தீமைகளை நேர்முகமாக எதிர்த்து மாற்ற முடியாது… மறைந்திருந்து தான் மாற்ற வேண்டும்

தீமைகளை நேர்முகமாக எதிர்த்து மாற்ற முடியாது… மறைந்திருந்து தான் மாற்ற வேண்டும்

 

1.இந்த உலகில் எத்தனையோ பேரை நாம் சந்தித்திருந்தாலும்
2.அதன் வழி அவர்கள் உணர்வை நுகர்ந்தறிந்தாலும்
3.நுகர்ந்த உணர்வை நம் உயிர் அணுவாக மாற்றி நம் உடலுக்குள் இணைத்து விடுகின்றது.
4.அதிலே தீங்கு விளைவிக்கும் நிலையாக இருந்தால்
5.அந்தத் தீமை செய்யும் அணுக்களிலிருந்து நாம் விடுபட்டே ஆகவேண்டும்.

அதைத் தான் வாலி என்று சொல்வது.

இப்படி அனைவரின் உணர்வுகளும் நமக்குள் வரப்படும் போது நம்மை அறியாது விளையும் அந்த அணுக்களை அருள் மகரிஷிகளின் உணர்வக் கொண்டு அந்த இருளை அகற்றிடும் சக்தியாக அந்த வாலியை வென்றிடும் தன்மை பெற வேண்டும்.

ஏனென்றால் “ஒரு நோயாளியின் உணர்வை” மீண்டும் மீண்டும் பதிவாக்கிக் கொண்டால்… அல்லது “ஒருவன் எனக்குத் தீமை செய்தான்…” என்று அவனை அடிக்கடி நினைவு கொண்டால் அது வாலியாகின்றது…! நம் நல்ல உணர்வின் வலுவைச் சரி பகுதி அது எடுத்துக் கொள்கிறது. அதனால் வேதனப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகின்றோம்.

இந்த வகையில் பிறருடைய எண்ணங்களை நாம் நேரடியாக எண்ணப்படும் பொழுது அந்த உணர்வு வருகின்றது. தீமையோ கஷ்டமோ தொழிலில் நஷ்டமோ உடல் நோயோ நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் இப்படி எத்தனையோ வருகிறது.

இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் என்றால் அடுத்த கணமே நம் நினைவினை வானை நோக்கிச் செலுத்தி… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி… இருளை அகற்றிய அருள் ஒளியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.
1.வாலியை இராமன் நேரடியாகப் பார்க்கவில்லை…
2.மறைந்திருந்தே வாலியைத் தாக்கினான் என்று இராமாயணத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

மறைந்திருந்து என்றால் அருள் மகரிஷிகளின் ஒளியை நமக்குள் சேர்த்து அந்தத் தீமை செய்யும் உணர்வை… அந்த வாலியை நாம் வலுவிழக்கச் செய்ய வேண்டும்.

இராமன் என்றால் எண்ணம். நாம் எடுக்கும் எண்ணங்கள் அந்தச் சுவையின் உணர்வு எதுவோ உயிரிலே பட்ட பின் உணர்வின் ஒலியாக பல பல எண்ணங்கள் நமக்குள் வருவதும்… அதற்குத்தக்க இந்த உணர்ச்சிகள் நம் உடலை இயக்குவதும்… எந்தெந்த உணர்வை எடுக்கின்றோமோ அவை ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது நல்ல குணங்களை மாற்றுகின்றது.

சாயப் பட்டறைகளை எடுத்துக் கொண்டால் பல கலவைகளை (நிறங்கள்) உருவாக்கப்படும் பொழுது அதனதன் சக்திகளை இழக்கின்றது. எதனின் உணர்வு மாறுகின்றதோ அந்த நிறமாக மாறுகின்றது.

சமையல் செய்யும் போது சுவையாகச் செய்ய வேண்டும் என்றால் அதிலே பல சரக்குகளைப் போடுகின்றோம். அது ஒவ்வொன்றும் பல பல சுவை கொண்டது… தனியாகச் சாப்பிட்டால் பல உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. இருந்தாலும் அந்த உணர்வுகளை எல்லாம் சமப்படுத்தித் தான் சுவை மிக்கதாக உருமாற்றுகின்றோம்.

இதைப் போல் தான்…
1.நமக்குள் பலருடைய எண்ணங்களும் குவிந்திருப்பினும்
2.அதனதன் எண்ணத்தை உருவாக்கும் அணுக்கள் நமக்குள் உருவாகி இருந்தாலும்
3.அருள் ஒளிச் சுடர் கொண்ட அருள் ஞானத்தின் நிலையை நமக்குள் எடுத்து
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்து விட்டால்
5.நமக்குள் தீமை செய்யும் உணர்வின் அணுக்கள் பலவீனம் அடைகின்றது.

அப்பொழுது அது வாலி என்ற நிலைகளை வீழ்த்துகின்றது. இதைத் தான் இராமன் மறைந்திருந்து வாலியை வீழ்த்தினான் என்று சொல்கிறார்கள்.

ஆனால் இராமாயணக் காவியங்களைப் பார்க்கப்படும் போது இராமன் கடவுள் என்றால்… அவன் ஏன் வாலியை மறைந்திருந்து தாக்க வேண்டும்…? என்று சில படித்த வர்க்கத்தினர் வாதம் செய்கிறார்கள்.

ஏனென்றால் தீமை செய்யும் உணர்வை நேரடியாகப் பார்க்கும் பொழுது அந்தத் தீமையின் உணர்ச்சிகள் தான் நமக்குள் தூண்டப்படுகின்றது.

ஆனால் அருள் ஒளி என்ற உணர்வை எடுக்கப்படும் பொழுது அதை மறைத்து விடுகின்றது. அதனின் செயலாக்கங்களைக் குறைத்துவிடுகின்றது.

ஆகவே
1.மனிதன் வாழ்க்கையில் எண்ணங்கள் எப்படி உருவாகின்றது…?
2.எது வலிமை பெறுகின்றது…? எதன் வலிமையில் மனிதன் இயங்குகின்றான்…?
3.மனிதன் என்ற நிலையில் எந்த வலிமை மனிதனை மாற்றுகின்றது…? என்பதை எல்லாம்
4.காவியத் தொகுப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியுள்ளனர் ஞானியர்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் பார்ப்போர் அனைவரும் என்னைப் பார்ப்போர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்தப் பேரானந்த நிலை பெற வேண்டும் என்ற உணர்வைத் துருவ தியானத்தில் அனுதினமும் எடுக்க வேண்டும். எடுத்தால் பிறரின் உணர்வுகள் நமக்குள் வாலியாக இயக்காது…!

துன்பங்களைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை… சகலத்திற்கும் தீர்வு உண்டு – ஈஸ்வரபட்டர்

துன்பங்களைப் பெரிதாக எண்ண வேண்டியதில்லை… சகலத்திற்கும் தீர்வு உண்டு – ஈஸ்வரபட்டர்

 

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்…! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா…?

உலக வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்…” எதிர் மோதல்களையே எண்ணி… தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா…?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்…!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் – வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அளித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்…?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வு உண்டு…!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன…?

உலக பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது… எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்… நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!

ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான். ஆகவே ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு…” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்… யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு…!

கண்ணன் கீதா உபதேசம் செய்கின்றான் என்று வியாசகர் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

கண்ணன் கீதா உபதேசம் செய்கின்றான் என்று வியாசகர் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

 

1.நம் கண்கள் எப்படி இயக்குகிறது…? என்ற நிலையும்
2.நாம் நுகர்ந்த உணர்வுகள் அணுக்களாக எப்படி உருவாகிறது…? என்றும்
3.உருவான அணு தன் உணர்ச்சிகளைத் தூண்டும் பொழுது உயிருக்கு எட்டி
4.உயிரின் தன்மை ஆணையிடும் போது சிறுமூளையின் பாகம் செல்லப்படும் பொழுது
5.உயிரிலே இந்த உணர்வின் ஒலிகளை எழுப்பி… கண்ணுக்கும் உடலுக்கும் செவிக்கும் நம் மனதிற்கும்
6.அதே உணர்வுகளை ஈர்த்து நமக்குள் எப்படி அறிவிக்கச் செய்கிறது…? என்ற நிலையை
7.வியாசகர் இதைத் தெளிவாக உணர்த்தி உள்ளார்.

மகாபாரதப் போர் என்றும் குருக்ஷேத்திரப் போர் என்றும் அந்த குருக்ஷேத்திரப் போரைக் கண்ணன் தான் வழி நடத்திச் செல்கின்றான் என்றும் காட்டியுள்ளார்.

ஒருவர் செய்யும் தீமையான உணர்வுகளை ஒரு தரம் நாம் உற்றுப் பார்த்து உணர்வின் தன்மையைப் பதிவாக்கி விட்டால் மீண்டும் அதனின் நினைவை எடுக்கப்படும் பொழுது… நம் உயிருடன் சேர்ந்து அந்த உணர்வுகள் சங்கநாதமாக அந்த ஒலிகளை எழுப்புகின்றது… குருக்ஷேத்திரப் போராகின்றது.

அதாவது கண்களால் அவர்களை நினைத்து நாம் சுவாசித்தபின்
1.உயிரிலே படும்பொழுது அந்த உணர்வுகளை இயக்குகின்றது.
2.ஒலி அலைகள் கிளம்பிய பின் நம்மைக் காத்திடும் உணர்வுகள் எழும்பி
3.நாம் எதை எண்ணினோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு எதிர்த்து உள்ளே போராடச் சென்று விடுகின்றது.

வேதனைப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்து விட்டால் நம்மைப் பலவீனப்படுத்தச் செய்கின்றது. நம்முடைய செயல்களைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி போகின்றது.

உதாரணமாக நம் பையன் மீது ஒரு கடுமையான வெறுப்பு வந்து விட்டால்… பையனுக்காக வேண்டி சேர்த்த சொத்தையும் அல்லது நாம் சேமித்து வைத்த சொத்தையும் கூட… அந்தப் பொருள்களை எல்லாம் எடுத்து அடித்து நொறுக்கும் உணர்வு தான் வரும்.

இந்த நொறுக்கும் உணர்வுகள் வரும் பொழுது நாம் எதை எண்ணினோமோ அதுவாகவே நாம் மாறுகிறோம். அதைத்தான் கீதையிலே கண்ணன் கூறுவது போன்று வியாசகர் அதைத் தெளிவாகச் சொல்கின்றார்.

வியாசகர் என்றால் அவன் மூடனாக இருக்கும் பொழுது
1.வியாபித்திருக்கும் உணர்வுகளை எல்லாம் தனக்குள் அந்த உணர்வின் தன்மையை அறிந்துணரும் சந்தர்ப்பம் பெற்றான்
2.அனைத்தையும் அறியும் நிலை வந்ததால் அவனுக்கு வியாசகன் என்று காரணப் பெயரை வைத்து அழைத்தார்கள் அக்காலங்களில்…!

பகவான்… தனக்குள் இருக்கும் எல்லாவற்றையும் அந்த உணர்வை நுகர்ந்தறிந்தான். அதைப் பரமாத்மா என்று ஒரு பெயரை வைத்தான் அதாவது தனக்கு முன் பரத்தில் (பரவி) இருக்கக்கூடிய ஆன்மாவைத் தனக்குள் எடுத்தான். அந்த உணர்வின் தன்மை வளர்த்தான் என்பதற்குத்தான் அவருக்கு வியாசக பகவான் என்று இப்படி ஒரு பெயரை வைத்தார்கள்.

1.இந்த மனித வாழ்க்கையில் நம்மையறியாமல் மறைமுகமாக எப்படித் தீங்குகள் விளைகின்றது…?
2.நம்மை அறியாது எப்படித் தீமைகளை விளைவிக்கச் செய்கின்றது…?
3.நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிகள் எப்படி தோன்றுகின்றது…?
4.நம்மை அறியாமலே நமக்குள் ஏற்படும் இந்த உணர்ச்சிகள் நம் எதிரிக்கும் தூண்டப்பட்டு அந்த உணர்வுகள் என்ன செய்கிறது…? என்று உணர்த்தினார் வியாசகர்

உதாரணமாக ஒருவர் அடிக்கடி நமக்குத் தொந்தரவு செய்கிறார் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது. அதே சமயத்தில் எதிரியினுடைய உடல்களிலும் இதே உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.

1.தொந்தரகாகும் போது நாம் வெறுக்கும் உணர்வுகளைத் தூண்டுகின்றோம்
2.அப்போது அந்த வெறுக்கும் உணர்ச்சிகளை அங்கேயும் தோற்றுவிக்கின்றது.

ஆக… நமக்குள் அந்த உணர்வு அது தன் உணவுக்கு அது போராடுகின்றது. அதே போல் அதனதன் உணவுக்கு அங்கேயும் (எதிரியிடமும்) போராடும்.

எதிரிகளை நமக்குள்ளும் வளர்க்கின்றோம்… அங்கேயும் எதிரிகளை வளர்க்கும் சக்தி வருகின்றது.

ஆனால் இதைத் தடைப்படுத்தும் உணர்வுகளை எடுத்து வளர்த்து… அந்தப் பகைமைகளை வென்றவன் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

துருவ நட்சத்திரமாக இருக்கும் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்தது என்றால் நாரதன் என்று காரணப் பெயர் என்று வைக்கின்றார்கள்.

1.அந்த அலைகளை நாம் நுகர்வோம் என்றால் நமக்குள் அது நாரதனாக இயக்கத் தொடங்குகின்றது
2.நாரதராக நமக்குள் சென்றபின் நாம் எதைப் பிடிவாதமாக வைத்தோமோ அந்த உணர்வைத் தணிக்கச் செய்து விடுகின்றது.

நாம் யார் மேல் வெறுப்பு அடைந்தோமோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்ற உணர்வை வலுப்படுத்தி நம் கண்களை அங்கே செலுத்தப்படும் பொழுது
1.நமது கண்கள் நாரதனுக்குண்டான செயல்களை இங்கே (நமக்குள்ளும்) சொல்லி
2.இந்த உணர்வின் தன்மை கண் கொண்டு பாய்ச்சப்படும் பொழுது எதிரியின் உடலுக்குள்ளும் அந்த உணர்வின் தன்மை பாய்ந்து
3.அந்த நாரதன் வேலையைச் செய்வான்.

நம்முடைய உணர்வுகள் பகைமையாக்கும் உணர்வை மாற்றிடும் தன்மையாக இந்த அருள் ஞான உணர்வுகள் அங்கே ஊடுருவி… சற்று சிந்திக்கச் செய்யும் சக்தியாகவும் வருகின்றது.

அது தான் நாரதன் கண்ணனிடம் சென்றபின்…
1.இவர்கள் இரண்டு பேருடைய உணர்வுகளுக்கும்
2.இந்த கண்களுக்கும் நுகர்ந்த உணர்வுகளுக்கும் எவ்வாறு இயக்கச் செய்கிறது…? ஒன்று சேர்ந்து வாழச் செய்கிறது…? என்று
3.இவ்வளவு தெளிவாக வியாசகர் உணர்த்தி இருக்கிறார் என்ற நிலையை நாம் தெரிந்து கொண்டால் போதும்…!

உயிருடன் ஒன்றும் தியானமே உண்மையான சரணம் என்று உணர்த்தியவரே “காண்டீப முனிவர்…” என்ற ஐயப்பன் – ஈஸ்வரபட்டர்

உயிருடன் ஒன்றும் தியானமே உண்மையான சரணம் என்று உணர்த்தியவரே “காண்டீப முனிவர்…” என்ற ஐயப்பன் – ஈஸ்வரபட்டர்

 

விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.

ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து… அதன் வழி நடந்து… அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.

இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்…!”

பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்…!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.

தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான் மாமகரிஷியாக நம்மை ஆக்கும் என்ற உண்மையை உணர்ந்தார்.

அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் ஐயப்பனாக… ஐயப்ப முனிவராக…! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்.

அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா…!).

1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.

நான்.. நான்…! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்…!” என்று நம்பி கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது அதைக் காக்காது மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே இருளுக்குள் சென்று விடுகின்றோம்.

உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் “தன்னைத் தயாராக்க வேண்டும்…” என்றார்.

1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்…!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே “சரணம்…” என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.

ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.

அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.

தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி…!”

நம் எண்ணத்தைத் தான் நிறைவேற்றுகின்றோம்… ஆனால் கடைசியில் தெய்வம் சோதிக்கிறது என்று சொல்லி விடுகின்றோம்…!

நம் எண்ணத்தைத் தான் நிறைவேற்றுகின்றோம்… ஆனால் கடைசியில் தெய்வம் சோதிக்கிறது என்று சொல்லி விடுகின்றோம்…!

 

வீட்டில் ஒரு நல்ல காரியமோ அல்லது திருமணமோ நடக்க வேண்டும் என்றால் சாமி மேல் மலரை வைத்து ஜோதிடம் கேட்கப் போவார்கள்.

சாமி வரம் கொடுத்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகும்…! என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த உணர்வு என்ன செய்யும்..? இது தாக்கப்பட்டுச் சிவப்புப் பூ வந்தது என்றால் ஆகாது…!

பூ போட்டுக் கேட்கும் அந்த நேரத்தில் மாப்பிள்ளையைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்கள். மோசமான ஆளாக இருக்கின்றான்… என்று அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள்… என்ற மனதில் ஓடிக்கொண்டிருந்தால்
1.எனக்கு நீ சிவப்புப் பூவைக் கொடுத்துவிடு
2.நான் என் பெண்ணைக் கொடுக்கவில்லை என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் முதலிலே ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்… ஜாதகத்தையும் பார்ப்பார்கள்.. கடைசியில் “சாமி மீது பூ போட்டுப் பார்க்கும்…” இந்த ஜோதிடத்தையும் பார்ப்பார்கள்.

ஜாதகம் பார்த்துச் செய்தால் தான் எல்லாம் நல்லது என்று சொல்வார்கள். இருந்தாலும் இங்கே பார்க்கும் போது பூ விழுந்து விட்டது என்றால் “நான் நினைத்தேன் நடந்து விட்டது…!” என்பார்கள்.

அதே போல் இந்த மாப்பிள்ளையை எப்படியும் முடிக்க வேண்டும்… வெண்மை நிறப் பூ விழுந்தால் மனதுக்கு நல்லது…! என்று நினைப்பார்கள்.

இவர்கள் மாப்பிள்ளையை நல்லவன் என்று கருதிக் கொண்டு போனால் இந்த உணர்ச்சிகளுக்குத் தக்கவாறு கண்ணிலிருந்து பாயும் அலைகள் கீழே விழுத்தாட்டும்.

இது தான் நாம் பார்க்கும் ஜோதிடங்கள். நாம் எல்லோரும் தான் இதை எல்லாம் செய்து பார்க்கின்றோம்.

வெள்ளைப் பூ விழுகின்றது.

ஆனால் மாப்பிள்ளையிடம் அழுக்கு இருக்கும். இருந்தாலும் அவர்கள் மீது பற்றிருக்கும். இந்த எண்ணத்துடன் வரும் போது கண்ணில் பார்க்கும் போது இந்தப் பூ தான் விழுக வேண்டும் என்று நினைபபார்கள். அதன்படி அங்கே இயக்குகிறது.

எல்லாம் ஒத்துக் கொண்டு இவர்கள் விருப்பத்திற்குத் தகுந்த மாதிரி திருமணம் ஆன பின் கடைசியில் என்ன ஆகிறது…?

என் பெண்ணைக் கட்டிக் கொடுத்ததிலிருந்து ஒரே தொல்லையாக இருக்கின்றது… சங்கடமாக இருக்கிறது… வேதனையாக இருக்கின்றது…! தெய்வம் வரம் கொடுத்த பின் கூட இந்த மாதிரிச் சோதிக்கின்றது என்பார்கள்.

1.ஆக மொத்தம் இவர்கள் எண்ணத்தைத் தான் அங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்
2.இருந்தாலும் “சாமி சோதிக்கின்றது…” என்று சொல்லும் இந்த நிலை தான் வருகிறது.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் ஆலயத்தில் வழி நடந்து அதை மதித்து நாம் நடத்தல் வேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அறியாது சேர்ந்த இருளைப் போக்கும் இடம் தான் அந்த ஆலயம். உயர்ந்த உணர்வுகளையும் தெய்வீகப் பண்புகளையும் பெறச் செய்வதற்குத்தான் ஆலயம்.

1.நாம் கண்ணுற்றுச் சிலையைப் பார்க்கும் போது துவைதம்…
2.அதில் காட்டிய தெய்வ குணத்தை எண்ணி எடுத்தால் அத்வைதம்…
3.தெய்வ குணத்தை நுகர்ந்தறிந்து தனக்குள் அது உருவாக வேண்டும் என்றால் விசிஷ்டாத்வைதம்…
4.அங்கே காட்டப்பட்ட தெய்வ குணங்கள் உடலுக்குள் உறைந்தால் துவைதம்
5.நாம் தெய்வமாகின்றோம்…!

அதைப் போல் அங்கே அபிஷேகம் செய்யும் பாலையும் கனிகளையும் சந்தனத்தையும் பார்க்கும் போதும் துவைதம். அந்த நறுமணங்களை எண்ணி எடுத்தால் அத்வைதம் நுகர்ந்து உயிரிலே படும் பொழுது விசிஷ்டாத்வைதம். உணர்வின் தன்மை உடலாகும் பொழுது துவைதம்.

உயர்ந்த குணங்களை உன் உடலில் நறுமணங்களாக்கும் சக்தியாக நற்குணங்களை உருவாக்கும் அந்த உணர்வை நீ பயன்படுத்து… என்று தான் ஞானிகள் ஆலயத்தை அமைத்தனர்.

மலரைப் போல் மணம் நாங்கள் பெறவேண்டும்… மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற வேண்டும்.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.. இந்த ஆலயம் வருவோர் அனைவருக்கும் இந்த அருள் சக்தி கிடைத்து அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும்…! என்று எண்ணினால் இது தான் உண்மையான பக்தி…!

ஆகவே அருள் உணர்வை நமக்குள் பெருக்கிப் பேரருளைக் கூட்டிக் கொள்ளும் பழக்கம் வர வேண்டும்.

திருமூலர் உரைத்த திருமந்திரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

திருமூலர் உரைத்த திருமந்திரம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சிவகாமி என்ற பெண்மணி நடனக் கலையில் சிறந்து விளங்கினாள். இருந்தாலும் தன்னை யாராலும் வெல்ல முடியாத என்ற நிலையில் கர்வப்பட்டு ஆக்ரோஷ குணம் கொண்டு தன்னிடம் தோற்பவவர்களைத் தண்டிக்கும் குணம் படைத்த காளி போல் காட்சியாகின்றாள்.

பதஞ்சலியோ நடனக்கலையின் நுட்பத்தில் தான் உருவாக்கிய யோக சூத்திர மார்க்கத்தைப் புகுத்திக் கர்ண வித்தைகளை உருவாக்கி அவளுடன் போட்டியிடுகின்றார்.

1.அவர் காட்டும் அத்தனை கர்ண வித்தைகளையும் அம்மாது காட்டிக் கொண்டே வருகின்றாள்.
2.பதஞ்சலி வலது காலை ஆகாயத்தை நோக்கி உயர்த்தும் முத்திரையைக் காட்ட
3.அதைத் தான் காட்ட முடியாது என்ற நிலையில் பெண் குணத்தின் இயல்பான நாணம் வந்து தடுக்க
4.தான் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொண்டு சிவகாமி அடிபணிகின்றாள்… அவள் கர்வம் ஒடுக்கப்பட்டது.

பதஞ்சலியின் நடன ஞான மார்க்கம் மற்ற பக்தி நெறிக்கு இடையூறு விளைவிக்கின்றது என்ற கருத்தில் தில்லை அன்பர்கள் சிலர் பதஞ்சலியை மரணப்படுத்தும் காலத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த நேரத்தில் தானாக வந்தமைந்த விதமே திருமூலர். மாடு மேய்க்கும் மூலன் இறந்தவுடன் மூலன் உடலில் கூடு விட்டுக் கூடு பாயும் தன்மையால் பதஞ்சலி உள்ளே நுழைகின்றார்.

சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பதஞ்சலியின் உடலை அப்புறப்படுத்தி எரித்து விட்டனர்.

எரித்த பின் அந்த எலும்புகளைக் கொண்டு சென்று அந்த எலும்புகளைப் பூஜித்தால் அவருடைய உயர்ந்த சக்திகளைத் தாங்கள் பெறலாம். அந்தப் பலனை நாம் பெறவேண்டும் என்று ஒருவருகொருவர் சத்தியமும் செய்து யாரும் வெளியிடாதபடி தாம் செய்த செயலை நியாயப்படுத்தினர்.

திருமூலர் உடலில் புகுந்த பதஞ்சலி திருமூலர் உடலுடன் வந்து தேடும் பொழுது
1.சாட்சாத் பரமேஸ்வரனே உங்கள் திரு உடலை மறைத்து அருளியுள்ளார்.
2.இந்தத் திருமூலரின் உடலுடன் இருப்பதே எம்பெருமான் சித்தம் என்று
3.பதஞ்சலியினால் தங்களுக்குத் தங்கள் பக்தி வழிக்கு எந்த இடையூறு ஏற்படாத வண்ணம் சாதுரியமாக மாற்றினார்கள்.

ஆனாலும் திருமூலர் திருமந்திரம் வெளிப்பட்டவுடன் மீண்டும் தங்களுக்கு வந்த இடையூற்றினை உணர்ந்து என்ன செய்தார்கள்…?

1.பதஞ்சலியால் இயற்றப்பட்ட திருமந்திரத்தில் “ஞான விளக்கமாகும் செயல் முறையும்”
2.தங்களின் “ஆச்சார அனுஷ்டானங்களை உடைக்கும் வைத்திய முறையும்” இருப்பதால்
3.அந்தத் திருமந்திரத்தை மறைத்தனர்… பல அழிக்கப்பட்டன… பல காலமாக…!

ஆனாலும் திருமூலர் வெளிப்படுத்திய மூச்சலைகள் இந்தக் காற்றிலே தான் நமக்கு முன்னாடி உண்டு. காற்றிலே ஓடும் அந்த நிலைகளைத் தன் ஈர்ப்பில் கொண்டு வந்து நிச்சயம் இந்த உலகுக்கு அளிக்க முடியும்… ஞானத்தை உணரும் ஞானிகளால்…!

திருமூலர் உடலும் ஜெபத்தின் பொழுது மண்ணிட்டுப் புதைக்கப்பட்டு ஓர் நன்னாளில் சிதம்பரம் கோவில் நிலையில் ஓரிடத்தில் ஜீவ சமாதி போல் மறைக்கப்பட்டுப் பூசி அடைக்கப்பட்டு விட்டது.

சிதம்பரம் கோவிலுக்குள் அவர் செயல் நிலை இன்றும் பதஞ்சலியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நுகர்ந்து நுகர்ந்து தான் அகஸ்தியன் சகலத்தையும் அறிந்துணர்ந்தான்

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை நுகர்ந்து நுகர்ந்து தான் அகஸ்தியன் சகலத்தையும் அறிந்துணர்ந்தான்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனாகப் பிறந்த அகஸ்தியன் தாய் கருவிலிருக்கப்படும் போதே உயர்ந்த சக்திகளைப் பெற்றான்.

அகஸ்தியனின் தாய் மிருகங்களிடமிருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் மின்னல்களிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற நிலையில் விஷத்தை முறிக்கும் பல பல பச்சிலை மணங்களை நுகர்ந்தது… உடலிலே பூசிக் கொண்டது.

நஞ்சினை வென்றிடும் தாவர இனத்தின் மணங்களை நுகரும்போது அது தாயின் இரத்தத்திலும் அது கலந்து கலந்து கருவிலிருக்கும் குழந்தைக்கும் (அகஸ்தியனுக்கும்) அதே விஷத்தின் தன்மை முறிக்கும் சக்தி கிடைக்கின்றது.

மின்னல்கள் தாக்கினாலும் அவைகளிலும் கடும் விஷம் உண்டு. அந்த விஷமான சக்தி மனிதன் மீது தாக்கினால் நல்ல அணுக்கள் மடியும் அல்லது மயக்கம் அடையும்.

1.ஆனால் அந்த விஷத்தை முறிக்கக்கூடிய பச்சிலைகளை அகஸ்தியன் தாய் நுகர்ந்ததனால்
2.அந்த மின்னலையும் அடக்கி இவனைக் காக்கும் உணர்வுகளை அந்த உணர்ச்சிகள் அங்கே தோற்றுவிக்கின்றது.

இப்படித் தாய் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் அவன் பிறந்த பின் இவனைக் கண்டாலே விஷ ஜெந்துக்கள் அருகிலே வருவதில்லை. மின்னல் பாய்ந்தாலும் அந்த விஷங்கள் இவனைத் தாக்குவதில்லை.

நட்சத்திரங்களின் கதிரியக்கங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக எப்படி உருவானது…? என்றும் அந்த மின்னல்கள் எவ்வளவு தூரத்திற்கு ஊடுருவிப் போகின்றது…? என்றும் அறியும் தன்மை அப்பொழுது அவன் பெறுகின்றான்.

1.அந்த மின்னலின் உணர்வுகளை வைத்து ஒரு செடியை இவன் உற்றுப் பார்க்கும் போது
2.அதனின் உணர்ச்சியின் மணங்களைப் பற்றியும்… உணர்வின் இயக்கங்களைப் பற்றியும் அறிகின்றான்.
3.இப்படி எல்லாம் கண்டுணர்ந்ததால் தான் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயர் வந்தது.

ஏனென்றால் தாயின் கருவிலே பெற்ற உணர்வுகள் வளர்ச்சியாகி இந்தப் பிரபஞ்சத்தையே கண்டுணர்ந்து நஞ்சினை நீக்கக் கற்றுக் கொண்ட முதல் மனிதன் தான் அந்த அகஸ்தியன்.

வான இயலைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் திருமணமாகும் போது தான் பார்த்த உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கும் எடுத்துச் சொல்கின்றான்.

மனைவியும் கணவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அதை எல்லாம் தானும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றது. அப்பொழுது இரண்டு மனதும் ஒன்றாகின்றது.
1.ஒன்றான பின் கணவன் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்
2.மனைவி உயர வேண்டும் என்று கணவனும் இருவரும் எண்ணுகின்றனர்.

இப்படி இருவரும் ஒரு மனமாக எண்ணி எடுத்த உணர்வுகள் தான்
1.அந்தத் துருவத்தின் வழியாக வரக்கூடிய சக்தியை எடுத்து இரு உயிரும் ஒன்றாகி
2.உயிரைப் போல் உணர்வின் ஒளிக் கற்றைகளை உருவாக்கும் அணுக்களாக விளைந்து
3.இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்கின்றனர்.
4.பிரபஞ்சத்தில் எது வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

மனிதனாக உருவான நிலையில் கணவன் மனைவி ஒன்று சேர்ந்தால் அந்தக் கருத் தன்மைகள் கொண்டு குழந்தையாக உருவாகின்றது.

குழந்தையை உருவாக்கினாலும் பிறந்த பின் தன் பிள்ளைக்கு உடல் நலம் இல்லை என்றால் வேதனைப்பட நேர்கின்றது. “பிள்ளை நோயால் அவதிப்படுகின்றானே…” என்ற அந்த உணர்வினை தாய் நுகர்ந்தால் அந்தப் பையனுக்குள்ளும் இதே உணர்வுகள் சேர்கின்றது.

அதே போல் குடும்பத்தில் யாராவது வேதனையை எடுத்து வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்டே கடைசியில் இறந்தால் அவர்களுடன் பற்றுடன் வாழ்ந்த நிலையில் அதே உணர்வை நாம் எண்ணினால் அந்த இறந்தவரின் ஆன்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அதே போல் ஒரு நோயாளியாக இருப்பவனின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது. அந்த நோயாளியின் உணர்வுகளைப் பதிவாக்கி விட்டால் அதே வேதனை மீண்டும் நமக்குள் வந்து அவனில் விளைந்த நோய் நமக்குள்ளும் விளைகிறது.

இதைப் போல் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நம்மை அறியாமல் நமக்குள் நடக்கின்றது.

இதிலிருந்தெல்லாம் மீண்டிட வேண்டும் என்பதற்குத்தான்…
1.அந்த அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்ற ஆற்றலையும்
3.துருவ நட்சத்திரமான ஆற்றலையும் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றோம்.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வைச் சூரியன் கவர்ந்து பிரபஞ்சத்தில் பரவச் செய்கின்றது. துருவத்தின் வழி கவர்ந்து நம் பூமி நமக்கு முன் பரவச் செய்கின்றது.

அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பழக வேண்டும். உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அந்த அரும் பெரும் சக்திகளை இணைத்து வலுவாக்க வேண்டும்.

ஆகவே கஷ்டம் என்ற நிலை எப்பொழுது வருகின்றதோ அடுத்த கணமே அதைத் துடைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்.

இதை எல்லாம் மனிதன் ஒருவனால் தான் செய்ய முடியும்.

திருக்கோவில் இரகசியத்தை உணர்த்திய “சூத்திரதாரியான பதஞ்சலி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

திருக்கோவில் இரகசியத்தை உணர்த்திய “சூத்திரதாரியான பதஞ்சலி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு… விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்…!”

அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் தான் காரண காரியங்களாகச் செயலாக்குகின்றன.

அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்குக் கொண்டு வருகின்றது.

அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்…” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.

யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.

நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக – நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.

சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.

கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து அதன் பிண்ணனியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.

பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை… விளக்கவொண்ணா அந்த அதி அற்புதமான உயிரியல் தத்துவத்தை… “நடராஜராக…” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகா மகான்கள் தந்தனரோ…
1.அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி…
2.வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு…
3.பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் “நடராஜரின் விந்தையே…!”

பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் – சிதம்பர இரகசியம்…!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெறவேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.

அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.

இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. தியானத்தால் ஞானத்தைப் பெறவேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை…” என்ற சுவாசம் பெறவேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.

சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்… ஜோதியில் ஒடுங்கும்…!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.

சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும்… சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்…!” (சரீர ரகசியம்).

இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்…!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.

ஒரு சிலரிடம் பேசினாலோ… அல்லது அவர்களை எண்ணினாலோ… நெஞ்சிலே படபடப்பும் இதயத் துடிப்பும் அதிகரிக்கின்றது… ஏன்…?

ஒரு சிலரிடம் பேசினாலோ… அல்லது அவர்களை எண்ணினாலோ… நெஞ்சிலே படபடப்பும் இதயத் துடிப்பும் அதிகரிக்கின்றது… ஏன்…?

 

விஞ்ஞான அறிவு கொண்டு ரேடியோ நிலையங்களிலிருந்தும் டி.வி. நிலையங்களிலிருந்தும் ஒளி… ஒலிபரப்பு செய்கின்றனர்.

வீட்டிலிருக்கும் ஆண்டென்னா மூலம் அந்த அலைகளை நாம் கவர்ந்த பின் ரேடியோ பெட்டிக்குள் அல்லது டி.வி. பெட்டிக்குள் அது ஒவ்வொரு பாகங்களுக்கும் அது அனுப்பச் செய்கின்றது. ஒலி பெருக்கிக்கு வருகின்றது.

அங்கே அந்த அலைகள் வரும் போது அதிலே அதிகமான அழுத்தம் இருந்தல் கிர்….ர்ர்.. என்று சப்தத்துடன் இரைய ஆரம்பித்து விடுகின்றது. நாம் இதை எல்லாம் பார்த்திருக்கின்றோம்.

அதைப் போன்று தான் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த வழிப்படி பார்த்தோம் என்றால்…
1.உதாரணமாக ஒரு கோபப்படுவோரின் உணர்வுகளையோ
2.கோபத்தைத் தூண்டும் உணர்ச்சிகளை உண்டாக்குவோரை
3.நாம் வேடிக்கையாகப் பார்த்தாலும் அதை நாம் நுகராமல் இருக்க முடியாது.
4.நம் கண் கரு விழி அந்த மனிதனை நம் உடலில் பதிவாக்கி விடுகின்றது.

இதற்கு முன்னாடி அவன் சந்தோஷமாகப் பேசி இருந்தாலும் அவன் உடலிலிருந்து வரும் அந்த உணர்வினையும் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்துவிடுகின்றது.

ஆக நண்பன் கோபமான நிலையில் இருக்கும் போது நண்பன் என்று நெருங்கிப் பார்த்தால் அந்தக் கோபத்தின் உணர்ச்சிகளை நம் கண்ணில் உள்ள கரு விழி பதிவாக்குகின்றது.

அது பதிவான பின்பு தான் அந்தக் கோபப்படும் உணர்வுகளை கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் கவர்ந்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

நம் ஆன்மாவாக மாற்றிய பின்… உயிரின் காந்தப்புலன் அதைக் கவர்ந்து உயிரிலே மோதச் செய்கின்றது. அப்பொழுது அவன் பட்ட கார உணர்ச்சிகள் நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது.

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகள் போன்று
2.இந்த உடலில் உணர்ச்சிகள் பட்ட பின் வாயு வேகத்தில் உடல் முழுவதும் பரவுகின்றது.

நெருப்பில் ஒரு மிளகாயைப் போட்ட பின் அந்தக் காரமான நெடி குறைந்தது 100 அடி வரையிலும் கூட காற்றிலே பரவும். இதே மாதிரித் தான் நம் உடலுக்குள் இந்த உணர்ச்சிகள் வேகமாகப் பரவத் தொடங்கும்.

அப்படிப் பரவும் போது நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றப்படும் போது…
1.நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்தக் காரத்தை ஏற்றுக் கொள்ளாதபடி சில அணுக்கள் படபடக்கின்றது.
2.ஒரு சில அணுக்கள் மயக்கம் அடைகின்றது

அதைப் போன்ற அணுக்கள் எந்தெந்த உறுப்பில் இருக்கின்றதோ… நுரையீரலிலோ இதயத்திலோ உள்ள சாந்தத்தையும் நல்ல நிலையைக் கிரகிக்ககூடிய அணுக்களுக்கு… இந்தக் கார உணர்ச்சிகள் பட்ட பின் ஒரு படபடப்பும்… வேகமாகத் துடிக்கும் நிலைகளும் வருகின்றது.

நாம் துடிக்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் இதயத்தைத் துடிக்கச் செய்கின்றதா…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்படித் துடிக்கும் உணர்வுகள் இதயத்தில் ஏற்படும் போது நம் சிந்தனைகள் குறைகின்றது. நம்முடைய அன்றைய செயல்களும் தடைபடுகின்றது.

சிந்தனை குறைந்திருக்கும் சமயம் நம் குழந்தைகள் என்று பாசமாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் நம்மிடம் வந்து ஏதாவது கேட்டால்… “கிரகம்… தொலைந்து போ…!” என்று வெறுத்துத் தள்ளும் நிலைகளே வருகின்றது.

இது எதனால் வருகின்றது…? நாம் கோபப்படுகின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வு நம்மை இயக்குகின்றதா…? என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனும் அவன் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உணர்வுகள் தான் அவனை இயக்குகின்றது.

1.இருந்தாலும் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து
2.அந்தத் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்தால்
3.மனிதன் அதை இயக்க முடியும்… நல்லதாக்க முடியும் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பசுக்களுக்காக வசுவா… வசுக்களுக்காகப் பசுவா…? – ஈஸ்வரபட்டர்

பசுக்களுக்காக வசுவா… வசுக்களுக்காகப் பசுவா…? – ஈஸ்வரபட்டர்

 

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட… மனிதச் சரீரம் கிடைக்கப் பெற்ற இன்றைய கால கட்டத்தில் நாம் உண்மையை உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலையைப் பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலையை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே ஒளியான சக்திகளை பெறச் செய்யும் மார்க்கம் அறிய வேண்டும்.

அந்த மார்க்கத்தை அறிந்திடும் நிலையாக…
1.பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..? என்ற கேள்வி எழுந்து
2.அதன் மூலம் பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான்
3.“கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக அதை உணர்த்தினார் வியாசகர்.

அதாவது…
1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.உடலில் உள்ள உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.“காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6. தியான வழித் தொடர் மூலமாக அத்தகைய வலுப் பெற்றுவிட்டால்
7.தனக்குகந்த பக்குவத்திற்கு உயர்ந்த ஒளிக் காந்த சக்தியினை வலுக் கூட்டி
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டி
9.இந்த உண்மைகளை எல்லாம் காவியமாக்கி… சொல்லாமல் சொல்லி
10.நம் உயிர் ஒளி சக்தியைப் பெற்று சரீரத்தின் மூலமாக அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் தியானமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதன் மூலமாக வளரும் சக்தி பெற “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெறவேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை (கோவர்த்தன) மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் உடலில் உள்ள (பசுக்களாகிய) உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை உயர் மின் ஒளி காந்த சக்தியாக உயர்த்துவது மட்டுமல்லாமல்… முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தக் குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு அதே வழி தான் நம் வாழ்க்கையும் நடக்கின்றது.

அப்படி இல்லாதபடி உயர்ந்த எண்ணங்களின் வழியில்… தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரிய வேண்டிய உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் நம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே.
1.கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்படாதபடி
2.உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி கொண்டு
3.தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக நாம் வளர்தல் வேண்டும்… இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரத்தை உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் அழியா ஒளிச் சரீரம் பெறும் வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.