சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம்

சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம்

 

அழுக்குத் தண்ணீரிலே நன்னீரை ஊற்றும் பொழுது முதலில் கலங்கலாக இருக்கும். நன்னீர் அதிகமான பின் கலக்கத்தின் தன்மை சிறிது தெளியும்.

இதைப் போன்று எத்தனையோ உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில், அழுக்கு உணர்வாக இருப்பினும் அதிலே அருள் ஞான உணர்வை இணைக்கும் போது உங்களுக்குள் மனம் தெளியும் நிலை வருகின்றது.

அதனால்தான் யாம் உபதேசம் செய்யும் நேரத்தைக் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம்.

யாம் சொல்வதெல்லாம்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒவ்வொரு அணுக்களிலும் இணையச் செய்து
2.உங்கள் நினைவாற்றலை ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்று அறியச் செய்ய
3.அந்த நினைவுடன் அருள் ஞானியின் உணர்வைக் கலக்கச் செய்து அந்த ஆற்றலைப் பெறச் செய்கின்றேன்.

உங்களுடைய நல்ல சிந்தனையை அடக்கச் செய்யும் நிலைகளிலிருந்து அதனை அடக்கும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பெருக்கும் சூழ்நிலையை உருவாக்கும் நேரம் இது (துருவ தியான உபதேசம்).

உங்களுடைய அழுத்தத்தின் நிலைகளை (எண்ண உணர்வுகளை) அளவுகோலாக வைத்து ஒவ்வொரு உணர்வுகளிலும்… வாழ்க்கையில் எதிர்நிலை (தீமைகள்) வருகின்றதென்றால் அந்தக் காலத்தை அளக்கும்.
1.அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற சிந்தனை வரும்
2.பருவம் வரும் பொழுது, சொல்வோம் என்று விலகிச் செல்லும்… காலத்தை விரயமாக்காது.

நாம் உயர்ந்த தத்துவத்தை வைத்திருக்கிறோமென்று அவசரமாகப் போகிறவரிடம் சொன்னால் சரி…சரி…! என்பார்கள். ஆனால் ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாது போய்விடும்.

இதுவெல்லாம் உங்களுக்குள் அனுபவரீதியில் கொடுப்பதற்காகத் தான் யாம் (ஞானகுரு) எதை எடுத்தோம்…? எப்படிச் செய்தோம்…? எதனுடைய உணர்வுகள்…? என்று காட்டியது.

நீங்கள் பிறருக்கு எவ்வழியில் சொல்ல வேண்டும்…?

எமது உபதேசங்களைக் கேட்ட நீங்கள் ஒவ்வொரு கால நேரத்தையும் யாம் உபதேசித்த வழியில் பயன்படுத்துதல் வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் எலெக்ட்ரானிக் என்ற அழுத்தத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… கால நேரம் வரும் பொழுது அந்த அழுத்தத்தின் உணர்வுகள் தீமையை தள்ளி விட்டுச் செயல்படுகின்றது.

இதைப் போன்றுதான்
1.உங்கள் அழுத்தத்தின் உணர்வுகள் ஏற்புடையதாக வரும் பொழுது இதனுடைய அழுத்தம் தீமையை நீக்குகின்றது.
2.அதாவது நல்லவைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தீமையை நீக்குகின்றது.

யாம் உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது… சீக்கிரம் போக வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்தக் காலம் வரும்போது யாம் உபதேசிப்பதைத் தள்ளி விடுகின்றது. அதன் வழி உங்களை இயக்குகின்றது.

ஆகவே தியானம் மற்றும் உபதேசத்தை நீங்கள் கேட்கக்கூடிய நேரங்களில்
1.கால மணியை, அந்த அழுத்தத்தைப் பதிவு செய்து கொண்டு
2.அதனை நமக்குள் ஏற்புடையதாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு உட்கார்ந்தால்,
3.நினைவு வேறு எங்கும் போகாது,.. இந்த உணர்வின் (அருள் ஞான உணர்வின்) அழுத்தமாகும்.

சீர்புடையதும் சீர்பற்றதும் போன்ற உணர்வுகளைத் தனக்குள் மாற்றி ஒவ்வொன்றையும் யாம் சொல்லும் பொழுது தனக்குள் பக்குவப்படும் நிலைகள் வரும்.

அந்தப் பக்குவ நிலை ஏற்படுத்துவதே குருவின் தன்மை. எமது அருளாசிகள்.

வாலி சுக்ரீவன்

வாலி சுக்ரீவன்

 

ஒரு நோயாளியையோ தீமை செய்பவரையோ பார்க்க நேர்ந்தாலும் அது வாலியாக வலிமை மிக்க சக்தியாக நமக்குள் வந்து நல்ல குணங்களை அடக்குகிறது.

அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவு செய்து வைத்திருந்தால் அதைத் தடுக்க முடியும்.
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நாம் கவர்ந்தோம் என்றால்
2.அந்த உணர்வுகள் நமக்குள் தீயதை அடக்கும் நிலையாக வரும்.

இதைத் தான் இராமாயணத்தில் இராமன் வாலியை, சுக்ரீவன் துணை கொண்டு அடக்கினான் என்று நமது காவியத் தொகுப்புகளில் காண்பித்திருப்பார்கள்.

அதாவது… மனிதனில் தீமைகளை வென்ற அந்த வலிமையான சக்தியை நாம் எடுப்பதற்காக… சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை நாம் நுகர்ந்து இந்த வலிமைமிக்க விஷத்தை வாலியை அடக்குதல் வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரக்கூடிய உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை நாம் எண்ணத்தால் நுகர்ந்தால் “சுக்ரீவன்…”
1.அந்த உணர்ச்சிகள் நமக்குள் ஊடுருவி நஞ்சு கொண்ட உணர்வை நமக்குள் அடக்குகின்றது.
2.இதைத்தான் சுக்ரீவன் துணை கொண்டு வாலியை இராமன் அடக்கினான் என்பார்கள்.

இதில் வாலி அண்ணன்… சுக்ரீவன் தம்பி.
1.ஆதியில் விஷத்தின் இயக்கத்தால் தொடர்ந்து வந்தவன் தான் அண்ணன் வாலி.
2.மனிதனாக ஆனபின் உணர்வின் தன்மையை ஒளியாக்கும் நிலை பெற்றது சுக்ரீவன்.

ஆக… பின்னால் பிறந்ததுதான் ஒளி இவ்வளவு தெளிவாகக் காட்டுகின்றார்கள். இதனால் வாலி சுக்ரீவன் என்று காரணப் பெயர்களை வைத்துச் சகோதரர்கள் என்று காட்டினார்கள்.

சுக்ரீவனின் துணை கொண்டு, வாலியை அடக்கப்படும் பொழுது இது இணைந்து, நமக்குள் நன்மை செய்யும் சக்தியாக மாற்றுகின்றது என்பதையே நமது காவியத் தொகுப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

மெய் ஞானிகள் தம்முள் கண்டுணர்ந்த இயற்கையின் செயலாக்கங்கள் அனைத்திற்கும் “காரணப் பெயர்களைச் சூட்டினார்கள்…”
1.தம் இன மக்கள் அனைவரும் விண்ணின் ஆற்றலைத் தம்முள் பெற்று
2.ஒளி பெறும் உணர்வாக வளர்க்கும் நிலைக்காகத் தாம் கண்டறிந்த பேருண்மையின் தன்மைகளை அவ்வாறு வெளிப்படுத்தினர்.

மெய் ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வின் ஆற்றலைக் கவர்ந்து நம்முள் நஞ்சான உணர்வுகளை ஒடுக்கி மெய்ப் பொருளைப் பெறும் நிலையாக நமது உணர்வினை வளர்ப்போம்.

ஆகவே… மெய் ஞானிகள் காண்பித்த வழியினைக் கடைப்பிடிப்போர் அனைவரும் என்றும் பேரானந்த பெரு நிலையைப் பெறுவதற்கு எமது அருள் ஆசிகள்.

“மகரிஷிகளின் அருள் சக்தி” எங்கும்… எதிலும்… பரவ வேண்டும் என்பதை நாம் சொந்தமாக்க வேண்டும்

“மகரிஷிகளின் அருள் சக்தி” எங்கும்… எதிலும்… பரவ வேண்டும் என்பதை நாம் சொந்தமாக்க வேண்டும்

 

சாமி நன்றாகப் பேசுகின்றார்… உபதேசிக்கிறார்…! என்று கேட்டு விட்டு இதை அப்படியே நீங்கள் விட்டு விடாதீர்கள். அப்படி ஆகிவிடக்கூடாது.
1.காரணம் எல்லோரும் நீங்கள் தயாராக வேண்டும்.
2.அவரவர்கள் இதைப் பெற முயற்சி எடுங்கள்.
3.இந்தக் கருத்துக்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்… அதை நீங்கள் எழுத வேண்டும்.

யாம் சொல்லும் போது பல நிலைகள் தெரிய வரும்.
1.அந்தக் கருத்துக்களை எழுதிப் பதிவு செய்யும் பொழுது ரெக்கார்டு ஆகும்.
2.எதை நீக்க வேண்டும்…? எதைச் செயல்படுத்த வேண்டும்…? என்று எண்ணும் போது அந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
3.இந்த உணர்வின் வளர்ச்சி நம்மைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டே வரும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று நோக்கத்தில் தான் இதை எல்லாமே பதிவு செய்கின்றேன். அதை நீங்கள் வளர்த்துப் பழக வேண்டும். இது உங்களுக்கு நல்ல வளர்ச்சியைத் தரும்.

இங்கே கேட்டுவிட்டு… அடுத்தாற்போல் வெளியிலே சென்றால் புற உணர்வுகள் இதை மறைக்கும். அப்படி மறைத்ததை மீண்டும் தெளிவாக்க நேரமாகிறது. “நம்மால் முடியவில்லையே…” என்று ஒரு பலவீனமான… விரக்தியான எண்ணங்கள் வந்துவிடும்.

தலையில் அதிகமான சுமையை ஏற்றி விட்டால் தூக்க முடியாமல் போகிறது அல்லவா. அது போன்று வருவதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே நீங்கள் அருள் உணர்வுகளை வளர்த்து உங்களுக்குள் அதைப் பெருக்கி உயர்ந்த உணவுகளை எடுத்துச் சொல்லி உங்களை அணுகி வருபவரையும் தயார் செய்ய வேண்டும்.

1.எத்தகைய தீமைகள் வந்தாலும் “அதை மாற்றுவதற்குண்டான வழி எதுவோ…”
2.அதை நாம் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும்… அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…! “இதை நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டே வரவேண்டும்…”

வெறுமனே தியானம் மட்டும் செய்தால் பத்தாது. நாம் தொழில் செய்யும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான சிக்கல்களிலிருந்தும் விடுபட்டுப் பழக வேண்டும்.

காரணம்… ஆர்வத்தில் இங்கே வருவார்கள் குறைகளைக் கண்ட பின் எம்முடைய உபதேசத்தை (தியானத்தை) விட்டு விடுவார்கள். குறைகளை வளர்த்து விடுவார்கள்.

தொடர்ந்து தியானிக்கும் போது “நீங்கள் எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவ்வப்பொழுது அதைச் சுட்டிக்காட்டி…” அந்தக் குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும்…? என்ற உணர்வை அது மாற்றிக் கொடுக்கும்.

அதை உருவாக்கினால் தான் அந்த உணர்வின் அனுபவம் உங்களுக்கு எழுத்து வடிவம் கொண்டுவர ஏதுவாக இருக்கும். உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விளைய வைக்கவும் முடியும்.

விவசாயப் பண்ணைகளில் பல சத்துகளை ஒன்றாக இணைத்து வீரிய செடியாக உருவாக்கினார்களோ மாற்றியமைத்தார்களோ இதைப் போன்று நாம் ஞானிகள் உணர்வை இணைத்து வீரிய சக்தியாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு உடலிலும் வந்த உணர்வுகளை மாற்றி அதற்கொப்ப பரிணாம வளர்ச்சியில் எப்படி உடல்கள் பெற்று வந்தோமோ… நம் உயிர் மாற்றியதோ இதைப் போலத்தான் நம் தொழில் செய்தாலும் வேலை செய்தாலும் அதன் மூலமாக
1.ஒவ்வொரு நொடியிலும் அதற்குள் அருள் உணர்வைப் பெருக்கி அதை மாற்றி அமைத்து
2.வாழ்க்கையே தியானம் என்ற நிலைகளுக்கு நாம் வளர்ச்சியின் பாதையில் கொண்டு வர வேண்டும்.

உடல் வாழ்க்கைக்கு நாம் தொழில் செய்ய வேண்டி இருக்கின்றது. ஆனாலும் தொழிலில் வரக்கூடிய சிக்கல்கள் நாம் போகும் பாதையை அது தடைப்படுத்தி விடக்கூடாது.

ஆகவே ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிடும் நிலையாக நம்முடைய வளர்ச்சி என்றுமே அந்த மகரிஷிகள் காட்டிய வழியில் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் ஞாபகப்படுத்துவது.

வராகன்

வராகன்

 

வராகன்… தான் எவ்வாறு கெட்டதை நீக்கி நீக்கி… நாற்றத்தை நீக்கி, நல்ல உணர்வினைத் தனக்குள் எடுத்தது…? என்று ஞானியர்கள் சொன்னார்களோ அதைப் போல
1.இப்பொழுது உங்கள் எண்ணங்கள் மகரிஷிகள் காட்டிய மெய் உணர்வுகளைக் கூர்மையாகக் கவர
2.உங்களின் நினைவின் ஆற்றலை விண்ணை நோக்கிச் செலுத்துவதற்கே இந்த உபதேசம்.

வராக அவதாரம் என்றால் என்ன…?

நாற்றத்தைப் பிளந்துவிட்டுச் சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருளைப் பன்றி நுகர்ந்து எடுக்கின்றது. மண்ணைப் பிளந்துவிட்டுத் தன் உணவின் தன்மையைத் தன் நுகரும் ஆற்றலால் அது எடுத்து உணவாக உட்கொள்கின்றது.

தீமையை (நாற்றத்தை) நீக்கி நல்லதை உட்கொண்ட உணர்வின் சத்து அதே ஞானமாக அதை எண்ணிய நிலைகள் கொண்டு எதை எண்ணியதோ காந்தம் லட்சுமி இதைக் கவருகின்றது.

அதாவது… தன் உடலிலிருந்து கெட்டதை நீக்கிவிட்டு நல்லதைப் பெற வேண்டுமென்ற ஞானத்தின் எண்ணங்களை அங்கே அது கவருகின்றது.

எடுத்துக் கொண்ட இவையனைத்தையும் வெப்ப காந்தங்கள் படைக்கின்றது என்ற இந்த உண்மையின் நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குத்தான்
1.மூன்று உணர்வின் நிலைகள் ஆயுதங்களாக ஒவ்வொரு உடலிலும் இயங்கியதை (வெப்பம் காந்தம் விஷம்)
2.அதை உணர்த்த ஆயுத பூஜை என்று வைத்தது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைச் சாக்கடையில் உட்கார வைத்துத் தான் உபதேசித்தார். இப்பொழுது, நீங்கள் சாக்கடையில் உட்காரவில்லை. நல்ல இடத்தில் மகிழ்ச்சியான இடத்தில் உட்கார்ந்து இருக்கின்றீர்கள்.

அன்று… பைத்தியத்துடன் சேர்ந்து நான் சாக்கடையில் உட்கார்ந்து இருக்கின்றேன் என்று எம்மைக் கிண்டல் கேலி செய்தார்கள்

ஏனென்றால் அங்கே உட்கார்ந்திருந்த நிலையில்… எம்மை டீ காபி வாங்கி வரச் சொல்லி, சாக்கடையில் இருந்த கழிவைப் போட்டு “நீ குடி…!” என்கிறார் குருநாதர்.

“அய்யய்ய…” என்று யாம் மறுக்கின்றோம்.

கூர்மை அவதாரம் வராக அவதாரம் எவ்வாறு இருக்கும்…?

கூர்மையாக அந்த நாற்றத்தை எண்ணுகின்றாய். அந்த உணர்வின் சத்து, உனக்குள் நாற்றமாகின்றது. இதைப் பார்க்கும் அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்…? என்று எண்ணுகின்றாய், அந்த உணர்வின் சத்து உனக்குள் வருகின்றது.

ஆனால் இந்தப் பன்றி என்ன செய்கின்றது…? நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை எடுத்தது.
1.அது நாற்றத்தை எண்ணவில்லை… நீ நாற்றத்தை எண்ணுகின்றாய்.
2.அடுத்தவன் என்ன சொல்கின்றான்…? என்று எண்ணுகின்றாய்.

இப்போது இதைச் சேர்த்துக் கொள்கிறாயா…? அல்லது அதைச் சேர்த்துக் கொள்கிறாயா…?
1.நீ உயர்ந்த நிலையைச் சேர்த்துக் கொள்கின்றாயா…? அல்லது
2.நாற்றத்தை நீக்க வேண்டும் என்று எண்ணுகின்றாயா…?

நாற்றத்தை எண்ணியவுடனே… நீ எதை எண்ணுகின்றாயோ அதை உன் உயிர் படைக்கின்றது… அதுவாகின்றாய். கீதையிலே… “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…” என்று உணர்த்தப்பட்டுள்ளது.

“அய்யய்ய…” என்று கண்ணில் பார்க்கின்றேன். நாற்றம் என்று எண்ணுகின்றேன். அப்பொழுது இந்த எண்ணம் வரப்படும் பொழுது, கண்ணன் (கண்கள்) என்ன சொல்கிறான்…?

நாற்றம் என்கிற பொழுது நாற்றத்தை ஈர்த்துப் பார்க்கச் செய்கின்றது. அதை (என் கண்கள்) இழுத்தவுடனே… நாற்றம் என்றவுடனே அதிகமாகி விடுகின்றது. அந்த நாற்றம் உடலினுள்ளே சென்றவுடன் விளைந்து விடுகின்றது.

“நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!” நாற்றத்தை நீக்கி நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று எண்ணினால் நீ அதுவாகிறாய். இதைத்தான் கண்ணன் கீதையிலே சொன்னது.

அதைப் போல, என்னைக் கேவலமாகப் பேசுவார்களோ…? என்று மற்றவர்களைப் பார்க்கின்றேன், நாற்றத்தில் எவ்வாறு இருக்கும்…? என்று எம்மைச் சாக்கடையில் வைத்துத்தான் நமது குருநாதர் உபதேசம் கொடுக்கின்றார்.

சாக்கடை அருகில் உட்கார்ந்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்…? “பாரு… எல்லாம் காசு ஆசை பிடித்துப் போய், சாமியாரிடம் வித்தையைக் கற்றுக் கொள்வதற்காக வேண்டி உட்கார்ந்துள்ளார் என்பீர்கள்.

ஏனென்றால் அந்தச் சித்து இந்தச் சித்து தங்கம் செய்வது… வெள்ளி செய்வது, என்று தான் சாமியார் பின்னால் போகின்றார்கள்.

இப்பொழுது என் கூர்மை என்ன செய்கின்றது…? அவர்கள் என்ன நினைப்பார்கள்…? இவர்கள் என்ன நினைப்பார்கள்…? என்று அதை வலுவாக எடுக்கும் பொழுது… இந்த நாற்றத்தை எனக்குள் சேர்த்து விடுகின்றது.

வராகன் என்ன செய்கின்றது…? என்று காட்ட இவ்வாறு, பல நிலைகளில் என்னைச் சாக்கடைக்கு அருகில் அல்லல்பட வைத்தார் குருநாதர்.

1.எண்ணங்கள் உருவாகி உன் உடலுக்குள் உணர்வுகள் எதைக் காட்டுகின்றது…?
2.அந்த உணர்வை எடுத்தவுடன் உனது ஆன்மாவாக எவ்வாறு மாறுகின்றது…?
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்தவுடன் உயிரில் (புருவ மத்தியில்) எவ்வாறு படுகின்றது…?
4.அப்பொழுது உயிர் நீ சுவாசித்ததை இயக்கி “அய்யய்ய நாற்றம்” என்று இந்த உடலை அழைத்துச் செல்கின்றது.

இது கூர்ம அவதாரம்.

கூர்மையாக நாற்றத்தைப் பார்க்கின்றாய்.. அதனின் உணர்வு வலுவாகச் சுவாசித்தால் வராக அவதாரம். அதனுடைய வலிமை கொண்டு “நாற்றம்… நாற்றம்…” என்று நீ போகின்றாய்.

அவ்வாறு சென்று கூர்மை அவதாரத்திற்கும் வராக அவதாரத்திற்கும் இரண்டுக்கும் இணை சேர்த்து அதிலே நீ எதைக் கூர்மையாக எண்ணுகின்றாயோ அதனின் உணர்வு உனக்குள் சென்றவுடன்
1.உன் ஈசனான உயிர் அதை வலுவாக்கி அதனின் நிலைகள் கொண்டு
2.அதே எண்ணத்தை எண்ணும் பொழுது இந்தக் கண் என்ன செய்கின்றது…?
3.இதையே எடுத்து நுகர்ந்து “அய்யய்ய” என்று சொல்லி உன்னை விலகச் செல்லும்.

நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். இந்தச் சாக்கடையை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றாய். ஆனால் எடுத்துக் கொண்ட உணர்வே சாக்கடையாக சுவாசத்தின் வழி உள்ளே வருகின்றது.

இந்த நிலையை உணர்த்தி என்னை அங்கே பக்குவப்படுத்துவதற்காக… சாக்கடைப் பக்கம் இவ்வளவு உபதேசம் கொடுக்கின்றார் குருதேவர்.

எனக்குக் காபி அவருக்கு டீ இரண்டையும் சாக்கடைக்குப் பக்கத்தில் வைத்து அதிலே சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பை இரண்டைப் போட்டு என்னைக் “குடி” என்கின்றார் குருதேவர்.

அப்பொழுது என்னுடைய பார்வை என்ன செய்கின்றது…? இந்தச் சாக்கடையையும் பார்க்கின்றேன்… ஆள்களையும் நினைக்கின்றேன். இவரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டேன் என்று நினைக்கின்றேன். இந்தக் காபியை எவ்வாறு குடிப்பது…?? என்றும் என்ணுகின்றேன்.

கீதையிலே, நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அவர் சாக்கடையைக் குடி என்கிறார். அதை எண்ணியவுடனே எவ்வாறு குடிப்பது…? என்று விலக்கிச் செல்கின்றது.

இந்த எண்ணத்தால் அவ்வாறே திகைத்துக் கொண்டு இருக்கின்றேன். காபியில் இதை அள்ளிப் போட்டார். குடிக்க முடியவில்லை. எல்லோரும் நைனாவிற்குப் (சாமிகளுக்கு) பைத்தியம் பிடித்து விட்டது என்று சொல்கின்றார்கள். ரோட்டில் போகின்றவர்கள் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். இதையும் கேட்கின்றேன்.

அப்பொழுது நான் நகர்ந்து செல்கின்றேன். போகப் போக, இந்தப் பக்கம் போகலாமா…? அந்தப் பக்கம் போகலாமா…? என்று இந்த மனம் அல்லல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் இயக்கி உடல் முழுவதும் பரவச் செய்து… அதே இயக்கமாக எவ்வாறு இயங்குகின்றது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார் குருதேவர்.

“சரி… நீ போய் டபாரா செட்டைக் கொடுத்துவிட்டு வா…” என்றார் குருதேவர்.

கடையில் கொண்டு போய்க் கொடுத்தால்… வாங்கவா செய்வார்கள்…? நீ உன் வீட்டிலேயே வைத்துக் கொள் என்றார்கள். டபரா செட்டிற்குக் காசு கொடுத்தேன். வாங்க மாட்டேன் என்றார்கள். இவ்வாறாகி விட்டது.

நீ வரும் பொழுது, கொஞ்சம் முறுக்கு, கடலைப் பருப்பு, பொட்டுக் கடலை வாங்கிவா என்றார் குருநாதர். மூன்றையும் வாங்கிக் கொண்டு வந்தேன்.

சாக்கடை அருகில் ஏழெட்டுக் கோடு போடச் சொன்னார். முதலில் பொட்டுக் கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார். இரண்டாவதாக முறுக்கைச் சாக்கடையில் போடச் சொன்னார். மூன்றாவதாக, நிலக்கடலையைச் சாக்கடையில் போடச் சொன்னார்.

அங்கிருந்து பன்றி வருகின்றது வந்தவுடனே ஒவ்வொன்றாக மோந்து பார்க்கின்றது. பொட்டுக் கடலை முன்னால் இருக்கின்றது. அதை விட்டுவிடுகின்றது.

அடுத்து… முருக்கு வேகமாக எணணெய் வாசனை வருகின்றது. நாற்றத்திற்குள் இதைக் கண்டுபிடித்து அந்த முறுக்கை எடுக்கின்றது.

அடுத்து, எண்ணெய் வாசனை உள்ள கடலைப் பருப்பைச் சாப்பிடுகின்றது. அடுத்துப் பொட்டுக்கடலை இருக்கின்றது. அதை விட்டுவிட்டது. மாற்றி அந்த வாசனையைத்தான் நுகர்ந்து எடுக்கின்றது.

சாக்கடைக்குள் பார்த்தாயா…? என்றார் குருநாதர். அது நாற்றத்தை எடுக்கவில்லை… நீ எதை எடுக்கின்றாய்…! என்றார்.

காபி இருக்கின்றது… நீ பிரித்துப் பார்க்க முடியவில்லை. நீ ஆகாரம் சாப்பிட்டவுடனே சாப்பிடும் ஆகாரத்தில் உள்ள நாற்றத்தை உன் உடல் பிரித்து மலமாக மாற்றி விடுகின்றது.

உன் உடலிலிருந்து, வரக்கூடிய ஆறாவது அறிவு, இதைப் பிரிக்கக் கூடிய சக்தியாக இருக்கின்றது நீ ஏன் இதைப் பிரிக்க முடியவில்லை…? என்று கேட்கின்றார் குருநாதர்.

நான் என்ன பதில் சொல்வது…?

சாக்கடைக்குள் இருக்கும் நல்ல பொருள்களைப் பன்றி எப்படி நுகர்ந்து எடுத்து நல்ல உணர்வைத் தனக்குள் எடுத்து
1.நாற்றமான உடலில் கலந்து, நாற்றத்தை நீக்கிடும் உணர்வுகளை வளர்த்ததோ
2.அதே போல பல சரீரங்களைத் தனக்குள் எடுத்து இதே உயிர்தான், நம்மை மனிதனாக ஆக்கியிருக்கின்றது.

மனிதனாக ஆனபின்… சந்தர்ப்பத்தால் ஏற்படும் நஞ்சு கொண்ட நிலைகளும்… உணர்வின் எண்ணத்தால் ஈர்க்கும் தீமைகளையும் நீ எவ்வாறு மாற்றுவது…? என்றும் அதை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்…? என்ற நிலைகளையும் அங்கே தெளிவாக எடுத்துக் கூறினார், குருநாதர்.

பன்றி சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வை நுகர்ந்த மாதிரி…
1.நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சாக்கடையான காற்று மண்டலத்திலிருந்து,
2.நல்லவற்றை எடுக்கக் கற்றுக் கொடுத்தார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

இன்று கழிவுப் பொருள்களை எடுப்பவர்கள் (தூய்மைப் பணியாளர்கள்) அந்தக் கழிவுப் பொருளை எண்ணத்தால் நுகர்வது இல்லை.
1.அதை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் பொழுது
2.கழிவுப் பொருளின் மணம் அவர்களுக்கு வருவதில்லை.

ஆனால் நாம் என்ன எண்ணுகிறோம்…? கழிவுப் பொருள் எடுப்பதைப் பார்த்தவுடன், “ஐய்யய்யோ நாற்றமாகின்றது…” என்று சொல்லி நாற்றத்தை உடலுக்குள் கலக்கவிட்டு கழிவுப் பொருளின் சத்தையெல்லாம் நமக்குள் சேர்த்துக் கொள்கிறோம்.

1.இப்படி… எதனின் உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் சென்று நமக்குள் நாற்றமாகும் நிலையும்,
2.நாற்றத்தைக் கண்டு வெறுப்பின் நிலையில் எண்ணங்கள் உருவாகும் பொழுது யாரைப் பார்த்தாலும், அசிங்கமாகத் தெரியும்.

“இது சுத்தம் இல்லை… அது சுத்தம் இல்லை…” என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் உடலில் பாருங்கள். நாற்றம் வந்து கொண்டே இருக்கும். சட்டைத் துணியினை நுகர்ந்து பாருங்கள், நாற்றம் இருக்கும்.
1.நாற்றத்தைப் பிடிக்கவில்லை என்று நாற்றத்தைத்தான் நுகருகின்றார்கள்.
2.இதுவெல்லாம் நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் இயக்கங்கள்,

ஆகவே… எதைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதனின் வலுக் கொண்டு அதனின் வலிமையாக அடுத்த உருவை நம் உயிர் உருவாக்குகின்றது என்ற நிலையை அங்கே காட்டுகின்றார் குருதேவர்.

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

விநாயகர் சதுர்த்தி அன்று அருள் மகரிஷிகள் உணர்வுகளை நாம் அனைவருமே நமக்குள் எடுத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஆனால்
1.ஏற்கனவே எண்ணத்தால் நுகர்ந்த பிற தீமையான உணர்வுகள் அணுக்களாக இருக்கின்றது.
2.அதைத் தடைப்படுத்தி விட்டால் ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அது பாட்டுக்கே விலகிப் போய்க் கொண்டே இருக்கும்.

இந்தப் பூமியின் சுழற்சியின் தன்மையில் கடலின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கடல் பக்கத்திலே இருந்து பாருங்கள்.
1.அருகில் சென்றோம் என்றால் நம்மை உள்ளே இழுக்கும்.
2.அலைகள் மாறி மாறி வரும் பொழுது மோதி… மறுபடியும் உள்ளே தனக்குள் இழுக்கும்.

இதைப் போன்று இந்த உணர்வின் தன்மை எந்தெந்த மனிதர் பால் எண்ணி எடுத்து வைத்திருக்கின்றோமோ அது வளர்ந்த பின் “அந்த உணர்வுகள்”
1.எதிலும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கும் பக்கம் செல்லாது.
2.அங்கே சென்றால் செவுட்டில் அடித்த மாதிரி அடித்து விலக்கித் தள்ளிவிடும்.

மரம் செடி கொடி அவைகள் வெளிப்படுத்தும் உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாகத் தோன்றி வளர்ந்து வந்தது. ஆனால் தீமையான உணர்வுகள் கலந்து மனிதனுக்குள் விளைந்தது.

ஆகையினால் மனிதனால் உருவாக்கிய தீமையான அலைகள் தாவரங்கள் அருகே அங்கே போகாது போக முடியாது.

விண்ணிலே சூரிய குடும்பத்தில் உருவான கோள்கள் சூரியனின் பிடிப்பில் இல்லை என்றால் திசை மாறிச் சென்று எங்கே போய் மடிகின்றது என்று சொல்ல முடியாது. பெரிய சுழல் இருக்கும்… அதிலே கரைந்து விடும்.

இதைப் போன்று தான் சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் பெரிய கடல்… அது பூமியில் முதலிலே உருவானது. அதிலே கரைந்து தனக்குள் கரைத்து மீண்டும் வெளிப்படுத்தும்.

இதே போல தான் “மனிதர்கள் ஈர்க்காத உணர்வுகள்…” கடலின் ஈர்ப்புக்குள் சென்று மூழ்கிவிடும்.

இதை உணர்த்துவதற்குத் தான் சதுர்த்தி என்று உருவாக்கப்பட்டு… தீமை செய்யும் உணர்வுகளை இப்படித்தான் கரைக்க வேண்டும் என்று சிலையைப் புறத்தில் காட்டி
1.மக்களுக்குள் விளைந்த தீமையான வினைகளைp பிறர் பால் பற்று கொண்டு எண்ணி எடுத்த உணர்வுகளைத் தனக்குள் பதிவாக்காதபடி
2.அவர்களை நலமாக்க வேண்டும் என்ற உணர்வினை எடுத்துப் பகைமை உணர்வுகள் இங்கே நிற்காது அப்புறப்படுத்த வேண்டும்.

இங்கே யாரும் எடுக்கவில்லை… நாமும் எடுக்கவில்லை… அவர்களும் எடுக்கவில்லை என்றால் நாம் வாழும் இடத்திலே அது நிற்காது.

விநாயகர் சதுர்த்தி அன்று உலக மக்கள் அனைவருமே
1.இது போன்று அருள் உணர்வுகளை ஏகோபித்த நிலையில் எடுத்துப் பகைமை உணர்வுகளை இழுக்கவில்லை என்றால்
2.இது எல்லாம் ஒதுங்கி கடலுக்குள் சென்று அமிழ்ந்துவிடும்.

அதாவது ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்ளவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு இங்கே இடமில்லை. அப்பொழுது அந்த உணர்வுகள் அது பாட்டுக்கே நகர்ந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கிவிடும்.

1.விநாயகர் சதுர்த்தி என்றால் தீமைகளை நிறுத்து…!
2.உனக்குள் தீமையின் வளர்ச்சியைத் தடைபடுத்து…
3.அதைக் கரைத்து விடு…! சாஸ்திரப்படி இது உண்மை.

உயிராத்மாவைக் காக்கும் வலிமைமிக்க சக்தியே வள்ளி

உயிராத்மாவைக் காக்கும் வலிமைமிக்க சக்தியே வள்ளி

 

கேள்வி:-

ஓம் ஈஸ்வரா குருதேவா… 🙏

நமது உயிரணு நம் புவியின் ஈர்ப்புக்குள் வந்து, பல பல தாவர இனங்களை நுகர்ந்து, உடல் பெற்றாலும்…. சந்தர்ப்பத்தால் ஓர் விஷச்செடியின் மணத்தை நுகர்ந்து விட்டால், அந்த மணத்தின் தன்மை அந்த உடலுக்குள்… எதிர் நிலையாகி, தான் நுகர்ந்து கொண்ட விஷத்தின் ஆற்றல், அந்த உடலுக்குள் வங்கிட்டு அதன் வளர்ச்சியின் கதியில் அடுத்த சரீரம்…. மற்ற உயிரினங்களை உட்கொள்ளும் உயிரினங்களாக உருப்பெறுகின்றது.
ஆனால், பரிணாம வளர்ச்சியில் தன்னைக் காட்டிலும் வலுவான உயிரினங்களிடமிருந்து தன்னை அவற்றிடமிருந்து காத்துக் கொள்ளும் நிலை பெற்றாலும்… அதன் உடலிலிருந்து வெளிப்படும் ” வலிமையான உணர்வை ” நுகர்ந்தோ அல்லது அதன் உடலுக்குள் சென்று “அதன் உணர்வைக் கவர்ந்தோ” வலிமையான உடல் பெறுகின்றது.

அதாவது நமது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும், வலிமையான சக்தியை நோக்கி சென்று, அதை நுகர்ந்து, வலிமையான உடல் கொண்ட உயிரினங்களாக உருவாக்குகின்றது.

இதில், தான் நுகர்ந்து கொண்ட “வலிமையான சக்திதான்” ஒவ்வொரு சரீரத்திலும் தன்னை தற்காத்துக் கொள்ளும் நிலைகள் பெற்றது.

இதில்
1) ராமாயணத்தில் உணர்த்தப்பட்ட வலிமையான சக்தி, கைகேயி… மனிதனான பின் இந்த வலிமையின் சக்தியின் செயலாக்கங்கள் ராமனை அதாவது நல்ல எண்ணங்களை ஒதுக்கிடும் நிலைகளை உருவாக்குகின்றது.
2) கந்த புராணத்தில் வலிமையான சக்தியைக் காட்டி அதை ஆறாவது அறிவான முருகன் காதலிக்கின்றான் என்று உணர்த்தப்பட்டுள்ளது.

அதற்கும் இதற்கும் உண்டான வித்தியாசம் என்ன சாமிகளே…?

நாம் மனிதனான பின் நமது உயிரான ஈசனுக்கு, இந்த பிரபஞ்சத்திலேயே… வலிமையான சக்தியான “துருவ நட்சத்திரத்தின் உணர்வை” நமது உயிருடன் ஒன்றி… நமது உயிர் வழியாகக் கவர்ந்து, நமது உயிரால் உருவாக்கப்பட்ட அணுக்களையும் பெறச் செய்யும் தியானத்தை நமது ஞானகுருவும், சற்குருவும் அருளியுள்ளார்கள்.

நமது ஞானகுரு ஓர் உபதேசத்தில் “நான் துருவ நட்சத்திரத்தை காதலிக்கிறேன்” என்று உரைத்துள்ளார்.

ஆகவே ராமாயணத்தில் காட்டப்பட்டுள்ள வலிமையான சக்திக்கும், கந்த புராணத்தில் காட்டப்பட்டுள்ள வலிமையான சக்திக்கும் உள்ள வேறுபாடு என்ன..?

பதில்:-

நமது குருநாதர் (ஞானகுரு) பரிணாம வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும் பொழுது மனிதனுக்கு என்று சில வழிமுறைகளை தனியாகக் காட்டியுள்ளார்.

ஏனென்றால் மற்ற உயிரினங்கள் அனைத்துமே மனிதனைக் காட்டிலும் அறிவின் வளர்ச்சி குறைவு. அவைகள் தன்னைக் காட்டிலும் வலிமையான சக்தியை நுகரப்படும் பொழுது பரிணாம வளர்ச்சியாகின்றது.

ஆனால் மனிதனுக்கோ வலிமை எது…? என்று சாஸ்திரங்கள் கூறியிருந்தாலும் அது எல்லாம் அரசர்கள் காலத்தில் மறைக்கப்பட்டு விட்டது.
1.ஆகையினால் வலிமை என்று எண்ணினாலே மனிதன் தன்னுடைய உடல் வலிமை தான் என்றும்
2.அதனுடன் இணைந்த எத்தனையோ மற்ற செயல்களோடு இணைத்து அதைத்தான் வலிமை என்று எடுத்துக் கொள்கின்றான்
3.அதனால் தான் ராமாயணத்திலே அந்த வலிமையைக் காட்டுவதற்கு கைகேயி என்று பெயர் வைக்கின்றார்கள்
4.கை+கேயி – மனிதனுடைய கை மிக மிக சக்தி வாய்ந்தது… அதனால் செய்யக்கூடிய வேலைகளும் எண்ணில் அடங்காது
5.கைகேயி என்று சொல்லும் பொழுது கையால் செய்யக்கூடிய செயல்கள் தான் (மற்ற உயிரின்ங்களுக்குக் கையே இல்லை)
6.குருநாதர் காட்டிய வழியிலே பார்க்கப்படும் பொழுது மற்றொன்றை வீழ்த்திடும் உணர்வாக
7.மூன்று உலகத்தையும் “அடக்கிடும் சக்தியாக” அது வருகின்றது.

இங்கே மூன்று உலகம் என்று சொல்வது உருவாக்குதல் காத்தல் அழித்தல் என்ற நிலையில் அனைத்தையுமே தனக்குக் கீழ் கொண்டு வரும்… அதை அடிமைப்படுத்தும் அத்தகைய செயலைத்தான் “அதாவது கையிலே சாதிக்கக்கூடிய இந்த வல்லமையைத் தான் கைகேயி” என்று பிரித்துக் காட்டுகின்றார்.

ஆனால் கந்த புராணத்தில் காட்டப்பட்ட வள்ளி வலிமை என்பது பரிணாம வளர்ச்சியினுடைய “முக்கிய மூலக்கூறான வலிமை…”
1.அதாவது தன்னைக் காட்டிலும் வலிமை எது என்பதை அது உற்றுப் பார்த்து
2.அதை நுகர நேர்ந்து வலிமைமிக்க அந்த உணர்வைச் சேர்த்துச் சேர்த்து தன்னைக் காத்திடும் உணர்வாக வளர்ச்சிக்கு வருகின்றது.

கைகேயி என்ற வலிமையோ… தன்னைக் காக்க என்று சொல்லிக் கொண்டு மற்றதை வீழ்த்துகின்றது.

ஆனால் வள்ளி என்ற வலிமைமிக்க சக்தி
1.தன்னைக் காத்திடும் நிலையாக வளர்ச்சியின் பாதையிலே
2.வளர்ச்சிக்கு உகந்த உணர்வை நுகர்கின்றது.

மனிதனுடைய அறிவு இன்று தேய்பிறையாகி பரிணாம வளர்ச்சி என்ற வழிகளில் செல்லாதபடி அரசன் காட்டிய வழியில் மற்றதை வீழ்த்திடும் உணர்வாக அது சென்று கொண்டிருக்கின்றது என்பதைத் தான் (முதலில் சொன்ன்படி) குருநாதர் அடிக்கடி பிரித்துக் காட்டுவார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்
1.நம்மை காக்கும் சக்தி தான் வள்ளி
2.நம்மை வீழ்த்திடும் சக்திதான் கைகேயி

பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்பது தெய்வ நிலை பெறுவது தான். ஆனால் தெய்வத்தையும் மனிதனையும் பிரித்து அரசர்கள் சரணாகதி தத்துவமாகக் காட்டியதால் “மனிதனுக்கு அடுத்த வளர்ச்சியே எது…?” என்ற அந்த ஞானமே மறைந்து போய்விட்டது.

மறைந்து போனதைத் தான் குருநாதர் காவியங்களில் உள்ள சூட்சுமங்களை நமக்குத் தெளிவாக எடுத்துப் பிரித்துக் காட்டுகின்றனர்

மனிதனாகப் பிறந்து நாம் எதையும் அடக்கி ஆட்சி புரிய வரவில்லை.
1.நமக்குள் ஆட்சி புரியும் உயிருடன் ஒன்றி ஒளியின் சுடராக
2.பிறவியில்லா நிலை பெறுவது தான் பரிணாம வளர்ச்சி.

உயிரைப் பற்றிய அறியாத உயிரினங்கள் வலிமையானதை நுகர்ந்து வளர்ச்சிக்கு வருகிறது. ஆனால் மனிதனோ தான் வலிமையானவன் என்று எண்ணிக் கொண்டு மற்றதை வீழ்த்தினால்தான்… தான் வாழ முடியும் என்று அரசன் வழிகளிலே (சத்ரிய தர்மம் என்ற பெயரில்) சென்று விட்டான். ஞானிகள் காட்டிய நிலைகள் மாறிவிட்டது.

1.தனக்குள் ஆட்சி புரியும் உயிரைப் பற்றிய உண்மையை அறியக்கூடிய தகுதி மனிதனுக்கு மட்டும்தான் உண்டு
2.அப்படி அறிந்தவன் தான் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக அழியாத நிலையில் வாழுகின்றான்.

அதனால் தான் குருநாதர் அந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியை… அந்த வலிமையான சக்தியை… மனிதனுடைய ஆறாவது அறிவு என்று சொல்லுகின்றோமே… முருகன் அதைக் காதலிப்பதாக “கந்த புராணத்தில் உள்ள உண்மையை” துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் காதலிக்க வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகின்றார்கள்.

ஆகவே… கைகேயி என்பது பாதுகாக்கும் சக்தி அல்ல. தன்னைக் காக்க மற்றதை வீழ்த்தும் சக்தி. அது மனித உருபெற்ற எண்ணத்தையே ஆட்சிக்கு வராது செய்கிறது என்று இராமனைக் காட்டிற்கு அனுப்பச் சொல்கிறது.

1.ஆனால் வள்ளி என்பது பாதுகாக்கும் சக்தி… எதை…?
2.மனிதனுடைய நிலையில் உயிரான்மாவைக் காக்கும் சக்தி.

மற்ற உயிரினங்கள் உடலைக் காக்கும் சக்தியில் பரிணாம வளர்ச்சி அடைகின்றது. மனிதன் ஆறாவது அறிவு கொண்டு உடலை உருவாக்கிய உயிரை உணரக்கூடிய சக்தி பெற்றவன்.

இந்தப் பாதையைத்தான் குருநாதர் நமக்குக் காட்டி உயிரான்மாவைக் காக்கும் சக்தியாகக் கார்த்திகேயா என்று காட்டி அந்த வலிமையான சக்தியை “வள்ளியை அவன் காதலித்தான்…” என்று காட்டுகின்றார்கள்.

குரு உணர்த்திய அருள் வழி – குரு பலம்

குரு உணர்த்திய அருள் வழி – குரு பலம்

 

குருதேவர் ஒருமுறை எம்மை ஆனைமலைக் காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்று இத்தனாவது மைலில் இன்ன மரத்தில் இது போன்று இருக்கும் மச்சத்தை, (ஒரு அடையாளம்) எடுத்து வா என்று சொல்கிறார்.

அவர் சொன்ன நேரம், மாலை ஆறு மணி இருக்கும். அந்த நேரங்களில் காட்டு மிருகங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆகவே, குருதேவர் சொன்னை இடத்திற்கு எவ்வாறு செல்வது…? என்று பயந்தோம்.

நான் எது சொன்னாலும் செய்வேன்…! என்று சொன்னாயே இபொழுது “முடியாது” என்று சொல்கிறாயே “மறுக்காதே… சென்று வா” என்று கூறினார்.

யாமும் பயந்தபடி சிறிது தூரம் நடந்தோம். பிறகு “இங்கே வா…” என்று எம்மை அழைத்தார்.

அழைத்தவர் எம்மை அருகில் நிறுத்தி “சில ஆற்றல்களை…” யாம் பெறும் வண்ணம் உபதேசங்களைக் கொடுத்து இப்பொழுது நான் சொல்லிக் கொடுத்தவைகளை உபயோகப்படுத்து. எதிரே தெரியும் மரம் கீழே சாயும்…! என்றார்.

அவ்வாறே, அவர் சொல்லிக் கொடுத்தவைகளை எதிரே தெரியும் மரத்தின் முன் செய்ய அந்த மரம் கீழே சாய்ந்தது. பிறகு குருதேவர் “இப்பொழுது காட்டினுள் செல்… நான் சொன்னதை எடுத்து வா…!” என்றார்.

எமக்கு, இப்பொழுது தைரியம் பிறந்தது. துணிவுடன் காட்டினுள் நடந்தோம்.

ஏற்கனவே வேட்டைக்காக காடுகளுக்குள் சென்ற அனுபவம் எமக்கு உண்டு. யானைகள் அருகே நடமாடும் பொழுது கீழே காற்று வராது, மரக்கிளைகள் அசையும் ஒலி கேட்கும்.

அந்த அறிகுறிகளை வைத்து, யானைகளின் நடமாட்டத்தின் தூரத்தைக் கணிப்போம். இதனை அடிப்படையாகக் கொண்டு யாம் நாலாபுறமும் கவனித்தவாறே சென்று கொண்டிருந்தோம்.

உற்றுக் கவனிக்கும் பொழுது தூரத்தில்… யானைகள் காதை ஆட்டாமல் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்ததைக் கவனிக்க நேர்ந்தது.

இருந்தாலும் எமக்கு நிறைய தைரியம் இருந்தது. ஏனென்றால் யாம் விரலை அசைத்தால் போதும் எதனையும் கீழே சாய்க்கும் வலிமை உள்ளதே என்ற நம்பிக்கை.

இந்த நம்பிக்கையுடன் யாம் முன்னேறிச் சென்று கொண்டிருந்தபோது, குருதேவர்… “ஏய் தெலுங்கு ராஜ்ஜியம்…!” என்று ennaik கூவி அழைத்தார்.

குருதேவர் எம்மைத் திட்ட வேண்டும் என்று கருதினால் “தெலுங்கு ராஜ்ஜியம்…” என்றுதான் திட்டுவார். இப்பொழுதும் “தெலுங்கு ராஜ்ஜியம்” எங்கே போகிறாய்…? என்று கேட்டார்.

“நீங்கள் சொன்ன மச்சத்தை எடுக்கச் செல்கிறோம் என்றோம்…” யாம்.

இப்பொழுது நீ என்ன நினைத்தாய்…? என்று கேட்டார்.

அதற்கு யாம் “நீங்கள் கொடுத்த ஆற்றலைக் கொண்டு… யானைகளைச் சாய்க்கப் போகிறேன்…” என்று பதில் கூறினோம்.

அதற்கு குருதேவர்… “நீ இப்பொழுது யார் வீட்டிற்குள் செல்கின்றாய் என்று தெரிகின்றதா…? நீ வாழும் வீட்டில் அந்நியன் ஒருவன் நுழைந்து விட்டால் உனக்குக் கோபம் வருமல்லவா…! அதைப் போன்றுதான் யானைகளுக்கும்…! அது வாழும் காடுதான் அதற்கு வீடு.. அவ்வாறு இருக்கையில் அதனுடைய வீட்டிற்குள் சென்றால், அதற்குக் கோபம் வருமல்லவா…?

நீ உன்னுடைய காரியமாகச் செல்கின்றாய்.
1.உனக்குள் வலிமை இருக்கின்றது என்ற காரணத்தினால் பிறிதொன்றை வீழ்த்திவிடும்… அழித்துவிடும் எண்ணம் கொள்வாயானால்…
2.அந்த எண்ணம் உனது உயிரான ஈசனால் இயக்கப்பட்டு
3.அந்த உணர்வின் சக்தி, உன் உடல் முழுவதும் படருகின்றது.
4.இதனால் உனக்குள் உள்ள நல்ல சக்தியை இழக்கின்றாய்.

நீ யானையிடம் இருந்து தப்பித்தாலும்… அதைக் கொன்று விடவேண்டும் என்று அதன் மீது ஆற்றலை உபயோகப்படுத்திய உணர்வின் சத்து உனக்குள் சென்று “உன்னுள் உள்ள நல்ல உணர்வுகளை மாய்க்கும் விதத்தை அறிந்து கொள்…! என்று அங்கே உணர்த்துகிறார்.

எமக்கு ஒன்றும் புரியவில்லை…! வலிமை இருக்கிறது என்று மற்றொன்றைக் கொல்ல முற்படக்கூடாது. ஆனால் வருகின்ற ஆபத்திலிருந்து எப்படித் தப்பிப்பது…? என்று குழம்பினோம்.

அதற்கு குருதேவர்… “இவ்வளவு பெரிய ஆற்றல் உனக்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதனை நீ மற்றொன்றை மாய்த்திடும் நிலைக்கு பயன்படுத்துவேயானால் உன் உணர்வுகள் எங்கே போகும்…?

எவ்வாறு நீ உனக்கு உணர்த்திய உணர்வின் ஆற்றல்களை பெறப் போகின்றாய்…? என்று அவர் கேட்கிறபொழுதுதான்… என்ன செய்வது…? என்று தெரியாமல் “குருவை மறந்துவிட்டது…” நினைவுக்கு வருகின்றது.

1.குரு அருளின் துணை கொண்டு செயல்பட வேண்டிய நாம்
2.குரு நமக்குப் பெரும் ஆற்றல் கொடுத்திருக்கிறார் என்று அதைப் பெரிதாக எண்ணி குருவை மறந்து
3.பிறிதொன்றை வீழ்த்திடும் அசுர உணர்வைத்தான் எண்ண முடிந்ததே தவிர…
4.என்னால் நல்ல உணர்வை அங்கே எண்ண முடியவில்லை…! என்பதை நிதர்சனமாகவே காட்டுகின்றார்.

யானையிடமிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும்…? என்று எண்ணி கண்ணை மூடித் தியானிக்கும் பொழுது அதனின் உணர்வலைகளை அறிய நேரிடுகின்றது.

அதாவது…
1.யானையின் மணத்தை நுகர்…! அதனின் உணர்வின் சக்தி உனக்குள் சேரும்.
2.யானைக்கும் உணர்வின் ஆற்றலை உணரும் சக்தி உண்டு.
3.அப்பொழுது அதனின் மணத்தை நீ நுகரும் பொழுது அதனின் சம எடையாக வருகின்றாய்.
4.அதனால், யானை உன்னை ஒன்றும் செய்யாது…! என்று கூறுகிறார்.

பிறகு யானையின் மணத்தை என்மீது பரவச் செய்கின்றார்.

யானைகள் காதை விடைத்துத் தூக்கி விட்டால் அது கோபத்தில் இருக்கிறது… ஆளைப் பிடித்துக் கொன்றுவிடும் என்பது பொருள். யாம் அதே சிந்தனையில் இருந்து கொண்டிருக்கின்ற பொழுது எம்மை உரசியவாறே சுமார் 13 யானைகள் கடந்து செல்கின்றன.

அப்பொழுது குருதேவர் சொல்கின்றார்,
1.நீ எதை எதனுடைய நிலைகளில் வலுப் பெறச் செய்ய வேண்டும்…? குரு காட்டிய வழி எது…?
2.குருவினுடைய சக்தியை உணர்ந்து கொண்டாய் என்றால் அந்தக் குருவின் துணை கொண்டு எப்படி இயங்க வேண்டும்…? என்பதை உணர்த்தி
3.குருவின் துணையுடன் நீ செயல்படும் பொழுது… “அனைத்தையும் பெறும் தகுதி பெறுகின்றாய்…!” என்றார்.

ஆகவே நீ இவைகளைப் பெற விரும்புகின்றாயா…? அல்லது மற்றொன்றை வீழ்த்திவிட்டு அதனால் உனக்குப் புகழ் தேடும் நிலையும் ஆணவம் பெறும் நிலையும் பெற விரும்புகின்றாயா…? என்று கேட்டு எதைப் பெற வேண்டும்…? என்று உணர்த்தி அருளினார்.

பிறகு குருதேவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மச்சத்தை எடுத்து வர நடந்தோம். அவர் சொன்ன விதமே, இருந்த மச்சத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வருகின்ற பொழுது… எமக்கு எதிரே “மலைப்பாம்பு…” ஒன்று ஊர்ந்து வரக் கண்டோம்.

அது சீறி வரும் நிலையைக் கண்டு எமக்குள் இருந்த தைரியம் குறைவதை அறிகின்றோம். யானைக்கு ஒரு விதமாகத் தப்பித்தோம் இந்தப் பாம்பிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பது…? என்று சிந்தித்தோம்.

இதையும் குருவின் பலம் கொண்டுதான் சமாளிக்க வேண்டும் என்று எண்ணுகையில்
1.குரு எமக்குள் அந்தப் பாம்பைக் கண் கொண்டு பார்த்து
2.நீ எந்த உணர்வை அதன் மேல் செலுத்துகின்றாயோ அந்த உணர்வின் அலைகள் அதன் பாதையைத் திசை மாறச் செய்யும்..
3.அப்பொழுது அதன் மீது “பரிவின் எண்ணம் கொண்டு… அது நகர்ந்து செல்ல வேண்டும்…” என்ற எண்ணத்தைப் பாய்ச்சு…! என்று உணர்த்துகிறார்.

அவ்வாறே அதைக் கண் கொண்டு பார்த்து, உணர்வின் தன்மையை குரு வழி கொண்டு அதன் மீது செலுத்துகின்ற பொழுது அப்பாம்பானது விலகிச் செல்கின்றது. மச்சத்தை இறுகப் பிடித்தவாறே வருகின்றோம்.

இவைகளெல்லாம் நம் குருதேவர் நம் அனுபவத்திற்குக் கொடுத்து
1.மனிதருடைய எண்ணத்திற்கு உள்ள வலிமையையும்
2.மனிதர் தாம் எடுத்துக் கொண்ட உணர்வை உயிர் இயக்கும் விதங்களையும்
3.உணர்வின் தன்மை நமக்குள் உணர்வின் வித்தாக விளைந்து அதை எண்ணத்தால் எண்ணப்படும் பொழுது
4.அது நம்முடைய செயலாக ஆக்கம் பெறுகின்றது என்பதைக் காட்டுக்குள் அழைத்துச் சென்று உணர்த்தினார்.

சொந்தமில்லாத உடலுக்காக “உன் மனதை ஏன் வாட்டுகின்றாய்…?” என்றார் குருநாதர்

சொந்தமில்லாத உடலுக்காக “உன் மனதை ஏன் வாட்டுகின்றாய்…?” என்றார் குருநாதர்

 

ஒரு சமயம் நான் காட்டுக்குள் செல்லும் பொழுது எத்தனையோ விபரீத நிலைகள் ஏற்படுகின்றது. அப்பொழுது எனக்குள் பயம் உருவாகின்றது.

என் பெண்டு பிள்ளைகளெல்லாம் ஊரில் இருக்கின்றதே… அவர்களை நான் எப்படி பாதுகாப்பது…? அவர்கள் என்ன ஆனார்களோ…? என்ற இந்த எண்ணம் வருகிறது.

அப்பொழுது இமயமலையிலே நான் இருக்கிறேன். பனி உறையும் இடத்திலே குருநாதர் என்னை இருக்கச் செய்திருக்கின்றார். வீட்டு ஞாபகம் வந்ததும்… குருநாதர் சொன்ன நிலையை மறந்தபின் எனக்குள் குளிர் தாங்க முடியவில்லை.

காரணம் அவர் சொன்ன உணர்வை நான் எடுத்தேன் என்றால் குளிர் தாக்காது என்னைப் பாதுகாக்கும் சக்தி வருகின்றது. ஆனால்…
1.குடும்பப் பற்றை நான் எண்ணி எடுக்கும் பொழுது குளிரின் தன்மை அதிகமாகி உடலே இறையத் தொடங்கியது
2.இன்னும் ஒரு நொடியானால் என் இரத்தமே உறைந்துவிடும்… பின் மடிந்துவிடும் நிலையே வரும்.

ஆகவே என் ஆசை எதிலே நிற்கின்றது…? என் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்… அப்படி இருக்க வேண்டும்… இப்படி இருக்க வேண்டும்…! என்று எண்ணுகின்றேன்.

ஆனால் அவ்வாறு எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் குருநாதர் என்னிடம்… “நீ இதையெல்லாம் எண்ணுகின்றாய்…! இந்த உடலை விட்டுப் போய்விட்டால் நீ எதைச் செய்யப் போகின்றாய்…?

1.இதற்கு முன்னாடி இருந்தவர்கள் (வாழ்ந்தவர்கள்) ஆசைப்பட்டவர்கள் எல்லாம் இருக்கின்றனரா…?
2.இந்த வாழ்க்கையில் உனக்கு பொன்னடி பொருளும் எது சொந்தமாகின்றது…?
3/எதுவுமே சொந்தமில்லை… ஆக… “சொந்தமில்லாததற்கு, ஏன் இந்த மனதை நீ வாட்டுகின்றாய்…?”

மேலும் குருநாதர் என்னிடம்… அவர்கள் நலம் பெற வேண்டும் அருள் ஒளி பெற வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்ற உணர்வை உனக்குள் உயர்த்து…! இந்த உணர்வின் நினைவாற்றல் அவர்களை இயக்க உதவும், அது வலுவான நிலைகளை அங்கே உருவாக்கும்.

நீ இப்பொழுது இங்கிருக்கும் நிலைகள் வேதனையும், வெறுப்புமேயானால் உன் உடலைச் சார்ந்தவர் உணர்வுகளிலும் இது பாயும்.

நண்பனுக்குள் “நன்மை செய்தான்…!” என்று எண்ணும்போது விக்கலாகின்றது… நன்மை நடக்கின்றது.

நண்பனுக்குள் பகைமை என்ற உணர்வுகள் தோன்றும் பொழுது “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… உருப்படுவானா…?” என்று எண்ணினால் உணவு உட்கொண்டாலும் புரை ஓடுகின்றது. ஒரு தொழில் செய்தாலும் அங்கே சீராகச் செய்யாதபடி தவறுகள் நடக்கின்றது.

ஆகவே உன் குழந்தைகள் உயர்ந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்றும் அருள் ஒளி பெற வேண்டும் என்று அருளை நினை. உனக்குள் அதைப் பெருக்கு இந்த உணர்வைப் பாய்ச்சு.
1.இந்த உடல் உனக்குச் சொந்தமில்லை…
2.அவர்களுக்கும் சொந்தமில்லை.

இன்று எந்தச் செல்வம் தேடி வைத்தாலும் இப்பொழுது உன் உயிர் இறைந்தது. நீ இந்த உடலை விட்டுப் போய்விட்டால் இந்தப் பொன்னடி பொருளைப் பற்றி நீ நினைக்கப் போகின்றாயா…? அல்லது அவர்களைக் காக்கப் போகின்றாயா…?

இந்த உணர்வை நீ எண்ணப்படும் பொழுது எதை நிலை கொள்ள வேண்டும்…? எவ்வாறு நீ இயக்க வேண்டும்…? என்பதைக் குருநாதர் அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்.

இந்த உடல் வாழ்க்கையில்…
1.சொந்தமில்லாத உடலுக்காக நாம் சொந்தம் கொண்டாட வேண்டியதில்லை.
2.சொந்தம் கொண்டாட வேண்டியதெல்லாம் அருள் ஒளி என்ற உணர்வை இணைத்து
3.இந்த உடலே “உணர்வுடன் ஒளியின் உணர்வாகப் பெறும்” அதைச் சொந்தமாக்க வேண்டும்.

அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வைக் கூட்டிப் பேரொளி என்ற உணர்வினை நமக்குள் சொந்தமாக்கிடல் வேண்டும்.

ஆறாவது அறிவான கார்த்திகேயா என்ற தெரிந்திட்ட உணர்வு கொண்டு நஞ்சினை நீக்கி அருள் ஒளியை உருவாக்கிநால் என்றும் பேரின்ப நிலைகளாக நாம் நுகரும் உணர்வை உயிரான ஈசன் உருவாக்குகின்றான்.
1.ஈசனுடன் சேர்ந்து என்றும் ஒளி என்ற உணர்வை
2.நாம் ஏகாந்த நிலைகள் கொண்டு பிறவியில்லாத நிலை அடைவதே நமது கடைசி எல்லை.

ஆகவே அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வைச் செலுத்து…! அவர்களை இயக்க இது உதவும்.

ஆனால் அவர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நீ வேதனைப்பட்டால் உன்னையும் அழிக்கும். அதே உணர்வுகள் அவர்களையும் அழிக்கும். ஆக நீ எண்ணியது எதுவோ அது தான் நடக்கின்றது.

அவர்கள் வேதனைப்படுகிறார் துன்பப்படுகிறார் என்று எண்ணும் பொழுது அவர்கள் துன்பத்தை அனுபவிக்கின்றனர். அதே துன்பம் உனக்குள்ளும் விளைகின்றது. நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகின்றாய்.

1.அவர்கள் அருள் ஒளி பெற வேண்டும் நலம் பெற வேண்டும் என்ற இருளை நீக்கிடும் உணர்வை எடுத்தால்
2.உன் உயிரான ஈசன் அதையே உனக்குள் உருவாக்குகின்றான்.
3.அதன் வழி நீ அதுவாகின்றாய்… அவர்களும் அதன் நிலை பெற்று அவர்களும் நலமாவார்கள்.

ஆகவே இதை மறந்திடாது இந்த உடலின் சொந்தத்தை நீ கொண்டாடாதே…! அருள் ஒளி என்ற சொந்தத்தை வளர்த்திடும் உணர்வை நீ உனக்குள் ஒளியின் சரீரமாக உருவாக்கு. பிறவியில்லா நிலை என்ற நிலை அடை.

உடல் என்ற நிலைகளில் வளர்த்த செல்வம் எதுவும் நம்முடன் வருவதில்லை. அதே சமயம் நல் உணர்வு கொண்டு என் குழந்தை சீராக வளர வேண்டும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதன் உணர்வுகள் அவன் அந்த அருளைப் பெறும் சக்தியும் நீ கொடுத்த செல்வத்தையும் அவன் காப்பான்.

ஆனால் நீ அந்த வேதனை என்ற உணர்வெடுக்கும் போது… தந்தை என்ற நிலையில் நீ எண்ணினால், உன் குழந்தையும் இந்த வேதனையைத்தான் சுவாசிக்கும். அதில் வந்த செல்வத்தைக் காக்கும் திறன் இழந்துவிடும்… அவனும் அனுபவிப்பதில்லை.
1.ஆகவே நீ எதனைச் சொந்தமாக்கப் போகின்றாய்…? என்று
2.இவ்வாறு அந்த இமயமலையில் பல உணர்வுகளை அறியும்படிச் செய்தார்.

ஆகவே நாம் என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையைச் சொந்தமாக்குவோம். நம் உயிரான ஈசனுடன் ஒன்றி வாழ்வோம்.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதன் உணர்வின்படியே நம்மை உயிர் இயக்குகின்றான் என்று இப்பொழுது உணர்ந்தோம்.

இனி அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்ப்போம் என்றும் ஏகாந்த நிலையாகப் பிறவியில்லா நிலையை அடைவோம்.

நம் பார்வையில் பகைமை உணர்வு ஓடவேண்டும் நஞ்சு கொண்டோர் உணர்வுகள் நீங்க வேண்டும் என்று
1.அருள் ஒளியை நமக்குள் பெற்றோம் என்றால் நம் பார்வை, பிறருடைய நஞ்சைப் போக்கும்.
2.அவருடைய நஞ்சான உணர்வு நமக்குள் வராது.

அருள் ஒளி பெறுவோம் இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம். இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வாக என்றும் எகாந்த நிலையில் வாழும் அந்த அருள் சக்தியைப் பெறுவோம்.
1.உயிருடன் ஒன்றியே நாம் நிலைத்து வாழ்வோம்.
2.என்றும் எதனையும் அறிந்திடும் உணர்வுடன் வாழ்வோம்.
3.எல்லாம் ஏகாந்தம் என்ற நிலையில் வாழ்வோம்.
4.பகைமையற்ற உணர்வுடன் வாழ்வோம்.
5.பகைமையான உணர்வுகள் சேராது அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் உருவாக்குவோம்.

“உயிர் வழியாக (புருவ மத்தி) எடுத்துத் தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்

“உயிர் வழியாக (புருவ மத்தி) எடுத்துத் தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்

 

ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கிருக்கக்கூடிய தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து “அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்…” என்று ஞானிகள் காட்டிய வழியில் எண்ணினால் நாம் தெய்வமாகின்றோம்.

ஆனால் அப்படி நாம் நுகர்வதில்லை. யாரும் நமக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கவும் இல்லை.

தெய்வத்திற்குச் சந்தனத்தை அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் “அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெற வேண்டும்” என்று நினைக்கின்றோமா…? என்றால் இல்லை.

சாமி மேல் பல விதமான மலர்களைப் போட்டிருக்கின்றார்கள். அப்பொழுது “மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?” என்றால் இல்லை.

சாமிக்கு மலரைப் போட்டு அலங்கரித்து அர்ச்சனை செய்யும் பொழுது நமக்குள் இருக்கும் “கஷ்டங்கள் எல்லாம் கிளர்ந்து எழுகின்றது…”

உதாரணமாக ரோஜாப்பூ நறுமணமாக இருக்கப்படும் பொழுது மற்ற தீமையான மணங்களை அதன் அருகிலே விடுவதில்லை. அதே போல தீமையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே பெருகி இருக்கப்படும் பொழுது நல்ல மணங்களைக் கண்டால் அருகே விடுவதில்லை. கண்களிலே தண்ணீர் தான் வருகின்றது.

சாமி மேல் போட்டிருக்கும் ரோஜாப் பூவைப் பார்த்தாலும் சரி மற்ற அர்ச்சனை அபிஷேகங்களைப் பார்த்தாலும் சரி பார்த்தவுடனே கண்ணிலே தண்ணீர் தான் வருகின்றது.

ஏனென்றால்
1.எதிர்மறையான உணர்வுகள் மோதியவுடன்
2.இப்படி எல்லாம் எனக்குக் கஷ்டம் வந்துவிட்டதே…! என்று தன்னை அறியாமலே கண்ணில் நீர் பெருகும்.

அங்கே தெய்வச் சிலையை பார்க்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வு வருவதில்லை. நமக்கு இடைஞ்சல் செய்தவர்கள் உணர்வுகள் முன்னணியில் வந்துவிடுகிறது.

காரணம் இந்த ஆன்மாவிலே நாம் சுவாசித்த உணர்வுகள் இருக்கப்படும் பொழுது இதுவே கண்களிலும் வருகின்றது.
1.ஆன்மாவிலே பட்டதை நுகரப்படும் போது உயிரிலே பட்டு உணர்வுகள் புலனறிவில்…
2.உடலுக்கும் சரி
2.கண்ணுக்கும் சரி
3.சொல்லுக்கும் சரி
4.வாசனைக்கும் சரி
5.நல்ல வாசனையை அது எடுக்க விடாது.

தெய்வ குணம் பெற வேண்டும்… தெய்வமாக நாம் ஆக வேண்டும்…! என்று ஞானிகள் காட்டிய முறைப்படி ஆலயத்தில் யாரும் நினைப்பதில்லை.

உயர்ந்த சக்திகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எப்படி எப்படியோ ஞானிகள் நமக்கு வழிபடுத்தி உள்ளார்கள்.
1.அந்த ஞானிகள் உணர்வை நமக்குள் பதிவு செய்யப்படும் பொழுது
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காற்றிலிருந்து அந்த அருள் சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்.
3.மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
4.புருவ மத்தி வழியாக எண்ணி உடலுக்குள் கொண்டு சென்று தீமைகளைப் பிளத்தல் வேண்டும்.

அப்படிப் பிளந்தால் தான் தீமைகள் அகலும்.

தீமைகளை அகற்றிடும் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கும் முறை என்பதே…
1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டி
2.அதன் வழி கூடி உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்தி எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்.

தொட்டுக் காட்டுதல்

தொட்டுக் காட்டுதல்

 

யாம் உபதேசிக்கும்போது கூர்மையாகக் கவனிக்கின்றீர்கள்.
1.இந்த உணர்வைக் கண்ணின் கரு விழி உங்களுக்குள் படமாக்குகின்றது… பதிவாக்குகின்றது.
2.சொல்லக்கூடியதைக் காந்தப்புலன் அறிவுகள் உள்ளே இழுக்கின்றது.

அன்று நான் குருநாதரைச் சந்தித்துப் பெற்ற உணர்வுகளை எடுத்து உங்களுக்குச் சொல்லும் பொழுது “கண் வழியாகவும் சொல்வழி கூடியும்…” வெளிப்படுகின்றது. “மூலக்கூறுகளை…” குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதை அப்படியே உங்களுக்குக் கொடுக்கின்றேன்.

இங்கே வந்து எம்மைச் சந்தித்தவர்களுக்கு மட்டுமல்ல…! இதைக் கேட்டுணர்ந்தோர்… படித்துணர்ந்தோர்… பல பாகங்களில் மற்றவருடன் பழகப்படும் பொழுது
1.சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லம் எங்கே எந்தக் குறைகளை நீங்கள் கண்டாலும்
2.நம் குரு அருளின் தன்மை அங்கே குறைகளை நிவர்த்திக்கும் உணர்வலைகளாகப் பாயும்.
3.குறைகளை அணுக விடாது… உங்களுக்குள் அருள் உணர்வுகளைப் பெறச் செய்யும்.

அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

உதாரணமாக ஒருவர் நம்மைக் கேவலமாகப் பேசுகிறார்கள். அந்த உணர்வு நமக்குள் பதிவாகி விட்டால் அவர்கள் உணர்வை மீண்டும் நமக்குள் கவரத் தொடங்கும். அப்பொழுது அது நம்மை இயக்காமல் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

அந்தத் தடைகளை விதிப்பதற்கு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று நம்முடைய எண்ணம் அவர்களுடைய உணர்வு நமக்குள் வராதபடி அதைத் தணிக்க வேண்டும்.

1.அதற்காகத்தான் இயக்கத்தின் உண்மை நிலைகளை விரிவாக்கப்பட்டு உங்கள் நினைவாற்றலுடன் இதைப் பதியச் செய்வது.
2.இது தான் தொட்டுக் காட்டுதல் என்பது.

பொட்டிலே தொட்டுக் காட்டுதல் என்று மற்றவர்கள் சொல்லும் பொழுது “அவர்கள் தொட்டுக் காட்டுகின்றார்கள்…! அங்கே பதிவாகின்றது…” ஆனால் தொட்டுக் காட்டிய “மனிதனுடைய நினைவு தான்” அங்கே வரும்.

ஆனால் நாமோ குருநாதர் கொடுத்த அந்த உணர்வின் சக்தியை
1.மகரிஷிகள் ஞானிகள் எதைப் பெற்றார்களோ அதை ஒவ்வொரு உணர்வுகளிலும் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளைப் பதிவு செய்கின்றோம்.
2.நமக்குள் எத்தனையோ கோடி குணங்கள் உண்டு… அதில் எத்தனையோ வகைகள் உண்டு.
3.அதற்குள் ஞானிகள் உணர்வை இணைக்க வேண்டும்
4.அப்படி இணைத்தால் உங்களுக்குள் அது கருவுற்று ஞானிகள் உணர்வோடு வளர்வதற்கு இது உதவும்.

ஏனென்றால் பத்திரிக்கையையோ டிவியையோ பார்த்தால் உடனே மனம் மாறுகிறது. பக்கத்து வீட்டுக்காரருடைய செயலைப் பார்த்தால் மனம் மாறுகின்றது.

தியானத்தைக் கடைபிடிப்பவர்கள் எத்தனையோ பேரைப் பார்க்கின்றோம் அவர்கள் வீட்டிற்குள் சென்றால்… வீட்டிலே வேறு விதமாக இருப்பார்கள். எல்லோரும் அங்கே ஒன்று சேர்ந்திருப்பார்களா…? யாரோ ஒருத்தர் எதிர்மறையாக இருப்பார்.

தியானத்திற்குப் போகின்றாராம்… ஏதோ அள்ளிக் கொட்டுகின்றாராம்…! என்று நாம் அங்கே போய் உட்கார்ந்திருக்கும் பொழுது பேசுவார்கள்.

என்னடா…! இப்படிப் பேசுகின்றார்கள்…? என்ற உணர்வுகள் வந்து விட்டால் நாம் எதன் மீது பற்றாக இருக்கின்றோமா… அதைக் குறை கூறும் பொழுது இந்தக் குறைகள் அதிகமாக வளர்ந்து விடுகிறது.

நம்முடைய வளர்ச்சிக்கு அதுவே தடையாகின்றது. இப்படியும் நமக்குள் வருகின்றது.

ஆகவே இந்தத் தீமையின் விளைவுகள் உங்களுக்குள் வராதபடி தடுக்க
1.மகரிஷிகளின் உணர்வுகளை உங்களுக்குள் செலுத்தி இதை வலுப்பெறச் செய்து
2.அவர்கள் எப்படியும் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த நினைவாற்றல் நமக்குள் உருவாக வேண்டும்.
3.அப்பொழுது நம் நினைவலைகள் அங்கே படரும்… நம்மையும் பாதுகாக்கும்
4.அவர்கள் நம்மை எண்ணினால் அங்கே ஊடுருவி அவர்களை மாற்றும் நிலைக்கும் வரும்.
5.அவ்வாறு மாற்றும் சக்தியைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து நல்ல சக்தியாக பூமியிலே பரப்பவும் செய்யும்.

மற்றவர்களுக்கும் அது நல்ல உணர்வை ஊட்டும்…!