காஷாயம் பூண்டு… மந்திரங்கள் ஓதி.. சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை – ஈஸ்வரபட்டர்

காஷாயம் பூண்டு… மந்திரங்கள் ஓதி.. சாமியார் என்று பெயருடன் பெறுவதல்ல ரிஷித் தன்மை – ஈஸ்வரபட்டர்

 

நீரை உண்டு பூமியின் சத்தெடுத்துத் தாவரம் வளர்ந்து அந்தத் தாவரங்களில் புழு பூச்சிகள் உண்டாகின்றது. அத் தாவரத்தில் பூக்கள் பூத்துப் பூக்களின் சுவையை அத்தாவரத்தில் வளர்ந்த வண்டுகளே அதற்குகந்த சுவை சத்தான தேனைப் புஷ்பங்களிலிருந்து பெற்று தேன் என்ற சுவை கொண்ட திரவகம் கிடைக்கின்றது.

இதைப் போன்று இதை ஒத்த ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்ட நீரைக் கொண்டு அதனதன் வளர்ப்புப் பலன் பெறுகின்றது.

இப்படி இக்காற்று அமிலத்தில் பூமி சுழற்சி காற்று மண்டலத்தில் இந்தப் பூமி சமைத்த அமிலக்கூறுகளின் வளர்ப்பு நிலைக்கொப்ப பூமியின் சத்து நிலை ஒன்றின் தொடர்பு கொண்டு ஒன்றொன்றும் அதன் தொடர்ச்சியில் மாற்றுத் தன்மைகள் பெறுகிறது.

மாற்றங்கள் பெற்றாலும்…
1.இந்தப் பூமியின் அமிலக்கூறே இப்பூமியின் ஈர்ப்புக்குகந்த பூமியுடன் தொடர்பு கொண்ட மற்றக் கோள்களின் சத்தெடுத்து
2.அச்சத்துத் தன்மையை பூமி சமைத்து ஆவியாக்கி அமிலமாக்கி நீராக்கி
3.பூமி வளரும் வளர்ப்பிற்கு தன் சமைப்பின் சத்தைக் கொண்டு பூமி வளர்ந்து
4.பலதையும் கொண்டு அவை அவை வாழ்கிறது.

அதைப் போல் இச்சரீரக் கோளத்தில் எண்ணத்தின் ஞானம் கொண்டு சுவாசத்தால் பெறும் சத்துத் தன்மையைக் கொண்டு
1.தனக்கு வேண்டிய உயர்ந்த சத்துக் குணத்தை எத்தன்மையில் பெற முடியும்…? என்று
2.ஞான சக்தியைக் கொண்டு உணரும் ஆற்றல் தொடர்பினால் எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால்
3.உடலை விட்டுப் பிரிந்த முன்னோர் தொடர்பும் ஞானிகள் சித்தர்கள் சப்தரிஷிகள் வளர்ந்த வளரும் சூரியக் குடும்பங்களின் தொடர்பையும் பெறலாம்.

இந்தப் பால்வெளி அண்டசராசரங்கள் எதுவாகிலும்… எண்ணத்தால் அவற்றுடன் நம் உணர்வின் தொடர்பைச் செலுத்தி.. ஞானத்தின் செயல் அலைக்குச் சுவாசத்தால் இந்த உடலின் அணுத் தன்மையை நாம் எண்ணும் நிலைக்கொப்பச் சத்தாக்கிக் கொள்ளலாம்.

அச்சத்தின் பலனால் ஆத்ம வளர்ப்பை நாம் வளர்க்க சுவாசத்தின் மோதலினால்
1.கவன நரம்பின் காந்த ஈர்ப்புச் சக்தியைக் கொண்டு
2.அவை மோதி வளரும் வளர்ச்சியால்..
3.இந்த எலும்புக்கூடு கூறு அனைத்திற்குமே வலுவாக்கிட முடியும்.

அதிலே… முதலில் இச்சிரசு பாகம் காந்த மின் சக்தியின் வளர்ச்சியைக் கொண்டு மேல் நோக்கி நேராக எடுக்கும் சுவாசத்தால் நாம் பதிய வைக்கும் அலைத் தொடர்பு அனைத்துமே சுவாசத்தின் உணர்வால் சரீர எலும்புகளின் வளர்ச்சி அடையும்.

அந்தச் சத்தின் பலனாக ஆத்ம உயிர் வலு சரீர இயக்கத்தால் எண்ணத்தின் தொடர்புடனே ஆரம்பத்தில் எடுத்த சுவாச அலையின் வளர்ப்புத் தன்மையில் வலுக் கொண்ட அடுத்த வளர்ச்சியாக ஆத்மாவின் இயக்கத்தைத் தனித்து இயங்கவல்ல இயக்கத் தொடர்பிற்குச் செயலாக்க முடியும்.

தனித்து இயங்கும் நிலை பெற்று ஒவ்வொன்றையும் சித்தின் தன்மை கொண்டு ரிஷித் தொடர்பில் வளர்ச்சியாகி… ரிஷித் தன்மை கொண்டு இந்த வாழ்க்கையில் வாழும் தொடர்பிலேயே அதைப் பெறுதல் வேண்டும்.

ஆனால் காட்டிலிருந்தும்… ஜடா முடி தரித்தும்… சாமியார்கள் என்ற காஷாயம் பூண்டு… ஜெப மந்திரம் ஓதி பகவானின் அடிமையாக அடி பணிந்து அடைவதல்ல ரிஷித் தன்மை…!

ஞானத்தின் தொடர்பலையால் சுவாசத்தால் பெறும் உயர் காந்த சக்தியின் தொடர்பை
1.இச்சரீரம் எடுத்துச் சமைக்கும் காலங்களில் அடையக்கூடிய இன்பமும் உடல் ஆரோக்கியத் தன்மையும்
2.இனிமை கலந்த உயர் அலையின் சுழற்சியாக
3.தாம்பத்ய வாழ்க்கை இனிய அன்பு நற்குணத் தொடர்பால் பெறவல்ல இனிய சக்தியைக் கொண்டே
4.உலக சிருஷ்டியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் மனித எண்ண உணர்வு செயலுக்குத்தான் உண்டு.

குருநாதர் சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…! என்ற நிலைக்கு நீங்கள் வரக்கூடாது

குருநாதர் சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…! என்ற நிலைக்கு நீங்கள் வரக்கூடாது

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வினையாக (அணுக்களாக) உடலிலே எப்படிச் சேர்கின்றது…? வினைக்கு நாயகனாக நம் செயலை எல்லாம் எப்படி மாற்றுகின்றது…? என்று இந்த உணர்வின் எண்ணங்களை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் விளக்க உரைகளைக் கொடுத்துக் கொண்டு வருகின்றேன்.

ஆனால் இதை எல்லாம் கேட்டுவிட்டு
1.சாமி (ஞானகுரு) பிரமாதமாகச் சொல்லி விட்டார் என்ற எண்ணத்தில் வெறுமனே சென்று விடாதீர்கள்
2.ஒவ்வொன்றிலும் நீங்கள் அந்தத் தெளிவுக்கு வர வேண்டும்.

உபதேசத்தை எல்லாம் கேட்ட பின் “சாமி சொன்னார்…” நாம் இந்தத் தவறை எல்லாம் செய்யக் கூடாது என்று நினைப்பீர்கள். பிற்பாடு என்ன சொல்வீர்கள்…?

கடலில் பெருங்காயத்தைக் கொண்டு போய்க் கரைத்தால் சிறிது நேரம் கம…கம… என்று வாசனையாக இருக்கும். கடலுக்குள் பெருங்காயம் மறைந்தபின்… “ஐய்யய்யோ… வாசனையையே காணோம்…” என்று தான் சொல்ல முடியும்.

அதைப் போல இங்கே இந்த உபதேசத்தின் வாயிலாக
1.அந்த அருள் ஞானிகள் பெற்ற ஆற்றல்களை ஊழ்வினை என்று வித்தாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
2.அந்த ஞானியின் உணர்வுகள் உங்களுக்குள் இயங்கக் கூடிய அனைத்தையும் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.
3.உங்கள் நிலைகளையும் அது என்ன…? என்று உணர்கிறீர்கள்.

ஆனாலும் சிறிது நேரம் சென்றபின் கடலுக்குள் இருக்கும் உப்பின் தன்மை பெருங்காயத்தின் நறுமணத்தை மறைத்து விடுவது போன்று ஆகிவிடுகிறது.

ஏன்…?

உங்கள் வாழ்க்கையில் இதற்கு முந்தி எடுத்துக் கொண்ட விருப்பு வெறுப்பு வேதனை ஆத்திரம் என்ற அந்தக் கைப்பின் (உப்பு) தன்மைகள் அதிகமாகி உண்மையின் நிலைகளைப் புரிந்து கொள்ளாத வண்ணம் அதைத் தடைப்படுத்தும் உணர்வுகளாக வந்துவிடுகிறது.

1.பின்… “சாமி சொல்கிறார்… என்னால் முடியவில்லையே…….!” என்ற இந்த நிலைதான் வரும்.
2.அதை எப்படியும் முடிய வைக்க வேண்டும் என்று நான் உபதேச வாயிலாக வலுப்படுத்துகிறேன்.

ஆனாலும் அதை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக என்ன சொல்வீர்கள்…?

1.சாமி…! எத்தனையோ நல்லதை எல்லாம் நீங்கள் சொன்னீர்கள்… கேட்டேன்.
2.நான் திருந்தி விடலாம் என்று நினைத்தேன்…
3.ஆனால் “என்னை விட மாட்டேன் என்கிறதே…!” என்று பெரும்பகுதியானோர் சொல்கின்றார்கள்.
4.செய்ய முடியவில்லையே… செய்ய முடியவில்லையே…! என்று தான் சொல்கிறார்கள்.

செய்ய முடியவில்லை என்று சொல்வதன் காரணம் என்ன…?

கடலில் கலக்கிய பெருங்காயம் போன்றுதான் நீங்கள் எண்ணும் உணர்வுகள் அமைந்து விடுகிறது.

அதாவது நமக்கு ஏதாவது வந்தால் உடனே கோவிலுக்குச் சென்று சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய வேண்டும். அதிலே மீறி விட்டால் ஜோசியரிடம் சென்று கேட்க வேண்டும். அவர்கள் விவரத்தைச் சொல்வார்கள். தப்பித்துக் கொண்டு வந்துவிடலாம்.

முருகனுக்கோ அல்லது மற்ற தெய்வங்களின் ஆலயத்திற்கோ சென்று சாந்தி செய்து விடு…! என்றும் அங்கே போ… இங்கே போ…! எல்லாம் சரியாகிவிடும்…! என்று சொல்வார்கள்.

உங்களுக்குப் பகைமைகள் நிறைய இருக்கின்றது. அது தீரவேண்டும் என்றால் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இரண்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டு வந்து விட்டால் சரியாகிவிடும் என்று இப்படித்தான் ஆலோசனை சொல்கிறார்கள்.

ஆகையினால் நாம் எல்லோரும் என்ன செய்கிறோம்…? என்றால் சாமியார் செய்து தருவார்… சாமி செய்யும்.. ஜாதகம் செய்யும்… மந்திரம் செய்யும்… யாகம் செய்யும்…! என்று இப்படித்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றோமே தவிர
1.மனிதனான பின் தனக்குள் நாம் எண்ணியதைச் செயலாக்கும் சக்தி
2.”நம் உயிர் தான்…!” என்பதை மறந்தே இருக்கின்றோம்.

கோபத்தையும் வெறுப்பையும் வேதனையையும் மட்டும் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம். நல்லதை மட்டும் எண்ணவே முடியவில்லை…!

காரணம்… ஒரு விஷம் கொண்ட பொருளுக்குள் நல்ல பொருளைப் போட்டால் அந்த நல்ல பொருளும் ஒடுங்கிவிடுகின்றது.

விஷம் கொண்ட உலகமாக இருக்கும் பொழுது விஷம் கொண்ட இயக்கமாக இருக்கும் பொழுது இன்றைய மனிதனின் வாழ்க்கையில் அந்த உணர்வின் செயலாக்கமே நம் நல்ல உணர்வை அறியவிடாது தடைப்படுத்துகின்றது.

நல்ல உணர்வுகளை அறிய வேண்டும் என்றால் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் யாம் கூறும் உபாயத்தைக் கடைப்பிடித்து
1.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துக் கொண்டால்
2.உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
3.அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை நிச்சயம் அடைய முடியும்.
4.இந்த விஞ்ஞான உலகின் பேரழிவிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள இது உதவும்.
5.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

துன்பங்கள் வந்தாலே அது ஆண்டவனின் சோதனையா…? – ஈஸ்வரபட்டர்

துன்பங்கள் வந்தாலே அது ஆண்டவனின் சோதனையா…? – ஈஸ்வரபட்டர்

 

இன்று மனித ஆத்மாக்களின் பெருக்கத்தில் உள்ள இந்தப் பூமியின் எண்ண உணர்வு
1.செயற்கையின் சுழற்சியில் சிக்காமலும்
2.விஞ்ஞானத்தை நம்பி வாழும் உரு நிலை பெறாமலும் இருந்திருந்தால்
4.வளர்ந்துள்ள ஜீவ வளர்ச்சியின் சொல் செயல் ஞானம் கொண்ட வழித் தொடரினால்
5.நம் அனைவரது ஞானமும் உயரும் நிலை பெற்றிருந்திருக்கும்.

அப்படிப் பெற்றிருந்தது என்றால்… இந்தப் பூமி பெற்ற உன்னத உயர்ந்த சக்தியே “மிகவும் உன்னத சக்தியாக…” இன்னும் பல கோடி கோடி ஆண்டுகளுக்குச் சொல்லாற்றலும் செயலாற்றலும் கொண்ட மனிதர்களை வளர்த்து… மிக உயர்ந்த குணச் சக்தியின் ஆனந்த அன்பு கொண்ட… இனிமை வாழ்க்கையை வாழக்கூடிய தன்மையாகப் பெற்றிருக்கும்.

ஆனால் இன்றைய வாழ்க்கை முறை இன்னலின் பிடிப்பில் இறுக்கம் கொண்டு மனிதனை மனிதனே அழித்திடும் தன்மைக்கு வந்து விட்டான்,

அழித்து என்பதன் பொருள்…
1.இல்லற வாழ்க்கையில் கூடி மனிதப் பிறப்புக்களுக்கு வரும் சிசுக்களை
2.சிசுவைக் கருவுக்கே வரவிடாமல்
3.பல காலமாகச் சேமித்த சக்தி நிலையையே கருவில் வந்து மறைக்கப்பட்ட தன்மையிலேயே
4.இந்த மனிதனே அந்த மனிதக் கருவை அழித்து (கருத்தடை)
5.அதனை ஞானம் வளர விடாமல் இழி நிலையான சுழற்சியில் அமிழ்த்தி விடுகின்றான்.

மேலும்… தான் படும் வாழ்க்கைச் சுழற்சியில்…
1.இன்பங்கள் தனக்குச் சொந்தமானதாகவும்
2.துன்பங்கள் ஆண்டவனின் சோதனையாகவும் தான்
3.எண்ணத்தில் கொண்டு வாழுகின்றர்கள் இன்றைய மனிதர்கள்.

இப்படிப்பட்ட வாழும் ஓட்ட நிலையினால்… எண்ணத்தில் ஏக்கமுடனும்… பேராசை எதிர் நிலையிலும் தான்… மக்களை வழி நடத்திச் செல்லும் “மத வழி போதனைகளும்… அரசியல் சுழற்சிகளும்…” சுழன்று கொண்டுள்ளன.

ஆனால் தன் ஆத்ம ஞானத்தைக் கொண்டு உலகையே சிருஷ்டிக்க வல்ல “ஆதி முதலாம்… விநாயக சக்தி கொண்ட…” சொல் செயல் ஞானம் கொண்டவர்கள் தான் மனித ஆத்மாக்கள்.

பூமியில் இந்தச் சரீர வாழ்க்கையிலிருந்தே தன் ஆத்ம ஞானத்தை வளர்க்கும் தகுதி கொண்டவர்கள் தான்…!

எப்படி ஆண் பெண் வாழ்க்கை இணைப்புச் சேர்க்கையில் கருவாகி சரீரம் பெற்று வாழ்க்கை வழித் தொடருக்கு வந்தோமோ அதே தொடரில் ஆண் பெண் என்ற இரண்டு ஆத்மாக்களும்
1.தன் ஞான சக்தியினால் சித்து நிலை பெற்று ஒளி நிலைத் தன்மையுடன்
2.உடல் இயக்க உறவு நிலையில் கரு தோன்றி வளர்வதைப் போல்
3.ஆத்ம இணைப்பில் ஒளி வட்டத்தின் ஆத்மச் சேர்க்கையிலிருந்து பிறக்கும் ஒளி நிலையைக் கொண்டு
4.ஞான வட்டமாக அவ்வலைத் தொடரை எந்த மண்டலத்திற்கு அனுப்புகின்றோமோ
5.அந்த மண்டலத்தில் எல்லாம் ஜீவச் சிசுவை வளர்க்கவும்…
6.ஜீவ சக்தியை வளர்க்கவல்ல வழி முறை ஆத்ம சக்தியை…
7.”ஆத்மச் சேர்க்கையைக் கொண்டு” செயல்படுத்த முடியும்…!

இதைத் தான் அன்றைய இராமாயணக் காலத்தில் இராமாயணத்தை எழுதிய வான்மீகி மகரிஷியால் சூட்சமத்தால் லவ குசா என்ற குழந்தைகளின் படைப்பு நிலையை மறைக்கப்பட்ட நிலையில் உணர்த்தப்பட்டது.

அதே போல் காந்தர்வன் என்றும்… கன்னி என்றும்… கன்னி நீரில் வாழும் பொழுது மேகக் கூட்டத்தில் இருந்து விந்துகள் தோன்றி கன்னி கருத்தரித்து ஞானத் தெய்வக் குழந்தை பிறந்தது என்றும் அன்றைய சித்தர்களால் காட்டப்பட்டது.

கார்த்திகைப் பெண்கள் தான் முருகனை வளர்த்தனர் என்ற கதையில் சொல்லப்பட்ட உண்மைதனை…
1ஒவ்வொரு மனிதனும் ஞானம் கொண்டு அதிலுள்ள சூட்சமத்தை உணர்ந்தீர்கள் என்றால்
2.சிவ சக்தி கருத்தரிக்கவில்லை… சிவன் உருவாக்கிய குழந்தை முருகன் என்று
3.மறைக்கப்பட்ட பல உண்மைகளை எல்லாம் அறியலாம்… உணரலாம்.

என்றோ நடந்தவை அவை…! அவற்றின் சக்தி தான் இன்று நாம் வாழ்வது என்ற எண்ணம் தான் உலாவிக் கொண்டுள்ளதேயன்றி இன்று நடப்பவையும் அத்தன்மை தான் என்று அறிய வேண்டும்.

ஏனென்றால் ஜீவக் கரு எத்தனை கோடி ஆண்டுகள் எந்த மண்டலத்தில் வளர்ந்து வாழ்ந்தாலும்… இங்கே உணர்த்திய இத்தொடரின் உண்மை போன்று தான்
1.ஜீவ சக்தியின் ஆண் பெண் ஆத்ம சக்தியால் தான்
2.ஜீவ ஆத்மாவில் பெறப்படும் சித்துத் தன்மையும் ரிஷித் தன்மையும் கொண்ட
3.ரிஷிபத்தினி… ரிஷித் தன்மையைக் கொண்டு தான் உருவாகும் ஜீவனுக்கே ஜீவ வித்து விருட்சகம்…!

இரவிலே “மகரிஷிகள் உலகில் சஞ்சரித்து…” ஆனந்தமயமாக… பேரானந்தமாக… நாம் தூங்க முடியும்…!

இரவிலே “மகரிஷிகள் உலகில் சஞ்சரித்து…” ஆனந்தமயமாக… பேரானந்தமாக… நாம் தூங்க முடியும்…!

 

விழித்த நிலையில் புற உலகை மட்டும் தான் பார்க்கின்றோம்.
1.அதனால் காலையிலிருந்து இரவு கண்களை மூடும் வரை பலவிதமான உணர்வுகளும் எண்ணங்களும் மோதிக் கொண்டு
2.நம்மைப் பல வகைகளிலும் அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது.
3.அதில் சில மோதல்கள் நம்மை ரொம்பவும் பாதிக்கவே செய்கின்றது.

ஆனாலும் அதைச் சமப்படுத்த எந்த அளவிற்கு நாம் முயற்சிக்கின்றோம்….! என்பது கேள்விக்குறி தான்,

பெரும்பகுதி அதற்குத் தீர்வு காணாமல் வேறு வேலைகளையே செய்து கொண்டிருப்போம். ஆனால் எல்லாம் முடிந்து தூங்கப் போகும் சமயம் பாதித்த அத்தனையும் நினைவுக்கு வந்து நம்மைத் தூங்கவே விடாது.

அதற்கு மீறித் தூங்கினாலும் நிம்மதியான தூக்கமாகவும் இருக்காது. காலையில் எழும் போது மறுபடியும் அந்த எண்ணம் வரும். உடலும் ஆரோக்கியமாக இருக்காது.

எழும் பொழுதே ஒருவிதமான எரிச்சலுடனே தான் ஆரம்பிப்போம். இதை எப்படி மாற்றுவது…?

படுக்கப் போகும் முன் அவசியம் ஒரு 10 நிமிடமாவது ஞானிகளைப் பற்றிய உபதேசக் கருத்துக்களைப் படித்துப் பதிய வைக்க வேண்டும்.

1.கண்களை மூடியவுடன் நினைவு முழுவதும் வானை நோக்கி இருக்க வேண்டும்…. அந்த மகரிஷிகளின் பால் இருக்க வேண்டும்.
2.அதாவது புற உலகை மறந்து விட்டுக் கண்களை மூடிய நிலையில்
3.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம் நினைவு செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அதையே திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கி இருக்க வேண்டும்.

ஒரு ஐந்து நிமிடமோ அல்லது பத்து நிமிடமோ பூமியின் வடக்குத் திசையில் இவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தால் போதும். சப்தரிஷி மண்டலங்களுடன் தொடர்பு ஏற்படும்.

அந்த மகரிஷிகளின் தொடர்பு அலையும் நம் ஈர்ப்புக்கு வரும். அப்படியே ஒவ்வொரு மகரிஷியாக எண்ணலாம். ஒவ்வொருவரையும் எண்ணி அவர்கள் பெற்ற விண்ணின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் போதும்.

சிறிது நாள் பழகிவிட்டால் போதும்.
1.அப்புறம் கண்களை மூடித் தூங்க ஆரம்பித்தாலே நம் நினைவுகள் விண்ணுலகம் செல்லும். மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
2.காலையில் எழும் பொழுதும் மிகுந்த உற்சாகம் இருக்கும்.
3.அன்றைய நாள் வரும் சிக்கல்களை எப்படியெல்லாம் நீக்கித் தெளிவாக வழி நடத்த வேண்டும் என்ற சிந்தனைகள் படிப்படியாக வரும்.
4.மகரிஷிகள் இருக்கும் இடத்திற்குள் நாம் சஞ்சரித்த உணர்வுகள் தோன்றும்.
5.அந்தப் பழக்கம் அப்புறம் எல்லா நேரத்திலும் சப்தரிஷி மண்டலத்துடன் சஞ்சரிக்க முடியும்.

தூங்கப் போகும் முன் மகரிஷிகளுடன் நம் நினைவுகள் ஒன்றினால் அது நிஜமான தொடர்பை ஏற்படுத்தும்.

ஆதி சக்தியின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

ஆதி சக்தியின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்

 

பால்வெளி மண்டலத்தில் படர்ந்துள்ள பல கோடி அமில குணங்கள்… அதனதன் சுழற்சி ஓட்டத்தில் அங்கங்கு உள்ள படர்ந்த அமில குணங்களுக்கொப்ப… ஒன்றுடன் ஒன்று உராய்ந்து… தன் தன் இன வளர்ச்சிக்கொப்ப வளர்ந்த மண்டலமாக உருவாகின்றது.

அப்படி உருவான மண்டலங்கள்… கோள்கள்… நட்சத்திரங்கள்… சூரியன்கள்… அதனதன் ஈர்ப்புச் சுழற்சியில் சுழன்று கொண்டே வளர்ந்து கொண்டே… வழி கொள்ளும் வளர் முறைக்கு வருகின்றது.

இந்தப் பூமியில் மணல் உண்டு.. நீர் உண்டு… சுண்ணாம்பும் உண்டு… இப்படி மரம் மண் இவை யாவையும் இருந்தாலும்… அவை எல்லாற்றையும் நாம் எடுத்து நமக்கு வேண்டிய பக்குவச் செயலுக்காக வீடுகளாகக் கட்டிப் பாதுகாப்பு இடமாகத் தேடி அமைத்து வாழ்கின்றோம்.

1.எப்படி வீட்டை அமைக்கப் பல பொருள்களை எடுத்துப் பக்குவப்படுத்திக் கட்டி வாழுகின்றோமோ அதைப் போன்று
2.பால்வெளியில் நிறைந்துள்ள அமிலச் சுழற்சியில்
3.தன்னிச்சையில் வளர்ந்து கொண்டே மாறிக் கொண்டே சுழலும் வழித் தொடரிலிருந்து
4.அமிலச் சுழற்சியின் உயர்வு நிலை சக்தி கொண்ட ஆத்ம நிலை கொண்டு… எண்ணத்தின் ஞானம் கொண்டு…
5.உயர்ந்த ரிஷிக் கோடிகளின் அமைப்பு நிலை உருவகங்கள் தான்
6.ஆதி சக்தியின் வழி வந்த மகரிஷிகளின் வழி மண்டல அமைப்பின்
7.ஜீவ ஆத்ம ஞான சக்தியின் ஜீவ வளர்ச்சி வருகின்றது.

அது அது எடுத்து வளர்ந்த நிலைக்கொப்ப… வளர்ச்சியின் உயர்ந்த தன்மை கூடும் நிலை வழி பெற…
1.மனித ஞான உயர்வினால் மட்டும் தான்
2.உயர்வின் உருவகத்தையே உருவாக்கும் தன்மை உருப்பெறும் என்பதனை உணர்த்தியுள்ளேன்…
3.உண்மையின் உன்னத சக்தியினை உணர்த்தினால்… உருவாக்கினால்…
4.ஒவ்வொருவரும் உருவாக்கிடலாம் உலக சிருஷ்டியையே…!

இந்தப் பூமிக்கு “மனிதக் கரு வர” ஆண் பெண் என்ற இரண்டு ரிஷித் தன்மை கொண்ட ஆத்ம சுழற்சி பூமியான இந்தப் பூமியின் சிவ சக்தி என்ற ஆத்மக் கரு எங்கிருந்து வந்தது…?

இந்தப் பூமியில் மட்டுமல்ல…
1.நம்மைக் காட்டிலும் உயர்ந்த ஞான சக்தி கொண்ட மனித ஆத்மாக்கள்
2.நம் சூரியக் குடும்பமல்லா மண்டலங்களில் ஜீவிக்கின்றார்கள்.

ஞானச் சித்து கொண்டு அவர்கள் நம் பூமியுடனும்… மற்ற எல்லா பூமித் தொடருடனும் தொடர்பு கொண்டுள்ள நிலையில் செயல் கொண்டுள்ளனர்.

அவர்களின் கூட்டுச் செயல் தான் ஆதி சக்தியின் இயக்கமே…!

வைரம் வைடூரியங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது…?

வைரம் வைடூரியங்கள் எல்லாம் எப்படி உருவாகிறது…?

 

நம் பிரபஞ்சத்தில் உள்ள இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பூமிக்குள் பட்டுப் பாறைகளாக ஆகும் போது எதிர்நிலையான மறைகள் ஆகி இதற்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் நிலைகள் அதிகமாக இணையுமேயானால் அது மற்றதை அடக்குகிறது.

மற்ற நட்சத்திரத்தின் கலர்கள் எதுவானாலும்…
1.கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் அதனுடன் இணைக்கப்படும்போது
2.பூமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று மண்ணுக்குள் உருவாகிறது.

இதைப்போல மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலை வரப்படும்போது இந்த உணர்வின் தன்மை மூன்றும் மோதி தாவர இனச் சத்தாகக் கருவாகிப் பூமிக்குள் வருகிறது.

அதாவது பூமிக்குள் வரும்போது எதிர்நிலையான நிலைகளானால் கார்த்திகை நட்சத்திரத்தையும் ரேவதி நட்சத்திரத்தையும் மற்ற எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்தினுடைய நிலைகள் ஆகும்போது மூன்றும் மும்முனையாக இயக்குகிறது.

காரணம்… எதுவுமே மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம் காந்தம் விஷம் இது மூன்றும்
1.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
2.காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலாகவும்
3.விஷம் மற்ற உணர்வின் தன்மையைத் துடிக்கச் செய்யும் விசையாகவும் இயக்குவது போல
4.நட்சத்திரத்தின் இயக்கம் தன் உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று மண்டலங்களாக இப்படி இயக்குகின்றது.

முதலிலே இது வெறும் கல் பாறைகளாக ஆனாலும் பாறைக்குள் இது மோதும் நிலைகள் கொண்டு உணர்வின் ஈர்ப்பு கிளரும் பொழுது தனக்குள் ஈர்க்கும் இந்தக் கருவின் மோதலுக்குள் மண்ணிலே மறைந்து அது கருவாக உருவாகிறது.

1.பின் இதற்குள் வடித்துக் கொண்டு வைரத்தின் நிலைகள் ஆகி
2.இதனுடைய வீரியத்தன்மை ஆனபின் வெடித்துவிட்டு முழுமை அடைந்தபின் இறக்கும் தன்மையாக வெளி வருகின்றது.
3.அதைத் தான் வைரங்களாக நாம் பார்க்கின்றோம்.

ஆக நட்சத்திரங்களின் விஷத்தன்மையான உணர்வுகள் இரண்டறக் கலந்து அது எவ்வாறு வைரங்களாக ஆனது…? என்ற நிலையைக் காட்டினார் குருநாதர்.

நட்சத்திரங்களின் மோதலையும் வான மண்டலத்தின் இயக்கங்களையும் அது எடுத்துக் கொண்ட நிலைகள் விண்ணுலகிலிருந்து பூமிக்குள் வரப்படும்போது
1.மற்ற பாறைகளின் தன்மைகளுக்குள் இது நுகர்ந்து கொண்ட நிலைகளும்
2.மண்ணுக்குள் மறைந்தாலும் இந்த உணர்வின் ஈர்ப்பால் அந்த மண்களிள் மாற்றம் ஆவதும்
3.அதற்கடுத்த நிலைகளில் இந்த மண்ணின் தன்மைகள் மாறுவதும்
4.அதற்குண்டான நிலைகளை ஈர்ப்பதும்… ஈர்த்த நிலைகள் கல்லாவதும்
5.அதற்குள் எதிர்ப்பு உணர்வுகள் கொண்டு தன் இனத்தை வளர்த்து அது வைரமாகி எப்படி வெடிக்கின்றது…? என்ற நிலையும்
6.அந்த உணர்வின் வளர்ச்சியின் ஈர்ப்பும் காந்தப் புலனறிவின் ஆற்றல் எவ்வாறு…? என்ற நிலைகளையும் நேரடியாகக் காட்டினார் குருநாதர்.

ஏனென்றால்
1.வித்திலிருந்து செடியா… செடியிலிருந்து வித்தா…?
2.வைரம் எதிலிருந்து வருகின்றது…? வைரத்தின் ஆற்றல் எது…? என்ற நிலைகளைக் கண்டுணர்வதற்குத்தான்
3.ஒவ்வொரு பகுதிகளிலும் சென்று பார்க்கும்படி செய்தார்.

அந்தந்தப் பகுதியில் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்
1.தாவர இனச்சத்துக்குள் வரும்போது பாறைக்குள்ளும் அந்த நார் இந்த நார் என்று
2.பல பல சத்தின் தன்மையை அது எடுத்து தனக்குள் இந்த சத்து அதிகமாகி வெப்பத்தின் தன்மை வரும்போது
3.”கல் நார்…” என்ற நிலைகள் அது குமிழ்ந்து வெளி வருவதையும்
4.அதை எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவோரும் வைத்தியத்தில் உண்டு.

இயற்கையின் செயலாக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் இதை உணர்த்துகின்றேன் (ஞானகுரு).

தியானத்தில் பெற்ற அனுபவம் – ஈஸ்வரபட்டர்

தியானத்தில் பெற்ற அனுபவம் – ஈஸ்வரபட்டர்

 

ஈஸ்வரபட்டர்:-
“ஆத்மாவின் இயக்கம் தான்… சரீரச் செயல் வழித் தொடர்…!” என்பதனை நான் போதனை நிலையில் உணர்த்தியதற்கு ஒப்ப ஆத்ம வளர்ச்சியால் தியானத்தில் கண்ட உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.

அன்பரின் அனுபவம்:-
கண்களை மூடித் தியானத்தில் அமர்ந்ததும் உபதேசம் செய்யும் ஞானகுருவை நினைத்தேன். ஞானகுரு கையை உயர்த்தி என்னை ஆசீர்வதித்தார். ஞானகுருவின் உள்ளங்கையிலிருந்து குருதேவரின் முகம் மட்டும் என்னை நோக்கி வருவதாக உணர்ந்தேன்.

வந்த முகம் பிறகு முழு உருவமாகவும் கையில் ஒரு தடியுடனும் அவரைச் சுற்றி ஆட்டுக் கூட்டம் இருப்பது போலவும் தெரிகின்றது. பிறகு வெண்மையான முகிலைப் போன்று படர்ந்த ஒளியாகத் தெரிந்தது.

இன்னொரு அன்பரின் அனுபவம்:-
உடல் முழுவதையும் சுற்றி ஓர் ஒலி சுழல்வதைப் போலவும்… செவியில் “உய்…ய்ய்ய்…” என்ற ஒலி நாதம் கேட்டது.

உடல் முழுவதுமே அந்த ஒலியுடன் ஒளியும் சேர்த்து இயக்கக்கூடிய இழுப்பு நிலை போன்று… உடலே ஜிவ்…வ்வ்.. என்று மேல் நோக்கி உச்சந்தலையிலிருந்து இழுப்பதைப் போன்று “ஆனந்தமான நிலை” ஏற்பட்டது.

உடலோ மற்ற உணர்வுகளோ எதுவுமே தெரியாத நிலையில் நான் இருப்பது தெரிகின்றது. ஆனால் உடலின் எண்ண ஓட்டங்கள் இயங்குவது தெரிகின்றது. உடல் கனமோ உடலுக்குகந்த மற்ற உறுப்புகளின் நிலையோ மறந்து “எண்ணம் மட்டும்” ஓடுவது தெரிந்தது.

1.பிறகு ஒரு மிளகைப் போன்ற அளவில்
2.மிகவும் பிரகாசமான நீல நிற ஒளி
3.நெற்றியின் புருவத்திற்கு இடையில் (ஆத்ம ஜோதி) தெரிந்தது.

பின் மஞ்சள் நிறமான பெரிய சூரியனைப் போன்று ஒளி தெரிகின்றது. அந்த ஒளி சுழன்று ஓடுகின்றது. அப்படிச் சுழலும் பொழுது அதிலிருந்து வானவில்லில் காணும் ஒளியைக் காட்டிலும் மிக மிகப் பிரகாசமாகச் சில ஒளிகளும் அந்த ஒளிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து அதிலிருந்து பல ஒளிகளும் தெரிந்தது.

வான மண்டலம் மஞ்சள் நிறமான பிரகாசமான ஒளி நிலைக்கு அது சுழன்று ஓடும் ஓட்டத்துடன் செல்வதைப் போன்றும் சில இடங்களில் உஷ்ணமாகவும் குளிராகவும் நெருப்பும் மற்றும் விவரிக்க முடியாத பஞ்சைப் போன்று தெரிந்தது…!

மேலும்… அதை எப்படிச் சொல்வது என்றே புரியாத நிலையில்
1.வெண்மை முகிலுமல்லாமல் கனத்த தன்மையும் இல்லாமல் சொல்லால் உணர்த்த முடியாத சிலவும்
2.இதே தொடரில் அவ் ஒளி வட்டத்துடனே செல்லப்படும் பொழுது
3.மனித உருவத்தைப் போன்றும் ஆனால் உருவமல்லா ஒளியைப் போன்றும்
4.பிரகாசத் தன்மையுடன் வரிசையாக உள்ளனர்….
5.ஒருவர் முதுகில் மட்டும் ஏதோ ஒரு மிருகம் உள்ளதைப் போன்று தெரிகின்றது.

அவர்களை எல்லாம் பார்த்தவுடன் “ஆசீர்வாதம்…” வாங்கும் எண்ணம் வந்தது. உங்கள் உயர்வைப் போன்று… நானும் உயர வேண்டும்…! என்று வணங்கச் செல்லும் பொழுது அவர்கள் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள்.

ஜீவ சரீர பிம்ப வாழ்க்கையில்…
1.உங்களை ஒத்தவர்கள் பெறும் ஞானத்தைக் கொண்டு தான் எங்கள் வளர்ச்சி நிலையே உள்ளது
2.உங்களைக் கொண்டு தான் எங்கள் உயர்வே
3.நீ அவரிடம் ஆசி பெறு…! என்று ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
4.அவ்விடம் ஒன்றுமே இல்லா பால்வெளி வான மண்டலத்தைப் போல் கண்ணுக்கு எட்டியவரை எதுவுமே இல்லாமல் தெரிகிறது.

பிறகு முகிலைப் போன்று படர்ந்த திட்டுத் திட்டாகத் தெரிகின்றது. வார்த்தையிலும் இது வரைக்கும் கண்ணிலும் கண்டிராத ஒளிகள் மிக மிகப் பிரகாசமாகப் பல வண்ணத்தில் நாட்டியமாடுவதைப் போன்று மிகவும் துரிதமாகச் சுழன்று “ஓர் உயர்ந்த முப்பது நாற்பது அடி உயரத்திற்குப் பெண்ணின் உருவம் போன்று… ஒளியிலேயே… ஆனதைப் போன்று…” தெரிகின்றது.

ஊன்றிப் பார்க்கும் பொழுது ஆணின் உருவமாகவும் பெண்ணின் உருவமாகவும் மாறி மாறித் தெரிந்தது. பின் சாதாரணப் பெண்ணை ஒத்த உருவமாக ஒளி வண்ணங்களாகத் தெரிந்தது.

ஆசீர்வாதம் வாங்கும் நோக்கத்தில் காலில் விழுந்து வணங்கியவுடன்
1.என் செயலை வளர்ப்பாயா..? என்ற குரல் கேட்டது…!
2.அங்கே ஞானகுருவும் ஈஸ்வரபட்டரும் நிற்பதும் தெரிகின்றது.

உயிர் என்ற தாயால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் நாம்

உயிர் என்ற தாயால் உருவாக்கப்பட்ட பிள்ளை தான் நாம்

 

நாம் எந்தெந்த எண்ணங்களை எடுக்கிறோமோ அந்த எண்ணமே நமக்குள் தாயாக இருக்கின்றது.

தாயாக இருக்கும் உயிர் தனக்குள் (உடலுக்குள்) வளர்த்திட்ட உணர்வின் அணுக்கள் அனைத்தையும் “காத்திட வேண்டும்…” என்ற உணர்வை தூண்டித் தூண்டி அதனின் நிலைகள் கொண்டு தான் ஒவ்வொரு உடலையும் காத்து… அதாவது தன் குழந்தையை காத்திடும் நிலையாக நம்மை வளர்த்தது உயிர் தான். உயிரால் வளர்க்கப்பட்ட பிள்ளை தான் நாம்.

தீமையில் இருந்து தன் குழந்தையைக் காத்துக் கொள்ள தாய் படும் அவஸ்தைகளை நாம் பார்க்கின்றோம்.
1.நம்மைக் காத்திட தாய் தந்தையர்கள் கடந்த காலத்தில் ஞானிகளை எண்ணி ஏங்கினார்கள்.
2.இப்போதுள்ள நமது தாய்மார்கள் தெய்வத்தை எண்ணித் தான் ஏங்குகின்றார்கள்.

இன்றைய மனித வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகளைக் கூட்டுகின்றோமோ… தெய்வங்களை எண்ணி இந்தத் தெய்வம் என்னைக் காக்கும்…! என்ற நிலையும் மனித உடலில் உருவான இந்த ஆசையின் நிலைகள் கொண்டே எண்ணும் பொழுது மனித உடலின் செயலுக்கே நாம் வந்து விடுகின்றோம்.

ஆகவே நமக்குள் தாயாக ஆக்க வேண்டிய முறை எது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அருள் ஞானியிகள் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மையை அடைந்தார்கள்.

1.உயிர் ஒளியான அந்த உணர்வின் தன்மையை அதை நாம் தாயாக எண்ணி
2.அந்த தாயின் அணைப்பிலேயே நம் உணர்வின் தன்மை ஒளியாக மாற வேண்டும் என்று
3.அதை தாயாகக் கருதி அந்தத் தாயின் அணைப்பிலேயே ஒளி நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் குழந்தைகளை எப்படிக் காக்கின்றோமோ… நம்முடன் அரவணைப்பாக இருக்கும் குழந்தைகளுக்கு நாம் பரிவுடன் எப்படிச் செயல்படுத்துகின்றோமோ… பரிவற்ற குழந்தைகளை நாம் எப்படி ஒதுக்குகின்றோமோ அதைப் போலத் தான்
1.உயிருடன் ஒன்றி பரிவு காட்டும் அந்த உணர்வுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு
2.அனைத்தையும் ஒளியாக மாற்றும் உணர்வினைப் பெற்று
3.தாயின் (உயிர்) அணைப்பின் உணர்வுகள் கொண்டு நமக்குள் தெளிந்து பின் தெளிவான உணர்வுளாக அது விளையும்.

நம் உயிரைத் தாயைப் போலவும்… கடவுளாகவும்… நம்மை ஆளும் ஆண்டவனாகவும் எண்ணி… எந்தக் குறைபாடுகள் வந்தாலும் அது நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும்.

எதை வைத்து…?

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இருக்கும் நம் ஆறாவது அறிவின் தன்மையைப் பயன்படுத்திப் பிரம்மாவைச் சிறைபிடித்தான் என்ற நிலைகள் நமக்குள் உருவாக்கிக் கொடுத்த
1.தாயான நம் உயிரின் துணை கொண்டு
2.மனித வாழ்க்கையில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மெய் ஞானிகள்
4. ஒளியின் சரீரமாகி அவர்கள் வெளியிட்ட மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருவதை
5.அதை நாம் கவர்ந்து நமக்குள் வலுவாக்க வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் நமது வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படுகிறோம்… சலிப்புப்படுகிறோம்.. வேதனைப்படுவோரையும் பார்க்கின்றோம்.

வேதனைப்பட்டவரைப் பார்த்தாலும்… அதை அறிந்து கொள்ளும் நிலைகள் கொண்டு உயிரிலே பட்டு ஈசனுக்கு அந்தத் துன்பங்கள் வரும்போது தான் துன்ப்ப்படுகிறான் என்று அறிந்து கொள்கின்றோம்.

அந்தத் துன்பம் இல்லாத நிலைகள் பெற அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
1.நம் உயிரான நிலைகள் கொண்டு அந்தத் தாயை அந்த ஞானிகள் தன் உணர்வின் தன்மை கொண்டு
2.தன் உயிரைத் தாயாக மதித்து… அதையே குருவாக மதித்து… அதையே ஆண்டவனாக மதித்து
3.அந்த ஈசனுக்குத் தீங்கிழைக்கும் உணர்வினை நீக்கப் பழகுவோம்.

உயிருடன் ஒன்றி அவனின் அணைப்பிலேயே என்றும் நிலையாக இருக்கும் அந்த அருள் ஞானிகள் வெளியிட்ட தீங்கினை நீக்கும் உணர்வினை நாம் பருகுவோம்… அதைத் தனக்குள் வளர்ப்போம்,

ஆகவே
1.ஞானிகள் காட்டிய அருள் வழியில் உயிரைத் தாயாக மதித்து…
2.மெய் ஒளியைப் பெறுவேன்… மெய் வழியைப் பெறுவேன்…
3.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன் என்று
4.ஆறாவது அறிவின் துணை கொண்டு உறுதியுடன் நாம் செயல்படுத்துவோம்.

ஆத்மாவின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் ஞானப்பாலை ஊட்ட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

ஆத்மாவின் வளர்ச்சிக்கு மகரிஷிகளின் ஞானப்பாலை ஊட்ட வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஆத்மாவின் இயக்கம் தான் இச்சரீரக் கூடு…!

1.ஆத்மாவின் பதிவு நிலை கொண்டு
2.ஆத்மாவின் உந்துதலுக்குகந்த எண்ண மோதலினால் சரீர இயக்கம் உட்பட்டு
3.சரீரத்தின் செயலைக் கொண்டு ஆத்மா சத்தெடுத்து
4.ஆத்மா எண்ணத்தை உருவாக்கி…
5.சரீரத்தின் செயலால் தன் சத்தெடுக்கும் சுழற்சியில் சுழன்று வாழுகிறது…! என்று
6.முந்தைய பாடங்களில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படிப்பட்ட எண்ணத்தின் உணர்வுக்கொப்ப… காற்றலையில் கலந்துள்ள சத்துத் தன்மையை உரமாகப் பெறும் சுழற்சி ஓட்டத்திலிருந்து… உண்மைச் சக்தியான உயிராத்மாவை… இக்கர்ம உடலை… உடலில் கர்ம எண்ணங்களிலேயே செலுத்தக்கூடிய வழி முறையை… எண்ணத்தின் பால்… மேல் நோக்கிய சுவாசமாக… இது வரை வழிப்படுத்திய வழி காட்டிய தன்மை கொண்டு…
1.நம் எண்ணத்தின் செயலைக் கொண்டு
2.நம் ஆத்மா ஞானப்பால் கொள்ளும் சுவையாக வளர்ப்படுத்துங்கள்.

புஷ்பங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அப்புஷ்பத்திலேயே அணுவாக வளர்ந்து புழுவாகிப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் எந்த அமில முலாமின் அணுப் பெற்று ஜீவன் கொண்டு சத்தெடுத்து வளர்ந்ததோ அச்சத்தின் வண்ணக் கோர்வையை வண்ணத்துப் பூச்சியின் அழகு நிலை பெறுகின்றது. அதே போல் பூவில் பிறந்த வண்டு தேன் சுவையைப் பெறுகின்றது.

இவைகளைப் போன்று தான்
1.எச்சத்து நிலையில் எத்தன்மை வளர்ச்சி கொள்கின்றதோ அதன் வளர்ச்சி நிலைக்கொப்ப
2.எதில் எதில் எல்லாம் இவ்வெண்ண நிலை மோதி சத்தெடுக்கின்றோமோ
3.அதன் முலாம் வார்ப்பைத்தான் ஆத்மா பெறுகிறது என்பதை உணர்ந்து
4.ஆத்ம பலத்தின் உணர்வைக் கொண்டு அடைய முடியாப் பெரு நிலையை
5.இவ்வெண்ணத்தைச் செலுத்தும் உயர் ஞானத்தால் பெறலாம்.

இது நாள் வரை தெரிந்தோ தெரியாமலோ ஜெப வழியில் பல கோடி ஆத்மாக்கள் தனக்குத் தெரிந்த பாதை வழியில்… உயர்வைக் காண ஜெபம் கொண்டு செல்கின்றனர்.

அவர்களுக்கும்…
1.இந்தத் தியான மார்க்கத்தின் மூலம் இந்த ஞானத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும்
2.மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தன்மைக்கும்
3.நாம் பெறும் போதனை ஞான வளர்ச்சியைக் கொண்டு
4.நம் ஈர்ப்பலையின் வட்டத்தில் ஆத்ம ஐக்கிய இயக்கத் தொடர்பு கொண்டு செயல் கொள்ள வேண்டும்.

”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை – ஈஸ்வரபட்டர்

”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை – ஈஸ்வரபட்டர்

 

இயற்கையில் வளரும் தாவர இன வளர்ச்சியில் அதன் பலனின் தரவல்ல வித்துக்களும் மற்றைய கனிகளும் அதன் சுவை மணம் அழகு எல்லாமே அதற்கு உண்டு.

அது அல்லாமல் நாம் பயிர் செய்யும் தானியங்களில் அவை பலன் தரவல்ல காலங்களில் உதாரணமாக நெல் மணியில் அதன் சத்து நிலை தரவல்ல காலங்களில் பூத்து பின் நெல் மணிகள் அழகு பெற்று வளர்ந்து குலுங்குகின்றது.

அந்தந்தக் காலங்களில் இவைகளின் மணத்தைக் கொண்டு உணவைத் தேடி வரும் பட்சிகளின் ரோமத்தின் மிருதுத் தன்மையும் அவற்றின் வண்ண அழகுகளும் எத்தனையோ உள்ளது.

1.அது அது எடுத்து வளரத்தக்க அமில வார்ப்பின் வளர்ப்பின் வளர் நிலையில்
2.அதன் பலன் தரும் வளர்ச்சி அழகை இயற்கை என்ற நியதியுடன் கண்ணுற்றுப் பார்க்கும்
3.செயற்கையுடன் ஒன்றி வாழும் நாம் அது வளரும் உண்மையை அறியாமல்
4.ஆனந்த ரசிப்பில் இயற்கையாக எண்ணித்தான் அதனைக் காண்கின்றோம்.

ஆனால் ஒவ்வொரு வளர்ப்பிலுமே “அதன் பலன் ஒன்று…” வளரும் தன்மையில்தான் சகல சக்திகளும் வளர்கின்றன.

கடல் வழியில் பல கோடி வளர்ப்புகள் கடல் நீரில் சத்தெடுக்கின்றன. நீரின் நிலைகளில் ஆற்றுப்படுகைகளில் நீர் நிலை உருளும் தனமையிலேயே பல வளர்ச்சி நிலைகள் நிறைந்துள்ளன.

1.எல்லாவற்றிலும் மோதுண்டு மோதுண்டு பல வளர்ச்சியில் முலாம் கொண்ட உயிரணு
2.மோதுண்ட வளர்ச்சி நிலைக்கொப்ப ஆத்ம நிலை கொண்டு
3.சக்தி நிலை பெறவல்ல எண்ணச் செயல் பூண்டு
4.ஜீவ ஆத்மாவாகக் கரு தோன்றி கரு வளரும் அமில முலாமாக
5.எண்ணத்தின் ஞானத்தால் ஞானப்பாலின் சத்தெடுத்து
6.ஆத்ம முலாம் மனித வித்தின் ஜீவிதத்தில் வளர்ச்சியுறும் காலத் தன்மையில்
7.ஆத்மாவின் ஒளி நிலை பெறும் வளர் நிலை தான் மனித வித்தின் ஜீவ வளர்ச்சியின் அடுத்த நிலை.

மாமரம் மாங்கனிகளைத் தன்னுடைய சத்தாக வெளிப்படுத்துகின்றது. ஆனால் மனிதன் தன்னுடைய பிறப்பின் வளர்ச்சி என்பது… “தான் பெறும் மக்கள் செல்வம்தான்…” என்ற எண்ணத்திலேயே உள்ளான்.

ஆக…
1.தன் பெயர் சொல்லும் வாரிசு நிலையைத்தான் உயர்வு கண்டு வாழ்கின்றனரேயன்றி
2.தான் பெறவேண்டிய முதிர்வு நிலையைப் பற்றி எண்ணவில்லை.

அன்றைய போகமகரிஷிக்கும் கொங்கண தேவருக்கும் கோலமாமகரிஷிக்கும் கிடைத்த வாரிசு நிலை அவர்களின் நிலையுணர்ந்த ஞானவான்களுக்குத் தெரியும்.

1.பிறவியுடன் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் செல்வம் மட்டும் தான் செல்வம். என்று எண்ணாமல்
2.”பிறவா வரம்…” என்ற முத்தாகும் “ஒளி நிலை” பெறுவது தானப்பா உண்மையான உயர்வு நிலை….!

இன்றைய கால நிலையில் இத்தகைய ஆத்ம ஞானத்தால் பெறும் தியான வழி முறையையோ தன்னுள் உள்ள தெய்வச் செயலையோ அறிய விரும்புவோர் அரிதிலும் அரிதாகத்தான் உள்ளார்கள்.