அறியாது வரும் தீமைகளை நீக்குவதற்கு “ஒரு பழக்கத்தை” ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

அறியாது வரும் தீமைகளை நீக்குவதற்கு “ஒரு பழக்கத்தை” ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

 

துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகள் வரும் நேரத்தில் அதனுடன் இணைத்து உங்கள் நினைவாற்றலைச் செலுத்தப்படும் பொழுது… சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் கலந்து…
1.மீண்டும் எண்ணும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களிலும் பதிவாகின்றது.
2.கம்ப்யூட்டரில் எப்படி ரெக்கார்ட் செய்கின்றனரோ அதைப் போன்று பதிவினை உங்களுக்குள் கூட்டப்படும் பொழுது
3.அடுத்து… தீமை வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் உடனடியாக அந்த துருவ நட்சத்திரத்தினைப் பற்றிய சிந்தனைகள் வரும்
4.தீமைகளை அகற்றி ஒளியாக மாற்றும் சக்தியாக வளரும்.

உதாரணமாக கராத்தே விளையாடுகின்றார்கள். அந்த விளையாட்டிலே அதற்குத்தக்க தன் அங்கங்களை அசைப்பதும்… எதிராளியைக் கண்டால் தடுப்பதும்… இயக்கங்களை மாற்றுவதும்… விலகிச் செல்வதும்… இது எல்லாமே பழக்கத்தால் வருவது தான்.

அதே போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதற்குச் சந்தர்ப்பத்தினை உருவாக்கி அதனைப் பதிவாக்குகின்றோம்.
1.அந்த உணர்ச்சிகள் அவ்வப்பொழுது தூண்டப்பட்டு
2.அந்தந்த நிமிடம் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் சக்தியாக உங்களுக்குள் பெறச் செய்கின்றது.

அதற்குத் தான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் யாம் உபதேசிப்பது. அதன் வாயிலாக உபாயங்களையும் உங்களுக்குக் கொடுக்கின்றோம்… அதைப் பதிவாக்கவும் செய்கின்றோம்.

உதாரணமாக பூப்பந்து ஆடுகின்றார்கள் என்றால் அந்த உணர்வின் தன்மை உடலுக்குள் இணைத்துப் பதிவாக்கப்படும் பொழுது
1.அந்தப் பந்து வீச்சின் தன்மையை நாம் உற்றுப் பார்க்கும் பொழுது
2.அதற்குத் தக்க அங்கங்களை அசைத்து இந்த விளையாட்டை நாம் சீராக விளையாடுகின்றோம்
3.அதில் கெட்டிக்காரராகவும் ஆகின்றார்கள்.

அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை உங்களுக்குள் இணைத்து பதிவாக்கிக் கொண்டால்
1.சந்தர்ப்பத்தில் உங்களுக்கு எத்தகைய விபத்தோ மற்ற நிலைகளோ மாறுபடும் பல தீமைகளையோ நுகர நேர்ந்தால்
2.அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்து அதை மாற்றி அமைக்கும் திறனைக் கொண்டு வர வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்வது போன்று தான் உங்களுக்குள் ரெக்கார்ட் செய்கின்றேன். “இந்தப் பதிவு” உங்களைக் காக்க வேண்டும்..

பள்ளிகளில் ஆசிரியர் கற்றுக் கொடுக்கப்படும் பொழுது முதலில் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று கொண்டு செல்கின்றார்கள். ஆனாலும் அடுத்தடுத்து அவர்கள் கற்பித்த நிலைகளை… அவரவர்கள் பதிவாக்கிய நிலைகளுக்குத் தக்க வளர்ச்சியில்… டாக்டருக்கோ இன்ஜினியருக்கோ மற்ற துறைகளுக்கோ அவருடைய உணர்வுக்கொப்ப தான் அவருடைய முன்னேற்றம் அமைகின்றது.

இப்படித்தான் மனிதனின் வாழ்க்கையில் இந்த உடலை வளர்க்க பல உபாயங்களைத் தேடி… செல்வங்களைத் தேடுவதற்குத் தான் மனிதன் இன்று செயல்படுகிறான்.

ஆனால் நமது குருநாதர் காட்டிய வழியில்
1.அருள் உணர்வுகளைப் பெருக்கி அருள் செல்வத்தை நமக்குள் பெருக்கி
2.அருள் ஞானம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து
3.தீமைகளை நீக்கி ஒளியாக மாற்றி வாழ்ந்து கொண்டுள்ள மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து
4.என்றும் மகிழ்ந்து வாழும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்

அதற்குண்டான வழி முறைகளைத் தான் பதிவு செய்ய வேண்டும்.

பல பல எண்ணங்களை எண்ணியே… நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்

பல பல எண்ணங்களை எண்ணியே… நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்

 

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூடவே வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே…
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாதவர்கள்… “வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்” என்று இருக்கின்றார்கள்

சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாதவர்கள்… “வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்” என்று இருக்கின்றார்கள்

 

ஐம்புலனை அடக்கிடவே அருள் புரியுங்கள் என்று பாடலைப் பாடுகின்றீர்கள். ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன…?

பார்த்தல்… சுவைத்தல்… கேட்டல்… நுகர்தல்… எண்ணல்… எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா…!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்…
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்…” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்…! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா…” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள… தன் உணவைத் தேட… ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்…?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி… ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்…
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா…!

நீங்கள் கேட்கலாம்… தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று…! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா…!

நான் சொல்வதெல்லாம்…
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக… அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்… பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு…! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை…!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா…!

ஈஸ்வரபட்டர் சொல்லிக் கொடுக்கும் “ஆத்ம சுத்தி”

ஈஸ்வரபட்டர் சொல்லிக் கொடுக்கும் “ஆத்ம சுத்தி”

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ… புளிப்போ… உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம்.

நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்கிட என்ன செய்ய வேண்டும்…?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்… காரியமாற்றும் நிலையிலும்…
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா “ஆத்ம சுத்தி” என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்… கோபம்… மோகம்… ஆவேசம்… ஆத்திரம்… பழி…. ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்…
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா…! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா…!

வாய்ச் சொல் வரும் விதம்

வாய்ச் சொல் வரும் விதம்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்ம சக்தியைக் கேடாக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்ற விதம் அறிந்துணர வேண்டிய ஒன்று.

தீமைகள் தாக்கும் நிலையில் உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாச் செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவைத் அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.அதாவது சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்ம சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.
2.பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

எந்தக் காரியம் செய்யும் முன்னும் பின்னும் “கட்டாயம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்”

எந்தக் காரியம் செய்யும் முன்னும் பின்னும் “கட்டாயம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்”

 

ஒரு காரியமாக நாம் ரோட்டில் நடந்து போகின்றோம் என்று சொன்னால் அப்பொழுது அங்கே எத்தனையோ தவறு செய்வோரைப் பார்க்க நேர்கின்றது.

ஒருவன் நடந்து சென்றால்… நம்மை அறியாது “அவன் நடப்பதைப் பார் என்போம்…!”

அடுத்து ஒரு பஸ்ஸில் ஏறிப் போகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் குறுக்கே வருவான். “அறிவுகெட்டதனமாக வருகின்றான் பார்…!” என்போம்.

இப்படி எல்லாம் நினைக்கின்றோமா இல்லையா…! நம்மை அறியாமல் இந்த உணர்வுகள் இயக்குகிறது. நுகர்ந்த பின் இந்த உணர்வு வருகிறது.

ஒருவர் நம்மை வரச் சொன்னார் என்ற நிலையில் அந்தக் காரியத்திற்காகச் செல்லும் பொழுது இத்தகைய உணர்வுகளுடன் நாம் சென்றால் எப்படி இருக்கும்…?

1.முதலில் அங்கே அவன் எப்படி அவசரமாகக் குறுக்கே வந்தானோ
2.அதே போல் நாமும் அதே வேகத்துடன் (நாமும் நம்மைச் சந்திக்க வேண்டியவரை எண்ணி) அடுத்தவரைத் தள்ளிக் கொண்டு போவோம்.

ஏனய்யா அறிவு கெட்டதனமாக இப்படித் தள்ளுகிறாய்…? என்று அப்படியே அது திரும்ப வரும்.

இங்கே எம்மிடம் (ஞானகுரு) உபதேசம் கேட்பவர்களும் கடைசியில் பிரசாதம் வாங்கும் போது பார்க்கலாம். “பொறுத்திருந்து வாங்குவோம்…” என்ற எண்ணம் இல்லை.

மூன்று மணி நேரம் உபதேசம் கேட்டிருப்பார்கள். ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்து பிரசாத்தை வாங்குவோம் என்றால் இல்லை. அடுத்தவரைத் தள்ளி விட்டு முன்னாடி வருவார்கள். இந்த உணர்வு எதைச் செய்கிறது…?

நாம் என்ன சொன்னாலும் அப்படியே அடுத்தவரை முந்திக் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் நைசாக இடையில் அப்படியே புகுந்து கொள்வார்கள்.

ஆனால் ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தால் நாமும் ஒழுக்க நிலை பெறுகின்றோம். மற்றவர்கள் நல்ல மனதையும் கெடுப்பதில்லை… நமக்கும் நல்லதாகிறது.

ஆகவே… எந்தக் காரியத்திற்குச் சென்றாலும் அங்கே போனவுடனே முதலில் நாம் ஆத்ம செய்து கொள்ள வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்…
1.நாங்கள் பார்க்கப் போகும் அந்த அதிகாரிக்கு நல்ல மனது வர வேண்டும்…
2.எனக்கு உதவி செய்யும் பண்புகள் வர வேண்டும்.. என்று
3.அங்கே உட்கார்ந்து சிறிது நேரம் அமைதிப்படுத்தி விட்டுப் பின்பு செல்ல வேண்டும்.

நாம் பஸ்ஸில் போகும் பொழுது ஏதாவது அசம்பாவிதத்தைப் பார்க்க நேர்தால் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின் அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்ப்டிப்பட்ட நல்ல உணர்வுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.இப்படி எடுத்தால் அந்த அசம்பாவிதத்தால் பாதிக்கப்பட்டவரின் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.
2.அறிவு கெட்டதனமாகச் செயல்படுகின்றார்கள் என்ற வேக உணர்வு வருவதில்லை.

ஏனென்றால் நாம் எந்த உணர்வை எண்ணி எடுக்கின்றோமோ அந்த உணர்ச்சி தான் நம்மை இயக்குகிறது… நம்மை ஆள்கிறது.

அதாவது எலெக்ட்ரிக்… எலெக்ட்ரானிக்…! நாம் எண்ணிய உணர்வுகள் சுவாசித்து நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் இயக்குகிறது. ஆக அந்த உணர்வு தான் நம்மை இயக்குகிறது… எண்ணம் சொல் செயலாக மாறுகின்றது.
1.உயிர் எலெக்ட்ரிகாக இருக்கின்றது
2.சுவாசித்ததை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது

நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு வருகின்றோமோ உயிரிலே பட்டால் எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. உயிரில் உள்ள காந்தம் தான் (எலெக்ட்ரிக் என்ற உணர்வுகள்) கவர்கிறது. இதை எல்லாம் கம்ப்யூட்டர் நிரூபிக்கின்றது.

ரோட்டிலே சென்றால் அதற்கென்று இயந்திரத்தை (SCANNER) வைத்து எலெக்ட்ரானிக் என்ற முறை கொண்டு நாம் கொண்டு செல்லும் பையிற்குள் (BAG) எதைப் போட்டு வைத்திருந்தாலும் சரி… அதற்குள் தங்கமோ மற்ற வேறு உலோகங்களோ இருந்தால் படத்தில் அதை எல்லாம் காட்டுகின்றது.

பைகள் மூடியிருந்தாலும் எலெக்ட்ரானிக் என்ற முறைப்படி பார்க்கும் பொழுது பைக்குள் இருப்பது ஒவ்வொன்றையும் காட்டுகின்றது. விமான நிலையங்களில் எல்லாம் இதைக் காணலாம். இப்படி எல்லாம் விஞ்ஞான அறிவால் கண்டுள்ளார்கள்.

இதே மாதிரித்தான் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் செய்யும் தவறுகளைக் காட்டுகின்றது. தவறு செய்கின்றான் என்ற அந்த உணர்வின் மணம் வரும் பொழுது என்ன நடக்கின்றது..?

இங்கே எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று பொருள்களைக் காணும் பொழுது எப்படிச் செய்கிறார்களோ…
1.தவறான பொருள் அதிலே இருந்தால் திருடன் என்று கண்டுபிடிக்கின்றார்கள் அல்லவா…!
2.அது போல் நாம் பார்ப்போரின் செயல்களை உற்றுப் பார்க்கும் பொழுது “திருடன்…” என்ற உணர்வு வருகிறது
3.இந்த உணர்வின் தன்மை மாறும் பொழுது அங்கே நமக்குள் பிரித்துக் காட்டுகிறது.

பூமிக்குள் ஒரு வெடிகுண்டையே புதைத்து வைத்திருந்தார்கள் என்றால் வெகு தூரத்தில் இருந்து இந்த உணர்வின் தன்மை மோப்பத்தால் கண்டறிகின்றார்கள். அந்த ஒலிகளை எழுப்பிக் காட்டுகின்றது (எலெக்ட்ரானிக் கருவிகள் பீப்.. பீப்… என்று சப்தமிடும்).

இன்ன இடத்தில் தான் இருக்கிறது என்று அது தெளிவாகக் காட்டுகிறது. ஏனென்றால் அந்தப் பொருளின் மீது இதனின் அலைகள் மோதியவுடன் எக்கோ (ECHO) வருகிறது.

இதைக் கண்டவுடன் அதற்குண்டான பாதுகாப்பான நிலைகள் கொண்டு அது வெடிக்காமல் செய்வதற்குண்டான எத்தனையோ வேலைகளைச் செய்து மணல் மூடைகளை அடுக்கி அந்த வெடிகுண்டை வெடிக்க விடாது செய்து செயலிழக்கச் செய்கிறார்கள்.

இப்படி எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.தீமை என்ற உணர்வு வரும் பொழுது அது நமக்குள் வராதபடி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அது நமக்குள் அணுவாக உருவாகதபடி
3.நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

“சக்கர வியூகம்”

“சக்கர வியூகம்”

“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்திட தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழிமுறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன்னிஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரமத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்).

எண்ணாமலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி

எண்ணாமலே மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழி

 

நாம் இந்த வாழ்க்கையில் நன்மைகள் எவ்வளவு செய்தாலும் வேதனையைத்தான் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம். ஆனால் மற்றவருக்கு நன்மை செய்கின்றோம்.

காரணம்…
1.நாம் நன்மை செய்த உணர்வுக்குள் வேதனை என்ற நஞ்சு பட்டு விடுகின்றது
2.அதை நாம் யாராவது துடைக்கின்றோமா…? என்றால் இல்லை.

சுத்தமான கைகளைக் கொண்டு தான் ஒரு பொருளை உருவாக்குகின்றோம் மண்ணைப் பிசைகின்றோம்… சிமென்ட்டைக் கலக்கின்றோம்… அழகான வீட்டைக் கட்டுகின்றோம்.

அழகாக வீட்டைக் கட்டி விட்டோம் என்று அடுத்து கையைக் கழுவாது விட்டு விட்டால்… சாப்பிடும் போது சிமெண்டில் உள்ள கார உணர்வுகள் உடலுக்குள் சென்று விட்டால் அது கொதிகலனாகி குடலுக்குள் புண்ணாக உருவாகிவிடும்.

கையைக் கழுவாது அடுத்த வேலையை இப்படிச் செய்தால் முடியுமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதைப் போன்று தான் ரோட்டிலே நாம் நடந்து செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். காற்றிலே எத்தனையோ தூசிகளும் தீமைகளும் கலந்து பரவி வருகின்றது. சில நச்சுத்தன்மை கொண்ட செடிகளில் விளைந்த “நச்சின் செல்கள்…” அதுவும் தூசுகளாகப் படர்கின்றது.

சூரியனின் காந்த சக்தி அதைக் கவரவில்லை என்றாலும் காற்று மண்டலத்தில் சிக்கப்பட்டு… அது தூசுகளாகப் பரவி வருகின்றது. அதை நுகர்ந்தால் நம் உடலுக்குள் சென்று தீமைகளைத் தான் உருவாக்கும்.

சாதாரணமாக… செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அதனின் மணமாக வைத்துக் கொள்கின்றது.
1.அதே செடியில் விளைந்த வித்திற்கு… நிலத்தில் எங்கே அதை ஊன்றினாலும்
2.சூரியனின் காந்த சக்தி… தான் கவர்ந்து வைத்த மணத்தை அதற்கு உணவாகக் கொடுத்து
3.விஷச் செடியாக இருப்பினும் சரி… நல்ல செடியாக இருப்பினும் சரி அவைகளை வளரச் செய்கின்றது…

இதைப் போன்று ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான் என்றால் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது வேதனை உணர்வுகள் இங்கே வித்தாக மாறுகின்றது.

மீண்டும் அந்த மனிதனின் சிந்தனை வருகிறது. அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வருகின்றது. ஆனாலும் அவன் உடலில் விளைந்த வேதனை உணர்வு வித்தாக இங்கே விளைந்து விடுகிறது.

சூரியன் எவ்வாறு காந்த சக்தியால் கவர்ந்து அது மற்ற வித்துக்களுக்கு சத்தைக் கொடுத்து உபகாரம் செய்கின்றதோ இதைப் போன்று பிறிதொரு மனிதன் வேதனைப்பட்டதையும் கவர்ந்து வைத்து… நாம் எண்ணும் போதெல்லாம் அதை எடுத்து உணவாகக் கொடுக்கின்றது.

ஒரு மனிதன் அவன் வேதனைப்பட்டாலும் அவனுக்கு உதவிகளைச் செய்கிறோம். இருந்தாலும் அந்த வேதனையைச் சொல்லக் கேட்டு… உணர்வின் தன்மை பதிவான பின்… மீண்டும் நினைவாகும் பொழுது உடலுக்குள் வித்தாகி விடுகிறது.
1.அந்த உணர்வின் சத்து விளைந்தது மீண்டும் நினைவு வரப்படும் பொழுதெல்லாம்
2.அவன் உடலில் தீமை செய்த விளைவுகளும்… வினைகளும்… நமக்குள்ளே உருவாகி விடுகின்றது.

இப்படித்தான் நமக்குள் சூரியனின் வேலைகள் இருக்கின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆனாலும் நாம் வயலிலே விவாசயம் செய்யப்படும் போது விளையப்படும் பொழுது அவ்வப்போது உருவாகும் “களைகளை அகற்றுகின்றோம்….” நல்ல செடிகளுக்கு நீர் ஊற்றி அதனைப் பக்குவமாக வளர்க்கின்றோம்.

அதைப்போல நமது வாழ்க்கையில் தீமையான உணர்வைக் கேட்டறிந்த பின் வயலில் களைகளை அகற்றுவது போன்று தீமைகள் வளராது உடனே அதைத் தடுத்தல் வேண்டும்.
1.அதைத் தடுப்பதற்குத் தான் மகரிஷிகளின் உணர்வுகளை
2.உங்களுக்குள் உபதேசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்

மகரிஷிகள் சக்தி வாய்ந்த நிலைகள் கொண்டு தனக்குள் வந்த தீமைகளை எப்படி அகற்றினார்களோ… உணர்வுகளை எல்லாம் தூய்மைப்படுத்தி ஒளியின் சரீரமாக எப்படி ஆனார்களோ… அவர்கள் வெளியிட்ட உணர்வின் தத்துவப்படி அதை நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து… அந்த உணர்வினைப் பெரும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால்… அதை நாம் எண்ணும் பொழுது பெற்று… அதனின் துணை கொண்டு தீமைகளை நீக்க முடியும்.

தீமை கொண்டவரை உற்றுப் பார்த்து அந்த உணர்வைப் பதிவு செய்து கொண்ட பின்
1.நாம் எண்ணாமலே அந்த உணர்வுகள் தூண்டப்பட்டு
2.நாம் எண்ணாமலே அந்தந்த எண்ணங்கள் உருவாக்கப்பட்டு
3.நமக்குள் தீமையின் உணர்வுகள் விளைந்து நோயின் தன்மை எப்படி அடைகின்றதோ அதைப் போல்
4.மகரிஷிகளின் அருள் உணர்வுகளைச் சேர்ப்பித்துக் கொண்டே வந்தால்
5.”நாம் எண்ணாமலேயே” அந்த உணர்வின் தன்மை நமக்குள் வந்து… தீமைகளை அகற்றிடும் சக்தியாக அது வரும்.

நம்முடைய ஆறாவது அறிவால் இப்படி உருவாக்குதல் வேண்டும்… உங்களால் முடியும் அதற்குத் தான் அருள் வாக்குகளாகக் கொடுத்து ஆழமாகப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு).

ஆகவே மகரிஷிகளின் அருள் ஞான வித்துக்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்… வரும் தீமைகளிலிருந்து நிச்சயம் விடுபவீர்கள்.

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

 

உதாரணமாக இரண்டு பேர் குடும்பத்தில் சண்டை இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவனை இன்னொருவன் ஏசுவதைக் கண்டு (சமரசத்திற்காக) சரி… விட்டு விடு போகட்டும் என்று நாம் சொல்வோம்.

ஆனால் பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்….! என்பான்.

இவன் பேசிவிடுவான். ஆனால் அது அவனுக்குள் பட்ட உடனே உணர்ச்சிகள் பொங்கி
1.இவன் ஒரு சொல்லைச் சொன்னால் அவன் பல சொல்களைச் சொல்வான்.
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் போது
3.தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் இருவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளகாய்ச் செடி தனக்குள் கார உணர்வை எடுத்துத்தான் மிளகாயை உருவாக்கும்… மிளகாயை வித்துக்களாக. எதிலிருந்து மிளகாயாக விளைந்ததோ அந்த வித்தின் தன்மை தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தைத் தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல்
1.ஒருவருக்கொருவர் ஏசிப் பேசிய உணர்வுகள் வித்தாகும் பொழுது
2.எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ… அடுத்தவனும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டே இருப்பான்.
3.இவர்கள் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தவரும் இதைப் போன்று சாபத்தை விட்டுக் கொண்டே இருப்பார்கள்.
4.இந்த அலைகள் படர்ந்து படர்ந்து… நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்தி விடும்.

சாப அலைகள் இவருக்குள் விளைந்து எதையெல்லாம் இவர்கள் சொன்னார்களோ அது அனைத்தும் அங்கே படர்ந்து… இருவருடைய குடும்பங்களிலும் வீரியமாகப் பேசுவார்கள்.

இந்த வீரிய உணர்வுகள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் அறுத்துவிடும். பாசத்துடன் இருப்போரும் ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகள் ஆகிவிடும். ஆனால் ஏசியவன் தப்பி விடுவான்.

குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோர் நிலைகளில் இது படப்பட்டு இந்த உணர்வு துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலிலே வீழ்த்தி விடும்.

ஆக அண்ணன் இப்படிப் பேசுகின்றானே…! என்று தம்பியோ… தம்பி தான் சொன்னபடி கேட்கவில்லை என்று அண்ணன் “இப்படிச் செய்கின்றானே…” என்று தம்பியைக் கோபித்தாலும்… ஒருவருக்கொருவர் இடும் சாப அலைகளை உற்று நோக்கினால் அவர்களுக்குள் தீயவினைகள் வளர்ந்து நோயாக மாறி… அவர் குடும்பத்திலே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்களுடைய தாய் தந்தையரோ சரி விட்டு விடுடா…! என்று சொன்னாலும் “நீ பேசாமல் இரு” என்று வேகமான சொல் பாய்ந்து அங்கேயும் வெறுப்பைத் தூண்டும்… சாப அலைகள் அங்கேயும் படர்ந்து விடும்.

அதே சமயம் குடும்பத்தில் பெண்கள் கர்ப்பமாக இருந்தார்கள் என்றால் இதே சாப அலைகள் அந்தக் கருவிலும் பதிந்து… பிறக்கும் குழந்தையையும் சாப அலைகள் தொடர்ந்து… இயக்கத் தொடங்கி விடுகிறது.

இது அவர்களோடு போனாலும் பரவாயில்லை…!
1.மற்றவர்கள் வேடிக்கையாகப் பார்த்தாலும் அவர்களுக்குள்ளும் பாய்ந்து அவர் குடும்பத்திலே கர்ப்பமுற்றிருந்தால் இது பதிவாகி விடும்.
2.உன் கால் முடமாகும் உன் கண்கள் குருடாகிவிடும் என்று ஏசிப் பேசிச் சாபமிட்டிருந்தால்
3.கர்ப்பமற்ற தாய் அதைக் கேட்டிருந்தால் (வேடிக்கை பார்த்திருந்தாலும்) இந்த உணர்வுகள் கருவிலே இணைந்துவிடும்.
4.பிறக்கும் குழந்தையின் கால் மூடமாகிவிடும்… கண்கள் குருடாகிவிடும்
5.எதைச் சொல்லிச் சாபமிட்டார்களோ அதே உணவின் தன்மை வளர்ச்சி அடைந்து அந்தந்த உறுப்புகளைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையாக மனிதன் வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் இந்த உணர்வின் இயக்கங்கள் இப்படி இயங்கத் தொடங்கி விடுகின்றது.

அது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இயக்க விடாதபடி தீய செயல்களாகி… தீய உணர்வுகள் உடலில் நோயாக மாறி
1.நம் சொல் பிறருக்கு தீமையை விளைவிப்பதாகவும்
2.சாப வினைகள் நம் ஆன்மாவாக ஆகும் பொழுது தொழில்களிலும் இந்த உணர்வு படரப்பட்டு
3.நண்பர்களையும் எதிரி ஆக்கி நம் தொழிலையும் கெடுத்துவிடும்.

ஒரு விஷச் செடியைக் கண்டால் நாம் எப்படி விலகிச் செல்கின்றோமோ அது போல் ஒருவன் சாபம் விடுவதாக இருப்பினும்… நாம் பலருக்கு நன்மை செய்பவராக இருப்பினும்… நாம் தவறு செய்யாமலேயே சாப நிலைகளே முன் நின்று “நமக்கு எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும்…”

விஷச் செடியை நுகர்ந்த பின் அதைக் கண்டு வெறுத்து ஓடுவது போன்று சாப வினைகள் முன் நிற்கும் பொழுது… நாம் எடுக்கும் வெறுப்பான உணர்வுகள் பிறர் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் இந்த நிலை ஆகிவிடுகிறது.

ஆகையினால் தான் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களை யாம் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. எத்தகைய நிலையைச் சந்தித்தாலும்
1.அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நமக்குள் கலந்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்
2.நாம் நுகர்ந்த பிறிதொரு உணர்வு நமக்குள் இயக்கக் கூடாது… தீய வினையாக மாற விடக் கூடாது.

நரசிம்ம அவதாரத்தில் நாம் இப்போது இருக்க வேண்டும்

நரசிம்ம அவதாரத்தில் நாம் இப்போது இருக்க வேண்டும்

 

பல கோடிச் சரீரங்களில் பரிணாம வளர்ச்சியாகிக் கண்கள் தோன்றிய பின்… ஒவ்வொன்றிலும் “தான் நல்லது என்று நினைத்து…”
1.தன்னைப் பாதுகாக்கும் உணர்வைப் பார்த்துப் பார்த்துத் தான் சுவாசித்த உணர்வின் தன்மை
2.”பாதுகாக்கும் உணர்வை விளைய வைத்து… அந்த வித்தின் சத்தைத் தொடர்ந்து தனக்குள் கூட்டிக் கொள்கிறது…”

அவ்வாறு ஒவ்வொரு உடலிலும் எடுத்துக் கொண்ட விளைவின் தன்மை அனைத்தும்… உயிருடன் ஒன்றித் தனதாகின்றது. இதனால் தான் மனித உடல் பெறுவதற்கு முன்
1.முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது இந்த உயிர் என்று
2.அதைப் பத்து அவதாரம் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.மனித உடலுக்குள் உயிரின் தன்மை கொண்டு வந்தபின் நரசிம்ம அவதாரம் ஆகின்றது.

அன்று ஒரு அசுரன் (விஷம்) எனக்கு எதிலுமே அழிவில்லை என்று விஷ்ணுவிடம் கேட்கின்றான். வானத்திலும் அழிவில்லை… மூன்று உலகிலும் எந்த விதமான அழிவும் இருக்கக்கூடாது… மிருகத்தாலும் நான் சாகக்கூடாது… மனிதனாலும் நான் சாகக்கூடாது என்ற வரத்தை வாங்கிக் கொண்டு வருகின்றான்.

எதிலுமே ஊடுருவக்கூடிய சக்தி தான் விஷம் (தீய சக்தி எதிலுமே ஊடுருவும்). பால் தூய்மையாக இருக்கிறது என்றாலும் அது சத்து உள்ளது தான் ஆனால் அதிலே ஒரு துளி விஷம் பட்டு விட்டால்… பாலின் சத்து அனைத்துமே இழக்கச் செய்து… விஷம் தனது கவர்ச்சிக்குள் வைத்துவிடும்.

இதே போன்றுதான் விண்ணிலே தோன்றிய விஷத்தின் ஆற்றல் மிக்க சக்திகள்… சூரியன் ஆனாலும் “இயக்கச் சக்தியாக” தனக்குள் அடக்கி வரும் பொழுது அது செயல்படுத்துகிறது.

ஒருவர் தவறு செய்கின்றார் அல்லது ஒரு குழந்தை தவறி கீழே விழுகிறது என்றால் அதை நாம் நேர்முகமாகப் பார்க்கப்படும் பொழுது ஊடனே வேதனைப்படுகின்றோம்.

அந்த வேதனை என்ற விஷம் உடலுக்குள் சென்றபின் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது. அசுரன் நமக்குள் புகுந்து நல்லதை அவனுக்குள் அடிமையாக்கச் செய்கின்றான். இந்த உட்பொருளைத் தான் அங்கே காட்டுகின்றார்கள்.

நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுப்பதாக காண்பிக்கப்பட்டு மிருகத்திலும் சேர்ப்பில்லாதபடி மனித உடலிலும் சேர்ப்பில்லாதபடி ஆகாயத்திலும் இல்லாத படி பரந்த வெளிகளிலும் இல்லாத படி வாசல்படியில் வைத்துக் கொல்கின்றான்.
1.நாம் சுவாசிக்கும் நிலைகள் கொண்டு
2.இந்த உயிரிலே மோதும் நிலைகள் நமக்கு வாசல்படி மூக்கு

நாராயணன் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தி பெற்றவனாக இருக்கின்றான். இந்த உடலுக்குள் சர்வத்தையும் உருவாக்கக்கூடிய சக்தியாக நமது உயிர் இருக்கின்றது.

ஆகையினால் நர நாராயணன்…! இந்த வாசல்படியில் அமர்ந்து அசுர உணர்வின் வேட்கைகளை உள்ளே நுழையாத வண்ணம் தீய உணர்வின் தன்மையை மாய்த்து விடுகின்றான்.

அதாவது
1.உயிரின் பால் (புருவ மத்தியில்) கண்ணின் நினைவினைச் செலுத்தி
2.ஆற்றல் மிக்க மகரிஷிகளின் துணை கொண்டு வாசல்படியில் வைத்து அசுர உணர்வுகளை மாய்த்து விட்டால்
3.நல்லதைக் காத்துக் கொள்ள நம்மால் முடிகிறது.

மனிதனாகப் பிறந்த நாம் மெய் ஒளியின் சக்தியைத் தனக்குள் கூட்டி ஆற்றல் மிக்க நெருப்பாகக் கூட்டி… அந்த நெருப்புக்குள் தீய விஷத்தின் தன்மை மாய்த்தால் அது தான் நரசிம்ம அவதாரம் என்பது. பத்து அவதாரத்தில் இது முக்கியமானது. மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்.

1.இந்த ஆற்றல்மிக்க சக்திகளை எவர் ஒருவர் பெறுகின்றனரோ
2.அவரே நாராயணன் தொடர் கொண்ட ஒளியின் சிகரமாகப் பெற முடியும்.

மகாபாரதத்திற்குள் அன்று வியாசக பகவான் இவ்வளவு தெளிவாக நமக்குக் கொடுத்துள்ளார் நரசிம்ம அவதாரம் என்றால்… கடவுள் எங்கோ இருக்கின்றான்… தூணிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான்… என்று நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம்.