பொய் உலகை விட்டு விட்டு… “நீ மெய் உலகம் செல்” என்றார் குருநாதர்

பொய் உலகை விட்டு விட்டு… “நீ மெய் உலகம் செல்” என்றார் குருநாதர்

நாம் இன்று எந்த உலகில் வாழ்கின்றோம்…! மெய் உலகில் வாழ்கின்றோமா..,? பொய் (மாய) உலகில் வாழ்கின்றோமா..,? என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

1.மெய் என்றால் “உயிர்…” அந்த உலகை அடைய வேண்டும்.
2.நம் உடலெல்லாம் பொய் உலகம். அதைப் பொய் என்றுதான் சொல்ல முடியும்.

ஏனென்றால் இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். அடுத்தாற்போல் பார்த்தால் சுருங்கிப் போய்விடுகின்றது. சுருங்கிய உணர்வு கொண்டு இந்த உயிர் என்ன செய்கின்றது…? வேறு ஒரு உடலை உருவாக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஆகவே நாம் பொய் உலகில் வாழ்கின்றோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குருநாதர் அடிக்கடி சொல்வார். “ஏண்டா… பொய் உலகத்திற்குப் போகின்றாய்..,? “மெய் உலகிற்குப் போடா…” என்பார்.

மெய் உலகம் என்றால் உயிரை நீ எப்படி மதித்தல் வேண்டும்…? உயிர் எல்லாவற்றையும் உணர்த்துகின்றான் உணரச் செய்கின்றான்… உணரும் வழியில் வாழச் செய்கின்றான்.

ஆனால் ஆறாவது அறிவால் தெரிந்து கொண்டவன் நீ… எந்த உலகிற்குச் செல்கின்றாய்…?” என்று சில இக்கட்டான நேரங்களில் குருநாதர் உணர்த்திக் கேட்பார்.

சிக்கலான நிலைகள் வரும்போது நான் என்ன செய்வேன்…?

“என்ன வாழ்க்கை..,? போ…! மனைவியை நோயிலிருந்து மீட்டிக் கொடுத்தார் குருநாதர். ஆனால்
1.காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போய் இப்படியெல்லாம் கடுமையான தொல்லைகள் கொடுக்கிறார் என்று சொல்லி
2.“ரொம்பவும் கஷ்டம் வரும் பொழுதெல்லாம்” என் நினைவுகள் இப்படி வரும்.
3.எங்கேயாவது உடலை விட்டுப் போய்விடலாம்… “தற்கொலை செய்து கொள்ளலாம்…” என்று சொல்லி இரண்டு மூன்று தடவை முயற்சி செய்தேன்.

அப்பொழுது தான் குருநாதர் சிரிக்கின்றார்.

1.இந்த உலகை… என்ன…? என்று அறிந்தாய்.
2.உன் உயிரை… யார்…? என்றும் அறிந்தாய்
3.இந்த உடலின் நிலையையும்… அறிந்தாய்.
4.“மீண்டும்… ஏண்டா பொய் உலகிற்குப் போகின்றாய்…?”

ஆக மொத்தம் வேதனையிலிருந்து தப்ப வேண்டும் என்று நீ எண்ணுகின்றாய். நீ தற்கொலை செய்து கொண்டால் இந்த உணர்வுகள் இதைக் கேட்டவன் உணர்வுக்குள் செல்லும்.

1.அவன் உடலுக்குள் பேயாகப் போய் இதையே நீ செய்வாய். அவனையும் வீழ்த்துவாய்.
2.இந்த உணர்வின் தன்மை வந்தால் இந்த உடலுக்குப் பின் என்ன ஆவாய்…?
3.பிறிதொன்றைக் கொன்று தின்னும் இந்த உணர்வின் தன்மை தான் உனக்குள் வரும்.
4.இன்று நீ மனிதனாக இருக்கின்றாய். அடுத்து நீ… “பொய் உலகிற்கல்லவா போகின்றாய்…”

உயிரென்ற நிலை வரும் பொழுது பரிணாம வளர்ர்சியில் ஆறாவது அறிவால் தெரிந்து கொள்ளும் நிலைகளில் கார்த்திகேயா என்று “தெரிந்து கொண்டேன்..,.” என்ற நிலைகளில் என்று வந்தாய்.

இன்று மறுபடியும் ஏன் பொய் உலகிற்குச் செல்கிறாய்…? என்று அந்த இடத்தில் வைத்து விளக்கங்களைக் கொடுத்தார் குருநாதர்.

ஏனென்றால் பல தொல்லைகளைக் கொடுப்பார்.

நம் சகஜ வாழ்க்கையில் வியாபாரமோ மற்ற தொழிலோ எல்லாம் நன்றாகச் செய்ய வேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருப்போம். ஆர்வமாக இருக்கும் போது சந்தோஷமாக இருப்போம்.

அப்படிச் சந்தோஷமாக இருக்கும் பொழுது… “அதிலே சிறிது குறை வந்து விட்டால்…” போதும். “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் நம் மனது இருண்டுவிடும்.

இதைப் போன்று இந்த உடலைக் காக்க எத்தனையோ வகைகளில் இன்று சிரமப்படுகின்றோம். அதைச் செய்வோம்… இதைப் பேசுவோம்.. சண்டையிடுவோம். எல்லா வழிகளிலும் முயற்சி செய்வோம்.

ஆனால்
1.“ஒரு சொல்” தாங்கவில்லை… என்று சொல்லிவிட்டு
2.என்ன வாழ்க்கை…? என்று தற்கொலை செய்யப் போவோம் – “ஒரு சொல்லுக்காக…”

அப்பொழுது.., “இந்த உடலுக்காக” நாம் எதை எண்ணினோமோ அதை வளர்த்து விடுகின்றது. இந்த உடலை அழிக்க வேண்டும் என்றால் “அதன் வழியே நீ செய்…” என்றுதான் அந்த உணர்ச்சிகளை இயக்கி ஆளுகின்றது நம் உயிர்.

அதன் வழி சென்றபின் இந்த உடலை முழுமையாக நாம் வளர்ச்சியற்ற நிலைகளில் குறைக்கப்படும் பொழுது குறை உணர்வு கொண்ட விஷமான உயிரினங்களாக உயிர் நம்மை மாற்றி விடுகின்றது என்பதனைக் குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.

மெய் உலகம் என்பது உயிர். இந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்றது தான் துருவ நட்சத்திரம். ஆகவே அந்த மெய்யை நீ அடைய வேண்டும்.

“மெய்… மெய்யாக வரும் உன் உணர்வுகள்” மெய்யை உணர்த்தும் உணர்வுகள் பெறும் போது “நீ எப்படி இருக்க வேண்டும்…?” என்பதனை உணர்த்துவார் குருநாதர்.

அவர் தன் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நமது குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்.
1.அவர் கற்றுணர்ந்த… கண்டுணர்ந்த… உணர்வுகளைப் பதிவாக்கப்படும் பொழுது நாமும் அந்த உணர்வுகளை நுகர்ந்தால்
2.இந்த வாழ்க்கையில் அவர் இருளை அகற்றியது போன்று நாமும் இருளை அகற்றி அவர் வாழும் அந்த “மெய் உலகை அடையலாம்…”

கடவுளின் அவதாரம் பத்து – “கல்கி” என்ற நிலையில் நமது உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறி துருவ நட்சத்திரத்தைப் போன்று நாமெல்லாம் குரு வழியில் அழியாத நிலைகள் பெற வேண்டும்.

கணவனும் மனைவியும் சிவசக்தியின் ஸ்வரூபமாகும் வழி

கணவனும் மனைவியும் சிவசக்தியின் ஸ்வரூபமாகும் வழி

 

கணவனும் மனைவியும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தியை அவர் ஜீவாத்மா பெற வேண்டும் என்று கணவன் மனைவியை நினைக்க வேண்டும்… மனைவி, கணவனை நினைக்க வேண்டும். இருவரும் ஒரு நிலை கொண்டு சரியான தியானத்தைச் செய்தால் இதில் நீங்கள் சொர்க்க பூமியைப் பார்க்கலாம்.

1.ஒரு குடும்பத்திற்குள் கணவன் மனைவி இரண்டு பேருமே மகிழ்ச்சியாக இருந்தால்தான் அது ஒரு சொர்க்கலோகம்.
2.கணவன் மனைவிக்குள் ஒவ்வொரு நிமிடமும் வேற்றுமை உணர்வு வந்தால் நரகலோகம்தான்.

ஆனால் அருள் ஞானம் பெறக்கூடிய இந்தப் பாக்கியமான உணர்வை நீங்கள் பெற்றபின் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒற்றுமையான நிலைகளில் இருப்பதற்கு யாம் கொடுக்கும் இந்த வாக்கின் நிலைகளைப் பயன்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் ஒளிகளை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் தவறு செய்யவில்லை என்றாலும் முந்தைய சாப நிலைகளிலிருந்து அவர்களுடைய உணர்வின் அணுக்கள் நமக்குள் உண்டு.
1.நல்ல குணங்களைச் சிதறடிக்கும் அந்த உணர்விலிருந்து உங்களை நீங்கள் மீட்டு
2.ஒவ்வொருவரும் இந்த மகிழ்ச்சியின் தன்மை பெற வேண்டுமென்று யாம் எல்லா மகரிஷிகளையும் வேண்டி அந்த அருள் ஒளியைக் கேட்கின்றோம்.

யாம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று இந்த உணர்வின் தன்மை எம் உடலுக்குள் சேர்த்ததனாலே எமக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் இந்த உடலுக்குள் செலுத்தப்படும் போது நீங்கள் பெற வேண்டுமென்ற இந்த ஆசையினாலே உங்களுக்குள் இந்த உணர்வின் தன்மையைப் பதியச் செய்கின்றோம்.

இதன்படி நீங்கள் செய்தீர்களென்றால் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று உங்களுக்குள் சொர்க்க பூமியை மகிழ்ச்சியான எண்ணங்களைப் பார்க்கலாம்.

1.உங்கள் மூச்சும் பேச்சும் கணவரிடத்திலே மகிழ்ச்சியை ஊட்டும்.
2.கணவருடைய உணர்வும் உங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.
3.இரண்டு சரீரமும் ஒன்று சேர்ந்து இந்த உணர்விலே சொர்க்கத்தைக் காண்பீர்களென்றால்
4.இந்த உடலை விட்டுச் சென்றபின் உங்கள் உயிராத்மாக்கள் இரண்டுமே விண் செல்லும்.

இன்று துருவ நட்சத்திரம் சிவசக்தியின் ஸ்வரூபம் கொண்டுதான் துருவத்தில் இருக்கின்றார்கள். அதைப் போன்று என்றும் 16 என்ற நிலையை நீங்கள் எல்லோரும் பெறலாம்.

கணவனுக்குத் தன் மனைவியை உயர்த்திடும் எண்ணமும்… மனைவிக்குத் தன் கணவனை உயர்த்திடும் எண்ணமும் வேண்டும்

கணவனுக்குத் தன் மனைவியை உயர்த்திடும் எண்ணமும்… மனைவிக்குத் தன் கணவனை உயர்த்திடும் எண்ணமும் வேண்டும்

உதாரணமாக நாம் மிக மிக நல்லவர்களாக இருப்போம். பலருக்குப் பக்குவம் சொல்லக் கூடியவர்களாக இருப்போம். ஆனால்
1.நல்ல அறிவுரையுடன் கூடிய யோசனைகளைக் கூறுபவர்கள் அனைவருமே
2.பிறருடைய குறைகளை வேதனைகளை துன்பங்களைக் கேட்டறிய வேண்டியிருக்கிறது.

உங்களிடத்திலும் பலர் வந்து என்னைப் பிறர் ஏமாற்றி விட்டார்கள் நான் மோசம் போனேன்…! என்று கூறுவதைக் கேட்டுக் கொண்டேயிருங்கள். அப்பொழுது இதனின் உணர்வுகள் எல்லாம் உங்களிடத்தில் விளைந்து உங்களில் உள்ள நல்ல குணங்களைக் காணாமல் போகச் செய்துவிடும்.

இதெல்லாம் உங்களிடம் விளைந்தவுடனே நீங்களும் பொய் சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள். மற்றவர்களைப் பார்த்துப் பித்தலாட்டம் பண்ணுகிறார் என்று கூற ஆரம்பித்து விடுவீர்கள்.

இவ்வாறு நீங்கள் நல்லதே செய்து வந்தாலும் பிறர்படும் வேதனையின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கும் பொழுது அது உங்களிடத்தில் நோயாகவும் கவலையாகவும் சோர்வடைந்த நிலையாகவும் உங்களிடத்தில் விளையும்.

பலரின் குறைகளைக் கேட்டு உங்களுடைய நியாயத்தை எடுத்துச் சொல்லும் பொழுது உங்களுடைய உணர்வு வேகமாக இருக்கும்.

இதே உணர்வுடன் வீட்டிற்கு வந்தால்
1.மகன் ஏதாவது காரியத்திற்காக வெளியே சென்றால்
2.உடனே அவனை “அறிவு கெட்டதனமாகப் போகிறான்” என்று திட்ட ஆரம்பித்து விடுவீர்கள்.

ஏதாவது ஒரு வேலையாக மனைவியைக் கூப்பிடுவோம். கூப்பிடும் பொழுதே “வா இங்கே…” என்று வேகம் காட்டுவோம். இதோ வருகிறேன்…! என்று அவரும் குரல் கொடுப்பார்.

1.இதனின் உணர்வு என்ன செய்யும்…? பாத்திரம் ஒன்று கை நழுவி விழுந்து விடும்.
2.உடனே நாம் மனைவியிடம் கொஞ்சமாவது அடக்கம் இருக்கிறதா பார்…! என்று சத்தம் போடுவோம்.

வெறுப்பின் உணர்வுகள் நம்மிடம் அதிகரித்துவிடும்.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை வேதனையாகும் பொழுது மனைவி பொறுமையாகத்தான் இருப்பார். ஆனால் ஊருக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்ணுகிறார்… என்னிடம் எரிந்து விழுகின்றார் என்று மனைவிக்கு வேதனையாகும் பொழுது அவருக்குக் கை கால் குடைச்சல் வருகின்றது.

இதே உணர்வின் தன்மையுடன் சமையல் செய்தால் என்னாகும்…? சாப்பாடு நன்றாக இருக்காது… சாப்பாடு பரிமாறும் பொழுதும் வம்பு.

இந்நிலையைத் தொடர்ந்து கணவன் மனைவி பிரிந்து விட்டார்கள் என்றால் “நீ… நான்…” என்று சண்டை வருகின்றது. அப்பொழுது அடுத்தவருடைய வேதனையின் உணர்வுகள் நமக்குள் புகுந்தபின் யாராவது உதவி செய்கிறார்கள் என்றால் அவர்களுடைய எண்ணம் இங்கே வளரும்.

என் வீட்டுக்காரர் இப்படித்தான்…! என்று வேதனைப்படும் பொழுது அவர்களைச் சார்ந்தவர்கள்…
1.“அந்த மனுசன் அப்படித்தான் நீ வாம்மா கண்ணு..! என்று அனுசரித்தால் போதும்.
2.இவர்கள் செத்தால் உயிரான்மா அவர் உடலில் புகுந்து கொள்ளும்.

அப்பொழுது வேதனையின் உணர்வுகளை மேலும் வளர்த்துக் கொண்டபின் நான் உதவி செய்தேன் ஆண்டவன் என்னைச் சோதிக்கின்றானே… என்ற நிலையில் வீட்டில் கலவரம் உருவாகும்.

ஆக இங்கே எண்ணங்கள் எமனாகி விடுகின்றன. பகைமை உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது அது இணை சேர்த்து வாழும் தன்மையைப் பிரித்து விடுகின்றது.

எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் எனும் நிலையாக யாம் சொல்லும் முறைப்படி தியானமிருந்து ஒன்றிய நிலைகள் கொண்டு வரும் போது இன்னொரு பிறப்புக்குப் போகாதபடி… பிறர் செய்த ஏவல் நோய்கள் தனக்குள் வராதபடி தடுக்க இது உதவும்.

1.வசிஷ்டரும் அருந்ததியும் போன்று நாங்கள் வாழ வேண்டும்.
2.அவர்கள் வாழ்ந்த உணர்வின் தன்மை என்றும் எங்களுக்குள் நிலை கொள்ள வேண்டும் என்று
3.இரண்டு மனமும் ஒன்றாகித் திருமணமானபின் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இவை.

கணவன் தனது மனைவியை உயர்த்தி நினைப்பதும் மனைவி தனது கணவனை உயர்த்தி நினைப்பதும் இதைப் போன்ற நினைவுகளை வளர்த்திடல் வேண்டும்.
1.கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து இதே உணர்வுடன் செயல்பட வேண்டும்.
2.கணவன் மனைவி இருவரும் ஒன்றிணைந்து துருவ மகரிஷிகளின் அருள் சக்தியைத் தம்முள் இணைத்து
3.வாழ்வில் சந்தர்ப்பங்களால் வரும் நஞ்சினை ஒடுக்கித் தம்முள் நல் உணர்வைச் சமப்படுத்தும் நிலை பெற வேண்டும்.

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள்

சாவித்திரி தன் கணவனை எமனிடமிருந்து மீட்டினாள்

சாவித்திரி நளாயினி கதைகளில் எல்லாம்…
1.சாவித்திரி தன் கணவனையே பின்பற்றி நடந்தாள்…
2.கணவன் எதைச் செய்தாலும் பின்பற்றி நடந்தாள்.
3.எமனிடமிருந்து கணவனை மீட்டினாள் என்றும் சொல்வார்கள்.

அப்படியல்ல…!

கணவன் மனைவி இருவருமே ஒன்று சேர்ந்து இந்த உணர்வின் தன்மையை எவரொருவர் கூட்டிக் கொள்கின்றனரோ… இறந்தபின் அவருடைய உயிராத்மா “இன்னொரு சரீரத்திற்குள் போகாது…”

நளாயினி கதையில் கணவனைக் கூடையில் தூக்கிச் சுமந்தாள் என்று சொல்வார்கள். எப்பொழுதும் கணவன் மனைவி இருவரும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்து அன்று ஞானிகள் சொன்னது. இதை விட்டுவிட்டார்கள்.

கூடையில் தூக்கிச் சுமந்தாள் என்று கதையைக் கட்டிவிட்டார்கள்.

1.அதற்காக வேண்டிக் கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டே தான் இருக்க வேண்டும் என்று அடிமைப் புத்தியைத்தான் காட்டி விட்டார்களே தவிர
2.கணவனும் மனைவியும் இருவரும் சேர்ந்து ஒரு நிலை பெறவேண்டும் என்று காட்டவே இல்லை.

அந்த வழியிலே நாம் விளைய வைத்துக் கொண்டது அடக்கி ஆளும் உணர்வே வந்து விடுகின்றது. நாம் அந்த உண்மையின் நிலைகளை எடுத்துக் கொள்ளும் நிலைகளில் இல்லை.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மீள்வதற்குச் சரியான முறையில் இந்தத் தியானத்தைச் செய்து ஆத்ம சுத்தியைச் செய்து உங்களுக்குள் வரும் துன்பத்தைப் போக்க வேண்டும்.

கணவரின் உயிராத்மா சூட்சுமமாக இருந்தாலும் அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து.. மெய் ஒளியின் சுடராக்கி இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த ஒளியின் சரீரமாக மாற்ற முடியும்.

ஆகையினாலே தான்
1.கணவன் முன் சென்றாலும் அந்த மனைவியின் நிலைகள் இருவர் நிலைகளும் ஒரே நிலையாக எடுத்துக் கொண்டால்
2.பாசமான உணர்வுகள்… சிவமான சக்தி இங்கே தாய்மையினுடைய உடலுக்குள் வந்து விடுகின்றது.

இப்பொழுது நாம் பேய் பிடித்து விட்டது என்று எப்படிச் சொல்கின்றோமோ இதைப் போன்று பெண்ணின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் பேய் பிடிப்பது ஜாஸ்தியாக இருக்கும்.

ஆண்களில் பெண்பாலினுடைய சக்திகள் அதிகமாகி அமில சக்திகள் அதிகமாக இருந்தால் தான் ஆண்களுக்குப் பேய் பிடிக்கும் நிலைகள் வரும். இந்த உணர்வின் ஆற்றல் பெரும்பாலும் பெண்களுக்கேதான் வரும்.

ஆகவே…
1.தன் கணவன் பால் மெய்யுணர்வின் தன்மையை மெய் ஒளியுடன் கவர்ந்து
2.சொர்க்கத்தின் தன்மையாக அவருடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி இணைத்துக் கொண்டால் இந்த உயிராத்மா இறந்த பின் இந்த உடலுக்குள் வந்தபின்
1.எந்த மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் கூட்டி வளர்த்தார்களோ
2.இந்த உடலுக்குள் நின்றே அதைப் பூஜிக்கும் நிலைகள் கொண்டு இந்த உயிராத்மா தனக்குள் ஐக்கியமாகி விடுகின்றது.

இவ்வாறு உயிராத்மாக்கள் ஐக்கியமாகி இரு நிலைகளிலும் உயிருக்குள் ஒளியின் தன்மை பெற்று “அதன் வழி கொண்டு விண்வெளி செல்லும் மார்க்கத்தை அன்று ஆதிசங்கரர் சொன்னார்…”

அகஸ்தியரும் அவருடைய மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை

அகஸ்தியரும் அவருடைய மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழ்ந்த அருள் வாழ்க்கை

 

அகஸ்திய மாமகரிஷி அவர்கள் தம்முள் உள்ள நஞ்சினை அடக்கிப் புவியின் துருவத்தின் வழியாக விண்ணின் ஆற்றலைத் தம்முள் நுகர்ந்து…
1.எதை எல்லையாக வைத்து எதனை நுகர்ந்தாரோ அதனின் ஆற்றலை தம்முள் பெற்றவர்.
2.புவியில் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொன்றின் உணர்வையும் அவர் நுகர்ந்தறிந்து
3.அதனைத் தம்முள் விளைய வைத்து அதனின் ஆற்றலைத் தம்முள் பெருக்கிக் கொண்டவர்.

அகஸ்தியர் தம்முள் விளைய வைத்து வளர்த்துக் கொண்ட பேராற்றல்களை தம் மனைவியின் பால் பாய்ச்சித் தமது மனைவியும் மெய்யுணர்வின் தன்மை பெற வேண்டும்… அதன் வழி கொண்டு இருளைப் போக்கி பொருள் காணும் திறன் பெற வேண்டும் என்றும் தம் மனைவி தம்முள் அறியாது சேர்ந்த நஞ்சை அடக்கி தம்முள் சேர்த்த உணர்வுகளை ஒளியின் உணர்வின் தன்மையாக மாற்ற வேண்டும் என்றும் அந்த அருள் உணர்வுகளைத் தன் மனைவிக்கு ஊட்டினார்.

அகஸ்தியரின் மனைவி… தமது கணவர் தமக்கு ஊட்டிய அருள் உணர்வின் தன்மைகளைத் தமக்குள் இணைத்து வளர்த்து அதன் நிலை கொண்டு பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகளை அறிந்து இவைகளைத் தாம் தன் கணவராலேயே பெற்றோம் என்று உணர்ந்து கொண்டார்.

அவ்வாறு உணர்ந்த பின்
1.தாம் பெற்ற பேரானந்தத்தின் உணர்வின் தன்மைகள் தமது கணவரிடத்தில் மென்மேலும் வளர வேண்டும்
2.அவர் உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்.
3.அவருடைய அருள் துணை கொண்டு தம்முள் அருள் ஆற்றல்கள் பெருக வேண்டும் என்ற உணர்வை வளர்த்து
4.தமது கணவரின் உணர்வுகளுடன் தமது உணர்வுகளை இரண்டற இணைத்து இரு உணர்வுகளையும் ஒரு உணர்வாக ஒன்றிணைத்து
5.இவ்வாறு அந்த இருவருமே துருவத்தின் ஆற்றல்களைத் தம்முள் வளர்த்துக் கொண்டார்கள்.

அகஸ்தியரும் அவரும் மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஓர் உணர்வாக்கி விஷத்தை அடக்கி நல் ஒளியின் உணர்வினை தங்களுக்குள் வளர்த்து… இரு உயிரையும் ஒரு உயிராக்கித் துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து தங்களுக்குள் விளைய வைத்துத் துருவ நட்சத்திரமாக எதையும் அடக்கிடும் உருவாக்கிடும் நிலையாக உருவானார்கள்.

அவர்கள் இன்றும் விண்ணிலே நம் பூமியின் துருவப் பகுதியில் துருவ நட்சத்திரமாக என்றும் பதினாறாக அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

பொதுவாக ஆண்பால் என்பது ஆதிக்க உணர்வும் பெண்பால் என்பது அரவணைத்து இயக்கும் நிலையும் கொண்டது. இதில் தனித்து இயங்கும் நிலையானால் ”முனியாகத்தான்” ஆக முடியும் என்ற உண்மையின் தன்மைகளை உணர்த்தியவர்கள் மெய் ஞானிகள்.

மெய் ஞானிகள் உணர்த்திய அருள் வழி கொண்டு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் இரு உணர்வும் ஒரு உணர்வாக ஒன்றுபட்டு… ஒருவர் மற்றவரை எண்ணி “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் உயர்ந்த ஆற்றல்களைப் பெற வேண்டும்” என்று ஒருவருக்கொருவர் எண்ண வேண்டும்.

1.இப்படிக் கணவனும் மனைவியும் ஒன்றிணைக்கும் பொழுது வலுவாகின்றது.
2.துருவ மகரிஷிகளின் அருளுணர்வுகளை எளிதில் ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கின்றது.

வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கும் நிலையாக… கணவனும் மனைவியும் தங்களுடைய உணர்வுகளை ஒன்றிணைத்துத் துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எண்ணி ஏங்கித் தியானித்து அதனின் உணர்வுகளை தங்களுடைய இல்லம் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.

அப்படிப் படரச் செய்யும் பொழுது அந்த இல்லத்தில் வசிப்பவர்களிடத்திலும் அந்த இல்லத்திற்கு வருகை புரிபவர்களிடத்திலும் அங்கே பதிந்துள்ள மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இணைந்து… அவர்களிடத்தில் தீமைகளைப் போக்கும் நிலையாக மலரைப் போன்று நறுமணமும் மகிழ்ச்சியும் பெறும் நிலையாக விளைகின்றது.

ஆகவே கணவன் மனைவி இருவரும் அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள் துருவ தியானத்தில் ஒன்றாக அமர்ந்து துருவ மகரிஷிகளின் அருள் ஆற்றலின் உணர்வுகளை எண்ணி ஏங்கித் தியானித்துத் தங்களுக்குள் இணைத்து… சந்தர்ப்பங்களால் வந்து சேரும் தீமைகளை நீக்கிப் பொருள் காணும் திறன் பெற்று நஞ்சை அடக்கி ஒளியின் உணர்வுகளாக வளர்க்கும் நிலை பெறுதல் வேண்டும்.

அதைப் போன்று நீங்கள் பார்ப்பவர்களும் உங்களைப் பார்க்கின்றவர்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து தெளிந்த சிந்தனையுடன் மலரைப் போன்ற மணத்துடன் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் பெறுதல் வேண்டும்.

1.கரண்ட்டில் “பாசிடிவ் நெகடிவ்” என்ற இரு இணைப்பையும் கொடுக்கப்படும் பொழுது எப்படி விளக்கு ஒளி பெறுகின்றதோ அதே போன்று
2.கணவன் மனைவி இருவரும் தங்களுடைய உணர்வுகளை ஒருங்கிணைத்து
3.புவியில் படரும் துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளைத் தங்களிடத்தில் இணைத்துப் பெருக்க வேண்டும்.
4.அப்படிப் பெருக்கித் தங்களிடத்தில் நஞ்சான தீமைகளுக்கு இடமில்லாது செய்து அருள் உணர்வின் அணுக்களைப் பெருக்க வேண்டும்.

இதைப் படிப்போர்… நீங்கள் கணவனும் மனைவியும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து பிறவியில்லாத நிலையான அழியா ஒளிச் சரீர வாழ்வைப் பெறும் நிலையாக இரு உயிரையும் ஒரு உயிராக்கிப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து ஒவ்வொரு நாளும் அருள் ஆற்றலைத் தங்களிடத்தில் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். எமது அருளாசிகள்.

கருவுற்ற தாய் அறியாமல் நுகரும் தீமைகள் குழந்தையை எப்படிப் பாதிக்கும்…?

கருவுற்ற தாய் அறியாமல் நுகரும் தீமைகள் குழந்தையை எப்படிப் பாதிக்கும்…?

இப்பொழுதெல்லாம் தாய்மார்கள் கருவில் வளரும் குழந்தைக்கு எதைக் கொடுக்கின்றார்கள்…?

T.V. அல்லது ஃபோனைப் பார்க்கின்றார்கள். “டமார்… டமார்…” என்று பந்து அடிப்பதைப் பார்த்து அந்த உணர்வைத் தன் கருவிலே இருக்கக்கூடிய குழந்தையிடம் பெருக்குகின்றார்கள். அதே போல் கராத்தே விளையாடுவதைக் கண்டால் அதையும் வேடிக்கைப் பார்ப்பார்கள். அதன் வலிமையைப் பார்ப்பார்கள்.

இதனால் என்ன ஆகின்றது…?

1.அவன் பிறந்தவுடனே கிரிக்கெட் பார்க்க ஓடிவிடுகின்றான்.
2.அதே போல் கராத்தே போன்று தாக்கிக் கொண்டே விளையாடுவான்.
3.இருப்பவர்களை எல்லாம் உதைக்க ஆரம்பித்துவிடுவான்.

மனிதர்கள் தங்களிடத்திலும் தங்கள் குழந்தைகளிடத்திலும் வளர்க்க வேண்டியது எது…? நீக்க வேண்டியது எது…? என்பதை, ஞானிகள் தங்களது காவியத் தொகுப்புகள் மூலம் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி உள்ளார்கள்.

இதை யாரும் சிந்திப்பதில்லை.

உதாரணமாக ஒரு கருவுற்றிருக்கும் பெண்மணி ஊனமுற்ற குழந்தையைப் பார்க்குமேயானால் அந்தக் குழந்தையின் உடலிலிருந்து வரக்கூடிய மூச்சலையும் உடலின் அலைகளையும் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து கொள்கின்றது.

இந்த உணர்வின் சக்தியை அந்தத் தாய் சுவாசிக்கும் பொழுது “அந்தக் குழந்தைக்கு இப்படியாகி விட்டதே…!” என்று சோர்வும் வேதனையும் அடைகின்றது… சஞ்சலமும் படுகின்றது.

அந்த உணர்வின் நிலைகள் வரும் பொழுது அத்தகைய உணர்வைப் பார்வையால் நுகரச் செய்து அந்த எண்ணத்தால் உடல் இயங்கி அது எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து
1.அதாவது அந்த ஊனமுற்ற குழந்தையின் உடலில் இருந்து வரும் உணர்வின் சத்தைக் கர்ப்பிணிப் பெண் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது
2.கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு இந்த உணர்வின் அலைகள் பதிவாகி விடுகின்றது.

கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று கதையைச் சொல்வார்கள். நமது கண் ஊனமுற்றிருக்கும் குழந்தையைக் கண்டு இரக்கப்பட்டு பரிதாபப்பட்டு வேதனைப்படும் அதனின் உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து உயிரை இயக்கச் செய்கின்றது.

உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. அந்த உணர்வின் அலைகள் இரத்தத்துடன் கலந்து தாயின் இரத்தத்தில் இருக்கக்கூடியதைத் தான் கருவில் இருக்கக்கூடிய குழந்தை உணவாக எடுத்து அதனின் தசைகள் வளர்கின்றது.

1.தாயின் கண் அந்த ஊனமுற்ற குழந்தையின் உணர்வை ஆழமாகப் பதிவு செய்கின்றது.
2.ஊழ்வினையான அந்த வினைதான் இந்தக் குழந்தையிடமிருந்து வெளிப்படும் உணர்வை மீண்டும் சுவாசிக்கச் செய்கின்றது.
3.ஏனென்றால் தாயின் கருவிலே அந்த உணர்வுகள் பதிவாகவில்லை என்றால் எடுக்காது.

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மையை
1.“சாமி என்ன சொல்கிறார்…?” என்று கேட்டு உணர்ந்து கொண்டு இருந்தால் இது பதிவாகும்.
2.சொல்லும் உணர்வுகளும் தெளிவாகக் கேட்கும்.
3.மற்றவர்கள் அருகிலே பேசினாலும் அது செவிப்புலனுக்கு ஏறாது.

ஆனால் இங்கே யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது “வீட்டுக்கு அவசரமாகப் போக வேண்டும் எப்பொழுது முடிப்பார்…?” என்று எண்ணினால் யாம் உபதேசிக்கும் உணர்வுகள் பதியாது… எண்ணிய உணர்வுதான் இயக்கும். யாம் சொல்லும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகாது.

அதே போல்… வீட்டில் என்ன நடக்கிறதோ என்ற உணர்வினைப் பதியச் செய்து விட்டால் அது பதட்டத்தையும் பயத்தையும் ஊட்டி நல்ல உணர்வுகளைக் கெடுக்கச் செய்து… நம்முடைய கண்ணின் நினைவலைகள் எங்கே செல்கின்றதோ அதனின் நிலைதான் பதிவாகி அதனையே இயக்கும்….!

இதைப் போல அந்தக் கர்ப்பமுற்ற தாய் தான் பார்த்த ஊனமுற்ற உணர்வின் தன்மையைக் கூர்மையாகக் கவனித்து அது உடலிலே பதிவாக்கும் பொழுது தாய்க்கு ஊழ் வினை.

ஊழ் என்பது… நமது எலும்புக்குள் மேக்னட் – காந்த சக்தி உண்டு. இந்த உடலிலே பதிவு செய்த அனைத்தும் நமது எலும்புக்குள் ஊழ் வினையாக அது ஊழாக இருக்கின்றது.
1.நாம் எப்படி டேப்புகளிலே முலாம் பூசுகின்றோமோ அதைப் போல நமக்குள் உருவான இந்த நிலை
2.நாம் வளர்ச்சி பெறும் வண்ணம் நமது எலும்புக்குள் இந்த ஊண்.
3.நாம் கண்ணால் பார்த்த உணர்வின் தன்மையை அந்த ஊணுக்குள் பதிவு செய்துவிடும்.

இவ்வாறு தாய் சந்தித்த (ஊனமுற்ற குழந்தையைப் பார்த்த) சந்தர்ப்பத்தின் உணர்வுகள் தாய்க்கு ஊழ் வினையாகி சுவாசிக்கும் உணர்வுகள் தாயின் இரத்தத்திலே கலந்து கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு இது பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

ஆகவே இந்தக் குறையான உணர்வை… அதாவது ஊனமான குழந்தையின் உணர்வுகள் கருவுற்ற தாய்க்குள் பட்டபின் வேதனை என்ற நஞ்சு வரப்படும் பொழுது… அதனால் அந்தக் கருவிலே வளரும் சிசுவிற்குச் சிந்திக்கும் திறன் இழந்து மூளையின் வளர்ச்சி குறையாக இருக்கும்.

அவ்வாறு அந்த மூளையின் வளர்ச்சி குறையாக இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே வளர்ச்சியின் தன்மை குறைவாக ஆகி எதனின் உணர்வுடன் அந்தக் குழந்தையைப் பார்த்ததோ அதே நிலைகள் கொண்டு கருவிலே இருக்கக்கூடிய “குழந்தை உடலும் ஊனமாகும்…”

இதுதான் கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வது.

நமது கண்ணின் நினவலைகள் அங்கே இருப்பதைக் கவர்ந்து உடலுக்குள் அது செல்லப்படும் பொழுது குழந்தைக்கு அந்த உணர்வின் சக்தி கிடைக்கின்றது என்ற நிலையைக் காட்டுகின்றனர்.

ஆஅகவே கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அனைவரும் கருவிலிருக்கும் தன் குழந்தையை எண்ணி
1.அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் விண்ணை நோக்கி ஏகி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.

அந்த ஏக்கத்துடன்… துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் கருவுக்குள் இருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று கண்ணின் நினைவலைகளைக் கருவுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது, கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு உபதேசிப்பது போல
1.கண்ணால் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் நினைவலைகளை
2.கருவிலே பாய்ச்சப்படும் பொழுது அது ஞானக் குழந்தையாக வளருகின்றது.
3.அது வளர வளர நமக்குள் தெளிவான நிலைகள் வளருகின்றது… அது நம்மைக் காத்திடும் நிலையாக வருகின்றது.
4.அந்தக் குழந்தை அகஸ்தியனைப் போன்ற ஞானக் குழந்தையாக உருவாகும்.
5.இந்த உலகைக் காத்திடும் உத்தம ஞானக் குழந்தையாக வளரும்.

வீடுகளில் மாட்டுச் சாணத்தைத் தெளிப்பது ஏன்…? கோலமிடுவதன் தத்துவம் என்ன…?

வீடுகளில் மாட்டுச் சாணத்தைத் தெளிப்பது ஏன்…? கோலமிடுவதன் தத்துவம் என்ன…?

 

நாம் நமது வீடுகளில் மாட்டின் சாணத்தைத் தெளித்து மெழுகுகிறோம். இது ஞானிகள் நமக்கு வழிப்படுத்திக் கொடுத்தது.

நாம் வீட்டில் மாடுகளை ஒரு ஒதுக்குப் புறமாகப் பார்த்துத் தள்ளிக் கட்டி வைக்கிறோம். ஆனால் அதனுடைய சாணத்தை வீட்டில் தெளிக்கிறோம். எதற்காகத் தெளிக்கின்றோம் என்று, நமக்குத் தெரிய வேண்டுமல்லவா…?

1.தூசுகளை அடக்குவதற்காகச் சாணத்தைத் தெளிக்கின்றோம் என்று நினைக்கின்றோம்… தூசிகளை அல்ல.
2.வேதனைப்பட்ட உணர்வுகளை அடக்குவதற்காக வீடுகளில் மாட்டுச் சாணத்தைத் தெளிக்கின்றோம்.
3.மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால் வெளியிலிருந்து வரும் தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.

நாம் வெளியே எங்கே சென்றாலும் அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன் நமது உடலில் சேர்கின்றது. அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால் நமக்குள் அது வலிமை பெறுகின்றது.

விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும் வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின் நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

ஏனென்றால்
1.மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கிய பின் விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக அதன் சாணம் வெளிப்படுகின்றது.
2.ஆகவே விஷத்தை ஒடுக்கும் வல்லமை அந்த மாட்டின் சாணத்திற்கு உண்டு.
3.ஆகையால் ஞானிகள் “மாட்டின் சாணத்தை, வீட்டில் தெளி” என்றார்கள்.

மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால் நம்மால் வெளியிடப்பட்டு வீட்டில் பதிந்துள்ள சங்கடம் சலிப்பு வேதனை போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.

வீடுகளில் கோலமிடுவதும் சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை தான்.

வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். மாமியார் மீது வெறுப்பு மாமனார் மீது வெறுப்பு கணவர் மீது வெறுப்பு என்று இந்த வெறுப்பின் உணர்வுடன் கோலப் பொடியைக் கையில் எடுத்தால் அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.

இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால் என்னாகும்…? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள் ஒரு புள்ளியை வைத்தால் தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.

கோலம் எதற்காகப் போடுகிறார்கள்…? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.
1.கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்களாலானது.
2.காந்தப் புலன்கள் கொண்ட கோலப் பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது
3.நாம் எண்ணுகின்ற உணர்வுகள் கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.
4.குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணி
5,அந்த உணர்வுடன் கோலப் பொடியை எடுத்துப் புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது அங்கே ஒன்றுபடும் தன்மை வருகின்றது.

வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு அனைவரையும் அரவணைக்கும் தன்மை வரவேண்டும்… நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும்… இணைந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித் தான் கோலமிட வேண்டும்.

சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல.

தன் குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது மகிழ்ச்சியான உணர்வின் தன்மை வீட்டிலே உருவாகின்றது. செய்து பாருங்கள்…!

பெண்கள் தலையில் உருவாகும் பேன் பற்றிய உண்மைகள்

பெண்கள் தலையில் உருவாகும் பேன் பற்றிய உண்மைகள்

 

உதாரணமாக பெண்கள் தங்களது குழந்தைகள் மீது அன்பாக இருப்பார்கள்… பாசமாக இருப்பார்கள். ஆனால் பையன் சேட்டை செய்யும் பொழுது “சும்மா சேட்டை செய்கிறானே… தொலைஞ்சு போறவன்…” என்று, பெண்கள் தங்களது பையனைப் பேசி விடுவார்கள்.
1.தன் குழந்தை மேல் பாசமாக இருந்தாலும்
2.கோபத்தில் “தொலைஞ்சு போறவனே…!” என்ற வார்த்தையைச் சுலபமாகச் சொல்லிவிடுவார்கள்.

இதே போன்று மாமியார் மருமகளைப் பார்த்து ஒரு வேலையாக “ஏம்மா இப்படிச் செய்கிறாய்…? அதைச் செய்தால் என்ன…?” என்று ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லி விட்டால் போதும்.

உடனே மருமகள்… “சும்மா சொல்லிக் கொண்டேயிருந்தால் எப்படி…? நான் செய்ய மாட்டேனா… எனக்குத் தெரியாதா…?” என்று வெறுப்பை வெளிக்காட்டி விடுவார்.

1.இந்த உணர்வின் அலைகள் புவியின் ஈர்ப்பால் வீட்டில் பதிந்து விடுகின்றது.
2.பதிந்தபின் இந்த உணர்வுகள் அலைகளாக வெளிப்படுகின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் அங்கே வெறுப்பாகின்றது.
4.வெறுப்பான உணர்வுகள் இருவரிடத்திலும் படரப்படும் பொழுது அது அவர்களிடம் விஷ அணுக்களை உருவாக்கத் தொடங்குகிறது,
5.அவர்களது உடலில் நல்ல குணத்திற்கு எதிர்மறையான உணர்வுகள் மோதும் பொழுது அவர்களது உடலில் அரிப்பு வரும்

சில வீடுகளில் சங்கடமும் சஞ்சலமும் இருந்தால் போதும். அங்கிருப்பவர்களுக்கு உடலில் அரிப்பு வரும்… பார்க்கலாம். அதுவும் சிறிது நாள் சென்றால் அவர்களுடைய தலைகளில் சீலைப் பேனாக மாறிவிடும்.

வீட்டில் சஞ்சலமும் சலிப்பும் சங்கடமும் வேதனையும் கொண்டவர்கள் தலையில் நிச்சயம் பேன் வரும்.
1.சந்தோஷத்தை உருவாக்கிப் பாருங்கள்… பேன் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
2.ஏனென்றால் பேனிற்கு மனிதரின் சந்தோஷமான உணர்வுகள் எதிரி.

வீட்டில் சலிப்பு… மாமியாரின் கோபம்… பையனின் சேட்டை… கடை வியாபாரத்தில் மந்தம்… பக்கத்து வீட்டுக்காரரின் வம்பு… என்று பலவற்றை எண்ணிச் சலித்து வெறுத்துப் பேசிக் கொண்டிருந்தால் போதும். நிச்சயம் அவர்கள் தலையில் பேன் வரும்.

அந்தப் பேன் அவர் தலையை விட்டு இறங்கினால் அடுத்து சஞ்சலம் கொண்ட இன்னொருத்தரிடம்தான் போகுமே தவிர மற்றவர்களைப் பார்த்தால் அஞ்சி ஓடிவிடும். ஒரு வீட்டில் நாலைந்து பேர் இருந்தாலும் சஞ்சலம் கொண்டவரிடத்தில் மட்டுமே பேன்கள் உருவாகும்.

இது எதனால் இப்படி ஆகிறது…?

நமக்குள் எடுத்துக் கொண்ட மூச்சலைகளையும்… நாம் வெளிப்படுத்தும் எண்ண ஒலி அலைகளையும் சூரியனின் காந்தச் சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.
1.மீண்டும் அதை நம்முள் சேர்த்தவுடனே அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
2.நம் உடலிலிருந்து வந்தது… நம் உடலிலேயே பாய்கின்றது.

இந்த உணர்வின் தன்மையை ஒட்டி இதனுடைய சக்தியை எடுத்து அது அணுவாக மாறுகின்றது. நம் உடலுக்குள் வந்து சாப்பிட ஆரம்பிக்கின்றது.

இதை நாம் தெரிந்து கொள்வது நலம்.

மகாலட்சுமி

மகாலட்சுமி

 

ஒரு புதுப் பெண் (மருமகள்) திருமணம் ஆகி வீட்டிற்கு வந்தாலும் வீட்டில் உள்ள மாமியார் அந்த வீட்டில் உள்ள நிலையை அது இப்படி இருக்கிறது…? என்று பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

1.அந்தப் பெண்ணிற்குத் தெரியவில்லை என்றாலும் இந்த ஞானத்தை ஊட்ட வேண்டும்.
2.இந்தக் குடும்பம் இப்படி இருக்கின்றது… “நமது குடும்பம்…” என்று நினைக்க வேண்டும் என்று வழிகாட்ட வேண்டும்.

ஏனென்றால் புதிதாக வரும் பொழுது கூச்சம் இருக்கும்… தனது வீட்டில் இருப்பது போல் சீராகச் செயல்படுத்தத் தெரியாது. அந்தக் கூச்சத்தினால் ஒரு பொருளையோ டம்ளரையோ கொடுக்கும் போது அதைச் சரியாக வாங்காது கீழே போட்டு விடும்.

அதைப் பார்த்தவுடன் இப்பொழுதே இந்தப் பெண் இவ்வாறு செய்கின்றது… இனி என்ன நடக்குமோ…? என்று மாமியார் இந்த எண்ணத்தை மனதில் பதிவு செய்து கொள்கின்றது.

1.இந்தப் பதிவு உடலுக்குள் சேர்ந்த பின் பார்வையும் மாறும்.
2.கருவிழி உந்தி அந்த பெண்ணைப் பயப்படச் செய்யும். ஏனென்றால் வெளி வரும் சொல் கடுமையாக இருக்கும்.
3.உற்றுப் பார்க்கும் பொழுது “நம்மை ஏதாவது சொல்லிவிடுவார்களோ…?” என்று மருமகளுக்குப் பயம் வந்துவிடும்.
4.மாமியாரின் கடும் சொல் பதிவான பின் அடுத்து இந்தப் பயம் வரும்.

அதே போல் மருமகள் சமையலில் அடுப்பிலே ஏதாவது ஒரு பொருளை வைக்கப்படும் பொழுது கீழே போட்டு விடும்… அல்லது கையைச் சுட்டு விடும். எனக்கு அப்போதே தெரியும் நீ இப்படித்தான் செய்வாய் என்று…! மாமியார் உடனே சொல்லும்.

ஆகவே புதுப் பெண் வீட்டிற்குள் வரும் பொழுது அவர்களை எப்படி வழி நடத்த வேண்டும்…? என்று மாமியார் தெரிந்து கொள்ள வேண்டும்.

இது உன் வீடு… உனக்குப் பொறுப்பு இருக்கின்றது. வீட்டில் பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து விட்டோம். நீயும் அவர்களை ஞானமாக வளர்க்க வேண்டும்.
1.நீ தான் எங்களைக் கவனிக்க வேண்டும்… எங்களுக்கு வயதாகி விட்டது… பொறுப்புடன் இருந்து வேலைகளைச் செய்ய வேண்டும்,
2.நாங்கள் எங்கள் பிள்ளைகளைக் காத்தோம்… அதே போல் அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்
3.இந்த வீட்டையும் காக்க வேண்டும் அந்த சக்தி வர வேண்டும்.
4.நான்கு பிள்ளைகள் இருக்கின்றார்கள்… ஒன்றுபட்டு வாழும் உணர்வுகள் நமக்குள் வளர வேண்டும்
5.பெண்ணாக இருக்கின்றோம்… நாம் இப்படித் தான் வழி நடத்த வேண்டும் என்று மாமியார் பக்குவமாகச் சொன்னால்
6.மருமகளிடம் இருக்கும் அந்தக் கூச்சம் போய்விடும்.

தன்னுடைய அத்தையைப் பார்க்கும் பொழுது அந்தப் பெண்ணிற்கு பயம் நீங்கிவிடும். வேலைகளைச் செய்ய அந்தத் துணிவு வரும்… சீராகவும் செய்ய முடியும்

ஆனால் ஒரு சில வீடுகளிலே புதுப் பெண் சென்றால் அங்கே எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறது…? என்பதைப் பார்க்கலாம்.

முதலில் பெண் பார்க்கச் செல்லும் பொழுது “எங்கள் வீட்டிலே இப்படி எல்லாம் செய்வோம்… இருப்போம்…” என்று சொல்வார்கள். ஆனால் பெண்ணோ அவர்கள் வீட்டிலே செல்லமாக வளர்ந்து இருக்கும்.

புகுந்த வீட்டிற்குள் வரப்படும் பொழுது முதலில் கொஞ்சம் வித்தியாசங்கள் வரும். ஆனால் வித்தியாசம் வரும் பொழுது இந்த வீட்டிலிருக்கும் மாமியார் அதைப் பக்குவப்படுத்த வேண்டும்.

மருமகள் என்றாலும் தன் மகனை எப்படிப் பார்க்கின்றோமோ… தன் மகளை எப்படி பார்க்கின்றோமோ… அந்த நிலை கொண்டே மாமியார் பார்க்க வேண்டும்.

இன்றைக்கு மருமகளாக வருகின்றார்கள். மாமியாரின் கடுமையான உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்தப் பழக்கம் வரும் பொழுது… பின்னாடி அவர்களுக்கு வரக்கூடிய மருமகளையும் “தன் மாமியார் எப்படித் தன்னை நடத்தினார்களோ… அதே செயலைத்தான் தன் மருமகளுக்கும் செயல்படுத்தும்,..”

1.தாய் என்ற நிலையில் தான் நாம் வளர்க்கின்றோம்
2.ஆனால் அந்தத் தாய்மை என்ற நிலையில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்…? என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காரணம்… இயற்கையில் முதலில் பெண்பாலாக இருந்து தான் படைப்பின் சக்திகள் வளர்கிறது.

ஆகவே
1.திருமணமாகி வீட்டிற்கு வரும் அந்தப் பெண்ணை மகாலட்சுமியாக மாற்ற வேண்டும்.
2.சர்வத்தையும் அறிந்திடும் நிலையும் சர்வத்தையும் வளர்த்திடும் நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.

அதிர்ச்சி அடையச் செய்யும் எத்தகைய செய்தியையும் நாம் பாசத்தால் நுகரக் கூடாது

அதிர்ச்சி அடையச் செய்யும் எத்தகைய செய்தியையும் நாம் பாசத்தால் நுகரக் கூடாது

 

வேதனை வெறுப்பு என்ற நிலைகளில் தற்கொலை செய்து மடிந்து கொண்டவர்களோ அல்லது இடைமறித்து எதிர்பாராது மடிந்தவர்களோ வளர்ச்சி இல்லாத நிலைகளில் கடும் நோயினால் மடிந்தவர்களோ இவர்களின் உணர்வுகளைப் பாசமாக எண்ணி எடுத்துக் கொண்டால் அதனால் பல தீமைகள் விளைகின்றது.

பெண்கள் பாசத்துடன் அதிகமாக நேசிக்கப்படும் பொழுது… குறிப்பாக அதுவும் கர்ப்பமாக இருக்கக்கூடியவர்கள் இதை நுகர்ந்து விட்டால்
1.அவர்களுடைய கர்ப்பப்பையில் விஷத்தன்மைகள் அதிகரித்து அது விரிவடையாது
2.தற்கொலையால் இறந்த உணர்வுகள் ரத்தத்தில் கலந்து கருப்பைக்கு வந்தால் முட்டைகள் சீராக வளர்ச்சி அடையாதபடி
3.இடைவெளியிலேயே அழிந்துவிடும்… தன் இனத்தை விருத்தி செய்யும் நிலைகள் இழந்து விடுகின்றது.

ஏனென்றால் கர்ப்பமாக இருக்கும் தாய்… பல உணர்வு கொண்டு மரணம் அடைந்தவர்கள் துர்மரணம் அடைந்தவர்கள் உணர்வுகளை அதிகமாக நுகரப்படும் பொழுது
1.கருக்களில் இது சேர்க்கப்பட்டுத் தன் இனவிருத்தி என்று கருப்பைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்
2.அது முழுமை அடையாதபடி அழிந்து விடும்.
3.அத்தகையவர்களுக்குத் தன் இனத்தை விருத்தி செய்யும் தன்மை வருவது மிகக் கடினம் தான்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு இது போன்ற அதிர்ச்சி ஊட்ட கூடிய உணர்வுகளைக் கூடுமானவரை கருவுற்றவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஏனென்றால்
1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

ஆகவே வீட்டிலே திருமணம் ஆகிப் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டால்… முதல் அந்த மூன்று மாதத்திற்குள் அவர்களை அணுகி எமது உபதேச நூல்களைக் கொடுத்து அதைப் படித்துக் கேட்கும்படிச் செய்து அதை எல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் உள்ளோர் தியானமிருந்து கருவிலிருக்கும் சிசு அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியைப் பெற்று “ஞானக் குழந்தையாக வளர வேண்டும்…” என்று தவம் இருங்கள்.
1.அந்தத் தவம் உங்களைக் காக்கும்.
2.அருள் ஞானி பிறக்கும்… அது உலகத்தைக் காக்கும்
3.அப்படிக் காக்கக்கூடிய நிலைகள் உருவாக வேண்டும் என்று தவத்தை நாம் இருக்க வேண்டும்.
4.இந்த உணர்வை வளர்த்தோம் என்றால் தான் இந்த உலகை நாம் மீட்க முடியும்… உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக நாம் பெற முடியும்.
5.இந்த உடலான உலகத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
6.மீண்டும் உடல் பெறும் நிலைகளிலிருந்து நாம் மீள முடியும்.

இதைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுவோம். குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.