும் பக்குவப்படுத்தி
3.நம் உடலிலுள்ள அணுக்களை எல்லாம் நம் நிலைக்குச் செயல்படும் தன்மைக்குக் கொண்டு வந்து
4.நாம் என்ற நிலையையே… இந்த உடல் என்னும் கூட்டை நாம் மறக்கும் நிலை கொண்டு
5.நம்மை நாம் பரிபக்குவப்படுத்தி நம்முள் இருக்கும் அந்த ஆத்மாவை நாம் கண்டு
6.அருள் வழியில் நாம் இதை இயக்கும் தன்மையைப் பெற்று
7.அந்த ஆத்மாவின் நிலை கொண்டு பெரும் உன்னத சக்தியை நாம் ஈர்த்து எடுக்கலாம்.

இந்த உலகம் சுழலும் சுழற்சி நிலையில் நம் ஆன்மாவிற்கு விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நேரடியாக ஈர்க்கும் நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து நம் நிலையை நாம் ஞான நிலைக்கும் ரிஷியின் நிலைக்கும் உயர்த்திக் கொள்ள முடியும்.

1.நடந்தவைகளை நினைப்பதுவும்
2.நடக்கப் போவனவற்றைக் கனவு காண்பதுவும்
3.ஞான நிலைக்கும் ரிஷி நிலைக்கும் உகந்ததல்ல,
4.நேற்று… இன்று… நாளை… என்ற பாகுபாடில்லாத பகலும்… இரவும்… பிரித்து எண்ணாமல் தியான நிலையைப் பெற்றிடலாம்.

வெறும் பாட நிலையிலிருந்தோ போதனை நிலையிலிருந்தோ தன்னுள் அச்சக்தியின் அருளை ஒவ்வொருவரும் ஈர்த்து எடுத்திட முடியாது.

பாட நிலையும் போதனை முறையும் நமக்கு வழி காட்டி நிலை தான். வழி அறிந்து செயல்படுவது “நம்முடைய செயலினால் தான்…!” இந்த நிலையை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டு ஒவ்வொருவரும்
1.தன் நிலையில் ஜெப நிலை என்றால் என்ன…?
2.அத் தெய்வத்தின் சக்தியின் அருளை நாம் எப்படி ஈர்த்து எடுத்திட முடியும்…? என்றுணர்ந்து
3.தன் தன் நிலையில் நடந்தவற்றை மறந்து
4.நடக்கப் போவதை எண்ணிடாமல் இன்று இருக்கும் நிலையில் எண்ணம் கொண்டே ஜெபித்திடுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தொட்டுக் காண்பித்த அந்தத் துருவ நட்சத்திரத்தை “நாமும் நேரடியாகத் தொடர்பு கொள்வோம்”

Polaris direct link

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தொட்டுக் காண்பித்த அந்தத் துருவ நட்சத்திரத்தை நாமும் நேரடியாகத் தொடர்பு கொள்வோம்

 

1.உங்கள் பொட்டிலே தொட்டுக் காட்டுவதைக் காட்டிலும்
2.அந்த மெய் ஞானிகளின் உணர்வின் தன்மைகளை உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும்
3.இந்த உபதேசத்தின் வாயிலாக வீரிய உணர்வாக ஊட்டுறோம்.
4.கேட்டுணர்ந்த உணர்வுகள் உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களிலும் கலக்கின்றது.

அந்த அருள் உணர்வைப் பெருக்கி இருளிலிருந்து மீட்டி உயிர் என்ற உணர்வின் தன்மை ஆறாவது அறிவு – கார்த்திகேயா அறிந்திடும் உணர்வு ஒளியாகி ஒளியின் அறிவாக நாம் வளரும் பருவத்திற்கு தான் இதைக் கொடுக்கின்றோம்.

யாம் (ஞானகுரு) உபதேசித்த அருள் உணர்வுகளை அடிக்கடி கேட்டுப் படித்துப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.
1.நம்மை நாம் அறிய முடியும்.
2.உலக ஞானத்தையும் அறிய முடியும்.
3.வாழ்க்கையில் அறியாது வந்த வேதனைகளை அகற்ற முடியும்.
4.என்றும் பேரொளியாக விண்ணிலே நிலைத்திருக்க முடியும்.

நம்முடைய உணர்வுகள் ஒளியாகும் பொழுது நம் சொல்லும் செயலும் அதை நுகர்வோருக்கும் இருளை அகற்றிடும் நிலையாக வருகின்றது. ஒளியான உணர்வை அவர்களும் உருவாக்க முடியும். ஆகவே ஒவ்வொருவரும் தீமைகளை நீக்கி என்றும் ஒளியின் சரீரமாகப் பெற வேண்டும்.

நமது குரு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார். என்னையும் துருவ நட்சத்திரத்தை உற்றுப் பார்க்கச் சொன்னார்.

1.அகண்ட அண்டத்தை அறிந்துணர்ந்த குருவின் உணர்வுகளையும்
2.அவருக்குள் விளைந்த அவர் கவர்ந்த விண்ணின் ஆற்றல்களையும்
3.அவர் பெற்ற நிலையை என்னையும் (ஞானகுரு) பெறச் செய்தார்.

அவர் காட்டிய அனைத்தையும் நீங்களும் பெறவேண்டும் என்பதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக ஈசனாக மதிக்கின்றேன். உங்கள் உடலை அந்த ஈசன் அமைத்த ஆலயம் என்று மதிக்கின்றேன். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயங்கள் பரிசுத்தமாக வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தொடர்பு கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்களும் பெற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் என்று அந்த மெய்ப் பொருள் காணும் அந்த உணர்வுகளை வளர்த்து வைத்திருக்கின்றேன்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு குருவை எண்ணி அங்கே ஏங்குகின்றேன். உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்று நீங்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணும் போது அந்த உயர்ந்த எண்ணங்கள் எனக்கும் கிடைக்கிறது.

ஆகவே அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி அந்தத் துருவ நட்சத்திரமான அந்த உணர்வை உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி புருவ மத்தியில் எண்ணி ஏங்குங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடன் இணைந்து அவருடைய துணையால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் சேர்ப்போம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவினை உங்கள் உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பத் தியானியுங்கள்.

1.சிவ தனுசு என்ற மனித உணர்விற்கு மாற்றும் நிலையை நீக்கிவிட்டு
2.உயிர் என்ற ஒளியின் தன்மை ஆக்க விஷ்ணு தனுசை நம் உடலுக்குள் பாய்ச்சி
3.தீமையை அகற்றிடும் பேரின்ப பெருவாழ்வு வாழும் அந்த உணர்வின் தன்மையை நமக்குள் பாய்ச்சுவோம்.
4.பேரருள் உணர்வைப் பெருக்குவோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா…!

உடலுடன் உள்ள மனித ஆன்மாவிற்குண்டான சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

Digital power of human soul

உடலுடன் உள்ள மனித ஆன்மாவிற்குண்டான சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…!

 

பிறந்தோம்… வளர்ந்தோம்… வாழ்ந்தோம்… மடிந்தோம்…! என்ற சாதாரண நிலையில் மிருகங்களின் வாழ்க்கை நிலை போலத் தான் “நம் எண்ணத்தின் சக்தியை…” நாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்கின்றோம்.

1.இந்த எண்ணம்…
2.இந்தச் சக்தி…
3.உடல் என்னும் கூட்டில் ஆத்மா உள்ள வரை “செயல்படும் தன்மை…!”
4.உடலை விட்டுப் பிரிந்த பின்னாடி ஆவி உலகத்தில் அறிந்திட முடியாது.
5.தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆவி உலகில் உள்ள ஆத்மாவினால் முடிந்திடாது. (இது மிகவும் முக்கியம்)

பல ஜென்மங்களில் நாம் எடுத்த எண்ணங்களும் செயல்களும்தான் இந்த உடலை விட்டுச் சென்ற அந்த ஆவிகளால் அறிந்து கொள்ள முடியும்.

உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ… எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ… அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.

இந்த உலகையும்.. தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்.. அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்றுத் “தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்…!” என்ற ஆவலுடன் பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல் பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்… அண்டசராசரங்கள்… எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.

அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்… பெண்… குழந்தைகள்… முதியவர்கள்… என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதி தீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதி விரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.

படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருந்தாலும் அறிவு வளர வேண்டும்…
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்… கல்வி புகட்டுபவருக்குமே… உள்ளது.
அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.

இந்த உடல் என்னும் கூட்டை… ஆத்மாவின் நிலை கொண்டு… நம் எண்ணம் என்ற செயலினால்…! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

தியானத்தில் துருவ நட்சத்திரத்தை எப்படி அணுகுவது…?

Ultimate star Polaris

தியானத்தில் துருவ நட்சத்திரத்தை எப்படி அணுகுவது…?

கேள்வி:-
துருவ நட்சத்திரத்தின் பேரருள் சக்தியை எப்படி நாங்கள் எப்படி அடைவது…? அதற்குண்டான வழி முறைகள் தேவை ஐயா…!

பதில்:-
கீழே கொடுக்கப்பட்டவைகளைக் கண்களைத் திறந்து தியானிக்க வேண்டும்.

1.அம்மா அப்பாவை முதலில் எண்ணி அவர்களின் அருளாசி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்

2.கண்களின் நினைவைப் பூமியின் வடக்குத் திசையில் வட துருவத்தின் வழியாக விண்ணிலே செலுத்த வேண்டும்

3.அகஸ்தியன துருவனாகி துருவ மகரிஷியாக துருவ நட்ச
த்திரமாக இருக்கும் அதனைக் கண்களால் பதிவு செய்ய வேண்டும்

4.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கி இருக்க வேண்டும். (கண்களில் அந்த ஏக்கம் – அதாவது அதைப் பெறவேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும்) ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை அங்கிருந்து இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

5.கண்களின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வரவேண்டும். ஆய்த எழுத்து போல (ஃ) நினைவிலே கொண்டு வர வேண்டும். (புருவ மத்தியைப் பார்க்க வேண்டியதில்லை) ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று உயிரான ஈசனை எண்ணி வணங்க வேண்டும்.

6.வில்லிலிருந்து புறப்பட்ட ஒரு அம்பு போல புருவ மத்தியிலிருந்து நம் நினைவு பூமியின் வட துருவத்தின் வழி நேராக துருவ நட்சத்திரத்திற்குள் சென்ற மோத வேண்டும். அதாவது நம் உடலில் உள்ள எல்லா உணர்வுகளையும் எண்ணங்களையும் “ஒன்றாகத் திரட்டி… தனுசு கோடி…!” ஆக புருவ மத்தியில் “இராமலிங்கமாக்கி” அங்கிருந்து துருவ நட்சத்திரத்திற்குச் செலுத்த வேண்டும்.

7.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்த வலிமையான எண்ணம் கொண்டு “உயிரான ஈசனிடம் கட்டளையாக இட்டு…” துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் அந்த இளம் நீல ஒளிக் கற்றைகளைப் புருவ மத்தி வழியாக இழுத்துச் சுவாசிக்க வேண்டும்.

8.மேலே சொன்ன முறைப்படி அந்த உணர்வுடன் செய்தால் நம் உயிரில் இருக்கும் காந்தம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளைக் கவரத் தொடங்கும்… இழுக்கும்… உயிரிலே புருவ மத்தியிலேயே அந்தத் துருவ நட்சத்திரத்தின் அலைகள் வந்து மோதத் தொடங்கும்.

9.மோத ஆரம்பித்தவுடனே… புருவ மத்தி கனமாகும். சிலருக்கு அரிப்பு போல குறு…குறு என்று உணர்ச்சிகள் ஏற்படும். இப்பொழுது நம் உயிரும் துருவ நட்சத்திரமும் நேர்கோட்டில் இருக்கும். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அல்லது துருவ நட்சத்திரத்துடன் நாம் ஐக்கியமாகும் நிலை உருவாகும்.

10.திரும்பத் திரும்ப நம்முடைய நினைவுகள் (1)கண்கள் (2)புருவ மத்தி (3)பூமியின் வட துருவம் (4)துருவ நட்சத்திரம் என்று பழக்கப்படுத்தி உயிரையும் துருவ நட்சத்திரத்தையும் “நேரடியாக…!” இணைத்து விட்டால் அது தான் பிராணாயாமம். சுவாசம் சீராக வரும்.

11.உயிரும் துருவ நட்சத்திரமும் இணைந்து விட்டால் ஒரு நிமிடத்திற்கு நம்முடைய சுவாசம் அதாவது இழுத்து மீண்டும் வெளி விடுவது என்பது மாறி
1). துருவ நட்சத்திரத்தின் அலைகளை இழுக்க 5 அல்லது 6 நொடி
2). துருவ நட்சத்திரத்தின் சக்தியை உடலுக்குள் தம் கட்ட 2 அல்லது 3 நொடி (உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நிறுத்தி வைக்க வேண்டும்)
3). அதே அலைகளின் தொடர்பை எடுக்க நினைவை வெளி விட 5 நொடி
4). ஒரு நிமிடத்திற்கு ஐந்து அல்லது ஆறு தடவை சுவாசமாக அழுத்தமாக ஆனால் சீராக இருக்கும்.

(இதிலே குறிப்பிட்டுள்ள நேரம் முக்கியம் இல்லை. புருவ மத்தியும் துருவ நட்சத்திரமும் நேர் கோட்டில் இருக்க வேண்டும் அது தான் மிக மிக முக்கியம்.)

துருவ நட்சத்திரதை இவ்வாறு அணுகிய பின் அந்த அலைகளை நமக்கு எங்கெங்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகின்றோமோ அங்கெல்லாம் இதே முறைப்படி இணைக்கலாம்.

நாம் பெறுகின்ற இந்தச் சக்தி மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி அந்த அலைகளை எல்லோருக்கும் பாய்ச்சலாம்.

என்னுடைய நினைவுகள் துருவ நட்சத்திரத்தை இப்படித்தான் அடைந்து கொண்டிருக்கின்றது. இப்படித்தான் அதனுடன் நான் தொடர்பில் உள்ளேன்.

ஒளிக்கற்றைகள் பளீர்… பளீர்…! என்று புருவ மத்தியில் மோதுவதையும் உடலுக்குள் இணைவதையும் உடலிலிருந்து பளீர் என்று ஒளிக்கற்றைகள் வருவதையும் காணுகின்றேன். என்னுடைய அனுபவம் இது…!

ஆயுள் எதிலே இருக்கிறது…?

membership of gurudevar

ஆயுள் எதிலே இருக்கிறது…?

இந்த உலகமும் இந்தப் பிரபஞ்சமும் எப்படி இயக்குகின்றது…? இந்த பிரபஞ்சத்தில் உருவாகும் உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்ற பேருண்மைகளை எல்லாம் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அகண்ட அண்டங்களாக இருந்தாலும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே வாழ்கிறது. ஒரு சூரியக் குடும்பத்திலிருந்து வரும் உணர்வுகள் அடுத்த மண்டலத்திற்கு உணவாகச் செல்லும்.

அப்படிப் பிற மண்டலங்களில் இருந்து வருவதை 27 நட்சத்திரங்களும் கவர்ந்து பால்வெளி மண்டலமாக்கி அதைத் தூசிகளாகத் துகள்களாக அனுப்புகிறது.

அப்படி வரும் துகள்களைக் கோள்கள் ஒவ்வொன்றும் அதனதன் பங்குக்கு எடுத்துக் கொள்கிறது. இது எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சூரியனின் ஈர்ப்புக்குள் வந்த பின் அது மோதி விஷத்தைப் பிரித்து வெப்ப காந்த அலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தையே இயக்குகிறது.

அதே போல் தான் மனிதர்களாக வாழும் நிலையில்
1.வெளியிலிருந்து நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தையும்
2.நம் உடலில் என்னென்ன உறுப்புகள் இருக்கிறதோ அது அது பிரித்து எடுத்து
3.அந்தந்த அணுக்களுக்குண்டான ஆகாரமாகக் கொடுக்கின்றது.
4.அதன் வழி கொண்டு அந்த உறுப்புகள் வளர்ச்சியாகிறது.
5.உறுப்புகளின் உணர்வுகள் அந்தந்தப் பாகத்திற்கொப்ப மலங்களை உருவாகும் போது உடலின் அமைப்பு உருவாகிறது.

நம்முடைய பிரபஞ்சத்தில் இயக்கங்கள் எப்படி இருக்கின்றதோ அதே போல் நாமும் ஒரு பிரபஞ்சம். இரண்டாயிரம் சூரிய குடும்பங்கள் என்று சொல்லும் பொழுது இரண்டாயிரம் மனிதர்கள் ஒருவருக்கொருவர் கலக்கின்றோம்.

அகண்ட அண்டம் என்றாலும் அதற்குள் இரண்டாயிரம் சூரிய குடும்பங்கள் உருவாகின்றது போலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சம்.

இரண்டாயிரம் மனிதர்கள் சேர்த்தால் ஒரு அகண்ட அண்டம் என்ற நிலை வரும். இதற்குள் விளையும் உணர்வுகள் ஒருவருக்கொருவர் பரிமாற்றம். அதிலே எதனின் உணர்வுகளை நாம் சேர்க்கிறோமோ அதனின் வளர்ச்சியாகத்தான் நாம் இருப்போம்.

ஒருவருக்கொருவர் இப்படிப் பரிமாறும் நிலையில்… குடும்பப் பற்று கொண்டு வாழும் பொழுது
1.என்னை இப்படிப் பேசிவிட்டானே…
2.என்னை இப்படிக் கேவலப்படுத்தி விட்டானே.. என்ற இந்த உணர்வை எண்ணி எடுத்துக் கொண்டால்
3.வேதனையும் வெறுப்பும் அதிகமாக வளர்ந்து நம் ஆயுள் காலம் எதலே முடியும்…?
4.யார் நம்மைத் திட்டினானோ அவன் உடலில் போய் அவனை வீழ்த்த முடியும்.
5.அவனையும் வீழ்த்தியவுடனே அந்த ஆயுள் காலம் என்ன செய்யும்…?
6.விஷத்தின் தன்மைகள் அதிகமாகி மனித ரூபமற்ற நிலைகளாக மிருகங்களாகவோ விஷ ஜெந்துக்களாகவோ மாறி
7.வீரிய உணர்வு கொண்டு மற்றொன்றைக் கொன்று புசிக்கும் அசுர உணர்வுகளாக நம்முடைய ஆயுள் காலம் அதுவாக மாறும்.

ஆகவே அந்த ஆயுள் காலம் நாம் எதற்குப் போக வேண்டும்…? நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தீமைகளை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் ஆயுள் மெம்பராக இணைய வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைகளை எல்லாம் உணர்ந்து
1.இருளை அகற்றியவன்
2.அகத்தின் உணர்வுகளை அறிந்தவன்
3.உண்மையின் இயக்கத்தை அறிந்தவன்
4.துருவத்தின் ஆற்றலை தனக்குள் உருவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தன் உடலில் திருப்பம் ஆனவன்
5.தான் பெற்ற ஆற்றல்களை எல்லாம் தன் மனைவிக்குக் கொடுத்து மனைவியின் உணர்வோடு இணைத்தவன்
6.ஆண் பெண் என்ற உணர்வு கொண்டு அருள் உணர்வுகளை வளர்த்தவன் தான் “அகஸ்தியன்…!”
7.அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மையை எடுத்து நாம் ஆயுள் கால மெம்பராகும் போது அது அது எடுத்து நாம் எதிலே இருக்க வேண்டுமோ அதில் இருக்க வேண்டும்.

இதை எல்லாம் நீங்கள் முழுமையாக உணர வேண்டும் என்பதற்குத்தான் அகஸ்தியமாமகரிஷியின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டே வருகின்றோம்.

உடலான அரங்கத்திற்குள் உயிர் நாதங்களை எழுப்பி (அரங்கநாதன்) உணர்ச்சிகளாக நம்மை எப்படி ஆண்டவனாக ஆள்கிறது..? (ஆண்டாள்)

andal

உடலான அரங்கத்திற்குள் உயிர் நாதங்களை எழுப்பி (அரங்கநாதன்) உணர்ச்சிகளாக நம்மை எப்படி ஆண்டவனாக ஆள்கிறது..? (ஆண்டாள்)

 

நன்றாக இருக்கும் வீட்டில் சந்தர்ப்பத்தில் ஒருவருக்கு ஒருவர் சண்டை வந்து விடுகிறது. பாவி… மாமியார் இப்படிச் செய்கிறதே…! என்று மருமகள் எண்ணுவார்கள்.

கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்தாலும் கூட “இந்த மாமியார் இப்படி எல்லாம் செய்கிறதே…!” என்று மருமகள் அதிகமாக வெறுப்பு அடைகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

குடும்பப் பற்று எல்லாம் இருந்தாலும் “என் மாமியார் கணவருடன் சேர்ந்து வாழவிடமாட்டேன் என்கிறது…!” என்று இப்படியே எண்ணுவார்கள்.

ஏனென்றால் ஒரு சில குடும்பங்களில் பார்த்தோம் என்றால் மாமியார் மருமகள் ஒருவருக்கொருவர் “கொஞ்சம் பிடிக்கவில்லை” என்றால் அந்த வெறுப்பைச் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு வேதனைப்படும் உணர்ச்சிகளையே தூண்டுவார்கள். வேதனைப்படும் உணர்ச்சிகளைத் தூண்டத் தூண்ட மருமகளைப் பார்க்கும் போது எல்லாம் மாமியாருக்கு வெறுப்பு வரும்.

அப்பொழுது மருமகளைப் பற்றி நான்கு பேர் மத்தியில் அடிக்கடி சொன்னால் “என் மாமியார் என்னைக் கேவலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்…!” என்ற இந்த உணர்வைச் சேர்த்து “என்ன வாழ்க்கை…?” என்று வெறுத்துக் கொள்வார்கள்.

ஆனால் தன் மாமியாரை நினைத்து இப்படிப்பட்ட உணர்வின் தன்மையை வளர்த்த பிற்பாடு என்ன செய்யும்…? வேதனையை எடுத்து எடுத்துக் கை கால் எல்லாம் குடைச்சலாகி அதனால் வேலை செய்ய முடியாமல் போய்விடும்.

அடிக்கடி அதை எண்ணும் பொழுது உடலில் முடியாமல் ஆகிவிடும். அப்போது மாமியார் என்ன சொல்லும்…? மருமகள் வேலை செய்கிறாளா பார்… ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றாள்…! என்ற இந்தப் பேச்சு வரும்.

“ஏமாற்றுகிறாள்…!” என்று சொன்னதும் மருமகளால் இதைத் தாங்க முடியாது. இந்த வெறுப்பால் என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்து கொள்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

வேதனைப்பட்டு நோயின் தன்மை ஆகி மாமியார் மீதுள்ள வெறுப்பால் தற்கொலை செய்து கொண்டால் அந்த ஆன்மா வேறு எங்கேயும் போகாது. மாமியார் உடலுக்குள் தான் போகும்.

அந்த உடலுக்குள் போனவுடனே என்ன செய்யும்…? கடைசி நிமிடத்தில் எந்த வேதனைப்பட்ட உணர்வுடன் வெளியே வந்ததோ மாமியார் உடலில் அந்த ஆவி வந்தவுடனே மற்ற யாருடைய அன்பையும் பெற முடியாதபடி எல்லாரையும் திட்டக்கூடிய நிலையாக வந்து சேரும்.

ஏனென்றால் குருநாதர் இதை எல்லாம் நேரடியாக எம்மைப் (ஞானகுரு) பார்க்க வைத்தார். உடலை விட்டு ஆன்மா எப்படிப் பிரிகிறது…? பிரிந்த பின் எங்கே செல்கிறது..? என்று பார்த்த பின் தான் உங்களிடம் இதைச் சொல்கிறேன்.

ஏனென்றால் ஒருவருக்கு ஒருவர் நாம் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த உணர்வின் உணர்ச்சி நம் உயிரிலே என்ன செய்கிறது…? நுகர்ந்ததை வைத்துத் தான் உயிர் ஆளுகின்றது.

இதைக் காட்டுவதற்குத்தான் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அரங்கநாதர் என்றும் ஆண்டாள் என்றும் காட்டுகின்றார்கள்.
1.நம் உயிர் உடல் என்ற அரங்கத்தில் இருக்கிறது.
2.நாம் சுவாசித்த உணர்வின் தன்மை எதுவோ அதற்குத்தக்க நாதங்களாக
3.உணர்ச்சிகளாக இயக்கி நம்மை ஆளுகின்றது என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

திருப்பாவை திருவெண்பாவை… எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும். மாதம் மும்மாரி மழை பெய்ய வேண்டும். உலகம் நலமாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை எடுத்து நாம் செயல்படுத்தினால் எப்படி இருக்கும்…?

அந்த உணர்வின் உணர்ச்சிகள் கொண்டு உயிர் நம்மை இயக்கும். அதன் உணர்வின் அலைகள் காற்றிலே படரும். அந்த உணர்வுகளால் மேகங்களைக் கூட்டவும் மாதம் மும்மாரி மழையாகப் பெய்யச் செய்யும். தாவர இனங்கள் விளைந்து செழிப்பாக இருக்கும். மக்களுக்குள் அருள் உணர்வுகள் பெருகும்.

இப்படி ஒன்று சேர்க்கும் உணர்வுகளை வைத்துத்தான் நம்மை ஆள்வதும் நாட்டை ஆள்வதும் உலகை ஆள்வதும் என்ற நிலையை இப்படிக் கொண்டு வருகிறார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…?

ஆண்டாளைப் பற்றி நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றோம்..? கொண்டோம். “ரெங்கநாதனுடைய சம்சாரம்” என்று தான் நாம் நினைத்துக் கொண்டோம்.

1.அரங்கநாதனாக உயிர் நமக்குள் இருக்கும் போது
2.நாம் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் அந்த இசையின் நாதங்களாக எழுப்பி
3.அந்த உணர்ச்சிகளாக உயிர் நம்மை எப்படி இயக்குகின்றது என்ற நிலை ஞானிகளால் தெளிவாகக் கூறப்பட்டது
4.ஆனால் அந்த உண்மைப் பொருளை நாம் உணர முடியாது மறைந்து போய்விட்டது.

அரசர் காலங்களில் அவருக்குச் சாதகமாக அதை மாற்றி (அவன்) தான் ஆண்டவன் தூதுவன் என்று தன்னை மறைத்துக் கொண்டு ஆலயங்களில் வழிபட வேண்டிய முறைகள் என்று அதற்கென்ற குருக்களை நியமித்து அவருக்குக் காணிக்கை செலுத்தினால் அவனே உன்னைக் காப்பான் என்ற நிலையில் அவர்கள் தான் செய்வார்கள் என்று நம்மை மக்குகளாக மாற்றிவிட்டார்கள்.

அரசர்கள் வகுத்த வழியில் மந்திரத்தைச் சொல்லி வணங்கும் நிலை தான் இன்றும் வருகிறது. மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி வாழ்ந்து நமக்குள் அந்த உணர்வுகளை அதிகமாக வளர்த்து இறந்தபின் அவர்கள் நம் ஆன்மாக்களைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

நம் ஆன்மா அரசன் சொத்தாகின்றது, அரசனுக்குக் குருவாக இருப்பவர்கள் இப்படி மற்ற உயிர்களின் தன்மையை எடுத்துக் கொடுத்து அரசன் நாட்டை ஆட்சி புரிய உறு துணையாக இருப்பார்கள்.

இதன்வழி இவன் பிழைப்பைச் செய்யும் போது இவன் இறந்தாலும் இதே மாதிரித் தான் மாற வேண்டும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.உயிரே கடவுள்.
2.உயிர் வீற்றிருக்கும் இந்த உடல் ஆலயம்.
3.ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயத்தில் 1008 குணங்களும் தெய்வங்களாகக் கொலு வீற்றிருக்கின்றது
4.இதை உணர்ந்து அந்த மெய் ஞானிகள் காட்டிய முறைப்படி அருள் உணர்வுகளைச் சேர்த்து உடலான ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தினால்
5.அதற்குண்டான கூலியாக நாம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற முடியும் என்பதே
6.ஞானிகள் ஆலயங்கள் மூலம் நமக்கு உணர்த்திய பேருண்மை.

“மண்ணுடன் மண்ணாகும்…” மாய வாழ்க்கையைப் பற்றி ஈஸ்வரப்பட்டர் சொன்னது…!

life cycle

“மண்ணுடன் மண்ணாகும்…” மாய வாழ்க்கையைப் பற்றி ஈஸ்வரப்பட்டர் சொன்னது…!

 

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைவதுவே…!

இந்த உலகம் என்ற மாயையே எண்ணி மயங்கி வாழும் வாழ்க்கை தான் நாம் வாழ்கின்றோம். அப்படிப்பட்ட
1.இந்த உலக வாழ்க்கையிலே நமக்கு எஞ்சி இருப்பது எதுவப்பா…?
2.வாழும் வாழ்க்கையில் மிஞ்சுவது என்னப்பா…?
3.சொத்தையும் சுகத்தையும் ஆள்வது யாரப்பா…?
4.இந்த உலகில் பிறந்து வாழ்ந்து இறந்த பின் நிலைத்து இருப்பது என்னப்பா…?
5.நம் உடலா…? சம்பாரித்த பணமா…? சொத்தா…? சுகமா…?

நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது நம்முடைய மக்கள் (பிள்ளைகள்) இருக்கின்றார்களே…! என்ற எண்ணம் பலருக்குண்டு. ஆனால்
1.நம் பெயர் சொல்ல அந்த மக்கள் எத்தனை காலங்களுக்கு…?
2.அடுத்து அந்தக் குழந்தைகளுக்குக் குழந்தை.. குழந்தைகளுக்குக் குழந்தை…! என்று (பேரன்… கொள்ளுப் பேரன்….!)
3.இப்படிச் சுற்றிக் கொண்டேயுள்ள நிலையிலே நம் பெயர் மறைய எத்தனை காலங்கள்…? என்று இதை எல்லாம் சிந்திக்கின்றோமா…?

நம்முடைய அம்மா…அப்பா… பற்றி சிறிது காலத்திற்கு எண்ணுகிறோம். அவர்கள் அம்மா அப்பா… அதற்கு முன்னாடி வாழ்ந்தவர்கள்…! என்று யாரையாவது நாம் நினைக்கின்றோமா…?

மீறிக் கேட்டால் என்ன சொல்வோம்..? அவர்கள் எல்லாம் போய் விட்டார்கள்… என்று “சாதாரணமாகத்தானே சொல்கிறோம்…!”

அவர்கள் எதையுமே (தன் உடலையோ பொருளையோ) கொண்டு போக முடியவில்லை என்கிற பொழுது நாம் மட்டும் எதைக் கொண்டு போக முடியும்…?

ஆக மொத்தம் பிறப்பு…உடல்…இறப்பு…! மீண்டும் பிறப்பு… உடல்…இறப்பு…! என்று இராட்டினம் மாதிரித் தான் சுற்றிக் கொண்டே இருக்கின்றோம்.

இந்தப் பூமியில் பிறந்த நாம் அனைவரும் பிறவிப் பயன்… பிறவிப் பயன்… என்பதையே புரிந்து வாழ்ந்திடாமல் இருக்கும் வரை (உடலுடன்) அனுபவிக்க வேண்டும் என்று இப்படித்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் நம்மைப் போன்றே பூமியில் தோன்றிய புண்ணியவான்கள் இன்றும் அவர்கள் பெயர்கள் நிலைத்திருக்க வாழும் நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

1.நம்முடைய ஆணிவேரான சுவாச நிலையிலிருந்து
2.நாம் பெறும் பாக்கியங்களை… நாம் பெறும் செல்வங்களை
3.உயிராத்மாவிற்குத் தேவையான அழியாத பொக்கிஷத்தை… அந்தச் செல்வத்தை நாம் புரிந்து வாழ்ந்திட
4.பல நிலைகளை நமக்கு அளித்துச் சென்றவர்கள் தான் புண்ணியவான்களான அந்த ஞானிகளும் மகரிஷிகளும்…!

அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையினிலே பல பல ஆற்றல்களையும் சக்திகளையும் பெற்று இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் நிலைத்திருக்கவில்லையா…?

அவர்கள் பிறந்த அதே பூமியில் வாழும் நமக்கு நம் நிலை நிலைத்திருக்கப் பல நிலைகளை உணர்த்திச் சென்றுள்ளார்கள்.

அத்தகைய சக்தி (அஷ்டமாசித்து) பெற்றவர்கள் தன் உடலை ஒரு கூடாக வைத்துத்தான் தன் ஆத்மாவை உலகெங்கும் பிற மண்டலங்கள் எங்கும் சென்று வரும் நிலைக்குப் பல அருளைப் பெற்றார்கள்.

இந்த உலகில் கலந்துள்ள அத்தகைய மெய் ஞானிகள் மகரிஷிகளின் நிலையை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
1.நாம் எந்த நிலை கொண்டு எண்ணுகின்றோமோ அந்த நிலைக்கெல்லாம் வந்து உதவி
2.நம் எண்ணத்தையும் செயலையும் நல்லதாக்க
3.நமக்குப் பல நன்மைகளைச் செய்திடப் அப்படிப்பட்ட பல பெரியோர்கள் உள்ள பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

நம் எண்ணமும் செயலும் பல ஆசை கொண்ட சுகபோகங்களுக்குச் சென்றிடாமல் அதற்கு அடிமைப்பட்டு வாழும் நிலையை மாற்றிட வேண்டும். அன்பென்னும் ஆசை தான் நமக்கு வேண்டும்.

ஆகவே
1.அழியாச் செல்வமான நம்முடைய ஆத்மாவை நாம் அழித்தே வாழ்ந்திடாமல்
2.நம் எண்ணத்தையும் நம் சுவாசத்தையும் நம் ஆத்மாவிற்கு அடிமையாக்கி
3.அந்த ஆத்மாவிற்கு அடிபணிந்து வாழ்வதற்கு நம்முள் இருக்கும் உயிரான ஈசனின் சக்தியைக் கொண்டு
4.நமக்கு முன் தோன்றிய பல பெரியோர்களின் ஆசியைப் பெற்று வாழ்வதுவே மனிதனின் வாழ்க்கை.

ஞானிகள் மகரிஷிகளின் அருளாசி பெற்று வாழ்ந்திடுங்கள்…
அன்புடன் வாழ்ந்திடுங்கள்… ஆண்டவனாக வாழ்ந்திடுங்கள்…!

அருணகிரிநாதர் திருஞான சம்பந்தரின் உணர்வைத் தன் சகோதரி மூலமாகப் பெற்றுத்தான் ஞானியாக ஆனார்

Arunagirinadhar gnani

அருணகிரிநாதர் திருஞான சம்பந்தரின் உணர்வைத் தன் சகோதரி மூலமாகப் பெற்றுத்தான் ஞானியாக ஆனார்

 

திருஞானசம்பந்தரின் உணர்வினை அருணகிரிநாதரின் சகோதரி அது எடுத்துப் பெற்றுக் கொள்கின்றது.

தன்னுடைய சகோதரன் தவறான பாதைகளிலே போனாலும் அவனுடன் இணைத்து… இணைத்து… இணைத்து…
1.அவன் நல்ல பாதையில் நடக்க வேண்டும்
2.நல் வழியில் வாழ வேண்டும்
3.நல்ல உணர்வு பெற வேண்டும்.
4.பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்திக்கும் திறன் பெற வேண்டும் என்று அவன் சகோதரி செயல்படுகிறது.

ஒவ்வொரு சமயமும் அந்தத் திருஞானசம்பந்தருடைய உணர்வுகளை எடுத்து எடுத்து அந்தப் பாட நிலைகளை அருணகிரிக்குள் இணைக்கிறது.

திருஞானசம்பந்தரின் நல் ஒழுக்கங்களையும் அவர் விஷத்தை மாற்றிய நிலைகளையும் அவர் பார்வையில் தீமைகள் போனதையும் அவர் செயலாக்கங்களையும் அருண்கிரியின் சகோதரி எண்ணுகின்றது.

திருஞானசம்பந்தரை எண்ணித் தன்னுடைய சகோதரனின் உணர்வுகள் இப்படி வர வேண்டும் என்று எண்ணுகின்றது. சகோதரன் மேல் உள்ள பாசத்தால் அது எடுக்கும் போது அவன் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று அவனைப் பற்றியும் மற்ற ஞானிகளைப் பற்றிப் படித்த உணர்வுகளையும் தனக்குள் அதிகமாக நுகர்கின்றது. அந்த ஞானிகளின் உணர்வுகள் அணுக்களாக அருணகிரியின் சகோதரி உடலில் விளைகிறது.

தன்னுடைய சகோதரன் திருந்த வேண்டும் என்று முயற்சி செய்கிறது. இருந்தாலும்
1.அவன் இவர் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.
2.ஆனாலும் சகோதரியோ “அவன் திருந்த வேண்டும்…!” என்றே எண்ணுகின்றது.
3.இதை நீங்கள் நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சகோதரி சொல்வதைக் கேட்காமல் என்ன செய்கிறான்…?

தாசியுடைய வீட்டிற்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் அப்படி மகிழ்ந்து வாழ்ந்த உணர்வுகளையும் பெருமையின் உணர்வுகளையும் தான் அவன் எடுத்துக் கொள்கின்றான். சகோதரி அவனுக்கு நல்லதைச் சொல்லும் போதெல்லாம் கசந்த உணர்வே அவனுக்கு வருகிறது.

நம் வீட்டில் தாயோ தந்தையோ அப்படி இருக்க வேண்டும்… இந்த மாதிரி இருக்கிறது… அவர்களைப் பார் இவர்களைப் பார் என்று புத்திமதி சொன்னால் பிள்ளை என்ன செய்வான்…?

பிள்ளை அவனின் இச்சையை வைத்துக் கொண்டு தாய் ஏனோ ஒரு பைத்தியமாக இருக்கிறது என்பான். தாய் சொல்லும் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. குடும்பத்தில் பெரியோர்கள் சொல்லும் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. மாறான உணர்வுகள் தான் குழந்தைகளுக்குள் வளருகிறது.

அதைப் போல் தான் அருணகிரியும் என்ன செய்கிறான்…? கடைசி வரையிலும் அவன் ஆசை தீரவில்லை. சகோதரி சொல்வதைக் கேட்காமல் தன்னுடைய இச்சையின் வழியிலேயே செல்கிறான்.

இருக்கிற செல்வம் எல்லாம் கரைந்தது. அடுத்து ஒன்றும் இல்லை… என்ற நிலை வரும் பொழுது “எப்படியாவது நீ எனக்குப் பணம் கொடுத்தே ஆக வேண்டும்…” என்று தன்னுடைய சகோதரியைக் கட்டாயப்படுத்துகின்றான்.

அப்பொழுது தான் அந்தச் சகோதரி சொல்கிறது. உனக்கு திருஞானசம்பந்தரின் உணர்வுகளை எல்லாம் சொன்னேன். மற்ற ஞானிகளின் நல்ல வழியையும் காட்டினேன்.

எத்தனை சுகத்தை நீ அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ உன் ஆசைக்கு என் உடலையே நீ பெற்றுக் கொள்…! என்று சகோதரி சொல்கிறது.
1.அவனுக்கு எவ்வளவு சொல்லியும்…
2.அவனால் அடக்க முடியவில்லையே…! என்ற உணர்வின் தன்மை மேல் மூச்சாகி
3.சகோதரி உடலை விட்டுப் பிரிகிறது.

அப்போது சகோதரி உடலை விட்டுப் பிரிந்தவுடனே அவனுக்குள் உண்மையை உணரும் பருவம் எப்படி வருகிறது…?

அருணகிரி தனக்குள் தான் செய்த தவறின் உணர்வுகள் இயக்கி உண்மையை உணர்த்தும் நிலையில் ஜீவன் பெறுகிறது. ஜீவன் பெற்றாலும் அவனுக்கு ஆதரவில்லை,

1.இது வரை தனக்கு ஆதரவாக இருந்தது.
2.ஆனால் இப்பொழுது அந்த ஒரு ஜீவனும் போய்விட்டதே என்று சகோதரியை எண்ணி ஏங்கும் பொழுது
3.அந்தச் சகோதரியின் ஆன்மா அவன் உடலுக்குள் போகிறது.
(ஏனென்றால் அந்த உணர்வின் இயக்க நிலைகள்)

இனி இந்த உடல் எதற்கு…? தவறான வாழ்க்கை வாழ்ந்து விட்டோம். “இனி அடுத்த ஜென்மமாவது நமக்கு நல்லவைகளாக இருக்கட்டும்…!” என்ற ஒரே உணர்வுடன் தன் உடலை மாய்க்க வேண்டும் என்று விரும்புகின்றான்.

“அவன் சாக வேண்டும்…!” என்று நினைக்கின்றான். இருந்தாலும் சகோதரியினுடைய உணர்வுகள் அங்கே சேர்க்கப்படும் போது அந்த உணர்வுகள் அவனைச் சாக விடாது தடுக்கின்றது.

அப்படித் தடுக்கப்படும் போது இவனை அறியாமலேயே நல்ல உணர்வுகளை உள் நின்றே சகோதரி கவர்கின்றது. கவர்ந்து கொண்ட பின்
1.அந்தத் திருஞானசம்பந்தர் தாய் கருவில் பெற்ற சக்தியால் எதைக் கண்டுணர்ந்தாரோ
2.அந்தக் கருவின் மூலத்தையே அருணகிரிநாதர் தனக்குள் அறியும் தன்மை வருகின்றது.

திருஞானாம்பந்தரின் தாய் விஷத்தை முறிக்கும் தன்மையை அது எண்ணிய உணர்வுகள் இவனுக்குள் வருகிறது. அத்தகைய உணர்வுகள் வளர்ந்த பின்
“நாத விந்துகள் ஆதி நமோ நமோ
வேத மந்திர சொரூபாய நமோ நமோ வெகு கோடி…!” என்ற பாடலையே பாடுகின்றான்,

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்ச்சியின் தன்மை எதுவோ அது நம் உடலுக்குள் சேரும்
2.எந்த உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதற்குத் தக்கவாறு தான் நம் இயக்கம் என்று அழகாகப் பாடியிருக்கிறார்.

நாம் அவர் பாடிய அந்தப் பாடலைப் “பஜனையாகத்தான்” பாடிக் கொண்டிருக்கின்றோமே தவிர அந்தப் பாடலுக்குள் உண்டான மூலத்தை நாம் அறியவில்லை.

அருணகிரிநாதர் மிகவும் தவறானவர். இருந்தாலும் கடைசியில் ஒன்றி வாழ்ந்த அந்தச் சகோதரியின் உணர்வுகள் அவர் உடலுக்குள் போய் அந்தச் சகோதரி எதை எண்ணினாளோ அதை நிலைநாட்டுகின்றது.
1.அந்தத் தாய் எந்த மெய் ஞானி உணர்வை எண்ணி ஏங்கியதோ
2.அதை அங்கே வழி நடத்தி அருணகிரியை ஞானியாக மாற்றுகின்றது.

அருணகிரிநாதர் பெற்ற உணர்வின் மாற்றங்களும்… அருள் உணர்வுகளும்… நம் குணங்களில் எதை எதை எல்லாம் நாம் எப்படி மாற்ற வேண்டும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதறாகத்தான் இதைச் சொல்கிறோம்.

அகஸ்தியரின் தீட்சை… தீட்சண்யம்…. பெறுவது எப்படி…?

agastya-rishi pindam

அகஸ்தியரின் தீட்சை… தீட்சண்யம்…. பெறுவது எப்படி…?

 

கேள்வி:-
அகத்தியர் பற்றி உங்கள் கருத்து என்ன…? தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது எப்பொழுது..? தீட்சை பெறுவது எப்படி…?

பதில்:-
அகஸ்தியர் என்பவர் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டிலே தோன்றிய “நம்முடைய மூதாதையர்…!” ஆவார். தென்னாட்டுடைய சிவன் அவர். தக்ஷிணா மூர்த்தி என்பவரும் அவர் தான்.

அவருடைய அக்காலப் பெயர் யாருக்கும் தெரியாது. இருந்தாலும் அவர் அடைந்த மகோன்னதமான உன்னத நிலையை வைத்து அகத்தை அறிந்ததால் அகத்தியர் என்று காரணப் பெயர் வைத்தார்கள்.

அகத்தை என்றால் தன்னையும்… விண்ணையும்… மண்ணையும்… அறிந்ததால் அகத்தியர். தென்னாட்டிலே தோன்றியதால் உடல் பெற்றதால் தென்னாட்டுடைய சிவன். இந்தப் பூமியையே சமப்படுத்தியதால் அவர் எந்நாட்டவருக்கும் இறைவனாக… குருவாக… தெற்கிலிருந்து தோன்றியதால் “தக்ஷிணா மூர்த்தி…!”

இந்த உலகை மீண்டும் சமப்படுத்தும் சக்தியை அவரிடமிருந்து தான் அனைவருமே பெற முடியும். உலகம் என்றால்
1.இந்தப் பூமி என்ற உலகையும்
2.நம் (உடல்) உலகமான நம் உயிரான்மாவையும் தான்.

துருவ நட்சத்திரமும் அவரே. இந்தப் பூமியில் எந்த மெய் ஞான வளர்ச்சியாக இருந்தாலும் அதற்கு மூல காரணம் அது தான்.

அப்படிப்பட்ட அகஸ்தியர் அவர் வாழ்ந்த காலத்தில் நம் பூமியில் தென் துருவமும் வட துருவமும் சென்றவர். அவருடைய மூச்சலைகள் நாம் வாழும் பூமியில் அதிகம் பரவியுள்ளது.

அவர் வெளிப்படுத்திய அத்தகைய மூச்சலைகளைச் சுவாசிக்க வேண்டும். அவர் உணர்வைத்
1.தலையிலிருந்து கால் வரை
2.இரத்தங்களிலும் நரம்புகளிலும் எலும்புகளிலும்
3.உடலில் உள்ள தசைகளிலும் எல்லா அணுக்களிலும்
4.தலையிலே தண்ணீரை ஊற்றும் (குளிக்கும்) பொழுதும்
5.தாகத்திற்காக வேண்டி ஒவ்வொரு முறை தண்ணீரைக் குடிக்கும் பொழுதும்
6.கண் திறந்திருக்கும் நேரத்திலும் தூக்கத்தில் எழுப்பினாலும் அவர் நினைவு வந்தால்
7.நாம் தூங்கினாலும் “முழித்து இருக்கிறோம்” என்று தான் அர்த்தம்.
8.அல்லது முழித்திருந்தாலும் அவருடைய பாதுகாப்பில் “தூங்கிக் கொண்டிருக்கின்றோம்” என்று தான் அர்த்தம்.

என்னைப் பொறுத்தவரை நான் கண்ணை மூடித் திறந்தால் ஒரு வாரமே போகிறது. பத்து தடவை திறந்து முடினால் வருடமே போய்விடுகிறது. எனக்கு நேரம் காலம் எதுவும் இப்பொழுது சரியாக நினைவுக்கு வருவதில்லை.

படுப்பதாகவும் தெரிகிறது மீண்டும் எழுவதாகவும் தெரிகிறது. அதாவது ஒவ்வொரு நாளும் படுப்பதும் காலை எழுந்திருந்து எல்லா வேலையும் முடித்து விட்டு மீண்டும் படுப்பது என்பது “ஒரு நொடி…” போல் இருக்கிறது.

ஆக மொத்தம் மீண்டும் மீண்டும் படுப்பதாகவும் மீண்டும் மீண்டும் எழுவதாகவும் தான் தெரிகிறது.
1.இந்த லௌகீக வாழ்க்கையில் தனியாக எங்கேயும் மனம் நிலைக்கவில்லை
2.அகஸ்தியர் உணர்வு தான் எஞ்சி இருக்கிறது

தீட்சை என்பதை விட அதற்குப் பெயர் “தீட்சண்யம்…!” என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய தீட்சண்யம் அகஸ்தியரின் மூச்சலைகளைக் கவர்வதில் தான் உள்ளது.

அவருடைய மூச்சலைகளைக் கவர வேண்டும் என்றால் அதை ஸ்பரிசித்தவர்களின் (அகஸ்தியரின் அருகாமையை) உணர்ச்சிகள்தான் நமக்கு வேண்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஞானகுருவின் உபதேசங்களை (LINK) கூர்ந்து கேட்டாலே அந்தத் தீட்சண்யம் எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும்.

அதிலே முக்கியமான உபதேசம் இது தான்…!
“மகரிஷியும் நானும் – அவன் தான் நான்… நான் தான் அவன்…!”
அதிலே சொல்லியிருப்பது அகஸ்தியரின் பரிபூரணமான ஆசை.

1.உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டு
2.அந்த ஞான வித்தை ஆழமாக ஊன்றி
3.திரும்பத் திரும்ப இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் விளைய செய்தால்
4.தூங்காமல் தூங்கும் ஒளி நிலை என்பதை ஒவ்வொருவருமே அனுபவிக்க முடியும்

உபதேசத்தைப் பதிவாக்கினால் தான் அது வரும். வேறு யாரும் (தீட்சை) கொடுத்து அதைப் பெறச் செய்ய முடியாது. இது சாப்பாடு…! மண்ணிலிருந்து விளையும் விளைச்சல்…! (ரெடிமெட் ஆக காசு கொடுத்து வாங்குவது போல் வாங்க முடியாது)

அவரவர்கள் எடுத்துச் சாப்பிட்டால் தான் அவரவர்களுக்குள் பார்க்க முடியும். உங்களுக்காக அடுத்தவர் சாப்பிட்டால் அவர்களுக்குத் தான் சத்தாகும்.

தீட்சை அந்த அகஸ்தியரின் ஒலிகளுக்குள் இருக்கிறது (உபதேசத்திற்குள்) LINK https://wp.me/p3UBkg-1Br. “தீட்சண்யம்…” வேண்டும் என்பவர்கள் இதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

agastyamala idol