ஒராயிரம் குரு கிடைத்தாலும் உண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…!

Eaganthanilai

ஒராயிரம் குரு கிடைத்தாலும் உண்மையான சீடர்கள் கிடைப்பது அரிதிலும் அரிது…! 

உலகோதய வாழ்க்கையின் சூழலில் சிக்கி கரை காணாது மன மயக்கமுறும் “மனித மனம்” கரையத் தொட்டுவிட எட்டிவிட நினைக்கின்றது. ஆனாலும் அதனுடைய செயல் முறைக்கு வழி வகை அறிய முடியாது எல்லை கடந்த நிலையில் மயக்கமாகி
1.பின் கைக்குக் கிடைத்த பொருள் போதும் என்று கரை சேரலாம் என்ற நினைப்பும் வருகின்றது.
2.இந்த வாழ்க்கையின் நிகழ்வில் தன் கைக்குக் கிடைத்த ஒரு மிதவையின் துணையினால் தன் முயற்சி கொண்டு கரை காண்பதும் உண்டு.

அதாவது கரை காணாத வாழ்க்கைச் சாகரத்தில் திமிங்கலங்களும் பல பல விஷ ஜெந்துக்களும் உண்டு என்ற போதும் தானே கண்ட வழியாக ஓர் படகைச் செய்வித்து… அதில் அமர்ந்து எதிர் திசைக்குத் துடுப்பிட்டு எண்ண கதி ஓட்ட வாழ்வில் செல்லும்
1.பல வழிப் பாதைகளில் இடம் சேரும் மனிதன்
2.வாழையடி வாழையாக வாழ்க்கை தன் நிலையே தனக்கு இத்தகையது தான்
3.தன் வாழ்க்கையில் வரும் துன்பங்களும்… உடல் நலக் குறைபாடுகளும்… மூப்பும் சாக்காடும் (இறப்பு) கண்டு சிந்திக்கத் தொடங்கினால்
4.தன் நிலை உணர்ந்து… பிறவித் துன்பம் நீக்கவும்.. தன் செயலில் தனக்குகந்த எண்ணப் புதிர்களை விடுவிக்கவும்…!
5.தன்னைப் பேரானந்தப்படுத்த ஓர் போதினியைத் (குரு) தேடத் தொடங்கினால்
6.அவனுடைய உண்மையான மனம் அதுவாக இருந்து அத்தகைய தேடுதலும் சிந்தித்தலும் சித்தித்தால்
7.இவன் தேடும் குருவும் இவனைத் தேடித் தானே வந்தடைகின்றார்… அல்லது இவன் வழியில் காத்துக் கொண்டிருக்கின்றார்…!
8குருவின் அருட் பார்வையில் நனைகின்றான். நனைந்த பின் பிறவித் துன்பம் களையப்படுவதாக உணர்கின்றான்.

உலகோதய வாழ்க்கையிலும் தனக்கு ஒரு பாதை கிடைத்துவிட்ட எண்ணமும் அந்த எண்ணத்தின் வலுக் கொண்டு தனக்குப் போதிக்கும் குருவின் வழியைக் கடைப்பிடித்து நடக்கத் தன்னையே அந்தப் போதனைக்கு உட்படுத்தி
1.குறைவிலும் நிறை கண்டு
2.தன் ஞானச் செயலுக்கு வித்திட்டுக் கொள்கின்றான்.

இந்த வழித் தொடரில் குருவை அடையும் சிஷ்யர்கள் “அதிக அளவில் பெருகி…!” குருவை நெருங்கித் தனக்கு வேண்டிய தேவைகளுக்காகவும் தனக்கு ஏற்படும் சிக்கல்ளுக்கு மாற்று வழியைக் கண்டு உண்மையை உணர வேண்டும் என்றும் அந்த ஆர்வத் துடிப்பைக் காட்டுவதும் உண்டு.
1.ஆனால் வருகின்றவன் உலகோதய ஆசைக்கெல்லாம்… குரு சென்றால்
2.குருவின் செயலுக்கே களங்கம் அன்றோ..!

அந்த மெய் குருவோ அந்தச் செயலைக் கண்டித்துரைத்து இவன் அதி ஆசையை வேரறுக்கத் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுக்க பல கலைகளும் பயிற்றுவித்து அதிலே மயக்குறும் சிஷ்யர்களை விலக்குகின்றார்.

தனக்குகந்த சீடர்களைத் தயார்படுத்த சீடனுக்கும் சக்திகள் அனைத்தையும் ஊட்டி வாழ்க்கையின் வழியில் வரும் மோதல்களிலிருந்து தன் நிலை மாற்ற மனப் பக்குவத்தையும் ஏற்படுத்துகின்றார்.

அந்தப் பக்குவத்தை முயற்சி செய்து பெறுவதற்காகத் தியானம் என்ற நற்பாதைகளைக் காட்டி அதன் வழியில் தெளிவு நிலை பெறுவதற்காகச் “சீடர்களைச் சோதனைக்கும் ஆட்படுத்துவதுண்டு…!”

தன்னிடம் குருகுல வாசம் செய்ய வரும் சீடர்களுக்கும் போதனையுடன் தன் செயலை நிறுத்திக் கொள்வதுமில்லை. “தனக்கு மேல்…!” சிஷ்யன் சக்தி பெறச் செய்யும் செயலுக்கும் மருத்துவம் மனோதத்துவம் மனோவசியம் வீரக்கலைகளுக்கும் போதனைப்படுத்தி அந்த ஒவ்வொரு சீடரின் செயலையும் கண்காணித்து அவரவர் வழித் தொடர்புக்கும் வளர்ச்சிக்கும் செயல்களை நிகழ்த்தி அந்த வழியின் ஊக்கத்தையும் மேன்மைப்படுத்துவார் அந்தக் குரு.

அனைத்திலும் சூட்சமம் கொண்டே அன்றைய சித்தர்கள் புவியியல் உயிரியல் வானியல் என்ற செயலுக்கும் செயற்பட அந்தக் கலைகளையே மூலதனமாகப் புகட்டி ஆரம்ப வழி வகைகளை ஆராயப் புகத் தனது சீடர்களைத் தயார்படுத்தினார்கள்

“காரணம் உண்மையான சீடர்கள் கிடைக்க மாட்டார்கள்…!

குரு எனப்படுபவர் ஆயிரம் ஆயிரம் உருவாகலாம். நாற்பத்தி எட்டாயிரம் மகரிஷிகள் என்று கூறும் பொழுதே ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் என எண்ணிலடங்கா தொகையில் தொடர்ந்தாலும் “ஆரம்பச் சித்து நிலை பெற வரும் சீடர்கள்… மிகவும் குறைவே…!”

உண்மையான சீடர்களைக் காண்பது “அரிதிலும் அரிது…!” என்ற உண்மையின் சூட்சமம் அன்று கண்டு கொண்ட அன்றையச் சித்தர்களும்
1.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவ முறைகளினாலும் அதை உணர்ந்தே
2.தனக்கு உண்மையான சீடரைத் தேர்ந்தெடுக்கப் பல செயல் முறைகளைச் செய்வித்தனர்.

மருத்துவம் படிப்போர் அரைகுறை வைத்திய ஞானம் பெற்று விட்டால் “தன் வாழ்விற்கு வழி ஏற்பட்டு விட்டது…!” என்ற உலகோதய ஆசைக்குத் தங்களை உட்படுத்தி அதன் வழி ஓடி விடும் சீடர்களூம் உண்டு.

அடுத்துப் படிக்கும் மனோதத்துவ சாஸ்திர கலைகளில் நாட்டம் கொண்ட சீடனும் சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிடுவார். அடுத்துப் பெறும் யாக நிலைகளில் மாந்திரீக ஏவல் செயலுக்கு நாட்டம் கொள்வோர் அந்த வழிதனின் ஏகிவிடுவர்.

இதில் எல்லாம் தெளிந்து
1.நாம் குருவிடம் அறிந்து கொள்ள வந்தது இது அல்ல….!
2.உலகோதய ஆசை நிலைப்படுத்தும் நிலைகள் தான் அவைகள் என்று உணர்ந்து
3.”உண்மைப் பொருளை நாடும் உண்மையான சீடர்கள் தான்…!” நிலையாகத் தங்கிச் செயல் கொள்வர்.
4.அவர்களே உண்மை ஞானம் உணரும் குருவிற்கு ஏற்ற உண்மையுள்ள சீடர்கள்.

அவர்களைத் தேர்ந்தெடுக்க குருவிற்கும் ஒரு சூட்சமம் உள்ளது…!

தன் நிலைக்குத் தன் சீடனை உயர்த்திவிடும் குருவிற்கு ஏற்படும் சில குறை நிலைகளை அந்தச் சீடர்களால் ஏற்படும் சில சக்தி குறைவுகளிலிருந்து குரு மீண்டெழ அந்தச் சீடர்களால் குரு பாதுகாக்கப்படுகின்றார்.

1.தனக்குச் சக்தி வேண்டியே…! தன் வழித் தோன்றல்களாகிய சிஷ்யர்களைக் குரு தேர்ந்தெடுக்கின்றார்.
2.தன் நிலையைத் தான் உயர்த்திக் கொள்ளவே “குருவைத் தேடி அலைகிறான் சீடனுமே…!”
2.அப்படிப்பட்ட ஆத்மார்த்த குருவும் உண்மைச் சீடனும் என்றுமே மாசுபடப் போவதில்லை.

அத்தகைய சீடர்களுக்குக் குரு போதிக்கும் போதனைகளைத் தங்களை உணர வேண்டிதற்காகக் குரு அளிக்கும் சந்தர்ப்பங்களில்
1.வெறும் சங்கட அலைகளைச் சிஷ்யர்கள் மனதில் பதிய வைத்துக் கொண்டால்
2.அதுவே மரமாக மீண்டும் வெட்டப்பட வேண்டிய செயலுக்குக் கொண்டு போய்விட்டுவிடும்.

சீடர்களைப் பாதுகாப்பது குருவின் தலையாயக் கடமையாகிவிடுகின்றது. வாழ்க்கைச் சூழலில் சங்கட அலைகளில் அறியாமல் அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… அறிந்தே அகப்பட்டுக் கொள்ளும் குருவையும்… காப்பது “உண்மையான சீடர்களின் பொறுப்பும் ஆகிவிடுகின்றது…!”

உண்மை உணரும் ஞானச் சீடர்களும் குரு காட்டிய வழியில் தன் சக்திகளை வலுக் கூட்டிக் கொள்ளத் தான் எண்ணி எடுக்கும் தியானத்தின் மூலம் ஒளி நிலையைக் கண்டாலும்
1.நாம் தேடிக் கொண்டிருப்பது இது அல்ல…!
2.இதற்கும் அடுத்த உயரிய நிலை எது…? என்று கண்ட காட்சிகளை எல்லாம் அறிந்துணர்ந்து
3.பின் விலக்கி விலக்கி… எந்த உண்மை ஜோதி தத்துவத்தில் மூழ்க நினைத்தானோ
4.தன் நல்லாக்கத்திற்குப் பயன்படும்படியாக ஊக்கம் கொண்டு மேலும் செயல்படச் செயல்பட
5.எந்த ஜோதித் தத்துவத்தை நாடிக் கலக்க மனம் கொண்டனோ அதையே ஈர்த்து ஈர்த்துத்
6.தன் ஈர்ப்பினால் தானே ஜோதியாகி அந்த ஜோதி தத்துவத்தில் கலந்து விடுகின்றான்.

ஆகவே குரு சிஷ்ய மனோபாவனை என்பது மிகவும் உயரியது. அதை வெறும் உலகோதய ஆசை நிலைகளுக்கு யாரும் அடகு வைத்துவிடக் கூடாது.
1.குருவும் உணர வேண்டும்.
2.அதே நேரத்தில் சீடர்களும் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

எனக்குத் தொல்லைகள் கொடுத்தாலும் தவறாகச் சொன்னாலும் அதை நான் எடுத்துக் கொள்வதில்லை…!

Atma Sakthi

எனக்குத் தொல்லைகள் கொடுத்தாலும் தவறாகச் சொன்னாலும் அதை நான் எடுத்துக் கொள்வதில்லை…!

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மிடம் சொன்னது:-
நீ மனிதனான பின் முழு முதல் கடவுளாகின்றாய். நான் போதித்தபடி உனக்குள் அருள் ஞானத்தை உருவாக்குகின்றாய். ஆகவே அனைவருக்குள்ளும் அருள் ஞானத்தை உருவாக்கும் உயர்ந்த பண்பைப் பெறு.
1.இந்த உலகம் உனக்குச் சொந்தமல்ல.
2.இந்த உடலான உலகமும் உனக்குச் சொந்தமல்ல.
3.அருள் ஞான உணர்வையே உனக்குச் சொந்தமாக்கு.
4,அந்த அருள் ஒளியின் உணர்வையே உனக்குச் சொந்தமாக்க முற்படு.
5.”அனைவரும் அதைப் பெற வேண்டும்…! என்று எண்ணினால் தான் நீ இதைப் பெறுகின்றாய்…!

நான் எல்லாவற்றையும் பெற்றுவிட்டேன் என்று அகம் கொண்டால் அந்த உணர்வின் விஷம் உனக்குள் புகுந்து விடும். உன்னையே அது அழித்து விடும். அப்பொழுது நீ போவது எங்கே…? இருளுக்குள் தான் நீ புக முடியுமே தவிர ஒளிக்குள் நீ வர முடியாது.

இத்தனை விவரங்களையும் சொன்ன பிற்பாடு அப்புறம் நான் (ஞானகுரு) என்ன செய்வேன்…? தவறு செய்யும் எண்ணம் எனக்கு வருமா…! எப்படி வரும்..?
1.எனக்குப் பல பேர் தொல்லையைச் செய்தாலும் நான் அதைப் பற்றி நினைப்பதே இல்லை
2.தொல்லை செய்தார்கள்… என்று நினைத்தால் தானே…! தொல்லை.

ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய சாமியார்கள் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதம் தவறு செய்தே வாழுகின்றார்கள். ஆண்டவனை கைக்குள் வைத்துக் கொள்வது. மக்களை ஏமாற்றப் பழகுவது. ஏனென்றால் அவனுடைய உணர்வு அது.

அவன் எங்கே போகிறான்…? என்று அவனுக்கே தெரியாது. அந்த உணர்வை வைத்துக் கொண்டு எம்மை உற்றுப் பார்க்கும் போது மற்றவர்கள் என்னையும் தவறாகத் தான் எண்ணுவார்கள்.

அப்பொழுது என்னைப் பார்க்கும் பொழுது “அவர்களுக்குத் தெளிவான உணர்வு வர வேண்டும்…!” என்று தான் நான் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறேனே தவிர யாரையும் குற்றவாளியாக ஆக்குவதற்கு இல்லை…!

குற்றம் புரிந்த உணர்வு அங்கே இருக்கிறது. குற்றத்தின் உணர்வு கொண்டு பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை இங்கே என்ன செய்கிறது…? கீதையிலே சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

1.அந்த அருள் ஒளியை பெறுகிறோம்
2.எல்லோரும் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அது நம்மை ஒளியாக மாற்றும்.
இல்லை தவறு செய்தான் தவறு செய்தான் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால்
1.நான் எதைச் செய்தாலும் “என்னை ஏமாற்றுகிறான்… ஏமாற்றுகிறான்…!” என்று தான் அந்தச் சொல் வரும்.
2.ஆனால் அது அவன் குற்றம் அல்ல.
3,அதற்காக வேண்டித் தவறு செய்கிறான் என்ற நிலையில்
4.என்னிடம் இருக்கும் கடுமையான ஆயுதத்தை வைத்து அவனை வீழ்த்த எண்ணினால் அந்த உடலைத்தான் வீழ்த்த முடியும்.
5.ஆனால் இந்த உணர்வின் தன்மை கடும் விஷத் தன்மையாக எனக்குள் வளர்ந்து விடும்.

என்னிடம் சக்தி இருக்கின்றது என்ற நிலையில் மற்றவர்கள் தப்பாகப் பேசுவதைக் கேட்டு “ரோசப்பட்டு…!” அவர்களை உருட்டினால் உருட்டி விட்டுப் போகலாம். அப்படிச் செய்தால் இங்கே என்னுடைய வளர்ச்சியே போய்விடும்.

இந்த உடலில் நாம் எத்தனை நாள் இருக்கிறோம்? இந்தப் புகழ் எத்தனை நாளைக்கு இருக்கும்…?

மற்றவர்களை வீழ்த்திடும் உணர்வு வரப்போகும் மற்றவர்கள் என்னைப் போற்றுவார்கள். ஆஹா…! இவர் பெரிய சாமியார்…! என்று பயப்படுவார்கள். ஆனால் எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் எல்லாமே அஞ்சி ஒடுங்கி விடுமே…!

இத்தகைய உணர்வின் தன்மை வந்தால் நான் எங்கே போவேன்..?

1.ஆகையினால் என்னை ஒருவர் போற்றுவதற்காக நான் வரவில்லை.
2.மற்றவர்கள் என்னைப் போற்ற வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய வில்லை.
3,உங்கள் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து உங்கள் உணர்வின் தன்மை ஒளியாக வேண்டும் என்று
4.அந்த அருள் ஒளியைப் பெறச் செய்வது தான் “என்னுடைய வேலை…!”

நீங்களும் அதே உணர்வு கொண்டு மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்ற் எண்ணி எடுத்துக் கொண்டால் இருளை அகற்றலாம். ஒளியாக மாறலாம்.

ஆகவே நாம் பார்க்கும் எல்லோரும் அந்த அருள் ஞானத்தைப் பெற வேண்டும் என்ற இந்தப் பக்குவத்திற்கு வாருங்கள்.

ஸ்தல வரலாறுகளின் (புராணங்களின்) உண்மை நிலைகள்

agastya-temple-siddhantha

ஸ்தல வரலாறுகளின் (புராணங்களின்) உண்மை நிலைகள்

 

அன்றைக்கு அரசர்கள் செய்த முறைப்படி மீனாட்சி என்று மீன் கொடியை வைத்து ஆட்சி செய்து மீனாட்சி என்று காட்டுகின்றார்கள். தனது வலிமை கொண்டு மற்ற ஆட்சிகளை அடக்க முடியும் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

மீன் என்ன செய்கிறது…? ஒன்றை ஒன்று விழுங்குகிறது. அது விழுங்கும் சக்தி பெற்றது. மற்ற அரசனை வீழ்த்தும் நிலை அது. அதற்காக மீனாட்சி என்று அன்றைய அரசர்கள் காரணப் பெயரை வைத்தனர்.

அன்று ஆண்ட அரசன் அதற்கு வேண்டிய சாஸ்திரத்தை எடுத்து மக்களுக்குக் காட்டி அதை எடுத்து கடவுளாக வளர்த்தார்கள். அரசர்கள் சொன்ன நிலைகள் தான் இது.

அதே போல் ஆண்டாள் என்று இங்கே வைத்திருக்கின்றார்கள். நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் தான் நம்மை ஆளுகின்றது. அன்றைய அரசன் காரணப் பெயரை வைத்து அந்த உணர்விற்கெல்லாம் ஸ்தல புராணங்களை வடிக்கின்றான்.

அதை யாரும் சிந்தித்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை. அரசர் வகுத்த வழியில் தான் நாம் இன்றும் செல்கின்றோம். அரசன் ஆடம்பர நிலைகள் கொண்டு சுகபோகத்திலேயே வாழ்நதான்.

அவன் காட்டிய சாஸ்திரங்களை சாதாரண மக்கள் கடைப்பிடிக்கத் தவறினால் மரண தண்டனை கொடுக்கின்றான்… கழுவேற்றச் செய்கின்றான்…!

ஒரு அரசன் அடுத்த அரசனுடன் உறவு கொண்டால் ஐந்தாம் படை என்று அவனைத் தீர்த்துக் கட்டுகின்றான். அவனுக்குக் கீழ் செல்பரையும் அழித்து விடுகிறான்.

நம் தெய்வத்தைக் காட்டிக் கொடுக்கும் நிலைகளுக்குச் செல்கின்றான் என்றும் அதனால் தெய்வத்தின் சாட்சியாக அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்லி அதை நிறைவேற்றுகின்றான். இது அரசன் செய்த தெய்வ குணம்.

ஒவ்வொரு அரசனையும் புகழ் பாடிய கவிஞர்கள் தான் பல உண்டு. எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும்
1.ஸ்தல புராணங்களைப் பாடும் போது
2.இந்த ஸ்தலம் தான் எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று அப்படித்தான் பாடியிருப்பார்கள்.

இந்த பாடலில் கூறியபடி உயர்ந்த ஸ்தலம் என்ற எண்ணத்தில் அரசனின் ஆசையின் நிலைகளைத் தான் இன்றைக்கு நாம் வளர்க்க முடிகிறது.
1.அரசர் வழியில் தான் நாம் செல்கின்றோமே தவிர
2.மெய் ஞானிகள் சொல்ல வழியினை நாம் கடைபிடிக்கும் முறையே அற்றுப் போய் விட்டது.

மகரிஷிகள் சொன்ன உணர்வை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மனித குலத்தைப் புனிதப்படுத்தும் நிலைகள் கொண்டது. மக்கள் அனைவரையும் ஒன்றி வாழச் செய்யும் ஞானக் கருவூலங்கள் தான் நம்முடைய ஆலயங்கள்.

1.உயிரே கடவுள்
2.நாம் எண்ணும் எண்ணமே உள் நின்று இயக்கும் கடவுளாகின்றது.
3.நாம் எண்ணும் உணர்வுகளே உடலாகச் சிவமாகின்றது.
4.நாம் எண்ணிய உணர்வே வித்தாக ஊழ்வினையாக விநாயகர் என்று பதிவாகிறது.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்படுதல் வேண்டும், விநாயகருக்கு அங்குசத்தைக் கையில் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக மனிதனாக உருவான பின் அந்தக் கடும் அங்குசத்தை வைத்துத் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்ற இந்த நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நம்முடைய தத்துவங்கள் சாதாரணமானதல்ல. அதை உணர்த்தும் ஆலயங்களும் சாதாரணமானதல்ல.

1.“சாமியிடம் சக்தி இருக்கின்றது…!” என்ற இந்த நம்பிக்கையைத் தான் ஊட்டியுள்ளார்கள்.
2.எண்ணத்தால் அதை நமக்குள் எடுத்தால் “நம் உயிர்…” அந்தச் சக்திகளைக் கொடுக்கின்றது என்ற நிலையை நாம் மறந்து விட்டோம்.

கோவிலுக்குச் சென்றால் நமக்குள் அந்த உயர்ந்த தெய்வீகக் குணத்தை எடுத்து நம்மைச் சார்ந்தோருக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். அது தான் உண்மையான பக்தி.

கலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…? அதனின் பலன்கள் என்ன…?

Kalasa pooja

கலசம் வைத்து வீட்டில் எப்படிப் பூஜிப்பது…? அதனின் பலன்கள் என்ன…?

கலசம் வைக்கும் முறை:-
ஒரு பித்தளைத் தகட்டில் அந்தத் தட்டிற்குத் தகுந்தாற்போல் பச்சரிசியை நிரப்பி “ஓம்” என்று எழுதவும்.

பிறகு அந்தப் பித்தளைத் தட்டில் வைக்கும்படியாக ஒரு சொம்பை எடுத்துக் கொள்ளவும். அதைத் தட்டின் மீது வைக்கவும். அதிலே பாதி அளவு நீரை நிரப்பவும்.

சொம்பின் மீது ஐந்து மாவிலைகளை நீரிலே படாதவண்ணம் வைக்கவேண்டும். அதன் மீது ஒரு தேங்காயை வைக்க வேண்டும்.

தேங்காயை வைப்பதற்கு முன் அதைச் சுத்தமாகக் கழுவி மஞ்சள் தடவி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

பிறகு தேங்காயைச் சொம்பின் மீது வைக்கும் பொழுது ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் நாணயத்தை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த நீருக்குள் போட வேண்டும்.

தேங்காயையும் நீரில் படாதவாறு வைக்க வேண்டும். பின் சொம்பின் கழுத்தில் ஒரு மஞ்சள் துண்டை நூலை வைத்துக் கட்டவும். தேங்காயின் மீது மலரைச் சாத்தவும்.

இவ்வாறு கலசம் வைத்த பின் அதற்கு முன் ஒரு சிறிய டம்ளரில் நீரும் ஒரு டம்ளரில் பச்சைப் பாலும் வைக்கவும்.

பிறகு தியானத்திற்கு எல்லோரையும் அழைத்து வந்து கலசத்திற்கு முன் அமரச் செய்து தியானிக்க வேண்டும்.

தியானிக்க வேண்டிய முறை:-
ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று எல்லோரும் சேர்ந்து சொல்லித் தியானத்தை ஆரம்பிக்கவும். ஓம் ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரை எண்ணி வணங்க வேண்டும்.

கீழே உள்ளதை ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஏங்கித் தியானிக்க வேண்டும். ஒரு அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை தியானிக்கலாம்.

1.எங்கள் தாய் தந்தை தெய்வ சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா
2.எங்கள் தாய் தந்தையருக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா
3.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
4.எங்கள் குருவின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
5.எந்த எண்ணத்தை எண்ணிக் கலசம் வைத்துள்ளோமோ அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்துடன் கலசத்தை உற்று நோக்கி எண்ணத்தைச் செலுத்தவும்.
6.கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி பூமியின் வடதுருவப் பகுதியில் இருக்கும் துருவ நட்சத்திரத்தின் பால் ஒன்றி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
7.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களை மூடி உடலுக்குள் செலுத்திச் சிறிது நேரம் தியானியுங்கள்.
8.பின் கண்களைத் திறந்து கலசத்தைப் பார்த்து மலரின் மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் தெய்வ குணமும் இந்தக் கலசத்திலே படர்ந்து இந்த வீட்டில் உள்ள அனைத்து உயிராத்மாக்களுக்கும் அந்தச் சக்தி கிடைத்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு ஐந்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

பின் ஓ..ம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லித் தியானத்தை நிறைவு செய்யுங்கள். கற்பூர தீபம் காட்டிவிட்டு கலசத்தின் முன் வைத்திருந்த நீரையும் பாலையும் எல்லோருக்கும் கொடுங்கள்.

வீட்டில் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கும் பொழுது அந்தக் குழந்தைகளைத் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்யச் சொல்லி
1.எங்கள் தாய் தந்தையர் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.எங்கள் தாய் தந்தையரின் அருளாசி நாங்கள் பெறவேண்டும்
3.கல்வியில் சிறந்த ஞானமும் உலக ஞானமும் நாங்கள் பெறவேண்டும்
4.நாங்கள் உடல் நலம் பெற்று நற்பெயர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற எண்ணத்தில் தாய் தந்தையரைப் பாத நமஸ்காரம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் பாத நமஸ்காரம் செய்யும் பொழுது தாய் தந்தையரும்
1.எங்கள் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுக் கல்வியில் சிறந்து நற் பெயர் பெறவேண்டும் ஈஸ்வரா
2.எங்கள் குழந்தை உடல் முழுவதும் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து மலரின் மணமும் தெய்வ குணமும் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி உலகம் போற்றும் உத்தமர்களாக வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஆசி கொடுக்க வேண்டும்.

கலசத்தினால் ஏற்படும் பலன்கள்:-
கலசத்தை வைத்து இவ்வாறு தியானிப்பதால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியம் பெறுவார்கள். குடும்பத்தில் மன அமைதி கிடைக்கும்.

வீட்டிற்கு வரும் மற்றவர்களுக்கும் மலரின் நறுமணமும் தெய்வ குணமும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியும் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் நல்ல சக்திகளும் மன அமைதியும் கிடைக்கும்.

தினசரி கலசத்திற்கு முன் அமர்ந்து எல்லோரும் தியானிக்க வேண்டும். அதிகாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது தியானிக்க வேண்டும்.

48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்த பின் கலசத்தில் உள்ள நீரை மாற்ற வேண்டும். கலச நீர் நல்ல மணமாக இருந்தால் அதை வீட்டில் உள்ள எல்லோருக்கும் குடிக்கக் கொடுக்கலாம். மீதி நீரை வீட்டைச் சுற்றித் தெளிக்க வேண்டும். தீமையான அலைகள் நம் வீட்டிலே அணுகாது.

கலசத்தில் மீண்டும் நீரை ஊற்றி அதே தேங்காயை வைக்கவும். மாவிலைகளை மாற்றவும். இப்படி ஒவ்வொரு 48 நாள்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

ஒரு ஆறு மண்டலம் வலிமையாகச் செய்தால் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் அபரிதமாகப் பெருகும். அந்த ஒளியான அணுக்கள் உங்கள் உடலிலே பெருகியதைக் கண்ணிலேயும் பார்க்கலாம்.

 

ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துகளை யாம் எப்படி ஈர்த்துச் சொல்கிறோம்…?

Gnanaguru upadesam

ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துகளை யாம் எப்படி ஈர்த்துச் சொல்கிறோம்…?

 

ஞானிகள் உணர்வைப் பெறவேண்டும் என்று எங்கெங்கு எங்கெங்கு ஏங்குகின்றனரோ அந்த ஏக்கத்தின் உணர்வை அவர்கள் வெளிப்படுத்தும் பொழுது தான் என்னால் உபதேசமே கொடுக்க முடியும். நானாகப் (ஞானகுரு) பேச முடியாது.

ஏக்கத்தின் உணர்வின் தொடர்பு வரப்படும் போது அந்த உணர்விற்கொப்பத்தான் பேசும். ஞானிகளின் உணர்வுகளை நானாக எடுத்துச் சொல்வது என்றால்
1.நட்சத்திரத்திற்கு நட்சத்திரம் மோதும் போது
2.மின்னலாகி ஒளிக் கற்றைகளாக மாறி அந்த அலைகள் எப்படிப் படர்கின்றதோ
3.அதைப்போலத் தான் இங்கே ஏங்கி உள்ளோர் உணர்வுகளை நுகர்ந்து தான் நான் பேசுகின்றேன்.

தீமைகள் எப்படி இயக்குகிறது…? என்று இந்த உணர்வின் தன்மையைப் பாய்ச்சி தீமையைப் பிளக்கும் மெய் ஞானிகளின் உணர்வினை உங்களை நுகரச் செய்து கொண்டிருக்கின்றோம்.

மெய் ஞானிகள் தங்களுக்குள் விளைய வைத்த விண்ணின் ஆற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் ஞான வித்தாகப் பதிவு செய்து அதை உங்களுக்குள் உருவாக்கச் செய்து அறியாது வரும் தீமைகளையும் பகைமைகளையும் அகற்றி கல்யாணராமனாக நீங்கள் ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்ற ஆசையில் தான் இந்த உபதேசமே செய்கின்றோம்.

ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால் தான் எனக்கு மகிழ்ச்சி. சொல்வதைக் கேட்டு விட்டு அப்படியே விட்டு விட்டு போனீர்கள் என்றால்
1.சாமி சொல்கிறார்… பார்க்கலாம்…!
2.சாமி எனக்கு வேறு என்ன செய்தார் என்று எண்ணாதீர்கள்.

இன்னும் இதைவிட என்ன உதவி செய்ய வேண்டும்…? மெய் ஞானிகள் கண்டுணர்ந்த மெய் ஞானத்தை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
2.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று உங்கள் உயிரை எண்ணி சதா தியானம் இருக்கிறோம்.

அந்த உணர்வை நுகரும் பருவம் நீங்கள் இழந்து விட்டால்…! நல்ல சாப்பாடு ஆக்கி வைத்து விட்டு அதை உட்கொள்ளவில்லை என்றால் என்ன ஆகும்…?

விவசாயப் பண்ணைகளில் நல்ல வித்தைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுத்ததை மண்ணிலே விதைக்காமல் வெளியிலே இறைத்து விட்டால் என்ன செய்யும்…?
1.எறும்போ மற்ற பூச்சிகளோ பறவைகளோ எடுத்துத் தின்று விட்டுப் போகும்… முளைக்காது…!
2.அப்படியே முளைத்துப் பயிர் வந்தாலும் தகுந்த பருவத்தில் நீரோ உரமோ ஒன்றும் கொடுக்கவில்லை என்றால் மொத்தமாக அழித்து விடுகின்றோம்.

ஆகவே யாம் பதிவு செய்யும் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வைக் கூட்டினால் தான் உங்கள் வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும்.

அருள் ஞானத்தின் வழியில் வாழ முடியும். இருளை அகற்றிப் பேரொளியாக மாற்றும் ஆற்றலைப் பெற முடியும். பிறவியில்லா நிலையை அடைய முடியும். அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

இது உங்கள் கையில் தான் இருக்கிறது…!

சரீரத்தையே மிதக்கச் செய்யும் “வாயு ஸ்தம்பம்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Floating soul

சரீரத்தையே மிதக்கச் செய்யும் “வாயு ஸ்தம்பம்…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதன் (ஞானி) தன் அறிவின் ஞானம் கொண்டு ஞானப் பாதையின் வளர்ச்சியில் உயர் ஞான எண்ணச் செயல்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால் அவன் கடைப்பிடிக்க வேண்டிய “சத்தியத்தின் சக்தி” என்பது எதுவப்பா…?

உயர் ஞானத் தத்துவப்படிச் செயல்படும் அனைத்திலுமே எண்ணம் சொல் செயல் செயலில் ஒரே நேர்கோடாகச் சத்தியத்தின் செயலாகப் பரிணமிக்க ஞானி தன் ஆக்கத்தின் ஆக்கமாகிய ஊக்கத்தில் செயல்படும் பொழுது சிவத்தைப் பெறுகின்றான். அந்தச் சிவம் என்பதே அன்பு தான்.

சத்தியத்தையும் சிவத்தையும் (அன்பையும்) கடைப்பிடிக்கும் செயலில் தன் உயிர் ஆன்ம ஜோதியை வளர்த்துக் கொள்ளும் மனப் பக்குவம் கொண்டிட்டால் அத்தகைய அழகு தான் சுந்தரம் என்பது.

சத்தியம் சிவம் சுந்தரம் பெறுதல் என்பதெல்லாம் தான் கடைப்பிடித்து வரும் வழியில் உயர்விற்கு வழி காட்டிடும் மார்க்கம் இது தான் என எண்ணத் தெளிவு கொண்டிடல் வேண்டும்.

உயிரான்ம தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான் “உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிதல் வேண்டும்.

உயிரான்மத் தத்துவத்தில் சரீரத்துடன் ஒட்டித் தன்னுள் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் பரிணாமம் தான்
1.“உயிர் சக்தியின் சக்தி ஓட்ட முறை…” என்பதை அறிந்து
2.உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் மேலிருந்து கீழுமாக கீழிருந்து மேலுமாக
3.ஒரே சீரான ஒளி வட்ட அணுவின் சிவ பிம்பமாகச் சரீரத்தின் சுற்று வட்டக் குறுக்கோட்டத்தில் செயல்படும் மெய் ஒலி நாதத் தொடர்பில்
4.உள்ளிருந்து காந்த அமிலம் சக்தியாகச் சுழன்றிடும் ஓட்டச் செயல் உயிர் ஆன்ம ஒளி சக்தி – சுற்றி ஓடும் அந்த ஒளிக் காந்தத்தின் தொடரை அறிந்து
5.தன்னுடைய ஈர்ப்பின் வலுவால் எண்ணத்தின் வீரியம் கொண்டு புவி ஈர்ப்பை விடுத்து
6.காற்றில் எழும் சக்தியின் தொடர் கொண்டு இந்தச் சரீரத்தையே மிதக்க வைக்கும் தன்மை தான் “வாயு ஸ்தம்பம்…!”

சித்தர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த நிலையில் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விடுத்துச் சூட்சமம் கொண்டு விண்ணுக்குச் செல்லும் செயல் முறைக்குக் ககனமணி உள்ளதப்பா…!

இந்தச் செயல் முறையில் வானத்தில் ஒரு மண்டலமாக தனித் தன்மை வாய்ந்த… பிரகாசமான சக்தி கொண்டு… ஒளி பெற்று ஈர்த்து வளர்த்து சுழன்று ஓடி… “ஆதி சக்தியின் சக்தியாகச் செயல் கொண்டிடலாம்…!”

அலை வீசாத கடல் என்ற பால் வெளி மண்டல சூட்சமத்தில் வாழையடி வாழை என உயிரினங்களை வளர்க்கச் செயும் பூமிகள் உருவாகி அவை தன் ஈர்ப்பின் செயலுக்கு ஞானச் செல்வங்களை (மனிதர்களை) வளர்ச்சிப்படுத்துகின்றது.

தன்னையும் வளர்த்துக் கொண்டு உயர் ஞான ஆன்மாக்களை வளர்ச்சியுறச் செய்வதன் தொடர் நிலை எல்லாம் மூலத்தின் மூலத்தில் கலப்பதற்கே ஆகும்.

உடலில் உள்ள ஒளி காந்த சக்தியின் ஈர்ப்பின் வலுவால் விண் கோள்கள் விண்மீன்கள் அனைத்தையும் நேரடியாகத் தொடர்பு கொண்டு ஒலி கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி ஈர்த்திடும் அந்தச் செயல் முறைக்கும் சூட்சமம் உள்ளது.

1.சரீரம் ஈர்த்துச் சமைத்து வெளித் தள்ளும் சுழல் ஓட்ட வட்டச் செயலில்
2.தன் சரீரத்தைச் சுற்றிலும் ஒரு கவசமாக வீரிய காந்த வலுவை உள் நிறைத்து
3.வெளியிலிருந்து வரும் காற்று நம் சுவாசத்திற்குள் வந்து
4.அத்தகைய எண்ண அலைகள் தன் சரீரத்தின் ஈர்ப்பில் மோதிடாது ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி
5.வெற்றிடமாம் பூதியை (ஆவியாக) உருவாக்கிடும் செயலில் நம் உடலையே அது மிதக்கச் செய்திடுமப்பா.

உடலில் உள்ள கோடானு கோடி அணுக்களின் செயல் தன்மையால் பூமியின் ஈர்ப்பின் தொடர்புடன் இருக்கும் நிலையையே புவி ஈர்ப்பிலிருந்து விடுபட்டு மிதக்கும் தன்மையாக்க வான இயலின் சூட்சமப் பாடம் உள்ளது.

விண்ணிலே விஞ்ஞானத்தின் செயலில் சுற்றி வரும் மனிதன் தன் உடலைப் பாதுகாத்திட தனக்கென்று ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திச் செல்கிறான் அல்லவா…! அந்தப் பாதுகாப்பு இல்லாமல் அங்கே இருக்க முடியுமா…?

அதே போல் கடலுக்குள் ஆழப்பகுதியில் செல்லும் மனிதன் தக்க பாதுகாப்புக் கவசத்தின் உதவி இல்லாமல் சென்றால் என்ன நடக்குமப்பா..?

நீரின் மேல் உள்ள காற்றழுத்தமும் நீரின் உள் அழுத்தக் கன பரிமாணமும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் இவன் உடலிலே மோதிவிட்டால் சரீரமே வெடித்துச் சிதறிவிடுமப்பா..! எவ்வளவு பாதுகாப்பு…? என்று பார்த்தாயா…!

அதைப் போன்று தான் வாயு ஸ்தம்பம் கொள்ளுதல் என்பது ஒரு பாதுகாப்புக் கவசமப்பா..! நம் உடலில் உள்ள உயிரணுக்களை ஒலி நாதம் கொண்டு தன் வசப்படுத்திடும் பக்குவ நிலைப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பெற்று விட்டால் நாம் செயல்படுத்தும் ஞானச் சித்துக்கள் தான் எத்தனை எத்தனை…? எல்லாவற்றையும் கடந்து ஒலியின் ஒளியாகப் பேரொளியாக மாறலாம்.

பீஷ்மர் கடைசியில் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதன் காரணம் என்ன..?

Bheesmar

பீஷ்மர் கடைசியில் அம்புப் படுக்கையில் படுத்திருப்பதன் காரணம் என்ன..? 

இராமன் வாலியை எப்படிக் கொல்கிறான்…? இராமன் வாலியை மறைந்து இருந்து தான் தாக்குகின்றான்.

ஒருவரைப் பார்த்த பின் அவர் வேகமான நிலைகளில் நம்மைத் தாக்கி விடுவார் என்ற உணர்வை நாம் எடுக்கின்றோம். அவனை உற்றுப் பார்த்தால் என்ன செய்கின்றது…?

அவர் கோபமான உணர்வுகளை நம்மிடம் சொல்லப்படும் போது அதை நாம் நுகர்ந்தவுடனே அந்த உணர்வு நம்மை வீழ்த்துகிறது.

அவன் எண்ணத்தை நுகர்ந்து பதிலுக்கு நாமும் கோபமாகச் சொல்வதை விடுத்து விட்டு
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
2.புருவ மத்தியில் வலுவாக எண்ணிச் சுவாசித்து விட்டு – அந்த மறைந்த நிலைகளில்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவனை அறியாது இயக்கும் இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வைத் திருப்பினால்
4.அவன் உணர்வை நாம் அடக்குகின்றோம்.

வாலி என்ற நிலைகளில் போர் முறைகள் செய்யும் போது அதனின் வலுவின் செயலாக்கங்களுக்கு நம்முடைய வலிமையை நாம் எப்படிச் செயல்படுத்த வேண்டும்…? என்று தான் வான்மீகி தெளிவாகக் காட்டுகின்றார்.

ஏனென்றால் கண்கள் கொண்டு அவர் கோபமாகப் பேசுவதை உற்று நோக்கிக் கூர்ந்து பதிவாக்கி விட்டால் அவன் உணர்வே நம்மை இயக்கும். அதை இயக்கவிடாது அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணித் தடுக்க வேண்டும்.

இருந்தாலும் இதைப் போன்ற உணர்வின் தன்மை நம்மை இயக்கும் நிலைகளைக் காட்டுவதற்குத்தான் மகாபாரதத்தில் அதே சமயத்திலே பீஷ்மரைக் காட்டியிருப்பார் வியாசகர்.

கடைசியில் பீஷ்மர் அம்புப் படுக்கையின் மீது தான் படுத்து இருப்பார்.
1.தான் செய்த பாவம் எல்லாம் தன் உடலில் எப்படி இருக்கிறது என்று உணர்த்தி
2.அதைத் தாம் அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்ற நிலையில்
3.மக்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியிருப்பார் வியாசகர்.

கொலையோ மற்ற இம்சைகளையோ செய்தாலும் இந்த உணர்வு நமக்குள் இருக்கத்தான் செய்கிறது. அதனின் செயலாக்கங்கள் எப்படி வரும்…? என்பதையும் அதை மாற்றும் வல்லமை எப்படிப் பெறவேண்டும் என்பதையும் குருநாதர் அன்றைக்கு எமக்குக் (ஞானகுரு) காட்டுகிறார்.

சரித்திரத்தைக் காட்டி நம் கண்களின் வேலை என்ன..? நம் எண்ணங்கள் எப்படி இயங்குகிறது…? நம் உயிர் எப்படி இயங்குகிறது…? என்று ஒவ்வொன்றையும் அனுபவபூர்வமாகக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

 

மெய்ப் பொருளைக் காண வியாசகர் காட்டும் மெய் வழி (மிகவும் முக்கியமானது)

third-eye-meditation

மெய்ப் பொருளைக் காண வியாசகர் காட்டும் மெய் வழி (மிகவும் முக்கியமானது)

 

ஒரு பொருளைக் காணாமல் போட்டால் என்ன செய்கிறோம்? எங்கே வைத்தேனோ..,? என்று தலையைச் சொறிகின்றோம்.

“எங்கே தான் வைத்தனோ..,?” என்று எண்ணினால் சங்கடம் தான் வரும்.

கீழே பார்த்தீர்கள் என்றால் இந்த உணர்வு ஆன்மாவில் இருக்கும். அதை நுகரப்படும்போது நமக்கு என்ன செய்கிறது? அப்பொழுது சங்கடம்தான் வருகிறது.

ஆனால் அதே சமயம், எங்கே வைத்தோம் என்று சிறிது நேரம் நம் சிந்தனையைச் செலுத்தினோம் என்றால்
1.இந்த ஆன்மாவை விட்டு அகன்று
2.புற நிலைகளில் நுகரும்.

இந்தச் சிந்தனையின் தன்மை வரப்படும்போது நாம் பொருளை வைத்த உணர்வின் தன்மை அங்கே படர்ந்திருக்கும்.

அந்த உணர்வை நாம் நுகர்வோம். அதை நுகரப்படும்போது பொருளை நாம் இந்த இடத்தில் வைத்தோம்…! என்று உணர்ச்சி கொண்டு அதை அறியலாம்.

ஆனால், பொருளை எங்கே வைத்தோம் என்று தெரியவில்லையே…! என்று சங்கடமாக எண்ணிணீர்கள் என்றால்
1.உங்களுக்குள் அந்த உணர்ச்சியே வராது.
2.உணர்வை அறியவே முடியாது.
3.தலையைச் சொறிந்து கொண்டே இருப்போம்.

அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துக் கேட்டால் “என்ன…? எதைத் தேடுகிறீர்கள்…?” என்பார்.

ஒரு பொருளை வைத்தேன், எங்கே வைத்தேன்…! என்றே இப்பொழுது தெரியவில்லை என்போம்.

அவரும் நம்மிடம் அங்கே வைத்தீர்கள் என்பார்?

நான் இங்கே தான் வைத்தேன்…! என்று வெறுப்பாகத் தான் சொல்ல முடியுமே தவிர தேடும் நிலையை ஞாபகப்படுத்தினாலும் “காணோம்…” என்ற உணர்வே இயக்கும், சிந்திக்கும் திறன் இருக்காது.

1.பொருளை எங்கே வைத்தீர்கள்..?
2.வைத்துவிட்டு எங்கிருந்து (எந்த வழியாக) வந்தீர்கள்…? என்று சிறிது யோசனை செய்து பாருங்கள் என்று சொன்னவுடன் அந்தச் சிந்தனை வரும்.

அங்கே படர்ந்த உணர்வலைகள்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வும்
2.கையிலிருந்து போன அந்த இரண்டு உணர்வும் கலந்து
3.சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கின்றது.

அப்பொழுது அந்த உணர்வு வரப்படும்போது அந்த எண்ணங்கள் வரும். ஓஹோ…! இந்த இடத்தில் தான் வைத்தேன்…! என்ற நினைவு வரும். பொருளை எடுத்து விட்டேன் என்று சொல்ல முடியும்.

இதைத்தான் வியாசகர் கண்ணனைக் காட்டி “அதோ வருகிறான்… நாரதன்…!” ரிஷியின் மகன் நாரதன், நாராயணனின் அபிமான புத்திரன்.

அவனிடம் கேட்டால் தீமைகளிலிருந்து விடுபடும் உபாயத்தை அவன் காட்டுவான் என்று கண்ணன் சொல்வதாகக் காவியப் படைப்புகளாக சாதாரண படிக்காத மக்களுக்கும் புரியும் விதமாக காட்டியுள்ளார்.

துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிவரும் உணர்வலைகளை சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி பரவச் செய்கிறது. அதைத்தான் ரிஷியின் மகனாக நாராயணனின் (நாராயணன் என்றால் சூரியன்) அபிமான புத்திரனாக வியாசகர் காட்டியுள்ளார்.

அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி கணவன் மனைவி இணைந்து துருவ நட்சத்திரமாகி அகண்ட அண்டத்தில் வரும் எத்தகையை நஞ்சினையும் உணவாக எடுத்து ஒளியின் சுடராக பேரொளியாக மாற்றி என்றும் அழிவில்லாத நிலைகள் கொண்டு என்றும் பதினாறு என்று வாழ்ந்து கொண்டுள்ளது.

ஆகவே, வாழ்க்கையில் தீமைகள் வரும்போது நம் கண்ணின் நினைவுகள்
1.எங்கே செல்ல வேண்டும்…?
2.எதை எண்ண வேண்டும்..?
3.எதை நுகர வேண்டும்…?
4.தீமையை நீக்கிடும் ஆற்றலை எப்படிப் பெறவேண்டும்…? என்று
5.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்க்கும் மார்க்கத்தைக் காட்டினார் வியாசகர்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நம் பூமியில் தோன்றிய ஞானிகள் அனைவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்துத் தான் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அடைந்த நிலையை அகஸ்தியனைப் போன்ற அருள் ஞானியாக நாம் ஆகும் மார்க்கத்தைத்தான் வியாசகர் இவ்வாறு காட்டியுள்ளார்.

மற்றவர்கள் தவறுகளைத் தெரிந்து கொள்ள நேர்ந்தால் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

Soul protection method

மற்றவர்கள் தவறுகளைத் தெரிந்து கொள்ள நேர்ந்தால் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

 

ஒருவர் தீமை செய்கிறார் என்ற உணர்வை நுகர்ந்தால் போதும். அவருடைய சிரமங்களை நாம் அறியலாம். ஆனால் சிரமங்களை அறிந்த பின்
1.“நான் கண்டுபிடித்துவிட்டேன்…!” என்று
2.எப்படி எல்லாம் சிரமம் வருகிறது…? என்று ஜோசியத்தைப் பார்த்து விடாதீர்கள்…!

மற்றவர்களுடைய குறைகளோ துன்பங்களோ தெரிந்தது என்றாலும் மகரிஷியின் அருள் சக்தி அவர் பெற வேண்டும். அவர் சிரமத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை மாற்றி எடுத்துக் கொண்டு மகரிஷியின் அருள் சக்தி பெற்று நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இந்த வாக்கை மட்டும் கொடுங்கள்.

கஷ்டத்தைச் சொல்லி விடாதீர்கள்…!

ஏனென்றால் இந்தத் தியான வழியில் உள்ளவர்களுக்கு மற்றவர்களைப் பார்க்கும் பொழுது அது தெரிய வரும். சொல்லவும் முடியும். ஆனால் அதை நல்லதாக்குவதற்குச் சொல்ல வேண்டும்.

ஆனால் ஒரு சில பேர் அடுத்தவர்களுடைய குறையை இலேசாகத் தெரிந்து கொள்வார்கள். தெரிந்த பின்…
1.சாமி (ஞானகுரு) உபதேசம் சொல்கிறார்.
2.எல்லாமே இவரும் கேட்கிறார்…!
3.கேட்ட பின்பும் இப்படித் தப்பு செய்து கொண்டே இருக்கிறார்… என்று எண்ணி அதையே சொல்லிச் சொல்லி
4.அந்தக் குறையை எடுத்து வளர்த்துக் கொள்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கிறார்கள்.

அவர்கள் செய்யும் தவறைப் பற்றி அறிய முடிகிறது. ஆனால் அதை அறிந்த பின் அந்தத் தீமையை நீக்கத் தெரியவில்லை.

ஏனென்றால் மற்றவரைப் பற்றி அறியும் ஆற்றல் வரப்போகும் போது குறைகளைக் கேட்கிறோம் என்று அதற்குள் போய்விடுகின்றார்கள்.

பின் இப்படிச் செய்கிறார்கள்… இப்படி இருக்கிறார்கள்…! என்று அவர்களைப் பற்றிக் குறையாகப் பேசி அவர்களுடைய நினைவு வரும் போது இது தான் வளரும்.

யாம் அறியும் சக்தியைக் கொடுத்தாலும் அதை நீக்கும் சக்தியையும் உடனடியாகக் கொடுக்கிறோம். மீட்கும் வல்லமை கொடுத்ததைப் பயன்படுத்தவில்லை என்றால் குறை உணர்வே வளரும். அதை நாம் மாற்றுதல் வேண்டும்.

1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவருக்குள் அறியாது புகுந்த அந்த இருள்கள் நீங்க வேண்டும்.
3.மெய்ப் பொருள் காணும் அந்தத் திறன் அவர் பெற வேண்டும்.
4.மகரிஷியின் அருள் வட்டத்தில் அவர் வாழ வேண்டும்.
5.ஒளியின் உணர்வாக வளர வேண்டும் என்று உணர்வை எடுத்தால்
6.நாம் பார்த்து அறிந்து கொண்ட அந்தக் குறையான உணர்வு நமக்குள் மாறும்.

மகரிஷியின் அருள் சக்தியால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நீங்கள் பொருள் காணும் சக்தி பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை நீக்குவீர்கள். இப்படி எல்லாம் நாம் எண்ணினால் அவருடைய குறைகள் நமக்குள் வராது தடுக்கின்றோம்.

அவரும் இதே போல் எண்ணினால் அவருடைய குறையான செயல்களும் நிச்சயம் மாறும்.

உலகோதய ஆசை என்றால் என்ன…?

Spiritual LIFE

உலகோதய ஆசை என்றால் என்ன…?

மனிதனாகப் பிறந்து நாம் வாழும் நிலையில் அன்றாடத் தேவைகளில் நம் எண்ணத்தைச் செலுத்தி அந்தந்தச் சந்தர்ப்பங்களில் ஏற்படும் நிகழ்ச்சிகளினால் நம்முடைய சிந்தனைகள் எத்தனையோ மாறுகின்றது.

“மகிழ்ச்சியாக வாழ வேண்டும்…!” என்ற ஆசையில் தான் உணவு உட்கொள்வதிலிருந்து தொழிலுக்கோ கல்விக்கோ மற்ற எல்லா வேலைகளையும் செய்கின்றோம்.

நாம் நன்றாக இருந்தாலும் நம் குடும்பத்திலோ உறவுகளிலோ நண்பர்களுக்கோ நம்மைச் சார்ந்தவர்களுக்கோ ஏதாவது ஒரு பாதிப்பு என்றால் அதனால் நாம் வேதனைப்படுகின்றோம். அல்லது அவர்கள் தவறு செய்தால் ஆத்திரப்படுகின்றோம்.

இதனால் நாம் நமக்காகச் செய்யும் கடமைகளிலும் அதனுடைய பாதிப்பாகின்றது. இப்படிப் பிறரிடமிருந்து வரும் உணர்வுகள் நமக்குள் மோதிய பின் அது நாம் போகும் பாதையை (எந்தப் பாதையாக இருந்தாலும்) மாற்றுகின்றது.

கேட்டால் நாம் என்ன சொல்வோம்…?

என் குடும்பத்திற்காக அல்லது என் சொந்தத்திற்காக அல்லது என் தொழிலுக்காக அல்லது என் மன திருப்திக்காக என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அதிலே மீண்டும் மீண்டும் போய்ச் சிக்கிக் கொள்வோம்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.வீட்டிற்குள் எப்படித் தினம் தினம் தூசி வருகிறதோ
2.நம் உடல் தினமும் அழுக்காகின்றதோ
3.உடைகள் அணியும் பொழுது சுத்தமாக இருந்தாலும் அணிந்த சிறிது நேரத்தில் அது எப்படி அழுக்காகின்றதோ
4.அது போல் இந்த மனித வாழ்க்கையிலும் ஒரு சிக்கல் தீர்ந்தாலும்
5.அடுத்து ஒரு சிக்கல்… அதற்கு அடுத்து ஒரு சிக்கல்…! என்று வந்து கொண்டே தான் இருக்கும்.

அவரவர்கள் வாழும் இடங்களுக்கொப்ப… வளர்த்த நிலைக்கொப்ப… சந்திக்கும் நிலைக்கொப்ப… ஏதாவது குறைகள் வந்து கொண்டே தான் இருக்கும். குறை இல்லாத மனிதர்களே கிடையாது…!

வீட்டிற்குள் வரும் தூசியைத் தூய்மைப்படுத்தத்தான் முயற்சிக்க முடியுமே தவிர தூசியே வராது தடுக்க முடியாது. உடலைத் தினம் தினம் குளித்துத் தூய்மையாக்க வேண்டுமே தவிர உடலில் அழுக்கே ஒட்டாமல் தடுக்க முடியாது,

அது போல் இந்த உலக வாழ்க்கையில் அம்மா அப்பா என்றோ… கணவன் மனைவி என்றோ… குழந்தைகள் என்றோ… நண்பர்கள் என்றோ உறவுகள் என்றோ… தொழில் என்றோ அல்லது நம் உடல் நம் மனது என்றோ…! எத்தனையோ வகைகளில் பல விதமான உணர்வுகள் எதிர்மறையாக மோதத்தான் செய்யும்.

மேலே சொன்ன எல்லோருடைய உடலும் மனதும் ஆரோக்கியமாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம். அதிலே ஏதாவது ஒன்று சரியில்லை என்றாலும் நம் அமைதி பறிபோய்விடுகிறது.

அமைதியை இழந்த பின் அந்த ஒன்றை மட்டும் தான் எண்ணிக் கொண்டிருப்போமே தவிர இதற்கு முன்னாடி நன்றாகத் தான் இருந்தோம் அதே போல்
1.அந்த நன்றாக இருந்த நல்ல சக்தியை எடுத்து
2.மீண்டும் நாம் நன்றாகவே இருப்போம்…! என்ற எண்ணம் வருவதில்லை.

ஆக நாம் போகும் நல்ல பாதையைத் தடைப்படுத்தும் நிலை வரும் பொழுதெல்லாம் நல்ல பாதையில் தொடர்ந்து போவதைக் கேள்விக் குறியாகத்தான் ஆக்குகின்றோமே தவிர
1.மீண்டும் மீண்டும் எது வந்தாலும்
2.நாம் போகும் அருள் வழியை மாற்றக் கூடாது…! என்ற தெளிவும் வைராக்கியமும் வருவதில்லை.

ஆக மொத்தம் பேருக்கும் புகழுக்கும் மற்றவர்கள் நம்மைப் பற்றி எண்ணும் எண்ணத்திற்கும் அடிமையாகி அந்த நிலையில் தான் நாம் வாழ விரும்புகின்றோம்.

தனக்காக வாழ்வதாகச் சொன்னாலும் பிறரை எண்ணித்தான் நம்முடைய வாழ்க்கையை நடத்துகின்றோம். ஆக தனக்காக நாம் வாழ்வதே இல்லை.

உயிர் நம்மை மனிதனாக உருவாக்கிய நிலையில் நாம் அடைய வேண்டிய எல்லை எது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து அழியா ஒளிச் சரீரம் பெற்று என்றுமே அழியாது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் மெய் ஞானிகள்.
1.அவர்கள் தான் அருள் வாழ்க்கை என்றும்
2.உலகோதய வாழ்க்கை என்றும் உணர்த்துகின்றார்கள்.

ஏனென்றால் நாம் இந்த உலகுக்காக வாழவில்லை. உலகத்தில் தான் வாழ்கின்றோம். உலக சுகத்தை நம்ப வேண்டியதில்லை.

இந்த உலகத்தில் வாழும் பொழுது நம்மை உருவாக்கிய உயிருக்காகவும் நாம் அடுத்து அடைய வேண்டிய ஒளிச் சரீரத்திற்காகவும் வாழ்ந்தால் அது அருள் வாழ்க்கை.

அதை மறந்து வேறு எந்த நிலைக்காக எண்ணத்தைச் செலுத்தினாலும் அதன் படி சென்றாலும்.. வாழ்ந்தாலும்… அது எல்லாமே உலகோதய வாழ்க்கை தான்…!