தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Spiritual light - Bliss

தூங்காமல் தூங்கும் நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணம் தான் செயல்.. எண்ணம் தான் கடவுள்…! என்ற நிலையை பல இடங்களில் திரும்பத் திரும்பச் சொல்லியுள்ளேன்.

தாவரங்கள் எல்லாம் ஒரே நிலையில் அதற்குகந்த ஒரே அமில குணத்தை ஈர்த்து வளர்ந்து வாழ்கின்றது. வெங்காயம் அதன் அமில குணமான அதிகப்படியான ஈர்ப்பு அமில இரசத்தை உறிஞ்சி ஒரு வகையான காரத்தை வளர்க்கின்றது. அதன் ஆவி பட்டவுடன் நம் கண்ணீர் சுரக்கிறது.

மிளகாயின் நெடி எரிச்சலையும் இன்னும் சில வகை காய்களினால் நமைச்சலும் நாம் பயிராக்கி வளர்க்கும் தாவரம் அல்லாமல் இயற்கையுடன் வளரும் பல கோடி இன வளர்ச்சியும் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு குண நிலை ஒத்த அமில சக்தி ஈர்ப்பில் வாழ்கின்றது.

ஒரு நிலையில் ஈர்த்து வளரும் தாவரங்களுக்கு மனிதனை ஒத்த செயல் உணவு முறைகள் வேண்டி இருப்பபதில்லை. ஆக.. உண்டு கழித்து உறங்கி வாழும் நிலை மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது…?

ஒன்றிலிருந்து மாறுபட்ட அமிலப் படைப்பில் பிம்பம் கொண்ட ஜீவராசிகளின் நிலையே ஒன்றுடன் ஒன்று கூடிக் கூடி வளர்ச்சி நிலை முற்றி கனம் கொண்ட பிம்ப ஜீவ நிலை எற்பட்ட பிறகு ஒவ்வொன்றிலிருந்தும் சேமிக்கப்பட்ட குண நிலைகளுக்கொப்ப ஈர்ப்பு நிலை அமையப் பெறுகிறது.

அப்படிப் பெற்றதனால்… ஜீவ பிம்ப உடல் பெற்ற பிறகு
1.எண்ணத்தின் செயலினால் தன் தேவையை உணரும் நிலையும்
2.தன் தேவைக்குகந்த செயலாற்றும் திறமையும்
3.ஒன்றின் பலவாகக் கூட்டிக் கொண்ட பல அமிலங்களின் ஈர்ப்பு சக்தி கொண்ட ஜீவன்களுக்கு
4.தன் உணர்வின் எண்ண செயலுக்கெல்லாம் அதன் தேவையின் அடிப்படை உணவு தேவைப்படுகின்றது.

இதிலுள்ள உள் அர்த்தம் என்ன..?

1.இது நாள் வரை “எண்ணத்தின் செயல்” என்று உணர்த்தி வந்தேன்
2.இப்பொழுது “உணர்வின் எண்ணத் தேவை…” என்று உணர்த்துகின்றேன்.

நம் உடலுக்கு நீர் தேவைப்படும் பொழுது வாய் வறண்டு விட்ட பிறகு நீர் அருந்த எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.
1.உணர்வின் தேவையினால் எண்ணத்தைச் செலுத்தி
2.எண்ணத்தின் செயலால் நீரை அருந்துகின்றோம்.

அதே போன்று நம்மை அறியாமலே நாம் எந்தச் செயலில் இருந்தாலும்… அல்லது அதன் பால் எண்ணத்தைச் செலுத்தா விட்டாலும் நம்மை அறியாமல் நம் உடலில் உள்ள இவ்வெண்ணத்தின் மோதலின் செயல் நிலையினால்
1.நாள் முழுவதும் நம் செயல் இருக்கும் பொழுது
2.இந்த உடலின் உஷ்ண அலைகள் ஆவியாக கொட்டாவி வெளிப்பட்டு
3.உடல் உறுப்புகளுக்கு அமைதிப்படுத்தும் நிலையான உறக்கம் கொள்ள வேண்டியுள்ளது.

இப்படிப் “பல எண்ணத்தை எடுத்து… பல அமிலங்களின் செயல் தொடர்பில்…” வாழும் பிம்ப உடல்களுக்கு உணர்வின் எண்ண அலையும் வருகின்றது.

ஒரே நிலை கொண்ட தாவரங்களுக்கும்… மற்ற ஜீவன்களான ஜீவ சக்தி கொண்ட எல்லாக் கனிவளங்களுக்கும்… நம் பூமிக்கும்… மற்ற எல்லாவித மண்டலங்களுக்கும் ஜீவன் உள்ள பொழுது… தன் தேவை அறியும் உணர்வும்… உறங்கும் நிலையும் இல்லை…? ஏன்…?

ஜீவன்கள் உறங்கி விடுகின்றன. பூமியும் மற்ற கோளங்களும் தாவரங்களும் உறங்குவதில்லை.
1.ஒரு நிலை கொண்ட அமிலப் படைப்புகள்
2.இவ்வெண்ண சக்தியின் பலவற்றை மோதுண்டு வாழும் ஜீவன்களைப் போல உறங்குவதில்லை.

அவை உறங்கிவிட்டால் உறங்கும் ஜீவன்களுக்கு ஜீவத் துடிப்பு எங்கிருந்து வரும்…?

இயற்கையின் ஜீவப் படைப்பில் சுகம் கண்டு வாழும் நிலை பெற்ற ஜீவன்கள் தனக்குக் கிடைத்த இந்த அபரிதமான உண்மைச் சக்தியை
1.உண்டு… கழித்து… உறங்கி… மங்கச் செய்யும் வாழ்க்கையிலிருந்து
2.இதே அடிப்படை எண்ண குணத்தில் செல்லாமல்
3.”ஒரு நிலை கொண்ட எண்ணச் சக்தி கொண்டு தான் ஞானத்தின் வளர்ச்சி பெறல் வேண்டும்
4.தூங்காமல் தூங்கும் நிலை…!

நாம் இயங்குகிறோமா…? பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா…? என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்

act of soul

நாம் இயங்குகிறோமா…? பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா…? என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்

 

கோலமாமகரிஷி “ரிஷி நிலையை” எப்படிப் பெற்றார் என்று உணர்வதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் (ஞானகுரு) ஆறு வருடம் தியானமிருந்து வந்தோம். மழைக் காலம் வரும் பொழுதெல்லாம் அங்கே செல்வோம்.

கோள்களின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அதனால் தான் அவரைக் கோலமாமகரிஷி என்பது. அவர் கண்டறிந்த உண்மைகளை அறிவதற்காக குருநாதர் அங்கே என்னை அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் அந்தக் கோள்களின் இயக்கங்களை அங்கிருந்து தியானித்தேன்.

இதை எல்லாம் பார்த்து அறிந்து உணர்வதற்காக வேண்டி மங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பேன். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள்.

இரண்டு பேரும் இறந்தவுடன் பையனுடைய பாட்டி என்ன செய்கிறது…? நீ பிறந்ததும் அப்பாவையும் அம்மாவையும் தூக்கி விழுங்கி விட்டாய்… நாசமாகப் போகிறவனே…! எங்கேயாவது தொலைந்து போடா…! என்று அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பையனுடைய அக்காவோ… ஏன் பாட்டி…! பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன தெரியும்…? அதற்காக வேண்டி அவனைத் திட்டுகிறாயே,..! என்று சொல்கிறது.

உனக்கு ஒன்றும் தெரியாது. இவன் பிறந்த நேரத்தில் தான் எல்லோரையும் விழுங்கி விட்டான்… இந்தக் கழுதையை எங்கேயாவது குப்பையில் போடு..! என்று பாட்டி பேசிக் கொண்டே உள்ளது.

இதெல்லாம் நடக்கும் பொழுது நான் அவர்கள் வீட்டிலே போய் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே என்ன… ஏது… அது எப்படி நடக்கின்றது…? என்பதை அறிந்து கொள்வதற்காக குருநாதர் சொன்ன வழியில் அங்கே சென்று கொண்டிருக்கின்றேன்.

அங்கே சென்று அவர்களுடன் பழகிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பையன் பேசுவதும்… அந்தப் பாட்டி பேசுவதும்… இப்படியே போராடிக் கொண்டே இருந்தார்கள்.

அந்தப் பாட்டி இறந்தது. ஆனால் தன் பேத்தி மீது பற்றாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பாட்டி தான் குடும்பத்தை முழுவதுமாக ஆதரித்து வந்தது.
1.தன் பேத்தி மீது மிகவும் பிரியமாக இருந்ததால்
2.இறந்த பின் பாட்டியின் உயிராத்மா பேத்தியின் உடலுக்குள் வந்து விட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் அக்காவும் பேசத் தொடங்கினார்கள்.

தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில் தம்பியைப் பார்த்து, “தொலைந்து போகிறவனே.. எல்லோரையும் தூக்கி வாரி விட்டாய்… நாசமாகப் போடா…!” என்று சொன்னாள். அதன்படியே தம்பியை விரட்டி விட்டாள்.

இது நடந்த நிகழ்ச்சி…!

1.ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்குள் சென்ற பின் அது எப்படி இயக்குகிறது…?
2.உடலுடன் இருக்கும் பொழுது இந்த உணர்வுகள் மாறியதும்
3.அவர்கள் எப்படி இயங்குகின்றனர்…? என்பதை அனுபவபூர்வமாக என்னால் அங்கே அறிய முடிந்தது.

இந்த மாதிரி குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு இதை எல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை எடுப்பது மாதிரி வேஷ்டியும் துண்டும் மட்டும் தான் போட்டுக் கொண்டு போவேன்.
1.அங்கங்கே என்ன நடக்கிறது…
2.அந்த உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது…?
3.சாப அலைகள் என்ன செய்கிறது…?
4.நோயின் உணர்வுகள் எப்படி வருகிறது…? இறக்கச் செய்கிறது…? என்று
5.எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குத்தான் காட்டிற்குள்ளும் நகரத்திற்குள்ளும் குருநாதர் அனுப்பினார்.

பாட்டி இறந்த பின் அந்தப் பெண் குழந்தையிடம் நான் சொன்னேன்…!

ஏம்மா…! பாட்டி தான் உன் தம்பியைத் திட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுது நீ உன் தம்பியைத் திட்டுகிறாயே…! என்றேன்.

அட… நீ… போய்யா….! என்று இப்படி என்னைச் சொல்கிறது.

அந்தப் பாட்டி எப்படிச் சொல்லுமோ அதே மாதிரி என்னிடமும் “அட போய்யா…!” என்கிறது.

கூட வந்த நண்பர் அந்தப் பெண்ணிடம் “சாமியை நீ இப்படிப் பேசலாமா…?” என்று கேட்டார்.

சாமியாவது… பூதமாவது…? என்று இப்படியே “வெடுக்..” என்று பேசுகிறது. அந்த உணர்வுகள் அதே மாதிரி வேலை செய்கிறது.

ஏனென்றால் ஒரு உடலுக்குள் இந்த உணர்வுகள் எதை வளர்த்ததோ அதே உணர்வின் செயலாக எப்படிச் செயலாக்குகிறது என்பதை யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை அந்த வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்… இதனுடைய நிலைகளை நீ பார்…! என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

take naraimha avatar

கடுமையான வேதனையில் உள்ளவர் மீது இரக்கப்பட்டுப் பரிவுடன் உதவி செய்யலாமா…?

 

ஒரு சமயம் நான் (ஞானகுரு) இரயிலில் சென்னையிலிருந்து பம்பாய்க்குச் சென்று கொண்டிருக்கின்றேன். குருநாதரும் (ஈஸ்வரபட்டர்) அப்பொழுது என்னுடன் வருகின்றார்,

செல்லப்படும் பொழுது இரயிலில் ஒரு நோய்வய்ப்பட்ட பெண்மணியை அவர்களுடைய உறவினர்கள் வேலூர் ஆஸ்பத்திரியிலிருந்து பம்பாய்க்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.

நோய்வாய்ப்பட்ட பெண்மணி வேதனை தாளாமல் பதறிக் கொண்டிருக்கின்றது. உறவினர்களிடம் ஐயோ…! எனக்கு இப்படி இருக்கிறது… தண்ணீர் கொடு… அது கொடு.. இது கொடு..! என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஆனால் உறவினர்களோ மருத்துவர் சொன்னபடி… “உணவோ தண்ணீரோ… ஒரு அளவிற்கு மேல் கொடுக்கக் கூடாது..” என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்..

ஆனால் நோய்வாய்ப்பட்ட பெண்மணியோ… அடப் பாவிகளா… எனக்கு நாக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றது… உண்ணுவதற்கு எதுவும் கொடுக்கமாட்டீர்களா..?” என்று சாபமிட்டுக் கொண்டிருந்தார்.

கூட வந்த உறவினர்கள் என்ன செய்கிறார்கள்…? டாக்டர் சொன்னதை எண்ணிக் கொண்டு நோயாளியைப் பார்த்து “நீ சும்மா இருக்க மாட்டாயா…?” என்று மிரட்டுகிறார்கள்.

அப்பொழுது இன்னொரு அம்மா அந்த இரயிலில் வந்து கொண்டிருந்தவர் இந்த அம்மாவைப் பார்த்து… பாவம் மிகவும் வயதானவர்கள்… கேட்டால் கொடுத்தால் என்ன..? அவஸ்தையயால் இப்படிச் சாபமிடுகிறார்கள்…! என்று அவர்கள் எண்ணிக் கேட்கிறார்கள்.

இதை நான் பார்த்துக் கொண்டேயிருக்கின்றேன்.

“உனக்கு என்ன வேண்டும் அம்மா…?” என்று இரக்கமாகக் கேட்டார்கள்.

அதற்கு உறவினர்கள்… அட எங்களுக்குத் தெரியாதா…? நீ என்னம்மா இதைக் கேட்கிறாய்…?” என்று சொல்கிறார்கள்.

இப்படிச் சொன்னவுடன் அந்த நோயான பெண்மணி “பார்…! உதவி செய்பவர்களைக் கூட இப்படித் திட்டுகிறார்களே…!” என்று எண்ணுகின்றார்.

ஏனென்றால் அந்தச் சந்தர்ப்பம் இது போன்ற உணர்வுகளை நுகரும் பொழுது உயிர் அதை ஜீவ அணுவாக அவர்களுக்குள் உருவாக்குகின்றது.

குருநாதர் இதைக் காண்பித்தார். ஆனால் அங்கு யாரும் தவறு செய்யவில்லை.

மருத்துவர்கள் கூறிய அறிவுரைப்படி “ஒரு அளவுக்கு மேல் உணவோ தண்ணீரோ கொடுத்தால் அந்த உயிருக்கு ஆபத்து வரும்…!” என்று உறவினர்கள் அதைக் கடைபிடிக்கிறார்கள். எதற்காக…? சிறிது நாளைக்காவது அந்த நோயான பெண்மணியைக் காப்பாற்ற வேண்டும் என்று..!

ஆனால் நோயான பெண்மணியோ “நான் இப்படி அவஸ்தைப்படுகிறேனே… கேட்டதைக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே… கொஞ்சம் கூட இரக்கம் இல்லையே…!” என்று இந்த அம்மா பேசுகிறது.

இந்த உணர்வின் சொல்லைக் கேட்டவுடனே உறவினர்கள் வேகம் கொண்டு.. “நீ பேசாமல் இரு…!” என்கிறார்கள்.

இதனால் நோயான பெண்மணி “நாம் இவர்களுக்கு எத்தனை உதவிகளைச் செய்திருப்போம்… என்னுடைய நோயின் தன்மை தெரியாமல் இப்படிச் சீறிப் பாய்கிறார்களே… வேதனைப்படுத்துகிறார்களே..!” என்று அவர்களின் உணர்வுகள் மாறுகின்றது.

இதெல்லாம் சந்தர்ப்பங்கள்…!

இரயிலை விட்டு இறங்கியவுடன்.. நோயான பெண்மணியின் வீடு வரை எம்மைச் சென்று வரச் சொல்லிவிட்டு குருநாதர் ஒரு இடத்தில் இருந்து விட்டார்.

யாம் அவர்களைப் பின் தொடர்ந்து அவர்கள் வீடு வரை சென்றோம். இரண்டு நாள் அங்கே இருந்தோம். மூன்றாம் நாள் நோயான பெண்மணியின் உயிராத்மா பிரிந்தது.

அந்த ஆன்மா பிரியும் பொழுது… அவருடைய எண்ணம் எங்கே செல்கிறது…?

இரயிலில் வரும் பொழுது இந்த நோயான பெண்மணிக்காக யார் பரிந்து பேசினார்களோ அவர்கள் மேல் வருகிறது. “மகராசி எனக்கு உதவி செய்தாளே…!” என்ற அந்த எண்ணம் வந்தது.

ஆனால் உறவினர்களை நினைத்து “என்னுடைய எல்லாச் சொத்துக்களையும் வைத்துக் கொண்டு எனக்குத் துரோகம் செய்தார்கள்…” என்று இங்கே சாபமிட்டது.

1.இத்தகைய சாப அலைகளை அங்கே அந்த உறவினர்கள் நுகர்ந்தனர்
2.அவர்கள் உடலில் விளைந்து அவர்கள் தொழில் நசுங்கியது…
3.குடும்பத்தில் பல விதமான குழப்பங்கள் விளைந்தது.

ஏனென்றால் இதையெல்லாம் ஒரு 48 நாள்கள் பார்க்கும்படியாக அந்த வீட்டிற்கு அருகாமையில் இருந்து பார்க்கும்படி செய்தார் குருநாதர். ஒரு பக்கத்தில் அமர்ந்து இங்கே என்ன நடக்கிறது…? என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.

அதே சமயத்தில் நோயான பெண்மணி கூட வந்து பரிந்து பேசினார்களே அவர்கள் நோயான பெண்மணியின் வீட்டுப் பக்கம் வந்து இதைப் பார்த்தவுடனே…
1.நோயான பெண்மணியின் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா கடைசி நிமிடத்தில் எப்படி எல்லாம் அவஸ்தைப் பட்டதோ
2.இவருடைய உடலுக்குள் அந்த ஆன்மா வந்து
3.அதே வேதனையின் உணர்ச்சிகளை இவருடைய உடலுக்குள் ஊட்டுகின்றது.

குருநாதர் இதையும் பார்க்கச் சொன்னார்.

1.இரயிலில் போகும் பொழுது இந்தப் பற்று வந்த பின்
2.அது எப்படி ஆகிறது…? இந்த ஆன்மா இன்னொரு உடலுக்குள் எப்படிச் செல்கின்றது…?
3.இவரை எப்படிச் சிரமப்படுத்துகின்றது…? என்ற நிலைகளைக் காட்டுகின்றார் குருநாதர்.

ஆனால் இறந்த பின் நோயான பெண்மனியின் வீட்டில் ஒருவருக்கொருவர் குழப்பமாகின்றது. குழப்பத்தால் அவர்கள் வியாபாரம் மந்தமாகிறது.

தங்களை அறியாமலே குழந்தைகளை சீறிப் பேசுவது… தவறான நிலையில் பேசுவது.. என்ற இந்தச் சங்கடங்கள் எல்லாம் வந்து வீட்டுக்குள் குழப்பம் வருகிறது.

ஏனென்றால் இந்த இயற்கை நம்மை எபப்டி இயக்குகிறது என்ற நிலைகளைச்
1.சந்தர்ப்பம் மனிதர்களை எப்படிக் குற்றவாளியாக ஆக்குகின்றது…?
2.சந்தர்ப்பத்தால் நமக்குள் நோய் எப்படி விளைகின்றது..? என்பதையெல்லாம் குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை..! நாம் நுகர்ந்தறிந்து அன்புடன் பண்புடன் பரிவுடன் பேசும் பொழுது
1.இந்தச் சாந்த உணர்வுகள் மிக நன்மை செய்யும்
2.ஆனால் வேதனை என்ற உணர்வுகள் வலிமை பெற்றது.
3.அது இந்தச் சாந்தத்தை அடக்கிவிடும்.

அது தான் மூஷிகவாகனா…! விநாயகருக்கு முன்னாடி எலியைப் போட்டுக் காண்பித்து… “நாம் சுவாசித்த உணர்வே.. நம்மை வாகனமாக இருந்து அழைத்துச் செல்லும்…!” என்று காட்டுகிறார்கள் ஞானிகள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்க்கையை வழி நடத்த வேண்டும்.

நம் உயிராத்மாவுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய ஜீவ சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

spiritual eye divine eye

நம் உயிராத்மாவுக்கு உணவாகக் கொடுக்க வேண்டிய ஜீவ சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எச்சக்தியும் செயல்பட ஜீவத் துடிப்பு காந்த ஒளி அலை வேண்டும். இச்சக்தி நிலை… ஜீவன் தரவல்ல “நீரிலிருந்து” கிடைக்கின்றது.

நீர் எப்படிக் கிடைத்தது…?

இயந்திரங்களைச் செயலாக்க அவ்வியந்திரங்களுக்கு ஆகார திரவங்களைச் செலுத்தி (FUELS) இயக்கினாலும்
1.அதற்கு ஜீவ நீரைச் செலுத்திச் சுழல விட்டு (COOLING) காந்த மின் அலையின் ஒளியைச் சுழல விட்டுத் தான்
2.அந்த ஒளிப் பொறியினால் இயந்திரங்களை இயக்குகின்றான் மனிதன்.

“காந்த மின் ஒளி” பிறக்கும் பொழுதே ஜீவன் தான் செயல்படுகின்றது. (முக்கியமானது) மின்சாரத்தை எடுக்கவும்… நீரிலிருந்து காந்த மின் அலையைப் பிரித்துத்தான் மின் அலையாக மனிதன் காண்கின்றான்.

இதில் உள்ள உண்மையை உணர்த்துவதன் நிலை என்ன…?

சூரியனிலிருந்து ஒளி அலைகள் வருகின்றது. உலகம் சுழன்று ஈர்த்து வெளிக் கக்கும் நிலையினால் ஒளியும்… இயற்கையும்… ஜீவ நீரும் பெறுகின்றோம்..! என்ற உண்மையை உணர்ந்து வாழும் மனிதன் இதிலுள்ள கருத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய “உண்மை இரகசியத்தை” அறியவில்லை.

சூரியனிலிருந்து வெளிப்படும் அமிலக் குண சக்தி நேராக நம் பூமியில் மட்டுமா வந்து படர்கிறது…? அப்படிப் படரும் ஒளி சக்தியானது பூமியின் மேல் செல்லச் செல்ல எந்த நிலையில் உள்ளது…?

இந்தப் பூமிக்குச் சீரான ஒளி அலை பெறக்கூடிய தன்மைக்கு நம் பூமிக்கு மனித ஆத்மாக்கள் கருத்தோன்றி வளர்ச்சி நிலை பெற உதவிய
1.வியாழனின் சக்தி அலையின் உதவி இல்லா விட்டால்
2.இன்றைய பூமியின் ஜீவத் துடிப்பான நீரின் அமிலத் தன்மையே இல்லை.

ஒலியும் ஒளியும் கலந்து ஆவியாகி… நீராகி.. நிலமாகி.. ஜீவ சக்தியைப் பெற்றுள்ள நம் பூமியின் ஜீவ குண நிலை பெறப் பல பல மண்டலங்களின் அமிலச் சக்தியும் துணை புரிகின்றது.

இஜ்ஜீவனுக்கு ஒளி அலைகளை ஈர்க்கும் தன்மையும் வேண்டும். காந்த மின் அலை (ELECTRO MAGNETIC WAVES) என்று பல நாட்களாக உணர்த்தி வருகின்றேன். இக்காந்த மின் அலைக்குத் துடிப்பு எங்கிருந்து வந்தது…?

காந்த மின் அலை எப்படி ஏற்பட்டது…?

ஒரு அமில குணம் படர்ந்த தன்மையில் மற்றொரு அமில குணம் அதிலே மோதும் பொழுது ஏற்படும் “ஒலியின் அதிர்வு ஈர்ப்பினால்…”
1.இக்காற்று மண்டலத்தில் படர்ந்துள்ள சூரியனின் குண அமில சக்தி மோதுண்டவுடன்
2.இழுக்கும் ஈர்ப்பு நிலை கொண்டு ஜீவ துடிப்பான ஆவி நீர் சுரந்து
3.இவ்விழுவையின் ஒளி ஏற்பட்ட பிறகு துடிப்பு நிலை கொள்கின்றது.

இத்துடிப்பின் ஈர்ப்பு கனம் கொண்டு பூமியின் ஈர்ப்பில் காற்று மண்டல முந்தைய பாடத்தில் உணர்த்தியதைப் போல்
1.இந்தப் பூமியின் சுழற்சி ஓட்டத்தில் வடிகட்டி ஈர்க்கும் நிலை என்று உணர்த்திய நிலையில் மோதுண்டு
2.இஜ்ஜீவ ஒளியைப் பூமி பெற்று
3.பூமியின் ஈர்ப்பில் உறிஞ்சி வெளிப்படுத்தும் ஒளி அலையைத் தான்
4.சூரியனின் ஒளி பிம்பமாக நாம் காண்கின்றோம்.

பனிரெண்டு மணி உச்சி வெயிலில்… நம் பூமி எந்த இடத்தில் சூரியனின் ஒளி அலையை எந்த டிகிரிக் கோணத்தில் பெறுகின்றதோ… அதன் நேர் கோட்டில் பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூர விகிதத்தில் “இதே அளவு உஷ்ண அலையும் வெளிச்சமும் இருக்காது…!”

விஞ்ஞானிகளும் இதைக் கண்டு ஆராயட்டும்…!

பூமியின் நிலைக்கும்… பூமிக்கு மேல் செல்லச் செல்ல குளிர்ந்த நிலை தான் அதிகமாகக் கூடியிருக்கும். பூமியின் சுழற்சி ஓட்டத்தில் தன்னைத் தானே பூமி சுழன்றோடும் சக்தி ஈர்ப்பினால் பூமியே தான் சூரியனின் ஒளி அலையைக் கிரகித்து ஒளி பெற்று ஓடுகின்றது.

விஞ்ஞானத்தில் திரவங்களைச் செலுத்தி வாகனங்களை எப்படி ஓட்டுகின்றார்களோ அதைப் போல் தான் நம் பூமியும் தன்னைத் தானே அமில குணத்தின் உணவை எடுத்து சூரியனின் சக்தி ஒளியை நுண்ணிய காந்த அலையாக ஈர்த்து வளர்த்து ஓடிக் கொண்டுள்ளது.

மற்ற ஒவ்வொரு மண்டலமும் இதன் இயற்கைக் கதியில் தான் செயல் கொள்ளுகிறதேயன்றி
1.அதனதன் ஈர்ப்பு இல்லா விட்டால் ஜீவன் இல்லை…!
2.சூரியனாக இருந்தாலும் சரி.. சூரியனுக்கே சக்தி தந்த வியாழனாக இருந்தாலும் சரி…
3.சூரியனைப் போன்று சூரியனைக் காட்டிலும் வளர்ந்த எக்கோளமாக இருந்தாலும் சரி…
அதனதன் ஈர்ப்பில் வளர்ச்சி கொண்டு வாழ்வது தான் ஒவ்வொரு நிலையும்.

இந்த உண்மையின் நிலையை மனித உணர்ந்திடல் வேண்டும்.

அறிவாற்றலில் செயல் கொள்ளும் மனிதன் தன் ஞானத்தின் ஈர்ப்பை… ஜீவத் துடிப்பு கொண்ட உயிராத்மாவின் ஈர்ப்புக்கு… தன் உயிராத்மாவிற்கு வேண்டிய நல்ல சக்தியாக… எவ்வமில குணம் உள்ளதுவோ… அதன் ஜீவ அலையை நுண்ணிய காந்த ஈர்ப்பை தான் எடுக்கும் சுவாசத்தினால் எடுத்துச் செயலாக்கிட முடியும்.

உடலுக்கு உணவு கொடுத்து வளர்த்தாலும் உடல் அழியக்கூடியது. ஆனால் உயிரான்மாவிற்கு உகந்த மின் காந்த ஒளியை நாம் பெற்றால் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு விண்ணிலே ஏகாந்தமாக வாழலாம்.

அப்படி வாழ்பவர்கள் தான் சப்தரிஷி மண்டலமும்… துருவ நட்சத்திரமும்…!

ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

light worlds

ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நம் பூமியில் பல காலங்களாகவும் இன்றைய காலங்களிலும் பலர் பல உண்மை ஆராய்ச்சி நிலையில் பல சாதனைகளை வெளிப்படுத்திக் கொண்ட தான் வந்துள்ளார்கள்… அதே வழித் தொடரிலும் வாழ்கின்றனர்.

ஆனால்..
1.மனிதன் பல புதிய புதிய நுண்ணலை ஈர்ப்பால் பல செயல்களைச் செய்கின்றான் என்றாலும்
2.அந்த மனிதன் தன் ஆத்ம உயிரணுவிற்கு.. அந்த ஒளியின் பால் செல்வதற்குகந்த வழி ஆற்றல் பெறவில்லை.

பல மேதைகள் உண்டு…! ஆனாலும் அந்த மேதைகளினால் எதன் அடிப்படை ஆராய்ச்சி ஈர்ப்பில் தன் எண்ண ஞானத்தைச் செலுத்தி வழி பெறுகின்றனரோ… அதன் தொடர் ஞானம் ஒன்றின் பால் மட்டும் அவர்களின் ஈர்ப்பில் சுவாசம் உள்ளதனால்… அதன் சுழற்சி வட்டத்தில் மட்டும் தான் உள்ளனர்.

ஆக… உடலை விட்டு ஜீவன் பிரிந்த பிறகும் அதே எண்ண செயலுக்காகப் பிறிதொரு ஜீவ ஆத்மாவுடன் தொடர்ச்சிப்படுத்திக் கொண்டும் அல்லது மீண்டும் ஒரு ஜென்மத்திற்கு வருகிறார்களேயன்றி தன் ஆத்ம ஜீவ உயிரணுவின் வளர்ச்சியில் ஒளி அலையுடன் கலக்கவிடும் நிலை எய்துவதில்லையப்பா.

இங்கே போதிக்கப்படும் நிலைகள் கொண்டு…
1.ஒவ்வொருவரும் எண்ணத்தால் எடுக்கும் சுவாசத்தில் நுண்ணிய ஈர்ப்பலையின் நினைவைச் செலுத்தி
2.சக்தி கொண்ட மகான்களின் ஒளியுடன் நம் எண்ண நுண்ணிய அலை பதியும் பொழுது
3.அதன் தொடரிலிருந்து அவர்களின் ஒளி அலையை நம் உயிராத்மா ஈர்க்கக்கூடிய வழித் தொடர் பெற்று
4.இந்த உடலில் உள்ள பல கோடி உயிரணுக்களும் அம்மகான்களின் தொடர் அலையுடன் கலக்கும் வழி நிலை பெற்றால்
5.இன்று இப்பிரபஞ்ச ஆதி சக்தியின் வளர்ச்சியில் வளர்ந்துள்ள பல கோடிக் கோளங்களின் வளர்ச்சி ஏற்படுத்திய
6.சப்தரிஷிகளின் ஒளி வட்டம் போல் நம் நிலையும் நிலைத்து நிற்கும்

எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு தான் ஒவ்வொரு வளர்ச்சியுமே. மனிதனுக்கு மட்டுமல்ல.. மற்ற எல்லா நிலைகளுக்குமே…!

1.மனிதனுக்கு எப்படித் தன் எண்ணத்தின் சுவாச ஈர்ப்பை இந்த உடல் பிம்பம் பலவாக உள்ள நரம்புகளில் ஈர்த்து
2.இந்த உடல் முழுமைக்குமே எண்ணத்தின் சக்தி பிம்பம் பரப்புகின்றதோ
3.அதைப் போன்று ஜீவன் கொண்ட தாவரங்களுக்கும் மற்ற மற்ற எல்லா இயற்கை வளங்களுக்குமே
4.இந்த ஈர்ப்பலையை உறிஞ்சக்கூடிய நரம்புகள் உண்டு.

அமிலத்தின் ஒளி சக்தியை ஈர்த்து ஜீவன் பெற்று துடிப்பு நிலை ஏற்படும் நிலையிலேயே “ஈர்க்கும் காந்த நரம்புகள்…!” வளர்ச்சி பெறுகின்றன.

ஆனால் மனிதச் சுவாச ஈர்ப்பினால் எந்த ஈர்ப்பின் நிலையில் மனிதன் உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள இரத்தத்தில் அவன் எடுக்கக்கூடிய எண்ணத்திற்கொப்ப எல்லாம் அவன் உடலில் உள்ள இரத்தத்தில் வளரும் ஜீவ அணுக்களின் நிலையும் கலந்து விடுகின்றது.

ஒரு நிலை கொண்ட சுவாசம் கொண்டவை தாவரங்கள்.
1.மனிதனையும் மற்ற மிருகத்தையும் ஒத்த இரத்த ஓட்டச் சுழற்சி இல்லாமல்
2.நரம்பின் ஈர்ப்பினாலேயே ஒரு நிலையில் காந்த சக்தியையே ஈர்க்க வல்லது தாவரம்.

பலவாக உள்ள எண்ணக் கலப்பில் பலவற்றையும் எண்ணி வாழும் மனிதன் தன் எண்ணத்தில் எடுக்கும் ஒவ்வொரு நிலையினாலும் அவன் பிம்ப உடலை அவனே பல நிலைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றான்.

இந்த நிலையிலிருந்து எல்லாம் மீண்டு… பல நிலைகள் மோதிடும் நிலையை நம் எண்ணத்தில் பதிய விடாமல் “சமமான நிலையில்” நம் எண்ண ஈர்ப்பை வழிப்படுத்திடல் வேண்டும்.

ஆக வாழ்க்கைக்குகந்த செயலுடன் இந்த எண்ணத்தை ஒவ்வொரு ஆத்மாவும் தன் பிறப்பின் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆண்டவனின் சக்தியில் அவதரித்த…
1.ஆண்டவன் என்ற உயிராத்மாவுடன் வாழும் நாம்
2.அந்த ஆண்டவனுக்கு உகந்த காணிக்கையாக நம்மை நாமே ஆண்டவனாக்கிக் கலப்பது தான்
3.மனித ஆத்மாவின் எண்ண வளர்ச்சியின் வழித் தொடர் இருந்திடல் வேண்டும்.

அது தான் ஆண்டவனுக்கு நாம் தரும் காணிக்கை.

பூமி பிளந்து சீதா மண்ணுக்குள் போவதன் காரணம் என்ன…?

Astral light bodies

பூமி பிளந்து சீதா மண்ணுக்குள் போவதன் காரணம் என்ன…?

 

லவா குசா தன்னுடைய குழந்தைகள் தான் என்று தெரிந்ததும் இராமன் சீதாவிடம்… “நாம் இனிமேல் சேர்ந்து வாழ்வோம்..!” என்று சொல்கிறான்.

சேர்ந்து வாழ்வது என்பது என்ன…?

எதன் சுவையோ அதனின் உணர்ச்சி தான் இயக்கும். ஆக மீண்டும் அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டால் அதன் வழி வாழலாம்.

பல விதமான உணர்வுகள் ஆகி.. “இந்த வாழ்க்கையில் பட்டது போதும்…!” என்று இந்தப் பூமா தேவி என்ன செய்கின்றது…?

நெருப்பில் புகுந்து வந்த பின்… பூமா தேவி சீதாவிடம் “நீ பட்ட அவஸ்தை போதும்… என்னிடமே நீ வந்து ஐக்கியமாகிவிடு…!” என்று அழைப்பதாகக் காவியத்தில் கொடுத்துள்ளார்கள்.

மனித உடல் பெற்ற நிலையில் இந்த உணர்வின் தன்மை வந்து வாழ்க்கையில் பல பல நிலைகள் ஆகி
1.எந்தச் சுவையின் (குணங்கள்) தன்மை ஈர்ப்பாக ஆனதோ
2.அதிலே அந்த மகிழ்ச்சியின் உணர்வுகள் ஆன பின்
3.எத்தனை எதிர்ப்பு நிலைகள் வருகின்றது…?

உழுது பயிரிட்டு அதிலே விளைந்ததை உணவாகச் சுவைமிக்க உணர்வின் தன்மை உட்கொண்டு மனித உடலில் வளர்த்த பின் எந்த மண்ணிலே விளைந்ததோ அந்த மண்ணின் உணர்வைப் பெற்று உடல் மண்ணுக்குள் தான் செல்கிறது.

ஆனால் அந்த உணர்வின் தன்மை ஒளியாகும் உணர்ச்சிகளை வளர்த்துக் கொண்ட பின் எங்கே செல்கிறது…?
1.உயிர் என்ற விஷ்ணுவின் தன்மை பெற்று
2.வெளியே வந்து பளீர்…! என்று “மின்னும் சக்தியாகப் பெறுகின்றது…”
3.அவனிடம் போய்ச் சொர்க்கம் அடைகின்றது.

இந்த உடலின் அமைப்பு உருவானதைத் தெளிந்து கொண்ட நிலையில் பூமா தேவி.. சீதா படும் அவஸ்தையைப் பார்த்து நீ என்னுடன் வா…! என்று பூமி பிளந்து தனக்குள் இழுத்துக் கொண்டு போகின்றது.

எவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள் காவியத்தை…! நன்றாக யோசனை செய்து பாருங்கள்…!

ஒரு உடலில் நோயின் தன்மையை பார்த்து அட பாவமே…! என்று அதனுடைய வலிமை பெறப்படும் பொழுது “சிவ தனுசு…”
1.நாம் அவனைக் காக்க எண்ணுகின்றோம்.
2.மீண்டும் உடலின் இச்சைக்கே செல்கின்றோம்.

சிவ தனுசை எடுத்தால் உடல் பெறும் உணர்வுகளே வளரும். நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியாது…!

எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்றுத் தீமைகளை நீக்கிடும் உணர்வின் தன்மையை இருளை நீக்கி ஒளியின் தன்மையாகப் பெற்றது தான் துருவ நட்சத்திரம்.

உயிரின் இயக்கம் வெப்பம் “விஷ்ணு” என்ற நிலையில் அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.தீமையை நீக்கிடும் அந்த அருளைப் பெறுவேன்..! என்று
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எண்ணி எடுத்துக் கொண்டால் அது “விஷ்ணு தனுசு…”
3.நாம் அங்கே சொர்க்கம் அடைகின்றோம்.

விஷ்ணு இலட்சுமியிடம் கேட்கின்றது. நீ உலகை அறிய விரும்பினாயே..! நீ பார்… எத்தனை தொல்லைகள் வருகிறது என்று…?

நமது எண்ணத்தால் இந்த மனிதனின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள் இருக்கிறது…? என்பதனைக் காட்டியுள்ளார்கள்.

இதிலிருந்து நாம் விடுபட்டு உயிருடன் ஒன்றி இனி பிறவியில்லா நிலை என்ற சொர்க்க நிலையை நாம் அடைய வேண்டும்.

1.இந்த உடல் வாழ்க்கையில் வந்த தீய வினைகள் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்…!
2.அதை விடுத்து விட்டு உயிரான விஷ்ணு என்ற உணர்வை நாம் எடுத்து வளர்க்கும்படி உணர்த்துகின்றார்கள்.

ஆகவே அந்த உணர்வின் அறிவாக நமக்குள் வளர்த்துக் கொண்டால் பிறவியில்லா நிலையை அடைய முடியும் என்பதனைத் தான் இராமாயணத்தில் தெளிவாக கூறப்படுகின்றது.

இந்த அர்த்தமே நாம் தெரியாதபடி வேறு விதமாக நாம் எங்கேயோ கொண்டு போகின்றோம். மக்களுக்கு இராமாயணத்தைப் பற்றி ஒவ்வொருவரும் நீங்கள் தெளிவாக்கிடல் வேண்டும்.

கர்ப்பிணியான சீதாவை இராமன் காட்டிற்குள் விடச் சொல்கிறான்… வான்மீகியோ ஞானத்தைப் போதிக்கின்றான் ஏன்…?

Valmiki

கர்ப்பிணியான சீதாவை இராமன் காட்டிற்குள் விடச் சொல்கிறான்… வான்மீகியோ ஞானத்தைப் போதிக்கின்றான் ஏன்…?

 

இராமன் சீதாவை இராவணனிடமிருந்து மீட்டு அரண்மனைக்குக் கூட்டி வருகின்றான். சிறிது நாள் கழித்து சீதா கரப்பமாகிறது. மக்கள் எல்லாம் கூடி இராவணனிடம் இருந்து சீதா வந்ததால் அந்தக் கரு தான் உருவாகியிருக்கும் என்று சொல்கின்றனர்.

மக்களை ஆட்சி புரிகின்றான்.. இருந்தாலும் இதைக் கேள்விப்பட்டவுடன் மக்கள் எல்லாம் இப்படிப் பேசுகின்றார்களே..! என்று வேதனைப்படுகின்றான் இராமன்.

சுவை (சீதா) என்ற உணர்வுகள் இராமனை ஆட்சி புரிந்தாலும் அதே சமயத்தில் “மக்களின் வலு வரப்படும் பொழுது” உண்மையை அறிய முடியாதபடி… சீதாவைக் காட்டுக்கு அனுப்புகின்றான்.

கர்ப்பமாக இருக்கும் சீதாவைக் காட்டில் அனாதையாக விட்டு விடுகின்றான். அங்கே ஒரு பெண் இதைப் பார்த்து… “கர்ப்பமாக இருக்கிறது… தனியாக இருக்கிறதே…!” என்று அருகில் இருக்கும் வான்மீகியிடம் கொண்டு விடுகிறது.

வான்மீகி தான் இந்தக் காவியத்தைப் படைத்தவன். இயற்கையின் உணர்வுகள் உணர்ச்சிகள் எப்படி வருகிறது…? நாராயணன் திரேதாயுகத்தில் சீதாராமனாக எப்படித் தோன்றுகின்றான்…? என்ற மூலக் கூறுகளை எல்லாம் கூறியவன் இந்த வான்மீகி தான்.

அதன் உணர்வின் தன்மை
1.எது சுவையைக் கவர்ந்து கொள்கிறதோ சூரியன்
2.அது உடலுக்குள் சென்ற பின் அதனின் உணர்ச்சியின் இயக்கமாக
3.இந்தச் சுவை எதுவோ உணர்ச்சியின் எண்ணங்களாக இதே சூரியன் ஒரு உடலை இயக்குகின்றான் என்ற நிலையைத் தெளிவாகக் கூறுகின்றான் அந்த வான்மீகி.

நன்றாக யோசனை செய்து பாருங்கள். அவ்வளவு மூலங்களும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். இவ்வளவு தெளிவாகக் கூறியிருந்தாலும் இன்று அவரவர்கள் இஷ்டத்திற்கு இராமாயணத்தை அப்படியே பகுந்து பார்க்கின்றார்கள்.

அனாதையாக இருக்கும் சீதா கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொள்கிறான் வான்மீகி.
1.வெறுக்கும் நிலை இங்கே வந்தால் – அதே உணர்வை இந்தத் தாய் நுகர்ந்தால்
2.இராமனைப் பழி தீர்க்கும் உணர்வாகத் தான் வரும் என்பதை வான்மீகி அறிந்து கொள்கின்றான்.

அன்றைய அரசர்கள் என்ன செய்வார்கள்…?

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது எதிரி நாட்டு அரசன் இந்த மாதிரிச் செய்கின்றான்..! என்று போதிப்பான். குருகுலம் என்ற நிலைகளை வைத்து அடுத்த அரசன் இப்படிச் செய்கிறான்.. நம் நாட்டுக்கு இதைச் செய்கிறான்… நம் மக்களுக்கு இதைச் செய்கிறான்… அவனை இப்படி அடக்க வேண்டும்…! என்று கர்ப்பிணியை உட்கார வைத்தத் தன் அரச சபையின் நிலைகளை எல்லாம் எடுத்து ஓதுவான்.

அந்தத் தாய் இதை எல்லாம் கேட்ட பின் கருவிலிருக்கக்கூடிய தன் குழந்தைக்கு
1.இந்த நாட்டை எப்படி ஆட்சி புரிவது…?
2.எதிரியை எப்படி வீழ்த்துவது..? என்று அந்த இளமைப் பருவம் வரும் பொழுதே
3.வில் வித்தைகளை எடுக்கும் பொழுதே எதிரியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வை வளர்ப்பார்கள்.

இதனின் வலிமையின் தன்மை கொண்டு அவன் எதிரியை வீழ்த்தச் செல்வான். “சத்ரிய தர்மம்” என்பது அரசர்கள் பிறரை வீழ்த்தித் தான் வாழத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது தான்.

நம் உடலுக்குள் ஒரு தீமை வந்துவிட்டால் அது அந்த உணர்வின் தன்மையை வீழ்த்தினால் தான் நல்ல குணங்கள் நிலைத்திருக்கும். எப்படியோ மருந்தைக் குடித்துத் தானே நம் நோய்களை எல்லாம் போக்குகின்றோம்.

இந்த உணர்வின் தன்மையை இயக்குவது யார்…? பத்தாவது நிலையை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்தி “நம் உயிர் தான்…!”

ஒரு கசப்பான உணவாக இருந்தாலும் சகித்துக் கொண்டு சாப்பிடுகின்றோம் அல்லவா..! அதே சமயத்தில் உடலில் வேதனை என்ற உணர்வுகள் நோயாக வந்த பின்
1.அடுத்து நம் உடலில் ஊசியைக் கொண்டு குத்தினாலும்
2.கசப்பான மருந்தை மருத்துவர் கொடுத்தாலும்
3.”எப்படியோ சாப்பிட்டு அந்த நோயைப் போக்க வேண்டும்…: என்று நினைக்கின்றோம் அல்லவா…!

இதைத் தான் அங்கே வான்மீகி காட்டுகின்றான்…!

கர்ப்பமாக இருக்கப்படும் பொழுது…
1.மக்களின் உணர்ச்சியால் உந்தப்பட்டு உண்மையின் உணர்வை அறியாதபடி
2.தனக்குள் சீதா என்ற சுவையைப் புண்படும்படிச் செய்து விட்டனர்.
3.ஆனால்… அதிலே வரும் கருவை அதை உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காக
4.சீதாவின் மனதை மாற்றி அருள் உணர்வைச் செவி வழி ஊட்டி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கூட்டி
4.கருவிலே வளரும் குழந்தைக்கு ஞானத்தை ஊட்டுகின்றான் வான்மீகி.

இந்த ஞானத்தை ஊட்டிய பின் லவா.. குசா.. என்று பிறக்கின்றனர். இராமனின் செயலும்… சீதாவின் செயலும்… இயற்கையின் செயலைப் பற்றியும்…! அவர்கள் இருவரும் பாடல்களாகப் பாட்டுகின்றனர்.

இராமன் இதைக் கேட்கின்றான்.

மக்களின் பேச்சைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு “இந்தத் தப்பைச் செய்தேனே…!” என்று உண்மையை உணர்கின்றான்.

ஆகவே சீதாராமா…!
1.எதன் உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ
2.நம் வாயிலிருந்து சொல்லாக வந்தாலும் அதையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
3.அதே உணர்வின் நினைவு வந்து… உணர்வின் தன்மை உயிரில் உணர்ச்சிகள் பட்டு
4.அந்தச் செயல்கள்தான் படுகின்றது..!

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

நாகம் தன் கண் ஓளியின் நுண்ணிய அலையின் ஈர்ப்பால் மாணிக்கக்கல்லை வளர்ப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ruby-eyes and snake

நாகம் தன் கண் ஓளியின் நுண்ணிய அலையின் ஈர்ப்பால் மாணிக்கக்கல்லை வளர்ப்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அமில குணமான பிம்ப சிவனுக்கு… அதன் வளர்ச்சிக்கு… ஜீவ குணமான காந்த ஒளி சக்தி ஈர்ப்பிற்கு வந்த பிறகு தான் அவ்வமில குணத்திற்கே ஜீவனும் அதன் வளர்ச்சி நிலையும் ஏற்படுகின்றது.

அமில பிம்பத் திடப்பொருள் இல்லாவிட்டால் காந்த ஒளி சக்திக்குச் சக்தியில்லை. அச்சக்தி நிலை படர்ந்து பிம்ப அமிலம் ஜீவன் பெறாவிட்டால் இதன் ஜீவ வளர்ச்சியும் இல்லை.

இதன் குண அடிப்படை தான் நாமும்… எல்லாமில் எல்லாமுமே…!

இதன் வழித் தொடர் கொண்டு வளர்ந்து வாழும் நாம்…
1.நமக்கு இந்த மனித உடல் பெறக்கூடிய ஆற்றல் பெற எத்தனை கோடி ஆண்டுகள் ஆகின்றன…? என்ற உண்மையை உணராமலும்
2.உயர்வின் வழிக்குச் செல்லாமலும் நம்மை நாமே அழித்து வாழ்கின்றோம்.

மாங்கனி அதன் முற்றிய நிலை பெற்றவுடன் அதன் வண்ணமும்… வண்ணத்திற்கேற்ப மணமும் உள்ள கனியின் சுவை இனிமை எப்படி உள்ளது..?

குறுகிய கால வளர்ச்சி முற்றலிலே
1.முற்றிய நன்கு பழுத்த மாங்கனியின் வண்ணத்தையும் மணத்தையும் கண்டவுடன்
2.”சுவை நிறைந்த கனி…!” என்று எண்ணி உண்ணத் துடிக்கின்றோம்.

இதன் நிலை போல் மனிதனின் வளர்ச்சி நிலை இருந்து விட்டால் மனிதனின் உடல் பிம்ப அழகும்.. எண்ண மணமும்… இனிமையும் குண தேவனின் சக்தியாக சுடர்விடுமப்பா…!

பிஞ்சில் மாங்கனி துவர்ப்பாகவும் புளிப்பாகவும் தான் உள்ளது. அதைப் போன்று ஆரம்ப வளர்ச்சியில் அறியா மனிதனாக இருந்தாலும் தன் அறிவாற்றலை ஞானத்தின் மேம்பாட்டில் முற்றிப் பழுத்து இனிமை கொள்ள வேண்டும்.

அமில ஈர்ப்பின் வழித் தொடரினால் நம் பூமியின் எண்ணற்ற சக்திகள் நிறைந்துள்ளன. பல வண்ணங்களையும் மணங்களையும் சுவைகளையும் ஆரம்ப காலத்திலேயே பூமி வளர்ச்சி கொண்டு வழி வரவில்லை.

ஒவ்வொன்றின் வழித் தொடர் அமில குணத்தின் ஈர்ப்பு சக்தியின் “சிவ சக்தி என்ற சிங்காரக் கலவை ஈர்ப்பில் தான்..” இன்று பூமியில் நிறைந்துள்ள இயற்கை வண்ணமும் சுவையும் மணமும் உள்ளன.

பல வண்ணங்கள் புஷ்பங்களுக்கு எப்படி வந்தது..? கனிகளுக்கு சுவை எப்படி வந்தது…?

படர்ந்த அமில பிம்பம் அதன் ஈர்ப்பில் காந்த ஒளி சக்தி பெற்றவுடன் “வண்ணத்துப் பூச்சி” என்ற பல வண்ணங்கள் நிறைந்த அப்பூச்சி ஜீவன் பெறுகிறது.

இப்பொழுது உணர்த்துவது பூமி தாவர வளர்ச்சி ஏற்பட்ட நாட்களில் ஆரம்பத்தில் வந்ததன் நிலை.

இந்த வண்ணத்துப் பூச்சி சில தாவரங்களின் மேல் தன் அமிலத்தை… அமிலம் என்பது தன் கழிவின் முட்டையை இட்டதினால்.. அதிலிருந்து அதன் அமில சுவாசம் படர்ந்த பிறகு வண்ணப் புஷ்பங்கள் கிடைத்தன.

1.அந்த வண்ணத்தின் பூவிலிருந்துதான் தேனீக்கள் ஜீவன் கொண்டன.
2.தன் ஜீவனுக்குகந்த ஆகாரமாக அந்தப் பூவிலிருந்தே தன் ஆகாரத்தை உறிஞ்சி எடுத்துத் தேனீக்கள் வளர்ந்தன.

தேனீக்கள் இல்லாவிட்டால் “சுவை நிறைந்த கனி…” எதுவுமே இல்லை…!

இப்படி உலக இயற்கையே ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு… ஒன்றெடுத்த அமிலம் ஜீவன் கொண்டு… அதன் ஜீவன் மாற்றம் கொண்டு பிறிதொரு ஜீவனும் வளர்ந்து நம் பூமி ஓடிக் கொண்டுள்ளது. இந்த அமிலத்தின் நிலையிலிருந்து தான் எல்லா சக்திகளும் ஜீவன் பெறுகின்றன.

ஆயிரம் காலங்கள் ஒரு நிலை கொண்ட நுண்ணிய ஈர்ப்பு அலையின் சக்தியினால் நாகம் மாணிக்கக்கல்லைத் தன்னுள் வளர்த்துக் கொள்கின்றது.

மாணிக்கக் கல்லை வளர்த்துக் கொள்ள நாகம் எப்படி வழிப் பெற்றது…? மற்ற ஜீவன்களைக் காட்டிலும்
1.நாகத்தின் கண் ஒளி ஈர்ப்பு
2.நுண்ணிய மின் அலையை ஈர்க்கவல்ல செயல் கொண்டது.
3.நாகம் ஒரு பொருளைப் பார்த்தால் அப்பொருளின் பிம்பம் அதன் கண்ணிலே
4.பல மணி நேரத்திற்குப் புகைப்படத்தில் பதிந்துள்ளதைப் போல் பதிந்திருக்கும்.

சிங்கத்தின் நிலையும் ஏறக்குறைய நாகத்தின் ஈர்ப்பலைக்கு ஒத்தது தான். ஆனாலும் அதன் வளர்ச்சி நிலையில் நாகத்தைப் போன்று நுண்ணிய ஈர்ப்பின் பதிப்பு இல்லாமல் சிங்கத்தின் துடிப்பு ஆக்ரோஷத்தின் நிலையால் வளர்ச்சி பெறவில்லை. காந்த ஈர்ப்பின் ரசமணியின் அபரிதமான ஒளி ஈர்க்கும் கண்கள் சிங்கத்தின் கண்கள்.

இதனை எல்லாம் உணர்த்தும் முறை எதற்கு..?

நுண்ணிய ஈர்ப்பலையின் சக்தி அமிலங்கள் நிறைந்துள்ள பல பிராணிகள் மிருகங்கள் இருந்தாலும்… மனிதனை ஒத்த அறிவாற்றலும் அங்க அவயங்களும் பெறாததினால் அவற்றின் நிலை புரியாமல் சென்று விட்டது.

மனிதனுக்குச் செயலாற்றும் திறமை கொண்ட அங்க அவயங்களும் அறிவின் வளர்ச்சியும் உள்ள பொழுது இந்நுண்ணிய ஈர்ப்பலையை
1.சூரியனின் ஒளி அலையிலிருந்து – பலவாக நிறைந்துள்ள இந்தப் பூமியின் அமில குணத்தின் உதவியினால்
2.மனிதன் பல எண்ணத்தில் தன் ஜெபத்தைச் சிதறவிடாமல்
3.நுண்ணிய ஈர்ப்பலையை தன் எண்ண ஈர்ப்பில் செலுத்தும் பொழுது அவ்வெண்ண ஈர்ப்பே சுவாசமாக
4.காற்றில் உள்ள தன் எண்ணத்திற்குகந்த ஈர்ப்பு குண நுண்ணிய அமில சக்தியைத் தன் உடல் முழுமைக்கும் பரப்பச் செய்கின்றது.

இவ்வெண்ணத்தை “ஒரு நிலைப்படுத்துங்கள்…!” என்பதன் பொருள் இது தான்.

“ஒரு நிலை…” என்பது ஒன்றின் பால் உயர் ஞான எண்ணத்தைச் செலுத்தி
1.அந்த ஒளி அமில குணத்தை நுண்ணிய ஈர்ப்பாக
2.நம் சுவாசம் எடுக்கும் வழி நிலை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

gate of heaven

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்… அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ…? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்…?

அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.

அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.

ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.

ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.

ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன…?
முதலிலே சூரியன்…
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்…
நான்காவது கண்கள் கண்ணன்.

துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்

ஆறாவது நிலை – வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது…?

1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது… பரசுராம்…! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.

பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து நரசிம்மா… (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.

தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,

ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது… பறந்து செல்கிறது…
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது…? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.

இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்…!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது…? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.

இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி… பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இது தான் ஏகாதசி பத்தாவது நிலை என்பது.

சித்தர்களினால் மறைத்து வெளிப்படுத்தப்பட்ட “சிவசக்தி” ரூபத்தின் இரகசியம்

vibhoodi siva

சித்தர்களினால் மறைத்து வெளிப்படுத்தப்பட்ட “சிவசக்தி” ரூபத்தின் இரகசியம்

இன்னும் மனிதன்…
1.விதை முதலா…? செடி முதலா…?
2.கோழியிலிருந்து முட்டை வந்ததா…? முட்டையிலிருந்து கோழி வந்ததா…? என்ற தர்க்க வாதத்திலும்
3.புராணங்களில் படைத்த காவியங்களை அதன் மையக் கருவைப் பிரித்து உணரும் ஆற்றல் இல்லாதும் வாழ்கின்றனர்.

அறிவாற்றலும் செயல் அவயங்களும் வளர்த்துக் கொண்ட மனிதன் தன் வளர்ச்சியை உணராமலும்… வளர வேண்டும் என்ற நிலையற்றும்… இயற்கையின் உண்மை வளரும் வளர்ச்சியை அறியாமலும்… வாழ்கின்றான்.

குணத்திலும் பல நிலைகள் உண்டு. மனத்திலும் பல நிலைகள் உண்டு. ஒலியிலும் பல உண்டு. இதன் அடிப்படை வளர்ச்சி பல கோடிக் கோடி உண்டு.

நம் பூமியின் ஜீவ சக்தியே காற்றும்.. ஒலியும்… நீரும்… தான். இஜ்ஜீவ சக்தி இப்பூமியைச் சுற்றி இருக்கும் காற்று மண்டலத்திற்கு அப்பால் இல்லை.

இந்தப் பூமிக்கு ஜீவன் பூமியேதான் எடுத்துக் கொள்கின்றது. பால்வெளி மண்டலத்தில் அந்தந்த இடங்களில் உள்ள அமில குணங்களின் சுழற்சி கொண்ட சீதோஷ்ண நிலை படர்ந்துள்ளது.

நம் பூமியின் காற்று மண்டலத்திற்கப்பால் உள்ள பால்வெளி மண்டலத்திற்குச் சென்று விட்டால் நம் பூமியில் உள்ளதைப் போன்ற ஜீவ சக்தி மாறு கொள்கின்றது.

“ஜீவ சக்தி…” என்பது பூமியின் சுழற்சியில் பூமி ஈர்த்து வெளிக் கக்கும் ஆவியினால் – அந்தக் காற்று மண்டலத்தின் சுழற்சியில் பூமியின் சுழன்று ஓடும் ஓட்டத்தினால் இந்த ஜீவ சக்தி அமில குணம் கொண்டு ஓடுகின்றது.

பூமிக்குச் சொந்தமானது தான் பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள இந்தப் பத்துப் பதினைந்து மைல் நிலையில் உள்ள காற்று மண்டலம்.

முந்தைய வினா போன்று சக்தி பெரிதா… சிவன் பெரிதா…? என்ற வினாவும் மனிதரிடன் உண்டு. மனித ஆத்மாக்கள் உணராத முறையில்…
1.சில சித்தர்கள் தான் அறிந்ததை… உணர்ந்ததை… மறைமுகமாக்கி
2.சரி பாதி சிவனும்… சரி பாதி சக்தியுமாக…!
3.ஆண்டவனின் ரூபத்திற்கு மனித பிம்ப உருவைக் கல்லில் வடித்துக் காட்டினார்கள்.

எந்த ஒரு அமில பிம்பமும்… அமிலம் திடமாகி அந்தத் திடத்தில் எடுக்கும் ஒளி என்ற சக்தியினால் ஜீவன் கொண்டு…
1.அதன் சுழற்சியில் அமிலமும் கூடுகின்றது.
2.அமிலத்தின் வளர்ச்சியைக் கூட்டினால் அதன் ஈர்க்கும் சக்தி ஒளி அதிகப்படியாக வளர்ச்சிக்கு வருகின்றது.

நம் பூமியும் மற்ற எல்லா மண்டலங்களின் ஆரம்ப ஜீவன்… “சிவ சக்தி…” என் பிம்ப வளர்ச்சி கொண்டது தான்.
1.அமிலமான திடப் பொருள் தான் சிவனாகவும்
2.அமிலமுடன் ஈர்க்கப்பட்ட காந்த ஒளி நிலை தான் சக்தியாகவும் ஆனதப்பா…!

அமில பிம்ப சிவன் ஈர்க்கா விட்டால் சக்தியின் காந்த அலை பாய்ந்து அக்காந்த அலைக்கும் சக்தி இருக்காது. அதே போன்று அமில குண திட பிம்ப சிவத்தில் அச்சக்தி ஒளி பாயாவிட்டால் ஜீவன் பெற முடியாது.

இதன் வளர்ச்சி நிலை தான் எல்லாமில் எல்லாமாக வளர்ந்து… “வளர்ச்சி கொண்ட அண்ட சராசரங்களும் அனைத்து ஜீவ சக்திகளும்…” உருவாகி இயங்கிக் கொண்டுள்ளதப்பா…! இதில் சக்தி பெரிதா…! சிவன் பெரிதா…? என்ற கேள்விக்கு இடமில்லையப்பா…!

1.சக்தி இல்லாவிட்டால் சிவன் இல்லை.. சிவன் இல்லாவிட்டால் சக்தியும் இல்லை.
2.பிம்பம் தான் “சிவம்..” பிம்பத்தின் ஜீவன் தான் “சக்தி…”
3.சக்திக்கும் ஜீவனுக்கும் அப்பாற்பட்ட ஆதி சக்தியின் நிலையை உணர்ந்து வளர வேண்டுமப்பா..! (அனைத்திலுமே)

சிவன் ஆணுமல்ல… சக்தி பெண்ணுமல்ல…! ஒவ்வொரு ஜீவனிலும் சக்தியும் சிவனும் இருந்தால் தான் அஜ்ஜீவன் வாழ முடியும். சித்தர்களினால் மறைமுகமாக மறைத்து வெளிப்படுத்திய நிலை தான் இந்த ஜீவ சக்தி உருவ நிலை…!

விதை முதலில் வந்ததா..? செடி முதலில் வந்ததா…? என்ற வினாவிற்கு அறிவாற்றலின் மனிதன் தன் எண்ணத்தைச் செயல்படுத்தினால் ஆரம்ப வளர்ச்சியான செடியிலிருந்து விதை…! என்ற உண்மையை உணரலாம்.