தை…! இணைத்துவிடு…! துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லாவற்றிலும் இணைத்துவிட வேண்டும்

தை…! இணைத்துவிடு…! துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எல்லாவற்றிலும் இணைத்துவிட வேண்டும்

 

தை…! (தை மாதம்) என்றால் இணைத்தல் என்று பொருள். ஒரு நூலின் தன்மை கொண்டு இணைக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று இணைந்து கொள்கிறது. அதைத் தான் “தை…” என்று காட்டினர்.

இணைத்திடும் உணர்வின் தன்மை கொண்டு இணைந்து வாழச் செயல்படுத்துவது தான் அதன் நிலை. அன்றைய கால பாஷையில்
1.“தை” என்ற நிலையில் “இணைத்து விடு…” என்று பொருள்படும்படி
2.உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் நிலையாக
3.சுவைமிக்க நிலைகளை உருவாக்கும் நாள் என்று தைப் பொங்கல் என்று காட்டினார்கள்

ஒருவருக்கொருவர் பகைமையை மறந்து அருள் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து ஒளியின் உணர்வாக அத்தகைய பெரும் சக்தியை எவ்வாறு நமக்குள் வளர்த்தல் வேண்டும்…? என்பதைத் தெளிவாக்கும் நாள்தான் தைப் பொங்கல்.

அதிகாலையில் எழுந்து நான்கிலிருந்து ஆறு மணிக்குள் சூரிய உதயத்திற்குள் பொங்கல் வைத்துப் பழகுதல் வேண்டும். பண்டைய காலத்தில் அப்படித்தான் வைப்பார்கள்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். செல்லப்பிராணிகளை வைத்து அதை வணங்கும் முறையைக் காட்டி
1.அத்தகைய உயிரினங்களிலிருந்து தான் நாம் வளர்ந்து வந்திருக்கின்றோம்
2.மனிதனாக இன்று வந்திருக்கிறோம்…! என்று நினைவுபடுத்தும் நாள் தான் மாட்டுப் பொங்கல்.

அதாவது இன்று மனிதனாக இருக்கும் நிலையில் இதற்கு முந்திய நிலையில் நாம் எப்படி வாழ்ந்தோம்…? எப்படி வளர்ந்து வந்திருக்கின்றோம்..? இன்றைய மனித வாழ்க்கையில் அதை நாம் எப்படிச் செயல்படுத்துகிறோம்…? மற்ற உயிரினங்கள் எப்படி வாழ்கின்றது…? அதில் இருந்து வந்தவர்கள் தான் நாம்…! என்ற நிலை அங்கே தெளிவாக்கப்படுகின்றது.

காரணம்… ஒருவர் கஷ்டப்படுகிறார் என்று நாம் பார்த்தால் அவருடைய கஷ்டத்தை ஈகையால் நுகர்ந்து விட்டால் வேதனை உணர்வுகள் நமக்கு அதிகரித்துவிடும். நம்மையும் கஷ்டத்திற்குள் ஆழ்த்திவிடும்.

ஆகவே அந்த வேதனை நமக்குள் வராது தடுக்க அந்தப் பேரருள் பேரொளி பெற்ற அருள் ஞானிகள் உணர்வை நாம் ஈகையால் நுகர்ந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில்…
1.ஞானிகளின் அருள் சக்தியை அவர்களுக்குள் பாய்ச்சி
2.அந்த வேதனையிலிருந்து அவரும் விடுபட வேண்டும் என்று எண்ண வேண்டும்
3.வெறுமனே எண்ணினால் நம்மைத் தீமையின் நிலைக்குத் தான் அது ஆளாக்கும்.

உதாரணமாக ஒரு பொருளை வேக வைக்கிறோம் என்றால் சூடு அதிகமாகி விடுகின்றது. ஒரு உபகரணத்தையோ அல்லது துணியையோ வைத்துத் தொட்டால் தான் அதை நாம் எடுக்க முடியும். இல்லையென்றால் கையைச் சுட்டுவிடும். ஆகவே அதை நாம் பக்குவமான நிலையில் எடுக்க வேண்டும்.

அது போலத் தான் வாழ்க்கையில் நாம் தீமைகளைச் சந்திக்கும் போது அந்த அருள் ஞானிகள் உணர்வை வைத்துத் தான் அதைச் செயல்படுத்த வேண்டும்.

ஒருவன் வேதனையால் அவதிப்படுகிறான். கேட்டறிந்தவுடனே அது வந்து விடுகின்றது. நாம் நல்ல பண்புகள் கொண்டிருப்பினும் வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் நல்ல மனதையும் கெடுத்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

அகஸ்தியன் துருவனாகி… துருவ மகரிஷியாகி வாழ் நாளில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அந்த அரும் பெரும் சக்தியை யாரொருவர் நுகர்கின்றனரோ அந்த உணர்வினை வலுவேற்றி கொண்டால அடுத்து வரும் தீமை எதுவாக இருந்தாலும் அதை வளராது தடுத்து விடலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கூட்டினால் வேதனையை அகற்றிடும் சக்தியாக நமக்குள் வளரும்.

அரிசி இயற்கையில் சூரியனால் விளைந்தது தான். அதில் இருக்கக்கூடிய தோடை (உமியை) நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் அரிசியைத் தான் எடுத்து வேக வைக்கின்றோம்.

வேக வைப்பது எதற்கு…? வெறும் சுவைக்காக அல்ல…!

1.இயற்கையில் விஷத்தின் ஈர்ப்பால் அதனின் உணர்ச்சியைத் தூண்டி
2.அந்த உணர்வுக்கொப்பத் தான் அது விளைகின்றது.
3.ஆனால் வேக வைத்தாலோ தன் இனத்தை அது வளர்க்காது.

அதைப் போன்று வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால்… அது நமக்குள் வளராது அடக்க வேண்டுமென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் இணைத்து
2.அதை வேக வைக்க வேண்டும்.
3.அதனின் இயல்பை மாற்றி மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாக நாம் வளர்க்க வேண்டும்.

அது தான் ஞானிகள் அடைந்த வேகா நிலை என்பது.

Leave a Reply