நீங்கள் மிகப் பெரிய டாக்டராக முடியும்

நீங்கள் மிகப் பெரிய டாக்டராக முடியும்

 

இன்று பெரும்பகுதியான மக்களுக்கு விஞ்ஞான அறிவால் வளர்ந்த நிலையில் உணவுடன் கலந்த விஷத்தன்மைகள் (பூச்சி மருந்துகள்) உடலில் பரவிக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையில் இயக்குகின்றது. அதனால் உடலில் கடுகடுப்பு அதிகமாக இருக்கும்.

நாம் தவறு செய்தோமா…? இல்லையே…!

விஞ்ஞான அறிவிலே சிக்கி இன்று இந்த நிலைகளில்தான் நாம் இருக்கின்றோம். குருநாதர் இதையெல்லாம் உணர்த்தினார்… கண்டேன். அதைத்தான் உங்களிடம் சொல்கின்றேன் (ஞானகுரு)

மருத்துவம் படிக்கின்றார்கள்…
1.உடலில் இன்னென்ன குறைபாடுகள் இருக்கிறது
2.இன்னென்ன மருந்து இன்னென்ன வேலை செய்யும்
3.இன்ன மருந்தைக் கொடுத்து மாற்றினால் குறைபாடு நீங்கி உடல் சரியாகிவிடும் என்று அறிந்த பின்பு அதன் வழி செய்கின்றார்கள்.

ஆனால் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும்…? என்ன ஆனதோ ஏது ஆனதோ…! என்று பதட்டம் அடைய வேண்டி இருக்கும்.

டாக்டர்கள் சில கருவிகளை வைத்து உடலில் அந்தந்த இடங்களில் நாடித் துடிப்புகளைப் பார்ப்பார்கள்.
1.இருதயத்தினுடைய வேகத் துடிப்பைப் பார்த்து… இந்த நிலைகள் தான் இருக்கும் என்று டாக்டர்கள் அறிகின்றார்கள்
2.சரியான மருந்தினைக் கொடுக்கின்றார்கள்.

இதைப் போன்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… இந்த உலகம் எப்படி இயங்குகின்றது…? எந்தெந்த நிலையில் இருக்கின்றது…? என்ற ஞானத்தைக் கொடுத்து அதைத் தெரிய வைத்தார்.

அதற்கு 20 வருடங்கள் ஆனது. காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து தான் அதை எல்லாம் கண்டேன்… உணர்ந்தேன்.

“டாக்டராக” ஒருவர் வந்தாலும்… படிக்கப்படும் போது அவர்கள் ஆரம்ப நிலையில் இருந்து படிப்படியாகத்தான் அந்த அறிவினுடைய ஞானத்தில் வளர்ச்சியாகி வருகின்றனர்.

அது முழுமையாகும் போது தான்…
1.இது இன்ன நோய்…
2.அது இந்த நிலையில் இருக்கிறது…
3.அதற்கு இந்த மருந்து கொடுக்க வேண்டும்…! என்று பழக்கப்படுத்திச் செயல்படுகின்றார்கள்.

பழக்கப்படுத்தி… அதைச் சரியான நினைவு கொண்டு மீண்டும் அவர்கள் செயல்படுத்திக் கொண்டு வந்தால் என்றால் அவர் உயர்ந்த டாக்டராக மாறுகின்றார்.

அதில் ஏமாந்து விட்டால் இதற்கும் அதற்கும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால்… ஒரு நொடி மாறினால்… இவர் கொடுக்கும் மருந்து நல்லது செய்வதற்குப் பதில் தீமைகளை உண்டாக்கிவிடும்.

ஒரே மருந்து தான் அந்த நோயைக் கேட்கும் ஒரே டாக்டர் தான் அந்த மருந்தினையும் கொடுக்கின்றார். இருந்தாலும்
1.மருந்து கொடுக்கப்படும் பொழுது இன்னொரு இடத்தில் துடிப்பு வேறாக இருக்கிறது என்றால்
2.அந்த எதிர்ப்பு நிலைகளைப் பரீட்சித்துப் பார்த்து அதற்குத் தகுந்த மாதிரி அதையும் அனுசரித்து
3,அதைத் தணிக்கும் மருந்துகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள்.

சிலர்… அது என்ன…! இந்த டாக்டர் இத்தனை மருந்துகளைக் கொடுக்கிறார் என்றும் கேட்பார்கள்.
1.அறிந்து கொண்ட உணர்வு கொண்டு
2.அது வளர்ச்சியான நிலையில் கொண்டு செயல்படுத்துவது தான் அது.

ஆக… டாக்டருக்குப் படித்துக் கொண்ட மாதிரி உங்களுக்குள் வரக்கூடிய தீமைகளையும் நோய்களையும் நீக்கக்கூடிய சக்தியாக “பெரிய டாக்டராக… துருவ நட்சத்திரத்தின் உணர்வை…” உங்களிடம் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் “அத்தகைய டாக்டராக…” எப்படி வளர்ந்தது…? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அதைச் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.

அதை வைத்து “நீங்களும் பெரிய டாக்டராக ஆக முடியும்..!”

உங்கள் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சி ஒளியாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குக் கிடைக்கும்.

அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.

மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்

மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்

 

ஐம்புலனை அடக்கிடவே அருள் புரியுங்கள் என்று பாடலைப் பாடுகின்றீர்கள். ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை…
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ்ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ்ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ்ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல்… மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

நல்லதைக் காக்க ஒரு சக்தி உங்களுக்கு வேண்டுமல்லவா…!

 

சந்தர்ப்பத்தில் ஒரு வேதனை வந்து விட்டால் நம்மால் ஒரு கணக்கைச் சீராக பார்க்க முடிகிறதா… ஒரு வேலையைச் சரியாகச் செய்ய முடிகிறதா… ஒரு சாமானை எடுத்துப் பத்திரமாக வைக்க முடிகிறதா…? இல்லை.

நாம் சரியாகச் செய்யவில்லை என்கிற பொழுது மீண்டும் வேதனைப்படுகின்றோம். அப்பொழுது எது இயக்குகின்றது…? காரணம் என்ன…?

நாம் நல்லது செய்து கொண்டிருக்கும் பொழுது
1.திடீரென்று ஒரு தவறான நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்கிறார்கள்..
2.தவறு செய்வோரை உற்றுப் பார்க்கின்றோம் அல்லது என்ன ஏது என்று விசாரிக்கின்றோம்…
3.உணர்ச்சிகளைத் தூண்டிய பின் அது நமக்குள் வளர ஆரம்பிக்கின்றது.

அந்த நேரத்தில் நாம் செய்து கொண்டிருக்கும் வேலையைச் சரியாகச் செய்வதற்கு மாறாகத் தவறாகச் செய்து விடுகின்றோம். ஐயோ… இவ்வளவு தூரம் நாம் செய்தும் அது சரியாகவில்லையே… பலன் இல்லாமல் போய்விட்டதே… நஷ்டமாகிவிட்டதே…! என்ற வேதனை வந்து விடுகின்றது

1.தவறு நடக்கிறது என்ற அந்த உணர்ச்சிகளை ஊட்டும் பொழுது நமக்குள் ஜீவன் பெறுகின்றது
2.நாம் சுவாசிக்கும் ஆன்மாவிலே அது புகுந்து கொள்கின்றது
3.உயிரிலே பட்டபின் அதற்குத்தான் சாப்பாடு கிடைக்கின்றது… நல்ல குணங்களுக்கு நல்ல சாப்பாடு போவதில்லை
4.ஆகையினால் நல்லதை நம்மால் இயக்க முடியாமல் போய்விடுகின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் தவறு செய்யாமலேயே ஏற்கனவே பதிவு செய்த உணர்வுகள் இயக்கத்திற்கு வருகிறது. நம் உடலில் அணுக்களாக விளைந்ததை மீண்டும் நினைவுபடுத்திய உடன் நமக்குள் இவ்வாறு சில மாற்றங்கள் ஏற்பட்டு விடுகின்றது. ஆனால் நாம் தவறு செய்வதில்லை.

இதைப் போன்ற தீமைகளை மாற்றுவதற்கு நாம் என்ன வைத்திருக்கின்றோம்…? அதற்கு ஒரு சக்தி வேண்டும் அல்லவா…!

அந்த சக்தி பெறுவதற்குத் தான் உங்கள் நல்ல குணங்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இப்பொழுது ஊட்டமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

நல்லதைப் பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கி வருகின்றீர்கள். உங்களுடைய உணர்வுகள் எதையெல்லாம்… எப்படி எல்லாம் அது இயக்குகிறது…? என்பதை உணரும்படி செய்கிறோம்.

எதன் வழி கொண்டு…!

குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நான் (ஞானகுரு) எனக்குள் கலந்து வைத்திருக்கின்றேன்.
1.உங்களுக்குள் அதைக் கலந்து உண்மையின் உணர்வுகளைத் தெரியப்படுத்துகின்றோம்.
2.அந்த நல்ல நிலைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்… அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எண்ணத்துடனே இதை உபதேசிக்கின்றேன்.
4.கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணர்வுகளில் அதை இணைத்துக் கொண்டே வருகின்றேன்
5.உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி தன்னாலே உங்களுக்கு வந்துவிடுகிறது

தன்னால் எப்படி வருகின்றது…?

அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள். அப்போது யாம் உபதேச வாயிலாகக் கொடுத்த அந்தப் பதிவு உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுவில் சிறிதளவு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து உங்களுக்குள் அதைப் பெருக்க ஆரம்பிக்கும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வளர வளர… உங்களுக்குள் அது சக்தி வாய்ந்ததாக மாறும். தீமை அகற்றும் சக்திகளை நீங்கள் பெறுகின்றீர்கள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றிடும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

யாகத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும்போது தான் ஆண்டவன் வருவானா…! யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

யாகத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும்போது தான் ஆண்டவன் வருவானா…! யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

 

சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்… ஏமாற்றுக்காரர்கள்… சூனியக்காரர்கள்… என்றும்… தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள்…! என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒமகுண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. பட்டாடைகள்… பல வகைப் பதார்த்தங்கள்… இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத சமஸ்கிருத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு…?
2.யாருக்காக…? யாரின் நிலைக்காக…?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்…!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்…!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி…
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்…
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா…!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா…!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா…? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே…!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்…” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே… இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது…!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்… அன்றும் இருந்தார்கள்…!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை… சௌண்டேஸ்வரி பூஜை… காமாட்சியம்மன் பூஜை…! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ… தன்னைச் சார்ந்தவர்கள் வாழ… தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க…
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா…!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா…!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா…!

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக…
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா…!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ…ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே… நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா.

யாம் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் “விஷ்ணு தனுசாக உங்களுக்குள் பாயும்”

யாம் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் “விஷ்ணு தனுசாக உங்களுக்குள் பாயும்”

 

துருவ நட்சத்திரத்திலிருந்து அதிகமாகச் சக்திகள் நம் பூமிக்குள் வரக்கூடிய நேரம் அதிகாலை தான். நம் பூமி கவரக்கூடிய அந்த நேரத்தில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனது…? என்று அந்த உணர்வுகளை உபதேச வாயிலாக உங்களுக்குக் கொடுக்கும் பொழுது
1.உங்கள் உணர்வுகள் ஒவ்வொன்றிலும் இது கலக்கின்றது.
2.உங்களிடம் இருக்கும் எல்லாக் குணங்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை இணைக்கும் ஒரு வித்தாக உருவாக்குகின்றோம்.

அக்ரிகல்ச்சரில் புது விதமாகப் பல வீரிய வித்துக்களை உருவாக்கிக் கொடுக்கின்றனர். அதற்குப் பிற்பாடு அதை விளைய வைப்பதற்கு எந்தெந்த நேரத்தில் நீரைப் பாய்ச்ச வேண்டும்…? உரங்களை எப்போது போட வேண்டும்…? அதற்கு வேண்டிய பக்குவங்களை எப்படிச் செய்ய வேண்டும்…? சொல்லிக் கொடுக்கின்றனர்.

அதைப் போன்று நான் (ஞானகுரு) உங்களுக்குள் பதிவு செய்த ஞான வித்திற்கு அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஆத்ம சுத்தி செய்து வந்தால் அந்தப் பேரருளை நிச்சயம் உருவாக்க முடியும்… பேரொளியாக நீங்கள் மாற முடியும்.

1.துருவ நட்சத்திரம் எப்படி அழியா ஒளிச் சரீரம் பெற்றிருக்கின்றதோ…
2.இந்தப் பிரபஞ்சத்தில் வரும் எந்த விஷத்தையும் ஒளியாக அது எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றதோ…
3.அந்த உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஒளியான வித்துக்களாக உருவாக்குதல் வேண்டும்.

அவ்வாறு செய்து வந்தால் இந்த வாழ்க்கையில் வரக்கூடிய சில தீமைகளை நீங்களே விலக்கக்கூடிய நிலையும்… அதைச் சமப்படுத்தக்கூடிய நிலையும்… உணர்வுகளை ஒளியாக மாற்றக்கூடிய சக்தியும் எளிதில் பெற முடியும்.

அதற்குத் தான் அதிகாலை “துருவ நேரத்தில்…” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அருள் ஞான வித்தாக உங்களுக்குள் ஆழமாக ஊன்றி அதைப் பெருக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

தனுசுகோடி…! என்ற நிலைகளில் நான் ஒவ்வொன்றாகச் சொன்ன உபதேசக் கருத்துக்கள் அனைத்தும் தனுசாகப் பாய்ந்து உங்களுக்குள் அது முழுமை பெறக்கூடியதாக வளர்ச்சி பெறும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி இப்பொழுது ஏங்கித் தியானியுங்கள்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உங்களுக்குள் ஈர்க்கப்படுகின்றது
2.அந்த ஒளி அலைகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அது ஒன்றென இணைந்து பேரருளாக… பேரொளியாக… உருவாகும் அருள் சக்தி உங்களுக்குள் இப்பொழுது உருவாக்கப்படுகின்றது… பதிவாக்கப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் அரும் பெரும் சக்திகளை வளர்த்துக் கொள்ளும் அந்தத் தகுதியைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

வசி…வசி…! என்ற வசிய மந்திரம்

வசி…வசி…! என்ற வசிய மந்திரம்

 

மூவுலகை ஆட்டுவிக்கும் மூலவனே மும்மூர்த்தியின் வடிவம் என்ன…? என்ற ஒரு அன்பரின் கேள்விக்கு ஈஸ்வரபட்டர் அளித்த பதில் இது.

எட்டுத் திசையை நோக்கி எட்டுத் திசையிலும் உள்ள பாலரை வசியம் செய்து உன்னுள் ஈர்க்கப் பார்க்கின்றாய்.
1.”ஈஸ்வர சக்தி” உன்னுள் இருப்பதை அறியாமல்
2.பல பாலரை ஏனப்பா உன் வசியத்தில் ஈர்க்கிறாய்…?

இது ஆவியின் நிலையில் மந்திரவாதிகள் மந்திரிக்கும் ஜெபமப்பா…! ஆவிகளை எல்லாம் தன் வசம் இழுப்பதற்காக இந்த நிலையில் வசியப்படுத்துவான்.
1.உன்னையே நீ யார்…? என்று புரிந்து கொள்ளாமல்
2.பல ஆவிகளை ஏன் இழுக்கின்றாய் உன் வசியத்திற்கு…?

ஆவிகளின் நிலை எல்லாம் தன் எண்ணத்திற்கு… தன் பசிக்கு… எங்கு அதற்கு ஆகாரம் கிடைக்கின்றதோ அந்த நிலைக்கு வந்துவிடும். ஆவிகளை வசியப்படுத்திக் கொண்டு தான் மந்திரவாதிகளின் வேலை எல்லாம் நடக்கின்றதப்பா. நடுத் தெருவிலும் நடுஜாமத்திலும் அவர்கள் செய்யும் வேலை எல்லாம் இது தானப்பா..!

குடுகுடுப்பை அடித்துக் கொண்டு வருபவன் நடுஜாமத்தில் மயானக் காட்டில் அமர்ந்து தன் வசியத்திற்கு ஆவிகளை அழைப்பான். இந்நிலையில் ஜெபித்துத்தான் அந்நிலையில் அந்த ஆவிகளுக்குப் பிடித்த ஆகாரத்தை அளிப்பான். பல உண்மைகளை அந்த ஆவிகள் இவனுக்கு உணர்த்திடும்.

நடுநிசியிலே அந்தக் குடுகுடுப்பாண்டி நடந்து வீதி உலா வந்திடுவான். அவன் நடப்பதுவும் அவன் சொல்வதும் அவனுக்கு ஒன்றும் தெரியாதப்பா. அந்த ஆவிகள் தான் அவன் உடலில் அவன் வசியப்படுத்திய வழியில் வந்து ஒவ்வொரு இல்லத்திற்கும் சொல்லிக் கொண்டே செல்கிறது.

1.ஆனால் ஈஸ்வர சக்தியின் அருளைப் பெற்றவர்களின் இல்லத்திற்கு
2.இந்த ஆவிகள் சொல்லும் வாக்கெல்லாம் வந்து தாக்காதப்பா…!

நீ வசிய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த ஆவிகளின் நிலையிலிருந்து எப்பொழுது தான் மீளப் போகின்றாய்..? ஜெப நிலையே இன்னும் நீ புரிந்து கொள்ளவே இல்லையப்பா..!

மந்திரக்காரர்ளும் மாந்திரீகம் செய்பவர்களும் அவர்கள் ஜெபிக்கும் இடத்தில் பல வாசனைத் திரவியங்களைப் போட்டுப் புகை மண்டலத்தை எழுப்பிப் பல வகை உணவுப் பதார்த்தங்களையும் ஜீவராசிகளின் உணவுகளையும் வைத்து மந்திரம் ஜெபிக்கின்றார்கள்.

அந்த மந்திரத் தன்மையில் ஜெபிக்கும் பொழுது அதன் நிலைக்குகந்த ஆவிகள்… தீட்சண்ய ஆவிகள்… அகால மரணமடைந்த ஆவேச ஆவிகள்… தற்கொலை செய்த ஆவிகள்… பிறரினால் கொலை செய்யப்பட்ட ஆவிகள்… இந்த நிலையில் உள்ள ஆவிகள் எல்லாம் இவர்கள் படைக்கும் உணவுக்காக வரும்.

இவர்கள் ஜெபிக்கும் ஜெபத்தில் ஜெபம் என்றால் என்ன என்று எண்ணுகிறாய்…?

ஆவிகளுக்குண்டான உணவை எல்லாம் படைத்துப் புகை மண்டலங்களை எழுப்பி வசி…வசி…! என்று அந்த ஒலியின் நாமத்தை துர்மரண ஆவியின் நாமத்தை வைத்து வசி…வசி…! என்று வசியப்படுத்திக் கொள்கின்றார்கள்.

1.மந்திரம் சொல்வதும் தகட்டில் எழுதுவதும் ஓலையில் எழுதுவதும் எல்லாமே அந்த ஆவிகளின் வசியத்தின் மூலமாகத் தான்.
2.தன் பிழைப்புக்காக தன் உயிர் நிலையையே மாற்றிக் கொண்டு பல ஏவல்கள் செய்வதெல்லாம் அந்த ஆவிகள் தான்.

மாந்திரீகர்களின் மண்டை ஓட்டை வைத்து ஜெபிப்பது என்ன என்றால் எந்த ஆவியைத் தான் வசியம் செய்து வைத்துள்ளானோ அந்த ஆவியைத் தன் உடல் பின்னமாகி எந்த நிலையில் எங்கு அதனின் உடலின் மண்டை ஓடு உறுப்புகள் உள்ளது என்ற நிலையைச் சொல்லிவிடுகிறது.

அதை எடுத்துக் கொண்டு வந்து அவன் ஜெபிக்கும் பொழுது இன்னும் பன்மடங்கு அவனுக்கு அந்த ஆவிகளின் ஒத்துழைப்பு கிடைக்கிறது.
1.மாந்திரீகர்கள் அவர்கள் செய்யும் வேலைகளும்
2.இந்த மண்டை ஓடுகளும் மற்ற எலும்பு உறுப்புகளும்
3.பிறருக்குத் தெரியாத நிலையில் இருக்குமப்பா…!

மன நிலையில் சோர்வுள்ளவர்கள் மகான் என்று எண்ணி அவன் போட்டிருக்கும் சாமியார் வேஷத்தை நம்பி அவனை அணுகுகின்றார்கள்.

மனச் சோர்வடைந்த மக்கள் அவனை நாடிச் செல்லும் பொழுது
1.விபூதி வரவழைத்தோ புஷ்பம் வரவழைத்தோ இப்படிப் பல பல பொருள்களை வரவழைத்துக் கொடுப்பான்
2.மக்கள் அவன் அளிப்பதை நம்பி வாங்கிக் கொண்டு வந்து வீட்டிலே வைக்கின்றார்கள்.

இல்லத்திற்குள் வைத்தவுடன் எல்லாமே நல்லதாகத்தான் நடப்பதாகத் தெரியும். ஆனால் அதன் வேலை எல்லாம் இவன் உடலில் உள்ள அணுக்களை தன் நிலைக்குத் திசை திருப்பி அவன் உடலில் உள்ள அணுக்களைத் தன் வசப்படுத்த அவன் மன நிலையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அந்த ஆவி தன் நிலைக்குகந்த ஆகாரத்தையோ தன் நிலைக்குகந்த எண்ணத்தையோ அவனை எண்ண வைத்துக் கொண்டே இருக்கும்.

இந்த ஆவிகளின் நிலை எல்லாம்
1.அவன் உயிரணுவுக்கு வேண்டிய ஆகாரத்தை எடுத்து அவன் நிலையில் அவனை இருக்க விடாமல்
2.அவனையே தன் வசப்படுத்திக் கொண்டு அவனுக்குள் வந்து குடி அமர்கிறது அந்த ஆவி.

தன்னுள் இருக்கும் சக்தியை புரியாமல் மாந்திரீகரிடம் சென்று பல தீட்சண்ய ஆவிகளுக்குத் தன் நிலையையே விற்று விடுகின்றார்கள் புரியாத பாமர மக்கள்.

1.தேவர்களின் தேவனப்பா மனிதர்கள் எல்லாம்.
2.இந்த மனித உடலைப் பெறுவதே பெரும் பாக்கியமப்பா…! என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திடுங்களப்பா…!
3.மந்திர மாந்திரீக நிலைகளிலிருந்து… பிற ஆவிகளின் இயக்கத்திலிருந்து விடுபடுங்களப்பா…!

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

 

ஒரு நண்பன் மேல் பாசம் கொண்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். இந்த உணர்வு எனக்குள் பதிவாகின்றது. அதே நினைவுடன் கண் கொண்டு நண்பனைப் பார்த்த பின் மகிழ்ச்சியுடன் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றேன்.

நண்பன் என்று வளர்ந்தாலும் காலப் போக்கில் அவன் என்னை மதிக்கும் தன்மை குறைந்து விட்டால் என்ன ஆகிறது…?

நான் நண்பனை மதிக்கின்றேன். ஆனால் நண்பனோ என்னைச் சரியாக மதிக்கவில்லை… சீராக எனக்கு உதவி செய்யவில்லை…! என்று
1.இந்த எதிர்பார்ப்புகள் அதிகாமன பின் நண்பனை வெறுக்கும் உணர்வுகள் வளர்கின்றது.
2.அன்று அத்தனை உதவி செய்தேன்… இன்று எனக்கு இப்படிச் செய்கிறான்… என்று அகம் கொள்ளுகின்றது
3.தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குகின்றது
4.முதலில் உதவி செய்த பண்புகளை மாற்றிவிட்டு அவனுக்குத் தீங்கு செய்யும் நிலையையே உருவாக்கி விடுகின்றோம்.

ஆக…. நமக்குள் இருக்கும் 108 அகமதிகளும் (108 விதமான குணங்கள்) அகங்கார நிலைகளும் “தன்னைத் தன்னைக் காத்திடும் நிலையாகவே” அது வருகின்றது.

விவசாயப் பண்ணைகளில் ஒரு செடியில் அதனுடன் மற்ற செடிகளின் கருக்களைச் சேர்த்த பின் அதற்குத்தக்க செடிகளில் மாற்றங்கள் அடைகின்றது.

இதைப் போன்று விஞ்ஞான அறிவு கொண்டு உயிரினங்களில் உள்ள அணு செல்களை எடுத்து மற்ற மற்ற உயிரினங்களில் இணைக்கும் போது உயிரினங்களிலே உருமாற்றங்களைச் செயல்படுத்தும் தன்மை மனிதனுக்கு வருகின்றது.

தாவர இனங்களை மாற்றுவது போல் உயிரினங்களை மாற்றுவது போல் தான் நாம் நுகரும் உணர்வுகளைச் சீர்படுத்தவில்லை என்றால்
1.அது நம் நல்ல குணங்களைத் தீமையின் உணர்வுகளாக மாற்றிவிடும்
2.உடலின் அமைப்பை மாற்றிவிடும்… குணங்களை மாற்றிவிடும்
3.பின் இருள் சூழும் நிலைகள் கொண்டு பரிணாம வளர்ச்சியில் வளர்ந்ததற்கு மாறாக தேய்பிறையான நிலைகளுக்கு அழைத்துச் சென்று விடும்.

மனிதர்களான நாம் ஆறாவது அறிவு கொண்டு இன்று பல பொருள்களை இணைத்துச் சுவை மிக்கதாக உருவாக்கி உணவாக உட்கொள்கிறோம்.

அது போல… நமது வாழ்க்கையில் கேட்டுணர்ந்த உணர்வுகளையும் அதனதன் இயக்கத்திற்கு விடாதபடி நாம் சமப்படுத்த வேண்டும்.

நல்லது கெட்டது என்று தெரிந்தாலும் நுகர்ந்த உணர்வுக்கொப்பத் தான் தனக்குள் சமப்படுத்தும் நிலை வருகின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழியே வழி பார்க்கின்றது

1.நண்பன் என்ற நிலையில் எண்ணங்கள் பாசத்துடன் வரும் பொழுது காக்கும் நிலைகளை உருவாக்குகின்றோம்
2.ஆனால் சிறிதளவு பகைமை என்று உணர்வுகள் வந்து விட்டால் அவனைத் தாக்க வேண்டும் அவனை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வே வருகின்றது

ஆகவே பற்றும் பாசமும் இந்த உலகில் நமக்குள் பல நன்மைகளையும் செய்கின்றது தீமைகளையும் செய்கின்றது.

ஆனால் பற்றும் பாசமும் நம்முடன் வருவதில்லை. அப்படி என்றால் நாம் பற்ற வேண்டியது எதை…?

அருள் மகரிஷிகளின் உணர்வுகளைத் தான்…!

பிறிதொன்று நம்மை இயக்காதபடி அருள் ஒளி என்ற நிலைகளில்
1.அகண்ட அண்டத்திலும் நஞ்சின் தன்மை தன்னைத் தாக்கிடாது
2.அதை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.பகைமை உணர்வுகள் எப்பொழுது உருப் பெறுகின்றதோ அதை அடக்குதல் வேண்டும்;.

மிளகாய் காரத்தின் தன்மை கொண்டது தான். மற்ற பொருளுடன் இணைக்கப்படும் பொழுது அந்தக் காரத்தின் உணர்ச்சிகள் தணிகின்றது. உப்பு கைப்பாக இருக்கின்றது… அதை மற்றவைகளுடன் சமப்படுத்தும் போது சுவையின் தன்மை கூடி மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

எனவே எதனை நாம் நுகர்ந்தாலும் அருள் ஒளியின் உணர்வை நமக்குள் சேர்த்து
1.அந்த அகங்காரத்தை எடுத்து விடாதபடி
2.அருள் ஞானத்தை நமக்குள் வளர்த்திடல் வேண்டும்.

அப்படி வளர்த்தோம் என்றால் நம்மை இருள் சூழாத நிலையும் ஒளியின் உணர்வாக மாற்றிடும் ஆற்றலையும் நாம் பெறுகின்றோம்.

இன்றைய உலகில் மனிதனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு உதவும் “திறவுகோல்…”

இன்றைய உலகில் மனிதனின் அடுத்த நிலை வளர்ச்சிக்கு உதவும் “திறவுகோல்…”

 

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்புடன் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.தான் மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய
5.அந்த மகரிஷிகளின் சக்திகளை நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா…” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவுகோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞானக் கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை அவர்கள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து… வளர்ந்து… விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்.

நான் செய்வது எப்படித் தவறாகும்… என்று கேட்பது நாம் தானா…! அல்லது சுவாசித்ததா…?

நான் செய்வது எப்படித் தவறாகும்… என்று கேட்பது நாம் தானா…! அல்லது சுவாசித்ததா…?

 

மகாபாரதத்தில் கௌரவர்கள் நூறு பேர் என்றும் பாண்டவர்கள் ஐந்து பேர் என்றும் காட்டுகின்றார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

எந்த உணர்வின் தன்மை நாம் நுகர்கின்றோமோ அவை தான் நம்மை ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டியுள்ளனர். அதாவது
1.வெப்பம் காந்தம் விஷம் மணம் உணர்வு என்ற இந்த ஐந்து (பாண்டவர்கள்) நிலையில்
2.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ (கௌரவர்கள்) அதுவே அதன் வழியில் நம்மை ஆளுகின்றது
3.நம் உயிர் அதனின் உணர்வை இயக்குகின்றது – நம் உயிர் சக்தியாக இயக்குகின்றது.

நாம் நினைக்கும் (எண்ணும்) உணர்வுகளே நம்மை இயக்குகின்றது என்ற நிலையை அங்கே உருவாக்கி அதைக் கௌரவர்கள் என்று காட்டியுள்ளனர்.

ஒரு குணத்தை நான் எடுத்துக் கொண்டால் அதைக் காக்க வேண்டும் என்றும் அதே குணத்தைத் தான் நான் வளர்த்துக் கொள்ளும் நிலையும் வருகின்றது.

உதாரணமாக ஒருவர் மேல் நான் கோபத்தை வளர்த்துக் கொண்டால் அந்தக் கோபமே எனக்கு உகந்தது என்றும்… அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளும் நிலை இல்லாது அதை வழி நடத்த வேண்டும் என்றும்… அகங்காரம் கொள்ளுகின்றது.

அதே போல ஒருவர் தொழில் செய்தால்
1.அதிலே தான் தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லாதபடி
2.நான் செய்தது எப்படித் தவறாகும்…? என்று பிடிவாத குணங்கள் இருப்பதும்
3.தெரியாதபடி ஒரு சொல்லைச் சொன்னாலும்… தான் நுகர்ந்த உணர்வுகள்… தான்… தனது… என்ற நிலையில்
4.தன்னைக் காக்க அதன் உணர்வுகளை நாம் வலுப்படுத்தும் போது தீமையின் உணர்வுகளே நமக்குள் வளர்கின்றது.

ஆகவே இதைப் போன்ற உணர்வுகள் தனக்குள் வளராது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா இல்லையா…?

ஆகையினால் தான் அதைக் கௌரவர்கள் என்றும் தனக்குள் எடுக்கும் குணங்கள் ஒவ்வொன்றும்… “தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையாகவே வரும்…” என்று மகாபாரதத்தில் இது தெளிவாக்கப்படுகின்றது.

ஒரு வேப்பமரம் கசப்பின் தன்மை கொண்டு தன் கௌரவத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. ரோஜாப் பூவோ தன் நறுமணத்தைக் காத்துக் கொள்ள விரும்புகின்றது. மற்ற மணங்கள் தனக்குள் வராது தடுக்கின்றது.

இதைப் போல ஒருவனைத் தாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டால் மற்றவர் சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதில்லை.
1.தான் வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் பிறருடைய துன்பங்களை நாம் பார்ப்பதில்லை… துன்பப்படுத்தியே நாம் வாழுகின்றோம்
2.துன்பப்படுத்துகின்றோம் என்று உணர்த்தினாலும் “எனது வாழ்க்கைக்காக நான் இதைச் செய்தேன்…” என்று
3.அசுர குணங்களைத்தான் அகங்களைக் கொண்டு தான் வாழ்கின்றோம்.

இவ்வாறு வாழும் நாம் எதனின் உணர்வை நாம் பெற்றோமோ அதனின் நிலையாகவே உயிர் நம்மை இயக்கி விடுகின்றது. அதனால் தான்…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதன் உணர்வையே நீ பெறுகின்றாய்
2.அதை வளர்க்கின்றாய்… அதுவாக ஆகின்றாய் என்று கீதாச்சாரம் சொல்கிறது.

உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

 

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து சஞ்சலமற்ற… சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்… எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்… எடுக்க வேண்டிய முயற்சி நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெற வேண்டும். மனத் திறன் என்றால் என்ன…?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா…!
6.அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊண் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்…”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி… “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது…!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில் தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா…?

1.சுவாசிக்கும் சுவாசமானது… சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் – செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா…!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்…!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே…!

சுபம்… சுபம்… சுபம்…!