குரு பக்தி

குரு பக்தி

 

நமது வாழ்க்கையில் தீமையான உணர்வுகளை நமக்குள் புகாதபடி தடுக்க நம் குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் நுகர்ந்தல் வேண்டும்.

அதற்கு “குரு பக்தி” வேண்டும்.

1.குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தியை
2.குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ
3.அவர் நினைக்கும் பொழுதெல்லாம் குருவின் சக்தி எளிதில் கிடைக்கும்.
4.அதன் மூலம் தீமை என்ற நிலைகள் தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.

குரு பக்தி குறைந்து எவரொருவர் அதை அலட்சியப்படுத்துகின்றாரோ கிடைத்த சக்தியை உதறி விட்டது போன்று ஆகிவிடும்.

நாம் எண்ணும் எண்ணங்களே தெய்வமாகின்றது. கோபத்தின் உணர்வானால் அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும் தெய்வமாகின்றது. வேதனையை நுகர்ந்தால் அந்த வேதனையைச் செயல்படுத்தும் தெய்வமாகின்றது.

ஆனால் இவை அனைத்தையும் ஒடுக்கித் தீமைகளை அகற்றி அசுர உணர்வுகளைத் தடுத்து உணர்வினை ஒளியாக மாற்றும் மெய் ஒளியின் உணர்வைப் பெருக்கியவர் அகஸ்தியர்.

அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானார்.
1.அதனைப் பின்பற்றி “குரு என்ற வழிகளில்” நாம் பெற்றோமானால்
2.நமது வாழ்க்கையில் வரும் தீமைகளில் இருந்து விடுபட முடியும்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலைகள் அடைய முடியும்.

குரு கொடுத்த உணர்வினைக் கெடுத்துத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு குருவிற்கு நாம் தவறு செய்தால் அந்தத் தவறின் பலன் முன் பகுதி சந்தோசத்தைக் கொடுக்கலாம். ஆனால் பின் பகுதி அதனின் அனுபவத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உடலிலே தான் செய்யும் தவறின் உணர்வை உயிர் உணர்த்திவிடும்.
1.யாரிடத்திலும் பொய் பேசிடலாம்… ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது.
2.பிறருக்கு நாம் தீங்கு விளைய வைத்து விடலாம்… ஆனால் உயிரிடமிருந்து தப்பவே முடியாது.
3.நாம் தவறு செய்யவில்லை… ஆனால் உயிரிடமிருந்து தப்ப முடியாது.

குருவுக்கு விரோதமான நிலைகளில் எவர் நடக்கின்றாரோ அதன் பலன்கள் நிச்சயம் தெரிந்துவிடும்.
1.அவருடைய வாழ்க்கையில் உயிரே அவருக்குள் உணர்த்தி
2.நல்ல பயனைப் பெறும் நிலையைத் தடைப்படுத்திவிடும்.

தனக்குத் தவறென்ற உணர்வை உணர்த்தி விட்டால் உணர்வின் அறிவை நிச்சயம் பெற்றே தான் ஆக வேண்டும்.

குறுகிய காலமே நாம் வாழ்கின்றோம். இந்த உடலை விட்டு எப்போது சென்றாலும் குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளுடன் தொடர்பு கொண்டு நாம் அங்கே செல்ல வேண்டும்.

ஒருவன் தீங்கு செய்கிறான் என்று அந்தத் தீங்கின் தன்மை பற்று கொண்டால் அதுவே குருவாகின்றது. அந்தத் தீங்கின் விளைவுகள் குருவாக்கப்படும் பொழுது அந்தத் தீங்கின் விளைவே உருவாகின்றது.

அதே சமயத்தில்
1.தீமையை அகற்றிடும் நிலைகளை குருவாக ஏற்றுக் கொண்டால்
2.“தீமையை அடக்கிடும் குரு” என்ற நிலைகள் அடைகின்றது.
3.இன்றைய செயல் நாளைய நிலைகளாக அடைகின்றது.

ஆகவே நாம் எதனின் நிலைகளை வளர்க்கின்றோமோ அதுவே நமக்குள் குருவாகின்றது.

ஒருவரை வேதனைப்படுத்தும் உணர்வினை எடுத்துக் கொண்டால் அந்த வேதனை உணர்வே நமக்குள் உருவாகின்றது. அதுவே குருவாகி நரகலோகத்தைச் சந்திக்கும் நிலையை உருவாக்குகின்றது.

திருடன் என்ற நிலைகள் வந்தால் அதுவே குருவாகி… திருடன் என்ற நிலைகள் அடைந்து பிறருடைய துன்பங்களை அறியாது தவறு செய்யும் நிலைகளே வருகின்றன. அதுவும் குரு தான்.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஒளி என்ற நிலைகளில்
1.நாம் எந்தக் குருவைப் பின்பற்றுகின்றோமோ அந்த “குரு உபதேசித்த உணர்வைத்” தனக்குள் எடுத்தால்
2.தீமைகளை அகற்றி அருள் ஒளி என்ற சக்திகளை ஊட்டும்.

அரும் பெரும் உணர்வை நாம் பெறுவோம். இந்த வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம். மெய்ப்பொருள் காணும் நிலைகளை உருவாக்குவோம்.

1.அனைத்து உலக மக்களின் உயிரையும் ஈசனாக மதிப்போம்.
2.அனைத்து உலக மக்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்று தவம் இருப்போம்.

நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் உபதேசிக்கின்றேன்

நீங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கத்திலே தான் உபதேசிக்கின்றேன்

 

நம் உடலில் நல்ல அணுக்களை எப்படி வளர்க்க வேண்டும்…? தீய அணுக்கள் வராதபடி தடுக்கும் சக்தியாக நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் உடலில் உள்ள ஜீவணுக்களை எப்படிப் பெருக்க வேண்டும்…? என்று தான் உங்களுக்குப் பயிற்சி கொடுக்கின்றேன்.

பயிற்சி கொடுத்தும் உடல் ஆசை வந்தால் ராவணனாக மாறி விடுகின்றது. ராவணனாக மாறிவிட்டால் நல்ல குணங்களை அது சாப்பிட்டு விடும். அசுர குணங்கள் கொண்ட அடுத்த உடலாக உயிர் மாற்றிவிடும்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்தால்
2.உயிரைப் போன்றே ஜீவணுக்களை மாற்றி உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

இன்று நடக்கும் யுத்தங்களால் எத்தனையோ கடுமையான விஷங்கள் வந்தாலும் உலகமே அழிந்தாலும் இந்த உயிர் அழியாது நெருப்பிலே பட்டாலும் “உயிர் அழிவதில்லை…” உடல் கருகுகிறது. கருகிய உணர்வுகளாக மாறுகின்றது.

பிறிதொரு உடலுக்குள் சென்றால் கருகிடும் உணர்வின் இயக்கத்தை அங்கே செயல்படுத்துகின்றது. அடுத்து வேதனைப்படும் உடலாக ஈர்த்து அந்த உடலைப் பெறுகின்றது.

உடல் பெறும் சந்தர்ப்பம் பெரும்பகுதி புழுவாகவும் பூச்சியாகவும் பாம்பாகவும் வாழக்கூடிய நிலைதான் வருகின்றது. விஷ அணுக்கள் பரவும் பொழுது மனித உடலிலே இது படர்ந்து விட்டால் இந்த உடலுக்குப் பின் கிருமிகள்தான் அதிகமாகும்… பூச்சிகளாகத்தான் உருவாகும். மனித நிலைப் பெறுவது கடினமாகிவிடும்.

ஆகவே
1.இன்று கவலையும் சஞ்சலத்தையும் சங்கடத்தையும் துரத்தி விடுங்கள்.
2.கவலையும் சஞ்சலமும் சோர்வும் பெரும் பிசாசாக மாறி நல்ல குணங்களை அழித்திடும் அத்தகைய நிலைகளை அப்புறப்படுத்துங்கள்.

கவலையும் சோர்வும் வரும் பொழுது தாங்க முடியவில்லை என்றால் கோபமும் பழி தீர்க்கும் உணர்வுகளையும் கூட்டி வெறுப்புணர்வாகி இந்த உடலையே வெறுக்கும் நிலை வருகிறது. வெறுத்து மற்றவர்களைத் தாக்கும் உணர்ச்சிகளையும் கொண்டு வருகின்றது.

இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட வேண்டும்.
1.குரு அருள் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசித்துக் கொண்டு வருகின்றேன்.
2.வீட்டுக் கவலையும் சலிப்பையும் சங்கடத்தையும் விட்டு விடுங்கள்.
3.குருநாதர் காட்டிய வழியில் தியானிப்போம் என்ற நிலைக்கு வாருங்கள்.
4.எல்லோருக்கும் என் மீது நல்ல அன்பு வளரட்டும்.
5.குடும்பத்தில் அனைவரும் நல்லவராக வளரட்டும்… ஒன்றுபட்டு வாழும் நிலை பெற வேண்டும்
6.உலக மக்கள் அனைவரும் நல்ல உணர்வு பெற வேண்டும் என்று எண்ணித் தியானித்துப் பாருங்கள்.

யாம் உபதேசித்த உணர்வுகள் அனைத்தும் இங்கே இருக்கின்றது அந்தப் பதிவு உங்களிடம் இருக்கின்றது… உபதேசித்த உணர்வுகள் அலைகளாகக் காற்றிலே பரவி உள்ளது… உலகம் முழுவதும் உள்ளது.

1.அதை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்… அதற்குண்டான சந்தர்ப்பத்தைத் தான் உருவாக்குகின்றோம்.
2.நீங்கள் அனைவரும் சந்தோஷப்பட வேண்டும் என்ற நோக்கிலே நான் குரு வழியில் இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

குரு என்றால் யார்…?

குரு என்றால் யார்…?

உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது. உயிர் ஒளியின் சிகரமாக இருக்கும் பொழுது அதனின் அறிவாக இயக்குகின்றது.

இந்த உடலின் வாழ்க்கையை ஞானத்தின் நிலைகள் கொண்டு சிந்தித்து பாருங்கள். குருவை நாம் எப்படி மதிக்க வேண்டும்…?

1.உங்களைப் பழித்துப் பேசும் உணர்வுகளையோ உங்களைத் துன்பப்படுத்தும் நிலைகளையோ நான் எண்ணினேன் என்றால்
2.அது என் உயிரான குருவிற்கு நான் செய்யும் தீங்கே ஆகும்.

அதாவது இந்த உயிரால் வளர்க்கப்பட்ட உண்மையின் உணர்வை மறந்து… நான் எடுக்கும் உணர்வுகள் எனக்குள் வந்தால் அது “குருவிற்கு நான் செய்யும் துரோகம்…”

எண்ணிலடங்கா நரக வேதனையின் நிலைகள் உயிரால் உருவாக்கப்பட்டு எத்தனையோ நிலைகள் உயர்ந்த நிலைகள் கொண்டு சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டது தான் இந்த உயிர்.

பல சரீரங்களில் பல தீமைகளிலிருந்து விடுபட்டு நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர்.
1.அப்படிப்பட்ட உயிரை மதிக்கத் தவறினால் அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.
2.துரோகிளுக்கு உறுதுணையாகப் போனவர்களின் நிலைகள் நாம் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

நமது குரு பைத்தியக்காரர் போல் இருந்தார். காட்டிற்குள் செல்லப்படும் பொழுது யானையைக் காட்டி அந்த யானையிடமிருந்து தப்பிக்க “யானையுடன் நட்புக் கொள்ள வேண்டும்…” என்றார்.

பூனை எப்படி எலியின் உணர்வை நுகர்ந்து அந்த மணத்தைக் கொண்டு எலியை உணவாக உட்கொள்கின்றதோ அதைப் போல
1.“யானையின் மணத்தை நுகர்ந்து கொள்…”
2.திரும்பத் திரும்ப நுகர்ந்து அந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சு.
3.அதனுடைய எண்ணங்களுக்கு வரும் பொழுது யானை வலுவுடையதுதான் என்றாலும் அதன் வலுவின் தன்மை உனக்குள் சிக்கி
4.அது தாக்கும் நிலையில் இருந்து நீ தப்பிக்கலாம் என்றார்.

சில நேரங்களில் காட்டுக்குள் போகும் பொழுது குருநாதர் எமக்கு அனுபவத்தைக் கொடுத்தார். அந்த அனுபவத்தைத் தான் சொல்கின்றேன். நீங்கள் அலட்சியப்படுத்தினால் எனக்கு ஒன்றும் இல்லை.

அலட்சியப்படுத்துவோர்கள் உணர்வுகளுக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தைத் தவறவிட்டதாக ஆகி விடும்.

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

குருநாதர் கொடுத்த இன்னல்களைத் தாங்க முடியாதபடி பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

 

எனது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்த்தி துயரப் படும்படியாக வாழச் செய்தார்… அதிலேயே உழலச் செய்தார். பல இன்னல்களைக் கொடுத்தார்.
1.அந்த இன்னல்களைச் சந்தித்த பின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.
2.என்னை இப்படி எல்லாம் தொல்லைப்படுத்துகின்றாயே… கஷ்டப்படுத்துகின்றாயே…!
3.இது எதுவும் எனக்கு வேண்டாம்… நான் பேசாமல் போகின்றேன்…! என்றேன்.
4.இன்னல்களைத் தாங்க முடியாது தற்கொலை செய்யவும் கூட முயற்சி எடுத்தேன்… ஒரு முறை அல்ல பல முறை…!

அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலைகள் கொண்டு என்ன வாழ்க்கை…? என்று எண்ணினேன்.

மனைவியைக் காப்பாற்றினார்… சில மகிழ்ச்சியான செயல்களும் நடந்தது. ஆனால் அதற்குப்பின் ஒவ்வொரு நொடியிலும் பல பல இன்னல்கள் வருகின்றதே…! என்ன வாழ்க்கை…? என்று எண்ணிய பின் பல முறை தற்கொலை செய்யும் உணர்வுக்கே அது என்னை அழைத்துச் சென்றது.

அப்பொழுது தான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

உன்னுடைய உணர்வு கொண்டு பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றாய். ஆனாலும் அந்தத் தீமையின் உணர்வுகளை உனக்குள் நீ நுகரும் பொழுது
1.உன் நன்மையின் நிலைகளை அது எவ்வாறு செயலற்றதாக மாற்றுகின்றது…?
2.உன் உடலை அழித்திட வேண்டும் என்று இந்த உணர்ச்சிகள் உன்னை எப்படித் தூண்டுகின்றது.

எத்தனையோ உடல்களில் “உன்னைக் காத்திட வேண்டும்…” என்ற உணர்வை நினைவு கொண்டாய் பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆனாய்.

ஆனால் மனிதரான பின் சிறு குறைகளை உன்னால் தாங்க முடியாது இந்த உணர்வின் தன்மை வளர்க்கப்படும் பொழுது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.

இந்த உடலை அழித்து விட்டால்
1.உடலை அழித்திடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை அந்த உடலையும் அழித்துவிடும் நிலைகளுக்குச் சென்று
2.இது போன்று உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட மிருகமாக நீ பிறப்பாய் போ…! என்று சாபமிடும் நிலையாக உணர்த்தினார்.

அதைச் சிந்தித்துப் பார் என்றார். அந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது…? எதனை நீ அறிய வேண்டும்…? என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

ஆகவே நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்…? எதனை நமக்குள் பருக வேண்டும்…? என்ற பேருண்மையை குருநாதர் அருளினார். அந்த உணர்வின் தன்மையை இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியிலே எனக்குக் கொடுத்தார்.

1.நீங்கள் அனைவரும் அதைப் பெற முடியும்
2.உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும்
3.தீமையற்ற உடலாக மாற்ற முடியும்
4.தீமையற்ற நிலைகளை உங்களுக்குள் விளைய வைத்துப் பிறவா நிலை என்ற பெருநிலை அடைய முடியும்.
5.உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும்
6.உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும்
7.உங்கள் வாழ்க்கையில் மன நிம்மதி பெற முடியும் என்று
8.குருநாதர் எனக்கு உணர்த்தியதை உங்களுக்குத் தெளிவாகக் காட்டுகின்றோம்… அதைப் போதிக்கின்றோம்.

ஆகவே எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அருள் சக்திகளை அனைவரும் எளிதில் பெற முடியும்… குடும்பத்தில் வரும் சிக்கல்களை நீங்கள் மாற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

தொழிலில் நஷ்டம் வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?

 

மிளகாய் காரம் என்றால் தூக்கி எறிந்து விடுகின்றோமோ…? அதைச் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம் அல்லவா…!

அதாவது காரம் என்ற உணர்வு… கோபப்படுபவர்களை வேதனைப்படுபவர்களை வெறுப்படைபவர்களை துயரப்படுபவர்களை இந்த மாதிரி சங்கடங்களைக் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது தெரிந்து கொள்கின்றோம்.

தனித்து விட்டால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் சேர்த்துக் கார உணர்ச்சிகள் அதிகமாகி நம் அணுக்களில் பெருக்கி விட்டால் இதன் நிலைகளில் ரூபம் மாறிவிடும்.

1.சில வீடுகளில் “இப்படிப் பேசுகிறானே உருப்படுவானா” என்று சொல்லிச் சொல்லி
2.இவர்களே உருப்படாமால் பண்ணிக் கொள்வதைப் பார்க்கலாம்.
3.இந்த மாதிரிப் பேசுகிறவர்கள் உடல்களிலே நிறையச் சங்கடங்கள் வரும்.
4.குடும்பத்தில் சண்டை வரும்… குழந்தைகளிடம் வெறுப்படைவார்கள்.
5.இவர்கள் எண்ணமே உதவி செய்வதற்கு மாறாகப் பிரித்துவிட்டு விடும்.
6.நண்பர்களிடமும் இதே போன்ற உணர்வுகளைத் தோன்றச் செய்து பிரித்துவிடும்.

எப்பொழுது பார்த்தாலும் இதே போல “உருப்படுவானா…?” என்று சொல்வதைக் கேட்டு நண்பர்களுக்கும் இவன் உருப்படுவானா…? என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துவிடும்.

அவர் இவ்வாறு காரம் என்ற நிலைகளை எடுத்தால் நோய் என்ற நிலைகள் விளைகின்றது. அதனை நாம் எடுத்தால் நமக்குள்ளும் அதே நிலையாக மாற்றும்.

ஆகையினால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் நமக்குப் பாதுகாப்புத் தேவை.

ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று இதை எடுத்து வளர்த்துக் கொண்டால் இதன் வழி “நமக்கு இந்த உண்மையின் நிலைகள் வரும்…”

நாம் தொழிலுக்குச் செல்லும் பொழுது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு “நம்மிடம் வேலை செய்பவர்கள் அனைவரும்…”
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்
3.தொழிலில் நல்ல நாட்டம் வரவேண்டும்
4.தெளிவான மனம் பெற வேண்டும்… தெளிவாகத் தொழில் செய்யும் அந்த எண்ணம் வரவேண்டும் என்று
5.உங்கள் இடத்திலே உட்கார்ந்து ஒரு பார்வை பார்க்க வேண்டும்.
6.நீங்கள் எதை எண்ணுகிறீர்களோ… அதே போன்று, நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

யாராவது தவறு செய்கிறார்கள் என்றால் இயற்கையில் அவர்களது குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும்… பொருளாதாரத்தில் குறை இருக்கலாம்… சொந்தத்திற்குள் யாராவது குறையாகப் பேசியிருக்கலாம்.

இந்த மாதிரி குறைகளைப் பேசி அவர்களுக்குள் வெறுப்பான நிலைகள் இருந்தால் நம்மிடம் வேலை பார்க்கும் பொழுது சிந்தனையிழந்து வேலை செய்யும் நிலை வரும். அப்பொழுது, நம் பொருள்களுக்கு நஷ்டம் வரும்.

அவ்வாறு வராதபடி செய்ய வேண்டுமென்றால்
1.நாம் அவருக்கு அருள் உணர்வுகளைப் பாய்ச்சி
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் நீ நன்றாக வேலை செய்வாய்
3.மகரிஷிகளின் சக்தியால் நல்ல முறையில் உடல் நலத்துடனும் சிந்திக்கும் சக்தியும் பெற்று நலமாக இருப்பாய்”
4.என்று அவனிடம் சொல்லி அனுப்ப வேண்டும்.

இதைப் போல நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தினம் தினம் அவருக்குச் சொல்ல சொல்ல அவர் காதிலே கேட்கக் கேட்க (தினமும் வேலைக்கு வந்தவுடன் அவரிடம் சொல்லிவிட வேண்டும்). “மகரிஷிகள் அருள் சக்தியால் நீ நன்றாக இருப்பாய்… தொழிலில் சிறந்து விளங்க வேண்டும்…” என்று வாக்குகள் கொடுத்து இதே போன்று செய்யச் சொல்லிவிட வேண்டும்.

சில வெறுப்பான நிலைகளோ சிந்தனையிழக்கும் நிலைகளோ அதிகம் இருந்தால் “விபூதியைக் எடுத்து கையில் கொடுத்து…” இதே போல சொல்லச் சொல்லி வேலை செய்யச் சொல்லுங்கள்.

இவ்வாறு செய்யச் சொன்னீர்கள் என்றால் தொழில் நன்றாக இருக்கும்.

மேலும் “எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தியால் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

சில சமயம் இதெல்லாம் மீறி நமது தொழிலில் சில குறைபாடுகளைக் கண்டால் “அந்தக் குறை நம்மை இயக்கிவிடக் கூடாது…”

அந்தக் குறை உணர்வு வந்தவுடன் நமக்குக் கோபம் வரும் அல்லது வேதனைப்படுவோம். நாம் இதை நுகர்ந்தவுடனே நமது உயிர் இந்த உணர்வை, உணர்ச்சியால் உடல் முழுவதும் பரப்புகின்றது. நமது இரத்தநாளங்களில் கலக்கின்றது. அப்பொழுது என்ன செய்கின்றது…?

1.நமது உடலில் உள்ள நல்ல அணுக்களில் விஷத்தன்மை போன உடனே அதை ஏற்க மறுக்கும்.
2.நாம் தைரியமாகச் செய்யக் கூடிய எண்ணங்களும் பலவீனமடையும்.

ஆகையினால் அவ்வாறு விடாதபடி அடுத்த நிமிடம் “ஈஸ்வரா” என்று சொல்லி உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் படர வேண்டும் என்று இரண்டு நிமிடம் எடுத்துவிட்டுப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… தெளிவான மனம் பெற வேண்டும் தொழிலில் சிந்தித்துச் செயல்படும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று (குறை செய்தவரை) எண்ணி நாம் இங்கே உருவாக்கிவிட வேண்டும்.

அப்பொழுது அவரின் உணர்வு இங்கே சிறுத்து விடுகின்றது. பின் அவரைக் கூப்பிட்டு “சிந்தனையுடன் செய்வீர்கள்… நன்றாக நீங்கள் செயல்படுவீர்கள்” என்று சொல்லிவிடுங்கள்.

இதனை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

ஏனென்றால் அவர் குடும்பத்தில் இருக்கும் சிக்கலால் அவர் அறியாமல் செயல்படும் பொழுது அவர் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நமது உடலிலும் கலக்கின்றது.

சேற்றில் விழுந்து வருபவர்களைக் கட்டித் தழுவினால் எப்படி இருக்கும்…? நம் உடலிலும் சேறாகிவிடும்.
1.ஆகையினால் அந்தச் சேற்றை நீக்கக் கூடிய அளவிற்கு
2.நம் உடலில் ஒட்டிவிடாதபடி, அதனைச் செயல்படுத்த வேண்டும்.
3.தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

இவ்வாறு
1.ஒவ்வொரு நிமிடமும் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது
2.ஒவ்வொரு கெட்ட குணத்திலேயும் அதை அடக்கக்கூடிய சக்தியாக “நமது எண்ணம்” வருகிறது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உயிரில் பட்டவுடன் இது கலந்து அவர் நல்ல குணம் வளர வேண்டும் என்கின்ற பொழுது இதையே நமது உயிர் நல்ல அணுக்களாக நமது உடலில் மாற்றுகின்றது.

நமது உடலில் உள்ள நல்ல அணுக்கள் அனைத்திலுமே அந்த உணர்வு அனைத்தையும் சேர்த்து இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமையின் நிலை வந்தாலும் சமப்படுத்த முடியும்.

மிளகாய் தனியாகக் காரமாக இருந்தாலும் குழம்பில் போட்டவுடன் ருசியாகிவிடுகின்றது. உப்பு தனியாகக் கரித்தாலும் குழம்புடன் சேர்க்கப்படும் பொழுது தணிந்து விடுகின்றது.

1.இதே போல நாம் தொழில் செய்யும் இடங்களில் பலவிதமான நிலைகள் இருந்தாலும் நாம் இது போன்று, செய்து பழக வேண்டும்.
2.தொழிலில் இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது

சக்தியை எல்லா நேரமும் நான் விரயம் செய்ய முடியாது

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் மூன்று லட்சம் பேரைச் சந்தித்து அனுபவபூர்வமாகப் பெற்ற ஞானத்தைத் தான் உங்களிடம் உபதேசித்து வருகின்றேன்.

அன்றைக்கு என் காலிலே ஆணி. குருநாதர் செருப்பு கூடப் போடக்கூடாது என்று சொல்லிவிட்டார். இரண்டு காலிலும் 28 ஆணி இருந்தது. நடக்கும் போது ஒரு சிறிய கல்லிலே மிதித்து விட்டால் போதும். அ…ஆ…! என்று உணர்ச்சிகள் தூண்டப்பட்டு தலையில் உச்சி முடி நட்டமாக நிற்கும்.

வெளியிலே சேர்ந்தாற் போல் அதிக நேரம் உட்கார முடியாது… எரிச்சலாகும். கால் ஆணி உள்ளவர்களிடம் கேட்டால் தெரியும்… இது எப்படி என்று…!

அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு…
1.உலகம் எப்படி இருக்கின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்
2.ஒவ்வொரு குடும்பத்திலும் என்ன நடக்கின்றது…?
3.அதில் உள்ளவர்கள் உடலை விட்டுப் பிரிந்த பின் குடும்பத்தில் என்ன நடக்கின்றது…?
4.இறந்த பின் அந்த ஆன்மாக்கள் என்ன செய்கின்றது…? என்று இதை எல்லாம் அனுபவ ரீதியிலே தெரியும்படி செய்தார்.

கஷ்டப்பட்டு அதை எல்லாம் தெரிந்து கொண்டு வந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது அதிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்கு… உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்.

கொடுத்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதற்கு ஆள் இல்லை.

எத்தனையே பேர் எம்மைச் சந்திக்க வருகின்றார்கள். உங்களுக்குள் வரும் தீமைகளை மாற்றக்கூடிய சக்தி “உங்களுக்கு உண்டு” என்று கொடுக்கின்றோம்.
1.அதை யாரும் எடுப்பதில்லை.
2.சாமி எனக்குச் செய்து தர மாட்டேன் என்கிறார் என்ற இந்த உணர்வு தான் பெரும்பகுதியானவருக்கு உள்ளது.
3.சாமி சொன்ன வழியில் தியானத்தைச் செய்து என்ன கிடைத்தது…? என்கிறார்கள்.

ஏனென்றால் யாம் சொல்வதைக் கடைப்பிடித்து வழி நடந்தால் தான் நடக்கும். கடைப்பிடிக்கவில்லை என்றால் எப்படி நடக்கும்…?

பாதாமைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. ஆசை இருக்கின்றது… ஆனால் அதைச் சாப்பிடுவதற்குப் பதில் வேதனையை எடுத்தால் என்ன ஆகும்…?

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்கு எத்தனையோ வேலைகளைச் செய்கின்றேன்.

ஆனால் ஒரு சமயம் நல்லதானாலும் மீண்டும் அதை வைத்துத் தனக்குகந்த உணர்வை வளர்த்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய சக்தியை வளர்ப்பதற்கு ஆள் இல்லை.

1.எத்தனையோ பேருக்கு அவருடைய துயரங்களிலிருந்து அவர்களை மீட்டி விடுகின்றோம்.
2.அதை வைத்து மீண்டும் அவர்கள் தெளிந்து தெரிந்து வருவார்கள் என்று தான் அதைச் செயல்படுத்துகின்றோம்.

ஆனால் அப்படிச் செய்கின்றார்களா…?

1.காரணம்… சக்தியை நான் எல்லா நேரமும் விரயம் செய்ய முடியாது.
2.உங்களுக்குண்டான அந்த வழிமுறைகளை வகுத்துக் கொடுத்திருக்கின்றோம்.
3.அதை நீங்கள் எடுத்துக் கரையேறி மீண்டு வரும் “தன் பலம்” வேண்டுமல்லவா.

எல்லாவற்றையும் சாமி பார்த்துக் கொள்வார் என்றால் சாமி எதைப் பார்ப்பார்…? உங்கள் கஷ்டத்தை எல்லாம் நான் கேட்டுக் கொண்டேயிருந்தால் அதிலிருந்து நான் என்னைத் தப்புவித்துக் கொள்வதற்குத் தான் பார்க்க முடியுமே தவிர உங்களை எப்படி நான் காப்பது…?

1.ஒவ்வொருவரும் யாம் கொடுக்கக்கூடிய சக்திகளை வைத்து ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
2.வாழ்க்கையைச் சீர்படுத்தி வழி நடத்திடவும்… வாழ்க்கைக்குப் பின் அடையக்கூடிய நிலையாக
3.துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றிப் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இதிலே ஒன்றும் கஷ்டம் இல்லை… சிறிது காலம் செய்து பழகி விட்டால் தன்னாலே வந்துவிடும்.

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

சந்தர்ப்பத்தால் நம் வியாபாரம் எப்படிக் கெடுகின்றது…?

 

நாம் ஒரு ஜவுளி வியாபாரத்திற்குப் போகின்றோம். ஜவுளி வியாபாரத்திற்குப் போகும் பொழுது கடைகளில் ஆர்டர் சேகரிப்பதற்குச் சில மாதிரிகள் மட்டுமே எடுத்துச் செல்கின்றோம்.

கடைகளுக்குச் சென்று நாம் எடுத்துச் சென்ற “மாதிரித் துணிகளை” (sample) காண்பித்தவுடனே கடைக்காரர்களும் அதைப் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு மாதிரிகளைப் போன்று சரக்கு அனுப்பும்படி நம்மிடம் கேட்கின்றனர்.

நாமும் கடைக்காரரிடம் ஆர்டர்களைச் சேகரித்துக் கொண்டு, நமது ஊருக்குக் கிளம்பி வந்து, கடைக்காரர் ஆர்டர் செய்த சரக்குகளைத் தயார் செய்து, அவரது கடைக்கு அனுப்புகின்றோம்.

சரக்கை அனுப்பி வைத்துவிட்டு ஓரிரு நாள்கள் கழித்துப் பண வசூலுக்காக அவருடைய கடைக்குச் செல்கின்றோம்.

அவருடைய கடைக்குச் செல்ல வேண்டுமென்றால் (city) பஸ்ஸில் பயணம் செய்துதான் போக வேண்டும். ஆனால் பஸ் கிடைக்கவில்லை… நடந்தே செல்கின்றோம்.

அப்போது சந்தர்ப்பம்… ஒரு குடும்பத்தில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். பலகாரம் செய்து கொண்டிருந்த சமயத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டது.

வீட்டிலிருந்த சிறுவனை அழைத்து,ச் “சீக்கிரம் எண்ணெய் வாங்கி வாடா…” என்று அவசரப்படுத்தி அனுப்பி வைக்கின்றார்கள். சிறுவனும் எண்ணெய் வாங்கி வருவதற்காக வேகமாகக் கடைக்குச் செல்கின்றான்.

சிறுவன் கடைக்குச் சென்று “எண்ணெய் கொடுங்கள்… எண்ணெய் கொடுங்கள்…!” என்று அவசரப்படுத்துகின்றான்.

ஆனால் கடைக்காரரோ இவனைப் பார்த்துப், “பொறு… பொறு…” என்று அடுத்தவர்களுக்கே சரக்கைக் கொடுத்து அனுப்புகின்றார். சிறுவனுடைய அவசரத்திற்குச் செவி சாய்க்க முடியாமல் போய் விடுகின்றது.

சிறுவனுக்கோ நேரம் கடந்து கொண்டிருக்கின்றது.

அது சமயம் சிறுவன் “நேரமாகிக் கொண்டு இருக்கின்றது… வீட்டில் பலகாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள், ஆகவே எண்ணெய் சீக்கிரம் கொடுங்கள்… தாமதமானால் வீட்டில் என்னைத் திட்டுவார்கள்…!” என்று கூறுகின்றான்.

1.இருந்தாலும், சிறுவனுடைய ஆவேச அவசர உணர்வுகள், அங்கே எதிர்நிலையாகின்றது.
2.“எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…” அதாவது கடைக்காரரின் உணர்வும் சிறுவனுக்குச் சீக்கிரம் சரக்கைத் தந்து அனுப்ப மறுக்கின்றது.

இப்படித் தாமதமாகும் பொழுது… “நேரமாயிற்றே, நேரமாயிற்றே…!” என்ற இந்தப் பதட்டத்திலேயே சிறுவன் இருக்கின்றான். சிறிது தாமதத்திற்குப்பின் சிறுவனும் எண்ணெயை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வேகமாக வருகின்றான்.

இப்படி, சிறுவன் வேகமாக வரும் பொழுது அவனுடைய எண்ணம் முழுவதும் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்றே செலுத்துகின்றான். இதனால் சாலையில் மேடு பள்ளங்கள் தெரியாதபடி சென்று தவறிக் கீழே விழுந்து விடுகின்றான்.

ஏனென்றால்
1.அவனுடைய எண்ணம் “நேரமாகி விட்டதே… நேரமாகி விட்டதே…!” என்று இருக்கின்றது.
2.இதனால் அவனுக்குச் சாலையில் மேடு பள்ளம் தெரிவதில்லை.

எப்படியும் எண்ணெயைக் கொண்டு போய்ச் சீக்கிரம் கொடுத்து விடவேண்டும் என்று எண்ணினான். அந்த அவசரத்தால் போகும் வேகத்தில் இவனும் தவறி விழுந்து பாட்டில் நொறுங்கி எண்ணெயும் வீணாகி விடுகின்றது.

சிறுவன் எண்ணெய் வீணான வருத்தத்தில் உடைந்த பாட்டிலை சாலை ஓரமாகத் தள்ளிவிடாதபடி சாலையில் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகின்றான்.

அதே சமயம் நாம் அதே சாலை வழியில் (ஜவுளி) சரக்கை அனுப்பிய கடைக்கு நடந்து வருகின்றோம். வழியில் நாம் நமது வியாபாரம் பற்றிய எண்ணத்துடனே செல்கின்றோம்.

1.நமது நினைவு முழுவதும் வியாபாரம் பற்றிய சிந்தனையில் இருப்பதால்
2.சாலையில் உடைந்து கிடக்கும் பாட்டிலைக் கவனிக்காமல் உடைந்து கிடக்கும் பாட்டிலை நம்மை அறியாமலே உதைக்கின்றோம்.

உடைந்த பாட்டில் காலில் பட்டவுடன் “பாவிப் பயல்கள்… நடக்கும் ரோட்டில் பாட்டிலைப் போட்டு உடைத்துள்ளார்களே…!” என்று வெறுப்பான உணர்வுகள் வருகின்றது.

உடைந்த பாட்டிலில் நம் கால் மோதிய போதும் நமது காலில் காயம் எதுவும் இல்லை. ஆனால் “இந்நேரம் உடைந்த பாட்டில் காலில் குத்தியிருந்தால் என்னவாயிருக்கும்…?” என்ற உணர்வுகள் வருகின்றன.

சரி… நாம் தான் உடைந்த பாட்டிலைப் பார்த்தோம். உடைந்த பாட்டில்களை ஓரமாகத் தள்ளிவிடுவோமா…? என்றால் செய்ய மாட்டோம்.

இதே பாட்டில் அடுத்தவரின் காலில் குத்த வாய்ப்பிருக்கின்றது. ஆகவே உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளிவிடுவோம் என்று உடைந்த பாட்டிலை ஓரமாகத் தள்ளி விட்டிருந்தால் “நம்மிடம் சிறிது நல்ல மனம் இருக்கின்றது…” என்று இருக்கும்.

1.ஆனால் நாம் என்ன செய்கின்றோம்…? வியாபார நோக்கத்திலேயே போகின்றோம்.
2.“ரொம்ப அறிவு கெட்டதனமாக இருக்கின்றது…” என்று
3.மற்றவர்களைக் குறை கூறும் உணர்வுகளை எடுத்துக் கொண்டு போகின்றோம்.

இப்படி இதன் உணர்வுகளுடன் கடைக்குச் சென்றபின்… “சரக்கு அனுப்பியிருந்தோம்… சரக்கைப் பார்த்தீர்களா…?” என்று கடைக்காரரிடம் கேட்போம்.

நம்மைக் கடை முதலாளி பார்க்கின்றார். அது சமயம்
1.சாலையில் நடந்த சம்பவத்தால் உண்டான “வெறுப்பின் மணம்” நமது உடலிலிருந்து வெளிப்படும் நிலையில்
2.அதன் மணத்தை முதலாளி நுகர நேருகின்றது.
3.நுகர்ந்தபின் நாம் அனுப்பியிருந்த சரக்குக் கட்டுகளைப் பிரித்துப் பார்க்கின்றார்.

கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். வெறுப்பின் உணர்வுகளை நுகர்ந்து சரக்கைப் பார்க்கும் பொழுது கடைக்காரருக்கு “வித்தியாசமாகத் தெரிகின்றது…”

உடனே கடை முதலாளி “ஜவுளி மாதிரி (sample), அன்று காண்பிக்கும் பொழுது ஒரு விதமாக இருந்தது, ஆனால் இன்று சரக்கு வேறு விதமாக இருக்கின்றதே…!” என்று கூறுவார்.

ஏனென்றால் நுகர்ந்த வெறுப்பின் உணர்வின் மணத்திற்கொப்ப அங்கே வெறுப்பு உணர்ச்சியையே காண்பிக்கின்றது.
1.ஆனால் அன்று காண்பிக்கப்பட்ட மாதிரிப் பொருளும் இன்று காண்பிக்கும் சரக்கும் ஒன்றுதான்.
2.நுகர்ந்த உணர்வுகள் இன்று வேறு விதமாகக் காண்பிக்கின்றது.

“நான் அனுப்பியது நல்ல சரக்குதான்… நன்றாகப் பாருங்கள்…!” என்று நாம் கூறுவோம்.

உடனே கடை முதலாளி, எனக்குக் கண் இல்லையா…? நன்றாகப் பார்த்துவிட்டுத் தான் சொல்கின்றேன்…” என்று கூறுகின்றார்.

நாமும் இரண்டு தரம் “நல்ல சரக்குதான்…” என்று கூறுவோம்.

அதற்குக் கடை முதலாளி “இப்படி நாணயம் (நேர்மை) கெட்டுவிடக் கூடாது…” என்று கூறுவார்.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வுகளின் இயக்கம் இப்படி இருக்கின்றது. இதை மாற்றுவதற்கு வழி என்ன…? சந்தர்ப்பத்தால் வரும் இத்தகைய தீமைகளைத் துடைப்பதற்குச் சக்தி வேண்டுமே.

அதற்குத்தான் தியானத்தைக் கடைப்பிடிக்கச் சொல்வது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து அறியாது வரும் தீமைகளை உடனுக்குடன் நீக்கிப் பழக வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் அருளிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம்முள் பெற்று மெய்ப் பொருள் காணும் திறனை நமக்குள் வளர்த்துக் கொண்டால்
1.நமது வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கொப்ப நல் ஞானங்கள் உதயமாகி நம்மை வழி நடத்திச் செல்லும்.
2.இதன் தொடர் கொண்டு அகண்ட அண்டத்தின் இயக்கமும் நமது உடலான பிண்டத்திற்குள் அது எப்படி இயக்குகின்றதென்றும்
3.உணர்வுகள் எப்படி எண்ணங்களாக ஆகின்றதென்றும்
4.எண்ணங்கள் எப்படி உணர்ச்சிகளாக மாறுகின்றதென்றும்
5.உணர்ச்சிகள் எப்படி நம்மை இயக்குகின்றதென்றும்
6.நமக்கு நாமே அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் குரு வழியில் நாம் எல்லோரும் பெற வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில் உங்களை நீங்கள் அறிந்து அருள் வழி வாழ்ந்து அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் வழியில் தொழில் வளம் பெற்றுச் செல்வம் செல்வாக்கு பெற்று அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட எமது அருளாசிகள்.

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

தீமையை நீக்கும் எலக்ட்ரானிக்காக (உணர்வு) நாம் உருவாக்க வேண்டும்

 

விஞ்ஞான உலகில் இருக்கின்றோம்… எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையை உருவாக்குகின்றனர்.

உதாரணமாக நாம் ரோட்டில செல்லப்படும் போது… அந்தப் பக்கம் அழுத்தமாக மிளகாய் நெடி வந்தால் நுகர்ந்தவுடனே அந்த உணர்ச்சிகள் (அதுதான் எலக்ட்ரானிக்)
1.நாம் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் நம் நல்ல குணங்களை மாற்றி அந்த நெடி நம்மைத் தும்ம வைக்கின்றது.
2.சிந்திக்கும் தன்மையைக் கூட அந்த இடத்தில் இழக்கச் செய்து விடுகின்றது.

அது எலக்ட்ரானிக்காக மாறுகின்றது. எதன் உணர்வை இந்தச் சூரியனின் “இயக்க அணுக்கள்” கவர்கிறதோ அதை நுகரப்படும் போது அதன் உணர்வின் உணர்ச்சியாக நம்மை இயக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வு தான் அவ்வாறு இயக்குகின்றது.

இதைப் போன்று தான் ஒரு மனிதனைப் பார்க்கின்றோம். அந்த உடலில் இருந்து வரக்கூடிய உணர்வை நாம் அறிய முடியவில்லை.

1.சில சந்தர்ப்பங்களில் ஒரு மனிதனைப் பார்த்தால் இனம் புரியாது அவர் மேல் வெறுப்பு வரும்… அல்லது சோர்வு வரும்
2.ஒருவரைப் பார்க்கப்படும் பொழுது இனம் தெரியாத சிந்தனைகள் வரும்.
3.ஏன்… எதற்கு அவ்வாறு நம் மனம் மாறுகிறது…? என்ற நிலை கூட வந்துவிடும்.

காரணம் மனித உடலிலிருந்து வரக்கூடிய அந்த உணர்வினை நாம் சுவாசிக்கப்படும் பொழுது… “நம்மை அறியாமலே இயக்குவதை நாம் அறியவில்லை…” ஆனால் அது நம்மை இயக்கத் தான் செய்கிறது.

விஞ்ஞானிகள் ரோபோட் என்ற இயந்திரத்தை உருவாக்குகின்றார்கள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற பேழையில் உருவாக்கி
1.அதிலே காந்தப்புலனும் கெமிக்கலும் கலந்த பின்
2.மோதலின்… அதிர்வு ஒலி அலைகள் எப்படி வருகின்றதோ…? அதற்குத் தக்கவாறு அந்த இயந்திரத்தை இயக்கி
3.அந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எதிர் நிலை வரும் பொழுது எலக்ட்ரானிக்காக மாற்றி
4.மற்ற அதனுடன் இணைக்கப்பட்ட இயந்திரங்களை எல்லாம் இயக்கத் தொடங்குகிறது.

இதைப் போன்று தான் இந்த உடலான இயந்திரத்தை… பிறிதொரு மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நாம் நுகரும் பொழுது அதே உணர்வு இயக்கப்பட்டு இனம் புரியாதபடி சோர்வடைகின்றோம்… காண முடியவில்லை.

ஜோதிடம் ஜாதகம் பார்ப்போர் மனிதனைப் பார்த்துப் பார்த்து ஒரு வார்த்தையை வெளிவிட்டு… அடுத்து நம்மிடமிருந்து என்ன வருகிறது…? என்று தெரிந்து கொண்டு அதை வைத்துக் கொண்டு “ஒஹோ… நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்…” என்று சொல்வார்கள்.

அதையே குறிக்கோளாக இருப்பதால் அவ்வாறு அறிய முடிகின்றது. பிறருடைய உணர்வின் அதிர்வுகளை வைத்துச் சொல்லலாம்.

ஆனால் கஷ்டங்களையும் குறைகளையும் நுகர்ந்து சொல்லப்படும் போது அவர்கள் வாழ்க்கையும் பாழாகும். மந்திரங்களை வைத்துச் சொல்வோரும் இதே நிலையாகி அவர்களும் பாழாகும் நிலைக்கே செல்வார்கள்.

இருந்தாலும்… இந்த மனித உடலில் குறுகிய காலமே வாழ்கிறோம். நேரம் ஆகிவிட்டது என்று இராமன் மணலைக் குவித்துப் பூஜிக்கத் தொடங்கினான் என்று இராமாயணத்தில் அதைக் காட்டுகின்றார்கள்.

1.நாம் வளர வளர ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது… உடலின் தரமும் குறைகிறது.
2.அதற்குள் உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றும் அந்தச் சக்தி பெற வேண்டும்..

உலக இருளை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றி ஒளியின் உடலாக என்றுமே ஏகாந்த நிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.அதற்கு நம் மனதை ஒன்றாகக் குவித்தல் வேண்டும்
2.பகைமைகள் வந்தாலும் அது நம்மை இயக்காது (முதலில் சொன்னது போல்) நமக்குள் பகைமையாகாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் பேர்ருள் பேரொளியை எடுத்து அந்த உணர்வுகளை மாற்றி
3.நம் பார்வையால் மற்றவருடைய தீமைகள் அகன்று செல்லும் சக்தியை நாம் பெறுதல் வேண்டும்.

மற்றவரை நல்வழியில் இயக்கும் அந்த எலக்ட்ரானிக்காக நமக்குள் வலிமை பெற்று இந்த உணர்வு அவர்கள் உடலுக்குள் சென்று அவருடைய தீமையை அகற்றி நல் உணர்வாக மாற்றிடும் அந்த உயர்ந்த சக்தியாக நாம் பெறுதல் வேண்டும்.

அதாவது நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருக்கி நம் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகளை வலுவாக்கி அதைப் “பாதுகாப்புக் கவசமாக” நாம் அமைத்திட வேண்டும்.

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்

பகைமையை அகற்றினால்தான் மகிழ்ந்து வாழ முடியும்

 

ஒன்றுடன் ஒன்று இணைந்து இயங்கும் தன்மை பேரண்டத்தில் இல்லையென்றால் இந்தப் பிரபஞ்சமே இல்லை.

அதே போல் மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் “சகோதரத் தத்துவத்துடன்” வாழவில்லை என்றால் மகிழ்ச்சியும் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஒன்றை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
1.ஒருவர் மிகவும் நெருக்கமாக இருப்பினும் அதில் சிறு பகைமை ஏற்பட்டு விட்டால் அது கடும் விஷ வித்தாக நம்முள் பதிந்து
2.நம்மை அறியாமலே அவர்களைப் பகைத்து தீமையின் உணர்வாக நம்முள் வளர்ந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு பகைமையுணர்வுகள் நம்முள் வளரும் பொழுது அது நம்முள் உள்ள நல்ல குணங்களையும் பகைமையாக்கிக் கொண்டே இருக்கும்.

1.நமது உடலுக்குள் உணர்வுகள் ஒன்றுக்கொன்று பகைமையாகும் பொழுது
2.நமது உடலின் தன்மை குன்றுகின்றது.. நம்முடைய எண்ணங்களும் மாறுகின்றது.

எனவே சூரியக் குடும்பம் ஓர் ஒழுங்குடன் அமைதியாக இயங்குவதைப் போன்று நாமும் பகைமை உணர்வுகள் இல்லாமல் ஒற்றுமை உணர்வுடன் மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு வாழத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாழும் தெருவில் உள்ள அனைவரையும் நமது குடும்பத்தினரைப் போலக் கருதி
1.அவர்களும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்,
2.இருள் நீங்கிப் பொருள் காணும் திறன் பெற வேண்டும்,
3.வாழ்வில் என்றும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி
4.நமது தெருவில் வாழும் மற்ற குடும்பத்தினருக்காகத் தியானிக்கும் பொழுது
5.அவர்களும் நம்முடன் ஒன்றுபட்டு வளரும் நிலை உருவாகிறது.

நாம் அனைவரும் ஒன்று கூடிக் கூட்டுத் தியானமிருந்து இதனின் எண்ண அலைகளை ஒருமித்த நிலையாக வெளியிடும் பொழுது… “இதனைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இந்த பூமியில் படரச் செய்கின்றது…”

மேலும் இந்த உணர்வின் அலைகள் இவ்வுலக மக்களின் உணர்வில் கலந்து அவர்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மையை வளர்க்கின்றது. பகைமையற்ற மனிதர்களாக அவர்களை மாற்றுகின்றது.

பேரண்டத்திலும் பூமியிலும் மனிதரிடத்திலும் நடைபெறும் இயற்கையின் இயக்கங்களை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம்.

இதில் உங்களின் கருத்தினைச் செலுத்தி உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஊரும் நாடும் உலகமும் என்றும் மகிழ்ந்த நிலையாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஊரும் நாடும் உலகமும் மகிழ்ந்த நிலை பெற வேண்டும் எனும் பொழுது மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகுகின்றது.

மகிழ்ந்த உணர்வின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்துடன் நாங்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று
3.இவ்வாறு இந்த உணர்வின் எண்ணங்களை நாளும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

நாளும் நல்ல உணர்வுகளை வளர்ப்போர் அனைவருக்கும் எமது ஆசீர்வாதங்கள்.

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

விஷத்தை ஒளியாக மாற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி

 

விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமா…!
1.உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்தச் சுவைக்கொப்ப ஜீவ அணுவாக மாறி
2.அதனதன் எண்ணங்களை இயக்குகின்றது என்பது காவியத்தின் முக்கியத் தொகுப்பு.
3.அதாவது எந்தச் சுவையோ “அதைப் போல் ஜீவ அணுக்களாக” உயிர் உருவாக்குகின்றது என்பதை நாம் அறிந்திடல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய சக்திகள் பூமியில் மண்ணுடன் கலந்து புவியின் ஈர்ப்பால் சிறுகச் சிறுக விளைந்து வைரமான பின் வெடித்துத் தனித்தன்மையாக வெளிவந்து விடுகிறது.

அதைப் போல் நம் உயிரால் உருவாக்கப்பட்ட ஜீவ அணுக்கள் நாளுக்கு நாள் அது வெளிப்படும் பொழுது
1.அறிவின் வளர்ச்சி அறிந்திடும் வளர்ச்சி இங்கே வருகின்றது.
2.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் அதற்குள் பொருள் தெரிவது போல நமது ஜீவணுக்களின் துணை கொண்டு
3.நம் கண்ணின் வளர்ச்சி கொண்டு அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களுடைய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக மாறி பூமியிலே பட்டபின் சிறுகச் சிறுக வைரமாக விளைகிறது. அது ஜீவ அணு அல்ல… ஒளியின் உடலாகப் பெறுகின்றது… நட்சத்திரம் எப்படி மின்னுகின்றதோ அதைப் போல.

நமது உயிரோ “மின்னணு” போன்று அது இயங்கிக் கொண்டே இருக்கின்றது அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு நமது ஜீவ அணுக்கள் மின்னணுவின் துணை கொண்டு இயங்குகின்றது.

எப்படி மின் நிலையத்திலிருந்து வரும் மின்சாரத்தை நம் வீட்டிற்குள் எந்தெந்த இணைப்புகளுடன் சேர்க்கின்றோமோ அந்த மின் அணுக்கள் அதை இயக்கி அதன்வழி நாம் பயன்படுத்துகின்றோமோ இதைப் போல
1.சூரியன் இயக்கத் தொடரில் நாம் வளர்ந்தாலும் நம் உயிரே சூரியனின் தொடர்பு கொண்டு தான் அதுவும் இயங்குகின்றது.
2.நாம் எப்படி ஊருக்கு ஒரு சப்ஸ்டேசனை வைத்திருக்கின்றோமோ அதைப் போன்று நமது உயிரும் அந்த நிலை பெறுகின்றது.
3.சூரியன் துணை கொண்டு அந்த மின் கதிர்கள் உடலில் உள்ள அணுக்களை அது இயக்குகின்றது.

இருப்பினும் பல உணர்வின் தன்மையை அனைத்தையும் அறிந்திடும் உணர்வு கொண்டு மனித உடலில் வந்த விஷத்தை வென்றவன் அகஸ்தியன்.

அவன் திருமணமாகி கணவனும் மனைவியும் இரு மனமும் ஒரு மனதாகி அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிரணுக்களை வளர்த்து “விஷத்தை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று” ஒளி உடலாகத் துருவ நட்சத்திரமாக ஆனார்கள்.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது, அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்டு அந்த விஷங்கள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தை நாம் உட்கொண்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்.
1.ஆனால் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாகக் காண முடிகிறது… வெளிச்சமாகத் தெரிகின்றது.
2.இதைப் போன்று தான் விஷத்தை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரம் இருக்கின்றது.

விஷமே உலகை இயக்குகின்றது. சூரியன் இயங்குகிறது என்றால் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பத்தின் தன்மை கொண்டு அது இயக்குகின்றது.

நமது உயிரும் விஷத்தின் தாக்குதலால் தான் துடிப்பின் தன்மை ஏற்பட்டுக் கொண்டுள்ளது. இதைப் போல் ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது என்பதனை நாம் அறிதல் வேண்டும்.

1.ஆறாவது அறிவால் ஒளியின் உடல் பெற்றது துருவ நட்சத்திரம்.
2.அந்தப் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்துக் கொண்டால் நாமும் இந்த விஷத்தை ஒளியாக மாற்ற முடியும்.

இருந்தாலும்… அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை யாரும் பெறுவது என்றால் மிகவும் கடினம். “குருவின் துணை…” இல்லாமல் எடுப்பதென்றால் மிக மிகக் கடினம்.

1.நமது குருவின் மூலம் எத்தகைய கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற முடிந்தது.
2.நமது குரு அந்த விஷத்தையும் தாங்கி அதை ஏற்றுக் கொள்ளும் பருவத்தினை ஏற்படுத்தினார்.
3.ஆகவே தான் உங்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறும்படிச் செய்து…
4.விஷத்தை ஒளியாக மாற்றும் பருவத்தை ஏற்படுத்துகின்றோம்..

நாம் ஒவ்வொரு நாளும் ”உயிரின் முகப்பில்” ஈர்க்கப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடல் முழுவதும் பரவுகின்றது.

இதைப் போன்று உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களின் முகப்பில்… உயிரின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வினை ஈர்க்கச் செய்யும் பொழுது… அதாவது
1.என் குரு எப்படிச் செய்தாரோ அதைப் போன்று உங்களில் ஈர்க்கச் செய்யும் பொழுது
2.நாம் அனைவரும் “ஒளியின் சரீரம்” பெறும் தகுதி பெறுகின்றோம்.