நாம் பணிய வைக்க வேண்டியது எதை…?

நாம் பணிய வைக்க வேண்டியது எதை…?

 

ஓ…ம் ஈஸ்வரா என்று சொல்லும் போது பிரணவம்… நாம் எண்ணியதை உயிர் ஜீவன் பெறச் செய்கின்றது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும் அது எங்கள் உடல் முழுவதும் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள்.

கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருங்கள்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த உணர்வு
2.அந்த உயர்வின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியைப் பெறச் செய்யும்.

இந்நேரம் வரை உபதேசித்த அந்த ஆற்றல் மிக்க சக்தியை “நீங்கள் எண்ணும் போதெல்லாம் எண்ணியவுடனே அதைக் கிடைக்கச் செய்து…” உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் அனைத்தையும் தாழ் பணியச் செய்வதே “எமது ஆசி” (ஞானகுரு).

ஆகையினால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி உயிரிடம் வேண்டித் தியானியுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போருக்கெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும்…! என்று இதே மாதிரி நான் சொன்னதை நீங்கள் எண்ணி எடுத்துப் பாருங்கள்.

உங்களுக்குள் துன்பத்தை ஊட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகள் அனைத்தும்
1.அது தாள் பணிந்து… உங்களுக்குள் அது ஒத்துழைத்து… உயர்வான எண்ணங்களுக்கு வழி காட்டியாக அது அமையட்டும்.
2.எதுவும் கெட்டதல்ல… உங்களுக்கு அது வலுவூட்டும்… வழி காட்டியாகவும் அது இருக்கும்
3.கெட்டது என்று அது தான் காட்டுகின்றது… அதை நீக்கிவிட்டு நாம் செல்ல வேண்டும்.

கெட்டது என்று வழி காட்டினாலும் அந்த உணர்வின் தன்மை அது எனக்குள் சேர்ந்து விடுகிறது. ஆனால் வழி காட்டிய நிலைகள்
1.எனக்குள் பணிந்து அந்த நல் வழி காட்டியாக இருக்க வேண்டும்.
2.அந்த நல் வழி காட்டிய விஷம் என்னை ஆட்கொள்ளக் கூடாது.

மெய் ஒளி பெறும் அந்தத் தகுதி கொண்டு நாம் அதைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் ஆசி வாங்குவது. ஆகையினால் இதை மீண்டும் மீண்டும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

1.அரசனுக்குக் கீழ்படிதல் என்பது கௌரவத்திற்காகத் தான்…!
2.ஒரு பெரியவரைக் கண்டால் அடிபணிதல் வேறு.
3.ஆனால் நமக்குள் துன்பங்களைப் பணியச் செய்வது என்பது வேறு.

ஆகவே மெய் ஒளி வளர்ந்து நமக்குள் தீமை செய்து கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மையைத் தாழ் பணியச் செய்ய வேண்டும் என்பதே ஆசீர்வாதமாகக் கொடுக்கும் அருள் வாக்கின் தன்மைகள்.

நீங்கள் ஒவ்வொருவரும் மெய் ஒளி பெறவேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன் (ஞானகுரு).

“தியானத்தில் சக்தி பெறுகிறோம்…” என்பதை நாம் எப்படி அறிவது…? – ஈஸ்வரபட்டர்

“தியானத்தில் சக்தி பெறுகிறோம்…” என்பதை நாம் எப்படி அறிவது…? – ஈஸ்வரபட்டர்

 

தியானத்தின் முறை கொண்டு நம் எண்ணம் ஞானத்தின் ஈர்ப்பு நிலைக்கு வழி பெறும் காலங்களில் வளர்ச்சி நிலை எப்படி இருக்கும்…?

குழந்தைப் பிராயத்தில் குழந்தையின் உடல் மற்றும் அங்க அவயங்கள் உறுப்புகள் எல்லாம் மிருதுத் தன்மையுடன் இருக்கின்றது. பிறகு வளர வளர உடல் உறுப்புகளும் தசை நார்களும் வலுப் பெற்று வளர்கின்றது.

அதைப் போன்று நம் ஆரம்பத் தியானத்தில் நம் எண்ண நிலை எல்லாம் வளர்ச்சி பெற்று.. ஒரு நிலை பெற்று… பக்குவம் எய்தி… அதன் ஈர்ப்பின் வழித் தொடருக்குப் பிறகு பல நிலைகளை நாம் காணலாம்.

நம் எண்ணத்தினாலேயே நாம் எடுக்கும் சுவாசத்தினால்…
1.பல மணங்களை உணரும் பக்குவமும்
2.பல சுவையின் ஈர்ப்பில் உண்ட களிப்பு நிலையும்
3.பல ஒளி அலைகளைக் கண்டுணர்ந்து மகிழும் நிலையும்
4.நம்மின் உருவின் உருவ நிலையைக் காணும் நிலையும்
5.இந்த உலகின் சுழற்சி ஓசையான “ஓ…ம்” என்ற ஒலி ஈர்ப்பின் அலைதனை ஈர்த்துக் கேட்கும் வழித் தொடரின் நிலையும்
6.இதன் வளர்ச்சியில் பல சித்தர்களின் நிலையுடன் தொடர் கொள்ளும் நிலையும்
7.இப்படி ஒன்றின் வளர்ச்சி கொண்டு ஒன்றின் மேம்பாட்டில் தியானத்தின் ஈர்ப்பு வளர்ச்சி நிலை பெற்ற பிறகு
8.சித்தன் நிலையை நாம் அடைய முடியும்.

புகைப்படம் எடுப்பவன் ஓர் பிம்பத்தைப் பலவாக மறு பிம்பங்களை எப்படி எடுத்துத் தருகின்றான்…? ஒரே பிம்பத்தை நிலைக் கண்ணாடியைப் பல கோணத்தில் வைத்துக் காணும் பொழுது நம் பிம்பத்தைப் பலவாகக் (எண்ணிக்கையில்) காணுகின்றோம்.

இதைப் போல் சித்து நிலை பெற்றவர்கள் இந்த உடல் என்னும் கூட்டை…
1.இந்த உடலில் உள்ள உயிரணுவை ஜீவ உயிரை இந்த உடலிலிருந்து பிரித்து
2.இந்த உடலுக்குகந்த பிம்ப உடலின் பிம்பத் தன்மையையும்
3.இந்தக் காற்றிலுள்ள அமில சக்தியை அந்த ஜீவனுடன் கூட்டிக் கொண்டு பல இடத்தில் ஒரே சமயத்தில் செயல் புரிகின்றனர்.

இருந்த நிலையிலிருந்தே ஜீவ உயிரணுவுடன் எந்த மண்டலத்திற்கும் எந்த இடங்களுக்கும் நினைத்த மாத்திரத்தில் சென்றறிந்து வருவதோடு மட்டுமல்லாமல் பல சக்தி அமிலங்களையும் எடுத்து வருகின்றனர்.

விட்டுச் சென்ற உடல் கூட்டின் அவயங்களெல்லாம் அந்த ஜீவ உயிர் இல்லாமலே உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களுக்கும் அந்த உயிரைப் போன்று அனைத்து அணுக்களும் தாமாகச் சுவாசமெடுத்து இயங்கக்கூடிய சக்தி பெற்று விடுகின்றன.

எல்லா உயிரணுக்களுமே அந்த உடலின் ஜீவனைப் போன்று தானாக இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த உடல் பிம்பத்திற்குச் செயலாற்றவோ… எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையோ… அந்த ஜீவ உயிர் வரும் வரை இருக்காது.

“கூடு விட்டுக் கூடு பாயும் நிலை…!” என்று உணர்த்துகிறார்களே அன்றி உண்மைச் சித்தன் இந்த உயிர் ஜீவனுக்கு எத்தனை பிம்ப நிழலையும் அவனால் எடுக்க முடியும்.

அமில குணத்தைச் சேர்ந்த புகைப்படத்தை நம்புகின்றான் மனிதன். பாதரசத்தின் துணையுடன் நிலைக் கண்ணாடியில் தன் உருவத்தை நம்புகின்றான்.

அதே நிலை நம் கண்ணின் கருமணியிலும் உள்ளது… நீரிலும் உள்ளது. தெளிந்த நீரில் நம் பிம்பத்தைக் காண்கின்றோம்.

அதைப் போன்று தான் சித்தனுக்கு உடல் விட்டுப் பிரிந்த தன் உயிர் ஜீவனுடன் எந்நிழல் பிம்பத்தையும் இந்தக் காற்றுடன் கலந்துள்ள அமில குணத்திலிருந்து பிரித்தெடுத்து ஒரே இடத்திலிருந்து பல இடங்களுக்கும் செல்கின்றான்.

இந்த நிலையை உணர்த்தினால் மனிதன் உடலிலிருந்து உயிரை எப்படிப் பிரித்தெடுப்பது…? என்று வினா எழுப்புவான்.

ஒவ்வொரு மனிதனும் தான் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பினால்
1.உடலின் அனைத்து அணுக்களும் தன் வசப்பட்டு
2.ஒவ்வொரு அணுவும் உயிர் ஜீவனின் சக்தி கொண்ட நிலை பெற்று
3.வாழ்க்கையில் எந்த ஒரு நிலையிலும் மற்ற ஈர்ப்பின் நிலைக்கு அடிமைப்படாமல்
4.எந்த எண்ணமும் தன் எண்ணமாக எண்ணும் முறை பெற்று
5.தியான வளர்ச்சியுடன் எடுக்கும் சுவாச அலையின் ஈர்ப்பில் ஒவ்வொரு நிலையும் வழித் தொடர் பெற்ற பிறகு
6.அந்தச் சித்தனின் நிலை பெறத் தக்க உயிர் ஜீவனின் எப்பிம்பமும் காணும் நிலையை எய்தலாம்.

குருநாதர் எனக்கு இராஜதந்திரமாகக் கொடுத்த சக்தி

குருநாதர் எனக்கு இராஜதந்திரமாகக் கொடுத்த சக்தி

 

எத்தனையோ பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் இங்கே வந்திருப்பீர்கள். குடும்பத்தில் கஷ்டமாக இருக்கும்… பிள்ளை சொன்னபடி கேட்காதிருக்கும்… நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… உதவி செய்தும் கஷ்டமாக இருந்திருக்கும்… தொழிலில் நஷ்டம் இருந்திருக்கும்… வியாபாரத்தில் மந்தமாக இருக்கும்… இப்படி எத்தனையோ சிக்கல் இருக்கும்.

இந்த எண்ணம் உள்ள அத்தனை பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில் நீங்கள் வந்தீர்களோ அந்தந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்கு உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான்
3.அருள் உபதேசத்தைக் கொடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் ஊடுருவச் செய்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறச் செய்கிறோம் (ஞானகுரு).

உங்கள் உடலில் உள்ள எல்லாக் குணங்களிலும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் 27 நட்சத்திரங்களின் உணர்வுகளையும் ஈர்க்கும்படித் தூண்டி… இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து… எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெறச் செய்கிறோம்.

உதாரணமாக… குழம்பிலே புளிப்பு உப்பு காரம் துவர்ப்பு எல்லாம் போட்டு ஒரு ருசியாக எப்படிக் கொண்டு வருகின்றோமோ இதே போல் எல்லோருடைய உணர்வுகளிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கும்படி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஞானிகளைப் பற்றி உபதேசித்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்யும்போது அந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கிறது.

அப்படிக் கவர்ந்த உணர்வுகளை உங்கள் செவிகளில் படும்படி செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் குணங்களுக்குள் இது ஆழமாக ஊடுருவச் செய்து “1008 குணங்களிலும்…” பதியச் செய்கின்றோம்.

1.ஏனென்றால் எனக்கு குருநாதர் எப்படி இராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ
2.அதைப் போல் தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி… உணர்வின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.உங்களுக்குள் துன்பத்தை ஊட்டி கொண்டிருக்கும் வேதனைகள் நீங்குவதற்கு இதைச் செய்கிறோம்.

அந்த உணர்வின் தொடரை நீங்கள் மீண்டும் இதே போல் எண்ணி எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளைப் பெற முடியும். உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

1.குருநாதர் எனக்குத் துன்பத்தைக் கொடுத்து அந்த ஆற்றலைத் தெரிய வைத்தார்.
2.உங்களுக்குத் துன்பம் வரப்போகும் போது இந்த முறையைக் கையாண்டால் அதனின் இயக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
3.தியானத்தில் இந்தச் சக்தியை எடுத்ததால் இந்தத் துன்பம் போனது…! என்று நீங்கள் அறியலாம்.

ஆக… கஷ்டம் இல்லாமல் நீங்கள் பெறுகின்றீர்கள். “சாமி இலேசாகச் சொல்கிறார்…” என்று அலட்சியமாக இதை விட்டுவிடாதீர்கள். காரணம்…
1.வாக்கினால் யாம் சொல்லும் போது
2.இதை எண்ணி எடுப்பவர்களுக்குச் சீக்கிரம் நல்லதாகிறது.

நீ உருப்படுவாயா…? என்று ஒருவர் நம்மைச் சொன்னால் நீ அப்படியா சொல்கிறாய்… என்று அதே வார்த்தையை நாம் எடுத்துக் கொண்டால் என்ன ஆகிறது…!

நம் வியாபாரத்தில் மந்தம்… கை கால் குடைச்சல்… தலை வலி,,, மேல் வலி என்று உங்களை இப்படிக் கீழே கொண்டு போகிறது.

அதே போல் துன்பத்தைத் துடைப்பதற்குச் “சாமி சொன்னாரே…” என்று நினைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தீர்கள் என்றால் இந்தக் காற்றிலிருந்து வரும் அந்தச் சக்தி உதவி செய்யும்.

உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து அந்த ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் சேர வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கும் போது…
1.சில நேரங்களில் விண்…விண்.. என்று
2.உங்கள் நெற்றியிலோ உடலிலோ இந்த உணர்வுகள் ஏற்படும்.
3.எம்முடைய வாக்கினைப் பதிவு செய்தவர்களுக்கு நிச்சயம் இந்த உள் உணர்வுகள் வரும்.

உங்கள் உடலில் இருக்கும் துன்பங்கள் நீங்க வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை. உங்கள் உயிரான ஈசனைத் தான் நான் பிரார்த்தனை செய்கிறேன். உயிர் தான் இந்த உடலை உருவாக்கிய ஆற்றல்மிக்க சக்தி.

இப்படி ஆயிரக்கணக்கானவர்களை நான் பிரார்த்திக்கும் போது அந்த “ஆயிரம் பேரின் சக்தியும்…” எனக்குக் கிடைக்கிறது. குருநாதர் எனக்குக் காட்டிய வழி இது தான்.

ஆகவே பல உணர்வின் தன்மையை எடுத்துச் சூரியன் எப்படி ஒளியாக மாறுகிறதோ அதே மாதிரி நீங்களும் இதைச் செய்து பாருங்கள். உங்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்தி கூடும். ஆற்றல்மிக்க மெய் ஞானியாக வளர்வீர்கள்.

“பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

“பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

முற்றும் துறந்தவன் முனிவன்…! பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்தால்தான் தெய்வத்தின் ஒளி… மோட்சம் அவனுக்குக் கிட்டும்…! என்ற சொல் நடை முறையில் உள்ளது.

1.முற்றும் துறந்தவன் தான் முனிவன்…! என்றால் அது எதன் அடிப்படை கொண்டு பகர்ந்த பொருள்..?
2.முந்தைய நாட்களில் நம் முன்னோர்களால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் உண்மைக் கோவையை உணர்ந்தோமா நாம்…?

முற்றும் துறந்த நிலை என்பது வாழ்க்கையில் பற்று… பாசம்… கடமை… இவற்றிலிருந்து விலகித் “தன் நலம் காணத் துறவறம் பூண்டு மெய் அருள் பெறும் நிலை…!” அல்ல.

ஒவ்வொரு ஆத்மாவுக்குள்ளும் நிறைந்துள்ள பல கோடி அணுக்களின் எண்ணத்தின் வளர்ச்சியில் வாழ்ந்திடும் மனிதன்
1.தன் எண்ணத்திற்குள் உந்தப்படும் உணர்ச்சியிலிருந்து
2.அந்த உந்தலுக்கு அடிபடிணியாமல்… “அந்த உந்தலைத் துறக்க வேண்டும்…!”

பயம்… என்ற உணர்வினால் உருளப்படும் கோளம் இந்த மனிதக் கோளம்.

மனிதனின் எண்ணமே முற்பிறவியில் பிறப்பாசை கொண்டு இந்தப் பிறப்பில் கருவிற்கு வருவதனால் பயம் என்ற அச்ச உணர்வு குழந்தைப் பிராயம் முதல் கொண்டே மனித ஆத்மாவுக்கு வருகின்றது.

மனிதனைக் காட்டிலும் அதிகமான இந்தப் பயம் என்ற அச்ச உணர்வு மிருகங்களுக்கும் பட்சிகளுக்கும் அதிகமாக உண்டு. தற்காத்துக் கொள்ளும் சுவாச அலையின் சக்தியும் அதிகமாக உண்டு.

“மனிதனிலிருந்து வந்த மிருகத்திற்கு” அந்த உணர்வின் அலை அதிகமாக… ஒவ்வொரு பிறவியும் எடுத்து மிருகப் பிறவிக்கு வந்த பிறகு அதன் சுவாச அலையின் ஜீவன் கொண்ட உடல் அமைப்பு வளரத் தக்க நிலையிலேயே…
1.இந்தத் தற்காத்துக் கொள்ளும் அமிலத்தின் சக்தி குணம் வீரியப்பட்டு
2.இயற்கையாக அதனுடைய உருவத்திலேயே சில உணர்வுடன் மிருக ஜெந்துக்களும் பறவைகளும் பிறப்பெடுத்து வருகின்றன.

மனிதனின் நிலையுடன் அதிகப்படியான எண்ண அலையின் மோதலினால்
1.தன் எண்ணத்திற்குகந்த… தன் உடலில் ஏற்றிக் கொண்டுள்ள…
2.பல உயிராத்மாக்களின் (ஆவிகளின்) நிலையும் கலந்துள்ளன.

அதுவும் அல்லாமல் ஒவ்வொரு தாய் தந்தையரின் ஆண் பெண் உடலுடன் பிறப்பிற்கு வரக்கூடிய பல உயிரணுக்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்களுக்கு முதலிலேயே ஏறிவிடுகின்றன.

இப்படிப் பல உயிரணுக்கள் நம் (மனிதனின்) ஆத்மாவுக்குள் உடலில் கலந்துள்ள நிலையில் இந்தப் பயம் என்ற உணர்வின் நிலை அதிகப்பட்டு விடுகிறது.

மனிதனின் உணர்வின் எண்ணத்தைக் காட்டிலும்… மனிதனின் உடலில் உள்ள அணுக்களும் உயிராத்ம அணுக்களும்…
1.தன் செயலுக்கந்த நிலை அந்த உடலில் ஏற்படாத குணம் கண்டவுடன்
2.தன் விடுதலையை எண்ணி அதனுடைய எண்ண வேகங்கள் வரும் பொழுது
3.அதனுடைய உந்தலுக்கு மனிதன் ஆட்பட்டு விடுகின்றான்.

மனிதனுக்குப் பயம் என்ற உணர்வு அற்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் முனிவன் என்ற நிலையை எய்துகின்றான். மனித ஆத்மாவில் “பயம்” என்ற அச்ச உணர்வுக்கு இடம் தராத சுவாச அலையுடன் ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும்.

1.எந்நிலை கொண்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் தன்மையிலும்…
2.இந்த மரண பயம் ஏற்படாவிட்டால் அந்த இடத்தில் தெளிவின் வழி கிடைக்கும்.

ஒர் அறையில் ஜீவன் பிரிந்த உடலுடன் நாம் தனித்திருந்தாலும் பயம் என்ற உணர்வை அண்டவிடாமல்… “அதை ஒரு ஜீவனற்ற வஸ்து… பொருள்…!” போன்று நம் எண்ண நிலை இருந்திடல் வேண்டும்.

ஒவ்வொரு மனித ஆத்மாவின் உடலும் உயிரணுக்களும் உயிர் ஆத்ம அணுக்களும் பல உள்ள பொழுது மனிதனுக்கு
1.இந்த மரண பயம் என்ற பயம் ஏற்படாவிட்டால்
2.மனிதனுக்குள் உள்ள இந்த ஆத்மாவே
3.ஓர் மனிதனின் செயலைப் பல கோடி மனிதர்கள் செய்யத்தக்க உணர்வு சக்திகளை
4.மனிதனின் உடலில் உள்ள உயிரணுக்களே உதவி செய்யும்.

தன் நிலை பெற வேண்டும் என்பதின் உட்பொருளின் உண்மை நிலை…
1.தன் நிலை பெறும் மனிதனின் எண்ணத்திற்கு
2.தன் நிலைக்கொப்ப அனைத்து உயிரணுக்களும் ஒன்று போல் சக்தியை
3.அந்த (அவனின்) வலுவின் வலுவுடன் கூட்டச் செய்யும்.

பல நினைவுடைய மனித ஆத்மாவின் உடலில் உள்ள உயிரணுக்களும் அதனதன் நினைவின் வளர்ச்சியின் செயலுக்குத் தான் “பல நினைவுடன்…” உள்ள மனிதனுக்கு உதவி புரியும்.

மிருகங்களைக் காட்டிலும் மனிதனின் எண்ணம் வளர்ச்சி பெற முடியும் என்ற அடிப்படையில் தான்
1.சம நிலை கொள்ளும் மனிதனுக்கும் சாந்த குணம் கொண்ட
2.பசுவைப் போன்ற சில பிராணிகளுக்கும் அதனின் சூலில் ஒவ்வொரு சிசு பிறக்கின்றது.

ஆனால் பல பல எண்ணங்கள் கொண்ட உணர்வின் இயக்கத்தால் மனிதனுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளும் அதற்கு மேற்பட்ட மூன்று நான்கு ஐந்து என்ற எண்ணிக்கையில் குழந்தைகளும் உருவாகக் காரணமாகின்றது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருவிடம் ஆசி பெறும் முறை

குருவிடம் ஆசி பெறும் முறை

 

எதை எண்ணி ஏங்கி நீங்கள் வந்தீர்களோ அந்த ஏக்கத்திற்கொப்ப உயர்ந்த ஞானிகளின் அருள் உங்களுக்குள் படரும். துன்பத்தை விளைவிக்கும் நோயோ துன்பத்தை விளைவிக்கும் சொல்லோ அது எல்லாம் நீங்க வேண்டும் என்று தான் உங்களுக்கு நான் (ஞானகுரு) அருளாசி கொடுக்கின்றேன். அதே உணர்வுடன் நீங்கள் எண்ணி அதைப் பெற்றால் அந்த பலனைப் பெற முடியும்.

மாம்பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் அதை வாங்கக் கடைக்கு அந்த உணர்வு உங்களை அழைத்துச் செல்கிறது.

அதே போல்
1.மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடலுக்குள் படர வேண்டும்
2.எங்கள் உடல் நோய் மன நோய் நீங்க வேண்டும்
3.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்
4.எங்கள் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஏங்கினால்
5.நான் கொடுக்கும் அந்த அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்.

அதை விட்டுவிட்டு சாமி…..! என் துன்பம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறதே… நீங்கள் தான் கடவுளாக இருக்கிறீர்கள்… என்று என் காலில் விழுந்தீர்கள் (அடிபணிந்தீர்கள்) என்றால்
1.உங்களை நீங்கள் ஏமாற்றிக் கொள்கிறீர்கள்
2.நான் உபதேசித்ததை வீணாக்குகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

பெரியவர் என்று எண்ணி சாமியை (ஞானகுரு) உயர்த்தி விட்டு உங்களைத் தாழ்த்தி விடாதீர்கள். உங்கள் உணர்வின் உணர்வின் எண்ணத்தை உயர்த்துங்கள்.
1.மகரிஷிகளின் உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் செலுத்துங்கள்.
2.உங்களை அறியாது ஆட்டிப் படைக்கும் அந்தச் சக்தியைத் தாழ் பணியச் செய்யுங்கள்.
3.இது தான் ஆசீர்வாதம்…! எனக்குக் குருநாதர் காட்டிய நிலைகள் அது தான்.

மெய் ஒளியின் தன்மையை நமக்குள் கூட்டி நம் எண்ணம் சொல் செயல் அனைத்தையும் புனிதம் பெறச் செய்ய வேண்டும்.

ஒருவர் தீயதின் நிலைகளினால் துன்பப்படுகின்றார் என்றால் நம் சொல் அந்தத் தீயதிலிருந்து அவரை மீட்டி உயர்வான நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

இந்த இயற்கையின் தன்மை நாம் எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை அது நிச்சயம் வேலை செய்யும்.

ஆகையினால் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் பொறுமையும் பொறுப்பு கொண்டு “மற்றவர்களை முந்தி விட்டு நாம் முதலில் ஆசி பெற வேண்டும்…” என்ற எண்ணத்திற்கு வராமல் எல்லோருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிறுத்தி வாருங்கள்.

எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து…
1.மற்றவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அந்த அத்தனை ஆற்றலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.
3.நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அந்தத் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

அவசரப்பட்டோ… வேகமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்றோ… அந்த வேக உணர்வில் இல்லாதபடி இந்த அருளைப் பெற வேண்டும் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த அருள் உணர்வைப் பெறும் தகுதியைக் கூட்டி எல்லோரும் உயர்ந்த சக்தியைப் பெற வேண்டும் என்று எண்ணுவதே நல்லது.

ஏனென்றால்… பிறர் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் முதலில் நலமாகின்றோம்
3.அத்தகைய மெய் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நம் சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது.

நம் சொல்லைப் பிறர் கேட்டாலும் அவர்கள் உள்ளங்களிலும் மகிழச் செய்கிறது. அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர் நம்முடன் இணைந்து செயல்படும் தன்மையும்
1.நாம் போகும் நிலைகளுக்குத் தடையின்றி வழிப்படுத்துவதற்கும்
2.தடையின்றி வியாபாரம் நடத்துவதற்கும்… நம் காரியங்களை நடத்துவதற்கும்
3.தடையற்ற நிலையில் நாம் என்றுமே மகிழ்ச்சியுடன் வாழ உதவியாகிறது.

ஆகையினால் ஆசீர்வாதம் வாங்கும் போது இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குத் துன்பம் வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடல் நலமும் வளமும் பெற வேண்டும் எங்கள் சொல்லுக்குள் இனிமை பெறவேண்டும் எங்கள் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பழக வேண்டும்.

வியாபாரத்திலேயோ குடும்பத்திலேயோ நல்லதை எண்ணி எங்கே போனாலும் இந்த முறைப்படி செய்யுங்கள்.
1.நான் (ஞானகுரு) கொடுக்கும் இந்த ஆசீர்வாதம் உங்களுக்குள் பின் தொடர்ந்து
2.எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
3.உங்களுக்கு உயர்வினை ஊட்டும்… மெய் ஒளியை எட்டும் அந்தத் தகுதியையும் உருவாக்கிக் கொடுக்கும்.

பக்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதன் தன் ஞானத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

பக்திக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதன் தன் ஞானத்தின் வளர்ச்சிக்குக் கொடுக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

இந்த மனிதப் பிறப்பை எடுக்கவே நம் வாழ்க்கையில் காணும் முறைப்படி கர்ப்பத்தில் பத்து மாதம் இருந்து பிறப்பெடுத்து வாழ்ந்து மடிந்து மீண்டும் இதே நிலை என்ற உணர்வுகளும் இது நாள் தொட்டு மனித ஆத்மாவின் உயிர்ப் பிறப்பின் வளர்ச்சி நிலையின் தத்துவ நிலைகளும் உண்மையை உணர்த்தி மனிதனுக்கு நல் வழி காட்டவில்லை.

தாவர வர்க்கமாகி அத்தாவர குண ஈர்ப்பில் வளர்ந்த நிலையில் வளர்ந்த நிலை என்பது…
1.தாவரங்களிலேயே எண்ணிலடங்கா பல கோடி இன வளர்ச்சியுண்டு.
2.ஒன்றிலிருந்து மாறுபட்டு மாறுபட்டு மீண்டும் அந்தத் தாவர இனமே மற்றொன்றாகின்றது… வளர்ந்து கொண்டேயுள்ளது.

இந்தத் தாவரங்களில் பல அபூர்வ உன்னத அமிலக் குணத்தின் ஈர்ப்பில் அது வளர்ந்து வாழ்ந்து அது மடிந்த பிறகு மீண்டும் இம்மண்ணில் அத்தாவர இனத்துடன் இம்மண்ணின் ஈர்ப்புக் குணமும் சேர்ந்து மற்றொரு குணமும் பெறுகின்றது.

இது மடிந்த நிலையில் இதிலிருந்து வெளியாகும் ஆவி அமிலம் தன் இனத்துடன் இனமாகச் சேரும் பொழுது… ஒன்றின் மேல் ஒன்று பட்டு கன நிலை ஏற்பட்ட பிறகு… பூமியின் ஈர்ப்பில் அதற்கு மேல் கனத் தன்மை கொண்ட தன் இன உலோகமுடன் அது கலந்து விடுகின்றது.

இப்படியே பூமியின் காந்த ஈர்ப்பின் ஆவி நிலையான இவ்வெட்கையின் வளர்ச்சி தாவர நிலையிலிருந்து பிரிந்த அமில குணத்தில் சக்தி கொண்ட வலுவாக மனித வர்க்கங்கள் ஆரம்பக் கதியில் தோன்றியது.

அப்படித் தோன்றியிருந்தாலும்… இன்றைய மனிதன் ஒன்றிலிருந்து ஒன்றாக மனிதனிலிருந்து மனிதன் பிறக்கும் இன்றைய உலகில்…
1.தாவரங்களை எப்படி நாமாகப் பயிர் செய்து
2.அதன் மகசூலிலிருந்து மீண்டும் மீண்டும் அதன் மகசூலை எடுக்கின்றோமோ
3.அதன் நிலை போன்ற வழி நிலையில் மனிதக் கருக்கள் தோன்றி வந்தன. (மக்கள் தொகைப் பெருக்கம்)

இன்றைய நாளில் நாம் பயிர் செய்யும் நிலங்களில் பல காலங்களுக்கு ஒரே இனப் பயிரைப் பயிர் செய்யும் பொழுது அந்தப் பூமியின் ஈர்ப்பில் உள்ள சக்தி குறைந்து அந்த நிலத்தின் பலன் நிலை குறைவுபடுகிறது அல்லவா…!

அதைப் போன்று ஆரம்பக் கதியில் உயர்ந்த உயிரணுவாகப் பல சக்தி அமிலத்தைக் கூட்டிக் கூட்டி மனிதனாகிப் பிறப்பு மாறி மாறி… அவன் எடுக்கக்கூடிய எண்ணத்தின் ஈர்ப்பின் நிலையினால்
1.மனித அமில குணமுள்ள நாள் வரை மனிதக் கருவில் உதித்து வாழ்ந்து மனிதனாக உள்ள நிலையில்
2.மிருகக் குணத்தில் வாழும் மனிதன் நிச்சயம் அடுத்த பிறப்பில் மிருகமாகின்றான்.

மிருகமாகி… அதன் சுழற்சி வட்டத்தில் ஓடி மீண்டும் மிகவும் ஈன நிலையான புழு பூச்சியாகி… அந்த இனத்தின் சுவாச நிலையில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனிதனாக வரக்கூடிய தன்மை ஒரு சாரருக்கும் மிருக நிலையிலிருந்து அதன் சுவாச குணத்தில் மனிதனாகும் சில அபூர்வ சக்திகளின் மனிதனாகும் வழித் தொடரும் சிலருக்கு உண்டு.

இதற்கெல்லாம் அப்பாற்பட்ட சக்தியான புதிய உயிரணுவே… அத்தாயின் கருவிற்குத் தோன்றக்கூடிய வாய்ப்பு நிலையும் பல உயிராத்மாக்களுக்கு வந்து வாய்க்கின்றன. இந்த நிலையைப் பெறுவது என்பது பல கோடியில் ஒன்றாகத் தான் இருக்குமே அன்றி எல்லா உயிரணுக்களும் அப்படி வளர்வதில்லை.

மனிதனாக உள்ள காலங்களில் ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு ஊர்… நாடு… தேசம்… என்ற நிலையிலும் அங்குள்ள மனிதர்களின் எண்ண வளர்ச்சியிலும் உடல் உருவம் அனைத்திலுமே அங்குள்ள பூமியின் ஈர்ப்பின் சுவாசத்தினால் மாறு கொள்கின்றனர்.

1.ஒரு சாரார் பிறந்து வளர்ந்து தன் ஜீவித வாழ்நாள் எல்லாம் கிடைக்கப் பெற்று அதே சுழற்சியில் மடிகின்றனர்.
2.இன்னும் சில சாரார் தன் ஜீவிதத்துடன் அறிவாற்றலின் வளர்ச்சி மேம்பாட்டில் பலவற்றை அறிய எண்ணி வாழ்கின்றனர்.
3.இன்னும் சில சாரார் தன் சக்தியின் அறிவைக் கொண்டு புதிய ஆற்றல் படைப்புகளை ஆராய்ந்து செயலாக்கிக் காட்டுகின்றனர்.

இப்படி மனித ஆத்மாக்களின் எண்ணமே அதன் எடுக்கும் வளர்ச்சியில் மேன்மை கொண்டு அந்த மேன்மையின் சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் செலுத்தினால் தான் அது வளர்ச்சியின் பாதையாகின்றது,

ஏனென்றால்…
1.மனிதனின் உடலிலுள்ள உயர் காந்த அலையின் சக்தியான ஜீவ உயிர் உள்ளதினால்
2.நாம் எந்த சக்தியை ஈர்த்து எடுக்கின்றோமோ அதன் பலனை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய நிலை உண்டு.
3.ஆக.. காந்த மின் அலை கொண்ட உடலப்பா மனிதனின் ஜீவ உடல்.

விஞ்ஞானத்திற்குச் செயலாக்கக் காந்த மின் அலையுடன் உலோகங்களின் சக்தி அமிலத்தைப் பூசி அதிலிருந்து சூரியனின் ஒளி அலைகளில் வரும் மின் அலைகளைத் தன் ஆராய்ச்சிக்குகந்த நிலைக்கும் தான் செயலாக்கும் விஞ்ஞானக் கருவிகளின் நுட்ப வேலைகளுக்கும் எடுத்துக் கொள்கின்றனர்.

இன்றைய விஞ்ஞான மனிதன்…
1.சூரியனின் ஒளி அலையில் உள்ள சக்தி அலைகளைப் பிரித்தெடுத்து
2.அதன் தொடர் அலையிலிருந்து தான் பல விஞ்ஞானச் சாதனைகளைப் புரிகின்றான்.

இதை யாரும் மறுக்க முடியாது…!

அதே மின் அலையுடன் காந்த சக்தியின் ஈர்ப்பின் ஜீவ உயிராத்மாவான உடலைக் கொண்ட நாம்… நம் எண்ண அலையை எதெனெதன் பால் செலுத்தி அதீத ஈர்ப்பின் எண்ணத்தை நம் உயிராத்மா ஈர்க்கும் வழித் தொடர் பெற்றால் விஞ்ஞான சாதனையில் கண்டு மகிழும் அனைத்துச் சக்தியும் நம் உயிராத்மாவினால் காண முடியும். அந்தச் சக்தி நம் உயிருக்கு உண்டு.

இதன் வழித் தொடரில் தான் சித்து நிலையும்… சப்தரிஷியின் நிலையும் எற்பட்டதேயன்றி இன்றையக் காலத்தில் பிரித்து இருக்கும் பக்தி முறையின் நெறிப்பாட்டில் இல்லை.

1.மனிதனையும் தெய்வத்தையும் வேறுபடுத்திக் காட்டி
2.மனிதனின் எண்ணத்தையே குன்றச் செய்துவிட்டனர்…
3.தெய்வத்தின் பக்தி பூண்ட “அருள் நெறித் தொண்டர்கள் என்பவர்கள்…!”

உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய மூச்சுக் காற்றைத் தான் பார்க்கிறோம்… அந்தக் காற்றின் சூட்சமம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய மூச்சுக் காற்றைத் தான் பார்க்கிறோம்… அந்தக் காற்றின் சூட்சமம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

ஆதிசக்தியின் சக்திக் குழந்தைகளான எல்லாமின் எல்லாமாக இறை சக்தி நிறைந்துள்ளது. ஒவ்வொரு சாராரும் இறைவனை அவரவர்கள் ஒவ்வொரு வழி கொண்டு வணங்குகின்றனர்.

நாஸ்தீகம் பேசுபவர்கள் (கடவுள் இல்லை என்பவர்கள்) இறை சக்தியைக் காட்டச் சொல்கின்றனர். எல்லா ஜீவராசிகளும்.. எல்லாமும் இறைவன் தான்…! என்றாலும் இறைவனை நாம் காண முடிகின்றதா…?

காட்சி:-

முதுகில் அரிப்பெடுத்த ஒருவர் அரிப்பெடுத்த இடத்தைத் தன் கையால் கீற முடியாமல் மற்ற உபகரணத்தை எடுத்துக் கீறுவதைப் போன்றும்… முதுகைச் சுவற்றில் தேய்ப்பது போன்றும் காட்சி தருகின்றார்.

விளக்கம்:-

தன் முதுகு தான்… ஆனால் தன் முதுகைத் தானே சொறிவதற்கு முடிவதில்லை. அந்த இடத்தில் என்ன உள்ளது…? என்று பார்க்கவும் முடிவதில்லை.

ஆனால் தனக்குச் சொந்தமான முதுகு தான். அதில் ஏற்படும் நமைச்சலையும் உணர்ச்சிகளையும் உணர முடிகின்றது.

அதைப் போன்று ஒவ்வொரு உயிரினத்திலும் அவ்வுயிரணு தோன்றிடவே
1.ஆண்டவனின் சக்தி ஆவியாக… உயிர் கொண்டு இருந்து தான்
2.அனைத்து ஜீவன்களுமே வாழுகின்றன.
3.இப்படி இருக்க… ஆண்டவன் என்ற தனித்த பிம்பத்தைக் காட்டினால் தான் ஆண்டவன் என்று உணர முடியுமா…?

ஆகவே ஆண்டவனின் அருள் சக்திக்குகந்த செயல்படும் ஜீவன்களாகத் தான் ஒவ்வொரு ஜீவனும் ஜீவித்து வாழ்கின்றது.

இதை உணராமல்… தனக்கு எந்த அளவு சக்தி நிலை உள்ளதோ அந்த நிலையில் எடுக்கும் செயல் வாழ்க்கை தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும்… “அவன் எடுக்கும் சுவாச எண்ணம் கொண்டு செயல்படுகின்றது…”

1.நுண்ணிய சிறு கருவிகளை…
2.நுண்ணிய சிறு உறுப்பின் துணை கொண்டு தான் அதன் வேலைப்பாடு செய்ய முடிகின்றது.
3.கனம் கொண்ட பெரிய உறுப்புகளின் செயலுக்கு
4.அதன் செயலுக்குகந்த வலுவான சாதனப் பொருள் கொண்டு தான் அந்தப் பொருளை உருவாக்க முடிகின்றது.

அதைப் போன்றுதான் நாம் எடுக்கும் குறுகிய எண்ணத்தின் வளர்ச்சி கொண்ட சுவாசமாக இருந்தால்… அதன் தன்மைக்குகந்த குறுகிய ஞானம் கொண்ட வாழ்க்கை தான் நமக்கு அமையும்.

1.எண்ணத்தின் வலு…
2.எதன் அடிப்படையில் எதன் சக்தித் திறன் கூடுகின்றதோ
3.அதன் செயல் ஞானம் தான் நமக்கும் கிட்டும்.

எண்ணத்தின் உயர்வை இந்த உடல் என்ற ஆவியுடன் கூடிய ஆத்ம உயிர் இந்தப் பிம்பத்தில் உள்ள பொழுதே நம் சுவாச அலையை உயர்ந்த ஞான எண்ணமுடன் செலுத்தி எடுப்போமானால்… இப்பொழுதுள்ள ஜீவ சக்தி கொண்ட இந்த உடலில் எடுக்கும் ஞான அலையைக் காட்டிலும் “உயர்ந்த ஞான அலையை நாம் பெற முடியும்…”

இந்த மனிதப் பிறவியில் (உடலில்) இருக்கும் பொழுது தான் அதைச் செயல்படுத்த முடியும். ஆவி நிலையிலிருந்து பெற முடியாது.. மிருகங்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் அந்தத் தகுதி கிடையாது.

காட்சி:-

ஒரு பந்து நீரில் மிதந்து ஓடிக் கொண்டே உள்ளது. அந்தப் பந்தில் சிறு துவாரம் ஏற்பட்டவுடன் பந்தில் உள்ள காற்று பிரிந்து அந்தப் பந்தானது நீரின் உள் பாகத்திற்கு நிலத்திற்குச் சென்று விடுகிறது.

விளக்கம்:-

ஆக… இந்த உடல் என்ற காற்றடைத்த இந்தப் பந்து இந்த உடலில் உள்ள உயிர் ஆவி பிரிந்தவுடன்… நடக்கவோ நிற்கவோ முடியாமால் ஜீவனற்று… இந்தக் காற்று பிரிந்தவுடன் நிலத்துடன் கனத்து ஐக்கியப்பட்டு விடுகின்றது.

அதைப் போன்று இந்தக் காற்றின் அலை சக்தியை
1.நம் சுவாச நிலை கொண்டு நம் உடல் ஆத்மா மட்டும் வாழ்வதோடு அல்லாமல்
2.நம் எண்ணத்தின் ஆத்ம வலுவின் சக்தியும் வாழுகின்றது.
3.அதன் சக்தித் திறனை வழிப்படுத்தித் தருவது தான்
4.இங்கே ஈஸ்வரபட்டனாகிய யான் வெளிப்படுத்தும் இந்தத் தத்துவத்தின் உண்மை ஞான வழித் தொடர்…!

மகரிஷிகளுடன் நாம் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை

மகரிஷிகளுடன் நாம் அமர்ந்து தியானிக்க வேண்டிய முறை

 

1. நாங்கள் பெறக்கூடிய “அத்தனை உயர்ந்த சக்திகளும்” எங்கள் தாய் தந்தையருக்கு முதலில் கிடைக்க வேண்டும் ஈஸ்வரா
2. உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் முன்னோர்களின் உயிராத்மாக்கள் அனைத்தையும் நாங்கள் விண்ணிலே செலுத்தி… அவர்கள் அனைவரையும் பிறவி இல்லை என்ற நிலை அடையச் செய்து… “சப்தரிஷிகளாக” ஆக்கிப் பேரானந்த நிலை பெறச் செய்ய வேண்டும் ஈஸ்வரா
3. தாய் தந்தை அருளால் முன்னோர்களின் அருளால் ஞானகுருவின் அருள் சக்திகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
4. ஞானகுரு பதிவு செய்யும் உபதேசக் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் “திரும்பத் திரும்ப… திரும்பத் திரும்பக் கேட்டு” ஆழமாக எங்களுக்குள் பதிவு செய்து… உபதேசத்தில் சொன்னபடி நாங்கள் நடந்து… அதை வாழ்க்கையில் கடைப்பிடித்து… ஞானகுரு காட்டியபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை “காற்றிலிருந்து…” சுவாசிக்க வேண்டும் ஈஸ்வரா
5. ஞானகுரு காட்டிய அருள் வழியில் கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ்ந்து “கணவனை உயர்த்தும் சக்தியாகவும்… மனைவியை உயர்த்தும் சக்தியாகவும்…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
6. எங்கள் குழந்தைகள் அனைவரையும் “அகஸ்தியரைப் போன்ற மெய் ஞானியாக வளர்க்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
7. நாங்கள் பார்க்கும் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக வணங்கி… உடலைக் கோவிலாக மதித்து… உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களையும் தெய்வமாக எண்ணி… அவர்கள் அனைவரையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணையச் செய்து… மகிழ்ந்து வாழச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
8. ஞானகுரு சொல்லும் முறைப்படி எங்கள் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி… ஒவ்வொரு நொடியிலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றச் செய்து… “ஈஸ்வரா…!” என்று புருவ மத்தியில் அடிக்கடி அடிக்கடி எண்ணி… உயிர் வழிச் சுவாசமாக விண்ணிலிருக்கும் “மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு” அவர்கள் துணையால் துருவ நட்சத்திரத்தின் சக்தியையும் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியையும் எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களின் முகப்பிலும் இணைத்து… பேரருள் பேரொளியாகப் பெருக்கி… எங்களிடமிருந்து வெளிப்படும் மூச்சு பார்வை சொல் அனைத்துமே பேரருள் பேரொளியாக இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து… விஞ்ஞானத்தால் உருவான நச்சுத் தன்மைகளைக் கனியச் செய்து “நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்…” ஈஸ்வரா
9. குறை காணும் எண்ணத்தை விடுத்துக் குறைகளை எங்கே கண்டாலும் அந்தக் “குறைகளை நிவர்த்திக்கும் சக்தியாக” எங்களுக்குள் வளர்ந்து அனைவரையும் அருள் ஞானம் பெறச் செய்யும் அருள் சக்தியாக நாங்கள் வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
10. ஞானகுரு காட்டிய அருள் வழியில் நாங்கள் வழி நடந்து… மற்றவர்களுக்கும் குரு காட்டும் அருள் வழியினைப் போதிக்கும் சக்தி பெற்றவர்களாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
11. ஞானகுரு ஒலி நாடாவின் மூலம் கொடுத்த உபதேசங்களைப் பதிவாக்கி… அந்த அருள் வழியை நாங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து… “ஈஸ்வரபட்டரின் பரிபாஷைகளை உணர்ந்து…” ஞானகுரு அனுபவபூர்வமாக பெற்ற அத்தனை உண்மைகளையும் உணர்ந்து… “ஞானகுரு கொடுக்கும் நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அறியும் ஆற்றலும் பெற்று…” மற்றவர்களுக்கும் அதைக் கிடைக்கச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
12. உலகில் நடக்கும் அசம்பாவிதங்களோ அதிர்ச்சியான நிகழ்ச்சிகளோ எங்களுக்குள் பதிவாகக் கூடாது ஈஸ்வரா… அறியாது அதை நாங்கள் கேட்கவோ பார்க்கவோ நேர்ந்தாலும் உடனடியாக நாங்கள் ஆத்ம சுத்தி செய்து… “அதை இயக்கவிடாது தடுக்கும் அருள் சக்தி” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
13. எங்கள் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் பிறருடைய தீமைகள் அகன்று… நோய்கள் அகன்று… உலகில் படர்ந்து கொண்டிருக்கும் சர்வ நச்சுத் தன்மைகளையும் அகற்றச் செய்யும் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
14. ஞானகுரு காட்டும் நெறியில் உத்தமஞானியாக நாங்கள் வளர்ந்து ஊரையும் உலகையும் காக்கக்கூடிய சக்தியாக… உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர்ந்திட வேண்டும் ஈஸ்வரா
15. “ஞானகுருவின் அருள் எங்களுக்குள் வந்து…” உலக மக்கள் அனைவரையும் காக்கும் சக்தியாக நாங்கள் வளர வேண்டும் ஈஸ்வரா
16. கருவுற்ற தாயின் வயிற்றில் வளரும் சிசுக்களை எல்லாம் “உலக இருளை அகற்றும் ஞான சக்தி பெற்றவர்களாக… அகஸ்தியராக உருவாக்ககூடிய சக்தி…” நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
17. எந்த நேரம் எந்த நிமிடம் எங்கள் உடலை விட்டு உயிர் பிரிய நேர்ந்தாலும்… “யாருடைய ஈர்ப்பிலும் நாங்கள் சிக்காது…” ஏகாந்தமாக சப்தரிஷி மண்டல எல்லையை நாங்கள் அடைய வேண்டும் ஈஸ்வரா
18. மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசிப்போம்… எங்கள் மூச்சலைகளை “அருள் மணங்களாக” வெளிப்படுத்துவோம்… மகரிஷிகளின் அருள் சக்திகளைக் “கூட்டமைப்பாக” இந்தக் காற்று மண்டலம் முழுவதும் பரவச் செய்வோம். மகரிஷிகள் வேறல்ல… நாம் வேறல்ல… என்ற நிலையில் “அவர்களுடன் இணைந்து தியானிப்போம்… தவமிருப்போம்…”
19. இந்தப் பரமாத்மாவைத் தூய்மைப்படுத்தி… நம் ஆன்மாவைப் புனிதப்படுத்தி… உடலில் உள்ள அனைத்து ஜீவான்மாக்களையும் ஒளியாக்கி… நம் உயிராத்மாவைப் பேரருள் பேரொளியாக ஆக்குவோம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிராத்மாவையும் புனிதம் பெறச் செய்வோம்
20. உடலை விட்டுப் பிரிந்து சென்று… இந்தக் காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டுள்ள அத்தனை உயிரான்மாக்களையும்… “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் துணை கொண்டு உந்தித் தள்ளி…” சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
21. ஒளியான பிரபஞ்சத்தை உருவாக்குவோம்… மெய் உலகைப் படைப்போம்…!

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் யாம் எதிர்பார்ப்பது என்ன…? – ஞானகுரு

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்களிடம் யாம் எதிர்பார்ப்பது என்ன…? – ஞானகுரு

 

நீங்கள் எத்தனையோ கோவில்களுக்குப் போகின்றீர்கள். ஆனால் நான் (ஞானகுரு) சதா உங்களைத் தான் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றேன்.

1.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி
2.உங்கள் உடலை எல்லாம் கோவில்களாக எண்ணி
3.உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய குணங்களை எல்லாம் தெய்வமாக எண்ணி
4.அந்தக் கோவிலில் மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.
5.அந்தக் கோவிலிலிருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தியானிக்கின்றேன்.

நான் பார்த்த கோவில்கள் அத்தனையுமே (எம்மைச் சந்தித்தவர்கள்) ஒவ்வொருவரையும் தியானம் செய்து அதிகாலை 4-30 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும். இந்த உபதேசத்தைப் பதிவு செய்தோர் அனைவருக்கும் அந்த நேரத்தில் முழிப்பு வரும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே நமக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகளை மாற்றி நல்லது செய்யும் அந்த ஆற்றலாகப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.

அதனாலே எல்லோரும் முழு நம்பிக்கையாக உங்களை நீங்கள் நம்புங்கள்.

சாமியை நம்புகிறீர்கள் சாமியாரை நம்புகிறீர்கள் ஜோதிடத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகிறீர்கள்.
1.ஆனால் உங்களிடம் அந்த உயர்ந்த சக்தி இருக்கிறது
2.உங்களுக்கு முன்னாடியே அத்தனை சக்தியும் இருக்கிறது.
3.அதை நினைத்தீர்கள் என்றால் அது கூடும்.
4.நல்லதைப் பெற முடியும் மெய் ஒளி பெற முடியும்.

மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை. உங்களை நீங்கள் நம்புங்கள்.

1.சாமி சொன்னார் என்று சொல்லி
2.சாமி சொன்ன சக்தியை நாம் பெற வேண்டும் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

சாமி செய்து கொடுப்பார் என்பதல்ல. உங்களை நான் பிரார்த்திக்கின்றேன். உங்களுக்கெல்லாம் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று உறுதுணையாக இருக்கின்றேன்.

சூரியனின் காந்த அலைகள் படுகிறது. பூமி அதைத் தனக்குள் எடுத்துக் கொண்டால் தான் பூமிக்குச் சக்தி கிடைக்கும். பிரபஞ்சத்தில் காற்றில் பல சக்திகள் படர்கிறது. பூமி போகும் பாதையில்… தான் ஈர்த்துக் கொண்டால் தான் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

அதைப் போன்று தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திகின்றேன்.
2.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆகையினால் இங்கே சொல்லக்கூடியதெல்லாம் உங்களுக்குள் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று தகுதியை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த ஒவ்வொருவரும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசித்தேன்… நான் நன்றாக இருக்கின்றேன்
2.எங்கள் குடும்பம் நலமாக இருக்கின்றது எங்கள் உடல் நலமாக இருக்கிறது
3.காற்றிலிருந்து அருள் சக்திகளை எடுக்க முடிகிறது
4.எங்கள் உடலில் உள்ள நோய்கள் அகன்றது என்ற
5.இத்தகைய சந்தோஷமான செய்திகளைச் சொல்ல வேண்டும்

ஆகவே “நாங்கள் நன்றாக இருக்கின்றோம்…!” என்று சொல்லும் போது தான் எனக்கு அது மகிழ்ச்சி. அதைக் கேட்க வேண்டும் என்று தான் நான் விரும்புகின்றேன். அந்த நிலையை நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

வாழ்க்கையில் வரும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுபவன் ஞானியாகின்றான் – ஈஸ்வரபட்டர்

வாழ்க்கையில் வரும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுபவன் ஞானியாகின்றான் – ஈஸ்வரபட்டர்

 

இதைப் படிப்போர் எங்களின் (மகரிஷிகளின்) செயல் நடப்பின் உண்மைகளை உணர்ந்து மனித ஆத்மாக்கள் அவரவர்கள் உணர்ந்து பக்குவம் பெறும் பாட முறைகளை உணர்த்திக் கொண்டே வந்துள்ளோம்.

பள்ளியில் பயிலும் மாணவனுக்கு…
1.அவன் ஆசிரியரின் போதனையை ஏற்கும் நிலை கொண்டு…
2.அவனுக்கு வைக்கும் தேர்வில் அவன் பெறும் மதிப்பெண்படித்தான்…
3.அவன் அறிவு நிலை கூடிய மதிப்பெண் பெறுகின்றான்.

அந்த மதிப்பெண் உயர்ந்திருந்தால் உயர் ஞானக் கல்விக்குச் செல்கிறான். அறிவு ஞானம் பெறாத மாணவனை உயர் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்க மாட்டார்…! அந்த உபாத்தியாயர்.

அதைப் போல் ஆண்டவனின்… ஆண்டவன் என்பது…
1.உயர் சக்தி ஞான ரிஷியின் அருள் உலகளவுக்கும் பரப்பப்பட்டு
2.அந்த ஞானத்தின் பால் ஈர்ப்பு கொண்ட அவர்களின் பலனில் கண்டெடுத்துக் கொள்கின்றனர் சப்தரிஷிகள்.

அந்தப் பலம் பெற்ற ஆத்மாக்களின் செயலுக்கும் “பல தேர்வுகள் வைத்துப் பொறுக்கித்தான்…” அவர்களின் வட்டச் சுழற்சிக்கே செல்ல முடிகிறது.

கல்விக்கூடம் செல்லும் மாணவர்கள் எல்லொருமே பள்ளியில் இறுதிப் படிப்பு வரையும் செல்வதில்லை. சிலர் மேல் ஞானக்கல்வி பெறச் செல்ல முடியாமலும்… அந்தப் படிப்பை ஏற்க முடியாமல் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றார்கள் அல்லவா…!

அதைப் போன்று… இந்தச் சக்தி நிலையுணர்ந்து “பேரின்ப நிலை எய்திடல் வேண்டும்…!” என்ற செயலில் உள்ளவர்களும் தான் எடுக்கக்கூடிய முயற்சி ஜெபத்தில் பின்தங்கி விடுவதுண்டு…!

1.தங்கத்தைப் பழுக்கக் காய்ச்சித் தட்டத் தட்டத் தான் அதன் தரம் உயர்கின்றது
2.அது போல் எண்ணத்தில் ஏற்படும் பலவற்றிலிருந்தும்
3.ஒன்றான இறை ஞான சக்தியை ஈர்க்கும் நிலை பெற ஏற்படும் சோதனையில் எல்லாம்
4.எந்தச் சோதனையிலிருந்தும் நாம் மீண்டும் அந்த ஜெப நிலை பெறுகின்றோமோ…
5.“அது தானப்பா இறை ஞானம் பெறும் ஜெபம் முறை…!”