மனம் என்பது கண்ணாடி போன்றது… பக்குவமாகக் கையாளவில்லை என்றால் நொறுங்கிவிடும்…!

Image

mirror mind

மனம் என்பது கண்ணாடி போன்றது… பக்குவமாகக் கையாளவில்லை என்றால் நொறுங்கிவிடும்…!

நம் குடும்பத்திற்குள் சில குறைகள் வந்திடலாம். குறை வந்தால் அந்த பக்குவமாகச் செயல்படும் நிலைகள் குறையும். உதாரணமாக கண்ணாடியில் எழுத வேண்டும் என்று நினைத்து அதை ஓங்கி அடித்தால் என்ன ஆகும்…? கண்ணாடி சிதறிவிடும்.

அதே போல மனிதரின் மனங்களிலும் சிறு குறைபாடுகள் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.பக்குவமான நிலைகளில் செயல்படுத்த வேண்டும்.
2.நாம் சொல்லக்கூடிய பணிவில் தான் அந்தப் பக்குவம் இருக்கிறது.

சாதாரணமாக வீட்டில் உள்ள தூசியை மருமகள் பெருக்கிக் கூட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கூட்டும் போது தூசு விழுந்து விட்டதென்றால் ஏம்மா…! இந்தப் பக்கம் சிறிது தூசி இருக்கிறதே. இதையும் கொஞ்சம் சுத்தம் செய்துவிடலாமே…! என்று சொன்னால் இது பக்குவ நிலை.

ஆனால் அதை விட்டு விட்டுத் தூசியைக் கூட்டிக் கொண்டிருக்கும் போதே
1.பார்… வீட்டைக் கூட்டுவதைப் பார்…!
2.தூசியை விட்டு விட்டுக் கூட்டுகிறாய் பார்…! என்று சொன்னால்
3.அந்தச் சொல் என்ன செய்யும்…?

நான் நன்றாகத் தான் கூட்டுகிறேன்… என்னால் இப்படித்தான் கூட்ட முடியும்…! என்ற நிலையில் அங்கே பக்குவம் தவறுகிறது. இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய செயல்.

அதோ அந்த ஓரத்தில் கொஞ்சம் தூசு இருக்கிறதம்மா அதைக் கூட்டிவிடம்மா…! என்று மாமியார் சொன்னால் அந்த நேரத்தில் பக்குவபடச் செய்கிறது.

இதே மாதிரி அண்ணன் குழந்தையோ தம்பி குழந்தையோ மற்றவர்களின் குழந்தையோ குறும்புத்தனம் செய்து கொண்டிருப்பார்கள். ஏண்டா… இப்படிக் குறும்புத்தனமே பண்ணிக் கொண்டு இருக்கிறாய்…? என்று சொன்னால் என்ன ஆகிறது…?

குழந்தையைத் திட்டியவுடன்
1.என் பிள்ளையைத் திட்டுகிறார் பார்…! என்ற உணர்வு வருகிறது.
2.குழந்தையைத் திட்டியது அவர்களைத் திட்டியது போன்ற உணர்வு வருகிறது.

ஆனால் அதே சமயம் அதைப் பக்குவமாக எப்படிச் சொல்ல வேண்டும்…? கண்ணு… கொஞ்சம் பார்த்து நடப்பா.. நீ இந்த மாதிரிச் செய்யப்பா…! என்று பக்குவமாகச் சொன்னால் அந்தக் குழந்தைக்கு ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை சொன்னால் சரியாகி விடும்.

“ஏண்டா…?” என்று ஒரு தடவை அதட்டிச் சொல்லிவிட்டு அடுத்து அந்த மாதிரிச் செய்யாதே…! என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். பக்குவம் தவறினால் அந்தக் குழந்தையின் உள்ளங்களில் இதுதான் பதிவாகும். நாம் சொல்லும் நல்ல சொல் அங்கே இயக்காது. அது தான் அந்த பரிபக்குவம்.

நான் நல்லது செய்கிறேன்… ஆனால் இப்படிச் செய்கிறார்கள்.. எனக்கு இப்படிக் கஷ்டமாக இருக்கிறது…! என்று பல முறை புத்திமதி சொன்ன பிற்பாடும் அவன் கேட்கவே மாட்டேன் என்கிறான் என்று இப்படிச் சொல்லக் கூடாது.

ஐந்து முறை சொன்னாலும் ஆறு முறை சொன்னாலும் குழந்தை உள்ளங்களில் ஒரு முறை இல்லையென்றால் ஒரு முறை நிச்சயம பதிவாகும்.

நாம் ஒன்றைப் பார்க்கிறோம்… படிக்கிறோம்…! படித்தவுடன் அடுத்த முறை நினைவு வருகிறதா…? திரும்ப அதே போல அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தால் தான் மீண்டும் நமக்கு நினைவு வரும்.

நினைவு வரவில்லையென்றால் நான் அன்றைக்குப் படித்தேனே எனக்கு ஞாபகம் வரவில்லையே…! என்று சொன்னால் எப்படி இருக்கும்…?

இதே போல நாம் புதிதாக ஒரு வீட்டிற்குச் செல்லும் சமயம் சில குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். நான் அன்பாகத் தானே கூப்பிடுகிறேன். வரமாட்டேன் என்கிறான் என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…!

நான் (ஞானகுரு) இருக்கிறேன். எல்லோரும் என்னிடம் தாரளமாக வருவார்கள். என் பேரப்பிள்ளை (எல்லோரிடமும் போகிறவன்) நான் கூப்பிட்டால் வருவதில்லை.

அரவணைத்துச் சொன்னால் தான் அவன் நம்மிடம் வருவான். ஒரு முறைக்கு இரு முறை சொன்னவுடன் அப்புறம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வான். ஆகவே நாம் எங்கே சென்றாலும் அந்தப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

அந்தக் குழந்தைகளையோ மற்ற பிள்ளைகளையோ பார்த்தவுடன் கண்ணு…! இதை இந்த மாதிரிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது தப்பு..! இதை இந்த மாதிரி நீ செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அங்கே ஏற்றுக் கொள்ளும் நிலை வரும், ஏனென்றால்
1.நாம் சுவாசித்தது உயிரிலே பட்டவுடன் அதை நாதங்களாக ஆக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.
2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அதற்குரிய சொல்லாக நம்மை இயக்கும்
3.அதே சொல்லைக் குழந்தைகள் கேட்கும் போது அவன் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி நல்லதாகும்.

ஆனால் ஏண்டா சும்மா சேட்டை செய்கிறாய்…? என்று சொன்னால் என்ன ஆகும்…!
1.முதலில் நமக்குள் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.
2.நம் சொல்லைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.
3.அதாவது அந்த உணர்ச்சி நம்மை இது ஆள்கிறது.. அதே சமயம் அதைக் கேட்கும் அவனையும் அது ஆள்கிறது.
4.அதைத்தான் ஆண்டாள் என்று சொல்வது.

ஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எப்படி பக்குவப்படவேண்டும் என்ற நிலைகளைத்தான் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.

அந்த ஞானிகள் காட்டிய வழியிலே நாம் சென்றால் இந்த வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

தங்கமாக்கச் செய்யும் கொங்கணவமாமகரிஷி

Konganar -tirupathi

தங்கமாக்கச் செய்யும் கொங்கணவமாமகரிஷி

அன்று மெய்ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வுகளை அரசர்கள் மந்திர ஒலி கொண்டு மனித உடலுக்குள் ஊடுருவச் செய்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றல் மிக்கதாகப் பெருக்கிக் கொண்டார்கள்.

1.ஆயிரம் தரம்… ஒரு இலட்சம்… இரண்டு இலட்சம்… தடவை ஜெபித்தால்
2.ஆற்றல்மிக்க சக்தி வருகிறது என்று சொல்லி
3.ஒரே உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது மந்திர சக்திகள் கூடுகின்றது.
4.இதற்கென்று ஒரு மூலத்தை முன் வைத்திருப்பார்கள்.

மூலம் என்பது ஒவ்வொரு அரசனும் ஒவ்வொரு நிலை கொண்டு மந்திரம் செய்வார்கள். இன்று நாடி சாஸ்திரங்களைப் பார்க்கலாம். இந்த நாடிகள் என்றோ எழுதியது இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாடிகள் அனைத்தும் அரசர்களால் எழுதப்பட்டதுதான்…! (ஞானிகளும் மகரிஷிகளும் நாடிகளை உருவாக்கவில்லை)

அரசனாக இருக்கப்படும் பொழுது அவன் தன் உடலை விட்டுச் சென்றபின் இன்னொரு உடலுக்குள் போக வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த நாடியை எழுதினார்கள்.

அதை எழுதி இன்னொரு உடலுக்குள் மாறவேண்டும் என்று கூடு விட்டுக் கூடு பாயும் தந்திரத்திலே செயல்படுத்தி அடுத்தவர் உடலுக்குள்ளே புகுந்து விடுவார்கள்.

புகுந்த உடலுக்குள் தன் உணர்வின் தன்மையை அங்கு செயலாக்கி மற்ற அரசர்களின் போர் முறையிலிருந்து தப்பித்துத் தன் உணர்வின் நிலையை இன்னொரு நிலைகளுக்கு நிலைப்படுத்தச் செய்தார்கள். இப்படித்தான் நாடி சாஸ்திரத்தின் நிலைகள் வந்தது.

இவ்வாறு வந்த நிலைகளில்தான் அரசனாக இருந்த பிருகு ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலும் திருவள்ளுவர் காலத்தில் தான் அவர் கொங்கணவர் உடலுக்குள் வந்தது.

பிருகு பல உடல்கள் மாறி மாறி இதைப் போன்று நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி ஆற்றல்மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர்.

அப்படித் தேடி அலைந்து வரப்படும் பொழுதுதான் வீட்டுக்கு வீடு யாசகம் தேடிய கொங்கணவருடைய உடலில் புகுந்து அந்த ஆற்றலின் நிலைகளை இந்த உடலிலிருந்து எடுத்து வந்தார்.

பிருகு முந்தைய நிலைகளில் அரசனாக இருக்கும் பொழுது மனித உடலுக்குள் மந்திரத்தைச் செருகி அதில் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை.

1.போர் முறைகளினுடைய நிலைகளாலும் பிறிதொரு நிலைகளாலும்
2.தான் விண் செல்ல முடியவில்லை என்று அறிந்த பின்புதான்
3.கொங்கணவரின் உடலுக்குள் வந்து தான் விண் செல்வதற்காக
4.ஒவ்வொரு மனிதரையும் புனிதமாக்கும் நிலைக்கு வந்தார்.

தான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றிய அவர்கள் எண்ணும் நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே தன்னை அந்த ஒளிச் சரீரம் பெற வைக்கும் என்று உணர்ந்து கொண்டார்.

அதை உணர்ந்த நிலையில் தன் “மனதைத் தங்கமாக்குவதற்காக…” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார். இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
1.மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.
2.கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்…” இன்றும் திருப்பதியில் உண்டு.

மெய்யை உணர்ந்து ஞான ஸ்தானம் என்ற நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வந்து அங்கே குடி கொண்டு மந்திர சக்தியினுடைய நிலைகளை மாற்றிவிட்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறுவதற்குச் செயல்பட்டார்.

முன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் – முருகனின் சிலை. வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.

அந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.

போகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.

பின் வந்த அரசர்கள்தான் இதைப் பல நிலைகளுக்கு மாற்றி விட்டார்கள். திருப்பதியிலே பொருளாசையைத்தான் காட்டிச் சென்று விட்டார்கள். திருப்பதிக்குச் சென்றால் நாம் என்ன செய்கின்றோம்…?

தங்கத்தைக் கொண்டு போய் திருப்பதியிலே அபிஷேகம் செய்துவிட்டு எனக்குத் தங்கத்தைக் கொடு…! என்கிறோம். தங்கத்தை உண்டியலிலும் போடுகின்றோம். வியாபாரத்திற்கு வருபவரிடம் திருப்பதிக்குப் போகிறோம் என்று காணிக்கையாகக் காசு வாங்கிவிட்டு அங்கே கொண்டு போய்ச் செலவழித்துவிட்டு வருகின்றோம்.

லாபம் ஜாஸ்தி வந்துவிட்டால் உனக்குக் கொஞ்சம் பங்கு கொடுக்கின்றேன் என்று கொண்டு சொல்கிறோம்.
1.இந்த மன சுத்தத்தைப் பங்கு போடுவதற்கோ
2.இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனமோ அங்கே வருவதில்லை.
3.காரணம் மனிதன் தன் வாழ்க்கைக்குத்தான் இவையெல்லாம் பயன்படுத்த முடிந்ததே தவிர
4.மெய் ஒளியை யாரும் காண முடியவில்லை.

கொங்கணவ மாமகரிஷி மனதைத் தங்கமாக்கினார். ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் செலுத்தப்படும் பொழுது அந்தப் பாசத்தினாலே எல்லாமே கூட்டமைப்பாக வருகின்றது என்று உணர்ந்து கொண்டார்.

1.ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீக்கிவிட்டால் மனம் தங்கமாகின்றது.
2.மனம் தங்கமாகும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் செயலாகின்றது.
3.ஆகவே நாம் அனைவரும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்
4.தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறுவோம்.

அகஸ்தியன் மின் கதிர்களை நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான் – அவன் பெற்ற சக்திகளை அவன் சகாக்கள் பெற்றுச் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

Image

உரைகல்

அகஸ்தியன் மின் கதிர்களை நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான் – அவன் பெற்ற சக்திகளை அவன் சகாக்கள் பெற்றுச் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்

 

பிறந்த பின் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் அகஸ்தியன் வானை நோக்கிப் பார்க்கின்றான். மின்னல்கள் பல வழியில் தாக்குகின்றது. அதை உற்றுப் பார்த்த அந்தக் குழந்தையோ
1.அந்த மின் கதிர்களின் உணர்வை தனக்குள் நுகர்ந்து அதை அடக்கும் வலிமை பெறுகின்றது.
2.சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்களை நுகருகின்றான்.
3.மின் அணுக்களைப் போன்று தன் உயிரின் அணுக்களை மாற்றும் தன்மை வருகின்றது.

புழுவை ஒரு குளவி கொட்டினால் அதனின் விஷத் தன்மைகள் பாய்ந்து புழுவின் உணர்வுகள் மாற்றமடைந்து புழுவை வளர்த்த அந்த உயிர் குளவியின் உணர்வை நுகர்ந்து குளவியாக உருமாறுகின்றது.

இதைப் போலத் தான் தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் உற்றுப் பார்த்த உணர்வின் தன்மை கருவிலே விளைந்து அகஸ்தியன் பிறந்தபின் மின்னல்களையும் சூரியனிலிருந்து வரும் விஷத் தன்மைகளையும் கருக்கிவிட்டுத் தன் உடலிலிருக்கும் அணுக்களை எல்லாம் ஒளிக் கதிர்களாக மாற்றும் நிலை வருகின்றது.

ஒரு மின் மினிப் பூச்சியை எடுத்துக் கொண்டால் அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் இயக்கத் தொடரில் மின் ஒளிகளை அது தன் உடலிலிருந்து வெளிப்படுத்தும்.

அது போன்று அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களும் நஞ்சை ஒடுக்கி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.

அவன் குழந்தையாகத் தவழ்ந்து வரும் போது அவன் அருகிலே வரும் பாம்பினமோ கொசு இனமோ விஷ வண்டுகளோ மிருகங்களோ யானைகளோ இவன் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைக் கண்டு அஞ்சுகின்றது… ஒடுங்குகிறது… இவனைத் தீண்டுவதில்லை… இவன் அருகிலே வருவதற்கு அஞ்சுகின்றது. அதனுடைய விஷத்தின் வலிமையையும் இழக்கின்றது.

இதை உற்றுப் பார்த்த அன்று வாழ்ந்த மக்கள் இது கடவுளின் பிள்ளை என்று இவரை வணங்கத் தொடங்குகின்றனர்.

குளவி கொட்டியபின் புழுவினுடைய தன்மைகள் மாறி அது குளவியானபின் மீண்டும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல ஒரு கூட்டை அமைத்து தன் இனத்தைப் பெருக்குகின்றது.

அதே போல அகஸ்தியனுக்குள் இருக்கும் உணர்வுகள்
1.நஞ்சை ஒடுக்கிடும் உணர்வின் அறிவை அவனுக்கு ஊட்டி
2.இதன் வழி கொண்டு அவன் அரும் பெரும் சக்திகளை எல்லாம் பெறுகின்றான்.

மிருகங்கள் இவனைத் தாக்குவதில்லை என்ற நிலைகளை அறிந்த பின் அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும் போது படைகள் போன்று அவன் பின்னாடி மக்கள் செல்கின்றனர்.
அவன் கடவுளின் அவதாரம் இவன் காட்டு அரசன் என்று அவனைப் போற்றித் துதிக்கும் நிலையும் வணங்கும் நிலையும் அக்காலங்களில் வருகின்றது.

தன் ஐந்தாவது வயதிற்குள் பூமிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எவ்வாறு கிடைக்கின்றது…? இது எப்படி விளைகின்றது..? எதன் வழி விளைகின்றது என்று அவன் அறிகின்றான்.

அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் உணர்வின் தன்மை ஒளியாகச் சூரியன் எவ்வாறு பிறந்ததென்ற உணர்வையும் அறிகின்றான். அவன் கண்ட உண்மையை அக்கால மக்களிடம் வெளிப்படுத்துகின்றான்.

அக்கால மக்கள் அவன் சொல்வதின் உணர்வை அறியாத நிலை வரும் பொழுது அகஸ்தியன் உணர்ச்சியின் தன்மையைக் கூட்டி இயற்கையின் இயக்கத்தை ஜாடையாகக் காட்டி அதன் வலிமையைக் காட்டுகின்றான்.

ஐந்தாவது வயதில் பூமியின் துருவத்தை உற்று நோக்கி அதிலிருந்து வரும் விஷத் தன்மையை நுகர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் அணுத் தன்மையைத் தனக்குள் வளர்க்கிறான்.

அகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அவன் உணர்கிறான்.

அணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.

இந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள மற்ற சகாக்களுக்கும் சொல்கிறான்.

அவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நகர்ந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.
1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.
2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.
3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.

கஷ்டத்தையும் வேதனையையும் நீக்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

Computer

கஷ்டத்தையும் வேதனையையும் நீக்க எப்படித் தியானிக்க வேண்டும்…? 

விஞ்ஞான அறிவு கொண்டு இப்போது கம்ப்யூட்டரில் (RECORD) பதிவு செய்து வைத்துக் கொள்கின்றார்கள். தட்டி விட்டவுடனே அதனுடைய இயல்பைத் தெரிந்து கொள்கின்றார்கள்.

அதே போல் தான் மனிதர்கள் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். சண்டை போடுவதை எண்ணியவுடனே நமக்கும் கோபம் வந்து விடுகின்றது. நம் நல்ல காரியத்தைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

கோவிலுக்குப் போய் நாம் தெய்வத்தை வணங்குகின்றோம். வணங்கி வரும் பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால்
1.“நடக்கவில்லையே… நடக்கவில்லையே…!” என்று எண்ணி
2.என்னத்தைச் சாமியைக் கும்பிட்டு என்ன பண்ணுவது…? என்று இதைப் பதிவு செய்து விடுகின்றோம்.

(இந்த ரிக்கார்டைத் தட்டியவுடன்) அதாவது சோர்வாக எண்ணியவுடன் நல்லதை எடுக்க முடியாமல் போய்விடுகின்றது. ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகள் எல்லாமே
1.நம் எலும்புக்குள் எண்ணிலடங்காத நிலைகளில்
2.ரிக்கார்டு பண்ணி வைத்துக் கொள்கின்றது.
(விஞ்ஞானி இதையெல்லாம் எலெக்ட்ரானிக் சாதனங்களின் மூலம் அந்தப் பதிவின் இயக்கங்களை (ELECTRONIC CONTROL) நிரூபித்துக் காட்டுகின்றான்.)

உதாரணமாக தன் குழந்தையை எண்ணி
1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் தான் பண்ணுகின்றான்
2.யாரிடம் சொன்னாலும் கேட்க மாட்டான்… அவன் அப்படித்தான் செய்வான்…! என்று பதிவு வைத்துக் கொள்வார்கள்.

அதே போல் மனைவி மேல் கணவனுக்கு வெறுப்பு வந்து விட்டால் அதைப் பதிவு செய்து கொள்வார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாம்மா… என்று மனைவியைக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்களோ வேலையில் கவனமாக இருப்பார்கள். கணவன் சொன்னது சரியாகக் காது கேட்டிருக்காது.

பாருங்கள்… எப்போது பார்த்தாலும் நான் கூப்பிட்டால் சரியாகக் கவனிப்பதே இல்லை…! என்று அடுத்துக் கோபமாகப் பேசுவார்கள். அதே மாதிரி இப்போது கணவரின் கோபத்தைப் பார்த்தவுடனே மனைவி என்ன செய்வார்கள்.
1.ஏதாவது ஒன்று என்றால் கொஞ்சம் கூடப் பொறுத்துச் சொல்லாதபடி
2.எப்பொழுது பார்த்தாலும் “என்னைக் குற்றவாளியாக்குகின்றாரே…!” என்பார்கள்
3.ஆக இத்தகைய வெறுப்பான உணர்வுகள் தான் குடும்பத்தில் வளர்கின்றது.

நீங்கள் சங்கடமாக இருக்கும் போது உங்களுடைய செயல்கள் எப்படி இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். உதாரணமாக ஒரு துணியை வாங்க ஜவுளிக் கடைக்குப் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்கள் குழந்தை ஏதாவது ஒன்றைக் கேட்டு அடம் பிடிக்கிறது. அப்பொழுது என்ன சொல்வீர்கள்…?

ஏன்டா வெளியிலே போகும் போது இப்படிப் பண்ணுகின்றாய் என்ற சங்கடம் வரும். அடுத்து வெறுப்பு உணர்வு வரும். அப்புறம் கோபம் வரும். இத்தனையும் எடுத்துக் கொண்டு நீங்கள் கடைக்குள் போகின்றீர்கள். அந்த நேரத்தில் வெறுப்பு உணர்வு தான் உங்கள் கண்ணிலே வரும்.

நல்ல துணிகளாக எடுத்துக் காண்பிப்பார்கள். எதைப் பார்த்தாலும் இது வேண்டாம்… அது வேண்டாம்… என்று சொல்லிக் கடைசியில் வெறுப்பின் உணர்வு கொண்டு சடைத்துப் போய் “சரி இதையாவது கொடுங்கள்…!” என்று ஒன்றை எடுத்துக் கொண்டு வருவீர்கள்.

வீட்டுக்கு வந்தவுடன் துணியை எதிர்பார்த்துச் சந்தோஷமாக இருப்பவர்கள் இந்தத் துணியைப் பார்த்ததும்… “என்னங்க…! போயும் போயும் இந்தப் புடவையைத் தான் எடுத்து வந்தீர்களா…!” என்பார்கள்.

இல்லை…இல்லை… இந்தத் துணிக்கு என்ன குறைச்சல்…? என்பீர்கள். அவர்கள் உங்களிடம் நன்றாகப் பாருங்கள்…! என்பார்கள். ஏனென்றால் அன்றைக்குத் தெரியாது.

மறுநாள் காலையில் பார்த்தீர்கள் என்றால் நல்ல துணி இல்லை என்று தெரிய வரும். “சனியன்…! நான் போகும் போது குறுக்கே வந்துவிட்டது. அடம் பிடித்து நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான் சனியன் பிடித்த பயல்…!” என்று மீண்டும் அந்தச் “சனியன்” என்று தான் சொல்வோம்.

யாரை…? இந்த உணர்வுகள் தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது அந்த வெறுப்பு வருகின்றது. அவனை எண்ணிக் கொண்டு நீங்கள் சமைக்கச் சென்றாலும் சரி… காயை அறுக்கும் பொழுது நேராக அறுப்பதற்குப் பதில் சாய்த்துப் பிடிக்க வைக்கும். கையில் பட்டுவிடும்.

ஆ,..! என்று சொல்லி வெறுப்பாகி இன்னும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பையனைத் திட்டுவீர்கள். வேதனை இன்னும் அதிகமாகும். இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம். இது எதைச் செய்கின்றது…? சந்தர்ப்பங்கள் தான் செய்கின்றது.

இப்படி மற்றவர்கள் சண்டை போடுவதையும் குடும்பத்தில் வரும் கஷ்டங்களையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். அந்தப் பதிவின் நிலைகளை எண்ணும் பொழுது அதன் வழியிலே தான் உங்களை அது வழி நடத்துகின்றது.

ஆனால் இந்தக் கஷ்டத்திலிருந்து எப்படி மீள்வது…? என்று நாம் திகைப்போம்…! இருந்தாலும்… அதை நாம் மறந்து (அந்தப் பதிவை இயக்கவிடாது)
1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.இந்த உணர்வை எடுத்தால் நமக்குள் அருள் சக்திகள் பெருகுகின்றது
3.சிந்திக்கும் ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது
4.சிரமங்களிலிருந்து நம்மை மீளச் செய்கின்றது – நமது எண்ணம் தான்…!

நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்று இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றார்கள் ஞானிகள்.

நம் ஆறாவது அறிவு என்ன செய்கின்றது…? அது இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. எதன் மேல் நாம் இச்சைப்படுகின்றோமோ அது கிரியையாகி அதன் ஞானமாகத்தான் வருகின்றது.

வாழ்க்கையில் நாம் எதை ஞானமாக உருவாக்க வேண்டும் என்ற நிலையில் ஞானிகள் ஆலயங்களிலே தெய்வீகப் பண்புகளைக் காட்டி அதைப் எல்லோரும் பெறும்படி செய்தார்கள். அந்த உணர்வினை நுகர்ந்தால் நாம் தெய்வமாகின்றோம்.
1.சிலையை உருவாக்கி அந்தச் சிலை வடிவில் ஞானத்தை ஊட்டி
2.நாம் தெய்வமாக எப்படி மாற வேண்டும்…?
3.நம் சொல்லும் செயலும் எப்படித் தெய்வீக நிலையாக மாற வேண்டும்…? என்று
4.நம்மைத் தெய்வமாக்குவதற்காகத் தான் அவ்வாறு காட்டினார்கள்.

இந்த உடலில் எத்தனை காலம் நாம் வாழுகின்றோம்…? வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்குவதற்காகத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வினை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றேன்.
1.நீங்கள் எந்த அளவுக்குக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கின்றீர்களோ
2.அந்த அளவிற்குத் திரும்ப எண்ணும் போது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் மகரிஷிகள் உணர்வைப் பெற்றேன்.
4.அதே உணர்வின் தன்மையை இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.
5.இந்தப் பதிவின் நினைவை நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்.
6.நாம் தெய்வ சக்திகளைப் பெறுகின்றோம். ஞானிகள் மகரிஷிகளுடன் ஒன்றுபடுகின்றோம்.

மழை பெய்வதை ஐந்தறிவு கொண்ட ஒரு தவளை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டு சப்தமிட்டு வரவேற்கின்றது – ஆறு அறிவு கொண்ட நாம் “சனியன் பிடித்த மழை…” என்று அதைத் திட்டிப் போகச் சொல்கின்றோம்

Image

raining-003

மழை பெய்வதை ஐந்தறிவு கொண்ட ஒரு தவளை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டு சப்தமிட்டு வரவேற்கின்றது – ஆறு அறிவு கொண்ட நாம் “சனியன் பிடித்த மழை…” என்று அதைத் திட்டிப் போகச் சொல்கின்றோம்

 

தேர்தல் நேரத்தில் பய உணர்வு கொண்டு அங்கே இப்படிச் செய்கிறார்கள்… இங்கே இப்படி எல்லாம் செய்கிறார்கள்…! என்று இப்படிப்பட்ட மனித எண்ணங்கள் அங்கே கலந்தவுடனே ஒரு முழுமையான நிலை இல்லாதபடி ஊரே கலங்கிப் போய்விடுகிறது.

ஏனென்றால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இப்படி ஆகின்றது.

பதினெட்டாம் பெருக்கு என்றால் முன்பெல்லாம் ஆறுகளில் குளங்களில் தண்ணீரைப் பார்க்கலாம். மகிழ்ச்சியான எண்ணங்களைப் பரப்பி நல்ல மழை பெய்ய வேண்டும் என்று அந்தக் காலத்தில் சொன்னார்கள்.

அதனால் அப்பொழுது மழையும் பெய்தது. அப்பொழுது அவர்கள் எண்ணங்கள் அனைத்தும் வானை நோக்கிப் பார்த்துப் பேரானந்தப்பட்டார்கள்.

உதாரணமாக தவளை என்ன செய்கிறது…? மழை இல்லாத காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் சேற்றுக்குள்ளே போய் ஒளிந்து கொள்கிறது. அப்படி ஒதுங்கித் தனக்குள் எடுத்துக் கொண்ட ஜீவ சத்து கொண்டு மேல் தோலை மூடிக் கொள்கின்றது. ஏனென்றால்
1.தன் உடலில் இருக்கக்கூடிய அந்த நீர்ச் சத்து முழுவதும் போய்விடாதபடி
2.அதற்குள்ளேயே (உள்ளேயே) தங்கிக் கொள்கின்றது.

அடுத்து மழை பெய்தது என்று சொன்னால் பெரிய பெரிய தவளை எல்லாம் நீங்கள் பார்க்கலாம். ஆனால் மழை இல்லாத காலத்தில் பாருங்கள். தவளைகள் ஜாஸ்தி இருக்காது. நீங்கள் பார்க்க முடியாது.

மழை பெய்தவுடனே தவளை எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியாதபடி குர்ரான்…குர்ரான்… குர்ரான்…குர்ரான்… ஆனந்தமான சப்தத்தை எழுப்பிக் கொண்டு வெளியே வருகிறது.
1.மழை நீரைப் பார்த்துத் தன் உடலில் இருக்கின்ற தோலை உறித்துக் கொண்டு
2.ஆனந்தமாக வெளியில் வருகிறது.

மழை நீருக்காகப் பல நாள் ஒளிந்திருந்து அந்தக் குளிர்ச்சியான நிலைகளான பின் வெளியில் வந்துமீண்டும் தன் இனத்தின் கருவை வெளியிட்டுத் தன் இனத்தை அதிகமாகப் பெருக்குகின்றது.

ஐந்தறிவு கொண்ட தவளை மழை பெய்வதற்குச் சப்தத்தைக் கொடுத்துக் கொண்டு வருகிறது. ஆனால் இன்றைய மனிதர்கள் நாம் மழை பெய்தாலே நாம் என்ன சொல்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்…!

தான் உடுத்தியிருக்கும் துணை அழுக்காகிவிடும். வெளியிலே காயப்போட்ட துணியோ மற்ற எந்தப் பொருளானாலும் ஈரமாகிவிடுகின்றது என்று இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லி
1.சனியன் பிடித்த மழை இந்த நேரத்திலா வர வேண்டும் என்று
2.திட்டி அதைப் போகச் சொல்கின்றோம்.

இப்படிப்பட்ட மனிதனுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மழை பெய்வதைத் தடுத்து விடுகிறது. ஆனால் இப்படித் தடுத்தாலும் அதெல்லாம் ஒரே இடத்தில் ஒன்று கூடி பேய் மழையாகப் பெய்து ஊரையும் மக்களையும் வெள்ளக்காடாக மாற்றி அழித்தும் விடுகிறது.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டு அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பழகுதல் வேண்டும்.

ரோட்டிலே ஒரு பொருள் தங்கம் போன்று மின்னினால் உடனே அதை எடுக்க வேண்டும் என்று ஓடுகின்றோம் – அந்த உடல் (பொருள்) ஆசையால் ஏற்படும் விளைவுகள்

Image

immortal-bliss

ரோட்டிலே ஒரு பொருள் தங்கம் போன்று மின்னினால் உடனே அதை எடுக்க வேண்டும் என்று ஓடுகின்றோம் – “உடல் (பொருள்) ஆசையால் ஏற்படும் விளைவுகள்”

 

செல்வத்தைத் தேட வேண்டும் என்று ஆசையில் இருக்கின்றோம். ரோட்டில் இரண்டு பேர் சேர்ந்து நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். போய்க் கொண்டிருக்கும் போது தரையில் தங்கம் மாதிரி மின்னுகின்றது. மின்னியவுடனே என்ன செய்கின்றோம்…?

1.நம்முடைய ஞாபகம் எல்லாம் அதன் மீது போய்விடுகிறது.
2.உடனே அதைப் போய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.
3.நம்முடன் வந்தவரிடம் கூட “தங்கம் மாதிரி ஏதோ மின்னுகிறது…!” என்று சொல்வதில்லை.
4.கொஞ்சம் இருங்கள்…! இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு
5.ரோட்டிலே மின்னிக் கொண்டிருப்பதை ஓடிப் போய் எடுக்கப் போகிறோம்.

எடுக்கப் போகும் போது இந்தப் பக்கம் பஸ் வருகிறதா…? எல்லது வேறும் எதுவும் வருகிறதா…? என்று பார்ப்பதில்லை. ஏனென்றால் அந்த ஆசையின் உணர்வின் இயக்கம் அப்படித்தான்.

அப்போது என்ன நடக்கிறது…? பஸ் வந்தது என்றால் அடித்துத் தூக்கிப் போட்டு விடும். அதை நாம் பெற முடிகிறதா…? அதை எடுக்க முடியவில்லை.

இதே மாதிரித் தான் நம்முடைய உடல் ஆசை வரப்படும்போது இந்தப் பக்குவ நிலை தவறி விடுகின்றோம். எந்தக் காரியம் செய்தாலும் நம் சிந்தனைகள் தவறி அதனுடைய விளைவாக எப்பொழுதுமே அது நம்மைக் குறை உள்ளதாக மாற்றிவிடும்.

அதே சமயத்தில் நாம் உடல் ஆசை கொண்டு
1.என்னை இப்படிப் பேசினான்… அப்படிப் பேசினான்…
2.எல்லோருக்கும் நான் நல்லது தான் செய்தேன்…
3.ஆனால் என்னை இந்த மாதிரிப் பேசிக் கொண்டு இருக்கிறான் என்றால் இது எல்லாம் சாகாக்கலை.

அவர்கள் பேசுவது எல்லாம் நமக்குள் சேர்ந்து நம் உடலிலே அதை வளர்த்துக் கொண்டு
1.எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்…! எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்…! என்று
2.இந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு உடலிலே நோயாகி
3.யாரை எண்ணி அப்படிப் பேசினோமோ அவர்கள் உடலுக்குள் போய்
4.அந்த நோயைத்தான் பெருக்குகிறோம். இது சாகாக்கலை.
5.இந்த உடலில் எதை எடுக்கின்றோமோ அது அடுத்த கலையாக மாறுகின்றது.

ஆகவே உடல் என்ற இந்த ஆசை தான் நமக்கு வருகிறதே தவிர இந்த உயிர் என்ற ஆசை வருவதில்லை. அதைத்தான்
1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்
2.என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா……! என்று
3.நம் உயிரிடம் வேண்டி இந்தப் பாடலைப் பாடுகின்றோம்.

உயிர் எப்படி ஒளியாக இருந்து நீ எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ இதைப்போல வாழ்க்கையில் இருள் நீக்கி ஒளியான உணர்வின் தன்மையாக என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் வர வேண்டும். தீமை புகாது நான் தடுத்துப் பழக வேண்டும்.

நீ ஒளியாக இருந்து எல்லாவற்றையும் நீ உருவாக்குகின்றாய். ஒளியாக இருந்து நீ எப்படி எல்லாவற்றையும் அறிகின்றாயோ அதைப்போல
1.எல்லாவற்றையும் அறிந்திடும் ஞானம்
2.அதாவது ஒளியின் தன்மை பெற்று பொருளறிந்து செயல்படும் நிலை பெற வேண்டும்.
3.அந்த உயிர் ஆசை தான் எனக்குத் தேவை.

உடல் ஆசை என்றுமே எனக்குள் வளர்ந்து விடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்திட வேண்டும் ஈஸ்வரா. அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியின் உணர்வாக ஏகாந்த நிலை நாங்கள் பெறவேண்டும்.

நெருப்பிலே போட்டால் எப்படி எல்லாப் பொருள்களையும் அது கருக்கி விடுகின்றதோ அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தால் தீமைகள் அனைத்தும் செயலிழந்து நமக்குள் சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது.

சூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரம் என்றுமே அழிவது இல்லை. அது வேகா நிலை பெற்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் வேகா நிலை பெறுகின்றோம். எதுவுமே நம்மை அழிக்காது.

குடும்பத்தைக் காப்பதற்காக மிகுந்த வேதனைப்படுகின்றோம்… அது ஏன் எதனால் வருகிறது…? என்று அறியாத வயதில் நான் குருவியை உயிருடன் எரித்ததை வைத்து உணர்த்தினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி

Image

Soul Alive

குடும்பத்தைக் காப்பதற்காக மிகுந்த வேதனைப்படுகின்றோம்… அது ஏன் எதனால் வருகிறது…? என்று “அறியாத வயதில் நான் குருவியை உயிருடன் எரித்ததை வைத்து உணர்த்தினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி”

 

இப்பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் துருவ நிலையின் நேராக வடகிழக்காகத் துருவ நட்சத்திரமாக அமைந்துள்ளான்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் விஷத்தின் தன்மைகள் வந்தாலும் ஒளியின் சுடராக அது மாற்றிக் கொண்டே உள்ளது.

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பிரபஞ்சத்தில் அலைகளாகப் பரவச் செய்து கொண்டே உள்ளது.

அவ்வாறு பரவச் செய்து கொண்டிருக்கின்ற அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமது பூமி துருவத்தின் வழி கவர்கின்றது.

இப்படித் துருவத்தின் வழியாக வரும் உணர்வுகளை எம்மை (ஞானகுரு) நுகரச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அதை நுகரச் செய்து என் உடலுக்குள் வந்த தீமைகளை மாற்றியமைக்கும் முறையைச் சொன்னார்.

அப்போது அந்த முறையைச் சொல்லும் போது நான் சொன்னேன். நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது என்னை அறியாது எத்தனையோ தவறுகள் செய்துள்ளேன்.

என்னுடைய சிறு வயதில் குருவியைப் பிடித்து அதை உயிருடன் அப்படியே நெருப்பிலே போட்டு வாட்டியிருக்கிறேன். உயிரோடு அது வேதனைப்படுவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன்.

அது துடித்துச் சாவதையும் பார்த்திருக்கிறேன். அப்போது அது அப்படி எரிச்சலானதோ அந்த உணர்வுகளை எல்லாம் நான் எனக்குள் பதிவு செய்திருக்கிறேன் சாமி…! என்று சொல்கிறேன்.

அப்பொழுது நீ அனுபவிக்கத்தான் வேண்டும் என்கிறார் குருநாதர். அதிலிருந்து தப்புவதற்கு என்ன சாமி பண்ணுவது…? என்று கேட்கிறேன்.

நீ தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அது வேதனைப்பட்ட உணர்வை உன் கண்ணால் உற்றுப் பார்த்தாய். அந்த உணர்வை நுகர்ந்தாய். அப்பொழுது ஊழ்வினை என்ற வித்தாக விளைந்தது. நீ இது வரையிலும் அதை மாற்றவில்லை.

ஆனால் நீ தெரிந்து தவறு செய்யவில்லை… குழந்தைப் பருவம்…! இதிலிருந்து மீட்டுவதற்கு இன்று நீ தெரிந்து கொண்டாய். தன்னில் தெரிந்தோ தெரியாமலோ சேர்த்த உணர்வினை அகஸ்தியன் கொன்றுள்ளான். சர்வ தீமைகளையும் வென்றுள்ளான்.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின் உணர்வை அதை நீ கவர்ந்தாய் என்றால் இதை மாற்றியமைக்கலாம்.

நீ வெறுமனே அதை மாற்றியமைத்து விடுவேன் என்று எண்ணித் தவறு செய்து கொண்டே மாற்றி விடலாம்… மாற்றி விடலாம்…! என்று எண்ணிக் கொண்டேயிருந்தால் உன்னைத் தவறின் எல்லைக்கே அழைத்துச் சென்று விடும் என்ற நிலையை எச்சரிக்கை செய்தார்,

பல விதமான வித்துகள் நிலத்தில் ஊன்றப்பட்டுள்ளது. அதனதன் உணர்வின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அது விளைகின்றது.

நாம் நல்ல நெல் வித்துகளைப் பக்குவப்படுத்தி நிலத்திலே ஊன்றுகின்றோம். ஆனால் அதிலே களை என்ற வித்துக்கள் நிறைய வளர்ந்து விடுகின்றது. களையை மாற்றவில்லை என்றால் நீ இந்த நெல் மணிகளைப் பார்க்க முடியுமா…? அந்தத் தாவர இனத்தின் சத்தைப் பார்க்க முடியுமா…! முடியாதல்லவா…!

இதைப்போல
1.உனக்குள் ஊழ்வினை என்ற வித்துக்கள் எண்ணிலடங்காது இருக்கின்றது.
2.அது உள்ளேயே தான் அது இருந்து கொண்டே தான் இருக்கும்.
3.அது தன் உணர்வைக் கவர்ந்து இந்த ஆன்மாவில் பெருக்கிக் கொண்டேதான் இருக்கும்.

கவலையோ சஞ்சலமோ இதே போன்ற உணர்வை நீ வேடிக்கை பார்த்தால் இதன் துணை கொண்டு உங்கள் ஆன்மாவில் வந்து விடும். நீ இளமையில் செய்த உணர்வின் தவறை இன்றும் செய்ய வைத்துவிடும். அப்போது இது போன்று செய்யாமல் தப்ப வேண்டும் அல்லவா என்று உணர்த்துகின்றார்.

நிலத்தில் ஊன்றைய பயிரைக் காக்க அவ்வப்போது நீ களைகளை எப்படி நீக்குகின்றாயோ அது போல தீமையின் உணர்வை மாற்றுவதற்குண்டான நிலைகள் செய்ய வேண்டுமா இல்லையா…?

அப்போது தான் இந்த உணர்வுகளைத் தூண்டி நான் இளமைப் பருவத்தில் இருந்த அக்கால நிலைகளுக்கு அழைத்துச் செல்லுகின்றார்.

எவ்வளவு ஆனந்தப்பட்டாயோ… மகிழ்ச்சியடைந்தாயோ… சந்தோஷப்பட்டாயோ.. இப்பொழுது அந்த உணர்வுகள் “எவ்வளவு சந்தோஷமாக வருகின்றது என்று பார்…!” என்று என்னை நுகரச் செய்தார். (படம் பிடித்ததைப் போன்று காட்டுகின்றார். நீங்களும் உங்கள் காலத்தை எண்ணிப் பார்த்தால் தெரிய வரும்.)

உனக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகின்றது. உன் இரத்தத்தில் எவ்வளவு வேகமாகப் போகின்றது என்று சொன்னார். ஒரு அரை மணி நேரமாகியது.

1.அந்தக் குருவி அது எரியும் போது எப்படி வேதனைப்பட்டதோ
2.அந்த எரிச்சல் உன் உடலில் இரத்தத்தில் இப்பொழுது எப்படி வருகின்றது என்று பார்…!
3.அந்த எரிச்சல் உன் உடலில் இரத்தத்தில் எவ்வளவு எரிகின்றது என்று பார்…!
4.இந்த இரத்தம் உன் உடல் உறுப்புக்குள் செல்லப்படும் போது இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் எப்படி அது எரிச்சல் அடைகின்றது என்பதனைப் பார்…!

இதை யார் செய்தது…? உனது விளையாட்டுத்தனத்தில் நீ செய்தாலும் உன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் இயக்கமாக உன்னை இயக்குகின்றது. ஏனென்றால்
1.நம்மை உருவாக்கிய இந்த உயிர் தான் கடவுள்.
2.இருந்தாலும் நமது உயிர் நீ தப்பு செய்யாதே என்று சொல்லுமா…! அது சொல்லாது.
3.கிடைத்த உணர்வின் தன்மையை உணர்த்திக் காட்டும் அதிகாரம் உயிருக்கு உண்டு.

ஆறாவது அறிவு கார்த்திகேயா இதைத் தெரிந்து கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு நுகர்ந்த தீமைகளை மாற்றிட அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உனக்குள் பெருக்கிக் கொள்தல் வேண்டும்.

உன்னில் அறியாத செய்த தீமையை அதனை நீ குறைத்துக் காண வேண்டும். அதைக் குறையச் செய்ய வேண்டும். அதன் வலுவை உனக்குள் இயக்கச் செய்யாதபடி நீ பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவி எப்படி எரிந்தது என்று அப்போது தெரியாது. குஷியாக இருந்திருப்பாய். இப்போது பார்… உனக்குள் எப்படி எரிச்சல் வருகின்றது என்று அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

ஒருவர் வேதனைப்படும்படி நாம் திட்டினால் நமக்குக் குஷியாக இருக்கின்றது. அதே வேதனை உணர்வைச் சேர்த்துக் கொண்ட பின் இதைப்போல ஒரு இரண்டு வார்த்தை அதிகமாகப் பேசும் பொழுது என்ன செய்கின்றது…?

அந்த எரிச்சலும் வேதனையும் நம் உடலுக்குள்ளும் வருகின்றது. அப்போது இதைக் காட்டிலும் அது வலுவாக வருகின்றது. ஆரம்பத்தில் இளம் பருவத்தில் இருப்பதனால் அதை உணர முடியவில்லை. இப்பொழுது அதை எனக்குள் உணர்த்திக் காட்டுகின்றார்.

இப்படி எல்லாம் உணர்த்திக் காட்டிய பின் எனக்குச் சிந்தனை வருகின்றது. நான் எவ்வளவு பெரிய பிழையைச் செய்திருக்கின்றேன்…? இதைப்போல என் எதிர்கால வாழ்க்கை அமைந்து விடுமா… என்று…!

இதைப் போன்ற அனுபவங்களை எல்லாம் குருநாதர் பாட நிலை போன்று வாயிலே சொல்லாகச் சொல்லவில்லை. காட்டுக்குள் செல்லப்படும் போது நான் இன்ன இடத்தில் இருக்கின்றேன்… வா…! என்று சொல்லிவிட்டு இவர் விலகிச் சென்று விடுகின்றார். அப்பொழுது பல தொல்லைகள் எனக்கு ஏற்படுகின்றது. பல இன்னல்களைச் சந்திக்க நேர்கின்றது.

அதே சமயத்தில் என்னுடைய (ஞானகுரு) குழந்தைகளைப் பற்றிய நினைவையும் கொடுக்கின்றார். அந்த நினைவைக் கொடுப்பதற்காக ஒரு குரங்குக் கூட்டதைச் சந்திக்கும்படி செய்தார்.

ஒரு குரங்கு அது குட்டி போடுகின்றது. மற்ற குரங்குகளெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு வந்து அந்தக் குட்டியைப் பார்த்து ஆசீர்வாதம் கொடுக்க விரும்புகின்றது. .

ரவுடிக் குரங்கைப் பார்த்ததும் மற்ற எல்லாக் குரங்கும் கிஜு… கிஜு… கிஜு… என்று கத்துகின்றது. இது அமைதியாக இருந்து வாயிலே முத்தம் கொடுத்துக் காண்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகின்றது.

எல்லாக் குரங்குகளும் அமைதியாக இருந்து அதையே பார்க்கின்றது. பக்கத்திலே வந்தவுடனே அந்தத் தாய்க் குரங்கு வீச்… வீச்… என்று கத்துகின்றது.

அப்புறம் கொஞ்ச நேரம் அமர்கின்றது. அது பாஷையிலே சொல்கின்றது, நான் ஒன்றும் செய்யவில்லை என்று அதுவும் பல்லைக் கெஞ்சிப் போகின்றது. போய் அந்தக் குட்டியைத் தொட்டு ஆசிர்வாதம் கொடுத்துவிட்டுச் செல்கின்றது.

அந்தக் குட்டியைத் தொடும் போது எல்லாக் குரங்குகளும் உஷாரகப் பார்க்கின்றது. அந்தக் குரங்கு போன பிற்பாடு தாய் எப்படிப் பாதுகாப்பாகக் கொண்டு போகின்றது என்று குருநாதர் காட்டுகின்றார்.

அப்போது தான் எனக்கு… நாம் மனிதனாக இருக்கின்றோம். பிள்ளை குட்டிகளை எல்லாம் விட்டு விட்டு இங்கே வந்து விட்டோமே…! என்ற இந்தச் சிந்தனை வருகின்றது. அந்தச் சிந்தனையைத் தூண்டி இங்கே வேதனைப்படக்கூடிய உணர்வெல்லாம் ஊட்டுகின்றார்.

ஒன்றும் தெரியாத பட்சியை நெருப்பிலே அன்று நீ சுட்டாய் அல்லவா…? அதன் உணர்ச்சிகள் எப்படி இருக்கும்…? அதே உணர்ச்சிகள் சேர்ந்து இங்கே சோர்வடையப்படும் போது என்றோ செய்த நிலைகள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக உன் உடலிலே எத்தனை விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது பார்…! என்று அனுபவ ரீதியில் காட்டுகின்றார்.

தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் உடலிலே ஊழ்வினை என்ற வித்தாகி அதனுடைய பருவ காலம் வரும் பொழுதெல்லாம் அதனுடைய வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றது. அதை நீ மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றாய்…? என்று என்னிடம் கேட்கின்றார் குருநாதர்.

மாற்றி அமைப்பதற்கு நான் என்ன வைத்திருக்கின்றேன்…?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்தக் காற்றிலே பரவியுள்ளது. அதை நீ பெறுவதற்காக உனக்குள் நான் பதிவு செய்துள்ளேன்.

நான் கொடுத்த பதிவின் துணை கொண்டு அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி நீ பெற்றால் மன உறுதி உனக்குள் வருகின்றது.

அந்த மன உறுதி வரப்படும் போது நீ இங்கிருந்தே உன் குழந்தைகளுக்கும் உன் மனைவிக்கும் அந்த அருள் சக்திகளை ஆசிர்வாதமாகக் கொடுக்கலாம்.

இல்லையென்றால் நீ வேதனைப்பட்டு குழந்தை இப்படி இருக்கின்றதே மனைவி இப்படி இருக்கின்றதே என்று எண்ணினால்
1.அவர்கள் அங்கே சிந்திக்கும் திறனை இழக்கத்தான் செய்வார்கள்.
2.ரோட்டில் நடந்து செல்லப்படும் போது திடீரென்று விபத்துகள் ஏற்பட நீயே…
3.அதாவது நீ வேதனைப்படும் உணர்வே காரணம் ஆகி விடுகின்றது.
4.உனது பாசம் அவர்களைச் சிரமப்படுவது மட்டும் இல்லாதபடி
5.உன் பாசம் விபத்தில் சிக்கச் செய்து விபரீத நிலைகளுக்கு நீ அவர்களை ஆளாக்க நேரும் என்ற இந்த உணர்வைக் காட்டுகின்றார்.

இதை அப்படியே காட்டுகின்றார். (நான் இருப்பது திருப்பதியில்) அங்கே பழனியில் என் கடைசிப் பையன் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றான். குருநாதர் வழக்கமாக இருக்கின்ற டீக்கடை பக்கம் இவன் ஓடிக் கொண்டிருக்கும் போது ஒரு கார் ஒன்று வருகின்றது.

அவன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கார் வருவதைப் பார்க்காமல் எதிர்பார்க்காமல் உடனடியாகத் திரும்பிவிடுகின்றான். அந்தக் காரிலே அடிபடும் நிலையாக நீ எண்ணிய உணர்வுகள் உன் பையன் அங்கே எப்படிச் சிக்குகின்றான் பார்…! என்பதைக் காட்டுகின்றார்.

அந்த டீக்கடைக்காரர் எனக்குத் தெரிந்தவர் தான். நான் திருப்பதியிலிருந்து மீண்டும் பழனிக்கு வந்த பின் “உன் பையன் இந்த மாதிரி அன்றைக்குத் தப்பித்ததே பெரிது…!” என்றார். ஆனால் மலையில் இருந்தவாறே எனக்கு பழனியில் நடப்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.

உன்னுடைய நினைவலைகள் அங்கே என்ன செய்கின்றது…? அவனைக் காக்க முடிந்ததா…? குரங்கு குட்டி போட்டது என்று எண்ணி அதைக் காத்தது.

ஆனால் உனது பிள்ளையைப் பார்க்க முடியாமல் விட்டு விட்டு இங்கே வந்து விட்டோமே என்று வேதனைப்படுகின்றாய். வேதனைப்படும் உணர்வால் அவனை உன்னால் காக்க முடிகின்றதா…? என்று எனக்குத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இதைப்போல இயற்கை ஒரு மனிதனின் உடலில் உருவாவது தன்னைச் சார்புடையவரை எவ்வாறு இயக்குகின்றது…? பழகிய நண்பனே துரோகம் செய்தான் என்று எண்ணும் பொழுது அவனுடைய சிந்தனையை எப்படி மாற்றியமைக்கின்றது…?

பாசத்திற்கும் வெறுப்பு உணர்விற்கும் இரண்டிற்கும் வித்தியாசப் படுத்தினாலும் அது மற்றவன், இது உன்னுடைய பாசம். அந்த வேதனை என்ற உணர்வு அவனைக் காட்டிலும் துரித நிலைகள் கொண்டு உன் குழந்தையைக் காக்க முடியாமல் போகின்றதே…! நீ என்ன செய்ய போகின்றாய்…! என்று காட்டுக்குள்ளே போகும் போது இதைக் காட்டுகின்றார்.

குருநாதர் சொன்னபடி மீண்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஊட்டி என் குழந்தைக்கு நல்ல சிந்தனை வர வேண்டும், அவனுக்கு தெளிவான மனம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டே போனேன்.

இருப்பினும் உள்ளே உள் உணர்வு இருக்கத்தான் செய்கின்றது. இந்த உணர்வின் அழுத்தங்கள் வரப்படும் போது மற்ற மிருகங்கள் உயிரினங்களைக் காட்டிலும் மனிதனாகி இப்படி ஆகி விட்டதே என்ற வேதனை எப்படி வருகின்றது…? என்பதைக் காட்டுகின்றார்.

அடுத்து என் மனைவி படுகின்ற அவஸ்தையையும் காட்டுகின்றார். பெரிய பையன் செய்கிற தவறையும் காட்டுகின்றார். மற்ற பெண் குழந்தைகள் படக்கூடிய அவஸ்தையையும் காட்டுகின்றார், எல்லாம் காட்டுக்குள் வைத்தே காட்டுகின்றார்.

இத்தனையும் பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்…? அந்த குரங்கைக் காட்டி உனது பாசம் இங்கே எப்படி வேலை செய்கிறது என்று உணர்த்தும் பொழுது எனக்குள் என்ன எண்ணம் தோன்றுகின்றது…?

என்ன வாழ்க்கை…! சாமியாவது… கத்திரிக்காயாவது…! என்று இதைத்தான் எண்ணுகின்றேன். குருநாதர் காட்டிய வழியில் எல்லாவற்றையும் தெரிந்து வருவதற்கு முன்னால் அவர்கள் நரக வேதனையைச் சந்திக்கின்றார்களே… என்ற வேதனை வருகின்றது.

அப்போது என் உடலை மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வருகின்றது.
1.இந்த மலையிலிருந்து உருண்டு விடலாம்…
2.இரண்டாவது தீயை வைத்துக் கொளுத்திக் கொள்ளலாம் என்று வருகின்றது.

உடலை வருத்தி அழித்துக் கொண்டால் வேதனைப்பட வேண்டி வரும். தீயைப் போட்டு எரித்துக் கொண்டால் உடனே இறந்து போய் விடலாமல்லவா…! என்ற எண்ணம் வருகிறது.

அப்போது அந்த உணர்வின் எண்ணம் எனக்குள் வரும் போது தான் குருநாதர் மறுபடியும் காட்டுகின்றார். நீ எந்தக் குருவியைச் சுட்டாயோ அந்த உணர்வின் நினைவலைகள் உனக்குள் எப்படிக் கிளர்ந்து வருகின்றது என்று பார்த்தாயல்லவா…? என்று நிதர்சனமாகவே காட்டுகின்றார்.

இது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எப்படி சகஜமாக இது நடக்கின்றது என்பதை எனக்குக் காட்டினார். ஏனென்றால்
1.இந்த உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ அதைத்தான் இயக்குகின்றது.
2.எதன் உணர்வுகள் நமக்குள் வருகின்றதோ அதன் உணர்ச்சிகள் தான் எண்ணம் சொல் செயல் என்று வருகின்றது.

தீமையான உணர்வுகள் உடலுக்குள் வரும் பொழுது தீய அணுக்கள் உருவாகி உடலிலே இரண வேதனைப்படும் நோய்களும் வருகின்றது. இன்றைய செயல் நாளைய வாழ்க்கையாக எப்படி அமைகின்றது…? என்பதனை அங்கே உணர்த்துகின்றார்.

நல்லது பெறவேண்டும் என்று எண்ணிய நிலைக்கொப்ப இந்த உடலை உருவாக்கியது இந்த உயிர். உடலை உருவாக்கிய நிலையில் தீயிலே நீ குதித்தால் உடல் கருகி விடுகின்றது. கருகிய உணர்வுடன் இந்த உயிர் இணைந்தே செல்கின்றது. அடுத்து எங்கே செல்வாய்…?

எந்தப் பையன் மேலே நீ பாசமாக இருந்தாயோ அவன் உடலுக்குள் இந்த உயிர் புகுந்து விடும். நீ இப்படி மரணமடைந்த செய்தியைக் கேட்டால் அனும் தீயிலே விழுந்து கருகத்தான் செய்வான்.

அவன் கருகிய பின் அவன் உடலுக்குள் புகுந்த நீ என்ன ஆவாய் தெரியுமோ…? எரி பூச்சியாகத்தான் பிறப்பாய் என்று இப்படியே சொல்கிறார் குருநாதர். சில பூச்சிகள் உடலில் பட்டால் சூடு போட்டது போல் ஆகும். அதைக் காட்டுகின்றார்.

அந்தப் பூச்சியை என் மீது விடவும் செய்கின்றார். கண்ணங்கரேல் என்று அந்த பூச்சி என் உடலின் மீது அது போகும் எல்லாம் சூடு போட்டது போல் ஆகின்றது.

நீ எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து விடுபட்டு நீ மனிதனாக வந்தாய். ஆனால் தீயை வைத்து நீ உன்னை மாய்த்துக் கொண்டால் மீண்டும் எரி பூச்சியாக நீ போவாய்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனும் எந்தெந்த ஆசை கொள்கின்றானோ அது நிறைவேறவில்லை எனும் பொழுது தற்கொலை பண்ணுகின்றான். பேயாசை கொண்டு வேதனைப்படுகின்றான்.

இத்தகைய நினைவுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உடலை விட்டுச் சென்றபின் யார் யார் மேல் பாசமும் வெறுப்பும் வைத்தானோ அந்த உடலுக்குள் சென்று பேயாகச் செயல்படும். உடலில் பேய் வந்து ஆடுகின்றது என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு முந்தைய நிலைகளில் செய்த தவறுகளை நீ உணர்கின்றாய். திருந்த எண்ணுகின்றாய். திருந்தி வாழ விரும்புகின்றாய். நீ தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் என்ன செய்கின்றது என்பதனை நீ அறிந்து வாழ் என்றார் குருநாதர்.

இதைப் போன்ற தீமைகளிலிருந்தெல்லாம் விடுபடும் உபாயமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற்றாய் என்றால் உனக்குள் அறியாது செய்த உன்னைத் தவறான வழியில் அழைத்துச் செல்லும் தீமைகளை அது மாற்றிவிடுகின்றது.

இப்படி மாற்றுவதற்குத்தான் உனக்கு அனுபவ ரீதியில் இதைக் கொடுத்தேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்

curse-rays

சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்

மற்றவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக சிலர் சாபமிட்டு மண்ணைத் தூவி விட்டு வந்து விடுவார்கள். “இன்னார் குடும்பம் நாசமாகப் போகட்டும்…!” என்று சொல்லி மாரியம்மன் கோவிலில் எல்லாம் மண்ணைத் தூவுவார்கள். மண்ணை எடுத்து ரோட்டில் வீசுவார்கள்.

1.மண்ணைத் தூவினால் நாசமாகப் போய்விடும் என்ற பயத்தின் உணர்வை இங்கே பதிவாக்கப்படும் போது
2.அவன் சொன்ன அலைகளை மீண்டும் அவர்கள் நினைக்க அதனின் இயக்கமாக
3.அவன் சாபம் இட்டது போலவே “எனக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே…!” என்பார்கள்.

தெய்வத்திடம் போய் என்ன செய்கின்றோம்…? காணிக்கைச் செலுத்தி இதை மாற்றுவதற்குப் பல உபாயங்களைக் கடைப்பிடிக்கிறோம்.

ஒரு மனிதனின் உடலில் கெடுமதியான உணர்வுகளை உருவாக்கிப் பகைமை உணர்வு கொண்டு நாசமாக வேண்டும் என்று சொல்லப்படும்போது அதைப் பார்த்துவிட்டு நம்மிடம் மற்றவர் வந்து சொல்லும் பொழுது
1.என்ன…? உங்கள் பெயரைச் சொல்லி இந்த மாதிரி மண்ணைத் தூவுகிறார்கள் என்று சொன்னால்
2.அந்த உணர்வைச் “சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகின்றோம்…!” அதை மீண்டும் மீண்டும் நினைவு கொள்கின்றோம்.
3.அவர் இட்ட உணர்வை எடுத்து நமக்குள் அணுவாக வளர்க்கத் தொடங்குகின்றோம்.
4.அவர் இட்ட சாபத்தை நமக்குள் வளர்த்து நமக்கு நாமே தண்டனை கொடுக்கின்றோம்.
5.மனிதனின் வாழ்க்கையில் இது இயக்கிக் கொண்டுதான் உள்ளது.

தீமை செய்வோனைப் பார்த்தால் நமக்குச் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும் அவர் உடலிலே விளைந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே வெளிப்படும் போது அதை என்ன…? என்று உற்றுப் பார்த்து அந்த உணர்வினை அறிந்தால் நம் உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகிறது.

அவன் செயலை மீண்டும் மீண்டும் எண்ணினால் அவன் எந்தச் செயலைச் செய்தானோ அந்த உணர்வின் உணர்ச்சியைக் கூட்டி அதுவே குருவாக வருகின்றது.

சில காலம் போய்விட்டால் அவன் தவறு செய்கிறான் என்று எண்ணுகின்றோம். ஆனால் நாம் தவறு செய்பவனாகவே மாறி விடுகின்றோம். இதில் அவன் செய்த தீமையான செயலைப் பற்றி நாம் நியாயத்தையும் தர்மத்தையும் பேசலாம். பேசினாலும்…
1.பிறருடைய குறைகளைத்தான் நாம் வளர்த்துக் கொள்கிறோமே தவிர
2.குறைகளை நீக்கும் அருள் சக்தியை நமக்குள் பெருக்கும் தன்மையை இழந்தே வாழுகின்றோம்.
3.இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீளுதல் வேண்டும்.

அத்தகையை தீமைகளிலிருந்து மீண்டிடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுதல் வேண்டும். அவன் துணை கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் ஞானத்தை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

நமக்கு முன்னாடி அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உண்டு. அதைப் பெறவேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் வருகின்றது.

அப்பொழுது அகஸ்தியர் பெற்ற நஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் குருவாக வந்து நம் வாழ்க்கையில் வரும் நஞ்சான உணர்வுகளை மாற்றிடும் அருள் சக்திகளைப் பெறுகின்றோம்.

1.அது தான் குரு காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டிய முறைகள்
2.குரு காட்டிய அந்த நெறியைக் கடைப்பிடித்து
3.குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு நிமிடமும் பெ\ற்று
4.நம்மை அறியாது இயக்கும் சாப வினை பாவ வினைகளிலிருந்து விடுபட வேண்டும்.

குருவுக்கும் நம் உயிருக்கும் கொடுக்க வேண்டிய காணிக்கை எது…?

Image

divine-guru-master

குருவுக்கும் நம் உயிருக்கும் கொடுக்க வேண்டிய காணிக்கை எது…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) அருள் ஞான வித்தைப் பதிவு செய்தார். அவர் காட்டிய வழியைச் சீராகக் கடைப்பிடித்து அதன் வழி நடக்கப்படும் போது அருள் வித்துகளை உருவாக்க முடிகிறது.

அதுவே சொல்லாக வரும் போது அதை நீங்கள் பதிவாக்கினால் உங்களுக்குள்ளும் ஞான வித்தாக உருவாகின்றது. நீங்கள் எடுத்து அதை வளர்த்துக் கொண்டால் தீமைகளை அகற்றும் உணர்வாகக் குருவாக நின்று அது உங்களைக் காக்கின்றது.

1.என்னை நீங்கள் குருவாக மதித்தாலும்
2.என்னை நீங்கள் போற்றித் துதித்தாலும்
3.எனக்கு மாலை மரியாதைகள் செய்தாலும்
4.எனக்குச் செல்வத்தைக் கொடுத்தாலும்
5.அதுவெல்லாம் குருவுக்குச் செய்யக்கூடிய காணிக்கை அல்ல.

அருள் ஒளி கொண்டு மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்து பகைமையை நீக்கிடும் அருள் சக்தியை நீங்கள் எப்போது பெறுகின்றீர்களோ அது தான் குருவுக்குக் கொடுக்கக்கூடிய காணிக்கை ஆகும். நீங்கள் மகிழ்ந்து வாழ்வதே என்னை மகிழச் செய்யும் நிலை ஆகும்.

அதைப் போல நீங்களும் மற்றவர்களுக்கு அந்த மகிழ்ச்சியின் உணர்வை ஊட்டி அவரைக் கண்டு நீங்களும் மகிழும் தன்மை வந்தால் அதுவே குருவாகி உங்களுக்குள் நல்லதாகும்.

இருளை அகற்றி அருள் ஞானத்தை வளர்த்திடும் நிலையாக உயிரான குருவுக்குச் சேர்க்கும் காணிக்கையும் அது தான்.

ஆகவே அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்ப்போம் என்றால்
1.அருள் குருவின் தன்மையாக
2.”உயிர்…” நமக்குள் என்றும் அருள் உணர்வாக இயக்குகின்றான்.
3.அறிவாக இயக்குகின்றான்… தெளிவாக்குகின்றான்… ஒளியாக மாற்றுகின்றான்…!
4.இதனின் நிலையை ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.

நான் இப்பொழுது சொல்லும் சொல் இலேசாக இருக்கும். “இதில் எத்தனையோ… கடின நிலை இருக்கும்…!”
1.கடுமை என்று எண்ணினால் கடுமைகள் உண்டு.
2.ஆனால் இதை எப்படியும் பெறுவோம் என்று உறுதி பெற்றால் அந்தக் கடுமையை நீக்கிடலாம்.
3.நமக்குள் அருள் ஞானத்தைப் பெருக்கலாம். இருளை அகற்றிடும் வலிமை பெறலாம்.
4.இவ்வுலகில் இனி எதிர்ப்பில்லாத உணர்வாக நமக்குள் வளர்க்கலாம்.
5.என்றும் ஏகாந்த நிலை என்று நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெறலாம்.

நமது குரு காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்வதற்காகத்தான் யாம் இந்தத் தியானத்தைக் கொடுக்கின்றோம்.

என்னமோ தினமும் வரிசையில் சொல்லிக் கொண்டே வருகிறேன் என்றால் பொருள் தெரியாது.
1.பொருளின் தன்மைகளை ஒரு சமயம்…
2.அது அது காலம் வரும் போது தான் உணர்த்துகின்றோம்.
3.இப்பொழுது யாம் உபதேசிப்பதை ஆழமாகப் உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்
4.மீண்டும் நினைவு அந்தத் தக்க சமயத்தில் அருள் ஞானத்தைப் பெருக்கும் வலிமையாக உங்களுக்குள் நிச்சயம் வரும்.

பேரருள் பேரொளியை நமக்குள் பெறச் செய்யும் “புருவ மத்தி வழி தவம்”

third eye meditation

பேரருள் பேரொளியை நமக்குள் பெறச் செய்யும் “புருவ மத்தி வழி தியானம்”

அகஸ்தியர் துருவ மகரிஷியான நிலையும் துருவ நட்சத்திரமான நிலையும் அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற்றால் ஒளியாக மாற்றிடும் நிலை பெறலாம்.

அந்த அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றோர்கள் அந்தப் பேரருளும் பேரொளியும் பெற்று அவன் உணர்வைத் தனக்குள் எடுத்து அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

அதை நாம் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஒரு நிமிடம் நேராக ஏங்கிப் பெறுங்கள்.

பின் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி நினைவைச் செலுத்துங்கள் – ஒரு நிமிடம்.

அடுத்து கண்களை மூடி உயிரான ஈசனிடம் வேண்டி நினைவினை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.பேரருள் என்றால் இயக்கச் சக்தியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக ஆனது.
2.அதன் அறிவும் ஒளியும் என்றும் நிலையானது (அழிவே இல்லாதது)

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் புருவ மத்தியில் எண்ணி ஏங்கும் போது
1.அந்தப் பேரருளின் உணர்ச்சியும் அந்தப் பேரொளியின் ஒளியும் உங்களுக்குப் புருவ மத்தியில் தெரியும்
2.அதன் உணர்வு சிறிது நேரமானால் உங்கள் உடலில் இருந்து ஒரு வித வெளிச்சம் ஏற்படும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தித் துருவ நட்சத்திரத்துடன் நினைவினை இணைத்து அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று “புருவ மத்தியின் மூலமாக… ஏங்கித் தியானியுங்கள்…!”

1.அருள் என்றால் இயக்கம்
2.இயக்கத்தால் மோதுண்டு ஒளி என்ற நிலைகள் மாறும்.
3.இருளை அகற்றி ஒளி பெறும் உணர்வே பேரருள் பேரொளி என்பது.
4.அந்த ஒளி சக்தி உள் நின்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சமாக வெளிப்படும்
5.உங்கள் உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசமாக…
6.தீமைகள் புகாது தடுக்கும் பேரொளியாக அது அமையும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்யுங்கள்.

கண்ணன் கருவிலே இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்பது போல்
1.கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி
2.அருள் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று
3.அந்த உணர்வின் தன்மையை உங்கள் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான அணுக்களும் பெற வேண்டும் என்று
4.பேரொளியாக மாறும் அந்த உணர்வின் உணர்ச்சியை உடலுக்குள் ஊட்டுங்கள்.

இப்பொழுது அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த மூலிகை மணங்கள் உங்கள் சுவாசத்திற்குள் நுகர்ந்து இழுப்பது போல் வரும். உங்கள் உடலிலிருந்து நஞ்சைப் பிரித்திடும் அருள் மணமாக அது உங்களுக்குள் வரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவன் தன் மனைவிக்குப் பெறவேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து ஏங்கித் தியானிங்கள்.
1.இப்போது சப்தரிஷி மண்டலங்களைக் காட்சிகளாகவும் காணலாம்.
2.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உங்கள் புருவ மத்தியில் மோதும் பொழுது
3.பல விதமான வண்ணங்களில் ஒளிகளைக் காணலாம்.
4.உங்கள் வாழ்க்கையில் இது மகிழ்ச்சியூட்டும் பேரானந்த நிலையாக இது அமையும்.

எம்முடைய ஞான உபதேசத்தின் உணர்வுகளைத் தொடர்ந்து பதிவாக்கிக் கொண்டே வருபவர்கள் நிச்சயம் மேலே சொன்ன அத்தனையும் பார்க்கலாம்… உணரலாம்…!

[su_button url=”https://eswarabattar.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D” target=”blank” style=”soft” background=”#ffffff” color=”#5d23f5″ size=”4″ radius=”20″ icon_color=”#141bf3″ text_shadow=”1px 1px 1px #5b3cde” rel=”lightbox” title=”மாமகரிஷி ஈஸ்வரபட்டர்”]புருவ மத்தியின் இரகசியங்கள்[/su_button]

Luminous Polaris and Big dipper