மன வலிமையைக் கூட்டித் தீமையை நீக்கும் நிலை

மன வலிமையைக் கூட்டித் தீமையை நீக்கும் நிலை

 

சாதாரணமாக மனிதர் பாம்பினைக் கண்டால் அஞ்சுகின்றார். ஆனால் பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் ஒருவன் ஒரு பாம்பைப் பிடிக்கச் சென்றால் பாம்பு அவனைக் கண்டு அஞ்சுகின்றது. அவன் கையில் ஒரு குச்சி மட்டுமே இருக்கும்.

பாம்பைக் கண்டு நாம் பயப்பட்டோம் என்றால் பாம்பு இந்த உணர்வை நுகர்ந்து “சிர்…” என்று சீறித் தாக்கும்… பயந்த மனிதன் தாக்குகின்றான் என்று உணர்கின்றது.

1.தெளிந்த மனிதன் வலிமையைக் கண்டு “இவன் தாக்குவான்” என்று பாம்பு அஞ்சி ஓடுகின்றது.
2.ஆனால் பயந்தவன் தாக்கும் பொழுது பாம்பும் அஞ்சி இவனைத் தாக்குகின்றது.

வலிமையுள்ளதை நுகர்ந்துணரும் சக்தி பிற உயிரினங்களுக்கு உண்டு. மனிதருக்கும் இந்த அறிவு இருப்பினும் இந்த அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை. ஆதலால் நாம் அறியும் தன்மை இழந்திருக்கின்றோம்.

பாம்பு பிடிப்பதில் தெளிந்த மனிதன் இந்தப் புற்றுக்குள் பாம்பு இருக்கிறது என்று அறிகின்றான். இவனின் மணத்தை நுகரும் பாம்பு புற்றுக்குள் அஞ்சி ஒடுங்குகின்றது. இவன் தூண்டும் போது வெளி வரும் பாம்பு இவனைத் தாக்குவதில்லை… அஞ்சி ஓடுகின்றது.

1.இவன் பாம்பை எளிதில் பிடித்துக் கவட்டையில் போட்டுப் பாம்பு உயிருடன் இருக்கும் பொழுதே, பாம்பின் தோலை உரிக்கின்றான்.
2.இத்தகைய உணர்வுகள் பாம்பு பிடிப்பவனிடத்தில் இருப்பதால் அவனிடமிருந்து வெளிப்படும் மணத்தைப் பாம்பினம் காண்கிறது.
3.ஆகவே அவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது.
4.சாதாரண மனிதனைக் கண்டால் சீறித் தாக்குகின்றது… எதிர்த்து நிற்கின்றது.

இதைப் போன்றுதான் வாழ்க்கையில் பகைமை என்ற உணர்வுகள் எத்தனையோ நம்மிடத்தில் வருகின்றது.

நாம் அன்பும், பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய கஷ்டங்களை நோய்களைக் கேட்டறிந்து உபகாரம் செய்தாலும் நாம் கேட்டறிந்த உணர்வுகள் “ஓ…ம் நமசிவாய…” என்று நம் உடலாக மாற்றுகின்றது. அதுவே வினையாகின்றது… வினைக்கு நாயகனாக அதன் வலுவைக் காண்பிக்கத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே இது போன்ற தீமைகளிலிருந்து எங்ஙனம் நாம் விடுபட வேண்டும்…? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

ஒரு இயந்திரத்தை உருவாக்கும் இஞ்சினியர் அந்த இயந்திரத்தில், எங்கெங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும்…? எங்கெங்கே வலிமை தேவை…? என்பதைக் கணக்கிட்டு உலோகத் தன்மையின் வலிமையையும் இயந்திரத்தில் ஏற்படும் உராய்வையும் கணக்கிட்டு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

ஆனால்… இயந்திரத்தைச் சோதித்துப் பார்க்கும் பொழுது உலோகக் கலவையில் வலு சிறிது குறைவாக இருக்கும் பொழுது இயந்திரம் நொறுங்கி விடுகின்றது.

பின் எதனால் இப்படி நேர்ந்தது…? என்று சிந்திக்கின்றார். சிந்தித்து இயந்திரத்திற்குண்டான வலிமையைக் கூட்டுகின்றார். இதனைத் தொடர்ந்து சரியான ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றார்.

1.இதைப் போன்று தான் ஞானத்தின் நிலைகள்…!
2.தீமை என்று ஒன்று வரும் பொழுது நாம் அருள் ஞானிகளின் உணர்வை நம்முள் பதிவாக்கினால்
3.உடனே சிந்தனை தூண்டப்பட்டுத் தீமைகளை அகற்றும் தன்மை நம்மிடத்தில் உருவாகின்றது.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது
1.அது நம்முள் விஷத்தின் தன்மையை அடக்கி
2.நம்மிடத்தில் சிந்திக்கக்கூடிய மன வலிமையைக் கூட்டுகின்றது.

இத்தகைய ஆற்றலை நீங்கள் பெற்றால் தான் உங்களுடைய வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும். உங்கள் வாழ்க்கையைச் சீராக்க முடியும்.

பேரருள் பேரொளி பெறும் நிலையாகத் தனக்குள் அருள் ஒளியின் உணர்வின் தன்மையைக் கூட்டும் பொழுது அதன் உணர்வின் அலைகளை நீங்கள் பெற்று இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை…! என்ற நிலையை அடைந்திட முடியும்.

இதை உணர்ந்து ஞானிகள் காண்பித்த அருள் வழியில் அருள் ஞானத்தை வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் தம்முள் நஞ்சினை வென்று பேரருள் பெற்று பிறவியில்லா நிலை பெறும் அருள் சக்தி பெற்று பிறவியில்லா நிலை என்ற அருள் வாழ்க்கை வாழ்ந்து இவ்வாழ்க்கையில் பிறவியில்லாப் பெருநிலையாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

யாரையும்… எதையும்… எப்பொழுதும் துன்புறுத்தக் கூடாது… நாம் கல்யாணராமனாக வேண்டும்

யாரையும்… எதையும்… எப்பொழுதும் துன்புறுத்தக் கூடாது… நாம் கல்யாணராமனாக வேண்டும்

 

நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ பேரை நாம் பார்க்கின்றோம். வேதனைப்படுபவர்களையும் சங்கடப்படுபவர்களையும் கோபப்படுபவர்களையும் ஏமாற்றுபவர்களையும் பார்க்கின்றோம்.

இத்தனை உணர்வுகளையும் சுவாசித்து உயிரிலே பட்டபின் ஓ…ம் நமச்சிவாய…! ஓ…ம் நமச்சிவாய…! என்று சதாசிவம் ஆகிக்கொண்டே இருக்கிறது.. அதாவது உயிர் நம் உடலாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

ஆனால் நாம் எதைச் சிவமாக்க வேண்டும்…?

1.காலையிலிருந்து இரவு வரை சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்தத் தீமையான உணர்வுகளை மறந்து
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளைச் சேர்த்துச் சிவமாக்கி
3.எல்லோருக்கும் நல்ல நிலைகள் கிடைக்க வேண்டும் என்ற உணர்வை நம் உடலாக்க வேண்டும்.
4.அப்படி ஒன்று சேர்த்தால் ஒன்று சேர்த்து வாழும் அதுதான் கல்யாணராமா…!
5.நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்று சேர்க்கப்படும் பொழுது ஏன்றைக்குமே சந்தோசமாக இருக்கும்.

ஜனகச் சக்கரவர்த்தி சீதாவிற்குத் திருமணம் செய்ய சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார். கலந்து கொண்டோர் அனைவரும் அவரவர்கள் திறமையைக் காட்டுகின்றார்கள். திறமையைக் காட்டிச் சீதாவைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று விரும்புகின்றார்கள்.

ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?

தீமை செய்யும் அந்தக் காண்டீபத்தையே ஒடித்து விடுகின்றான்.
1.காண்டீபம் என்பது உடலில் விளைந்த தீமையான உணர்வுகள் தான்.
2.அதை ஒடிப்பது என்பது சாமானியமானது அல்ல… இராமாயணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்தத் தீமை செய்யும் காண்டீபத்தை இராமன் ஒடிக்கின்றான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கின்றான். அரவணைக்கப்படும் பொழுது கல்யாணராமன் ஆகின்றான்.
1.உங்கள் மீதுள்ள வெறுப்பான குணத்தை நான் நீக்கி விட்டால் இரண்டு பேருடைய எண்ணங்களும் ஒன்றாகின்றது…
2.அப்பொழுது மகிழ்ச்சி வருகின்றது கல்யாணராமா…!

என் உடலில் இருக்கும் தீமைகளை நீக்கிவிட்டு உங்கள் மீது இருக்கும் வெறுப்பை நீக்கி பின் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் சொல்லும் பொழுது அந்த உணர்வுகள் உடலில் ஒன்று சேர்ந்து வாழ்கின்றது.

இந்த நிலையை உருவாக்குவதற்குத் தான் கோவிலை அமைத்துள்ளார்கள் ஞானிகள்.
1.எண்ணங்களை எப்படி நுகர வேண்டும்…?
2.அந்த எண்ணங்கள் அனைத்தையும் எவ்வாறு ஒன்று சேர்க்க வேண்டும்…?
3.பகைமை வளராதபடி எவ்வாறு தடுக்க வேண்டும் என்று உருவம் அமைத்து அருவ நிலைகளை நமக்குக் காட்டியுள்ளார்கள்.

கோவிலுக்குச் சென்று நாம் இப்படி நினைக்கின்றோமா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

 

குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எமக்குள் பெறச் செய்ததைப் போன்று உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால்
1.உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்கும்.
2.புதிதாகத் தீய வினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின் அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால்தான் வளரும். நான் வித்தை ஊன்றி விட்டேன் என்று சும்மா இருந்தால் வளருமா…?

அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்து விட்டோம் என்றால் அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும்.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி ஒளியின் உடலாகத் தாம் பெற்றார்.
1.அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால்
2.அகஸ்தியரைப் போன்று நாமும் நமது உடலில் உள்ள அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றியமைக்க முடியும்.

நம்மிடம் உள்ள முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதுத் தீய வினைகள் நமக்குள் சேராமல் தடுத்து நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.

பிறிதொரு உணர்வை நாம் நுகர்ந்து கொண்டபின் நமது உணர்வுகள் என்ன செய்கின்றது…? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின் நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது வெறுப்போ அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது…?

இதெல்லாம் நமது உடலில் உள்ள “உணர்வுக்கொப்பத்தான் வரும்” என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர வேண்டும். தெரிந்து தெளிந்து வாழ்ந்திடும் வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம்.
1.நமக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.நம்மை வெறுப்படையச் செய்வது எது…?
3.வெறுப்பான பின் குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது…?
4.அந்த வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை நாம் அனுபவப்பூர்வமாகக் கொண்டு வர வேண்டும்.

இத்தனையும் யாம் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம்.
1.கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குத்தான் உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லிப் பதிய வைக்கின்றோம்.
2.தீமைகளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுவதற்காகத் தான் யாம் உபாயங்களைக் கூறுகின்றோம்.
3.யாம் அப்படிச் செய்து விடுவோம்… இப்படிச் செய்து விடுவோம்…! என்று சொல்லவில்லை.

உதாரணமாக… பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால் கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால் விபத்தைப் பார்த்ததின் உணர்வு அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

அடுத்த முறை அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே…? என்று தேடிப் பிடித்துப் போய்ப் பார்ப்பார்.
1.ஆக பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும்
2.அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால் இல்லை.
3.ஏனெனில் ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு உணவு தேவை.
4.நாம் சும்மா இருந்தாலும் அது நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

நாம் எத்தகைய நிலைகளை வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி… பரிவுடன் பார்த்தாலும் சரி… அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

உதாரணமாக… குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றைக் கண்டால் அடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. இருந்தாலும்…
1.பின்னாடி அதனின் நினைவு வரும் பொழுது அந்தக் குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும்.
2.திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.

ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும் மன வலிமை கொண்டு “என்ன…? ஏது…!” என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.

குழந்தைப் பருவத்தில் அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால் அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

அதே சமயத்தில் குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால் அது அதனிடத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. மீண்டும் அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.

வேதனை போன்ற மற்ற உணர்வுகளைப் பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது
1.பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள் நம்மிடத்தில் பதிவதில்லை.
2.வேதனையான குணத்தின் உணர்வே நமக்குள் நினைவில் வரும்.

குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில் தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வே அதிகமாக வரும்.
1.அதுவே முன்னனியில் நிற்கும்
2.குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும்… தீயதையும் பதிவு செய்து கொள்ளும்.
3.வளரும் பருவம் கொண்ட சரீரங்களில் இந்த நிலை.

மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால் அந்தச் சக்தி நமக்குள் வரும்.

நமக்கு நோய் என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு “மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான்…” அந்த நோயே நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.

1.ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களையும் தத்துவங்களையும் கேட்க நேரும் பொழுது
2.நமது கவலைகள் வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும்.
3.அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.

ஏனென்றால்… வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர்களிடத்தில் நல்ல உணர்வுகள் எதுவும் பதியாது.

இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால் இந்த உடலில் இருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

ஆகவே நமது வாழ்க்கையில்
1.நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி
2.அதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியான சக்திகளை நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் சத்தாகச் சேர்ப்போம்.

நாம் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று தொழில் வளம் பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்

வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கினான்

 

எண்ணத்தின் வலிமையான நிலைகளைக் காட்டுவதற்கு இராமாயணத்தில் “வாலியைக்” காட்டுகின்றனர்.

வாலி வலிமை பெற்றவன். அவனிடம் யார் “நேரடியாகப் போர்” செய்தாலும் அவர்களிடமிருந்து பாதி பலத்தை வாலி எடுத்துக் கொள்வான்…! என்று காவியத்தில் உணர்த்தியுள்ளார்கள்.

உதாரணமாக… ஒரு மனிதன் கோபத்துடனோ அல்லது வேகத்துடனோ வேதனைப்படும் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது அவர்களை நேரடியாகப் பார்த்து அவர்கள் சொல்வதைக் கேட்டறிந்தால்
1.அந்த வேதனை உணர்வுகள் நமது நல்ல உணர்வுக்குள் இணைந்து நமக்குள்ளும் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.
2.நம் நல்ல குணத்தைச் செயலாக்க முடியாது.
3.”பாதி நல்ல குணம்” வலு இழக்கப்படுகின்றது.

வாலி என்ற நஞ்சான செயல்களை நாம் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் நம்மை வீழ்த்திவிடும். அதை அடக்க என்ன செய்ய வேண்டும்…?

மனித வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று இன்றும் ஒளியின் சரீரமாக விண்ணிலே சுழன்று கொண்டு இருக்கும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் உணர்வலைகளை நம் எண்ணத்ததால் அதைக் கவர்ந்து… நுகர்ந்து… அந்த உணர்வலைகளை நம் உடலுக்குள் சேர்க்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

பிறகு… மகரிஷிகளின் அருள் சக்தி அந்த வேதனைப்பட்டவர்கள் பெற வேண்டும். அவர்கள் உடல் முழுவதும் படர வேண்டும். அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று நாம் மறைமுகமாக நம் எண்ணத்தின் வலுவின் தன்மை கொண்டு அலைகளைப் பரப்பவேண்டும்.

இதைத்தான்
1.சீதாராமன் வாலியை நேரடியாகப் பார்க்காதபடி
2.அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த கணையை “மறைந்திருந்து ஏவினான்…”
3.வாலியின் செயலைத் தடுத்தான்…! என்று இராமாயணத்தில் உணர்த்தினார்கள்.

பிறர் நம்மைத் திட்டும் போது என்ன செய்ய வேண்டும்…?

பிறர் நம்மைத் திட்டும் போது என்ன செய்ய வேண்டும்…?

 

உங்களை நீங்கள் காப்பாற்றாமல் சாமி காப்பாற்றுவார்…! சாமியார் காப்பாற்றுவார்…! ஜோசியம் காப்பாற்றும்…! எந்திரம் காப்பாற்றும்…! என்று நினைக்க வேண்டாம். ஆக ஒன்றும் காப்பாற்றாது,

இந்த உடலிலும் சரி… இந்த உடலை விட்டுப் போனாலும் சரி… உயிருடன் ஒன்றிய நிலையில் உணர்வைச் சேர்த்து உயிர் வெளியிலே போனால் அவனுடன் ஒன்றி அங்கே போக வேண்டும். அதற்கு நீங்கள் தயார் பண்ணிக் கொள்ளுங்கள்.

எமது குருநாதர் என்னைக் கஷ்டப்படச் சொன்னார். சரி என்று யாம் எமது நிலைகளில் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமென்றாலும் போய்க் கொள்ளலாம்.

ஆனால் அவர் எனக்கு இட்ட கட்டளை…!
1.அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லியிருக்கிறார்
2.உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லி இருக்கிறார்.

அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும்… என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் நன்றாக ஆக வேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும்… அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

1.உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
2.அவர்கள் சங்கடத்தைப் பற்றி எண்ண வேண்டாம்… விலகி நில்லுங்கள்
3.அவர்களுக்கு நல்ல நேரம் வரட்டும் என்று சொல்லிவிடுங்கள்.
4.எனக்கு இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்…! என்று எண்ண வேண்டாம்…!

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்து விட்டு நன்றாக ஆக வேண்டும் என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள். இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிக் கொண்டே இருந்தால்
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக் கொண்டே வாருங்கள். அவர் திட்டுவது உங்களுக்கு வராது… நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால்… இப்படித் திட்டுகிறானே…! இருக்கட்டும் பார்க்கிறேன்…! என்று சொன்னால்
1.ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து
2.இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்து விடும்.

ஆகவே அத்தகைய நிலைகள் நமக்குள் வராதபடி ஆத்ம சுத்தியைக் கடைப்பிடித்துத் தீமைகளை அகற்றுவோம். இதைச் சீராகக் கடைப்பிடிப்போர் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

நம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்ய வேண்டும்…! – ஞானிகள் சொன்ன உட்பொருள்

நம் வீட்டு வாசலைச் சுத்தம் செய்ய வேண்டும்…! – ஞானிகள் சொன்ன உட்பொருள்

 

பக்தி என்பதை எதிலும் பொருதலாம். நான் கறி (மட்டன்) சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் கறி மேல் பக்தி இருக்கின்றது. ஆனால் காய்கறிகளைச் சாப்பிடுகிறேன் என்றால் அதன் மேல் பக்தி வருகின்றது. எதை விரும்பிச் சாப்பிடுகிறோமோ அதன் வழி அந்த பக்தி வருகிறது.

இதைப் போன்று தான்
1.ஞானிகளால் காட்டப்பட்டது தான் பக்தி என்பது.
2.அதாவது மகரிஷிகளால் உணர்த்தப்பட்ட நிலை ஞானிகளால் வெளிப்படுத்தப்படுகிறது.

அரசன் மதங்களாக உருவாக்கினாலும் அதில் பக்தி நல்ல ஒழுக்கங்களைக் கடைபிடிக்கச் செய்கின்றது.

பெண்கள் கோலமிடுகின்றார்கள் என்றால் தன் உணர்வைச் செலுத்தி… தவறு இல்லாதபடி எத்தனையோ அழகாக அதைப் போடுகின்றார்கள். ஆனால் அவர்கள் செய்கிறார்கள் என்று ஆண்கள் நாம் செய்ய முடியுமா…?

ஒவ்வொரு புள்ளிக்கும் ஒவ்வொன்றையும் இணைத்து எப்படி அதை அழகுபடுத்துகின்றோமோ அதைப் போல்
1.மனிதனின் வாழ்க்கையில் ஒரு புள்ளி…! ஒரு கோபம் ஒரு வெறுப்பு ஒரு சாந்தம் என்ற நிலையில் எத்தனையோ புள்ளிகள் உண்டு.
2.இதை அனைத்தையும் இணைத்து அலங்காரமாக எடுத்துப் போடுவதற்கு…
3.அதாவது மனதைச் சாந்தப்படுத்திப் பொறுமைப்படுத்தி பக்தி கொண்டு கோலமிடுவது என்ற அந்த நிலை.

அதே போல்… பொதுவாக மார்கழி மாதம் எடுத்துக் கொண்டால் அதிகாலையில் சூரிய ஒளிக்கு முன் எழுந்து உடலைத் தூய்மைப்படுத்தி
1.வீட்டு வாசலை மெழுகிச் சுத்தப்படுத்துகின்றோம்.
2.ஆக… வீட்டையும் அதன் வாசலையும் மட்டும் தூய்மை செய்வதல்ல
3.நமது வீடு உடல்… நமது வாசல் என்பது ஆன்மா…!
4.இதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதை ஞானிகள் அன்று உணர்த்தினார்கள்… இது பக்தி…!

உடலைத் தூய்மைப்படுத்துவது போல நம் உணர்வுகளை எண்ணங்களை மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

வீட்டு வாசலைத் தூய்மைப்படுத்துவது போன்று
1.மற்றவர்கள் தீமையான செயல்களை நமக்குச் செய்தாலும்
2.அந்தத் தீமை தனக்குள் வராதபடி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
3.நம் ஆன்மாவையும் உடலையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
4.பக்தி என்பது இது தான்…!

ஏனென்றால் இதை எல்லாம் அடிக்கடி உங்களுக்கு நினைவுபடுத்துகிறோம். ஞானிகள் கொடுத்த உண்மை நிலைகள் இது தான்.

அதனால் தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி (ஆன்மாவைச் சுத்தம்) செய்யச் சொல்கிறோம்.

இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

இரத்தத்தில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவான்மாக்களுக்குச் செய்ய வேண்டிய ஆத்ம சுத்தி

 

ஒருவர் மிகவும் கடினமாக வேதனைப்படுகின்றார் என்று நாம் பார்க்க நேருகின்றது. அப்போது நன்மை செய்யும் பருவத்தில் அவருக்கு உபகாரம் செய்கின்றோம்.
1.இப்படிப் பதிவான உணர்வுகள் சித்திர புத்திரன். அதாவது…
2.அவருடைய எண்ணம் நமக்குள் பதிவாகின்றது… நம்முடைய எண்ணம் அவர்கள் உடலில் விளைகின்றது.

சந்தர்ப்பத்தால் அந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் அவர் உடலில் விளைந்த உணர்வுடன் நம் உடலுக்குள் அது வந்து விடுகின்றது.

உடலுக்குள் வந்தபின் அவர் உடலில் விளைந்தது நமக்குள் ஊன்றிப் பதிவாகி விடுகின்றது. ஒன்றிய குணங்கள் இருப்பதனால் நம்மை அறியாமலே இப்படி ஆகின்றது.

மனித வாழ்க்கையில்… இதைப் போன்று இன்னொரு ஆன்மா மனிதனுக்குள் வந்து தான் அடுத்து அது மனிதனாகப் பிறக்க வேண்டும்.

பரிவால் பண்பால் இரக்கத்தால் ஈகையால் கேட்டுணர்ந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்தாலும் அவர்களிடம் விளைந்த நஞ்சின் தன்மை…
1.நாம் கேட்டறிந்த அந்த உணர்வுகள் பதிவான பின்… தன் இனத்தால்
2.நம் உடலில் இருப்பது அந்த நினைவாற்றல் வெளி வரும் பொழுது
3.இந்த உணர்வின் துணை கொண்டு நம் உடலுக்குள் வந்தே தீருகின்றது.

எவ்வளவு பழகினாலும் சரி… இந்த உணர்வின் துணை கொண்டு இங்கே வந்து விடுகிறது. வந்து விட்டால் கோடாங்கியோ ஜோதிடமோ மற்ற மந்திரங்களாலோ அதை வெளியேற்ற முடியாது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீள வேண்டும் என்றால் உங்களுடைய எண்ணத்தை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பால் செலுத்தி
1.அதனின்று வெளிப்படும் அருள் சக்தி பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
3.எனக்குள் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

ஜீவான்மா என்பது இன்னொரு உயிரில் விளைய வைத்த அது நமக்குள் சுவாசம் செய்யும் நிலை. ஜீவ அணு என்பது எந்தக் குணத்தை நாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் ஜீவித்து அந்த அணுவின் மலமாக நம் சரீரம் ஆகிறது.

எந்த உடலில் இருந்து ஜீவான்மா வந்ததோ அந்த நோயின் தன்மை கொண்டு நமக்குள் பரப்பி… அந்த உணர்வின் நினைவாற்றல் ஆக நம் ஜீவணுக்களையும் அதுவாக மாற்றிவிடும்.

அதைப் பெருக்க விடாது தடுக்க வேண்டும்.
1.நம் உடலில் எத்தகைய ஆன்மாக்கள் புகுந்திருந்தாலும்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற நாங்கள் வேண்டும்…
2.எனக்குள் இருக்கும் ஜீவான்மாக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று “அடிக்கடி…” எண்ணுதல் வேண்டும்.

ஜீவான்மா என்கிற பொழுது உயிருடன் ஒன்றிய அந்த நிலைகள் ஒன்று சேர்ந்து இயங்கும் நிலை. மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.

எனக்குள் இருக்கும் அந்த ஜீவான்மாக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் அந்த ஆன்மாக்களுக்கு “அந்தச் சக்தியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்…”

ஒருவர் சாபமிடுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்… அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
1.எந்த மனித உடலில் இருந்து அந்தச் சாப அலைகள் தொடர்ந்ததோ அதை அந்த அணு உணவாக எடுக்கும்.
2.அந்த உடல் இல்லை என்றாலும் அலைகள் இங்கே இருக்கும்… அதை எடுக்கும்.

ஒரு மரம் பட்டுப் போய்விட்டாலும் அதில் விளைந்த சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக வைத்திருப்பது போல மனிதன் வெளிவிட்ட அந்த சாப அலைகள் இந்தக் காற்றில் பரவியே இருக்கும்.

அதில் விளைந்த வித்து… மீண்டும் அந்தச் சத்தை எடுத்து அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

நம் மூதாதையர்கள் ஒருவருக்கொருவர் பிடிக்காது சாபம் இட்டிருப்பார்கள். அதை நாம் கேட்டறிந்தால் வம்சத்தில் அது வரும். பின் தொடர்ந்து இங்கே வம்ச வழியில் வந்து கொண்டே இருக்கும். அது வளர வளர அதனுடைய தீமைகளைச் செய்து கொண்டிருக்கும்.

மரம் அழிந்தாலும் அதிலே விளைந்த வித்து மீண்டும் தன் தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து வளர்வது போல மனித உடலில் விளைந்த சாப அலைகள் வித்துக்களாகப் பெருகிக் குடும்பத்தில் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதையெல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
2.அடிக்கடி யாம் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது.

தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் “இணைக்கக் கூடாது…”

தீமையைக் கண்டுணர்ந்தாலும் அதை நமக்குள் “இணைக்கக் கூடாது…”

 

நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே பிறர் செய்யும் தீமைகளைக் கண்டுணரும்போது உணரத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். உணர்ந்தபின் அதை நீக்கிடல் வேண்டும்.

அதாவது
1.தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.
2.ஆனால் தெரிந்த உணர்வுகள் உடலிலே இணைத்திடக் கூடாது… அதை நீக்கிடல் வேண்டும்.
3.தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி… நன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கபூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.

இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். காரத்தைத் தனித்து உணவாக உட்கொண்டால் காரத்தின் ஏக உணர்வுகள் நமக்குள் “சுவையற்றதாக…” மாற்றுகின்றது.

ஆனால் அதே சமயம் அந்தக் காரத்தை மற்றவைகளுடன் இணைக்கப்படுபோது “சுவை மிக்கதாக…” மாற்றுகின்றது.

இதே போன்றுதான் மனிதனின் வாழ்க்கையில் பிறரின் கசப்பான உணர்வுகள் வெளிப்படுவதைக் கேட்டுணர்ந்தாலும்… பிறரின் வாழ்க்கையில் கடும் நோயுற்று அவர்கள்படும் வேதனையைப் பார்த்துச் சொல்லால் கேட்டுணர்ந்தால் உணர்ந்த அச்சக்தியை நம்மில் அது இயங்காது தடைப்படுத்த வேண்டும்.

உணரப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அடுத்த கணம் அதனுடைய தீய வினையாகச் செயல்படும் நிலையை மாற்றி அமைக்க வேண்டும்.

1.நாம் எவ்வாறு தீமையைக் கேட்டறிந்து அதிலிருந்து விடுபட உதவி செய்கின்றோமோ இதைப்போல
2.நாம் தீமையான உணர்வுகளைக் கேட்டுணர்ந்தபின் அடுத்தகணம்
3.நமக்கு முன் மறைந்திருக்கும் அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் கவர்ந்து
4.நமக்குள் தீமையை விளைவிக்காது சமப்படுத்தும் நிலையாக மாற்றிடல் வேண்டும்.

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

“தங்கத்தைப் போன்று…” எங்கள் மனம் மங்காத அந்த அருள் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

 

தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் ஆத்ம சுத்தியைக் கடைப்பிடிக்க வேண்டும். எப்பொழுது நாம் வீட்டைவிட்டு வெளியில் சென்றாலும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக… நம்முடைய நண்பர் ஒருவர் நம்மிடம் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது… நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது
1.அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று
2.அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து
3.நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து
4.நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கஷ்டமான உணர்வு கலந்து விடுகின்றது.

அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட அவருடைய துன்பமான உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து விடுகின்றது.

அப்படி இரத்தத்தில் கலந்து செல்லும்போது அதை நமது நுரையீரல்… சுவாசப்பை எடுத்து
1.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
2.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த உணர்ச்சிகள் நம் உறுப்புகளில் முதலில் ஏற்படும்.

அப்பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கிட்னி அதைச் சரியாகச் சுத்தப்படுத்தாது. அவ்வாறு சுத்தப்படுத்தாமல் அனுப்பும்போது
1.நம் உடல் முழுவதற்கும் அந்த இரத்தம் செல்லும் பொழுது
2.நமது உடலுக்குள் வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகள் செல்லும்போது அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.

உதாரணமாக… ஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டுவிடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து நீருக்குள் போட்டுவிடுவார்கள்.

1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டித் தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய (தங்கச்) சக்திகள் கரைந்து
3.அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் அதைக் கவர்ந்து
4.செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.

உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் “தங்கத்தின் முலாமாக ஆகி…”அது தெளிவாகின்றது.

ஆனால் அதே சமயம்,
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்திகள் கரைந்து தங்கத்திற்குள் முலாம் பூசிவிடும்
3.அடிக்கடி செம்பு எப்படிக் கருக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

அதே போல் தான் நல்ல எண்ணங்கள் கொண்டு ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும்போது
1.நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ
2.அந்த நல்ல குணத்தில் துன்ப உணர்வுகள் முலாமாகப் பூசிவிடும்.

ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும் அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி
1.“உனக்கு எப்படி இப்படிக் கஷ்டம் வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரின் நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

முதலில் நம் நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது. ஆனால் கஷ்டத்தைக் கேட்டவுடன் மங்கிவிடுகிறது.

அதாவது… தங்கம் எப்படிப் பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களில் அவருடைய துன்ப உணர்வுகள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே சோர்வடைந்து விடுகின்றோம்.

இது நாளாக நாளாக… நமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது. நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம்… அதை உடனே துடைக்க வேண்டுமல்லவா…?

அதைத் துடைப்பதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம். துன்பத்தைக் கேட்டறிந்தபின்,…
1.உடனே “ஈஸ்வரா” என்று நம் உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி
3.நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணித் தியானித்து அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

பின்… துன்பப்பட்டவர்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்றுத் துன்பத்திலிருந்து விடுபடும் அருள் சக்தி அவர்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நாம் தியானித்து “அந்த அருள் சக்திகளை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்…!”

இப்படி ஆத்ம சுத்தி செய்து நம் நல்ல குணங்களை மங்காது நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

ஈசனுக்கு மகிழ்ச்சி

ஈசனுக்கு மகிழ்ச்சி

 

நாம் இங்கே கற்றுக் கொண்ட நிலைகள் நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி… நம் எதிரியாக இருந்தாலும் சரி… நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.

1.மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும் நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன்
2.பிறர் காரமாகப் பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெற வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் அந்த ஆற்றல் பெறுவதற்கு சதா நீங்கள் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்து உங்கள் உயிரை ஈசனாக மதித்துச் செயல்படுத்திப் பாருங்கள்.

1.ஆலயங்களில் அந்த ஈசனுக்குப் “பாலாபிஷகம்” செய்வது போன்று
2.உங்கள் ஈசனுக்கு அந்த மெய் ஞானியின் அருள் சக்தியை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து “அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்…”

ஆகையினாலே ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்கள் உயிரான நிலைகளை மகிழச் செய்யுங்கள்.

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பயன்படுத்தி பிறருக்குச் சொன்னாலும்
1.நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து
2.அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம் ஒலிகள் பட்டு அதே உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நல்ல சொல்லைச் சொல்வதோ போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் ஒவ்வொரு நிமிடமும் இதைப் பாச அணைப்புடன் செயல்படுத்த வேண்டும்.

குழந்தை தவறு செய்தாலும் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம். நம் உடலிலே வேதனையாகும் பொழுது ஒரு அசுத்தம் பட்டு விட்டால் அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி அதைத் துடைக்க முற்படுகின்றோம்.

அதைப் போன்று
1.பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும்
2.நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவம் கொண்டு செயல்பட வேண்டும்.

பிறரிடம் அசுத்த உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும் நாம் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகுவோமேயானால் நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்.

1.இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம்.
2.அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும்.

எமது அருளாசிகள்.