கனவுகள் எப்படி வருகிறது…? – ஈஸ்வரபட்டர்

கனவுகள் எப்படி வருகிறது…? – ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானி ஓர் இடத்திலிருந்து வண்ண ஒளிக்காட்சிகளைப் படமாக அமிலமுடன் பதியச் செய்கின்றான். ஜீவனற்ற பொருள் நிலையை அந்தந்த வண்ண நிலையுடன் இவன் பூசிய முலாமின் பிடிப்பலையில் எடுக்கும் அந்தக் காட்சிகளைக் காற்றலையுடன் கலக்கச் செய்து பரப்புகின்றான்.

பரப்பிய அலைகளின் அதே தொடர்பலையைப் பல நூறு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அதற்கென்ற சாதனங்களை உருவாக்கி அதை கவரச் செய்கின்றான்.

இப்படி ஒரு நொடிக்குள் அந்த வண்ணக் காட்சிகளைப் பார்க்கும் நிலைக்கு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ளது.
1.ஒளி பாய்ச்சி ஒளி ஈர்க்கும்…
2.பார்வையால் படம் பிடிக்கும்…
3.ஒளி நிலை காணும்… விழி நிலையில் காணுகின்றோம்.

இதே போலத் தான் கனவுகளும் ஏற்படுகின்றன.

காற்றலையின் அமில ஈர்ப்பு இந்த உடலின் மீது மோதுண்டு… சுவாசத்தின் ஈர்ப்புடன் இவ்வுடலின் அமிலத்தின் மோதலான பின்… ஆத்மாவின் தொடர்புடன் உடல் உறங்கினாலும் இவாத்மாவுடன் அமிலங்கள் மோதுண்டு… அந்த மோதலினால் காட்சிகள் தெரிகின்றன.

உறக்கத்தில் விழி மூடிய நிலையில் எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்தாத அலை நிலையை உடல் சமைக்கும் அமில உராய்வின் காட்சி நிலைகள் கொண்டு… ஆத்மத் தொடர்புடன் செயல்படும் நிலைகளில் தான்… சம்பந்தம் இன்றிப் பல கனவுகள் வருகின்றது.

எண்ணம் கொண்டு செயல்படாத் தன்மையில் சுவாச அலையில் மோதும் அமிலத்தில் இவ்வுடல் எவ் அமிலச் சேர்க்கை எடுக்குமோ அதற்குகந்த ஈர்ப்பு அலைகள் சுவாச வட்டத்தில் மோதுண்ட பின் ஆத்மாவின் விழிப்பு நிலையில் அத்தகைய கனவுகளை எல்லாம் காணுகின்றோம்.

காட்சிகளைக் கண்ட நிலைகளில் சிலர் ஆவி பிடித்தது… அருளாடுகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்…! தனக்கே தெரியாதபடி பல மொழிகளீல் பேசுவோரும் உண்டு.

ஆவி நிலை உணர்வு என்பது… இன்று மருத்துவத்தில் மன நோய் என்று உணர்த்தும் ஒரு சாராரின் விஞ்ஞான நிலையும்… தெய்வத் தொடர்பு கொண்டு பக்தி மார்க்கத்தாரால் அருளாடும் நிலையில் முருகன் வந்தான்… காளி வந்தாள்… என்று உணர்த்தும் நிலைக்கும் உள்ளது.

பேய் பிசாசு என்று பேயைக் கண்டேன்… இரத்தக் காட்டேரி வருகிறது என்று பயந்த நிலையும் மக்களிடையே உள்ளது.

அதே போல் அன்பு பாசப் பிணைப்புடன்… குடும்பத்தில் பற்றுடன் பல காலம் வாழ்ந்த முன்னோர்கள்… அவர்கள் ஆத்மா பிரிந்தவுடன்
1.குடும்பத்துடன் உறவாடும் நிலையில்
2.இறந்த பின்னும் அவர்கள் வருவது போன்றும் பேசுவது போன்றும்
3.சில நேரங்களில் குடும்பங்களுக்கு வழிகாட்டும் நிலை ஏற்படுத்திச் செல்வதும் நடக்கின்றது.

இது எல்லாம் எத்தொடர்பலையில் மனித ஆத்மாவின் எண்ணம் செயல் கொள்கின்றதோ… ஏற்கனவே பூமியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த ஆத்மாக்களின் அலை எண்ணத்தில் ஒன்றுபட்டவுடன் அவைகள் இயக்கத் தொடங்கும்.

அதாவது உடலுடன் உள்ள மனிதனின் எண்ணம் எதிலே அதிக எண்ணத்தைச் செலுத்திச் செயல்படுகின்றதோ அவ்வலை ஈர்ப்பின் நிலைக்கொப்ப உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஜீவ சக்தி கொண்ட அமில உணர்வுகள்
1.ஜீவ சக்தி கொண்டவர்களுடன் அவ்வலை மோதி
2.ஹிஸ்டீரியா என்றுணர்த்தும் மன நோய்க்கும்
3.பல மொழிகளில் பேசி அருளாடும் தெய்வ நிலைக்கும்
4.பேயாடும் நிலைக்கும்
5.முன்னோர்களைக் காணும் பாசப் பிணைப்பினால் வழி நடத்திச் செல்லும் நிலைக்கும் இயக்கத் தொடங்கும்.

ஆனால் மகரிஷிகளின் அலைச் சக்தியுடன் தொடர்புடன் நம் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டால் எத்தன்மை கொண்ட வேட்கை அலையிலும் பிறரின் ஈர்ப்பின் சொல் செயல் எண்ணங்களிலும் நம் ஆத்மா சிக்காமல் சமநிலை கொண்ட நற்குண சாந்த ஞான வீரத்தால் இவ்வாத்மாவின் வலுக் கூடிய தன்மையைப் பெறலாம்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

நீடித்த நாள் வாழ்வோம் என்ற ஆசையில் கௌரவத்தைக் காக்க விரும்புகிறோம்… உயிரான்மாவைக் (தன்னைக்) காக்கின்றோமா…?

நீடித்த நாள் வாழ்வோம் என்ற ஆசையில் கௌரவத்தைக் காக்க விரும்புகிறோம்… உயிரான்மாவைக் (தன்னைக்) காக்கின்றோமா…?

 

மனித வாழ்க்கையில்…
1.நிலையற்ற இந்த உடலுக்கு… நிலை உண்டு…! என்ற நிலைகளில்
2.பல ஆயிரம் ஆண்டு காலம் வாழ்கின்றோம்.. வாழ்வோம்… என்ற எண்ணத்திலேயே தன்னைக் கௌரவப்படுத்திக் கொண்டு
3.நாம் கொஞ்சம் வசதியாக இருக்கின்றோம் என்ற நிலைகள் இருந்தாலும்
4.நம் சொல்லை யாராவது ஒருவர் சிறிதளவு மதிக்கவில்லை என்றாலும்
5.இவனுக்குத் திமிரைப் பார்… என்ற நிலைக்கு வந்து விடுகின்றோம்… நம்முடைய சொல்லின் தன்மைகள்.

அதே சமயத்தில் பொறுப்புடன் ஒரு இடத்தில் வேலை செய்கின்றோம் என்றாலும் பிறரைப் பார்த்தவுடனே தன் கௌரவத்தைக் காக்கப் பிறரின் செயல்களைப் புண்படும் செயலாக… சொல்லாக… அந்த உணர்வுகள் அது தாக்கிக் பேசும் நிலைகள் வந்து விடுகின்றது

அவர்களைக் குறைத்துப் பேசினாலும்… அவர்கள் செயலைச் சுட்டிக் காட்டினாலும் பொறுத்துக் கொள்ளும் நிலையற்று… பொறுப்பற்ற செயலைச் செயலாக்கி… அந்தப் பொறுப்பற்ற உணர்வினையே வளர்த்துக் கொள்ளும் நிலையாகித் தன் உடலுக்குள் அந்தத் தீமையின் நிலையையே உருவாக்கி விடுன்றது.

தியான மண்டபத்தில் தியானம் செய்ய வேண்டும் என்ற நிலையில் வருகிறோம். நமக்குள் அறியாது வந்த தீமைகளையும் குறைகளையும் நீக்கிக் கொள்ளவே இங்கே வந்து தியானிக்கின்றோம்.

இருந்தாலும்… யாம் உபதேசிப்பதை எல்லாம் கேட்டு விட்டுப் பிரசாதம் வாங்கும் போதும் சரி… அல்லது மற்ற நிலைகளிலும் சரி… அடுத்தவரைத் தள்ளிவிட்டு நாம் தான் முதலில் வாங்க வேண்டும் என்ற நிலைகள் வந்துவிடுகிறது.

1.பொறுப்பான நிலைகள் கொண்டு இங்கே வந்தபின்
2.பொறுப்பற்ற நிலையில் “என் கௌரவத்தைக் காத்துக் கொள்வேன்…” என்ற எண்ணம் தான் வருகிறது.

இங்கே மற்றவர்கள்… அவர்களை அறியாது சில குறைகளைச் செய்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் அந்தச் சக்திகளைப் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்களும் பெற வேண்டும் அவர்கள் குறைகள் அகல வேண்டும் என்ற ஏக்க உணர்வினை எடுத்தால் குறைகள் இங்கே அகலும்.

அவ்வாறு செய்யாது…
1.மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு குறைகளை அகற்ற வேண்டும் என்று எண்ணாது
2.அந்தக் குறையின் உணர்வையே வளர்த்துக் கொண்டு
3.தன்னுடைய கௌரவத்தை காக்க வேண்டுமென்ற உணர்வே மேலோங்குகிறது.

தன்னைக் காத்திடும் எண்ணம் கொண்டு ஏங்கி இங்கே வந்தாலும் இது போன்ற குறை காணும் உணர்வுகள் அது நம்மை அழித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

ஏனென்றால் நஞ்சின் வேகம் அவ்வாறு போகின்றது…!

அதை எல்லாம் மாற்றியே ஆக வேண்டும் என்பதற்குத் தான் திரும்பத் திரும்ப இதை ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

ஞானத்தை வளர்க்க உதவும் “உண(ர்)வு – ஈஸ்வரபட்டர்

ஞானத்தை வளர்க்க உதவும் “உண(ர்)வு – ஈஸ்வரபட்டர்

 

1.ஜீவ சக்தி கொண்ட காந்த ஈர்ப்பு அணு வளர்க்கும்… வளர்ச்சியின் வித்தான சரீரச் செயலின் ஜீவனுக்கு…
2.ஜீவாதார முக்கிய நிலையான “உணர்வு…” இல்லை என்றால் ஞானச் செயல் செயல்படாது.

உணர்வின் சமைப்பினால்தான் எச்செயலுக்கும் எண்ணத்தைச் செலுத்திட முடியும். எண்ணத்துடன் மோதும் அலையின் ஈர்ப்பிற்கு காந்த மின் தொடர் அலைகள் மோதுண்டு… அதன் பதிவு கொண்டு தான்… “ஆத்மா” ஜீவ சக்தியிலிருந்து தனக்கு வேண்டிய வலுவைப் பெறுகின்றது.

ரிஷிகளின் வளர்ப்பலையுடன் வளரும் சக்தியில்… “உயர்ந்த ஆதி சக்தியின் படைப்பு சக்தியைப் பெற்ற…” அவர்கள் படைப்பின் தொடரை நாம் முதலில் பெற்றுப் பழக வேண்டும்.

அடுத்து நாம் பெற்ற அந்தத் தொடர் அலையை நம்முடைய வளர்ப்பைக் கொண்டு வளரும் ஆத்மாக்களுக்கு நல் வழி காட்டிடல் வேண்டும். அவ்வலையின் தொடரை நாம் எடுத்து அந்தத் (நம்) தொடர்பின் அலையை ரிஷித் தொடர்பிற்குத் தந்திட வேண்டும்.

அதன் மூலம்… அந்த ரிஷி வளர்ப்பின் ஆதி சக்தியின் அனைத்து சக்திகளிலிருந்து வளரும் சக்தியை அவர்கள் பெற்றுச் சுழலும் சுழற்சி ஓட்ட அலையில்
1.உயர்ந்த ஒளி வட்டமுடன் கலந்து அந்த ஞான சக்தியைக் கொண்டு
2.தன்னுள் உள்ள இறை சக்தியை… இறை ஆத்மாவாக… ஆத்மலிங்க ஜோதியாக… அடையும் வழியை நாம் பெற வேண்டும்.

அதை அடைய வேண்டும் என்றால் இந்த வாழ்க்கையில் மோதும் எண்ண உணர்வை நாம் எடுக்கும் சமைப்பு பிறரின் ஈர்ப்பில் சிக்காமல் இருத்தல் வேண்டும். ஏனென்றால்
1.பிறர் செய்யும் தவறில் நாம் தண்டனை பெறுவது போன்று நம் உணர்வுகளை மாற்றிடாமல்
2.அவர்கள் செய்த நிலைக்கு நாம் தண்டனை பெற்றுச் செல்லும் நிலையிலிருந்து மீள வேண்டியது மிகவும் அவசியம்.

அத்தகையை நிலை பெற்று… நம் அலைச் சக்தியின் உயர்வலைகளைப் பிறர் மேல் செலுத்தி… மேல் நோக்கிய ஈர்ப்பில் ரிஷிகளின் சக்தியை நாம் வளர்த்தால்… நம் ஒளி ஈர்ப்பிலிருந்தும் சொல் ஆலையிலிருந்தும் வெளிப்படும் உயர்ந்த உணர்வலைகள் அங்கே பதிந்து… அவர்களும் வளர்வார்கள். பிறரின் சங்கட சோர்வும் எத்தன்மை கொண்ட மற்ற வழித் தொடரும் நம்மைப் பாதிக்காது.

எப்படித் திரவகத்தில் போடப்படும் பித்தளை செம்பு போன்ற மற்ற உலோகங்கள் எல்லாமே கரைந்தாலும் தங்கத்தின் நிலை கரைக்கப்படுவதில்லையோ அதைப் போன்று
1.இவ் ஆத்மாவின் வலுவைக் கொண்டு
2.ஞானத்தால் பயம் என்ற அச்ச உணர்வை நீக்கி
3.சாந்தத்தை ஞானம் கொண்டு வீரத்தால் செலுத்தும் எண்ணத்தின் சரீர உணர்வலையின் ஈர்ப்பு வழித் தொடரில்
4.காந்த மின் அலையின் தொடர்பலையை ரிஷிகளின் சத்தலையுடன் செலுத்தி
5.அவர்கள் வளர்க்கும் ஒளி நிலைத் தொடருடன் நாமும் ஐக்கியமாகலாம்.

நல்ல வரன்… நல்ல பெண்… கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் தியானிக்க வேண்டிய சரியான நெறி முறை

நல்ல வரன்… நல்ல பெண்… கிடைக்க வேண்டும் என்றால் அதற்காக நாம் தியானிக்க வேண்டிய சரியான நெறி முறை

 

ஒரு சில குடும்பங்களில் தன் பெண்ணிற்கு அந்தந்தக் காலத்தில் திருமணம் நடக்கவில்லை என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
1.அடிக்கடி வீட்டிற்கு வந்து பெண்ணை விசாரித்துக் கேட்டு விட்டு அல்லது
2.பெண்ணைப் பார்த்து விட்டுச் செல்கின்றார்கள் என்று வேதனைப்படுவோர் உண்டு.

அத்தகைய வேதனையான உணர்வுகள் ஆன்மாவில் சேரும் பொழுது அதை மாற்றி அமைக்க அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் செலுத்திக் கொண்டால் இது “பிராணாயாமம்…”

பிராணாயாமம் என்றால் மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் வளரச் செய்து நம் உடலிலிருந்து வெளி வரும் அந்த அருள் சக்திகளை வைத்துக் குழந்தைக்குத் திருமணம் ஆகவில்லையே என்று வேதனைப்பட்ட இந்த உணர்வைப் பிளக்க வேண்டும்.

1.மகரிஷிகளின் அருளால் சீக்கிரம் என் குழந்தைக்குத் திருமணமாக வேண்டும்
2.எந்தக் குடும்பத்திற்கு என் பெண் திருமணமாகிச் சென்றாலும் அந்தக் குடும்பம் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும்
3.அருள் வழியில் ஆனந்தமான வாழ்க்கை அங்கே வாழ வேண்டும்
3.அத்தகைய அருள் சக்தி என் பெண்ணிற்குக் கிடைக்க வேண்டுமென்று தாய் தந்தையர்கள் எண்ண வேண்டும்.

ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலுக்குள் பெற வேண்டுமென்று எண்ணும்போது அப்போது நமது உயிர் நரநாராயணன் ஆகிறது.

அதாவது நம் உயிரான நிலைகள் கொண்டு நரசிம்ம ரூபம் எடுத்து அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டுத் தன் குழந்தையின் எதிர்காலம் செழிப்புடன் இருக்க வேண்டுமென்று இந்த நினைவினைக் குழந்தை மேல் பாய்ச்சுதல் வேண்டும்.

இப்படிச் சிறிது நாளைக்குப் பாய்ச்சிப் பழகி விட்டால் அந்த குழந்தைக்கு வரன் அமைந்து சீக்கிரம் திருமணம் நடப்பதைப் பார்க்கலாம்

அப்பொழுது நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் ஜீவன் பெறச் செய்து உங்கள் உடலுக்குள் அது ம்… என்று அணுவாக உருவாக்கத் தொடங்குகிறது.

இப்படி யாம் (ஞானகுரு) கொடுக்கும் அந்த அருள் வாக்கின் பிரகாரம் அந்த நல்லது நடக்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொள்ளும் போது அந்த மணம் உங்கள் ஆன்மாவாக மாறுகிறது.

அடுத்தவர்கள் உங்களைப் பார்த்தவுடனே உங்கள் ஆன்மாவிலிருந்து வெளிப்படும் அந்த அருள் சக்திகளை இந்த அருள் உணர்வுகள் அவர்களுக்குப் பாயும்.

1.உங்கள் பெண் அது எவ்வளவு உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்… வாழ வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.இந்த உணர்வின் தன்மை பெண்ணைக் கேட்போரின் நிலைகள் அது புகுந்து
3.உங்கள் பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டுமென்று விரும்பி
4.அவர்கள் ஏங்கித் திருமணம் செய்து கொண்டு செல்வதைப் பார்க்கலாம்.

உங்கள் அனுபவத்தில் நிச்சயம் பார்க்கலாம்.

சக்தி பெற்றவர்கள் என்று மகரிஷிகளைச் சொல்வதன் காரணம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

சக்தி பெற்றவர்கள் என்று மகரிஷிகளைச் சொல்வதன் காரணம் என்ன…? – ஈஸ்வரபட்டர்

 

கதைகளிலும் காவியங்களிலும் “தொட்டவுடன் பொன்னாகும்…!” சில வழி முறைகளை முந்தைய காலங்களில் உணர்த்தியதன் உண்மை நிலை என்ன…?

ஒரு பொருளைத் தொட்டால் அந்தப் பொருள் எதுவாகிலும் பொன்மயமாக மின்னுவதாகச் சொல் வாக்கிய வழி முறையிலும் காவியக் கதைகளிலும் உண்டு.

ஒரே மரத்தில் பறித்த எலுமிச்சங்கனியைப் பத்து பேர்களிடம் கொடுத்து வைத்திருக்கச் சொல்லி விட்டுப் பிறகு பார்த்தோம் என்றால் அவரவர்கள் பெற்ற அமிலச் சேர்க்கையின் உருவக உஷ்ண அலையின் வெப்ப நிலைக்கொப்ப அந்த கனியின் தன்மை மாறுபடும்.

இதைப் போன்றே…
1.உயர் காந்த சக்தியின் எண்ண வலுக் கொண்டு
2.ஞானத்தின் வழி சக்தியால் உயர்ந்தோரின் தெய்வத் தொடர்புடன் சங்கமித்த வழித் தொடரில்
3.எவ்வலையையும் இச்சரீர இயக்கம் எடுத்துச் சமைத்து ஆத்மாவை வளர்க்கும் ஆத்ம ஜோதி நிலை கொண்டவர்களினால்
4.ஒரு பொருளை எவ்வமிலத்தினால் எவ் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தாலும்
5.சில அலைச் சக்திகளைக் கொண்டு அதனை உருமாற்றவும்
6.சில நிலைகளைச் சுட்டிக் காட்டும் தன்மையை உருவாக்கும் நிலையையும் உருவகப்படுத்தலாம்.

இந்நிலையில் ரிஷித் தன்மை கொண்ட ரிஷிகள் பலர் காயகல்ப சித்து என்ற சில சக்தி நிலைகளைச் செய்து காட்டினர்.

போகர் சித்து நிலை பெற்று ரிஷித் தன்மை வலுக்கூடிய நாளில் அவர் எடுத்த அலைகளின் சக்தியினால் இந்தப் பூமிக்குப் பல மூலிகைகளை மருத்துவச் செயலுக்காகப் பூமியில் பதிய வைத்து வளரும் தன்மையை உருவாக்கினார்.

இந்தப் பூமியில் சித்து நிலை பெற்று வளர்ந்த பல மகரிஷிகள்…
1.இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் சக்தியை
2.தான் பிறப்பெடுத்து வளர்ந்த பூமி அலையின் பதிவில்
3.ஜீவாத்மாககளின் வளர்ப்புக் காப்பக நிலைக்காக
4.பல ஆற்றல் மிக்க சக்திகளைப் பூமியில் பதித்து வளர வழி காட்டுகின்றனர்.

ஆனால் தன் இனத்தின் உண்மை குண நிலையைப் புரியாமல்… உண்மை உயர்வின் வழியில் செல்லாமல்… பூமிப் பிடிப்பில் புதையுண்டு மீண்டும் மீண்டும் பிறவிக்குள்ளேயே சுழன்று வாழ்கின்றனரப்பா…!

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் போது நீங்கள் சுவாசிக்க வேண்டிய அருள் உணர்வுகளும் அதனின் வழி முறைகளும்

யாம் ஆசீர்வாதம் கொடுக்கும் போது நீங்கள் சுவாசிக்க வேண்டிய அருள் உணர்வுகளும் அதனின் வழி முறைகளும்

 

இந்த வாழ்க்கையில் உங்களை அறியாது தீமைகளைச் சந்திக்கும் நேரங்கள் எல்லாம் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்ய வேண்டும். இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் அறியாது வந்த தீமைகள் நீங்க வேண்டும்
3.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் என்று எண்ணி
4.ஒவ்வொரு நொடியிலும் நம்மை அறியாது உட்புகுந்த தீமைகளைச் சுத்தப்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஆத்ம சுத்தி என்ற நிலை ஆகின்றது. அருள் ஞானியின் உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்குகிறது.

ஆகவே இந்த மனிதப் பிறவியில் நல்லதை வளர்க்கும் நிலைகள் பெற்ற நாம் அடுத்து இந்த உடலை விட்டு உயிரான்மா வெளியே சென்றால் கல்கி அவதாரம் என்ற நிலையை அடைய வேண்டும். கல்கி என்பது ஒளிச் சரீரம்.

1.எந்த மனிதனின் ஈர்ப்புக்கும் எந்த மிருகத்தின் ஈர்ப்புக்கும் செல்லாது
2.மெய் ஒளி செல்லும் பாதைகளில் நீங்கள் ஒவ்வொருவரும் சென்று
3.என்றும் பதினாறு என்ற ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசத்தைக் கொடுப்பது.

உடலை விட்டுச் சென்றால் எவரின் உடலும் நம்மை ஈர்த்திடாது எவரின் உடலுக்குள்ளும் நாம் சிக்க மாட்டோம். எதிலுமே நாம் சிக்காது அந்த அருள் ஞானியின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று பிறவா நிலை என்னும் அழியா ஒளி சரீரமாக பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

அதை நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் பிரார்த்திக்கிறேன்… உங்களை ஆசீர்வதிக்கின்றேன் (ஞானகுரு).

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் அனைவரும் பெற வேண்டும்… நாங்கள் பார்க்கும் குடும்பங்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்… அவர்கள் தொழில்கள் எல்லாம் நலம் பெற வேண்டும்…! என்ற எண்ணத்துடன் எம்மை அணுகினால் யாம் கொடுக்கும் ஆசீர்வாதம் நல்ல பலனைத் தரும்.

தீய உணர்வுகள் உங்களுக்குள் அடங்கி நிற்க வேண்டும் என்ற நிலையிலே தான் அருள் வாக்குகளை உங்களைப் பார்த்து ஆசியாகக் கொடுக்கின்றோம்.

1.ஆகவே ஆசி கொடுக்கும்போது சீராக நேராகப் பார்க்க வேண்டும்.
2.என் (ஞானகுரு) கையில் ஆசீர்வதிக்கும் போது இந்தக் கையிலிருந்து வெளிப்படும் உணர்வை நீங்கள் சுவாசிக்க நேர்கிறது.
3.அப்போது தீயது விளையாது தடுத்து நிறுத்த உதவும்

அந்த அருள் ஞானியின் சக்திகளை உங்களுக்குள் மீண்டும் மீண்டும் எடுத்தால் தீமை விளைவிக்கும் உணர்வுகள் அனைத்தும் உங்களுக்குள் அடிபணிகின்றது.

அதே சமயத்தில்
1.ஞானிகள் உணர்வுகள் மிகச் சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் வளர்ந்து
2.உங்கள் சொல்லும் உங்கள் உடலிலிருந்து வரக்கூடிய மணமும்
3.பிறிதொருவர் உங்களைப் பார்க்கும் போது இந்த உணர்வுகள் அவர் உடலிலே ஊடுருவி
4.உங்களுக்கு நண்பனாகவும் உதவி செய்வதாகவும் அமைந்து
5.பகைமையை நீக்கிடும் உணர்வுகள் உங்களுக்குள் விளைந்து
6.பகைமையற்ற நிலைகள் கொண்டு மனித வாழ்க்கையில் மகிழ்ச்சியான நிலையில் வாழ முடியும்.

ஆகவே…
1.இந்த மனித வாழ்க்கையில் வரும் தீயவினைகள் எதுவானாலும் அது சந்தர்ப்பத்தால் ஏற்படுவது தான்.
2.மனிதனான நாம் அருள் ஞானியின் நிலையை இப்போது நமக்குள் சேர்ப்பதும் ஒரு சந்தர்ப்பம் தான்.

நாம் வாழ்க்கையில் பிறர் சண்டையிடும் போது நாம் அதைக் கூர்ந்து கவனிப்போம் என்றால் அந்தச் சந்தர்ப்பம் நமக்குள் சண்டையை ஊட்டும் உணர்வாக விளைந்து விடுகிறது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு அதைக் கடந்து சென்ற அந்த ஞானிகள் உணர்வுகள் தீமையற்ற உணர்வாக நமக்குள் விளைய வைத்து அகப்பொருளையும் புறப்பொருளையும் நாம் தெரிந்துணர்தல் வேண்டும்.

அப்படி உணரும் உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பெரு வீடு பெரு நிலைகள் அடைந்து என்றும் அழியா ஒளி சரீரத்தைப் பெறும் நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

ஞானிகளின் உணர்வை எளிதில் எப்படிப் பெறுவது…! – ஈஸ்வரபட்டர்

ஞானிகளின் உணர்வை எளிதில் எப்படிப் பெறுவது…! – ஈஸ்வரபட்டர்

 

1.ஒருவர் நீர் அருந்தும் பொழுது நாம் பார்த்தால் நமக்கும் தாக நிலை ஏற்படுகின்றது.
2.ஒருவர் கொட்டாவி விட்டால் அதே நிலை நமக்கும் ஏற்படுகின்றது,

ஜீவ சக்தியில் சரீர பிம்ப வாழ்க்கை நிலையில்.. உணர்வுடன் கூடிய எண்ணத்தில் செயல்படும் வழிமுறை ஆற்றல்… மனிதச் சக்திக்கே ஒருவருடன் ஒருவர் கூடி வாழும் வாழ்க்கையில்… இவ்வீர்ப்பின் தொடர்பில் “ஒருவரை ஒத்து” ஒருவரை இப்படித்தான் சாடுகின்றது.

இதே போல் தான் ஆத்ம இயக்கத்தின் தொடர்பிலும் உண்டு. தாம்பத்ய எண்ண வாழ்க்கையில் ஆண் பெண் ஒத்த இல்லற உணர்வால் ஒருவரின் அலைத் தொடர்பைப் பிறிதொருவர் அதிவிரைவில் எடுக்கும் வல்லமை கூடிய இல்லற எண்ண ஒற்றுமைகள் நடைபெறுகின்றன.

1.உயர் அலையின் தொடர்பலையால்
2.காந்த மின் அலையின் வீரிய உயர் குண வழித் தொடரில்
3.ஜெபம் கொண்ட சக்திமிக்க வாழ்க்கை நிலை ஏற்படும் பொழுது
4.இரண்டு எண்ணங்களின் ஒருமித்த கூட்டு ஐக்கிய குண நிலை அமையும் பொழுது
5.அத்தொடரினால் பெறப்படும் உயிராத்மாவின் வலுவில் கூட்டு ஐக்கியம் கொண்டு
6.சிவசக்தி… என்ற “ரிஷிபத்தினி” நிலையைப் பெற முடியும்.

அந்நிலையின் வழித் தொடரில் தனித்த அலைத் தொடர்பைக் காட்டிலும் வளர்க்கும் தன்மைக்கு வளர்ச்சி பெறும் ஜீவ சக்தியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் நிலை பெற முடியும்.

மனித ஆத்மாவின் அலைச் சக்தி எண்ணத்தின் ஆவி நிலையின் பதிவு நிலை… பூமி இழுத்து வெளிப்படுத்தும் அலையுடன் ஒன்றிய வாழ்க்கை நிலையில்… இவ்வுணர்வின் எண்ணத்தின் சரீர அலைத் தொடர்பு இந்த உடல் செல்லும் இடங்களில் எல்லாம் “பூமியின் ஈர்ப்பில் பதிந்து கொண்டே உள்ளது…!”

அதைப் போன்றே…. ஒத்த நிலையிலோ மாற்று நிலையிலோ உள்ளவர்களுடன் கூடிய எண்ண உறவாட்டத்தில்… பிறரின் அலை உணர்வை… நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கத்தான் செய்கின்றோம்.

எப்படி தாகம் எடுப்பதும் கொட்டாவி விடுவதும் பிறரின் தொடர்பு கொண்டு உள்ளது போன்றே
1.பிறர் வளர்த்த அலைத் தொடர்பை
2.ஒளி பாய்ச்சி உணர்வும் எண்ணமும் ஈர்க்கும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.பிறரின் சோகத்தையும் சஞ்சலம் சந்தோஷம் எதுவாகிலும் எடுக்கும் நிலையில் தான்
4.இன்றைய வாழ்க்கை நடைமுறையில் நாம் உள்ளோம்.

அதை மாற்றி எண்ணத்தால் எடுக்கும் ஞான உணர்வின் வழி முறையில் உயர்ந்த ரிஷித் தொடர்புடன் செயல்படும் வாழ்க்கை வழிமுறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி அமைத்துக் கொண்டோமானால்
1.இவ்வாத்ம அலையை ஒளிரும் சக்தியில் வலுக் கொண்டு இயங்க
2.நாம் வளர்த்த உயர் தொடர்பின் வலுத் தன்மையுடன்
3.மாற்று நிலை கொண்ட பிறருடன் கலந்துறவாடும் எண்ண நிலை ஏற்பட்டாலும்
4.தணலில் போடும் பொருளைப் போன்று அவை நம்மைச் சாடாமல் பஸ்பமாக்கும் தன்மைக்கு
5.நம் ஆத்ம அலையின் வலு நிலை கூடிவிடும்.

உலகில் அன்றாடம் நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தோ படித்தோ நமக்குள் பதிவாக்கி விடக் கூடாது

உலகில் அன்றாடம் நடக்கும் அசம்பாவிதங்களைப் பார்த்தோ படித்தோ நமக்குள் பதிவாக்கி விடக் கூடாது

 

பத்திரிக்கைகளைப் படிக்கும் போது “எங்கெங்கோ அசம்பாவிதங்கள் நடக்கிறது…” என்று பார்க்கின்றோம்.

பட்டப்பகலில் கொள்ளை அடித்தனர். ஆட்கள் நடமாட்டம் இருந்த இடத்திலேயே நடந்தது. கைகளில் ஆயுதங்களை ஏந்தி அதைச் செயல்ப்படுத்தும் போது மற்றவர்கள் சிதறி ஓடினர். இருக்கும் பணத்தை எல்லாம் பறித்துச் சென்றார்கள்.

அவ்வளவு கூட்டத்திலே இது நடந்தது. போலீஸ் இருந்தும் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று பத்திரிக்கை வாயிலாகப் படிக்கும் பொழுது பய உணர்வுகள் ஊடுருவி நமக்குள் அதிகமாகப் பதிவாகி விடுகிறது.

உதாரணமாக… அந்த நேரம் நாம் பஸ்ஸிலே பிராயணம் செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நாம் செல்லும் பொழுது ஒரு பத்துப் பேர் இது சம்பந்தமாகப் படித்து அந்தப் பய உணர்வுடன் பஸ்ஸிலே பயணம் செய்தால் போதும்.

1.டிரைவர் அங்கே ஓட்டிக் கொண்டிருந்தாலும் இந்தப் பய உணர்வலைகள் அவருக்குள்ளும் பாயப்பட்டு
2.அவரையும் சிந்தனையற்றதாக்கி விபத்தாக வைத்துவிடும்.

காரணம் நாம் படித்த இந்த உணர்வுகள் அடுத்தவர்களுக்குச் சொல்லாகச் சொல்லப்படும்போது சொல்லின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து படரச் செய்கிறது. அது டிரைவரையும் இயக்கிவிடுகிறது.

ஆக… நாம் வண்டிக்குள் அமர்ந்து சாதாரணமாகச் சென்று கொண்டிருந்தாலும் அங்கே நமக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையாக உருவாக்கி விடுகின்றது.

இவ்வாறு தான் மனித வாழ்க்கையில் பத்திரிக்கையைப் பார்த்த உணர்வுகள்…
1.எங்கோ நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிப்போமேயானால்
2.அந்த உணர்வின் தன்மை எங்கே படர்ந்திருந்தாலும் அது நம் ஈப்பிற்குள் வந்து
3.நமக்குள் பய உணர்ச்சிகளைத் தூண்டி விடுகின்றது.

அதே போல் வீட்டிற்குள் படுத்திருக்கும் பொழுது கொள்ளையன் கதவை உடைத்து நொறுக்கி விட்டுப் பணத்தை எடுத்துச் சென்றான் என்று பத்திரிக்கை வாயிலாகப் படித்து அதைப் பதிவாக்கினால் போதும்.
1.அந்த உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறி நம் ஆறாவது அறிவில் உள்ள வலுவை இழக்கச் செய்து
2.நாம் தூங்கும் போது காற்றுக்கு ஒரு கதவு டப்… டப்… என்று அடித்தாலோ
3.அல்லது பகலிலேயே டம்… என்று ஒரு கதவின் சப்தம் கேட்டாலோ
4.”உடனே எவனோ கதவை உடைக்கின்றான்…” என்று திடுக்கிடச் செய்து நாம் திரும்பிப் பார்க்கும் நிலை வருகின்றது

அப்படித் திரும்பிப் பார்க்கும் நிலை வரும் போது நம்மை அறியாமலேயே காற்றிலே மறைந்துள்ள இந்த பயமான உணர்வை நுகர நேர்கிறது.

பத்திரிக்கை வாயிலாக அதைப் படிக்கப்படும் போது…
1.எங்கே அசம்பாவிதமாக வெளியிடப்பட்டதோ
2.அந்தச் சம்பவம் நடந்ததை யார் அதைக் கண்ணுற்று வெளிப்ப்படுத்துகின்றனரோ
3.அதே உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.

ரேடியோ டிவி.யில் ஒலி/ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் அந்தந்த ஸ்டசனைத் திருப்பி வைக்கும் போது அதனதன் நிலைகளை நம் வீட்டில் உள்ள ரேடியோ டி.வி ஈர்க்கிறது… நாம் பார்க்கின்றோம்… கேட்கின்றோம்.

இயற்கையிலே ஒரு வேப்பமரம் தன் கசப்பான சத்தினை மணமாக வெளிப்படுத்துகிறது. அதே சமயத்தில் அதிலே விளைந்த வித்தினை எடுத்துப் பல நூறு மைல்களுக்கு அந்தப் பக்கம் நாம் பதியச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இங்கே பதிவான வித்து பூமியின் ஈர்ப்புக்குள் நின்று அது சரியான பருவத்தில் முளைக்கத் தொடங்கினால்
1.தாய் வேப்ப மரம் வெளிப்படுத்தும் அந்தக் கசப்பான சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்தாலும்
2.நூறு மைலுக்கு அப்பால் இருந்து அதை இழுத்துக் கவர்ந்து அதே இனமாகத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

இதைப் போன்றுதான் நாம் பத்திரிக்கையைப் படிக்கிறோம் என்று இருந்தாலும் அதிலே சம்பந்தப்பட்ட மனிதனின் எண்ண அலைகள் நம் உணர்வுடன் கலந்து உடலுடன் இணைக்கப்பட்டு நம் உடலிலே ஊழ்வினையாகப் பதிவாகி ஒரு வித்தின் தன்மை அடைந்து விடுகின்றது.

வித்தின் தன்மை அடைந்த பின் அது தன் இனத்தைப் பெருக்கி நம்மை அறியாமல் அதே தீமையின் விளைவுகளையே இயக்கிவிடுகிறது. விபத்தினால் வேதனைப்படும் நிலைகள் வருகின்றது.

மனிதனின் வாழ்க்கையில் அடிக்கடி வேதனை என்ற உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதனின் செயலாக்கமாக அந்த உணர்வுகள் நம்மை வேதனைப்படும் செயலுக்கே நம்மை அழைத்துச் செல்லும்.

நமது உயிருடைய வேலை என்ன?
1.நாம் கவர்ந்த உணர்வினை நமக்குள் ஆழப்பதியச் செய்வதும்
2.பதிந்த உணர்வுகள் கவரும் நிலைகள் ஆன்மாவாக மாற்றுவதும்
3.ஆன்மாவிலிருந்து நுகர்ந்தறிந்து இயக்கிக் காட்டுவதும் தான் உயிரின் வேலை.
இயக்கிக் காட்டிய உணர்வின் அலைகள் கண்ணின் புலனறிவிலே படப்படும் பொழுது
1.நேர்முகமாக இருப்பதை அறிந்து விடுகின்றோம்.
2.மறைமுகமாக சூட்சமத்தில் இருப்பதை அறியமுடிவதில்லை.

சூட்சமமாக இருப்பதை நாம் எப்படி அறிய முடிகின்றது..?

அந்த உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து அதன் வழியில் இந்த உடலை அழைத்துச் செல்வதும் அங்கு நடக்கும் நிகழ்ச்சி “உடலிலே அனுபவித்தபின் தான்… அதை அறிய முடியும்”.

ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைந்திருந்தால்
1.எதிர் கொண்டு அலைகள் வந்தால் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக
2.நம்மைக் காத்திடும் “ரிமோட் கன்ட்ரோல்…” போன்று செயல்படும்.

ஆகவே நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி “எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்” என்று தியானிக்க வேண்டும், தவமிருக்க வேண்டும்.
1.இந்த உணர்வுகள் வலுப் பெறும் பொழுது
2.விபத்துக்கள் ஏற்பட்டாலும் அதிலிருந்து “நம்மைக் காத்திடும் சந்தர்ப்பங்கள்” உண்டு.

ஆத்மாவின் விழிநிலை ஆற்றலை வளர்க்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

ஆத்மாவின் விழிநிலை ஆற்றலை வளர்க்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.

அதன் வளர்ச்சி நிலையில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.

சரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு
2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து
3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.

ஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.

ஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி
3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்
4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..?

ஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.

ஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…
1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு
2.ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை
3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்றுவிட்டால்
4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

அத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.

அப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…
1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு
2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே…!

ஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.

குருநாதர் எனக்கு அனுபவ வாயிலாகக் கொடுத்த அருளாற்றலை அப்படியே உங்களுக்கும் கிடைக்கச் செய்கிறேன்

குருநாதர் எனக்கு அனுபவ வாயிலாகக் கொடுத்த அருளாற்றலை அப்படியே உங்களுக்கும் கிடைக்கச் செய்கிறேன்

 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
1.ஒவ்வொரு அணுவின் ஆற்றலின் நிலையையும்… நஞ்சின் இயக்க நிலையையும்
2.நஞ்சுடன் இணைந்த உணர்வின் அலையையும் அவர் தெளிவுறக் கண்டுணர்ந்து
3.இயற்கை எப்படி விளைந்தது என்ற நிலையையும் அறிந்தார்.

அதை எல்லாம் யாமும் (ஞானகுரு) அறிவதற்காக வேண்டிச் சுமார் 15 வருடம் காட்டுக்குள் செல்லச் செய்து அனுபவங்களைப் பெறச் செய்தார்.

பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து அந்த மணங்களை உயிரினங்கள் சுவாசிக்கும் பொழுது
1.அந்த மணம் உயிரினத்திற்குள் எண்ணமாக எப்படி வருகிறது…?
2.அந்த எண்ணத்தின் துணை கொண்டு தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்கின்றது…?
3.ஒரு மரமாக இருப்பது தன் மணத்தைக் கொண்டு மற்ற நிலைகள் தன் அருகிலே வராதபடி தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்கிறது…?
4.அதே சமயம் தன் உணர்வால் அதனின் இனத்தின் சத்தை எப்படி எடுத்துக் கொள்கிறது…? என்ற நிலையையும் காட்டினார்.

அதே போல் செடிகளை எடுத்துக் கொண்டாலும் அந்த செடியில் வரும் மணத்தை உயிரினங்கள் நுகர்ந்தால்… அந்த உணர்வின் சத்து உடலாகி…
1.அதற்குள் இருக்கும் இந்த விஷமும்
2.அதனின் மணமும்
3.அதனின் உணர்வும்
4.எண்ணமாக எப்படி இயங்குகின்றது…? என்ற நிலையையும் அதை எல்லாம் நேரடியாகக் கண்டுணரும்படிச் செய்தார்

அவ்வாறு 15 வருடம் காட்டிற்குள் பெற்ற அந்த அனுபவத்தின் பயன் கொண்டு தான் மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படி செய்தார்.

அவ்வாறு சந்திக்கப்படும் பொழுது ஒவ்வொரு மனிதரும் எந்தக் குணத்தை முன்னணியில் வைத்து வளர்த்துள்ளார்களோ அதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் பிறிதொரு ஆத்மா அவர்களுக்குள் எப்படி இயங்குகின்றது…? என்றும் காட்டினார்.

அந்த ஆன்மாக்கள்
1.அவர்கள் எண்ணங்களுக்கு ஒத்ததாக இயங்குவதும்
2.எண்ணங்களுக்கு மாறாக இயங்குவதும்
3.ஆசையால் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் அவர்களுக்குள் வளர்ந்து கொண்ட பின்
4.அதனின் உணர்வுகள் இவர்கள் உடலிலே எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையை அதைத் தெளிவாகத் தெரியும்படிச் செய்தார்.

அதை எல்லாம் அறிந்து கொண்ட பின்… அடுத்த கணம்
1.அதை நீக்கிடும் உணர்வின் ஆற்றலை… அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீ எப்படிப் பருக வேண்டும்…?
2.அதை உனக்குள் எப்படி வளர்க்க வேண்டும்…?
3.அந்த உணர்வின் எண்ணத்தை மற்றவர்களுக்கு ஒரு நல்ல சக்தி வாய்ந்த வித்தாக எப்படிப் பதிவு செய்ய வேண்டும்..?
4.அத்தகைய ஞான வித்தைப் பதிவு செய்து கொண்ட நிலையில்
5.அந்த அருள் ஞானிகளின் உணர்வினை அவர்கள் எண்ணி அதை நுகர்ந்து
6.அதன் மூலம் வாழ்க்கையில் தனக்குள் அறியாது வந்த தீய வினைகளை எப்படி அவர்களே நீக்கிக் கொள்வது…? என்ற நிலையையும்
7.குருநாதர் எனக்குத் தெளிவாகப் போதித்தார்.
8.அவர் எனக்குப் போதித்த அருள் வழிப்படித் தான் உங்களுக்கும் வழிகாட்டுகின்றேன்.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணி ஏங்கினால் அந்த அருள் சக்தி உங்களைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்கு உறுதுணையாக வரும்.