ஆதி மூலம் – நம் உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

Image

ஆதிமூலம் - உயிர்

ஆதி மூலம் – நம் உயிரின் இயக்கத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்…!

 

ஒரு தீபத்தை ஏற்றினால் அது எரியும் போது அது தனக்குள் ஈர்ப்பு சக்தியை எடுத்துத் தான் எரியும். அந்த ஈர்ப்பு சக்தி இல்லை என்றால் தீபம் அணைந்துவிடும்.

இதைப்போன்று தான்
1.ஒரு உயிரணுவிற்குள் துடிப்பு ஏற்படும் போது அதனால் ஏற்படும் வெப்பத்தால்
2.அது மீண்டும் ஜீவன் பெற்று இருக்க வேண்டும் என்பதற்காக
3.அதற்குள் இருக்கக்கூடிய காந்தபுலன் அந்த இயக்கச் சக்திக்கு உறுதுணையாக இருந்து எடுத்து அதை இயக்க வைக்கும்.
4.அதாவது ஒரு எண்ணைய் விளக்கைப் பொருத்தும் போது
5.அந்தத் தீபச் சுடரின் அருகிலே துவாரங்கள் இல்லை என்றால் ஈர்க்கும் சக்தி அடைபட்டு விடுகின்றது
6.நெருப்பு (தீபம்) எரிவதில்லை.

ஆகவே உயிரணுவின் சக்தி துடிக்கும் போது அதனுடன் இணைந்த காந்த சக்தி இது இயக்கப்பட்டு அந்தத் துடிப்புக்குள் ஈர்ப்பாகி
1.தன் அருகிலே இருக்கக்கூடிய பொருளை அது இழுத்து
2.உயிரணுவிற்குள் வளரும் சக்தியாக அது எந்தச் சக்தியை எடுத்ததோ
3.அந்த உணர்வின் மணமாக எண்ணமாகத் தெரிந்து கொள்ளும் நிலையாகின்றது.

இதைத்தான் ஞானிகள் இயக்கத்தை “ஈசன்” என்றும் அந்த இயக்கத்திற்குள் உருவாகும் வெப்பத்தை “விஷ்ணு” என்றும் அதில் இணைந்த காந்தத்தை “லட்சுமி” என்றும் காரணப் பெயரை வைத்துக் காட்டுகின்றார்கள். (நாம் புரிந்து கொள்ள)

அதே சமயத்தில் அந்தக் காந்தம் இழுத்து இந்த உயிருடன் இயக்கப்படும் போது அதை ஜீவன் பெறச் செய்கின்றது.

நாம் ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து அதற்குக் கீழ் நெருப்பின் தன்மை அதிகமாகும் போது பாத்திரத்திலுள்ள நீர் கொதிக்கும் தன்மையாக – இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

அதிகமாகக் கொதிக்கும் பொழுது அந்த நீரே ஆவியாகின்றது. நீரைக் கொதிக்கச் செய்து அதன் மூலம் வரும் ஆவியின் தன்மையை வைத்து அன்றைக்கு இரயில் இன்ஜினையே இயக்கினார்கள். அதுமட்டுமல்லாதபடி அதிகமான பாரங்களையும் வைத்து இழுத்துச் செல்லும்படிச் செய்தார்கள்.

அந்த நெருப்பின் தன்மையை இயக்கச் சக்தியாக வைத்து நீரைக் கொதிக்கச் செய்து அந்தக் கொதிப்பிலிருந்து ஆவியாக வரும் நிலையை “நீராவி இயந்திரம்…!” என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இயக்கச் செய்தனர்.

இதைப் போன்றது தான் நமது உயிரின் இயக்கமும்.

உயிர் தனக்குள் உருவாக்கும் துடிப்பால் வெப்பமாகி ஈர்க்கும் காந்தமாகி அந்தக் காந்தத்தால் அது ஈர்த்து எடுத்துக் கொண்ட உணர்வின் சத்தை உணர்வின் சத்தாக தனக்குள் உறையச் செய்கின்றது.

அவ்வாறு உறையச் செய்தாலும் தொடர்ந்து அந்தத் துடிப்பின் இயல்பாக இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.
1.நமது உயிர் “ஓ……“ என்று பிரணவமாகி (ஜீவன் பெறச் செய்து)
2.கவர்ந்த சக்திகள் அதனுடன் ஐக்கியமாகும் பொழுது “ம்……” என்று உறைந்து
3.அது உடலாக மாறுகிறது. ஒரு உயிர் உடலை இப்படித்தான் உருவாக்குகின்றது.

நீரை வைத்து அதனுடன் ஒரு பொருளை இணைத்து வேகச் செய்யும் போது அது கொதிகலனாலும் நாம் போட்ட பொருளின் சத்து கரைந்து நீருடன் ஒன்றி இரண்டும் ஒன்றாக இணைந்து விடுகின்றது.

1.நம் உயிர் நெருப்பாக இருந்து துடிப்பின் நிலைகள் கொண்டு வெப்பமானாலும்
2.ஈர்ப்பின் காந்தத் துடிப்பால் தனக்குள் கவரப்பட்டு
3.எந்தக் குணத்தின் சத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்கின்றதோ
4.அந்த இணைப்பின் சக்தியால் அதனுடைய ஆவியாக மாறி
5.அதனுடைய ஈர்ப்பின் துணையில் தனக்குள் உறையும் தன்மையாக மாற்றிக் கொள்கிறது.
6.நீருடன் மற்ற பொருள்களை இணைத்துக் கொதிக்கச் செய்யும் பொழுது அது எப்படி இரணடறக் கலந்து ஒன்றாகின்றதோ
7.அதைப் போல உயிரணு தனக்குள் கவரும் சத்தினை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து உடலாக உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

உயிர் என்று சொல்கின்றோம். உடல் என்று சொல்கின்றோம். நான் யார்…? தான் யார்…? இந்தப் பிள்ளை யார்…! என்ற நிலையில் நம்மை நாம் அறிந்து நமக்குள் இயக்கும் சக்தியையும் அறிந்து இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்திக் கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் என்றுமே அழியாத நிலைகள் கொண்டு வாழ வேண்டும் என்பதற்கே இதை எல்லாம் உணர்த்துகின்றோம்.

“முனி…!” என்பது வலுக் கொண்டது – எதற்கும் அடங்காத அந்த நாரதனின் சக்தியை எடுத்து எத்தகைய தீமைகளையும் நாம் அடக்க முடியும்

Image

narada muni - sage

“முனி…!” என்பது வலுக் கொண்டது – எதற்கும் அடங்காத அந்த நாரதனின் சக்தியை எடுத்து எத்தகைய தீமைகளையும் நாம் அடக்க முடியும்

 

அகஸ்தியன் துருவனாகித் துருவ் மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றோர் அனைவரும் சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலத்திலிருந்தும் வெளிப்படும் ஒளியான அணுவைத்தான் நாரதன் என்று காட்டினார்கள். அதாவது ரிஷியின் மகன் நாரதன்… அவன் ஒரு முனிவன்.
1.முனி என்பது வலு கொண்டது… எதற்கும் அடங்காதது…!
2.விஷத்தின் தன்மை தன்னை அணுகாத நிலைகள் கொண்டு
3.விஷத்தையை ஒடுக்கும் நிலைகளைத்தான் முனி என்றும்
4.வீரிய நிலைகள் பெற்றவன்…! என்றும் அன்று ஞானிகள் பெயரை வைத்தார்கள்.

துருவ நட்சத்திரத்திலிருந்து அத்தகைய நிலைகளில் வெளிவரும் அந்த உணர்வை ஒருவன் நுகர்ந்தான் என்றால் மனித வாழ்க்கையில் அவன் ஆசையினுடைய நிலைகளைக் கலைத்து கலகப்பிரியனாக ஆக்கிவிடும்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் இருள் சூழ்ந்த நிலைகளையும் தன்னை அறியாமல் ஆட்டிப்படைக்கும் செயல்களையும் நீக்கிவிட்டு அது தான் கலகப்பிரியன்…!” அந்தக் கலகமோ நன்மையிலே முடியும்.

உதாரணமாகத் தன் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதிலே அறியாது சிறு தடை ஏற்படும் போது குழந்தை தவறு செய்து விட்டாலோ நாம் எண்ணியபடி அவன் வரவில்லை என்றாலோ அவனை எண்ணி எண்ணி வேதனைப்படுகின்றோம்.

வேதனை என்பது விஷம். அந்த விஷம் நமக்குள் வந்து கலக்கத்தை ஏற்படுத்தி நம் சிந்திக்கும் திறனை இழக்கச் செய்கின்றது. அவன் இப்படிச் செய்கிறானே… இப்படிச் செய்கிறானே…! என்று கோபமும் ஆத்திரமும் வேதனையும் படுவோம்.

அதே போல பிறருக்குத் தக்க நேரத்தில் எல்லா உதவியும் நான் செய்தேன். ஆனால் வாங்கிய கடனைத் திருப்பிச் சரியான நேரத்திற்குக் கொடுக்கவில்லை என்றால் அவர்களை எண்ணி வேதனைப்படுகின்றோம். உதவி செய்தேன்… ஆனால் எனக்கு இப்படிச் செய்கிறார்களே…! என்று ஏசிப் பேசுவதும் அடுத்து வேதனையும் படுவோம்.

இதைப்போன்று நாம் மனித வாழ்க்கையில் பற்றுடன் வாழும் பொழுது அந்தப் பாசத்திற்கு எதிர்நிலையாக வரும் போது அதுவே நமக்குள் அதிகக் கோபத்தையும் எல்லை கடந்த ஆத்திரத்தையும் ஊட்டிவிடுகின்றது.

நீங்கள் நன்மை செய்ய வேண்டும் என்று பரிவுடன் பண்புடன் மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் படும் துயரத்தைக் கேட்டு விபரத்தை அறிந்து கொள்ளும் பொழுது அதை உங்களை அறியாது நுகர்ந்து விடுகின்றீர்கள்.

அதைத் துடைக்க வேண்டும் அல்லவா…!

1.இந்த நாரதன் என்ற உணர்வின் தன்மையை நாம் நுகரும் போது
2.நமக்குள் வரும் அத்தகைய தீமையான உணர்வுகளை எல்லாம் பிரித்து விட்டு
3.நமக்குள் ஓங்கி நிற்கும் ஒளியாக
4.எல்லாவற்றையும் நன்மை பயக்கும் சக்தியாக மாற்றிடும் திறன் கொண்டது.

அதற்காக வேண்டித் தான் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அணுவின் தன்மைக்கு “ரிஷியின் மகன் நாரதன்” என்று பெயரிட்டு நாம் சாதாரணமாகப் புரிந்து கொள்வதற்காக அவ்வாறு வைத்தார்கள்.

உங்கள் நல்ல குணத்தை அழிக்கும் திறன் கொண்ட அத்தகைய வேதனையான உணர்வை அழித்திட்ட தனக்குள் அடக்கிய அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை எடுத்துப் பழக வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியை நுகரும் திறனை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளவும்
2.உங்களுக்குள் அந்த நினைவின் உணர்வுகளை உந்தச் செய்து
3.மகரிஷிகளை எண்ணும் போதெல்லாம் அந்தச் சக்திகளைப் பெறச் செய்வதற்காகவும்
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி இதை உபதேசிக்கின்றோம்.

அந்த மகரிஷிகள் உணர்வுகளை நுகர்ந்தால் தீமைகளை மாற்றி நம் நல்ல பண்பினைக் காத்து பிறரைக் காத்திடும் நிலை கொண்ட உணர்வாக ஓங்கி வளர்த்துக் கொள்ள முடியும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டால் என்றும் நிலையாக நம் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக என்றும் பதினாறு என்ற நிலையை அடைய முடியும்.

குள்ளமாகக் காட்டப்பட்ட அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

Image

 

agathiar

குள்ளமாகக் காட்டப்பட்ட அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் அறிந்திருக்கின்றோமா…?

 

இன்றும்… உடல் நலம் சரியில்லை என்றால் அதை நீக்க “மந்திரிக்க வேண்டும்…!” என்ற நிலையில் சிலர் மந்திரவாதியிடம் செல்வார்கள்.

அதாவது தன் குழந்தைக்கு மந்திரிக்க வேண்டும் என்று செல்லப்படும் போது அந்த மந்திர சக்தியினுடைய நிலைகளை அவர்கள் யாரும் அறிய மாட்டார்கள்..

குழந்தையின் வியாதியைப் போக்க அவர்கள் மந்திரித்து தாயத்துக்களையோ மற்றதுகளையோ கொடுப்பார்கள். அதை அந்தக் குழந்தை கட்டிக் கொள்ள நேருகின்றது.

ஆனால் ஒரு சமயம் இல்லாவிட்டாலும் ஒரு சமயம் கட்டியிருக்கும் அந்தத் தாயத்தைப் பார்த்துக் குழந்தைக்குள் பயமான உணர்வுகள் வருமானால் என்ன நடக்கின்றது…?

இதற்கு முன்னாடி ஒரு மந்திரவாதி தெய்வத்தின் நிலைகளை வைத்து அவன் பல மந்திர தந்திரங்களைச் செய்து “இது தான் தெய்வம்…!” என்று சில நிலைகளை எடுத்துக் கொண்டு அவன் உடலை விட்டுப் பிரிந்து சென்றிருந்தால் அந்த மந்திரவாதியினுடைய உயிராத்மா இந்தக் குழந்தையின் பால் ஈர்க்கப்பட்டு விடுகின்றது.

இறந்த மந்திரவாதி அவன் வாழும் காலத்தில் என்னென்ன வேலைகளைச் செய்தானோ அதை இந்தக் குழந்தை உடலிலேயும் அந்த உணர்வுகள் செயல்படுவதைப் பார்க்கலாம்.

சில கிராமப்புறங்களில் நீங்கள் பார்க்கலாம். ஒன்றும் தெரியவில்லை என்றாலும் கூட “திடும்…” என்று முருகன் இங்கே வந்து குழந்தை வடிவில் அருள் பாலிக்கின்றான்… பல சொற்களையும் பல நிலைகளையும் வெளிப்படுத்துகின்றான்…! என்று பார்க்கலாம்.

இதெல்லாம் ஒரு மனிதன் உடலில் விளைய வைத்த அந்த மந்திர சக்திகள் தான் அவ்வாறு இயக்குகின்றது.

ஆனால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் காலத்தில் அவனுக்கு மந்திரமும் தெரியாது. மாயமும் தெரியாது.

அவன் சிறு பாலகனாக இருக்கும் பொழுது பயமற்ற நிலைகள் கொண்டு விண்ணை நோக்கிப் பார்த்து அந்தப் பேரண்டத்தின் உண்மையினுடைய நிலைகளை தனக்குள் எடுத்து ஒவ்வொன்றையும் நுகர்ந்தறிந்து கொண்டான். எப்படி…?

தாய் கருவிலே சிசுவாக இருக்கும் பொழுது அவர்கள் பெற்ற விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டு அந்த விஷத்தின் தன்மையை நீக்கும் உணர்வுகள் சந்தர்ப்பவசத்தால் அவனுக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்தது.

பேரண்டத்திலிருந்து பிரபஞ்சம் எப்படி வளர்கின்றது என்பதையும் பிரபஞ்சத்திற்குள் உயிராத்மாக்கள் எப்படி வளர்கின்றது என்பதையும் ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைப் பருவத்தில் அகஸ்தியன் அறிகின்றான்.

முதலிலே அகஸ்தியனின் தாய் தந்தையர் பிற மிருகங்களிலிருந்தும் விஷமான பாம்புனங்களிடமிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக பல பல தாவர இனச் சத்தை நுகர்ந்தறிந்து உடல்களிலே அரைத்துப் பூசி தங்களைப் பக்குவப்படுத்திப் பழகிக் கொண்டார்கள். அவர்கள் கருவிலே உருவானவன் தான் அகஸ்தியன்.

இருந்தாலும் அவர்கள் சுவாசித்த கடும் விஷம் கொண்ட தாவர இனச் சத்தால் உடலிலே நோயாகி அகஸ்தியனின் ஐந்தாவது இறந்து விடுகின்றார்கள்.

தன்னை விட்டுப் பிரிந்து விட்டனரே…! என்று அகஸ்தியர் தன் தாய் தந்தையரை எண்ணி ஏங்கும் பொழுது குழந்தையின் மீது பற்று கொண்ட அந்த இரு ஆத்மாக்களும் அவன் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

வந்த பின் அகஸ்தியன் சூரியனை நோக்கி எண்ணும் போது அவர்கள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் எல்லாம் வீரியமடைந்து
1.ஒன்றும் அறியாத அந்தக் குழந்தைக்குச்
2.சர்வத்தையும் அறியும் ஆற்றல் அங்கே பெருகுகின்றது.

இந்தப் பிரபஞ்சத்திற்குள் மற்ற கோள்களின் சத்தைச் சூரியன் எப்படிக் கவருகின்றது…? சூரியனிலிருந்து வெளி வரும் வெப்ப காந்த சக்தி பூமிக்குள் தாவர இனச் சத்தை எப்படிக் கவருகிறது…? இயற்கை எப்படி இயங்குகின்றது…? என்ற இந்தப் பேரண்டத்தின் பேருண்மைகளை ஒன்றும் அறியாத அந்தப் பாலகன் அறிகின்றான்.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் ஆற்றல் தன் உடலை வளர்க்கச் செய்யாது உணர்வின் ஆற்றல் மிக்க சக்தியின் திறமையாக வளர்ந்தது…!
1.அவன் மிகவும் குள்ளமாக இருந்தான்
2.ஆனாலும் அவன் உணர்வின் ஆற்றல் மிகவும் பரிமாணமான (MULTI DEIMENSIONAL) நிலையில் வளர்ந்தான்
3.துருவத்தின் நிலையை அறிந்து அதன் வழியாய வரும் உணர்வுகளில் உள்ள விஷத்தை ஒடுக்கினான்
4.அந்த உணர்வின் தன்மை கொண்டு தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றான்.
5.அந்த அகஸ்தியன் இன்றும் துருவ நட்சத்திரமாக உள்ளான்.
6.அவன் அருளைப் பெற்று அவனைப் போன்று நாம் ஒவ்வொருவரும் துருவ நட்சத்திரமாக வேண்டும்.

எங்களுக்காக ஆண்டவன் படைத்த உயிரினங்களை (குரங்கின் மூளை கரப்பான் பூச்சி) நாங்கள் சாப்பிடுகிறோம் – அதில் தவறு இல்லை என்பார்கள்…!

Image

Spiritual target

எங்களுக்காக ஆண்டவன் படைத்த உயிரினங்களை (குரங்கின் மூளை கரப்பான் பூச்சி) நாங்கள் சாப்பிடுகிறோம் – அதில் தவறு இல்லை என்பார்கள்…!

 

மலேசியா போன்ற சில நாடுகளில் போதைப் பொருள்களை உபயோகித்தாலும் இன்னும் அதிகப் போதை வேண்டும் என்பதற்காக நல்ல பாம்பை வைத்து நாக்கை நீட்டச் சொல்லி அந்த நாக்கிலே கொத்தச் செய்து இதைப் போன்ற விஷத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்களும் உண்டு.

குரங்கினை நாம் இங்கே கடவுளாக வணங்கும் நிலை இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளிலே உயிருடன் இருக்கும் குரங்குகளை அப்படியே அதன் மேல் இருக்கக்கூடிய மூட்டைத் (TOP) தட்டி விடுகின்றார்கள்.

உள்ளே இருக்கக்கூடிய மூளையைக் குழப்பி அதில் சிறு பொடியைப் போட்டு நாம் எப்படி ஸ்ட்ரா மூலம் சர்பத் சாப்பிடுகின்றமோ அதேபோல குரங்கின் மூளையை உறிஞ்சிச் சாப்பிடுகின்ற நாடுகளும் உண்டு.

ஆக மனிதனாகப் பிறந்தும் மிருக நிலை போல உணவாக உட்கொண்டிருக்கும் இப்படிப்பட்ட நிலைகளும் உண்டு.

நாம் கரப்பான் பூச்சி என்று சொல்கின்றோம். ஜப்பான் போன்ற நாடுகளில் விஞ்ஞான அறிவு பெருகி வந்தாலும் அந்தக் கரப்பான் பூச்சிகளைப் பிடித்து அதை எண்ணெயிலே வறுத்து ரசித்துச் சாப்பிடுவோரும் உண்டு.

ஆனால் இதையெல்லாம் உணவாக உட்கொள்ளும் தன்மை பெற்றவர்கள் எங்கே செல்வார்கள்…?

நாங்கள் வணங்கும் ஆண்டவன் நாங்கள் உணவாக உட்கொள்வதற்காகவே இதை எல்லாம் படைத்தான் என்று சொல்வார்கள். இன்று எல்லா மதத்திலும் உயிர்களைப் பலி கொடுத்து அதை ஆண்டவனுக்காக என்று படைக்கும் பழக்கம் உண்டு.

உனக்காகப் பலி கொடுத்து விட்டு உன் பெயரைச் சொல்லி நான் அந்த உயிரினங்களை எல்லாம் புசிக்கிறேன் என்று சாப்பிட்டாலும் சாப்பிட்ட உணர்வு என்ன செய்யும்…?

மிருக இனங்கள் மற்ற உயிரினங்கள் அனைத்துமே விஷத்தின் தன்மைகளைத் தன் உடலாக ஏற்றுக் கொண்டது. நாம் அதை உட்கொள்ளும் பொழுது அந்த விஷத்தின் தன்மை நமக்குள் ஊடுருவிவிடும்.

அந்த மிருகங்களும் உயிரினங்களும் அது தன்னை அறியாமலே கொடூரமான செயல்களைச் (மனிதனைப் போன்ற சிந்தனை இல்லாது) செய்து பிறிதொன்றைத் தாக்கி விஷத்தை உட்கொள்கின்றது.

இதைப் போன்ற உணர்வின் சத்து நம் உடலுக்குள் சேரும் போது நமக்குள்ளும் அந்த உணர்ச்சியைத் தூண்டும்.
1.நம்மைக் கேட்காமலேயே காற்றிலிருந்து அத்தகைய மிருகங்களின் உணர்வை நுகர்ந்து
2.அது மனித (நம்) உடலுக்குள் வளர்ச்சியாகி விஷத் தன்மையான செயலாக உருவாக்கி
3.அதையே ரசித்து மற்றவைகளை உணவாக உட்கொள்ளும் நிலை வரும்.

இரக்கமற்ற நிலைகள் கொண்டு கடவுளின் அடிப்படையிலோ அல்லது மதத்தின் அடிப்படையிலோ நாம் வளர்த்தாலும் விஷத் தன்மையை உணவாக உட்கொண்டவர்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் அந்த உணர்வினை வளர்த்து வெளியிலே செல்லும் போது விஷப் பூச்சிகளாகத் தான் போக முடியும்.

அதாவது இன்று மனிதன். நாளை விஷமான பூச்சி. ஏனென்றால் விஷப் பூச்சிகள் தன் விஷத்தால் மற்றதைக் கொத்தித் தன் உணவாக எடுத்துத்தான் அந்த மகிழ்ச்சியை அடைகின்றது.

பிறிதொருவர் வேதனைப்படுவதைக் கண்டு நாம் ரசித்துச் சுவாசிப்போமேயென்றால் நம் உடல் விஷத்தின் தன்மை அடைந்து நல் உணர்வுகள் அனைத்தும் மறந்துவிடும்.

1.ஏனென்றால் அந்த விஷத்தின் ஈர்ப்பு (வேதனைப்படுவதைப் பார்த்து ரசித்தது) ஆற்றல் அதிகமாக இருக்கும் நிலையில்
2.நமக்குள் விளைய வைத்த அந்த உணர்வின் தன்மை
3.மணமாக மாறி நம் உயிருடன் ஒன்றி இருக்கும்.

உடலை விட்டுப் பிரியும் நிலையில் உயிராத்மாவில் சேர்த்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு பூமியிலே நாம் மிதப்போம். மிதந்தாலும் இதை ஒத்த ஒரு விஷ ஜெந்தினுடைய உயிர் உடல் பெற்று விஷத்தை ஓங்கி வளர்க்கப்படும் போது அதனின் ஈர்ப்பிற்குள் சென்று விடுவோம்.

அந்த உடலின் சத்தை நாம் கவர்ந்து கருவாகி முட்டையாகி முட்டைக்குள் அதனின் சத்தை எடுத்து இந்த உயிர் அதனின் உடலாகப் பாம்பாக உருவாக்கிவிடும் நமது உயிர்.

1.ஆகவே நாம் எத்தகைய நிலையைச் செய்தாலும் பிறரிடமிருந்து மறைக்கலாம்.
2.ஆனால் நமக்குள் இருக்கும் உயிரிடம் எதையும் மறைக்க முடியாது.
3.ஏனென்றால் நாம் எதை எண்ணி எடுக்கின்றோமோ
4.அது நம் சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று அந்த உணர்வுகள் விளைந்து
5.சுவாசித்த உணர்வின் மணமாக நம் உயிராத்மாவில் சேர்க்கப்படும் பொழுது
6.அதற்குத் தக்க அடுத்த உடலாக அவன் உருவாக்கி விடுகின்றான்.
7.இதிலிருந்து யாருமே தப்ப முடியாது…!

பெரும்பகுதியானவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழந்து வேதனையுடனே வாழ்கிறார்கள்…! அதற்கு என்ன காரணம்…?

Image

Peaceful heartful meditation

பெரும்பகுதியானவர்கள் வாழ்க்கையில் நிம்மதி இழந்து வேதனையுடனே வாழ்கிறார்கள்…! அதற்கு என்ன காரணம்…?

 

இந்த வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலேயும் நாம் நலமாக இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம்.

உதாரணமாக நமக்குத் தேவையான பொருள்கள் வாங்க வேண்டும் என்று கடைக்குப் போகிறோம். கடைக்காரருக்குத் தெரிந்தவர்கள் அங்கே வந்தார்கள் என்றால் அவர் அவர்களுக்குத்தான் முதலில் சரக்குகளை எடுத்து கொடுப்பார்.

நான் கேட்ட சரக்கைக் கொடுங்கள்…! என்று சொல்லிக் கொண்டிருப்போம். சொல்லச்…சொல்ல… நேரம் ஆக…ஆக… அந்தக் கடைக்காரர் மேல் நமக்குக் கோபம் வந்து கொண்டே இருக்கும்.

நாம் கோபமாகப் பார்த்தவுடன் கடைக்காரர் என்ன செய்வார்…? நான் கொடுப்பதற்கு முன்னாடி “இவருக்கென்ன ஆத்திரம்…!” என்று இன்னும் சிறிது நேரம் நம்மை நிறுத்தி வைப்பார்.

நாம் பொறுமை இழந்து என்ன செய்கின்றோம்…? ஏய்யா…! அவ்வளவு நேரமாக நின்று கொண்டிருக்கின்றேன். எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறாயே…? என்ற நிலை தான் வரும்.

இதைப்போல வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே ஒவ்வொரு செயல்களிலும் இதைப் போன்ற உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. நல்லதைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும்
1.நல்ல குணங்களுக்குள் இது எல்லாம் கலந்த பின்
2.நாம் எதை எண்ணினாலும் கலக்கமுடன் தான் நாம் இருக்க முடிகின்றதே தவிர
3.எந்தச் செயலையும் நல்லதென்று (நிம்மதியாக) நாம் வலு கொண்டு நிலைத்திருக்க முடியவில்லை.

எதை எடுத்தாலும் கவலையும் சஞ்சலமும் பட்டு எல்லா குணங்களிலேயும் இது கலக்கப்பட்டு அதை நுகரப்படும் போது எதனெதன் அளவைக் கூட்டிக் குறைத்து நாம் சுவாசித்துள்ளோமோ அதற்குத் தக்கவாறு உடல் உறுப்புகளிலே நோய்கள் உருபெறுகின்றது.

ஒரு விதை அது வேகமாக வளர்ந்து வரப்போகும் போது
1.தன் அருகிலே சத்தின் தன்மை குறையப்படும் போது
2.அதற்குத் தக்கவாறு தாங்கும் நிலை அற்று விட்டதென்றால்
3.தன்னுடைய முதிர்வின் பலனைத் தரப்போகும் போது சீராக இல்லாதபடி “கருகி விடுகின்றது…”

இதைப்போலத் தான் மற்ற உணர்வுகள் கலக்கும் பொழுது மனிதனுக்குள் இருக்கும் நல்ல குணங்களுக்கு வேண்டிய வலு இல்லாதபடி அந்த நல்ல குணங்களை வளர்க்காத வண்ணம் இது தடைப்படுத்தி ஓரளவுக்கு அது நம்மைச் சிந்தனையற்ற நிலையாக்கி விடுகின்றது.

சிந்தனைகள் கிளர்ந்தாலும் நல்லதை செயல்படுத்த முடியாத நிலைகளுக்கு அது உள்ளாக்கி விடுகின்றது. நல்ல குணங்களை வளர்ச்சியடையாது குன்றும் பொழுது உடல்கள் குன்றி… உணர்வுகள் குன்றி… அது வேதனை என்ற நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

இப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றால் நாம் எந்த மணத்தை அதிகமாகச் சேர்த்திருக்கின்றோமோ அந்த மணத்திற்கொப்ப இன்னொரு உடல் இருந்தால் அதனின் ஈர்ப்பிற்குள் சென்று அந்த உணர்வின் சத்தை எடுத்து அந்த உடலாகப் பெற்று விடுவோம்.

நம் வாழ்க்கையில் கலக்க உணர்வுகள் இப்படிச் சேர்க்கப்பட்டுச் சிந்திக்கும் செயல் இழந்து மனிதனல்லாத உடலாக மாற்றிவிடுகின்றது.
1.இதையெல்லாம் செய்வது யார்…?
2.நம் உயிரின் தன்மையே…!

ஆனால் மனிதனுடைய ஆறாவது அறிவு தீமையை நீக்கும் திறன் கொண்டது. “தீமையானது…” என்று இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்திப் நல்லதாகப் படைக்கும் நிலைகள் பெற்றவர்கள் நாம்.

இயற்கையில் வந்த ஒவ்வொரு பொருளையும் இன்று செயற்கையில் இணைக்கச் செய்து எத்தனையோ தாவர இனங்களையும் மற்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளார்கள் மனிதர்கள். உயிரினங்களயும் கூட அது எத்தனையோ புதுப் புது ரூபங்களாக மாற்றி அமைத்துள்ளார்கள்.

இந்தச் சக்தியை புற நிலைக்குத்தான் நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால் தங்கள் ஆறாவது அறிவை அக நிலைக்குப் பயன்படுத்தி ஏழாவது அறிவாக உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றியவர்கள் மெய் ஞானிகள்.

மெய் ஞானிகள் தன் வாழ்க்கையில் வென்று சென்ற அந்த உணர்வினை ஒவ்வொரு நிமிடமும் நாம் எடுத்து
1.நம்மை அறியாது நம் நல்ல குணங்களுக்குள் கலக்கச் செய்யும்
2.தீமை செய்யும் உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் உணர்வுகளையும் நீக்கி
3.அந்த எண்ணங்களை அடங்கச் செய்வது தான் மனிதனின் கடைசி நிலை.

கேது சந்திரனை விழுங்குகின்றான்…! என்று சாஸ்திரம் சொல்கிறது

Image

Sun moon eclipse

கேது சந்திரனை விழுங்குகின்றான்…! என்று சாஸ்திரம் சொல்கிறது

 

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து சிறுகச் சிறுக அறியும் தன்மையாகப் பெற்று பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனான பின் முழுமையாக அறிந்து கொள்ளும் “பௌர்ணமி” ஆகின்றோம்.

வாழ்க்கையில் அறிந்து கொள்ளும் நிலை வரப்போகும் போது சந்தர்ப்பத்தால் வேதனை வேதனை என்ற இருள் சூழும் உணர்வுகளைக் கவர்ந்து அதனால் உடலுக்குள் விஷம் கொண்ட தன்மையையே நாம் அடைகின்றோம். இதைத்தான்
1.கேது சந்திரனை விழுங்குகின்றான் என்று அன்றைக்குக் காட்டினார்கள்.
2.அதைக் கிரகணம் என்றும் சொல்வார்கள்.

அதாவது வாழ்க்கையின் நிமித்தமாக நம்மை அறியாமல் நுகரும் தீமையான உணர்வுகள் விஷத் தன்மையாக நமக்குள் இணைவதைத்தான் கேது விழுங்குகின்றான் என்ற நிலையாகக் காட்டுகின்றார்கள்.

நம் நல்ல குணங்களை இந்த விஷத்தன்மைகள் நமக்குள் வந்து மறைத்து விடுகின்றது என்பதைக் “கிரகணம்…!” என்று காட்டுகின்றனர்.

சூரியனின் காந்த ஒளிகள் சந்திரனில் படாதபடி மற்ற கோள்கள் தடைப்படுத்தும் போது அது வளரும் தன்மையைத் தடைபடுத்தி விஷத்தின் தன்மையைச் சந்திரனில் வளர்க்கச் செய்கின்றது.

இதையெல்லாம் அன்றைய சாஸ்திர விதிகளாக உருவாக்கப்பட்டு ஞானிகளால் தெளிவாகக் காட்டப்பட்ட நிலை தான்.

வாழ்க்கையில் இருள் சூழும் இத்தகைய நிலைகளிலிருந்து மீள்வதற்காகத்தான் கோவிலை உருவாக்கினார்கள் ஞானிகள். அதன் மூலம் விஷத்தை வெல்லும் வழியையும் காட்டினார்கள்.

விநாயகரை பூஜிக்கும் போது இன்று நாம் என்ன செய்கின்றோம். குளித்து விட்டு இரண்டு அருகம் புல்லைத் தேடி எடுத்துக் கொண்டு
1.இந்தாப்பா…! உனக்குப் பிரியமான அருகம்புல்லை வைத்திருக்கின்றேன்
2.எனக்கு அந்தக் காரியம் முடிக்க வேண்டும்… இந்தக் காரியம் முடிக்க வேண்டும்..! என்று
3.தன்னிடம் இருக்கிற ஆசைகளை எல்லாம் விநாயகரிடம் சொல்லிக் கேட்போம்.
4.அதையே எண்ணி ஏங்கிக் கொண்டு இருப்போம்.

பத்து நாள் செய்து விட்டு அதன் பின் தான் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால்
1.உனக்காக நடந்தேன்… உனக்கு வேண்டியதை எல்லாம் படைத்தேன்
2.எனக்கு ஏன் இப்படித் தொல்லை கொடுக்கின்றாய்.
3.எனக்குச் செய்ய உனக்கு மனமில்லையா…? என்று வேதனைப் பட்டு அங்கே பூஜிக்கின்றோம்.

அடுத்தாற்போல் விநாயகருக்கு எருக்கன் பூவை மாலையாகச் சாற்றுவார்கள்.
1.வாழ்க்கையிலே விஷத் தன்மை வரும் பொழுது
2.எருக்கண் மாலையை விநாயகருக்குச் சாற்றிவிட்டால்
3.விஷத்தை முறித்து அவன் மனமுவந்து நமக்கு நன்மைகளைச் செய்வான் என்று இதைப்போல கோரிக்கைகளைச் செய்கின்றனர்.

அது நிறைவேறவில்லை என்றால்… உன்னைத் தினம் தினம் வணங்கினேனே…! உன் பெயரைச் சொல்லாத நாளே கிடையாது, உன்னை நினைக்காத நாள் கிடையாது…! ஆனால் எனக்கு ஏன் நீ இப்படிச் செய்கின்றாய்…? என்று வேதனையான உணர்வைக் கலந்து நாம் பூஜிக்கின்றோம்.

இப்படி நாம் பூஜித்தால் மீண்டும் விஷத்தைத் தான் வளர்க்கின்றோம். விஷத்தை நீக்குவதற்கு ஞானிகளால் படைக்கப்பட்ட தெய்வச் சிலையைப் பார்த்து வேதனையையும் கவலைகளையும் தான் நாம் வளர்க்கின்றோம்.

இதை உணர்த்துவதற்காகத்தான் ஆலயங்களில் சன்னதியில் திரையிட்டுக் காட்டுகின்றார்கள்.
1.பின் திரையை விலக்கி
2.விளக்கைக் காட்டி இருளை நீக்கும் நிலையாக அங்கே காட்டுகின்றார்கள்.

அந்த நேரத்தில் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்த அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ளோரும் இங்கே ஆலயம் வருவோரும் இருள் நீக்கிப் பொருள் காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணினால் அந்தச் சக்தி நமக்குள் கூடி வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கச் செய்யும்.

கந்த புராணத்தில் காட்டப்பட்ட மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பருக வேண்டிய ஞானக்கனி

Image

lord-shiva-wisdom-fruit

கந்த புராணத்தில் காட்டப்பட்ட மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பருக வேண்டிய ஞானக்கனி

 

கந்த புராணத்தில் நாரதன் கனியைக் கொண்டு வந்து கொடுப்பதாகக் காட்டியிருப்பார்கள். அப்பொழுது சிவன் சொல்கிறான்…
1.கலகத்தை மூட்ட நீ இங்கே கனியைக் கொண்டு வந்துவிட்டாயா என்ன…?
2.சரி சொல்… இது எது என்று பார்க்கிறேன்…! என்று
3.நமக்குத் தெளிவுறுத்த கந்த புராணத்தில் இவ்வாறு காட்டப்படுகிறது.

இந்த உலகை யார் முதலில் வென்று வருகின்றனரோ அவருக்கு இந்த ஞானக்கனி என்று சொல்லப்படுகிறது.

உடனே ஆறாவது அறிவு கொண்ட இந்த உணர்வின் எண்ணங்களைப் பல வாறு செலுத்தி
1.நான் மகிழ்வாகனன்…
2.நான் எதையுமே மகிழ்ச்சியாகப் படைக்கும் தன்மை கொண்டவன்
3.நான் எதையுமே சுழன்று வரவேண்டும் (முடியும்) என்ற “அகம்…!” அங்கு வளருகின்றது.
4.ஆனால் தாய் தந்தையை மறந்து விடுகின்றது…!

ஆறாவது அறிவு (முருகன்) விரிவடைந்த எண்ணங்கள் கொண்டு பரவி தன் ஞானத்தாலே புற உலகைத் தன் எண்ணத்தின் திறன் கொண்டு எண்ணுகின்றான்.

ஆனால் இங்கே நாரதன் நீ இந்த உடலிலே சேர்க்க வேண்டிய வினை எது…? என்று கேட்கின்றான்… (காட்டுகின்றான்).

எந்த அன்னை தந்தை உடலிலிருந்து நீ பெற்றாயோ அந்த வினைக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றாய். பேரண்டமும் பேருலக சத்தினுடைய தன்மையையும் உன் அன்னை தந்தையர் தான்.

அவர்கள் ஏங்கி எடுத்து அந்த உணர்வின் தன்மையால் உன் உடலை உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாகத்தான் நீ உருவாகி இருக்கின்றாய்…!

பிஞ்சாக இருந்து துவர்ந்து அது காயாகும் போது புளித்து அது கனியாகும் போது எப்படி இனிப்பாகின்றதோ இதைப்போல
1.உன் அன்னை தந்தையர் அந்தக் கனியின் தன்மை பெறவேண்டும்.
2.அவர்கள் முழுமையின் தன்மை அடைய வேண்டும்
3.மெய் உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று அங்கே நாரதன் காட்டுகின்றான்.

ஏனென்றால் மெய் உணர்வின் தன்மை பெற்று இந்த மனித உடலில் உயிரின் தன்மை கனியாகி என்றும் அது சுவை கொண்டதாக விண்ணிலே சுழன்று கொண்டிருக்கக்கூடிய அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வந்த அந்த மணம் தான் “நாரதன்…!”

1.உன் அன்னை தந்தையை நேசித்து
2.அந்த உயர்ந்த அருள் சக்திகளை அவர்கள் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை
3.இதை வினையாக உனக்குள் சேர்த்துக் கொள்…! என்று கந்த புராணத்தில் நமக்குத் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.

அன்னை தந்தையர் நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். அவர்கள் நம்மை வளர்த்து ஆளாக்குவதற்காக வேண்டிப் பட்ட எத்தனையோ பல துயரத்திலிருந்து மீண்டு “என்றும் பதினாறு” என்ற அழியாதை நிலைகள் அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணச் செய்தார்கள் அன்று ஞானிகள்.

ஞானிகள் காட்டிய அந்த மெய் வழியில் அந்த ஞானிகளின் உணர்வை நுகர்ந்து அதைத் தனக்குள் சேர்த்துக் கொண்ட பின் அதைத் தன் அன்னை தந்தைக்கு ஆராதனையாகக் கொடுத்து “விண் செலுத்த வேண்டும்…!” என்று காட்டுகின்றார்கள்.

அப்பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்து விஷத்தை ஒடுக்கி என்றும் அழியாத நிலைகள் கொண்டு நிலையான ஒளிச் சரீரத்தைப் பெறும் நிலை வருகின்றது.

இவ்வாறு அவர்களை விண்ணுக்கு அனுப்பி இந்த உணர்வின் தன்மைகளை நமக்குள் இணைத்துக் கொண்டால்தான் இந்த உடலை விட்டு நாம் சென்றாலும் நாமும் அந்தச் சூட்சும சரீரத்தைப் பெற முடிகின்றது.

1.அன்னை தந்தையரின் உணர்வைத் தனக்குள் வினையாக சேர்த்து
2.உன் மனித உடலை உருவாக்கிய அவர்கள் அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று
3.கனியாகப் பெற்ற அந்த ஞானிகளின் அருள் சத்தை உனக்குள் கனிந்திடும் நிலையாக எண்ணி
4.அதே கனியின் தன்மை தன் தாய் தந்தையர் பெற வேண்டும் என்ற ஏக்க நிலைகளைப் பெறவேண்டும் என்பதற்காக கதைகளாக இப்படி உணர்த்துகின்றார்கள்.

நாம் கதையை எப்படிப் படித்து அர்த்தம் காண்கின்றோம்…? விநாயகர் அம்மா அப்பாவைச் சுற்றி வந்தார். அதனால் அவருக்கு ஞானக் கனி கிடைத்து விட்டது…! என்று தான் நாம் சாதாரணமாகப் பார்க்கின்றோம்.

விரிவடைந்த நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு “எதனையும் செய்திடுவோம்…! என்ற இந்த உணர்வை ஓங்கிச் செய்யப்படும் போது பொருள் ஆக்கத்தை இழந்து பரந்த மனம் கொண்டு எங்கேயோ (சூனியத்திற்கு) போகின்றது.

நமக்கு முன் படைக்கும் சக்தி கொண்ட நம் தாயின் உயிரும் தாயின் உடலும் தாய்க்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியும் நம்மை (மனிதனாக) உருவாக்கி நல் வழி காட்டுகின்றது என்ற நிலையைத்தான் ஞானிகள் அன்று தெளிவாக்கியுள்ளார்கள்.

அவ்வாறு நமக்கு நல் வழி காட்டிய நம் தாய் தந்தையரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் ஒளி துணை கொண்டு இந்த இருள் சூழ்ந்த உலகை விட்டு வென்று மெய் ஞானியின் அருள் வட்டத்தில் நின்று என்றும் பதினாறு என்ற கனியின் நிலைகள் அடையச் செய்ய வேண்டும் என்பதே “நாரதன் கொடுக்கும் ஞானக் கனியின் தத்துவம்…!”

ஆகவே விநாயகரைப் பார்க்கும் பொழுதெல்லாம்
1.தாய் தந்தையின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும்
2.அவர்கள் அருள் வழியிலே எங்களுக்குள் வரும் இருள் நிலைகளை நீக்கிடல் வேண்டும்
3.மெய் ஞானிகள் அருள் வழியில் என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் தகுதியினை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி
4.இத்தகைய நல்ல வினைகளைச் சேர்க்கும் விதமாக பூஜிக்கும் நிலையைச் செய்தார்கள் ஞானிகள்.

பள்ளிப் படிப்பில் ஆர்வமாகப் படித்து முன்னுக்கு வந்த குழந்தைகள் மேல் படிப்பில் தேர்வில் தேறாமல் (FAIL) போவதன் காரணம் என்ன…?

Image

Higher studies

பள்ளிப் படிப்பில் ஆர்வமாகப் படித்து முன்னுக்கு வந்த குழந்தைகள் “மேல் படிப்பில் தேர்வில் தேறாமல் (FAIL) போவதன் காரணம் என்ன…?”

 

ஓர் இன்ஜினியருக்குப் படிக்கக்கூடியவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி… அவர்கள் படிக்கச் செல்லும் பொழுது வீட்டிலே எந்த அளவுக்கு மன நிம்மதி இருக்கின்றதோ அந்த உணர்வு அவர்களுக்கு முன்னணியில் இருக்கும்.

வீட்டிலே கொஞ்சம் சஞ்சலப்பட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்று இன்ஜினியரிங் படித்தால் நீங்கள் பாடங்கள் எதைக் கூர்மையாக கவனித்தாலும் உங்கள் சஞ்சல அலைகளுடன் கலந்து இந்த உணர்வுகள் பதிவாகிவிடும்.

1.படித்ததை மீண்டும் நீங்கள் நினைக்கப்படும் போது
2.இது சரியா…! தவறா…? என்று உங்களுக்குள் சரியான நிர்ணயம் செய்யாதபடி
3.இந்தச் சஞ்சல நிலைகளையே உண்டாகும்.

அந்தச் சஞ்சல நிலைகள் ஏற்படும் பொழுது கல்லூரியிலே தேர்வு வைத்தாலே போதும். கேள்விகளைப் பார்த்தவுடனே விடை தெரியாதபடி திகைப்புகள் ஏற்பட்டு…! சரியான பதில் எழுத முடியாதபடி அந்தப் பரீட்சையில் தேறாத நிலை (FAIL) ஆகிவிடுவீர்கள்.

ஆனால் பரீட்சை எதற்காக வைக்கின்றனர்…?

படித்த உணர்வைத் திடீரென்று அதைச் சிந்தித்து இந்த உணர்வின் தன்மையை “இப்படித் தான்…!” என்று நாம் அறிந்து கொள்வதற்காகத் தான் பரீட்சையாக வைக்கின்றார்கள்.

அதாவது ஆசிரியர் நமக்குச் சொல்லி கொடுத்ததை நினைவுபடுத்தி அதை பரீட்சையாக நம்மை எழுதச் செய்து “படித்ததை…” நாம் அறிந்து கொள்வதற்காக வேண்டிப் பரீட்சையாக வைக்கின்றனர்.

நாம் வீட்டிலே அமைதி கொண்டு இருந்தாலும் வெளியிலே வரப்படும் போது நண்பர்கள் பால் உள்ள பற்றால் அங்கே அதைப் பார்த்தேன்.. இங்கே இதைப் பார்க்கலாம்…! என்று பொழுது போக்குக்காக ஆர்வங்களைத் தூண்டப்படும் பொழுது கவனங்கள் அங்கே திரும்புகின்றது.

அத்தகைய ஆசை கொண்டு ஆர்வங்கள் அங்கே செல்லப்படும் பொழுது படிப்பிற்கு என்று செல்லப்படப் போகும் போது இந்த ஆர்வ உணர்ச்சிகள் முன்னாடி வந்து உந்தும்.

அங்கே ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் நிலையில் இது இடைமறிக்கும். பாட சம்பந்தமாக (ENGINEERING) நுண்ணிய உறுப்புகளின் செயல்களை இதை இப்படிப் பொருத்தினால் இன்னது தான் நடக்கும் என்று அங்கே சொல்லிக் கொடுக்கும் பொழுது அதை முழுமையாகக் கவனிக்கும் எண்ணம் வராது.

அதைப் பார்க்க வேண்டும் அங்கே போக வேண்டும் என்ற ஆர்வ உணர்வுகளுக்குள் இங்கே ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை எண்ணிப் பார்த்தவுடனே மனதிற்குச் சிக்கலாக வரும்.

எதையோ சொல்கிறார்…! சொல்லிக் கொடுப்பது ஒன்றும் புரியவில்லையே…! என்ற உணர்வுகள் இயக்கப்படும் போது இந்த நினைவலைகள் வரப்படும் போது
1.கண்ணின் ஈர்ப்பு சக்தி சோர்வடையும்… கண் கனமாகும்.
2.தன்னை அறியாமலேயே தூக்கம் வரும்.
3.நான் படிக்கச் சென்றேன்… ஆனால் எனக்குத் தூக்கம் வருகின்றது.
4.என்னால் சரியாகப் முடியவில்லையே…! என்று சொல்வார்கள்.

ஏனென்றால் நுண்ணிய கருத்துக்கள் அங்கே பாட நிலையாக வரப்போகும் போது அதை எடுத்து நம் எண்ணத்துடன் அதைப் பிணைத்து அதைத் தெரிந்து கொள்ளும் நினைவலைகளை ஊட்டப்படும் போது ஊரைச் சுற்ற வேண்டும் என்ற இந்த ஆர்வங்கள் முன்னணியில் வந்து அதைப் புரியவிடாதபடி மறைத்துக் கொண்டு இருக்கும்.

நான் அழகான பொருள்களை அங்கே கண்டேன். அங்கே மிகவும் சந்தோஷமாக இருந்தேன் என்று நண்பர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சி இங்கே ஆர்வத்தை உந்தச் செய்யும் பொழுது பாடங்களைக் கற்க விடாது செய்யும்.

சிறிதளவு பதிவானாலும் அதைச் செயல்படுத்த முடியாது செய்து விடும். இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் பரீட்சையில் தேறவில்லை என்று கேள்விப்படும் தாய் தந்தையரோ பிள்ளைக்குப் பாடங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் படிக்க முடியவில்லை…! என்று அவர்களும் வேதனைப்படுவார்கள்.

காசைக் கொடுத்துத் தான் படிக்கச் செல்கின்றோம். அங்கே படிக்கும் எண்ணம் இல்லாது சிந்தனைகள் வேறு பக்கம் செல்லப்படும் பொழுது இந்த நிலை ஆகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் குருநாதர் காட்டிய வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை நமக்குள் அதிகமாக வலுவாக்கிக் கொண்டால் நம்மை அறியாது இயக்கும் குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்களிலிருந்தும் சஞ்சலங்களிலிருந்து விடுபட முடியும்.

அதே போல படிக்கும் ஆர்வத்தைத் திசை திருப்பும் மற்ற நண்பர்களின் உணர்வுகளிலிருந்து விடுபடலாம்.

தாய் தந்தையரும் தங்கள் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று கல்வியில் சிறந்த ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறன் பெற்று உலக ஞானம் பெறவேண்டும் என்று அடிக்கடி இந்த உணர்வுகளைப் பாய்ச்சுதல் வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் குழந்தைகளுக்குள் ஊடுருவி அவர்களை நல்வழிப்படுத்தும்.
2.கல்வியைச் சீராகக் கற்கச் செய்யும்.
3.உலக அனுபவத்தையும் பெறச் செய்யும்.

நேற்று நன்றாகத்தான் இருந்தேன்… ஏனோ தெரியவில்லை இன்று என் மனதே சரியில்லை என்போம்…! அடுத்து நாளை என்ன ஆகுமோ..? என்று இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் நம்மை இயக்குவதன் காரணம் என்ன…?

Image

healing-hands

நேற்று நன்றாகத்தான் இருந்தேன்… ஏனோ தெரியவில்லை இன்று என் மனதே சரியில்லை என்போம்…! அடுத்து நாளை என்ன ஆகுமோ..? என்று இப்படிப்பட்ட மாறுபட்ட உணர்வுகள் நம்மை இயக்குவதன் காரணம் என்ன…?

 

நாம் வெண்மையான துணியைப் போட்டுக் கொண்டு ரோட்டிலே நடந்து போகின்றோம். எங்கேயோ பட்ட தூசி அது காற்றிலே மிதந்து வந்து நம் சட்டை மீது பட்டு அழுக்காகின்றது.

மிளகாயைக் காய வைத்திருப்பார்கள். அதை உலர்த்திக் கொண்டு இருக்கப்படும் போது காற்றுக்குள் நெடி கலந்ததாகப் பரவி வரும். அந்தக் காற்றை நாம் சுவாசித்தால் “நச்… நச்…” என்று தும்முவோம்.

ஒரு இடத்தில் நல்ல வாசனையான பொருள்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். சந்தனமோ மற்ற பொருள்களிலிருந்து ஆவியின் அலைகள் வெளிப்பட்டுக் காற்றிலே மிதந்து வரும் அந்தப் பாதையில் ஒருவர் நடந்து சென்றால் அதைச் சுவாசிக்கப்படும் பொழுது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அதே பாதையில் வரப்படும் போது எனக்கு எப்படியோ இருந்தது. கப…கப… என்று இருந்தது. முதுகுப் பக்கமும் எரிச்சலாக இருந்தது என்பார்.

ஆனால் முதலில் வந்தவரோ இல்லை… அப்படி இருக்காது.. நான் அந்தப் பாதையில் தானே வந்தேன்.. எனக்கு ஒன்றும் இல்லையே…! நல்ல வாசனை தான் வந்தது என்பார்.

இது எல்லாம் ஏனென்றால் நொடிக்கு நொடி காற்றலைகள் மாறிக் கொண்டே இருக்கின்றது. அதைச் சுவாசிக்கும் பொழுது அதற்கொப்ப நம் சுவாசத்திலும் கலந்து நம்மையும் இயக்கத்தான் செய்யும். இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அதை போலத் தான் நாம் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வியாபாரத்தில் நல்ல இலாபத்தைப் பெருக்கி விடலாம் என்று எண்ணுவோம்.

ஆனால் கடைக்கு வரும் ஒரு சிலர் வீட்டிலே தன் குடும்பத்தில் ஏற்பட்ட துன்பமான எண்ணத்துடன் வருவார்கள். அவர்களுடைய பிழைப்புக்காக வேண்டி எப்படியும் சாமான் வாங்கித் தான் ஆக வேண்டும்.

கஷ்டத்துடன் வரப்படும் போது நம்மிடம் வந்து இந்த அரிசி என்ன விலைங்க…? பருப்பு என்ன விலைங்க…!” என்று கேட்கின்றார்கள்.

குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டத்திற்குத் தகுந்த மாதிரி அவர்கள் சொல்லும் போது நமக்குச் சரியாகக் (விவரம்) கேட்காது. அப்புறம் நாம் என்னய்யா…! கேட்கின்றீர்கள்….? என்று அழுத்திக் கேட்க வேண்டும்.

இந்த அரிசி தான் என்ன விலைய்யா…? என்று அவரும் அழுத்தமாகக் கேட்பார். அப்போது வீட்டிலே ஏற்பட்ட கஷ்டத்தால் கஷ்டமான உணர்வுகள் அவருக்குள் விளைந்தது நம்மிடம் வந்து கேட்கும் போது
1.அதே கஷ்டமான உணர்வுகள் நமக்குள் பட்டு
2.அதை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள்ளும் சேர்கின்றது.
3.ஆக ஒருவருக்கு ஒருவர் நாம் பிரிந்து செல்வதில்லை.
4.(அவர் கஷ்டத்ததைச் சந்தித்து துன்பப்படுகின்றார்… ஆனால் நாம் அந்தத் துன்பப்படுவோர் உணர்வைச் சுவாசித்துத் துன்பத்தை நமக்குள் விளைய வைக்கின்றோம்…!) முக்கியமானது

விண்ணிலே 27 நட்சத்திரங்களும் வானவீதியில் இருந்து வெளிப்படும் அந்த மற்ற விஷத்தின் தன்மைகளை முறித்து நாம் பிரபஞ்சத்திற்குள் அணுக்களானாலும் அந்த வட்டப் பாதையில் போகும் கோள் எதுவோ அது இழுத்து தன் உணர்வுடன் சேர்க்கின்றது.

உதாரணமாக சனிக் கோள் அந்தச் சக்திகளைப் பெற்று அதிலிருந்து வரும் உணர்வின் தன்மை நம் பூமிக்குள் வந்தால் பெரும் மழையாகப் பெய்கின்றது.

ஆனால் சனிக்கோளில் இருந்து வரக்கூடிய அந்த உணர்வுகள் நிலையை மற்ற கோள்களில் அதாவது புதன் கோளில் மோதும்போது வெடிப்பின் தன்மை அடைகின்றது.

நெருப்பின் மேல் நீரை ஊற்றினால் அது எப்படி வெடித்துச் சிதறுகின்றதோ அதைப் போல அடைகின்றது. இதைப்போல ஒவ்வொரு கோளிலும் சனிக் கோளின் தன்மைகள் படும் பொழுது அதற்கு எதிர் நிலையாகின்றது.

ஏனென்றால் புதன் கோள் சூரியனுக்கு அருகில் இருப்பதால் அந்த வெப்பத் தணல்களில் நீரின் சத்து பட்டவுடனே வெடிப்பின் தன்மை வரும்.

சில பாறைகளிலே நீரின் தன்மை அது படும் போது அது இஞ்சாத நிலைகள் ஏற்படும். ஆக மற்ற கோள்களினுடைய நிலைகளில் சனிக்கோளின் தன்மைகள் பட்டால் அது எதிர்த்து அந்த நீரின் தன்மையை மீண்டும் வெப்ப அலைகளாக மாற்றி விடும்.

நீரைக் கொதிக்க வைக்கும் போது நீரின் சத்து மாறி ஆவியாக மாறுகின்றது. இதைப்போல தான் சில கோள்களில் எதிர் நிலையாகின்றது.
1.இதைப் போன்று தான் நமக்குள்ளும்
2.ஒவ்வொரு விதமான குணங்கள் கொண்ட உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது எதிர் நிலையாகும்.

நாம் வியாபராம் நன்றாக இருக்கிறது என்று எண்ணி உட்கார்ந்து பேசிக் கொண்டு இருப்போம். ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் வேதனையுடன் நம்மிடம் வந்து அவரின் சங்கடத்தை எல்லாம் நம்மிடம் சொல்லிப் பேசிக் கொண்டிருந்த பின் அவருக்கு வேண்டிய சரக்கை நாம் எடுத்துக் கொடுத்தால் போதும்.

சிறிது நேரம் கழித்துப் பாருங்கள். உடலில் என்னமோ மாதிரி இருக்கின்றது. கிறு…கிறு…! என்று வருவது போல இருக்கின்றது. தும்மல் வருவது போல இருக்கிறது. உடலில் பளீர்…பளீர்..! என்று குத்துவது போல இருக்கிறது என்று சொல்வீர்கள்.

இந்த மாதிரி இருந்தது என்றால் அடுத்தாற்போல நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். வந்தவர் இதற்கு முன்னாடி எப்படி வந்தார்…? அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். வீட்டில் எப்படி இருக்கின்றார் என்று பாருங்கள். அப்போது அவர்கள் குடும்பத்தில் இந்த கஷ்டமான நிலை இருந்திருக்கும்.

வியாபார நிலைகளில் முதலில் நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருடைய பேச்சின் நிலைகளைக் கேட்டுணர்ந்ததனால் நம்மை அறியாமல் உடலில் இத்தனை மாற்றங்களும் வந்து விடுகின்றது. ஏனென்றால்
1.நம் பிரபஞ்சத்தில் உள்ள கோள்கள் எதுவும் தனித்து வாழ்வதில்லை.
2.ஒன்றின் தன்மை ஒன்றிற்குள் அது கலந்து ஒன்றின் சக்தியை ஒன்று எடுத்துத்தான்
3.எல்லாமே இணைந்த நிலைகளில் சுழன்று கொண்டு வாழ்கின்றது.

அதைப் போன்று தான் நாம் மனிதனாக இருந்தாலும் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது இத்தகைய நிலைகள் மாறிக் கொண்டே தான் இருக்கும்.
1.நேற்று இருந்த நிலை இன்று இல்லை…!
2.நேற்று மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்று துன்பப்படுவோருடைய நிலைகளைக் கேட்டால் நம் மகிழ்ச்சி காணாது போய்விடும்.

உதாரணமாக முன்னாடி ராஜீவ் காந்தியை வெடி குண்டு வைத்துக் கொன்று விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் சாதாராண நிலைகள் எல்லாம் மாறி எல்லாருக்கும் பதட்டங்களும் பயமும் பீதியும் ஏற்பட்டது.

அப்பொழுது ரோட்டில் போவதற்கே முடியாதபடி பய உணர்வுகள் அதிகமாகி ஒருவருக்கு ஒருவர் அதை வெளிப்படுத்தும் போது மனிதருக்குள் சஞ்சலமும் பயமும் அதிகமாக ஏற்பட்டது.

இந்த மாதிரி உணர்வுகள் சந்தர்ப்பத்தால் நம் நல்ல குணங்களுடன் சேர்த்து ஒவ்வொரு நொடியிலேயும் விஷத் தன்மைகள் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.

ஆனால் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும் எல்லோரையும் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள்.

நமது நண்பர் என்று மகிழ்ச்சியாக நாம் சந்திக்கின்றோம். ஆனால் அவரோ மற்றொரு இடத்தில் வெறுப்பாக வேதனையான சொல்களைக் கேட்டுவிட்டு இங்கே வருகின்றார்.

அவருடன் கலந்த அந்தச் சத்து… நண்பர் என்று பாசத்தோடு நாம் கலந்து உறவாடப்படும் போது அவர் உடலிலே இருக்கக்கூடிய உணர்வு நம் உடலிலே கலந்து விடுகிறது.
1.அவர் உடலில் அது அதிகமாக இருந்தாலும் அவர் உடலுக்குள் கலந்தது
2.இந்தப் பாசத்துடன் கலந்து நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
3.இப்படி நமது வாழ்க்கையில் அடிக்கடி வந்து விடுகின்றது.

ஆனாலும் உயர்ந்த ஆறாவது அறிவு கொண்ட நாம் எத்தகைய பொருளானாலும் அதைச் சமைத்துச் சுவையாக்கி உணவாக உட்கொள்ளத் தெரிந்தவர்கள்…!
1.கசப்பையும் நாம் சுவை கொண்டு தான் மாற்றுகின்றோம்.
2.காரத்தையும் சுவை கொண்டதாக மாற்றுகின்றோம்
3.காரலையும் புளிப்பையும் சுவை கொண்டதாக மாற்றுகின்றோம்.

காய்கறிகளைச் சுத்தப்படுத்தி அதை எப்படி அறுசுவையாகச் சமைக்கின்றோமோ இதைப்போல மனித வாழ்க்கையில் நாம் எல்லோருடன் பழகினாலும்
1.நம் ஆறாவது அறிவின் திறமை கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நம் உடலுக்குள் செலுத்திச் செலுத்தி
3.வரக்கூடிய துன்பங்களையும் வேதனைகளையும் அதனின் விஷத்தின் தன்மையைக் குறைத்தே ஆக வேண்டும்.

அடுத்தவர்களை முந்திக் கொண்டு நாம் முதலில் போக வேண்டும் என்ற “அவசர உணர்வுகள்…!” நமக்குத் தேவையா…?

Image

patience in meditation

அடுத்தவர்களை முந்திக் கொண்டு நாம் முதலில் போக வேண்டும் என்ற “அவசர உணர்வுகள்…!” நமக்குத் தேவையா…?

 

பஸ்ஸிலே செல்லும் பொழுது மணிக்கணக்கிலே நாம் பயணம் செய்வோம். ஆனால் நாம் இறங்க வேண்டிய இடத்திற்கு பஸ் வந்து நின்றவுடனே “வீட்டிற்குப் போக வேண்டும்…!” என்கிற இந்த அவசரம் முன்னாடி வந்து விடும்.

ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து கொண்டு தலை கை கால் மேலில் இடித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டு படுகின்ற அவஸ்தைகளைப் பார்க்கலாம்.

பத்து மணி நேரம் பஸ்ஸுக்குள் அமைதியாக உட்கார்ந்து இருப்போம். ஆனால் இறங்கும் பொழுது ஒரு நிமிடம் மற்றவர்கள் இறங்கட்டும். நாம் பின்னாடி இறங்குவோம்… என்ற பொறுமை வருவதில்லை. போட்டு பெட்டியையும் பைகளையும் வைத்து முட்டித் தள்ளிக் கொண்டிருப்போம்.

கீழே இறங்கி வண்டிக்காரனைப் பார்ப்போம். சொந்தக்காரர்கள் யாரும் வந்திருக்கின்றார்களா… இல்லையா…! என்று பார்ப்போம்.
1.கீழே இறங்கி அங்கே நின்று கொண்டே தான் இருப்போம்.
2.ஆனால் அந்த வண்டிக்குள் இருந்து இறங்குவதற்கு முன்னாடி அத்தனை அவசரம்.
3.மற்றவர்களைத் தள்ளி விட்டு நாம் முந்திக் கொண்டு போக வேண்டும்… என்ற நிலைகள் தான் வரும்.

இது எதைக் காட்டுகின்றது…? பிறரை ஒதுக்கும் நிலை தான் வருகின்றது. நம் செயலைப் பார்க்கும் பொழுது மற்றவர்கள் வெறுக்கும் நிலையும் பகைமையையும் தான் இது உருவாக்கும்.

நாம் ஒரு குழம்பு வைக்கும் போது குழம்பிற்குள் காரம் ஒதுங்கி விட்டால் அந்தச் சுவையின் தன்மை கெட்டுப் போகும். குழம்பிற்குள் உப்பின் தன்மை ஒதுங்கி விட்டால் அந்தச் சுவையின் தன்மை கெட்டு விடும்.

அதே போல வீட்டில் நாம் பலகாரத்தை எல்லாம் அழகாகச் செய்து அருமையாக வைத்திருக்கின்றோம். ஒரு பக்கம் இனிப்பான பதார்த்தத்தைச் செய்து வைத்திருக்கின்றோம், இன்னொரு பக்கம் காரமான பதார்த்தத்தைச் செய்து வைத்து இருக்கின்றோம்.

காரமான பதார்த்தத்தில் கொஞ்சம் அதற்கு உப்பைப் போட வேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம். பக்கத்தில் இருக்கின்ற பாட்டிலில் உப்புத் தண்ணீர் அதிகமாக இருக்கின்றது. உப்புத் தண்ணீரை எடுக்கும் போது “டபக்…!” என்று திறந்து விட்டால் இனிப்புப் பதார்த்தத்தில் சிந்திவிடுகிறது. பின் இனிப்புப் பதார்த்தத்தில் ருசி எப்படி இருக்கும்…?

இதைப் போன்று தான் நாம் எடுக்கும் அவசர உணர்வின் தன்மையால் நாம் எவ்வளவு பக்குவப்படுத்திச் செய்திருந்தாலும் தீமையான விளைவுகள் தான் வாழ்க்கையில் வருகின்றது. அந்தப் பொறுமை இல்லாததால் எத்தனையோ வகைகளில் சிக்கித் தவிக்கின்றோம்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஞானிகள் கோவிலைக் கட்டி அருள் சக்திகளை எல்லோரும் பெறும்படி செய்தார்கள்.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். என் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

இவ்வாறு எண்ணி விட்டு
1.நாங்கள் பார்க்கும் குடும்பங்களில் எல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
2.அந்தக் குடும்பத்தில் உள்ளோர் உடல் நலம் பெற வேண்டும்
3.அவர்கள் தொழில் வளம் பெருகி மகிழ்ச்சியான நிலைகள் அந்தக் குடும்பத்தில் ஏற்பட வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் மெய் ஒளி மெய் ஞானம் பெறவேண்டும் என்று
5.இதை எண்ணிக் கொண்டே இருந்தால் நமக்குள் இந்தச் சக்தி கூடுகின்றது.
6.மற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணம் வளர வளர நமக்குள் அவசர உணர்வுகள் எதுவும் நம்மை இயக்காது
7.தீமையான விளைவுகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

ஆகவே இதைப் போன்ற நிலையில் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளைத் துடைப்பதற்குத் தான் மெய் ஞானிகளின் சக்திகளை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.