குரு இட்ட கட்டளை

tapovanam

குரு இட்ட கட்டளை 

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகின்றான். அந்த அருளை எந்நாட்டவரும் பெற முடியும்.

அவன் எப்படி ஒளியாக ஆனானோ அதே தென்னாட்டிலே வாழ்ந்த அவன் உணர்வுகள் இங்கே அதிகமாக உண்டு.
1.ஆகவே அவன் அருளை நாம் பெறுவோம்.
2.நமக்குள் அறியாது புகுந்த இருளை அகற்றுவோம்.
3.மெய்ப் பொருளைக் காண்போம்.

உலக மக்கள் அனைவரும் இருளை நீக்கி மெய்ப் பொருளைக் காணும் அருள் சக்தியும்… சகோதரப் பண்புடன் அரவணைத்து வாழும் சக்தியும்… பேரன்புடன் வாழும் திறனும் பெறவேண்டும் என்று தியானிப்போம்.

குடும்பத்தில் கருவில் வளரும் சிசுக்களுக்கு அந்தப் பத்து மாதம் பொறுமையாக இருந்து நீங்கள் செயல்பட்டு அகஸ்தியன் உணர்வைப் பெறச் செய்து “அருள் ஞானிகளை நீங்கள் உருவாக்க வேண்டும்…” அவன் இந்த நாட்டைக் காப்பான்… ஊரையும் காப்பான்…!

நம் குருநாதர் ஈஸ்வரபட்டர் என்னைக் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலையச் செய்தார். அங்கெல்லாம் அலைந்து திரிந்து இயற்கையின் உண்மைகளை குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அறிந்தேன்… உணர்ந்தேன்.

அப்படி அறிந்து உணர்ந்ததை உங்களுக்குள் அமர்ந்த இடத்திலேயே அத்தனை உணர்வையும் சேர்க்கச் செய்கின்றேன். ஆனால் நான் தெரிந்து கொள்ள காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தேன். எத்தனையோ சிரமங்கள் பட்டேன்.

1.குருநாதர் உங்கள் உயிரை எல்லாம் கடவுளாக மதிக்கச் சொன்னார்.
2.உடலைக் கோவிலாக மதிக்கச் சொன்னார்.
3.மனிதனாக உருவாக்கிய அரும் பெரும் சக்தியைத் தெய்வங்களாக மதிக்கச் சொன்னார்.
4.தெய்வங்கள் வீற்றிருக்கக்கூடிய அந்த ஆலயங்களைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றார்.

அதற்காக வேண்டி இப்பொழுது கொடுக்கும் இந்த உபதேச உணர்வுகளை அவர்கள் நுகர்ந்தாலே அந்தத் தீமைகள் அகன்று புனித உணர்வு பெறுவார்கள்…! ஆகவே உடல் என்ற அந்த ஆலயதைப் பரிசுத்தப்படுத்தும் நிலையை நீ செய்ய வேண்டும் என்றார் ஈஸ்வரபட்டர்.

அதன் மூலம் உனக்கு அனைவரின் உணர்வும் கிடைக்கும். எத்தனையோ இலட்சம் பேரின் உணர்வுகளும் அவர் கொடுக்கும் பேரருள் உனக்குள் பல கோடி உணர்வுகளாகப் பெருகும் என்றார்.

விண்ணிலிருந்து வரும் எதையுமே பேரொளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அனைவரையும் பெறச் செய்ய வேண்டும் என்றார்.

குருநாதர் இட்ட அந்தக் கட்டளைப்படி உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்த எனது (ஞானகுரு) உபதேசம் உங்களுக்குப் பயன்படும்.
1.உங்கள் உயிரான ஈசனுக்கு நல் உணர்வு ஊட்டும் அபிஷேகங்கள் நடக்கின்றது.
2.உங்கள் உடலான சிவனுக்கு நல்ல அமுதாகக் கிடைக்கின்றது.
3.அருளைப் பெறுவோம்… மெய்ப் பொருளைக் காண்போம்.
4.இனிப் பிறவியில்லா நிலையை நாம் அனைவரும் அடைவோம் என்று பிரார்த்திக்கின்றேன்.

தியான நிலையையும் சுவாச நிலையையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

inner light glow

தியான நிலையையும் சுவாச நிலையையும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

தியான நிலை சுவாச நிலை வேண்டும் என்று கேட்கின்றாய். இப்பொழுது இங்கே கொடுக்கும் பாடங்கள் எல்லாம் என்னப்பா..?
1.சுவாச நிலையே தான் தியான நிலை.
2.தியான நிலையே தான் சுவாச நிலை.

பூஜையில் அமர்ந்து நீ விடும் சுவாச நிலையில் ஜெபித்திடும் ஜெபங்கள் தான் சுவாச நிலையும் தியான நிலையுமாப்பா…? இல்லையப்பா…!

உன் எண்ணத்திற்குப் பல காலம் பல வழியில் பல வழிகளை நானும் என் சிஷ்யனும் செப்பிவிட்டோம். இன்னும் வேண்டுகிறாய் தியான நிலைக்கும்… சுவாச நிலைக்கும்…!

1.நீ எண்ணும் எண்ணமே தான் தியான நிலையும்… சுவாச நிலையும்… பெரும் ஜெப நிலையும்…!
2.எண்ணும் எண்ணமே தான் உன் வாழ்க்கை நிலையும்… உன் உடல் நிலையும் புரிந்ததா…?

எண்ணும் எண்ணம் போல் வாழ்வு…! என்றிட்டார். எண்ணும் எண்ணமே தான் வாழ்க்கையுடன் கலந்து வருகிறது.

உன் வாய் திறந்து சொல்லும் சொல்கள் தான் காற்றிலே சுற்றுகிறது என்று எண்ணுகிறாய். உன் மனதில் எண்ணும் சிறு எண்ணமும் உன் சுவாச நிலையில் தான் சுற்றுகிறது.

நீ எண்ணும் எண்ணமெல்லாம் உன் சுவாச நிலையில் வெளிப்படுகின்றது. நீ பிறவி எடுத்த நால் முதல் கொண்டு நீ எண்ணிய எண்ணமும்… நீ சிரித்த… அழுத… பேசிய எல்லா ஓசைகளுமே உன்னைச் சுற்றியே தான் வந்து கொண்டிருக்கின்றது.

உன் கடந்த காலத்தை எண்ணிப் பார்…! உன் நினைவில் நீ ஒன்று நினைத்ததும் நீ ஒன்று நடத்தியதும் ஞாபகத்தில் வந்திடும்.
1.நீ பேசிய பேச்சுக்கள் மட்டும் தான் சுற்றிக் கொண்டுள்ளது என்று எண்ணுகிறாய்
2.நீ நினைத்ததும் உன்னையே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்தப் பிறவி மட்டுமல்ல…! ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகம் தோன்றிய நாள் முதல் அவன் உயிரணுவின் சுவாச நிலை எல்லாமே அவன் உள்ளவரை சுற்றிக் கொண்டே தான் உள்ளது.

இந்த உலகம் சுற்றுவதே இச்சுவாச நிலையில் தான்.
1.மனிதனைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் மனிதன் வாழ்கின்றான்.
2.உலகைச் சுற்றியுள்ள சுவாச நிலையில் உலகம் உருள்கின்றது.

உன் சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எந்த நிலைக்கப்பா நான் அருள்வது…? நீ எண்ணும் எண்ணமே தான் சுவாச நிலை… ஜெப நிலை… பெரும் ஜோதி நிலை எல்லாமே…!

காலத்தைக் கடத்திவிட்டாய்…! இனி இருக்கும் காலத்தில் உன் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி சுவாச நிலையையும் ஜெப நிலையையும் எய்திடப்பா…!

எண்ணும் எண்ணத்திலேயே மனிதன் வாழ… எண்ணம்தான் உயிர் ஜீவனப்பா…!
1.உன் உயிருக்கு ஏதப்பா ஆகாரம்…?
2.எண்ணும் எண்ணம் தான் அந்த உயிரின் ஜீவனப்பா…!
3.புரிகிறதா…! மிகவும் விளக்கமாகச் சொல்லியுள்ளேன்.

இந்நிலையைப் புரிந்து கொண்டால் உன் எண்ண நிலையை உயர்த்தி மகரிஷிகளுடனும் சித்தர்களுடனும் கலந்திடலாம்…!

வான்மீகி அன்று எழுதினான் எண்ணங்களைப் பற்றி…! எப்படி…?

sage Valmiki

வான்மீகி அன்று எழுதினான் எண்ணங்களைப் பற்றி…! எப்படி…?

 

வேடனாக இருந்த வான்மீகி இரு பட்சிகள் ஆனந்தமாக இருக்கும் நிலையில் ஒரு பட்சியைக் குறி வைத்து அதைத் தாக்கி மடியச் செய்கின்றான்.

பட்சி அடிப்பட்டதைக் கண்டதும் அதனுடன் கூட வந்த பட்சியோ பாசத்தால் துடிக்கின்றது. தன்னுடைய பாச உணர்வைக் கண்கள் மூலம் வெளிப்படுத்துகின்றது.

வேடனான வான்மீகியோ அந்தப் பறவையும் குறி வைக்கின்றான் தாக்குவதற்கு…! ஆனாலும் அது வெளிப்படுத்தும் பாச உணர்வுகள் இவனுக்குள் ஊடுருவுகின்றது. ஆகையினால் அவனால் அந்தப் பட்சியை வீழ்த்த முடியவில்லை. பல முறை முயற்சித்தும் குறி தப்புகிறது.

இப்படி அந்தப் பறவையின் எல்லை கடந்த பாச உணர்வுகள் இவனுக்குள் சென்றதும்
1.தன் இனத்தின் பாச அலைகள் எப்படி இருக்கின்றது..? என்று சிந்திக்கச் செய்கிறது
2.அதையே உற்றுப் பார்க்கும் பொழுது அது தன் பாசத்தால் துடிக்கும் உணர்வுகள்
3.வேடன் கண் வழி நுகரும் இந்த உடலுக்குள் அந்தப் பாச உணர்வுகள் தூண்டிய பின்
4.இந்தப் பறவைக்கு இருக்கும் பாசம் கூட தன்னிடம் இல்லையே…! என்று அந்தக் கொல்லும் நிலைகளை இங்கே மாற்றுகிறது.

இதைத்தான் நாராயணன் (சூரியன்) திரேதாயுகத்தில் (உடலுக்குள்) சீதாராமனாகத் (எண்ணங்கள்) தோன்றுகின்றான் என்று பிற்பாடு வான்மீகி சொல்கின்றான்.

சூரியனின் காந்த சக்தி பட்சியின் பாச உணர்வைக் கவர்ந்து சீதாலட்சுமியாக மாறுகின்றது. அதை உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை தனக்குள் கூர்மையாகும் பொழுது சீதாராமனாக
1.அதனுடைய பாச உணர்வுகள் இவனுக்குள் அந்த எண்ணங்கள் தூண்டி
2.இவனுக்குள் இருக்கும் தீமையை மடக்குகின்றது.
3.மனித உடலுக்குள் தோன்றும் எண்ணங்களைப் பற்றி வான்மீகி இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றான்.

காவியங்களில் எப்படிக் கொடுக்கின்றார்கள்….? இந்திரலோகத்தில் நடக்கக்கூடியதை அந்த இரகசியங்களை நாரதர் தெரிந்து கொள்கிறார். தெரிந்ததை அவர் வெளிப்படுத்தவில்லை என்றால் அவருடைய வயிறு உப்பிவிடுமாம். அதற்காக வேண்டி இங்கே இந்த வேடனிடம் வருகின்றார்.

இந்த வேடன் (வான்மீகி) “தவறு செய்துவிட்டேனே…!” என்று உட்கார்ந்து தவமிருக்கத் தொடங்கினான். அதிலே ஒரு புற்றே வளர்ந்துவிட்டது.

புற்றுக்குள் அவன் என்ன செய்கிறான்…?

1.ஓ…ம் ஓ….ம் ஓ…ம் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஓ….ம் ஓ…ம் என்று தான் சொல்கிறான்.
2.அவன் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் ஓ.. என்று ஜீவ அணுவாக உடலாக ஆக்கிக் கொண்டுள்ளது.
3.இந்த உடலிலேயே புற்றாக வளர்கின்றது.

நாம் எடுக்கும் பொழுது ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றும் ஓ…ம் ஓ….ம் ஓ…ம் என்று உடலுக்குள் புற்றாகத் தான் வளர்கின்றது. எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப இப்படி “உடலின் அமைப்பாகின்றது…!” என்ற நிலைக்குத் தான் புற்றைக் காட்டினான்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதை எல்லாம் ஏன் முன்னாடியே சொல்லவில்லை…? என்று நினைப்பீர்கள்.

எல்லாவற்றையும் மொத்தமாகச் சொல்லி விட்டோம் என்றால் அவைகளைக் கிரகிக்க முடியாது. அதற்காக வேண்டித்தான் சிறுகச் சிறுகச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

இந்திரலோகத்திலிருந்து நாரதன் வந்து இரகசியத்தைச் சொல்கிறான். அவன் எப்படிச் சொல்கிறான்…? மரா…! மரா…! மரா…! ஏனென்றால் நேரடியாகச் சொல்லக்கூடாதாம்…!

மரா மரா மரா என்றால் ராமா ராமா ராமா என்று வந்து விடுகிறது. ஆகவே இந்த உணர்வின் தன்மை அந்த எண்ணங்களாக உருவானது என்று சொல்லக்கூடிய நிலைக்குக் காட்டுகின்றான்.

நாரதன் இவனிடம் சொல்கிறான் என்றால் இதை யார் சொன்னது…? அதனுடைய மூலக் கருத்து என்ன..?

இந்திரலோகத்தில் நடக்கும் இரகசியத்தை நாரதன் இவனுக்குள் சொன்னான். அந்த இந்திரலோகம் எது…?

இந்த உடலுக்குள் உள்ள இந்திரலோகத்திற்குள் (இந்திரீகம் – இரத்த நாளங்களுக்குள்) நடக்கும் இரகசியத்தை
1.நாரதனின் இச்சை… இவன் செவி வழி அவன் கட்டளையிடும் உணர்வுகள்
2.அந்தப் பட்சியின் பாச உணர்வின் தன்மையை உற்றுப் பார்க்கும் உணர்வு கொண்டு
3.இதை வான்மீகி நுகரப்படும் பொழுது அவனுடைய இந்திரலோகத்தில் ஊடுருவுகின்றது.

ஆக அங்கே நாரதனாகின்றான். தீமைகளை நீக்கும் அந்த உணர்வுகள் உட்புகுந்து அதுவே நாரதனாகி அவனுக்குள் இருக்கும் தாக்கும் உணர்வை… அந்தப் பகைமை உணர்வை அகற்றச் செய்கின்றான்.

இதனால் வந்த துன்பம் இது…! என்ற நிலைகளில் அந்த உணர்வுகள் உணர்த்துகின்றது. அப்பொழுது வான்மீகி திருந்துகின்றான். காவியத்தில் இப்படித் தெளிவாக்குகின்றான்.

1.உணர்வுகள் எப்படி எண்ணங்களாகின்றது..?
2.அந்த உணர்வுகள் எதிலிருந்து சத்தாகின்றது..? என்பது தான் சீதா.
3.அதனுடைய மணம் ஞானம்
4.அதன் வழிகளில் இந்த எண்ணங்கள் எப்படித் தீமைகளை அகற்றச் செய்கின்றது..? என்று இப்படிப் பொருள்பட உணர்த்தினார்கள்.

அன்று அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்தான். விண்ணை நுகர்ந்தான். துருவன ஆனான் துருவ மகரிஷியாக ஆனான்.

அவனின்று விளைந்த உணர்வுகள் இன்று அலைகளாகப் படர்ந்து வருவதை அதை எடுத்து உங்களுக்கு அந்தத் தெளிவின் நிலைகளை ஊட்டுகின்றோம்.

இந்த ஞானத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உங்களுக்குள் பகைமை வராது பாதுகாத்துக் கொள்ளலாம். அந்த மாமகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்தே என்றும் வாழ முடியும்.

பல வழிச் சாமியார்களின் செயல்கள்

Black magic horoscope

பல வழிச் சாமியார்களின் செயல்கள் 

 

பல சாமியார்கள்… பல வழிச் சாமியார்கள்…! இந்த உலகம் முழுவதுமே ஒவ்வொரு கொள்கையுடன் கடவுளின் அருளைப் பெற உள்ளார்கள் “சாமியார்கள்” என்ற பெயரில்.

அந்தச் சாமியார்களின் நிலை எல்லாம் ஆண்டவனை அடைவதற்கு.. ஆண்டவனை அடிபணிவதற்கு… ஆண்டவனைத் தான் அடிபணிந்து வணங்கிவிட்டால்… “தானே ஆண்டவன்…” என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள்.

பல வழிகளில் அவர்களுக்குப் பொருளும் புகழும் வருகிறது. பல ஜெபங்களைச் சொல்கிறார்கள். பல வழிகளில் மக்களை அடிபணிய வைக்கிறார்கள் ஆண்டவனை வணங்க…!

அவர்கள் நிலை எல்லாம் என்னப்பா…?

இந்த உலகம் முழுவதுமே இந்த நிலை உள்ளதப்பா…! இந்தச் சாமியார்கள் நிலையில் அவர்கள் பூஜிக்கும் பொழுது
1.உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லை.
2.கடவுளை வணங்குவதையே மக்களின் மனதில் பெரும் கஷ்டத்தை உண்டு பண்ணுகிறார்கள்.

அவர்கள் நிலையில் இருப்பதெல்லாம் கரு வித்தை என்ற ஆவி தான்..! அவர்கள் நினைத்து ஜெபமிருக்கும் பொழுது அந்த ஆவி காட்சி தருகிறது.

அந்த ஆவியின் உருவத்திற்குப் பல பூஜைகளும் பல உணவுகளும் அளித்துவிட்டு இவர்கள் நினைத்த நினைவுகளுக்கு வரும்படி அந்த ஆவிகளை இவர்கள் வசப்படுத்தி இவர்கள் என்ன எண்ணுகின்றார்களோ… என்ன வேண்டுகிறார்களோ… அவைகளை எல்லாம் அந்த ஆவிகள் எடுத்துச் செப்பி விடுகின்றன.

அவற்றை வைத்துத்தான் இவர்கள் தன்னிடம் வருபவர்களுக்கெல்லாம் அவர்கள் நிலையை உணர்த்தி அவர்கள் ரூபமாகப் பொருள் சம்பாதித்து வருகிறார்கள்.

1.நடந்த நிலையைத்தான் இந்த ஆவிகளால் செப்பிட முடிந்திடும்.
2.நடக்க இருப்பவைகளை அறிந்திட முடிந்திடாது அந்த ஆவிகளின் நிலைக்கு.
3.எந்த ஜோசியனும்… எந்தச் சாமியாரும்… நடக்க இருப்பவைகளைச் செப்பிட முடிந்திடாதப்பா…!

நடந்தவைகளை முழுமையாகச் சொல்லிவிடுவார்கள். அது எல்லாம் கரு வித்தை வேலை தான்..! பல கோவில்களில் அருள் வருவதெல்லாம் இந்த ஆவிகளின் நிலை தான். அருள் அல்லப்பா.. மருள் அது.

1.ஆண்டவனின் அருள் வருபவன் தன்னையும் தன் நிலையையும் மறந்து ஆடிட மாட்டான்.
2.பெரும் அமைதியில் அமர்ந்திருப்பான்.
3.நடக்க இருப்பவைகளை நல்ல முறையில் நடத்திட அருளைத் தான் செப்பிடுவான்.

மருள் வந்தவன் வேலை எல்லாம் குட்டிச் சாத்தான் வேலையப்பா. இந்தக் குட்டிச் சாத்தான் வேலையில் தான் இந்த உலகமே உள்ளதப்பா…! நாட்டை ஆள்பவனே வைத்துள்ளான் குட்டிச்சாத்தானை…!

இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே உரைக்கின்றேன்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்க வேண்டிய முறை

BONE MARROW

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பதிவாக்க வேண்டிய முறை

ஒரு அழுக்குத் தண்ணீரில் நந்நீரை விட்டது போல் உங்கள் கண்ணின் நினைவினை எல்லா உறுப்புகளிலும் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்யுங்கள்.

உடலில் உள்ள எல்லா உறுப்புகளை உருவாக்கிய அணுக்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.சிறுகச் சிறுக உடல் உறுப்புகள் அனைத்திற்கும் உணவாகக் கொடுக்கும் அந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து எலும்பு மண்டலங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் கண்ணின் நினைவினை உங்கள் எலும்புக்குள் இருக்கும் எலும்பை உருவாக்கிய அணுக்கள் பெறவேண்டும் என்ற நினைவினை எங்கிச் செலுத்துங்கள்.
1.இப்பொழுது எலும்புகளில் ஒரு புதுவிதமான உணர்ச்சிகள் வரும்.
2.கூச்சப்படுவது போன்ற உணர்ச்சிகள் தோன்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர்ந்து ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை எலும்புக்குள் உள்ள ஊனுக்குள் உணர்வினைச் செலுத்துங்கள்.

எக்ஸ்ரே கருவிகளில் அனுப்பப்படும் பொழுது எப்படி அது ஊடுருவி எலும்புக்குள் இருக்கக்கூடிய நிலைகளைப் பிளந்து கொடுக்கின்றதோ இதைப் போல எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறும் தகுதி கொண்ட அணுக்களாகப் பதிவாக்குங்கள்.

1.செல்ஃபோன்களில் நமக்கு வேண்டியதைப் பதிவாக்கிக் கொண்டு
2.எப்படி அவ்வப்பொழுது அதை எடுக்கின்றோமோ
3.அதைப் போல நம் உடலில் துருவ நட்சத்திரத்தின் செல்களைப் பதிவாக்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை இப்படிப் பதிவாக்கிக் கொண்டால் அந்த நினைவுகள் நமக்குள் ஆகி
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினை நம்மை நுகரச் செய்து
2.அந்த ஞானத்தின் வழி நாம் செயல்படுத்த இந்தத் தியானம் உதவும்.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈசனின் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

lord eswaran god

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஈசனின் சக்தியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சாமியார் ஒருவன்… நானே கடவுள்…! நானே தெய்வம்…! என்கிறான். அவ்விடம் உள்ள கருவின் வேலை வரைக்கும் தான்… அவன் வேலை எல்லாம்…!

ஆண்டவனின் சக்தியை அறிந்திடாமல் “அவனே கடவுள்..” என்கிறான். ஆண்டவன் என்றால் யார் என்றே அவனுக்குத் தெரிந்திடாது. அந்தக் கருவையே ஆண்டவன் என்கிறான்.

பல பூஜைகள் செய்து வருபவர்களின் எண்ணத்தையும் அவர்களின் கடந்த கால நிலையையும் கண்டிடலாம். இதைப் போன்ற நிலையை வைத்துத்தான் பல ஜோசியங்கள் கோவில்களில் உடுக்கை அடித்துச் சாமி கேட்பது எல்லாமே…!

இவ்வாவிகள் அறிந்து வந்து சொல்வது தான் இவை எல்லாம். மை போட்டுக் கேட்கிறார்கள். ஆண்டவனிடம் பூ கேட்கிறார்கள் என்பதெல்லாம் என்னப்பா…? இவ்வாவிகளின் வேலை தான்.

அருளுடன் தெய்வ நம்பிக்கையும் தன் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகள் எல்லாமே இந்நிலைக்கு வருகிறது. இதைப் போல உள்ள ஆவிகள் அனைத்துமே உடலை விட்டுப் பிரிந்தவுடன் மறு ஜென்மம் எடுப்பதில்லை. ஆயிரத்தில் கோடியில் ஒன்று தான் உடனே மறு ஜென்மம் எய்துகிறது.

அவசரத்தினால் எடுக்கும் ஜென்மத்தினால் அங்ககீனமுடன் குறையாகப் பிறப்பது குறைப்பிரசவம் குறையுடன் பிறக்கும் குழந்தைகள் நிலை எல்லாமே இது தான்…!
1.முன் ஜென்மத்தில் விட்ட குறையை
2.ஆவி உலகில் இருந்து அறிந்திட “அவகாசம் இல்லாமல்” வந்து குறையுடன் பிறக்கின்றது.

ஆனால் நல்ல நிலையில் ஆவி உலகில் சுற்றும் மறு ஜென்மம் எடுக்கும் வரை உள்ள ஆவிகள் தன் நிலை உணர்ந்து தன் நிலைக்கு ஏற்ற இடமாகத்தான் பிறக்கும்.

1.குழந்தை பிறப்பதற்கு முதல் ஆவி உலகில் உள்ள வரை அவரவருக்கு முன் ஜென்மம் தெரியும் என்றேன்.
2.ஆவி உலகில் உள்ள பொழுது எந்நிலையில் பிறக்கலாம் என்று தான் தெரியும்.
3.பிறந்த பின் தன் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும் என்பது தெரிந்திடாது.
4.பிறந்த பின் முன் ஜென்மமும் ஆவி உலகமும் அறிந்திட முடியாது. இப்பிறவிக்கு எல்லாமே மறைக்கப்படுகிறது.
5.இந்நிலையில் தான் ஈசனின் சக்தியே விளையாடுகிறது.

பிறப்பு இறப்பு ஆவி உலகம் எல்லாம் அறிந்த மனிதனால் அந்த ஈசனின் சக்தியை மட்டும் அறிந்திட முடிவதில்லை. பல கோணங்களில் ஆண்டவன் என்று வணங்குகிறான்.

அந்த ஈசனின் சக்தியை உணர்ந்த மகா தவ முனிவர்களும் இந்த மனிதர்களுக்குப் புகட்டிடவில்லை. அந்தச் சக்தி நிலையைப் பற்றித் தெரிந்திருந்தாலும்
1.இக்கலியில் வந்த மனிதர்கள்
2.அதையும் தன் வழிக்கு உண்ண காசாக்கி இருப்பார்கள்.

அதனால் தான் முனிவர்கள் நிலையில் தன்னையே தன் உடலையே அச்சக்தியின் அருளுக்கு அடிபணிய வைத்து அச்சக்தியின் அருள் எப்படி உள்ளது…? எந்நிலையில் அந்தச் சக்தியின் அருளைப் பெற்று மக்களுக்கு அருளிடலாம் என்று தான் போகரின் நிலை எல்லாம் வந்ததப்பா…!

உன் நிலையில் ஜெபமிருக்கின்றாய். அஜ்ஜெபத்தின் நிலையில் ஈசனின் சக்தியை உன் நிலைக்கு ஈர்த்திடப்பா…!

எப்படி ஈர்ப்பது என்கிறாய்…? கண்ணில் இல்லையப்பா ஒளி எல்லாம்.
1.இவ்வெண்ணத்தில்… உன் உயிரில்.. புருவத்தின் மேல்…
2.நெற்றியில் இந்நிலையில் தான் ஒளியப்பா…!

கனவில் பார்க்கின்றாய் பல நிலைகளை.. கண்களை மூடிக் கொண்டு…! அந்நிலை எப்படித் தெரிகின்றது…? கடும் இருட்டில் பல பிராணிகள் பூனை எலியைப் பிடிக்கின்றது. எலி பூனையைக் கண்டு தப்பி ஓடுகின்றது. நாய்க்கும் நரிக்கும் பாம்புக்கும் எப்படியப்பா இருட்டில் கண் தெரிகின்றது…?

சூரிய ஒளியில் இருந்துதான் கண் தெரிகிறது… கண் பார்வையினால்… என்று எண்ணுகிறாய்…!

தவ யோக முனிவர்கள் எல்லாம் அவர்கள் அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்தையும் அறிந்திட்டார்களே…! அது எப்படியப்பா…? ஒவ்வொரு மனிதருக்கும் அவ் ஈசனின் சக்தியில் எல்லா அருளும் உண்டப்பா..!
1.அவரவர்கள் எடுத்து அவர்களின் நிலையை அறிந்திட்டால்
2,கண்ணும் வேண்டாம்… உண்ண உணவும் வேண்டாம்…!
3.அவ் ஈசனின் சக்தியையே தன் உடல் முழுவதும் ஈர்க்கச் செய்திடலாம் புரிந்ததா…?

ஒவ்வொருவரும் அவ் ஈசனின் சக்தியில் இருந்து பெற்றிருப்பதால் அவரவர்கள் வழியிலிருந்தே அருள் புரிகிறார்கள். இந்நிலை தான் கொங்கணவருக்கும் போகருக்கும் அகஸ்தியருக்கும் கோலமாமகரிஷிக்கும் ஐயப்பனுக்கும் இன்னும் பல மகரிஷிகளுக்கும்…!

1.ஆண்டவன் என்றால் இப்பொழுது யார் என்று புரிந்ததா…?
2.பல வழிச் சாமியார்களின் நிலையும் கோவில்களின் நிலையும் புரிகிறதா…?
3.ஞானிகள் சித்தர்கள் மகரிஷிகள் நிலையும் புரிகிறதா..?

இந்தப் பாட நிலையை வைத்து நான் யார்…? நீ யார் என்னும் நிலை புரிந்திருக்கும்.
1.உன்னையே நீ வணங்கு.
2.உன்னுள்ளே ஈசன் உள்ள பொழுது உன்னுள்ளே அவ் ஈசனின் சக்தியை ஈர்த்திடப்பா..!
3.அந்நிலையில் அறிந்திடுவாய் எல்லாமே…!

இதிகாசங்களில் உள்ள மூலக் கருத்துக்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

Raman - Guhan

இதிகாசங்களில் உள்ள மூலக் கருத்துக்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

இராமாயணத்தில் என்னென்னமோ இருக்கிறது.. இவர் (ஞானகுரு) என்ன சொல்கிறார்…? என்று வினாக்களை எழுப்புவார்கள். சொல்கிறார்… ஆனால் எனக்கு அர்த்தமே ஆகவில்லை..! என்று ஒரு சொல்லில் நிறுத்திக் கொள்வார்கள்.

நானும் எத்தனையோ தெரிந்திருக்கின்றேன். இருந்தாலும் இவர் சொல்வதை நானே புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அடுத்தவர்கள் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்…?
1.இப்படி நன்றாகத் தான் இருக்கிறது.
2.ஆனால் இது புரியாது என்பார்கள்.

இராமன் காட்டுக்குள் சென்றான். அங்கே குகனை நண்பனாக்கினான் என்று வான்மீகி சொன்னது.

அதாவது குகன் என்பவன் அவன் படகில் செல்பவன். நாம் சுவாசிப்பது எல்லாமே நம் உடலுக்குள் அலைகளாக மாறுகின்றது. குகனை நண்பனாக்கினான் என்றால்
1.இந்த உடலுக்குள் வந்த ஒவ்வொன்றையும் தனக்குள் நட்பாக்கிக் கொண்டான் இராமன்.
2.தன்னுடன் இணைந்து செயல்படும்படி… தடையில்லாது கொண்டு போனான்…! என்று குகனைப் பற்றிச் சொல்கிறார்கள்.
3.இந்த உடல் ஒரு குகை…! இதற்குள் இயக்கும் உணர்வைத் தனக்குள் நட்பாக்கிக் கொண்டான் இராமன்,

காட்டுக்குள் சென்றால் எத்தனையோ பல மிருகங்கள் வருகின்றது அல்லவா. அதனால் பயமும் வெறுப்பின் தன்மையும் அடைகின்றோம்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட உணர்வுகள். அந்தத் தாவர இனங்களின் எண்ணங்கள் தான் நமக்குள் உண்டு.

அதனால் உருவான அந்த உணர்வின் எண்ணங்கள் கொண்டு தான் இந்த உருவின் தன்மை அடைந்துள்ளோம். ஆகவே உடல் ஒரு பெரிய காடு,

உடலில் இரத்தம் போகாத இடம் இல்லை. அந்த இரத்தத்தில் தான் எல்லாமே கலந்து போகின்றது. ஆக படகை விடுபவனாகத் தான் இராமாயணத்தில் குகனைக் காட்டுகின்றார்கள்.

அந்தப் படகின் தன்மை… அதாவது இரத்தம் இல்லை என்றால் உடலில் ஒன்றும் வேலை செய்யாது.
1.அதிலே மிதந்து செல்வது தான் இந்த உணர்வுகள்
2.அங்கங்கே எப்படி நிலையாக்குகிறது…?
3.இரத்த நாளங்களில் இயக்கங்கள் அந்த உணர்வின் எண்ணங்கள் அங்கே எப்படிச் செயல்படுகிறது…?
4.மற்றதை எப்படி நட்பாக்குகின்றது…? அல்லது பகையாக்குகிறது..?

ஏனென்றால் நாம் எதை எடுத்தாலும் (நாம் சுவாசிப்பது எல்லாம்) அந்த உணர்வின் தன்மை இரத்தங்களாகின்றது. அந்த இரத்தங்களில் அணுக்களாக உருப்பெறுகின்றது.

அப்பொழுது உயர்ந்த எண்ணங்களை நம் இரத்தங்களில் (படகு போல) செலுத்தும் பொழுது என்ன ஆகும்…?
1.நட்பின் தன்மையை அங்கே உருவாக்கும்.
2.நட்பாகும் பொழுது நோயில்லாத நிலைகள் வரும்.

இதெல்லாம் எண்ணங்களின் உணர்வுகள் தான். இந்த மனிதனின் இயக்கங்கள் எப்படி…? என்ற நிலையை இராமாயணத்தில் மிகவும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

எனக்கு (ஞானகுரு) ஈஸ்வரபட்டர் இப்படித் தான் சொல்லிக் கொடுத்தார்.

மற்றவர்கள் சொல்லக்கூடிய இராமாயணம் இராமன் காடு மேடெல்லாம் போனான். தந்தை சொல் தட்டாது சென்றான்…! என்ற நிலையைக் காட்டுவார்கள்.

அதிலே உண்மை உண்டு. ஆனால் சொல்பவர்கள் அவரவர்கள் இஷ்டத்திற்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதனால் நாம் மூலத்தை அறியாது போய்விட்டோம்.

கருணைஸ்வரூபனா ஆண்டவன்..?

Jothilinga - divine lightகருணைஸ்வரூபனா ஆண்டவன்..? 

ஆண்டவன் என்பவன் கருணைஸ்வரூபன் மட்டும் தானா…? ஆண்டவன் என்பவன் எங்குள்ளான் என்றெல்லாம் சொல்லியுள்ளேன். ஆண்டவனின் நிலை என்ன…?

ஆண்டவனையே இயற்கையில் கலந்துள்ள ஒளி… காற்று… தண்ணீர்… இந்நிலையில் கலந்துள்ளவன்தான் ஆண்டவன்… என்று நான் செப்பியுள்ளேன்.

அப்படி இருக்கும் பொழுது ஆண்டவனால் ஏனப்பா “ஒரே நிலையில்” ஒளி பாய்ச்சவும்… மழை பெய்யவும்… காற்று அடிக்கவும் முடியவில்லை…?
1.இடி இடித்து மழை பெய்கிறது… அதி மழை பெய்கிறது
2.பெரும் காற்றும் சூறாவளிக் காற்றும் வீசுகிறது
3.குளிர்ந்த ஒளியும் கடும் வெப்பமும் வருகிறது.

ஆண்டவனின் நிலையில் ஏனப்பா இவ்வளவு மாற்றங்கள்…?

கருணைஸ்வரூபா…! என்று ஆண்டவனை என் சிஷ்யன் (ஞானகுரு) பாடுகின்றான். “கருணைஸ்வரூபா…!” என்று பாடும் பொழுது அவன் மனமும் கருணையுடன் சுற்றுகின்றது.

1.கருணையுடன் வேண்டும் பொழுது
2.அந்தக் கருணை நிலை வேண்டுபவர்களின் மனதிலேயே வருகிறது.
3.எண்ணத்திலும் அந்நிலையே அப்பொழுது சுற்றுகிறது.

அந்நிலையில் இயற்கைத் தன்மையில் கலந்துள்ள ஆண்டவனும் அந்நிலை வேண்டுபவர்களுக்கு அந்நிலையில் ஒளி பாய்ச்சி அருள் புரிகின்றான்.

1.அவன் நிலையிலேயே “கருணை நிலை வேண்டினால் தான்…” அந்நிலையே வருகிறது.
2.அந்நிலை இவன் நிலைக்குப் பெற முடிகிறது.

அந்நிலையில் பூஜை செய்வது தான் நீ வணங்கும் முருகனின் மூலமாக அருள் கொடுக்கும் போகரின் நிலை எல்லாம். பழனி ஸ்தலத்தின் நிலையும் அதுவே தான்…!

சில நிலையில் பூகம்பம் வந்து அடங்காத காற்றும் அடங்காத மழையும் அதி உஷ்ணமும் வரும் பொழுது கருணைஸ்வரூபமான ஆண்டவன் ஏனப்பா அந்நிலையை அளிக்கின்றான்…?

பழனி ஸ்தலத்தின் வழியைச் சொல்கிறேன். ஆனால் கல்கத்தா காளியின் நிலை என்ன..? தென்றல் காற்றப்பா போகர் பெற்ற நிலை. பெரும் சுழல் காற்றப்பா கல்கத்தா காளியின் நிலை.

1.போகரும் அந்த ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் முருகனாக அருள் புரிகின்றார்.
2.கல்கத்தா காளியும் ஆண்டவனின் அருளைப் பெற்றுத்தான் பெரும் ஆவேச நிலையில் அருள் புரிகின்றாள்.

கல்கத்தா காளியின் நிலை என்னப்பா…? காளி என்பவள் யாரப்பா…?

இடி மின்னலையும் பூகம்பத்தையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு பெரும் ஆவேசத்துடன் அடங்காத நிலையில் அமர்ந்துள்ளவள் தான் கல்கத்தா காளியாக அமர்ந்துள்ள கடும் தவம் புரிந்த பெண் ஒருத்தியப்பா அவள்.

அக்காளியின் நிலை ஆவேச நிலையப்பா. அடங்காத ஆவேசமான நிலையப்பா…! ஆணவத்தையும் ஏமாற்றுத் தன்மையையும் எரிக்கும் குணம் உடையவள்.

நல்லோர்க்குக் கருணை புரிவதில் பெரும் நாட்டம் கொண்டவள். தவறும் நிலையைக் கண்டு விட்டால் எரிமலையும் பூகம்பமும் தானப்பா அவள்…!

அவன் தந்த ஒளியை அவனதாக்கி அவனுடன் ஐக்கியமாகுவது தான் மெய் ஒளி பெறும் ஆண்டவனின் சக்தி…!

யாருக்கும் தீங்கு செய்யாது அனைவரையும் “அரவணைத்துச் செல்லும் சக்தியே கல்யாணராமா…!”

Rama breaking dhanush

யாருக்கும் தீங்கு செய்யாது அனைவரையும் “அரவணைத்துச் செல்லும் சக்தியே கல்யாணராமா…!”

ஜனகச் சக்கரவர்த்தி அவர் உழுகும் பொழுது அதிலிருந்து ஒரு பெண் குழந்தை கிடைக்கின்றது. அதைத் தத்துக்கு எடுத்துத் தன் குழந்தையாக அவர் வளர்க்கின்றார்.

ஜனகச் சக்கரவர்த்தி என்றால் சூரியன். மற்ற உணர்வுகள் விஷத் தன்மையைப் பெற்ற பின் அந்தத் தீமைகளை அகற்றி நல் உணர்வைச் சமைக்கும் தன்மை பெற்றது.

நாம் என்ன செய்கின்றோம்…? உழுது பயிரிட்டு நமக்கென்று நல்ல சத்துள்ள பொருள்களை விளைய வைக்கின்றோம்.

அதனால் தான் உழுகும் பொழுது கிடைத்தது குழந்தை என்று சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் இராமாயணத்தில் அக்காலத்தில் இதைத் தெரியப்படுத்துகின்றனர்.
1.உழுது பயிரிட்டால் தானே நல்ல பயிரினங்களை விளைய வைக்க முடியும்.
2.உழுகவில்லை என்றால் தன்னிச்சையாக என்னென்னமோ விளைந்து விடுகின்றது அல்லவா…!

மனிதனை வளர்க்க ஜனக சக்கரவர்த்தி உழுது பயிரிடும் நிலையிலிருந்து அந்தச் சத்தை எடுத்து வைத்திருக்கின்றது… சூரியனின் காந்த சக்திகள்.
1.இந்த உயிர் வாழும் மக்களை உயர்த்த எண்ணுகிறது
2.மனிதனைக் காக்க எண்ணுகிறது என்ற இந்த உண்மையைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.
3.தீமையற்ற நிலை அது.

காவியப்படி அந்தக் குழந்தை வளர்ந்த பின் அதற்குத் திருமணம் வைப்பதற்காகச் சுயம்வரத்தை ஏற்படுத்துகின்றார்கள். அங்கே அவரவர் திறமைகளைக் காட்டுகின்றார்கள்.

தன்ன்னுடைய வில்வித்தைகளை எல்லாம் காட்டுகின்றார்கள். வில்லை எடுத்து நாணை ஏற்றி அம்பால் குறி வைத்துத் தாக்குகின்றார்கள். குறி வைத்துத் தாக்கும் பொழுது அவரவர் திறமைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

1.ஆனால் இராமன் என்ன செய்கின்றான்…?
2.அவனுடைய வல்லமையை எப்படிக் கொண்டு வருகின்றான்..?
3.பிறருக்குத் தீமை செய்யும் அந்த வில்லையே ஒடித்து விடுகின்றான்.

வில்லில் நாணை ஏற்றி அம்பைப் பாய்ச்சினால் தானே பிறரைத் தாக்க முடியும். அந்த வில்லையே ஒடித்து விட்டால் எதிலே அம்பை எப்படி ஏற்ற முடியும்..? அதை எப்படிப் பாய்ச்ச முடியும்..? அப்பொழுது அது பிறருக்குத் தீங்கு செய்யாது.

தீமை செய்யும் அந்த வில்லையே இராமன் முறித்துவிடுகின்றான்.
1.அதனுடைய உட்பொருள் என்ன என்றால்
2.பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்களைத் தனக்குள் நீக்குகின்றான்.

கோவிலில் என்ன செய்கிறோம்…?

பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் தனக்குள் இருப்பதை ஒடித்துவிட்டு அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணச் சொல்கிறார்கள். “எல்லோரும் அப்படி எண்ண வேண்டும்…” என்று உணர்த்துகின்றார்கள்.

1.தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்துவிட்டால் எல்லோரையும் அரவணைக்கும் சக்தியாக வருகின்றது. அது தான் கல்யாணராமா.
2.எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்த எண்ணங்கள் நமக்குள் வர வேண்டும்.
3.கோவிலுக்குள் சென்றால் நாம் இப்படித்தான் எண்ணி எடுக்க வேண்டும்.

நம் ஞானிகள் கொடுத்த காவியங்களுக்குள் அத்தனை பேருண்மைகள் உள்ளது.

பிறவியின் ஓட்டத்தில் செல்வதா…? அல்லது சித்தர்கள் மகரிஷிகள் செல்லும் வழியில் செல்வதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

SIDDHAS WORLD

பிறவியின் ஓட்டத்தில் செல்வதா…? அல்லது சித்தர்கள் மகரிஷிகள் செல்லும் வழியில் செல்வதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.இந்நிலைக்கு அந்நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இந்நிலையில் தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அவ் ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையையும் இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும் பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.