சுவாசத்தின் மூலம் (காற்றிலிருந்து) உணவை எடுப்பதே பேரின்பச் சுவை

சுவாசத்தின் மூலம் (காற்றிலிருந்து) உணவை எடுப்பதே பேரின்பச் சுவை

 

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை…!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை…!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்…” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது… “தான் உணர்ந்து… அனுபவத் தன்மையால்… பதிவு செயல் நடைபெறுகிறது…!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா…!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்…!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா – தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்…” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்…!

விஷத்தின் இயக்கமும்… விஷத்தை முறிக்கும் அதனின் சில செயலாக்கங்களும்

விஷத்தின் இயக்கமும்… விஷத்தை முறிக்கும் அதனின் சில செயலாக்கங்களும்

 

மாமரத்தின் சத்தும் ரோஜாப் பூவின் சத்தும் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பவசத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலவையாகி… புவியின் ஈர்ப்பிற்குள் சிக்கப்பட்டுக் கருவுற்றுச் செடியாக விளையப்படும் பொழுது அரளிச் செடியாக மாறுகின்றது. அந்த மூன்றும் ஒன்றாக இணைந்து அரளிச் செடியாக மாறுகின்றது.

அரளிச் செடியாக மாறும் பொழுது
1.மாமரம் போல் இலைகள் இருந்தாலும் அதிலே சில வித்தியாசங்களும்
2.ரோஜாப் பூவைப் போன்று இருப்பினும் மணமும் கொண்டாலும்
3.விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது அந்தச் செடி விஷத்தன்மை கொண்டதாகி விடுகிறது.

விஷச் செடியின் சத்து பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்து மூன்று சதவீதம் மாமரத்தின் சத்து பத்து சதவீதம் கவரப்பட்டு இந்த உணர்வுகள் ஒன்றாக இணைந்து ஒரு வித்தாக பூமியிலே பதியும் பொழுது “அதனதன் சதவீதம்” காற்றிலிருந்து இழுத்து அரளிச் செடியாக விளைகின்றது.

செடி உருவான பின் அந்த அரளிப் பூவில் ரோஜாப்பூ போன்ற மணங்கள் வரும்.
1.அரளிப் பூவைச் சாப்பிட்டால் மயக்கம் வரும்
2.அரளி விதையை உட்கொண்டால் மனிதனை மாய்த்துவிடும்.
3.ஆனால் அரளிச் செடியின் மணத்தை நுகர்ந்தால் “நம் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களைக் கொன்று விடும்…”

இதிலே இத்தனை வித்தியாசங்கள் உண்டு…!

அந்த அரளிப்பூக்களை எடுத்து சூரிய புடமாக்கி… தேங்காய் எண்ணெயில் கலந்து அதைக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்குக் கால்கள் வீக்கமாகி நீர் வடியும்…
1.அந்த இடங்களில் காய்ச்சிய இந்த எண்ணையைத் தடவினால் அரிப்பு நின்றுவிடு.ம்
2.நீராக வடியும் அந்த இடத்திலிருக்கக்கூடிய விஷத்தன்மைகளும் மடிந்து… அந்தத் தோல் நன்றாக ஆகிவிடும்.

அந்த அரளியிலேயே ஓரடுக்கு அரளி… பல அடுக்கு அரளி என்றெல்லாம் உண்டு.

நம்மை அறியாது தோலில் சேரும் சில விஷத்தன்மைகளால் இதனுடைய மணம் பட்ட பின் அது தோலை உருவக்கிய நல்ல அணுக்கள் மடிவதும்… அதனின் மலம் பட்டபின் தசைகள் குறைவதும் நீராக வடிவதும்… அந்த நீரையே உணவாக எடுத்து உட்கொள்ளும் நிலை பெறுகிறது (தோல் சம்பந்தப்பட்ட வியாதி).

அத்தகைய அணுக்கள் மடிந்தால் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொள்கிறது. பின் அந்த மனிதனுடன் யாரெல்லாம் தொடர் கொண்டு பேசுகின்றார்களோ அல்லது பழகுகின்றார்களோ
1.அவருடைய சுவாசத்திற்குள் அந்த விஷ அணுக்கள் சென்று உடலில் அரிப்புத் தன்மையாகி
2.சுவாசப் பைகளிலும் அரிப்பாகி… தன்னை அறியாது வேதனைப்படும் நிலை வரும்.

ஒரு மனிதனில் விளைந்த அந்த நோயின் உணர்வு இங்கே வந்து விடுகின்றது. ஏனென்றால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட அத்தகைய உணர்வுகளை நாம் நுகரப்படும் போது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது… நோயாக உருவாக்கி விடுகிறது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய செயல்கள். இதையெல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

1.வாக்குடன் கொடுக்கின்றேன்… புரிந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

இராவணன் + ஈஸ்வரன்… “இராவணேஸ்வரன்” என்பதன் உட்பொருள்

இராவணன் + ஈஸ்வரன்… “இராவணேஸ்வரன்” என்பதன் உட்பொருள்

 

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்… சகோதரப் பாசம் என்றும்… உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி…” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

“விதியின் பின் இராமன்…!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி…! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல… விதி முன் செல்ல… இராமன் பின் செல்ல… பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன…?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது
1.உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தையும் காட்டி
2.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
3.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்று தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள் பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்…! அது இராமனானாலும் சரி… இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி… ஒன்றி… அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல…!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்…! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்…! என்ற குணத் தன்மைக்கு
2.தானே – அவனே காரணம் ஆயினான்.
3.ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது…? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

நம்முடைய கடைசி எல்லை

நம்முடைய கடைசி எல்லை

 

மீண்டும் மீண்டும் யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை…
2.அவர்கள் வழியிலேயே அதை அறிந்து… நாம் எவ்வாறு வாழ வேண்டும்…?
3.இந்த வாழ்க்கையில் எவ்வாறு தெளிவுடன் செயல்பட வேண்டும்…?
4.இந்தப் பிறவிக்குப் பின் அடுத்து நாம் எந்த உடலைப் பெற வேண்டும் என்பதனைத் தான்…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… சந்தர்ப்பத்தால் அவனுக்குள் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்.

அந்த உணர்வின் துணை கொண்டு “வான இயலின்” ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து… அது “புவி இயலாக” மாறும் பொழுது தாவர இனங்களாக உருவாகுவதையும்… அந்தத் தாவர இனங்களின் சத்தினை உயிரணுக்கள் (உயிர்கள்) நுகர்ந்து தனக்குள் அணுக்களாக மாற்றி உடல்களாக உருவாகுவதையும்… “உயிரியலாக” மாறுவதையும் அறிந்துணர்ந்தான்.

அதே சமயத்தில்
1.உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்ற பின்
2.அதனுடைய கடைசி முடிவு… அதனுடைய கடைசி எல்லை எது…? என்பதனையும் அகஸ்தியன் அறிந்து கொண்டான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி பேரருள் பேரொளியாக துருவ நட்சத்திரமாகி… துருவத்தை எல்லையாக வைத்து இன்றும் தனது வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டு… அகண்ட அண்டத்திலிருந்து வருவது அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக…!

அதாவது உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி… அதையே கடைசி எல்லையாகப் பிறவி இல்லா நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவனின்று விளைந்த உணர்வுகளை… அவனுக்குப் பின் வந்த மக்கள் யார் யாரெல்லாம் அதை நுகர்ந்து கொண்டனரோ… ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக மாற்றும் திறன் கொண்டு… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர்.

ஆதியில் விண் சென்ற முதல் மனிதனான அகஸ்தியன்
1.அவன் வாழ்ந்த காலத்தில் தன் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்தினானோ அவன் வழிப்படி நாமும் சென்றால்
2.மனிதனின் கடைசி எல்லையான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடையலாம்
3.இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றும் நிலை கொண்டு வாழலாம்.

உயிரணு தோன்றி மனிதனான பின் உணர்வினை ஒளியாக மாற்றி அமைத்து உயிருடன் ஒன்றி வாழும் துருவ மகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து… நாம் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டதில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ முடியும்.

“மாயமான்” என்னும் உலக மாயை – ஆசை வழி இழுக்கும் உணர்வுகளின் உந்துதல்

“மாயமான்” என்னும் உலக மாயை – ஆசை வழி இழுக்கும் உணர்வுகளின் உந்துதல்

 

இராமன் என்றும் லட்சுமணன் என்றும் சீதை என்றும் அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் (உபதேசம்) கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வந்ததும் எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் ஆசை நிலையைச் சித்தரிப்பதே “மாயமான்…!”

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வேரூன்றி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை. “ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை… சூட்சமமாகப் பொருள்படுத்தியது…!”
1.எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்
2.வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்…!.
3.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
4.அந்த உலகோதய ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
5.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து… பலம் குன்றுவதைக் காட்டவே… இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டித் தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி… ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் உலகோதய “அதி ஆசை நிலை…!”
4.இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை…”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி மாயமானாகிய அதி ஆசை நிலையைத் தான் தகர்க்கின்றது. ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தியூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி…?

உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலகோதய ஆசை நிலையாகிய மாய மான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன…! ஏன்…?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்…!

அது மட்டுமல்ல…! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி…!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
1.மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக
2.தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும்
3.எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டி
4.உயிரான்மாக்கள் பெறும் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
5.மதி வழி முன் சென்றால்… வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்…! என்று அருளியுள்ளார் அந்த வான்மீகி மாமகரிஷி…!

உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது… உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது

உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது… உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது

 

ஆற்றிலோ அல்லது ஒரு குளத்திலோ (நீருக்குள்) ஒரு கல்லினைப் போட்டால் அந்த இடத்தில் பளீர் என்று விலகிக் கொள்ளும். அடுத்து அது மூடிக்கொள்ளும்.

அது போன்று தான்
1.பக்தி மார்க்கத்தில் மூழ்கிய நிலைகள் கொண்டு உண்மைகளை மறைத்த நிலைகள் கொண்டு
2.அந்த ஞானிகள் உணர்த்திய உண்மைகளைச் சொல்லி அதற்குண்டான விளக்க உரைகளை இப்போது யாம் (ஞானகுரு) கொடுத்தாலும்
3.கேட்கும் பொழுது பளிச்… என்று அலைகள் உங்களுக்குள் படர்கிறது.
4.ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் மூடி சம நிலை அடைந்து விடுகின்றது.

நல்ல உணர்வுகள் மறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமையின் நிலைகள் வளராது உடனுக்குடன் அதைத் தடுப்பதற்குத் தான் இதனை உங்களுக்குள் அறிவிப்பது.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் எங்கு சென்றாலும் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து உள்முகமாகச் செலுத்தி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி ஐந்து முறை ஆறு முறை உள்ளே சக்கரம் போன்று சுழற்றுங்கள்.
3.உங்கள் ஜீவான்மாக்களைச் சுத்தப்படுத்துங்கள்… உங்களுக்கு முன் இருக்கக்கூடிய ஆன்மாவைச் சுத்தப்படுத்துங்கள்

தொழிலோ மற்ற எந்தக் காரியங்களோ அங்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்களுடன் தொழில் செய்பவர்கள் எங்களிடம் வேலை செய்வோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிலை வளம் பெறச் செய்ய வேண்டும்… அறியாது சேர்ந்த இருளை நீக்கும் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்…! என்று ஆன்மாவை அடிக்கடி இப்படி எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கை வாழ்ந்தால் என்றுமே அது மகிழ்ந்து வாழும் சக்தியாக அமையும். வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிட முடியும்.

அதே போல் உங்கள் குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை நிவர்த்திக்கும் பழக்கம் வர வேண்டும்.

1.இந்த உடல் உங்களது அல்ல
2.எண்ணும் எண்ணம் உங்களது அல்ல
3.உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது
4.உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது
5.அறிவின் உணர்வாகத் தான் நம் உணர்வின் தன்மை செயல்படுகின்றது.

ஆகவே அந்த ஞானிகள் காட்டிய அருள் உணர்வுடன் ஒன்றுவோம் அருள் ஞானிகள் பெற்ற ஆற்றலை நாம் பெறுவோம். அறியாது வந்த தீமைகளை அகற்றுவோம்.
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தை எல்லையாகக் குறி வைத்து
2.இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட எமது குரு அருளும் எமது ஆசியும் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். உங்களை அறியாத வந்த தீமைகள் அகன்று… மெய் உணர்வுடன் ஒன்றி… பேரானந்தப் பெருநிலை பெறுவீர்கள் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு).

விஞ்ஞான உலகில் “நரகலோகத்தைச் சந்திக்கிறோம்” என்று கண்கூடாகவே பார்க்கின்றோம்

விஞ்ஞான உலகில் “நரகலோகத்தைச் சந்திக்கிறோம்” என்று கண்கூடாகவே பார்க்கின்றோம்

 

விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். உடல் பற்றுடன் இருப்போம் என்றால் மருத்துவமனைகளில் இன்று பார்க்கலாம்… ஒரு மனிதனுக்குக் கேன்சர் வந்து விட்டால் எத்தனை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்…?

நோயைக் கண்டுபிடிப்பதற்காக மனம் உவந்து
1.மூக்கிலும் வாயிலும் மற்ற இடங்களிலும் டியூபுகளைச் சொருகுவதும்
2.தலையோ மற்ற இடங்களில் உள்ள உறுப்புகளை அறுத்துப் பரீட்சிப்பதும்
3.சில நேரங்களில் அந்த உறுப்புகளை அகற்றி மாற்று உறுப்புகளையும் வைத்துச் செயல்படுத்துகின்றார்கள்.
4.எத்தகைய நரகலோகத்தைச் சந்திக்கிறோம் என்று பாருங்கள்.

இதை எல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆனால் ஞானிகள் அன்றே இதைக் காட்டினார்கள். சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று…!

கண்களால் பிறரை உற்றுப் பார்த்து பரிவுடன் அவர்கள் வேதனைகளைக் கேட்டறிந்தாலும்… கண்களால் பார்த்து நுகர்ந்த அவருக்குள் விளைந்த (வேதனை) உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது அது புத்திரனாக… அணுக்களாக இங்கே வந்துவிடுகிறது.

அவன் கஷ்டப்படுகிறான்… கஷ்டப்படுகிறான்… என்று
1.பாசத்தால் நாம் சொன்னால் பாசக் கயிறாக வழி தொடர்ந்து சிந்திக்கும் திறன் அனைத்தும் இழக்கப்பட்டு
2.எமன் எருமை மீது வாகனமாக வருவது போன்று சிந்தனையற்ற நிலைகள் ஆகி
3.தீய வினைகளாக நம் உடலில் அது விளைந்து உறுப்புகள் கெடுகிறது.

அந்த உறுப்புகளைச் சீர்படுத்த நாம் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்று அந்த எமலோகத்தைக் காட்டியிருப்பார்கள்.

அதாவது… நம் எண்ணமே தீமைகளை விளைய வைக்கும் உறைவிடமாக எமலோகமாக மாறி… நல்ல உணர்வுகளை அது எப்படி அழிக்கின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்காகக் காவியமாக எடுத்துரைத்துள்ளார்கள். நாம் எளிதாகப் புரிந்து கொள்வதற்குப் படங்களாகவும் வரைந்து காட்டி உள்ளார்கள்.

எமலோகத்தின் செயல்கள்…
1.எமன் அழைத்துச் சென்ற பின் எண்ணெய்க் கொப்பரையில் போட்டு ஆட்டுவதும்
2.மண்டையை ரம்பத்தை வைத்து அறுப்பதும் கை கால்களைத் துண்டிப்பதும்
3.தலைகீழாகத் தொங்க விடுவதும் நெருப்பிலே வைத்து எரிப்பதும் போன்ற எத்தனையோ நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து எத்தனையோ நிலை நமக்குள் விளைந்தது… இந்த உடல் என்ற சொர்க்கலோகத்தில்… எண்ணத்தால் எமலோகத்திற்குள் சிக்கி அறியாமலே நம் உடலுக்குள் எத்தனை அறுவை சிகிச்சைகள் (ண்ஹரக வேதனைப்படும்படியாக) நடக்கிறது…? அன்று மெய் ஞானிகள் காட்டினார்கள்.

விஞ்ஞான அறிவால் கண்கூடாக நம் உடலுக்குள் அனுபவிக்கின்றோம்.

உடல் இந்த சொர்க்கலோகத்தை நாம் மறந்திடலாகாது. அதிலே நாம் எண்ணியது அனைத்தும் இந்திரலோகமாக மாறி உடலாக மாறிக் கொண்டுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

1.மெய் உலகான அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நீங்கள் ஒன்றி வேகா நிலை என்ற முழுமை அடைந்திட
2.என் குருநாதர் காட்டிய நிலைகளை உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.
3.இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்தியை
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

எல்லோரும் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தியை அவர்களுக்குள் விளைய வைத்து என்று நீ செயல்படுகின்றாயோ
1.அந்த உணர்வுகளால் நீயும் உயர்ந்த நிலை பெறுகின்றாய்
2.அவர்களும் உன்னுடன் ஒன்றி வருகின்றார்கள்.
3.அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் மகிழ்ந்து வாழும் நிலை பெற வேண்டும்.

இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார். அவர் காட்டிய நெறிகளைக் கடைப்பிடித்து… பத்தாவது நிலையான கல்கி என்ற “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்.

தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்

தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்

 

எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி…!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது…?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்…!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது…! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்… விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்… தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது…”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்…! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை…! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்… ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே… உலக நியதி இயங்குகிறது…! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்…!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை… மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்…! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது…!

நம்முடைய தினசரி தியானம் எந்த அடிப்படையில் இருக்கிறது…?

நம்முடைய தினசரி தியானம் எந்த அடிப்படையில் இருக்கிறது…?

 

மனித வாழ்க்கையில் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அதனின் இயக்கச் சக்திகள் மறைந்து நஞ்சுக்குள் சிக்கித் தவிக்கும் நிலைகள் வந்து விடுகின்றது.

இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எத்தனையோ காவியங்களை ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

ஆனால் ஆறாவது அறிவைப் பயன்படுத்த முடியாது அதை இழந்ததனால் இன்று எவரோ செய்வார்… தெய்வம் செய்யும்… ஜோதிடம் செய்யும்… காலங்கள் செய்யும்… யாகங்கள் செய்யும்… சாமியார் செய்வார்… மற்றவர்கள் செய்வார்கள்…! என்ற இத்தகைய எண்ணங்களைத் தான் பரப்பி வைத்திருக்கின்றோமே தவிர “தன்னை நம்பப் பழகவில்லை…”

ஏனென்றால் நாம் எத்தகைய உணர்வை நமக்குள் இணைக்கின்றோமோ நமது உயிர் அதை இயக்கி நமது உடலாக மாற்றி விடுகிறது. அதாவது
1.நாம் எண்ணிய உணர்வுகளை வித்தாக (வினையாக) மாற்றி அந்த வித்தின் நிலையை இயக்கி
2.நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி அதே உணர்வின் உடலாக இயக்கி
3.அந்த உணர்வின் சத்துக்களாக நமக்குள் எவ்வாறு விளைகிறது என்ற நிலையை
4.ஞானிகள் தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தாலும் அதனை அறியாது இன்றும் இருக்கின்றோம்.

மற்ற உயிரினங்கள் அதனுடைய (எண்ணத்தால்) தியானத்தால் மனிதனாக வளர்ச்சிக்கு வருகின்றது. அப்படித் தான் நாம் வந்துள்ளோம். ஆனால்
1.மனிதனான பின் தீமைகள் அகற்ற முடியும்
2.மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உயர்ந்த நிலைகளை உருவாக்க முடியும் என்று இருந்தாலும்
3.இப்போது நாம் எதைத் தியானிக்கிறோம்…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதே சமயம் குழந்தை நாம் எண்ணியபடி கல்வியில் சிறந்து வரவில்லை என்றால் அவனைக் கண்டு “இவன் இப்படி இருக்கின்றானே… அவன் எதிர்காலம் என்னவாகும்…?” என்று வேதனைப்படுகின்றோம்.

இந்த வேதனையை மீண்டும் மீண்டும் எடுத்து அவனிடம் கடிந்து இரண்டு தரம் அழுத்தமாகப் பேசும் பொழுது அவன் நம் மீது பாசமாக இருக்கும் உணர்வுகளுடன் கலந்து விடுகிறது.

1.நமக்குள் விளைய வைத்த வேதனையான நஞ்சை அவனுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.நம் சொல் கடினமாகி அவனுக்குள் அவன் அறியாது இயக்க நிலைகள் தடையாகி
3.உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்ற குறைபாடோ வந்து விடுகிறது.

ஆனால் அவன் தவறு செய்யவில்லை… நம்முடைய நிலைகள் இவ்வாறு ஆகிவிடுகிறது. இந்த மாதிரி நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆனால் என்ன செய்கின்றோம்…!

குழந்தையை எண்ணி எண்ணி இப்படி ஆகிவிட்டானே என்று வேதனையை பாய்ச்சியபின் அந்தக் காய்ச்சலாகும் போது நமக்குள் வேதனை இன்னும் அதிகரிக்கிறது.

அவனைக் காத்திடும் நிலை கொண்டு… “வேதனைகளையே” நமக்குள் சமைத்துச் சமைத்து அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவன் காய்ச்சலாக இருக்கப்படும் பொழுது “டேய் கண்ணு… கொஞ்சம் சாப்பிடுடா…!” என்று சொல்கின்றோம்.

அந்த வேதனையால் அவனால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால்… “சாப்பிட வேண்டும்…” என்று அழுத்திச் சொல்லப்படும் போது இன்னும் கொஞ்சம் அவனுக்கு வேதனை அதிகமாகி “நீ போ…” என்று வேகமாகச் சொல்லி விடுகின்றான்.

நாம் அதைக் கேட்ட பின்… அடப் பாவமே… அவன் சாப்பிடவில்லையே இரண்டு நாட்களாகி விட்டது… மூன்று நாட்களாக ஆகிவிட்டதே…! என்ற தாய்ப் பாசத்தால் இந்த உணர்வை நுகர்ந்து
1.அங்கே விளையும் நஞ்சினை இங்கே வித்தாக விளைய வைத்து
2.அவனை எண்ணும்போதெல்லாம் இது ஒரு தியானம் தான்.

இப்படி இருக்கின்றானே…! அவன் என்ன ஆவான்…? என்ற இந்த வித்தினை உருவாக்கி… அந்த உணர்வின் சத்தை நமக்குள் கருவாக்கி… அவனின் நிலையைத் தியானித்து… அந்தத் தீய வினையே நமக்குள் உருவாகிவிடுகிறது.

நாம் தவறு செய்யவில்லை அவனும் தவறு செய்யவில்லை
1.அவன் உயர வேண்டும் என்ற எண்ணத்தை வைத்தோம்
2.உயர வேண்டும் என்ற “செயலை” நமக்குள் வைக்கவில்லை.

பால் சத்தாக இருந்தாலும் அதற்குள் நஞ்சினை விட்டால் அது அந்தப் பாலைச் செயலற்றதாக ஆக்குவது போன்று “நம்முடைய நல்ல உணர்வுகள்” நாம் நுகர்ந்த உணர்வுகளால் நஞ்சாகப் பாய்ந்து… நஞ்சின் செயலாகவே மாறி விடுகின்றது.

இப்படித்தான் இன்று
1.குறைகளை எண்ணி எண்ணி அதையே தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.
2.ஆகவே நாம் எதைத் தியானிக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

காமாட்சி

காமாட்சி

 

காமத்தின் அடியாகப் பிறக்கும் “மோகம்…” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளை தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.

1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் தொட்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் வழியமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட
5.சபலம் (மோகம்) தானே தன் வழி செல்லா நிலையில் மறைந்து விடும்.

குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் சபலத்தின் வழியில் சிக்காதபடி பயிற்சி வழி முறைகளைக் காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குண செயல்பாட்டையும் போதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் காவியம் இராமாயணத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்…!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்…!” என்றும் காட்டுகிறார்கள்.

அதனின் உட் கருத்து
1.ரிஷித் தன்மை பெற வழி காட்டும் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி
2.ரிஷி பத்தினி சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.

விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.

ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்…” அதையே “காமாட்சி…” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமுமே.

ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்…?

அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.

அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைச் “சாப நீக்குப் படலம்…” என்று செயல்படுத்தி ரிஷி பத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.

கௌதம முனிவருக்குத் தன் நிலை உயர்த்த ரிஷி பத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனதால்
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்…! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!”

சபல குணம் என்று உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.

சபல குண வலையில் விழுந்ததால்… தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்… இந்திரனால்… “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்…” என்பது மோக குணத்தால் தான்…!

1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை…!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!

ரிஷி பத்தினி என்ற சிறப்பை
1.அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுது தான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்பதையும்
2.சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வான இயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி
3.உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.

இதே தொடர்பை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.

அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியூட்டித் தானும் அந்த முனிவனின் சக்தியுடன் ஒன்றுதல் என்பதே
1.பால்வெளி சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் தான் ரிஷி பத்தினிச் சக்தியாகக் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும் என்று காட்டுகின்றார்.

இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே… பலர் “சபல குணத்தை இந்திரன்…” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.

இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன…?

அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.ஜெபம் என்ற வழி முறையை… அந்த உயர்வைப் பெறும் வழியை…
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.