வசி…! வசிஷ்டாத்வைதம் – இராஜரிஷி வசிஷ்டர்

Raja rishi vashista

வசி…! வசிஷ்டாத்வைதம் – இராஜரிஷி வசிஷ்டர்

 

மனிதனின் வாழ்க்கையில்
1.நம் உயிரை அரசனாகவும்
2.நம் உடலை ஓர் அரச சபையாகவும்
3.அதற்குள் நீதிகள் வழங்குவதை நற்குணங்களாகவும்
4.சந்தர்ப்பத்தால் நாம் கண்டுணர்ந்த தீமைகள் அது நமக்குள் கலந்திடும் நிலையை மக்களாகவும்
5.வசிஷ்டாத்துவத்தில் வியாசகர் காட்டியுள்ளார்.

உடலுக்குள் வந்த அந்த மக்களைத் (தீமைகளை) திருத்திடவும் மக்களைத் தன்னுடன் இணைத்திடவும் அரச நீதி என்ற நிலையில் உயிரின் தன்மை இயங்கினாலும் இராஐ சபையில் இருக்கும் அதாவது நமக்குள் இருக்கும் நற்குணங்கள் அதனதன் செயல்களை எடுத்து உணர்த்துகின்றது.

இவை அனைத்தும் அடங்கி ஒடுங்கி நிற்கும் இராஐசபைக்கு இராஐ ரிஷியாக “வசிஷ்டர்…!”
1.அதாவது எதையுமே கவர்ந்திடும் நிலையும்
2.அது தன்னுடன் இணைத்திடும் ஆற்றல்மிக்க சக்தி என்பதையும் காட்ட
3.வசிஷ்டர் என்ற நிலையில் காரணப் பெயரை வைத்தார்கள்.

ஆனாலும் நமக்குள் இயங்கும் சக்திகள் அனைத்துமே அருந்ததி.
1.நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றமோ
2.அந்த உணர்வின் சக்திகளை நமக்குள் அருந்தி (சுவாசித்துக் கவர்ந்து)
3.அது பதியாக நமக்குள் இயக்கும் நிலைதான் அருந்ததி.

அவ்வாறு இயங்குவதைக் காட்டி அது எதுவாக இருப்பினும் இந்த இராஐரிஷி “வசிஷ்டர்” தனக்குள் இணைந்த செயலாக தன்னை மீறாத நிலைகள் கொண்டு தனக்குள் ஒடுக்கி உயிருடன் (அரசன்) இழுத்து நமக்குள் இருக்கும் ஒவ்வொன்றுக்கும் நல்ல குணங்களுக்கும் நீதி வழங்கும் நிலைகள் வருகின்றது.

நல்லதைப் பல வகையில் பேசினாலும் அல்லது தீமைகளைப் பேசினாலும் அதனதன் குணத்தின் தன்மையே ஒவ்வொருவருக்குள்ளும் வரும்.

உதாரணமாக மல்லிகைப் பூ நறுமணத்தைக் கொடுக்கின்றது, தாழம்பூ அதனுடைய நறுமணத்தைக் கொடுக்கின்றது. ரோஜாப் பூ அதனுடைய நறுமணத்தைக் கொடுக்கின்றது.

ஒவ்வொரு பூவின் நறுமணமும் மகிழ்ச்சியை நமக்குக் கொடுத்தாலும் தாழம்பூ தன்னுடைய நறுமணத்தை அதிகமாக வீசினாலும் நல்ல நறுமணத்தைக் கொண்ட ரோஜாப்பூவின் மணத்தைத் தன் அருகிலே விடுவதில்லை. தன் மணத்தின் தன்மையையே அது ஓங்கி வளர்க்கும் தன்மைக்கு வருகின்றது.

இதைப் போலத் தான் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருப்பினும் அந்த ஒவ்வொரு குணங்களும் அது (மணத்திற்குள்ளே) ஒன்றுக்கொன்று ஒத்துக் கொள்ளாத நிலையே உண்டு. (தாவர இனத்தின் மணங்களை உயிரினங்கள் சுவாசித்தால் அது எண்ணங்களாக வரும்)

மல்லிகைப் பூ கசப்பும் ரோஜா பூ துவர்ப்பும் கொண்டது. இவை இரண்டுமே நறுமணங்கள் கொண்டதாக இருப்பினும் இதற்குள் கலந்த உணர்வின் செயல்கள் அது மாறுபட்டதாகவே இருக்கும்.

அதற்குள் இயக்கச் சக்தியாக இருக்கும் நஞ்சான நிலைகள் கொண்டு எதனுடன் கலக்கின்றதோ அதனின் வலுவாக அது இணைத்துக் கொள்ளும்.

இதைப் போலத் தான் எத்தகைய நறுமணங்கள் கொண்டு இருப்பினும் தனக்குள் “வசி…!” அதாவது தன்னுடன் இணைந்து செயல்படும் சக்தியாக இராஜரிஷி என்ற நிலைகளில் வசிஷ்டாத்துவத்தை அன்று வியாசகர் மனித உடலுக்குள் ஏற்படும் உணர்வின் இயக்கங்களைக் காட்டுகின்றார்.

இராஐ நீதியாக அரசன் அவன் மற்றவரின் செயலைக் கேட்டறிந்து நீதி வழங்குவான் என்ற நிலைகள் போல நாம் உயிரின் நிலைகளைக் காட்டுகிறார் வியாசகர்.

ஒரு சேனாதிபதி இருக்கிறான் என்றால் “அடுத்த நாட்டுக்காரன் நம் நாட்டின் மீது படையெடுக்கின்றான்…!” என்று அவன் கூறுவான் என்றால் அவன் கேள்வியுற்றதைத்தான் வந்து சொல்லுவான்.

அரச சபையில் அதைச் சொல்லும் போது அதைக் கேட்ட அரசனோ… “தன் நாட்டைக் காக்க வேண்டும்…!” என்ற நிலையில் சேனாதிபதி சொன்னதைக் கேட்டு ஆவேசமாக அதனின் உணர்வை இயக்கிக் காட்டுவான்.

ஒருவன் நம்மைப் பழித்து பேசுகிறான் என்று கேள்விப்பட்டதும் நாம் என்ன செய்கிறோம்…? உடலின் தன்மை கொண்டு நம் குணங்களைக் காத்திட “இப்படிச் சொல்கிறானே…!” என்ற ஆவேச நிலைகள் படுகிறோம்.

ஏனென்றால் நாம் எண்ணிய நிலைகளை வைத்து நம் உயிரே அவ்வாறு இயக்குகின்றது என்ற இந்த நிலையின் தத்துவத்தைத் தெளிந்து உணர்த்துவதற்கு வசிஷ்டாத்துவம் என்ற நிலைகளை வியாசகர் பிரித்துக் காட்டுகிறார்.

உடலின் உறுப்புக்குள்ளும் உயிருக்குள்ளும் இயக்கும் நிலைகளை மகரிஷிகள் கண்டுணர்ந்து நஞ்சை எல்லாம் ஒடுக்கித் தான் ஒளியின் சரீரம் பெற்றதை அதே வியாசகன் கண்டுணர்ந்த இந்த உணர்வின் தத்துவத்தை நமக்குள்ளும் அது ஆரமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

வியாசகர் சொன்ன வசிஷ்டாத்துவத்தைப் போன்று நமக்குள் அது எத்தனை நிலைகள் வந்தாலும் அதனைக் காத்திட வேண்டும் என்ற நிலையில்
1.உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.இதை உணர்த்திய மகரிஷிகள் அருள் ஒளி கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்றும்
3.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து நிலைகளையும் அந்த மகரிஷிகள் அடக்கியது போல அடக்கி
4.ஒளியாக ஆக்கி ஒளியின் சரீரமாகப் பெறவேண்டும்.

ஞானிகள் அமர்ந்து தியானம் (தவம்) செய்த இடங்களின் மகிமைகள்

sidhargal

ஞானிகள் அமர்ந்து தியானம் (தவம்) செய்த இடங்களின் மகிமைகள்

 

அருள் ஞானிகள் தவம் இருந்த இடங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

சில மந்திர ஒலிகள் கொண்டவர்களும் சரி… அல்லது தவத்தின் ஆற்றல் பெற்றவர்களாக இருந்தாலும் சரி… எந்தெந்த இடங்களில் அவர்கள் அமர்ந்து தியானம் செய்தார்களோ அங்கெல்லாம் உதாரணமாக ஒரு பாறை மீது என்றால் அங்கே அவர்கள் வெளிவிட்ட மூச்சலைகள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.
1.அந்தப் பாறைகளில் நீரோட்டம் வரப்போகும் போது அதைச் சுவை கொண்டதாக மாற்றும்.
2.இது தான் இந்த பாறையினுடைய தன்மை.

திருச்செந்தூர் தூத்துக்குடி போன்ற இடங்களில் எல்லாம் அந்தக் காலத்தில் (ஆதியிலே) ஞானிகள் வாழ்நத காலம். பூமியின் மணல் திட்டுகள் மாற்றமாகி அல்லது நீராக (கடலாக) அந்தப் பிரதேசம் மாறப்படும் பொழுது அந்த ஞானிகள் விட்ட அலைகளால் அந்த நீரையே சுத்தப்படுத்தும் தன்மையாக வருகிறது.

இராமேஸ்வரம் திருச்செந்தூர் இந்த பகுதிகளில் எல்லாம் அத்தகைய பாறைகள் கடலில் மூழ்கி இருக்கிறது. கடந்த கால நிலையில் மெய் ஞான உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்த மனிதர்கள் உண்டு. மனிதனுக்கு ஒத்த இந்த உணர்வின் தன்மை வரப்போகும் போது இந்த அலைகளை நல்ல நீராக மாற்றும் தன்மையும் உண்டு.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அகஸ்தியன் அவன் வாழ்ந்த காலத்தில் அவனது உணர்வுகள் இங்கே அலைகளாகப் படரப்படும் போது
1.அகஸ்தியன் நடந்து சென்ற அவன் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் நீர் சக்தியைக் கவரும் ஆற்றல் பெற்று
2.மேகங்களைக் குவித்து நல்ல நீராக வடியச் செய்கிறது,

கீழே பூமியில் தண்ணீர் இருக்காது…! அங்கே மழையும் பெய்திருக்காது…! ஆனால் அகஸ்தியன் அமர்ந்த அந்த மலை உச்சியில் மேகத்தை இழுத்து நீராக வடிந்து கொண்டே இருக்கும்.
1.எத்தகைய கடுமையான வறட்சியான காலமாக இருந்தாலும்
2.நீர் அங்கே வந்து கொண்டே இருக்கும்.

இதைப் போல அந்தக் காலங்களில் மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் அவர்கள் தெய்வ பக்தி கொண்டு வாழ்ந்திருந்தால் அங்கிருக்கும் நீரும் வற்றாது. சுவையாகவும் இருக்கும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையைத் தாண்டினால் நீரே இருக்காது. ஏனென்றால்
1.இதெல்லாம் மனிதனுக்குள் விளைந்த வீரிய உணர்வுகள் அலைகளாக
2.அங்கங்கே பதியும் பொழுது அதற்கொப்ப நீர் நிலைகள் வருகின்றது.
3.இதே மாதிரி கடல் நீருக்குள்ளும் பல ரகசியங்கள் உண்டு.

ஆரம்பத்தில் உயிரினங்கள் முதலில் தோன்றியது கடலில் தான். மீன் இனத்தில் இருந்து வந்தவன் தான் மனிதன்.

புயல்கள் வீசும் பொழுது கடல் நீரைக் கவர்ந்த மேகங்கள் அதனுடன் மீன் முட்டைகளையும் கருக்களையும் நிலப் பகுதியிலே மழையுடன் சேர்ந்து பெய்யும் பொழுது தரை வாழ் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் ஆகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று எந்த ரிஷிகளை எடுத்துக் கொண்டாலும் கையில் கமண்டலத்தைப் போட்டுக் காண்பித்திருப்பார்கள். ஏனென்றால் அந்த நீர் என்பது ஜீவ சக்தி… அதாவது உருவாக்கும் சக்தி…!

உருவாக்கும் சக்தியின் மகத்துவத்தை நாமும் அறிந்து அந்த ஞானிகளும் ரிஷிகளும் எந்த ஜீவ சக்தியை நுகர்ந்தார்களோ அதைப் பெற்று வளர்த்தால் இந்தப் பூமியைச் சொர்க்க பூமியாக மாற்றலாம்…! நமக்குள் அந்த ஆற்றல் உண்டு…!

“கசாப்புக் கடைக்காரனிடம் போய்க் கேள்…!” என்று வாசுகி கொங்கணரிடம் சொன்னதன் உட் பொருள் என்ன..?

Konganava rishi

“கசாப்புக் கடைக்காரனிடம் போய்க் கேள்…!” என்று வாசுகி கொங்கணரிடம் சொன்னதன் உட் பொருள் என்ன..?

 

ஸ்தல புராணம் என்பதே அரசர்களால் உருவாக்கப்பட்டது தான். அன்று வாழ்ந்த புலமைகள் பெற்றோர் அரசனைப் புகழ் பாடுவது வழக்கம். ஏனென்றால் தன்னுடைய பிழைப்பிற்காக அவ்வாறு செய்வார்கள்.

அந்தப் புகழ் பாடிய நிலைகள் வரப்போகும் போது ஸ்தல புராணத்திற்குப் பேர் ஜாஸ்தியாகின்றது. அரசனை உயர்த்துவதற்காக ஸ்தல புராணத்தில் புகழ் பாடினால் அவனுக்குப் பிழைப்பு வருகிறது.
1.ஆனால் மக்கள் உயர வேண்டும் என்று
2.ஏதாவது சொல்லி இருக்கார்களா என்றால் இல்லை.

அதனால் தான் திருவள்ளுவர் என்ன செய்தார்…? எந்த ஒரு அரசனையும் அவர் புகழ் பாடவில்லை. அருள் ஒளியின் உணர்வின் தன்மை கொண்டு “ஆதி ஆண்டவன்…!” என்று உயிரைத் தான் ஆதாரமாக வைத்தார்.

உயிரை வைத்துத் தான் பாடினார்கள். கடவுளாக உனக்குள் இயக்குவது எது…? என்ற நிலையில்
1.ஒருவனைக் காக்க வேண்டும் என்று எண்ணினால் காக்கும் நிலையாக அது வரும்.
2.ஒருவனை அழிக்க வேண்டும் என்று எண்ணினால் அழிக்கும் உணர்வாக அது வரும் என்று
3.அன்றைய பண்டைய தமிழில் பாடலாகக் கொடுக்கின்றார்கள்.

திருவள்ளுவர் ஏழ்மையில் வாடிக்கொண்டு இருக்கும் போது அவர் நுகரும் உணர்வுகள் தனக்குள் எது… என்ன…? என்று எல்லாவற்றையும் அறிகின்றார்.

அவருடைய மனைவி வாசுகியோ தன் கணவன்படும் துயரத்தைக் கண்டு அருள் ஒளியை இவருக்குள் பெற வேண்டும் என்ற உணர்வினைப் பாடலாகப் பாடுகின்றாள். அதாவது கணவனைத் தேற்ற அதைப் பாடுகின்றாள்.

யார்…? வாசுகி…!

துணிகளை நெய்து அதன் வழி ஜீவித்து வந்தவர்கள் தான் வள்ளுவரும் வாசுகியும். ஒரு துண்டை நெய்து அதை விற்று வந்தால் தான் அன்றைக்குச் சாப்பிட முடியும். அந்த அளவுக்கு வறுமை.

சந்தர்ப்பத்தில் அவர் நோய்வாய் படப்போகும் போது அந்த உயர்ந்த உணர்வு தனக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கின்றார்.

அப்பொழுது தான் அவருடைய மனைவி வாசுகி
1.தன் கணவர் உயர்ந்த நிலை பெற வேண்டும்.
2.அந்த உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்று புலமையில் பாடுகின்றார்.

ஆக தன் கணவன் எல்லாவற்றிலும் உயர்வான நிலை பெற வேண்டும் என்று கணவன் பெயரில் வாசுகி பாடியது தான் அந்த “வள்ளுவன் குறள்… வையகமெல்லாம் பரவியது…!” என்று சொன்னது. வள்ளுவர் உயர வேண்டும் என்று வாசுகி பாடிய பாடல்கள் தான் அது.

ஆனால் அன்றைய அரசன் இதை ஏற்றுக் கொள்ள வில்லை.

இவர்கள் இருவரும் இப்படி வாழ்ந்த காலத்தில் தான் கொங்கணரும் வருகின்றார். அவன் மந்திர ஒலிகளைக் கற்று கொண்டு வந்தவன். மதச் சார்பில் கடவுள் என்ற நிலைகளை இந்த மனித நிலைகள் எந்த பக்தி கொண்டானோ அவனைக் கைவல்யப்படுத்திக் கொண்டு வந்தவன்.

தனக்குள் தீமை என்ற நிலைகளில் யாராவது ஏவினால் அவர்களை எல்லாம் ஒடுக்கி விடுவான்.

ஒரு சமயம் மலர் சோலைகளுக்கு மத்தியில் நடந்து வரும் பொழுது கொக்கு ஒன்று பறந்து செல்லும் பொழுது அதனுடைய எச்சம் கொங்கணர் மீது பட்டுவிட்டது.

கொக்கு என்னை இப்படி அசுத்தமாக்கி விட்டது என்று தன் எண்ணத்தின் பார்வையால் அதனுடைய சிறகை ஒடித்து விடுகின்றான். அந்தக் கொக்கு ஒன்றும் தவறு செய்யவில்லை.

கொங்கணர் தான் கற்றுக் கொண்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்திருந்தாலும் போகும் பாதையில் தற்செயலாக எச்சம் விழுந்தது என்று சிநதிக்க முடியவில்லை.

“பிச்சாந்தேஹி…!” என்று கேட்டுக் கொண்டு வாசுகி வீட்டிற்கு வருகின்றான். அங்கே வந்தவுடன் பல குரல் கேட்கிறது. தன்னைச் சொல்லி “ஆண்டவனை வழிபடுபவனை நீ கவனிக்கவில்லையே…!” என்று கொங்கணர் அகம் கொள்ளுகின்றான்.

ஏனென்றால் ஒரு வீட்டிற்குச் சென்று தான் பிச்சாந்தேஹி என்று யாசகம் கேட்பார்கள். (கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் வேறு வீட்டிற்குச் செல்ல மாட்டார்கள்)

ஆனால் வாசுகிக்கோ உடுத்திக் கொள்ளச் சரியான துணி இல்லை. துணி நெய்யக்கூடிய குடும்பமாக இருந்தாலும் ஒரு முண்டு தான் உடுத்தி இருக்கிறது.

அதற்காக வேண்டி ஒரு துணியை மாற்றிக் கட்டிக் கொண்டு வருகிறது. பிச்சை போட்டாலும் உடலை வெளியில் காட்டிக் கொண்டா இருப்பார்கள்…! அதனால் நேரமாகிப் போய்விட்டது.

வாசுகி வந்ததும் கொங்கணர் விழித்துப் பார்க்கின்றான்.

கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா…! என்கிறது வாசுகி.

கொக்கின் இறக்கையை ஒடித்தது உனக்கு எப்படித் தெரிந்தது…? நீ எங்கே இதைக் கற்றுக் கொண்டாய்…! என்று கொங்கணர் கேட்கின்றார்.

கசாப்புக் கடைக்காரரிடம் கேள் என்கிறது வாசுகி. கசாப்புக் கடைக்காரனிடம் கேட்டால் தான் “உனக்குத் தெரியும்…!” என்று சொல்கிறது.

கசாப்புக் கடைக்காரன் என்ன செய்கிறான்…? ஆடை வெட்டி வியாபாரத்தைச் செய்கிறான். ஆட்டைக் கொல்லப் போகும் போது ஆட்டின் உயிர் அவனுக்குள் போய் அது மனிதனாகப் பிறக்கிறது.

ஆனால் ஆட்டைத் தின்றவன் உடலில் என்ன செய்கிறது…? ஆட்டை ரசித்துச் சாப்பிட்டவனை எல்லாம் ஆடாகப் பிறக்கச் செய்கிறது.

நீ கொக்கை வீழ்த்தினாய். உனக்குள் வீழ்த்திடும் சக்தி வருகிறது. அதைக் கொல்லும் உணர்வு கொண்ட பின் நீ அதே நிலையையே அடையப் போகின்றாய் என்று வாசுகி தன்னுடைய கவிப் புலமைகளில் “சொல்லாமல் சொல்கிறது…”

அந்தச் சொல்லுக்குள் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது…?

ஏனென்றால் நான் (ஞானகுரு) படிக்காதவன். நான் ஏட்டையும் படிக்கவில்லை ஒரு கத்திரிக்காயும் தெரியாது. ஆனால் அன்று அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளின் பதிவு இங்கே இருக்கிறது.

அதை நுகர்ந்து அக்காலத்தில் நடந்தைதை வெளிப்படுத்துகின்றேன். நான் மட்டும் இல்லை. நீங்களும் இதைப் பார்க்கலாம்… உணரலாம்… நுகரலாம்…! உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் தீமையிலிருந்து விடுபடலாம்.
1.அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெற்றால் எல்லாம் தன்னாலேயே வரும்.

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ…!

Adikalar

கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…! அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை நீ…!

 

அருள் ஞானத்தைப் பெறக்கூடியதைத்தான் “அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை..! என்று
1.நான் யாரிடமும் யாசிக்கவில்லை…
2.நான் யாருக்கும் இல்லை என்று சொல்லக்கூடாது…! என்று இராமலிங்க அடிகள் இந்தப் பாடலைப் பாடுகின்றார்கள்.

அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் எடுக்கப்படும் பொழுது நமக்குள் ஒளியாக மாறுகின்றது. மற்றவர்கள் கேட்கும் பொழுது இல்லை என்ற நிலை வராதபடி அந்த அருள் ஒளி அவர்களுக்குள்ளும் படர்கின்றது.

1.நீ அன்பையே சிவமாக்கு…! என்று அவர் சொன்னார்.
2.அந்த அரவணைக்கும் உணர்வுகள் அன்பாகி இந்த உடலாகச் சிவமாக்கு.
3.எல்லாவற்றையும் நீ அரவணைத்துக் கொள்…!
4.இந்த அரவணைக்கும் உணர்வின் தன்மை உனக்குள் மகிழ்ச்சியூட்டும் ஒளியாகும் என்ற
5.இந்த உணர்வின் தன்மையைத் தான் அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை என்றார்.

மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எனக்குள் சந்தோஷத்தை உருவாக்கிவிட்டால் எனக்குள் இருள் வருமோ…? வராது…! இருண்ட நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வுகளுக்காக இராமலிங்க அடிகள் அதைச் சொல்கிறார்.

அப்பொழுது அந்த மகிழ்ச்சி என்ற உணர்வுகள் அருள் பெரும் ஜோதியாகி தனிப் பெரும் கருணையாகின்றது.
1.நான் எண்ணியதை நீ உருவாக்குகின்றாய்… கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்த கந்தவேலே…! (கந்தவேல் யார்…?)
2.நம் உயிர் தான் அந்தக் கந்தவேல்.

கந்த… அதாவது பலவிதமான உணர்வுகள் கொண்ட கோட்டை இது. நம் உடல் என்ற கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே…!

அதாவது வேல் என்றால் கூர்மையானது.
1.பலவிதமான உணர்வுகள் சேர்த்து நம் உடல் கந்தக் கோட்டம்.
2.அந்த உயிருடன் ஒன்றி நாம் எண்ணப்படும் பொழுது
3.அந்தக் கூர்மையின் நிலைகளில் இயக்குகிறது என்பதைத்தான்
4.கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்துள்ள கந்தவேலே.. அருள் பெரும் ஜோதி நீ தனிப் பெரும் கருணை…! என்றார் இராமலிங்க அடிகள்.

அங்கே கந்தக் கோட்டத்திற்குள் அமர்ந்து கூர்மையாக… உணர்வின் ஜொலிப்பாக… உணர்வின் கூர்மையாக… உணர்வின் தன்மையை அறியச் செய்கின்றாய்…! நீ ஒவ்வொன்றையும் எனக்குள் ஒளியாக நின்று உணர்த்துகின்றாய்… அறிவின் செயலாக என்னை இயக்குகின்றாய்…! என்று தன் உயிரிடம் தான் ஏங்குகின்றார்.

கந்தக் கோட்டம் என்று இந்த உடலுக்குள் இயங்கும் உயிரைப் பற்றித் தான் இராமலிங்க அடிகள் சொன்னார்.
1.இருளை அகற்ற வேண்டும்
2.ஜோதியாகப் பேரொளியாக ஆக வேண்டும் என்ற பொருள்படும்படியாகச் சொன்னார்.

சுகபோகத்தில் வாழ்ந்த காந்திஜி மகானாக மாறக் காரணம் என்ன..?

Barrister gandhiji

சுகபோகத்தில் வாழ்ந்த காந்திஜி மகானாக மாறக் காரணம் என்ன..? 

 

இன்று எடுத்துக் கொண்டால் மதத்திற்கு என்று குருக்கள் உண்டு. உயர்ந்த தத்துவத்தை எல்லாம் பேசுவார்கள்.
1.ஆனால் அந்தத் தத்துவங்கள் மற்றவருக்குத் தானே தவிர
2.அந்தத் தத்துவம் தனக்கில்லை என்று நிலைகளில் தான் நடந்து கொள்வார்கள்.

அந்தத் தத்துவத்தின் கீழ் நடக்காதிருந்தாலும் அந்தத் தத்துவத்தை வளர்க்கப்படும் போது மற்ற மதங்களைப் பழித்துப் பேசுவதும் பகைமை ஊட்டுவதும் போன்ற நிலைகள் தான் இன்றும் உண்டு. எல்லோரையும் இணைத்துச் சேர்க்கும் நல்ல பண்புகள் இல்லை.

ஆனால் அந்த உயர்ந்த பண்பு நம் நாட்டில் நம் காலத்தில் வளர்ந்த தவறு செய்த ஒரு மகானுக்கு எப்படி வருகிறது…? தன் சுகபோகங்களுக்கும் சிற்றின்பங்களுக்கும் மது வகைகளுக்கு அடிமையான அந்த மனிதன் காந்திஜி தான்…!

காந்திஜி அரசியல் சட்டங்களை உணர்ந்தவர். BHARAT LAW மேல் நாட்டிலே படித்துணர்ந்தார். மேல் நாட்டின் அறிவையும் அவர் உணர்ந்தார். மேல் நாட்டில் செய்யும் அநாகரிகத் தன்மையெல்லாம் இங்கேயும் வந்து செய்தார்.

இவர் தனக்குள் இன்பத்தையும் சுகபோகத்தையும் குடிப்பதையும் தன் தாய் தந்தையையும் மீறியும் செயல்பட்டவர். மேலை நாட்டினர் நாகரீகத்தையும் மேலை நாட்டார் செய்யும் செயல்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டவர்.

ஏனென்றால் செல்வத்தின் செழிப்பில் ஜமீன்தார் என்ற முறையில் அவர் வளர்ந்து வந்ததனால் பல சுக போகங்களையும் அனுபவித்து வந்தவர் அவர்.

ஆனால் இவருக்கு எப்படி இந்த ஞானம் கிடைத்தது…?

ஏனென்றால் தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலுக்காகச் செல்லும் பொழுது அவர் தன் கண் முன் பல தவறுகள் நடப்பதைக் கண்டுணர்ந்தார். அங்கே நீக்ரோக்கள் வேதனைப்படும் உணர்வுகளைச் சிறுகச் சிறுக உணர்கின்றார்.

மதத்தை அடிப்படையாகப் படிப்பதும் மற்ற தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற சட்டத்தைப் படித்த அவர் தீமையில் இருந்து இந்த மக்களை எப்படி விடுவிக்க வேண்டும் என்ற நிலையைத் தனக்குள் நாளுக்கு நாள் வலு பெறச் செய்கின்றார்.

காந்திஜி தனது வாழ்க்கையில் தவறுகள் பல செய்து இருப்பினும் அந்த தவறுகளில் இருந்து தான் எவ்வாறு மீள வேண்டும் என்ற உணர்வுகள் படிப்படியாக அவருக்குள் மேலோங்குகின்றது.

பிரிட்டனிடம் இருந்து ஒரு மதத்தின் அடிப்படையில் சிக்கி அவனுக்குக் கீழ்
1.தர்மத்தை அழித்துக் கொண்டு இருக்கும் அதிலிருந்து நீதி வேண்டும்.
2.உலக மக்கள் மற்றோர் அடிமையில் இருந்து மீள வேண்டும்.
3.அருள் ஞானிகள் காட்டிய அருள் செயல்கள் தனக்குள் வளர வேண்டும் என்ற பேருண்மையை தனக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றார் காந்திஜி.

அதே சமயத்தில் தான் படித்த படிப்பின் நிலைகள் கொண்டு உலக நிலைகளை அறிவதற்கு தன் எண்ணங்களைப் பரவவிட்டு உலக நூல்களை அனைத்தும் படிக்கின்றார்… படிக்கின்றார்…!

படிப்பின் நிலைகள் கொண்டு
1.நாட்டில் நடக்கும் அரசியல் வாழ்க்கையும்
2.மதங்கள் சேர்ந்து மத வாழ்க்கையும் மக்களை எப்படித் திசை திருப்புகின்றது..?
மக்களுடைய மன நிலைகள் எப்படி மாறுகின்றது…?

மதத்திற்கு மதம் போர் செய்வதும் மதத்திற்குள் இனங்கள் ஒன்றொன்று போர் செய்தும் உண்மையில் மகான்கள் கொடுத்த ஞானிகள் கொடுத்த மனித வாழ்க்கைக்கு உண்டான நிலைகள் சிதறுண்டு உண்மையைப் பெற முடியாது எவ்வாறு போகின்றது இந்த நாடு என்ற நிலையைத் தெளிவாகக் கற்றுணர்கின்றார் மகாத்மாஜி.

வான்மீகி இயற்றிய இராமாயணத்தைக் காந்திஜி தெளிவாகத் தெரிந்து கொண்ட பின் அந்த வான்மீகி மகரிஷியைத் தான் தன் எண்ணத்தில் எடுத்துக் கொண்டார்.

அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் நமக்குள் பெற்று விட்டால் நம்மை அறியாமல் இயக்கும் தீமை உணர்வுகளை அடக்கி தீமை செய்வோர் உணர்வுகளிலிருந்தும் நாம் விடுபட முடியும் என்று அதை முழுமையாக உணர்கின்றார்.

சுதந்திரம் என்றால்… “நம்மை ஒருவர் ஆட்சி புரியக்கூடாது…” அதற்காக காந்திஜி
1.ஆங்கிலேயர்களை… “அந்நியர்கள்…” என்று சொல்லவும் இல்லை.
2.கொடூர உணர்வு கொண்டு நம்மை ஆட்சி புரிவதை விடுத்து விட்டு
3.”சகோதரத்துவத்தைத் தான்…” நாம் வளர்க்க வேண்டும்
4.அதைத் தான் நமக்குள் ஆட்சி புரியச் செய்ய வேண்டும் என்று தான் காந்திஜி சொன்னார்.

”மகிழ்ச்சி…” என்ற உணர்வுகளை என்றுமே நமக்குள் சுதந்திரமாக இயங்கச் செய்வதே (கல்யாணராமா…!). வான்மீகி மாமகரிஷி காட்டிய இராமாயணக் காவியத்தின் மூலக் கரு அது தான்.

அந்த உணர்வை அவர் வைராக்கியமாகக் கடைப்பிடித்ததால்… அவருடைய எண்ண வலுவால்… நம் நாட்டுக்குச் சுதந்திரத்தையும் பெற்றுத் தர முடிந்தது. உலக மக்கள் மனதிலும் அவர் இடம் பிடித்தார்.

நாம் அனைவரும் சகோதரர்களே…! என்றார் காந்திஜி. அவர் வெளிப்படுத்திய ஆற்றல்மிக்க உணர்வுகள் நமக்கு முன் பரவியுள்ளது. அதை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அவர் உணர்த்திய சகோதரத்துவத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நம்மை அறியாது ஆட்டிப் படைக்கும் பகைமைகளிலிருந்து விடுபடலாம். மன பலமும் மன வளமும் பெறலாம்.

அருணகிரிநாதர் திருஞான சம்பந்தரின் உணர்வைத் தன் சகோதரி மூலமாகப் பெற்றுத்தான் ஞானியாக ஆனார்

Arunagirinadhar gnani

அருணகிரிநாதர் திருஞான சம்பந்தரின் உணர்வைத் தன் சகோதரி மூலமாகப் பெற்றுத்தான் ஞானியாக ஆனார்

 

திருஞானசம்பந்தரின் உணர்வினை அருணகிரிநாதரின் சகோதரி அது எடுத்துப் பெற்றுக் கொள்கின்றது.

தன்னுடைய சகோதரன் தவறான பாதைகளிலே போனாலும் அவனுடன் இணைத்து… இணைத்து… இணைத்து…
1.அவன் நல்ல பாதையில் நடக்க வேண்டும்
2.நல் வழியில் வாழ வேண்டும்
3.நல்ல உணர்வு பெற வேண்டும்.
4.பொருள் அறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் சிந்திக்கும் திறன் பெற வேண்டும் என்று அவன் சகோதரி செயல்படுகிறது.

ஒவ்வொரு சமயமும் அந்தத் திருஞானசம்பந்தருடைய உணர்வுகளை எடுத்து எடுத்து அந்தப் பாட நிலைகளை அருணகிரிக்குள் இணைக்கிறது.

திருஞானசம்பந்தரின் நல் ஒழுக்கங்களையும் அவர் விஷத்தை மாற்றிய நிலைகளையும் அவர் பார்வையில் தீமைகள் போனதையும் அவர் செயலாக்கங்களையும் அருண்கிரியின் சகோதரி எண்ணுகின்றது.

திருஞானசம்பந்தரை எண்ணித் தன்னுடைய சகோதரனின் உணர்வுகள் இப்படி வர வேண்டும் என்று எண்ணுகின்றது. சகோதரன் மேல் உள்ள பாசத்தால் அது எடுக்கும் போது அவன் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று அவனைப் பற்றியும் மற்ற ஞானிகளைப் பற்றிப் படித்த உணர்வுகளையும் தனக்குள் அதிகமாக நுகர்கின்றது. அந்த ஞானிகளின் உணர்வுகள் அணுக்களாக அருணகிரியின் சகோதரி உடலில் விளைகிறது.

தன்னுடைய சகோதரன் திருந்த வேண்டும் என்று முயற்சி செய்கிறது. இருந்தாலும்
1.அவன் இவர் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.
2.ஆனாலும் சகோதரியோ “அவன் திருந்த வேண்டும்…!” என்றே எண்ணுகின்றது.
3.இதை நீங்கள் நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சகோதரி சொல்வதைக் கேட்காமல் என்ன செய்கிறான்…?

தாசியுடைய வீட்டிற்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் அப்படி மகிழ்ந்து வாழ்ந்த உணர்வுகளையும் பெருமையின் உணர்வுகளையும் தான் அவன் எடுத்துக் கொள்கின்றான். சகோதரி அவனுக்கு நல்லதைச் சொல்லும் போதெல்லாம் கசந்த உணர்வே அவனுக்கு வருகிறது.

நம் வீட்டில் தாயோ தந்தையோ அப்படி இருக்க வேண்டும்… இந்த மாதிரி இருக்கிறது… அவர்களைப் பார் இவர்களைப் பார் என்று புத்திமதி சொன்னால் பிள்ளை என்ன செய்வான்…?

பிள்ளை அவனின் இச்சையை வைத்துக் கொண்டு தாய் ஏனோ ஒரு பைத்தியமாக இருக்கிறது என்பான். தாய் சொல்லும் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. குடும்பத்தில் பெரியோர்கள் சொல்லும் உணர்வுகளை ஏற்றுக் கொள்வதில்லை. மாறான உணர்வுகள் தான் குழந்தைகளுக்குள் வளருகிறது.

அதைப் போல் தான் அருணகிரியும் என்ன செய்கிறான்…? கடைசி வரையிலும் அவன் ஆசை தீரவில்லை. சகோதரி சொல்வதைக் கேட்காமல் தன்னுடைய இச்சையின் வழியிலேயே செல்கிறான்.

இருக்கிற செல்வம் எல்லாம் கரைந்தது. அடுத்து ஒன்றும் இல்லை… என்ற நிலை வரும் பொழுது “எப்படியாவது நீ எனக்குப் பணம் கொடுத்தே ஆக வேண்டும்…” என்று தன்னுடைய சகோதரியைக் கட்டாயப்படுத்துகின்றான்.

அப்பொழுது தான் அந்தச் சகோதரி சொல்கிறது. உனக்கு திருஞானசம்பந்தரின் உணர்வுகளை எல்லாம் சொன்னேன். மற்ற ஞானிகளின் நல்ல வழியையும் காட்டினேன்.

எத்தனை சுகத்தை நீ அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ உன் ஆசைக்கு என் உடலையே நீ பெற்றுக் கொள்…! என்று சகோதரி சொல்கிறது.
1.அவனுக்கு எவ்வளவு சொல்லியும்…
2.அவனால் அடக்க முடியவில்லையே…! என்ற உணர்வின் தன்மை மேல் மூச்சாகி
3.சகோதரி உடலை விட்டுப் பிரிகிறது.

அப்போது சகோதரி உடலை விட்டுப் பிரிந்தவுடனே அவனுக்குள் உண்மையை உணரும் பருவம் எப்படி வருகிறது…?

அருணகிரி தனக்குள் தான் செய்த தவறின் உணர்வுகள் இயக்கி உண்மையை உணர்த்தும் நிலையில் ஜீவன் பெறுகிறது. ஜீவன் பெற்றாலும் அவனுக்கு ஆதரவில்லை,

1.இது வரை தனக்கு ஆதரவாக இருந்தது.
2.ஆனால் இப்பொழுது அந்த ஒரு ஜீவனும் போய்விட்டதே என்று சகோதரியை எண்ணி ஏங்கும் பொழுது
3.அந்தச் சகோதரியின் ஆன்மா அவன் உடலுக்குள் போகிறது.
(ஏனென்றால் அந்த உணர்வின் இயக்க நிலைகள்)

இனி இந்த உடல் எதற்கு…? தவறான வாழ்க்கை வாழ்ந்து விட்டோம். “இனி அடுத்த ஜென்மமாவது நமக்கு நல்லவைகளாக இருக்கட்டும்…!” என்ற ஒரே உணர்வுடன் தன் உடலை மாய்க்க வேண்டும் என்று விரும்புகின்றான்.

“அவன் சாக வேண்டும்…!” என்று நினைக்கின்றான். இருந்தாலும் சகோதரியினுடைய உணர்வுகள் அங்கே சேர்க்கப்படும் போது அந்த உணர்வுகள் அவனைச் சாக விடாது தடுக்கின்றது.

அப்படித் தடுக்கப்படும் போது இவனை அறியாமலேயே நல்ல உணர்வுகளை உள் நின்றே சகோதரி கவர்கின்றது. கவர்ந்து கொண்ட பின்
1.அந்தத் திருஞானசம்பந்தர் தாய் கருவில் பெற்ற சக்தியால் எதைக் கண்டுணர்ந்தாரோ
2.அந்தக் கருவின் மூலத்தையே அருணகிரிநாதர் தனக்குள் அறியும் தன்மை வருகின்றது.

திருஞானாம்பந்தரின் தாய் விஷத்தை முறிக்கும் தன்மையை அது எண்ணிய உணர்வுகள் இவனுக்குள் வருகிறது. அத்தகைய உணர்வுகள் வளர்ந்த பின்
“நாத விந்துகள் ஆதி நமோ நமோ
வேத மந்திர சொரூபாய நமோ நமோ வெகு கோடி…!” என்ற பாடலையே பாடுகின்றான்,

1.நாம் சொல்லும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்ச்சியின் தன்மை எதுவோ அது நம் உடலுக்குள் சேரும்
2.எந்த உணர்வை நாம் நுகர்கின்றோமோ அதற்குத் தக்கவாறு தான் நம் இயக்கம் என்று அழகாகப் பாடியிருக்கிறார்.

நாம் அவர் பாடிய அந்தப் பாடலைப் “பஜனையாகத்தான்” பாடிக் கொண்டிருக்கின்றோமே தவிர அந்தப் பாடலுக்குள் உண்டான மூலத்தை நாம் அறியவில்லை.

அருணகிரிநாதர் மிகவும் தவறானவர். இருந்தாலும் கடைசியில் ஒன்றி வாழ்ந்த அந்தச் சகோதரியின் உணர்வுகள் அவர் உடலுக்குள் போய் அந்தச் சகோதரி எதை எண்ணினாளோ அதை நிலைநாட்டுகின்றது.
1.அந்தத் தாய் எந்த மெய் ஞானி உணர்வை எண்ணி ஏங்கியதோ
2.அதை அங்கே வழி நடத்தி அருணகிரியை ஞானியாக மாற்றுகின்றது.

அருணகிரிநாதர் பெற்ற உணர்வின் மாற்றங்களும்… அருள் உணர்வுகளும்… நம் குணங்களில் எதை எதை எல்லாம் நாம் எப்படி மாற்ற வேண்டும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதறாகத்தான் இதைச் சொல்கிறோம்.

மெய் ஞானிகள் இயற்றிய பாடலுக்கு இன்றிருப்போர் கொடுக்கும் வியாக்கியானங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

agastiya-rishi

மெய் ஞானிகள் இயற்றிய பாடலுக்கு இன்றிருப்போர் கொடுக்கும் வியாக்கியானங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்…!

 

அன்று ஞானிகள் சித்தர்கள் தங்களுக்குள் கண்டுணர்ந்ததை எல்லாம் பாடல்களாகக் கவிகளாக இயற்றியுள்ளார்கள். அதிலே இருக்கும் ஒவ்வொரு இணைப்பையும் நீங்கள் பிரித்துப் பார்த்தால் இயற்கையின் பேருண்மைகளை அதன் மூலமாக உணரலாம்.

பட்சிகளைப் பற்றி பாடுவார்கள்… மற்ற மிருகங்களைப் பற்றி பாடுவார்கள்.. காகம் குருவி அணில் என்று சிறிய உயிரினங்களைப் பற்றியும் பாடியிருப்பார்கள்.

அதனுடைய குணங்கள் எந்த வழியில் இருந்ததோ அதனின் ஒற்றுமையும் நமக்குள் (மனிதனானபின்) சேர்த்துக் கொண்ட ஒற்றுமையும் இப்படி மற்றதுடன் ஒத்து வாழும் உணர்வின் தன்மையைப் பாடல்கள் மூலமாகக் காட்டுவார்கள்,

ஏனென்றால் நாம் பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனாக வந்த நிலையில் இதற்கு முன்னாடி மிருக வாழ்க்கையில் வாழ்ந்த நிலையும் பட்சிகள் வாழ்க்கையில் வாழ்ந்த நிலையும்
1.அந்த குணங்களையெல்லாம் ஒன்று சேர்த்து வாழ்ந்த நிலைகளை எதனின் உணர்வை நாம் இன்று சேர்த்துக் கொள்கின்றோம்…?
2.அதை எல்லாம் எதன் வழி நாம் வளர்க்கின்றோம்…?
3.எதன் வழியின் இன்று நாம் வாழுகின்றோம்…? என்பதை வைத்துத் தான்
4.புலமைகளாக அதைப் பாடிக் கொண்டு போவார்கள்.

அந்தப் பாடலுக்கு அர்த்தத்தைக் காண வேண்டும் என்றால் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும். இன்றைக்குள்ளவர்களால் அந்தப் பாடலின் மூலம் தெரியுமா என்றால் தெரியாது.

திருவள்ளுவர் அன்று பாடினார். அதற்கு எத்தனை பேர் இன்று வியாக்கியானம் கொடுக்கின்றார்கள்…?
1.இப்படிச் சொல்லியிருக்கிறார்
2.அப்படிச் சொல்லியிருக்கிறார்
3.இதற்காக வேண்டி இப்படிச் சொன்னார்… இல்லை அப்படிச் சொல்லிருப்பார் என்று
4.அவரவர்களுடைய அனுமானங்கள் தான் வருகின்றதே தவிர
5.அன்று திருவள்ளுவர் சொன்ன உறுதியின் தன்மையைப் பெற முடிகிறதா…? அதைப் பின்பற்ற முடிகிறதா…? என்று சிந்தியுங்கள்.

அந்தக் காலத்தில் இதைத்தான் பேசியிருப்பார். இதைத்தான் சொல்லியிருப்பார் என்று சொல்லிக் கொண்டே போவார்கள்.

திருஞானசம்பந்தரைப் பற்றி வியாக்கியானப்படுத்தும் போது அவர் இப்படித் தான் பேசினார். அப்படித் தான் பேசினார் என்று இவருடைய கற்பனைகள் தான் இங்கே வரும்.

ஆனால் திருஞானசம்பந்தரின் தாய் வெகு நாளாகப் புத்திரபாக்கியத்திற்காக வேண்டி அது எடுத்துக் கொண்ட வலுவான உணர்வால் அது கருவுற்று தாய் சுவாசித்த உணர்வே ஞானப்பாலாக அந்தச் சிசுவுக்குக் கிடைத்தது.

அதனால் தான் அவ்வளவு பெரிய ஞானியாக அவர் உருவானார் என்ற நிலையை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

தாய் கருவிலிருக்கும் பொழுதே அவருக்குள் விளைந்த உணர்வுகள் விஷத்தை முறிக்கும் ஆற்றலாக வந்தது.
1.எந்தத் தீமையையும் மாற்றி அமைக்கும் திறன் பெற்றவர்
2.வலிமை கொண்டவர்…
3.வலிமை கொண்டு வாழும் நிலை பெறறவர்…! என்பதை எல்லாம்
4.பராசக்தி ஞானப்பால் கொடுத்ததால் தான் அந்த சக்தியைப் பெற்றார் என்று வியாக்கியானத்தைக் கொண்டு போகின்றார்கள்.

நீங்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கிறோம்.

மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறியக்கூடிய “பேரண்ட மகரிஷிகளின் ஆற்றல்களை” நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்

ULTIMATE POWER OF AGSTYA

மிக மிக நுண்ணிய நிலைகளையும் அறியக்கூடிய பேரண்ட மகரிஷிகளின் ஆற்றல்களை நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும்

 

ஈ… கொசு… மனிதனின் தலை முடி… இவைகளில் ரேடியத்தைத் தடவி அன்று வல்லரசுகள் எப்படி ஒருவருக்கொருவர் அடுத்த நாட்டு இராணுவ இரகசியங்களை வேவு பார்த்தனர்…?

இரகசியமாக நடக்கும் கூட்டங்களில் அங்கே அவர்கள் பேசுவதைப் பல மடங்கு பெருக்கி அவர்கள் பேசுவதை எல்லாம் எப்படி அறிந்து கொண்டார்கள்…? என்று
1.அவர்கள் வேவு பார்ப்பதை நம் ஞானகுரு உணர்ந்துள்ளார்.
2.அவர் படிக்காதவர் தான்…!
3.ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எத்தகைய நுண்ணிய நிலைகளையும் அறியும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்.

அறியாமல் இயக்கும் அத்தகையை தீமைகளிலிருந்து விடுபட அவர் பெற்ற அந்த அருளாற்றல்களை எல்லாம் நாமும் பெறும் வண்ணமாக அருள் ஞான உபதேசங்களாகப் பதிவு செய்கின்றார்கள். இதைப் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால்
1.நாமும் 2000 சூரியக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு
2.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் ஆற்றலை வளர்த்து அவர்களுடன் தொடர்பு கொண்டு
3.விஞ்ஞானத்தால் வரும் எத்தகைய விஷத் தன்மைகளையும்
4.எத்தகைய நுண்ணிய நிலைகளில் அவர்கள் செயல்பட்டாலும் அதை அகஸ்தியன் உணர்வைப் பாய்ச்சி முறியடித்து
5.நம்மையும் காத்து உலகுக்கு வழி காட்டியாகவும் நாம் ஒவ்வொருவரும் வளர முடியும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அத்தகைய வேவு பார்க்கும் உணர்வுகள் (ELECTRONIC) வளர்ச்சி அடைந்து வளர்ச்சி அடைந்து அதிக அளவில் பெருகி இன்று டி.வி… கம்ப்யூட்டர்… ஃபோன்… மூலம் மனித இனத்தையே புத்தி பேதமாக்கும் அலைகளைப் பரவச் செய்துள்ளார்கள்.

அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதை ஞானகுரு அவர்கள் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

குழந்தை இல்லாவதவர்களுக்கு அன்றைய மெய் ஞானிகள் தன் பார்வையாலே ஒளியைப் பாய்ச்சி… “புத்திர பாக்கியம்” பெறச் செய்தார்கள்…!

mother-and-child-care

குழந்தை இல்லாவதவர்களுக்கு அன்றைய மெய் ஞானிகள் தன் பார்வையாலே ஒளியைப் பாய்ச்சிப் “புத்திர பாக்கியம்” பெறச் செய்தார்கள்

 

இன்று விஞ்ஞான அறிவின் வளர்ச்சியைப் பார்க்கின்றோம். ஒரு மிருகத்திலுள்ள அணுக்களை எடுக்கின்றான். மற்ற மிருகங்களினுடைய விந்துக்களில் இதைக் கலக்கிறான். அது வேறு விதமாகப் போகின்றது.

ஒரு மாட்டின் விந்தை எடுக்கின்றான். இன்னொரு இன விந்திலே இதைக் கொடுக்கிறான். இதனுடைய அடைப்பிலே பாதுகாப்பாகக் கவசம் பண்ணி அந்த மாட்டின் ரூபத்தையே மாற்றி விடுகின்றார்கள்.

நாயோ ஆடோ கோழியோ அதிலுள்ள செல்களைப் பிரித்து எடுக்கின்றான். மற்ற உணர்வுகளை மாற்றி அதனுடன் இணைக்கும் பொழுது கோழியின் ரூபம் மாறுகின்றது. குருவிவியின் நிறம் மாறுகின்றது. மயிலின் நிறம் மாறுகின்றது. பல விதமான நாய்கள் உருவாகின்றது பல தரப்பட்ட கோழிகள் உருவாகின்றது.

இப்படியெல்லாம் உருக்கள் மாறுகின்றது. விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த நிலைகளை எல்லாம் நாம் பார்க்கின்றோம்.

இனச் சேர்க்கையின் பொழுது வேறொரு சீமை மாடுடன் இணையும் பொழுது அந்த விந்து இதிலே அந்த மாடாக மாற்றுகின்றது.

அது உணர்வது பாதுகாப்பாகப் போகின்றது. இதே மாதிரித் தான் மனிதனுடைய கருக்களிலும் ஒரு மாட்டின் விந்தினை எடுத்து விட்டால் அதே மாட்டின் நிலையே தான் இங்கு மாற்றும்.

ஏனென்றால் இது ஒரு பாதுகாப்புக் கவசமாகின்றது.

இப்பொழுது விஞ்ஞான அறிவிலே கொண்டு வருகின்றார்கள்.

ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால்…
1.கருப்பைக்கு அப்புறம் இதற்கென்று இயற்கையிலே செய்யப்பட்ட இந்தக் கருவின் அணுக்களை வைத்து
2.(இன்னொரு) தாயின் வெப்பத்தை வைத்து
3.இந்தக் கரு முட்டையை வளர்க்கின்றான்.
4.அதிலே குழந்தைகள் பிறக்கின்றது.

அதாவது ஜீவ அணுக்களை வளர்த்ததை மற்ற உடலிலிருந்த அணுக்களைப் பிரித்து இப்படிச் செய்கின்றார்கள். இது விஞ்ஞான அறிவு.

ஆனால் அன்று வாழ்ந்த மெய் ஞானிகள் என்ன செய்தார்கள்?

புத்திர பாக்கியம் ஏற்படாததன் காரணம் என்ன என்றால் புத்திர பாக்கியத்தை உண்டாக்கும் அணுக் கருக்கள் உடலில் வீரியம் பெறாத நிலைகளினால் தான்.

ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் சுவாசித்த எண்ண உணர்வுகள் “எதிர்மறையான அணுக்களாகி” உடலில் புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழித்துவிடுகின்றது.

அந்த அணுக்களின் குறைவு எதுவோ அந்த அணுக்களுக்குத் தேவைப்பட்டது எதுவோ அதை மெய் ஞானி “தன் பார்வையால்…” அந்த உணர்வின் சத்தை அவர்களுக்குப் பாய்ச்சுகின்றான்.
1.ஒருவருக்குக் குழந்தை இல்லை என்றால்
2.தன் எண்ணத்தால் குழந்தை கொடுக்கின்றான்.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருளாற்றல் பெறவேண்டும் என்று ஒருவருக்கொருவர் தினசரி காலை மாலை இரவுகளில் தியானித்து வர வேண்டும்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பெருகப் பெருக
2.புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழிக்கும் அணு செல்களில்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படர்ந்து
4.அதனின் செயலாக்கம் வலுவிழக்கின்றது.

புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு… என்ற நம்பிக்கை கொண்டு மன வலுவுடன் தியானித்தால் “உறுதியாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்….!”

எந்தத் தீமையான உணர்வையும் நாம் நேரடியாகத் தாக்கக் கூடாது… ஏன்…!

vaali-fighting

எந்தத் தீமையான உணர்வையும் நாம் நேரடியாகத் தாக்கக் கூடாது… ஏன்..!

மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால்
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று
2.அதைக் கவர்ந்து கொண்டால் தான்
3.நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.

எனக்கு நேரமாகி விட்டது. அந்த பஸ்ஸுக்கு போக வேண்டும் என்ற நினைவலைகளை அங்கு வைத்துக் கொண்டு இங்கே கேட்டுக் கொண்டிருந்தால் உபதேசம் கொடுக்கமாட்டான் – கண்ணன் (உயிருக்கு).

அவசரமாக வீட்டுக்குப் போகவேண்டும் என்று (கண்ணின் நினைவலைகள்) நினைத்தீர்கள் என்றால் அந்த நினைவலைகள் அனைத்தையும் உங்களுக்கு இழுத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

யார்…? கண்ணன்…. நம் கண்கள்.

பிள்ளைகள் என்ன செய்கின்றார்களோ…? அவன் என்னென்னமோ செய்கிறான். இவனைப் பார்த்தால் நம்மை ஏமாற்றிக் கொண்டேயிருக்கின்றான்…! என்று பல நிலைகளில் கண்ணின் நினைவலைகள் கொண்டு எண்ணிக் கொண்டிருந்தால் அதற்குத்தான் வழி காட்டுவான் கண்ணன்.

திருடப் போகிறேன் என்று சொன்னால் “வீட்டுக்காரன் அங்கே இருக்கிறான் சிக்கிவிடாதே…! இப்படிப் போ…” கண்கள் என்று காட்டும்.

அந்த வீட்டுக்காரன் நிறையச் சம்பாதித்து வைத்திருப்பான். சிறியதாக நறுக் என்று சத்தம் கேட்டவுடன் “ஓகோ… திருடன் வருகிறான் போலிருக்கின்றது… நீ இப்படிப் போ…” என்று வழி காட்டுவான் கண்ணன்.
அதைப் போன்று தான்
1.நான் எவ்வளவோ உயர்ந்த நிலைகளில் உபதேசம் கொடுத்தாலும் கூட
2.எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம்
3.எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ…
4.கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?

இவனைச் சும்மா விட கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?

வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்,,,விண்,,,” என்று வலி இருக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லுடா என்பார். ஆனால் ஈஸ்வரா என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது
1.உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.
2.எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…?
3.இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!

ஏன்…?

1.நமக்குள் வேதனை வந்தாலும்
2.அது நம்மைத் தாக்கினாலும்
3.நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.”போக்கிரி…” என்று சொன்னவுடனே
2.நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது.
3.நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.

அதற்காக வேண்டித் தான்
1.நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்)
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
3.அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி
4.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று
6.உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.

மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது
1.அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ
2.அதே மாதிரி – “அவன் நம்மை எண்ணும் பொழுது..”
3.மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால்
4.அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது
1.நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால்
2.நம்மைப் பார்த்ததும் நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய்
3.அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!

தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகிறது. விஷத்தின் தன்மையை முறிக்க வேறு ஒரு விஷ முறிவு மாத்திரையைக் கொடுத்தால் விஷம் இறங்கிவிடுகிறது.

நம் சிறு நீரைப் பரிசோதிப்பதற்காக அதிலே ஒரு சொட்டு கெமிக்கல் விட்டால் உடலுக்குத் தகுந்தாற்போல் அதிலுள்ள அனைத்தையும் காட்டுகின்றது.

சர்க்கரைச் சத்து அதிகமாக இருந்தால் சிகப்பு நிறமாக மாறுகிறது. அதிலே சர்க்கரை கொஞ்சம் அளவு குறைவாக இருந்தால் வெளுப்பு நிறமாக வருகிறது. மிகவும் கொஞ்சமாக இருந்தால் பச்சை நிறமாக ஆகிறது. ஒன்றுமே இல்லை என்றால் நீல நிறமாக இருக்கிறது.

அந்தக் கெமிக்கலைக் கலந்ததும் சிறு நீருக்குள் உள்ளதைப் பிரித்துக் காட்டும் நிலைக்கு வருகிறது.

இதே போன்று மகரிஷிகளின் நினைவலைகளை நம் உடலுக்குள் சேர்த்துக் கொண்டால்
1.பிறருடைய துயரத்தின் நிலையைப் பிரித்துக் காட்டும் நிலையும்
2.அந்த மகரிஷிகளை எண்ணும் பொழுது நம்மைப் பாதுகாக்கும் நிலையாகவும் அமையும்.

செய்து பாருங்கள்…! உங்களுக்கு வரும் எத்தகைய தீமைகளையும் துன்பங்களையும் துயரங்களையும் பகைமைகளையும் வேதனைகளையும் உங்களால் அடக்கி ஒடுக்க முடியும்.

நல்ல உணர்வைக் காக்கும் சக்தியாக நீங்கள் பெற முடியும் என்று உறுதியாகச் சொல்கின்றோம்.