Monthly Archives: March 2017
சிவ தத்துவம்
Image

- “நந்தீஸ்வரன்” சிவனுக்குக் கணக்குப்பிள்ளை
நம்மை ஈசன் உருவாக்கினான் என்று நாம் தெரிந்து கொண்டோம்.
பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி அந்த வினைகளுக்கு நாயகனாக தீமைகளை நீக்கும் மனித உடலைத் தந்தது என்பதைத் சிவ தத்துவத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் சிவ தத்துவத்தில் “நந்தீஸ்வரன்.., சிவனுக்குக் கணக்குப்பிள்ளை” என்று வைத்தது.
நந்தீஸ்வரன் என்றால்.., “சுவாசித்ததை” உயிர் என்ற ஈசன் உருவாக்கும். நம் உடலுக்குள் போனவுடன் “அதே குணத்தை” உருவாக்கும்.
கோபப்படுவோரைப் பார்த்தோம் என்றால் உயிர் அதை அணுவாக உருவாக்குகின்றது. திரும்பத் திரும்ப வளர்க்கப்படும் பொழுது கோபமான உணர்வு அதிகமாகி.., “அந்தக் கணக்கின்படி” நமக்கு இரத்தக் கொதிப்பு வருகின்றது.
அந்த இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால்.., சாப்பாடு கொண்டு வந்தார்கள் என்றால், “வள்..,” என்று கத்தச் சொல்லும்.
உதவி செய்தார்கள் என்று எண்ணச் செய்யாது. புலி எப்படி உறுமித் தாக்குகின்றதோ அது போல நம்மை இயக்கும்.
நாம் ஒவ்வொரு உடல்களிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் கடைசியில் மனிதனாக உருவாக்கியது, இந்த உயிரான ஈசனால் வளர்க்கப்பட்ட நிலைதான்.
ஆனால், தீமையை நீக்கும் சக்தி பெற்ற இந்த மனித உடலில் வேதனை என்ற உணர்வு ஆகி “அந்தக் கணக்குக் கூடினால்” உயிர் என்ற ஈசன் உடலை விட்டுச் சென்றபின் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்ப.., “தீர்ப்பு”.
நீ இதை எடுத்ததனால் அங்கு சென்று பிறந்து பழகு, நீ கஷ்டத்தை அனுபவி. “கஷ்டத்தில் இருந்து மீண்டு வந்தாய்.., கஷ்டத்தை நீ அனுபவி..,” என்று உயிர் உருவாக்கிவிடும்.
நாம் நினைக்கலாம். கோர்ட்டில் ஏறிப் “பொய் சாட்சி” சொல்லலாம் என்று. ஆனால், உயிரிடம் மட்டும் யாரும் தப்ப முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது.
அதனால்தான்…, சிவதத்துவத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் “கணக்குப்பிள்ளை” என்று இவ்வளவு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
- பிறர் உணர்வு.., பிற தோஷம் – பிரதோஷம்
அந்தக் கணக்கின்படி பிறருடைய கஷ்டங்களையும் வேதனைகளையும் நாம் கேட்கின்றோம். அவைகள் “பிற.., தோஷங்களாக” நமக்குள் வந்துவிடுகின்றது.
ஒருவர் மேல் அன்பாக இருக்கின்றோம். அவர் வேதனைப்படுவதை நாம் நுகர்ந்தால் நம் உடலில் தோஷம் வந்துவிடுகின்றது. நம் உடலின் அணுக்களில் பட்டபின் வேதனைதான் படுகின்றோம்.
பிரதோஷத்தை எப்படிப் போக்குவது என்று சிவன் ஆலயத்தில் காட்டப்படுகின்றது.
நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்றால் மாலை 4 மணிக்கு ஆலயத்திற்குச் சென்று விளக்கு பூஜை வைத்து அர்ச்சனை செய்து விரதம் இருந்து ஈசனுக்கு அபிசேகம் செய்தபின் நந்தியிடம் சென்று அதன் காதில் சொல்கின்றோம்.
அதாவது, நான் எல்லோருக்கும் நன்மைகள் தான் செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால், குடும்பத்தில் நோயும் கஷ்டமும் வந்து கொண்டிருக்கின்றது.
என் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன்.., என்கின்றான். “இதையெல்லாம்.., நீ போய் ஈசனிடம் சொல்..,” என்று பிறர் தோஷத்தைக் கழிப்பதற்கு மாறாக அங்கும் அதை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.
நமக்குள் அந்த நந்தீஸ்வரன் எதுவாக இருக்க வேண்டுமென்றால், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று நந்தி நமக்குள் சென்று “அகஸ்தியன் எப்படித் தீமைகளை நீக்கினானோ’ அதைப் போல நமக்குள் தீமைகளை நீக்க வேண்டும்.
(பிறதோஷங்களை எல்லாவற்றையும் நீக்கி ஒளியின் சரீரமாக அகஸ்தியன் தான் இன்று துருவ நட்சத்திரமாக உள்ளான்)
அப்படி நீக்குவதற்கு நாம் எப்படிச் சுவாசிக்க வேண்டும்? என்பதற்காகக் காட்டுகின்றார்கள். காலை 4 மணிக்கு துருவ நட்சத்திரத்தின் பால் நினைவினைச் செலுத்தி அதிலிருந்து வெளிவரும் பேரருள் பேரொளியை நாம் கவர்தல் வேண்டும்.
அதை எடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தியைப் பெறவேண்டும் என்று உடலை உருவாக்கிய அணுக்களுக்கு “இப்படிச் சாப்பாடு கொடுக்க வேண்டும்”.
அடுத்து நாம் யாரையெல்லாம் சந்தித்தோமோ அவர்கள் குறைகளையும் வேதனைகளையும் கேட்டறிந்தோமோ அவர்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
அவர்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் என்று இப்படி எண்ணி நமக்குள் சேர்த்து அந்த மூச்சலைகளை அவர்கள் பால் பாய்ச்ச வேண்டும்.
அப்பொழுது.., யாருடைய உணர்வுகளும் “நமக்குள் தோஷமாக மாறாது”. இந்தக் கணக்கின் பிரகாரம் எந்தத் துருவ நட்சத்திரத்தினை அதிகமாக எண்ணினோமோ சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப அதன் ஈர்ப்பு வட்டத்தில் இணைவோம்.
அழியாத நிலைகள் பெறுவோம். பேரானந்த நிலையில் என்றுமே வாழ்ந்திட முடியும்.
உயிரால் உருவாக்கப்பட்ட மனித உடலை “எனது…” என்று சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது

உயிரால் உருவாக்கப்பட்ட மனித உடலை “எனது…” என்று சொந்தம் கொண்டாட யாருக்கும் உரிமை கிடையாது
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் நாம் நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பான உணர்வுகள் சேர்த்துச் சேர்த்து வளர்ந்து வந்தோம்.
அப்படி எடுத்துக் கொண்ட பாதுகாக்கும் உணர்ச்சிக்கொப்ப இந்த உடல்களை அமைத்துக் கொடுத்தது நம் உயிர் தான்,
அந்த உடல்களை அமைத்து எல்லாவற்றையும் பாதுகாக்கும் மனித உருவை உருவாக்கிய உயிருக்கு உரிய மரியாதையை நாம் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் அறியும் உணர்வுகளும், தீமையை அகற்றும் உணர்வுகளும், தீமையை அகற்றும் சக்திகளும் தந்த.., “நம் உயிரான ஈசனை” நாம் மதித்தல் வேண்டும்.
அவனால் உருவாக்கப்பட்டு மனித உடலாக உருவாக்கியபின் “இந்த மனித உடலை.., எனது..!” என்று சொந்தம் கொண்டாட யாருக்குமே உரிமை கிடையாது.
ஆக.., “அவனுக்குச் சொந்தமானது தான்.., இந்த உடல்”.
அவனை வைத்தே தான் நாம் வாழ்கின்றோம். “நாம் எதனை விரும்புகின்றோமோ..,” அதனையே தான் செயலாக்குகின்றான் நமது உயிர் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே சமயத்தில் உயிர் என்றுமே அழியாது. ஏனென்றால் உயிர் நட்சத்திரங்களால் உருவானது.
ஆனால், சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப இந்த உடல்கள் தான் மாறுகின்றது. உயிர் என்றுமே மாறாதது.
இதைத் தெளிவாக அறிந்துணர்ந்த மெய்ஞானிகள் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி “உயிர் வேறல்ல.., நான் வேறல்ல..,” என்ற நிலை எய்தி என்றும் பதினாறு என்ற நிலையில் “பேரொளியாக” வாழ்கின்றார்கள்.
அந்த மெய்ஞானிகளைப் போன்றே நாமும் உயிரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். உயிர் எப்படி ஒளியாக அழியாத நிலைகள் கொண்டு இருக்கின்றதோ நாமும் அத்தகைய நிலையை அடைதல் வேண்டும்.
இதுவே மனிதனாக உருவாக்கிய நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்யவேண்டிய சேவை. இதன் பலனாக நாம் பிறவியில்லா நிலை அடையலாம்.
அகண்ட அண்டத்திலே என்றுமே அழியாத நிலைகள் கொண்டு பேரானந்தப் பெருவாழ்க்கை வாழலாம்.
மனிதனை முழுமை அடையச் செய்யும் “அகஸ்தியமாமகரிஷியின் செயலாக்கங்கள்”
Image

மனிதனை முழுமை அடையச் செய்யும் “அகஸ்தியமாமகரிஷியின் செயலாக்கங்கள்”
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கே நம் பூமியில்.., “அகஸ்தியன் நடந்து சென்ற பாறைகளிலே” அங்கே சென்று குருநாதர் காட்டுகின்றார்.
அகஸ்தியன் ஒவ்வொரு காலங்களிலும் இன்று நாம் பாபநாசம் என்ற நிலைகளிலும் அங்கே பெரும்பகுதி அகஸ்தியன் சுழன்ற நிலையும் அதே போன்று “காவிரி” என்ற திருநகரில் அங்கேயும் அகஸ்தியனின் சுழற்சி வட்டங்கள் ஜாஸ்தி.
இதைப் போல “இமயமலையிலும்” சில பகுதிகளில் “அவர் பெரும்பகுதி சுழன்ற இடங்கள் உண்டு..,” என்பதை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டுகின்றார்.
“அந்தந்த இடங்களில்..,” அகஸ்தியர் சுழன்று வந்த உணர்வுகள் “வேகா நிலை” என்று அழிந்திடாத நிலைகளில் இன்றும் உண்டு.
“சாகாக்கலை” என்று மந்திரங்களால் உருவாக்கப்பட்ட நிலைகள் இந்தப் பூமியிலே படர்ந்திருந்தாலும் அவைகள் எல்லாம் அழிந்துவிடுகின்றது. அதே சமயத்தில் சாகாக்கலை என்ற நிலைகளால் விஷத் தன்மைகளே படர்கின்றது என்பதைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.
வேகாக்கலை என்ற நிலையில் அந்த மகரிஷிகள் அவர்கள் பெற்ற உணர்வின் ஆற்றலையும் காட்டுகின்றார்.
எவ்வாறு உயிர் ஒளியின் துடிப்பாக இருக்கின்றதோ அதைப் போல உயிரின் உணர்வின் தன்மைகள் கொண்டு இணைக்கும் சக்தியாக நஞ்சினை அடக்கி அதே சமயம் “வைரம்.., ஒளியின் சுடராக” இருப்பது போல உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றியதையும் காட்டுகின்றார் குருநாதர்.
வாழ்க்கையில் சந்தர்ப்பவசத்தால் நஞ்சான உணர்வுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும் அந்த ஞானிகள் “விண்ணுலக ஆற்றலை எடுத்து” அதன் மேல்.., “அடுக்கடுக்காகப் பரப்பி” உணர்வின் ஆற்றலை இந்த வாழ்க்கையில் வந்த நஞ்சினை.., “அதை ஒடுக்கியது எவ்வாறு?” என்றும் காட்டுகின்றார்.
நஞ்சினை ஒடுக்கிய உணர்வின் தன்மையை வளர்த்து அந்த உணர்வின் ஒளி அலையாக தன் உயிருடன் அது ஒன்றி இன்றும் துருவத்தைக் கண்டுணர்ந்து துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி அதனின் துணை கொண்டு “ஒளியின் சிகரமாக.., இன்று அகஸ்தியன் இருப்பதையும் காட்டுகின்றார்”.
அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்தறிந்து துருவ உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி “துருவ மகரிஷியாக” ஆனான்.
எந்தத் துருவத்தின் நிலையை அவன் ஈர்ப்பாக எடுத்தானோ பூமிக்குள் வரும் இந்த நஞ்சினை மற்றதை விளையாது அதையே தனக்குள் மாற்றியமைத்து துருவ மகரிஷி “துருவ நட்சத்திரமாக.., இன்றும் சுழன்று கொண்டுள்ளான்” என்பதைக் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.
அகஸ்தியர் உணர்த்திய அந்த உணர்வின் வழி கொண்டு அவனைப் பின்பற்றியவர்கள் இன்று விண்ணுலகில் “சப்தரிஷி மண்டலம்..,” அவருடைய ஈர்ப்பு வட்டத்தில் ஒளியாக எவ்வாறு சுழன்று கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலையையும் காட்டுகின்றார்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் முழுமையான உணர்வின் தன்மை பெறச் செய்து “முழுமையாக்கிய உணர்வின் சத்தை” அது எவ்வாறு அங்கே தனது ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்திற்குள் “அழைத்துச் செல்கிறார் அகஸ்தியர்..,” என்று தெளிவாகக் காட்டுகின்றார் குருநாதர்.
அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் அனைவரும் பெறுவோம்.
நாம் அனைவருமே அந்த அகஸ்தியன் சென்ற பாதையில் செல்வோம். நாம் பிறந்த பயனை பலனை அடைவோம். என்றுமே அழியாத நிலைகள் கொண்டு.., “ஒளியாக நிலைத்திருப்போம்”.
அந்த “அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்தில்” மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.
பாபநாசத்தில் பதிவாகியுள்ள அகஸ்தியரின் ஆற்றல்கள்

பாபநாசத்தில் பதிவாகியுள்ள அகஸ்தியரின் ஆற்றல்கள்
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் “வான இயல் புவிஇயல் உயிரியல்” அனைத்தையும் அறிந்தவன்.
அகஸ்தியன் தனக்குள் பேரண்ட இயக்க உணர்வின் தன்மையை எப்படிக் கற்றான்? இந்த உணர்வின் ஈர்ப்புத் தன்மை அவன் உடலிலே எப்படி வந்தது? என்ற நிலையை எல்லோரும் அறிய முடியும்.
அவன் நட்சத்திரங்களின் இயக்கங்களையும் கோள்களின் இயக்கங்களையும் தன்னில் அறிந்தவன். வான இயல் தத்துவம் புவிஇயலின் நிலைகளாக எவ்வாறு மாறுகின்றது என்பதையும் அறிந்து கொண்டான்.
விண்ணுலக ஆற்றல் அது புவியியலுக்குள் வந்து அது கலக்கப்படும் பொழுது “தாவர இனங்களாக..,” புவியியலாக எப்படி மாறுகின்றது? என்பதையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.
இவ்வாறு அவன் தனக்குள் அறிந்த “உணர்வின் எண்ண அலைகளை” இன்று நீங்களும் பார்க்கலாம், உணர முடியும்.
ஏனென்றால், இதெல்லாம் ஆரம்பக் காலங்களில் அவருக்குள் விளைந்த உணர்வின் தன்மையை அது வெளியில் படர்ந்திருப்பதை நாம் நுகர முடியும்.
இன்று நாம் ரேடியோக்களிலும் டி.விகளிலும் நாம் எப்படி ஒலி ஒளியைக் காணுகின்றோம்?
காந்த ஈர்ப்பு கொண்ட நாடாக்களில் இயந்திரத்தின் மூலம் ஒலி ஒளியாக அது பதிவு செய்து அதற்குண்டான சாதனங்களை வைத்து ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது சூரியனின் காந்தப் புலன் கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.
பின்.., நாம் அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அதனின் தொடர் கொண்டு இதைக் கவர்ந்து உருவங்களைப் பார்க்கின்றோம். ரேடியோ டி.விக்களில் பாடல்களை நாம் கேட்கின்றோம். பல உருவங்களையும் நாம் காணுகின்றோம்.
இதைப் போலத்தான் அன்று வாழ்ந்த அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இன்றும் இங்கே படர்ந்துள்ளது. சூரியனின் காந்தப் புலனறிவுகள் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
நாம் அதைக் கவரும் தன்மை வரப்படும் பொழுது அந்த அருள் ஞானியின் உணர்வுகளைப் பார்க்கும் திறனும் நமக்குள் வருகின்றது.
நமக்குள் “அருள் ஞானத்தின் அடர்த்தியின் வளர்ச்சி..,” எவ்வளவு வருகின்றதோ அதன் தொடர் கொண்டு இந்த உணர்வின் வலிமை கொண்டு இந்தக் “காற்றிலே மிதந்திருக்கக்கூடிய.., மெய்ஞானிகளின் உணர்வலைகள” நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.
நீங்கள் அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்களைப் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.
ஏனென்றால், ஒவ்வொரு தன்மையும் நமக்குள் எது பதிவாகின்றதோ அந்தப் பதிவின் தன்மை எண்ணங்கள் வரப்படும் பொழுதுதான் அதை நுகரும் ஆற்றல் வருகின்றது.
“ஒருவன் தீமை செய்தான்” என்று நாம் பதிவு செய்து கொண்டால் நம் உடல் சோர்வடையப்படும் பொழுது அந்தத் தீமை செய்தோனின் நினைவு வருகின்றது.
அப்பொழுது அவனை எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வந்து நம்மையறியாமலே நம் உடலுக்குள் நடுக்கமும் பல தீமைகளும் உருவாகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டிட வேண்டும்.
அதைப் போன்றுதான் அகஸ்தியமாமகரிஷியைப் பற்றி உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். உங்களுக்குள் பதிவாக்கிய இந்த நினைவு கொண்டு நீங்கள் எண்ணினால் “உங்கள் நினைவாற்றல்” அந்த அகஸ்தியன் பால் செல்லும்.
அதன் மூலம் அகஸ்தியர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகளையும் விண்ணை நோக்கி எடுத்த அந்த துருவத்தின் ஆற்றலையும் நீங்கள் பெற முடியும்.
அகஸ்தியன் துருவ மகரிஷியான பின் அவரில் விளைந்த உணர்வுகளும் இங்கே பரவியுள்ளதை “இதை வரிசைப்படுத்தி” உங்களில் இதை நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் இங்கே பாபநாசத்திற்கு வரவழைக்கச் செய்தது.
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியர் “அவரின் பாதம் பட்ட இடங்களில்.., அவரின் ஆற்றல்கள்.., இங்கே தரையிலும் பதிவாகியுள்ளது”. அவரின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அவருடைய அருள் உணர்வுகள் இங்கே சுழன்று கொண்டுள்ளது.
“அதைப் பெறவேண்டும்” என்பதற்குத்தான் சிறுகச் சிறுக உங்களின் நினைவாற்றலை அகஸ்தியர் வாழ்ந்த காலங்களுக்குக் கொண்டு செல்கின்றோம்.
அதன் மூலம் அவர் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பதிவின் துணை கொண்டு அவர் ஆற்றலைப் பெறச் செய்கின்றோம்.
இப்பொழுது இதைப் பதிவாக்கும் பொழுது உங்களின் நினைவின் ஆற்றல் அகஸ்தியமாமகரிஷியின் அருள் சக்திகளைப் பருகும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.
இந்தத் தகுதி பெற்றுவிட்டால் நீங்கள் “எங்கே சென்றாலும்” அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருளாற்றலை எளிதில் பெறலாம்.
பெற்று அந்த அகஸ்தியனைப் போன்று உலகைக் காக்கும் மெய்ஞானியாக அருள் மகரிஷியாக விண்ணிலே என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்தமாக வாழலாம்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

