துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் விண்வெளியில் உள்ள நஞ்சோ சூரியனோ கோள்களோ ஏனைய எதுவும் மறைக்க முடியாது…!

Image

FIRE MEDITATION

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் விண்வெளியில் உள்ள நஞ்சோ சூரியனோ கோள்களோ ஏனைய எதுவும் மறைக்க முடியாது…!

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். அவர் அப்படித் தெரிந்தாலும்
1.இந்த உலகம் எப்படிப் பித்தான நிலைகள் இருக்கின்றது…! என்று
2.தன் உடலுக்குள் இருக்கும் மறைந்த உணர்வுகளைக் காட்டி
3.அந்தப் பித்தான நிலைகள் நீக்கி அவரின் உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் போதுதான்
4.அவருடைய உண்மையின் நிலைகளை நான் (ஞானகுரு) அறிய முடிந்தது.

அவரைப் பித்தனாகத் தான் நான் பார்த்தேன். ஆனால் அவருக்குள் இருந்த மெய் உணர்வின் தன்மை
1.நம்மைப் பித்தனாக்கும் உணர்வை நீக்கும் உணர்வின் ஆற்றல் கொண்டது என்பதைப்
2.பின்னாடி தான் என்னால் உணர முடிந்தது.

குருநாதர் அவர் பெற்ற மெய் உணர்வை எமக்குள் உபதேசித்து அந்த உணர்வின் தன்மையையைப் பதியச் செய்தார். பதிவு செய்ததை வளர்த்துக் கொண்டேன்.

அவர் கொடுத்த ஞான வித்தை வளர்க்கும் தன்மைக்குத் தான் உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்.
1.நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்தான் நான் அதன் வழிகளில் வளர முடியும்.
2.நான் தெரிந்து கொண்டேன்…! என்ற நிலைகளில் சொல்லிக் கொண்டிருந்தால்
3.நான் அழிந்து கொண்டு தான் இருக்க முடியுமே தவிர வளர்ந்திடும் நிலை இல்லை.
4.உங்கள் வாழ்க்கையில் எல்லா நலமும் பெறவேண்டும்
5.உயர்ந்த வாழ்க்கை நீங்கள் வாழ வேண்டும்
6.நீங்கள் இருள் நீக்கி மெய்ப் பொருள் காண வேண்டும்.
7.மெய் வழியில் நீங்கள் என்றுமே சென்றிட வேண்டும் என்ற இந்த உணர்வின் நிலைகள் கொண்டு
8.நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற நிலையில் குருநாதர் ஆணைப்படி
9.அதை வளர்க்கும் நிலைகளிலே வளர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

அது போன்று நீங்களும் உங்களை ஆண்டு கொண்டு இருக்கும் உயிரை ஈசனாக மதித்து அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் நுகர வேண்டும். எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் மணங்களை நாங்கள் நுகர வேண்டும். எங்கள் உயிரான ஈசனுக்குள் அந்தச் சக்திகள் படர வேண்டும். அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு மெய் ஞானிகள் அருள் வழியில் நாங்கள் செல்ல வேண்டும் என்ற இதை எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். மனித நிலைகளிலிருந்து மீண்டு ஒவ்வொருவரும் பிறவியில்லா நிலை எப்படி அடைவது என்பதைக் காட்டுவதற்காகத்தான் ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள்.

அதே சமயத்தில் அந்தக் கருத்தினை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக இராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்களையும் படைத்தார்கள்.

உலக நிலைகளில் ஒவ்வொன்றும் மோதல் ஆவதை மகாபாரதப் போராகக் காட்டி அது அனைத்தையும் கண் நுகர்ந்து பார்த்து இதிலிருந்து விடுபடும் நிலையை அதே கண்களே நமக்கு வழி காட்டுகிறது என்று கண்ணனைக் காட்டுகின்றார்கள்.

அதே சமயத்தில் மகாபாராதப் போரைக் கண்ணன் (கண்கள்) தான் வழி நடத்தினான் என்ற உண்மையை உணர்த்துகின்றார்கள். கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் அனைத்தையும் கண்ணன் கீதா உபதேசமாகச் செய்கின்றான் என்றும் அந்தக் காவியங்கள் மூலம் உணர்த்துகின்றார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படு அந்த மெய் ஞானிகளின் அருள் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்று நாம் கண்ணனிடம் (கண்களிடம்) வேண்டினால்
1.எட்டா தூரத்தில் விண்ணுலகில் இருக்கும் அந்த மெய் ஞானிகளை எட்டிப் பிடித்து
2.நம் கண்ணின் நினைவலைகள் கொண்டு அந்தச் சக்திகளைக் கவர்ந்து உடலுக்குள் செலுத்தும் பொழுது
3.உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் ஒளியான உணர்வைப் பெறச் செய்கின்றது.

துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் அவர்கள் பெற்ற சக்திகளை எந்த நஞ்சின் தன்மையும் மறைக்க முடியாது எந்தக் கோளும் மறைக்க முடியாது. எந்தச் சூரியனும் அதை மறைக்க முடியாது. அவைகளை யாரும் அழிக்க முடியாது. அழியாத நிலைகள் கொண்டது தான் துருவ நட்சத்திரமும் அதனின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலங்களும்.

ஏனென்றால் விண்ணிலிருந்து வரும் அந்த நஞ்சின் தன்மையை அவர்கள் உணவாக எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்.

அவர்கள் பெற்ற அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்து வளர்த்துக் கொண்ட பின் இந்த உடலை விட்டு நம் உயிராத்மா சென்றாலும் மற்ற நஞ்சின் தன்மை நமக்குள் வந்தாலும் அதை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் நாமும் பெறுகின்றோம். அதாவது
1.எரியும் நெருப்பிற்குள் ஒரு இருள் சூழ்ந்த பொருளைப் போட்டால்
2.அதுவும் பற்றி நெருப்பாக எரிவது போல
3.எத்தகைய நஞ்சின் தன்மை வந்தாலும் அதனை வீழ்த்தி
4.ஒளியின் சுடராகப் பெறும் தகுதியாகப் பெற வேண்டும்.

ஆகவே உயிருடன் ஒன்றிய ஒளியின் சுடராகப் பிரகாசமான நிலைகள் பெற வேண்டும் என்று நீங்கள் உங்கள் எண்ணத்தில் ஆழமாக ஊன்றி அதன் வழியில் வளர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு உங்கள் அனைவருக்கும் அந்த ஆற்றல்கள் கிடைக்க வேண்டும் என்று நானும் தியானிக்கின்றேன். நீங்களும் அது போல் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

நாம் சுவாசிக்கும் சுவாசத்திலிருந்து (காற்றிலிருந்து) ஒலி ஒளி உணர்ச்சி எப்படி வருகின்றது…? நாம் ஒன்றை எப்படி அறிந்து கொள்கின்றோம்…?

Image

Transaction of our soul

நாம் சுவாசிக்கும் சுவாசத்திலிருந்து (காற்றிலிருந்து) “ஒலி ஒளி உணர்ச்சி எப்படி வருகின்றது…? நாம் ஒன்றை எப்படி அறிந்து கொள்கின்றோம்…?”

 

கெமிக்கல் கலந்த ஈர்க்கும் காந்தத் தன்மை கொண்ட நாடாக்களில் விஞ்ஞான அறிவு கொண்டு (CD, MEMORY DRIVES) நம் எண்ணங்களையோ அல்லது பாடல்களையோ பதிவு செய்வதற்காக வேண்டி ஒரு காந்த ஊசியைக் (LASER) கொண்டு அதற்குள் உராயும் உணர்வின் ஒலிகளைப் பதிவாக்குகின்றார்கள்.

பாடல்களையோ மற்ற பேச்சுக்களையோ இப்படித்தான் பதிவு செய்கிறோம். அதிலிருந்து மீண்டும் காந்தப் புலனால் ஈர்க்கப்பட்டு அதற்குரிய சாதனத்துடன் (SCREEN, SPEAKER) இணைத்தால் எதைப் பாடினோமோ அதன் உணர்வாக ஒலி/ஒளி வருகின்றது.
1.அதை வேகமாகச் சுழற்றினால் அதிலிருந்து வெளி வரும் குரலோ இசையோ படமோ மாறுகின்றது.
2.நம் உணர்வுக்கொப்ப சமமாக்கினால் இனிமையாகின்றது.
3.அதே சமயத்தில் வேகம் குறைவானால் அந்தக் குரலின் தன்மை மாற்றமாகின்றது. இதை நாம் பார்க்கின்றோம்.
4.ஆகவே சுழற்சிக்குத் தக்க வெளிப்படும் அந்த உணர்வின் ஒலி அலைகள் மாறுகின்றது.

இவ்வாறு இயந்திரத்தின் துணை கொண்டு நாடாக்களில் பதிவு செய்து ஒலி/ஒளிக் கற்றைகளை வெளிப்படுத்தும் பொழுது இதிலே எந்தக் கெமிக்கல் கலந்த உணர்வினை இயக்குகின்றானோ அந்த அலைகளைப் பரப்புகின்றது.

அதைச் சூரியனின் காந்தப் புலன்கள் இழுத்துக் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. காற்றிலே சிற்றலைகளாகப் படர்கின்றது. அதனுடைய இயக்கத் தொடரில் அதைக் கவர்ந்து செயல்படும் ஏரியலை அல்லது ஆண்டென்னாவை வைக்கின்றார்கள்.

ரேடியோவோ டி.வி.யோ அல்லது கம்ப்யூட்டரோ அதற்குள் இந்த ஆண்டென்னாவை இணைத்தவுடன் இதிலுள்ள காந்தப் புலன் கவர்ந்து ட்ரான்சிஸ்டரால் கவரப்பட்டு விட்டால் அது ட்ரான்சாக்சன் செய்து
1.ஒலி/ஒளி அலைகளை மற்ற உணர்வுடன் வடிகட்டித் தனித் தனியாக அனுப்புகின்றது.
2.பேச்சுகளையோ பாடல்களையோ படங்களையோ அதன் மூலம் நாம் பார்க்கலாம்.
3.நம் உயிரும் இதைப் போன்று தான் இயக்குகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப் புலனறிவால் பிறருடைய நிலைகளை நாம் நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சிகளை ஊட்டி அந்த உணர்வின் அறிவாக
1.நம்மை இயக்கவும் செய்கின்றது
2.நம்மை அறியவும் வைக்கின்றது.

நாம் நுகரும் உணர்வுகள் உயிருக்குள் இருக்கும் நுண்ணிய நிலைகளில் பட்டவுடன் அது ட்ரான்சிஸ்டரைப் (TRANSISTOR) போன்று ட்ரான்சாக்சன் (TRANSACTION) செய்கிறது.

அதாவது சுவாசித்த உணர்வுகளுக்குள் (காற்று) இருக்கும் ஒலி… ஒளி அவைகளை வடிகட்டி அந்த உணர்ச்சிகளை ஊட்டி அதைச் சிறுமூளைப் பாகத்திற்கு அனுப்பி மொத்த உடலையும் இயக்குகின்றது.

அதற்குப் பின் நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து அது எந்தக் குணத்தின் உணர்வோ கருவாகி உருவாகி அணுவின் தன்மையாக நம் இரத்த நாளங்களில் சேமித்துக் கொள்கின்றது.

1.இரத்த நாளங்களில் உள்ள அணுக்கள் அதன் பசிக்கு உந்தும் பொழுது
2.அதனின் உணர்ச்சிகள் சிறு மூளைக்கு எட்டப்பட்டு
3.கண் காது மற்ற புலனறிவுகளுக்கு ஆணையிடப்பட்டு
4.மீண்டும் காற்றிலிருந்து அதே இனமான உணர்வுகளைக் கவரச் செய்கின்றது.
5.இப்படித்தான் நம்முடைய சுவாசம் எண்ணம் சொல் செயல் இயக்கம் எல்லாமே இயங்குகின்றது.

மெய் ஞானிகளின் உணர்வை உயிர் வழியாக நாம் கவர்ந்தால் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் இயக்கமாகி அதனின் அறிவாக நாம் மெய் ஞானிகள் கண்ட மெய்யை உணர முடியும்.

அதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மெய் ஞானத்தின் அறிவை விஞ்ஞான அறிவுடன் இணைத்துக் காட்டுகின்றோம்.

ஆறாவது அறிவை… “டாக்டராகப் பயன்படுத்தி…!” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்

Image

sixth and seventh sense

ஆறாவது அறிவை… “டாக்டராகப் பயன்படுத்தி…!” உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளுங்கள்

 

இன்ஜினியருக்காகப் படிக்க வேண்டும்… டாக்டருக்காகப் படிக்க வேண்டும்… அதன் வழியில் செல்வத்தைச் சம்பாரித்து வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற ஆசையில் கல்விச் சாலைகளுக்கு சென்று மற்றவர்களைக் காட்டிலும் உயர்ந்து வாழ வேண்டும் என்று எல்லோருமே செயல்படுத்துகின்றனர்.

அப்படிப் படித்திருந்தாலும் வாழ்க்கையில் வேதனை என்ற நஞ்சு ஊடுருவி விட்டால் உடனே படித்த நிலைகள் அனைத்தும் செயலிழந்து அந்த வேதனையான உணர்வுகளே மிஞ்சி வாழ்க்கை நலிவடைந்து உயிரான்மா நஞ்சு கொண்டதாக மாறுகின்றது.

ஏனென்றால் உயிரான்மாவில் பட்ட நஞ்சினை நீக்கும் திறன் நாம் கல்விச் சாலையில் படித்த படிப்பில் இல்லை.

உதாரணமாக ஒருவர் நோயினால் அவதிப்படுகிறார் என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றோம். நோயிலிருந்து மீட்கத் தன் ஆறாவது அறிவான அந்த டாக்டரை வைத்துத் தான் அவரை அங்கிருக்கும் மருத்துவர் காக்கின்றார்.
1.அதாவது நம்முடைய ஆறாவது அறிவு… என்ற “டாக்டரின்” துணை கொண்டு
2.நாம் எதை எதையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோமோ
3.அதைத் தான் நமக்குள் செயல்படுத்தும்.

அத்தகைய ஆறாவது அறிவைத் தெளிவாக்கி அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை அதை வளர்க்கச் செய்யும் நிலைகளுக்குத்தான்
1.நஞ்சினை நீக்கி உணர்வினை ஒளியாக்கிய
2.மெய் ஞானிகளின் உணர்வைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

ஒளியுடன் உயிர் தொடர்பு கொண்ட நிலைகள் கொண்டு நம் உணர்வினை ஒளியாக்குவோம்.

எந்தக் கோள் எதனுடைய நிலைகளில் வந்தாலும் சூரியன் அவைகளை எடுத்து ஒளியின் சிகரமாக மாற்றுகிறது. அதே போல் இருபத்தியேழு நட்சத்திரங்களும் விண்வெளியிலிருந்து வெளி வரும் நஞ்சினை மாற்றி ஒளிக்கதிராக மாற்றி நம் பிரபஞ்சத்திற்குகந்ததாக அனுப்புகிறது.

அதைப் போல் நம் உடல் கோளாக இருந்தாலும் உயிர் சூரியனைப் போன்று தனக்குள் வருவதை இயக்கினாலும் மனிதனுக்குள் எண்ணிய எண்ணங்கள் நட்சத்திரம் போன்று உணர்த்தினாலும்
1.காத்திடும் உணர்வு கொண்ட ஒளியாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் நுகர்ந்து
3.பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்ற சிருஷ்டிக்கும் நிலைகள் கொண்ட
4.நம் ஆறாவது அறிவினைச் செம்மைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரம் விண்ணிலே எட்டாத தூரத்தில் இருந்தாலும் அதிலிருந்து வெளிவரும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியில் படர செய்து கொண்டிருப்பதை நமக்கு முன்னாடி சுழன்று கொண்டிருப்பதை நாம் பருகிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்து வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலையை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையில் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

ஆகவே ஆறாவது அறிவை நீங்கள் டாக்டராகப் பயன்படுத்தி நஞ்சினை நீக்கிடும் ஆற்றலாக ஒளியினைப் பருகும் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் பெருக வேண்டும் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

நம்முடைய ஜாதகம் எப்படி உருவாக்கப்படுகிறது…?

Image

horoscope-of-rishis

நம்முடைய ஜாதகம் எப்படி உருவாக்கப்படுகிறது…?

ஒரு குழந்தை பிறக்கும் போது அந்த நேரத்தைக் குறித்து வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்தக் குழந்தை இன்ன நட்சத்திரம் இன்ன இன்ன இராசி என்பார்கள்.

அதன் அடிப்படையிலே வைத்து ஜாதகம் எழுதுவார்கள். எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஜாதகத்தை எழுதுகிறார்கள். ஜாதகம் எழுதாதவர் பெரும்பகுதி யாரும் இல்லை.

அவ்வாறு எழுதிய ஜாதகத்தின் பிரகாரம் பிறந்த குழந்தையின் நட்சத்திரத்திம் கோளுக்கு (இராசிக்கு) இன்ன இன்னது ஆகாது என்ற நிலைகள் ஏற்கனவே எழுதிய குறிப்பை வைத்துக் கொண்டு குழந்தையின் வாழ்க்கை நிலையைக் காட்டுவார்கள்.

ஏனென்றால் விண்வெளியின் இயக்கத்தின் ஆற்றலை அந்தந்த நாட்டிலே தோன்றிய தத்துவ ஞானிகள் அங்கே உள்ள மதத்தில் இணைத்து
1.இது தான் கடவுளின் அவதாரம்..! இது கடவுளின் செயல்…! இந்த நட்சத்திரங்கள் இன்னது தான் ஆகும்…! என்று
2.அவரவர்கள் உணர்வுக்கொப்ப நாடு வேறாக இருந்தாலும் அந்தந்த நாட்டிற்குத் தகுந்தவாறு மதங்களை அமைத்து
4.மதத்திற்குத்தக்க கடவுள்களை அமைத்துள்ளார்கள்.
5.அதன் அடிப்படை ஆச்சாரத்தில் விளைவித்த இந்த உணர்வின் தன்மை கொண்டு தான் ஜாதகக் குறிப்புகளை வைத்திருக்கின்றார்கள்.
6.அத்தகைய குறிப்புகள் கொண்டு தான் நம் ஜாதகத்தை உருவாக்கித் தருகின்றார்கள்.

குழந்தை பிறந்த நேரத்தை அவர்கள் வகுத்துக் கொடுத்த சட்டப்படி காலண்டரைப் பார்க்கிறோம். இன்ன நட்சத்திரத்தில் இன்ன நிலைகள் பிறந்திருக்கிறது என்பதை அவர்களிடம் போய்க் காட்டும் போது எழுதி வைத்திருக்கும் சட்டத்தை அவர்கள் படிக்கிறார்கள்.

அவ்வாறு எழுதி வைத்ததன்படி இந்த நேரத்தில் கஷ்ட காலம் வருகிறது. நாலாவது மாதம் குழந்தைக்கு “ஏழரை நாட்டான் சனி…!” தொடங்குகிறது என்பார். ஏழரை நாட்டுச் சனி தொடங்கி விட்டால் குடும்பத்திற்கு ஆகாது… உங்கள் வியாபாரம் கெடும்… குடும்பத்தில் சிக்கல்கள் வரும்.. நோய்கள் வரும்..! என்று சொல்கின்றார்கள்.

ஒரு கம்ப்யூட்டர் தனக்குள் பதிவு செய்ததைத் (OS – OPERATING SYSTEM) திருப்பி எப்படி இயக்குகிறதோ அதைப்போல அவர்கள் சொல்வதை எல்லாம் நமக்குள் கேட்டுக் கூர்மையாகப் பதிவு செய்து கொண்ட பின் அந்த பதிவே நம்மை இயக்கத் தொடங்கும்.

பின் குழந்தையை நினைக்கும் போதெல்லாம் இந்த ஏழரை நாட்டான் இங்கே இருக்கிறானே… எப்படி வியாபாரம் செய்வது…? என்று அதையே வளர்த்துக் கொள்வோம்.

இப்படிப்பட்ட எண்ணத்தை நமக்குள் யார் சிருஷ்டித்துக் கொடுக்கிறது…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தை வளர்த்துக் கொள்ள அதன் கீழ் அரசன் வாழ்ந்திட மக்களை ஒன்று சேர்க்க அதன் கீழ் நல்லது கெட்டது என்ற நிலைகள் கொண்டு வந்து அதற்கெல்லாம் தெய்வத்தைக் கொடுத்து உருவாக்கி விட்டார்கள்.

உன்னுடைய ஜாதகப்படி பிழை ஏற்பட்டால் அதற்குப் பரிகாரமாக
1.நீ யாகத்தைச் செய்துவிடு…!
2.ஆண்டவனுக்கு நீ இதையெல்லாம் செய்து கொடுத்துவிடு
3.மற்றவர்களை வைத்து அனுஷ்டானங்களையும் மந்திரங்களையும் ஓதச் செய்.
4.அதே சமயத்தில் நீ இன்னென்ன இடத்திற்குச் சென்று (கோவிலே அல்லது ஒரு இடமோ) தியானிக்க வேண்டும் உன் பாவத்தை அங்கே சென்று கழிக்க வேண்டும் என்று
5.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமான முறையைப் பின்பற்றுகின்றன. எல்லா மதங்களும் இப்படித் தான்…!

ஏற்கனவே அவர்கள் குறித்து வைத்ததை… மதத்துடன் இணைக்கப்பட்டதைத்தான்.. நாம் இன்று கடவுளாக வரித்து வைத்திருக்கின்றோம். அதன் படி நாம் எண்ணியதை எல்லாம் நம் உயிர் படைத்து விடுகின்றது. உடலுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விடுகின்றது.

ஆகவே குழந்தை பிறந்ததிலிருந்து வியாபாரம் மந்தமாகும்… சகோதரருக்குள் பகைமையாகும்… கொடுக்கல் வாங்கல் தடையாகும்… எதுவுமே உருப்படியாகாது…! என்று அவர்கள் சொன்னதைப் பதிவு செய்து கொண்ட பின் நினைக்கும் பொழுதெல்லாம் அந்த உணர்வின் அலைகளாக நமக்குய் முன்னடி வந்து கொண்டேயிருக்கும்.

வெளியிலே எங்கே போனாலும் அல்லது எந்த வேலையைச் செய்தாலும் (வியாபாரமோ தொழிலோ) இந்த ஜாதகக் குறிப்பை எண்ணியவுடனே நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் காற்றுக்குள்) இந்த வாசனை வந்து விடும்.

இதே எண்ணத்தில் ஒருவரிடம் வியாபாரம் பேசப் போகும் போது இவர் என்ன சொல்வாரோ…! என்ற இந்தச் சந்தேக உணர்வோடு தான் நாம் போவோம். ஆனாலும் எப்படியாவது நம் பிழைப்புக்குப் பார்க்க வேண்டுமே என்ற எண்ணத்தில் பேசப்படும் போது சந்தேக உணர்வு கொண்ட சொல்களாக அவர் காதுகளில் கேட்கின்றது

அதனின் உணர்வின் இயக்கமாகி அவர் நம்மைப் பார்க்கும்போது எத்தகைய உணர்வை நாம் எண்ணினோமோ அது அவர் முன்னாடி வந்து நிற்கும்.
1.ஜாதகத்தில் சொல்லப்பட்டதை நுகர்ந்ததும் நமக்குள் எப்படி கலக்கம் ஏற்பட்டதோ
2.அதே இயக்கமாக அவருடைய உணர்வுக்குள்ளும் கலக்கமாகி
3.அடுத்து “சரி… பார்ப்போம்…“ என்று சொல்லத் தொடங்குவார்.
4.முதலில் பணம் கொடுத்து வாங்கலாம் என்று எண்ணியவர் இப்போது என்னிடம் அந்த அளவுக்குப் பணம் இல்லையே..! என்பார்.
5.ஆகா… ஜாதகம் சொன்னது சரியாகப் போய் விட்டது என்று
6.நமக்குள் பதிவு செய்ததைத் திரும்ப எண்ணி அதை வலுவாக்கி நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோம்.
7.இங்கே நாம் எண்ணுவதை நம் உயிர் தான் படைக்கின்றது.
8.நம் உணர்வின் செயலையே அது மாற்றுகின்றது.
9.இப்படி வியாபாரம் மந்தமாகும் போது வேதனைப்படுகின்றோம் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று சோர்வடைகின்றோம்.

இத்தகைய சோர்வான உணர்வுகளை எல்லாம் நாம் எடுத்துக் கொண்டதும் உயிர் அதைப் படைத்து வியாபாரத்தை மந்தமாக்கி அழகான உடலையும் நோயாக்கி நம்முடைய சுருதியைக் (திறமையைக்) குறைந்து விடுகின்றது.

ஒரு வீணையை வாசிக்க்கின்றார்கள் என்றால் அதில் உள்ள நரம்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருந்தால் இசை “கணீர்…!” என்று வரும்.
1.ஆனால் நரம்புகள் சிறிது தளர்ந்திருந்தாலே போதும்.
2.கணீர்… என்று சப்தித்த அந்த நரம்பு “டொய்ங்… ங்…” என்று இழுக்கும்.

இதைப்போன்று தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகளால் நம் நாதங்களின் (சொல்லின்) சுருதிகள் மாறி நம் உடலின் சுருதிகள் மாறி அந்த உணர்வுகள் வெளிப்படும் போது அதைக் கேட்டு நுகர்வோர் உணர்வுகளிலும் அது இயக்கி நம்மைத் தாழ்த்திக் கொண்டே தான் இருக்கும்.

1.ஜாதகக் குறிப்பின் பிரகாரம் ஒவ்வொருவரும் நாம் இப்படித்தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறோம்
2.நம்மை அறியாமலேயே நமக்குள் வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறோம்
3.வாழ்க்கையின் நிலைகளில் (மதத்தின் அடிப்படையில்) நமக்கு நாமே தடைகளைத்தான் விதித்துச் செல்கின்றோம்
4.இல்லை என்று யாராவது மறுக்க முடியுமா…?

ஆனால் ஞானிகள் சொன்னது மனிதனாகத் தோன்றிவிட்டாலே அவன் முழு முதற் கடவுள்… சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன்…! என்று ஞானிகள் சொல்லியிருந்தாலும் நாம் நல்லதைச் சிருஷ்டிக்கின்றோமா…?

கீதையில் சொன்னது போல் நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய் என்ற நிலையில் மனிதனுக்கு ஜாதகம் கிடையாது. நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் படைக்கின்றது… உருவாக்குகின்றது…!

மெய் வழி சென்ற அந்த ஞானிகளின் வழியில் நாம் நடக்க வேண்டும். மெய்ப் பொருள் காணும் திற்னை வளர்க்க வேண்டும். மெய் ஒளி பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். இது தான் நாம் நமக்குள் சிருஷ்டிக்க வேண்டியது…!

படித்ததனால் வரும் அறிவும் பதித்ததனால் வரும் அறிவும் – “கல்வி அறிவுக்கும் மெய் ஞானத்தின் அறிவுக்கும் உண்டான வித்தியாசம்…!”

Image

Gnana and education

படித்ததனால் வரும் அறிவும் பதித்ததனால் வரும் அறிவும் – “கல்வி அறிவுக்கும் மெய் ஞானத்தின் அறிவுக்கும் உண்டான வித்தியாசம்…!”

 

கல்வித் திறனை வளர்த்துக் கொள்வதற்காக வேண்டிக் கல்விச் சாலைகளுக்குச் செல்கின்றோம்.
1.அதிலே விஞ்ஞானத்தின் மேல் நாட்டம் வரப்போகும் போது விஞ்ஞான அறிவை (SCIENCE) வளர்த்து அதனுள் இணைகின்றோம்.
2.இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்ற எண்ணத்திலே செல்லும் போது அதன் மேல் கூர்மையாகி அதை (TECHNICAL) வளர்க்கின்றோம்.
3.மருத்துவம் செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் ஓங்கி வரப்போகும் அதை (MEDICAL) வளர்த்துக் கொள்கின்றோம்.
4.விவசாயத்தின் மீது நாட்டம் வரும் பொழுது அதனின் நுட்பங்களைப் படித்து (AGRICULTURE) வளர்த்துக் கொள்கின்றோம்
5.பொருள்களைப் பற்றிய கணக்கீடுகளைத் தெரிய விரும்பும் பொழுது அதற்குள் இணைந்து அதைக் (COMMERCE) கற்றுக் கொள்கின்றோம்

இது எல்லாம் இந்த மனித வாழ்க்கைக்கு உதவும் நிலையே தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் இதைத் தெரிந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்க முடியும் என்று இன்று செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.

இருந்தாலும் படித்த நிலைகள் கொண்டு செயல்படும் போது அதிலே சிறிது குறை ஏற்பட்டால் அதனால் வேதனை என்ற நிலைகள் ஒரு சமயம் பட்டுவிட்டால்
1.கண்டுணர்ந்த படித்த விஞ்ஞானத்தின் அறிவு அனைத்தும் வீழ்ந்து விடுகின்றது.
2.பல காலம் படித்துணர்ந்திருந்தாலும் அதிலிருந்து மீள முடியாதபடி சோர்வடையச் செய்து
3.முழுவதும் செயலிழந்த நிலைகளுக்குச் சென்று விடுகிறார்கள்.

ஆனால் நானோ (ஞானகுரு) படிப்பறிவு அற்றவன்தான். மூன்றாவது கூட முழுமையாகப் படிக்கவில்லை. ஆனால் இதைப் பேசுகிறேன் என்றால்
1.குருநாதர் கொடுத்த அந்த மெய் ஞானிகளின் ஆற்றலை
2.அவர் எனக்குள் பதிவு செய்ததை நினைவு கூர்ந்து
3.இந்தக் காற்றில் இருப்பதை என் உயிரின் துணை கொண்டு நுகரும் பொழுது
4.மெய் உணர்வின் அலைகளை ஒலி பரப்பும் எண்ணங்களாக அது என்னைப் பேச வைக்கின்றது.

உதாரணமாக படித்துணர்ந்த நிலைகள் கொண்டு ஒரு பாடலைப் பாடுகின்றனர் என்றால் பாடிய முதலின் தலைப்பு சரியாக வந்தால் அந்த பாடலின் கடைசி வரையிலும் ஒரே சீராக எந்தத் தங்கு தடையுமில்லாது வரும்.

ஆனால் பாடலைப் பாடி வரப்போகும் போது இடைப்பட்ட நிலைகள் மறைந்து விட்டால் பாடலின் முழுமையின் நிலை வராது.
1.மறுபடியும் முதலிலிருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.
2.(வெறுமனே பாட நிலைகளைப் படித்துக் கொண்டிருந்தால் இந்த நிலையில் தான் இருப்போம்)

அவ்வாறு இல்லாதபடி சீராக்கும் நிலைகளுக்குத்தான் அந்த மெய் ஞானிகள் கண்ட உணர்வின் தன்மையை குருநாதர் எமக்குள் பதிய வைத்தது போன்று உங்களுக்குள்ளும் இதை ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் உங்களை அறியாது வந்த இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் நிலையை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்று இந்த இச்சையில் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இட்ட ஆணைப்படி இந்த எண்ணத்தை நான் சுவாசிக்கும் போது மெய் ஒளியாகப் பரப்புகின்றது எனது உயிர். மெய் ஞானிகளின் உணர்வின் தன்மை என் அங்கங்களைக் கிரியையாகச் செயல்படுத்துகின்றது.

அவ்வாறு கிரியை ஆகி வெளிப்படும் போது ஞானத்தின் செயலாகப் என்னைப் பக்குவப்படுத்தும் நிலையும் பக்குவமான நிலைகள் பேசும் நிலையையும் உருவாக்குகின்றது.

இதே ஞானத்தின் உணர்வுகளை நீங்கள் கேட்டுணரும் பொழுது உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவாகின்றது. அந்த பதிவின் நிலைகள் உங்களையும் உங்கள் வாழ்க்கையையும் சீர்படுத்தும் நிலையாக நிச்சயம் வரும்.

சீதா பொய் மானைக் கண்டு ஆசைப்படுகின்றாள் – இலட்சுமணன் கோபப்படுகின்றான் ஏன்…?

Image

Sita and fake deer

சீதா பொய் மானைக் கண்டு ஆசைப்படுகின்றாள் – இலட்சுமணன் கோபப்படுகின்றான் ஏன்…?

இராமனிடம் வில்லும் அம்பும் உண்டு. அந்த அம்பை எய்வது போல மனிதன் ஒரு சொல்லைச் சொன்னவுடனே
1.இந்தச் சொல்லின் உணர்வலைகள் அங்கே அம்பாகப் பாய்ந்து
2.அந்த உணர்வின் அலைகள் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.
3.இதனால் தான் சீதா இராமா என்பது. (சீதா என்பது சுவை. இராமன் என்பது எண்ணம்)

நாம் எந்தெந்த வகையான குணங்களை எடுத்து அதற்குரிய எண்ணங்களைச் சொல் வழியாக எப்படிப் பாய்ச்சுகின்றோமோ அந்த உணர்வின் நிலையே “இயக்கம்” என்று இராமாயணத்தில் காட்டப்பட்டது.

தன்னுடைய எண்ணத்தால் கவர்ந்து சுவாசித்த உணர்வுகள் உயிரான ஈசனிடம் பட்டு இந்த உணர்வின் அலைகள் உடலுக்குள் வித்தாக விளைந்து விளைந்த வித்தின் தன்மை உயிருடன் இணைந்து அந்த உணர்வின் எண்ண அலைகளாகப் பரப்பச் செய்யும்… இயக்கச் செய்யும்… நிலையைத்தான் “சீதா இராமா…!” என்பது.

இதைப் போல நமக்குள் எத்தனையோ இராமன்கள் உண்டு. எந்தெந்தக் குணங்களை எடுக்கிறோமோ அவை ஒவ்வொன்றும் இராமன்களே.
1.சீதாராமா (சுவைக்கொப்ப எண்ணம்)
2.ஜானகிராமா (உணர்வின் சக்தி இணையும் நிலை)
3.பலராமா (பல பல எண்ணங்கள்)
4.பரசுராமா (உழுது பயிரிடும் நிலை… சமப்படுத்தும் எண்ணங்கள்)
5.கோதண்டராமா (வில்லை முறித்தது – தீமைகளை ஒடுக்கும் தன்மை)

ஒவ்வொரு உணர்வின் இயக்கத்தையும் இராமன் என்ற சொல்லாக வைத்து அழைக்கிறோம். அதாவது நாம் சுவாசிக்கும் நிலைகளில் நாம் எண்ணும் எண்ணங்களே அந்தந்த உணர்வின் சக்தியாக இயக்கச் செய்கிறது என்ற தத்துவத்தைத்தான் அன்று வான்மீகி எழுதினார்.

ஆஞ்சநேயன் என்பது குரங்கு, பரிணாம வளர்ச்சியில் குரங்கு என்ன செய்கின்றது…? தனது பிடிப்பின் நிலைகள் கொண்டு அது செயல்படுத்துகிறது.
1.கோபம் வந்துவிட்டால் யார் நல்லது சொன்னாலும் நாம் கேட்போமா…?
2.அட போய்யா… உனக்கு என்ன தெரியும்…? என்று சொல்வோம்.
3.சந்தோஷமாக இருக்கும் போது வெறுப்பான விஷயங்களைச் சொன்னால் நாம் ஏற்றுக் கொள்வோமா…? மாட்டோம்.
4.அது போல ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு இயல்பு உண்டு.
5.”குரங்குப்பிடி…!” என்று சொல்வதுபோல நாம் எந்தக் குணத்தை எடுத்துக் கொண்டோமோ
6.அந்த உணர்வின் நிலைகள் கொண்டுதான் நம்முடைய செயல்கள் இருக்கின்றது.

சகல சக்திகளையும் இந்த உடலான நிலைகளைக் கொண்டு இயக்கும் நிலையைத்தான் இராவணன் என்பது. அதாவது நம் உடல் தான் இராவணன்.

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனித உடலாக வரும் வரையிலும் சர்வ சக்தியும் நமக்குள் சேர்க்கப்படுகிறது. அதிலே அசுர சக்திகளும் உண்டு. அந்த அசுர சக்திகளைக் கொண்டு இராவணன் என்ன செய்கின்றான்…?
1.சிவனை நேசிக்கின்றான்… சிவன் என்பது நம் உடல் (திடப்பொருள்)
2.நாம் அனைவருமே உடலின் ஆசை கொண்ட நிலையில் இராவணனாக இருக்கின்றோமே தவிர இராமனாக அல்ல.

சீதா… தான் கவர்ந்து கொண்ட சக்தி நாம் எந்தெந்தக் குணங்களைக் கவர்ந்து கொண்டோமோ அந்தச் சக்தியை இராவணன் கவர்ந்து கொண்டு இலங்கைக்குள் வைத்திருக்கின்றான். (இலங்கை என்றால் உடல்)

1.ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு எல்லை உண்டு
2.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் பெரும் கடலாக இருந்தாலும்
3.நாம் எண்ணிய நிலைகள் ஒவ்வொன்றும் (தனித் தனியாக) தீவு போன்று இருந்தாலும்
4.இந்த உடலுக்குள் அது அனைத்துமே “அடங்கி இருக்கிறது…” என்ற நிலையைத்தான் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

வான்மீகி ஒன்றும் அறியாதவன் தான். காட்டிலே பல உயிரினங்களைக் கொன்று குவித்தவன். அவனுடைய சந்தர்ப்பம் பட்சிகள் மூலம் மெய் ஞானத்தை நுகரும் ஆற்றல் பெற்றான். இராமாயணக் காவியத்தையே படைத்தான்.

விண்ணுலகச் சக்தியின் ஆற்றல் அந்த உணர்வின் சொல் வடிவாக எண்ணங்களின் ரூபத்தைக் கொண்டு எவ்வாறு இயக்குகிறது…? என்பது தான் இராமாயணத்தின் தத்துவமே.

சீதை மானுக்காக வேண்டி ஆசைப்படுகிறாள் என்று சொல்கின்றார்கள்.
1.சீதையினுடைய ஆசையைக் கொண்டு
2.அவள் எண்ணிய நிலைகள் தான் அந்த மான். இது பொய் மான்.
3.அதவது நாம் எண்ணும் ஆசைகள் அனைத்தும் பொய்.
4.நேரிலே பார்க்கப்படும் நிலைகள் வேறு
5.ஆனால் எண்ணங்களில் ஆசைகளைக் (பொய்யாக) கூட்டப்படும் போது அது எவ்வாறு நம்மைத் திசை திருப்புகிறது…? என்ற நிலையை
6.நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் முன் பகுதியிலே நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலைகளைத்தான்… “பொய் மான்…!” என்று
7.அவ்வாறு மிகவும் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நாம் பேசிய பேச்சும் மற்றவர்கள் பேசிய பேச்சும் இந்த உணர்வின் மூச்சலைகள் இவை அனைத்தையும் சூரியனின் காந்தப் புலன்கள் கவர்ந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.

நாம் எதை நினைக்கின்றோமோ அதை இழுத்து நமக்குள் சுவாசித்து அந்த உணர்வுடன் மோதி இயக்கச் செய்யும் போது இலட்சுமணன். அதாவது
1.நாம் நினைப்பதைத் தூண்டி எழுந்து அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணர்த்துகிறது.
2.உணர்ச்சிகளைத் தூண்டுவதால்தான் இலட்சுமணன் கோபம் உள்ளவன் என்கிறார்கள்.
3.நாம் நினைத்துச் சுவாசித்த சுவாசம் மோதியவுடன் இது பொய்யான ஆசை…! இதனால் உனக்கு விபத்து…! என்ற நிலையில்
4.இலட்சுமணனாக இருந்து இயக்கி நமக்குள் அந்த உண்மையைச் சொல்கின்றான்.

நாம் சுவாசித்த உணர்வுகள் இந்த உண்மையைச் செய்கின்றது. ஆனால் ஆசைப்படும் போது இருள் சூழ்ந்த நிலைகளுக்குள் நாம் செல்கின்றோம்.

சைக்கிள் வேலை தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சைக்கிள் கடையை ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சூழ்நிலையைப் பார்த்து “நீ சைக்கிள் கடை வைத்து நடத்தினால் நஷ்டமாகிவிடும்…!” என்று ஒருவர் சொன்னால் போதும்,

இங்கு கடை வைப்பது அவருக்குப் பிடிக்கவில்லை அந்தப் பொறாமையினால் தான் அவ்வாறு சொல்கிறார்…! என்று இப்படித்தான் நினைப்போம்.
1.எண்ணிய ஆசையானது சீதா… அது கவர்ந்து கொண்ட சக்தி
2.அடுத்தவர்கள் சொல்லும் உணர்வினுடைய நிலைகளை நாம் சுவாசித்துச் சிந்திக்கும் போது வருவது இலட்சுமணன்

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் நிலைகள் எவ்வாறு இருக்கின்றது… நம்மை இயக்குகிறது…? என்ற நிலையை அன்று வான்மீகி இத்தகைய உணர்வின் தன்மையாக இராமாயணக் காவியத்தில் வெளிப்படுத்தினார். ஞானிகள் சொன்ன மூலக் கருத்து இது தான்.

ஆனால் இன்று எத்தனையோ நிலைகளில் அந்தக் காவியம் திருத்தப்பட்டுள்ளது.

எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னும் செய்ய வேண்டிய சிறு பிரார்த்தனை…!

chitra festival

எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னும் செய்ய வேண்டிய சிறு பிரார்த்தனை…!”

நம்மை யாராவது ஒருவர் திட்டினால் என்னைத் திட்டினார்… திட்டினார்…! என்று எண்ணும் போது அந்தக் காரமான அலைகள் நமக்குள் வந்து விடுகிறது.

அதே கோபமான எண்ணத்துடன் என்னை இப்படிப் பேசினார்களே இப்படிப் பேசினார்களே என்று எண்ணிக் கொண்டே நீங்கள் சமையல் வேலை செய்தா என்ன ஆகும்..?

1.எந்த அளவுக்குக் கோபமாக இருந்தீர்களோ குழ்ம்பிலே ஒரு மிளகாய் அதிகமாகிப் போகும். குழம்பு காரமாகிவிடும் உஷ்..உஷ்.. என்று தான் சாப்பிடுவார்கள்.
2.என்னை இப்படிப் பேசினார்கள் அப்படிப் பேசினார்கள் என்று சலிப்பான எண்ணத்துடன் சமைத்துப் பாருங்கள். குழ்ம்பில் புளியை நிச்சயம் அதிகமாக்கி விடுவீர்கள்.
3.எப்போது பார்த்தாலும் இப்படி “நச்..நச்…நச்…!” என்று இருக்கிறது என்று ஆத்திரத்துடன் சமைத்தீர்கள் என்றால் குழம்பில் உப்பை அள்ளி அதிகமாகப் போட்டு விடுவீர்கள்.
4.இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
5.ஆனால் நீங்கள் அந்தந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அதைச் செய்ய வைத்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை. காரணம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் தான். அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

அதற்காகத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

ஓ…ம் ஈஸ்வரா…… குருதேவா…! என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணி அந்த உணர்வின் வேட்கையைக் கூட்ட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து வானை நோக்கி ஏங்கிச் சுவாசியுங்கள்.

பின் கண்களை மூடித் திரும்பத் திரும்ப “மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!” என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்.

பிறகு மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று ஒரு நிமிடம் இதைத் தியானிக்க வேண்டும்.

பின் கண்களைத் திறந்து மீண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி விட்டு கணவன் மனைவி இருவருமே ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது இது போல எண்ண வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவரின்/ என் மனைவியின் ஜீவாத்மா பெறவேண்டும். அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும். அவர் எத்தொழில் செய்தாலும் நலமும் வளமும் பெற வேண்டும். அவர் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு நன்மை தர வேண்டும். அவரைப் பார்ப்போரெல்லாம் நல்லது நினைக்க வேண்டும் இவ்வாறு கணவன் மனைவி கணவனை ஒருவருக்கொருவர் எண்ணுதல் வேண்டும். இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி என்பது.

சமையல் செய்யும் போதெல்லாம் பெண்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டுத் தொடங்க வேண்டும்.
1.அரிசியையோ மற்ற பொருள்களைப் போடும் போதெல்லாம்
2.நாங்கள் சமைக்கும் இந்த உணவை உண்ணுவோர் அனைவரும்
3.மகரிஷிகளின் அருளால் நலமும் வளமும் மன பலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

இதே போல ஆகாரத்தைப் பரிமாறும் போதும் அந்த மகரிஷிகளின் உணர்வை ஒரு நிமிடம் ஏற்றி விட்டு ஆகாரத்தை எடுத்துப் பரிமாற வேண்டும்.

காரணம் அந்த ஒரு நிமிடம் என்பது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்ன உடனே
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சூரியனுடைய காந்த அலைகள் கவர்ந்து
2.நமக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திவிடும். (அதற்காகத்தான் திரும்பத் திரும்ப எண்ணச் சொல்கிறோம்)
3.நம் ஆன்மாவில் அந்த அருள் சக்தி பெருகினால் மற்ற கோபமோ சலிப்போ வேதனையோ எல்லாம் அகன்று சென்றுவிடும்.

ஆகவே எந்தக் காரியத்தைச் செய்வதற்கு முன்னாடியும் இப்படி ஆத்ம சுத்தி செய்துவிட்டுத் தான் தொடங்க வேண்டும். ஒரு இரண்டு நிமிடத்திற்குள் இதைச் செய்து முடித்துவிடலாம்.

தன்னைக் காக்கவும் நல்ல குணங்களைக் காக்கவும் அதற்குகந்த சூட்சம சக்தி “அகஸ்தியனின் அருள் சக்தி தான்…”

Agastyar meditation

தன்னைக் காக்கவும் நல்ல குணங்களைக் காக்கவும் அதற்குகந்த சூட்சம சக்தி “அகஸ்தியனின் அருள் சக்தி தான்…”

அன்று அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் போது தாய் சுவாசித்த
1.நஞ்சினை வெல்லும் பல மூலிகைகளின் மணங்களும்
2.மின்னலின் வீரியத்தைத் தணிக்கும் வேர்களின் மணங்களும் அவனுக்குக் கிடைக்கின்றது.

பிறந்த பின் அவனின் வளர்ச்சியில் ஐந்து வயதிற்குள் இருபத்தியேழு நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வருவதை நேரடியாகக் காணுகின்றான்.

எங்கிருந்து இந்த மின்னல் தோன்றுகின்றது…? மின்னல் தோன்றக் காரணம் என்ன…? என்ற நிலைகளை அந்த இளமையிலே அறிய ஆரம்பித்தான்.

இருபத்தேழு நட்சத்திரங்களின் சக்தியைச் சூரியன் எடுத்து ஒளிச் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது. அந்த இருபத்தேழு விதமான உணர்வின் தன்மையை மனிதன் தனக்குள் எடுத்துக் கொண்டால் அது தான் முழுமையடையும் பருவம் என்பதை அறிந்து கொள்கிறான் அகஸ்தியன்.

நவக் கோள்கள் என்பது அந்தக் கோள்களின் உணர்வு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அடக்கம் உண்டு. நம் எண்ணங்கள் அனைத்தும் நட்சத்திரங்கள். நம் உடல் உறுப்புகள் அனைத்தும் கோள்கள்.

இருதயம் என்றால் அதில் பல வகைகளைச் சேர்த்து அதனின் உபகரணங்கள் உண்டு. கல்லீரல் என்றால் அதற்குள் பல வகை சேர்த்து அதற்கு உபகரணங்கள் உண்டு. மண்ணீரல் என்றால் அதற்கும் உபகரணங்கள் உண்டு.

அதாவது நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கு உபகோள்கள் உள்ளது போல் நம் உடலிலும் உண்டு. வியாழன் கோளிற்கு இருபத்தேழு நட்சத்திரங்களையும் கவரக்கூடிய சக்தி அதற்கு உண்டு. அங்கே எப்படி இந்த இயற்கையின் நியதிகள் இருக்கின்றதோ நம் உடலிலும் இதே மாதிரி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உணர்வுக்குத்தக்க உடல்கள் மாறி ரூபங்கள் மாறி குணங்கள் மாறி இப்படித்தான் சந்தர்ப்பத்தால் இன்று நாம் மனிதனாக வந்துள்ளோம்.

இப்போது மனிதனான பிற்பாடு முதலில் நன்றாக இருக்கிறோம். வளர்ச்சி அடைந்த பின் நோய் வருகிறது. மனிதருடைய ரூபமே மாறுகின்றது. ஏனென்றால் சந்தர்ப்பத்தில் எதையெதையெல்லாம் சந்திக்கின்றோமோ நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப அதெல்லாம் வருகிறது.
1.சந்தர்ப்பத்தால் மோதி அதற்குத் தக்க ரூபங்கள் மாறியது.
2.அதன் வழி இன்று மனிதனாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
3.ஆனால் உயிர் மட்டும் மடிவதில்லை.
4.உடல்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் கூர்ந்து கவனித்து அதை நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம். அதே போல இப்போது யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனிக்கும்போது அது உங்களுக்குள் பதிவாகின்றது.

தீமையிலிருந்து விடுபடும் அந்த நல்ல சக்தி பெற வேண்டும் என்று ஆசையுடன் நீங்கள் இருந்தால் அந்த ஆசைக்குத்தக்க நுகரப்படும் பொழுது அது உங்களுக்கு பதிவாகும். எல்லாவற்றுக்குமே நம் ஆசைதான் காரணம்.

ஏனென்றால் இதைப் படிக்கும் பொழுதே சிந்தனைகள் “வீட்டில் குழந்தை தனியாக இருப்பான்…!” என்ற ஆசையில் அவனைப் பார்க்க வேண்டுமே… என்ற எண்ணத்திலிருந்தால் இந்த உபதேசம் சுத்தமாக உங்களுக்குள் பதிவாகாது.

அந்த எண்ணம் உச்சக்கட்டம் அடைந்தவுடனே தன்னை அறியாமலே இதைக் கேட்கவிடாது எழுந்து போகச் சொல்லும். ஆகவே நம்முடைய ஆசைகள் தான் இங்கே இயக்குகின்றது. அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது.
1.சந்தர்ப்பம் தான் வாழ்க்கையாக அமைகின்றது.
2.எல்லாமே சந்தர்ப்பம் தான்…! என்றாலும்
3.மெய் ஞானிகளின் அருளை நீங்கள் பெறுவதற்காகத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை யாம் ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால் இன்று உலகம் முழுவதற்கும் தீவிரவாதம் தலை தூக்கி இருக்கிறது. அதை நீங்கள் நுகர்ந்தாலே அந்த உணர்வு உங்களுக்குள் வந்து உங்களுக்குள்ளும் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.

அவன் எங்கேயோ செய்தான். நீங்கள் அதை நுகர்ந்தீர்கள்.. உணர்ந்தீர்கள்… அறிந்தீர்கள். ஆனால் நீங்கள் நுகர்ந்த தீவிரவாதத்தின் உணர்வு உங்கள் உடலிற்குள் கருவாகி அணுவாகி உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்துடன் சண்டை போட ஆரம்பித்து விடுகின்றது.

“எங்கேயோ நடக்கிறது…!” என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் இப்படி மாறுகின்றது. நம் உடலுக்குள் இத்தகைய தீவிரவாதம் வந்தால் பல விதமான செயல்களும் புது விதமான நோய்களும் வருகின்றது.

நம் குணங்கள் மாற்றம் அடைகின்றது. வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கின்றது. எல்லாவற்றையும் இழந்த பின் இனி என்ன…! என்று விரக்தி அடைகின்றது. விரக்தி அடைந்த பின் கடுமையான தவறு செய்யும் நிலைக்கு வந்து இப்படி இன்றைய மனிதனின் நிலைகள் மாறி எங்கெங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது.

ஆகவே காற்று மண்டலம் மிகவும் விஷத் தன்மையாகப் போய்விட்டது. தேடிய செல்வம் எவ்வளவோ இருந்தாலும் அதைப் பாதுகாக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. (யாராக இருந்தாலும் சரி இந்த நிலை தான்)
1.கையில் பணம் இருந்தால் உடலுக்கு ஆபத்து… உயிருக்கு ஆபத்து…!
2.இப்படி எத்தனையோ நிலை இன்று இருக்கின்றது.

இதிலிருந்து விடுபட்டுத் தன்னையும் காக்க வேண்டும். நம் நல்ல குணங்களை அழிந்திடாது பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்குரிய ஒரு சக்தி வேண்டும் என்பதற்காகத் தான் அகஸ்தியனின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அகஸ்தியன் ஒளியின் உடலாக மாறி எப்படித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். அதை உணர்த்துவதற்காக வேண்டி குருநாதர் “நீ மின்னலைப் பாருடா…!” என்றார்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்த்தால் என் கண் பார்வைப் போய்விடும் என்ற பயத்தால் பார்க்க மறுத்துக் கொண்டு அவரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன்.

அப்போது என்னிடம் பச்சிலைகளையும் சில வேர்களையும் என் கையில் கொடுத்து அதன் பின் “மின்னலைப் பார்க்கும்படிச் சொல்கிறார்…!” அப்படியே ரொம்ப அழகாக ஆனந்தமாக இருந்தது. அதைப் பற்றி அறியும் ஆற்றலும் எனக்கு வந்தது.

இப்படித் தான் அகஸ்தியனுக்கும் அவன் தாய் கருவிலே ஆற்றல்களைப் பெற்ற பின் அவன் பிறந்த பின் அனைத்தையும் உணரும் சக்தி அவனுக்குள் வந்தது.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. அகஸ்தியன் தன் வாழ் நாளில் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்வுகளையும் சூரியன் கவர்ந்து பூமியில் பரவச் செய்து கொண்டிருக்கிறது.

அந்த அகஸ்தியன் உணர்வுகளை எடுப்பதற்காக குருநாதர் எனக்கு அந்தச் சக்தியைக் கொடுத்து
1.என் உடலுக்குள் அகஸ்தியனின் ஞான வித்தை ஊன்றினார்.
2.அதை வளர்க்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தினார்.
3.அதை எடுத்து கொண்டு வளர்த்துக் கொண்டேன்.

அதைப்போல உங்களுக்கும் அகஸ்தியன் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம். நீங்கள் நுகர்ந்தறியப்படும் போது உங்களுடைய ஒவ்வொரு அணுக்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறேன்.

ஆனால் அதை எல்லாம் பெறவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வேண்டும். தீமைகளை நீக்கக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். இருளை நீக்கும் அந்த அருள் பெற வேண்டும் என்ற இந்த ஆசையுடன் இருந்தீர்கள் என்றால் இது நல்ல பலனைத் தரும்.
1.ஆசையை எங்கேயோ வைத்துக் கொண்டு தலை வலிக்காகவும் உடல் வலிக்காகவும் இதை எண்ணி எடுக்க வேண்டாம்.
2அப்படி எண்ணி எடுக்கவே கூடாது.

நீங்கள் எல்லோரும் அந்த அருளைப் பெற வேண்டும். உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்கள் ஒவ்வொரு உறுப்புகளையும் இயக்கக்கூடிய அணுக்களுக்கு அது குறி வைத்து அந்த உணர்ச்சிகளைத் அங்கே தூண்டும்படி செய்கின்றோம்.

இப்போது யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் பதிவு செய்து கொண்ட பிற்பாடு மீண்டும் அதை எண்ணப்படும் போது உங்கள் “கண்கள்… சக்தி வாய்ந்த ஆண்டெனாவாக மாறுகின்றது….!”

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் பதிவு செய்தனோ அதனின் அலைகளை காற்றிலிருந்து பிரித்து நீங்கள் சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது. ஒரு நல்ல சிந்தனை உள்ளதாக மாற்றுகின்றது.

இந்தப் பழக்கம் வந்துவிட்டால் அது காற்று மண்டலத்தில் இருப்பதைத் தன்னாலே பிரித்து எடுக்க ஆரம்பித்துவிடும். எவ்வளவு கவலையாக இருந்தாலும் கூட அதை மாற்றி மகிழ்ச்சியான உணர்வைத் தோற்றுவிக்கும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்

சாபம் இடுவது யார்…? சாபத்தை மீட்க எப்படித் தியானிக்க வேண்டும்…?

atma self realization

சாபம் இடுவது யார்…? சாபத்தை மீட்க எப்படித் தியானிக்க வேண்டும்…? 

நீ பேயாகப் போ…! என்று ரிஷி சாபமிடுவார். ஐயனே… எனக்கு இதிலிருந்து விடுபட வழி ஏதேனும் வழி இல்லையா…? என்று கேட்பார்கள்.

நீ நல்லவனைத் தீண்ட எண்ணுவாய். அவன் நிழல் பட்டு நீ மறுபடியும் மனிதனாகப் பிறப்பாய். நல்ல நிலைகள் பெறுவாய் என்று ரிஷி சொல்வதாக நம் சாஸ்திரங்களில் உரைக்கப்பட்டுள்ளது.
1.இதிலே ரிஷி என்பது நம் உயிர் தான்,
2.நாம் நுகர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப அடுத்த உடலை அல்லது
3.அடுத்த நிலையை எப்படிப் பெறுகிறோம்…? என்பதை உணர்த்துவதற்காக அதைக் காட்டினார்கள் ஞானிகள்.

பேயாகப் போகிறது என்றால் எவ்வளவு நல்ல மனிதனாக இருந்தாலும் அவனுக்குள் அது புகுந்தால் ஆட்டிப் படைத்து விடுகின்றது.

எத்தனையோ தர்மத்தைச் செய்திருப்பார். ஐயோ இப்படி இருக்கின்றானே…! என்று பார்த்து ஏங்குவார். அப்போது இதே மாதிரி ஒரு இறந்த ஆத்மா பாசத்தினால இவர் உடலுக்குள் குடி புகுந்து விடும்.

இன்றைய மனிதர்களில் சில பேர் இரக்கத்துடனும் இருப்பார்கள். பாசத்துடனும் இருப்பார்கள். அவர்களிடம் பயம் ஜாஸ்தியாக இருக்கும். பற்று கொண்ட நிலையில் ஏதாவது எதிர்பாராத சம்பவம் (அசம்பாவிதங்கள் – தற்கொலை, கொலை, விபத்து) நடந்து விட்டால் அதைப் பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ போதும். உடனே அதிர்ச்சி அடைவார்கள்.

1.இப்படி அதிர்ச்சி அடைவது பெண்களிடம் அதிகமான நிலைகளில் உண்டு.
2.ஏனென்றால் பயத்தால் ஈர்க்கும் சக்தியும் கவரும் சக்தியும் அவர்களிடம் ஜாஸ்தி இருக்கும்.
3.பெரும்பகுதிப் பெண்களுக்கு இதனால் கை கால் குடைச்சல்… அடிக்கடி தலைவலி தலை சுற்றல்… இதெல்லாம் கண்டிப்பாக இருக்கும்.

திடீரென பயந்தால் பிறிதொரு (இறந்த) ஆத்மா உடலுக்குள் வந்து விடுகின்றது. நமக்குள் வந்த பின் அந்த எண்ணம் பேயாக நம்மை இப்படியெல்லாம் இயக்கத் தொடங்குகின்றது.

ஏனென்றால் மனித உடலை விட்டு வெளியே சென்றால் எப்படியும் மனித உடலுக்குள் புகுந்து தான் மீண்டும் மனிதனாக வேண்டும்.

ஆனால் மனிதனாக வாழ்ந்து பொழுது எந்தெந்த நோய்வாய்ப்பட்டு முழுமையாக (உடல் நோய் அல்லது மன நோய்) ஆனானோ அந்த எண்ணத்தை வைத்து இயக்கினால்
1.நோயாகத்தான் உருவாக்க முடியுமே தவிர
2.அங்கே குழந்தையாகப் பிறக்க முடியாது.
3.மனிதனின் கடைசி நிலை இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குத் தான் நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவாத்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்கச் சொல்கிறோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா. சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒரு நாளைக்குக் குறைந்தது ஐம்பது முறையாவது தியானிக்க வேண்டும்.

அறியாத நிலைகளில் பிற ஆன்மாக்கள் நம் உடலிற்குள் வந்து அது மறு ஜென்மம் பெறுவதற்குண்டான நிலையே இல்லாத போது
1.அந்த ஆன்மாக்கள் நம்மை இயக்காத வண்ணம் தடுப்பதற்கு
2.இந்தத் தியானம் உதவும்.

இந்த முறைப்படி நாம் தியானிக்கவில்லை என்றால் அதனுடைய உணர்வை நமக்குள் இயக்கத்தான் செய்யும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணும் போது அந்த ஆன்மாக்கள் மோட்சம் அடைகின்றது.

உடலை விட்டுப் பிரிகின்றோம் என்று சொன்னாலும் எங்கே போகிறோம்…? என்று தெரிகிறதா…!

Full moon meditation

உடலை விட்டுப் பிரிகின்றோம் என்று சொன்னாலும் எங்கே போகிறோம்…? என்று தெரிகிறதா…!

மனிதன் இறந்தபின் இன்னொரு உடலுக்குள் போய்த் தான் மனிதனாகப் பிறக்க வேண்டும்.

மனிதனாக வாழும்போது கோபக்காரனாக இருந்தால் இறந்த பிற்பாடு எங்கே போவோம். அதே போல ஒரு கோபக்காரனுடைய உணர்வுகள் உடலுடன் இருந்தால் அந்த உடலுக்குள் நம் உயிரான்மா சேரும்.

ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பான எண்ணங்களை எண்ணி “எனக்கு இப்படித் துரோகம் செய்தான்… பாவி…!” என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.
1.சாகும் போது அதே எண்ணத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்றால்
2.அடுத்து அதே உணர்வுடன் இருக்கக்கூடிய உடலுக்குள் வந்து விடும்.

எந்த வெறுப்பின் உணர்வு நமக்குள் வளர்ந்ததோ அதே போன்ற இன்னொரு உடலுக்குள் போய் அங்கே வெறுப்பை ஊட்டிப் பல தீய விளைவுகளை உண்டாக்கச் செய்யும்.

கடைசியில் வேதனையான உணர்வைச் சுவாசித்து அந்த உடலுக்குள்ளும் வேதனையை உருவாக்கி மிகவும் நஞ்சு கொண்ட உயிரான்மாவாகத்தான் மீண்டும் வெளியிலே வர நேரும்.

இதைப் போல நாம் பல உடலுக்குள் சென்றாலும் மனிதனால் இயக்கப்படக்கூடிய இந்தச் சக்தி பிறருடைய உடலுக்குள் சென்று தீய விளைவுகளை உருவாக்கி விட்டு சிந்தனையற்ற நிலைகளில் வெளியில் வந்து
1.ஆடாகவோ மாடாகவோ அல்லது மற்ற உயிரினங்களாகவோ பிறந்து
2.மீண்டும் மனிதன் கையில் வளர்க்கப்பட்டு அல்லது மனிதனால் அடித்துக் கொல்லப்படும் போது
3.அந்த உயிராத்மா மனித சுவாசத்திற்குள் ஈர்க்கப்படுகின்றது.
4.மனித உடலுக்குள் வந்து கருவாகி மீண்டும் மனிதனாகப் பிறக்க நேரிடுகின்றது.

இப்படித்தான் மனிதன் மீண்டும் மனிதனாக வர முடியும். ஆனாலு எத்தனை முறை இப்படிச் சுற்றிக் கொண்டு வருகிறோம்…! என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இதற்குத் தான் பரமபதத்தைக் காட்டினார்கள் ஞானிகள். ஒவ்வொரு நிலைகளிலும் நாம் முன்னேறி வரும் போது முதலில் சிறு பாம்பு கடிக்கின்றது. பின்னாடி மேலே போகப் போக ஒவ்வொரு விஷத்தின் தன்மை வரும்போது
1.நாம் எவ்வளவு உயர்ந்து போனாலும்
2.நாம் உயர்ந்த சக்திகளை எடுத்தாலும் என்ன ஆகின்றது…?

ஒரு டம்ளர் பாலில் ஒரு துளி விஷம் பட்டாலும் அது விஷம் தான், ஒரு குடம் பாலில் அந்த துளி விஷம் பட்டாலும் அது விஷம் தான்.

இதைப் போன்று தான் வேதனை என்ற சத்தை அதிகமாக இந்த மனித வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால் மனித சிந்தனையை முழுமையாக அழித்து விடுகின்றது.

அது போன்று சிந்தனையை அழிக்கச் செய்யும் உணர்வின் தன்மைகளை மாற்றுவதற்குத்தான் உங்களுக்கு பௌர்ணமி தியானத்தில் மெய் ஞானிகளின் அருள் சக்தியை அதிக அளவில் பெறக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம்.

வானை நோக்கி உங்கள் நினைவலைகளைச் செலுத்தும் பொழுது உங்கள் எண்ணங்களுக்குள் செருகேற்றி சப்தரிஷி மண்டலத்துடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு (HIGH FREQUENCY LINK) ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும். அது எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை செலுத்தும் பொழுது அறியாது சேர்ந்த எத்தகைய விஷத்தையும் மாற்ற வல்ல சக்தி கிடைக்கின்றது.

அத்தகைய ஒளியான உணர்வுகள் உங்கள் உடலுக்குள் விளைந்து உயிருடன் ஒன்றிய ஒளியின் சுடராக மாறும். உடலை விட்டுப் பிரிந்தால் இந்தப் பூமியில் யாருடைய ஈர்ப்பிலும் சிக்காது அந்தச் சப்தரிஷி மண்டல சுழற்சி வட்டத்தில் இணைய முடியும். பிறவா நிலை பெறலாம்.

அதற்காகத்தான் இந்தப் பௌர்ணமி தியானத்தை ஏற்படுத்தியிருக்கின்றோம்.