தை…! இணைத்துவிடு…! துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லாவற்றிலும் இணைத்துவிட வேண்டும்

தை…! இணைத்துவிடு…! துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லாவற்றிலும் இணைத்துவிட வேண்டும்

 

தை…! (தை மாதம்) என்றால் இணைத்தல் என்று பொருள். ஒரு நூலின் தன்மை கொண்டு இணைக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்கிறது. அதைத் தான் “தை…” என்று காட்டினர்.

இணைத்திடும் உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழச் செயல்படுத்துவது தான் அதன் நிலை. அன்றைய கால பாஷையில்
1.“தை” என்ற நிலையில் “இணைத்து விடு…” என்று பொருள்படும்படி
2.உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நிலையாக
3.சுவைமிக்க நிலைகளை உருவாக்கும் நாள் என்று தைப் பொங்கல் என்று காட்டினார்கள்

ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து அருள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து ஒளியின் உணர்வாக அத்தகைய பெரும் சக்தியை எவ்வாறு நமக்குள் வளர்த்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாக்கும் நாள்தான் தைப் பொங்கல்.

அதிகாலையில் எழுந்து நான்கிலிருந்து ஆறு மணிக்குள் சூரிய உதயத்திற்குள் பொங்கல் வைத்துப் பழகுதல் வேண்டும். பண்டைய காலத்தில் அப்படித்தான் வைப்பார்கள்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். செல்லப்பிராணிகளை வைத்து அதை வணங்கும் முறையைக் காட்டி
1.அத்தகைய உயிரினங்களிலிருந்து தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்
2.மனிதனாக இன்று வந்திருக்கிறோம்…! என்று நினைவுபடுத்தும் நாள் தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது இன்று மனிதனாக இருக்கும் நிலையில் இதற்கு முந்திய நிலையில் நாம் எப்படி வாழ்ந்தோம்…? எப்படி வளர்ந்து வந்திருக்கின்றோம்..? இன்றைய மனித வாழ்க்கையில் அதை நாம் எப்படிச் செயல்படுத்துகிறோம்…? மற்ற உயிரினங்கள் எப்படி வாழ்கின்றது…? அதில் இருந்து வந்தவர்கள் தான் நாம்…! என்ற நிலை அங்கே தெளிவாக்கப்படுகின்றது.

காரணம்… ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று நாம் பார்த்தால் அவருடைய கஷ்டத்தை ஈகையால் நுகர்ந்து விட்டால் வேதனை உணர்வுகள் நமக்கு அதிகரித்துவிடும். நம்மையும் கஷ்டத்திற்குள் ஆழ்த்திவிடும்.

ஆகவே அந்த வேதனை நமக்குள் வராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் ஈகையால் நுகர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில்…
1.ஞானிகளின் அருள் சக்தியை அவர்களுக்குள் பாய்ச்சி
2.அந்த வேதனையிலிருந்து அவரும் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.வெறுமனே எண்ணினால் நம்மைத் தீமையின் நிலைக்குத் தான் அது ஆளாக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வேக வைக்கிறோம் என்றால் சூடு அதிகமாகி விடுகின்றது. ஒரு உபகரணத்தையோ அல்லது துணியையோ வைத்துத் தொட்டால் தான் அதை நாம் எடுக்க முடியும். இல்லையென்றால் கையைச் சுட்டுவிடும். ஆகவே அதை நாம் பக்குவமான நிலையில் எடுக்க வேண்டும்.

அது போலத் தான் வாழ்க்கையில் நாம் தீமைகளைச் சந்திக்கும் போது அந்த அருள் ஞானிகள் உணர்வை வைத்துத் தான் அதைச் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் வேதனையால் அவதிப்படுகிறான். கேட்டறிந்தவுடனே அது வந்து விடுகின்றது. நாம் நல்ல பண்புகள் கொண்டிருப்பினும் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் நல்ல மனதையும் கெடுத்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாகி வாழ் நாளில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அரும் பெரும் சக்தியை யாரொருவர் நுகர்கின்றனரோ அந்த உணர்வினை வலுவேற்றி கொண்டால அடுத்து வரும் தீமை எதுவாக இருந்தாலும் அதை வளராது தடுத்து விடலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டினால் வேதனையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் வளரும்.

அரிசி இயற்கையில் சூரியனால் விளைந்தது தான். அதில் இருக்கக்கூடிய தோடை (உமியை) நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் அரிசியைத் தான் எடுத்து வேக வைக்கின்றோம்.

வேக வைப்பது எதற்கு…? வெறும் சுவைக்காக அல்ல…!

1.இயற்கையில் விஷத்தின் ஈர்ப்பால் அதனின் உணர்ச்சியைத் தூண்டி
2.அந்த உணர்வுக்கொப்பத் தான் அது விளைகின்றது.
3.ஆனால் வேக வைத்தாலோ தன் இனத்தை அது வளர்க்காது.

அதைப் போன்று வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்… அது நமக்குள் வளராது அடக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் இணைத்து
2.அதை வேக வைக்க வேண்டும்.
3.அதனின் இயல்பை மாற்றி மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாக நாம் வளர்க்க வேண்டும்.

அது தான் ஞானிகள் அடைந்த வேகா நிலை என்பது.

வண்ணான் ஆடைகளைத் தூய்மைப்படுத்துகின்றான்… சுவாசத்தில் வரும் தீமைகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

வண்ணான் ஆடைகளைத் தூய்மைப்படுத்துகின்றான்… சுவாசத்தில் வரும் தீமைகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீர இயக்கத்தில் இன்று வாழக் கூடிய காலங்களில்… உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையில்… நாம் எடுக்கக் கூடிய சுவாசத்தின் உணர்வு மற்ற எந்த உணர்வின் அலையுடன் மோதினாலும் அதைச் சீராக்க வேண்டும்.

இச்சரீரத்தில் பதிவாகக் கூடிய எண்ண அலைகளை…
1.நாம் வண்ணானிடத்தில் அழுக்குத் துணிகளைப் போடும் பொழுது
2.அழுக்கை நீக்கித் தூய்மையான துணிகளை நமக்கு எப்படித் தருகின்றானோ அதைப் போன்று
3.நம்மை எதிர்படும் தீய உணர்வுகளை நம் எண்ணத்தில் எடுத்தாலும்
4.அதை உடனே உணர்வுடன் கலக்க விடாமல் அவ்வழுக்கை நீக்கி
5.தூய்மையான அலையை இச்சரீரத்தில் பதியக் கூடிய நிலைக்குப் பக்குவமாக்கி
6.அழுக்கை நீக்கித் தூய்மையான உடையை வண்ணான் தருவதைப் போன்று
7.நம் உணர்வுடன் மோதக்கூடிய தீய அலைகளைத் தூய்மையாக்கி
8.நம் ஆத்மாவின் ஒளிக்குத் தர வேண்டும்.

இருந்தாலும் வாழ்க்கை என்னும் பொழுது உணர்வுகளில் மாற்றமில்லாத் தன்மை ஏற்படாமல் இருக்காது.

ஆகவே… வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு நொடிப் பொழுதின் உணர்வையும்
1.சரீர எண்ணத்தில் நாம் எடுக்கக்கூடிய சுவாசத்தைக் கொண்டு
2.செயலாக்கத்தக்க அணு வளர்ச்சியின் காந்த ஒளி அலையால்
3.நாம் எடுக்கக்கூடிய சாந்த நற்குணத்தின் சம அலையால்
4.உயர் காந்த மின்காந்த சக்தியால் பெறவல்ல பக்குவத்தில்
5.இவ்வாத்மாவின் ஒளியைக் கூட்டிக் கூட்டி ஆத்மாவின் வீரியத் தன்மை பெற்று
6.வாழ்க்கையில் உள்ள பொழுதும் இச்சரீரத்தை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும்
6.தன்னைத் தானே தான் உணர்ந்து தன் வளர்ச்சியைப் பெற்றுக் கொண்டே இருக்க முடியும்…!

அப்படி வலுப் பெற்ற ஆத்ம ஒளிகள் தானப்பா… இன்று நாம் வாழும் பூமியும்… நம்மை வாழ வைக்கும் சூரியனும்… மற்ற பல கோடி ஜீவ ஒளி மண்டலங்கள் யாவையுமே…!

ஆனால் அப்படிப்பட்ட உணர்வின் எண்ணத்தின்… ஜீவ வளர்ச்சியின் உண்மையை மனிதன் உணராமல்…
1.இன்றைய மனிதனின் எண்ணம் செயல் எல்லாம்
2.தன்னுள் இருக்கும் ஆத்மாவின் உண்மையை அறியாமல்
3.உடலின் சுகத்தின் உணர்வின் உந்தலின் வாழ்க்கையிலேயே
4.தன்னைத்தானே – இச்சரீரத்தையே உண்மை என்று நம்பி அழித்துக் கொள்கின்றான்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமே இச்சரீரம் தான். இந்தப் பொக்கிஷத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்…? என்பதைத்தான் ஒவ்வொருவரும் அறிதல் வேண்டும்

அதைத் தான் தொடர்ந்து இங்கே பாடநிலையாகக் கொடுத்துக் கொண்டுள்ளேன் (ஈஸ்வரபட்டர்).

கடிந்துரைக்க எண்ணாதே…!
கடுமையின் உணர்வு உன்னையும் சுடும்

கனிந்துரைப்பாய்…!
காரியத்தின் வெற்றியைச் சுவைக்கலாம்

மனதின் மமதைக்கு மருந்துண்டால்
மங்கிடும் மமதை மறைந்தே…!

தோஷம்

தோஷம்

 

கோடிப் பணம் சம்பாதித்து விட்டோம் என்றால் “நிம்மதியாக இருந்து விடலாம்…” என்று நினைப்பார்கள்.

அவ்வாறு நிம்மதியாக இருக்கும் போது இவர் மிகவும் “நல்லவர்.. என் சொந்தக்காரர்…” என்று எல்லாம் சொல்லிக் கொண்டு நம்மைத் தேடி வருவார்கள்.

என் பையன் சேட்டை செய்கிறான் என்று சொல்வார்கள். பக்கத்தில் இருக்கும் வீட்டுக்காரன் சதா தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள் தான் நிவர்த்தி செய்து தர வேண்டும் என்பார்கள்.

இவர் கேட்பார். உடனே அதே உணர்வு இங்கு வரும். இவர் மேலே பாசமாக இருந்து அதையெல்லாம் எடுத்துக் கொள்வார்.

முதலில் இவர் அமைதியாக இருந்தார். செல்வம் எல்லாம் தேடி வந்தது. சம்பாரித்தார்…, நன்றாக இருக்கின்றார்.

இவர் நன்றாக இருப்பதைப் பார்த்து மற்றவர்கள் வந்து அவரவர் கஷ்டங்களையும் எல்லாம் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

ஏனென்றால் இவர் மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கிறார். அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்தார். அப்புறம் என்ன நடக்கின்றது?

உடலில் இல்லாத வலியெல்லாம் வரும்.
இடுப்பு வலிக்கிறது…
மேல் வலிக்கின்றது…
தலை வலிக்கின்றது…
சர்க்கரைச் சத்து வந்து விட்டது…
இரத்தக் கொதிப்பு வந்து விட்டது என்பார்கள்.

ஏனென்றால் தன்னை நாடி வருபவர்கள் சொல்வதை எல்லாம் இவர் கேட்பார். நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை – இது இந்த மாதிரி வந்துவிடும்.
1.நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே படுவது நந்தீஸ்வரன்.
2.சிவனான இந்த உடலில் அந்தக் கணக்குள் கூடுகின்றது.

தவறே செய்யவில்லை. உதவி கேட்டு வருகின்றனர். அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.

நல்ல மனதுடன் இவர் கேட்கிறார். நுகருகின்றார். உமிழ்நீராக மாறுகின்றது. சாப்பாட்டில் கலக்கிறது. நுரையீரலுக்குப் போகின்றது. கல்லீரலுக்குப் போகின்றது. கிட்னிக்குப் போகின்றது. இருதயத்திற்கு வருகின்றது.

1.பின்னர் இருதயம் பட…படா.. பட…படா… என்று வரும்.
2.அத்தனை பேருடைய கஷ்டத்தையெல்லாம் கேட்டு
3.அதற்குப் பஞ்சாயத்து செய்வதற்குப் போனார்.
4.இந்த உணர்வு பட…படா… என்று வரும்.

கடைசியில் இந்த மாதிரி ஆனவுடனே “சீனி சாப்பிடாதே…, காரத்தைச் சாப்பிடாதே… உப்பைச் சாப்பிடாதே… எண்ணெயைச் சாப்பிடாதே…” என்று டாக்டர்கள் சிபாரிசு செய்வார்கள்.

அவர் தவறு செய்யவில்லை.
1.செல்வம் இருக்கிறது.
2.ஆனால் அமைதி இருக்கின்றதோ…?

நாம் சுவாசித்த பிறருடைய உணர்வுகள் இவ்வாறு தோஷமாக வந்து விடுகின்றது. அதைத் தான் நந்தீஸ்வரா…! என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நந்தீஸ்வரன் (சுவாசிப்பது)) என்றால்
1.நாம் ஒவ்வோரு நொடியிலும் சுவாசிப்பதை உயிரான ஈசன் உருவாக்கும்.
2.நம் உடலுக்குள் போனவுடன் அதே குணத்தை உருவாக்கும்.

நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று அவன் எப்படித் தீமைகளை நீக்கினானோ அதைப் போல நாமும் நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.

அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்…?

காலை நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி… உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற வேண்டும் என்று
3.நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்.

அப்பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் உற்சாகம் அடையும். நோயாக மாற்றாது… பகைமையை உருவாக்காது… ஏகாந்தமான உணர்ச்சிகள் வரும்.

இதுதான் தோஷத்தைக் கழிக்கும் முறை…!

இந்தப் பிறவியே கடைசியாக இருக்கட்டும்…! – ஈஸ்வரபட்டர்

இந்தப் பிறவியே கடைசியாக இருக்கட்டும்…! – ஈஸ்வரபட்டர்

 

இச்சரீரத்தில் நாம் பெற்றுள்ள அமிலத்தின் தன்மைக்கும் இப்பூமியைச் சுற்றியுள்ள நட்சத்திரக் கோள்களின் அமிலத்தின் தன்மைக்கும் தொடர்புண்டு.

சுவை ஏழு… வண்ணம் ஏழு… நாதம் ஏழு… மணம் ஏழு… என்ற நிலையில் இந்த பூமியின் தொடர்பு நிலை மையத்தின் விகித நிலைகள் பலவாக மாறுபட்டாலும்… ஒன்றின் தொடர்பு கொண்ட வீரியத் தொடர்பில்.. பல மாற்றத்துடன் ஒவ்வொன்றும் ஜீவன் பெறுகின்றது.

ஜீவிதத்தின் தொடர்பில் ஒன்றிலிருந்து ஒன்று மாற்றப்படும் அமிலக் கலவையின் கூட்டு விகிதத்தில் செயல் தன்மை பலவாக மாறு கொள்கின்றது.

1.நொடிக்கு நொடி மாறுகொள்ளும் உணர்வின் செயல் வட்டத்தில்
2.இச்சரீரத்தின் எண்ணத்தை எப்படிப் பக்குவப்படுத்தல் வேண்டும்…? என்ற ஞானத்தைத்தான்
3.நாம் உயர் ஞானமாக்கும் வழிமுறைக்குச் செயல்படல் வேண்டும்.

நாம் வாழக் கூடிய வீட்டிற்கு முன் கதவு வைத்து நமக்குப் பாதுகாப்பிற்கான செயலுடன் வீடு கட்டிக் கொள்கின்றோம். வெளி உலகத் தொடர்பிற்கு நாம் வீட்டின் முன் கதவைத் திறந்துதான் வெளியே செயலுக்குச் செல்கின்றோம்.

உண்ண உறங்க இச்சரீரத்தின் பாதுகாப்பிற்கு வீட்டை அமைத்துக் கொள்கின்றோம். வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படி முன் கதவு இருக்கின்றதோ அதைப் போன்று
1.சரீரம் என்பது நம் ஆத்மாவிற்கு வீட்டைப் போன்றது.
2.இவ்வீட்டிற்குள்ளே ஆத்மா குடியிருக்கக்கூடிய செயலானது
3.ஆத்மாவினுடைய வளர்ச்சியின் செயலுக்கான எண்ணத்தை வீட்டின் கதவைப் போன்று
4.வெளி உலகத்திற்கும் வீட்டிற்கும் எப்படிக் கதவை வைத்துப் பாதுகாப்பு அமைத்துக் கொண்டுள்ளோமோ
5.இக்கதவு என்ற எண்ணத்தைப் பாதுகாப்பின் செயலுக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

இச்சரீரத்தின் உணர்வின் எண்ணத்தைக் கொண்டுதான்…
1.ஆத்மாவின் ஒளியைப் பிறவா நிலை என்ற
2.ஜோதி நிலைக்குச் செயல்படுத்திடல் முடியும்.

நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்க்கும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள பொருளையும்… நம் உருவத்தையும் எதிர்படுத்திக் காட்டுகின்றது

அதுவே இரசம் பூசப்படாத கண்ணாடியில் பார்க்கும் பொழுது வெளி உலகைத்தான் பார்க்க முடிகின்றது. நம் உருவமோ நம்மைச் சுற்றியுள்ள நிலையோ எதிர்படுத்தி இரசம் பூசாத கண்ணாடியில் பார்க்க முடிவதில்லை.

1.அதைப் போன்று இச்சரீரமென்பது நம் ஆத்மாவிற்கு இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றது.
2.ஜீவனற்ற ஆத்மாவின் நிலை இரசம் பூசப்படாத கண்ணாடியைப் போன்றது.

தன் பிம்பத்தைத் தானேக் கண்டு… தன்னைச் சுற்றியுள்ள பொருளும் கண்ணாடியில் தெரிவதைப் போன்று… ஆத்மாவின் இயக்கத்தின் செயல் இச்சரீர ஜீவனில் வாழக்கூடிய செயலில்…
1.தன்னைத்தானே உணர்ந்து வளரும் வலுவிற்கு வலுக் கூட்டக் கூடியது
2.இச்சரீரத்தின் இயக்கமுடன் கூடிய ஆத்மாவின் வாழ்க்கை…!

உடலை விட்டு ஆத்மா பிரிந்து விட்டதென்றால் அவ்வாத்மாவிற்கு ஊடுருவிப் பார்க்கும் கண்ணாடியைப் போன்று எதிர் நிலையைத்தான் உணர முடியுமே தவிர “தன் ஆத்மாவை வளர்த்துக் கொள்ள முடியாது…”

ஆகவே இதைத் தெளிவாக உணர்ந்து கொண்டு
1.இப்போழுது இருக்கும் இந்த உடலையே கடைசி உடலாக எண்ணி…
2.உயர் ஞானத்தை இச்சரீரத்தில் விளைவித்து…
3.ஆத்மாவைப் பேரொளியாக ஆக்கி…
4.மகரிஷிகள் வாழும் இடம் செல்ல வேண்டும்.
5.அழியா ஜோதி நிலை பெற வேண்டும்.

பரமாத்மாவிற்கு நாம் செய்ய வேண்டிய சேவை

பரமாத்மாவிற்கு நாம் செய்ய வேண்டிய சேவை

 

நம் பூமியில் எங்கெங்கே எந்தெந்த ஊர்களில் பயமும் அதிகமான வெறுப்பும் வேதனையும் கொதிப்பும் கொண்டு அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்களோ
1.இவை அனைத்துமே மேக மண்டலங்களில் கலக்கின்றது.
2.மழை நீராகப் பெய்யும் பொழுது கடும் நோயாகவே மாற்றுகின்றது.

இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கம் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு எத்தனையோ புதிது புதிதாக உருவாக்குகின்றார்கள்… படைக்கின்றார்கள். அதில் உள்ள தீமைகளை அகற்றுகின்றார்கள். ஆனாலும்
1.அதிலே நஞ்சினைக் கலக்கின்றான்
2.தீமைகளை அகற்றுவதற்காக இத்தகைய நிலையைச் செயல்படுத்துகின்றான்.
3.தீமையை நீக்கிய அந்த நஞ்சின் உணர்வுகளைச் சூரியன் ஆவியாக மாற்றுகின்றது
4.மேகக் கூட்டங்களில் கலக்கின்றது… மழை நீருடன் கலக்கின்றது.
5.விஷத்தன்மைகளை உலகெங்கிலும் பரப்புகின்றது.

உலக மக்களுடன் நாம் அன்றாடம் பழகுகின்றோம்… உலகத் தொடர்பும் கொண்டுள்ளோம். அதன் மூலம் விஞ்ஞான அறிவால் உலகெங்கிலும் நடக்கக்கூடிய சம்பவங்களை ஒரு நொடிக்குள் நாம் காண நேருகின்றது.

எல்லாவற்றையும் படமாக்கி டி.வி. பத்திரிக்கை மூலம் ஒலி ஒளி என்ற அலைகளைப் பரப்புகின்றனர்.
1.அந்த ஒலிகள் நம் செவிகளில் படுகின்றது… உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது
2.தூண்டியவுடன் கண்ணின் நினைவாற்றலை அங்கே செலுத்துகின்றோம்… அந்த அசம்பாவிதங்களைக் கண் கவர்கின்றது…
3.கவர்ந்த்தை மூக்கின் வழியே நாம் சுவாசிக்கின்றோம்… உயிருடன் இணைக்கப்படுகின்றது… உணர்வின் அறிவாக அறிகின்றோம்.

அதன் உணர்வாக நமது உயிர் “ஓம் நமச்சிவாய…” என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது. உடலுக்குள் அணுவாக்கி விட்டால் நாம் எதை வேடிக்கை பார்த்தோமா… எதை ரசித்தோமோ… அங்கே நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தவுடன் அந்த உணர்வின் கருவாக இங்கே உருவாகி அதன் உணர்வாகவே நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

உலகில் எங்கெங்கு சிதைந்திடும் நிலையாகிப் போர்க்களங்கள் ஆகி மடியச் செய்யும் உணர்வுகள் பெற்றதோ அதை எல்லாம் நுகர்கின்றோம்.
1.அங்கே மடிகின்றான் என்று உணர்கின்றோம்
2.இதே உணர்வு நமக்குள் வரும் போது நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை அது மடியச் செய்கின்றது
3.மனிதனை மடியச் செய்யும் உணவுகளை வளர்க்கின்றது.

நுகர்ந்த உணர்வுகள் எதிரி என்று ஆகிறது. நன்மைகளை இழக்கச் செய்கிறது… பகைமையை வளர்க்கின்றது.

அதை எல்லாம் செயலற்றதாக ஆக்குவதற்குத்தான் நமது குரு காட்டிய வழியில் கல்யாணராமா…!
1.நம் எண்ணங்கள் உணர்வுகளை ஒன்றாக்கிப் பகைமை என்ற காண்டீபத்தை ஒடித்துவிட்டு
2.அன்பென்ற அரவணைக்கும் சக்தியை வளர்த்து உயர்ந்த நிலைபெறச் செய்வதற்கு இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

யாம் உபதேச வாயிலாகக் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகளைக் கூட்டமைப்பாக எடுத்து நீங்கள் ஒவ்வொருவரும் அந்த ஞானிகளின் உணர்வுகளை மூச்சலைகளாக வெளிவிடும் போது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. அந்த அருள் உணர்வுகள் மேகங்களில் கலக்கப்படுகின்றது.

மேகக் கூட்டங்களில் இந்த உணர்வுகள் பரவப்படும் போது
1.உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவருடனும் பற்று கொள்கின்றோம்
2.நமக்குள் அந்த அருள் பாசத்தை வளர்த்துக் கொள்கின்றோம்.

எதை வைத்து…?

இந்தப் பேரானந்தத்தைப் பேரின்பத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும் என்று செலுத்தப்படும் போது அதே உணர்வின் தன்மை பேரின்பம் பெறும் உணர்வின் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.

இத்தகைய உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டால் அந்த மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.
1.பரமான நம் பூமியின் எல்லையில் “பரமாத்மாவாக…” மாறுகின்றது.
2.பூமியில் வாழும் மக்கள் அனைவரும் இந்த பரமாத்மாவிலிருந்து அந்த அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் போது அவருடைய “ஆன்மாவாக…” அது மாறுகிறது.
3.அப்போது அருள் உணர்வுகளை அங்கே இயக்கி… பேரின்பம் பெறும் உணர்வின் தன்மை அவர்கள் “ஜீவான்மாவாக…” மாறுகின்றது.

ஜீவாத்மாவாக மாறும் பொழுது பகைமையற்ற உணர்வுகளையும்… மகிழ்ந்து வாழ்ந்திடும் உணர்வுகளையும்… ஒன்றுபட்டு வாழும் உணர்வுகளையும்… அணுக்களாக மாற்றப்படும் பொழுது அது அவர்களின் “உயிரான்மாவாக…” மாறுகின்றது.
1.உயிருடன் ஒன்றி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மையும்
2.பிறவியில்லா நிலை என்ற நிலையையும் அடைகின்றனர்.

ஆகவே நமது எண்ணங்கள் எவ்வாறோ அதன் வழியே அது நடக்கின்றது. அது தான் கீதையிலே நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்.

தெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்குத் தேவை – ஈஸ்வரபட்டர்

தெய்வ சக்தி பெற்ற மனித உயிராத்மாக்கள் தான் படைக்கப்படும் படைப்பிற்குத் தேவை – ஈஸ்வரபட்டர்

 

1.சிவனான ஆண் குண வலுவைக் கொண்டு
2.சக்தியான பெண் உணர்வின் எண்ண அமில ஈர்ப்பின் ஜீவித தொடர்பால்
3.இரண்டு ஆத்மாக்களின் ஈர்ப்பு வட்டம் ஒன்றின் தொடர்பு கொண்டு எடுக்கப்படும் தியான அலையின் வலுவைக் கூட்டக் கூட்ட
4.அவ்வலுவின் வளர்ச்சியால் ஆத்ம ஐக்கிய உணர்வு சரீர வாழ்க்கை பந்தத் தொடர்பில்
5.ஒரே எண்ண குண தொடர்பின் சுழற்சியில் வளர வேண்டும்.

ஏனென்றால் அப்படிப்பட்ட உயர் நிலையில் வளர்ச்சிக்கு வரும் இந்த மனித சக்திகளால் தான் ஒவ்வொரு கோள்களாகவும்.. ஒளி சக்தி கொண்டு ஒளிரும் சக்தியாகவும்… நம் பூமியில் சூரியனின் ஒளி அலைகள் வீசத்தக்க ஈர்ப்பின் தொடர் கொண்டு வளர்ந்துள்ள இயற்கை வள கனி வளங்களும் தாவர இனங்களும் உருவக அமைப்பின் தன்மையும் எல்லாமே உருப்பெற்று உள்ளன.

இன்று ஓர் பலூனை ஊதும் பொழுது… எந்த வடிவ அமைப்பில் அது உள்ளதோ… எந்த அளவுக்குக் காற்றின் அழுத்தத்தைச் சேமித்து உப்பக்கூடிய நிலை அதற்குள் இருக்கின்றதோ… அதனுடைய வடிவை அது பெறுகிறது. அதிகப்படும் பொழுது பலூன் வெடித்து விடுகின்றது.

அதைப் போன்று தான் உயிரணுவின் தோற்றத்தின் உருவ நிலைகள் யாவுமே…! மரம் செடி கொடிகள் மற்ற இன வர்க்கங்கள் ஒவ்வொன்றுமே
1.அதனதன் ஆத்ம அமிலச் சேர்க்கையின் நிலைக்கொப்ப
2.உயிர் பெறும் உருவக அமைப்பில் இப்பூமியின் காற்றழுத்த ஈர்ப்பின் வளர்ச்சி கொண்டு வளரும் தன்மை பெறுகிறது.
3.ஆனால் இது பிற கோள்களின் நிலையில் மாறுபடுகின்றது.

மனித உயிர் ஆத்மாவின் அமிலக் கூறின் உயிர் பெற்று ஜீவ வளர்ச்சியின் பருவக்காலம் வரை சேமிப்பின் அமில உருவக நிலை வளர்ந்தாலும் உருவ வளரச்சி நிலை பருவ காலத்திற்குப் பின் உயரும் நிலை தடைப்பட்டு விடுகின்றது.

இப்பூமியின் எந்தெந்த இடங்களில்… எக்காற்றின் அலைத் தொடர்பில் ஜீவன் பெறுகின்றதோ… அதற்கொப்பத்தான் அங்கங்குள்ள மனித இனங்களும்… மற்ற தாவரங்களும்… பிராணிகளும் உருவகம் பெறுகின்றது.

ஏறக்குறைய இப்பூமியின் அமைப்பின் சுழற்சியிலேயே சிறிது சிறிது மாற்றங்களுடன் உருவக வளர்ச்சி நிலைகள் யாவையும் வளர்கின்றன.

சில அபூர்வமாக உயரமாக வளரக்கூடிய தன்மைகள் மட்டும் அமிலத்தின் சேர்க்கை விகித நிலைக்கொப்பக் கூடியும் குறைந்தும் வளர்கின்றது.

இன்று நம் பூமியின் தன்மைக்கும் மற்றக் கோள்களின் தன்மையும் மாறுபாடான நிலை தான் உண்டு. உதாரணமாக சனி கிரகத்தில் மனித ஜீவனின் உணர்வின் எண்ணம் கொண்டு வாழக்கூடிய தன்மைக்கு சனிக் கோளின் அமைப்பு நிலை மாறுபட்ட தன்மையாக உள்ளது.

ஜீவனுள்ள உயிர் அணுக்கள் அங்கு வளர்ந்தாலும் இங்கு எப்படி கல் மண் மேல் படிந்துள்ள பாசி போன்று அங்கங்கு உள்ள ஜீவ வளர்ச்சி நிலையில் உள்ளது போல் தான் உண்டு. நம் பூமியில் உள்ளது போல் அவைகள் நகரும் தன்மையோ நடந்து பறக்கும் நிலை போன்று அங்கில்லை.

ஓர் ஜீவ உயிர் சனியில் பிறந்ததென்றால் அப்பூமியின் பிடிப்பில் ஒன்றியே பிறப்பெடுத்து இறுகிய நத்தைக்கும் மற்றச் சில பிராணிகளுக்கும் இருப்பதைப் போன்று கெட்டியான ஓடுகளுடன் பிறப்பெடுத்து அப்பிறப்பின் இறப்பிலேயே மாறும் தன்மையும் உள்ளது.

சனிக்கோள் அதி குளிரின் ஈர்ப்புப் பிடிப்பிற்கொப்ப சுழல்வதால் பிற கோள்களின் சந்திப்புச் செயல்நிலை இருந்தாலும் உஷ்ண அலையின் சமைப்பு நிலைக்கு நம் பூமியின் தன்மை போன்ற நிலை இல்லாததினால் மனிதர்கள் யாரும் அக்கோளில் பிறப்பெடுக்க முடியாது.

நம் பூமியிலிருந்து பார்த்தால் சந்திரனின் பௌர்ணமி நிலவு தெரிவதைப் போன்று தான்… சனியைச் சுற்றியுள்ள பன்னிரண்டு கோள்களின் நிலையிலும்… சனிக்கோளின் சுழற்சி சந்திப்பிற்கொப்ப இங்கெப்படி அமாவாசை பௌர்ணமி என்று ஒரு சந்திரனின் தொடர்பில் அறிவது போன்ற நிலை உண்டு.

சனிக் கோளின் தொடர்பு கொண்ட பன்னிரண்டு கோள்களும் அவை எடுத்து வெளிக் கக்கும் அலை அமில நிலைக்கொப்ப சனியின் சுழற்சி ஓட்டமும் பூமியைக் காட்டிலும் குறைவான நிலையிலும்
1.இரவில் சந்திர ஒளியின் வெளிச்ச அலையை எப்படி நாம் இங்கு காண்கின்றோமோ அதற்கொப்ப
2.குளிர்ச்சியில்… சனிக்கோளும் சனிக்கோளின் உப கோள்களும் மிகவும் ரம்மியமாய் செயல்படக் கூடிய நிலையில்
3.நம் சூரியக் குடும்பத்தில் ஜீவனைத் தரக்கூடிய மையமாக உள்ளது
4.சனியின் தொடர்பு நமக்குக் கிட்டும் வலுவில்தான் நம்முடைய ஜீவ நாடியே உள்ளது

சனிக் கோள் நம் சூரியக் குடும்பத்தின் ஜீவனான நீர் சக்திக்கே மிகவும் முதன்மையானது.

மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை

மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை

 

ஆதியிலே ஆவியாக இருந்தது அணுத் தன்மை அடைந்தது. பல அணுக்கள் ஒன்றாக இணைந்து கோள் என்ற நிலை அடைகின்றது. கோள் என்ற நிலை அடையும் பொழுது அதனின் வளர்ச்சியில் நட்சத்திரமாக மாறுகின்றது.

நட்சத்திரமாக ஆனபின் தன் மலத்தால் (பால்வெளி மண்டலம்) பிரபஞ்சத்தை உருவாக்கும் நிலை பெறுகின்றது… உணர்வின் இயக்கமாக மாறுகின்றது. ஒரு அமிலத்தின் தன்மையாக மாற்றி அமைக்கும் சக்தி பெறுகின்றது.

பின்… பிற மண்டலங்களின் சக்திகளைத் தனக்குள் நுகர்ந்து அந்த நட்சத்திரம் சூரியனாக மாறுகின்றது. சூரியன் ஆகும் போது தனது வளர்ச்சியில் அதன் வளர்ப்பில் ஓர் பிரபஞ்சம் என்ற நிலையை உருவாக்குகின்றது.

பிரபஞ்சம் என்று உருவான பின் அதில் சேர்க்கும் உணர்வின் தன்மை நட்சத்திரங்களின் இயக்கமாக ஒரு உயிரணு என்று உருவாகின்றது. அந்த உயிரணுவோ தான் நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுவாக மாற்றுகின்றது.

தாவர இனங்கள் உணர்வின் தன்மையை இந்த உணர்வுக்கொப்ப அந்தச் செடியின் ரூபமும் மணமும் அதன் இயக்கமும் என்ற நிலையை அடைகின்றது.

இதைப் போன்று பல நிலைகளைக் கவர்ந்து கொண்ட நிலைக்கொப்ப
வண்ணங்கள் மாறுகின்றது…
சுவைகள் மாறுகின்றது…
குணங்கள் மாறுகின்றது…
உணர்ச்சிகள் மாறுகின்றது.

1.ஆக… கோளாக இருப்பது இருண்ட நிலையிலிருந்து வேகும் நிலைகள் கொண்டு நட்சத்திரமாக எப்படி ஆனதோ
2.இதைப்போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும்
3.இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் நட்சத்திரமாக என்று மாற்றுகின்றோமோ
4.அதுவே மனிதன் அடைய வேண்டிய முழுமையின் நிலை.

சூரியன் எவ்வாறு ஒளியாக மாற்றுகின்றதோ அதைப்போல உயிரின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றது.

இதை எல்லாம் முழுமையாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன். அவன் திருமணமான பின்
1.தான் கண்ட பேருண்மைகளை எல்லாம் தன் மனைவிக்குப் போதிக்கின்றான்
2.மனைவியும் கணவருடன் ஒன்றி ஒத்துழைக்கின்றது…
3.இருவரும் ஒன்றென இணைந்து இரு உயிரும் ஒன்றன இணைந்து உணர்வின் தன்மை ஒளியாகி ஒளியின் சரீரமாகத் தனக்குள் படைத்து
4.எந்தத் துருவத்தை உற்று நோக்கி அந்த ஆற்றலை நுகர்ந்தனரோ அதையே எல்லையாக வைத்து
5.பூமி கவரும் உணர்வினை ஒளியாக மாற்றி கொண்டுள்ளார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை அகற்றிய அத்தகைய அருள் ஞானியின் உணர்வுகள் இந்தப் பிரபஞ்சத்தில் பரவுகின்றது. நமது பூமி துருவப் பகுதி வழியாக அதைக் கவர்கின்றது.

துருவத்தின் வழி பூமிக்குள் வருவதை
1.ஆதியிலே அகஸ்தியன் கண்ட உண்மை போல அவன் கண்டறிந்த உண்மையை
2.நமது குருவும் கண்டுணர்ந்தார்… அதனை நுகர்ந்தார்
3.நுகர்ந்ததைத் தனக்குள் விளைய வைத்தார்… அருள் உணர்வினை வெளிப்படுத்தினார்
4.எம்மை நுகரும்படி செய்தார்… அவர் கண்ட அந்த உண்மையின் உணர்வை யாமும் அறிய முடிகின்றது.

அறிந்த உணர்வை இப்பொழுது உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். பதிந்த உணர்வினை நீங்கள் உங்களுக்குள் உருவாக்கினால் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தி பெற முடியும். இந்த உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்.

இல்லறத்தில் இருந்து உயர் ஞான வளர்ச்சி பெற முடியுமா…? ஈஸ்வரபட்டர்

இல்லறத்தில் இருந்து உயர் ஞான வளர்ச்சி பெற முடியுமா…? ஈஸ்வரபட்டர்

 

சகலத்தின் சக்தியையும் சகலமாக்கித் தன்னைத்தானே தான் உணரும் உயர் ஞான ஒளி சக்தியாய் உயரும் வழித் தொடருக்கு… எண்ணத்தின் உணர்வு பக்குவ முறை கொள்தல் வேண்டும்.

இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பின் சுழற்சியில் இருந்து விடுபட எண்ணத்தின் வலுவை முதலில் பக்குவ நிலைக்கு நாம் செயல் படுத்துதல் வேண்டும்.

வாழ்க்கையில் இருந்தே நம் தியான முறையை வழிப்படுத்தும் சமமான நற்குண செயல் வழியை எண்ணத்தின் உணர்வு செயல்படும் முறை பக்குவத்தில்
1.உடல் உணர்வில் உந்தப்படும் இல்லற உணர்வின் வழித் தொடர் உகந்ததா…?
2.அந்த உடல் உணர்வின் உந்தலைச் சமப்படுத்தும் பக்குவத்தில் அடக்கும் பக்குவம் உகந்தந்தா…?
3.உடல் இச்சையின் உணர்வின் உந்தலில் எப்படிச் செயல்படுவது…? என்ற வினா ஒவ்வொருவருக்கும் எழும்பலாம்.

அதாவது தாம்பத்ய வாழ்க்கை உகந்த நிலையா…? பிரம்மச்சர்ய நிலையில் உயர்வு நிலை பெற முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

ஆரம்ப மனித உணர்வின் வழித்தொடரே தாவர நிலைக்கடுத்த வளர்ச்சி நிலை யாவையும் நீரிலிருந்து உயிர் ஆத்ம ஜீவன்கள் பிறப்பெடுத்து வந்தது.

அதன் பின் (கடல் வாழ்) தாவர இனங்களில் இருந்து வளரும் புழு பூச்சிகள் உடல் உணர்வின் ஆண் பெண் இனச் சேர்க்கையில் வளரும் நிலை இல்லாமல் தாவரங்களின் உஷ்ண அலை வெளிக் கக்கும் அமிலத்தின் பிசின் போன்ற வழுவழுப்பான அமிலத்தின் கெட்டித் தன்மையில் உயிர் அணுக்கள் சிறு புழு பூச்சிகள் உற்பத்தியாகும் நிலை இனச் சேர்க்கையின்றி வளரும் நிலை தான் உண்டு.

நீரிலிருந்து உயிரணு தோன்றும் வளர்ச்சியில் இனச் சேர்க்கையில் ஆண் பெண் என்ற நிலை அபூர்வமாகச் சில இனங்களுக்கு மட்டும்தான் உண்டு.

ஆனால் ஜீவப் பிராணிகள் பெரும்பகுதி இனச் சேர்க்கையின் தொடர்பு கொண்டுதான் இனப் பெருக்கம் செயல் கொள்கின்றது.

இவற்றின் தொடர்பில் மனித உணர்வில் பகுத்தறியும் ஞான வித்தின் முதல் நிலையில்
1.அன்பான உணர்வின் குணம் தான்
2.உந்தப் பெறும் மனித நிலையின் குணத்தின் “முதல் நிலை…”

தன் உணர்வில் உந்தும் இச்சையின் ஆசையில்… உதிரத்தில் பிறக்கும் உயிர் ஜீவனே அந்த அன்பின் உணர்வுத் தொடரில் பிறக்கும். அன்பின் ஆசை நிலை அதற்கடுத்த நிலை.

உதிரத்தில் அன்பின் உணர்வு கொண்டு பிறக்கும் சிசுத் தொடரில்
1.ஆசையும் பாசமும் தன் உணர்வின் இச்சையிலேயே பிறக்கா விட்டால்
2.எஜ்ஜீவ சக்தியையும் எந்த ரிஷிகளாலும்… ஆதிசக்தியாலுமே… வளர்க்க முடியாது.
3.அன்பின் எண்ண உணர்வில் ஆசையின் பாசமில்லை என்றால் மனிதன் என்ற நிலையே உருவாகாது.

உயர் ஞான நிலைக்கு மனித உணர்வின் எண்ணத்தைச் சம குணப்படுத்தக் கூடிய வழி முறைக்கு வயது முதிர்ந்தவர்கள் தான் செயல்படுத்த முடியுமா…? சிறுவர்களும் புதிதாக மணமான தம்பதியர்களும் எப்படி அந்நிலை பெற முடியும்…? என்ற வினா எழும்பலாம்.

நாம் எடுக்கக்கூடிய தியான உணர்வின் ஆரம்ப உணர்வே… அன்பென்னும் ஆசையில்… பாசம் கொண்டு வளர வேண்டிய வழித் தொடரில் தான்… சத்திய நிலையின் ஜீவனை வளர்க்க முடியும்,

1.தம்பதியர்களின் உணர்வுகளில் உடல் உணர்வில் அன்பின் ஆசை கொண்டு பிறக்கும் சிசுவின் பாசம் எப்படி வளர்கின்றதோ
2.வாழ்க்கையில் உண்ண உறங்க உடுக்க எப்படி சம நிலை குணங்களைப் பக்குவப்படுத்தச் சொல்லிப் போதனைப்படுத்தினோமோ
3.மணமான சிறு வயது தம்பதியர்கள் அவர்களின் வம்சத்தின் கொழுந்து பிறக்கக்கூடிய காலத்திலேயே
4.எப்படி உடல் உணர்வில் சிசு பிறக்கின்றதோ அதைப் போல் ஆத்ம ஐக்கிய உணர்வு கொண்டு இரு எண்ணங்களும் ஒன்றுபோல் ஆகி
5.உயர்ந்த ஞானத்தின் உணர்வுடன் ரிஷிகளின் தொடர்பால் எடுக்கும் தியானத்தின் மூலம்
6.ஆத்ம ஐக்கிய உணர்வில் இரண்டு ஆத்மாக்களும் இணையக் கூடிய பக்குவ நிலை பெற்று
7.சாதாரண வாழ்க்கை நிலையில் ஆத்ம உயிருக்கு நம் அன்பின் ஆசையின் ஜீவன் தந்து பிறக்கும் குழந்தையைக் காட்டிலும்
8.ஆத்ம ஐக்கியம் கொண்டு ரிஷிகளின் தொடர்பில் எடுக்கும் ஜெபத் தொடர்பின் அலை ஈர்ப்பினால்
9.புது மணம் கொண்ட தம்பதியரின் ஈர்ப்பில் உயர்ந்த ஞான வித்தின் ஆத்ம உயிர்களுக்கு ஜீவன் தரும் பாக்கியத்தைப் பெற முடியும்.

இப்பூமியில் பிறப்பெடுத்து ஞானத்தின் வழியில் சித்து நிலையால் உயர்ந்த ரிஷிகளுக்குப் போக முடியாத பல நல்ல ஆத்மாக்கள் இன்றும் உள்ளன. அந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு மீண்டும் ஜீவன் கிடைக்கச் செய்யலாம்.

நாமெடுக்கக்கூடிய (தாய் தந்தை) ஆத்ம ஐக்கியத்தால் எடுக்கும் உயர் குணத்தைக் கொண்டு அத்தகைய ஆத்மாக்களுக்கு… தான் பெற முடியாத ரிஷி சக்தியின் செயலைச் செயலாக்கி வழிதரக் கூடிய நிலையை…
1.ஒவ்வொரு தம்பதியரும் ஆத்ம ஐக்கியத்தில் நல்ல உணர்வின் செயல் வாழ்க்கையால்
2.இப்பூமியைப் பக்குவப்படுத்தக் கூடிய இல்லற உணர்வின் இச்சையின் ஆசைக்கு
3.உடல் உணர்வின் உந்தலைப் பக்குவப்படுத்தும் நிலை செயல்படுத்தலாம்.

வாழ்க்கை வழிமுறையில் துறவறம் என்ற பிரமச்சரிய முறையால் ஆண்டவனை அடைய முடியுமா…? உயர் ஞான வாழ்க்கைக்கு எம்முறை உகந்தது…? என்ற வினா எழும்பலாம்.

உணர்வின் எண்ண குணத்தைச் சமப்படுத்தும் பக்குவத்தால்… ஒவ்வொரு நாளும் இப்பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து ரிஷிகளின் எண்ணத்துடனும்… விண்ணின் ஆற்றலைப் பெறும் எண்ணத்துடனும்
1.எண்ணத்தின் உணர்வைத் தினசரி எடுக்கக்கூடிய தியான முறையில்
2.உணர்வின் இன்பம் அனைத்தும் ஏகாந்தத்தின் இன்பத்தை உணரும் பக்குவ இன்பத்தில்
3.இனிமை சுரக்கும் அன்பின் ஆசை உணர்வு கொண்டு பெறப்படும் பக்குவத்தில் ஆத்ம ஒளியே ஒளிரும் நிலை பெற்று விட்டால்
4.உடல் உணர்வின் இச்சை எச்சுவையையும் தனித்து எடுக்கக்கூடிய ஏக்கத்தின் உணவிற்கு
5.நம் எண்ணத்தின் உணர்வே செல்லாது (இதை அனுபவத்தில் பார்க்கலாம்).

ஏகாந்தத்தின் இன்பத்தை நுகரும் பக்குவத்தை… ஆத்ம ஐக்கியத் தொடர்பு கொண்டு… இரண்டு ஆத்மாக்களுக்கும் ஒரே எண்ணத்தின் வழிப்படுத்தும் வழி முறையில் கிடைக்கும் ஆத்ம ஐக்கிய ஒளியால்… எச்சிருஷ்டியையும் சிருஷ்டிக்கவல்ல தன்மையைப் பெறலாம்.

ஆனால் இரண்டு எண்ணங்களின் குண நிலை மாற்றப்பட்டு ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் ரிஷி சக்தியின் தொடர்பில் அதைச் சீர்படுத்தும் பக்குவ நிலையாக ஜெப ஈர்ப்பில்
1.ஒருவர் மேல் ஒருவர் எண்ணத்தைச் செலுத்தி
2.ஆத்ம ஐக்கிய உயர் ஞானம் பெற வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டே
3.இரு நிலையையும் ஒரு நிலையாகக்கூடிய தன்மைக்கு
4.நிச்சயம் செயல்படுத்திட முடியும்.

குருவின் (வியாழன் கோளின்) மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்

குருவின் (வியாழன் கோளின்) மிக மிக சக்தி வாய்ந்த ஆற்றல்

 

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோள் தனக்குள் மற்ற சத்துக்களை எடுத்து
1.ஒவ்வொன்றிலும் கருவுறும் சத்தாக
2.குருவாக முன்னின்று இருக்கின்றது.

சந்திரனோ மற்றவைகளை எடுத்துச் “சாந்தமான நிலையில்…” தனக்குள் உருவாக்கும் நிலையாக உருப்பெறுகின்றது. காரணம் ஒவ்வொரு குணங்களின் தன்மை அது அது கவரும் நிலைகள் கொண்டு தான் கோள்களின் இயக்கம்.

சந்திரனின் சுழற்சி வட்டத்தினை எடுத்துக் கொண்டால்… வரும் சக்திகளை அது சாந்தமான நிலைகள் கொண்டு மெதுவாக எடுத்துத் தனக்குள் மாற்றி அமைக்கின்றது.

1.இதற்கு மாறாக வியாழனோ படு வேகமாகச் சுழற்றி
2.மற்றவைகளைத் தனக்குள் வேகமாகக் கவர்ந்திடும் சக்தி கொண்டது
3.அதனால் அதனுடைய வளர்ச்சி வேகமும் அதிகரிக்கின்றது.
4.வெகு தொலைவிலிருந்து வரும் உணர்வினையும் தனக்குள் கவரும் ஆற்றல் பெற்றது
5.அதே சமயத்தில் அதனின் உமிழ்த்தும் உணர்வின் வேகமும் அதிகம்.

மற்ற கோள்களைக் காட்டிலும் உயர்வான இடங்களில் அது இருப்பதனால் தனக்கு மேல் இருக்கும் கேது ராகு கோளின் சக்தியையும் கவரும் திறன் கொண்டது.

ராகு இருள் சூழ்ந்தது… கேதுவோ விஷம் கொண்டது. அவைகளையும் வியாழன் தனது சுழற்சியின் வேகத்தில் கவர்ந்து இந்தப் பிரபஞ்சத்திற்குகந்ததாக மாற்றுகிறது.

அதாவது…
1.சூரியன் எவ்வாறு தனது சுழற்சியின் வேகத்தில் மற்ற நட்சத்திரங்களின் ஆற்றலைத் தனக்குள் கவர்ந்து
2.கோள்களுக்கும் ஜீவனூட்டித் தனது நிலைகளில் அது ஒளியாக மாற்றுகின்றதோ
3.அதைப் போன்று வியாழன் கோள் மற்ற சத்துக்களைத் தனக்குள் கவர்ந்து
4.விஷம் மற்றவைகளையும் கலந்து அதை ஒரு குருவாக்கி
5.மற்ற கோள்களுக்கும் தனது இணையாக இணைத்துக் கொண்டு வருகின்றது.

கோள்கள் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் சக்தியை நமது பூமி கவர்ந்து உயிரணுக்களை ஜீவன் பெறச் செய்வதும்… உயிரணுக்களை வளர்க்கச் செய்வதும்… தாவர இனங்களைத் தனக்குள் வளர்ப்பதும்… தாவர இனத்தின் நிலைகள் கொண்டு உயிரினங்களுக்கு ஊட்டச்சக்தி கொடுப்பதுமாக மாற்றி அமைக்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்தைப் போன்று தான் நாம் மற்றவருடைய எண்ணங்களை எந்த அளவிற்குக் கவர்கின்றோமோ அந்த உணர்வின் சக்திகளை எல்லாம் “நம் உயிர் குருவாக நின்று…” இந்த உணர்வின் சத்தைப் பெருக்கி உடலாக மாற்றுகின்றது

1.சூரியன் இந்த பிரபஞ்சத்திற்கே குருவாக இருப்பினும்
2.இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் அணுக்களுக்கு வியாழன் கோளே குருவாக இருக்கின்றது.

இதைப் போல…
1.அனைத்து சக்திகளையும் எடுத்த இந்த மனித உடலுக்குள்
2.நாம் எண்ணும் எண்ணங்களுக்கு இந்த மனித உடல் உருவான நிலையே குருவாகின்றது.

ஏனென்றால்…
1.மற்ற சத்துக்களை எடுத்து வியாழன் கோள் தனது நிலைகளில் இந்தப் பிரபஞ்சத்தில் குரு தன்மையை எப்படி அடைந்ததோ
2.அதைப் போல மனித உடலாக உருவாக்கப்படும் பொழுது நம்முடைய உணர்வின் எண்ணங்களுக்கு இது குருவாகின்றது.
3.அதே சமயத்தில் உடலுக்குள் உயிர் குருவாகின்றது… நமக்குள் சூரியனாக அது மிளிரும் தன்மையை அடைகின்றது.

அன்று ஞானிகளால் சாஸ்திர விதிகளை வகுக்கப்பட்ட இத்தகைய உண்மைகளை எல்லாம் எண்ணத்தால் எண்ணி நமக்குள் அதைப் பொங்கச் செய்ய வேண்டும்.

சூரியன் எவ்வாறு தான் கவர்ந்து கொண்ட அணுக்களில் இருக்கும் நஞ்சினைப் பிளந்துவிட்டு நல்ல உணர்வினை எடுத்து ஒளிச் சுடராக மாற்றுகின்றதோ இதைப் போன்று
1.மகரிஷிகள் தமது வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் எத்தகைய நிலைகளைக் கவர்ந்து கொண்டாலும்
2.அதில் வரும் நஞ்சினைத் தனக்குள் அணுகாதபடி தன் உணர்வின் எண்ணங்களை ஒளியாக மாற்றி
3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகி சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

சப்தரிஷி மண்டலத்தில் வெளி வரும் உணர்வுகளைச் சூரியன் தனக்குள் ஒளிச் சுடராகப் பொங்கி இங்கே பூமிக்குள் பரவச் செய்கிறது.

நமது வாழ்க்கையில் குடும்பத்திற்குள் வெறுப்போ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ ஏற்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து நமக்குள் அதை மாற்றி அமைக்க வேண்டும்.

தாவர இனங்களில் விளைந்ததை நாம் வேக வைத்து எப்படிச் சுவைமிக்கதாக உணவாகப் படைக்கின்றோமோ அது போல்
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நமக்குள் வரும் அனைத்தையும் ஒளியாகப் படைக்கும் சக்தி பெற வேண்டும்.

மகரிஷிகளை எண்ணி நாம் எடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளை எண்ணி நாம் எடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி – ஈஸ்வரபட்டர்

 

1.ஆதியின்… படைப்பின் கடவுள்… இறைவன்… தெய்வம் என்ற தொடரில்…
2.மனித ஒளி சரீரத்தின் ஒளித் தன்மை கொண்டு…
3.அவ்வொளியின் நாத உயர்வில் இறை நிலை பெற்ற மனிதன் “தெய்வத் தன்மை பெறுகின்றான்…”

பூமிக்கும்… பூமியில் வளரும் சகல ஜீவராசிகளும் ஒளித் தன்மையின் நிலை பெற்றிருந்தாலும்… ஒவ்வொன்றின் தொடர்பலையில் வலுக் கொண்ட ஒளி நிலை பெற்று… ஒளி சக்தியை வளர்க்கும்
1.உயிர் ஞான வழியை அறியக்கூடிய நிலை
2.மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

குயில் அழகாக… இனிமையாக… அதனுடைய குரல் ஒலியை எழுப்பினாலும்… மனிதனின் எண்ணத்தின் உணர்வு ஞானம் அதற்கு இல்லை.

மனித உணர்வுடன் ஒட்டி… ஒன்றின் தொடரில் வளர்ச்சியின் நிலை பெருக்கத் தொடருக்கு… ஞானத்தை உயர்த்தித் தன் பகுத்தறிவைக் கொண்டு “பல நிலைகளை மாற்றியமைக்கும்” செயல் மனிதனுக்குத் தான் உண்டு.

ஒலியின் நாதத்தை உணர்வின் எண்ண ஊட்டத்தில் பகுத்தறியும் ஞானத்தால் மனிதன் இச்சரீர உயர்வை எண்ணி… இவ்வுணர்வால் இறை சக்தியின் உன்னத நிலையான இவ்வுயிர் ஆத்மாவை… இறை குணத்தை… உணர்வின் எண்ண ஞானத்தால் பகுத்தறியும் செயலைக் கொண்டு இவ்வுடலையே இறையாக்கி… இறைவன் படைப்பில் இறை சக்தியை எடுக்கக்கூடிய ஒலி நாதத்தைத் தன் ஆத்ம உயிருக்காக இறை உணர்வு பெற்றுத் “தெய்வ நிலை பெறும் சத்திய நிலையை…” மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மனிதன் இன்று எடுத்துள்ள உடல் பிம்ப வாழ்க்கைக்குகந்த பேராசைப் பிடிப்பையே தெய்வ நிலை பெறக்கூடிய பேராசையாய் உணர்வின் எண்ணத்தைப் பக்குவப்படுத்த வேண்டும்.

ஒளியின் ஒளிப் பெருக்கைப் பெருக்கவல்ல தொடரைப் பூமியில் படைத்த
1.ரிஷிகளின் சக்திக்கு ஒளி கூட்டும் ஒளி நிலை பெற
2.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஒலி கொண்டு
3.நம்முள் உள்ள இருளகற்றி ஒளி நிலையை நாம் பெற்றோமானால்
4.ஒளி கொண்டு மற்ற இருளையும் அகற்றும் சித்தை
5.நம் சித்தத்தின் உணர்வால் ஒவ்வொருவரும் பெறலாம்.

இச்சரீர அமைப்பைச் சிருஷ்டிக்கவல்ல சித்து சக்தியையே… இக்காற்றலையில் கலந்துள்ள சகல சத்திலிருந்து உருவை உருவாக்கும் சக்தியைப் பிரித்தெடுத்துச் செயலாக்கும் முறையை உயர் ஞானி அன்றைய தன் ஞானத்தால் செயல்படுத்திக் காட்டினான்.

ஆனால் இன்றைய விஞ்ஞானி தன்னைத்தான் தான் நம்பாமல் “இயந்திரங்களின் இயக்க ஒலி சக்தி கொண்டு தான்” விஞ்ஞானத்தில் சாதிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளான்.

பல முன்னேற்றங்கள் விஞ்ஞானத்தால் இன்று வளர்ந்திருந்தாலும் தன் ஆத்ம உயிருக்குக் கூட்டக் கூடிய ஒளியின் உயர்வைக் கூட்டாததால் அழிக்கும் நிலைக்குத் தன் உயிர் ஆத்மாவை மங்கச் செய்யும் நிலை ஏற்பட்டு விடுகின்றது.

அன்று ஞானிகள் காட்டிய உண்மைகளை எல்லாம்… ஞானிகள் தொடர்பால் இன்றும் எல்லோராலும் பெற முடியும்.

எண்ணத்தின் உணர்வை மனிதனுக்கு மனிதன்… தான்… எவ் ஒலி இறை உணர்வைப் பெற்று இச்சரீர உணர்வால் செயல்படுகின்றானோ அதே தொடர்தான் தன்னை ஒத்த மனித உணர்விலும் உள்ளதை அறிந்து கொண்டால்
1.தன் ஆத்ம பலத்தின் உயர்வைக் கூட்டிக் கொள்ளக்கூடிய உரம்
2.மனித உணர்வுடன் ஒட்டிய தொடர்பால்
3.பிறரிடம் இருந்து எதிர்படும் மூச்சலைகள்
4.நல் அலையின் உணர்வு கொண்டு பெறப்படும் தொடர்பால்
5.மனித உணர்வின் ஆத்ம உயிர் ஒலித் தன்மையின் வலு நிலையை
6.சம குணத்தின் அறுகுண ஈர்ப்பால் உயர்ந்த ஒளி ஞானியாகலாம்.

அதாவது… மனித உணர்வின் எண்ண வேட்கையின் சமைப்பின் ஒளி நிலை கொண்டு
1.ஒருவரின் மேல் உயர்ந்த குணத்தைப் பலரும் செலுத்தச் செலுத்த
2.அவ்வுரத்தின் உணர்வால் மனிதன் தெய்வமாகும் நிலையை
3.அன்றைய ஞானி உணர்ந்ததால் தான் அன்பையே தெய்வமாகக் காட்டினான்.

உணர்வுகள் உந்தப்பட்டாலும் அதைச் சமமாக்கும் பக்குவத்தை எவனொருவன் செயல்படுத்தி.. செயல் வழியில் உரத்தைப் பெறுகின்றானோ… அன்றே தெய்வ நிலை கொண்ட ஒளித் தன்மையில் செயல் கொள்ள முடியும்.

இக்காற்றலையின் சுழற்சியில்… மனித உணர்வில் பல உணர்வின் வேட்கை அலைக்கு மத்தியில்… “தன் ஞானத்தை உயர்வாக்க… உயர்ந்த ரிஷி சக்திகளின் எண்ண ஜெபத்தால்… உயர் காந்த மின் ஒளியின் தியானத்தைக் கொண்டு… மனிதன் தன்னைத் தானே தான் உணர்ந்து… தெய்வ நிலை பெறும் வழி நிலையை… அமைத்துக் கொள்ளல் வேண்டும்…”