வாழ்க்கையில் புயல் போன்று வரும் தீமைகளிலிருந்து மீளும் வழி

வாழ்க்கையில் புயல் போன்று வரும் தீமைகளிலிருந்து மீளும் வழி

 

நாம் ஒரு கட்டிடத்தைக் கட்டுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். கட்டும் போது அங்கங்கே முட்டுகள் (பொய்க்கால்) கொடுத்துத்தான் கட்டுகின்றோம்.

கட்டிடம் வலுவாக நின்ற பின் சிமெண்ட் நன்றாகக் காய்ந்துவிட்டதா என்ற பதத்தைப் பார்த்த பின் அந்த முட்டுகளை எடுக்கின்றோம். அப்புறம் முட்டு இல்லாமல் கட்டிடம் தன்னாலே நிற்கின்றது.

ஆகவே முட்டு இல்லாமல் எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது.

ஆனால் கட்டிடம் சரியாகக் காய்வதற்கு முன்னனாடியே முட்டைத் தட்டி விட்டோம் என்றால் என்ன செய்யும்? கீழே விழுந்துவிடும்.

சிமெண்ட் பாலை ஊற்றிக் கட்டிடத்தைக் கட்டிவிட்டு அடுத்தாற்போல் உடனே அந்த முட்டுகளைத் தட்டிவிட்டோம் என்றால் நம்மைத் தான் போட்டு அமுக்கும்.

இந்த மாதிரித் தான் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நமக்கு அணையாக‌ இருக்கக்கூடிய நல்ல உணர்வுகளைக் கழற்றி விட்டு விடக்கூடாது.

இப்போது மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பெறச் செய்கிறோம் என்று சொன்னால்
1.யாம் வலுவாகக் கொடுக்கும் அந்த முட்டுகளை (உபதேச உணர்வுகளை)
2.அந்த ஞானிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிடக் கூடாது.

நான் எல்லாச் சக்திகளையும் பெற்றுவிட்டேன் என்கிற வகையில் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைக் கழற்றி விட்டு விட்டு எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்று சொன்னால் என்ன ஆகும்?

இப்படிக் கொஞ்ச பேர் இருக்கின்றனர்.

தீமைகளிலிருந்தோ அல்லது துன்பங்களிலிருந்தோ விடுபட மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்
1.அதிலிருந்து (உடனடியாக) “தப்ப முடியவில்லையே…” என்ற வேகத்தில்
2.எடுத்துக் கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தட்டிவிட்டு விடுகின்றார்கள்.

ஏனென்றால் இதையெல்லாம் அனுபவபூர்வமாகத் தெரிந்து நான் சொல்கின்றேன். குருநாதர் அனுபவத்தின் மூலமாகத் தான் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெறச் செய்தார்,

மனிதருடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் பாச அலைகள் துன்ப அலைகள் மற்ற உணர்வுகள் எப்படித் தாக்குகின்றது…? இதிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று குருநாதர் உணர்த்தினார்.

உதாரணமாகப் பெண் குழந்தைகளுக்குச் சரியான நேரத்தில் திருமணம் நடக்கவில்லை.. சிறிது கால தாமதம் ஆகிறது என்றால் எப்படி எண்ண வேண்டும்…?

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து
1.குழந்தையின் எதிர் காலம் நன்றாக இருக்க வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்குப் போனாலும் நன்றாக வாழ வேண்டும்
3.நல்ல மாப்பிள்ளையாக வர வேண்டும். நல்ல வரனாக வர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

“இந்த மாதிரிச் செய்யுங்கள்…!” என்று சொன்னால் எங்கள் பிள்ளைக்கு இப்படி நினைக்காமல் வேறு எப்படிங்கெ நினைப்போம்…! என்று எனக்கே திருப்பிச் சொல்கிறார்கள்.

நாங்கள் இப்படித்தான் நினைக்கின்றோம்…! ஆனால் எங்கெங்க மாப்பிள்ளை வருகின்றது…? என்று திருப்பி இதே ராகத்திலேயே சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். பாலில் சிறிதளவு நஞ்சை ஊற்றினால் எப்படி இருக்கும்..? அந்த விஷமான உணர்வு தான் அங்கே இயக்கும்.

இதைப் போல தான் மனிதனுடைய வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் மீளாத் துயரத்தில் சுழன்று கொண்டு இருக்கின்றோம்.

எவ்வளவோ உயர்ந்த சரக்குகள் இருந்தாலும் அதில் நஞ்சினை கலந்தால் அந்த நஞ்சின் செயலாக்கம் எவ்வாறு இருக்குமோ அதைப்போல
1.உயர்ந்த குணங்கள் கொண்டோர் அனைவரும்
2.எத்தனையோ புயல்களிலேயும் அலைகளிலேயும் வாழ்க்கையில் இன்னல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஒரு புயல் அடித்தால் என்ன நடக்கின்றது? எல்லாவற்றையும் அழித்துச் செல்லுகின்றது. புயல் ஓய்ந்த பின் பார்த்தோம் என்றால் இயல்பாக இருக்கும் அனைத்தும் காணாமல் போய்விடுகிறது.

இதைப் போல மனிதனின் உடலில் இப்படி பெரும் புயல் வீச ஆரம்பித்தால் “என்ன வாழ்க்கை…?” என்ற நிலையில் அனைத்தும் இருள் சூழச் செய்து தற்கொலைக்கே அழைத்துச் செல்லுகின்றது.

நாம் ஆசையுடன் தான் வாழ்கின்றோம். ஆனால் வாழ்க்கையில் சந்தர்ப்பபேதத்தால் வரும் இன்னல்களுக்குள் புயலில் சிக்கியது போன்று ஆகிவிட்டால் என்னென்ன ஆசைகள் இருந்ததோ அனைத்தும் நொறுங்கி விடுகின்றது. ஆகவே
1.புயலைப் போன்று வரும் இன்னல்களை
2.தீமையாக இயக்கும் கடுமையான அலைகளை
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிளந்து
4.நம் பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துவோம்
5.அருள் ஞானிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்தை நம் எல்லையாக வகுப்போம்.

தீமையான அணுக்கள் உருவான பின் அதை நீக்குவதற்குப் பதில் அதை உருவாகாதபடியே நாம் செய்ய முடியும்

தீமையான அணுக்கள் உருவான பின் அதை நீக்குவதற்குப் பதில் அதை உருவாகாதபடியே நாம் செய்ய முடியும்

 

தீமைகளைப் பிளந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அந்த மகரிஷிகளின் உணர்வை உங்களில் பதிவு செய்யும் போது நீங்கள் எப்போது எண்ணினாலும் அதைப் பெற முடியும்.

உங்களுக்குள் தீமையை விளைவிக்கும் உணர்வுகளைப் பிளந்து காற்றிலிருக்கும் அந்தத் தீமையைப் பிளக்கவும்… நல்ல உணர்வை நுகரவும்… அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் தீமை என்ற நிலைகளைப் பற்றற்றதாக மாற்றவும் முடியும்.

பற்றற்றது என்றால் வெறுப்பு வேதனை கோபம் பாசம் போன்ற உணர்வுகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் அதாவது…
1.பாசத்தாலும் கூட வேதனையைத் தான் நாம் அதிகமாக நுகர்கின்றோம்.
2.பாசம் எவர் மேல் அதிகமாகிறதோ வேதனை என்ற அந்த நஞ்சு கூடவே வந்து நல்ல குணங்களைச் சாப்பிடும்.

எப்படி…?

நம் பையன் மீது பாசம் அதிகமாக வைக்கின்றோம். மற்ற நண்பர்களுடன் சேர்ந்து அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் உடனே வேதனை என்ற விஷம் தனக்குள் கலந்து விடுகிறது.

இப்படி இருக்கின்றானே…! என்று அவனை எண்ணியே நமக்குள் வேதனையை எடுக்கும் போது நம் உடலே கிறங்கிப் போகிறது. விஷத்தைச் சாப்பிட்டால் எப்படியோ அந்த உணர்வு நோயாக மாறுகிறது. நோயின் தன்மை பேயாகவே மாறுகிறது.

இப்படிச் செய்கிறானே… இப்படிச் செய்கிறானே… என்ற இந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் பேயாகப் போய் அடுத்த உடலுக்குள் சென்று மீண்டும் நோயாகவே அங்கேயும் உருவாக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு எந்த நிமிடமானாலும் நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் ஒன்றினால் போதும்.
1.அப்போது அந்தச் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.இதை விரயமில்லாது எந்த நிமிடத்திலும் எடுக்கலாம்.
3.அதற்குத்தான் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம் (ஞானகுரு)

இங்கே கொடுக்கக் கூடிய சக்தியை இந்த வாழ்க்கையிலேயே நீங்கள் பெற்று உங்களைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

1.உங்கள் பார்வை… உங்கள் சொல்… உங்கள் மூச்சு… அனைத்தும் புனிதம் பெற்று
2அந்த மூச்சலைகள் காற்றிலே பரவினாலும்
3.நீங்கள் யாரைப் பார்த்து அவர்கள் நன்மை பெற வேண்டும் என்று
4.இந்த எண்ணத்தை எண்ணினால் அதை அவர்களும் பெற முடியும்.

ஒரு செடிக்குப் பக்கம் களை இல்லாது இருந்தால் “தன் இனத்தின் சக்தி பெருகி” அந்தக் குவிந்த சக்தி கொண்டு அந்தச் செடி செழிப்பாக ஓங்கி வளரும். இது எல்லாத் தாவர இனங்களுக்கும் பொருந்தும்.

ஆனால் களைகள் முளைத்து விட்டால் அது வளர்வதில்லை.

இதைப் போன்றுதான் நமது வாழ்க்கையில் அந்தத் தீமை என்ற களைகள் முளைக்காது இருக்க வேண்டுமென்றால் நாம் யாரைப் பார்த்தாலும்…
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் பொருள் காணும் நிலைகள் பெறவேண்டும்
3.அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.அவர்கள் எதிர்காலம் சிறந்து இருக்க வேண்டும் என்று எண்ணி
6.அவர்களுக்கு இந்த உணர்வின் சக்தியைப் பாய்ச்ச வேண்டும்.

இதைத் தான் கீதையிலே நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. அப்போது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் எடுக்கும் அந்த உணர்வின் சக்தி நமக்குள்ளும் வருகின்றது.

ஆனால்… எல்லாம் நல்லதாகத்தான் நினைக்கின்றேன்… என்னை ஆண்டவன் சோதித்துக் கொண்டே இருக்கின்றான்…! என்ற இந்த பழைய பழக்கம் நம்மிடம் வந்து விடுகின்றது.

அதற்கு முக்கியத்துவம் இல்லாதபடி யாம் சொன்ன நிலைகளைச் செயல்படுத்த வேண்டும்.

சகஜ மார்க்கம்

சகஜ மார்க்கம்

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்பது உங்கள் உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் குருவாக இருப்பது உங்கள் உயிரே.

நாம் எண்ணியது அனைத்தையும் நமக்குள் ஊழ்வினையாகப் பதியச் செய்து… மீண்டும் நினைக்கும் போது “அது குருவாக இருந்து” நமக்குள் அந்த ஒவ்வொரு குணமும் செயல்படுகின்றது.

உதாரணமாக குழந்தை மேல் பாசமாக இருக்கின்றேன். அது உயிரிலே பட்ட பின் ஓ… என்று பிரணவமாகிறது. அடுத்து அது ம்… என்று உடலாகிறது.

மீண்டும் அதே குணத்தை நான் எண்ணும் போது அந்தப் பாசத்தால் அவனுக்குச் செய்ய வேண்டிய “குரு நிலையாக” அவனுக்கு வழி காட்டுகிறது.
1.இப்படித்தான் நாம் எண்ணிய குணங்கள் எதுவோ அது குருவாக நமக்குள் இயங்குகிறது.
2.ஆனால் நாம் எதைக் குருவாக ஆக்க வேண்டும்…?

மெய் ஞானிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி அந்த அரும் பெரும் சக்தியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

அந்த உணர்வின் சக்தியைத் தான் இங்கே உபதேசிக்கின்றோம். நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

1.பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவு கூறும் போது
2.அந்த ஞானிகள் உணர்வு குருவாக நின்று உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளை நீக்கி
3.மெய்ப் பொருள் காணும் நிலையாகப் பெறச் செய்யும்.

ஆகவே…
1.உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் இடையூறு வருகின்றதோ
2.அந்த நேரத்தை எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் ஆற்றலாக
3.அந்தத் தகுதியாக நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அத்தகைய தகுதியைப் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத் தான் அதைக் குருவாக உங்களை ஏங்கச் செய்வது. “சகஜ மார்க்கம்” என்பது இது தான்.

1.ஞானிகளின் உணர்வைக் கண் புலனறிவால் ஏகி அதனின் உணர்வைப் பருகி
2.அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றவர்கள் உணர்வை நமக்குள் எடுக்கப்படும் போது
3.அவர்கள் உணர்வைக் கவர்ந்து கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு உயர்ந்த வித்தை நிலத்தில் ஊன்றி அதற்கு நீரை ஊற்றினால் பூமியின் ஈர்ப்புத் துணை கொண்டு காற்றிலிருக்கும் தன் இனச் சக்தியை எடுத்து நல்ல வித்தினைக் கொடுக்கின்றது.

அதைப் போன்று தான் அருள் ஞானிகளின் வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். அது ஜீவன் பெற உங்கள் நினைவை மீண்டும் கூட்டினால் அந்த உணர்வின் சத்தை காற்றிலிருந்து கவர முடியும்.

அவ்வாறு கவர்ந்து அதனின் உணர்வைத் தனக்குள் வளர்த்து வரும் நஞ்சு கொண்ட உணர்வின் அணுவைப் பிளந்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மெய் ஒளி காணும் மெய் சரீரத்தைக் காண முடியும்.

அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் தான் இதை நான் (ஞானகுரு) உபதேசிக்கின்றேன்.
1.நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்கள் மூச்சு இருள் சூழ்ந்த நிலைகளை நீக்கும்.

உங்கள் உணர்வுகள் அனைத்தும் நலமும் வளமும் பெற்று உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் அனைவரையும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் உணர்வுகளாக வளர்ச்சி பெறும்.

அதற்காக வேண்டித் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்… தியானிக்கின்றேன். அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவாகிறது.

அதை மீண்டும் நான் நினைக்கும் போது
1.உங்களுக்கு என்னென்ன உதவி செய்ய வேண்டும்…?
2.நீங்கள் எப்படி மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற வேண்டும்…?
3.உங்களை அறியாது சேர்ந்த இருளை எப்படி நீக்க வேண்டும்…? என்ற
4.அந்த குரு வழிப்படி உங்களுக்கு உபதேசிக்க வேண்டி வருகிறது.

இது எனக்குள் குருவாக வந்து என்னை இப்படி இயக்குகிறது. குருநாதர் அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றேன்.

பத்திரிக்கை… டி.வி… மற்ற சாதனங்கள் மூலம் வரும் சில செய்திகள் நம்மை எப்படிப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது…?

பத்திரிக்கை… டி.வி… மற்ற சாதனங்கள் மூலம் வரும் சில செய்திகள் நம்மை எப்படிப் பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது…?

 

இன்று பத்திரிக்கைகளை எடுத்துப் படிக்கத் தொடங்கினாலே அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கும் செய்திகளையே பக்கத்திற்குப் பக்கம் பெரிய அளவில் படத்துடன் போட்டிருக்கின்றார்கள்.
1.அச்ச உணர்வுகளைத் தோற்றுவிக்கும் அத்தகைய செய்திகளைப் படிக்கும் பொழுது
2.அவைகள் எளிதில் நம்முள் பதிவாகி விடுகின்றது.

அதே போல் பொழுது போக்கிற்காக டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பழக்கம் பெண்கள் ஆண்கள் இருவருக்குமே உள்ளது.

அதிலே காட்டப்படும் சம்பவங்களில் விவரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரப் படைப்பின் வேதனை சலிப்பு சங்கடம் கோபம் குரோதம், அவசரம் ஆத்திரம் பயம் ஆகிய உணர்வுகளை அதே உணர்வுடன் நாம் ஒன்றிப் பார்க்க நேருகின்றது.
1.அவைகளை ஒன்றிப் பார்ப்பதால்
2.அந்த உணர்வுகள் அனைத்துமே நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.

சிறுகச் சிறுகச் சேரும் இந்த உணர்வுகளில் நாம் எந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதனின் செயலின் நிலைகளில் நம்மையும் செயல்பட வைக்கும்.

சில சானல்களில் காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் (நேரலை) விதம் விதமாக புதுப் புது நிலைகளில் ஒளி பரப்பிக் கொண்டுள்ளார்கள். இதைக் குழந்தைகளும் பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறது. அதிலே தீமையின் உணர்வுகளும் பதிய நேர்கின்றது.

குழந்தைகளுக்கு வேறு எண்ணம் இல்லை. ஆர்வத்துடன் உற்று நோக்கும் பொழுது அந்தப் பிஞ்சு உள்ளங்களில் பதிவாகிவிடுகின்றது.

ஆனால் அவர்கள் வளர்ந்த பின்பு பதிந்த அத்தகைய உணர்வுகள் அனைத்தும் செயலாக்கத்திற்கு வருகின்றது. ஆகவே, இதனைத் தவிர்த்துக் கொண்டால் மிகவும் நலம் பயக்கும் செயலாக இருக்கும்.

இவ்வாறு பல வகையான தீமையின் உணர்வுகளை
1.நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ அன்றாடம் நமக்குள் ஆழமாகப் பதித்துக் கொள்கின்றோம்
2.பதிந்த உணர்வுகள் ஜீவ அணுக்களாக நமக்குள் நம்மிடத்தில் விளைந்து விடுகின்றன.

இதனால் நாம் வேறு வேளையில் ஈடுபட்டிருக்கும் சமயம் நமக்குப் பின்னால் ஏதாவது ஒரு பொருள் விழுந்த சப்தம் கேட்டால் உடனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்போம்.

என்னமோ… ஏதோ…! என்ற அச்ச உணர்வு நம்மை ஆட்கொள்ளும். பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருப்போம். நாம் செல்லும் பஸ்ஸின் ஓட்டுனர் கவனமாக வண்டியைச் செலுத்திக் கொண்டிருப்பார்.

திடீரென்று இடையில் ஒருவன் பஸ் வருவதை அறியாமல் புகுந்து விடுவான். இதனால் ஓட்டுனர் “சடார்..,” என்று பிரேக்கைப் பிடிப்பார்.

ஆனாலும், நம் மனதிலோ “என்ன ஆயிற்றோ..?” என்ற பயத்துடிப்பு உண்டாகின்றது.

நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்தில்…
1.விபத்துக்கு உட்பட்ட நிலைகளிலும் நோயால் இறந்தவர்களின் நிலைகளிலும்
2.எத்தனையோ வேதனையுடன் வெளிப்பட்ட அணுக்கள் பல வகைகள் உண்டு.

ஆகையினால் விபத்தைக் காணும் சம்வங்களில் நம்மையறியாமல் “என்ன ஆனது..?” என்று ஆர்வ மிகுதியால் கூர்ந்து கவனிப்போம். அப்பொழுது அந்த உணர்வின் அணுக்கள் நம்முள் புகுந்துவிடும்.

விபத்து நேரவிருந்த ஆள் தப்பிவிடுவான். ஆனால் அது சமயம் நாம் சுவாசித்த அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் பிரமையை உண்டாக்கிவிடும்.

அச்ச உணர்வுகளைப் படித்ததன் விளைவு அந்த அச்ச உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிந்து விடுகின்றது. ஓட்டுனர் “கிரீச்..,” என்று பிரேக் போட்டவுடன் கண்களை அழுத்தமாக மூடிக் கொள்வோம்.

அங்கு என்ன நடந்தது…! என்று கூடப் பார்த்திருக்க மாட்டோம். ஏனென்றால் அந்த உணர்வின் வேகம் அறியும் தன்மையைக் கொடுப்பதில்லை.

இந்த உணர்வின் அலைகள் நமக்குள் இணைந்த பின் “அடிப்பட்டானே…!” என்று எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் நம் சுவாசத்தில் கலந்து நம்மைப் பித்தனைப் போன்று ஆக்கிவிடுகின்றது.

அதே நினைவில் இருந்தால் “ஐயோ… யாரோ வருகிறார்… கதவைத் தட்டுகிறார்… ஐயோ… மோதிவிட்டது, ஐயோ… கழுத்தை நெரிக்கிறார்” என்று உளற ஆரம்பித்துவிடுவோம்.

இதைப் போன்ற அச்ச உணர்வுகள் நம்மிடத்தில் அதிகமாக விளைய விளைய அடுத்து நாம் ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாலும் “கிரீச்…” என்று சப்தம் கேட்டால் போதும் ஒதுங்குவதற்குப் பதில் வண்டியிலேயே விழுந்துவிடுவோம்.

ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் நம்மையறியாமல் ஆபத்துக்கே அழைத்துச் செல்லும்.

1.எனவே பத்திரிக்கையை எடுத்துப் படித்தாலும் டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும்
2.அதில் உள்ள செய்திகள் நமக்குள் பதிந்து ஆபத்தை உண்டாக்காமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

பத்திரிக்கைகளைப் படித்து முடித்தவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தவுடன் உடனே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு பத்து நிமிடம் கண்களை மூடி உடல் முழுவதும் படரவிடுங்கள்.

1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால்…
2.நம் நாட்டிலும் இந்த உலகிலும் இனி நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும்
3.எல்லோருக்கும் நன்மை தருபவைகளாக இருக்க வேண்டும் ஈஸ்வரா.. என்று
4.அடிக்கடி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இதன் மூலம் நஞ்சான உணர்வுகள் நமக்குள் சேராமல் தடுத்து நம் ஆன்மாவைக் காத்துக் கொள்ள முடியும். பிறரின் நோய்களும் நம்மை அண்டாது.

நல்ல குணங்களைப் பாதுகாக்கும் வலிமையான சக்தியை நாம் நேசிக்கின்றோமா…?

ல்ல குணங்களைப் பாதுகாக்கும் வலிமையான சக்தியை நாம் நேசிக்கின்றோமா…?

 

நாம் வேலை அதிகமாகச் செய்தால் குளிக்காமல் படுக்கப் போவதில்லை. துணியில் அழுக்குப்பட்டால் துவைக்காமல் அதைப் போடப் போவதில்லை. கையில் அழுக்குப்பட்டால் கழுவாமல் நாம் உணவு உட்கொள்ளப் போவதில்லை.

இதைப் போன்று தான் ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர்படும் தீமைகளைக் கேட்டால் நம் ஆன்மாவில் படும் அத்தகைய அழுக்கினைத் துடைக்க வேண்டும்.

1.ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி
2.“மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்…” என்று
3.நம் கண்ணின் நினைவினை விண்ணிலே செலுத்தி அதைக் கவர்ந்து
4.உள்முகமாக உயிர் வழியாகக் கொண்டு வந்து ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
5.இப்படிச் செய்தால் இது நல்லதைச் சிந்திக்க இடம் கொடுக்கும்.

ஆனால் சிந்தனையற்ற செயலை ஒருவன் செய்கிறான்… நாம் பார்க்க்கின்றோம். அதனால் வரும் எதிர்ப்பு உணர்வையோ வேதனைப்படும் செயலையோ நாம் நுகர்ந்து விட்டால் அடுத்து ஒரு வேலையைச் செய்தால் என்ன ஆகும்…?

ஒரு கணக்கைப் பார்த்தோம் என்றால் கிடக்குது போ…! என்று இந்த உணர்வு தான் வரும்… சரியாக வராது. அந்த வேலையை வெறுக்கும் நிலை தான் வரும்.

அதே சமயத்தில் வெறுப்பால் அந்த வேலையைச் செய்யவில்லை என்றால் மேலதிகாரி வந்தவுடனே “ஏம்பா…? இந்த வேலையைச் செய்யவில்லை…!” என்று சொன்னவுடனே வேதனையான உணர்வு நமக்குள் வரும்.

காரணம்… சந்தர்ப்பம் இவ்வாறு இயக்குகிறது.

இதைப் போன்ற நிலைகளை
1.நாம் உடனுக்குடன் தூய்மைப்படுத்தினால் தான் சிந்தனையும் நிலைக்கும்
2.நம் செயல்களும் சீராக இருக்கும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் எந்தத் தீமைகளைக் கண்டுணர்ந்தாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று இங்கே புருவ மத்தியில் வேண்ட வேண்டும்.
1.மனிதால் மட்டும் தான் இப்படி எண்ண முடியும்.
2.மற்ற உயிரினங்கள் எதிரிகளைப் பார்த்தால் அதனின்று தப்பிக் கொள்ளத் தான் எண்ணும்
3.விண்ணை நோக்கி எண்ணும் நிலை இல்லை.

உயிரினங்களில் தன்னைப் பாதுகாக்கும் உணர்ச்சிகள் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி… அதிலே விளைந்த உணர்வு தான் “ஒட்டு மொத்தமாக” நம்மை மனிதனாக உருவாக்கியுள்ளது நம் உயிர்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அகற்றுதல் வேண்டும்.

இதைத் தான் கார்த்திகேயா…! என்று சாஸ்திரப்படி காட்டுகிறார்கள். சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்கு வள்ளி திருமணத்தையும் காட்டுகின்றனர்

ஏனென்றால் வள்ளியை முருகன் காதலிக்கின்றான்.
1.இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு
2.வலிமைமிக்க சக்தியான அந்தப் “பாதுகாக்கும் சக்தியை” தனக்குள் நேசிக்க வேண்டும்.

முருகு… மாற்றி அமைக்கும் உடல் பெற்றவர்கள் நாம்.
1.நம் ஆறாவது அறிவைத் தான் முருகன் என்றும்
2..தன்னைப் பாதுகாக்கும் அந்தச் சக்தியை நீ நேசிக்க வேண்டும் என்றும் காவியப் படைப்பு வருகின்றது.

நம்மைப் பாதுகாக்கும் உணர்வை நாம் நேசித்தோம் என்றால் மனிதனாக வளர்ந்த நிலையில் அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோம் என்று பொருள்.

நம்மை ஏசுவோரையோ கேவலப்படுத்துவோரையோ நாம் எண்ணினோம் என்றால் அந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைந்து நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களை அது தின்றுவிடும்.

வேதனைப்படும்படி ஒருவர் சொன்னார் என்றால் அந்த உணர்வின் சக்தி நமக்குள் வந்து நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை அது தின்றுவிடும். பார்க்கலாம் டி.பி. வந்தால் எலும்புகளை எல்லாம் அது தின்கிறது.

அதை எல்லாம் மாற்றுவதற்குத் தான் நம்மைப் பாதுகாக்கும் உணர்வினை எடுக்கும்படி காவியப் படைப்புகள் உணர்த்துகின்றது.

1.மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் உணர்வுகளை நுகர்ந்தால் அது நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகிறது.
2.அந்த அருள் உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் உயிர் அதைத் தெய்வ ஆணையாக
3.நமக்குள் அந்தக் காத்திடும் தெய்வமாக… தெய்வச் செயலாக நம் உடலை இயக்கும்.

தீமைகளிலிருந்து விடுபடுகிறோம்.. அருள் சக்திகளையும் பெறுகின்றோம்… அது பெருகப் பெருக பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலையான ஒளிச் சரீரமும் பெறுகின்றோம்.

தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்

தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்

 

ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த உலகத்துடன் ஒத்துத் தான் வாழுகிறோம். இதிலே பிரிந்து வாழ முடியாது.

1.நன்மை தீமைகளைக் கேட்டுணர்ந்து தான் செயல்படுகின்றோம்.
2.தீமையை நுகர்ந்து தீமை என்று அறிந்து கொள்கின்றோம்… ஆனால் அந்தத் தீமை நமக்குள் விளையாது தடுக்க வேண்டும்.

உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்து அந்தத் தீமையை நமக்குள் குறைத்துப் பழக வேண்டும்.

மிளகாயைத் தனியாகக் கடித்தால் காரமாகத் தான் இருக்கின்றது. விஷத்தைத் தனியாக உட்கொண்டால் மயக்கம் வருகிறது.

1.ஆனால் அந்த விஷமான சக்தியை ஒரு மருந்துடன் சேர்த்து
2.அதனின் கலவையைச் சிறுக்கப் போகும் போது அந்த உணர்வுகள் மருந்தை நன்மையாக்குகின்றது.
3.உடலுக்குள் வேகமாக மருந்தை எடுத்துச் சென்று நோயை நீக்குகிறது.

இதைப் போன்று தான் தீமைகளை நாம் பார்த்தாலும் அல்லது கேட்டுணர்ந்தாலும் நுகர்ந்த பின் அது நம்மை இயக்குகின்றது. அந்த நேரத்தில் “அதை இடைமறித்து” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைக்க வேண்டும். நமக்குள் அது அணுவாக மாறும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைக் கலந்த அணுவாக மாறும் போது நமக்குள் அது தீமையை அடக்கும் சக்தியாக உருப் பெறுகின்றது… அப்படி வலுப் பெறும் போது தீமைகளைப் பிளக்கின்றது.

பார்த்துணர்ந்த உணர்வுகள் (எதுவாக இருந்தாலும்) கண்ணின் கரு விழி நமக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ ஆன்மாவாக மாற்றி அந்த உண்மையைச் சொல்லும்.

ஏனென்றால்…
1.நம் கண்கள் அது வழி காட்டும்.
2.நம் உயிரோ அதை இயக்கிக் காட்டும்.
3.உடலோ தனக்குள் இணைத்துக் காட்டும்.
4.மீண்டும் அதனின் நினைவு வரப்படும் போது அந்த அலைகளே நமக்கு உணர்த்தும்.

இப்படி மற்ற தீமைகளை நாம் எப்படிப் பதிவு செய்கின்றோமோ அதே போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நாம் எடுத்துப் பதிவாக்க வேண்டும். உடலில் உள்ள எல்லாவற்றிலும் இதைக் கலக்க வேண்டும்.

இதற்கு முன்னாடி இந்த மாதிரி நமக்குத் தூய்மைப்படுத்தத் தெரியாது. ஆகையினால் எத்தனையோ உணர்வுகள் பதிவாகி இருக்கின்றது.

ஒரு எதிரி நமக்கு எப்பொழுதோ இடைஞ்சல் செய்திருப்பான். திடீரென்று அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். பார்த்தவுடன் என்ன நடக்கிறது…?

1.அவனைப் பற்றிய பதிவு ஏற்கனவே நமக்குள் இருக்கிறது.
2.அந்த நினைவு வந்த பின் “அயோக்கியப் பயல்… போகின்றான் பார்…! என்ற எண்ணம் டக்… என்று அங்கே வரும்.

அந்தச் சமயத்தில் அவன் மீது வரும் வெறுப்போ கோபமோ பயமோ அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் விளையும். உடலில் ஏற்கனவே இதன் வழியில் ஏற்பட்ட அணுக்கள் தனக்கு வேண்டிய இரையை எடுக்கும்.

அதே போல் அடுத்தவர்கள் மற்றவர்களுடைய குறைகளைப் பற்றிப் பேசும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் அவர்கள் செய்த தவறின் உணர்வை நினைக்கும் போது அந்தத் தவறின் உணர்வை இந்த அணு சாப்பிட்டு வளர ஆரம்பிக்கும்.

1.இப்படி எந்தெந்தச் சந்தர்ப்பத்தில் இது வளரத் தொடங்கினாலும்
2.நாம் அவ்வப்போது ஈஸ்வரா… என்று உயிரிடமே வேண்ட வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் எதைப் பார்த்தோமோ அது ஆன்மாவாகி சுவாசித்து அந்த உணர்வுகள் உடலுக்குள் சென்று அணுவாக அது வளர்க்கப்பட்ட பின் அதற்கு இது உணவாகக் கொடுப்பது உயிரின் வேலை தான். நாம் எண்ணியதை ஜீவ அணுவாக மாற்றுவதும் உயிரின் வேலை தான்.

தாவர இனங்களுக்கு சூரியன் எப்படி அதனதன் சத்துகளைக் கொடுத்துச் செழித்து வளரச் செய்கிறதோ அதே மாதிரித் தான்
1.நம் உயிரும் சூரியனாக இருந்து உடலில் அணுக்களை உருவாக்குவதும்
2.அதற்கு வேண்டிய இரைகளைக் கொடுப்பதும்
3.அந்த நினைவைக் கவர்ந்து தனக்குள் அதைச் செயலாக்குவதும் போன்ற வேலையைச் செய்கிறது.

ஆனால் பல கோடிச் சரீரங்களில் தீமைகளை அகற்றிய உணர்வுகள் விளைந்து மனித உடலுக்குள் வரும் போது ஆறாவது அறிவாக வருகிறது… கார்த்திகேயா.

ஒவ்வொரு சரீரத்திலும் தனக்குள் அறிந்து உணர்ந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்கள் மாற்றி இன்று மனித உடலாக உருவாக்கியது இந்த உயிர்.

நம் ஆறாவது அறிவால் எதனையும் அறிந்திடும் நிலைகள் வருகின்றது. ஆகவே அதை வைத்து இருளைப் போக்கிய அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நமக்குள் இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை இணைக்க இணைக்கத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும். அதற்காக வேண்டித் தான் திரும்பத் திரும்பச் சொல்லி உங்களுக்குள் அதை வளர்க்கச் செய்கின்றேன் (ஞானகுரு).

1.உங்கள் எண்ணங்களும் உணர்வுகளும் மாறும் போது அதைத் திருப்பி
2.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைக் கவரும் சக்தியாக மாற்ற வேண்டும்.

நம் ஆன்மாவில் வரும் தீமைகளை உடனே கட் (CUT) பண்ணப் பழக வேண்டும் – ஞானகுரு

நம் ஆன்மாவில் வரும் தீமைகளை உடனே கட் (CUT) பண்ணப் பழக வேண்டும் – ஞானகுரு

 

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா… என்று உயிரிடம் வேண்டி இதை ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

இதை நினைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகின்றது…!
1.எத்தகைய எதிர்மறையான உணர்வு வந்தாலும்
2.நம் ஆன்மாவில் வரும் அந்தத் தீமைகளைக் “கட்” பண்ணப் (CUT – நிறுத்தி) பழக வேண்டும்.

இதைத்தான் நரசிம்மன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது வைத்து இரண்யனைப் பிளந்தான் என்று சாஸ்திரம் சொல்கிறது.
நரசிம்மன் என்றால் உயிர்…
வாசல்படி என்பது நம் மூக்கு..
மடி என்பது ஆன்மா…
இரண்யன் என்பது விஷமான (தீமையான) உணர்வு…!

நமது ஆறாவது அறிவு கார்த்திகேயனாக இருக்கின்றது. அந்த அறிவின் தன்மை கொண்டு ஒளியின் தன்மை பெற்ற மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் கொண்டு வரப்படும் பொழுது அறியாது உள் புகும் இருளை மாயக்கின்றது.

இந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்று தான் எத்தனையோ காவியங்களையும் சாஸ்திரங்களையும் ஞானிகள் நமக்குக் கொடுத்துள்ளார்கள்.

ஆறாவது அறிவு கொண்டு அந்த அருள் ஒளியை எடுத்து உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வுகள் உள்ளே (நமக்குள்) வலுப்பெற்ற பின் தீமைகளை அகற்றுகின்றது.

முன் வழி கூடி நீக்க முடியுமா…? என்றால் முடியாது. அதாவது…
1.தீமைகளை அப்படியே நேருக்கு நேர் நாம் தள்ள முடியாது.
2.உயிர் வழியாக மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடலுக்குள் பெருக்கி வலுவாக்கி
3.அதிலே கொதித்து வரும் அந்த அலைகள் மூலம் ஆன்மாவிலிருக்கும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

எப்படித்தான் இருந்தாலும் ஒரு சங்கடமான எண்ணத்துடன் தியானத்தில் நீங்கள் உட்கார்ந்து பாருங்கள்.
1.உட்கார்ந்தால் எழுந்து போகச் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்…
2.உட்கார முடியாது… ஆட்டம் கட்டும்… எப்படியோ வரும்…
3.யார் யார் என்னென்ன சொன்னார்களோ அந்த நினைவு வந்து அவர்கள் மீதெல்லாம் வெறுப்பு அதிகமாக வரும்
4.கடைசியில் தியானத்தைச் செய்வதை விட்டுவிட்டு வெறுப்பான உணர்வுகள் கூடிய பின் எழுந்து விடுவோம்.

தியானத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்…! என்ன இப்பொழுது எழுந்து விட்டீர்கள்…! என்று வீட்டிலே கேட்டால் அவர்களிடம் சண்டைக்குச் செல்ல ஆரம்பிப்போம்.

கணவனாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் கேட்டவர்கள் மீது கோபம் வந்து விடும். ஏனென்றால் வெறுப்பின் உணர்வுகள் அதிகமானபின் இத்தகைய சொல்தான் வரும்.

அடிக்கடி உங்களிடம் ஆத்ம சுத்தி செய்யச் சொல்வதன் நோக்கமே ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குள் இப்படி வரும் தீமைகளை வலு இழக்கச் செய்வதற்குத் தான்.

அவ்வாறு ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்து
1.வரிசைப்படுத்தி எல்லா குணங்களிலும் எல்லா உணர்வுகளும்
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை இணைத்துக் கொண்டே வரவேண்டும்.

அந்த அருள் ஒளியை நாம் உருவாக்கத் தெரிந்து கொண்டால் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…” என்ற நிலைக்கு வருகின்றோம்.

ஆகவே கார்த்திகேயா…! நாம் அறிந்திடும் அறிவு பெற்றவர்கள். அருள் ஒளியின் தன்மை கொண்டு எதையுமே நல்லதாக உருவாக்கும் திறன் பெற்றவர்கள். நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

மிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்

மிஷின் கண் (MACHINE GUN) போன்று ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம்

 

ஒரு உணர்வின் தன்மை ஒரு அணுவின் தன்மை சேர்க்கப்படும் போது அது எந்தெந்த குணத்தின் தன்மை அதிகமாகச் சேர்க்கின்றதோ அது ஆற்றல் பெறுகின்றது.

இதைப் போன்றுதான் இயற்கையின் உண்மையினுடைய நிலைகள்.

நாம் மெய் உணர்வின் தன்மையை அறிந்துணர்ந்தபின் அந்த மகரிஷிகள் அருள் வழியைக் காட்டியபின் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே யாம் சொல்லும் நிலைகளைக் கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் பிரச்சினைகளையும் சங்கடங்களையும் எதிர் கொள்கின்றீர்களோ அதையெல்லாம் உங்களுக்கு நன்மை பயக்கும் நேரமென்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எப்படி…?

என்னைத் திட்டிவிட்டானே… இரு நான் பார்க்கின்றேன்…!’ என்றால் அன்றைய நாள் துன்பத்தைக் கொடுக்கும் நாள்.

அவர்கள் சொன்னவுடன் அல்லது நம் பையனே அப்படிப் பேசி இருந்தாலும் கூட அந்த உணர்வுகள் ஆத்திர உணர்வுடன் வெளிப்படுத்தும் போது நமக்குக் கெட்ட நாள். நமக்குள் அந்த உணர்வின் தன்மையைக் கூட்டுகின்றது.

ஆகவே யாராவது திட்டினாலும், உணர்ச்சிவசப்பட்டு ஏசும் நிலை வந்தாலும்…
1.உடனே ‘’ஓ…ம் ஈஸ்வரா…’’ என்று உயிரை எண்ணுங்கள்
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.
4.அப்பொழுதே இது அடங்கும்.

ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி அந்த உணர்ச்சியைத் தூண்டும் நேரத்திலும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டால் அவர்களால் சங்கடமாக ஏற்படுத்திய உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்காதபடி அதை அடக்க இந்த ஆயுதம் உதவும்.

அடுத்து… யார் நமக்கு தவறு செய்தார்களோ அவர்களை எண்ணி.
1.மகரிஷிகளின் அருளால் அவர்கள் நாளை செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று ஆணையிடுங்கள்
2.அதே சமயத்தில் அவர்கள் தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வராது தடுக்கச் செய்யுங்கள்.

இதை நீங்கள் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள் ஒளிகளைச் சேர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

மனித வாழ்க்கை அது எந்த நிமிடம் என்று சொல்ல முடியாது. நாம் இப்பொழுது எந்த நிலைகளில் இருந்தாலும் மனிதருடன் வாழப்படும் பொழுது குறைகளைக் காணாமல் இருக்க முடியாது. இன்றைய விஞ்ஞான உலகத்தில் பல பல குறைகளைக் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஆத்ம சுத்தி செய்வதன் மூலம் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைச் சேர்த்து ஒவ்வொரு நிமிடமும் அந்த புனிதப் பயணமாக இந்த வாழ்க்கை இருக்க வேண்டும்.

உங்களிடம் யாம் (ஞானகுரு) எதற்காக இதைச் சொல்கிறோம்…?

நீங்களெல்லாம் மகிழ்ந்திருந்தால் தான்… மகிழ்ச்சியான சொல்களைச் சொன்னால்தான் எமக்கும் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

அதைப் போல நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு
1.யாராவது துன்புற்று உங்களிடம் வந்தாலும் உடனே அவர்களுக்கு நன்றாகிப் போகும்…! என்று சொல்லுங்கள்.
2.அவர்களுக்கு உடல் நலமாகிவிடும்.
3.உடல் நலம் பெற்றேன் என்று அந்த மகிழ்ச்சியான எண்ணங்களைச் சொல்லும்போது
4.அந்த நல்ல உணர்வுகளை உங்களுக்குச் சொந்தமாக்குங்கள்.

நான் எப்படி உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று எண்ணுகின்றேனோ அதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அந்த எண்ணத்தைப் பரப்புங்கள்.

நம்முடைய மூச்சு பிறருடைய துன்பங்களைப் போக்க உதவ வேண்டும். துன்பமான உணர்வுகளைக் காதிலே கேட்டு நம் உடலுக்குள் நின்று அந்தத் துன்பங்கள் நம்மை ஆட்டிப் படைத்துவிடக் கூடாது.

பிற துன்ப அலைகள் எல்லாம் அது விஷம். அது ஊடுருவி நம்மைக் கெடுக்கத் துரித நிலைகளில் செயல்படும். அதை மாற்றுவதற்கு மெய் ஞானிகளின் அருள் ஒளி நமக்குள் இருந்தால்தான் மாற்ற முடியும்.

1.மெய் ஞானிகளின் அருள் ஒளி நெருப்பு.
2.அந்த நிலையின் தன்மையை நாம் பெற வேண்டும்.
3.ஆனால் இதற்குக் குருவின் துணை வேண்டும்.

குருவின் இணைப்பு கொண்டு அன்று மகரிஷிகள் எவ்வழிகளில் எடுத்தார்களோ…
1.அந்த உணர்வின் ஆற்றலின் நிலைகள் கொண்டு
2.அதைப் பின்பற்றி நடப்போரின் நிலைகள் கொண்டுதான் அந்த சக்தியைப் பெற்றிட முடியும்.

நீங்கள் ஒவ்வொருவரும் இந்த மனித வாழ்க்கையில் புனிதம் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆத்ம சுத்தி செய்து பயிற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் குடும்பத்தில் யாருக்கு எந்தச் சிக்கல் வந்தாலும் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள், எல்லாமே நல்லதாக வேண்டுமென்று எண்ணுங்கள்.

1.இதைப் போன்று சிறிது நாளைக்கு முயற்சி எடுத்துப் பாருங்கள்.
2.இந்த உண்மை நிலைகளை நீங்கள் உங்கள் உடலுக்குள்ளும், உணர்வுக்குள்ளும் பார்க்கலாம்.

மனிதர்களான நாம் எந்தத் துன்பத்தையும் போக்க முடியும்

மனிதர்களான நாம் எந்தத் துன்பத்தையும் போக்க முடியும்

 

மனிதனாகத் தோன்றிய நாம் அனைவரும் பரசுராம்… சமப்படுத்தும் சக்தி பெற்றவர்கள். உதாரணமாக காய்கறிகளை நாம் வேக வைக்கின்றோம்… பல பொருள்களைச் சேர்த்துச் சுவையாக உருவாக்குகின்றோம்.

அதே போன்று பலராம்…! பலருடைய எண்ணங்களை நாம் கேட்டு நுகர்கின்றோம். ஆனாலும் அதிலே வரும் தீமைகள் விளையாது அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்…. கலந்து விட்டால் தீமைகளை அது வேக வைத்துவிடும்.

மகரிஷிகள் என்பவர்கள் எத்தகையை நஞ்சையும் அடக்கி ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றவர்கள். அவர்களின் உணர்வுகளை எடுக்கப்படும் போது அந்த ஒளியான உணர்வுகள் உடலில் விளையத் தொடங்குகின்றது.

1.நம்மை அறியாது வரும் தீமைகளைத் தடைப்படுத்த இதை அவசியம் செயல்படுத்த வேண்டும்.
2.சிறிது நாள் பழகிக் கொண்டால் போதும். பிறகு நீங்கள் சொல்ல வேண்டாம்… அது தன்னாலே வரும்… சொல்ல வைக்கும்…!
3.இதற்கு முன்னாடி ஐய்யய்யோ… அம்மம்மா…! என்று சொல்வீர்கள்
4.இப்பொழுது ஈஸ்வரா… என்ற சொல் வரும். உயிரையும் நினைக்க வரும்
5.உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
6.உங்களுக்குள் அது சக்திவாய்ந்ததாக உருவாகிறது.

ஆனால் ஈஸ்வரா… என்று வேதனை கலந்த உணர்வை எடுக்கக் கூடாது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதை இணைத்துப் பழக வேண்டும்.

1.இதன் படி செய்தால் எந்தத் துன்பத்தையும் நீக்க முடியும்.
2.உங்கள் சொல்லால் பிறருடைய துன்பத்தையும் போக்க முடியும்.
3.துன்பத்தை போக்கும் உணர்வுகள் உங்களிலே விளைகின்றது.

துன்பத்தைக் கண்டுணரும் பொழுது துன்பத்தை விளைவிக்கும் அணுக்கள் விளைகின்றது. அப்பொழுதெல்லாம் துன்பத்தை அகற்றிய அருள் மகரிஷிகளின் உணர்வை இணைத்தால் துன்பத்தை அடக்கும் சக்தியாக வருகின்றது.
1.கொஞ்சம் நாம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும்.
2.தியானம் என்பது இதுதான்…!

யாரோ செய்வார்… எவரோ செய்வார்… என்று எண்ணாதபடி தீமையை நீக்கிய அருள் உணர்வுகளை இப்படி வளர்த்துக் கொண்டால் நமது உயிரில் எதனை வலுப்படுத்திக் கொண்டோமோ அந்த மகரிஷிகள் வாழும் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

ஏனென்றால் கண்ணின் நினைவு கொண்டு எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதன் வலிமை தான் நமக்குள் சேர்க்கின்றது.

வான மண்டலத்தை எண்ணும் பொழுது நினைவு மகரிஷிகள் பால்தான் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை ஆகும் போது கூர்மை அவதாரம்.

கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் என்று காட்டுகின்றார்கள்.

ஒருவன் கடுமையாக வேதனைப்படுகிறான் என்று உற்றுப் பார்த்துப் பதிவாக்கினால் அந்த உணர்வுகள் சாரதியாக வருகின்றது. அந்த வேதனையான உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கின்றது.

ஆனால் அதைத் தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று எண்ணி எடுத்தால் அது அர்ச்சுனனாகி வலிமை ஆகின்றது.

1.நம் கண்கள் அங்கே அந்த மகரிஷிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்கின்றது.
2.வலுவாக எண்ணி நாம் எடுக்கும் இந்த உணர்வின் பிரகாரம்
3.உயிர் நம்மை அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

நல்ல குணங்களை வேட்டையாட நினைக்கும் தீமைகளை மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் வேட்டையாட வேண்டும் 

நல்ல குணங்களை வேட்டையாட நினைக்கும் தீமைகளை மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் வேட்டையாட வேண்டும் 

 

இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே மெய் ஒளியின் அருள் அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமியிடம் (ஞானகுரு) போனோம்… சாமி கொடுக்கவில்லை…! என்று குறையை எண்ணாதீர்கள். அந்த அருள் ஒளியை வளர்ப்போம்… அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம். நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது பாதுகாப்போம் என்று உறுதி கொள்ளுங்கள்.

அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும், அந்தப் பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும் போது வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.

உடலில் எவ்வளவு வேதனைகள் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

புலி நம்மைத் தாக்க வரும்போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும்
2.அந்தத் தீய விஷ உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும்
3.வேட்டையாடுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஓ…ம் ஈஸ்வரா…” என்று அந்த உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்கள் உடலுக்குள் செலுத்தி ஆத்ம சுத்தி செய்து
1.உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும்
2.அந்த உணர்வின் தன்மைகளை அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள்.

அப்போதுதான் அவைகள் அடங்கும்.

வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்கக் கூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

அந்த உணர்வின் தன்மை மெய் ஞானியின் அருள் உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்போது, மெய் ஞானிகள் அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அந்தத் தீமையான உணர்வை மாய்க்க அருள் ஒளியின் தன்மையிலே சென்றால்தான் முடியும்.

நிறையப் பேர் சாமியிடம் சென்று வந்தோம்… தலை வலி போகவில்லை. சாமியிடம் சென்றால் என்ன கிடைக்கின்றது…? என்று எண்ணுவார்கள்.

அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து “சாமி…” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது என்ன செய்கிறார்கள்…?

நம் வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்…?

அன்று நல்லதாக நடந்தது, இன்று யாம் சொன்ன வழிகளிலே தீமை நீக்கும் செயலாக நடந்தீர்களா…? என்று யாம் அவர்களிடம் கேட்டால், நேரம் இல்லைங்கே…! என்று சொல்கிறார்கள்.

இது போன்று நேரமில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் என்றால் அவர்கள்… ஒன்றும் கிடைக்கவில்லை என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.

அந்த மாதிரியாக, நமது வாழ்க்கையினுடைய நிலைகள் பயனற்றதாகப் போய் விடாதபடி நாம் மெய் வழி காண்போம்.

வாழ்க்கையில் வரக்கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்பது. அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள் பல இரகசியங்கள் இருக்கின்றது.

இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும நாம் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்கள் உடலில் இருக்கக் கூடிய தீமைகளை நீக்க அவர்களையும் அந்த ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

1.யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி
2.இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ
3.இதைப் போன்று நீங்களும் செயல்படுத்துங்கள்.

உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள். நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியைப் பெறமுடியும்.

யாரோ செய்து கொடுப்பார்… எவரோ செய்து கொடுப்பார்… என்று எண்ணாதபடி
1.நாம் இதைப் பெற முடியும் இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு
2.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும் என்ற நிலைக்கு நாம் வர வேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது, ஒவ்வொன்றும் நல்லதாகும்.

1.நம்மால் முடியுமா…? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.
2.எண்ணியதைப் படைக்கும் சக்தி உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
3.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு.

உயிரின் துணை கொண்டு அது எப்படி நம்மை ஒளியாக உருவாக்குகின்றதோ நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி அந்த உணர்வுகள் செயல்படும்.

ஆகவே… உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் மாற்ற வேண்டும்… மாற வேண்டும்.

ஒன்றை ஒன்று விழுங்கித்தான் ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால் எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால் இந்தக் காற்றும், போர் முறைகளிலேதான் வருகின்றது.

பல அணுக்களின் நிலைகள் கொண்டு நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு எதிர் நிலையான அலைகள் பட்டவுடன் ஒன்றுக்கொன்று போர் செய்துதான் சுழிக் காற்றும் வருகின்றது.

இவையெல்லாம் ஒன்றையொன்று வெல்லும் போது ஏற்படக் கூடிய மூச்சின் அலைகள்தான்.

ஆகையினாலே எல்லாமே இயற்கையின் செயல்தான். அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. மனிதனாக இருக்கக் கூடிய நாம் எதைக் கொண்டு எதை வெல்ல வேண்டும்…?

நாம் இருளை வென்று ஒளியாக்க வேண்டும். இது தான் கடைசி நிலை.

இருளை வென்று ஒளியாக உருவாக்கும் தன்மையை வளர்க்கச் செய்வதற்குத்தான் குருநாதர் எமக்குக் காட்டிய ஆற்றலை நான் பெற்றாலும் அதே ஆற்றலின் தன்மையை உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன் (ஞானகுரு).

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து அந்த அருள் ஆற்றலை நீங்களும் பெறலாம். நீங்கள் பெறும் போது உங்கள் மூச்சலைகளால் உங்களைச் சந்திப்போரும் அந்த ஆற்றலைப் பெறுவார்கள்.