
தாய் தந்தை பாட்டன் பாட்டியை நாம் நேசிக்க வேண்டிய முறை
நம் அன்னை தந்தையர் நம்மை வளர்த்திட நம்மைக் காத்திட எத்தனையோ வேதனைகளையும் எத்தனையோ இன்னல்களையும் பட்டுத்தான் வளர்த்தார்கள்.
அந்த வேதனைகள் அவர்களுக்குள் நஞ்சாக வளர்ந்து நோயாக விளைந்து நோயால் துடித்துக் கொண்டிருக்கும் அந்த ஆன்மாவை அவருக்காக வேண்டி நாம் கடவுளை வேண்ட வேண்டும்.
ஏனென்றால் அவர்களுடைய சரீரத்தைப் பெற்றவர்கள் நாம். நம்மை நாம் காத்தாலும் அவர்களுக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்தை நாம் எண்ணினால் நாம் எடுக்கும் இந்த உணர்வின் ஆற்றல் அவர்களுக்கும் கிடைக்கப் பெறும்.
1.அவர்கள் நம்மைக் காத்த நினைவும் நமக்குள் வருகின்றது.
2.அவர்கள் நம்மைக் காத்த உணர்வு நமக்குள் விளைகின்றது.
3.அந்த இனத்தை நமக்குள் இணைப்பதற்காகத் தான் விநாயகர் தத்துவத்தில்
4.அன்னை தந்தையரை நீ எப்படி நேசிப்பது…? என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
என்னைக் காத்தருளிய தெய்வமான தாய் தந்தையருக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும். என்னைக் காத்திட்ட நேரத்தில் அவர்கள் நுகர்ந்த நஞ்சுகள் அகல வேண்டும்.
என்றென்றும் என்னை மகிழ்வித்த அந்த உணர்வுகள் என் தாய் தந்தையர் உடலில் விளைய வேண்டும். அவர்கள் அருளாசி என்றென்றும் எனக்குள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அவர் காட்டிய அருள் நெறிப்படி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். வலு கொண்டு தீமைகளை அகற்றித் தீமையற்ற நிலைகள் எனக்குள் வளரும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும் தாயே…! ஈஸ்வரா…! என்ற தாய் தந்தையரை வேண்டி இவ்வாறு வணங்க வேண்டும்.
வணங்கிய பின் அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன…?
நம்முடைய தாய் தந்தையரின் மூதாதையர்கள் தாத்தா பாட்டன் பாட்டியரின் குல வழி தான் நாம் வந்துள்ளோம்.
1.அவர்கள் முதலிலே மனிதனாகப் பிறந்தார்கள்.
2.நம் தாய் தந்தையரை மனிதர் ஆக்கினார்கள்
3.பின் நம்மை நம் தாய் தந்தையர் மனிதனாக்கினார்கள்
4.அந்தக் குல வழியில் தான் நாம் மனிதனாக ரூபம் பெற்றோம் என்ற இந்த நினைவினைக் கொண்டு வந்து
5.ஒளியாக அறிவித்த அவர்கள்… நம்மைக் காத்திட்ட அந்த உள்ளங்கள் நம் தாய் தந்தையைக் காத்திட்டவர்கள்
6.அதற்காக வேண்டி எத்தனையோ வேதனைப்பட்டவர்கள்
7.நஞ்சு கொண்ட இன்னொரு இழிநிலையான சரீரம் பெறாது அருள் ஞானிகள் உணர்வுகளுடன் ஒன்றி
8.அவர்கள் இன்னொரு உடல் பெறும் உணர்வுகளை அங்கே நாம் கரைத்திடல் வேண்டும்.
ஞானிகள் காட்டிய வழிப்படி நம் குலதெய்வங்களின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் ஒளி அலைகளில் கலந்து நஞ்சு கொண்ட உடல் பெறும் உணர்வுகள் கரைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டு என்றும் பிறவா நிலை என்னும் பெரு வீடு பெரு நிலை அடைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று ஞானிகள் எங்கே சென்றார்களோ அதை நமக்குள் பதிவு செய்து விண்ணை நோக்கி ஏகி அவர்களை விண் செலுத்த வேண்டும்.
அவ்வாறு விண் செலுத்தி அவர்கள் முன் சென்றால் அவர்கள் உடலில் உருப்பெற்ற நஞ்சு எப்படி அங்கே கரைந்ததோ அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அவர்களை இணைத்து அந்த சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ணினால்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து தீமையை அகற்றிய உணர்வுகள்
2.அங்கே அவரால் ஏற்படுத்தப்பட்ட அவரில் விளைந்த உணர்வுகள் நமக்குள்ளும் பதிவாகின்றது.
அவரின் உணர்வின் தன்மை கொண்டு நாம் எளிதில் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று நமது வாழ்க்கையில் வந்த தீமைகளைத் தூய்மைப்படுத்த மூதாதையர்கள் உணர்வு நமக்கு உதவும்.
அவர்கள் நம் நல்ல செயல்களைப் பற்றி என்றுமே போற்றியவர்கள். நம்முடைய முன்னோர்களின் அந்த நல்ல உணர்வை நாம் போற்றினாலும் நமது வாழ்க்கையில் நம்மைக் காக்க… அறியாது நாம் தவறு செய்தாலும் அதற்காக அவர்கள் வேதனைப்பட்டிருப்பார்கள்.
அது அவர்கள் உடலில் நோயாக விளைந்தது… “இதற்காகவாவது…” நம்மைக் காத்திட்ட எங்கள் குலதெய்வங்களான அந்த உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவா நிலை என்ற பெரு நிலை அடைந்து உயிருடன் ஒன்றிய நிலையாக என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று நாம் அனைவரும் சேர்ந்து “முதலில்” அங்கே உந்தித் தள்ள வேண்டும்.
இது தான் விநாயகர் தத்துவம்.








