சார்தாம் – இமயமலைப் பயணம்

chardham

சார்தாம் – இமயமலைப் பயணத்தில் பெற்ற இயற்கையின் பொக்கிஷ உணர்வுகள்

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் நம் ஞானகுரு அவர்கள் கேதார்நாத் பத்ரிநாத் ஜோஸ்மத் காசி ஹரித்துவார் ரிஷிகேசம் போன்ற பல இடங்களுக்குச் சென்று பல அனுபவங்களையும் பல ஆற்றல்களையும் பெற்றார். அதை எல்லாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தியும் உள்ளார்.

அவ்வாறு அவர் பெற்ற அந்த ஆற்றல்களை எல்லாம் பெறுவதற்காகவே இந்த இமயமலைப் பயணம் (சார்தாம் – நான்கு மலைகள் யமுனோத்ரி கங்கோத்ரி பத்ரிநாத் கேதார்நாத்) 19.08.19 முதல் 31.08.19 வரை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் பொழுதும்
1.மகரிஷிகள் பாதுகாப்பாக வழி நடத்தியதை உணர முடிந்தது.
2.விண்ணின் ஆற்றலை உணரும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
3.விண்ணின் ஆற்றல் மண்ணுலகில் எப்படி வந்து சேர்கிறது…? என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காசி கேதார்நாத் ஜோஸ்மத் உத்தரகாசி கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற இடங்களில் பல நல்ல அனுபவங்களும் ஆற்றல்களும் கிடைத்தது.

இமயமலையைப் பற்றிய இரகசியத்தையும் மகரிஷிகள் இங்கே செயல்படும் முக்கியத்துவத்தையும் அறிய முடிந்தது.
1.விண்ணின் ஆற்றல் நீராக மாறும் தன்மையைக் கங்கோத்ரியில் கண்கூடாகக் காண முடிந்தது.
2.கேதார்நாத்தில் விண்ணுலக சக்திகள் நமக்கு முன்னாடியே அங்கே உறைவதையும் ஆற்றலாக அலைகளாகப் படர்வதையும் காண முடிந்தது.
3.அதை நம் உயிராத்மாவில் சேர்த்து ஜோதியாக மாற்றும் உபாயமும் கிடைத்தது.

அந்த 14 நாட்களுமே மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை உடல் ஏற்றுக் கொண்டதும் பசியோ தாகமோ எல்லாமே ஒரு கட்டுக்குள் சீராக அமைந்ததும் ஒரு ஆச்சரியமான அனுபவம் தான்…!

இதன் மூலம் எந்த இடத்திற்குச் சென்றாலும் மாமகரிஷிகளின் அருளைப் பெற்று நாம் “நிலைத்திருக்க முடியும்…!” என்ற எண்ணம் வலுப் பெற்று விட்டது.

அங்கே உற்றுப் பார்த்து நுகர்ந்த இயற்கையின் பசுமையும்… மூலிகை வாசனைகளும்.. நீர் வளங்களும்… மலைகளும்… பனி படர்ந்த மலைகளும்… நீர் ஓடி வரும் வேகத்தில் அது கரைத்துக் கொண்டு வரும் ஸ்படிகக் கற்களும்.. மனதிலே ஆழமாகப் பதிவாகி விட்டது.

அதே போல் கந்தகப் பாறையில் நீர் ஓடி சுடு தண்ணீராக வருவதை யமுனோத்ரியிலும் கங்கோத்ரியிலும் காண முடிந்தது. குளிர்ந்த நீர் ஒரு பக்கம் ஓடினாலும் அதற்குப் பக்கத்திலேயே இந்தச் சுடு தண்ணீர் வருவது
1.நம் பூமித் தாயின் உள் சுவாச நிலைகளையும்
2.பூமியின் ஆற்றல்களையும் நேரடியாக அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவைகளை நினைக்கும் பொழுதெல்லாம் மலை உச்சிகளும் அவை கவரும் விண்ணின் ஆற்றல்களும் சுவாசத்தில் வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் உத்தரகாண்ட் மாநிலம் முழுவதுமே மலைகள் மட்டும் தான். சமமான பூமி அங்கே காண முடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் இன்றைய விஞ்ஞான உலகில் உள்ள செயற்கைகளை அந்த மலைப்பகுதிகளில் அதிகம் காண முடியவில்லை.
1.இயற்கையை முழுமையாக ஸ்பரிசித்த உணர்ச்சிகளும் இனம் புரியாத மகிழ்ச்சியும் கிடைத்தது.
2.ஒரு வேளை அன்று அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் பூமியெங்கிலும் இருந்திருக்குமோ…! என்ற உணர்ச்சிகளும் வந்தது.

நிறைவு நாளான 31.08.19 அன்று… இமயமலையில் பெற்ற சக்திகள் அனைத்தையும் குடும்பத்தைச் சார்ந்தோர்… இந்த நாட்டு மக்கள்… உலக மக்கள்… அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தோம்.

ரிஷிகேசத்தில் ஆயிரம் வருடத்திற்கு மேல் கடும் தவமிருந்த
1.அந்த ரிஷி விண் சென்ற ஆற்றலை
2.இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரான்மாவும் பெறவேண்டும் என்றும்
3.அந்த உயிராத்மாக்கள் அனைத்தும் விண்ணுலகம் செல்ல வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… என்று
4.விண் செலுத்தும் ஆற்றலைப் பெற தியானித்தோம்.

இந்தப் பயண அனுபவங்களைப் படிப்போர் அனைவரும் இமயமலையில் பாய்ந்து கொண்டிருக்கும் இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும்… விண்ணின் ஆற்றலும்… விண் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தியும் பெறவேண்டும்… அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும்…! என்று எல்லா மகரிஷிகளிடமும் வேண்டுகிறேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்

Lord vinayar

மகிழ்ச்சி பெறச் செய்யும் உணர்வின் இயக்கங்களாக நாம் எப்படி மாறுவது…? என்பது தான் ஆலயத்தின் பண்புகள்

 

ஒரு கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது அதைச் சொன்னதும் நமக்கும் அந்தக் கோபமான எண்ணம் வருகின்றது. அந்த உணர்ச்சியை ஊட்டுகிறது. அது சமயம்…
1.ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொன்னோம் என்றால் ஒன்றுமில்லை.
2.ஏய்…ய்..! ஏண்டா இப்படிச் செய்கிறாய்…? என்றால் வெறுப்பு தன்னாலே வருகின்றது.
3.காரத்தின் தன்மை அதிகமாகின்றது.
4.ஆகவே சூடாகச் சொல்லும் பொழுது வெறுக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் ஏனப்பா இப்படிச் செய்கிறாய்…? என்று சொல்லும் பொழுது அந்த உணர்ச்சி “ஏதோ தவறு செய்து விட்டோம்… போலிருக்கிறது…!” என்று வருகிறது.

சாதாரணமாகச் சொல்லும் பொழுது அரவணைக்கும் தன்மையாக வருகின்றது.
1.ஆக இந்தக் கோபம் சுவையை ஊட்டுகின்றது.
2.தன்னைத் திருந்தச் செய்கிறது.

இதைத்தான் நம்முடைய உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்பதைத் தெளிவாக்கப்படுகின்றது ஆலயங்களில். இந்த உடல் ஒரு ஆலயம். அதிலே எத்தனையோ குணங்கள் நமக்குள் இருக்கின்றது.

இரண்டு பேர் சண்டை போட்டால் அதை நாம் பார்த்தால் அந்த உணர்வு நமக்குள் வந்து பதிவாகி விடுகின்றது. உள்ளுக்குள் புகுந்து விடுகின்றது.

ஒருவன் கோபத்துடன் செயல்பட்டு மற்றவரை வேதனைப்படுத்துகின்றான். அந்த உணர்வைப் பார்த்ததும் அதே உணர்வு கோபத்துடன் அடுத்தாற்போல் வேதனைப்படும் சொல்லாகவும் வேதனைப்படும் செயலாகவே நமக்குள்ளும் மாறுகின்றது.

அங்கே சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமல்ல…! இங்கே நம் உடலிலேயும் வேதனையை உருவாக்கும் அணுவாகி உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொல்லும் அணுவாக மாறுகின்றது.

எப்படிக் காடுகளில் புலி கரடி பாம்பு போன்ற பிராணிகள் மற்றவைகளைக் கொன்று சாப்பிடுகின்றதோ அது போல் நம் உடலுக்குள் வந்த அந்தத் தீமை செய்யும் அணு மற்றதைக் கொல்கிறது.

ஏனென்றால் நம் உடல் ஒரு பெரிய காடு. எந்தெந்தத் தாவர இனங்களின் சத்தை வளர்த்ததோ அதனின் மணம் அந்தக் குணம் அந்த அணுவின் தன்மையாகி ஒன்றுக்கொன்று போர் முறையாகி விட்டால்
1.ஐயோ… பளீர்.. என்று இங்கே (ஊசி குத்துவது போல்) மின்னுகிறதே
2.இங்கே உடலில் வலிக்கின்றதே… வயிறு வலிக்கிறதே… இது எல்லாம் வரும்.

போர் முறை வரப்படும் பொழுது அதைச் சீராக ஜீரணிக்கும் சக்தி இல்லாது போய்விடுகின்றது. உடல் உறுப்புகளின் இயக்கங்கள் தடைப்படுகின்றது.

ஒரு அரசன் ஒரு கிராமத்திற்குப் போகும் பொழுது அதை அடக்கி அங்கே தன் நிலைகளை எப்படிச் செயல்படுத்துகின்றானோ இதே மாதிரி நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் உடலுக்குள் அது போகும் பாதைகளில் அங்கே இருப்பதை எல்லாம் துரத்திக் கொண்டே செல்லும்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா…! இதுகள் எல்லாம் எதிலிருந்து வந்தது..? என்று ஞானிகள் தெளிவாக்கியிருக்கின்றார்கள்.

எந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவருகின்றதோ அது சீதாலட்சுமி… (சீதா என்றால் சுவை) அந்தச் சுவையை வளர்க்கும் சக்தியாக வளருகின்றது.

அதாவது கோப குணத்தை வெளிப்படுத்தினால் அது சீதா..! சூரியனின் காந்த சக்தி கோபத்தை எடுத்து வைத்துக் கொண்டு சீதாலட்சுமியாக மாறுகின்றது.
1.கோபிப்பவரைப் பார்த்ததும் சீதாராமா…
2.அந்தக் கோபத்தின் உணர்ச்சியின் வேகமாக அதே எண்ணங்கள் நமக்குள்ளும் வருகின்றது.

ஒருவன் கசப்பான செயலைச் செய்கின்றான். அந்த உணர்வுகள் சீதா லட்சுமியாக மாறுகின்றது. சுவாசித்ததும் சீதாராமனாக அதே கசப்பான வெறுப்பின் எண்ணங்கள் வருகின்றது. இது தனித் தன்மை.

அதே போல் பண்பு கொண்ட தெய்வீக உணர்வுகளை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது அந்த உணர்வுகளை எடுத்தால் சீதா…! அந்தத் தெய்வ குணங்களை… அந்தச் சுவையை எண்ணுகின்றோம். அப்பொழுது சீதாராமனாக நமக்குள் வருகின்றது.

அது எப்படி வருகிறது..?
1.இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்…
2.ஆலயத்தில் காட்டிய தெய்வ குணத்தை எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இத்தகைய உணர்வின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது அதே உணர்வலைகளை எடுத்து எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்பதைக் கலவையாக்கி நீங்களும் இதே மாதிரிச் சொல்கிறீர்கள்.

அப்பொழுது இந்த உணர்வலைகள் அந்த ஆலயம் முழுவதும் படர்கிறது. கோவிலுக்குள் இந்த உணர்வுடன் சென்றால் மகிழ்ச்சி ஊட்டும் உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.

ஆலயங்களை ஞானிகள் உருவாக்கியதன் நோக்கமே அது தான்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து.. அதிலே விட்ட குறைய இந்த ஜென்மத்தில் முடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Ultimate destination

பூர்வ ஜென்மப் பயனை வைத்து.. அதிலே விட்ட குறைய இந்த ஜென்மத்தில் முடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

உருவத்தின் மூலம் அருவத்தின் சக்திகளை எடுக்கச் சொன்ன நிலைகள் காலத்தால் மாற்றப்பட்டு விட்டது

Sages power

உருவத்தின் மூலம் அருவத்தின் சக்திகளை எடுக்கச் சொன்ன நிலைகள் காலத்தால் மாற்றப்பட்டு விட்டது

 

மகரிஷிகள் அவர்கள் பார்வையில் தீமைகளை எப்படி அகற்றினரோ… எப்படி மகிழ்ச்சி பெறச் செய்தனரோ.. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று அந்த உணர்வை ஒவ்வொருவரும் தனக்குள் சேர்த்துக் கொள்வதற்கே ஆலயம்.

மகரிஷிகள் அல்லாது நல்லதைக் காக்க முடியாது.

ஏனென்றால் அவர்கள் அத்தகையை பேராற்றல்களைத் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்டவர்கள். அதை நமக்குள் இணை சேர்க்கவில்லை என்றால் கோவிலில் நல்ல சக்திகளைப் பெற முடியாது.

அதற்காக வேண்டி ஒவ்வொரு கோவிலிலும் இன்ன ரிஷி செயல்படுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த ரிஷியைப் பற்றிச் சொல்கிறார்களா…? என்றால் இல்லை.

அன்று ஆண்ட அரசர்கள் மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையை எடுத்து ஆலயம் என்ற நிலையைக் காட்டுகின்றார்கள்.

பழனியிலே “முருகா…!” என்று சொன்னால் அந்த ஆறாவது அறிவின் தன்மை தான் அது. ஆக உருவாக்கத் தெரிந்து கொண்டவன் போகன். அவனைப் பற்றி யாராவது நினைக்கின்றீர்களா…?

ஏதோ போய்ச் சாமியைப் பார்த்தோம் என்று வேடிக்கை பார்த்து வரும் நிலை தான். அங்கே பத்தோ ஐம்பதோ கொடுத்துவிட்டு அர்ச்சனை செய்தால் போதும்.

போகர் இங்கே தான் இருந்தார். அந்தக் காலத்தில் செப்புத் தகடில் எழுதி வைத்திருந்தார் என்பார்கள். ஆனால் போகன் வாழ்ந்த காலத்தில் எழுத்தே கிடையாது. ஆனால் இவர்கள் எழுதி வைத்திருப்பார்கள்.

1.ஏனென்றால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி எழுத்து கிடையாது.
2.அந்த எழுத்து எழுத வேண்டும் என்றால் கிரந்தம்.
3.கிரந்தம் என்றால் ஒரு செடி என்றால் அந்தச் செடியின் ரூபம்.

அந்தந்தச் செடியின் வடிவத்தைக் காட்டப்படும் பொழுது அதனதன் உணர்வை எடுத்து அதன் வழியே தான் இந்த உணர்வின் மணம்… எண்ணம் இதனுடைய குணம்… என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.

இதைத்தான் கிரந்தம் என்ற நிலையை அந்தக் காலத்தில் காட்டினார்கள்.
1.எதைக் கிரகித்ததோ அதனுடைய அந்தம்.
2.அதனின் இயக்கம் தான் கிரந்தம்.
3.அது தான் அதனுடைய முடிவு.

அந்தக் கிரந்தத்திற்கு இப்பொழுது வேறு வேறு வடிவம் (வட மொழி) கொடுப்பார்கள். கிரந்தம் என்று சொல்வதற்கு ஒரு செடியின் சத்து எங்கே எப்படி இருக்கிறது…? ஆக அதனின் மணம் குணம் தான் எண்ணம்.

1.மிளகாயைச் சாப்பிட்டால் ஆ…! என்ற சொல்லைச் சொல்கிறோம்.
2.அப்பொழுது அந்த எண்ணம் தான் வருகின்றது.
3.அந்தக் கோபப்படும் உணர்வு வரப்படும் பொழுது
4.அதைச் சொன்னவுடன் அந்த எண்ணம் வருகின்றது.

சொல்வது அர்த்தமாகின்றதல்லவா…! கிரந்தம் என்றால் கிரகித்ததைப் பற்றி அன்று ஞானிகள் சொல்லியிருந்தால் இன்று அதை ஒரு மொழி என்று எடுத்துக் கொண்டு விட்டார்கள்.

இப்படித்தான் ஞானிகள் கொடுத்த பேருண்மைகள் எல்லாம் காலத்தால் மாற்றப்பட்டு விட்டது. ஆக
1.ஞானிகளையும் மகரிஷிகளையும் எண்ணாது
2.உருவத்திற்குள் அவர்கள் காட்டிய அருவத்தின் சக்தியைப் பெற முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

மறைந்த அந்த உண்மைகளைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இப்பொழுது உங்களுக்குள் உணர்த்திக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

ஈஸ்வரபட்டரின் பொன்மொழிகள்

Positive Thinking

ஈஸ்வரபட்டரின் பொன்மொழிகள்

 

1.அகத்தினை அன்பு கொண்டால்… “ஜெகத்தினை” வென்று வாழ்ந்திடலாம்.

2.தங்க வந்த கூட்டினில்… தரணி ஆண்ட வாழ்க்கையில்… தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

3.ஆண்டவன் என்ற ஆத்மாவை அடக்கி ஆளப் பார்க்காமல் “ஆத்மலிங்க தேவனை” அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

4.பகவான் படைத்த படைப்பே நாம்… பகவான் எங்கே உள்ளான்…? என்று பகுத்தறியும் ஆற்றலைத்தான் “பகவான் அருளால் பெற்றுள்ளோமே…!”

5.உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்… உள்ள அழுக்கைப் போக்க எந்நீர்…?

6.திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்… திருநீறு அணிந்தே…!

7.ஈசன் அருளில் உதித்த நாம்… ஈன்றெடுத்த தெய்வமாக.. “ஈன்றெடுத்த அன்னை தந்தையை ஈசனாக்கி வணங்கிடுவோம்…”

8.நம்மை ஈன்றவர்.. படைத்தவர் யார்…? நம் முற்பிறவி இப்பிறவி மறுபிறவியில் யார்…?

9.நம்மில் பலவும் உள்ள பொழுது “நான்” என்பது யார்…?

10.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றிலிருந்து ஒன்றாக ஓங்கி நிற்கும் சக்தியிலே ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்.

11.பல ஆசை நிலைகளிலே பல நிலை அடைவதற்கே… பயம் என்ற பேய்க்கு நாம் பயந்து வாழ்வது எதற்காக…?

12.நிலையில்லா வாழ்வினிலே “நித்திய நிலை பெற்றிடவே…!” நிலையான அன்பைக் காட்டி நிலை பெற்று வாழ்ந்திடுவோம்…!

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்
ஏற்றமும் தாழ்வும் அமைகிறது…! என்று உணர்ந்தே வாழ்ந்திடுவோம்.

ஞானக்கண் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Gnana eye

ஞானக்கண் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.
4.இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெறவேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

யாகம் என்றால் என்ன..? எப்படிச் செய்ய வேண்டும்…?

Yagam yaga

யாகம் என்றால் என்ன..? எப்படிச் செய்ய வேண்டும்…?

நம் உயிர் ஒரு நெருப்பு. அதிலே உணர்வைச் செலுத்தும் பொழுது உணர்வுகள் உடலில் பரவுகிறது. நம் மூச்சு வழி… சொல் வழிக் கூடி அந்த நல்ல உணர்வலைகள் வெளிப்படுகின்றது. கேட்போர் உணர்வுகளை இது மகிழச் செய்கின்றது.

ஆனால் யாகத் தீயில் நீங்கள் நல்ல சரக்கைப் போட்டால் அங்கே புகை மண்டலமாக வருகின்றது. அந்தப் புகை கண்ணிலே பட்டால் எரிச்சலாகி சுவாசித்தால் நெடியாக வருகிறது.

ஆக யாக மண்டலத்தில் என்ன இருக்கிறது…?
1.புற நிலையைக் காட்டி அதனுடைய நிலைகளை
2.அக நிலைக்கு ஊட்ட முடியாது.

கண்கள் புறக் கண். நம் உயிரோ அகக் கண். புறக் கண்ணால் பார்ப்பதும் உயிரிலே அது வரப்படும் பொழுது அகக்கண்ணாக இருந்து உள் நின்று நம்மை இயக்குகிறது… என்ற நிலையை ஆலயத்தில் காட்டப்படும் பொழுது இது துவைதம்.
1.அதாவது உருவம்…
2.அதை எண்ணத்தால் எண்ணும் பொழுது அருவம்…!
3.அந்த அருவம் என்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அதனுடைய உணர்ச்சி..,!

அந்த உணர்ச்சி என்று இயக்கும் பொழுது தான் துவைதம்… அத்வைதம்… விசிஷ்டாத்வைதம்…! தனக்குள் மறைந்து இயக்கும்… இங்கே உணர்ச்சி.

உதாரணமாகக் கண்ணில் பார்த்ததும் என்ன செய்கின்றோம்…? ஒரு பாம்பைப் பார்த்ததும் அந்த உணர்ச்சி தூண்டி “ஐயோ… பாம்பு…!” என்று குதிக்கின்றோம். அதே சமயத்தில் ஒரு அழகான பொருளைப் பார்த்தவுடனே ஆஹா…! என்று நினைக்கின்றோம்.

1.அப்பொழுது அது துவைதம்… உருவம்.
2.அந்த உணர்வை நுகரப்படும் பொழுது அத்வைதம்.
3.உயிரிலே பட்டவுடன் அந்த உணர்ச்சி.
4.எந்த உணர்வின் தன்மையோ அதனின் உணர்ச்சியை ஊட்டும் நம் உயிர்
5.அதை உடலுக்குள் அணுவாக மாற்றுகின்றது.
6.கோவிலில் காட்டப்பட்டது உருவம். ஆகவே அந்த நல்ல… உயர்ந்த… தெய்வீக குணங்களை உன் உருவமாக்கு…!
7.இது தான் ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

ஒரு வேதனைப்படுபவரை நுகர்ந்து நமக்குள் அதை உருவாக்கப்படும் பொழுது நம் உடல் நலிந்து போகின்றது. சரீரத்திற்குள் மாற்றமாகின்றது.

இது சித்தாந்தம் என்று உடலுக்குள் ஆகும் நிலைகளை சாதாரண மக்களும் உணர்ந்து கொள்ளும் நிலைக்காக அதன் வழியில் தான் ஆலயங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டது.

சாமி மேல் இருக்கும் வைரக் கிரீடத்தைக் கண்களில் பார்த்ததும் நாம் எதை எண்ண வேண்டும்…? அந்த வைரம் எப்படி ஜோலிக்கின்றதோ அதே மாதிரி என் சொல்லை மற்றவர் கேட்கும் பொழுது அவர்களுக்கு அந்த ஜோலிப்பு வர வேண்டும்… சந்தோஷம் வரவேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணுதல் வேண்டும்.

சாமிக்குப் போட்டிருக்கும் தங்க நகைகள் எப்படி மங்காதிருக்கின்றதோ அதைப் போல் என் மனது எப்பொழுதுமே அப்படி மங்காது நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எல்லோருடைய மனதும் தங்கத்தைப் போல் மங்காது இருக்க வேண்டும் என்று உங்களை நான் உயர்த்துகின்றேன். நானும் உயருகின்றேன்.

இதே போல் அந்த ஆலயத்திற்கு வருவோர் அனைவரும் எண்ணினால் எப்படி இருக்கும்…? நாம் ஒவ்வொருவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று உணர்த்துவதே ஆலயத்தின் பண்புகள்.

கேதார்நாத் ஆலயத்தில் தியானம்

Kedarnath temple

கேதார்நாத் ஆலயத்தில் தியான அனுபவம்

 

15.5 கி.மீ தூரத்தை ஐந்து மணி நேரத்தில் டோலி மூலம் மேலே சென்றேன். கீழிருந்து மலை மீது செல்லச் செல்ல என்னை அறியாமலே பலவிதமான ஆற்றல்கள் என் உடலுக்குள் புகுந்து கொண்டே இருந்ததை உணர முடிந்தது.

கோவிலுக்கு ஒரு கி.மீ. முன் இறங்கி நடக்கும் பொழுது
1.தலையிலிருந்து (குறிப்பாக சிறு மூளையில்) கால் வரை மின்னல் பாய்ந்து என்னை (உடலை) இரண்டாக வகுந்தது போல் இருந்தது.
2.அதற்குக் காரணம் என்ன…? என்று உடனே உணர முடியவில்லை
3.ஆகையினால் மெதுவாகத் தான் என்னால் அங்கே நடந்து செல்ல முடிந்தது.

ஆலயத்திற்குள் முதலில் ஒரு முறை வலம் வந்தேன். பின் இரண்டாவது முறை வலம் வரும் பொழுது இரண்டு கட்டுகளாக இருந்த அந்த ஆலயத்தின் முதல் கட்டில் பாண்டவர்களின் அனைத்துச் சிலைகளையும் காண முடிந்தது.

அந்தச் சிலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று இளம் நீல நிறத்தில் ‘பளீர்…ர்ர்ர்…” என்று வெளிச்சம் மின்னல் போல் வெட்டியது.

வெளிச்சம் எங்கிருந்து வருகிறது…? என்று சுற்று முற்றும் பார்க்கும் பொழுது மறுபடியும் அதே வெளிச்சம் மின்னல் போல் இளம் நீல நிறத்தில் தெரிந்தது.

பின்னர் ஈஸ்வரபட்டர் தெளிவாக எனக்கு உணர்த்தினார். நீ ஏற்கனவே எடுத்து…
1.உனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்து
2.இந்த மலையில் “அபரிதமாகப் பரவிக் கொண்டிருக்கும்…!” அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தியைத் தன்னிச்சையாக ஈர்த்ததால் தான்
3.இந்த நீல நிற ஒளிகள் உன்னிடமிருந்து வெளிப்பட்டது.
4.மேலும் உன் உடலையே இரண்டாகப் பிளப்பது போல் இருந்ததன் காரணமும் அதுவே தான்.

உன் உடலில் அந்த ஆற்றல்களைத் தாங்கக் கூடிய “காந்த சக்தி” இல்லாததால் தான் உனக்கு வலியும் அதனால் சோர்வும் வந்தது…! என்று தெளிவாக்கினார்.

அந்தக் காந்த சக்தியைக் கூட்டும் முறையையும் காட்டினார்…!

அங்கே இருந்த லட்சுமி நாராயணன் சிலை அருகில் ஒரு நெய் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒளியின் சுடரை இரண்டு கைகள் மூலம் எடுத்து வியாசகரையும் மற்ற மகரிஷிகளையும் எண்ணி என் முகத்தில் சுமார் நான்கு முறை ஒற்றி எடுக்கும்படி உணர்த்தல்கள் வந்தது.

அவ்வாறு செய்ததும் உடலில் சிறு மூளையில் இருந்த வலி… உடல் சோர்வு… அது எல்லாமே குறையத் தொடங்கியது.

பின்னர் உள் கட்டில் இருந்த முக்கோண வடிவில் மலை போல் உருவாகியிருந்த கேதாரின் சிலையை உற்றுப் பார்த்தேன். அதிலே தடவப்பட்டிருந்த நெய்யைப் பார்த்ததும் என் நினைவுகள் அனைத்தும் மகரிஷிகள் பால் சென்றது.

மனித வாழ்க்கையில் வந்த அனைத்து உணர்வுகளையும் உயிருடன் ஒன்றச் செய்து அந்த நல்ல சக்திகளை உயிராத்மாவில் வடித்துச் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.
1.அந்த உணர்வுகளைச் சுவாசித்ததும் அந்தக் கேதார் சிலையின் (முக்கோண வடிவில்) அடியில் இருக்கும்
2.அதன் ஈர்ப்பு நிலையையும்
3.விண்ணிலிருந்து கவரும் அதனின் ஆற்றலையும் உணர முடிந்தது.

பின் ஆலயத்திற்கு வெளியே வந்து அந்தக் கோவிலைத் தாங்கி நின்ற கம்பத்தில் என் உள்ளங்கையை வைத்தும்… தலையை வைத்தும் சுவாசிக்கத் தொடங்கினேன்.

உடல் முழுவதும் ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. பறப்பது போல் உணர்வுகள் வந்தது. மனதில் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் தோன்றியது.

பின்னர் ஞானகுருவையும் மாமகரிஷி ஈஸ்வரபட்டரையும் எண்ணிக் கொண்டே கீழே இறங்கத் தொடங்கினேன். சுமார் ஐந்து கி.மீ சென்றதும் நீர் மேகங்கள் வேக வேகமாக மலைப் பகுதிகளை நோக்கி ஈர்க்கப்பட்டு நீராக மாறுவது தெரிந்தது.

பின்னர் மழைத் துளியும் விழத் தொடங்கியது. சிறிது தூரம் சென்றதும் மழை பெய்யத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் வெண்மை நிற (மழை) மேகங்கள் தெரிந்தது. வானத்தில்….
1.அதாவது விண்ணுலகில் சஞ்சரிப்பது போல் உணர்வுகள் தோன்றியது.
2.ஏனென்றால் கண்ணுக்கு முன்னாடி இருப்பது எதையுமே தெளிவாகக் காண முடியவில்லை.
3.எங்கே பார்த்தாலும் அந்த வெண்மை நிறம் தான்…!

பின் அந்த மழை பொழிதலும்… மூலிகைகளின் வாசனைகளும்… சுவாசத்தில் இனிமையான உணர்வை ஊட்டியது. கீழே இறங்கும் வரை அதை அனுபவித்தேன்.
1.காணாத காட்சிகளை எல்லாம் காண முடிந்தது.
2.விண்ணையும் மண்ணையும் ஒன்றாகவே காண முடிந்தது.
3.அந்த விண்ணுலக ஆற்றல் எனக்குள் சேர்வதையும் உணர முடிந்தது.

பின்னர் பாண்டவர்களின் சிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் உணர்த்தத் தொடங்கினார்.

நம் ஐம்புலன்கள் தான் பாண்டவர்கள். உயிரின் துணை கொண்டு ஐம்புலன்கள் வழியாக எடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கொண்டு உடல் பெறும் உணர்வுகளைக் (கௌரவ உணர்வுகளை) கரைக்கும் பொழுது அது பேரொளியாக ஜோதிலிங்கமாக இந்த உடலே ஒளியின் உடலாக மாறுகின்றது…! என்று தெளிவாக்கினார்.

பாகீரதி நதியில் அமைந்துள்ள உத்தரகாசியில் 26.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்

Bhagiratha

பாகீரதி நதியில் அமைந்துள்ள உத்தரகாசியில் 26.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்

 

பண்டைய கால மகரிஷிகள் இங்கே அதிகம் செயல்பட்டதாக இந்த ஸ்தலத்தின் வரலாறு கூறுகிறது.

முன்னோரு காலத்தில் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த சகரர் என்ற அரசன் அசுவமேதயாகம் நடத்தினார். அசுவமேதயாகம் முழுமை பெற்றால் தனது இந்திர பதவிக்கு ஆபத்து என்று அறிந்த இந்திரன் யாகக் குதிரையைக் களவாடி கபில முனிவர் தியானிக்கும் இடத்தில் மறைத்து விடுகின்றான்.

குதிரையைத் தேடி சகரரின் அறுபதினாயிரம் மகன்களும் செல்கின்றனர். கடைசியில் கபிலர் ஆசிரமத்தில் கண்டதும் குதிரையை அவரே பிடித்து வைத்திருப்பதாக எண்ணி அந்த முனிவரை ஏசுகின்றனர்.

ஏசியதும் அந்த முனிவர் கண் விழித்துப் பார்த்து அவர்களை எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றார். பின் யாகம் நடத்தும் அரசனின் மற்றோரு மகன் நடந்ததை அறிந்து கபில முனிவரிடம் மன்னிப்புக் கேட்டு யாகக் குதிரையை அழைத்துச் சென்றதாகக் காவியம் உண்டு.

1.அந்த அறுபதனாயிரம் பேரையும் மீட்க வேண்டும் என்றால்
2.ஆகாய கங்கையை இங்கே பூமிக்குக் கொண்டு வந்து
3.இறந்த அறுபதனாயிரம் பேரின் எலும்புகளில் அந்த நீர் பட்டால்
4.அவர்கள் எல்லோரும் சொர்க்கம் அடைவார்கள் என்று கபிலர் சொல்கிறார்.

திலீபனின் மகனான பகீரதன் அந்த அறுபதனாயிரம் பேரையும் மீட்க பெரும் முயற்சி எடுத்தான். அது குறித்து கங்கையை வேண்டி பகீரதன் தவம் செய்ய கங்கை ஒரு நாள் பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும்…? என்று கேட்கின்றது.

இங்கே பூமிக்குள் கங்கை வர வேண்டும் என்று பகீரதன் சொல்ல கங்கை எனக்கு இப்பொழுது வர விருப்பமில்லை….! என்று சொல்லி மறைந்து விடுகின்றது.

பின்னர் முனிவர்கள் பகீரதனிடம் நீ சிவபெருமானை நினைத்துத் தவமிருந்தால் அவர் சொன்னால் கங்கை நிச்சயம் பூமிக்குள் வரும் என்று சொல்கின்றனர்.

அவ்வாறே பகீரதன் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருக்கின்றார். பல காலம் தவமிருந்த பின் சிவபெருமானின் காட்சி கிடைக்கின்றது. கங்கையை பூமிக்கு வரச் செய்வதாக அவரும் ஆசி கொடுக்கின்றார்.

கங்கையின் வேகத்தைத் தன் ஜடாமுடியில் தாங்கி பூமிக்குள் கொண்டு வருகின்றார் சிவன். அதன் பின்னரும் பல சிக்கல்கள் உருவாகி அதில் ஒவ்வொன்றிலிருந்தும் கடும் தவம் இருந்து வென்று முடிவில் அறுபதனாயிரம் பேரின் எலும்புகளின் மீதும் கங்கையைப் படச் செய்து அவர்களை மீட்டதாக அந்தக் காவியம் சொல்கிறது.

பகீரதன் கங்கையைக் கொண்டு வந்து புண்ணியம் பெறச் செய்ததால் அந்த இடத்தைப் “பாகீரதி நதி…!” என்று அழைக்கின்றனர்.

இதனுடைய உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் பார்ப்போம்.

அசுவமேதயாகம் என்றால் விண்ணிலே தோன்றிய ஒரு உயிர் பூமிக்குள் வந்து பல கோடிச் சரீரங்கள் பெற்று… ஒன்றை ஒன்று வென்று… ஒன்றை ஒன்று கொன்று ஒன்றுக்கு இரையாகி… இப்படிப் பல நிலைகளை வென்று தான் மனிதச் சரீரம் பெறுகின்றது.

மனிதச் சரீரம் பெற்ற நிலையில் இராமாயணத்தில் தசரதச் சக்கரவரத்திக்கு அறுபதனாயிரம் மனைவிகள் என்று குறிப்பிட்டது போல்
1.உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் அனைத்தும்
2.எண்ணிலடங்கா சக்திகளாக… உடலாக… மாறுகிறது…! என்று இங்கே காட்டுகின்றார்கள்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் கலந்து இந்திரலோகமாக… அணுக்களாக… அதனதன் வீரியத்திற்கொப்ப வலிமைக்கொப்ப உருப்பெருகின்றது.

அதிலே ஏதாவது ஒன்று உடலில் உள்ள மற்றதை எல்லாம் அடக்கி வீரியம் பெற்று ஆட்சிக்கு வந்து விட்டால் “இந்திரலோகம்” (இரத்தத்தில் உள்ள அணுக்கள்) மாறுகின்றது.

அப்படி மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்திரன் தன் பதவியைத் தக்க வைக்கப் பல வேலைகளைச் செய்கிறான்…! என்று காவியங்கள் கூறுகின்றது. (நாம் வளர்த்துக் கொண்ட குணங்கள் அனைத்தும் தன்னைக் காக்க அது அது முயற்சிக்கும்)

இவ்வாறு எடுத்துக் கொண்ட குணங்கள் மாறுபட்ட நிலையாகும் பொழுது
1.உடலை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ரிஷியிடம் சாபம் பெறுவதாக
2.இங்கே கபில முனிவரின் சாபத்தைக் காட்டுகின்றார்கள்.

மனிதனான நிலையில் அடுத்த நல்ல நிலையை அடைய முடியாத நிலையை அவ்வாறு காட்டுகின்றார்கள். ஆனால் பகீரதனோ எப்படியும் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று பல தடவைகள் முயற்சி செய்வதைக் காட்டுகின்றார்கள்.

1.இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும்
2.எத்தனையோ கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாது
3.மனிதனுக்கு அடுத்த நிலையான பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்ற அவனின் முயற்சியைத் தான்
4.“பகீரதப் பிரயத்தனம்” என்று சொல்வார்கள்.

இதிலே “ஆகாய கங்கை” என்பது விண்ணிலிருந்து வரும் பேராற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகள். அதன் வேகத்தை நாம் எடுக்க (தாங்க) வேண்டும் என்றால்
1.நம் உடலின் உச்சியில் உள்ள இரண்டு கண்ணின் நினைவையும் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அதன் மூலமாக விண்ணிலிருந்து சுவாசிக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் வலிமையாகச் சேர்த்து அதை வளர்க்கும் பொழுது அடுத்து வரும் தடைகளை எல்லாம் எண்ணாது “ஒரே நிலையில் அந்தச் சக்திகளைப் பெற வேண்டும்” என்பதையே பல காலம் கடும் தவமிருந்ததாகக் காட்டுகின்றார்கள்.

1.அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் சேமிக்க வேண்டிய இடம் நம் உடலில் உள்ள எலும்புகள் என்றும்
2.அதிலே இருக்கும் ஊழ்வினை என்ற வித்துகளை அருள் ஒளியின் உணர்வாக மாற்றும் பொழுது தான்
3.அனைத்து வகையான சாபங்களிலிருந்தும் (ஜென்ம வினை பாவ வினை சாப வினை தீய வினை) விடுபட்டு
4.எல்லா உணர்வுகளும் உயிருடன் ஒன்றி மனிதன் சொர்க்கம் அடைவதாக ஞானிகள் காட்டுகின்றார்கள்.

இந்தப் பேருண்மயை உணர்த்தியது வியாசக பகவான். அங்கே உத்தரகாசியில் வியாசகரை எண்ணித் தியானமிருக்கும் பொழுது இந்த விளக்கங்கள் எல்லாம் எனக்குக் கிடைத்தது.

வியாசகரின் அருள் சக்தி உலக மக்கள் எல்லோருக்கும் கிடைத்து பகீரதனைப் போன்று விடா முயற்சி எடுத்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உடலில் உள்ள அனைத்து உணர்வுகளையும் உயிருடன் ஒன்றச் செய்து பேரொளியாக அழியா ஒளிச் சரீரம் பெற அருள்வாய் ஈஸ்வரா.