இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

இன்று உலகில் நடப்பதெற்கெல்லாம் மனிதனின் எண்ணமே மூலமாக இருக்கின்றது

 

இன்று உலகில் போர்கள் நடந்து கொண்டுள்ளது. சிந்திக்கும் ஆற்றல் மறைந்து கொண்டுள்ளது.
1.நல்ல செய்திகளைக் கேட்க முடியவில்லை.
2.அன்பும் பண்பும் அரவணைப்பும் மறைந்து வருகிறது.

பண்டைய கால மனிதர்கள் விலங்குகளைப் போல் வாழ்ந்தது போன்று இன்று நாம் நகரில் வாழ்ந்தாலும் “காட்டில் வாழ்வது போல் தான் இருக்கிறது…”

ஒருவருக்கொருவர் கொல்லும் உணர்வே வளர்ந்து கொண்டிருக்கின்றது. அத்தகைய தீமையான நிலைகளை அகற்றிடும் சக்தி எங்குமில்லை.
1.எந்த மதக் கடவுளும் அதைக் காக்கவில்லை.
2.இன்றைய உலகில் கடவுளாக வணங்கி வரும் எந்தக் கடவுளும் தீமை செய்பவர்களுக்கு நல்ல போதனையைக் கொடுக்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயலே தான் நமக்குள் நடக்கின்றதே தவிர “மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகிறது…”

எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது. அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது… அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கிறது.

தனித்து ஒரு கடவுள் இல்லை…!

1.நாம் எண்ணும் உணர்வுகளில் எத்தகைய தீமைகளை நாம் செய்கிறோம் என்று நம் உயிர் கணக்குப் போட்டுக் கொண்டே இருக்கும்.
2.அதே சமயத்தில் எந்த வகையில் எந்தெந்தத் தீமைகளை நீக்கினோம் என்று அந்தக் கணக்கையும் உயிர் வைத்துக் கொண்டே இருக்கும்.

ஆக மொத்தம் முடிவில் நமக்கு ஜட்ஜ்மெண்ட் – தீர்ப்பு கூறுவது நம் உயிர் தான். எதன் கணக்காகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை நீ பெறுவாய்… அதனை நீ அனுபவித்துப் பார்…! என்று தீர்ப்புக் கூறி
2.அதன் வழி அடுத்த வாழ்க்கை தொடர்கின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தின் மூலம் தீமையை அகற்றிடும் அருள் சக்திகளைப் பெற்றுப் பழகி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

பிறருடைய கஷ்டமோ துன்பமோ துயரமோ அதை உற்றுப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டு நுகர்ந்திருந்தாலும் அந்த உணர்வுகள் நமக்குள் இயக்கிடாது தடைப்படுத்தி ஒவ்வொரு நொடிப் பொழுதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்

உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி இப் பிறவியில் வரும் இருளை அகற்றி… “உயிருடன் ஒன்றி ஒளி என்ற உடலைத் தான் பெறுவோம்…” என்று உறுதிப்படுத்துங்கள்.

1.எந்த நிலையிலும் இந்த உடலை விட்டுத் தான் உயிர் செல்கிறது.
2.செல்லும் பொழுது இந்த உடலில் எதைச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க மாற்று உடலை உருவாக்குகின்றது உயிர்.
3.உணர்வுக்கொப்ப உடலை உயிர் மாற்றுகின்றது என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் ஏற்கனவே பல முறை உபதேசித்துள்ளேன்.

ஆகவே குரு வழியில் நமக்குள் அருள் சக்தியினைக் கூட்டித் தீமை புகாது தடுத்து… நாம் பார்ப்போருக்குத் தீமை என்று உணர்ந்தால் அது வராது தடுத்து வேதனைப்படும் உணர்வுகளிலிருந்து அவரை நாம் மீட்டு… அவரையும் அருள் வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானத்தை நாம் பெறவே இந்தத் தியானத்தை அமைத்துள்ளோம்.

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கும் பொழுது “நீங்களும் அதன் வழியில் அதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்…”

உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்தச் சக்தியைப் பெற்று அதன் வழியில் உங்கள் உடலில் தீமை அகற்றிடும் சக்தியாக அத்தகைய உறுப்புகளாக மாற்றி ஓர் தெளிந்த மனம் பெறும் சக்தி பெறுவீர்கள்.

1.வரும் இருளை அகற்றி… இந்த வாழ்க்கையை ஒரு புனிதப் பயணமாக வைத்து
2.இந்த வாழ்க்கைக்குப் பின் என்றும் ஏகாந்த நிலையாகப் பகைமையற்ற நிலையில்
3.பிறிதொன்று நம்மைக் கவர்ந்திடாத நிலையை அடையச் செய்யும் மார்க்கம் தான் “நமது குருநாதர் காட்டிய அருள் வழி…”

இந்தப் பிள்ளை யார்…?

இந்தப் பிள்ளை யார்…?

 

ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எவ்வாறு பெற வேண்டும்…? என்பதை உணர வேண்டும்.

1.அவர்கள் விண்ணுலகம் சென்ற உணர்வை நாமும் நுகர்ந்து
2.வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி
3.அருள் மகரிஷிகள் உணர்வுகளை அரும்பெரும் சக்தியாக மாற்றச் செய்வது தான் விநாயகர் தத்துவம்.

இந்தப் பிள்ளை யார்…? என்று கேள்விக் குறியிட்டு அங்கே காட்டியிருப்பார்கள்.

புழுவிலிருந்து மனிதனாக வந்த நிலையில் மனிதனாக ஆனபின் மற்ற தீமைகளை அடக்கி விட்டு உயர்ந்த ஒளியின் உணர்வாக தனக்குள் அரசாட்சி பரிந்து அதையே ஒளியாக மாற்றி
1.விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகள் உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.அவனுடன் ஒன்றிய அவனாக நாம் மாறுகின்றோம்.

நாம் எண்ணிய உணர்வு அனைத்தும் “நான்” என்றாலும் உயிரின் தன்மை கொண்டு தனித்த நிலையில் உயிரே இயக்குகின்றது. அதிலே நாம் எண்ணிய உணர்வு எதுவோ அதனுடன் இணைந்து செயல்படும் போது “தான்” ஆகின்றது.

உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது… அதாவது நான் தானாகி… தான் நானாகின்றது.

உயிரின் தன்மை தனக்குள் ஒளியின் சிகரமாக மாறினாலும்… உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி இது மறைத்தாலும்
1.தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதை
2.உயிருடன் ஒன்றி ஒளியாக மாறிய பின்… ஒளிச் சரீரமாக மாறிய பின் “நான் ஆகின்றது…”

நான் தானாகி… தான் நானாகிறது என்பதைத் தான் இந்தப் பிள்ளை யார்…? என்ற நிலையை நிலைப்படுத்தி அதை அறிந்திடும் நிலையாக இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைக் கார்த்திகேயா என்று அழைக்கின்றார்கள்.

அந்த ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி “மகரிஷிகளுடன் என்றும் ஒன்றியே வாழ்வோம்…”

மா… “பிரம்மா” – அம்மா…!

மா… “பிரம்மா” – அம்மா…!

 

“ஓம் ஈஸ்வரா குருதேவா…” என்று அடிக்கடி சொல்கின்றோம். ஓம் என்று சொல்லப்படும் பொழுது சாஸ்திர விதிகளில் “ஓ…ம் – பிரணவம்” என்று சொல்வார்கள்.

அதனுடைய இயற்கையான உண்மையான நிலைகளைப் புரிந்து கொள்வதற்காக மெய் ஞானிகள் நமக்குக் காட்டியது…
1.உயிர் ஜீவனுள்ளதாக இருக்கின்றது
2.நம் உடலுக்குள் அனைத்து அணுக்களையும் அது இயக்கச் செய்கின்றது. அதற்குப் பெயர் “ஓ…!”
3.“ம்…!” என்கிற பொழுது நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ ம் என்று உடலுக்குள் அது இணையச் செய்து அதையும் ஜீவன் பெறச் செய்கின்றது.

அதாவது…
1.ஓ என்பது பிரணவம்
2.ம் என்பது பிரம்மம்.
3.ஓம்… ம் என்று ஆனாலும் நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ பிரம்மா… “மா…” தாயாகின்றது…!

நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தை உயிர் இயக்கச் செய்து ம் என்று உடலுக்குள் ஆகப்படும் பொழுது அது எந்தக் குணமோ அந்த அடிப்படையில் தான் மற்றதெல்லாம் இயங்கும்.
1.ஆகையினால் அது அம்மா… பிரம்மா…!
2.தாயின் நிலையை வைத்துத் தான் பிரம்மா என்று பெயரை வைத்தார்கள் ஞானிகள்.

நமது உயிரின் இயக்கத்தை “ஈசன்” என்றும்… நாம் எண்ணும் எண்ணத்தை ஜீவன் பெறச் செய்வதை “ஓ” என்றும்… நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தின் சத்து உடலுடன் ஐக்கியமாகும் பொழுது “ம்” என்றும் தெளிவாக்குகிறார்கள்.

அது தான் ஓ…ம் நமச்சிவாய…! சிவாய நம ஓ…ம்…! என்று பெயரை வைத்து அழைக்கின்றார்கள் நாம் புரிந்து கொள்வதற்கு.

ஆகவே… ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்…?

ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி… குருதேவா என்று சொல்லும் பொழுது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்கள் அனைத்திற்கும் நம் உயிரே குருவாகின்றது என்று எண்ண வேண்டும்.

கோபமாகப் பேசினாலும் சலிப்பாகப் பேசினாலும் சங்கடமாகப் பேசினாலும் சாந்தமாகப் பேசினாலும் உயர்ந்த நிலையில் பேசினாலும் வேதனையாகப் பேசினாலும்
1.இவை அனைத்தும் நாம் எண்ணியதை உயிர் ஜீவனாக்கி ம் என்று நம் உடலாக்கி
2.உடலில் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உயிரே.

இதைச் சொல்வதற்குத் தான் குருதேவா… குரு என்று காட்டுகின்றார்கள்.

பிரபஞ்சத்திற்குக் கோள்கள் உருவாவதற்கும் பிரபஞ்சத்திற்குள் இயக்குவதற்கும் இந்தப் பிரபஞ்சத்திற்குச் சூரியன் குருவாகின்றது. அதைப் போல நம் உடலுக்குள் உயிர் குருவாக இருக்கின்றது.

1.இதையெல்லாம் சாதாரண மக்களும் உணர்ந்து அறிந்து செயல்படுவதற்கும்
2.மனிதனாக ஆனபின் அடுத்து நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்பதற்கும் தான்
3.காவியங்களாக மெய் ஞானிகளால் படைக்கப்பட்டது.

இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்பதற்குத்தான் ஞானிகள் இதையெல்லாம் காட்டினார்கள்.

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் நாம் ஒன்ற வேண்டும்

சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் நாம் ஒன்ற வேண்டும்

 

நான் படிக்காதவன் தான் இத்தனையும் பேசுகின்றேன். இயற்கையின் பேருண்மைகளை அறியும் தகுதியை குருநாதர் எமக்குக் கொடுத்தார்.

நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக உணர்வினைப் பதிவாக்கிக் கொண்ட பின் உங்கள் நினைவாற்றல் கொண்டு
2.அண்டத்தையும் அளந்தறிந்த அகஸ்தியனின் உணர்வினை உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்.
3.இருளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியையும் நீங்கள் பெற முடியும்

அந்த நம்பிக்கையில் தான் இதைப் போதிக்கின்றேன். கேட்டறிந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து அதை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… திரிந்தேன்… அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்… துன்பத்திலிருந்து மீண்டிடும் உணர்வை குருநாதர் உணர்த்தினார்… அதைக் கவர்ந்தேன்.

துன்பத்தை அகற்றும் உணர்வுகளை வளர்க்கும் படி செய்தார். அதில் வளர்த்த உணர்வின் ஞானத்தைத் தான் உங்களுக்குப் போதிக்கின்றேன்.
1.நீங்கள் இதை நினைவு கொண்டு வந்து வளர்த்தால்
2.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்க முடியும்.

இந்த உடல் நீடித்த நாள் நம்முடன் இருக்கப் போவதில்லை. ஆகவே உடலில் இருக்கும் பொழுதே அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் பார்ப்போர் நம் சொல்லைக் கேட்டோர் அனைவரையும் நலம் பெறச் செய்ய முடியும்.

நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களும் அதைப் பெறுவார்கள். எடுத்துக் கொள்ளவில்லை என்றால் வளர்ச்சிக்கு வர முடியாது.

அனைவரும் நலம் பெற வேண்டும் என்று அருள் ஞானத்தைப் போதியுங்கள். அருள் ஒளியை நுகருங்கள். அருள் ஞான அணுக்களை உருவாக்குங்கள். பிறவி இல்லா நிலையை அடைய முற்படுங்கள். நம் எல்லை எது…? என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதை மையமாக வைத்து வாழுங்கள்.

மையம் எது…?

1.இந்த உடலுக்குப் பின் நாம் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்… மனிதனின் கடைசி எல்லை அது தான்.
2.அங்கே ஒளியாக மாறிவிட்டால் அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் சுழலாம்… என்றும் 16 என்று நிலை அடையலாம்.

மனித உடல் பெற்ற நிலையில் அறியும் ஆற்றல் ஆறாவது அறிவாக உள்ளது கார்த்திகேயா…! உயிர் தான் இதையெல்லாம் உருவாக்குகின்றது. அவனுடன் நாம் ஒன்றிட வேண்டும்.

உயிர் எப்படி நம்மைத் தெளிவாக்குகின்றதோ இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவுக்கு உண்டு. அதன் துணை கொண்டு அருள் சக்திகளை வளர்த்துக் கொண்டால் அடுத்துப் பிறவி இல்லை.

சொர்க்க பூமி சொர்க்கவாசல் என்று நாம் எண்ணும் உணர்வின் தன்மை அருள் ஒளி கொண்டு இங்கே வளர்த்தால் அங்கே விண் செல்ல முடியும்… சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

1.சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையை சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.
2.சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
3.சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உயிருடன் ஒன்ற வேண்டும்
4.அருள் ஒளிச் சுடரை நாம் வளர்க்க வேண்டும்… அதன் வழி அது நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

உடலை மதிக்க வேண்டும்… ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது

உடலை மதிக்க வேண்டும்… ஆனால் அதன் மீது பற்று வைக்கக் கூடாது

 

நான் ஏதோ சொல்கின்றேன் என்றும் நான் கல்வி அறிவு இல்லாதவன் என்றும் எண்ண வேண்டாம். விண்ணுலக ஆற்றல் அனைத்தும் மனிதனின் உடலுக்குள் உண்டு என்று குருநாதர் காட்டினார்.

அதன் வழி வழி கொண்டு
1.அந்த (உணர்வின்) புலனறிவின் ஆற்றலை விண்ணிலே வீசி உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி
2.அந்த உணர்வின் தன்மையை உனக்குள் வளர்த்துக்கொள்,
3.இதுவே தீமையற்ற நிலைகளாக ஆக்கு
4.அது தீமைகள் இருக்கும் மனிதனுக்குத் “தீமைகளை நீக்க உதவட்டும்…!” என்று குருநாதர் எமக்குக் கட்டளையிட்டார்.

அவர் இட்ட கட்டளைப்படிதான் இதைச் செய்கிறேன். உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ பொருள் தேவைக்கோ அல்ல. எனக்குப் பொருள் ஒன்றும் தேவையில்லை… புகழும் தேவையில்லை.

நீங்கள் மகிழ்ந்திருக்க வேண்டும், உங்களையறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், உங்களின் மகிழ்ச்சியான உணர்வு மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக மலர வேண்டும்.

அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது எமது குரு இட்ட கட்டளை.

இந்த உடல் சதமற்றது. நிலையாக இருப்பது உயிர்.
1.“சாமி…” என்று என்னைப் பல பேர் கூப்பிட்டாலும் உயிர் சென்று விட்டால் என்னவென்று அழைப்பார்கள்…?
2.சவத்தை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…? என்று தான் கேட்பார்கள்.
3.எனக்குள் இருக்கும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.
4.எல்லோருடைய நிலையும்… உயிரைத்தான் மதிக்கின்றார்கள்.

இப்பொழுது உங்கள் உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங்கள். அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள். இந்த உடலின் தன்மை தூசியாகும்.

இந்த உடலுக்குள் நின்று தான் மெய் ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத் தான் உயிருடன் ஒன்றச் செய்ய முடியும்.
1.உடலை மதிக்க வேண்டும்
2.ஆனால் உடல் மீது பற்று வைக்கக் கூடாது.

உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து “என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானே… இரு உன்னைப் பார்க்கின்றேன்…!” என்று சொன்னால் போதும். உடலுக்கு முக்கியத்துவம் வந்து விடுகின்றது.

அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள், அவர்கள் சொன்ன வழியில் சென்று இந்தச் சரீரத்தைக் காக்கும் திறன் இழந்து விடுகின்றீர்கள்.

இதிலிருந்து விடுபட அந்த மெய் ஞானிகளின் அருளைப் பெறத் தியானித்து அந்தத் தீய வினைகளை நீக்கி மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்… தியானிக்கின்றேன்… வேண்டுகின்றேன், பிரார்த்திக்கின்றேன்.
1.உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர்.
2.அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர்,
3.ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர்,
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர்
5.உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர்
6.என்றும் அழியா ஒளிச்சரீரம் பெற்றிடுவீர்.

தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி

தீமைகள் நமக்குள் புகாமல் தடுக்கும் வழி

 

எவ்வளவு செல்வம் தேடினாலும் எவ்வளவு செல்வம் சேமித்து வைத்தாலும்
1.கடுமையான நோய்கள் வந்து விட்டால் வாழ்க்கையில் வெறுப்பு தான் வருகின்றது.
2.வெறுப்பான உணர்வுகள் வரப்படும் பொழுது உடலை வெறுக்கின்றோம்… வேதனையை வளர்க்கின்றோம்.
3.இதனால் நிம்மதியற்ற நிலைகளில் தான் நாம் வாழ வேண்டி வரும்.

ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியில் அழுக்குப்பட்டு விட்டால் கண்ணாடியின் அழுக்கைத் துடைத்தால்தான் நம்முடைய உருவத்தைக் காண முடியும்.

இது போன்று பிறருடைய தீமையின் உணர்வுகள் நமது ஆன்மாவில் பெருகி விட்டால் நம்மை எது இயக்குகிறது…? என்று அறிய முடியாதபடி நாம் பார்த்த உணர்வுகள் நமது உடலை இயக்கி நம்மை நாம் அறிய முடியாத நிலைகளாக ஆகி விடுகின்றது.

ஆகவே நம்மை நாம் எப்படி அறிய வேண்டும்…?

கண்ணாடியில் அழுக்குப் படிந்திருந்தால் நாம் எப்படிப் பார்த்தாலும் நமது முகம் தெரியாது. இது போன்றுதான் நமது ஆன்மாவில் அழுக்குப் படிந்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழக்கும் நிலை வருகின்றது.

1.கண்ணாடியில் படிந்த அழுக்கை நீக்கினால் நமது உருவம் தெளிவாகத் தெரிவது போன்று
2.நமது ஆன்மாவில் கலந்த அழுக்கை நீக்கித் தூய்மைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா. துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நம் உடலுக்குள் இந்த உணர்வின் தன்மையைச் செலுத்த வேண்டும்.

அவ்வாறு நாம் செலுத்தப்படும் போது வேதனைப்பட்ட உணர்வின் தன்மை நமது ஆன்மாவிலிருந்து நீங்கி நமது ஆன்மா தூய்மை பெறுகின்றது.

ஆகவே நமக்குள் தெளிவான நிலைகள் வரும். சிந்திக்கும் தன்மை நமக்குள் வருகின்றது. தீமை அகற்றும் வல்லமை பெறுகின்றது. தீமைகள் புகாது தடுக்கவும் முடிகின்றது.

நீங்களும் ஒரு டாக்டர் தான். உங்களுடைய உயிர் தான் டாக்டராக இருக்கின்றது.
1.உயிரான டாக்டரிடம் உங்களுடைய உணர்வுகளைச் சொன்னீர்களென்றால்
2.அதற்குத் தகுந்த மாதிரி உயிரான டாக்டர் உங்களை இயக்கி உங்களை நல் வழிப்படுத்துவார்.

ஆனால் நாம் வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மிடம் வரும் பொழுது உயிரான டாக்டரை மதிக்காதபடி இருந்து விடுகின்றோம்.

உயிர் நமக்கு நல்லது கெட்டது போன்றவைகளைக் காண்பிக்கின்றது. கெட்டது என்று தெரிந்து அதை உள்ளே விடாதபடித் தடுக்கவில்லை என்றால் என்னவாகும்…?

டாக்டர்கள் “ஒன்றைச் சாப்பிடாதீர்கள்” என்று சொல்லியிருந்தும் அதைச் சாப்பிட்டோம் என்றால் உடல் நோயாகும்.

இது போன்றுதான் நாம் ஒருவர் வேதனைப்படுவதைப் பார்த்து நல்ல மனிதர் இப்படி ஆகிவிட்டாரே…! என்று வேதனைப்படுகின்றோம். அப்பொழுது என்ன செய்கின்றோம்…?
1.வேதனையின் உணர்வுகள் நம்முள் நுழைவதற்கு ஏதுவாகத் திறந்து வைத்து விடுகின்றோம்.
2.இதனால் வேதனை உணர்வுகள் நம்முள் புகுந்து விடுகின்றது.
3.ஆகவே நாம் எப்பொழுதும் தீய உணர்வுகள் நம்முள் நுழையாத வண்ணம் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

உதாரணமாக… காற்று பலமாக உள்ள பொழுது என்னவாகும்…? தூசி, நாற்றம் அனைத்தையும் அடித்துக் கொண்டு வரும். அப்படி வரும் பொழுது அவை அனைத்தும் நம்முள் நுழைந்துவிடும். ஆகவே நாம் கதவை மூடி வைத்திருக்கப் பழக வேண்டும்.

நாம் ஒரு உணர்வை மூக்கு வழி நுகரும் பொழுது அது நம் உயிரில் மோதுகின்றது. நமது கண் ஒன்றைப் பார்க்கும் பொழுது கருவிழி ருக்மணி என்ன செய்கின்றது? கவர்ந்த உணர்வை நமது உடலில் உள்ள விலா எலும்புகளில் உள்ள ஊனில் பதிவாக்கி விடுகின்றது. வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்து நமது எலும்புக்குள் “ஊழ்வினை” என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது.
1.இவைகளெல்லாம் சுவாசித்தல் மூலம் நம்முள் செல்வதில்லை.
2.சுவாசத்தில் இல்லாமலே கருவிழி ஒன்றைப் பார்த்துப் படமாக்கி நம்முள் பதிவாக்கி விடுகின்றது.

எக்ஸ்ரே படம் எடுத்தால் உடனே படமாகக் காட்டுவதைப் போன்று கருவிழி பார்த்தவுடனே நமது உடலில் உள்ள விலா எலும்புகள் கடிகாரம் மாதிரி “பட…படவெனத் துடித்து” இழுக்கும். இழுத்து உடனே தன்னுள் பதிவாக்கிக் கொள்கின்றது.

இவ்வாறு பதிவான பின்னே கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் அதனின்று வெளிப்படும் வேதனை உணர்வைக் கவர்ந்து அவ்வுணர்வை இயக்கக்கூடிய அணுக்களாக மாற்றுகின்றது.

வேதனையின் உணர்வுகள் நமது உடலுக்குள் வலுவானபின் அதன் அருகில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களைப் பலவீனப்படுத்தும். மேலும் அந்த நல்ல அணுக்களை உணவாக எடுத்துச் சாப்பிடத் தொடங்கும். பின் நாம் நலிவடைய வேண்டியது தான்.

எனவே இதை போன்ற நிலைகளைத் தடுக்க நாம் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை உயிர் வழி கவர்ந்து
2.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.இவ்வாறு நாம் செய்துவர நாம் அனைத்துத் தீமைகளிலிருந்தும் விடுபட முடியும்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ முடியும்.

ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை

ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை

 

ஒவ்வொருவரும் சிவ சக்தியாகத் தான் இயங்குகின்றார்கள்.
1.உடல் சிவமாகின்றது
2.உடலுக்குள் இயங்குவது சக்தியாக இருக்கின்றது… இப்படித் தான் சிவ சக்தி.

உருவம் சிவம் தனக்குள் இயங்குவது சக்தி. இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிச் சக்தியாக இயக்க முடியும். உணர்வின் தன்மை எந்தச் சக்தியாக இயக்குகின்றோமோ மறு உருவைக் கொடுக்கும்.

1.உருவமல்லாது சக்தியை நாம் சேர்ப்போம் என்றால் உயிருடன் ஒன்றி என்றும் சிவ சக்தியாக ஒளியின் சரீரமாகும்.
2.அது தான் எண்ணத்தால் வருவது… எண்ணத்தால் உருமாற்றிய நிலைகள் இராமலிங்கம்… உயிருடன் ஒன்றிய நிலைகள்…!

சீவலிங்கம்… உறைந்த உடல் கொண்டு தான் நாம் இப்பொழுது இயக்குகின்றோம். எண்ணத்தால் இருளைப் போக்கி ஒளியாக உயிருடன் ஒன்றினால் இராமலிங்கம்.

எங்கே சென்றாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை. பெருக்கும் சக்தியின் நிலைகள் கொண்டுதான்… அந்தச் சக்தியின் துணை கொண்டு தான் எண்ணத்தால் சீவலிங்கமாக இந்த உடல் ஆகிறது.

எண்ணத்தால் இராமலிங்கமாக உருவாக்க வேண்டும். ஒளியின் சரீரம்…! இது தான் சிவசக்தி என்பது. கணவன் மனைவி அல்ல.

நாம் கவர்ந்து கொண்ட சக்தி வசிஷ்டர். கவர்ந்தது எதுவோ அதனுடன் இணைந்தே வேலை செய்யும். எண்ணிய எண்ணங்கள் எதிர்நிலை ஆகிவிட்டால் என்ன செய்யும்…? அதனால் தான் சிவ சக்தி என்பது. சக்தி தான் சிவம் ஆகிறது. சிவம் தான் சக்தியாகிறது.
1.சக்தியான நிலைகள் மறைமுகமானது.
2.உறைந்துவிட்டால் சிவம் ஆகின்றது… சிவசக்தி என்று பொருள்

ஒன்றுக்குள் ஒன்று ஜீவன் பெற்று ஒன்றின் அணைப்பில தான் இயங்குகின்றது. முதலில் ஓ… என்று பிரணவம் ஆகின்றது… மற்றொன்று அதற்குள் இருந்து ஒவ்வொரு உணர்வும் தன் தன் நிலைகளை இயக்கும்.

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம். இதைப் போன்று பல கோடி உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஓ …என்று பிரணவமாகி ம்… என்ற உடல் ஆகிறது.

உயிரணுவின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது எத்தனையோ கோடி உணர்வு கொண்டுதான் எண்ணத்தின் தன்மை வருகின்றது.

உயிர் ஓ என்று இயக்கினாலும் நாம் எண்ணிய உணர்வுகள் ஓமுக்குள் ஓம்… அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்கும். எதிலேயும் ஓ என்ற பிரணவம் இயக்கம் இல்லை என்றால் உடல் உருவாகாது.

1.ஜீவன் ஆனால் தான் மலம் உடலாகின்றது. உறைந்திடும் நிலைகள் உடல்.
2.அதாவது திரேதா யுகம்… உடலுக்குள் உயிரணுவின் தோற்றமான பின்
3.எண்ணத்தின் உணர்வு கொண்டு ஓ… என்று இயக்குகின்றது. உணர்வின் தன்மை ம்… என்று மலமாகிறது.

அதே போல செடிகளில் ஒன்று இணைந்த பின் ஓ என்று குவித்த நிலையில் இயக்குகின்றது ம்… என்று உணர்வின் சத்து உறைகின்றது… சிவமாகிறது.

சக்தியாக இருப்பது செடியாக்கப்படும் பொழுது துவைதம். அதனின் மணம் வெளி வரப்படும் போது சக்தி ஆகின்றது. அதற்குள்ளும் எந்தெந்த உணர்வுகள் உள்ளதோ அதனின் ஜீவன் இயக்கவில்லை என்றால் வளர்ச்சி ஆகாது.

ஒரு கசப்பின் தன்மை வரவேண்டும் என்றால் பல உணர்வுகள் சேர்த்துத் தான் அது உருவாகின்றது. அந்தப் பல உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்றாகி ஒன்றின் உணர்வு கொண்டு இணைந்து அது ஓ என்று ஜீவனாகி ம் என்று உடலாகிறது.

இதைத்தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம். ஒன்றுடன் இணைந்து இயக்கவில்லை என்றால் அது இல்லை என்றே பொருள்.
1.ஆக மொத்தம் எதிலுமே ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு அது இயக்கச்சக்தியாக மாறினால் தான் “ஓம் ஓம் ஓம் ஓம்…”
2.நாம் எதை எண்ணி “ஓம்…” என்று இப்பொழுது தனக்குள் சேர்க்க வேண்டும்…?
3.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அதை ஜீவன் பெறச் செய்து ஒளியாக மாற்ற வேண்டும்.

அதைத் தான் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.

கௌரவம் பார்ப்பதற்குப் பதிலாக உயிருக்குள் ஒளியைப் பெருக்கினால் “மதிப்பு…”

கௌரவம் பார்ப்பதற்குப் பதிலாக உயிருக்குள் ஒளியைப் பெருக்கினால் “மதிப்பு…”

 

நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன் இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை.

எத்தனை கௌரவம் எத்தனை துணி எத்தனை அலங்காரம் எத்தனை சுகமான நிலை எத்தனை பஞ்சு மெத்தை எல்லாம் நாம் போட்டு வைத்திருந்தாலும் “உயிரான ஈசன் போய்விட்டால்…” குப்பையில் போய் எரித்து விடுவார்கள்.

நாம் இங்கே பார்க்கும் கௌரவமெல்லாம்… இப்படி இருந்தார்கள் என்றா பார்க்கின்றோம்…! ஆனால்
1.இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும் போதும்
2.மண்ணைக் கொட்டும் போதும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்,

ஏண்டா இப்படிச் செய்கின்றாய்…? என்று கேட்கின்றோமா…! ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் “நாற்றம் அடிக்கும்…” என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படிப்பட்ட நிலையில்…
1.இந்த உடலில் ஈசன் இருக்கும் போதே
2.நீங்கள் கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் அந்த மெய் ஞானியின் உணர்வை எடுத்து
3.இந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

கௌரவப் பிரச்சினை என்று சொல்கிறோமே… அது நமக்குள் நிறைய உண்டு. ஏனென்றால் நாம் அல்ல…!

அரசன் தன் கௌரவத்தில் என்ன செய்கிறான்…? யார் என்ன தப்பு செய்தாலும் உடனே போர் முறைதான்…! நான் சொன்னேன்… கேட்கவில்லை உடனே போர் முறை…!

நான் வலுவான நிலையில் இருக்கிறேன்…! நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிட வேண்டும்.
1.என்னை எதிர்த்துப் பழகி விட்டால் உன்னைச் சும்மா விட மாட்டேன் என்று
2.அடுத்து யார் என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.

இது எல்லாம் அந்த உணர்வினுடைய வேலை… எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும். எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இதை மாற்றுவதற்குத்தான்
1.வாழ்க்கையில் எப்பொழுது தீமை வருகிறதோ… “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை வைத்து
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உடனே அதை நிவர்த்தித்துப் பழக வேண்டும் என்று சொல்கிறோம்.

உடலை விட்டுச் சென்றால் அவனுடன் அவனாகி அவனாக நாம் ஆக வேண்டும். (உயிரான ஈசனுடன்)

உயிர் உணர்வு உடல் – இயக்கம்

உயிர் உணர்வு உடல் – இயக்கம்

 

ஒரு மரம் பட்டு அதனுடைய சத்தெல்லாம் இழந்தாலும்… அதில் விளைந்த சத்தினைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து சேமித்து வைத்துக் கொள்கின்றது.
1.சேமித்த உணர்வின் தன்மை பூமியின் பரத்தில் பரமாத்மாவில் அலைகளாகத் தொடர்கின்றது… பரமாத்மாவாக இருக்கின்றது.
2.மண்ணிலே ஊன்றப்பட்ட வித்து தன் தாய் மரத்தின் உணர்வை நுகர்ந்து மரமாக விளைந்து மீண்டும் தன் இனத்தின் வித்தை உருவாக்குகின்றது.

இதைப் போல தான் சூரியனால் உருவான இந்த உணர்வுகள் அதனுடைய அலை வரிசைகள் தொடர்ந்து எதன் எதன் வழிகளில் அது கவர்ந்ததோ அந்த இன வித்துக்கள் மாறுவதும்… மரம் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது மரத்தின் இனங்கள் மாறுவதும்… தாவர இனங்களும் மாறுகின்றது.

இதைப் போன்று… நம் உடலுக்குள் இருக்கும் உயிர் “நாம் எண்ணியது எதுவோ… அதை ஜீவ அணுக்களாக மாற்றி…” அந்த உணர்வின் மலமாக உடலாக மாற்றி அமைக்கின்றது.

சூரியனைப் போல உயிர் மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில்
1.இந்தப் பூமியில் காற்றுடன் கலந்துள்ளது
2.ஆனால் நம் உடலில் ரத்தத்துடன் கலக்கின்றது.

நாம் எண்ணியது எதுவோ அது அனைத்தும் ஜீவ அணுக்களாக ரத்தங்களிலே உருப் பெறுகின்றது.

பல கோடி வித்துக்களாக உருப்பெற்றாலும் அந்தந்த மரம் காற்றிலே மிதந்து வரும் தன் இனத்தின் சத்தை எடுத்து விளைவது போல நமக்குள்ளும் விளைகின்றது.

ஒருவன் தீமையாகப் பேசுகின்றான்…! அவனிடமிருந்து சொல்லாக வருகின்றது… அவனில் விளைந்த வித்தாக அது வெளிப்படுகின்றது. நாம் அதை உற்றுப் பார்க்கப்படும் பொழுது ஊழ்வினையாக நமக்குள் பதிவாகின்றது. வினை தான் வித்து என்பது.

ஒரு வித்து தன் சத்தைக் காற்றிலிருந்து எவ்வாறு கவர்கின்றதோ அதைப் போல்
1.நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்த ஊழ்வினை மீண்டும் தன் உணர்வின் சத்தை ஆன்மாவாக மாற்றுகிறது.
2.மாற்றிய பின் சுவாசித்து உயிரிலே பட்டு அது தான் எண்ணமாக மாறுகின்றது.
3.அது உடலுக்குள் செயல்படும்போது அந்த உணர்வின் உந்து விசையால் நம் உடல் அங்கங்கள் அதற்குத்தக்க அசைகிறது.

நாதத்தின் சுருதி கொண்டு வாத்தியங்களை இசைக்கிறார்கள். அதைக் கேட்டு… அந்த இனிமை கலந்த உணர்வுகளை ஒரு தரம் பதிவாக்கி விட்டால் அந்த ராக இணைப்பிற்கு அந்த இசையின் வாசிப்பிற்கு நம்முடைய அங்கங்கள் இசைந்து இயக்குகின்றது.

வாசிக்கத் தெரியவில்லை என்றால்… சீராகப் பதிவு செய்யவில்லை என்றால் என்னதான் வாத்தியம் வாசித்தாலும் அது வராது.

இனிமை கொண்ட வாத்தியத்தின் உணர்வின் தன்மையை தனக்குள் பதிவு செய்யும் பொழுது அது பதிந்த பின் தன்னிச்சையாக அவருடைய அங்கங்களை அசைப்பதும் மீண்டும் ரசனையை அவர்கள் கூட்டும் பொழுது அதற்கு தகுந்தாற் போல் அந்த வாத்தியங்கள் மிகவும் நயமாகவும் பிறரை மகிழ்விக்கும் நிலையும் ஆட்டிப்படைக்கும் நிலைகளும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.ஒரு மனிதன் கோபித்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்து கொண்டால்
2.அந்த உணர்வின் நாதங்கள் நமக்குள் கோப உணர்ச்சிகளைத் தூண்டி இந்த உணர்வுக்கொப்ப நம் அங்கங்களை இயக்குவதும்
3.அதே உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மற்றவரை அழித்திடும் நிலையோ… இம்சிக்கும் நிலையாகவோ அது நமக்குள் தோன்றும்.

அவ்வாறு தோன்றிய உணர்வுகள் நம் உடலுக்குள் இம்சைப்படும் உணர்வுகளாகவே உருப்பெறுகின்றது. அப்பொழுது மகிழ்ச்சியாக உருவான இந்த உடல் நலியும் தருணம் வருகின்றது.

பிரபஞ்சத்தில் சூரியன் இயக்குவது போல
1.நாம் எண்ணிய உணர்வுகள் எவையோ அவை அனைத்தையும்
2.உயிர் உடலுக்குள் அணுக்களாக மாற்றிக் கொண்டே இருக்கிறது.

உயிர் – மெய் – மெய்ப்பொருள்

உயிர் – மெய் – மெய்ப்பொருள்

 

சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள மெய்ப்பொருளை நாம் உணர்வோம். “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி முழக்கம் இடுகின்றோம். இந்த முழக்கத்தின் உட்பொருளைப் புதிதாக வந்தவர்களும் ஏற்கனவே உள்ளவர்களும் தெளிந்து கொள்ள… தெரிந்து கொள்வதே நல்லது… நலமும் கூட…!

உயிர் நமக்குள் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ
1.அந்தக் குணங்கள் அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக்கி ஜீவணுக்களை இயக்கிக் கொண்டே உள்ளது நம் உயிர்.
3.அதனால் தான் ஓ…ம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.

நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக நம் உடலுக்குள் உறையச் செய்து கொண்டே உள்ளது.

நாம் எண்ணியது அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ உயிரின் இயக்கத்தால் அந்த உணர்வினைப் பிளந்து அதனின் அறிவின் இயக்கத்தையும் நம்மை அறியச் செய்கின்றது… மெய்ப்பொருளாக…!

கோபப்படுகிறோம் என்றால் அந்தக் கோபத்திற்குண்டான உணர்வின் செயலை அதன் உணர்வின் உண்மையை உணர்த்துகின்றது நமது உயிர்.

அதே போல்
1.மெய்ப்பொருளை… எத்தகைய பேரண்டத்தின் இயக்கமாக இருப்பினும்
2.நமது உயிர் அதனின் உள்பொருளையும் அகப்பொருளையும் மூலப் பொருளையும் பிரித்து
3.நமக்குள் அறிவின் இயக்கமாக இயக்கி நம்மை அறியச் செய்கின்றது… உணரச் செய்கின்றது… இயக்கச் செய்கின்றது…
4.உடலாக்கிக் கொண்டே உள்ளது… மெய் நமது உயிர்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

அதே சமயத்தில் அன்னை தந்தையரை எண்னி முதல் தெய்வமாக வணங்கிட வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் முதலில் நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள். நமக்கு அறிவும் தெளிவும் ஊட்டியது நம் அன்னை தந்தையே. நமக்கு குருவாக இயக்கிக் கொண்டிருப்பதும் அன்னை தந்தையரே.

1.அன்னையின் உயிரே மெய்ப்பொருளாகி அதனின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து மனிதனாக உருவாக்கி
2.அந்த மனிதன் நிலையில் தனக்குள் “தன் இனம் வளர வேண்டும்…” என்ற ஏக்க உணர்வின் உண்மைப் பொருளை உணர்த்தி
3.அதன் வழியில் நம்மை மனிதனாக உருவாக்கியது நமது தாய் தந்தை.

உயிர் கடவுள் என்றும் உணர்வால் அறிந்துணர்ந்த தன்மை கொண்டு தன் இனம் என்ற நிலைகள் தன் மக்கள்… உயிர் என்று அறிவுறுத்தப்பட்டு நம்மைக் காத்து நல்வழி காட்டி நல் உணர்வுகளை ஊட்டி நமது வாழ்க்கையை உயர்த்துவதற்கும்… மகிழ்ந்திடவும்… மனிதன் என்ற உண்மையை உணர்த்துவதற்கும்… நம் தாய் தந்தையே உயிர் கடவுளாக இருந்து… தெய்வமாக இருந்து நமக்கு நல்வழி புகட்டியது… அவர்கள் தான் முதல் குரு

ஆகவே நாம் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று முழக்கமிட்ட நிலைகளில் அவரவர்கள் தாய் தந்தையரை எண்ணி “அவருடைய அருள் பெற வேண்டும்…” என்று ஏங்குதல் வேண்டும்.