“கங்கோத்ரி” – பூநீரான கங்கையின் புனிதத்தைப் பற்றி தியானத்தின் மூலம் பெற்ற அனுபவம் 24.08.19

gangotri

“கங்கோத்ரி” – பூநீரான கங்கையின் புனிதத்தைப் பற்றி தியானத்தின் மூலம் பெற்ற அனுபவம் 24.08.19

 

மகாபாரதத்தில் வியாசர் காட்டிய பேருண்மைப்படி சந்தனுவின் மனைவியாக வரும் கங்கை தனக்குப் பிறக்கும் ஏழு குழந்தைகளை கொல்கின்றாள்.

எட்டாவது குழந்தையான பீஷ்மர் பிறந்ததும் அதைக் கொல்லும் நேரம் அதைப் பொறுக்க முடியாத சந்தனு கங்கையிடம் “எனக்குக் குழந்தை வேண்டும்… கொல்லக் கூடாது…!” என்று சொன்னதும் குழந்தையைக் கொடுத்து விட்டு கங்கை சந்தனுவை விட்டு விலகிச் சென்று விடுகிறாள்.

இதனுடைய உட்பொருள் என்ன…? என்று தியானத்தில் கேட்கும் பொழுது கிடைத்த உணர்வுகள்….

இன்று நம் நாட்டின் புண்ணிய நதிகளில் மிக மிக முக்கியமான நதி கங்கை.
1.கங்கை என்ற பெயர் பல இடங்களில் ஒரு சிறப்பு மிக்கதாகப் பயன்படுத்துகின்றது.
2.“கங்கா ஸ்நானம்…” என்று சொல்வார்கள்.
3.அதன் உட்பொருளை முழுமையாக உணர்ந்தவர்கள் அதை ஆகாய கங்கை (அகண்ட அண்டம்) என்று சொல்வார்கள்.

அந்த ஆகாய கங்கையிலிருந்து தான் கண்ணுக்குப் புலப்படக்கூடிய பொருள்கள் அனைத்துமே உருவாகின்றது.
1.அணுக்கள் உயிரணுக்கள் எல்லாமே அந்த ஆகாய கங்கையின் அம்சமாக உருவானாலும்
2.அந்த உயிரணு என்பது ஒரு பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கினால் மட்டுமே
3.அது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் வரை வளர்கின்றது.
4.மனிதனாக ஆன பின் அந்த ஆகாய கங்கையைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் வருகின்றது.

அந்த உயிரணு ஆகாய கங்கையில் இருக்கும் வரை அதற்கு வளர்ச்சி இல்லை. பூமிக்குள் வந்தால் தான் வளர்ச்சி. (அது தான் எட்டாவது குழந்தையான பூஷ்மர்).

விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் வந்து உடல் பெற்ற பின் அதற்குள் உயிரின் சக்தி அடைப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாததால் அந்த ஆகாய கங்கையைப் பற்றி அறிய முடிவதில்லை.

அதே ஆகாய கங்கையின் ஆற்றல் பூமித் தாயால் தன்னுடைய வளர்ப்பான மலைகளில் ஈர்க்கப்பட்டு ஜீவ நீராக உருவாகின்றது. அத்தகைய நீர் இருந்தால் தான் தாவரங்களும் அதனால் உயிரினங்களும் வளர்ச்சி அடைய முடியும்.

அப்படி ஜீவ நீர் நதியாக ஓடவில்லை என்றால் அவைகள் எதுவுமே வளர முடியாது. வெறும் மணலும் மலைகளும் மட்டுமே இருக்கும்.

இன்று மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்த நிலையில்
1.அந்த ஆகாய கங்கையின் இயக்கத்தையும்
2.அதனால் உருவான ஜீவ நீரையும் பற்றி முழுமையாக அறிந்து கொண்டால்
3.உயிரின் இயக்கத்தையும் உயிருக்குள் சேர்க்க வேண்டிய அந்த ஆகாய கங்கையின் ஆற்றலையும் உணர்ந்து கொள்ளலாம்.

இதை முழுமையாக அறிந்த அக்கால மகரிஷிகள் கங்கையை “கங்கை மாதா” என்று உணர்த்தி அதன் ஆற்றலின் முக்கியத்துவத்தை உணர்ந்து… அந்த ஆற்றலைத் தனக்குள் வளர்த்து… ஆகாய கங்கையுடன் ஐக்கியமாகி… “ஒளி வீசும் நட்சத்திரங்களாக” அங்கே என்றும் அழியாத நிலையில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

தன்னைப் போன்று தன் இன மக்களும் அந்த ஆற்றலைப் பெறுவதற்காகத் தான் “கங்கோத்ரி” எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே “கங்கை மாதா” என்று காட்டியுள்ளார்கள்.

கங்கோத்ரியைச் சுற்றியுள்ள அத்தனை மலைகளிலும் நம் ஊனக் கண்களாலேயே
1.மலைகளும் அந்த நீரை உருவாக்கும் மேகங்களும் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என்றும்
2.அந்த மலை உச்சிகள் ஆகாய கங்கையின் ஆற்றலை (நீர்) மேகமாக இழுத்து
3.அதை எப்படிப் பருகி நீராக அருவியாகக் கொட்டுகிறது… என்றும் மிக மிகத் தெளிவாகக் காண முடிந்தது.

கங்கோத்ரிக்கு போகும் அந்தப் பாதைகள் முழுவதிலுமே (சுமார் 60 கிலோ மீட்டர் சுற்ற\ளவுக்கு) அதை உணர முடிந்தது.
1.அந்த கங்கை என்ற சொல்லின் புனிதத்தையும் அதனுடைய மணத்தையும்
2.கங்கை வளைந்து நெளிந்து ஆழத்திலும் அகலமாகவும் ஓடுவதையும் பார்க்கும் பொழுது
3.அது ஒரு பூநீராக… புனித நீராக… விண்ணும் இந்த மண்ணும் இரண்டறக் கலந்து
4.அதனால் ஏற்படும் சிருஷ்டியின் பிரம்மாண்டத்தையும்… படைப்பின் மூலத்தையும்… காணவும் உணரவும் முடிந்தது.

கங்கையின் புனிதத்தை உணர்ந்ததால் தான் நம்முடைய ஞானிகள் கங்கையில் மூழ்கிக் குளிக்க வேண்டும்… அதாவது அதனுடைய ஆற்றலை எடுத்து நம்முடைய தீமைகளை எல்லாம் (உடல் பெறும் உணர்வுகளை) கரைக்க வேண்டும்… என்றார்கள்.

ஞானிகள் உணர்த்திய அந்த உண்மையைத் தத்ரூபமாக என்னால் உணர முடிந்தது.

“இமயமலை இரகசியம்” – 22.08.19 அன்று மானசரோவர் சென்று தரிசனம் செய்த இடத்தில் ஸ்படிகங்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுபவம்

SPADIKA NAVARATHNA MALA

“இமயமலை இரகசியம்” – 22.08.19 அன்று மானசரோவர் சென்று தரிசனம் செய்த இடத்தில் ஸ்படிகங்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுபவம்

 

இந்த உலகையே சமப்படுத்திய அகஸ்தியமாமகரிஷி தென்னாட்டிலே தோன்றியிருந்தாலும் இமயமலையில் எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயலின் முக்கியத்துவத்துவத்தைப் பற்றிய கேள்வியை ஏற்கனவே ஈஸ்வரபட்டரிடம் கேட்டிருந்தேன்.

இமயமலைப் பிரயாணத்தின் பொழுது ஏற்கனவே அங்கே இமயமலையில் அதிகமாகச் சுற்றிய அன்பர் ஒருவர் இமயமலையில் பூகோள அமைப்பைப் பற்றி 20.8.19 அன்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

1.இமயமலைத் தொடர்ச்சியின் பாறைகள் (மண்) அமைப்பு
2.ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான நிறங்கள் இருப்பதாகவும்
3.நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவில் வர்ணங்கள் அதிலே உண்டு என்றும் சொல்லியிருந்தார்.

22.8.19 அன்று அங்கே மானசரோவர் (உத்தரகான்ட் மாநிலம்) சென்று வரும் வழியில் ஸ்படிகங்கள் பற்றிய அறிய ஒரு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே பல வர்ணங்களில் அந்த ஸ்படிகங்களை மாலையாகவும் மற்ற வகைகளிலும் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு விதமான மாலையை அணிவதாலும்
1.மனிதனுக்குள் இருக்கும் சில மன குழப்பத்தை நீக்கும் சக்தியும்
2.உடல் நலம் பெறச் செய்யும் சக்தியும் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அது போக அந்த ஸ்படிகங்களின் உண்மைத் தன்மையை (ORIGINAL) எப்படிப் பரிசோதிப்பது..? என்று சொன்னார்கள். அதாவது
1.அதே நிறமுள்ள இரண்டு ஸ்படிகங்களை ஒன்றுடன் ஒன்று அழுத்தமாக மோதச் செய்தால்
2.அதிலே ஒளிக் கற்றைகள் வருகின்றது. எந்த நிற ஸ்படிகமோ அதே நிறம் வருகின்றது,
3.இப்படி ஒளி வந்தால் தான் அவைகள் உண்மையான ஸ்படிகங்கள்..!

உண்மையான ஸ்படிகள் அனைத்தும் இமயமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் அவை சுத்தம் செய்யப்பட்டு விதவிதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றது என்றும் அங்கே தெளிவுபடுத்தினார்கள்.

மேலும் அங்கே அந்தப் பாறையின் கல்களையும் வைத்திருந்தார்கள். வயலட் பச்சை மஞ்சள் போன்ற நிறக் கற்களைப் பார்த்தேன்.

அப்பொழுது தான் எனக்குள் இலேசாகப் பொறி தட்டியது. இதிலே ஏதோ முக்கியமான சூட்சமம் இருப்பது போல் தெரிந்தது.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பின்னர் ஈஸ்வரப்ட்டர் என்னிடம் “இங்கே என்ன பார்த்தாய்…? என்னிடம் கேட்ட கேள்விக்கு ஏதாவது உனக்குப் புரிந்ததா இல்லையா…? என்று கேட்கத் தொடங்கினார்.

சாமி…! ஏதோ சிறிது உண்மைகள் அறிய முடிகிறது. ஆனால் முழுமையும் அறிய முடியவில்லை. ஆனால் ஞானகுரு என்னிடம் கூறியது…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பொழுது நம் உயிர் ஒரு சூரியன் ஆகின்றது.
2.அதிலே எந்த உணர்வுகள் மோதுகிறதோ அதையெல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும்.
3.மகரிஷிகளின் உணர்வுகள் உயிரிலே ஆழமாகப் பதிவாக்கி அங்கே அதை உருவாக்கிவிட்டால்
4.எல்லா உணர்வுகளையுமே ஒளியாக மாற்றத் தொடங்கும் என்று என்னிடம் சுமார் 25 வருடம் முன் சொல்லியிருக்கின்றார் என்றேன்.

மேலும் 27 நட்சத்திரங்களும் 27 நிறங்கள் கொண்டது.. அதனுடைய ஒளிக்கற்றைகள் மண்ணிலே பதிந்து கருவாகி விளைந்தால் 27 வைரக்கற்களாக மாறும்..! என்றும் உபதேசத்தில் ஞானகுரு சொல்லியிருக்கின்றார். இது தான் சாமி எனக்குத் தெரியும்..! என்றேன்.

ஈஸ்வரபட்டர் சிரித்துவிட்டு “இன்னுமா உனக்குப் புரியவில்லை…?” என்று கேட்டுவிட்டு 27 நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகள் இமயமலைத் தொடர்ச்சியில் அதன் பூகோளப் பகுதியில் அதிகமாகப் படர்ந்து கொண்டேயுள்ளது.

அது தான் அங்கே பல வித வரணங்களில் பாறைகளாக உருவாகிறது.
1.அந்த நட்சத்திரங்களின் கற்றைகள் ஒன்றுடன் ஒன்று மோதினால்
2.எப்படி மின்னலாகப் பளீர்… என்று ஒளியாகத் தோன்றுகிறதோ அதே போல்
3.அந்தக் கற்களையும் ஒன்றுடன் ஒனறு உராயும் பொழுது ஒளிக் கற்றைகள் தோன்றுகிறது.

இருந்தாலும் இது புற நிலை தான்..!

அதே 27 நட்சத்திரங்களின் சக்தியைக் “குருவின் துணை கொண்டு…” தன் உயிராத்மாவில் சேர்த்தால் அதாவது
1.இரண்டு இமைகளுக்கு மையத்தில் இருக்கும்
2.உடலின் உச்சியில் புருவ மத்தியில் இருக்கும் உயிர் பாகம் சேமித்தால் (இந்த உடலான இமயமலையில்)
3.உயிராத்மா பேரொளியாக மாறும்.

இங்கே இமயமலையில் திடப்பொருளாக கற்களாக உருவாகின்றது. ஆனால் அந்த 27 நட்சத்திரத்தின் சக்தியை உயிரின் பாகம் சேர்த்துக் கல்லாக ஆக்காமல்
ஒளியாக.. பேரொளியாக
ஒளிக் கற்றைகளாக
ஒளியின் கூட்டமைப்பாக
ஒளி வெள்ளமாக
ஒளியின் பிரவாகமாக உருவாக்க வேண்டும்.

இந்த உண்மையை அறிந்ததனால் தான்.. அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அந்தச் சக்தியைத் தானும் பெற்று உலக மக்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் “இமயமலையில் மகரிஷிகளின் செயல்பாடுகள்… இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது..!” என்று எனக்குத் தெளிவுபடுத்தினார்.

இமயமலையின் இரகசியம் இது தான்…!

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019

Kasi viswanathar temple

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019

விஸ்வதரிசனம்

உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி ஆதிசங்கரர் உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது விஸ்வ தரிசனமாகவும் அதற்குரிய உணர்வின் ஒலிகளும் (நாதங்களும்) கிடைத்தது.

ஆதிசங்கரர் வெளிப்படுத்திய அத்வைதம் என்ற தத்துவத்தின் படி காற்றில் மறைந்துள்ள மகோன்னதமான சூட்சம சக்திகளை எடுக்கும் தியானமாக இன்று அமைந்தது.

உயிரான ஈசனுக்குள் (சீவலிங்கத்திற்கு) பல அபிஷேக உணர்வுகளும் ஞானிகள் மகரிஷிகள் உணர்வுகளும் பரவிப் படர்ந்தது.

உலகம் முழுவதும் அந்த ஆதிசங்கரர் உணர்வுகள் பரவிட அருள்வாய் ஈஸ்வரா. ஒவ்வொரு உயிராத்மாவும் ஆதிசங்கரர் காட்டிய அருள் வழியில் காற்றில் மறைந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.காசி மாநகரில் ஆதிசங்கரர் நிரூபித்த உயிரின் ஆற்றலை
2.அந்த விஸ்வநாதனின் உயர்ந்த சக்திகளை
3.உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

அன்னபூரணி
உடலுக்கு மூன்று வேளை உண்ணும் நிலையிலிருந்து பூமி சமைத்து அதிலே விளைந்த உணவுகளைப் புசிப்பதிலிருந்து விடுபடும் நிலையாக விண்ணுலக ஆற்றலை எடுத்து உயிரான ஈசனுக்கு உணவு கொடுக்கும் தியானமாக இது அமைந்தது.

தேவர்கள் அமுதத்தை உண்டு அமரர்களாக இருப்பது போல் ஆதிசக்தியின் ஆற்றலை அதாவது அகண்ட அண்டத்தின் ஆற்றலை (தானமாக) பிச்சை எடுத்து வாங்கி உயிருக்கு ஊட்டும் தியானமாக இன்று இருந்தது.

1.பூரணத்துவம் பெற்ற… பூரண நிலையில் இருக்கும்…
2.பேரண்ட மகரிஷிகளின் துணை கொண்டு
3.அந்த விண்ணுலக ஆற்றலை அன்னபூரணியின் சக்தியை முழுமையாகப் பருகும் ஒரு சந்தர்ப்பமாக இந்தத் தியானம் அமைந்தது.

உலக மக்கள் அனைவரது உயிர்களுக்குள்ளும் அன்னபூரணியின் அருள் சக்தி படர்ந்து அனைவரும் மெய் ஞானிகளாக மகரிஷிகளாக வளர்ந்திட வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..!

நன்மைகள் செய்யத் துணிவோம்

Good will pledge

நன்மைகள் செய்யத் துணிவோம்

 

இயற்கையின் நியதிகளில் நம்மை அறியாது தீமைகள் எப்படி ஆட்டிப் படைக்கின்றது என்ற நிலையும் பல கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று மனிதனான பின் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்…! என்ற நிலையும் பல முறை உபதேசித்திருக்கின்றோம் (ஞானகுரு).

இதன் வழிகளில் ஒவ்வொரு குடும்பத்திலேயும் நாம் அமைதி கொண்டு வாழ்வதும் நம் குழந்தைகளை எப்படி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற உணர்வினையும் எடுக்க வேண்டும்.

1.“நாம் அனைவரும் ஒரு குடும்பம்…” என்ற நிலைகளில் உயர்ந்த பண்புகளை வளர்த்து ஒருவரை ஒருவர் மதித்து நடந்து
2.குரு வழியில் நாம் வழி நடத்திச் செல்லவும் வேண்டும்.

ஒவ்வொரு குடும்பமும் உயர்ந்து வரவும் அதற்காக வேண்டித் தியானித்து அந்தக் குடும்பங்கள் நலம் பெறுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி பெறும் அந்தச் சக்தியும் பெற வேண்டும்.

1.நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் நமக்கு எவ்வளவோ புதையலைக் கொடுத்திருக்கின்றார்.
2.நாம் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அந்தச் சக்தியை பெறுவதற்குண்டான நிலையைத்தான் குரு வழியிலும் உங்களுக்குள் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.

1.மனிதனின் வாழ்க்கையில் நாம் எப்படி வாழ வேண்டும்…?
2.நமக்குள் எதை எதை எல்லாம் செயல்படுத்த வேண்டும்..?
3.நம் குழந்தைகளை எப்படி வளர்த்தல் வேண்டும்..?
4.நமது எல்லை எது…? என்ற நிலையையும் ஒருவருக்கொருவர் சொல்லி
5.நம்மைச் சார்புடையோர் புதிதாக வருவோர்க்கும் இதை எடுத்துச் சொல்லி ஒவ்வொரு குடும்பத்திலேயும் இதைத் தெளிவாக்கி
6.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற்று அவர்கள் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
7.உங்கள் உயிரைக் கடவுளாக்கி
8.நல்ல உணர்வைத் தெய்வமாக்கி அதையே குருவாக்கி
9.உங்கள் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வு வாழும் நிலையைப் பெறுங்கள்.

நாம் எந்த இடங்களுக்குச் (மற்ற ஊர்களுக்கு) சென்றாலும் அங்கு வாழ்பவர்களுக்கும் ஒருவருக்கொருவர் நாம் வளர்ந்த நிலைகளை எடுத்துச் சொல்லி அவர்களையும் அருள் வழியில் வளர்க்க வேண்டும்.

இதை நாம் முறைப்படுத்தி வந்தால் திருந்தக்கூடிய நிலைகளை நாம் அடைகின்றோம். உங்களப் பார்க்கும்போது அந்த உயர்ந்த மரியாதை கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திடவேண்டும். அதை நாம் வளர்த்தல் வேண்டும்.

1.சிலர் இதற்குள் வந்து தவறுகள் நிகழ்த்தாது பாதுகாத்தல் வேண்டும்.
2.ஏனென்றால் இன்று நல்லைதை வளர்ப்பதைக் காட்டிலும்
3.தீமைகள் நம்மை அழித்திடாதபடி பாதுகாப்பதே மிகவும் முக்கியமாக இருக்கின்றது.

இன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…?

FB_IMG_1566234948094.jpg

இன்றைய வாழ்க்கையில் குறைகளைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோமா… அல்லது நிறைகளைப் பற்றி அதிகம் பேசுகிறோமா…?

ஞானிகளைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். படிக்கின்றோம். ஆனால் அடுத்து மற்ற குறையான உணர்வைத்தான் அதிகமாகப் பேசுகின்றோம்.

உதாரணமாக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே வரக்கூடிய குறைகளை நிவர்த்திப்பதற்கும் உற்பத்தியோ மற்ற வேலைகள் எல்லாவற்றையும் சீராக்குவதற்காகத்தான் தொழில்களில் நாம் அமர்த்துகின்றோம்.

ஆனால் தொழிலில் குறை வந்துவிட்டதென்றால் குறை வந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லி அப்படியே விட்டு விட்டால் குறை அப்படியே தான் இருக்குமே தவிர அதைத் தெளிவாக்கி மறுபடியும் சீர்படுத்த முடியாது.

ஒரு நெசவுத் தொழிலை செய்கிறோம் என்றால் சந்தர்ப்பத்தில் நூல் அறுந்து போகும். அப்பொழுது நூல் இல்லாமல் வரும். அதை மீண்டும் இணைத்துச் சரிபடுத்த வேண்டும் அல்லவா. ஆனால்
1.நூல் அறுந்து கொண்டே தான் இருக்கிறது…
2.சரி…! அப்படியே இந்தத் துணியை நெய்வோம் என்று விட்டு விட்டால்
3.அது தரமான துணியாக அது வருமா…?
4.இந்தத் தரத்தைப் பார்ப்போர் நம்மிடம் துணியை வாங்குவார்களா…?

அதை போன்று தான் இந்த மனித வாழ்க்கையில் குறை வந்து கொண்டே இருக்கிறது என்ற நிலைகளில் அதை அப்படியே விட்டு விட்டால் நம் எண்ணத்தின் நிலைகள் எங்கேயும் செல்லுபடி ஆகாது.

நாம் எங்கு சென்றாலும் நம் மீது வெறுப்பின் தன்மையும் மற்ற நிலைகளும் வந்துவிடுகிறது. ஆகவே யார் எந்தத் தீமை செய்தாலும் அந்த தீமையிலிருந்து அவர்கள் அகல வேண்டுமென்று எண்ண வேண்டும். அந்தத் தீமையை நமக்குள் பதிவாக்கிக் கொள்ளக் கூடாது.

தீமை செய்கிறான்… தீமை செய்கிறான்… என்று எண்ணிக் கொண்டு அல்லது சொல்லிக் கொண்டே இருந்தால் அது நம்மையும் தீமை செய்ய வைக்கும்.
1.அவன் அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நாம் அதற்காகத் தியானமிருக்க வேண்டும்.
2.குறைகளைக் கூறுவதற்குப் பதில் நமக்குள் அந்தக் குறைகளை நீக்கும் நிலைகளுக்குப் பழக்கம் வர வேண்டும்
3.இதை வழிப்படுத்தி நாம் எல்லோரும் ஒரு குடும்பமான நிலைகளில் இயங்கிப்
4.பிறருக்கு வழிகாட்டியான நிலைகளில் வர வேண்டும்.

அது அல்லாதபடி நாம் மற்றவர்களைப் பற்றியும்… நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியும்… உலகில் நடக்கும் நிகழ்வுகளையும் பற்றியும்… மீண்டும் மீண்டும் குறைகளையே பேசிக் கொண்டு இருந்தோமேயானால் விஷமான உணர்வுகள் நம் உடலுக்குள் பெருகி விஷமான சரீரத்தைத்தான் பெறுவோமே தவிர ஒளிச் சரீரத்தைப் பெறும் தகுதி இல்லை.

இவ்வளவு பெரிய சக்தியைப் பரப்பியும் அதைப் பயனற்ற நிலைகள் ஆக்காதபடி குறைகளை நிவர்த்திப்பதற்குண்டான முயற்சியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். அதற்குகந்த வார்த்தைகளையும் சொல்களையும் பயன்படுத்திப் பழக வேண்டும்.

எம்முடைய உபதேசத்தைக் கேட்டுணர்ந்தவர்கள் நீங்கள் எங்கே சென்றாலும் எந்த நிமிடம் ஆனாலும்
1.“எனக்கு இவ்வாறு துன்பம் செய்தார்…” என்று அவர்களைக் குறையாக எண்ணாதபடி
2.“எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது…!” என்று குறையாக எண்ணாதபடி இந்த எண்ணத்தை மாற்றவேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
4.மெய் ஞானியின் உணர்வலைகளை எடுத்து ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். (இது முக்கியம்)

ஜோஸ்மத் நரசிம்மர் (பத்ரிநாத் அருகில்) ஆலயத்தில் 28.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்

take naraimha avatar

ஜோஸ்மத் நரசிம்மர் (பத்ரிநாத் அருகில்) ஆலயத்தில் 28.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்

 

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதிலுள்ள தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அங்கே செய்த தியானம் அமைந்தது.

நரசிம்மரின் முகம் மிகவும் கோரமாகவும் கைகளில் உள்ள நகங்கள் கூர்மையாகவும் அது இரண்யனின் குடலைப் பிளந்து இரத்தக்களரியாக ஆவது போல் வியாசகர் உணர்த்தியுள்ளார்.

1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை
2.நாம் எந்த முறையைக் கையாண்டு
3.நம் ஆன்மாவிலிருந்து எப்படிப் பிளந்து வெளியேற்ற வேண்டும்…? என்பதைக் காட்டுவதற்கே அதைக் காட்டியுள்ளார்.

ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளையும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் பேராற்றல்களையும் நமக்குள் சேர்த்துக் கொண்டே வருகின்றோம்.
1.அதன் மூலம் நரசிம்மரின் முகத்தில் காட்டப்பட்டது போல் வீரியமான உணர்வு கொண்டு
2.நரசிம்ம அவதாரமாக நாம் ஆகி
3.சுவாசத்தின் மூலம் வரும் தீமைகளை எல்லாம் ஊடுருவிப் பிளந்து வெளியே தள்ள வேண்டும்.

தீமைகளை எப்பொழுதெல்லாம் காணுகின்றோமோ… கேட்கின்றோமோ… நுகர்கின்றோமோ… அந்த நேரம் எல்லாம் நாம் “நரசிம்ம அவதாரமாக…!” ஆகிடல் வேண்டும்.

நாம் தான் தியானம் செய்கின்றோம்.. சக்திகளை எடுக்கின்றோம்.. அல்லவா..! அதுவே எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று சாதாரணமாக எண்ணி விடக் கூடாது. நாம் அந்த நரசிம்ம அவதாரமாக ஆக வேண்டும். ஆனால்…
1.தீமை செய்பவர்களை எண்ணாது தீமை செய்பவர்களைத் தாக்காது…
2.தீமை செய்யும் உணர்வுகளைப் பிளந்து அதை நம் ஆன்மாவிலிருந்து முழுவதும் அகற்றிடல் வேண்டும் என்ற இந்த வகையில் தான்
3.நரசிம்மராக மாற வேண்டும் என்று தெளிவாக அங்கே தியானத்தில் உணர முடிந்தது.

அதே போல் இன்று இந்த உலகில் நடக்கக்கூடிய தீவிரவாதம்… இயற்கையை அழித்தல்… ஆட்சியாளர்களின் அதிகாரச் செயல்கள்… போன்ற நிலைகளில்
1.அறியாத நிலைகளில் அந்தத் தீமை செய்வோர் அனைவரும்
2.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற்று
3.அவர்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞான சக்தி பெற்று
4.அவர்கள் செயல் அனைத்தும் தன் நாட்டு மக்களைக் காத்திடும் நிலையாகவும்
5.இந்த உலகைக் காக்கும் சக்தியாகவும் மாறி உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும் என்றும்
6.நம் பூமித் தாயைக் காக்கும் நரசிம்ம அவதாரமாகவும் செயல்பட வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றியது.

அவ்வாறு தோன்றிய அந்த உணர்வுகள் மூச்சலைகளாகக் கூட்டுத் தியானத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு இந்தப் பரமாத்மாவில் உள்ள அனைத்து தீமைகளையும் பிளந்து அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் நம் பூமியை விட்டு அகற்றிடும் செயலாக உலகெங்கிலும் பரப்பப்பட்டது.

வியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…?

Real bahkti

வியாபாரமோ தொழிலோ எதனால் நஷ்டம் அடைகிறது…? 

 

நிறையப் பேர் என்ன சொல்கிறார்கள்… அல்லது நினைக்கின்றார்கள்… என்றால் “சாமி (ஞானகுரு) கோவிலுக்கே போகவேண்டாம்” என்று சொல்கிறார்… என்கிறார்கள்.

கோவிலுக்குள் செல்லும் பொழுது அந்த ஞானிகள் சொன்னதை நினைவுபடுத்தி அந்தத் தெய்வ நிலையை நாம் செயலாக்க வேண்டும் என்பதைத் தான் யாம் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் பிளானைப் (PLAN) போடுகின்றீர்கள். வீட்டை எப்படிக் கட்ட வேண்டும் என்று அந்த அளவுகளைப் படத்தின் மூலம் எடுத்துக் கொண்டோம் என்றால் “இன்னென்ன இடத்தில் இது இது வருகிறது…” என்று அந்தப் படத்தைப் பார்த்தே அறிந்து கொள்கிறோம்.
1.இந்தப் படத்தைப் போட்ட பின் தான் எங்கே வீடு கட்டப் போகிறோமோ அந்த இடத்திற்குச் செல்கிறோம்.
2.அப்படி இல்லாமல் அங்கே போய் வரைகிறோமா…?

அதே போல் தான் கோவிலுக்குச் சென்று நாம் அந்தத் தெய்வ குணத்தின் சக்திகளை எடுக்கச் சொல்கிறோம். அதை எடுத்துக் கொண்ட பின்
1.உங்கள் வீட்டிலே…
2.உங்கள் வாழ்க்கையிலே..
3.உங்கள் தொழிலிலே…
4.நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கும் மற்ற எல்லாவற்றிலுமே
5.அதை எப்படி எப்படிப் பக்குவப்படுத்த வேண்டும் என்ற அந்த எண்ணங்கள் தெளிவாக வருகின்றது.
6.ஏனென்றால் கோவில் அவ்வளவு புனிதமான இடம்…!

பல கோடிச் சரீரங்களில் நல்ல குணங்களை வளர்த்து அதை உருவாக்கி மனிதனைச் சிந்திக்கச் செய்யும் சக்தி நம் உடலில் இருக்கின்றது.
1.அந்தத் தெய்வ குணத்தை உயர்த்து…!
2.அந்தத் தெய்வ நிலையை நீ பெறு…! இதற்குத் தான் கோவில்.

உதாரணமாக நாம் ரோட்டில் போகும் பொழுது ஒரு கண்ணாடி நம் காலில் பட்டு இடறுகின்றது. அடிபட்டதும் இரத்தம் வருகின்றது. உடனே நாம் என்ன சொல்கிறோம்…? நடு ரோட்டில் இப்படி அறிவு கெட்டதனமாகக் கண்ணாடியைப் போட்டிருக்கின்றார்கள் பார்…! என்று சொல்வோம்.

அந்த உணர்ச்சி வேகத்தில்… யார் போட்டார்களோ அவர்கள் நாசமாகப் போகவேண்டும்…! என்றும் சொல்கிறோம். இதே உணர்வு நமக்குள் என்ன செய்கிறது..?

அதே நாசப்படுத்தும் எண்ணங்களை அதிகப்படுத்தி நம் நல்ல குணங்களை அழிக்கின்றது.

ஏனென்றால் “நாசமாகப் போக வேண்டும்…” என்ற நினைவை எடுக்கின்றோம். அடுத்தாற்போல் நம்முடைய வியாபாரத்திற்காக வேண்டிய ஒரு சரக்கை வாங்கச் செல்கிறோம் என்றால் அங்கே சென்றவுடன் நம் கண்களில் அந்த (நாசமாக்கும்) உணர்வு தான் வரும்.

நல்ல சரக்கை நீங்கள் பார்க்கவே முடியாது.

உங்கள் மனம் என்ன செய்யும்…? அங்கே இருக்கும் மட்டமான சரக்கை எடுத்து அதை வாங்கி இதை வைத்து வியாபாரம் செய்யலாம்… விலை மிகவும் சகாயமாக இருக்கின்றது… என்று நினைப்போம்.

வாங்கி வந்த பின் வியாபாரம் சரியாக இருக்காது… யாரும் வாங்கவில்லை என்கிற போது நஷ்டமாகிவிடும். அந்த நேரத்தில் ஒரு நல்ல சரக்கை எடுத்துக் கொடுத்தாலும் கூட அதைப் பயன்படுத்துபவனுக்கு அது மட்டமாகிவிடும். அப்பொழுது
1.அதை வாங்கிச் சென்றவன் என்ன சொல்வான்…?
2.இந்தக் கடைக்குப் போனால் வெறும் மட்டமான சரக்கைக் கொடுக்கின்றான் என்று
3.வாடிக்கையாக வாங்கும் ஆளும் நம்மை விட்டுப் போய்விடுவார்.
4.ஆக… கடைசியில் நாசமாகப் போவது யார்…? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்…!

நாம் எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள்… அதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ… நீ அதுவாகின்றாய்…! என்று கண்ணன் சொல்வதாக வியாசகர் தெளிவாக்குகின்றார்.

நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தக் கண்களுக்குத் தான் வரும். அதன் உணர்வு கொண்டு தான் நாம் தேர்ந்தெடுப்போம்.

வேதனையான உணர்வுடன் இருக்கும் பொழுது பாருங்கள்…! சமைக்க வேண்டும் என்று அரிசியை எடுத்தால் அதிலே கல் நிறைய இருக்கும்.

கோபமான நிலையில் இருக்கும் பொழுது பாருங்கள்… மிளகாயைப் பார்த்தால் மிகவும் இரசிப்பாக இருக்கும். சமையல் செய்யும் பொழுது ஒரு மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவோம். சாப்பிடுபவர்கள் உஸ்…உஸ்… எரியுதே..! என்பார்கள்

கண்களின் இயக்கத்தைப் பற்றி அன்று வியாசகர் எவ்வளவு தெளிவாகக் கீதா உபதேசத்திலும் மகாபாரதத்திலும் எழுதியிருக்கிறார் என்று பார்த்தீர்கள் என்றால் அந்தப் பேருண்மைகளை நீங்கள் அறிய முடியும்.

நமது வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரும் தீமைகளைத் தன் ஆறாவது அறிவு கொண்டு எப்படிச் சமப்படுத்தி வாழ வேண்டும் என்பதைக் காட்டுவதற்குத்தான் ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.

1.கண்களால் பல நிலைகளை அறிந்து பதிவாக்குவதும்
2.கண்களால் கவர்ந்த உணர்வுகளை உயிருடன் இணைப்பதும்
3.உயிரின் நிலைகள் அதைச் செயலாக்குவதும்
4.அந்த உணர்ச்சிகள் நம்மை எப்படி இயக்கி.. நமக்குள் உருவாக்கி.. அதுவாக நம்மை எப்படி ஆக்குகிறது..? என்றும்
5.ஆயிரத்தி எட்டு குணங்களாக ஆலயத்திலே தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதே கண்கள் கொண்டு உற்றுப் பார்த்து அந்தத் தெய்வச் சிலைகளில் காட்டிய தெய்வ குணங்களை நமக்குள் எடுத்து அதை நாம் பெறவேண்டும்… எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பெறவேண்டும்… இங்கு வருவோர் அனைவரும் அந்தத் தெய்வ குனத்தைப் பெறவேண்டும்.. என்று எண்ணினால் எப்படி இருக்கும்…!

1.நாம் அந்தத் தெய்வமாகவே ஆகின்றோம்…!
2.பண்படுத்தும் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது,
3.நம் சொல் செயல் பிறரைப் பண்படுத்தும் நிலையாக உருவாகின்றது.

இந்த உடலுக்குள் இருக்கும் சக்தியின் நிலைகளைத்தான் அங்கே தெளிவாக்குகின்றார்கள். நீ எதை எப்படி வளர்க்க வேண்டும்… எதன் வழி நீ வாழ வேண்டும்…? என்றும் ஞானிகள் காட்டுகின்றார்கள்,

சித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

tamail siddhars

சித்தர்களின் செயல்பாடுகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நமது எண்ணம் எந்நிலையில் செல்கின்றதோ அந்நிலை கொண்டே நமது சுவாச நிலைகள் செயல்படுகின்றன.
1.நாம் உணர்ச்சி வயப்படும் பொழுது
2.நெடி கலந்த நிலைகள் நம் உயிரினத்தில் (புருவ மத்தியில் உள்ள உயிரில்) தாக்கப்படும் பொழுது
3.உணர்ச்சிகளால் “உயிரினத் துடிப்புகள் அதிகரிக்கின்றன…”

இந்நிலையில் கோப உணர்ச்சிகள் அதிகரிக்கும் பொழுது நம் நிலையை நாம் கட்டுப்படுத்த முடியாமல் சக்தியை இழக்கின்றோம்.

இதே போல் சோர்வான எண்ண நிலைகள் இருக்கும் பொழுது மந்தமான சில சுவாச நிலைகள் நம் உயிரில் தாக்கப்படும் பொழுது உயிர் துடிப்பு மிகவும் “குறைவான துடிப்புடன்…” இயங்குகிறது. அப்பொழுது ஏதாவது செயல்படுத்த முயலும் பொழுது நம் சரீரத்தால் முடியாத நிலை ஆகின்றது.

நாம் ஈர்த்து வெளிவிடும் சுவாச அலைகள் நம் மன நிலையைப் பொறுத்து
1.கோப நிலையில் உள்ள பொழுது நாம் ஈர்த்து வெளிவிடும் சுவாச அலையும்
2.சாந்த நிலையில் நாம் ஈர்த்து வெளிவிடும் சுவாச நிலையும்
3.சோர்வான நிலையில் நாம் ஈர்த்து வெளிவிடும் சுவாச நிலையும்
4.இப்படி எந்தெந்த நிலைகளில் நாம் ஈர்த்து வெளிவிடுகின்றோமோ
5.அந்தந்தச் சுவாச அலைகள் அனைத்தும் நம் உடலின் ஈர்ப்பு நிலை கொண்டு நம்மையே சுழன்று கொண்டிருக்கும்.

ஏதாவது ஒரு பொருளைப் பார்க்கும் பொழுது அந்தப் பொருளின் பேரில் எப்படிப்பட்ட எண்ணத்தைச் செலுத்துகின்றொமோ அந்நிலை கொண்ட சுவாச நிலை நமக்குக் கிடைக்கின்றது.

நமக்கு ஆகாதவரைக் காணும் பொழுது நம் எண்ணம் உணர்ச்சியால் உந்தப்பட்டு நம்மைச் சுழன்று கொண்டிருக்கும் துவேஷ அணுக்களின் நிலை நம் உயிரினத்திற்குத் தாக்கப்படுகின்றது.

நாம் ஈர்க்கும் எண்ணங்கள் நம்மை எப்படிச் சுழன்று கொண்டேயுள்ளதோ அந்நிலை கொண்டே நாம் கண்டிடும் கனவிலும் சுழல்கின்றது.

நாம் விழிப்போடு இருக்கும் பொழுது எடுத்துக் கொண்ட எண்ண அலைகளும் நிலைகளும் நாம் உறங்கும் சமயம்
1.அந்தந்த எண்ண அலைகள் சுவாசத்தின் வழியாக உயிரிலே படும் பொழுது
2.அங்கு ஒலிக்கும் சப்த அலைகள் நம் எண்ணத்தில் வருகின்றன.
3.அந்த எண்ண அலைகளே (தூக்கத்தில்) நம் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது அது கனவாகத் தென்படுகின்றது.

இந்தக் கனவின் நிலையை வைத்துத்தான் இன்றைய விஞ்ஞானிகள் பல நிலைகளை விஞ்ஞான ரூபத்திற்குக் கொண்டு வந்துள்ளார்கள்.

பல வித நிழல் படங்களையும் “எக்ஸ்ரே…” போன்ற படம் எடுக்கும் கருவிகளையும் அச்சப்த அலைகளுக்கு உகந்த இரசாயண நிலைகளைக் கண்டுபிடித்து இந்தக் காற்றிலே ஒன்றுடன் ஒன்று ஒரே மாதிரிக் கலந்த நிலை கொண்ட காற்றை ஒரு நிலைப்படுத்தி அதைப் பதிவாக்கும் உபகரணங்களையும் உருவாக்கியுள்ளார்கள்.

கனவு நிலை கொண்டு தான் இன்றைய விஞ்ஞானிகள் பல வகை விஞ்ஞானங்களைக் கண்டுபிடித்து வான மண்டலத்தில் உள்ள எல்லா நிலைகளையும் அறிந்திட பல அவசர நிலையில் செயல்படுத்துகின்றார்கள்.
1.முற்றும் அறியும் நிலையை… விஞ்ஞானத்தில் கண்டிடவே
2.பல கோடிப் பொருள்களையும் பல நாட்களையும் விரயம் செய்து
3.விஞ்ஞானத்தில் இவை எல்லாம் கொண்டு வரப்பார்க்கின்றார்கள்.

ஆனால் அன்று வாழ்ந்த ஞானிகளும் சித்தர்களும் உயர்ந்த சுவாச நிலையைப் பெற்று அச்சக்தியினைத் தன் உயிரினத்தில் (உயிரிலே) பாய்ச்சி அந்நிலை கொண்டே சகல சக்திகளையும் பெற்று தன் சுவாச அலைகளை வெளியிலே பாய்ச்சி அந்தச் சுவாச நிலை கொண்டே மண்டலங்களின் சக்தி நிலைகளை அறிந்து அச்சக்தி நிலைகளை எல்லாம் தன்னுள் ஈர்த்தனர்.

1.சரீரத்தில் உள்ள பொழுதே
2.தான் எப்பொழுது விரும்புகின்றார்களோ… அப்பொழுது இந்த உடலை விட்டுச் சித்தர்கள் வெளியேறுகின்றார்கள்.
3.இன்றும் அழியாத நிலையில் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
4.நாம் எண்ணும் நிலைக்கு நம்முள் ஒருவராக நம்முள்ளேயே வந்து
5.நமக்குப் பல நிலைகளை இன்றும் வந்து போதிக்கின்றார்கள்.
6.எண்ணிய நேரத்தில்… எங்கும்… எந்த உடலில் சென்றிடவும்…
7.அந்த உடலை ஏற்றுக் கொள்ளும் தன்மையும் பெற்று அந்தச் சித்தர்கள் வாழ்கின்றார்கள்.

இன்றும்… இனி என்றும்… முடிவில்லா இந்த உலகினில்… முடிவில்லாமல் வாழ்ந்திடும் அந்தச் சித்தர்கள் அவர்களும் நம்மைப் போல் ஒரு காலத்தில் பிறவி எடுத்து வாழ்ந்தவர்கள் தான்…!

ஆதியில் படிப்பும் பாடமும் கல்வியும் பட்டமும் எந்த நிலையும் இல்லை. அன்றையக் காலத்திலேயே தன் அறிவினாலேயே தான் எடுத்த சுவாச நிலை கொண்டு சகல நிலையும் அறிந்திடும் பேறு பெற்றான் அக்காலச் சித்தன்.

அவர்கள் பெற்ற நிலையை நாமும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதை உணர்த்துகின்றேன்.

சுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…?

Adi Sankara Advaitam

சுவைமிக்க கனிகளைத் தெய்வத்திற்குப் படைப்பதன் நோக்கம் என்ன…?

 

கோவிலில் சாமிக்குப் பழம் வைத்துப் படைத்து விட்டுப் பின் அதைச் சாப்பிடுகின்றோம். ஆனால் அந்தக் கனிகளை ஏன் படைக்கின்றோம்… என்பதைப் பற்றி அறிந்திருக்கின்றோமா…?

என் சொல்லைக் கேட்போர் அவர்கள் வாழ்வில் அந்தக் கனியைப் போன்ற இனிமை பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் அந்தக் கனியைப் போன்ற இனிமையான நிலைகள் பெறவேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்…! என்பதற்கே ஞானிகள் அதைப் படைக்கச் சொன்னார்கள்.

இதை எதற்காக இப்படி எண்ணச் சொல்கிறார்கள்…?

வீட்டில் நம்முடைய பையன் இருப்பான். சொன்னபடி கேட்கவில்லை… என்று அவனைத் திட்டியிருப்போம். அந்தக் கோபமான உணர்வும் வெறுப்பான உணர்வும் நமக்குள் இருக்கும்.

வேலையிலிருந்து வீட்டுக்குச் சாப்பாட்டுக்காக வந்திருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு தான் சந்தோஷமாக இருந்தாலும் கூட
1.நீங்கள் வந்த நேரத்திற்கு… உடனே சாப்பாடு வரவில்லை என்றால்
2.சுர்..ர்ர் என்று உங்களுக்குக் கொஞ்சம் கோபம் வரும்.
3.என்னா… நேரம் ஆகிப் போய்விட்டதா…? அந்த வெறுப்பின் உணர்வு இங்கே வளரும்.

இரண்டு தரம் இப்படிக் காலதாமதமாகினால் போதும். நம்முடைய இந்த நினைவும்… நம்முடைய கடும் சொல்லும் இப்படி வந்தவுடனே அவர்களை இந்த எண்ணமே சீராக வேலை செய்யவிடாமல் தடுக்கும்.

ஆனால் நாம் என்ன நினைப்போம்…?

1.உன் வேலையே இப்படித்தான்…! என்ற வகையிலே
2.இந்த உணர்வுகளை வளர்த்தவுடனே பகைமையை உண்டாக்கிவிடும்.
3.அப்படி உருவாகும் பகைமையைத் துடைக்கின்றோமா… என்றால் இல்லை…!

தெருவில் சண்டை போட்டவர்களைப் பார்த்திருப்போம். அப்பொழுது சண்டையிடும் உணர்வுகள் நமக்குள் பதிவாகின்றது. மற்ற வேதனைப்பட்டவர்களைப் பார்த்திருப்போம். அந்த வேதனைப்படுபவரிடமிருந்து வேதனையான சொல் தான் வரும். அதுவும் நமக்குள் பதிவாகின்றது.

இப்படி எத்தனையோ வகையில் பிற தீமைகள் நமக்குள் வருகிறது. அதை எல்லாம் நாம் குறைப்பதே இல்லை. ஆக அந்தத் தீமையின் விளைவுகளை எல்லாம் குறைப்பதற்குத்தான் “கோவிலிலே அந்தப் பொது விதிகளைக் காட்டுகின்றார்கள்…!”

1.நாங்கள் பார்ப்போர் அனைவரும் அந்தக் கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெறவேண்டும்
2.இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவருக்கும் இந்த இனிமையான நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணி
3.அந்த இனிமையான உணர்வுகளை நாம் நுகர்ந்து எடுக்கும்படி சொல்கிறார்கள்.

ஏனென்றால் அந்தக் கோவிலுக்கு நம் பிள்ளையும் வருகின்றது… மனைவியும் வருகின்றது… மற்றவர்களும் வருகின்றார்கள். அந்த எல்லோருடைய உணர்வும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது.

இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் கனியைப் போன்ற இனிமையான சொல்லும் செயலும் பெறவேண்டும் என்று அங்கே எண்ணும் பொழுது அவர்கள் மீது இருக்கும் பகைமைகளை எல்லாம் மொத்தமாக மாற்றி விடுகின்றோம்.

பகைமைகளை மறந்து ஒன்றுபட்டு வாழும் தன்மை வருகின்றது. நம் சொல்லிலே இனிமையும் பார்வையில் கனிவும் மகிழ்ந்து வாழும் சக்தியையும் நாம் ஒவ்வொருவரும் பெறுகின்றோம். இது தான் ஆதிசங்கரர் காட்டிய உண்மையான அத்வைதம்.

அங்கே அந்த ஆலயத்தில் காட்டியபடி… “இந்தத் தெய்வம் காப்பாற்றும்…!” என்ற நிலையில்
1.தெய்வ குணத்தை நாம் பெறவேண்டும்..
2.அந்தத் தெய்வீக நிலையை நாம் பெறவேண்டும்… என்கிற பொழுது
3.நாம் இதை எல்லாம் எண்ணினோம் என்றால் அந்தத் தெய்வ குணத்தையும் தெய்வ நிலையையும் நாம் பெறுகின்றோம்.
4.அப்பொழுது அந்த எண்ணம் நம்மைக் காக்கின்றது,
5.நம் சொல்லைக் கேட்போர் மற்றவர்களையும் அது காப்பாற்றுகின்றது.

சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா…! இது தான் நம் ஞானிகளால் கொடுக்கப்பட்டுள்ள கோவிலின் உண்மை நிலைகள்…!

இரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Spiritual light - Bliss

இரவில் ஜெப நிலையில் உறங்குவதன் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகையை எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.