தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

 

அகத்தினை அன்பு கொண்டால்…
“ஜெகத்தினை” வென்று வாழ்ந்திடலாம்.

தங்க வந்த கூட்டினில்…
தரணி ஆண்ட வாழ்க்கையில்…
தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

ஆண்டவன் என்ற ஆத்மாவை அடக்கி ஆளப் பார்க்காமல்
“ஆத்மலிங்க தேவனை” அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

பகவான் படைத்த படைப்பே நாம்…
பகவான் எங்கே உள்ளான்…? என்று
பகுத்தறியும் ஆற்றலைத்தான் “பகவான் அருளால் பெற்றுள்ளோமே…!”

உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்…
உள்ள அழுக்கைப் போக்க எந்நீர்…?

திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்… திருநீறு அணிந்தே…!

ஈசன் அருளில் உதித்த நாம்…
ஈன்றெடுத்த தெய்வமாக..
“ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்…”

நம்மை ஈன்றவர்.. படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி இப்பிறவி மறுபிறவியில் யார்…?

நம்மில் பலவும் உள்ள பொழுது “நான்” என்பது யார்…?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…
ஒன்றிலிருந்து ஒன்றாக ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்.

பல ஆசை நிலைகளிலே பல நிலை அடைவதற்கே…
பயம் என்ற பேய்க்கு நாம் பயந்து வாழ்வது எதற்காக…?

நிலையில்லா வாழ்வினிலே “நித்திய நிலை பெற்றிடவே…!”
நிலையான அன்பைக் காட்டி நிலை பெற்று வாழ்ந்திடுவோம்…!

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைகிறது…! என்று உணர்ந்தே வாழ்ந்திடுவோம்.

ஞானம் பெற வேண்டியது மிகவும் அவசியம்

ஞானம் பெற வேண்டியது மிகவும் அவசியம்

 

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.
4.இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெற வேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்..

இரவிலே ஜெப நிலையிலேயே உறங்குங்கள்

இரவிலே ஜெப நிலையிலேயே உறங்குங்கள்

 

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை…! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…?

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…?

 

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்…!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

இன்றைய உலக வாழ்க்கை கனவு தான்…!

இன்றைய உலக வாழ்க்கை கனவு தான்…!

 

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான்…! ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

குருவின் துணை நமக்கு அவசியம் வேண்டும்

குருவின் துணை நமக்கு அவசியம் வேண்டும்

 

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.

1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும்… உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

அந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகானந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும்
1.ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால்
2.அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.

வளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.

1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

வாழும் வரை வாழலாம் என்றால் வாழ்ந்தபின் என்ன நிலை…?

வாழும் வரை வாழலாம் என்றால் வாழ்ந்தபின் என்ன நிலை…?

 

இந்த மனிதப் பிறவி எடுக்க அவ்வாண்டவனின் சக்தியில் பல நாள் தவமிருந்து நாம் பெற்றதே இப்பாக்கியம்.

ஆனால் நாம் எடுத்த மனிதப் பிறவியையே பெரும் பயத்துடனும் கலக்கத்துடனும் வாழ் நாட்களை வீணடித்துக் கொண்டு வாழ்கின்றோம்.

நாம் எடுத்த பிறப்பின் பயனைப் பெறுவது என்பது நம் வாழ் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது தான்…!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயத்தை ஆண்டவன் சக்தியிலிருந்து பெற்றுள்ளான். மனிதப் பிறவி எப்பொழுது எடுத்துள்ளோமோ அப்பொழுதே அந்த ஆண்டவனின் “பரிபூரண சக்தி” பெற்றவர்களாகத்தான் தாயின் கருவுக்கே வந்து உதிக்கின்றோம்.

இந்த நல்ல நிலையில் வந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வாழ்ந்திடாமல்
1.பெரும் பேராசை நிலை கொண்டு பல விஞ்ஞான ரூபங்கள் எடுத்து
2.கடைசியில் தன்னைத் தானே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள் (இன்றைய உலக நிலை இது தான்).

விஞ்ஞான ரூபத்தில் வந்த மனிதர்கள் எல்லாம் தன்னுள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவ்விஞ்ஞானத்தையே வெல்லும் மெய் ஞானத்தைக் கண்டிடலாம்.

கூடுவிட்டுக் கூடு பாய்கின்றார்கள் சித்தர்கள்… என்றெல்லாம் கதைகளாகவும் காலப்போக்கிற்காகவும் படிக்கின்றார்கள். ஆக இன்றைய மனிதர்களின் குண நிலையெல்லாம்… பெரும் உல்லாசத்தைக் காணும் குணமாகவே உள்ளது…!

கனவும் நினைவும் உள்ள காலமாக உள்ளதப்பா இந்தக் காலம்.
1.கருத்துடன் நமக்குப் பல பெரியோர்கள் போதித்த கருத்தையெல்லாம்
2.தன் உல்லாச வாழ்க்கைக்காக வியாபாரமாக்கத்தான் தெரிந்தது
3.தன்னுள் இருக்கும் உண்மை நிலைகளை வீண் விரயமாக்கி வாழ்கிறார்கள்.

“வாழும் வரை வாழலாம்…!” என்ற எண்ணம் தான் மக்களின் மனதிலே பதிந்துள்ளது. இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு “அழியாத ஆத்மா” எப்படியெல்லாம் வட்டமிட்டுக் கொண்டுள்ளது…? என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.
1.எண்ணிப் பார்ப்பதில்லை என்றால்
2.எண்ணத்தில் பயம் வருவதால் தான் எண்ணிப் பார்ப்பதில்லை…!

இன்றுள்ள நிலையில் நமக்குத் தெரிந்த ஒரே வழி… அச்சக்தியின் நிலை கொண்டு சகல ஜீவராசிகளையும் காத்து வாழ்ந்திட… அவ் ஈஸ்வர ஜெபம் இருப்பது ஒன்றே தான்.

அச்சக்தியின் நிலை கொண்டு ஒவ்வொருவரும் இந்த உலகில் உள்ள பல கோடி உண்மை நிலைகளைத் தன்னுள் ஈர்க்க முடியும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…! என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லையா…! “எந்நிலையும் ஜெயம் கொண்டு வாழ்ந்து காட்டிட வேண்டுமப்பா…!”

இவ்வுலகில் வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவும் இல்லை

இவ்வுலகில் வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவும் இல்லை

 

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.
1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

1.நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்…
2.நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…!
3.இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

முன் ஜென்மத் தொடர்ச்சி தான்… இன்றைய வாழ்க்கை

முன் ஜென்மத் தொடர்ச்சி தான்… இன்றைய வாழ்க்கை

 

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

நாம் இந்த உடலில் வாழும் காலத்தைக் காட்டிலும் ஆவி உலகில் தான் அதிக காலம் வாழ நேருகிறது

நாம் இந்த உடலில் வாழும் காலத்தைக் காட்டிலும் ஆவி உலகில் தான் அதிக காலம் வாழ நேருகிறது

 

இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் தன் எண்ணத்திலும் சுவாசத்திலும் பல துவேஷங்களையும் ஆசைகளையும் வளர்த்து
1.நாம் இருக்கும் காலம் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்…
2.இறந்த பின் நமக்கு என்ன தெரிகிறது…? என்ற மனப்பான்மையிலே தான் ஊறி வாழ்கிறார்கள்.

நாம் இறந்த பிறகு தான் நம் ஆத்ம நிலை நாம் இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் “அதிகக் காலங்கள்” ஆவி உலகில் சஞ்சரிக்கின்றது.

பூமியில் வாழ்ந்த காலங்களை வைத்தே அவ்வெண்ணத்தில் ஒரு சிறு அணுவும் தான் விட்ட சுவாச நிலை மாறிடாமலே சுற்றி வருகின்றது.

தன் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த உடல் கிடைக்கும் நாள் வரை
1.எந்த ஆசையில் இந்த உடலை விட்டு ஆவி பிரிந்ததோ அந்த ஆசை நிலை கொண்டே
2.பல நூறு வருடங்களும் தன் எண்ணத்திற்கு ஏற்ற பிறப்பிடம் கிடைக்கும் நாள் வரை இருந்து தான் பிறக்கிறது.

நாம் நம் தாய் தந்தையரை முதலில் வணங்குவதும் இந்நிலை வைத்துத்தான். முதல் ஜென்மத்தில் விட்ட குறையை வைத்து ஆவி உலகில் பல காலம் சஞ்சரித்து
1.நம் எண்ணத்தைச் செயல்படும் இடமாக வந்து சேருமிடம் தான்
2.நம் முதல் தெய்வமாக வணங்குவதின் உண்மை நிலையும் அதுவே.

யாரும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருமே அந்த ஆண்டவனின் சக்தியில் அச்சூரியனின் சக்தியில் வந்து உதித்த தனித் தனி பிம்பங்கள் தான்.

1.நாம் பல பிறவிகள் எடுத்து
2.ஒவ்வொரு பிறவியிலும் பல வகைச் சொந்தங்களை அடைந்து
3.”சொந்த பந்தங்களுடன் வாழ்கிறோம்…” என்பதல்ல சொந்தமும் பந்தமும்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!”

சொந்தம் பந்தம் எல்லாம் கூடும் நாள் ஒரே நாள்… அவ் ஈஸ்வர சக்தியில் இருந்து இம்மனித வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு.. நிறைவுடன் வாழ்ந்து விட்டு.. அந்தச் சூட்சம உலகிற்குச் சென்றிடல் வேண்டும்.

அங்கே சென்று அந்நிலையில் சகல நிலையையும் பெறும் பாக்கியம் பெற்று… அந்த சப்தரிஷிகளின் சக்தியுடன் சக்தியாகக் கலந்து
1.இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் ஞானிகள் இந்நிலை உள்ளவர்களுடன் நாமும் கலந்து
2.அவர்களுடன் வாழும் நாட்கள் தான் நாம் சொந்த பந்தங்களுடன் வாழும் வாழ் நாட்கள்.