விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் இன்றைய உலகம் ஆன்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும் – ஈஸ்வரபட்டர்

விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டிருக்கும் இன்றைய உலகம் ஆன்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும் – ஈஸ்வரபட்டர்

 

ஐந்து திருமுறைகள் பக்தியின் பரவசமாகக் கொண்ட நிலையை மாற்றி
1.ஆறாம் திருமுறையில் மெய்யொலியாக உண்மை ஞானமாக
2.ஆத்ம தரிசனம்… என்றும் ஜோதி தரிசனம்… என்றும் காட்டினார் இராமலிங்க அடிகள்.

மனிதன் தன் ஆத்ம அறிவைக் கூட்டிக் கொள்ள “மதி ஒளி” என்னும் சிந்திக்கும் திறன் ஆய்வில் கண்டும் கேட்டும் உணர்த்தும் என்பதில் “அறிவை அறிவால் அறிவர்…!” என்ற சூட்சமமாக “இராமலிங்கச் சித்தன்” வெளிப் போந்த மெய் அந்த ஞானத்தை மனித சமுதாயம் எந்த அளவிற்கு ஏற்றுக் கொண்டது…?

பக்தி கொண்டு பஜனை பாடவும்.. பரவசமாக அந்தச் சித்தன் உரையைப் பேச்சுக்கலை ஆற்றவும்… திருவிழாக்கள் என்ற பேரில் வாண வேடிக்கை வினோதங்கள் கவனத்தை ஈர்க்கவும்.. செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சித்தன் ஸ்தூல சரீரம் கொண்டு உலவிய கால கட்டங்களில் மனிதனின் போக்கு ஆராவாரம் கொள்ளும் செயல்களை விடுத்து மெய் ஞானம் கொண்டு உயர்ந்திடவே மெய்ப் பொருளைக் கொள்ளப்பா… கொள்…! என்று “ஏக்கமுடன் கூவியே அழைத்தான்…!”

ஆறாவது திருமறையை உணர்த்த வந்த செயலை ஒதுக்கித் தள்ளிய சமுதாய நிலையைக் கண்ட பின்…
1.கண்ட பின் “கடை விரித்தேன் கொள்வாரில்லை…!” என்றுரைத்து
2.“மீண்டும் பிறப்பில் வருவேன்… இந்த உலகின்கண் மற்றொரு பாகத்தில்…!” என்ற அந்தச் சித்தனின் சொல் வாய்மை
3.பிறப்பின் தொடரில் “நடைமுறைக்கு வந்துவிட்ட சூட்சமத்தைத்தான்…” இன்றைய மனிதன் அறிந்து கொண்டானா…?

போற்றி…போற்றி…! என்று போற்றிடவே துடிக்கின்ற மனிதனின் செயலில் மெய் ஞான விழிப்படையத் தடுக்கின்ற நிலையின் காரணமே தான் கொண்ட அதி ஆசை நிலை தானப்பா.

1.“பூசத்தில் ஜோதி கண்டேன்… பிறவிப்பயன் பெற்று விட்டேன்…!” என்று
2.தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு புகழ்ந்திடும் வழிக்கன்றோ செல்கிறான் மனிதன்.

கண்டவன் விண்டிடுவானா…? பெற்றதின் பயனை…! ஏதோ மனதிற்கு ஒரு நிறைவு ஹன நேரத்திற்கு என்று உரைப்பவனே மீண்டும் உலக இயலில் அகப்பட்டே தத்தளிக்கின்றான்.
1.அருள் செல்வம் என்பது எதுவப்பா…?
2.இராமலிங்கம் காட்டிய ஜோதித் தத்துவம் எதுவப்பா…?

ஒரு புறம் சூரியன் மறு புறம் சந்திரன் காணுகின்ற கால கட்டத்தில் நடுவிலே ஜோதி காட்டியதே உயிராத்ம தரிசனம்…! “நான்” என்பதன் கருப்பொருளை உணர்த்தவே… உணர்ந்து கொள்ளவே காட்டப்பட்டது அந்தத் ஜோதித் தத்துவம்.

சூரியன்… சந்திரன்… ஜோதி விளக்கு… அனைத்தும் இருளகற்றும் ஒளிகள். இருளகற்றும் ஒளியை மனிதன் தன் ஐம்புலன்களில் ஒளி கொண்டு கண்டு உணர்வதுவே “கண் ஒளி கொண்டு தான்…!”

கண்ணொளி கொண்டு ஜோதி தரிசனம் காண்கின்றவன் – தான் காண்பது ஜோதியே என்று அறிந்து கொள்ளும் ஒளி… “அறிவின் ஒளியப்பா…!

1.அறிவின் ஒளி கொண்டு காண்கின்ற ஜோதியை
2.நான் ஜோதி தரிசனம் கண்டேன் என்று உரைத்ததில்
3.ஜோதி தரிசனத்தைக் கண்டு கொண்ட “நான்” என்பதே உயிராத்மாவாகிய ஜோதியப்பா…!

“நீ கண்டு கொள்ளடா… உன் ஆத்ம ஜோதியை…!” என்று கூறாமல் கூறிச் சொல்வித்த இராமலிங்க சித்தனாரின் உண்மை நிதர்சனம் என்றுமே மாறாத சத்தியத்தின் சக்தியப்பா…!

இன்றைய விஞ்ஞான உலகம் ஆத்ம சிந்தனையின் சக்தியை அறிந்து கொள்ள ஆவல் கொண்ட கலியின் கடைசிக் காலத்தில் “இராமலிங்க வள்ளல் சித்தன்” கொண்ட ஆத்மாவின் வலுவே
1.உலகின் ஒரு கண்டத்தில் செயல் கொண்டிருக்கும் உண்மையின் பொருள் கண்டு கொண்ட பின்பாவது
2.மனிதன் தன்னை உணர்ந்து கொள்ளும் செயலுக்கு ஊக்கமளித்திடச் செயல் கொள்ளட்டும்.

அழிவின் பாதையில் மனித சமுதாயத்தையே அழைத்துச் சென்று கொண்டிருக்கும் விஞ்ஞானமும் ஆத்மீக வழியின் மெய் ஞானத்தை உணரட்டும்… என் ஆசிகள்…! (ஈஸ்வரபட்டர்)

இன்றைய உலக சூழ்நிலையில் எதை நம் விதியாக மாற்ற வேண்டும்…?

இன்றைய உலக சூழ்நிலையில் எதை நம் விதியாக மாற்ற வேண்டும்…?

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஒரு கடுமையான வேதனைப்படுவருடைய செயல்களை நாம் உற்று நோக்கினோம் என்றால் அது நமக்குள் “விதியாக” மாறுகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்… இன்றைய உலகில் அனைத்துமே விஞ்ஞான அறிவால் பெரும் வேதனைப்படும் உணர்வுகளையே நாம் நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் எங்கோ நடக்கும் சம்பவங்களை நாம் கேட்கின்றோம்… உடனுக்குடன் பார்க்கின்றோம்
2.அதையெல்லாம் பார்த்து… நுகர்ந்து… உணர்வால் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்தக் கடுமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகி விட்டால் அதுவும் நமக்குள் “விதியாக” மாறி விடுகின்றது.

பலருடைய துன்பப்பட்ட உணர்வுகளையும் பலருடைய கொடுமைகளையும் நமக்குள் எடுக்கும் பொழுது அது எல்லாம் நமக்குள் வினையாக வித்தாகப் பதிவாகின்றது. இப்படி ஒரு வித்தாக மாறுவதைத்தான் “விதி” என்று சொல்வது.

1.அப்படிப் பதிவான வித்து தன் இனத்தைப் பெருக்க
2.மீண்டும் மீண்டும் அதே உணர்வைத் தான் கவரும்.
3.அதே துன்பத்தைத் தான் நமக்குள்ளும் செயல்படுத்தும்.

ஆனால் அந்த விதியை எவ்வாறு மாற்ற வேண்டும்…?

பத்திரிகையோ டி.வி.யோ பார்த்துப் படித்த பின்பு உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அந்த வீரியத் தன்மை (கொடுமைகள்) நமக்குள் அது தனித்த நிலையில் வளராது தடுக்க
2.ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்… இந்த உணர்வினை நமக்குள் அதிகமாக நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப் பின்… பத்திரிகையிலோ டி.வி.யிலோ படித்துப் பார்த்த (சம்பவங்கள்) அத்தகைய நிலைகள்…
1.நாளை நடப்பது எல்லாம் நல்லவைகளாக நடக்க வேண்டும்.
2.தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி உணர்வை மாற்றி விட்டால்
4.இது நமக்குள் தீமைகளை வென்றிடும் “விதித் தன்மை” அடைகின்றது.

இதைத்தான் மதி கொண்டு விதியை மாற்றுதல்…! என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தால் இது மதி…! அந்தப் பேரருளை நமக்குள் பெறச் செய்கின்றது. நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது

ஆகையினால் நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற காலை துருவ தியானம் நல்ல பலனைத் தரும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

இடும்பனான குணம் அகற்றி தெய்வீக குணத்தை நாம் வளர்க்க உயிரான்மா ஒளியாகும் – ஈஸ்வரபட்டர்

இடும்பனான குணம் அகற்றி தெய்வீக குணத்தை நாம் வளர்க்க உயிரான்மா ஒளியாகும் – ஈஸ்வரபட்டர்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்மாவின் சக்தியைக் கெடுக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது…? என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகள் தாக்கும் போது உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாத செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு – உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவை அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்மாவின் சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.

பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

 

காவியங்களில் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் கடைசியில் எமன் பாசக்கயிறை வீசி நம்மை அழைத்துக் கொண்டு போகின்றான்…! என்று காட்டியிருப்பார்கள்.

அழைத்துச் சென்ற பின் அவரவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக நரகத்திற்கு அனுப்புகின்றான் என்றும் சொல்கின்றார்கள். அதனின் உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் அறிதல் வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வந்த பின்பு தான் இன்று இந்த மனிதச் சரீரத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் இப்பொழுது மனிதனாக வாழும் காலத்தில்…
1.“எனக்கு ஒருவன் துன்பம் கொடுத்தான்… தொல்லை கொடுக்கின்றான்…! என்ற எண்ணத்தை வலுவாக்கி விட்டால்
2.இந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது.

எப்படி…?

ஒருவர் வேதனைப்படும் உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையினுடைய இயல்பான நிலைகளை மறந்துவிடுகின்றோம்.

வேதனை… வேதனை… என்று பட்டு அந்த வேதனையான உணர்வு எங்கிருந்து… யாரால் வந்ததோ அவரையே எண்ணி அந்த உடலுக்குள் சென்று… அங்கேயே தண்டனையை அனுபவிக்கச் செய்கின்றது…!

ஏனென்றால் வேதனை என்றாலே விஷம். ஆக அந்த உடலுக்குள் சென்று மீண்டும் அதே விஷத் தன்மையை அங்கேயும் பெருக்கிக் கொண்டு அந்த உடலையும் வீழ்த்துகின்றது.

அடுத்து மனிதனல்லாத உயிரினங்களுக்குள் தான் செல்ல நேரும். இதைத் தான் நம் காவியங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால் அதே சமயத்தில் இந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகள் இருந்ததோ அந்த ஆசைகளை அகற்ற
1.இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பதிவாக்கி
2.இந்த எண்ணங்களை நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால்
3.அந்த எண்ணம் இந்த மனித உடலுக்கு எமனாக மாறி
4.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் நிலைகளுக்கு நம்மை அரவணைத்து
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றது.

அதுவே சொர்க்கவாசலாக அமைந்து அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.அதற்கு அப்புறம் வேறு எண்ணங்கள் வருவதில்லை…
2.ஒளியான உணர்வுகள்தான் இயக்கும்.

தாவர இனங்கள் எப்படித் தன் உணர்வின் செயலால்… தன் அறிவால் இயக்குகின்றதோ… இதைப் போல மற்ற உயிரினங்களில் எண்ணங்களாக வருவதை அந்த உயர்ந்த ஒளியின் தன்மை பெறச் செய்து விட்டால் எண்ணங்கள் வருவதில்லை… உணர்வுகள் தான் இருக்கும்…!

ஒரு செடியின் சத்தை நாம் நுகர்ந்தால் அதற்குண்டான எண்ணங்கள் நமக்குள் எப்படி வருகின்றதோ இதைப் போலத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால்
1.இந்த மனித உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது.
2.மாறியபின் அந்த உணர்வின் இயக்கமாக இயக்கத் தொடங்கும்…!

துருவ நட்சத்திரம் எத்தனை கோடி உணர்வுகளைச் சேர்த்துத் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாறியதோ அதனின் உணர்வைக் கவர்ந்து உயிரின் துணை கொண்டு நமக்குள் இணைத்தால் ஒளியின் சரீரமாக ஆவோம்.

அப்போது எண்ணமே இல்லாது மற்றொன்றை இயக்கச் சக்தியாக மாற்றும். அத்தகைய பயிற்சியைத் தான் இதிலே கொடுக்கின்றோம் (ஞானகுரு).

“சக்கராயுதம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“சக்கராயுதம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“இரத கஜ துரித பதாதி…” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ… அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்… அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்த தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்…”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்… மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்…! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி…!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே…!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்…” என்பதன் பொருள் என்ன…?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழி முறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு…!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன் இஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி… பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்… அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து… உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்… தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு… முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரத்திற்கு… அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி…
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்…” என்றால் என்ன செய்ய வேண்டும்…?
உணர்தல்…
சுவைத்தல்…
நுகர்தல்…
செவிமடுத்துக் கேட்டல்…
விழியின் செயல் திறன்…
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை… எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்)

ஆரம்பத்தில் யாம் அதிவேகமாக உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…?

ஆரம்பத்தில் யாம் அதிவேகமாக உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன…?

 

சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார்…! என்ற இந்த எண்ணங்களில் தான் இருக்கின்றோமே தவிர “அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்…” என்று நாம் இன்னும் தயாராகவில்லை.

எத்தனையோ வருடங்களாக எண்ணிலடங்காத உபதேசங்களை யாம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இதைக் கேட்டுவிட்டு
1.சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா…? என்று
2.இந்தப் பேச்சைத் தான் அளக்கின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்று அடிக்கடி யாம் சொல்லி இருக்கின்றோம். இப்பொழுது தற்சமயத்தில் கொடுக்கும் உபதேசங்கள் எல்லாம் தெளிவாகச் சொல்கின்றோம்.

முந்தி எல்லாம் உபதேசம் செய்யும் போது எக்ஸ்பிரஸ் போன்று அதுபாட்டுக்குக் காற்றிலே போவது போன்று திடு…திடு… என்று ஓடிக் கொண்டிருக்கும்.

அதைக் கேட்பவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். உபதேசம் கேட்டு முடிந்தவுடன் “அற்புதமாக இருக்கின்றது என்றெல்லாம் தலையை ஆட்டுவார்கள்.

கடைசியில்… சாமி சொன்னது உங்களுக்கு அர்த்தமானதா…? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

முதலில் அதிவேகமாகச் சொன்னேன். இப்பொழுது ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு இயக்குகிறது…? என்று நிறுத்தி விளக்கமாகச் சொல்கிறேன்.

காரணம்…
1.அன்று குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்திகளை
2.அந்த உணர்வுகளை எடுத்து மீண்டும் எனக்குள் வளர்த்து
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்தேன்.

நீங்கள் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளை எழுதிக் கொள்வது போன்று தான் அந்த உணர்வலைகளை வெளியில் பரப்பினேன். கேட்பவர்களுக்குள்ளும் பதிவானது.

உதாரணமாக ஒருவர் பேசுவதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்தபின் அதைக் குறைவான வேகத்தில் மீண்டும் சுழல விட்டால் தொண்டை கனமாகப் பேசுவது போன்று இருக்கும். ஆனால் அதை வேகமாகச் சுழல விட்டால் கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று சப்தமிடும்.

அதைப் போன்றுதான் ஆரம்பத்தில் யாம் சொல்லும் பொழுது கீச்சு…பூச்சு… கீச்சு… பூச்சு… என்று தான் இருக்கும். அர்த்தம் புரியாது. ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த சக்திகளை அப்படித்தான் பதிவு செய்தேன்.

ஒருத்தர் எம்மிடம் கேட்கிறார் என்றால் அவரைக் கேட்கச் சொல்லிவிட்டு உடனே எல்லாவற்றையும் பேசி அவர்களுக்குள் பதிவு செய்து அந்த அலைகளைப் வெளியிலே பரப்பச் செய்வேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். அந்தந்தக் காலகட்டத்தில் உடனே குருநாதர் பதிவு செய்ததை நினைவுபடுத்தி மீண்டும் எடுத்து அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொண்டே இருப்பேன்.

1.அப்படிப் பரப்பி வைத்த அலைகளை எடுத்துத் தான்
2.அதிலே எதை எதையெல்லாம் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டுமோ
3.இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
4.முந்தி சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன்.
5.ஆனால் முந்தி அர்த்தமாகாது. இப்பொழுது அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்தது முந்தி அர்த்தமாகவில்லை என்றாலும்… சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் அதை இப்பொழுது நீங்கள் எண்ணும் பொழுது உங்களுக்குள் ஓரளவுக்கு அர்த்தமாகும். அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு வருகிறீர்கள்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்ததை உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் சொல்லப்படும் போது அவர்களிடமும் இது பதிவாகி விட்டால் நான் (ஞானகுரு) பேசிய மெய் ஞானிகளின் உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து… அந்த சக்தியைப் பெறும் தகுதி அவர்களும் பெறுகின்றார்கள்.

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்றால் என்ன செய்கிறோம்…?

நல்ல மனிதன் என்று பாசத்தால் பழகிய பின் அடுத்தவனிடம் சொல்லப்படும் நோயினால் ரொம்ப அவஸ்தைப்படுகிறான் என்று தான் சொல்கிறோம்.

1.நோயாளியை உற்றுப் பார்த்து அவர் கஷ்டப்படுவதை நுகர்ந்து
2.அடுத்து அடுத்து நண்பர்களிடம் சொல்லப்படும்போது அவர்களும் இதைக் கேட்டு வருத்தப்படுவார்கள்.

அதைப் போன்று தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் வரும் சந்தர்ப்பத்தை எடுத்து உங்களுக்குள் ஞானத்தை உபதேசிக்கின்றேன். அதாவது
1.மறைந்த பொக்கிஷத்தை (அருள் ஞானம்) மீண்டும் நினைவுபடுத்தி அந்த அலைகளைப் பெருக்கி
2.அவ்வப்பொழுது அதற்குண்டான உணர்வைக் கூட்டி
3.உயர்ந்த ஞானத்தின் உணர்வுகளை வெளிப்பரப்பு…! என்று குருநாதர் சொன்னதால்
4.ஆரம்பத்தில் அதை நான் செய்தேன்.

அந்த அலைகள் இங்கே உங்களுக்கு முன்னாடி பரவி இருப்பதனால் உங்களுக்கு இப்பொழுது அர்த்தமாகும் அளவுக்குத் தெளிவாக விளக்கமாக வரும்.

அந்த விளக்கங்களை நீங்கள் மற்றவர்களுக்கும் “சாமி இப்படிச் சொன்னார்…” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும். இதை அவர்களும் உணர்வார்கள்.

இப்படி இந்தக் காற்று மண்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக… மிக அடர்த்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவும்.
1.எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமாகவும் அது அமையும்.
2.எல்லோரும் ஞானத்தின் வழித் தொடரைப் பெறும் பாக்கியமாகவும் நிச்சயம் அமையும்.

சிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

சிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில்… யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்… சக்தியை அளித்துக் கொண்டும்…
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம்… எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை வேகம் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன..?

எண்ணத்தின் வலு கொண்டு…
1.மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால்
2.ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை… அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக… நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா – ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள் உயிரின் ஒளி காந்தத்தை நாடி உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்…!”

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு – ஞானகுரு

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கெட்டதைப் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஏனென்றால் நாம் ரோட்டிலே போகின்ற போக்கிலே அந்தத் தவறு செய்பவர்களைப் பார்க்க நேர்கின்றது.

1.அந்த உணர்வுகள் நமக்குள் பட்டவுடனே நம்மை அறியாமலே வெறுப்பு வருகின்றது
2.அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன செய்யும்…? நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை உயிர் இயக்கிக் கொண்டே இருக்கும். நம்மை அறியாமல் ஆத்திரத்தையும் கோபத்தையும் தூண்டிக் கொண்டே இருக்கும்.

இதைப் போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ தீமையான உணர்வைப் பார்த்திருப்போம். அந்த அணுக்கள் நமக்குள் விளைந்திருக்கும். அதற்குச் சாப்பாடு தேவை.

அது தன்னுடைய உணர்வுகளை எடுத்து வளரப்படும் பொழுது
1.நம் உடலில் மேல் வலிக்கின்றது… கால் வலிக்கின்றது…
2.கழுத்து சுளுக்கி விட்டது… நரம்பு பிடித்துக் கொண்டது… சுண்டி விட்டது… என்றெல்லாம் சொல்வோம்.
3.நன்றாகத்தான் இருந்தோம்… இது எப்படி வந்தது…? என்று தெரியவில்லை என்போம்.

ஆனால் இவை எல்லாம் எந்த அடிப்படையில் வருகிறது என்றால்… மேலே சொன்ன மாதிரி சில நேரங்களில் நாம் பதிவு செய்த அந்தத் தீமையான உணர்வுகள் அது உடலுக்குள் வலுவாகப்படும் பொழுது நம் நல்ல அணுக்களை இயக்க விடாதபடி தடைப்படுகின்றது. அதனால் வேதனையும் வருகின்றது.

டாக்டரிடம் சென்று அவர் கொடுக்கும் அந்த மருந்தை வைத்துத் தான் இதை எல்லாம் போக்க முடிகிறது.

இருந்தாலும் தீமைகளைக் கண்ட உடனே அடுத்த கணமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று அதைச் சுத்தப்படுத்துகின்றோமா என்றால் அந்தப் பழக்கம் நம்மிடம் இல்லை.

அத்தகைய பழக்கம் வர வேண்டும் என்பதற்குத்தான்
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேச வாயிலாக அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம்.
2.அதை எடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றோம்.
3.அந்த மகரிஷியின் அருள் சக்தியை எடுக்க வேண்டும் என்று
4.பல வகைகளிலும் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

ஆனால் உபதேசங்களைக் கேட்ட பின் எங்கள் சாமி… எங்கள் சாமி…! என்று போற்றுவதற்கு மட்டும் ஆள் நிறைய வந்து விடுகின்றது. உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்தியை எண்ணித் தனக்குள் எடுப்பதில்லை.

1.ஞானகுரு சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தேன்….
2.என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது…! என்ற இந்தச் சொல் உங்களிடமிருந்து வர வேண்டும்.

காரணம் என்ன என்றால் கோபப்பட்டவர்கள்… சலிப்புப்பட்டவர்கள்… சஞ்சலப்பட்டவர்கள்… வெறுப்புப்பட்டவர்கள்… குரோதப்பட்டவர்கள்… தொல்லை கொடுப்பவர்கள்… என்று இத்தனையும் இதற்கு முன்… பதிவு செய்திருக்கிறீர்கள்.

இது எல்லாம் உடனடியாக நினனவுக்கு வந்து விடுகின்றது.

ஆனால் உங்களிடம் உயர்ந்த குணங்களைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). அதை மீண்டும் எண்ணச் சொல்கின்றேன். நீங்கள் எண்ணுகிறீர்களா…! என்றால் இல்லை.

ஏனென்றால் இந்தக் கோபமும் வெறுப்பும் வேதனையும் குரோதமும் வலுக் கொண்டது. உங்களிடம் இருக்கும் நல்லதை எடுக்க விடாதபடி முன்னாடியே தடுத்து விடுகின்றது.

ஆகவே அதைச் சுத்தப்படுத்தினால் தான் அந்த அருள் ஞானத்தைப் பெற முடியும். சிறிது நாளைக்கு நீங்கள் இதை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக எளிதாகக் கொடுத்து இருக்கின்றேன்.

குருநாதர் எனக்கு எத்தனையோ கடுமைக்கு அப்புறம் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
1.உங்களுக்கு இலேசாக எடுத்துக் கொள்ளும்படி அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளேன்.
2.சதா உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்…! என்று அதைப் பாய்ச்சுவது தான் என்னுடைய பொழுது போக்காக இருக்கின்றது.

யார் யாருக்கெல்லாம் வாக்கு கொடுத்தேனோ… நல்லதாக வேண்டும் என்று சொன்னேனோ… அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.

முதலில் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன். எனக்குள் அதை வலுப் பெறச் செய்து கொள்கின்றேன்.

அதற்குப் பின் நான் வாக்குக் கொடுத்தவர்கள் அனைவருக்கும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.. உடல் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
4.அந்த அருள் ஞானம் பெற வேண்டும்… மகிழ்ந்து வாழ வேண்டும்
5.என்னைச் சந்தித்தவர்கள் எல்ல்லொரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படித்தான் என்னுடைய தவம் இருந்து கொண்டிருக்கின்றது. (ஞானகுரு).

விபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

விபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதுவே நலம் பயக்கும்.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்…” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்…! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்… ஒலி நாதத்தின் அமில குணமும்… ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா…” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு…!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று… “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை…!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் – உண்மையை உணர்ந்து கொள்ளத்தான்…!

ஆனால் அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு. சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்…?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது… திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி… விபூதி…! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்…!)

மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

காட்டிற்குள் ஒரு சமயம் மலைப்பாம்பு ஒன்று வருகிறது நான் (ஞானகுரு) படுத்திருக்கிறேன். அது சுருண்டு…சுருண்டு சுருண்டு…சுருண்டு. புஸ்…புஸ்…புஸ்ஸென்று வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) தான் இதை ஏவிவிட்டாரா… அல்லது நிஜமாகவே வருகின்றதா…? என்று எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு சீறிக் கொண்டு வருகின்றதே…! நிஜமாகவே உருவாக்கி கொடுக்கின்றாரா…! என்ற எண்ணமும் வருகின்றது.

ஆனால் குருநாதர் அருகில் இல்லை… காட்டிற்குள் சென்று விட்டார். குருநாதர் என்ன ஏவல் செய்கிறார்…? என்றும் எனக்குத் தெரியவில்லை. நிஜமா… பொய்யா…? என்று தெரியவில்லை.

அந்தப் பாம்பு அதிபயங்கரமான நிலைகளில் சீறிப் பாய்ந்து கொண்டு வரும் பொழுது என் மேலே இருக்கக்கூடிய துண்டையும் அதிலே ஒரு கல்லை முடிந்து அதைத் தூக்கிக் கொடுக்கின்றேன்.

இது என்னுடைய யோசனை…! புஸ்…ஸ்ஸ்… என்று இழுக்கும் பொழுது அதைத் தூக்கி கொடுக்கின்றேன். வாயில் சிக்கிக் கொண்டது.

மனிதனுடைய வாசனை என்று தெரிந்து அந்தக் கல்லுடன் சேர்த்து அப்படியே விழுகின்றது. ஏனென்றால் துண்டைக் கையில்தான் எடுத்திருந்தேன். அதற்குள் கல் தான் இருக்கிறது என்று அதற்குத் தெரியாது.

அந்த நேரத்தில் எனக்குள் பல விதமான உணர்வுகள் சுழல்கின்றது.
1.ஒரு பக்கம் தைரியமும் வருகின்றது. ஒரு சில நேரங்களில் தப்ப முடியவில்லை.
2.ஆனாலும் இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி என் விரலை நீட்டினால் மரத்தையே வேருடன் சாய்க்கும் சக்தியை குருநாதர் கொடுத்திருந்தார்.

சரி…! என்னிடம் கொடுத்த சக்தியை வைத்து நான் ஏதாவது செய்கின்றேனா…? என்று தான் குருநாதர் பரிசோதிக்கிறார் என்ற இப்படி ஒரு சிந்தனை வந்தது.

1.எதுவானாலும் சரி… அப்பா நீயே பார்த்துக் கொள்…
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.என்னைப் பாம்பு விழுங்கினாலும் சரி… அல்லது கடித்தாலும் சரி…
4.நீயே பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டேன்… அவ்வளவுதான்…!

அந்த மலைப் பாம்பை அனுப்பி வைத்தது அவருடைய ஏவல்தான் என்று அப்புறம் நான் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு மறைகின்றது.

குருநாதர் கெக்கெக்..கெக்க.. என்று சிரித்துக் கொண்டு வருகின்றார். என்னுடைய பயிற்சியில் நீ தப்பிவிட்டாய்…! என்கிறார்.

குருநாதர் இந்த மாதிரிப் பல பரிசோதனைகளை வைத்து அவர் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எப்படி உபயோகிக்கின்றேன்…? என்று பார்க்கின்றார்.

இது போன்ற பல இன்னல்களைப் பட்டேன்… காடு மேடெல்லாம் அலைந்தேன்… குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் உணர்த்திய உண்மைகளை அறிந்தேன்… அந்தச் சக்தியை எனக்குள் பெருக்கினேன்.
இருந்தாலும் குருநாதர் எனக்குச் சொன்னது…
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதி
3.அந்தக் கோவிலுக்குள் இருக்கும் நற்குணங்களை நீ உயர்ந்த நிலையில் எண்ணு…!

இவ்வாறு நீ எண்ணுவாய் என்றால் நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தி உனக்குள் நற்பயனை அடையும்…! என்று இப்படி இந்த மூன்று சுருக்க நிலையைச் சொன்னார்.

அந்த அடிப்படையில் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.