“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

“புலனறிவால்…” மெய்ப் பொருள் காணும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி

 

ஒரு பயிற்சி:-
ஆறாவது அறிவின் உணர்வு கொண்டு வளர்த்துக் கொண்ட “முருகனின் காட்சியைக் காண வேண்டும்…” என்று வானை நோக்கி உற்றுப் பார்த்து உங்கள் நினைவினைச் செலுத்துங்கள். சிறிது நேரம் மேல் நோக்கிப் பாருங்கள்

அந்த அலைகள் குவிந்து உங்களுக்கு முருகனாகக் காட்சி தெரியும்..

பூமியில் வாழ்ந்த மனிதர்களுக்குள்
1.எந்தெந்த முருகன் உணர்வுகளைக் கவர்ந்து அலைகளாகப் பரவப்பட்டதோ
2.அதை மீண்டும் நாம் குவிக்கப்படும் பொழுது இந்த உருவத்தை நாம் காண முடியும்.

அதாவது… டிவிக்களில் எப்படிப் படக்காட்சிகளைக் காணுகின்றோமோ… அதே போல்… மன வலிமை கொண்டு எண்ணும் பொழுது அலைகள் குவிந்து முருகனாகக் காட்டும்.

எதற்காக இதைச் சொல்கிறோம்…?

அன்று வாழ்ந்த அகஸ்தியரும் வியாசகரும் வானுலக ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து உடலில் அதைப் பெருக்கப்பட்டு அந்த உண்மையின் உணர்வுகள் அருள் ஞான ஒளியாகப் படர்ந்திருப்பதை
1அதை எண்ணி நுகரப்படும் பொழுது வியாசகர் கண்டதை நாம் காண முடியும்.
2.விஷத் தன்மையால் நம் பூமி சுழல்வதும்
3.துருவப் பகுதி வழி விண்ணுலக ஆற்றலைக் கவர்வதும் அதனால் தனக்குள் மாற்றம் அடைவதையும்
4.தாவர இனங்களாக உருப்பெற்றதையும் அதை எடுத்து உயிரினங்கள் எப்படி உருப்பெறுகிறது…? என்பதையும் நீங்கள் காண முடியும்.
5.மேரு என்ற மலையை மத்தாக வைக்கப்பட்டு என்று சொல்லும் பொழுது
6.மேலே சொன்ன பூமியின் இயக்கத்தைக் காட்சியாகத் தியானம் செய்யும் பொழுது பார்த்திருக்கலாம்.

இவையெல்லாம் அன்று வியாசகரால் கண்டுணரப்பட்ட உணர்வுகள்.

காரணம்… அகஸ்தியன் கண்டறிந்த உணர்வுகளை வியாசகர் கவர்ந்து பூமியின் செயலாக்கங்களை உணர்ந்ததை
1.அக்கால மொழி கொண்டு அதனை வெளிப்படுத்திய உணர்வுகள்
2.அவனில் விளைந்த உணர்வுகள் இங்கே பரவி உள்ளது.

ஆகவே நாம் காண வேண்டியது எது…?

அகஸ்தியன் துருவ மகரிஷியாகி உணர்வினை ஒளிச் சரீரமாக மாற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து ஒளி அலைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குவோம்.

துருவ மகரிஷியாகும் பொழுது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒருவருக்கொருவர் உணர்வுகளைப் பாய்ச்சி இருவரும் அதைப் பரிமாறிக் கொண்ட நிலையை அவர்கள் உடலில் விளைந்த அலைகள் இங்கே பாய்ந்து கொண்டிருப்பதை நாம் காண்போம்.

மீண்டும் வானை நோக்கி உற்றுப் பாருங்கள்..!

அகஸ்தியன் துருவ மகரிஷியாக உருப்பெறும் காலத்தில்
1.கணவனும் மனைவியும் துருவத்தின் ஆற்றலைப் பெற வேண்டும் என்று
2.ஒருவருக்கொருவர் என்று ஏங்கிய உணர்வுகள் அது பரவி வரும் பொழுது
3.அந்தக் காலத்தில் வாழ்ந்த “அவர்கள் இருவரின் உடல் அமைப்பு…” அலைகளாகப் படர்ந்திருப்பதை நீங்கள் காணலாம்.

துருவப் பகுதி வழியாகக் கவர்ந்த உணர்வுகள் ஒன்றாக இருவருக்குள்ளும் இணைந்து இந்த உணர்வின் தன்மை ஒளிச் சரீரமாகி எந்த எல்லையில் நிலை கொண்டார்களோ
1.அங்கே சென்று துருவ நட்சத்திரமாக உருப்பெற்ற உணர்வை நீங்கள் காணலாம்.
2.அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு உணர்வும் ஒன்றாகி ஒளி சரீரமாக இணைந்து துருவப் பகுதிக்குச் சென்றதை நீங்கள் காணலாம்
3.துருவ நட்சத்திரமாக ஒளியாக இருப்பதையும் காணலாம்.

இப்பொழுது இதைக் கண்டவர்களும் சரி… மற்றவர்களுக்குள் பதிவானதும் சரி… அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் பெற வேண்டும் என்ற நினைவுடன் இரவிலே நீங்கள் படுத்து உறங்கினால்
1.அந்த உணர்வுகள் கிளர்ந்து உயிருடன் ஒன்றி உங்களுக்குள் பெருகி
2.அதனின் ஆற்றலை உங்கள் புலனறிவிலே காண முடியும்.

ரேடியோ டிவிக்களில் எப்படி ஒளி ஒலி என்ற நிலையில் அலைகளாக அனுப்பப்படும் பொழுது விஞ்ஞான அறிவு கொண்டு அதைக் கவர்ந்து வீட்டிலேயே அதைக் காணும்படிச் செய்கின்றார்கள்.

அதைப் போலத் தான் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த உடலிலிருந்து வெளி வந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கலந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.
1.நமது குருநாதர் இந்த உண்மையின் உணர்வினை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவினை எடுக்கும்படிச் சொல்லி
2.அதனின் அருள் ஞான வித்தாக இதைக் கேட்போர் உணர்வுகளில் ஊழ் வினையாகப் பதிவு செய்து
3.வினைக்கு நாயகனாக வளர்ந்ததை மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது
4.காற்றில் படர்ந்திருப்பதை அதன் வளர்ச்சியாகக் கவர்ந்து அந்த உணர்வினை கண் புலனறிவிலே காண முடியும்.

இருந்தாலும்… சில உண்மைகள் படக்காட்சிகளாக உங்களுக்குத் தெரிய ஆரம்பித்தால்
1.திடீரென்று இந்த உணர்வின் வேகம் கூட்டப்படும் பொழுது
2.அந்த உருவங்கள் தெரிந்தால் அதைக் கண்டு அஞ்சி ஓடுபவர்களும் பலர் உண்டு… பயந்து விடுவார்கள்.

ஆகையினால்… அந்த உணர்வின் தன்மை “அப்படிக் காட்சியாகக் கிடைக்கக் கூடாது…” என்பதற்கும் ஒளியின் சிகரமாக விண்ணிலே சென்று அருள் ஞானத்தின் உணர்வை “ஒளியின் உணர்வாக…” உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைச் செயல்படுத்துவது.

சாமி நமக்கு ஒன்றும் காட்சியாகக் கொடுக்கவில்லையே என்று நீங்கள் எண்ணவே வேண்டியதில்லை. “நாம் காண வேண்டியது அந்த ஒளியான உணர்வுகள் தான்…”

அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றும் திறன் பெறுவது தான் நம்முடைய கடைசிக் கடமை. இதை எல்லாம் நீங்கள் அனைவரும் பெறுவதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். நிச்சயம் நீங்கள் பெறுவீர்கள்.

முந்தி எல்லோருக்கும் காட்சிகளைக் கொடுத்துக் கொண்டு வந்தேன் சில உண்மைகளை அறியும்படியும் செய்தேன் புவியின் ஈர்ப்புக்குள்.
1.ஆனால் அதனுடைய பலன் மனிதனின் இச்சைகள் வளர்க்கப்பட்டது.
2.விண் செல்ல அந்த உணர்வுகள் விடவில்லை.

அவ்வாறு ஆகாதபடி உங்களுக்குள் மெய் ஒளியைப் பெறும் ஆற்றலாகத் தான் அதை இப்பொழுது ஏற்படுத்துகின்றோம்.

விஞ்ஞான அறிவால் இந்தக் காற்று மண்டலம் கடும் விஷத்தன்மை கொண்டதாக வளரப்படும்போது… அதை மனிதன் நுகர்ந்து சிந்தனையற்றவனாக ஆக்கும் நிலைகள் வந்து கொண்டிருக்கும் நிலையில்… அதிலிருந்து நம்மை மீட்டி நம் சிந்தனையை விண்ணிலே செலுத்த வேண்டும்.

அப்போது நம் அருகிலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் வரும் போது மனிதன் தீமைகளிலிருந்து விடுபட
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் தன்னைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் விண்ணின் ஆற்றலைப் பெருக்கவும்
2.இந்த உடலை விட்டு அகன்ற பின் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய இது உதவும்.

அதற்குத்தான் இந்தப் பயிற்சியைக் கொடுத்தது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் பதிவாக்க வேண்டியது மிகவும் அவசியம்

 

குருநாதர் யாம் தீமைகளிலிருந்து தப்புவதற்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை எமக்குள் பெறச் செய்ததைப் போன்று உங்களுக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை யாம் பதிவு செய்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் அருளாற்றலின் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொண்டால்
1.உங்களிடத்தில் அறியாது சேர்ந்த தீய வினைகள் நீங்கும்.
2.புதிதாகத் தீய வினைகள் உங்களிடத்தில் வராது தடுத்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளலாம்.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றி விட்டபின் அதற்கு நாள்தோறும் நீர் ஊற்றி வந்தால்தான் வளரும். நான் வித்தை ஊன்றி விட்டேன் என்று சும்மா இருந்தால் வளருமா…?

அருளுணர்வுகளை யாம் உங்களிடத்தில் பதித்து விட்டோம் என்றால் அதன் உணர்வுகளை நாளும் நீங்கள் வளர்த்து வர வேண்டும்.

எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப மனித ரூபத்தைக் கொடுத்தது நமது உயிர்.

அகஸ்தியர் தம்முள் பல விஷத்தன்மைகளை அடக்கி மனித உடலின் உணர்வின் தன்மைகளை மாற்றி ஒளியின் உடலாகத் தாம் பெற்றார்.
1.அவரிடமிருந்து வெளிப்படும் அருளுணர்வினை நமது உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் பெறக்கூடிய தகுதி பெற்றால்
2.அகஸ்தியரைப் போன்று நாமும் நமது உடலில் உள்ள அணுக்களைச் சிறுகச் சிறுக ஒளியாக மாற்றியமைக்க முடியும்.

நம்மிடம் உள்ள முந்தைய தீய வினைகளைத் தணித்துப் புதுத் தீய வினைகள் நமக்குள் சேராமல் தடுத்து நம்முள் நல் உணர்வினை வலுவாக்க முடியும்.

பிறிதொரு உணர்வை நாம் நுகர்ந்து கொண்டபின் நமது உணர்வுகள் என்ன செய்கின்றது…? ஒரு உணர்வை நமது உடலில் வளர்த்துக் கொண்டபின் நம்மை நமது நண்பர்கள் பார்க்கும் பொழுது வெறுப்போ அல்லது பாசமோ எப்படி நமக்குள் வருகின்றது…?

இதெல்லாம் நமது உடலில் உள்ள “உணர்வுக்கொப்பத்தான் வரும்” என்பதனை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவரீதியாக உணர வேண்டும். தெரிந்து தெளிந்து வாழ்ந்திடும் வாழ்க்கையாக உங்கள் வாழ்க்கையை அமைத்திடல் வேண்டும்.

எல்லோரும் எல்லோரிடத்திலும் பழகியிருக்கின்றோம்.
1.நமக்குக் கோபம் எப்படி வருகின்றது…? வெறுப்பு எப்படி வருகின்றது…?
2.நம்மை வெறுப்படையச் செய்வது எது…?
3.வெறுப்பான பின் குடும்பத்தில் என்னென்ன வேதனையாகின்றது…?
4.அந்த வெறுப்பை நீக்குவது எப்படி? என்பது போன்றவைகளை நாம் அனுபவப்பூர்வமாகக் கொண்டு வர வேண்டும்.

இத்தனையும் யாம் கஷ்டப்பட்டுத்தான் தெரிந்து கொண்டோம்.
1.கஷ்டத்திலிருந்து உங்களைக் காப்பதற்குத்தான் உயர்ந்த சக்திகளை உங்களிடம் சொல்லிப் பதிய வைக்கின்றோம்.
2.தீமைகளை நீக்கும் சக்தியை நீங்கள் பெறுவதற்காகத் தான் யாம் உபாயங்களைக் கூறுகின்றோம்.
3.யாம் அப்படிச் செய்து விடுவோம்… இப்படிச் செய்து விடுவோம்…! என்று சொல்லவில்லை.

உதாரணமாக… பயந்த சுபாவம் உள்ள ஒருவர் சந்தர்ப்பவசத்தால் கண்கூடாக ஒரு விபத்தைக் காண நேரிடுகிறதென்றால் விபத்தைப் பார்த்ததின் உணர்வு அவரிடத்தில் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

அடுத்த முறை அவர் ஏதேனும் ஒரு விபத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் அஞ்சி ஓடமாட்டார். அது எங்கே…? என்று தேடிப் பிடித்துப் போய்ப் பார்ப்பார்.
1.ஆக பயத்தின் உணர்வை ஒரு முறை நம்மில் பதிவு செய்தாலும்
2.அடுத்த முறை அங்கே செல்லாமல் இருக்கின்றோமோ என்றால் இல்லை.
3.ஏனெனில் ஏற்கனவே விளைந்த ஜீவ அணுவிற்கு உணவு தேவை.
4.நாம் சும்மா இருந்தாலும் அது நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

நாம் எத்தகைய நிலைகளை வேடிக்கையாகப் பார்த்தாலும் சரி… பரிவுடன் பார்த்தாலும் சரி… அது நமக்குள் ஜீவ அணுவாக விளைந்து விடுகின்றது.

உதாரணமாக… குழந்தைகளாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றைக் கண்டால் அடுத்த சில மணி நேரத்திற்குள் அந்த விஷயம் அதனின் நினைவில் இருக்காது. இருந்தாலும்…
1.பின்னாடி அதனின் நினைவு வரும் பொழுது அந்தக் குழந்தைக்கு மனதில் பயம் உருவாகும்.
2.திரும்பவும் அந்த இடத்திற்குச் செல்லாது.

ஆனால் பெரியவர்களாக இருப்பவர்களுக்குப் பயம் இருந்தாலும் மன வலிமை கொண்டு “என்ன…? ஏது…!” என்று எட்டிப் பார்க்கச் சொல்லும்.

குழந்தைப் பருவத்தில் அணுவின் செல்கள் எளிமையாக இருப்பதனால் அது தனக்குள் கண்டபின் உடனே மறைந்து விடுகின்றது. எண்ண நிலைகளை மற்ற நிலைகளுக்கு அழைத்துச் செல்கின்றது.

அதே சமயத்தில் குழந்தைகளிடத்தில் ஒரு உயர்ந்த கருத்தைச் சொன்னால் அது அதனிடத்தில் ஆழப் பதிந்து விடுகின்றது. மீண்டும் அதே கருத்தினைச் சொல்லும் நிலை வருகின்றது.

வேதனை போன்ற மற்ற உணர்வுகளைப் பெரியவர்களான நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது
1.பிறர் சொல்லும் நல்ல உயர்ந்த குணங்கள் நம்மிடத்தில் பதிவதில்லை.
2.வேதனையான குணத்தின் உணர்வே நமக்குள் நினைவில் வரும்.

குழந்தைகளிடத்தில் உயர்ந்த கருத்தினைச் சொன்னால் அது அவர்களிடத்தில் எளிதில் பதிவாகும். அதே சமயத்தில் தீமையான உணர்வுகள் அவர்களிடத்தில் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வே அதிகமாக வரும்.
1.அதுவே முன்னனியில் நிற்கும்
2.குழந்தைகள் நல்லதையும் பதிவு செய்து கொள்ளும்… தீயதையும் பதிவு செய்து கொள்ளும்.
3.வளரும் பருவம் கொண்ட சரீரங்களில் இந்த நிலை.

மனித உணர்வுகளின் தன்மையை அறிந்து மகரிஷிகள் காண்பித்த அருள் வழியை நாம் பதிவு செய்து கொண்டு அடுத்தடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டுமென்று இந்த உணர்வைக் கட்டாயப்படுத்திச் செலுத்துவோம் என்றால் அந்தச் சக்தி நமக்குள் வரும்.

நமக்கு நோய் என்று ஒன்று வந்து விட்டால் அதற்கு “மிகவும் கசப்பான மருந்தைக் கட்டாயப்படுத்தி உள்ளே செலுத்தும் பொழுதுதான்…” அந்த நோயே நம்மை விட்டு அகன்று ஓடுகின்றது.

1.ஞானிகளின் உயர்ந்த கருத்துக்களையும் தத்துவங்களையும் கேட்க நேரும் பொழுது
2.நமது கவலைகள் வேதனைகள் இவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஆர்வமுடன் கேட்க வேண்டும்.
3.அப்பொழுதுதான் அதனின் ஞானம் நம்மிடத்தில் பதியும்.

ஏனென்றால்… வேதனைகளை மனதில் நிறைத்துக் கொண்டு உள்ளவர்களிடத்தில் நல்ல உணர்வுகள் எதுவும் பதியாது.

இந்த உடல் என்றும் நம்முடன் வரப் போவதில்லை. ஆனால் இந்த உடலில் இருந்து விளைய வைத்த உணர்வின் சத்துதான் நம்முடன் என்றும் நிலைத்திருக்கும்.

ஆகவே நமது வாழ்க்கையில்
1.நாம் அனைவரும் துருவ தியானம் மற்றும் கூட்டுத் தியானங்களை வலுப்படுத்தி
2.அதன் மூலம் ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்யும் ஆற்றலைப் பெருக்கி
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளியான சக்திகளை நமது உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் சத்தாகச் சேர்ப்போம்.

நாம் அனைவரும் வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறுவோம், செல்வம் செல்வாக்கு பெற்று தொழில் வளம் பெற்று உடல் நலம் பெற்று மன பலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் இணைந்து மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி… “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”

“ஓம் ஈஸ்வரா…” என்ற நெருப்பைக் கூட்டி… “மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு”

 

வேதனயான உணர்வை நாம் நுகர்ந்தால் அது நமது இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது. நம்மை மனிதனாக உருவாக்கிய உடலின் அணுக்களில் விஷத்தின் தன்மை கலந்தபின் உடலின் அணுவின் தன்மை மாறுகின்றது.
1.அணுக்கள் விஷத்தின் தன்மையாக மாறும் பொழுது உடலில் வலி வருகின்றது.
2.வலி வந்தால் உடல் நலிகின்றது… எண்ணம் குறைகின்றது.

நம் ஊர்களில் திரும்பும் பக்கமெல்லாம் மாரியம்மன் கோவில் இருக்கும். ஏன்…?

மனித வாழ்க்கையில் அடிக்கடி சலிப்பு வருகிறது சங்கடம் வருகிறது. ஒருவர் தவறு செய்கின்றார் என்றால்
1.அந்தத் தவறான நிலைகளை உற்றுப் பார்க்கும் பொழுது
2.அந்த உணர்வு தனக்குள் மாறித் (மாரி) தன்னை அறியாமல் ஆட்டிப் படைக்கின்றது.

நிவர்த்திப்பதற்கு என்ன செய்ய வேண்டும்…?

மாரியம்மன் கோவிலில் நெருப்புச்சட்டி வைத்திருப்பார்கள். நெருப்பு என்ன செய்யும்…? சுட்டுப் பொசுக்கும்.

அதாவது நாம் நுகர்ந்த தீமைகள் அனைத்தையும் அதில் போட்டுச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று காட்டுகிறார்கள்.
1.நாம் எடுத்துக் கொண்டது விஷம்… நமக்குள் வந்தால் பதறச் செய்கிறது.
2.மாரியம்மனின் கோவிலில் அக்கினிச் சட்டியைக் கண்டு தீயதைச் சுட்டுப் பொசுக்க வேண்டும்.

அந்த மாரியைத் தடுப்பதற்கு என்ன செய்கிறோம்…? நெருப்பு…!
1.யாராவது அதைக் காட்டியிருக்கிறார்களா…? யாராவது சொல்லி இருக்கிறார்களா…? இல்லை.
2.அந்த நெருப்பு யார்…? அந்த மகரிஷிகள்.
3.மனித வாழ்க்கையில் வந்த இடைஞ்சல்களை எல்லாம் நீக்கிப் பழகியவர்கள்.

‘’ஓம் ஈஸ்வரா…’ என்ற’ இந்த நெருப்பைக் கூட்டி ‘’மகரிஷிகளின் அருள் ஒளியைக் கூட்டு…’ மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று ஏங்க வேண்டும்.

அவ்வாறு ஏங்கிவிட்டு நமக்குத் தீங்கு செய்தவர்கள் நாளை அறியாமையிலிருந்து விடுபடவேண்டும். நல்லதைச் செய்யும் எண்ணம் அவர்களுக்குள் வரவேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் சுவாசிக்க வேண்டும்.

அதற்குத் தான் மாரியம்மன் கோவிலில் மத்தியில் அக்கினிச் சட்டி வைத்திருப்பார்கள். கோவில்களெல்லாம் தப்பல்ல…! நாம் வழிபடும் முறைதான் தப்பாக இருக்கும்.

ஆகவே நாம் தியானிக்க வேண்டும்… எதை…?

இந்தத் தெய்வம் நல்லது செய்திருக்கிறது.
1.இந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும்
2.நாங்கள் செய்வதனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும்,
3.எங்கள் பேச்செல்லாம் பிறருக்கு நல்லதாக இருக்கவேண்டும்.
4.இந்தத் தெய்வ குணத்தின் சக்தி எங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும்.
5.இதை உணர்த்திய மெய் ஞானிகளின் அருள் ஒளி வளர வேண்டும்.
6.அந்த அருள் ஒளியால் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று தியானித்துப் பாருங்கள்.

இது தான் உண்மையான அர்ச்சனை…! இதைத்தான் ஆதிசங்கரர் சொன்னார்.
1.“அத்வைதம்…!” சூட்சுமமாக இருப்பதை உனக்குள் எடுத்து உன் சுவாசமாக்கு.
2.அந்த உயர்ந்த சக்தியை உனக்குள் கூட்டு என்று அன்றைக்கு ஆதிங்கரர் சொன்னார்.

அவர் காட்டிய அருள் வழியில் காற்றில் மறைந்துள்ள அருள் ஞானிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அனைவரும் மகிழ்ந்து வாழ்வோம். பிறவியில்லா நிலையெனும் அழியா ஒளிச்சரீரம் நாம் அனைவரும் பெறுவோம்.

ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை

ஓம் ஓம் ஓம் ஓம் – சிவ சக்தி என்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக இயக்கக்கூடிய நிலை

 

ஒவ்வொருவரும் சிவ சக்தியாகத் தான் இயங்குகின்றார்கள்.
1.உடல் சிவமாகின்றது
2.உடலுக்குள் இயங்குவது சக்தியாக இருக்கின்றது… இப்படித் தான் சிவ சக்தி.

உருவம் சிவம் தனக்குள் இயங்குவது சக்தி. இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிச் சக்தியாக இயக்க முடியும். உணர்வின் தன்மை எந்தச் சக்தியாக இயக்குகின்றோமோ மறு உருவைக் கொடுக்கும்.

1.உருவமல்லாது சக்தியை நாம் சேர்ப்போம் என்றால் உயிருடன் ஒன்றி என்றும் சிவ சக்தியாக ஒளியின் சரீரமாகும்.
2.அது தான் எண்ணத்தால் வருவது… எண்ணத்தால் உருமாற்றிய நிலைகள் இராமலிங்கம்… உயிருடன் ஒன்றிய நிலைகள்…!

சீவலிங்கம்… உறைந்த உடல் கொண்டு தான் நாம் இப்பொழுது இயக்குகின்றோம். எண்ணத்தால் இருளைப் போக்கி ஒளியாக உயிருடன் ஒன்றினால் இராமலிங்கம்.

எங்கே சென்றாலும் சக்தி இல்லையேல் சிவமில்லை சிவம் இல்லையேல் சக்தி இல்லை. பெருக்கும் சக்தியின் நிலைகள் கொண்டுதான்… அந்தச் சக்தியின் துணை கொண்டு தான் எண்ணத்தால் சீவலிங்கமாக இந்த உடல் ஆகிறது.

எண்ணத்தால் இராமலிங்கமாக உருவாக்க வேண்டும். ஒளியின் சரீரம்…! இது தான் சிவசக்தி என்பது. கணவன் மனைவி அல்ல.

நாம் கவர்ந்து கொண்ட சக்தி வசிஷ்டர். கவர்ந்தது எதுவோ அதனுடன் இணைந்தே வேலை செய்யும். எண்ணிய எண்ணங்கள் எதிர்நிலை ஆகிவிட்டால் என்ன செய்யும்…? அதனால் தான் சிவ சக்தி என்பது. சக்தி தான் சிவம் ஆகிறது. சிவம் தான் சக்தியாகிறது.
1.சக்தியான நிலைகள் மறைமுகமானது.
2.உறைந்துவிட்டால் சிவம் ஆகின்றது… சிவசக்தி என்று பொருள்

ஒன்றுக்குள் ஒன்று ஜீவன் பெற்று ஒன்றின் அணைப்பில தான் இயங்குகின்றது. முதலில் ஓ… என்று பிரணவம் ஆகின்றது… மற்றொன்று அதற்குள் இருந்து ஒவ்வொரு உணர்வும் தன் தன் நிலைகளை இயக்கும்.

ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம்… ஓமுக்குள் ஓம். இதைப் போன்று பல கோடி உணர்வின் தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஓ …என்று பிரணவமாகி ம்… என்ற உடல் ஆகிறது.

உயிரணுவின் தன்மை உடலுக்குள் வரப்படும் பொழுது எத்தனையோ கோடி உணர்வு கொண்டுதான் எண்ணத்தின் தன்மை வருகின்றது.

உயிர் ஓ என்று இயக்கினாலும் நாம் எண்ணிய உணர்வுகள் ஓமுக்குள் ஓம்… அந்த உணர்வின் இயக்கமாகத்தான் இயக்கும். எதிலேயும் ஓ என்ற பிரணவம் இயக்கம் இல்லை என்றால் உடல் உருவாகாது.

1.ஜீவன் ஆனால் தான் மலம் உடலாகின்றது. உறைந்திடும் நிலைகள் உடல்.
2.அதாவது திரேதா யுகம்… உடலுக்குள் உயிரணுவின் தோற்றமான பின்
3.எண்ணத்தின் உணர்வு கொண்டு ஓ… என்று இயக்குகின்றது. உணர்வின் தன்மை ம்… என்று மலமாகிறது.

அதே போல செடிகளில் ஒன்று இணைந்த பின் ஓ என்று குவித்த நிலையில் இயக்குகின்றது ம்… என்று உணர்வின் சத்து உறைகின்றது… சிவமாகிறது.

சக்தியாக இருப்பது செடியாக்கப்படும் பொழுது துவைதம். அதனின் மணம் வெளி வரப்படும் போது சக்தி ஆகின்றது. அதற்குள்ளும் எந்தெந்த உணர்வுகள் உள்ளதோ அதனின் ஜீவன் இயக்கவில்லை என்றால் வளர்ச்சி ஆகாது.

ஒரு கசப்பின் தன்மை வரவேண்டும் என்றால் பல உணர்வுகள் சேர்த்துத் தான் அது உருவாகின்றது. அந்தப் பல உணர்வுகள் ஒன்றுக்குள் ஒன்றாகி ஒன்றின் உணர்வு கொண்டு இணைந்து அது ஓ என்று ஜீவனாகி ம் என்று உடலாகிறது.

இதைத்தான் ஓமுக்குள் ஓம் ஓமுக்குள் ஓம். ஒன்றுடன் இணைந்து இயக்கவில்லை என்றால் அது இல்லை என்றே பொருள்.
1.ஆக மொத்தம் எதிலுமே ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு அது இயக்கச்சக்தியாக மாறினால் தான் “ஓம் ஓம் ஓம் ஓம்…”
2.நாம் எதை எண்ணி “ஓம்…” என்று இப்பொழுது தனக்குள் சேர்க்க வேண்டும்…?
3.மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்து அதை ஜீவன் பெறச் செய்து ஒளியாக மாற்ற வேண்டும்.

அதைத் தான் இந்த உபதேச வாயிலாக உணர்த்துகின்றோம்.

கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!

கண் பார்வை… உணர்ச்சி… ரூபம்… இயக்கம்…!

 

குருநாதர் ஒரு சமயம் ஒரு வேடிக்கையைக் காட்டுடா…! என்று சொன்னார். ஒரு வாழை மட்டை குப்பைத் தொட்டி அருகே நல்ல பாம்பு படம் எடுத்தது போன்று இருந்தது.

ஐயோ… நல்ல பாம்பு…! என்று நீ சொல் என்றார். சொன்னேன்…! எல்லோரும் பார்த்து ஆமாம் என்கிறார்கள். இது நடந்த நிகழ்ச்சி.

1.மனிதனின் உணர்வுக்குள் எதை ஏற்றுகின்றோமோ அந்த உணர்ச்சியின் இயக்கங்கள் எப்படி ரூபமாகக் காட்டுகிறது…?
2.வாழை மட்டை தான்…! நாகப்பாம்பு போன்று தெரிகின்றது.

இதை ஏற்றுக் கொண்ட பின் மனிதனுக்குள் இந்த உணர்வு எப்படி இயக்குகின்றது…? பாம்பின் ரூபமாக எப்படிக் காட்டுகிறது…? என்று காட்டுகின்றார்.

ஐயோ பாம்பு…! என்று சொன்னேன் எல்லோரும் ஆமாம் என்கிறார்கள். அது அந்தி நேரம். வாழை மட்டையிலே லேசாக மினு மினு என்று மின்னிய பின் அந்த நேரத்திலே அப்படித் தெரிகின்றது. சுருக்கம் சுருக்கமாக இருப்பதால் நிஜமாகவே அது நாகப் பாம்பு போலவே தெரிகின்றது.

எல்லாம் விழுந்து அடித்து ஓடுகின்றார்கள். பாம்பை அடிக்க வேண்டும் கட்டையை எடு… கம்பை எடு…! என்கிறார்கள். ஒருவன் பெரிய கம்பால் அதை அடிக்கின்றான். கம்பிலே அடித்தவுடன் சுற்றி எங்கேயோ சென்று விட்டது… தெரியவில்லை.

காலுக்குள் சென்றது… இல்லை அங்கே போய்விட்டது என்று அலறிக் கொண்டுள்ளார்கள். ஆனால் அடித்தவுடன் சுற்றி மேலே சென்று தூரத்தில் விழுந்து விட்டது.

ஆனால் அந்தப் பக்கம் போனால் அது வாழை மட்டையாகத் தான் இருக்கின்றது. அவன் அதை அடிக்கவில்லை. எங்கேயோ போய்விட்டது… இல்லை இந்தப் பக்கம் போய்விட்டது…! என்று தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த உணர்வுகள்… “நாம் சமைத்த உணர்வுகள் கண்ணிலே எதைக் காட்டுகின்றது…?” என்று இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை. ஒரு பொருளை உங்களுக்கு முன்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
1.கண்ணிலே சிறிது நேரம் அப்படியே உற்றுப் பாருங்கள்.
2.பார்த்துவிட்டுத் திரும்பி வேறு பக்கம் பாருங்கள்.
3.அந்தப் பொருள் சுவரிலே தெரியவரும்.

புள்ளிப் புள்ளியாக ஓட்டையிட்டு ஒரு பொருளை வைத்துக் கொள்ளுங்கள்… அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…! சிறிது நேரம் அதை உற்றுப் பாருங்கள்

பார்த்துவிட்டு அந்தப் பக்கம் பாருங்கள் அதே ஓட்டை அந்தப் பொருள் எல்லாம் தெரிய வரும்.
1.அதே பொருளைப் பார்த்து விட்டு நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
2.சுவரிலே பார்த்தால் அப்படியே தெரியும்.

இந்த உணர்வுகள் நம் கண்ணிலே அதனுடைய பிரதி பிம்பமாக அப்படித் தெரிய வருகிறது.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வார்கள்.
1.அந்த உணர்வின் தன்மை தனக்குள் வரும் போது
2.குவித்து… உணர்வின் இயக்கமாக நம்மை இயக்குகின்றது.

பல கோடிச் சரீரங்கள் கடந்து மனிதனான பின்
1.உணர்வின் நோக்கங்கள் கவர்ந்து கொண்டது எதுவோ…
2.அந்த உணர்ச்சிகளைத் தனக்குள் நுகரச் செய்து
3.இந்த உணர்வுக்கொப்பவே “ரூபத்தைக் காட்டுகின்றது…”

இதையெல்லாம் அனுபவித்துச் சொல்லுகின்றேன். குருநாதர் கொடுத்த சக்தியை எப்படிப் பயன்படுத்த வேண்டும்…? என்பதற்குத் தான் இதைத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

உடலில் நோய் இருந்தாலும் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

உடலில் நோய் இருந்தாலும் மகரிஷிகள் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு… ஒருவருக்குக் கண் இல்லையென்றால் மாற்றுக் கண்ணைப் பொருத்திக் கண் பார்வை கொடுக்கின்றனர்.

செவித் தன்மைக்கு இப்படி ஒரு மாற்று ஏற்பாடு இல்லை என்றாலும் அவர்களுக்கு உணர்வின் உணர்ச்சிகளை (சைகை மூலம்) தெரியும்படிக் கொண்டு வருகின்றார்கள்.

இருதயம் பழுதாகி விட்டால் பழுதான இருதயத்தை அகற்றிவிட்டுச் செயற்கை இருதயம் பொருத்துகின்றனர்.

நோயாளியின் உடலிலும் மற்றவர் உடலிலும் உள்ள சில செல்களைக் கழித்துப் பழுதான உறுப்பு போன்றே “மோல்டு…” செய்யப்பட்டு அந்த உணர்விற்குள் சேர்க்கப்பட்டு அதே போன்ற புது உறுப்புகளை உருவாக்குகின்றனர்.

இந்த உடலுக்கும் மற்ற உடலுக்கும் என்ன இருக்கிறதென்று ஆய்ந்து உணர்வின் செல்களை உருவாக்கி உறுப்புகளை எடுத்து இணைக்கின்றனர்.

இப்படி இணைத்தபின் இரத்தத்தில் வருவதைச் சமப்படுத்த வேண்டும். எதிர் நிலையானால் கழன்று கொள்ளுகின்றது. மாற்று இருதயம் பொருத்தினாலும் அல்லது மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினாலும் இதே தான்…! இரத்தம் சீராக இருக்க வேண்டும்.

1.இரத்தத்தை வடிகட்டிச் சுத்தப்படுத்துவதற்காகச் சில மருந்துகளை டாக்டர்கள் கொடுப்பார்கள்.
2.கொடுக்கப்பட்ட மருந்துகளைச் சாப்பிட்டால் தான் இரத்தத்திற்கும் பொருத்தப்பட்ட உறுப்பிற்கும் பொருந்தி வரும்.
3.ஒரு நாளைக்கு மருந்து சாப்பிடவில்லை என்றால் பொருத்தப்பட்ட உறுப்பின் இயக்கம் தோற்றுவிடும்.

ஆகையால் இரண்டையும் சமப்படுத்திச் சீராக இருந்தாலும் ஒருவர் காய்ச்சலுடன் வருகின்றார். அவருடைய காய்ச்சலின் வீரியம் கண்டு அதன் உணர்வை நுகர்ந்து விட்டால் உடலில் கிருமிகளாகின்றது.

அன்றைக்கு இவர்களுக்கு ஆபத்து…! ஆபத்து என்று வந்துவிட்டால் அதற்கென்று மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

அது சமயம் சாதாரண டாக்டரிடம் சென்றால் பொருத்தப்பட்ட உறுப்பு கழன்றுவிடும். இப்படியெல்லாம் விஞ்ஞானிகள் அதற்கென்று பருவத்தைச் பார்த்து செயல்படுத்துகின்றனர்.

ஆனால் இப்படி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தும் நாம் எத்தனை நாள் வாழுகின்றோம்…? சிறிது நாள் தான் வாழுகின்றோம்.

1.நமக்கு இப்படி ஆகிவிட்டதே…!
2.மருந்தையும் சுவையில்லா உணவையும் தான் சாப்பிட்டு வாழ்கின்றோம்…” என்ற வேதனை அதிகமாகின்றது.
3.மக்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கின்றார்கள்… நம் காலம் இப்படியாகி விட்டதே…!” என்று
4.நாம் நல்லவர்களாக இருந்தாலும் வேதனையின் உணர்வைத்தான் அதிகமாக்க முடிகின்றதே தவிர… மாற முடிகின்றதா…?

ஆகவே நாம் நமது உடலில் இருக்கும் காலத்தில் எதைச் சேர்க்க வேண்டும்…?

1.உடல் நலக் குறைவாக இருந்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும்.
2.ஒளியின் சரீரம் பெற வேண்டும் என்று “நம் உணர்வுகளை மாற்றினால்…” நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இவையெல்லாம் குருநாதர் எமக்குக் காண்பித்த உண்மைகள்.

எதையும் தாங்கக்கூடிய சக்தியை குருநாதர் கொடுத்தார்

எதையும் தாங்கக்கூடிய சக்தியை குருநாதர் கொடுத்தார்

குருநாதர் எம்மைத் தேடி வந்து கொடுத்தார். ஏன் கொடுத்தார்…? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்… எல்லாவற்றையும் தாங்கும் சக்தி பெறச் செய்ய வேண்டும் என்று கொடுத்தார்.

1.ஆகவே எதையும் தாங்கக்கூடிய சக்தியும்…
2.நன்மை செய்வதற்கு ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய நேரத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் செயல்படுத்தச் சொன்னார்.

அதைத்தான் யாம் இப்பொழுது செய்கின்றோம்.

நமது உடல் நமக்குச் சொந்தமாகின்றதா…? நாம் தேடிய செல்வங்கள் தான் நமக்குச் சொந்தமாகின்றதா…? நாம் நல்ல அழகான துணிகளை உடுத்துகின்றோம். சுத்தமாக இருக்க வேண்டும் என்று முகப் பவுடர் அது இது என்று பூசுகின்றோம்.

ஆனால் உடலில் ஒரு நோயிருந்து அதனால் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் உங்களிடம் வந்து “பவுடர் பூசிக் கொள்ளுங்கள்…” என்று சொன்னால் “என்ன…? கிண்டலா செய்கின்றீர்கள்…! அலங்காரம் செய்து கொள்ளும் நிலையிலா நான் இருக்கிறேன்…?” என்று கேட்பீர்கள்.

நீங்கள் சந்தோஷமாக இருந்து பாருங்கள். உங்களுடைய முகத்தில் அழகு கூடும். அதே சமயத்தில் நல்ல ஆடம்பர உடையினை உடுத்தி பவுடர் பூசி அலங்காரப்படுத்தி இருந்த போதிலும் மனது சரியில்லை, வேதனை என்ற நிலையானால் முகம் சுருங்கிவிடும்.

ஆகையால் பார்ப்பவர்கள் என்ன கேட்பார்கள்…? “என்னங்க ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்…? ஏதேனும் கவலையா…?” என்று கேட்பார்கள்.

ஆகவே நம்மை எது செயல்படுத்துகிறது…?

அருள் உணர்வை நமக்குள் பெருக்கி இருளை அகற்றி மகிழ்ச்சியூட்டும் உணர்வினை நம் உடலுக்குள் செலுத்தி நமது அங்கங்களைப் பொலிவுறச் செய்ய வேண்டும்.

1.சாதாரணமாக இருக்கும் பொழுது எம்மைப் பாருங்கள். எமது முகத்தில் வித்தியாசமாக இருக்கும்.
2.அருளைப் பாய்ச்சும் பொழுது வித்தியாசமான தோற்றங்கள் வரும்.
3.இது போன்று நல் உணர்ச்சிகளால் முகம் விரிவடைவதும் மகிழ்ச்சியாவதும் போன்ற நிலைகள் பெறுகின்றது.

உதாரணத்திற்கு நீங்கள் அருள் ஞானத்தை எடுத்துப் பேசிப் பாருங்கள். அந்த நேரத்தில் உங்களிடத்தில் மகிழ்ச்சியின் உணர்வு இருக்கும்.

ஒருவர் உங்களைத் தேடி வந்து தம்முடைய கஷ்டத்தையெல்லாம் கூறுவார். நீங்கள் அது சமயம் ஞானத்தின் நிலை கொண்டு அவருக்கு அறிவுரை கூறுவீர்கள்.

ஆனால் இரண்டாவது தரம் தனது கஷ்டத்தைச் சொன்னால் “என்ன இது…? இவ்வளவு தூரம் கூறியும் தனது கஷ்டத்தைத் தானே கூறிக் கொண்டிருக்கின்றார்…” என்று அப்பொழுதே உங்களுடைய முகம் மாறும்.

ஏனென்றால் அவர் சொன்ன வேதனையின் உணர்வு வலுப் பெறுகின்றது. உங்களுடைய ஞானம் இங்கே அடிபடுகின்றது. உணர்வை மாற்ற முடியவில்லை.

ஆனால் இந்த நிலையை மாற்றி உங்களுக்குள் அருள் உணர்வைப் பெற வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும்,
2.அவருக்கு நல்ல காலம் வரவேண்டும் சிந்திக்கும் தன்மை அவர் பெற வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அது சமயம் உங்களுடைய உயிர் என்ன செய்யும்…? அருள் உணர்வை எடுத்து உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் பங்கிட்டுத் தெளிந்த ஞானத்தை ஊட்டும் நிலையும்… வழியறிந்து செயல்படும் பக்குவத்தையும்… உங்களுக்குள் பெறச் செய்கின்றது.

நமக்கு ஆகாதவர் யாராவது இருந்தால்… “இவனால் தான் எனக்குத் தலைவலி” என்பார்கள். அவர்கள் வந்தாலே… “ஆகா வந்துவிட்டான்… தலைவலியும் வந்துவிட்டது” என்று கூறுவார்கள்.

இன்று நல்ல மன நிலையில் இருந்தேன். “இவனைப் பார்த்தேன், எல்லாக் காரியமும் கெட்டு விட்டது…” என்று கூறுவார்கள். மனிதரின் வாழ்க்கையில் இது போன்ற நிலைகள் வருகின்றன.

தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் தியான வழியில் உள்ளவர்கள் “மகரிஷிகளை எண்ணி…” அவர் குணமடைய வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தலைவலி நீங்கும்.
1.அடுத்து முறை தலைவலி என்று சொல்ல வரும் பொழுது
2.உங்களை நினைத்து வந்தேன்… தலைவலி போய்விட்டது…! என்று கூறுவார்கள்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். ஏனென்றால் உணர்வின் எண்ணம் கொண்டு சுவாசித்தபின் நோய்களை நீக்கும் சக்தி வருகின்றது.

ஆனால் ஒருவர் வந்தாலே தனக்குத் தலைவலி வருவதாக எண்ணுபவரின் உடல் பதட்டமடைகின்றது. தலை சுற்றுகின்றது… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது,

ஒருவரைப் பார்த்தாலே தனக்குத் தலை சுற்றுகின்றது, தலை வலிக்கின்றது எனும் பொழுது “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் பெற வேண்டும் அவர் நன்மை செய்யும் நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

காரணம்… நுகர்ந்த உணர்வை உயிர் இயக்குகின்றது. உயிர் ஈசனாக இருக்கின்றது.
1.மனிதர் தாம் உயர்ந்த ஞானத்தின் தன்மை பெற்று…
2.பிறவி இல்லா நிலை பெறுவதற்குத் தான் இத்தனை உபாயங்களையும் கொடுப்பது.

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது

உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது

 

ஒரு ஆடு புலியைப் பார்க்கின்றது… புலியோ அதைக் கொன்று தின்னும் நிலை பெற்றது. அதனிடமிருந்து தப்பிக்கும் சிந்தனை ஆட்டிற்கு வருகிறது.

புலியின் உணர்வே நினைவாகின்றது. நினைவின் உணர்வே உடலாகின்றது… ஆட்டின் உடலில் அது வலுப்பெறுகின்றது. அந்தச் சிந்தனை கொண்டு அதனிடமிருந்து தப்பிக்க அதனின் வலுப்பெறுகின்றது… அதுவாகின்றது.

மனிதர்களான நாம் இந்த உடலிலிருக்கும் போது
1.எனக்கு இப்படிச் செய்தானே… துன்பம் கொடுத்தானே என்ற இந்த சிந்தனை இந்த உணர்வின் தன்மை வருகிறது.
2.இந்த இடத்தை நாம் வலுவாக்குகின்றோம்… அந்த உடலுக்குள் சென்று விடுகின்றோம்.

ஆனால் உடலிலே வந்த தீமைகளை அகற்ற “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று
1.அந்த உணர்வின் தன்மை… நம் சிந்தனையை அதற்குள் செலுத்தினோம் என்றால்
2.அதனின் உணர்வாகி அதனின் நிலைகள் கொண்டு மனித உடலில் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த உடலிலிருந்து தான் ஒளியாக மாற்றி அமைக்க முடியும். இன்னொரு உடலுக்குள் இழுக்கப்பட்டு விட்டால் மீண்டும் வேறு ஒரு உருவாக உயிர் நம்மை மாற்றிவிடும்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
1.அங்கே… உடல்கள் உருவங்கள் மாறுகின்றது.
2.இங்கே… ஒளியின் தன்மை பெறுகின்றோம்.

உயிர் ஒளியானது… மனிதனான பின் அறிவாக அறிந்து கொள்கிறோம். அறிந்திடும் ஒளியின் உணர்வாக விளைகின்றோம். மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலில் “சிந்தனை வந்த பின்பு தான்…” இதிலே உறைந்த உணர்வுகள் அதனின் இயக்கத்திற்கு வருகின்றது.

நான் கோபமாக இருக்கின்றேன் என்று வைத்துக் கொண்டால் எனக்கு அது சாதகமாக இருந்தால் நல்லது. நான் தவறு செய்கின்றேன்… நண்பன் என்னுடைய தவறுக்கு ஒத்துழைத்தால் இது நல்லதாகின்றது.

ஆனால் மாறாக… என் தவறைச் சுட்டிக் காட்டும் நிலை வந்தால் எனக்கு எதிரியாகின்றது. ஆக நல்லது நல்லதாக எண்ண முடியாது… கெட்டது கெட்டதாக எண்ண முடியாது.
1.தனக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்…
2.ஒத்து வரவில்லை என்றால் எதிரியாக்குகிறோம்.

மிளகாய் காரமானது தான். அதை அளவுடன் இணைத்தால் நல்லதாகிறது அதிகமாகப் போட்டுவிட்டால் ஏற்றுக் கொள்வதில்லை… குறைத்துப் போட்டு விட்டால் சப்… என்று ஆகிவிடுகிறது.

நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல.

1.ஒளியின் சரீரம் பெற்ற… என்றுமே நிலையாக இருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்தால் அதுவே நமக்கு நல்லது.
2.உயிர் ஒளியாக நின்று எதையெல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ “உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது…”

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்

புறநிலைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பாதீர்கள்… விண் செல்லும் மார்க்கத்தை அறிய முற்படுங்கள்

 

அன்று… ஆதிசங்கரரும் கோலமாமகரிஷியும் அவர்கள் உணர்வின் தன்மை கொண்டு தங்களுக்குள் விளைய வைத்ததைத் தன் சீடர்களுக்குள் பதிவு செய்தார்கள்.

அவர் மீது பற்று கொண்ட சீடர்கள்…
1.அவர்கள் எதை உணர்த்தினார்களோ அதைக் கொண்டு அந்த ஆன்மாவை உந்தித் தள்ளுகின்றார்கள்…
2.இருவரும் சப்தரிஷி மண்டலம் அடைந்தார்கள்.

நமது குருநாதர் எத்தனையோ கோடி நிலைகள் பெற்றிருந்தாலும்… “எனக்கு அந்தக் குருவின் ஆசி இருந்தால்…” மாட மாளிகைகளை… கூட கோபுரங்களைக் கட்டி விடுவேன்
1.”அவருடைய நாமத்தை உலகமெல்லாம் பரப்புவேன்…!” என்ற பக்தர்கள் தான் சிஷ்யர்கள் தான் இன்று பெரும்பகுதி உண்டு.
2.அதனால் பலன் இல்லை…!

அறிந்து கொள்ளும் ஆற்றல்கள்…. இந்த வாழ்க்கையில் அவர் எப்படி மந்திரம் செய்கிறார்…? இவர் என்ன செய்கிறார்…? அவர் என்ன செய்கிறார்…? என்ற நிலைகளை அறிய உங்கள் நாட்டத்தைச் செலுத்த வேண்டாம்.

காரணம்… எம்மை நாடி வருவோரின் ஏக்கம் எதுவோ அதன் வழி தான் அவருக்குள் உணர்வுகள் பதிவாகின்றது.

மந்திரத்தின் உணர்வைப் பதிவு செய்து கொண்டால் அதிலே தான் நோக்கம் இருக்கும்… மந்திரத்தின் செயலைக் கேட்க வேண்டும் என்றால் அது ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தான் பொருள்.

அதன் மேல் எண்ணம் கொண்டு விவரங்களைத் தெரிந்து கொண்டால் அது தான் வளரும். இதிலிருந்து விடுபடும் வழிமுறைகள் எப்படி…? என்று கேட்டால் விடுபடும் உணர்வுகள் வளரும்.

அதாவது…
1.என்னிடம் கேட்ட உணர்வு கொண்டு தான் உங்களுக்குள் அது பதிவாகும்.
2.“கஷ்டமாக இருக்கிறது…” என்று சொல்லிக் கேட்டால் அந்தக் கஷ்டத்தையே வளர்க்க உதவும்.
3.கஷ்டத்தை நீக்க வேண்டும் என்று கேட்டறிந்தால் “கஷ்டத்தை நீக்கும் உணர்வுகள் விளையும்…”

கேட்டறிவோர் உணர்வின் தன்மை அது எதுவோ அதுதான் வளரும். அதனால் தான் கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகிறாய் என்று சொன்னது.

என் கஷ்டம் என்ன விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…! என்றால்… அது வந்து விடும்.
1.இந்த மனித வாழ்க்கையில் இருந்து “நான் நல்ல நிலை பெற முடியுமா… மீள முடியுமா…? சந்தேகம்…!
2.மீள முடியாது என்ற நிலைகளில் “வலு இழந்து விட்டால்…” மீள முடியும் என்ற நிலை வராது.

ஆனால் மீள வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்பெற்றுக் கொண்டால் அந்த எண்ணம்… கொடுக்கும் வாக்கின் தன்மையைப் பதிவு செய்தால் அதன் வளர்ச்சிக்கு நிச்சயம் வரும்.

பெரும்பகுதியானவர்கள் இன்று கஷ்டத்தைப் பற்றித் தான் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது எப்படி ஆனது…? என்ன ஆனது…? என்று கேட்கிறார்கள்.

உணர்வின் தன்மை இயக்கம் எப்படி ஆகிறது…! என்பதைப் பற்றி பல விளக்கவுரைகளை… பல முறைகளில் கொடுத்துள்ளேன். இது அவர்களுக்குள் பதிவாகவில்லை என்று தான் பொருள்.

1.இதிலிருந்து விடுபட்டு… நாம் மேற்கொண்டு விண் செல்லும் மார்க்கங்களை எண்ணி ஏங்கி… அதைப் பெற்று
2.அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஏங்கினால் அது பதிவாகும்.
3.அதன் உணர்வின் துணை கொண்டு தான் உடலுக்குள் அந்த நற்சக்திகள் விளையும் தன்மை வரும்.

உடலைக் காக்கும் சக்தி சிவ தனுசு… உயிரான்மாவை ஒளியாக்கும் சக்தி விஷ்ணு தனுசு

உடலைக் காக்கும் சக்தி சிவ தனுசு… உயிரான்மாவை ஒளியாக்கும் சக்தி விஷ்ணு தனுசு

 

பரசுராமனுக்கும் சீதாரமனுக்கும் போர் நடந்து கொண்டே இருக்கும் என இராமாயணக் காவியம் கூறுகின்றது.

ஏனென்றால் “சிவ தனுசு” எனும் பொழுது
1.உடலில் உருவான உணர்வின் தன்மை கொண்டு
2.இந்த உடல் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து காக்கவே அந்த உடலின் உணர்வுகள் வருகின்றது,

ஆனால் “விஷ்ணு தனுசு” எனும் பொழுது தீமைகளை அகற்றி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வருகின்றது.
1.நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகருகின்ற பொழுது
2/துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் “விஷ்ணு தனுசு” ஆகின்றது.

அதாவது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமது உடலில் இருக்கும் உணர்வுகளை ஊடுருவுகின்றது.

அப்பொழுது தான் விஷ்ணு தனுசிற்கும் சிவ தனுசிற்கும் போர் முறை வருகின்றது.

ஏனென்றால்… சீதா என்றால் சுவை கொண்டது… மகிழ்ச்சி கொண்டது… மகிழ்ந்து வாழக்கூடியது… மகிழ்வான செயல்களைச் செய்வது…! மகிழ்ச்சி என்ற உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது மகிழ்ச்சியூட்டும் சக்தி பெற்றது.

நமக்குள் சமப்படுத்தும் உணர்வுகள் இருப்பினும் எந்தெந்தக் குணங்களை நமக்குள் பெற்றோமோ “அதைத்தான்…” அது நமக்குள் சமப்படுத்திக் கொண்டிருக்கும்.

உதாரணமாக…
1.நாம் கோபப்படுகின்றோம் என்றால் அந்தக் கோபமான நிலைகளை எடுத்துத்தான் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இந்த “சிவ தனுசு” உதவும்.
2.நாம் ஒருவர் மேல் வெறுப்பு கொண்டிருப்போமானால் “இரு உன்னை நான் பார்க்கிறேன்…” எனும் எண்ணம்தான் நமக்கு வரும்.

இது பரசுராமன் கையிலுள்ள சமப்படுத்தும் உணர்வு பெற்ற நம் உடலில் வளர்த்துக் கொண்ட “சிவ தனுசு…”

இப்படி நாம் கோபப்படும் பொழுதோ சஞ்சலப்படும் பொழுதோ பிறருடைய நிலைகளால் நம்மில் உருவான தனுசை எடுத்துத் தான் பயன்படுத்துகின்றோம். “தேடிச் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்று சிவ தனுசைத்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

நம் குழந்தை மேல் எந்த அளவு பாசம் கொண்டோமோ அதற்கொப்பத்தான் அவனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை வருகின்றது. ஆனால் அவன் செய்யும் தவறினை நாம் காண்பதில்லை. அவன் செய்யும் குற்றங்களைப் புரிந்து கொள்வதில்லை.

“என் பிள்ளை…” என்ற நிலையில் இந்த உடலில் எதை வளர்த்துக் கொண்டோமோ அதனின் உணர்வைப் பாய்ச்சித்தான் அவனைக் காக்கும் நிலைக்கு வருகின்றோம்.

இதில் நாம் வேதனையின் உணர்வை நுகர்கின்ற பொழுது நமது உயிர் “விஷ்ணு” வரம் கொடுத்து விடுகின்றார். பின் நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் வருகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது உயிர் நுகர்ந்த உணர்வின் தன்மையை அணுக்கருவாக உருவாக்குகின்றது.

உணர்வின் கரு நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது இந்திரியமாக மாறுகின்றது. இதற்குத்தான் இந்திரலோகம் என்று காரணப் பெயர் வைத்தார்கள் ஞானிகள்.
1.இரத்த நாளங்களில் சேமிக்கப்பட்ட அணுக்கரு நமது உடலில் சுழன்று கொண்டேயிருக்கும்.
2.குறிப்பிட்ட காலப் பருவம் வரும் பொழுது தான் அணுக்கரு வெடிக்கின்றது.
3.அப்படி வெடித்தபின் அதன் உணர்வின் தன்மை எதுவோ அதற்கொப்ப அணுத்தன்மை வெளிப்படுகின்றது.
4.இப்படி உருவான அணு இவ்வுடலில் சேர்ந்து இயக்கத் தொடங்கி விடுகின்றது.
5.உடலில் உருவான இவ்வணு தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடுகின்றது.

ஒரு வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்து எந்த இனச் செடியின் வித்தோ அதே இனச் செடியைத் தான் உருவாக்குகின்றது. கடைசியில் அதே இன வித்தைத்தான் உருவாக்குகின்றது.

ஆகவே… நாம் சுவாசித்த உணர்வின் தன்மை அணுவாகி உடலாக்கப்படும் பொழுது என்ன செய்கின்றது…? உடலாகும் பொழுது சிவமாகின்றது. உணர்வின் தன்மை சொல்லாக வரப்படும் பொழுது சிவ தனுசு என்ற நிலை வருகின்றது.

ஒருவர் தவறு செய்கின்றார் என்ற உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவருடைய உடலில் விளைந்த உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது இதற்கும் நமது உடலிலுள்ள நல்ல குணங்களுக்கும் போர் என்ற நிலை நமது உடலில் நடைபெறுகின்றது.

அது சமயம் நாம் கோபத்தின் தன்மை கொண்டு தனுசைப் பாய்ச்சினோம் என்றால் அதனின் உணர்வின் கூட்டமைப்பு தன்னில் ஒரு படையையே உருவாக்குகின்றது.

சிறுகச் சிறுக கோபத்தின் உணர்வுகள் வளரப்படும் பொழுது கோபம் அதிகமாகி… கோபக்காரர் என்ன செய்கிறார் என்றால் தன்னைக் காத்துக் கொள்வதற்கு “இரு உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்…” என்ற கோப உணர்வு கொண்டு பிறிதொருவரைத் தாக்குகின்றார்.

1.கோபம் உள்ளவர் சிவ தனுசைத் தனக்குள் எடுத்துக் கொண்டு கோப உணர்வுகளைத் தமக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.
2.இதே போன்று வேதனை என்ற நிலை வரும் பொழுது வேதனை உணர்வுகளைத் தனக்குள் எடுத்துச் சமப்படுத்துகின்றார்.

“பரசுராம்…!” நாம் சுவாசித்த உணர்வுகள் எந்தக் குணமோ அதைச் சமப்படுத்தும் எண்ணங்கள் தான் வருகின்றது.

உதாரணமாக ஒவ்வொரு உயிரினமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள விழைகின்றது. இவை எல்லாம் சிவ தனுசு.

இதைப் போன்று, மனிதரிடத்தில் எனும் பொழுது மனிதர் தாம் எதை முன்னிலையில் வைத்துள்ளாரோ அது சிவ தனுசு.
1.அதாவது உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலை வருவதுதான் சிவ தனுசு.
2.உயிர் என்ற ஒளியின் தன்மையை என்றும் ஒளியாக வைத்து இருள் சூழாத நிலையில் இருப்பதுதான் “விஷ்ணு தனுசு…”

மனித வாழ்க்கையில் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும் ஒன்றி, உணர்வினை ஒளியாக மாற்றிச் சிருஷ்டித்துக் கொண்ட நிலை ரிஷி…! அது தான் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைச் சூரியனின் காந்தப்புலனறிவு கவர்ந்து புவிக்குள் கொண்டு வருகின்றது. ஆகவே இதனை “ரிஷியின் மகன் நாரதன்” என்றும் “நாராயணனின் அபிமான புத்திரன்” என்றும் காவியங்களில் குறிப்பிட்டனர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினை நாம் நுகர்ந்தோம் என்றால்
1.“நாரதன் என்னும் உணர்வுகள்” உயிரான விஷ்ணுவிடமும் செல்கின்றது.
2.மற்றும் உடல் பாகங்கள் அனைத்திற்கும் சென்று
3.பகைமை உணர்ச்சிகளை மாற்றுவதற்கான நிலை எதுவோ அதைச் சொல்லி பகைமையைத் தணிக்கச் செய்கின்றது.
4.உண்மையை விளங்கச் செய்கின்றது இந்த நாரதர் என்னும் உணர்வுகள்.

எனவே நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப நுகர்ந்தால் அதன் உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து பகைமை உணர்ச்சிகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கி நம்மை நல்வழிப்படுத்தும்.

ஆகவே தான்
1.ரிஷியின் மகன் நாரதன் என்றும் நாராயணனின் அபிமானப் புத்திரன் என்றும்
2/“நாரதர் நன்மைகள் தான் செய்வார்…” என்றும் காவியங்களில் காண்பித்தார்கள் ஞானிகள்.

நமது உயிரால் உருவாக்கப்பட்ட உணர்வுகள் “விஷ்ணு தனுசு…” உயிருடன் ஒன்றி ஒளியாக இருக்கின்றது. ஒளியின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் “சீதா” மகிழ்ச்சியான உணர்வை நமக்குள் ஊட்டும்.

ஒளி என்ற உணர்வை ஊட்டும் நாரதன் தீமைகளை நீக்கிச் சமப்படுத்தும் நிலைகளை உருவாக்கி உணர்வின் நிலையைத் தெளிவாக்குவார் என்பதுதான் பொருள்.

ஆகவே அரும்பெரும் ஞானிகள் காண்பித்து உணர்த்திய உண்மைகளைத் தம்முள் உணர்ந்து அதன்வழி இயங்கி ஒளி என்ற உணர்வைக் கொண்டு வரும் விஷ்ணு தனுசினைக் கைக்கொண்டு தம்முள் பகைமை உணர்வுகளை அகற்றி மகிழ்ச்சி தரும் உணர்வை தம்முள் வளர்த்து வரும் அன்பர்கள் அனைவரும் உடல் நலம் உடல் பலம் மன நலம் மன பலம் மன வளம் செல்வம் செல்வாக்கு பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.