ஞானக்கனி

ஞானக்கனி

 

நாரதர் சிவனிடம் வருகின்றார்… கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.

முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.

ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தே… அதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

இருந்தாலும்… இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).

விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.

உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்… என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.

ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே “உயிரான அந்தச் சத்து…!”

இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு… இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.

மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)

அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது… அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!

அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான்… துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதை “நாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”

ஏனென்றால் அது “விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானது… இனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு… சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.

தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான்… அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.

ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் “அது கனியாகும்…!”

காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது… இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.

தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி… அந்தப் பாசத்துடன் ஒன்றி… அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி… அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.

1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள்… கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.

மோதலினால் ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை”

மோதலினால் ஏற்படும் உராய்வினால் “ஆத்ம சக்தியை வலுவாக்கிக் கொள்ளும் முறை”

 

ஈரமுள்ள பொருள் எதுவாகிலும்… அதன் மேல் காற்று பட்டவுடன் அதன் மணம் வெளிப்படுகின்றது. மூடி வைத்துள்ள சமைக்கப்பட்ட பொருளைத் திறந்தவுடன் அதன் மேல் காற்று படும் பொழுதும் மணம் வீசுகின்றது.

மண் மரம் போன்றவற்றில் நீர் பட்டவுடன் அதிலிருந்து உஷ்ண ஆவி வெளிப்படும் பொழுது காற்றின் மேல் அந்த ஆவி வெளிப்பட்டு மணம் வெளி வருகின்றது.

எந்தப் பொருளைச் சமைத்தாலும் அச்சமைப்பின் உஷ்ணத்திற்கொப்ப “சமைக்கப்படும் பொருளின் ஆவி நிலையின் மணம்” வெளிப்படுகின்றது. இந்தக் காற்றில் தான் இந்தப் பூமி வளர்த்துப் பக்குவப்படுத்திய அனைத்து அமிலச் சத்துகளும் நிறைந்துள்ளன.

ஒன்றுடன் ஒன்று உராயும் உராய்வில் அதனுடைய மணமும் மாற்று நிலையும் செயல் கொள்கின்றது. இதைப் போன்று தான் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி காந்த மின் அலைகளுடன் பூமியின் ஈர்ப்பு சக்தி மோதலினால் உராய்வாகின்றது.

ஒன்றின் மோதலில் இருந்து வெளிப்படுத்தும் உராய்வைக் கொண்டு அதனதன் மணம் எப்படி வெளிப்படுகின்றதோ… அதைப் போன்று சூரியனின் சமைப்பு அணு காந்த மின் ஒளியை இப்பூமியின் சமைப்பு ஓட்ட உராய்வினால் ஒளியாகக் காண்கின்றோம்.

சூரியனின் ஒளியை நம் பூமி எடுக்கும் உஷ்ண மின் அழுத்தத்திற்கொப்ப சுழலுகின்றது. அதே போல் சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற சுழற்சிக் கோளங்களான சந்திரன் செவ்வாய் வியாழன் புதன் சனி முதலான நாற்பத்தி எட்டுக் கோளங்களும் மற்ற நட்சத்திரக் கோளங்களும் அவை அவை வளர்ந்த விதம் தூர விகித நிலைக்கொப்ப அவை ஒளி மணம் பெறும் நிலை பெற்றுச் சுழன்று கொண்டுள்ளன.

சூரியக் குடும்பத்தின் சுழற்சி மண்டலத் தொடர்பு கொண்டு தான் சூரியனும் ஒளி பெற்று ஒளிர்ந்து கொண்டுள்ளது.

சாதாரணப் பொருளுக்கே காற்றின் மோதலினால் மணம் வெளிப்படுகின்றது. சமைக்கப்படாத பொருளின் மேல் காற்று மோதி வெளிப்படும் மணத்தைக் காட்டிலும்… “அதி உஷ்ணத்தைக் கொண்டு” சமைக்கப்படும் பொருளின் மணம் சமைக்கப்படும் காலத்தில் அதிகமாக வீசுகின்றது.

பூமியின் பொருளின் மணங்கள் சுழன்று கொண்டே… மோதலின் மாற்றம் கொண்டே… ஒளியாகி ஒளிர்வதைப் போன்று…
1.இந்த ஆத்ம ஜீவ சரீரத்தின் அணு வளர்ப்பை ஒளியாக்கும் நிலைக்கு
2.ஒளி கொண்டு வளர்வதற்கு வழி காட்டும் முறை தான் இந்த உபதேசம்.

பூமியின் சுழற்சியில் ஒலியாகி ஒளியாகி பூமி ஈர்ப்பின் சுவாசம் வெளிப்பட்டு பூமி சத்தெடுத்து ஆவி அலைகளை வெளிக் கக்குகிறது.

நிலத்திற்கு மேல் உள்ள நீர் நிலையான வட துருவம் தென் துருவம் மற்ற ஆறுகள் குளங்கள் கடல் ஆகியவை வெளிப்படுத்தும் ஆவி அலையின் சமைப்பு மணம் கொண்டு பூமி ஒளி பெற்று மணம் பெற்று ஜீவ ஞான செயல் வித்துக்களை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

ஆறறிவு கொண்ட பகுத்தறியக் கூடிய எண்ணம் செயல் கொண்ட மனித உருவகங்களை உருவாக்கிடும் கோடானு கோடி உயிரணுக்களை வளர்க்கும் சக்தி கொண்டது தான் இந்தப் பூமி.

இத்தகைய உருவாக்கும் சக்திகள் கொண்ட பூமியின் உண்மைகளை உணர்ந்து…
1.மனிதன் உன்னத உயர்வு ஒளி ஞானத்தைப் பெற
2.எண்ணத்தின் சமைப்பாகச் சுவாசம் எடுக்கும் எண்ணத்தின் உணர்வுக்கொப்ப இச்சரீரத்தை மணமாக்கி
3.மணத்தின் ஒளி காந்த நுண் அணுவை இச்சரீரம் வளர்த்து
4.காந்த மின் அணுவின் வலுவை எலும்புகளின் ஊன் நிலையில் வலு ஏற்றி
5.அந்த வலுவின் ஆவி அமில முலாமினால் ஆத்ம வலு கூடி
6.ஆத்ம வலுவினால் வளரப் பெறும் ஒளித் தன்மைக்கு
7.மகரிஷிகள் வளர்த்துக் கொண்ட ஒளியின் வலுவை… காந்த மின் அலை வளர்ச்சியை…
8.மனிதச் சரீரத்திலே வளர்த்து வலுவாக்கும் வழி முறையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

உபதேசக் கருத்துக்களை (வாக்கு) அழுத்தமாகச் சொல்வதன் காரணம் என்ன…?

உபதேசக் கருத்துக்களை (வாக்கு) அழுத்தமாகச் சொல்வதன் காரணம் என்ன…?

 

இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய ஞானிகளின் அருள் வித்துக்களைப் பெறச் செய்வதற்குத் தான் உபதேசத்தின் வாயிலாக வாக்குகளை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

விஞ்ஞான அறிவு கொண்டு வாழ்க்கைக்காக வேண்டி ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டுப் பதிவாக்கி… புத்தக வாயிலாகப் படித்து… பின் அதை எல்லாம் நினைவு கொண்டு பரீட்சை எழுதி அதில் தேர்ச்சி பெறுவது போன்று
1.மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை உங்களுக்குள் கொடுத்து
2.துன்பத்தை நீக்கிடும் மெய் ஒளியின் தன்மையாக மெய் ஞானத்தின் அருளாற்றலைப் பெறச் செய்து
3.உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் இருள் சூழும் நிலைகளை நீக்கிடும் சக்தி பெற வேண்டும் என்பதற்காக
4.குருநாதர் காட்டிய அருள் வழியிலே வாக்கின் வன்மையாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

ஆகையினால் தான்… “இதை உங்களிடம் அழுத்தமாகச் சொல்வது…!”

“திட்டியவனை” எண்ணியவுடன் எவ்வளவு வேகமாக அந்த உணர்ச்சியின் வேகங்கள் கிளம்புகின்றதோ அதே மாதிரி
1.அந்த அருள் ஞானிகளைப் பற்றி உங்களுக்குள் “அழுத்தமாக” உபதேசிக்கும் பொழுது அந்த உணர்வுகள் உந்தும்
2.அப்பொழுது உங்களைச் சார்ந்தவர்களோ மற்றவர்களோ யாராவது சாபங்கள் இட்டிருந்தால்
3.உங்கள் உடலுக்குள் அது இருந்தால் அதை உணரச் செய்யும்… அதே சமயத்தில் எரிச்சலாகிப் பல நிலைகள் ஆகும்.

ஆனால் எரிச்சலாகும் பொழுது…
1.என்னடா சாமி இப்படிச் சொல்கிறார்…! என்று எழுந்து சென்று விட்டால் “யாம் சொல்வது எல்லாம் போய் விட்டது”
2.எப்படியும் இந்த உபதேசத்தைக் கேட்டு எனக்குள் இருக்கும் பாவ நிலைகளும் சாப நிலைகளும் தீர வேண்டும் என்று எண்ணினால் “பாவங்கள் போய்விடும்”
3.இல்லை என்றால் “நல்ல சக்திகளைப் பெறுவது போய்விடும்…”

குருநாதர் காட்டிய வழியிலே எப்படியும் அந்த உயர்ந்த சக்திகள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும்… நல்லது நடக்க வேண்டும்… என்பதற்குத்தான் தெளிவாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் தெரிந்து எதுவும் முடிவதில்லை
2.தெரிந்து யாரும் அவ்வாறு செயல்படுத்த முடியாது
3.சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாக்கின் வன்மையும் தான் இயக்குகின்றது.

“ஏனென்றால் அது பிரணவம்…!”

“உயர்ந்த எண்ணத்தைத் தனக்குள் சிருஷ்டிக்க வேண்டும்” என்ற உணர்வின் ஏக்கத்தைத் தூண்டச் செய்து அந்த உணர்வுக்குள் பல நிலைகளை உங்களைப் பழக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று
3.உங்கள் உடலுக்குள் இவ்வாறு தியானித்து அந்தச் சக்தியை ஏற்றிக் கொள்ளுங்கள்.

திரும்ப அதே உணர்வுடன் எண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒருவன் நம்மைத் திட்டினான் என்றால் அவனை நாம் மீண்டும் மீண்டும் நினைத்து அப்படிப் பேசினான்… பேசினான்… என்று அந்த வேகங்களைக் கூட்டிக் கொள்கின்றோம் அல்லவா…! மீண்டும் மீண்டும் அவனைப் பற்றி பேசுகிறோம் அல்லவா…!

அதைப் போன்று தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வினைத் திணிக்கச் செய்கின்றேன். இந்த உணர்வுகள் உள்ளே செல்லச் செல்ல துன்பத்தை ஊட்டும் உணர்வுகள் அது விலகும்.

அழுக்கு நீரில் நல்ல நீரை ஊற்ற ஊற்ற… அழுக்கு நீர் குறைந்து நல்ல நீர் பெருகி வரும். அது போன்று தான்
1.உங்களுக்குள் இருக்கக்கூடிய சங்கட அலைகள் அது படிப்படியாகக் குறையச் செய்வதற்கு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று
3.ஒவ்வொரு நிமிடமும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்யுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று திரும்பத் திரும்ப அந்த உணர்வுகளை ஏங்கிச் சுவாசியுங்கள். அதை உங்கள் உடலுக்குள் பரப்புங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உயிர் வழி இந்த உணர்வுகளை உள்ளே செலுத்தப்படும் பொழுது உங்கள் துன்பங்கள் நீங்குகிறது.

கலி என்றாலே… பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு

கலி என்றாலே… பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு

 

நடக்கின்றோம் கேட்கின்றோம் பேசுகின்றோம் சுவைக்கின்றோம் பார்க்கின்றோம் நுகர்கின்றோம்..!

இந்த ஒவ்வொரு செயல் நிலையிலும் “ஞான வளர்ச்சி” காலமுடன் ஒன்றியதாகச் சத்து பெற்றுள்ள இத்தருணத்தை இன்றைய மனிதச் செயலின் அடுத்த நிலையான பறக்கும் நிலைக்கு மனிதனின் உருவக உயர்வு நிலை வந்திருக்க வேண்டும்.

கல்வித் தரத்தில் எப்படி முதல் வகுப்பு… இர்ண்டாம் வகுப்பு… என்று கல்வித் தரத்தை (தேர்ச்சி பெற்றதை) உயர்த்துகின்றார்களோ அதைப் போன்று
ஒலி…
ஒளி…
நீர்…
தாவரம்…
ஜீவ சக்தி… (உயிரினங்கள்)
ஞான சக்தி (தற்போதைய மனிதன்)
இத்தொடரில் அடுத்த நிலையான தெய்வ வளர்ப்பு சக்தியை மனிதன் பெற வேண்டும்.

ஏனென்றால் இந்தப் பூமி பெற்ற எல்லாச் சக்தியுமே இந்த மனிதக் கோளத்தில் தொடர்பு கொண்டுள்ளது.

அத்தகைய வளர்ப்பின் வலு கூடிய பிறகு தான் (மனிதனின்) எண்ணத்தின் பகுத்தறியும் சொல் செயல் ஆற்றல் முதிர்வு நிலை பெறுகின்றது.

பூமியின் வளர்ச்சியில் முதிர்வு கொண்ட வளர்ப்பு தான் மனிதர்கள். மனிதனுக்கு அடுத்த நிலையான…
1.தெய்வ நிலை பெறக்கூடிய பூமியின் சத்து வித்தாக வளர்ச்சிப்படுத்த
2.பூமி சேமிக்கும் தன் வம்சத் தொடரின் தொடர்கள் தானப்பா
3.மனிதன் பெற்ற உயர் ஞான பகுத்தறிவு வித்து நிலை என்பது.

ஆனால் தன் உடல் கோளத்தில் உணரும் உயர் ஞானத்தை இக்கலி தந்த காலத்தில் வளர்க்கத் தெரியாமல்… கலிக்கு அடுத்த கல்கியின் உயர்ந்த சத்தாகப் பெறவல்ல உயர்ந்த சந்தர்ப்பத்தை… கல்கி யுகமாக்கிப் “பறக்கும் சக்தியை…” இந்தப் பூமி வளர்ப்பில் வளர்ந்த வித்துக்கள் (மனிதர்கள்) உயர்வு நிலைப்படுத்த முயற்சிக்கவில்லை.

“கலி” என்றாலே பகுத்தறியும் உயர் ஞான வளர்ச்சி முற்றலின் வலு என்று உணராமல்
1.இக்கலியையே செயற்கைக் கலியாக்கி
2.உன்னத வளர்ச்சியில் சுழன்ற இந்தப் பூமியின் சத்தையே
3.இன்றைய மனித ஞானம் அழிக்கும் நிலைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளது.

ஆக.. கல்கியுகத் தொடர்பை இந்தக் கலியில் இங்கே இந்தப் பூமியில் வளர்க்க முடியா விட்டாலும் நம் சூரியக் குடும்பத் தொடர்பில் (மற்றொரு கோளத்தில்) நாம் எடுக்கும் ஜெபத்தால் கல்கி யுகத்தை வளர்க்க முடியும்.

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

யாம் கொடுப்பது அனைத்துமே வாக்குகள் தான்… வெறும் பேச்சு அல்ல…!

 

உடனுக்குடன் தீமைகளை நீக்குவதற்குத் தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்துதல் வேண்டும் ஏனென்றால் முந்தி ஆரம்பத்திலே யாம் (ஞானகுரு) போட்ட வித்து அது…!

உதாரணமாக வயலிலே களைகள் முளைக்கிறது என்று அவைகள் எல்லாவற்றையும் பிடுங்கிச் சுத்தம் செய்கிறோம். ஆனால் மீண்டும் அவைகள் முளைத்து விடுகின்றது. மற்றதை விளைய விடுவதில்லை.

இது போன்று தான்
1.நம் உடலுக்குள் முந்தி விளைந்ததெல்லாம் இருக்கின்றது.
2.இருந்தாலும் அவைகள் மீண்டும் முளைத்து விடாமல் நாம் கொஞ்சம் தடுத்துக் கொண்டே வர வேண்டும்.
3.அருள் ஞான உணர்வை எடுத்து நல்ல பயிரை நாம் வளர்ப்பதற்கு முற்பட வேண்டும்
4.எத்தனை துன்பங்கள் வந்தாலும் அந்தத் துன்பங்களை மறைப்பதற்கு மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்க வேண்டும்..

ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி அவ்வப்பொழுது களைகளை அப்புறப்படுத்திக் கொண்டே வாருங்கள்

“என்னத்தை… ஆத்ம சுத்தி செய்து…?” என்று சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கின்றோம். புல்லை நோண்டி அப்புறப்படுத்துவதற்கு அதைக் கொடுத்திருக்கின்றோம்.

கையிலே தான் புடுங்க முடியவில்லை. இந்த ஆத்ம சக்தி என்று ஆயுதத்தை வைத்து அதை எடுத்து விடலாம் அல்லவா. வாக்கால் தான் அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையே கொடுக்கின்றோம்.

1.நான் (ஞானகுரு) பேசுவது அனைத்துமே வெறும் பேச்சு அல்ல
2.எல்லாவற்றையும் வாக்காகத்தான் பதிவு செய்கின்றேன்
3.பதிவு செய்து எப்படியும் நீங்கள் அந்தத் துன்பத்திலிருந்து மீள வேண்டும்
4.உங்கள் மூச்சு உங்கள் துன்பத்தை நீக்க வேண்டும்
5.உங்கள் பேச்சு மூச்சும் நல்ல நிலைகள் பெற வேண்டும் என்பதற்குத்தான் அவ்வாறு செய்கின்றேன்

இதைத்தான் அன்று கந்த புராணத்தில் நாரதன் சொல்வதாக அன்னை தந்தையின் உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டினார்கள்.

தாய் உன்னைக் கருவில் வைத்து வளர்த்தது. அந்தத் தாய் தந்தையரின் ஆன்மாக்கள் பிரிந்த பிற்பாடு அதற்கு நல்ல ஆகாரமாகக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். ஆனால் நாம் அதன்படி செய்கிறோமா…?

தாய் தந்தையர் இறந்து விட்டார்கள் என்பதற்காக சுட்ட சாம்பலை ஆற்றிலே கரைக்கவும் கடலில் கரைக்கவும் எங்கெங்கோ இடத்தைத் தேடிச் செல்கிறோம். இது சாங்கிய சாஸ்திரம்.

தண்ணீரே ஓடவில்லை என்றாலும் ஒரு குழியைத் தோண்டி அதில் தண்ணீரை ஊற்றிக் கரைக்க வேண்டும் என்று எத்தனை வழியில் செயல்படுத்துகின்றார்கள்.

ஏனென்றால் மழை பெய்து நாளைக்கு வெள்ளம் வந்தால் அது கடலில் சேர்த்துவிடும் என்று இப்படி ஒரு நம்பிக்கை. ஆனால்
1.தாய் தந்தையருடைய ஆன்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டல ஒளிக்கடலிலே
2.உந்தித் தள்ளி இணைக்க வேண்டும் என்று தான் அன்று சொன்னார்கள்
3.அதை யாரும் செய்யத் தயாராக இல்லை.

பணத்தைச் செலவழித்துச் சாங்கியத்தை செய்து உணவு படைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம். காரணம் பாவ நிலைகளை நீக்குவதற்கு இப்படிச் செயல்படுத்த வேண்டும் என்று மாற்றி விட்டார்கள்.

அதே சமயத்தில் துணிமணிகளை எடுத்து மற்றவர்களுக்குத் தானமாக கொடுத்தால் ஒட்டி இருக்கும் பாவங்கள் போய்விடும்… தோஷங்கள் போய்விடும் என்று
1.அப்பா பேரைச் சொல்லித் தானம் செய்வதும்
2.அம்மா பேரைச் சொல்லித் தானம் செய்வதும் என்று இப்படித்தான் நாம் இருந்து கொண்டிருக்கின்றோம்.

தானம் செய்தாலும் உடலை விட்டுப் பிரிந்து சென்ற தாய் தந்தையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் அவர்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று
1.நாம் அங்கே ஒன்றி இருத்தல் வேண்டும்.
2.அவ்வாறு செய்தால் தான் அந்த ஒளிகள் நம்முடன் இணையும்
3.இல்லையென்றால் அந்த ஒளிகள் ஒன்றும் செய்யாது.

சமமான சாந்த குண ஈர்ப்பு தான் நம்முடைய வளர்ச்சிக்கு உதவும்

சமமான சாந்த குண ஈர்ப்பு தான் நம்முடைய வளர்ச்சிக்கு உதவும்

 

உருக்கொண்ட உயிரணு வளர்ச்சி யாவையுமே… அவை அவை எடுத்த சுவை கொண்டு வளர்ச்சி பெற்ற வலுவின் செயல் கொண்டு… செயல் வழி குண நிலை தொடர் கொண்டு வளருகின்ற தொடர் வளர்ப்பில்… சரீர எண்ண குண வாழ்க்கையில்… சுவையும் காம இச்சையும் கொண்ட தொடர் வாழ்க்கையில் மனித எண்ண வழித் தொடர் கொண்ட வாழ்க்கை அமைந்துள்ளது

இச்சரீர ஈர்ப்பில்… சரீர உணர்வில் வளர்த்துக் கொண்ட குண நிலையை… உணர்வின் உந்தலை… எவ்விச்சையையும் “ஆவேச உணர்வு ஈர்ப்பில் செலுத்தாமல்… சமம் கொண்ட சாந்த குண ஈர்ப்பினாலேயே” செலுத்த வேண்டும்.

இவ்வுடலில் காந்த மின் அணு வலுவைக் கூட்டிய ஆத்ம பலத்தை
1.ஆண் பெண் என்ற தாம்பத்ய இணைப்பு ரிஷித் தொடர்பில்
2.இரண்டு ஆத்மாவும் ஒரு நிலை கொண்டு
3.ஓர் ஆத்மாவாக ஈருயிர் ஓர் ஆத்மாவாக வலுக் கொண்ட தொடரில் சென்றால்
4.ரிஷி சக்தி (சிவ சக்தி) கொண்ட வலுக் கூடும்.

அதன் மூலம் வளர்ச்சி கொண்ட ஜீவ வளர்ச்சி வளரத் தக்க வழித் தொடர்பிற்கு… சிவ சக்தி நிலை கொண்ட ஆத்ம ஜெபம் பெற்ற இந்த ஆத்மாக்கள் இரண்டாயிரம் சூரியக் குடும்ப இயக்க ஓட்டத்தில் எம்மண்டலத்தையும் தம் மண்டலமாக்கிட முடியும்.

மண்டல வளர்ப்பிற்கு… மனித அலை உயர் தெய்வ குண எண்ண பகுத்தறியும் ஆற்றல் கொண்ட வித்துத் தொடரை சிவ சக்தியின் செயல் கொண்டு தான் வளர்க்க முடியும்.

வளர்க்க வேண்டிய வளர் சக்தி கொண்ட “தெய்வ நிலை” மனித எண்ணத்திற்கு மட்டும் தான் உண்டு.

ஆகவே…
1.உண்டு கழித்து உறங்கும் இயந்திர பூமியின் பிடிப்பில் சுழலும் மனித ஆத்மாக்களே…
2.உங்களுக்குகந்த அறிவு ஞானத்தை இவ்வுடல் ஒன்று பெற
3.இம்மனிதச் செயல் செயல் கொள்ள
4.இரண்டாயிரம் சூரியக் குடும்பங்களின் தொடர்புடன் பல காலமாக வளர்ச்சி கொண்டு
5.வார்ப்புப்படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி பெற்ற இம்மனித உயர் ஞான எண்ண உணர்வு கொண்ட இச்சரீரத்தை
6.மீண்டும் இச்சரீரக் கோளத்தின் சத்தையே எடுத்து எடுத்து
7.தன் ஆத்மாவின் வித்தை – தன்னைத் தான் உணராத நிலையில் விரயப்படுத்தி உழலும் இத்தொடரை விடுத்து விட்டு
8.உயரும் வழித் தொடரின் வழியறிந்தே நீங்கள் செல்லுங்கள்.

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

உடலுக்குப் பின் நாம் சென்றடைய வேண்டிய இடமும்… அதற்குண்டான வழி முறையும்

 

மனித வாழ்க்கை என்று இருந்தாலும் இந்த உடலை விட்டு நமது ஆன்மா ஒரு நாள் பிரியத் தான் செய்யும். அது சமயம் என்ன செய்ய வேண்டும்…?

குருநாதர் காட்டிய வழியில் பௌர்ணமி தியானம் இருக்கும் போதெல்லாம் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அனைவரும் சேர்ந்து உந்தி விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது
1.சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகள் இந்த உயிரான்மாவில் பட்டபின்
2.இன்னொரு உடல் பெறும் உணர்வின் சத்தை அது பஸ்பமாக்கிவிட்டு உணர்வின் ஒளி சுடராக அந்த உயிரான்மா வளரும்

எத்தனையோ மனிதர்களை விஞ்ஞான அறிவு கொண்டு இராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பி இருக்கின்றார்கள். ஆனால் அந்த இராக்கெட் விபத்தாகி வெடித்து விட்டால் இறந்த ஆன்மா அங்கே விண்ணிலே தான் மிதந்து கொண்டிருக்கும்.

அப்படி மிதந்தாலும் அங்கிருக்கக்கூடிய மற்ற கதிரியக்க சக்திகள் அதிலே படப்படும் பொழுது
1.அந்த உயிராத்மா அது உயர்ந்த நிலை பெற முடியாது ஒளிச் சரீரமும் பெற முடியாது
2.வானில் பிரபஞ்சத்தின் ஈர்ப்பு வட்டத்தில் மிதந்தாலும் அது செயலற்றதாகத் தான் மாறும்.

ஆனால் இங்கே ஒரு அமைப்பை ஏற்படுத்தி உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை நாம் இங்கிருந்து சப்தரிஷி மண்டலத்திற்குக் கூட்டமைப்பாக விண் செலுத்தும்படி செய்கின்றோம்.

அப்போது அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வலைகள் இந்த உயிர் ஆத்மாவிலே கலக்கப்படும் பொழுது இந்த உணர்வின் ஒளியாகச் செயல்படுகிறது.

விஞ்ஞான முறைப்படி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி இருந்தாலும் விபத்தாகி இறந்தால் நச்சுத்தன்மை கொண்ட உயிரான்மாவாகத் தான் விளைகின்றது.

விண்ணிலே சுழன்று கொண்டிருந்தாலும் சந்தர்ப்பத்திலே மற்ற கோளின் ஈர்ப்புக்குள் வந்தால்
1.உடல் பெறும் தன்மையற்று விஷத்தின் ஆற்றல் கொண்ட குறுகிய உடல்களால
2.புழு போன்ற உயிரினங்களாகத் தான் உடல் பெற முடியும்.
3.அல்லது அப்படியே மனித உணர்வு கொண்ட உடல் பெற்றாலும் கூட
4.சிந்தனை இழந்து வேதனைப்பட்டு விஷத்தின் தன்மையைத் தான் வளர்த்துக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மெய் ஞானிகள் காட்டிய வழியில் நாம் செல்லப்படும் பொழுது சுலப நிலைகளில் விண் செல்ல முடியும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.விண் செல்லும் பாதையை “எந்த மகரிஷி நமக்குக் காட்டினாரோ”
2.அவரின் உணர்வின் ஆற்றலை இங்கே தொடர்புகளாக உங்களுக்கு ஏற்படுத்தி
3.அதைத் தொடர் வரிசையாக உங்களுக்குள் பதிவு செய்து
4.அந்த ஆற்றலை ஓங்கி வளர்க்கும்படி செய்து இந்த உணர்வின் புலனறிவை
5.சப்தரிஷி மண்டலத்துடன் (உங்களை) இணைக்கச் செய்யப்படுகின்றது.

அவ்வாறு இணைத்துக் கொண்டோமானால் உடலை விட்டுப் பிரியும் போது அனைவரும் சேர்ந்து ஏக காலத்தில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை “உந்தி அங்கே செலுத்தப்படும் பொழுது…” சுலப நிலைகள் அங்கே இணையச் செய்ய முடியும்… நாமும் அங்கே இணைய முடியும்.

இதைப் போல் உந்தச் செய்வதற்குத் தான் அன்று ஒவ்வொரு ஞானியும் சாதாரண மனிதனைத் தேடி வந்தார்கள்.

அந்த ஞானிகள் பூமியிலே வாழும் காலத்தில்… எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்க சக்திகளை அவர்கள் பெற்றிருந்தாலும்
1.மற்ற மனிதர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய துன்பத்தைப் போக்க செய்து
2.அந்தப் பாச உணர்வின் சத்தைத் தனக்குள் எடுத்து… நல்ல உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்து
3.தன் மீது அந்த எண்ணத்தை வளர்க்கும்படி செய்து
4.தன் சிஷ்யர்கள் சிலரிடம் சொல்லி… இன்ன உணர்வு கொண்டு என்னை விண்ணிலே உந்திச் செலுத்து என்று
5.உந்திச் செலுத்தும்படி செய்து அவ்வாறு விண் சென்றவர்களே பலர்…!

அதனால் தான் ஒரு ஆன்மா உடலை விட்டு பிரிந்தது என்று நீங்கள் கேள்விப்பட்டால்
1.அவர்களை விண் செலுத்த வேண்டும் என்ற உணர்ச்சிகள் உந்தப்படுகின்றது
2.சப்தரிஷி மண்டல நினைவுகள் உங்களுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

அதைத் தான் பயிற்சியாக யாம் (ஞானகுரு- கொடுக்கின்றோம்.

அதாவது…
1.உடலை விட்டுப் பிரிந்த… எடையற்ற அந்த உயிரான்மாவை இயக்க வல்ல உணர்வின் ஆற்றலை
2.மனித உடலுக்குள் இருந்த நினைவின் அலைகளைக் கூட்டி… அந்த உணர்வுடன் தொடர்பு கொண்டு
3.சப்தரிஷி மண்டலத்திலே அங்கே செலுத்த முடியும்.

அத்தகைய விண் செல்லும் தொடர் வரிசையை நாம் ஏற்படுத்தினால்… நாமும் சரி… நமக்குப் பின் செல்பவர்களுக்கும் அதே நிலை இயக்கப்படுகின்றது

ஆனால் இதை அறியாதவர்கள் அல்லது இந்த முறைப்படி தியானம் செய்யாதவர்களை அங்கே விண் செலுத்த வேண்டும் என்றால்
1.உடலை விட்டுப் பிரிந்த அந்த ஆன்மாக்களை அவர்கள் தாய் தந்தையருடன் ஒன்று சேர்த்து
2.அந்த உணர்வுடன் இயக்கச் செய்து அவருடைய துணை கொண்டு அங்கே அனுப்ப முடியும்.
3.இந்த வழி தெரியாதவர்களை அப்படித் தான் விண் செலுத்த முடியும்.

உயிரான்மா எப்படி இயங்குகிறது… இயக்குகிறது… வலுக் கூ(ட்)டுகின்றது…?

உயிரான்மா எப்படி இயங்குகிறது… இயக்குகிறது… வலுக் கூ(ட்)டுகின்றது…?

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுக்கும் பலதரப்பட்ட குணங்களில் புளிப்பு இனிப்பு துவர்ப்பு கரிப்பு கசப்பு எரிப்பு போன்ற ஆறு வகைச் சுவையை உடல் சமைக்கும் ஏழாம் சுவை அமில வளர்ப்பைக் கொண்டு… உடல் அணுக்கள் வளர்ச்சியில் வளரும் வலுவை… உடலை இயக்கும் ஆத்மாவானது அச்சுவையின் அலையை எடுத்து இயங்குகிறது… இயக்குகிறது… வலுப் பெறுகின்றது.

அலை என்பது… என்ன…?

1.உடல் சமைக்கும் ஆவி உணர்வை ஆத்மா இழுத்து ஆத்மாவின் உடல் இயக்க உயிர் செயல் கொள்ள
2.நாம் எடுத்த உணர்வு நிலைக்கொப்ப… உடல் என்ற சட்டியில் அது சமைக்கப்பட்டு… உடல் வெளிப்படுத்தும் வெக்கை நிலைக்கொப்ப
3.எச்சுவையின் வார்ப்பகத் தன்மையில் இந்த உடலின் இயக்கம் செயல் கொள்கின்றதோ
4.அதற்குகந்த அலை காற்றுடன் கலந்துள்ள அமிலம் காந்த ஜீவத் துடிப்பு கொண்ட ஆத்ம ஈர்ப்பிற்கு வலுக்கூட்டி
5.எச்சுவையின் தன்மையை உடலின் இயக்கம் அதிகப்படுத்தி (முன்னணியில் உள்ள குணம்) வளர்ச்சி கொள்கின்றதோ
6.அத்தொடருக்குகந்த வலுத் தொடரைத் தான்
7.உடல் வளர்க்கும் அணு வளர்ச்சியின் ஈர்ப்பிற்கு இந்தக் காற்றலையின் தொடரிலிருந்தும் பெறுகின்றோம்.

உதாரணமாக மிளகாய்ச் செடியின் வித்து நீர் சக்தியைக் கொண்டு உயிர் சக்தி ஜீவ வளர்ப்பு சக்தியை எப்படிப் பெற்றதோ… அத் தொடரின் வலுவைக் கூட்டி அச்செடி வளர்ந்து… அது எடுத்த கார உணர்வின் வளர்ப்பு நிலை கூடி… வித்து நிலையில் காரமுடன் கூடிய “மிளகாயின் பலன்” கிடைக்கின்றது.

இதைப் போன்று…
1.எந்தச் சுவையில் எந்த உயிரணு ஜீவன் கொண்டதோ…
2.அதற்குகந்த வளர்ப்புத் தொடரில் பல மாற்றத்திற்குப் பிறகு
3.வலுக்கூடிய வளர்ச்சி உன்னத உயிர் ஆத்ம நிலையில்
4.எண்ண உணர்வுடன் இயங்கக்கூடிய இவ்வுடல் கோளத்தின் சமைப்பில்
5.குணங்களைக் கொண்ட உணர்வு… உணர்வுக்குகந்த சுவை… சுவைக்குகந்த செயலாக… மனித வாழ்க்கை நிலை ஓடும் வழித் தொடரை…
6.நம் எண்ணத்தால் குண நிலையை நல்வழிப்படுத்தி
7.சாந்தமுடன் கூடிய வீரமான ஞானத்தைக் கொண்டு
8.இதுகாறும் இந்த உடல் இயக்கத்தில் நம்மை அறியாமல் நாம் வளர்த்துக் கொண்ட
9.குணமும் சுவையும் செயலும் வழித் தொடர் கொள்ளும் வழி நிலையைச் சமமான குணம் கொண்டு
10.நமக்கு மேல் வலுவாகத் தெய்வ நிலை பெற்ற… தெய்வ சக்தி பெற்ற “மகரிஷிகளின் தொடர்புடன்”
11.மேல் நோக்கிய காந்த மின் அலைத் தொடர்பினை நம் சுவாசத்தால் எடுக்க
12.நாம் இந்த உடலின் இயக்கத்தை உட்படுத்தினோம் என்றால்
13.மனித சக்தியின் உயர்ந்த உன்னத சக்தியை ஒவ்வொரு உயிராத்மாவும் பெற முடியும்.

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

நல்லதைக் காக்கும் சக்தியைப் பெற விரும்புவோருக்கு…

 

யாம் (ஞானகுரு) சித்தாவதற்கு முன் என்னுடைய ஆரம்ப வாழ்க்கையிலும் நான் நல்லதைச் செய்யப்படும் போது அதிலே எத்தனையோ சிக்கல்கள் வந்தது. அதிலிருந்தெல்லாம் மீண்டு தான் வந்தது.

நல்லதைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்பி இன்றும் எத்தனையோ பேர் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றார்கள். நல்ல உணர்வுடன் செய்யும் போது தீய உணர்வுகளில் சிக்கி அதிலிருந்து தப்ப முடியாதபடி இருக்கின்றார்கள்.

அதை எல்லாம் மாற்றிடும் சக்தி பெற வேண்டும்.

ஏனென்றால் வாழ்க்கையில் எதைப் பெற வேண்டும்…? எங்கே பெற வேண்டும்…? என்ற இந்த உணர்வு கொண்டுதான்
1.ஒவ்வொரு நிலையிலும் குருநாதர் காட்டிய நெறிகள் கொண்டு
2.அது எத்தனையோ சிரமங்கள் எல்லை கடந்து சந்தர்ப்பங்கள் செல்லும் பொழுது அதிலிருந்து மீள்வதற்கு
3.அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது…? என்று அவர் கொடுத்த சக்திகளைத் தான்
4.உங்களுக்குள் சொல்லாக… வாக்காக… இப்பொழுது கொடுத்துக் கொண்டே வருகின்றேன்.

ஆனால் ஆரம்பத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் போல் வேகமாக உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தேன்… அர்த்தத்தைக் காண முடியாத அளவிற்கு…! ஏனென்றால் இங்கே அதைப் பதிவு செய்வதற்காக அவ்வாறு செய்தது.

முதலிலே இந்தச் சக்திகள் காற்றிலே இல்லை. ஆகவே அந்த அருள் ஞானிகள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் இந்தக் காற்று மண்டலத்திலே பரப்பி வைப்பதற்காக வேகமாக உபதேசித்தேன்.

1.யாரெல்லாம் அதை ஏங்கிப் பெறுகின்றார்களோ… எண்ணும் போது அவர்களுக்குக் கிடைப்பதற்காகவும்
2.காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெறச் செய்வதற்கும்
3.எண்ணியவுடன் அந்த உணர்வுகள் வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் வேகமாக உபதேசித்து வந்தது.

ஆரம்ப நிலைகளில் சஷ்டிச் கவசத்தைக் கூட நான் பாடி இருக்கின்றேன். சில அன்பருடைய வீடுகளில் குருநாதர் எனக்குக் காட்டிய உண்மைகளை இரவு முழுவதும் விடிய விடியப் பேசியும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

உதாரணமாக மங்களூர் நாராயணசாமி வீட்டுக்குச் சென்றால் எல்லாக் கோவில்களுக்கும் மற்ற இடங்களுக்கும் சென்று வந்தது தான். கர்நாடகாவில் உள்ள பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார். மூகாம்பிகை கோவிலுக்கும் சென்று வந்தது தான்.

குருநாதர் காட்டிய வழியில் அனுபவங்கள் பெறுவதற்காக எல்லா இடங்களிலும் இவ்வாறு சுழன்று வந்தது. காரணம்…
1.எந்தப் புத்தகத்தையும் படித்து விட்டு நான் உங்களுக்கு உபதேசிக்கவில்லை.
2.குருநாதர் கொடுத்த சக்திகளை எல்லாம் எனக்குள் விளைய வைத்தேன்
3.அதிலே விளைந்த ஞான வித்தைத் தான் உங்களுக்குள் இப்பொழுது ஆழமாகப் பதிவு செய்கிறேன்.

ஆகவே இதை எல்லாம் பதிவு செய்யும் நீங்கள் ஒவ்வொருவரும்
1.உங்கள் குடும்பத்தில் வரக்கூடிய சிக்கலை நீக்குவதற்கு என்ன வழியோ
2.அந்த மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெற்று
3.அதை நீக்கக்கூடிய அளவிற்கு முதலில் “பயிற்சிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்…”

கோபமோ வெறுப்போ வேதனையோ மற்ற இன்னல்கள் வரும் பொழுதெல்லாம் அருள் உணர்வுகளைச் சேர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்

உங்களுக்குள் தீமைகளை நீக்கிய பின் அது யாரால் எவரால் அந்தத் தீமைகள் வந்ததோ…
1.நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் அந்த உயர்ந்த உணர்வு கிடைக்கச் செய்யும் விதமாக
2.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

யாரிடத்தில் நாம் பேசினாலும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை இணைத்தே வெளிப்படுத்த வேண்டும். அப்போது நமக்குள்ளும் அந்த அருள் உணர்வுகள் பெருகிக் கொண்டே வரும்.

மனிதன்… வழி தெரியாமல் சென்றதன் விளைவுகளைக் காணும் நேரம் வந்து விட்டது

மனிதன்… வழி தெரியாமல் சென்றதன் விளைவுகளைக் காணும் நேரம் வந்து விட்டது

 

மனித ஞானம் பெற்றுள்ள இன்றைய வளர் நிலைத் தொடர் நிலையையும்… மனிதன் தன் உயர்வின் வழி தெரியாமல் வாழ்க்கை ஓட்ட உருவ பிம்ப சரீர இச்சைக்கொப்ப மனிதனின் ஞானம் செயல் வழி சென்றதன் விளைவுகளையும்… காணும் நிலை வந்து விட்டது.

விஞ்ஞான விபரீதத்தால் அணுக் கதிர் இயக்க வீச்சின் விஷத் தன்மை அதிக அளவில் பரவியதால் இக்கலிக்குப் பிறகு பூமியின் பிரளய மாற்றமும் அதற்குப் பின் அடுத்த இன வளர்ச்சி நிலை… மனித வித்தின் ஞானம் செயல்படா வண்ணம்… செயலின் தொடரே மாறப் போகின்றது.

எந்த வளர்ச்சியில் மனிதக் கரு பல ஆயிரம் வருடங்களாக வளர்ச்சியுற்று வளர்ந்ததுவோ… அவ்வளர்ச்சியின் தொடர் வலுத் தன்மை வளரக் கூடிய வளர்ச்சி நிலை… பூமியின் விஷ அலையினால் மாற்றமாகிக் கொண்டிருக்கின்றது.

ஆகவே மாறப் போகும் இத்தருணத்தை ஒவ்வொரு மனிதனும் தன் உயர்வின் ஞானத்திற்கு உணர்வின் எண்ணத்தை உயிரின் ஆத்மாவிற்கு வலுக்கூட்டிக் கொள்வதே நல்லது.

வரப் போகும் விஷ அலையின் மாற்றத்திலிருந்து…
1.மனிதன் பெற்ற உயர்ந்த சக்தி நிலையான
2.பகுத்தறியும் ஞான வளர்ச்சி… செயல் திறமை… சொல்லாற்றலின் செயல் நிலை… யாவற்றையும்
3.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு சமமான சாந்த குணத்தால்
4.உடலில் உருவாகும் உயிரணு யாவற்றையும் உயர் ஞான அணுக்களாக
5.உயிர் ஆத்மாவின் வலுவுடன் வலுச் சேர்க்கும் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு செலுத்த வேண்டும்.

அதற்கு… மெய் ஞானிகளின் அலைத் தொடர்பைப் பெற்று இச்சரீர இயக்க ஓட்டத்தில் எண்ணத்தால் எடுக்கக்கூடிய வலுவைக் கொண்டு உயிர் ஆத்மாவின் வலுச் சக்தியைக் கூட்ட வேண்டும்.

காந்த மின் அணுக்கள் தன் இனமுடன் இனத்தை எப்படிச் சேர்த்துக் கொள்கின்றதோ அதைப் போன்று இச்சரீர இயக்கத்தில் ஓடும் அணுத் தன்மை யாவையும் மெய் ஞானிகளின் உயர் காந்த மின் அலையை ஜெபதபத்தினால் எடுத்துப் பழக வேண்டும்.

1.அதனின் வளர்ச்சி கொண்டு இயக்கப்படும் இணைப்பைக் கொண்டு
2.உயிராத்மாவின் வலுக்கூடக் கூட
3.இந்த உடல் என்ற கோளத்தின் உருண்டோடும் அணுவின் வளர்ச்சியில் இருந்து
4.ஆத்ம உயிரின் கன நிலை கூடிக் கொண்டே செயல் கொள்கின்றது.

சூரியன் தான் வளர்க்கும் கோளத்திலிருந்து… சூரியனின் தொடர்பு கொண்டு ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வலுக் கூடி வளர்ந்து கொண்டே உள்ளதோ அதைப் போன்று இச் சரீரத்தின் ஆத்ம உயிரின் வலுவும் வளர்கின்றது.

ஓர் உயிராத்மா பிறப்பெடுத்து வளர்ச்சி நிலை குறிப்பிட்ட வயது வரம்புடன் ஆத்ம வித்து வலுக் கொண்ட தன்மை கொண்டு உருவக வளர்ச்சி நின்று விடுகின்றது.

இந்தப் பூமி வளர்க்கும் ஜீவ சரீர இயக்கமும் தாவர வளர்ச்சியும் அவை எடுத்த வித்தின் உயிர் ஆத்ம வலுவின் நிலைக்கொப்ப வளர்ச்சி நிலை வாழும் காலம் மாறி மாறிச் செல்கிறது.

மாறி மாறி என்பது…
1.விதை ஒன்று போட்டு
2.அவ்விதையில் மரம் வளர்ந்து பலன் தந்து
3.அதன் சத்து நிலை உள்ள காலங்கள் வரை சததெடுத்து வளர்ந்து
4.பலன் தந்து கடைசியில் பட்டுவிடுகின்றது.

அதே சமயத்தில் இந்தப் பூமியின் உள் பகுதியில் உள்ள நீர்… மண் வளம்… கனி வளம்… இவற்றின் வளர்ப்பு நிலை கூடிக் கொண்டே உள்ளது. ஆக… உருவகத்தில் கனத்துக் கொண்டே “பூமி வளர்க்கும் உயிர் வளர்ப்பு யாவையும்” குறிப்பிட்ட சத்து நிலைக்கொப்ப தாவரமும் ஜீவராசிகளும் வாழ்ந்து மடிகின்றன.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற தொடர்புடனேயே மீண்டும் மீண்டும் சுழல விடாமல் உடல் கோளத்தின் உயிராத்மாவை என்றும் அழியா நிலைக்கு உயர்த்த வேண்டும்.

சூரியனுக்கும் பூமிக்கும் மற்றெந்தக் கோளத்திற்கும் இல்லா உயர் செயலை… நம் ஆத்ம உயிர் வலுவைக் கொண்டு
1.இன்றெப்படி சுவை எண்ணம் உணர்வு செயல் ஞானம் எல்லா இன்ப நிலைகளில் உடலில் பெறுகின்றோமோ
2.அதைக் காட்டிலும் இந்த உடலில் உள்ள எதிரிகளின் எதிர்ப்பு நிலையற்று மகிழ்ந்து வாழலாம்.

எதிரி என்பது இந்த உடல் அவயங்களில் ஏற்படக்கூடிய சோர்வு… பிணி… பசி… தூக்கம்… இத்தகைய எதிரிகளின் நிலையுமன்றி ஆத்ம வலுவின் வலுவைக் கூட்டி வலுவாக்கிக் கொண்டோமானால் வளர் தொடர் வளர்ச்சியின் வலுவாக நம் இயக்கச் செயல் “பிறவா நித்திய நிலையாகச் செயல் கொள்ளும்…!”

அதற்குத்தான் இந்த உபதேசமே…!