
நம் எண்ணத்திற்குள் நம்மை அறியாமலே புகும் சில தீமைகள்
தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி “கராத்தே…” கற்றுக் கொள்வார்கள். இரண்டு தட்டுத் தட்டினால் அடுத்தவர்களை விழுத்தாட்டி விடலாம்… ஓங்கி ஒரு உதை விட்டேன் என்றால் போதும் என்பார்கள்.
ஆனால் அந்தக் கராத்தேயின் உணர்வுகள் உடலுக்குள் வந்தபின் உடல் வலுவால் தாக்கும் தன்மை வருகின்றது.
1.ஆனால் நுகர்ந்த உணர்வோ “தாக்க வேண்டும்” என்ற உணர்வுகள் உடலுக்குள் கூடிய பின் உடலில் அழுத்தங்கள் அதிகமாகும்.
2.கூடுமான வரையிலும் இதுபோன்று கராத்தே கற்றுக் கொண்டவருடைய கடைசி நிலைகள் அழுத்தமாகி ரத்த அழுத்தம் அதிகமாகும்.
3.அழுத்தம் அதிகமான பின் அவர்களால் அந்தக் கலையைச் செயல்படுத்த முடியாது.
உடல் வலிமை இருக்கும் வரை செயல்கள் இருக்கும். சிறிது காலம் எல்லாம் நன்றாக இருக்கும். இந்தக் கலையை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்து அவர்கள் அதைச் சீராகச் செயல்படுத்தும் பொழுது மகிழ்ச்சி வரும்… புகழ் வரும்.
ஆனாலும் அடுத்தவர்கள் குறைபாடுகளோ தவறுகளோ அல்லது பிடிக்காத செயல்களையோ செய்தால்
1.”இரு நான் உன்னைப் பார்க்கிறேன்… ” என்று வீரியத்தைத் தான் கூட்டும்…!
2.ஆனால் அவன் செய்யும் உணர்வைத் திருத்தி அமைக்கும் உணர்வு வராது.
அடித்தே திருத்த வேண்டும் என்று எண்ணம் தான் வரும். அவரை அறியாது செயல்படும் தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்ய வேண்டும் என்ற உணர்வு வராது.
சகஜ வாழ்க்கையில் நம்மை அறியாமலே உடல் வலுப்பெற்றாலும்
1.நம்முடைய எண்ணங்களுக்குள் தீமை வருவதை அடக்கத் தவறினால்
2.உடலுக்குள் புகுந்து நம் நல்ல குணங்களை அது அடக்கியே தீரும்.
பரிணாம வளர்ச்சியில் இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி வேதனையுடன் வாழும் நிலையே நமக்குள் வரும். இதையெல்லாம் மாற்றுவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தினைக் கொடுக்கின்றார்கள்.
உடல் வலுப்பெற்றது யானை… எனவே யானை உடலைப் போட்டு விநாயகரைக் காண்பித்துள்ளார்கள். தன் எண்ண வலுவால் பாதுகாக்கும் உணர்வு கொண்டு வளர்ந்தது.
1.அதாவது உடல் வலிமை கொண்டு தான் தன்னைப் பாதுகாக்கும் நிலை வந்தது.
2.அதன் வழி மனித உடலைப் பெற்றோம் என்பதற்குத்தான் யானையைப் போட்டுக் காண்பித்தார்கள்.
அவ்வாறு வளர்ந்த நாம்… மனிதனான பின் எண்ண வலு பெற்றவர்கள். நம் எண்ணத்தைக் கொண்டு எதை வேண்டுமென்றாலும் சாதிக்கலாம்.
ஆறாவது அறிவு கொண்டு பல கோடித் தீமைகளை அறிந்தாலும்… சிந்தித்து அதிலிருந்து விடுபட்டு “நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால்…” அதன் வழி நுகர்ந்து தீமைகளை அகற்றும் வலிமையும் வருகின்றது.
சில மருத்துவர்கள் நோய்களைப் போக்கப் புதிதாக மருந்து கண்டுபிடிப்பார்கள். நோயை நீக்கி பேரும் புகழும் பெற்றுச் சம்பாதித்து விடலாம் என்று செயல்படுத்துகின்றார்கள். சம்பாரித்த பின் அதிலே சந்தோசமும் படுகின்றார்கள்.
இருந்தாலும் குடும்ப வாழ்க்கை என்று வரும் பொழுது தன்னுடைய பையனைச் சரியாக வளர்க்கவில்லை என்றால்… அவன் தவறுகள் செய்வான்… கண்டபடி பணத்தைச் செலவழிப்பான்.
இவரோ சிரமப்பட்டு மருந்தைக் கண்டுபிடித்துச் சம்பாதித்து வைத்திருப்பார்கள். ஆனால் பையனோ வளர்ப்பின் நிலைகள் கொண்டு சேர்க்கையின் காரணமாக சில தாறுமாறான செயல்களைச் செயல்படுத்துவார்.
இந்த மருத்துவர் மற்றவர் நோய்களை எல்லாம் நீக்குவார்.
1.சம்பாதித்த காசைத் தேவை இல்லாமல் பையன் செலவழிக்கிறான் என்றால்
2.”கஷ்டப்பட்டுச் சாம்பாரித்தேன்… இப்படிச் செய்கிறானே…” என்று எண்ணி வேதனைப்படுவார்.
ஆனால் பையனுடைய தாயோ பாசமாக இருக்கும் நிலையில்… பையனை ஏன் சீறிப் பாய்கின்றீர்கள்…? நல்ல வார்த்தையைச் சொல்லுங்கள்…! என்று கணவனிடம் சொல்லும்.
நீ இப்படிப் பேசிப் பேசித்தான் அவனைக் கெடுத்து விட்டாய்…! என்று இந்த உணர்வின் வேகம் பையனின் தாயாரையும் திட்டும்படி செய்யும்.
தாய்ப் பாசம் கொண்டு கொஞ்சம் பொறுமையாகச் சொல்லுங்கள் என்று தாய் ஞாபகப்படுத்தும். “எல்லாம் உன்னால் தான் அவன் கெடுகின்றான்…” என்ற நிலை வந்துவிடும்.
1.எப்படிப் பார்த்தாலும் இந்த உணர்வுகள் நம்மை மாற்றிக் கொண்டே உள்ளது.
2.அதை அடக்கக்கூடிய சக்தி தெரிந்தும் நாம் அதை விட்டு விடுகின்றோம்.
நாம் அதைச் சீராகச் செயல்படுத்த வேண்டுமல்லவா…?
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.