புது மனை புகுகிறோம் என்றால் அங்கே அருளைப் பெருக்கும் மனையாக அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்

புது மனை புகுகிறோம் என்றால் அங்கே அருளைப் பெருக்கும் மனையாக அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்

 

பெரும்பகுதியானவர்கள் புதிதாக்க் கட்டிய வீட்டிலே பெரிய யாகத்தை நடத்துகின்றார்கள்… அதன் மூலம் தோஷத்தை எல்லாம் போக்குகிறோம் என்பார்கள்.

நெருப்பை உண்டாக்கிப் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுவார்கள். வீட்டிற்குள் இருக்கும் மற்றவர்கள் கண்ணைக் கசக்கிக் கொண்டிருப்பார்கள். எப்படா இது முடியும்…? என்று எண்ணுவார்கள்.

காசைக் கொடுத்துத் தான் யாகத்தை நடத்துகின்றார்கள். மந்திரம் சொல்கின்றார் என்றாலும் அதை யாராவது நினைக்கின்றார்களா என்றால் இல்லை.

1.அங்கே உட்கார்ந்து இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ விதமான எண்ணங்கள் செல்கின்றது.
2.வீடு கட்டி இருப்பதைப் பார்த்த பின்… எப்படிக் கட்டி இருப்பார்கள்…? என்ற இந்த உணர்வு வரும்.
3.கடன் வாங்கிக் (லோன் வாங்கி) கட்டியிருப்பார்கள் போல என்று அடுத்தவரிடம் பேசுவார்கள்.
4.எவ்வளவு கடன் வாங்கி இருப்பார்கள்…? என்று தெரியவில்லை…!

வீட்டிற்குள் வந்தபின் இந்த நினைவெல்லாம் வருகின்றது.

நானும் வீடு கட்டலாம் என்று நினைக்கின்றேன்… முடியவில்லை…! பெண்கள் மத்தியிலே இந்த உணர்வுகளை உருவாக்கி விடுகின்றார்கள்… ஆண்களும் அதே மாதிரித் தான்.

ஆனால் புதிதாக வீட்டைக் கட்டி இருக்கின்றார்கள்
1.அதை வாழ்த்த வந்திருக்கின்றோம் என்று தெரிவதில்லை.
2.அங்கே யாகத்தை வளர்த்து அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
3.ஆனால் இங்கே இந்த யாகத்தை நடத்தி வேண்டாத்தை எல்லாம் சிந்தனை பண்ணிக் கொண்டிருப்போம்.

கண் எரிகிறது என்று ஒரு சிலர் வெளியிலே உட்கார்ந்து இருப்பார்கள். சொந்தபந்தங்கள் எல்லாம் கண்ணைக் கசக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்து இருப்பார்கள்.

ஞானிகள் நமக்குக் காட்டியது உயிர் ஒரு நெருப்பு.
1.புது மனையிலே அமர்ந்து குருநாதர் காட்டிய வழியில் அகண்ட அண்டத்தின் உணர்வுகளை இந்தப் பிண்டத்திற்குள் கொண்டு வருகின்றோம்.
2.இந்தப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றிய உணர்வின் தன்மையை உங்களிடம் செவிகளில் படும்படிப் பதிவு செய்கின்றோம்.

இதைப் பதிவு செய்த நிலையில் உங்கள் உடலில் கை கால் வலியோ மற்ற நிலைகளோ குறைந்திருக்கும். மனதில் ஒரு நிம்மதி இருக்கும்.

உபதேச உணர்வுகளை நீங்கள் காதிலே கேட்டு அதனின் மூச்சலைகள் இந்த வீட்டிற்குள் படர்ந்தால் எப்படி இருக்கும்…?

இந்தத் தியானத்தை எடுத்து
1.இந்த வீட்டிலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
2.தொழில் வளம் பெறுக வேண்டும்
3.இங்கே வசிப்போர் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் சொன்னால்
4.இந்த வீட்டிலும் பதிவாகின்றது… இந்த வீட்டுக்காரர்கள் செவிகளிலும் படுகின்றது.
5.இந்த உணர்வை அவர்கள் நுகர்கின்றார்கள்… அவர் ரத்தத்தில் கலக்கின்றது.
6.இந்த வலுவான சக்தியை நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்குக் கொடுக்கின்றோம்.

இது தான் உண்மையான யாகம் என்பது. அது புறத் தீ… இது அகத் தீ…! அகத்திற்குள் இருக்கும் தீயிற்குள் (உயிறுக்குள்) அருள் சக்தியைப் பாய்ச்சி அந்த உணர்வலைகளை ஊட்ட வேண்டும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்று நினைத்தால் அப்படி முடியாது. பாவத்தைச் சேர்க்கும் நிலையாகத் தான் ஆகும். ஆசை என்ற நிலைகள் வளரும். இருளைப் போக்கும் தன்மை நமக்குள் இருக்காது.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த இல்லத்தில் அமர்ந்து யாம் இதை உபதேசிப்பது.

ஆகவே குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் அருள் ஞானத்தைப் பெருக்கி அருள் உணர்வுகளைக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஊட்ட வேண்டும்.

1.பொறுமையுடன் பொறுத்திருந்து அருள் மணம் கமழும் வாக்கினை இந்தப் புது மனையிலே வெளிப்படுத்த வேண்டும்.
2.உலகிற்கு எடுத்துக்காட்டும் ஞானக் குடும்பமாக நாம் அனைவரும் வளர வேண்டும்.
3.அதை வளர்ப்பதற்குத் தான் இந்தப் பதிவும்… நினைவும்… மீண்டும் நினைவும்…!

இது தான் உண்மையான யாகம்.

ஆனால் யாகத்தை வளர்த்து மந்திரங்களைச் சொல்கின்றார்கள். இந்த மந்திரத்தை நாம் நுகர்ந்தால் உடலுக்குள் பதிவாகின்றது. இறந்த பின் அதே மந்திரத்தைச் சொல்லி நமது ஆன்மாவைக் கைகவல்யப்படுத்த உதவும்.

மந்திரத்தின் உண்மை நிலை இது தான்.

ஆனால் அருளைப் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் உணர்வுகளைச் செவி வழி உணர்ச்சிகளை உந்தி இரத்தத்தில் கலந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்த இல்லத்தில் பெருக்கப்பட்டு
2.இருளைப் போக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது… பகைமையை அகற்றுகின்றது.

பிறரைத் துன்புறுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள்

பிறரைத் துன்புறுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள்

 

குமாரபாளையத்தில் யாம் சுற்றுப்பயணம் செய்யும் போது பண்டரி கோவிலில் இருக்கும் பொழுது ஒரு அம்மா வரும். அந்த அம்மா “ஐய்யய்யோ எனக்கு உடம்பெல்லாம் எரியுதே…!” என்று விழுந்தடித்து ஓடி வரும்.

சாப்பிடப் போய் உட்கார்ந்தால் போதும் உடம்பெல்லாம் எரியும். அந்த அம்மாவின் வீட்டுக்காரர் இந்த அம்மா சொன்னபடியெல்லாம் கேட்பார். ஆனால் இந்த அம்மா தன் மாமியாருக்குச் சாப்பாடு போடாதபடி உதை… உதை… என்று உதைத்துச் சாகப்போகும் பொழுது இந்த நிலைகளிலே இறந்தது.

அந்த அம்மாவிற்குக் கப…கப… என்று எரியும். அங்கிருந்து விழுந்து எழுந்து ஓடும். பிறகு யாம் நீ வீட்டில் போய் உன் மாமியாரை நினைத்து அவர் உயிராத்மா நல்ல நிலைகள் பெற வேண்டும். எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி அந்த உயிராத்மா பெற வேண்டும். வீட்டில் வைத்து இதைப் போன்று எண்ணுங்கள் என்று சொன்னோம்.

1.அவ்வாறு செய்து வந்த பத்து நாட்களுக்குள் நன்றாக இருக்கும்.
2.யாம் சொன்ன மாதிரிச் செய்தவதை அடுத்து விட்டு விட்டால் மறுபடியும் விழுந்தடித்து ஓடி வரும்.
3.இது யாம் கண்ட அனுபவம். விட்டுவிட்டால், மறுபடியும் வரும்.

அனுபவத்திற்காக வேண்டி யாம் உலகம் முழுவதற்கும் சுற்றி ஒவ்வொரு மனிதனுடைய உணர்வும் எப்படி இயங்குகின்றது…? என்று ஒவ்வொரு ஊரில் தங்கியிருந்து கண்டறிந்த உண்மையைச் சொல்கின்றோம்.

அதே குமாரபாளையத்தில் எமக்குப் பல எதிர்ப்புகளும் துன்பங்களும் எப்படியெல்லாம் வந்தது…? என்று அங்கிருந்தோருக்குத் தெரியும்.

ஏனென்றால்
1.தன்னையறியாது ஒரு மனிதனுக்குள் உணர்வின் செயல்கள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று அறிந்து உணர்வதற்குத்தான்
2.யாம் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்க வேண்டியிருந்தது.
3.ஒரு மனிதனுக்குள் இருக்கும் உணர்வலைகள் எவ்வாறு இயங்குகின்றது…?
4.அதை எப்படியெல்லாம் நாம் கண்டறிவது…? என்ற நிலைகளை
5.குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு யாம் அறிந்துணர்ந்தோம்.

இதே மாதிரித்தான் ஒவ்வொரு அனுபவமும்…! ஒவ்வொரு மனித உடலுக்குள் இயங்கும் நிலைகளை அறிந்தோம்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பங்கள் அந்த நிகழ்ச்சியை நடத்திவிடும். அதிலிருந்து மீட்டுக் கொள்ளும் வழியைப் பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு மனிதரும் தங்களை அறியாமல் இயக்கக்கூடிய ஆற்றலிலிருந்து தன்னைத் தானே மீட்டுக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கிறோம். மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் பெறப் பழகிக் கொள்ளுங்கள்.

எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வந்து உங்களைத் துன்புறுத்துகின்றதோ அப்பொழுது ஆத்ம சுத்தி என்ற இந்த ஆயுதத்தைப் பயன்படுத்துங்கள்.

அப்படி ஆத்ம சுத்தி செய்யும் போது
1.உங்களைத் துன்புறுத்தும் உணர்வின் ஆற்றலை மாய்த்து உங்கள் சொல்லுக்குள் மனவலிமை பெற்று
2.யார் உங்களைத் துன்புறுத்துகின்றார்களோ நீங்கள் எடுக்கும் இந்த அருள் உணர்வுகள் அவருக்குள் ஊடுருவி
3.துன்புறுத்தும் ஆற்றலை அங்கு குறைத்து உங்களுக்குள் இன்புறச் செய்யும்.

அந்த நல்ல உணர்வின் ஆற்றலை நீங்கள் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

இதை நீங்கள் ஒவ்வொருவரும் பின்பற்றுங்கள். உங்களை நீங்கள் நம்புங்கள் தாய் தந்தையைத் தெய்வமாகக் கருதுங்கள். உங்கள் உயிரை ஈசனாக மதியுங்கள். உங்கள் உடலைக் கோவிலாக மதியுங்கள்.

ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் உங்களுக்குள் மகிழ்ச்சியும் மனவளமும் பெருகி இந்த வாழ்க்கையின் புனிதத் தன்மையை உங்களுக்குள் நீங்கள் காணலாம்.

சில நேரங்களில் யாம் அழுத்தமாக உபதேசிக்கக் காரணம் என்ன…?

சில நேரங்களில் யாம் அழுத்தமாக உபதேசிக்கக் காரணம் என்ன…?

 

என் உடலில் இன்ன நோய் இருக்கின்றது… அது நீங்கி என் உடல் நன்றாக வேண்டும் என்று தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று ஒவ்வொரு உபதேசத்திலும் சொல்லிக் கொண்டு வருகின்றேன்… ஒவ்வொரு சமயத்திலும் ஞாபகப்படுத்துகின்றேன்.

ஆனால்… ஐயோ… என்னுடைய கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… என் பிள்ளை சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்…! என்று தான் திரும்பவும் கேட்கின்றார்கள்.

காரணம் என்ன…?
1.ஏற்கனவே பதிவான உணர்வுகள் உங்களைப் பேச விட மாட்டேன் என்கிறது என்பதற்காக அதைச் சொல்கின்றேன்.
2.ஏனென்றால் இந்தக் கஷ்டத்தையும் நஷ்டத்தையும் மட்டும் ஓங்கி வளர்த்திருக்கின்றோம்.

பாலுக்குள் இனிப்பு காப்பித்தூள் இவற்றை இணைத்தால் சுவையாக இருக்கின்றது. ஆனால் காரத்தைப் போட்டால் ஐயோ காரம்… ஐயோ காரம்… என்று சொல்வது போன்று
1.உங்களிடம் இருக்கும் நல்ல குணத்திற்குள் மற்றவர்கள் கஷ்டத்தை எல்லாம் போட்டு
2.அந்தக் கஷ்டத்தைத் தான் முன்னாடி சொல்ல முடிகின்றதே தவிர அதை நிவர்த்திப்பதற்கு இல்லை.
3.தவறு நீங்கள் செய்யவில்லை.

சில நேரங்களில் நான் கோபமாகச் சொல்கிறேன் என்று நினைப்பீர்கள். கோபம் அல்ல அது.

உதாரணமாக ஒரு சாமானைத் தூக்க முடியவில்லை. “தம் கட்டி…” அதை நான் தூக்குகின்றேன். அந்த மாதிரி… உங்களால் சமாளிக்க முடியவில்லை…
1.நான் வேகமாகச் உங்களிடம் சொல்லும் பொழுது ஆழமாகப் பதிவாகி விடுகிறது.
2.பார்… சாமி இப்படிச் சொல்கிறார்…! என்று அந்த நேரத்தில் சாமியை நினைக்க வேண்டி வரும்.
3.நான் சொன்ன ஞாபகம் உங்களுக்கு வரும்.
4.அப்பொழுது உங்கள் கஷ்டத்தை விட்டு விட்டு நல்லது பெற வேண்டும் என்ற எண்ணம் வரும்.
5.அப்படி எண்ண வைப்பதற்குத் தான் இதைச் செய்வது.

என்னிடம் எத்தனையோ பேர்கள் வரிசையாக வந்து கேட்டாலும் ஒவ்வொருவரிடம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் சொல்கின்றோம். ஆனால் பின்னாடி வருபவர்கள் மீண்டும் அதே குறையச் சொல்லிக் கேட்கப்படும் பொழுது “என்ன சாமி… நம்மைக் கோவிக்கின்றாரே…? என்ன ஆனதோ…?” என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

1.சாமி கோவித்தாரே…! நாம் திருத்த வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த உணர்வு உங்களுக்குள் பதிவாகும்.

ஆக… அது கோபம் அல்ல…! அழுத்தமான சொல்லாகச் சொல்லும் பொழுது உங்கள் உடலில் நல்ல முறையில் பதிவு செய்வதற்குத் தான் அவ்வாறு சொல்வது.

காரணம் எதை எடுத்தாலும் தெய்வத்திடம் வரம் கேட்க வேண்டும் என்பது போன்று தான் சென்று கொண்டிருக்கின்றோம்.

ஒரு வேப்பமரம் அதனிடம் இருக்கும் மணத்தால் ரோஜாவின் மணத்தைத் தன் அருகிலே வராது தள்ளி விடுகின்றது. தன் இனமான கசப்பான சத்தைக் காற்றிலிருந்து அந்த மரத்திற்குள் இருக்கும் உணர்வை வைத்து இழுத்துத் தனக்குள் பெருக்கிக் கொள்கின்றது. அந்த வாசனையை வெளிப்படுத்துகின்றது.

தனக்குள் அந்தக் கசப்பை எடுத்து வளர்த்துக் கொண்ட பின்பு தான் அந்த வாசனையைக் கொடுக்கிறது.

அதே மாதிரி நம்மிடம் கசப்பான குணங்கள் இருந்தது என்றால் நாம் எதையாவது எண்ணிச் சொல்ல வேண்டும் என்றால் அதை (கசப்பை) எடுத்துத் தான் பேச முடியும். அது இல்லையென்றால் நாம் பேச முடியாது.

ஆனால் நீங்கள் எல்லோரும் நலமாக வேண்டும் மகிழ்ந்து வாழ வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
1.அந்த உணர்வை எடுத்துக் கொண்டு தான் நான் பேசுகிறேன்… பேசும் பொழுது உங்களிடம் பதிவாகும்.
2.நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எண்ணும் பொழுது முதலில் நான் அதுவாகின்றேன்.

நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்… உங்கள் சிரமங்கள் அகல வேண்டும்… உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அதை எண்ணுகின்றேன்… அதைச் சொல்கின்றேன்.

1.நீங்கள் கேட்கும் பொழுது முதலில் நான் அதுவாகின்றேன்… என் சொல்லும் அதுவாகின்றது.
2.இதையே நீங்களும் செய்து பழகிக் கொண்டீர்கள் என்றால் நீங்களும் அதுவாகின்றீர்கள்.

சந்தர்ப்பத்தால் நுகரும் வேதனையை நாம் நீக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள்

சந்தர்ப்பத்தால் நுகரும் வேதனையை நாம் நீக்கவில்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள்

 

இந்த வாழ்க்கையில் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்று தான் நாம் எல்லோருமே ஆசைப்படுகின்றோம். அதில் தோல்வி அடைந்தால் வேதனைப்படுகின்றோம்.

கடை வைத்துத் தொழில் செய்யலாம் என்று நடத்துகின்றோம். ஆனால் வியாபாரம் குறைவாகிச் சந்தர்ப்பத்தில் நஷ்டம் வந்து விட்டால் லாபத்தைக் குறிக்கோளாக வைத்த நமக்கு வேதனை என்ற உணர்வு கூடவே வருகின்றது.

வேதனையை நுகர்ந்து விட்டால் சிந்தித்துச் செயல்படும் தன்மை இழக்கப்பட்டு இதை எப்படிச் சரிக்கட்டுவது…? என்ற நிலை தடுமாறச் செய்கின்றது.

அப்போது ஒரு கனமான பொருளைத் தூக்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
1.அந்த நேரத்தில் பலவீனமான எண்ணங்களாக இருக்கும் பொழுது
2.வலுக் கொண்டு முட்டுக் கொடுத்துத் தூக்க வேண்டியதைத் தூக்க முடியாத நிலை வரும் பொழுது
3.நம் மீதே அந்தப் பொருள் விழுந்து நசுக்கி விடும்.

அந்த நேரத்தில் வலுவிழந்து அதனுடைய நிலைக்குக் கீழ் நாம் போய்விடுவோம்.

இதைப் போன்று தான் இயற்கையின் தன்மைகளில் வேதனையான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது “நல்ல வலுவின் தன்மை இழக்கப்பட்டு நம் செயலும் குன்றி விடுகின்றது…”

அப்படித் தூக்கும் நேரத்தில் வலுவிழக்கப்பட்டால் அந்தப் பொருள் கீழே விழுந்தால் சிதைந்து விடுகின்றது. இன்னும் அதிகமான கஷ்டங்களை ஏற்படுத்துகின்றது.

இது எதனால் வருகிறது…? சந்தர்ப்பத்தால் இந்த நிலை வருகின்றது.
1.வலு இழந்திருக்கின்றோம்… அதிலிருந்து சிறிது விலகி நிற்போம்.
2.வலு உள்ளவர்களைத் தூக்கச் சொல்லலாம் என்று ஆள்களை அனுப்புகின்றோமா என்றால் இல்லை.

அதை நாம் தூக்கி விடுவோம் என்ற ஆர்வ துடிப்புடன் செய்கின்றோம். அடுத்தவர்களை உதவிக்குக் கூப்பிடுவதில்லை. அப்படித் தூக்கப்படும் பொழுது…
1.”சிந்தனை இல்லாதபடி” அடுத்தவர்களை எதற்குக் கூப்பிட வேண்டும்…?
2.நாமே ஏன் தூக்கக் கூடாது…? என்ற இந்தக் கௌரவப் பிரச்னை வந்து விடுகின்றது.
3.ஆக அப்போது அந்தப் பொருளை நாசமாக்கும் நிலை வருகின்றது… நமது உயர்ந்த பலனும் குறையத் தொடங்குகிறது.

அடுத்து நம்முடைய எண்ணங்கள் மிகவும் பலவீனம் அடைகின்றது.

இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது நாம் எந்தத் தொழிலை வலுவாகச் செய்வோம்…?

சந்தர்ப்பங்கள் இவ்வாறு நம்மைப் பலவீனப்படுத்துகின்றது. அதை மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கிறோம்…?

ஒரு நோயாளியைப் பற்றிப் பரிவுடன் கேட்டறிகிறோம். அந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது. நோயினால் உண்டான வேதனை மிகவும் வலுக் கொண்டது. அது நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

அடிக்கடி அந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது இந்த வித்தின் தன்மை அதற்குண்டான உணர்வினைக் கலக்கச் செய்து இந்த உணர்வுக்கொப்ப நம் உடலில் (ஒரு செடி வளர்வது போல) இந்த உணர்ச்சிகள் உடல்களில் அது பரவுகின்றது.
1.அப்படிப் பரவும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும் மாற்றும் தன்மை வருகின்றது.
2.காரணம்… அந்த வேதனை தன் இனமான வித்தாக உடலுக்குள் மாற்றுகின்றது.

உதாரணமாக… வயலில் நல்ல பயிர்களை நடுகிறோம். அதிலே களைகள் முளைக்கப்படும் பொழுது நல்ல பயிர்களுக்குச் செல்லும் சத்தினை இது கவர்ந்து தாவர இனங்கள் விஷத்தன்மையாக மாற்றி நல்ல பயிரினங்களை வாழ விடாது அதனுடைய பலனைக் குறைத்து விடுகின்றது.

இதைப் போலத் தான் வேதனை என்ற உணர்வு ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விட்டால் வினைக்கு நாயகனாக அதன் உணர்ச்சியின் வேகங்கள் கூடி நம் ரத்தங்களிலே கலக்கச் செய்து… ரத்த ஓட்டம் எங்கே செல்கின்றதோ மற்ற நல்ல அணுக்கள் அதை ஏற்க மறுக்கப்படும் பொழுது போர் முறை வருகின்றது.

அப்படிப் போர் முறை வரப்படும் பொழுது ரத்தம் எங்கெங்கே செல்கின்றதோ
1.நல்ல அணுக்களின் பக்கம் சென்ற பின் அது ஏற்க மறுக்கும் பொழுது பளீர்… பளீர்,,, என்று உடலுக்குள் ஒரு பக்கத்தில் மின்னல் ஆகும்.
2.அந்த மின்னலாகும் பொழுது கடினமான சாமானைத் தூக்கினால் உடலில் இடுப்பு பிடித்துக் கொள்ளும்.
3.கையில் தூக்கப்படும் பொழுது முடியாத நிலை ஆனால் கையிலே சுளுக்குப் பிடித்துக் கொள்ளும்.
4.அல்லது வலுவான நிலையில் தூக்கப்படும் பொழுது நரம்பு மண்டலங்கள் பிசகி விடுகின்றது.

இப்படி எத்தனையோ தொல்லைகள் வருகிறது. ஆனால் தவறு செய்யவில்லை.

ஆக நாம் நுகரும் உணர்வுகள் உணர்ச்சிகள் நம்மை என்னவெல்லாம் செய்கின்றது என்று அறிந்து நாம் அதைத் திருத்தி அமைக்க வேண்டும் அல்லவா…! இதிலிருந்து தப்ப வேண்டும் அல்லவா…?

வினை… வினைப்பயன் என்று சொல்வதன் பொருள்

வினை… வினைப்பயன் என்று சொல்வதன் பொருள்

 

இன்று கசாப்புக் கடையில் பார்க்கலாம்… அங்கே உயிருடன் அறுக்கின்றார்கள்… சூடாக இருக்கும் தண்ணீரில் “டபக்” என்று முக்குகின்றார்கள்… அது வேதனைப்படுகிறது. ஆனால் அந்த மாமிசங்களைத் தான் உட்கொள்கின்றோம்.

சுடு தண்ணீரில் முக்கும்பொழுது அவன் பாவத்தைச் செய்கின்றான்… அதை நாம் உற்று நோக்குகின்றோம். ஆனால் அதற்காக அதை உட்கொள்ளாமல் இருப்பதில்லை.
1.சுடு தண்ணீரில் முக்கும் பொழுது கஷ்டமாக இருக்கின்றது.
2.அந்தப் பாவ நிலைகள் நமக்குள் பாவ வினையாகச் சேருகின்றது.

ஏனென்றால் கண்ணிலே உற்றுப் பார்த்தோம்… சுடு தண்ணீரில் அது எப்படி எரிகின்றதோ அந்த உணர்வை நுகர்கின்றோம்… நம் ரத்தத்தில் அது கலக்கின்றது.

1.ஒரு நான்கு ஐந்து தடவை இவ்வாறு கோழிகளை உயிருடன் சுடு தண்ணீரில் அமுக்கும் போது பார்த்தோம் என்றால்
2.அந்த எரிச்சல் நிச்சயம் நம் உடலில் உருவாகும்.

அந்தக் கோழியைத் தான் சாப்பிடுகின்றோம். அதனுடன் சேர்ந்து அது எப்படி எரிச்சல் அடைந்ததோ அந்த எரிச்சல் நம் உடலில் நிச்சயம் வரும்.

கடைக்காரன் காசுக்காக அவ்வாறு செய்கிறான். பாவமே…! என்று பார்க்கின்றோம். உணவாக உட்கொள்வதற்காக நாம் இதை நுகர வேண்டி இருக்கின்றது. இருந்தாலும் உட்கொள்ளும் போது ருசித்து உட்கொள்கின்றோம்.

ஆகவே இந்த உணர்வின் இயக்கங்கள் எப்படி இருக்கும்…? சற்று சிந்தித்துப் பாருங்கள். இது எல்லாம் பாவ வினைகள்.

ஒருவன் தீய செயலைச் செய்கின்றான். “இப்படிச் செய்கின்றானே…” என்று நாம் கூர்மையாக உற்று நோக்கிப் பார்க்கின்றோம்… அது தீய அலைகள்…!
1.அந்த உணர்வை நுகர்கின்றோம்.
2.நம் ரத்தத்திலே கலந்து அணுவாக மாறுகின்றது. இது தீய வினை.

ரோட்டில் ஒருவன் எவனையோ பார்த்து நாசமாகப் போ…! என்று சாபமிடுகின்றான். அது சாப அலைகள்.
1.நாம் அதைப் பார்க்க நேர்ந்தால் அவன் விடும் சாபத்தை நுகர்ந்து விடுகின்றோம்.
2.உடலுக்குள் சென்ற பின் அது தீய செயல்களையே செய்கின்றது.

ஆரம்பத்தில் தாய் கருவிலே சிசுவாக இருக்கின்றோம். தாய் இது போன்று எத்தனையோ அதிர்ச்சியான நிலைகளையோ தவறு செய்பவர்களையோ உற்றுப் பார்த்து நுகர்ந்திருக்கும்.
1.தாயின் இரத்தத்தின் வழியாக அந்த உணர்வுகள் கருவிலேயும் சேர்ந்து விடுகிறது
2.இது பூர்வத்தில் வரும் வினை.

இப்படிப் பல விதமான உணர்வுகள் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு எது எதை நுகர்கிறோமோ அவை எல்லாம் நமக்குள் வந்து சேருகின்றது.

பாவத்தைப் பார்க்கும் பொழுது “அடப் பாவமே…” என்று எண்ணுகிறோம்… அந்தப் பாவத்தை வளர்க்கின்றோம். தீய செயல்கள் செய்பவனை உற்றுப் பார்க்கும் பொழுது தீய வினைகளை நமக்குள் வளர்க்கின்றோம். அந்தந்த அணுக்கள் உருவான பின் அதனதன் ருசியையேத் தேடுகின்றது.

இந்த வினைகளை எல்லாம் போக்க வேண்டுமல்லவா…!

வினை என்றால் வித்து. செடி கொடிகள் வளரும் பொழுது அதில் வித்துக்கள் உருவாவது போல்
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் வினையாகி உணர்ச்சியாக இயக்கி
2.உடலில் விளையும் பொழுது அணுக்களாக மாறுகின்றது… வித்தாக மாறுகின்றது…!

சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…! இவை அனைத்தையும் நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கொடுத்துள்ளது.

செய்வினையை நீக்கச் செய்தார் குருநாதர்

செய்வினையை நீக்கச் செய்தார் குருநாதர்

குருநாதர் செய்வினைகளைப் பற்றியும் தோஷங்களைப் பற்றியும் கூறி வந்தார். அது சமயம் குருநாதர் ஒரு பிச்சைக்காரரைக் காண்பித்தார். அந்தப் பிச்சைக்காரர் காலை நொண்டிக் கொண்டு… குச்சியை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தார்.

அவர் ஒரு பத்து அடி நடப்பதற்கு 15 நிமிடமாவது எடுத்துக் கொண்டார். உணவு பெறுவதற்காக ஒரு டப்பாவை கையில் வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டு வந்தார்.

அவர் காலையிலிருந்து மாலை வரை அலைவார். கடைகளில் கொடுத்த உணவை அள்ளிச் சாப்பிடுவதற்குச் சிரமப்படுவார். யாம் அவரை அடிக்கடி சாலைகளில் பார்த்திருக்கின்றோம்.

பிச்சைக்காரர் நடந்து வருவதைச் சிறிது தூரத்திலிருந்து குருநாதரும் யாமும் கவனித்துக் கொண்டிருந்தோம். குருநாதர் அவரைக் காண்பித்து… “திருடன் வருகின்றான் பார்… திருடன் வருகின்றான் பார்…!” என்று கூறினார்.

“எங்கே சாமி வருகின்றார்…?” என்று யாம் கேட்டோம்.

“இதோ வருகின்றான் பார்…” என்று பிச்சைக்காரரைச் சுட்டிக் காண்பித்தார் குருநாதர்.

குருநாதர் சொல்லி… பிச்சைக்காரர் எங்கள் பக்கத்தில் வருவதற்கு அரை மணி நேரம் ஆகிவிட்டது. இவ்வாறு அந்த பிச்சைக்காரர் எங்கள் அருகில் வந்ததும் அவர் கையில் இருந்த கம்பைப் பிடுங்கிக் கொண்டு பிச்சைக்காரரை அங்கே உட்கார வைத்து விட்டார் குருநாதர்.

குருநாதர், அவரின் கையிலிருந்த தடியை எடுத்துக் கொண்டபின் எம்மைப் பார்த்துக் காபி வாங்கி வா… மெதுவடை போன்ற சில திண்பண்டங்களை வாங்கி வா…! என்று கூறினார்.

எல்லாவற்றையும் வாங்கி வரச் சொல்லி, பிச்சைக்காரரை சாப்பிடச் சொன்னார் குருநாதர். பிச்சைக்காரர் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவுடனே “அந்தக் கம்பை எடு” என்று கூறி கம்பை வாங்கி எமது கையில் கொடுத்தார் குருநாதர்.

இந்தக் கம்பால் அவனின் மண்டையைப் பார்த்து ஓங்கி அடி…! அவனுடைய மண்டையை இரண்டாகப் பிளக்க வேண்டும் என்று கூறினார். “திருடன் இவன்… இவனுடைய மண்டையை இரண்டாக உடை…!” என்று எம்மிடம் கூறினார் குருநாதர்.

குருதேவரும் யாமும் பேசுவதைக் கேட்டுப் பிச்சைக்காரர் அலறத் தொடங்கினார். இத்தனையும் வாங்கிக் கொடுத்து சாப்பிட்டவுடன்… “அடி” என்றால் எப்படி இருக்கும்…!

யாமும் குருநாதரிடம் இருந்து கம்பை வாங்கிக் கொண்டு மெதுவாக பிச்சைக்காரர் தலைக்கு நேராகக் கொண்டு போனோம். இலேசாக வலி தெரியாதவாறு பிச்சைக்காரரின் தலையில் அடித்து விட்டு “அடித்துவிட்டோம் சாமி” என்று யாம் கூறினோம்.

“மண்டை உடையவில்லையே…!” என்று கூறினார் குருநாதர்.

அந்தக் கம்பை வாங்கி எமது முதுகில் “ஓங்கி அடித்தார்” குருநாதர். மண்டையில் அடித்தால் இப்படித் திடுமென்று சத்தம் வரவேண்டும், மண்டை உடைய வேண்டும் என்று கூறினார். இப்பொழுது அவன் மண்டையில் அடி என்று கூறினார்.

சாமி…! நான் பிள்ளைக்குட்டிக்காரன்… பிச்சைக்காரர் செத்துப் போனால் என்னைச் சிறையில் போட்டுவிடுவார்கள்/… எம்முடைய பிள்ளைகளெல்லாம் ரோட்டிற்கு வந்துவிடும் என்று கூறினோம்.

எம்மைச் சும்மாவா விட்டார் குருநாதர். “அதெல்லாம் முடியாது… நான் சொன்னதைச் செய்கின்றேன் என்று கூறினாயல்லவா. நான் உன் முதுகில் அடித்தேன்,,, அதே போன்று அவனின் மண்டையில் நீ அடி என்று கூறினார்.

யாம், இரண்டு, மூன்று தடவை மெதுவாக மெதுவாகப் பிச்சைக்காரரின் தலையில் கம்பை வைத்து எடுத்தோம். இதனால் குருநாதர் எம்மைத் திரும்பத் திரும்ப அடித்தார்.

“சரி சாமி…!
1.பிச்சைக்காரர் அடி தாங்கமாட்டார்
2.இப்பொழுது, இவரை அடித்துக் கொன்றே விடுகின்றேன்… என்று கூறிவிட்டு
3.கம்பை ஓங்கிக் கொண்டு போய் அந்தப் பக்கம் தரையில் அடித்தோம்.

பிச்சைக்காரர்… “ஐயய்யோ… அம்மா…” என்று கூறிக்கொண்டு எழுந்து ஓடினார்.

யாம் அவரை துரத்திக் கொண்டு ஓடிய அவசரத்தில் எமது வேஷ்டி கூடக் கழன்று விட்டது. எமது வேஷ்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு ஓடினோம்.

எமது வீட்டுச் சந்திற்கு முன் ஒரு இரும்புக் கடை இருக்கின்றது. அந்தக் கடையிலிருந்த ஒருவர் “என்ன நைனா ஓடுகின்றீர்கள்…? அவன் நடக்க முடியாமல் இருந்தான்… அவனும் ஓடுகின்றான் என்ன சமாச்சாரம்…?’ என்று கேட்டார்.

அதற்கு யாம் “குருநாதர் அவனைத் திருடன் என்று கூறினார்” என்று சொன்னோம்.

யாம், அவரை ஒரு கையில் பிடித்துக் கொண்டு குருநாதரிடம் இழுத்துக் கொண்டு வந்தோம். அவர் என்னைக் கொன்று விடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தார். குருநாதரிடமும் என்னைக் கொன்று விடாதீர்கள் என்று கூறினார்.

குருநாதர் அவரின் கையில் 100 ரூபாயை கொடுத்தார்.

1.இவனுடைய சொத்தைப் பறிப்பதற்காக வேண்டி
2.இவனின் உடலில் இன்னொரு ஆவியை ஏவல் செய்து இவனைப் பைத்தியக்காரனாக ஆக்கிவிட்டார்கள்.

இப்படிப் பைத்தியக்காரர்களாகச் சுற்றுகிறவர்களுக்கெல்லாம் பைத்தியக்காரன் ஒருவன் மலையில் இருக்கின்றான். இது போன்று முக்கியமான கோவில் குளங்களுக்கெல்லாம் செய்வினை செய்யப்பட்டவர்கள் தோஷங்களானவர்கள் இப்படித்தான் வருவார்கள்.

ஏனென்றால் பிறிதொருவர் செய்த ஆவி நிலைகள் இவனுக்குள் வந்தாலும் இவனைப் போன்றவர்களை நல்ல இடத்திற்கே அழைத்து வரும்.

இருந்தாலும் இவன் பிச்சை எடுத்துதான் வாழ முடியும்… நல்லதை எடுக்க முடியவில்லை. இவனால் பார்க்க முடியவில்லை… இப்படி அவஸ்தைப்படுகின்றான்.
1.ஆகையால் இவன் உடலில் இருந்த ஆவியைத் தான் உன்னைக் கொல்லச் சொன்னது என்று கூறினார் குருநாதர்.
2.எனவே அத்தனை நாடகங்கள் செய்து ஆவி நிலை விலகியது. 3.பிச்சைக்காரருடைய கை கால் எல்லாம் ஜம்மென்று ஆனது.

அவரின் கையில் 100 ரூபாயைக் கொடுத்து “உனது சொத்தெல்லாம் வந்து விடும் போடா…” என்று கூறினார் குருநாதர்.

அந்த ஆள் விருதுநகர் பக்கம் ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். அவருடைய சொத்தையெல்லாம் பறித்துக் கொண்டு அவரை வெளியில் துரத்தி விட்டார்கள். அவருக்குக் குழந்தைகளோ வேறு வாரிசுகளோ கிடையாது.

அவருடைய சொத்தை அனுபவிப்பதற்காக அவரைப் பைத்தியக்காரராக ஆக்கியுள்ளார்கள். இப்படியும் இருக்கிறது உலகம். இதை எல்லாம் அனுபவபூர்வமாகக் காண்பித்தார் குருநாதர்.

இது போன்று நமது மனித வாழ்க்கையில் எத்தகைய நிலைகள் வந்தாலும் நமக்குள் தீமை புகாது தடுக்கும் சக்தி வரவேண்டும்.

இது தான் கடவுளின் அவதாரத்தில் நரசிம்மா…!
1.மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நர நாராயணன் இரண்யனைப் பிளந்தான்.
2.அதாவது நமக்குள் தீமை செய்யும் உணர்வினை நமது உடலை விட்டே அகற்ற வேண்டும்.

குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை

குறைகளையும் துன்பங்களையும் பற்றி எத்தனை முறை எண்ணினாலும் நமக்கு அதனால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை

 

ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள்…! அதாவது
1.தன்னிச்சையாகவே… நாம் பார்க்கும் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று
2.நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணத்தை எடுத்துக் கொண்டால் “செய்யும் தொழிலே தெய்வமாகின்றது…”

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் “பிறர் நலம் பெற வேண்டும்” என்ற அக்கறையே நமக்குள் வளர்கின்றது. இதிலே சுயநலமும் வருகின்றது… அதிலே பொது நலமும் கலக்கின்றது. இரண்டு உணர்வும் சேர்க்கின்றது.

உதாரணமாக நாம் சமையல் செய்யும் பொழுது அரிசியை எடுத்துத் தூய்மைப்படுத்தித் தண்ணீர் ஊற்றி வடிகட்டி எடுத்தாலும் அதிலே “ஒரு கல்” வந்து விடுகிறது.

இதைப் போல வாழ்க்கையில் சில நேரங்களில் குறைபாடுகள் வந்துவிடும்.
1.அத்தகைய நிலை வந்தாலும் “அந்த உணர்வு நம்மை இயக்கி விடாதபடி” உடனே ஆத்ம சுத்தி செய்து
2.அத்தகைய உணர்வுகளைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால் உங்கள் வாழ்க்கைப் பயணம் பகைமை வராதபடி அருள் உணர்வைப் பெருக்கிடும் அருள் வாழ்க்கையாக அமையும். இந்த உடலுக்குப் பின் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப உயிர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்கே அழைத்துச் செல்லும்.

ஆனால் வாழ்க்கையில் வரும் குறைபாடுகளையே அதிகமாக எண்ணி வளர்த்துக் கொண்டால் எவர் உணர்வு நமக்குள் அதிகமாகின்றதோ இந்த உடலுக்குப் பின்… உயிர் அந்த உடலுக்கு அழைத்துச் செல்லும்.

அங்கே சென்று பேயாக மாற்றும்… நோயாக மாறும். பின் அந்த உடலை விட்டு வெளிவந்த பின் விஷத்தின் அளவுகோலுக்கொப்ப மனிதரல்லாத உடலை உருவாக்கி விடும்… இதே உயிர் தான்.

ஆகவே உயிரை நாம் மதித்துப் பழக வேண்டும்.
1.ஆனால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது…
2.அதைத்தான் உடலாக்குகின்றது… அதைத்தான் ஆளுகின்றது.
3.எண்ணும் பொழுது அதன் வழியாகவே வருகின்றது.

அதாவது… உடலான மணமே நமக்குள் எண்ணமாகி அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாகவும் மாறிக்கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை நமக்குள் ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் பரவி வரும் விஷத்தன்மை நமக்குள் கவராது மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்கு ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

பத்திரிகையைப் படித்தாலும் சரி… மற்றவைகள் மூலம் உலக நடப்புகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டாலும் சரி…! அறிந்து கொண்ட தீமை நமக்குள் வளராதபடி “மனத்தூய்மையை” நாம் செய்து கொண்டே இருத்தல் வேண்டும்.

அப்படிச் செய்தோம் என்றால்
1,நம் வாழ்க்கையில் அந்தக் கணக்குப்படி நமது உயிர் ஜட்ஜ்மெண்டாக தீர்ப்பாக
2.நம்மைப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்யத் தீர்ப்பளிக்கும்.

அதிலே நாம் தவறினால் விஷத்தன்மை சூழ்ந்துவிடும்… ஏனென்றால் அது வலிமையானது. அந்த உணர்வின் அடிப்படை வளர்ந்து விட்டால் அதனின் தீர்ப்பாக உயிர் மீண்டும் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனாலும் இன்றைய விஞ்ஞான உலகம் விஷத் தன்மை வாய்ந்ததாக இருப்பதால் மீண்டும் “மனிதனாக வருவதற்குப் பல காலமாகும்…”
1,நல்ல நினைவு இருக்கும் போதே நம் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.அந்த அருள் உணர்வை இப்பொழுதே வளர்த்துக் கொள்ளுங்கள்.

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்

எம்முடைய உபதேசத்தைப் பதிவாக்கிக் கொண்டால் உங்களுக்கு நல்ல நேரம்

 

டாக்டருக்குப் படிக்கச் செல்கிறார்கள் என்றால் “படிக்க வேண்டும்…” என்ற அக்கறை உள்ளவர்கள் படித்து முன்னுக்கு வந்து விடுகின்றார்கள். ஏதோ நான் படித்துக் கொண்டேன் என்று போகிறவர்களுக்குப் படிப்பு ஏறுவதில்லை… சரியான நிலையில் மருத்துவமும் பார்க்க முடிவதில்லை.

அதே மாதிரித் தான் உங்கள் குடும்பத்தில் எத்தனையோ நடக்கின்றது. நல்ல நேரம் கெட்ட நேரம் என்று பார்த்து அதற்குத் தக்க காலங்களை நிர்ணயித்துக் காரியங்களைச் செயல்படுத்துகின்றீர்கள்.

1.உங்கள் உடலுக்குள் எதை வலுவாக எடுத்துக் காரியத்தைச் செய்ய முயற்சிக்கின்றீர்களோ அது நல்ல நேரம்.
2.ஜோதிடம் பார்ப்பவர்களோ அல்லது மற்றவர்களோ… “என்ன இந்த நேரத்தில் போய் உன் காரியத்தைச் செய்யப் போகின்றாயா…?” என்று
3.அவர்கள் உணர்வை உள்ளே விட்டு விட்டால் அவர்கள் எண்ணிய உணர்வுப்படி அது கெட்ட நேரமாகி விடுகின்றது.

நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாமே நம் எண்ணத்திற்குள் தான் இருக்கின்றதே தவிர வேறு எதுவும் இல்லை.

ரோட்டில செல்லும்போது ரெண்டு பேர் கோபமாகப் பேசித் தாக்கிக் கொள்கிறார்கள். அதைப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது… பார்த்து விடுகின்றோம். அந்த உணர்வினை நுகர்ந்தால் வெறுப்பான உணர்வு நமக்குள் வருகின்றது. அது கெட்ட நேரம்.

ஆனால் அடுத்த கணமே யாம் உங்களிடம் கொடுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து “ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி என்று நினைவை அங்கே செலுத்த வேண்டும்.
1.ஏனென்றால் இந்த கண் கருவிழி கருமணி துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்குகின்றது…
2.சண்டை போட்ட உணர்வைத் தள்ளிவிட்டு விடுகிறது… இதைக் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சண்டை போடுபவர்களையும் வேதனைப்படுபவர்களையும் பார்த்து அதைப் பதிவாக்குகின்றோம். அது நம்மை இயக்கத் தொடங்குகிறது.

செல்ஃபோனில் முந்திரி பருப்பு அளவு தான் உள்ளே வைத்திருக்கின்றார்கள். ஆனால் அதற்குள் லட்சக்கணக்கான பதிவுகளை ஏற்றும்படி வைக்கின்றார்கள்.

அந்தப் பதிவுகளை வைத்து எத்தனையோ வேலைகளை இன்று மிகவும் எளிதாகச் செய்யும்படி வைத்துள்ளார்கள். யார் பேசுகின்றார்கள்…? என்பதையும் தெரிந்து கொள்ள முடிகின்றது… அவர்களுக்கும் காட்டுகிறது.

பாக்கெட்டிலேயே வைத்துக் கொண்டுள்ளோம். விஞ்ஞான அறிவில் இதைச் செய்கிறார்கள்.

1.இதே போன்றுதான் நம் கண்ணின் கருவிழி விலா எலும்புகளுக்குள் உள்ள ஊனுக்குள் பதிவாக்கி விடுகின்றது.
2.அதை வைத்துத் தான் நாம் பேசுவதும் எண்ணுவதும் இயக்குவதும் எல்லாமே நடக்கிறது.
3.இதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டால் அவ்வப்போது வரும் தீமைகளை நீங்கள் உடனுக்குடன் நீக்க முடியும்.

அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

ஆனால் மற்ற ஸ்தாபன்ங்களில் இதை எல்லாம் எப்படிச் சொல்லிக் கொடுப்பார்கள் தெரியுமா…?

தன்னுடன் சீடர்களாக வந்து… தான் சொன்னதை எல்லாம் கேட்பவர்களுக்கு… ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கு அப்புறம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

இப்படி எல்லாம் வரம்புகளை விதித்து… கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றார்களா…? இல்லையா…! என்பதை எல்லாம் பார்த்துச் சரியானபடி நடப்பார்களா மாட்டார்களா…? என்று பல தடவை இழுத்தடித்து
1.அதற்குப் பின் மெம்பர் ஆக்கி சத்தியம் வாங்கி…
2.இனிமேல் இதிலிருந்து மாற மாட்டேன் என்று சொல்லிக் கடைப்பிடித்து வருபவர்களுக்குத் தான் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஒரு ஸ்தாபனத்திற்குள் சென்றால் அவர் சொல்வதெல்லாம் கேட்டுப் பதிவாக்கி சத்தியம் செய்ய வேண்டும்… முதலில் இதைத் தான் வாங்குவார்கள். அதற்குப் பின் சொல்லிக் கொடுப்பார்கள்.

1.உங்களிடம் இது எதையுமே நான் வாங்கவில்லை.
2.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உடலை ஆலயமாக மதிக்கின்றேன்.
3.ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் புனிதமாக வேண்டும் என்பதற்குத் தான் சொல்கிறேன்.

இயற்கையின் இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன். குருநாதர் கொடுத்தார். அதை அப்படியே உங்களுக்கும் கொடுக்கின்றோம்.

வேதனையைக் குறைக்கும் வழி

வேதனையைக் குறைக்கும் வழி

 

உடலிலே வலி வந்து விட்டால் “அம்மம்மா… மேல் வலிக்கிறதே…!” என்று அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்கின்றோம். ஏதாவது தொல்லைகள் வந்து விட்டால் அதை எண்ணும் பொழுது அந்த அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது.

1.சந்தோஷமான வார்த்தையைச் சொல்லி அதை நிவர்த்தி செய்யலாமா…? என்றால் முடியாது… சந்தோஷமான வார்த்தை அங்கே எதிரி ஆகிறது.
2.வேதனைப்படும் நேரத்தில் யாராவது சந்தோஷமாகப் பேசுவதைப் பார்த்தால் அது உடனே எதிரியாக மாறுகின்றது.

ஆனால்… இந்த எதிரிகளை வென்றவர் யார்…? சந்தோஷத்தை ஊட்டியது யார்…? அந்த மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளை நாம் எண்ணும் பொழுது அதற்கு ஆகாரத்தைக் கொடுத்த பின் வலுவாகின்றது. அப்பொழுது உயிரான ஈசனிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்…?

1.யாம் பதிவு செய்த மகரிஷிகள் உணர்களை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

மற்றவருடைய குறைகளையோ வேதனைகளையோ கண்ணுற்றுத் தான் நாம் பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கும் பொழுது ஆன்மாவாகிச் சுவாசத்தின் வழி இழுத்து “அகக் கண்ணாக இருந்து…” உயிர் உணர்த்துகின்றது. அகக் கண்ணாக இருந்து பதிவு செய்து மீண்டும் நினைவு கொடுக்கின்றது.

அதே சமயம் நமது புறக்கண் படம் எடுத்து ஆத்மாவாகி உயிருடன் ஒன்றும் போது தான் அந்த உணர்வை அகக் கண்ணாகக் காட்டுகின்றது.
1.ஆனால் மகரிஷிகள் உணர்வைப் பதிவு செய்து மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து
2.உயிரான அகக் கண்ணுடன் இணைக்கப்படும் பொழுது இந்த ஆன்மாவிலிருந்து வருவதைத் தடைப்படுத்துகின்றது.

வேதனை அதிகமாக இருக்கிறது என்றால் ஈஸ்வரா…! அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற நினைவினை உயிர் வழி சிறிது நேரம் செலுத்தினால் மூச்சு திணறலோ உடலில் வலியினால் ஏற்படக்கூடிய வேதனையோ உபாதைகளோ அது குறையும்.

முதலில் எடுக்கவே விடாது.

இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் எல்லாம் பெற வேண்டும் என்று
1.அந்த உயர்ந்த சக்திகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ண அலைகளைப் பரப்பப்படும் பொழுது
2.சிறுகச் சிறுக வலிகள் தணியும்… செய்து பாருங்கள்.

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

“எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

 

தியானத்தின் சக்தி கொண்டு இந்த உடலை நலமாக்கி நலமாக்கி நாம் வாழ்ந்து வந்தாலும் “எத்தனை வருடம்…” உயிர் இந்த உடலில் இருக்கப் போகின்றது…!

உடல் நலத்திற்காக நாம் எண்ணினாலும்
1.என்றும் நீடித்த ஆயுளாக இருக்கும் அருள் மகரிஷிகள் உணர்வை எடுக்கப்படும் பொழுது
2.உடல் வேதனைகளை நீக்கிவிட்டு சிறிது காலமாவது மகிழ்ந்து வாழ முடியும்.
3.அந்தக் குறுகிய காலத்திலே உயர்ந்த சக்தியினைப் பெற்று வெளிவரும் பொழுது
4.எதைப் பற்றுடன் பற்றி நாம் அந்தச் சக்தியை எடுத்து வளர்த்தோமோ அங்கே செல்ல முடியும்.

அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால்… தன் வாழ்க்கைக்கு இந்த உடலுக்கு யார் உதவி செய்தார்களோ அவர்கள் மீது எண்ணத்தைச் செலுத்தினால் அந்த உடலுக்குள் தான் ஆன்மா செல்லும்.

சொத்தைச் சம்பாதித்து வைத்தேன்… என் பிள்ளை எப்படிச் சமாளிக்க போகின்றானோ…? என்று தன் பையன் மீது குறை கூறி எண்ணத்தைச் செலுத்தினால் அங்கே தான் செல்லும்.

இப்படிப் பல நிலைகள் கொண்டு மனிதனின் ஈர்ப்புக்குள் சிக்கி விடுகிறது. அங்கே சென்றாலும் நோயைத்தான் உருவாக்குவோம்… அடுத்து மனிதனல்லாத உருவை உயிர் உருவாக்கும்.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

விஷத்தின் தன்மை எதிலே ஊடுருகின்றதோ அதன் நிலையாகத் தான் அது மாற்றும். ஆனால்
1.விஷத்தை வென்றவன் அருள் ஞானி.
2.அந்த உணர்வினை எடுத்து உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் பாய்ச்சப்படும் பொழுது ஒளியாக மாற்ற முடியும்.

பாம்பினங்கள் தனக்குள் இருக்கும் விஷத்தினை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதில் உள்ள விஷத்தினையும் தனக்குள் எடுத்து நாகரத்தினமாக எப்படி மாற்றுகின்றதோ… இதைப் போலத் தான் எத்தகைய நஞ்சையும் அடக்க வல்லமை பெற்றவன்… ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றியவன் சப்தரிஷி.

“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று நம் எண்ணத்தைக் கூட்ட வேண்டும்.

எத்தகைய துயரைக் கேட்டறிந்தாலும் சலிப்படைந்தாலும் சங்கடப்பட்டாலும் அடுத்த நிமிடம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் அங்கிருக்கக்கூடிய கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்று நாம் சொல்லி விட வேண்டும்.

நாம் சொல்வதை யார் எண்ணி எடுக்கின்றார்களோ அவர்களுடைய கஷ்டங்களும் நிச்சயம் நீங்குகின்றது. அப்போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க முடியும்.
1.உங்களுடைய வாக்கு அங்கே செயலாகும்.
2.அதைக் கண்டு நீங்கள் மகிழ முடியும்… உணர்வுகள் ஒளியாக மாறுகிறது.

ஆனால் நாம் சொல்லியும் கேட்கவில்லையே என்று அவர்கள் உணர்வை நுகர்ந்து மனதை இருளச் செய்து விடக்கூடாது.
1.எப்படியும் அந்த அருள் உணர்வைப் பெறுவார்கள்…
2.வாழ்க்கையில் தெளிந்து செயல்படுவார்கள் என்ற எண்ணத்தை நமக்குள் வளர்க்க வேண்டும்.