பிறருடைய இருளை நமக்குச் சொந்தமாக்காமல் அருளை நமக்குச் சொந்தமாக்க வேண்டும்

பிறருடைய இருளை நமக்குச் சொந்தமாக்காமல் அருளை நமக்குச் சொந்தமாக்க வேண்டும்

 

சகஜ வாழ்க்கையில் நாம் என்ன செய்கின்றோம்..? எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவுக்குச் சென்று விடுகின்றோம்.

உடல் ஆசை… பிள்ளை இப்படிச் செய்கின்றான்… அவன் இப்படி இருக்கின்றான்… கடன் வாங்கியவன் ஏமாற்றுகிறான்… பணம் தரவில்லை…! என்று நினைவுகளை எல்லாம் பலவாறு இப்படி மாற்றி விட்டால் என்ன ஆகும்…?

ஆக… இத்தகைய நிலைகளை எண்ணினால் நமது உயிர் என்ன செய்யும்…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான்… பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் “பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…” என்று பாடுகின்றோம்.

காரணம்…
1.பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நாம் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தாலும்
2.அந்த உணர்வை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா.

உதாரணமாக… கருணைக்கிழங்கு என்றாலும் அதை வேக வைத்து அதில் உள்ள விஷத்தை நீக்குகின்றோம்… காரமாக இருக்கும் மிளகாயை மற்ற பொருள்களுடன் சேர்த்துச் சுவையாக மாற்றுகின்றோம். உப்பை மற்ற பொருள்களுடன் இணைத்துச் சுவையாக மாற்றுகின்றோம்.

இதைப் போன்று… இந்த வாழ்க்கையில் தீமை என்று வந்தாலும் அந்தத் தீமை நமக்குள் வளராதபடி அருள் ஒளி என்ற உணர்வைச் சேர்த்துப் பக்குவமான நிலைகள் கொண்டு வளர வேண்டும் என்று உணர்த்தி அனைவரும் நல்ல நிலைகள் அடைய வேண்டும் என்று எண்ணினால் பிறர் குறைகளோ துன்பங்களோ நமக்குள் வராது… நமக்கு நல்லதாக மாறும்.

ஒருவன் நமக்குக் கெடுதல் செய்கின்றான் இருந்தாலும் அந்தக் கெடுதலை எண்ணாமல் ஈஸ்வரா…! என்ற உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் அவனை அறியாது இயக்கும் இருளிலிருந்து விடுபட்டுப் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் எடுத்தால் பரிபக்குவம் ஆகின்றது.

அவன் செய்யும் கெடுதல் நமக்குள் வராது.

அவன் ஏமாற்றுகின்றான் தொல்லை கொடுக்கின்றான் நம்மைக் கேவலப்படுத்துகின்றான் என்று இதை எண்ணி எடுத்தால் அது எல்லாம் நமக்குள் விளைகின்றது.

ஆனால்
1.ஏமாற்றுபவன் உண்மையை உணர வேண்டும் அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று எண்ணினால்
2.நாம் எண்ணிய இந்த அந்த உணர்வு நமக்குள் சேர்ந்து நல்ல உணர்வாக “அத்தகைய அணுவாக…” உயிர் கருத்தன்மையை அடையச் செய்கின்றது.
3.நமக்குள் பக்குவம் பெறும் தன்மையும் தீமை விளையாது தடுக்கும் நிலையும் வருகிறது.

இந்தப் பக்குவ நிலையை நாம் பெற வேண்டும்.

ஆனால் அவன் தவறு செய்கிறான் என்றால் அவன் எதை எண்ணிச் செயல்படுத்துகின்றானோ… அந்த ஈசன் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் அந்த உயிர் அதை உருவாக்கி “அதையே அவனை அனுபவிக்கும்படிச் செய்யும்…”

அவன் திருந்த வேண்டும் என்று நாம் எண்ணினால் அந்த உணர்வு நமக்குள்ளாகி அவன் தீமையாக எண்ணினாலும் “நம்முடைய உணர்வுகள் அவனைத் திருந்தும் வழியாக இயக்கும்…”

திருந்தாத நிலை இருந்தாலும்
1.அந்தக் கெடுதலான உணர்வுகள் அவனுக்குத் தான் சொந்தம்,,,
2.ஆனால் நமக்கு அருள் சொந்தமாகின்றது… அவனுக்கு இருள் சொந்தமாகின்றது.

ஆகையினால் பிறர் படும் உணர்வுகளையும் அந்த இருளான உணர்வுகளை நமக்குள் விடாதபடி நாம் அந்தப் பக்குவ நிலை பெற வேண்டும்.

பாட்டை மட்டும் பாடிவிட்டுப் பல நினைவில் நான் இல்லாமல் பரிபக்குவ நிலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
1.நம் உயிரான ஈசனிடமே அந்தப் பரிபக்குவ நிலை பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் அதையே உயிர் உருவாக்குகின்றது.
2.நம்மை அந்தப் பக்குவ நிலையைப் பெறச் செய்யும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply