சொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் “உயிரின் துணை கொண்டு” சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்

Third-Eye path

சொர்க்க பூமியாக வாழும் மனித உடலில் “உயிரின் துணை கொண்டு” சொர்க்கலோகத்தை உருவாக்க வேண்டும்

 

படிக்காதவன்தான் நான் (ஞானகுரு) இதைச் சொல்கின்றேன். இயற்கையின் உண்மையின் உணர்வுகளை அறியும் ஆற்றலையும் ஞானிகள் மகரிஷிகள் பெற்ற ஆற்றலையும் பெறும் தகுதியை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்தார்.

நீங்கள் படித்திருந்தாலும் படிக்கவில்லை என்றாலும் யாம் சொல்லும் உணர்வின் தன்மையை ஆழமாகப் பதிவாக்கும்போது
1.உங்கள் நினைவாற்றல் “அண்டத்தையும் அளந்தறிந்த… அகஸ்தியன் பால் செல்லும்…!”
2.அந்த அகஸ்தியர் பெற்ற உணர்வை நீங்கள் பெற்று உங்களுக்குள் கருவாக உருவாக்க முடியும்
3.இருளை அகற்றி ஒளியாக மாற்றும் திறன் உங்களால் பெற முடியும் என்ற நம்பிக்கையில் தான் இதைச் சொல்கிறேன்.

மகரிஷிகள் பெற்ற சக்தியைப் பெறுவதற்காகவும் உலக அனுபவம் பெறுவதற்காகவும் ஈஸ்வரபட்டர் இட்ட கட்டளைப்படி காடு மேடெல்லாம் நான் அலைந்தேன்… தெரிந்தேன்.. அறிந்தேன்… துன்புறுத்தப்பட்டேன்…!

அந்தத் துன்பத்தில் இருந்து விடுபடும் உணர்வுகளை குருநாதர் உணர்த்தினார். அந்த உணர்வின் ஆற்றலைக் கவர்ந்தேன்.

துன்பத்தை அகற்றிடும் ஆற்றலை வளர்த்து அதன் வழியில் பெற்ற ஞானத்தைத் தான் இங்கே போதிக்கின்றேன். போதிக்கும் உணர்வுகளைப் பதிவாக்கி மீண்டும் நினைவு கொண்டு வளர்த்தால் உங்களை அறியாத இருளை போக்க முடியும்.

இந்த உடலில் நாம் நீடித்த நாள் இருப்பதில்லை, உடலில் இருக்கும் போது அந்த அருள் ஒளியை வளர்த்துக் கொள்ளுங்கள். அருளைப் பெருக்கி அதை அனைவரும் பெற வேண்டும்.. எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்திட்டால் மற்றவர்களையும் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நீங்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.
1.அருள் ஒளியின் உணர்வை நுகருங்கள்.
2.அருள் ஞான அணுக்களை உங்கள் உடலுக்குள் உருவாக்கும்.

நமது எல்லை எது…? என்று அறிந்து அதை அடைந்திட வேண்டும். அதை மையமாக வைத்து வாழ வேண்டும்.
1.இந்த மனித உடலுக்குப் பின் நாம் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும்
2.ஒளியின் சரீரமாக ஆவதே மனிதனுடைய கடைசி நிலை.
3.ஒளியாகி விட்டால் அகண்ட அண்டத்திலே நாம் என்றுமே ஜோதிச் சுடராக என்றும் பதினாறு என்ற நிலை அடையலாம்.

மனித உடல் பெற்ற நிலையில் ஆறாவது அறிவை (கார்த்திகேயா) வைத்து உயிரின் துணை கொண்டு அந்த நிலையை அடைய முடியும். ஏனென்றால் நம் உயிர் தான் எல்லாவற்றையும் (பார்ப்பது கேட்பது நுகர்வது) உருவாக்குகின்றது.

உயிர் அது எப்படி அறிவாக நமக்குத் தெளிவாக்குகின்றதோ அதே போல் நாம் நுகரும் உணர்வை எல்லாம் உயிருடன் ஒன்றச் செய்து ஒளியாக மாற்றும் திறன் ஆறாவது அறிவிற்கு உண்டு.

ஆனால் “என்னமோ போகட்டும்… நாளைக்கு நடப்பதை யார் அறிவார்…?” என்று எண்ணினால் இதற்குப் பின் நாம் நரகலோகம் தான்.

இப்பொழுது நாம் இந்த உடலான சொர்க்க பூமியில் இருக்கின்றோம். நம் உயிர் சொர்க்க வாசலாக இருக்கின்றது. இந்த சொர்க்க வாசலை வைத்து நாம் எடுக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி கொண்டு நாம் விண் செல்ல முடியும். சப்தரிஷி மண்டலத்துடன் இணைய முடியும்.

சொர்க்க பூமியாக இருக்கும் இந்த நிலையில் அதைச் சொர்க்க லோகமாக மாற்ற வேண்டும். அதற்காகச் சொர்க்க வாசலை நாம் நாட வேண்டும்.
1.சொர்க்கத்தை அடைந்திட்ட உயிருடன் ஒன்ற வேண்டும்.
2.அருள் ஒளிச் சுடரை இங்கே வளர்க்க வேண்டும்.
3.வளர்த்தால் நம் உயிர் நம்மை அங்கே அழைத்துச் செல்லும்.

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

Image

Vali vadam - sukreevan

தூசி வராமல் இருக்கக் கதவை அடைப்பது போல் தீமைகள் நமக்குள் புகாதிருக்கப் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…!

 

1.அகஸ்தியன் துருவனாகி தன் பதினாறாவது வயதில் திருமணமான பின்
2.கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து
3.நளாயினி போன்று ஒருவரையொருவர் மதித்து நடந்து
4.சாவித்திரி போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி
5.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி நஞ்சினை வென்று
6.பேரருள் பெற்று பேரொளியாகித் துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வடதிசையில்
7.விண்ணிலே ஒளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
8.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இதை வரிசைப்படுத்தி
9.நம் உடலிள்ள பல கோடி உணர்வுகளுக்கெல்லாம் ரெகார்டு (RECORD) செய்ய வேண்டும். அதாவது பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு இயந்திரத்தை உருவாக்குகின்றோம் என்றால் அதிலிருக்கும் ஒவ்வொரு பொருளையும் வரிசைப்படுத்தி இணைத்து மாட்டினால் தான் அந்த இயந்திரமே சீராக இயங்கும். மற்றதையும் இயக்கும்.

வரிசைப்படுத்தி மாட்டாமல் முன்னால் போடுவதை பின்னாடியும் பின்னால் போடுவதை முன்னாடி போட்டால் இடைஞ்சல் ஆகும் அல்லவா…! ஒன்றுடன் ஒன்றைப் பொருத்தி அதை இயக்க முடியாது.

அதைப் போலத்தான் வரிசைப்படுத்தி நாம் அந்த மெய் உணர்வின் தன்மையை நுகரச் செய்து அந்த உயர்ந்த சக்திகளை ஒவ்வொரு மனிதனும் பெறும் மார்க்கத்தை அன்று காட்டினார்கள். வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களிலிருந்து விடுபட வழி காட்டினார்கள் ஞானிகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலில் படர வேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று உயிரை வேண்டித் தன் உடலுக்குள் கண்ணின் நினைவைச் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் காலையில் இருந்து இரவு வரையிலும் பிறருடைய கஷ்டங்களையும் துயரங்களையும் எத்தனையோ கேட்டுணர்ந்துள்ளோம். அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவாகி உள்ளது.

அதை இழுக்காதபடி நம் உடலுக்குள் உட்புகாதபடி தடுக்க ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி
1.இங்கே புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அந்தக் கதவை அடைத்தல் வேண்டும்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டு அடைத்து விட்டு அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
1.எங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதற்கும் அந்தத் நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று சொல்லி
3.இப்படி அடைத்தவுடனே உள்ளுக்குள் வலுவாகிவிடும்.

உடலுக்குள் வலுவான பின் என்ன செய்யும்…?

கஷ்டப்பட்டதையோ துயரப்பட்டதையோ வேதனைப்பட்டதையோ இழுக்கக்கூடிய சக்தி இல்லை என்றால்
1.எதிலும் பிடிப்பு இல்லாத அந்தத் துன்பமான உணர்வின் அலைகளை
2.சூரியன் கவர்ந்து எடுத்துக் கொண்டு போய்விடும்.
3.நம் உடல்… நம் எண்ணங்கள்… நம் ஆன்மா… அனைத்தும் தூய்மையாகும்.

காற்றடிக்கும் பொழுது தூசி வீட்டுக்குள் வராமல் எப்படிக் கதவை அடைக்கின்றோமோ… அதைப் போல தீமைகள் நமக்குள் புகாதபடி நாம் புருவ மத்தியில் அடைத்துப் பழக வேண்டும்…! அவ்வளவு தான்…!