நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது… உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

 

காவியங்களில் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் கடைசியில் எமன் பாசக்கயிறை வீசி நம்மை அழைத்துக் கொண்டு போகின்றான்…! என்று காட்டியிருப்பார்கள்.

அழைத்துச் சென்ற பின் அவரவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக நரகத்திற்கு அனுப்புகின்றான் என்றும் சொல்கின்றார்கள். அதனின் உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் அறிதல் வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வந்த பின்பு தான் இன்று இந்த மனிதச் சரீரத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் இப்பொழுது மனிதனாக வாழும் காலத்தில்…
1.“எனக்கு ஒருவன் துன்பம் கொடுத்தான்… தொல்லை கொடுக்கின்றான்…! என்ற எண்ணத்தை வலுவாக்கி விட்டால்
2.இந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது.

எப்படி…?

ஒருவர் வேதனைப்படும் உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையினுடைய இயல்பான நிலைகளை மறந்துவிடுகின்றோம்.

வேதனை… வேதனை… என்று பட்டு அந்த வேதனையான உணர்வு எங்கிருந்து… யாரால் வந்ததோ அவரையே எண்ணி அந்த உடலுக்குள் சென்று… அங்கேயே தண்டனையை அனுபவிக்கச் செய்கின்றது…!

ஏனென்றால் வேதனை என்றாலே விஷம். ஆக அந்த உடலுக்குள் சென்று மீண்டும் அதே விஷத் தன்மையை அங்கேயும் பெருக்கிக் கொண்டு அந்த உடலையும் வீழ்த்துகின்றது.

அடுத்து மனிதனல்லாத உயிரினங்களுக்குள் தான் செல்ல நேரும். இதைத் தான் நம் காவியங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால் அதே சமயத்தில் இந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகள் இருந்ததோ அந்த ஆசைகளை அகற்ற
1.இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பதிவாக்கி
2.இந்த எண்ணங்களை நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால்
3.அந்த எண்ணம் இந்த மனித உடலுக்கு எமனாக மாறி
4.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் நிலைகளுக்கு நம்மை அரவணைத்து
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றது.

அதுவே சொர்க்கவாசலாக அமைந்து அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.அதற்கு அப்புறம் வேறு எண்ணங்கள் வருவதில்லை…
2.ஒளியான உணர்வுகள்தான் இயக்கும்.

தாவர இனங்கள் எப்படித் தன் உணர்வின் செயலால்… தன் அறிவால் இயக்குகின்றதோ… இதைப் போல மற்ற உயிரினங்களில் எண்ணங்களாக வருவதை அந்த உயர்ந்த ஒளியின் தன்மை பெறச் செய்து விட்டால் எண்ணங்கள் வருவதில்லை… உணர்வுகள் தான் இருக்கும்…!

ஒரு செடியின் சத்தை நாம் நுகர்ந்தால் அதற்குண்டான எண்ணங்கள் நமக்குள் எப்படி வருகின்றதோ இதைப் போலத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால்
1.இந்த மனித உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது.
2.மாறியபின் அந்த உணர்வின் இயக்கமாக இயக்கத் தொடங்கும்…!

துருவ நட்சத்திரம் எத்தனை கோடி உணர்வுகளைச் சேர்த்துத் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாறியதோ அதனின் உணர்வைக் கவர்ந்து உயிரின் துணை கொண்டு நமக்குள் இணைத்தால் ஒளியின் சரீரமாக ஆவோம்.

அப்போது எண்ணமே இல்லாது மற்றொன்றை இயக்கச் சக்தியாக மாற்றும். அத்தகைய பயிற்சியைத் தான் இதிலே கொடுக்கின்றோம் (ஞானகுரு).

Leave a Reply