டெலிபதி என்பது உண்மைதான்

டெலிபதி என்பது உண்மைதான்

 

இந்த உபதேசத்தின் வாயிலாக உங்களைத் தியான நிலைக்கே அழைத்துச் செல்கின்றோம்.
1.வாழ்க்கையில் வந்ததை எல்லாம் மறந்து விட்டு
2.உங்களை எல்லாம் நேரடியாக அந்தத் துருவ நட்சத்திரத்திற்குத் தான் கொண்டு செல்கின்றோம்.
3.இந்த உணர்வுகள் சேரச் சேர உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் எல்லாம் ஒளியாக மாறும்.

யாம் உபதேசம் கொடுக்கும் பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்…? வீட்டில் பொருட்களை எல்லாம் அப்படியே வைத்து விட்டு வந்திருக்கின்றோம்…! கதவு திறந்திருக்கிறது…! ஒருவேளை திருடன் வந்து விடுவானா…! என்று நினைத்தால்… திருடன் நிச்சயம் அங்கே போவான்.

அதே போன்று வீட்டை விட்டு விட்டு வந்து விட்டோம்… நம் பிள்ளைகள் எல்லாம் அங்கே என்ன செய்கின்றதோ…? ஏது செய்கின்றதோ என்று எண்ணினால் அங்கே ஏதாவது அவர்கள் நிச்சயம் குறும்புத்தனம் செய்வார்கள்.

நான் நினைத்தேன்… நினைத்த மாதிரி நடந்து விட்டதே என்று சொல்வீர்கள்.

ஆனால் வீட்டில் எல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று எப்படி எண்ண வேண்டும்…?
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் வீடு முழுவதும் படர வேண்டும்.
2.அங்கிருப்பவர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இங்கிருந்து எண்ணி அதை அங்கே அனுப்ப முடியும்.
3.டெலிபதி போன்று இது வேலை செய்யும்.

உங்கள் அனுபவத்தில் நீங்கள் அதை நிச்சயம் உணர முடியும்.

துரோகம் செய்தான் பாவி… அவன் உருப்படுவானா…? என்று பகைமை கொண்டவனை நாம் எண்ணினால் “அவன் அமெரிக்காவில் இருந்தாலும்…” அவனைச் சென்று இந்த உணர்வு ஆட்டிப் படைக்கிறது எல்லவா…!

அது போன்று தான் நம் குடும்பத்தில் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு என்றோ… நாம் செய்யும் தொழிலுக்கு நல்லதோ என்று இருந்தாலும்…
1.நாம் பாய்ச்சும் அந்த உயர்ந்த சக்தி அங்கே சென்று நல்லதாக அது இயக்கும்.
2.அருள் உணர்வு கொண்டு அங்கே நாம் இணைத்து விட்டால் எதையும் நாம் சீராக்க முடியும்.

ஏனென்றால் குருநாதர் எம்மைத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணைத்தார். யாம் உங்களை எல்லாம் இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்திற்கே அழைத்துச் செல்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் உங்களுக்குள் விளைய வைத்துக் கொள்ளுங்கள்.
1.சூரியன் எடுத்து வைத்துக் கொள்கிறது… அதை இந்தக் காற்று மண்டலத்தில் பரவச் செய்கிறது.
2.அதே போல் உங்கள் வீட்டிலேயும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகமாகப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்… குடும்பத்தில் சந்தோஷம் வரும்.

அதே போன்று நாங்கள் வசிக்கும் எங்கள் தெருவெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று பரப்புங்கள். உங்கள் தெருவிலும் அமைதி வரும்.

ஒரு சிலர் தவறான நிலைகள் கொண்டு செயல்பட்டாலும் அவர்களுக்கும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பாய்ச்சி அவரை அறியாத இருள்கள் நீங்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் எடுத்தால்… தீமைகளை நீக்கக் கூடிய அரும்பெரும் சக்திகளாக நாம் வளருவோம்.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நமக்குள் வளர்த்து குடும்பத்தில் பெருக்கி ஊரிலும் உலகிலும் பெருக்கி
2.தீமைகளை அகற்றிடும் சக்தி வாய்ந்த நிலைகளாக நாம் உருவாக்க வேண்டும்.

அது தான் கூட்டுத் தியானத்தின் நோக்கம்.

மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னார் குருநாதர்

மனதைத் தங்கமாக்க வேண்டும் என்று சொன்னார் குருநாதர்

 

குருநாதர் என்னைப் பழனிக்கு அருகில் இருக்கும் மலைக்கு அழைத்துச் சென்று ஒரு கரண்டியும் ஈயமும் எடுத்து வரச் சொன்னார். “இன்ன இடத்தில் இன்ன மாதிரிச் செத்தைகள் இருக்கும் எடுத்துக் கொண்டு வா…!” என்றார்.

நான் அதையெல்லாம் எடுத்து வந்தவுடன்… அந்தக் கரண்டியில் ஈயத்தை வைத்துச் செத்தைகளெல்லாம் போட்டுத் “தீயை வைத்து எரிடா…” என்றார்.

அது எரிந்து ஈயம் உருகியது. உருகியவுடன் அது தங்கம் போன்ற நிறமாக மாறியது. அது அப்படியே எரிந்து கொதிக்கிறது. கொதித்தவுடன்… “எப்படி இருக்கிறது…?” என்று எம்மிடம் கேட்டார் குருநாதர்.

நான் “ஜக…ஜக…ஜக…” என்று இருக்கிறது சாமி என்றேன்.

என்னடா ஜக…ஜக…ஜக…? என்று இரண்டு அடியும் கொடுத்தார். எப்படி இருக்கிறது…? என்றார்.

மீண்டும் ஜக ஜக ஜக என்றேன் நான்.

திரும்பவும் என்னடா ஜக ஜக ஜக என்று சொல்கிறாய்…? என்று இரண்டாவது தடவையும் ஒரு அடி கொடுத்தார் குருநாதர்.

மீண்டும் நான் என்ன செய்தேன்…? ஜக ஜக ஜக என்று சொன்னேன்.

அப்புறமும் எப்படி இருக்கிறது…? என்று கேட்டார் குருநாதர்.

தங்கம் மாதிரி மின்னுகிறது சாமி…! என்றேன்.

குருநாதர் அப்படிச் சொல்லுடா… “தூ…!” என்று சொல்லி அவர் உமிழ் நீரை அதில் துப்புகிறார். துப்பியவுடன்… மூடுடா என்றார்.

பின் உறைந்து இருக்கிறது. எடுத்துப் பார்த்தால் “பார்த்தால் தங்கக்கட்டி…!” அலுங்காமல் கொண்டு போய் அதை விற்றுவிட்டு வா என்றார்.

இது உண்மையா பொய்யா…? என்பதைத் தெரிந்து கொள்ள இரண்டு பேரும் தங்க வேலை செய்பவரிடம் கொண்டு சென்று கொடுத்தோம்.

அவர் உரசிப் பார்த்து விட்டு “அட.. அடடடா…! என்ன இது…? சாமியிடம் நீங்கள் கற்றுக் கொண்டதைக் கொண்டு வாருங்கள். நாம் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.

நகைக் கடையில் அதைக் கொடுத்தால் “நீ ஏன் பைத்தியம் கூடச் சேர்ந்து சுற்றினாய்…? என்று இப்பொழுதுதான் தெரிகின்றது. ஏதோ விஷயத்தோடு தான் சுற்றியிருக்கிறாய்…! என்கிறார்.

நீ எவ்வளவு வேண்டுமானாலும் கொண்டுவா, உனக்கு நான் காசு தருகிறேன். இருவரும் லாபத்தில் பங்கு எடுத்துக் கொள்ளலாம். நீ சும்மா செய்கிறாய். ஆனாலும் நான் இன்றைக்கு உள்ள தங்க விலையில் பாதியை உனக்குக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். நீ எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்… யாரிடமும் சொல்ல வேண்டாம்…! என்கிறார்.

ஒரு வாத்தியார் இராமகிருஷ்ணன் என்பவர் தங்கம் செய்கிறேன் என்று “நான் பாதரசத்தைக் கட்டிக் கட்டி முடியவில்லை…! எனக்குத் தங்கம் வித்தையைக் கொஞ்சம் சொல்லிக் கொடு…” என்கிறார்.

நீ செய்ய வேண்டாம்… நானே செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டியதைச் சொல் நான் கட்டித் தருகிறேன் என்று கூறி என் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தார். பின் அவர் செத்தும் போனார்
1.மனிதனுடைய ஆசைகள் எப்படியெல்லாம் வருகிறது…?
2.எமக்கே இதைச் செய்து கடைகளில் விற்றுப் பணத்தை வாங்கி வந்து என் பிள்ளைகளுக்குச் செய்யலாம் என்ற எண்ணம் வருகிறது.

குருநாதர் தங்கத்தை விற்ற அந்தக் காசை வாங்கிக் கொண்டார். பார்…! எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டமெல்லாம் எப்படி இருக்கிறது…? அதை நிவர்த்தி செய்ய வேண்டுமா இல்லையா…? என்று கூறி, அந்தப் பணம் முழுவதையும் கொடுத்துவிட்டு எமக்கு ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தார்.

இத்தனை தூரம் செய்த பிற்பாடு ஒரு ரூபாயை எம்மிடம் கொடுத்து உன் பிள்ளைகளுக்கு மிட்டாய் திண்பண்டங்கள் வாங்கிக் கொடு என்கிறார் குருநாதர்.

இப்படிச் செய்தவுடன் எமக்கு என்ன ஆசை வருகின்றது…? குருநாதருக்குத் தெரியாமல் அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் சென்று அந்தச் செத்தைகளையெல்லாம் போட்டு ஈயக் கரண்டியையும் கொண்டு வந்து அவர் செய்த மாதிரியே யாமும் செய்தோம். அதே மாதிரித் தங்கமாக மாறியது.

இரண்டாவது முறையாகத் தங்கமாக ஆனவுடன் தங்கம் பதம் பார்ப்பவர்கள் இரண்டு பேரிடம் கொடுத்து இது எப்படி இருக்கிறது…? என்றேன்.

“அட..அட..அட… நைனா…!” இன்றைக்கு உனக்கு கோடீஸ்வரன் ஆவதற்கு நேரம் வந்துவிட்டது… உங்களைத் தேடி எத்தனை பேர் வருவார்கள் தெரியுமா…? என்று இதில் பெருமை பேசுகின்றார்கள்.

இவர் இப்படிச் சொன்னவுடன் அங்கிருந்து குருநாதர் வருகிறார். ரோட்டில் திட்டிக் கொண்டே… ஏய்.. திருட்டுப் பயலே… திருடா… டேய் தெலுங்கு ராஜ்யம்..! என்று எம்மைத் திட்டிக் கொண்டு வருகிறார்.

ஒரு சைக்கிள் செயினையும் கையில் எடுத்துக் கொண்டு வந்தார். இப்படி யாம் ரகசியமாகத் தங்கம் செய்தோம் என்று “டேய்.. திருடா..!” என்று சொல்லிக் கொண்டே வருகின்றார் குருநாதர்.

நான் என்ன செய்தேன்…? எழுந்து விழுந்தடித்துச் சந்துப் பக்கம் ஓடி ஒளிந்து கொண்டேன். அங்கேயும் பின்னாடி என்னைத் துரத்திக் கொண்டே வந்து விட்டார் குருநாதர்.

“ஏய்… திருடா…!” ஏன்று அவர் எங்கேயோ இருந்து கத்திக் கொண்டே வருகிறார். என்னைத் திட்ட மட்டார்… தெலுங்கு ராஜ்ஜியம் என்று தான் சொல்லித் திட்டிக் கொண்டே வந்தார்.

அப்பொழுது இதை எடுத்துக் கொண்டு ஓடி ஓடிப் பார்க்கிறேன் இருந்தாலும் என்னால் முடியவில்லை… கடைசியில் என்னைச் சுற்றி வளைத்துவிட்டார்.

இங்கே வாடா…! என்றார் குருநாதர். எவ்வளவு தங்கம் செய்தாய்…? என்று பிடித்துக் கொண்டார் அவரிடமிருந்து தப்ப முடியவில்லை. தங்கத்தை அவர் வாங்கிக் கொண்டார். போய் விற்றுவிட்டு வாடா என்றார். விற்றுவிட்டு வந்தவுடன் பணத்தை அவரே வாங்கிக் கொண்டார்.

ஏன்டா உனக்கு இந்தத் திருட்டுப் புத்தி…? என்றார் குருநாதர்.
1.உன் மனதைத் தான் தங்கமாக்கும்படி நான் சொன்னேன்.
2.உன் மனதைத் தங்கமாக்கினால் எத்தனை தங்கம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
3.ஏன்டா உனக்கு இந்தப் புத்தி வருகிறது…? என்றார்.

அந்த நிலையில் தங்கம் செய்யும் ஆசை எனக்கு வரப்போகும் போது இதே போல் நான் செய்த மாதிரி அடுத்தவர்களுக்கும் ஆசை வரத்தானே செய்யும்.

நான் குருநாதரிடம் பழகிக் கொண்டு இருக்கும் போதே அவருக்குத் தெரியாமல் காசு சம்பாதித்துவிடலாம். வீட்டுக் கஷ்டத்தையும் போக்கி விடலாம் என்று இந்த உணர்வுதான் வருகின்றது. ஏனென்றால் மனிதனுடைய மனங்கள் எப்படி இருக்கிறது…? என்று சோதிக்கிறார் குருநாதர்.

பின் தங்கம் செய்து விற்றார் என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் எம்மைத் தேடி வருவதற்கு ஆரம்பித்தார்கள்.

கொஞ்சம் சொல்லிக் கொடு… நாங்கள் செய்து கொள்கிறோம் நீ செய்ய வேண்டாம்…! நீ செய்தால் தான், குருநாதர் உன்னை விடமாட்டார். நீ சொல்லிக் கொடு நான் எல்லாம் செய்து கொள்கிறேன். உனக்கு வேண்டியதை நான் செய்கிறேன்… பாதிப் பங்கு கொடுக்கிறேன் என்று சேர்ந்து எம்மைச் சுற்றிக் கொண்டு வந்தவர்கள் ஏராளமானோர்.

1.ஏனென்றால் குருநாதர் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொரு ஆசையின் உணர்வின் இயக்கங்களை எமக்குக் காட்டித் தெளிவுபடுத்தினார்.
2.ஆகையால் மனதை நீ எப்படித் தங்கமாக்க வேண்டுமென்று இங்கு தெளிவாகக் காட்டுகிறார்.

சூரியன் எப்படிப் பல உணர்வை எடுத்துப் பாதரசமாக மாறி உலகத்தின் தன்மையை உருவாக்கும் தன்மையை எப்படிப் பெறுகின்றதோ அதே மாதிரித்தான் எல்லா மனிதனுடைய உணர்வும் இந்தப் பாதரசத்தின் தன்மை அடைந்தது. அதன் உணர்வின் தன்மை பெற்றது தான் அந்த உயிர்.

ஆக மொத்தம் உன்னுடைய உயிரையும் இதே போல ரசமாக்குதல் வேண்டும். உணர்வின் தன்மையை ஒன்றாக்குதல் வேண்டும்.

எப்படிப் பாதரசம் சுக்கு நூறாக ஆனாலும் அது மீண்டும் ஒன்று சேர்ந்து ஆகின்றதோ அதன் வழியில் நீ செயல்படுதல் வேண்டும் என்பதைத்தான் இப்படி அங்கே காட்டினார்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி என்பது எம அக்னி (கடும் நெருப்பு)

துருவ நட்சத்திரத்தின் சக்தி என்பது எம அக்னி (கடும் நெருப்பு)

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இவ்வாறு உடலுக்குள் செலுத்திய பின் என்ன நடக்கின்றது…?

1.உதாரணமாக நெருப்பு எரிகிறது என்றால் பக்கத்திலே செல்வோமா…?
2.அதனுடைய காற்றழுத்த்தில் நம்மைத் தள்ளி விட்டுக் கொண்டேயிருக்கும்.
3.இதைப் போன்று அருள் ஞானிகள் உணர்வை உடலுக்குள் வலு சேர்த்தால் அந்த வெப்பத் தணல் என்ன செய்யும்…?
4.நமக்கு முன் அதனின் வலுவாக நிற்கும்.

அதே போல் எரியும் நெருப்பிலே மிளகாயைப் போட்டால் நெடி வரும். அப்போது அருகில் செல்ல முடியுமா…? நல்ல குணங்கள் கொண்டு இருந்தாலும் அங்கே நாம் அமைதியாக இருக்க முடியுமா…? வேறு எதையும் சிந்திக்க முடியுமா…? இல்லையே…!

நாம் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் எத்தனையோ நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்போம்… கேட்டிருப்போம்.

சண்டையிட்டவர்களைப் பற்றி வேதனைப்பட்டவர்களைப் பற்றி திட்டியவர்களைப் பற்றி வெறுப்படைந்தவர்களைப் பற்றியெல்லாம் பாசத்துடன் பரிவுடன் கேட்டிருப்போம்.
1.இது எல்லாம் நமக்குள் பதிவாகி இருக்கும்… நம் ஆன்மாவிலே முன்னாடி இருக்கும்.
2.இந்த உணர்வலைகள் நம் ரத்தத்துடன் கலந்து போய்க் கொண்டிருக்கும்.
3.நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட அணுக்கள் அதை உணவாக எடுத்துக் கொண்டிருக்கும்.

ஆனால் நல்ல உறுப்புகளை உருவாக்கிய நல்ல அணுக்கள் அதற்கு நல்ல உணவு இல்லாதபடி சோர்வடையும்… அதனுடைய செயலாக்கங்கள் குறையும்.

அதை நாம் தூய்மைப் படுத்த வேண்டும் அல்லவா…! துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உள்ளுக்குள் செலுத்திய பின்
1.கெட்ட அணுக்கள் அதனுடைய உணர்வைக் கவர்வதில்லை… அதைத் தள்ளி விட்டுவிடும்.
2.அந்தத் தீமையான உணர்வுகள் நம் ஈர்ப்பு வட்டத்தைக் கடந்து சென்று விட்டால்
3.காலையில் 6:00 மணிக்கெல்லாம் சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்து கொள்ளும்.
4.அவ்வாறு சூரியன் அதை எடுத்துக் கொண்டால் நமது ஆன்மா சுத்தமடைகின்றது.
5.நம் உடலுக்குள் சென்ற தீமைகளை உயிர் வேக வைக்கின்றது.

சமையல் செய்யும் போது வேக வைத்துத் தான் நாம் எல்லாவற்றையுமே ஒன்றாகச் சேர்த்துச் சுவையாக ஆக்க முடியும். வேக வைக்காமல் ஒன்று சேர்க்க முடியாது.

ஆகவே நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடலுக்குள் சேர்த்து எல்லா அணுக்களிலும் அதை இணைத்து வேக வைத்து “நான்கையும் ஒன்றாக்கப்படும் பொழுது…” வேதனையோ மற்ற குறைகளோ எல்லமே அகல்கிறது.

நம் ஆன்மா சுத்தமாகின்றது…!

அதற்குப் பின்… நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ அவர்கள் குடும்பம் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் தீமைகளிலிருந்து நோய்களிலிருந்து துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும் அவர்கள் ஒன்றுபட்டு வாழும் சக்தி பெற வேண்டும். அவர்கள் தொழில் நன்றாக இருக்க வேண்டும் என்று யாரையெல்லாம் நாம் சந்தித்தோமோ அவர்களுக்கெல்லாம் இது கிடைக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

1.வரிசையாக எந்த அளவிற்கு இவ்வாறு எண்ணி எடுக்கின்றோமோ
2.அவர்களுடைய உணர்வுகள் நமக்குள் பதிவாகாது… அதைத் தள்ளி விட்டுக் கொண்டே இருக்கும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குப் பாதுகாப்புக் கவசமாக அமையும்.

கோடி கோடி – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

கோடி கோடி – மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

 

விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக… குருநாதர் எம்மை ஓங்கி அடிப்பார். நினைவுகள் எல்லாம் அவர் பால் செல்லும்.

உதாரணமாக… பாசத்தால் நம்மை அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. அதாவது நீங்கள் தமாஷாக ஒருவரை அடித்துப் பாருங்கள்… கோபம் வருகிறதா என்று…? வராது.

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும் போது
1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்
2.இந்த உணர்வுகள் மாறும்.

ஆக குரு எனக்குக் காட்டும் நிலைகள் அவர் என்னை அடிக்கப்படும் பொழுது
1.அந்த உணர்வின் தன்மை “எது…?”
2.அடித்தவுடன் சிரிப்பார்… சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்.

எத்தனையோ கோடி உணர்வுகள் சேர்த்து
1.உன்னை நான் அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை
2.என் (குருதேவர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும் அந்த நினைவால் கலந்த உணர்வும்
3.உன்னுடன் அது எப்படிச் சேர்ந்து அண்டத்தை அறிகின்றாய் என்று நீ பார் என்று குரு காட்டுகின்றார்.

நீ அண்டத்தை அறிந்துவிடு… ஒரு மனிதனின் உணர்வுக்குள் நீ சொல்லைப் பாய்ச்சிவிடு. அங்கே கிளரும் உணர்வின் தன்மையை நுகர்ந்தறி. நுகர்ந்து அறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும். ஆனால் அவனை நீ மாற்ற முடியாது.

ஒரு செடியின் தன்மை காரத்தின் தன்மை கொண்டதோ அல்லது கசப்பின் தன்மை கொண்டதோ அதன் நிலை மாறாது. அதைப் போல அவரின் உணர்வின் தன்மை மாறாது.

1.நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும்.
2.ஆனால் அதை எவ்வாறு மாற்றுவது…? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப் போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுக்கிறார்.

விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது…? என்று அவரின் கோடி உணர்வுகள் சேர்த்து
1.“கோடி கோடி… கோடி கோடி… “கோடி கோடி…” என்ற நிலையில்
2.நான் “தேடித் தேடி… தேடித் தேடி…” சென்று இதைப் பெற்றேன்
3.உன்னை அது “நாடி… நாடி… நாடி…” வருகின்றது
4.நீ “தேடித் தேடி…” அதைப் பெற வேண்டும் என்று இப்படிச் சொல்வார்.

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோம் என்றால் உட்பொருள்கள் எவ்வளவோ இருக்கும்.
1.என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…!” என்று இப்படிச் சொல்வார்.
2.ஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் அனைத்தும் சூட்சமம் தான்.

இந்தப் பொருள் காணும் தன்மை… கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது…? என்பதைத்தான் இந்தக் கோடியின் நிலையைப் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாகக் குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

1.அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும்
2.அவர் பிறவா நிலைகள் பெற்றதை… நாமும் பிறவா நிலை அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.

விண்ணுலக ஆற்றலைக் “கோடி கோடி…” என்று சொல்லும் பொழுது “இந்தக் கோடியைச் சாப்பிட்டால்… நீ எதை எதையெல்லாம் போய்ச் சாப்பிடலாம்…? போய் சாப்பிடுடா பாருடா…!” என்று குருநாதர் சொல்வார்.

அதனால் தான் இப்பொழுது உங்களுக்கு விளக்கமாகச் சொல்லி…
1.எது எது, எதை எதை விழுங்குகிறது…? என்பதை
2.அதாவது உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை
3.அந்தத் தீமைக்குள் ஞானிகள் உணர்வுகளைக் கலந்தவுடன் அதை விழுங்கி அந்தத் தீமையை அடக்குகின்றது.
4.அப்படி அடக்கிய நிலைகள் கொண்டு உணவாக அதற்கு அமைகிறது.

ஒரு மரக்கட்டை எரிகிறதென்றால் பல உணர்வுகள் சேர்த்து “எண்ணெய்ப் பசை…” அதிலே இருந்தால் தான் எரியும். எண்ணெய்ப் பசை இல்லையென்றால் கருகிவிடும்.

இதைப் போலத்தான்… உணர்வின் தன்மை எதுவாக இருப்பினும் ஒரு குழம்பிற்குள் சுவை தேவை என்றால் காரம் தேவை. அந்தக் காரத்தை எவ்வளவு சேர்க்கின்றோமோ அதற்குத் தக்கவாறுதான் அந்த உணர்ச்சிகள் உந்தும்.

இதைப் போல நமக்குள் எத்தகைய தீய குணங்கள் இருப்பினும் அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்து இதை விழுங்கிடல் வேண்டும்.
1.ஞானிகளின் உணர்வை நாம் விழுங்கினால் தீமைகளை இது விழுங்கும்.
2.ஆகவே மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாகச் சேர்க்க வேண்டும்.

ஞானத்தை அறிய வேண்டும் என்றால் இப்பொழுது கேட்டறிந்த உணர்வுகள்… உங்களுக்குள் எத்தனை கோடி குணங்கள் இருப்பினும் அவை அனைத்திலும் எண்ணத்தால் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கும் பொழுது இது உங்களுக்குள் பால்வெளி மண்டலமாகத் துகள்களாகச் சேர்கின்றது.

இவ்வாறு சேர்த்துக் கொண்ட இந்தத் துகள்கள்
1.அதாவது அருள் உணர்வுகளை நுகர நுகர எண்ணங்களாக விரிவடைகின்றது.
2.எண்ணங்களின் தன்மை விரிவடையப்படும் பொழுது உங்களுக்குள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுகின்றது.

அந்தத் திறன் இல்லையென்றால் நாம் செயலாக்க முடியாது.

அந்தத் திறன் நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உணர்வைப் பதிவு செய்கிறோம். இதன் துணை கொண்டு தீமைகளை அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும்.

1.அந்த அருள் ஞானிகளின் உணர்வை அடிக்கடி எண்ணி
2.அதை நீங்கள் நுகர வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

அதிர்ச்சி அடையச் செய்யும் எத்தகைய செய்தியையும் நாம் பாசத்தால் நுகரக் கூடாது

அதிர்ச்சி அடையச் செய்யும் எத்தகைய செய்தியையும் நாம் பாசத்தால் நுகரக் கூடாது

 

வேதனை வெறுப்பு என்ற நிலைகளில் தற்கொலை செய்து மடிந்து கொண்டவர்களோ அல்லது இடைமறித்து எதிர்பாராது மடிந்தவர்களோ வளர்ச்சி இல்லாத நிலைகளில் கடும் நோயினால் மடிந்தவர்களோ இவர்களின் உணர்வுகளைப் பாசமாக எண்ணி எடுத்துக் கொண்டால் அதனால் பல தீமைகள் விளைகின்றது.

பெண்கள் பாசத்துடன் அதிகமாக நேசிக்கப்படும் பொழுது… குறிப்பாக அதுவும் கர்ப்பமாக இருக்கக்கூடியவர்கள் இதை நுகர்ந்து விட்டால்
1.அவர்களுடைய கர்ப்பப்பையில் விஷத்தன்மைகள் அதிகரித்து அது விரிவடையாது
2.தற்கொலையால் இறந்த உணர்வுகள் ரத்தத்தில் கலந்து கருப்பைக்கு வந்தால் முட்டைகள் சீராக வளர்ச்சி அடையாதபடி
3.இடைவெளியிலேயே அழிந்துவிடும்… தன் இனத்தை விருத்தி செய்யும் நிலைகள் இழந்து விடுகின்றது.

ஏனென்றால் கர்ப்பமாக இருக்கும் தாய்… பல உணர்வு கொண்டு மரணம் அடைந்தவர்கள் துர்மரணம் அடைந்தவர்கள் உணர்வுகளை அதிகமாக நுகரப்படும் பொழுது
1.கருக்களில் இது சேர்க்கப்பட்டுத் தன் இனவிருத்தி என்று கருப்பைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்
2.அது முழுமை அடையாதபடி அழிந்து விடும்.
3.அத்தகையவர்களுக்குத் தன் இனத்தை விருத்தி செய்யும் தன்மை வருவது மிகக் கடினம் தான்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு இது போன்ற அதிர்ச்சி ஊட்ட கூடிய உணர்வுகளைக் கூடுமானவரை கருவுற்றவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஏனென்றால்
1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

ஆகவே வீட்டிலே திருமணம் ஆகிப் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டால்… முதல் அந்த மூன்று மாதத்திற்குள் அவர்களை அணுகி எமது உபதேச நூல்களைக் கொடுத்து அதைப் படித்துக் கேட்கும்படிச் செய்து அதை எல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

குடும்பத்தில் உள்ளோர் தியானமிருந்து கருவிலிருக்கும் சிசு அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியைப் பெற்று “ஞானக் குழந்தையாக வளர வேண்டும்…” என்று தவம் இருங்கள்.
1.அந்தத் தவம் உங்களைக் காக்கும்.
2.அருள் ஞானி பிறக்கும்… அது உலகத்தைக் காக்கும்
3.அப்படிக் காக்கக்கூடிய நிலைகள் உருவாக வேண்டும் என்று தவத்தை நாம் இருக்க வேண்டும்.
4.இந்த உணர்வை வளர்த்தோம் என்றால் தான் இந்த உலகை நாம் மீட்க முடியும்… உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக நாம் பெற முடியும்.
5.இந்த உடலான உலகத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
6.மீண்டும் உடல் பெறும் நிலைகளிலிருந்து நாம் மீள முடியும்.

இதைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுவோம். குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

காட்டுவாசிகளுக்கு மத்தியில் எமக்கு ஏற்பட்ட அனுபவம்

காட்டுவாசிகளுக்கு மத்தியில் எமக்கு ஏற்பட்ட அனுபவம்

 

ஒரு சமயம் யாம் அஸ்ஸாம் பகுதிக்குச் சென்றிருந்தோம். அப்பொழுது அங்கே வசிக்கக்கூடிய மலை வாழ் மக்கள் எம்மைப் பிடித்துக் கொண்டார்கள்.

1.மலைப் பகுதியில் வாழும் மக்களின் மத்தியில் என்ன நடைபெறுகிறது…? என்பதை
2.யாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு அவசியம் நீ அங்கு செல்லத்தான் வேண்டும் என்று குருநாதர் கூறிவிட்டார்.

அந்தக் காடோ யானைகளும் காண்டா மிருகங்களும் மற்றும் பல்வேறு விலங்குகளும் வாழும் அடர்ந்த பகுதி. குருநாதர் கொடுத்த உபாயத்தின் பேரில் யாம் அங்கே சென்று மலைவாழ் மக்களிடம் பிடிபட்டு அவர்கள் இழுத்துச் சென்ற பகுதிக்குச் சென்றோம்.

அங்கே அவர்கள் எம்மை ஒரு மரத்தோடு கட்டிப் போட்டார்கள். உண்பதற்கு ஆகாரம் கொடுத்தார்கள். அங்கே காளி கோவில் மாதிரி ஒரு கோவிலை வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் அந்த மலைவாழ் மக்கள் ஆட்டமும் பாட்டமுமாக இருந்து கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கவனிக்கும்படி குருநாதர் கூறினார். ஆட்டமும் பாட்டமுமாக இருந்த அந்தக் கூட்டத்தில் தலைவனாக இருந்த பூசாரி பாடிக் கொண்டே வந்து எம் மீது பல இடங்களில் ஊசியால் குத்தினார்.

ஆ…! என்று அலறினோம். அந்த சமயம் சில மந்திரங்களைச் சொல்கிறார்கள். அவைகளை எமக்குள் பதியும்படிச் செய்தனர். இவ்வாறு சில நாட்கள் அதே இடத்தில் கட்டி வைத்திருந்து மந்திர ஒலிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக எம்முள் பதியச் செய்து குறிப்பிட்ட காலம் வந்ததும் எம்மைப் பலியிடக் காத்திருந்தனர்.

இதனின் நிலைகளை எல்லாம் குருநாதர் காண்பித்து குறிப்பிட்ட நாள் வந்ததும் உன்னைப் பலியிடுவார்கள். உன் ஆத்மாவைப் பிரித்தெடுத்துக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

பின் உனது உடலைத் துண்டு துண்டாக வெட்டித் தசைகளைத் தாங்கள் வெள்ளாமை செய்யும் பகுதிகளில் வீசிவிடுவார்கள். மேலும் உனது தசைகளைக் கோவிலில் பொங்கலிடுவார்கள் என்று குருநாதர் எமக்கு உணர்த்தினார்.

இவைகளெல்லாம் யாம் குருநாதர் அருள் துணை கொண்டு அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்ட உண்மைகள்.

மனிதரைப் பலியிட்டு அவர்களது ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி மந்திர ஒலிகளின் துணை கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்ளும் விதமாக அந்த ஆன்மாவை எப்படிப் பயன்படுத்துவர்…? என்பதை அந்த இரவில் யாம் மரத்தில் கட்டப்பட்டிருக்கும் நிலையில் எமக்குக் குருநாதர் உணர்த்திக் கொண்டிருந்தார்.

1.இன்று பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். மலைப் பகுதிக்குச் சென்றால் அமைதியாகத் தனித்து வாழலாம் என்று.
2.ஆனால் சில மலைப் பகுதிகளுக்குச் சென்றால் எவ்வளவு பெரிய ஆபத்து இருகிறது…? என்பதையும் உணர்த்துகிறார்.
3.இறுதியில் யாம் குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு வெளியே வந்தோம்.

பின் இதே மந்திரத்தின் நிலைகளை நகரப் பகுதியில் எப்படி உருவாக்குகின்றார்கள்…? என்ற நிலையைத் தெளிவாக உபதேசித்தார்.

இதைப் போன்ற நிலைகள் நமது நாட்டில் மட்டும்தான் என்றில்லாமல் உலக நாடுகள் அனைத்திலுமே இதன் நிலைகள்தான் இருந்தன. எகிப்து ஈரான் ஈராக் மற்றும் ரோமன் நாடுகள் பற்றியும் அங்கு நடைபெறும் நிலைகளையும் நமது குருநாதர் எமக்குக் கூறினார்.

நம் வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக்கித் தருவதே… குருநாதர் காட்டிய அருள் வழி

நம் வாழ்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக்கித் தருவதே… குருநாதர் காட்டிய அருள் வழி

 

நம்முடைய குழந்தையை வளர்க்கின்றோம். செல்லமாக வளர்த்துக் கொண்டும் நேரத்தில் “அவன் குறும்புத்தனம் செய்கின்றான் பார்…” என்று சொல்வோம்.

அவனை நல்லவனாக்குகின்றோம்.
1.ஆனால் அவனுடைய குறைகளை நாம் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.
2.அதைப் பரிபக்குவமாக எடுத்துச் சொல்லும் நிலை வர வேண்டும்.

குடும்பம் வீடு என்று இருக்கும் பொழுது சில நேரங்களில் குறைகள் வருகின்றது. அதைப் பரிபக்குவமான நிலைகளில் நிவர்த்தி செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.

பக்குவம் தவறி விட்டால் சொல்கள் மாறிவிடும். வாருங்கள் என்று கனிவுடன் வரவேற்பதற்குப் பதில் “வாங்கள்…..” என்ற சொல் அழுத்தமாக வரும். அது குற்றமாகிவிடும்.

ஆகவே பக்குவத்தின் நிலைகள் என்பது
1.ஒன்றை நல்லதாக்குவதும் கெட்டதாக்குவதும்
2.உணர்வுகளை மாற்றுவதும் குணங்களை மாற்றுவதும்
3.எதிரிகளாக்குவதும் நண்பனாக்குவதும்
4.இது எல்லாம் நம்முடைய உணர்வுகள் வெளி வரும் அதனின் பக்குவத்தைப் பொறுத்துதான் இருக்கின்றது.

ஆக நாம் தொழில் செய்தாலும் சரி மற்ற எதிலும் சரி… பக்குவ நிலை அவசியம் தேவை. சில கஷ்டங்கள் வந்து விட்டாலும் ஓரளவுக்கு நாம் பக்குவமான நிலைகள் கொண்டு சிந்தித்தோம் என்றால் அதிலிருந்து விடுபட்டு அதை நிவர்த்திக்கும் தன்மை வருகிறது… பகைமைகளைக் குறைக்கலாம்.

இதைப் போல வாழ்க்கையில் பரிபக்குவ நிலைகளை நாம் கொண்டு வருதல் வேண்டும். மற்றவருடைய குறையான உணர்வுகள் நமக்குள் வராதபடி தடுக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வைத்துத் தடுத்து நிறுத்தினால் அதன் வேகத்தையும் துடிப்பையும் நிறுத்தி உணர்வின் அறிவாக நமக்குள் சிந்தித்துச் செயல்படும் சக்தி வரும்.

1.யாரும் கெட்டவர்கள் அல்ல…
2.சந்தர்ப்பத்தில் தான் இத்தனை நிலைகளும் வருகின்றது. அந்தச் சந்தர்ப்பம் கெட்டவராக மாற்றுகின்றது.
3.அதிலிருந்து மீட்டிடும் வழியே நமது குருநாதர் காட்டிய அருள் வழி.

ஆனால் அதே சமயத்தில் அதற்காக வேண்டி ஒரு முரடனிடமோ குடிகாரனிடமோ பக்குவமாகப் பேசினால் அவன் கேட்பானா…? நாம் அந்த இடத்தில் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்… அது தான் முக்கியம்.

நம்முடைய பக்குவத்தை அங்கே அவனிடம் எடுத்துச் சொன்னால் அவன் கேட்க மாட்டான். அவன் தவறு செய்ய விரும்புகின்றான்… நாம் அதற்குப் பக்குவம் சொன்னால் அவன் கேட்க மாட்டான்.

1.திருடனிடம் சென்று “ஏண்டா இந்த மாதிரிச் செய்கிறாய்…?” என்று பக்குவம் சொன்னால் கேட்பானா…? கேட்க மாட்டான்.
2.அந்த இடத்தில் அவனுடைய உணர்வுகள் நமக்குள் வராதபடி நம்மை நாம் பக்குவப்படுத்த வேண்டும்.

நல்ல பொருள்களை வைத்திருக்கிறோம் என்றால் அதிலே தூசி அதிலே படாதவாறு நாம் பாதுகாக்க வேண்டும். அதைப் பத்திரமாக மூடி வைக்க வேண்டும்.

தீமை நமக்குள் புகாதபடி தடுக்க வேண்டும். ஆனால் அதற்காக வேண்டிப்
1.போக்கிரியையும் திருடனையும் பார்த்த பின் நாம் பக்குவமாக நடந்து கொண்டிருந்தால் எல்லாம் தலைக்கு மேல் சென்று விடும்.
2.நம்முடைய பக்குவமெல்லாம் தலைகீழாகக் கவிழ்ந்து விடும்.

அவன் செய்யும் தவறு நமக்குள் வந்து விடாது… அதனால் நாம் தவறு செய்யாது பக்குவமாக அதைத் தடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் “இவன் இப்படித் தவறு செய்கின்றானே…” என்று அந்தத் தவறான உணர்வு நமக்குள் வந்தால் அதைத் தான் நம்மையும் செய்யும்படி வைத்துவிடும்.

இதைப் போல
1.நமது வாழ்க்கையில் நடந்து கொள்ள பரிபக்குவ நிலைகள் தேவை.
2.எந்தெந்த இடத்திற்கு எவ்வாறு தேவையோ… அப்போதெல்லாம் நம்மை நாம் பக்குவப்படுத்திப் பழக வேண்டும்.

வெள்ளாட்டுப் புழுக்கையின் மருத்துவ குணம்

வெள்ளாட்டுப் புழுக்கையின் மருத்துவ குணம்

 

வெள்ளாடு பல விஷச் செடிகளை உணவாக உட்கொள்கின்றது… அந்த விஷத்தன்மைகளைத் தன் உடலில் சேர்த்துக் கொள்கின்றது.

கருவுற்றிருக்கும் ஒரு வெள்ளாடு
1.அந்தச் சமயத்தில் எந்தெந்தத் தாவர இனங்களை உட்கொண்டதோ அந்தக் குட்டி பிறந்த பின் என்ன செய்யும்,…?
2.தாய் கருவுற்ற சந்தர்ப்பத்தில் எத்தகைய செடிகளை உணவாக உட்கொண்டதோ அதையே அந்தக் குட்டியும் உணவாக எடுத்துக் கொள்ளும்.

உதாரணமாக இன்ன இடத்தில் இருக்கக்கூடிய விஷச் செடியை அந்தத் தாய் உட்கொண்டிருந்தது என்றால் அதிலே கருவுற்று வளர்ந்த இந்தக் குட்டியும்
1.இந்த ஆட்டுக்குட்டியை வேறு இடங்களுக்கு விலைக்கு வாங்கிச் சென்றாலும் கூட
2.அதே விஷச் செடியைத் தேடித்தான் செல்லும்… அது இல்லை என்றால் வாடும்.

காரணம் கருவிலே இருக்கும் போது அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதனுடைய உணர்ச்சிகள் அவ்வாறு இயங்குகின்றது.

இத்தகைய விஷச் செடியை உணவாக உட்கொள்ளும் அந்த ஆடு அதில் உள்ள விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொள்கின்றது. ஆனால் அதனுடைய மலம் நல்லதாக வெளி வருகின்றது. அந்த வெள்ளாட்டுப் புழுக்கையை நாம் மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மூட்டு வலி மூட்டு வாதம் சரவாங்கி நோய் என்றெல்லாம் சிலருக்கு இருக்கும். காரணம்
1.பிறருடைய துன்பங்களையும் துயரங்களையும் கேட்டு நுகர்ந்த நிலையில்…
2.வேதனைப்பட்ட மனிதர்களின் உணர்வுகளையும் நுகர்ந்திருந்தால்
3.அதனால் வேதனையை உருவாக்கும் அணுக்கள் உடல் உருவாகி மூட்டுவாதம் முழங்கால் வாதம் போன்ற உபாதைகளும்
3.ஈரக்குலையில் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் போது வேதனைப்படும் நிலைகளும் உருவாகின்றது.

இதை மாற்றி அமைக்க அந்த வெள்ளாட்டுப் புழுக்கையைச் சிறிதளவு எடுத்து அதை லேசாகச் சூடாக்கி “அதிலிருந்து வெளி வரும் மணத்தை நுகர்ந்தால்…”
1.உடலுக்குள் இருக்கும் விஷத்தன்மையை முறித்து விடுகின்றது.
2.மூட்டு வீக்கத்திற்கு உண்டான அணுக்கள் மடிகின்றது விஷ நீர்களை அகற்றுகின்றது வாத நோய்கள் குறைகிறது.

இப்படி அந்த வெள்ளாட்டுப் புழுக்கையின் மணம் மருந்தாக மனிதனுக்குப் பயன்படுகிறது.

உன்னைப் பலி கொடுத்து நான் சக்தி பெறப் போகின்றேன் என்றார் குருநாதர்

உன்னைப் பலி கொடுத்து நான் சக்தி பெறப் போகின்றேன் என்றார் குருநாதர்

 

“கல்கத்தா காளி” என்ற துர்தேவதையின் உணர்வுகளை மந்திரங்களைச் சொல்லி அதிலிருந்து உணர்வுகள் பெற்றது அரசர்கள் செய்த நிலைகள். இது பற்றிய உண்மை நிலைகளை உணர்த்திக் கொண்டிருந்த குருநாதர் எம்மைக் கொடைக்கானலின் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச்சென்றார்.

அங்கேயும் கல்கத்தா காளி கோயிலில் நடக்கும் சம்பவங்களைச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அங்கே நடைபெறும் நிகழ்ச்சியைக் காட்சியாகவும் கண்பித்தார் குருநாதர்.

அது சமயம் ஒரு சக்தியை நன்றாகத் தீட்டிக்கொண்டு கல்கத்தா காளி கோயிலில் எதற்காகப் பலி கொடுக்கின்றார்களோ… அதே போன்று நானும் உன்னைப் பலி கொடுத்துச் சக்தி பெறப் போகிறேன். அதற்காகத்தான் நான் உன்னை மயக்கிக் கொண்டுள்ளேன் என்றார் குருநாதர்.

தீட்டிய கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு
1.குரு எமது கழுத்துச் சங்கைப் பிடித்து “இந்தக் கத்தியால் இப்படிக் குத்தி உன் இரத்தம் அனைத்தையும் வடித்து
2.இங்கேயிருந்து காளி கோயிலுக்கு அனுப்பிவிட்டு உன் உயிரை நான் எடுத்து மந்திரவாதி ஆகப்போகிறேன் என்று கூறினார்.

எப்படியிருக்கும் எமக்கு…?

நான் சொன்னபடி கேள்…! என்று எம்மை மிரட்டியவாறு சொன்னார்.

அப்போது யாம் சொன்னோம்
1.யாம் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறோம்… ஏனென்றால் உங்களைப் பற்றிய அனைத்து உண்மையும் தெரிந்து விட்டது.
2.நீங்கள் எதைச் செய்தாலும் சரி என் மனைவியைக் குணப்படுத்தினீர்கள்… உங்கள் பிள்ளைகளை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறினோம்.

குருநாதர் உடனே சிரிக்க ஆரம்பித்தார். சிரித்ததோடு மட்டுமல்லாமல் கையில் ஆயிரம் ரூபாய் கொடுத்து எங்கேயும் நிற்காமல் ஓடி இரயில்வே ஸ்டேஷனுக்குப் போய்க் கல்கத்தாவிற்கு டிக்கெட் வாங்கு என்றார்.

இரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று எழுதிக் கொடுத்து டிக்கெட் வாங்கினோம். அங்கிருந்து கல்கத்தா செல்வதற்கு நேரடி வசதி இல்லாததால் மாற்று ஏற்பாட்டுடன் எழுதிக் கொடுத்தார்கள். யாம் டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்பும் வரையிலும் குருநாதர் அங்கேயே இருந்தார்.

யாம் இரயில் டிக்கெட்டைக் குருநாதரின் கையில் கொடுத்தோம்.
1.டிக்கெட்டைத் தம் கையில் வாங்கிக் கொண்ட குருநாதர் எம்மைக் கட்டி அணைத்தார்.
2.அடுத்த நிமிடம் குருதேவரும் யாமும் கல்கத்தாவில் இருந்தோம்.
3.குருதேவர் சூட்சும நிலையில் எம்மைக் கல்கத்தாவிற்கு அழைத்துச் சென்றார்.

கல்கத்தா அழைத்துச் சென்ற குருநாதர் அங்கே தாம் ஓட்டல் கடை வைத்து நடத்திய இடத்தையெல்லாம் காண்பித்தார். கல்கத்தாவில் காளி கோவிலில் என்னென்ன நடக்கின்றது…? என்பதையெல்லாம் காண்பித்தார்.

காளி ஆலயம் மூடியிருந்தது. அந்த நேரத்தில் சூட்சம நிலையில் உள்ளுக்குள் அழைத்துச் சென்றார். அங்கும் சில விஷயங்களைக் காண்பித்தார்.

அப்பொழுது இராமகிருஷ்ண பரமகம்சரின் வாழ்க்கையில் உள்ள உண்மைகளைக் கூறினார். இராமகிருஷ்ண பரமகம்சர் பிராமணர் படிப்பறிவில்லாதவர்… காளி கோவிலில் பூஜைகள் செய்து கொண்டிருந்தவர்.

அவர் காளியைப் பற்றி நிறையத் தெரிந்து கொண்டார். தெரிந்து கொண்ட உண்மையின் தன்மை கொண்டு காளி கோவிலில் பூஜை செய்து வந்தார்.

வருடத்தில் ஒரு அமாவாசை நாளன்று காளி கோவிலில் நரபலி கொடுப்பார்கள்.
1.அப்படி நரபலி கொடுக்கப்படும் காலத்தில் ஆலய சப்தங்கள் எப்படி இருக்கின்றது…?
2.காளித் தாய் இதற்கெல்லாம் அனுமதி கொடுக்கிறாளே…! என்று சொல்லி அவருக்குள் பாசத்தால் தான் ஏங்கி எடுக்கின்றார்.

அது போன்ற காலத்தில் ஆலய நிர்வாகிகள் ஒரு மந்திரவாதியிடம் அதற்கென்ற நிலைகளைப் பதிவாக்கிப் பூஜைகளை நடத்துகின்றனர். மந்திரவாதி என்ற நிலைகள் வரப்படும் பொழுது அவருக்கு மயக்க நிலை கொடுத்து அவரின் உணர்வின் தன்மையை அதற்குண்டான முறையில் பலி கொடுக்கின்றனர்.

அந்த மந்திரவாதி பல ஜோசியங்களைக் கற்றுக் கொண்டவர். பல அற்புதங்களைக் கற்றுக் கொண்டவர். பல உணர்வுகளை மந்திரத்தால் அறியும் தன்மை பெற்றவர்.

இப்படிப்பட்ட இந்த ஆன்மா… “ஆலயத்தில் இது போன்ற தவறுகளைச் செய்கின்றனரே…” என்று எண்ணிய இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலில் புகுந்து கொண்டது.

இப்படிப் புகுந்து கொண்ட பின் தான் இராமகிருஷ்ண பரமகம்சர் பித்தரைப் போன்று ஆனது,

இதன் தொடர் கொண்டுதான் அவர் (மந்திரவாதி) தன் உடலில் வாழும் காலத்தில் என்னென்ன அற்புதங்களைச் செய்தாரோ அதைப் போன்ற நிலையை இராமகிருஷ்ண பரமகம்சரின் உடலிலிருந்தும் பல அற்புதங்களை நடத்துகின்றார்.

அதாவது கோவில்களில் பூஜை செய்வதை விடுத்து இறந்த மனிதர்களைப் புதைக்கும் இடங்களில் சென்று அமர்வதும் அந்த உடல்களிலிருந்து வரக்கூடிய மணங்களை நுகர்வதும் அவர்கள் எப்படி இறந்தார்…? என்ற நிலைகளிலும் இராமகிருஷ்ண பரமகம்சர் செயல்பட்டு வந்தார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் கங்கை ஆற்றின் வழியில் செல்லும் போது, அரிச்சந்திரா காட் கேதார் காட் என்ற நிலை உண்டு. அதற்கென்று காவலாளி என்னும் அரசனும் உண்டு. ஊரிலிருந்து புதைக்கக் கொண்டு செல்லப்படும் பிரேதங்களை அந்த அரசனிடம் ஒப்படைத்து அவருக்கு வேண்டிய காணிக்கைச் செலுத்திய பின் தான் எரிப்பார்கள்.

இப்படி எரிக்கப்படும் காலங்களில் தான் இராமகிருஷ்ண பரமகம்சர் படகில் செல்கின்றார். இப்படிப் படகில் சென்று கொண்டிருக்கும் பொழுது சுடுகாட்டில் பிணங்கள் வெந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆழ்நிலைத் தியானத்திற்குச் சென்றார்.

இப்படி அமர்ந்தபின் அவருடன் படகில் சென்றவர்கள் பரமகம்சர் ஆழ்நிலைத் தியானத்தில் அமர்ந்துவிட்டாரே… எங்கு சென்றார்…? ஏது சென்றார்…? என்ற நிலை தெரியாமல் இருந்தனர்.

சில மணி நேரம் கழித்து இராமகிருஷ்ண பரமகம்சர் சமாதி நிலையிலிருந்து விடுபட்டதும் அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து “என்ன சாமி பார்த்தீர்கள்…?” என்று கேட்டார்கள்.

அதற்கு இராமகிருஷ்ண பரமகம்சர்… அங்கே நான் சிவனையும், சக்தியையும் பார்த்தேன். என்ன ஆனந்தமாக இருந்தது…? என்று அவர் சொன்னார்.

அவர் பார்த்தது எது…?
1.உடல் சிவம் உடல் வெந்தபின் உடலுக்குள் சேர்த்துக் கொண்ட உணர்வலைகள் எப்படி வெளிப்படுகின்றது…?
2.சக்தியாக நுகர்ந்த உணர்வு சிவமாக எப்படி ஆனது…?
3.இப்பொழுது சிவமான நிலைகள் கரைந்து அது சக்தியாக எப்படி வெளிப்படுகின்றது…? என்பதைத்தான் இராமகிருஷ்ண பரமகம்சர் கூறினார்.

ஆனால் இதற்கு மாறாக சிவனையும் சக்தியையும் பார்த்தார் என்று எழுத்து வடிவில் கொண்டு வருகின்றனர் என்று குருநாதர் தெளிவாகக் காண்பித்தார்.

நமது மெய் ஞானியான குருநாதர் இயற்கையின் இயக்கத்தின் உண்மையின் உணர்வினை எமக்குள் பாய்ச்சிப் பரமகம்சரைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து கொள்ளும்படிச் செய்தார்.

அப்பொழுதுதான்
1.இராமகிருஷ்ண பரமகம்சர் பார்த்த உணர்வும்… அவருடைய உடலில் நுகர்ந்த உணர்வும்
2.அங்கே “கேள்வி பதில்…” (சம்பாஷணை) என்ற நிலைகளில் வெளிப்பட்ட உணர்வுகளும்
3.சூரியனால் சூரியனால் கவரப்பட்டு இப்புவியில் பரவியுள்ள நிலைகளை நீ உற்றுப் பார்…!
4.உணர்வின் அறிவு உனக்குத் தெரியும்… அவரின் உடலும் தெரியும்.
5.அவருடைய சம்பாஷணைகளும் தெரியும் என்று உணர்த்தினார் குருநாதர்..

ஆனால் இதைப் போன்று நீ தெரிந்து கொண்டு இதன் வழியில் நீ அதிகமாக நாட்டம் செலுத்தினால் அவர்களின் உடல்களில் உள்ள சில தீமையின் உணர்வுகள் உனது இரத்தத்தில் கலந்துவிடும்.

1.இதன் நிலை உன்னில் அதிகமாக்கப்படும் பொழுது நீ பித்தனாக வேண்டிய நிலை வரும்.
2.இப்படி வரும் தீமைகளைத் தடுப்பது எங்ஙனம்…? என்று அங்கு பல உபாயங்களைக் காண்பித்தார் குருநாதர்.

இராமகிருஷ்ண பரமகம்சர் தெய்வீகப் பண்புகளைப் பற்றியும் இராமாயணத்தைப் பற்றியும் இராவணனைப் பற்றியும் மகாபாரதத்தைப் பற்றியும் பல வினாக்களுக்குத் தெளிவாகப் பதிலைக் கூறினார்.

1.காவியங்கள் மனிதரின் உணர்வின் தன்மை கொண்டுதான் வந்ததே தவிர
2.இதைப் போன்ற ரூபங்கள் இல்லை என்று வாதாடினார்.
3.ஆனால் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் பண்பு அன்றும் இல்லை.

இராமகிருஷ்ண பரமகம்சர் உபதேசத்தைக் கேட்டவர்கள் ஏராளமான பேர். ஆனால் அவர் கூறிய உணர்வை மாற்றி வெளியிட்டதும் அவருடைய உணர்வுகளைக் கேட்டறிந்தபின் திரிபுகளாக மற்றவர்களால் உணர்த்தப்பட்டு உண்மையின் உணர்வுகள் மறைக்கப்பட்டு விட்ட்து.

தங்களுக்கு ஏற்றவாறு… பக்தி மார்க்கங்களுக்கு உண்டான ஞானத்தைப் பயன்படுத்தி மதங்களுக்கு இணக்கமாகக் கருத்துக்கள் கலக்கப்பட்டு அவருடைய உண்மையின் உணர்வுகள் வெளியாகப்பட்டது என்ற உண்மையை எமக்குக் காண்பித்தார் குருநாதர்.

இப்படி இராமகிருஷ்ணர் சுற்றி வரப்படும் பொழுது அவருடன் ஒரு மந்திரவாதியும் வந்தார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் படிப்பறிவில்லாதவர்… ஆனால் அவர் பல அற்புத வேலைகளைச் செய்கிறார். புராணங்களைப் பற்றிக் கூறுகிறார். அடிக்கடி மனிதரைப் புதைக்கும் இடங்களுக்கும் எரிக்கும் இடங்களுக்கும் சென்று அங்கு வரும் மணத்தை நுகர்ந்து அதனின் உணர்வு என்ன…? என்று அறிகின்றார்.
1.அவருக்கு இந்தச் சக்தி எதிலிருந்து வந்தது…? எதனை அறிகின்றார்…? எதனைப் பின்பற்றுகின்றார்…? என்று
2.அவரைச் சூழ்ந்திருந்த பல மந்திரவாதிகள் அறிய முற்பட்டனர்.

மாலை நேரத்தில் இவர் நடந்து வரப்படும் பொழுது இருண்டு விடுகின்றது. இராமகிருஷ்ண பரமகம்சருடன் வந்த ஒருவருக்குக் கல் தடுக்கியது. அப்பொழுது ஐயோ…! இருட்டாகிவிட்டதே விளக்கு இல்லாமல் வந்துவிட்டோமே…!” என்று ஒருவர் சொன்னார்.

இதனால் அவர்களுடன் வந்த ஒரு மந்திரவாதி ஒருவர் “ஜெய் பவானி…!” என்று தொடையைத் தட்டினார். சலோ…! என்று சொன்னவுடன் ஒரு வெளிச்சம் முன்னால் சென்றது. இதன் உணர்வைக் காண்பித்தார் குருநாதர்.

மந்திரவாதி தன் மந்திரத்தின் தன்மை கொண்டு ஆவியை ஏவல் செய்து அந்த விளக்கை முன் அனுப்பினார். அப்பொழுது இராமகிருஷ்ண பரமகம்சர் சொன்னார்.

நான் இந்த வெளிச்சத்தை விரும்பவில்லை…
1.என் உடலில் அக வெளிச்சமும் இருளை அகற்றி நான் செயல்படும் “முன் சிந்தனை” என்ற
2.இந்த உணர்வு இல்லாது போய்விட்டதே…! என்று சொன்னவுடன் கூட வந்தவர்கள் அனைவரும் சிரித்து விட்டனர்.

இதனின் உணர்வுகளை அப்படியே பதிவாக்கிக் காண்பித்தார் குருநாதர். இந்த உணர்வின் ஒலி அலைகள்… பதிவாகியிருந்த அந்தப் பகுதியில் நடந்து செல்லப்படும் பொழுது இதனின் உணர்வின் அதிர்வுகளை நினைவுபடுத்தும் போது அதை எப்படி நீ கவர்ந்து உணர்கின்றாய்…? என்பதைக் காண்பித்தார் குருநாதர்.

இப்படியான நிலையில் அந்த மந்திரவாதி இராமகிருஷ்ண பரமகம்சர் பல பேருக்கு மத்தியில் தன்னை அவமதித்து விட்டாரே என்று ஏவல் செய்தார். எந்த வாயினால் கூறினாரோ அந்த உணர்வை அடக்க ஏவல் செய்து உணவு உட்கொள்ள முடியாதபடி பல துன்பங்களை இராமகிருஷ்ண பரமகம்சருக்கு உருவாக்கினார் அந்த மந்திரவாதி.

ஆனால் இராமகிருஷ்ண பரமகம்சருக்கு மந்திரம் தெரியும். உடலில் உள்ள உணர்வுகள் தெரிகின்றது.

உண்மைகளைத் தெரிந்து கொண்டபின்
1.மந்திரவாதி செய்யும் போராட்டத்திற்குத் தான் செல்லாமல்
2.இனி இந்த உடலிலிருந்தே பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று முழுமை பெற்ற உணர்வுகளை எண்ணினார் இராமகிருஷ்ண பரமகம்சர்

ஆகையினால் பரமகம்சர் மற்றவர்களிடம் உடலின் இச்சைக்கு நாம் செல்ல வேண்டாம்
1.உயிருடன் ஒன்றிய உணர்வுகள் நமக்குள் நிச்சயமாக இருந்தால் போதும்.
2.இந்த உடல் கழியக் கூடியது. இந்தக் கழிவின் நிலைகளுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்…? என்று பல முறை எடுத்துக் கூறியும் கேட்காமல்
3.எத்தனையோ வைத்தியரைக் கொண்டு பரீட்சிக்கப் பார்த்தாலும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்தாலும் இராமகிருஷ்ண பரமகம்சர் வாழ வேண்டும் என்ற நிலைகளில் அவரைத் துன்புறுத்தினர். இராமகிருஷ்ண பரமகம்சர் தவறேதும் செய்யவில்லை. ஆனால் மந்திரவாதி… பரமகம்சர் தன்னை அவமதித்து விட்டார் என்று எண்ணி அவர் உணவு கூட உண்ண முடியாதபடி செய்தார்.

இராமகிருஷ்ண பரமகம்சர் நீங்கள் எனக்கு ஒன்றும் இதனாலெல்லாம் நிவர்த்திக்க முடியாது என்று சொன்னால் யாரும் கேட்கவில்லை.

பரமகம்சர் இறந்தார். ஆனால் அவருக்குக் கேன்சர் என்று தான் மற்றவர்கள் முடிவு செய்தனர். ஆனால் எவ்வாறு ஏவல் செய்தனர்…? என்ற நிலையை எமக்குத் தெளிவாகக் காண்பித்தார் நமது குருநாதர்.

“மின்னலைப் பார்…” என்றார் குருநாதர்

“மின்னலைப் பார்…” என்றார் குருநாதர்

குருநாதர் எம்மைப் பார்த்து “மின்னலைப் பார்…” என்று பல முறை கூறினார். ஆனால் யாம் மறுத்துக் கொண்டே இருந்தோம்.

சந்தர்ப்பத்தால் ஒரு முறை திடீரென்று எமக்கு முன்னால் மின்னல் ஒன்று பாய்ந்தது. “மின்னலைப் பார்த்தாயல்லவா… இதனால் உன் கண் என்ன ஆனது…?” என்று கேட்டார் குருநாதர்.
1.இது போன்ற சில உணர்வுகளை
2.நான் கொடுத்த சக்தியின் துணை கொண்டு உனக்குள் அடக்கி
3.வீரிய உணர்வு கொண்டு பாய்ச்சு…! என்றார்.

மின்னல் கடலில் தாக்கப்பட்டு மணலாக மாறினலும் ஒரு மீன் மின்னலின் உணர்வுகளால் தாக்கப்படும் பொழுது அது “எலக்ட்ரிக் மீனாக” மாறுகின்றது. அதனுடைய அறிவானது வெகு தூரத்தில் இருப்பதையும் அறியக்கூடிய சக்தி பெறுகின்றது.

1.கடலில் மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலானது ஒரு மீனைத் தாக்கினால் அந்த மீன் இறந்தாலும்
2.மீண்டும் அது உருப்பெற்று புது விதமான மீனாக உருவாகி
3.வெகு தொலைவில் இருப்பதையும் அறிந்துணரக் கூடிய சக்தி பெறுகின்றது.
4.அப்படிப்பட்ட வளர்ச்சியின் தன்மையில் “டால்பின் மீன்” என்ற நிலைகள் உருவானது.

அதாவது “ஞானத்தைக் கொண்டு வளர்க்கும் சக்தி…” கடல் வாழ் நிலைகளில்தான் உருவானது என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

இது போன்று
1.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை அகஸ்தியர் தமக்குள் சுவாசிக்கும் போது அதனின் வளர்ச்சியில்
2.நமது பிரபஞ்சத்தையும் நமது பிரபஞ்சம் பிற மண்டலங்களில் இருந்து தன் உணவை எடுப்பதையும் முழுமையாக அறிந்துணர்ந்தார்.

நமது குருநாதர் அருள் துணை கொண்டு அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாமும் கவர்ந்து நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்தால்
1.இந்தப் பிறவியில் அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.
2.அகஸ்தியர் கண்ட அண்டத்தின் பேருண்மைகளையும் நாம் அனைவரும் அறிய முடியும்.

இதன் வழி பின்பற்றும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.