தன்னைக் காக்கவும் நல்ல குணங்களைக் காக்கவும் அதற்குகந்த சூட்சம சக்தி “அகஸ்தியனின் அருள் சக்தி தான்…”

Agastyar meditation

தன்னைக் காக்கவும் நல்ல குணங்களைக் காக்கவும் அதற்குகந்த சூட்சம சக்தி “அகஸ்தியனின் அருள் சக்தி தான்…”

அன்று அகஸ்தியன் தாய் கருவில் சிசுவாக இருக்கப்படும் போது தாய் சுவாசித்த
1.நஞ்சினை வெல்லும் பல மூலிகைகளின் மணங்களும்
2.மின்னலின் வீரியத்தைத் தணிக்கும் வேர்களின் மணங்களும் அவனுக்குக் கிடைக்கின்றது.

பிறந்த பின் அவனின் வளர்ச்சியில் ஐந்து வயதிற்குள் இருபத்தியேழு நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி மின்னலாக வருவதை நேரடியாகக் காணுகின்றான்.

எங்கிருந்து இந்த மின்னல் தோன்றுகின்றது…? மின்னல் தோன்றக் காரணம் என்ன…? என்ற நிலைகளை அந்த இளமையிலே அறிய ஆரம்பித்தான்.

இருபத்தேழு நட்சத்திரங்களின் சக்தியைச் சூரியன் எடுத்து ஒளிச் சுடராக இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குகின்றது. அந்த இருபத்தேழு விதமான உணர்வின் தன்மையை மனிதன் தனக்குள் எடுத்துக் கொண்டால் அது தான் முழுமையடையும் பருவம் என்பதை அறிந்து கொள்கிறான் அகஸ்தியன்.

நவக் கோள்கள் என்பது அந்தக் கோள்களின் உணர்வு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு அடக்கம் உண்டு. நம் எண்ணங்கள் அனைத்தும் நட்சத்திரங்கள். நம் உடல் உறுப்புகள் அனைத்தும் கோள்கள்.

இருதயம் என்றால் அதில் பல வகைகளைச் சேர்த்து அதனின் உபகரணங்கள் உண்டு. கல்லீரல் என்றால் அதற்குள் பல வகை சேர்த்து அதற்கு உபகரணங்கள் உண்டு. மண்ணீரல் என்றால் அதற்கும் உபகரணங்கள் உண்டு.

அதாவது நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களுக்கு உபகோள்கள் உள்ளது போல் நம் உடலிலும் உண்டு. வியாழன் கோளிற்கு இருபத்தேழு நட்சத்திரங்களையும் கவரக்கூடிய சக்தி அதற்கு உண்டு. அங்கே எப்படி இந்த இயற்கையின் நியதிகள் இருக்கின்றதோ நம் உடலிலும் இதே மாதிரி வருகின்றது.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உணர்வுக்குத்தக்க உடல்கள் மாறி ரூபங்கள் மாறி குணங்கள் மாறி இப்படித்தான் சந்தர்ப்பத்தால் இன்று நாம் மனிதனாக வந்துள்ளோம்.

இப்போது மனிதனான பிற்பாடு முதலில் நன்றாக இருக்கிறோம். வளர்ச்சி அடைந்த பின் நோய் வருகிறது. மனிதருடைய ரூபமே மாறுகின்றது. ஏனென்றால் சந்தர்ப்பத்தில் எதையெதையெல்லாம் சந்திக்கின்றோமோ நாம் நுகர்ந்த உணர்விற்கொப்ப அதெல்லாம் வருகிறது.
1.சந்தர்ப்பத்தால் மோதி அதற்குத் தக்க ரூபங்கள் மாறியது.
2.அதன் வழி இன்று மனிதனாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
3.ஆனால் உயிர் மட்டும் மடிவதில்லை.
4.உடல்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால் கூர்ந்து கவனித்து அதை நமக்குள் பதிவு செய்து கொள்கின்றோம். அதே போல இப்போது யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனிக்கும்போது அது உங்களுக்குள் பதிவாகின்றது.

தீமையிலிருந்து விடுபடும் அந்த நல்ல சக்தி பெற வேண்டும் என்று ஆசையுடன் நீங்கள் இருந்தால் அந்த ஆசைக்குத்தக்க நுகரப்படும் பொழுது அது உங்களுக்கு பதிவாகும். எல்லாவற்றுக்குமே நம் ஆசைதான் காரணம்.

ஏனென்றால் இதைப் படிக்கும் பொழுதே சிந்தனைகள் “வீட்டில் குழந்தை தனியாக இருப்பான்…!” என்ற ஆசையில் அவனைப் பார்க்க வேண்டுமே… என்ற எண்ணத்திலிருந்தால் இந்த உபதேசம் சுத்தமாக உங்களுக்குள் பதிவாகாது.

அந்த எண்ணம் உச்சக்கட்டம் அடைந்தவுடனே தன்னை அறியாமலே இதைக் கேட்கவிடாது எழுந்து போகச் சொல்லும். ஆகவே நம்முடைய ஆசைகள் தான் இங்கே இயக்குகின்றது. அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது.
1.சந்தர்ப்பம் தான் வாழ்க்கையாக அமைகின்றது.
2.எல்லாமே சந்தர்ப்பம் தான்…! என்றாலும்
3.மெய் ஞானிகளின் அருளை நீங்கள் பெறுவதற்காகத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை யாம் ஏற்படுத்துகின்றோம்.

ஏனென்றால் இன்று உலகம் முழுவதற்கும் தீவிரவாதம் தலை தூக்கி இருக்கிறது. அதை நீங்கள் நுகர்ந்தாலே அந்த உணர்வு உங்களுக்குள் வந்து உங்களுக்குள்ளும் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.

அவன் எங்கேயோ செய்தான். நீங்கள் அதை நுகர்ந்தீர்கள்.. உணர்ந்தீர்கள்… அறிந்தீர்கள். ஆனால் நீங்கள் நுகர்ந்த தீவிரவாதத்தின் உணர்வு உங்கள் உடலிற்குள் கருவாகி அணுவாகி உங்கள் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்துடன் சண்டை போட ஆரம்பித்து விடுகின்றது.

“எங்கேயோ நடக்கிறது…!” என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் இப்படி மாறுகின்றது. நம் உடலுக்குள் இத்தகைய தீவிரவாதம் வந்தால் பல விதமான செயல்களும் புது விதமான நோய்களும் வருகின்றது.

நம் குணங்கள் மாற்றம் அடைகின்றது. வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கின்றது. எல்லாவற்றையும் இழந்த பின் இனி என்ன…! என்று விரக்தி அடைகின்றது. விரக்தி அடைந்த பின் கடுமையான தவறு செய்யும் நிலைக்கு வந்து இப்படி இன்றைய மனிதனின் நிலைகள் மாறி எங்கெங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது.

ஆகவே காற்று மண்டலம் மிகவும் விஷத் தன்மையாகப் போய்விட்டது. தேடிய செல்வம் எவ்வளவோ இருந்தாலும் அதைப் பாதுகாக்க முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. (யாராக இருந்தாலும் சரி இந்த நிலை தான்)
1.கையில் பணம் இருந்தால் உடலுக்கு ஆபத்து… உயிருக்கு ஆபத்து…!
2.இப்படி எத்தனையோ நிலை இன்று இருக்கின்றது.

இதிலிருந்து விடுபட்டுத் தன்னையும் காக்க வேண்டும். நம் நல்ல குணங்களை அழிந்திடாது பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்குரிய ஒரு சக்தி வேண்டும் என்பதற்காகத் தான் அகஸ்தியனின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

அகஸ்தியன் ஒளியின் உடலாக மாறி எப்படித் துருவ நட்சத்திரமாக இன்றும் இருக்கின்றான் என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். அதை உணர்த்துவதற்காக வேண்டி குருநாதர் “நீ மின்னலைப் பாருடா…!” என்றார்.

நான் (ஞானகுரு) மின்னலைப் பார்த்தால் என் கண் பார்வைப் போய்விடும் என்ற பயத்தால் பார்க்க மறுத்துக் கொண்டு அவரிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தேன்.

அப்போது என்னிடம் பச்சிலைகளையும் சில வேர்களையும் என் கையில் கொடுத்து அதன் பின் “மின்னலைப் பார்க்கும்படிச் சொல்கிறார்…!” அப்படியே ரொம்ப அழகாக ஆனந்தமாக இருந்தது. அதைப் பற்றி அறியும் ஆற்றலும் எனக்கு வந்தது.

இப்படித் தான் அகஸ்தியனுக்கும் அவன் தாய் கருவிலே ஆற்றல்களைப் பெற்ற பின் அவன் பிறந்த பின் அனைத்தையும் உணரும் சக்தி அவனுக்குள் வந்தது.

அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அதிலிருந்து வரக்கூடிய உணர்வை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகின்றது. அகஸ்தியன் தன் வாழ் நாளில் எப்படித் தீமைகளை நீக்கினானோ அந்த உணர்வுகளையும் சூரியன் கவர்ந்து பூமியில் பரவச் செய்து கொண்டிருக்கிறது.

அந்த அகஸ்தியன் உணர்வுகளை எடுப்பதற்காக குருநாதர் எனக்கு அந்தச் சக்தியைக் கொடுத்து
1.என் உடலுக்குள் அகஸ்தியனின் ஞான வித்தை ஊன்றினார்.
2.அதை வளர்க்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தினார்.
3.அதை எடுத்து கொண்டு வளர்த்துக் கொண்டேன்.

அதைப்போல உங்களுக்கும் அகஸ்தியன் உணர்வைப் பெறும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றோம். நீங்கள் நுகர்ந்தறியப்படும் போது உங்களுடைய ஒவ்வொரு அணுக்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறேன்.

ஆனால் அதை எல்லாம் பெறவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வேண்டும். தீமைகளை நீக்கக்கூடிய அந்த அருள் சக்தி பெற வேண்டும். இருளை நீக்கும் அந்த அருள் பெற வேண்டும் என்ற இந்த ஆசையுடன் இருந்தீர்கள் என்றால் இது நல்ல பலனைத் தரும்.
1.ஆசையை எங்கேயோ வைத்துக் கொண்டு தலை வலிக்காகவும் உடல் வலிக்காகவும் இதை எண்ணி எடுக்க வேண்டாம்.
2அப்படி எண்ணி எடுக்கவே கூடாது.

நீங்கள் எல்லோரும் அந்த அருளைப் பெற வேண்டும். உங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று உங்கள் ஒவ்வொரு உறுப்புகளையும் இயக்கக்கூடிய அணுக்களுக்கு அது குறி வைத்து அந்த உணர்ச்சிகளைத் அங்கே தூண்டும்படி செய்கின்றோம்.

இப்போது யாம் உபதேசிப்பதைக் கூர்ந்து கவனித்து நீங்கள் பதிவு செய்து கொண்ட பிற்பாடு மீண்டும் அதை எண்ணப்படும் போது உங்கள் “கண்கள்… சக்தி வாய்ந்த ஆண்டெனாவாக மாறுகின்றது….!”

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களிடம் பதிவு செய்தனோ அதனின் அலைகளை காற்றிலிருந்து பிரித்து நீங்கள் சுவாசிக்கும் பொழுது உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது. ஒரு நல்ல சிந்தனை உள்ளதாக மாற்றுகின்றது.

இந்தப் பழக்கம் வந்துவிட்டால் அது காற்று மண்டலத்தில் இருப்பதைத் தன்னாலே பிரித்து எடுக்க ஆரம்பித்துவிடும். எவ்வளவு கவலையாக இருந்தாலும் கூட அதை மாற்றி மகிழ்ச்சியான உணர்வைத் தோற்றுவிக்கும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்

தலைக் காவிரியில் அகஸ்தியர் அமர்ந்த இடத்தில் நீர் எப்படி உற்பத்தியாகின்றது…! என்று குருநாதர் காட்டினார்

Agatheeswar Talaikaveri

தலைக் காவிரியில் அகஸ்தியர் அமர்ந்த இடத்தில் நீர் எப்படி உற்பத்தியாகின்றது…! என்று குருநாதர் காட்டினார்

குருநாதர் மெய் ஞானத்தின் உணர்வுகளை எமக்கு (ஞானகுரு) நேரடியாக் கொடுக்கவில்லை. சூட்சமமாகவே கொடுத்தார். ஏனென்றால் அவர் “பைத்தியம்…!” போன்று இருக்கப்படும் போது அவர் காலிலே சில வேஷ்டிகளையும் வேறு துணிகளையும் பல நிறங்களில் கிழித்து கட்டிக் கொள்வார்.

பல நிறங்கள் கொண்ட துணிகளைக் கிழித்துக் கிழித்து ஏன் அவ்வாறு கட்டுகிறார் என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் பைத்தியத்தைப் போல அவர் நடித்துக் கொண்டு இருநதார்.

ஆகையினாலே நான் கேட்டாலும் ஒரு நிமிடம் நன்றாகப் பேசுவார். அடுத்த நிமிடமும் பைத்தியக்காரர் போல எதை எதையோ சொல்வார். அவரைப் பார்க்கும் பொழுது என்னுடைய எண்ணமும் அப்படித்தான் இருந்தது.

துணிகளைக் காலில் கட்டிக் கொள்ளும் போது
1.அவர் ஒரு பரிபாஷையில ஒன்று சொல்வார்.
2.அப்பொழுது அவர் சொல்லும் பரிபாஷை எனக்கு ஒன்றுமே விளங்காது.

அதே சமயத்தில் காலில் துணிகளைக் கட்டியது போல் சில செடி கொடிகளிலும் கட்டுவார். அந்தச் செடி கொடிகளை என்னிடம் காட்டி இதற்கெல்லாம் இது எல்லாம் யாருடா சோறு போடுவது…? என்பார்.

அது சோறே சாப்பிடாது சாமி…! என்று நான் சொல்வேன். சோறு சாப்பிடாமல் அது எப்படியடா இப்படி வளர்ந்திருக்கும்…? என்று என்னென்னமோ அவர் சொல்வார். அவர் சொல்வதே எனக்குப் புரியாது.

புரியாத நிலைகள் கொண்டு ஒவ்வொன்றாகக் கேட்டுக் கேட்டு தெரியுமாடா… தெரியுமாடா…? என்று கேட்பார். நான் தெரியவில்லை என்றால் உடனே இரண்டு உதை கொடுப்பார். அந்த அடி வாங்கும் போது அவருடைய நினைவுதான் எனக்கு வரும். இப்படித் தான்
1.அவருடைய எண்ணத்தை எனக்குள் அது செருகச் செய்து கொண்டே வந்தார்.
2.இதெல்லாம் அவர் உடலுடன் இருக்கும் பொழுது காட்டிய நிலைகள்.

அவர் உடலை விட்டு ஒளியாகச் சென்ற பின் அவர் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு அகஸ்தியர் வாழ்ந்த இடங்களுக்குப் போனேன்.

தலைக் காவிரியில் அகஸ்தியருடைய நிலைகள் நிறைய உண்டு. பாக மண்டலம் என்று ஒன்று உண்டு. அந்தப் பாக மண்டலத்திலே உச்சிமலை. அதிலே பார்த்தோம் என்றால் தண்ணீர் எவ்வளவு எடுத்தாலும் குறையாது.

அந்த உயரமான மலைக்குக் கீழ தான் மற்ற மலையெல்லாம் தணிந்து இருக்கின்றது. ஆனால் இந்த மலை உச்சியிலே அந்தப் பள்ளம் இருக்கின்றது. அதில் தண்ணீர் வந்து கொண்டே இருக்கின்றது.

அந்த நீரின் தன்மை அது எங்கிருந்து எப்படி வருகின்றது…? என்று முதன் முதலிலே அதை அறிவதற்காக என்னை அங்கே செல்ல வைத்தார்.

நான் ஜெபத்தில் இருக்கப்படும் போது அங்கே நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எல்லாம் காண முடிந்தது. உயரமான பகுதியில் மேகங்கள் அங்கே செல்லும் போது
1.அந்த மலையில் இருக்கக்கூடிய காந்தம் அதாவது நீர்ப் பசை உண்டான அந்தச் சத்து
2.அந்த மேகங்களைக் கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகின்றது.
3.அங்கே மலையில் இருக்கும் சில மரங்களுக்கும் அந்த மேகங்களை இழுக்கும் இதே சக்தி வருகின்றது.

அந்த மேகங்களை இழுக்கப்படும் போது அந்த நீரைத் தனக்கு உணவாக எடுத்துக் கொண்டாலும் அந்த மரத்திலிருந்து வடிந்து அது மீண்டும் நீராக ஓடுகின்றது. அதனுடைய தன்மைகள் வேறு.

அந்த மலை இருக்கக்கூடிய இடத்தில் ஆதியிலே அகஸ்தியன் உட்கார்ந்து ஜெபிக்கும் பொழுது காற்றாகப் பறக்கும் அந்த மேகத்தை இழுத்து நுகர்ந்து அவர் உட்கார்ந்த இடத்தில் இருக்கும் பாறைகளில் எல்லாம் பதிகின்றது. பதிந்த இடங்கள் அனைத்துமே மேகங்கள் போகும் போது அதைக் கவர்ந்து அது நீராக வடியச் செய்கின்றது.

நாம் ஒரு சமையல் செய்யும் போது நீர் கொதித்து ஆவியாகப் போகின்றது. மேலே ஆவியாகப் போவதை இடைமறித்து ஒரு குளிர்ந்த தட்டை வைத்தால் அங்கே நீராகச் சொட்டுகின்றது. நாம் எந்தச் சத்தினை ஆவியாக மாற்றுகின்றோமோ குளிர்ந்த தட்டின் மூலம் குறுக்காட்டும் ஆவியாக போன சத்துகள் நீராக வடிகின்றது.

இதைப்போன்று தான் அன்று அகஸ்தியன் நுகர்ந்த அருள் சக்திக:ள் அங்கே மேகமே இல்லாத பாறைகளில் பதிந்த பின் அவனின் மணங்கள் (மூச்சலைகள்) பட்டவுடனே குவித்து மேகங்களாக மாறுகின்றது. மேகங்களாக மாறிய பின் தன் உணர்வின் சக்தியை இழுத்து இதற்குள் உறைந்தபின் நீராக மாறுகின்றது.

இது எல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு உணர்த்திய உண்மை நிலைகள். அவர் பித்தனைப் போல இருந்தாலும் அவர் காலிலே கட்டிய துணிகளும் அந்தக் கயிறும் அங்கே தெரிகின்றது. குருநாதரின் உருவமும் தெரிகின்றது.

அந்த இடத்தில் இருக்கக்கூடிய பச்சிலைச் செடிகள் சில மரங்களின் மீதும் அவர் காலில் கட்டிய அதே துணிகள் கட்டப்பட்டிருக்கின்றது.
1.அப்போது குருவின் நினைவு எனக்கு வருகின்றது.
2.அவர் முதலில் பரிபாஷையில சொன்னதெல்லாம் எனக்குப் புரியும் நிலைகளாக வருகின்றது.

ஆனால் அவர் உயிருடன் இருக்கப்படும் போது இதை எல்லாம் எனக்கு உணர்த்தவில்லை. இருந்தாலும் முதலில் அடி கொடுத்தார். அந்தந்த இடங்களுக்குச் செல்லப்படும் பொழுது அவரின் நினைவு வரும் பொழுது அக்காலத்தில் வாழ்ந்த மெய் ஞானிகளின் உண்மைகளை அறியும் நிலை வந்தது.

அகஸ்தியன் அவன் ஆரம்பக் காலங்களில் அவன் எங்கெல்லாம் சென்றானோ அந்த மலைகள் இருக்கக்கூடிய பகுதிகளில் எல்லாம் இதைப் போன்று நீர்கள் வரும். மைசூர் எல்லையிலும் இதே போல ஒரு இடம் உண்டு.

நாழிக் கிணறு மாதிரி இருக்கும். அதில் தண்ணீர் எடுக்க எடுக்க வந்து கொண்டே இருக்கும். எடுத்தவுடன் அதே அளவு நிரம்பிவிடும். உச்சி மலை தான்.. அங்கே வேறு எதுவும் இல்லை.

அன்று அகஸ்தியன் அவன் சென்ற இடங்களெல்லாம் தான் எடுத்துக் கொண்ட ஜெப நிலைகள் கொண்டு ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகளும் விண்ணிலிருந்து அது எப்படிப் பூமிக்குள் வருகின்றது…? என்பதை உணர்ந்தான்.

அதே சமயத்தில் வான்வீதியில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அலைகளும் வெளிப்பட்டு வரும் பொழுது அதனின் நேர்ப் பார்வை கொண்டு குறிப்பிட்ட அட்சரேகையின் சுழற்சி வட்டததிற்குள் அது எப்படிச் செல்கிறது…? என்பதை அறிகின்றான் அகஸ்தியன்.

ஏனென்றால் நட்சத்திரங்கள் விண்ணிலிருந்து வரக்கூடிய விஷத்தின் தன்மையை முறியடித்து பிரபஞ்சத்திற்குள் தணிந்த நிலைகளாக வரப்படும் போது அந்த அலைகளுக்கு மத்தியிலே செல்லும் ஒவ்வொரு கோளும் இந்தச் சக்தியை தனக்குள் நுகர்ந்து அது எப்படிச் செயல்படுகின்றது…?

அவ்வாறு கவரும் கோளுக்குள் சத்துகள் ஒன்றுடன் ஒன்று கலந்து அதனின் உணர்வின் சக்தி எப்படி மாறுகின்றது…? அந்தக் கோள் வெளிப்படுத்தும் சக்தியை அதற்கு அடுத்தாற்போல கீழ் வட்டத்திற்குள் இருக்கக்கூடிய மற்ற கோள்கள் அது எப்படிப் பருகுகின்றது…?

கடைசியாக எல்லாம் சேர்த்துச் சூரியனிடம் வரப்போகும் போது ஒன்று இங்கேயும் ஒன்று அங்கேயும் என்ற நிலைகள் நட்சத்திரங்களின் நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாறி இருக்கும் நிலைகள் கொண்டு அது எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையை அகஸ்தியர் உணர்ந்தார்.

1.அந்த அகஸ்தியர் அமர்ந்த இடத்தில்
2.குரு காட்டிய நிலைகள் கொண்டு நான் அமர்ந்து தியானிக்கும் பொழுது
3.அகஸ்தியன் கண்ட விண்வெளியின் ஆற்றலையும் மற்ற பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அறிய முடிந்தது.

அன்று ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்த நிலைகளை அந்த மிக மிகச் சக்தி வாய்ந்த அந்த நிலைகளை குரு பலத்தால் நுகர்ந்தறிய முடிந்தது. ஏனென்றால் மிக மிகச் சக்தி வாய்ந்த ஞானிகளினுடைய உணர்வின் சக்திகளை நாம் லகுவில் மதிப்பிட முடியாது.

காரணம் சாதாரண மக்களின் பிடியில் சிக்காதபடி அவர்கள் விண் உலகம் சென்றவர்கள். விஷம் எப்படி மற்றொன்றை வீழ்த்துகின்றதோ அதைப் போல தீய விளைவுகளைச் சுட்டுப் பொசுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தான் அந்த மெய் ஞானிகள்…!

அவர்களுடைய உணர்வை இந்தச் சாதாரண மனித வாழ்க்கையில் இருக்கும் நாம் பெற வேண்டும் என்றால் நம் நினைவலைகளைச் சுத்தமாக மாற்றிவிடும்… செயலற்ற நிலைகளாக ஆகிவிடும்….! நம்முடைய சாதாரண எண்ணத்தால் அதைக் கவர்ந்து இழுக்க முடியாது.

அரசர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விஷத்தை சிறுகச் சிறுகக் கொடுத்து அந்த விஷத்தின் தன்மையை உடல் முழுவதும் சேர்க்கச் செய்து அதன்பின் பெரும் கொண்ட விஷத்தைக் குடித்தாலும் தன் குழந்தைகளைப் பாதிக்காத வண்ணம் அன்று எப்படிச் செயல்படுத்தினார்களோ அதைப் போன்று தான் குருநாதரும் எனக்குள் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை பெறும்படி செய்தார்.

முதலிலே அவர் உணர்த்தும் போது வேறோரு நிலையில் தான் எனக்குக் காட்டினார். பின்பு அதன் வழியில் சிறுகச் சிறுக என்னுடைய எண்ணத்தின் ஏக்கத்தை நிலைபடுத்தச் செய்து அகஸ்தியர் சென்ற இடங்களுக்கெல்லாம் மலைப் பிரகாரங்களில் சுற்ற வைத்தார்.

ஆனால் அப்படிச் சுற்றும் போது பல பல கஷ்டங்களும் பல கடுமையான இன்னல்களும் என்னைத் தாக்கும் நிலைகளாக வந்தது. பின் அதிலிருந்து “எப்படியும் மீள வேண்டுமே…!” என்ற ஏக்கம் வரும் பொழுதுதான் அங்கே அமர்ந்து அமைதி கொண்ட நிலையில் அந்த மெய் ஞானிகளுடைய ஆற்றலை அணுகும் நிலைகள் எனக்குள் வந்தது.

1.விஷத்தை முறிக்கும் அந்த அகஸ்தியனின் மூச்சலைகளை நுகர்ந்து
2.எனக்குள் வந்த துன்பங்களையும் வேதனைகளையும் அகற்றி
3.மெய் ஒளியைக் காணும் அந்த உணர்வின் ஆற்றலை எனக்குள் பெருக்க முடிந்தது.

அப்படிப் பெருகிய ஆற்றலைத் தான் நீங்கள் துன்பம் என்று வரும் போதெல்லாம் உங்களுக்குள் உபதேசமாகச் சிறுகச் சிறுகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.

இதைப் பெறவேண்டும் என்று எந்த அளவிற்கு நீங்கள் ஏக்கமாக இருக்கின்றீர்களோ அந்த அளவுக்கு அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களை உங்களைச் சுவாசிக்கச் செய்து கொண்டிருக்கின்றோம்.

எந்தத் துறையாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டக் கூடியவன் அகஸ்தியன் தான்…!

Sage Agastiyar

எந்தத் துறையாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டக் கூடியவன்  அகஸ்தியன் தான்…!

“என்றும் பதினாறு ” என்ற நான்கு மணி நான்கரை மணிக்கு எல்லாம் நமக்கு இதெல்லாம் உணர்த்தி

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் மனிதனாகத் தோன்றிய நிலையில் முதன் முதலில் விண்ணின் ஆற்றலைப் பெற்று என்றும் பதினாறாகத் துருவ நட்சத்திரமாக ஆனது அகஸ்தியன்.

“அகம்…!” என்பது அணுவிற்குள் இருக்கக்கூடிய ஆற்றலை அறிந்து ஒளியின் தன்மையாகத் தனக்குள் பெருக்கிக் கொண்டதைத்தான் “அகஸ்தியன்…” என்று காரணப் பெயர் வைத்தார்கள் பின் வந்த ஞானிகள்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்தார்கள் என்று சொல்கின்றோமே அதே மாதிரி மனித உடலுக்குள் இருக்கக்கூடிய அணுவின் இயக்கத்தை உணர்ந்து மெய் ஒளியின் தன்மையைத் தனக்குள் சேர்த்து பூமி ஆகாரமாக எடுக்கும் அந்தத் துருவத்தின் வாசலை எல்லையாக வைத்துத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அந்த அகஸ்தியன்.

1.கடலில் போகும் மனிதர்களுக்கு வழி காட்டி அவன்தான்
2.மனிதனுடைய சிந்தனை அழியாமல் பாதுகாத்துக் கொண்டு வருகின்றவனும் அவன் தான்
3.மனிதன் மெய் ஞானத்தின் தன்மை பெறுவதற்கு வழி காட்டிக் கொண்டிருப்பதும் அவன் தான்.
4.விஞ்ஞானத்திற்குப் போனாலும் அவன்தான். ஆனால் விஞ்ஞானம் அழிந்தாலும் அந்த அகஸ்தியன் கொடுக்கும் ஞானத்தின் நிலைகள் என்றுமே அழியாது.

விஞ்ஞானத்தின் விளைவுகளால் இனி வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் அந்த அகஸ்தியரின் அருளாற்றல்களை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

இந்தப் பூமியும் சூரியனும் மற்ற நிலைகளும் அழியும் தன்மைக்கு வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இவர் என்ன சொல்கிறார்…! மெய் ஞானத்தினால் என்ன செய்ய முடியும்…? என்று எண்ணாதீர்கள்.

விஞ்ஞானத்தில் வரக்கூடிய எல்லாவற்றையும் நீங்கள் மடக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.

நாமெல்லாம் இன்று இப்படி இருக்கிறோம். தியானம் செய்து சக்தியைப் பெற்று நாம் என்ன செய்யப் போகிறோம்…? என்று நினைக்க வேண்டாம். சிறு குழந்தையிலிருந்து அனைவருமே அதைப் பெற முடியும். தன்னம்பிக்கை கொள்ளுங்கள்.

1.உங்கள் தாய் தந்தையைக் கடவுளாக எண்ணுங்கள்.
2.உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணுங்கள்
3.உங்கள் உடலைக் கோவிலாக மதியுங்கள்.
4.நாம் முன் சேர்த்து கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உரு பெற்றோம் என்று பெருமிதப்படுங்கள்.

மிருக நிலையில் இருந்து நாம் மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்.
1.இனி நாம் ஒளி நிலை பெறுவோம்.
2.அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைவோம்
3.அந்த அகஸ்தியன் காட்டிய அருள் வழியிலே செல்வோம் என்ற இந்த உணர்வை நீங்கள் பூஜித்துப் பாருங்கள்.

இந்த வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்ததன் பலனை நீங்கள் அடையலாம்.

அகஸ்தியன் கண்ட பிரபஞ்சத்தை நீங்களும் காட்சியாகக் காணுங்கள் – “பயிற்சி”

Solar system - sages'

அகஸ்தியன் கண்ட பிரபஞ்சத்தை நீங்களும் காட்சியாகக் காணுங்கள் – “பயிற்சி” 

அகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும் அது எவ்வாறு இயங்குகின்றதென்ற நிலையை இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நாம் தியானத்தின் மூலம் நாம் பார்ப்போம்.
1.“ஈஸ்வரா…!” என்று உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.
2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட ஞான ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம் இருங்கள்.

இப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும் போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும் பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது நினைவாக்குவதற்கும் கவர்வதற்கும் எளிதாக இருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) எப்படி இந்த நிலையைப் பார்க்கச் சொன்னாரோ அதேபோல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி அதனின் துணை கொண்டு
1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது என்ற நிலையை
2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.

கண்களை மூடி அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை இப்போது நீங்களும் நுகருங்கள்.

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

இருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம் சூரியனைச் சுழன்று பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள் தெரியும்.

அதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.

அகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.

நட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று மோதும் போது பல வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.

அப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள் பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.

கேதுக் கோள்:-
நட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப் பார்க்கலாம்.

இராகுக் கோள்:-
நட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.

சனிக் கோள்:-
மேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

சனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள் மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.

அந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப் பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக இருக்கும்.

வெள்ளிக் கோள்:-
இதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து
1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக் கதிர்கள் பாயுமோ அதைப் போன்று
2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித் தன்மையாகத் தெரியும்.

வியாழன் கோள்:-
இவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.

வியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள் சுற்றிவரும்.
1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் போன்று
2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.

புதன் கோள்;-
சூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.

செவ்வாய்க் கோள்;-
இப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்களை வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.

இவ்வகையில் கலவைகளாகி பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின் நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.

நமது பூமி:-
துருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும் சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.

இவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.

சூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.

சந்திரன்:-
பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).

இவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக் கண்டுணர்ந்த உண்மைகளை அது
1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்
2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக
3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.

நமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.

27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும் அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது
1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்
2.இதைப்போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக் காணுங்கள்.

உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால் செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்
1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி
2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.

வான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்
1.அகஸ்தியன் உணர்வுகள் இணையும்.
2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி “அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால்” பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்…!

Agastya Sage Rishi

அகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்…!

துருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றவர். இருளை நீக்கி நஞ்சை வென்று மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறியவர். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைச் சொல்லும் போது இப்பொழுது உங்களிடம் என்ன வாசனை வருகின்றது…? என்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் உங்களுக்குத் தகுந்த மாதிரி
1.பல பல பச்சிலை வாசனைகள் வரும்…!
2.ரோஜாப்பூ வாசனை வரும்…!
3.தீமையை நீக்குகின்ற உடலுக்குள் விஷக் கிருமிகளை நீக்குகின்ற பல தாவர இன மூலிகைகளின் வாசனை வரும்….!

வருகின்றதா…?.

ஏனென்றால் அந்த அகஸ்தியன் உணர்வுகளைச் சொல்லப்படும் போது இங்கே நமக்கு முன்னாடி காற்றில் இருக்கிறது. அந்த உணர்வலைகள் உங்கள் ஈர்ப்புக்குள் (சுவாசத்திற்குள்) வந்து சேர்கிறது.

ஆனால் உங்களால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட
1.நுகரும் போது உணர்ச்சிகளால் அறிய முடியும்.
2.புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும்
3.அந்த ஆற்றல்கள் உடலில் ஊடுருவுவதும் அது தெரியும்.

சிலர் மணத்தால் அறியலாம்…. சிலர் உணர்வால் அறியலாம்…. சிலர் உணர்ச்சியால் அறியலாம்….! அதாவது உணர்ச்சி என்கிற போது உடலுக்குள் அது இயக்கச் சக்தியாக மாறும்.

அப்போது நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வரும். உங்களுக்குள் அது வந்து சேர்கின்றது. சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா….!

உதாரணமாக நேரம்… காலம்… என்ற நிலையில் ஜாதகக்காரன் ஜோசியக்காரன் சொன்னதை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொண்டோம் என்றால் அது நமக்குள் விளைந்து அதுவாகின்றோம்.

தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் உணர்வை நமக்குள் பெற்றால் நாமும் ஞானியாகின்றோம்.

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பார்க்கும் போதெல்லாம் ஞானிகளின் உணர்வை நுகர்வதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும்.

மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் எல்லாம் சொல்லி கேட்டு முடித்தவுடனே “டக்…” என்று புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று சொல்லி நிறுத்திப் பழக வேண்டும்.

ஆனால் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே…!” என்று நாம் சொன்னால் பதிவான வேகத்தைக் கொண்டு
1.பார்…! ஏதோ இப்படிப் பண்ணிக் கொண்டு இருக்கின்றார் என்று நான்கு பேரிடம் சொல்வார்கள்
2.இவரைப் பாருங்கள்… ஏதாவது சொன்னால் ஒன்றுமே கேட்க மாட்டார் என்பார்கள்.
3.ஏன்….? இவருக்கெல்லாம் ஒரு காலத்தில் எந்தக் கஷ்டமும் வராதா..? என்று கூடிப் பேசுவார்கள்.
4.அப்போது கூடிப் பேசும் போது அந்த உணர்வு நம்மைப் பாதிக்கும்.
5.அந்த நான்கு பேருடைய பகைமையை வாங்கினால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றும்.

ஆகையினால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்குள் வராமல் “தடுக்க வேண்டும்….!”

முதலில் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்து நமக்குள் (மனதிற்குள்) வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து அவர்களைப் பார்த்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும்.
3.உங்கள் உடம்பு நன்றாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.

இப்படி அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி இதை மாற்றி அமைத்து நாம் உயர்ந்த சொல்லாகச் சொல்லப்படும் போது நாம் சொல்வது அவர்கள் கஷ்டத்தை நீக்கும் செயலாக இயங்கத் தொடங்கி விடுகின்றது.

இது எல்லாம் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருள் நெறிகள். நம்மைக் காக்கின்றோம். மற்றவரையும் காக்கும் சக்தியாக நம் செயல்கள் அமைகின்றது.

ஞானிகள் செயலாக நம் செயல்கள் ஒன்றுபடுகின்றது…!

அகஸ்தியன் – துருவன் ஆற்றல்கள் எப்படிக் காலத்தால் மறைந்தது…?

அகஸ்தியன் - துருவன் துருவ நட்சத்திரம்

அகஸ்தியன் துருவன் ஆற்றல்கள் எப்படிக் காலத்தால் மறைந்தது…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனைப் பற்றிப் பல தடவை சொல்லியுள்ளோம்.

காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் காட்டு விலங்குகளில் இருந்து தப்பிக்கப் பல விதமான பச்சிலைகளையும் மூலிகைகளையும் அரைத்துத் தங்கள் உடலில் பூசிக் கொள்கிறார்கள்.

பாம்பினங்களோ மற்ற மிருகங்களோ இவர்கள் உடலில் பூசிய மணத்தை நுகர்ந்தபின் விஷத்தன்மை ஒடுங்கி விலகிச் செல்கிறது. யானைகளும் மூர்க்கத்தனமாகத் தாக்கி உணவாக எடுக்கும் நிலைகளில் இந்தப் பச்சிலையின் மணம் பட்ட பின் அந்த விஷத்தின் தன்மை ஒடுங்குகின்றது.

இரவிலே குகைகளில் படுத்திருக்கும் போதும் பச்சிலைகளையும் மூலிகைகளையும் பரப்பி வைத்துக் கொள்கிறார்கள். மற்ற உயிரினங்கள் இரை தேடி வந்தாலும் இதை நுகர்ந்த பின் இது மயக்கமடைந்து இவர்கள் பக்கம் வராது வேறு பக்கம் சென்று விடுகிறது. அவர்கள் பயமின்றித் தூங்குகின்றார்கள்.

சந்தர்ப்பத்தால் கருவுறும் சமயம் இவர்கள் பூசிய முலாம்களைக் கருவிலே உருவாகும் அந்த குழந்தைக்கும் போய்ச் சேர்கின்றது. நுகர்ந்த உணர்வுகள் கருவிலே இணைந்து நஞ்சை நீக்கிடும் அணுக்களாகப் பெறுகின்றது.

இப்படி உருவான குழந்தை (அகஸ்தியன்) பிறந்த பின் சூரியனை உற்றுப் பார்க்கின்றான்.

சூரியனை நம்மால் காண முடியவில்லை… கண் கூசுகின்றது. ஆனால் அகஸ்தியனோ சூரியனுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளைக் காணுகின்றான். மோதலில் ஒளிப் பிளம்புகள் வருவதை இவன் உற்றுப் பார்த்து அந்தப் பிஞ்சு உள்ளத்திலே சிரிக்கின்றான். மகிழ்கின்றான்.

பிரபஞ்சத்தின் உணர்வுகள் அதன் தொடர் அலை வரிசையில் எங்கு செல்கின்றதோ பிரபஞ்சத்தைப் பற்றியும் இளம் பருவத்திலேயே அவன் உணர்கின்றான்.

அவன் மகிழ்கின்றான். ஆனால் சொல்லால் வெளிப்படுத்தும் நிலை இல்லை.

1.நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து கவர்வதும்
2.அதனின் உணர்வுகள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் மோதும் போது மத்தாப்பு போல ஒளி அலைகளாக மாறுவதையும்
3.ஒரு உணர்வுக்கு ஒரு உணர்வுகள் மாறுபட்டு மின் அணுக்களாக மாறுவதையும்
4.வான வீதியில் நடக்கும் இந்த அதிசயங்களை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.
5.விஷத்தை அடக்கிடும் உணர்வின் ஆற்றலை அவன் பெறும் போது
6.நுகரும் உணர்வுகளை அவன் உயிர் ஞானத்தின் வழித் தொடரிலே இயக்கி
7.ஒளியின் சிகரமாக எதையும் அறியும் அறிவாக அந்தப் பிஞ்சு உள்ளத்தில் அவனுக்குள் விளைகின்றது.
8.நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் அவனுக்குள் விளைகின்றது.

இப்படி அவன் வளர்ந்து வரும் நிலைகளில் அகஸ்தியனைத் தூக்கிக் காடுகளுக்குள் சென்றால் மற்ற மிருகங்களோ யானையோ புலியோ பாம்போ மற்ற விஷ வண்டுகளோ இவர்கள் அருகிலே வருவதில்லை.

தனித்து இவன் காட்டுக்குள் சென்றால் மிருகங்கள் அனைத்தும் இவனைக் கண்டு பதுங்கி வருவதும் இவனுக்குப் பின் வருவதும் போன்ற நிலையாகின்றது. இவன் ஓர் அரசன் ஆகின்றான்.

தன் ஐந்தாவது வயதில் நம் பூமி கவரும் துருவத்தின் ஆற்றலை அறிகின்றான். அகஸ்தியன் துருவனாகின்றான்.

ஆனால் காவியங்களில் காட்டும் பொழுது அந்தத் துருவனை ஒரு அரசனாகப் பிற்காலங்களில் காட்டிவிட்டார்கள். அதற்குப் பின் அவனின் சரித்திரம் இருக்காது.

அவன் கடும் ஜெபம் எடுத்தான் என்று அவனை அரசன் என்ற நிலைகள் கொண்டு தான் காட்டினார்களே தவிர அந்தத் துருவன் துருவ மகரிஷியாகி எவ்வழியில் விண்ணுலகம் சென்றான் என்ற நிலைகள் இல்லை.

ஆனால் இந்தக் காவியங்களை எல்லாம் (புலையர்…) “புலஸ்தியர்..” தான் வெளி உலகிற்குச் சொன்னார் என்று சொல்வார்கள்.

ஓர் அரசனுக்கு இரண்டு மனைவி. இரண்டு பேருக்கும் அவரவர்களுக்கு குழந்தை உண்டு.

ஒரு அரசி தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் பொழுது அதே சமயத்தில் இன்னொரு தாயின் மகன் தன் தந்தையிடம் வந்து அது அமர்ந்து அது கொஞ்ச வேண்டும் என்று உணர்வுகள் வரப்படும் போது இந்தத் தாய் அவனைக் கொஞ்ச விடாது தடுக்கின்றது.

ஆகையினால் வெறுத்துக் கொண்டு காட்டிற்குள் சென்றான். அங்கே தனித்துத் தவம் இருந்தான் என்று உண்மையின் இயக்கங்களை நாம் அறியாதபடி தவறின் முறைகளைக் காட்டிவிட்டார்கள்.

துருவனின் (அகஸ்தியனின்) இயக்கத்தை நாம் அறிந்திடாது அரசருக்குகந்த நிலைகளாகப் பல நிலைகளைச் சொல்லி அசுர உணர்வுகளும் மற்ற குணங்களும் என்ற நிலைகளில் காவியங்களைப் படைத்து மகாபாரதம் இராமயாணம் போன்ற நிலைகளைக் காட்டுகின்றனர்.

கந்த புராணம் சிவ புராணம் என்று வந்தாலும் அதில் அகஸ்தியன் கணபதியை வணங்கினார். அதனால் அவருக்கு அதீத சக்தி ஏற்பட்டது. வாதாபி கணபதியை அகஸ்தியன் வணங்கியதால் அவரை யாரும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படித்தான் பறைசாற்றி விட்டார்கள்.

அகஸ்தியர் பெற்ற ஆற்றல்களை முழுமையும் காட்டாதபடி காவியத் தொகுப்புகளில் ஒவ்வொருவரும் அவரவருக்கு தக்கவாறு வெளிப்படுத்தி விட்டனர்.

1.பல பல நூல்களைப் படித்தவர்கள் உண்மையின் நிலைகள் உணராது
2.தான் படித்ததே… தனக்குத் தெரிந்ததே “பெரிது” என்று வாதிட்டுக் கொண்டு
3.அவர்கள் முன் மொழிவதைச் சட்டமாக்கப்பட்டு மந்திரங்களாகச் செயல்படுத்தி விட்டார்கள்

அகஸ்தியர் அந்த மந்திரத்தை ஜெபித்தார் அந்த ரிஷி இந்த மந்திரத்தை ஜெபித்தார் என்று மனித உடலில் உருவான உணர்வை எடுத்து அந்த உணர்வுகள் பதிவான பின் அவன் இறந்தால்
1.இதே மந்திரத்தை இன்னொருவர் ஜெபித்தால்
2.அந்த ஆன்மாவைத் தனக்குள் கைவல்யப்படுத்தும் நிலையாகச்
3.சாகாக்கலையாக உருவாக்கி விட்டார்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் சரீரமாகப் பெற்ற அந்த “வேகா நிலைக்கு” ஒவ்வொருவரையும் அழைத்துச் செல்லும் மார்க்கத்தையே மாற்றி விட்டார்கள்.

அகஸ்தியரைப் போல் மெய் ஞானியாக நீங்கள் மாற முடியும்…!

Agastiyar Eswaran

அகஸ்தியரைப் போல் மெய் ஞானியாக நீங்கள் மாற முடியும்…! 

எத்தனையோ கோடி சரீரங்களைப் பெற்ற பின் மனிதனாக நாம் உருவானாலும் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள்
1.மனித உடலை எப்படி அழிக்கின்றது?
2.நம் நினைவாற்றலை எப்படி மாற்றுகின்றது?
3.மீண்டும் பரிணாம வளர்ச்சியில் தேய் பிறையாகி
4.மனிதனல்லாத உடலுக்குள் எப்படிச் செல்லுகின்றோம்? என்று
5.இதையெல்லாம் நாம் யாருமே சிந்திப்பதில்லை…!

அந்தத் தேய் பிறையான நிலைகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும் என்றால் அருள் ஞானியின் உணர்வை நமக்குள் விளைய வைக்க வேண்டும்.

தீமையின் நிலைகளுக்குச் செல்லாது அருள் ஞானியின் உணர்வை எடுத்து ஒளியாக மாற்றி என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலைகளுக்கு உங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே குருநாதர் எமக்கு (ஞானகுரு) இட்ட அருள் பணியாகும்.

உங்களுடைய நினைவாற்றல் மகரிஷிகளின் பால் இருக்கச் செய்வதே இந்த உபதேசத்தின் நோக்கம். உங்கள் உடலுக்குள் மகரிஷிகளின் உணர்வுகள் ஊடுருவும் போது தீமையின் நிலைகளைக் கரைத்துவிடும்.

நான் வெறும் சொல்லாகச் சொல்வதாக நீங்கள் எண்ணலாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (குருநாதர்) என்னிடம் சொல்லும்போது
1.அவன் சொல்லுகின்றான்… நான் எதைப் பெற முடியும்..?
2.அவன் காட்டுகின்றான்… நான் எதைப் பெற முடியும்…! என்று இப்படித்தான் முதலில் எண்ணினேன்.

அவன் (குருநாதர்) சொன்னதை
1.அந்த வலுவின் தன்மை எனக்குள் வரப்படும் பொழுது
2.பின்னாடி தான் அவர் சொன்ன உணர்வுகள் அனைத்தையும்
3.காட்சிகளாக நான் காண முடிந்தது… உணரவும் முடிந்தது…!

மெய் ஞான அறிவின் தன்மை அது எப்படி…? என்றும் ஒவ்வொரு உயிரிலும் உணர்வுகள் எப்படி விளைகின்றது…? என்ற நிலையும் பின் தான் நான் உணர முடிந்தது.

அதைப் போல இன்றைய நிலைகள் நான் சொல்வதை “ஏதோ…” என்று இலேசாக விட்டுவிடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த தீமையின் நிலைகளை நிறுத்த அருள் மகரிஷிகளின் உணர்வை ஒவ்வொரு நிமிடமும் எடுத்துப் பழகிக் கொள்ளுங்கள்.

தீய வினைகளைக் கரைத்து மெய் ஞானிகளின் அருள் ஒளியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

மெய் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் அதிகரிக்கும் போது அது உங்கள் ஆன்மாவின் முன்னாடி நின்று தீமைகளை அகற்றும் நிலையாக மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக உருப்பெறுகின்றது. ஆன்மா சுத்தமாகின்றது.

இதையே கூட்டமைப்பாக அனைவரும் ஒன்று கூடி அந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்ற நிலையில் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் ஏகோபித்த நிலைகளில் மகரிஷிகளின் எண்ண அலைகளைப் பரப்பப்படும் போது பூமியில் தீமைகளை விளைவிக்கும் உணர்வின் அணுக்கள் விலகுகின்றது.

அப்பொழுது இந்தப் பரமாத்மாவும் சுத்தமாகின்றது.

“ரிஷிப் பிண்டமாக…” அன்று எப்படித் தோன்றினார்கள்…!

agastya-rishi pindam

“ரிஷிப் பிண்டமாக…” அன்று எப்படித் தோன்றினார்கள்…!”

பல காலங்களுக்கு முன் ஆண்ட அரசர்கள் தங்கள் மனைவி கறுவுற்றிருக்கிறாள் என்று தெரிந்தாலே அதாவது நான்கு அல்லது ஐந்து நாள்களாக இருந்தாலும் அடுத்த கணம் கர்ப்பமான அந்தத் தாய்க்குப் பல விதமான விஷங்களை உட்கொள்ளச் செய்கின்றார்கள்.

ஒரு தலை முடியின் நுனியில் விஷத்தைத் தொட்டு அதை ஆகாரத்துடன் கலந்து அதைக் கொடுப்பார்கள்.

உணவுடன் கலந்து செல்லும் விஷம் இரத்தத்துடன் கலந்து கருவிலே இருக்கும் குழந்தைக்குள் ஊடுருவி அந்த விஷத்தையே வளர்த்து பலம் பெற்ற குழந்தையாக சக்தி வாய்ந்ததாக உருவாகின்றது.

ஆடு மாடுகளுக்கும் மற்ற மிருகங்களுக்கும் விஷத்தின் தன்மை உடலில் உள்ள அணுக்களில் அதிகமாக இருப்பதனால் தான் அவைகளின் உடலில் வலிமை அதிகமாக இருக்கின்றது.

பல விதமான விஷங்களை அந்தக் கர்ப்பமான தாய்க்குச் சிறுகச் சிறுகக் கொடுத்து எந்த விதமான விஷங்களும் குழந்தையைப் பாதிக்காதவண்ணம் வலு கொண்டவனாக அரச குடும்பத்தில் வளர்ந்து வரும்படிச் செய்வார்கள்.

அடுத்து குருகுலம் என்ற நிலையில் அரசர்களுடைய சட்டங்களையும் அரசாட்சி செய்யும் நிலைகளையும் தன் குல வழியில் அந்தக் கர்ப்பிணிக்குக் கதைகளாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அந்த ராணியும் அதைக் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

“தன் நாடு.. எதிரி நாடு… தனது சட்டம்… எதிரியினுடைய நிலைகள்…” அதிலே எந்தெந்த நிலைகள் வெல்ல வேண்டுமோ அந்த உணர்வுகளை எல்லாம் தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஊட்டினார்கள்.

ஆகவே தன் நாட்டைப் பாதுகாக்கும் வலிமையும் நாட்டின் உண்மை நிலைகளை உணரச் செய்யும் நிலைகளையும் அன்று அரச காலங்களில் இவ்வாறு செய்தார்கள்.

இதனால் குழந்தை பிறக்கும் பொழுதே ஒரு வல்லமை மிக்க வீரனாக அவன் பேச்சிலும் செயலிலும் வலிமை மிக்கவனாகவும் நாட்டை அறிந்து கொள்ளும் அறிவுள்ளவனாகவும் வருகின்றான்.

ஐந்தே வயதானாலும் அவன் அரசாட்சியைப் பற்றி அறிந்திடும் நிலைகள் பெறுகின்றான். பல போதனைகளைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கும் நிலைகள் கருவிலிருந்தே வளர்ச்சி அடையப்படும் பொழுது

1.அவன் மரணத்தைப் பற்றி எதுவும் எண்ணுவதில்லை.
2.மற்றவர்கள் தன்னைத் தாக்கிடாது
3.எதிரிகளை வீழ்த்திடும் உணர்வையே அவர்கள் ஊட்டினார்கள்

ஏனென்றால் எதிரிகளிடம் அடிபணிவதில்லை. எதிரிகளை வீழ்த்திடும் உணர்வின் தன்மை தான் அந்த அரசர்களுக்கு உண்டு.

அன்று அந்த அரசர்கள் வைத்திருந்த வாளையும் கத்திகளையும் ஆயுதங்களையும் எந்த வகையில் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்று பார்த்தால்
1.அவைகளை நம் இரண்டு கைகளினால் கூடத் தூக்க முடியாது
2.ஆனால் அவர்கள் அதை ஒரு கையில் வைத்துப் போர் முறையில் கையாண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ரிஷிகளாக வாழ்ந்தவர்கள் என்ன செய்தார்கள்?

கர்ப்பம் என்று தெரிந்தால் அந்தக் கணவனும் மனைவியும் அவர்கள் பெற்ற பெரும் சக்தியினை அடிக்கடி பாட நிலையாக ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வார்கள்.

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைத் தன் உடலிலே சேர்த்து அந்த அணுக்களைப் பெருக்கி
1.கர்ப்பமுற்ற தாயின் தன் ஆன்மாவில் வலு கொண்ட நிலைகளாக
2.அருள் வட்டமாக வளைகாப்பாக இணைத்து
3.கருவில் வளரும் குழந்தை உலக ஞானமும் உலகைக் காத்திடும் அருள் ஞானமும்
4.பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வினை
5.ஒருவருக்கொருவர் உணர்த்தி அருள் ஞானத்தைப் போதித்துக் கொள்வார்கள்.

அப்படி வளர்ந்த அந்தக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக விளைந்து உலக ஞானம் பெற்று உலகுக்கே மெய் ஞானத்தை ஊட்டும் நிலையாக வந்தார்கள்.

ரிஷி என்பவர் ரிஷிப் பிண்டமாகி விடுகின்றார்கள்.

“அகஸ்தியன் கண்ட மெய் வழி”

Universe - Cosmos

“அகஸ்தியன் கண்ட மெய் வழி”

ஆதியிலே விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவானது. வெப்பத்தின் தன்மை வரும் போது தான் ஆவியானது. ஆவியின் தன்மை தான் விஷமானது. விஷத்தின் தாக்குதல் தான் மீண்டும் வெப்பமாகின்றது.

வெப்பத்தின் நிலை வரும் போது தான் அது நகர்ந்து ஓடுகின்றது. அப்போது காந்தம் என்ற உணர்வு உருவாகின்றது. காந்தம் என்ற உணர்வு உருவானபின் தன் அருகிலே இருப்பதைக் கவர்ந்து மோதி வெப்பமாகின்றது.

இதிலிருந்த விஷத்தின் தன்மை எதன் மணத்தை அது நுகர்ந்ததோ அதன் மணத்தை வெளிப்படுத்தும் அணுவாக ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது.

இப்படித்தான் உலகம் உருவானது என்பதனை அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்தான்.

ஆகவே அதன் வழி சிறுகச் சிறுக சிறு துளி பெரு வெள்ளம் போல
மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிராக வைத்து பாற்கடலைக் கடைந்தார்கள் வியாசகர் சொன்னார்.

பல அணுக்களின் தன்மையால் பூமி உருவானது என்ற நிலையை அன்று வியாசகர் அகஸ்தியன் கண்ட உண்மையை வெளிப்படுத்தினார்.

சிறுகச் சிறுக சேர்ந்த உணர்வுகள் அதனின் சுழற்சி வேகம் கூடக் கூட நெருப்பாக மாறி அந்த பூமிக்குள் வெப்பத்தின் தன்மை அதிகரித்து அதிகரித்து பாறைகள் எல்லாம் உருகி உருகி கடைசியில் அமில சக்தி அடைகின்றது நட்சத்திரமாக.

அமில சக்தியான பின் அது தூவும் உணர்வுகள் தான் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது.

ஒரு நூலாம்படைப் பூச்சி தன் மலத்தால் நூலாம்படையாக வலை விரித்து அதில் சிக்கும் மற்ற உயிரினங்களை உணவாக எடுத்துக்
கொள்கின்றது.

இதைப்போலத்தான் நட்சத்திரங்களும் தன் அமிலங்களைக் கக்கப்படும் போது வலை போன்று விரிந்து அகண்ட அண்டத்தில் பரவி வரும் உணர்வுகளை இது கவர்ந்து அதை உணவாக உட்கொண்டு சூரியனாக மாறுகின்றது.

சூரியனாகி அதனுடைய வளர்ச்சியில் தன் ஈர்ப்பு வட்டத்தில் இந்தப் பிரபஞ்சத்தையே உருவாக்குகின்றது. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி பெற்ற தன் வளர்ச்சியிலே மனிதனை உருவாக்குகின்றது.

நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.

இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்

தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.

இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.

பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.

சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய இந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதில் இருந்து மீட்டுக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உபதேசிக்கின்றோம். இப்பொழுது பதிவாகின்றது.
1.இதனை நீங்கள் நினைவு கூறுங்கள்.
2.கூட்டுத் தியானம் செய்யுங்கள்
3.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று பாய்ச்சுங்கள்.
4.கருவிலே வளரும் சிசு இதைப்பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல எண்ணி இவ்வுலகில் வரும் விஷத் தன்மைகளை மாற்றி இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ முடியும்.

1.“ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக”
2.உலக இருளை மாய்த்திடும் அருள் கூட்டத்துடன் நாம் இணைந்து
3.அமைதியும் சாந்தமும் பெற்று ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையாக
4.என்றும் அருள் ஒளிச்சுடராக பேரானந்த நிலையாகச் சந்தோஷ உணர்வுடன் நாம் வாழ முடியும்.

இந்த உலகம் மறையும் முன் அகஸ்தியர் உணர்வைப் பெற்று விண் செல்ல வேண்டும்

இந்த உலகம் மறையும் முன் அகஸ்தியர் உணர்வைப் பெற்று “விண் செல்ல வேண்டும்”

1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரும்
2.அவர் ஞானம் பெற்ற நிலையும்
3.துருவத்தின் ஆற்றலை அறிந்து “துருவ நட்சத்திரமாக” ஆன நிலையும்
4.காலத்தால் மறைந்தே போய்விட்டது என்று சொல்லலாம்.

அகஸ்தியரை “எல்லாவற்றிலும் வல்லவர்” என்று சொல்லி மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் ஓரிரு இடங்களில் அவர் வருவதாகக் காட்டி அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.

நம் பூமியிலிருந்து “விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்” என்ற நிலை விநாயகர் தத்துவத்தின் மூலம் காட்டியிருந்தாலும் அதை வெறும் சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள்.

அவர் தான் பெற்ற விண்ணின் ஆற்றல்களைத் தன் இன மக்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தென்னாட்டிலே தோன்றிய அந்த மகா ஞானி வெளிப்படுத்திய நிலைகளைச் சுத்தமாகவே மறைத்துவிட்டார்கள். சரணாகதி தத்துவத்தில் திசை திருப்பிவிட்டார்கள்.

காலம் கடந்த இந்த நேரத்திலாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அகஸ்தியரைப் பற்றி அறிந்து கொண்டோம். ஆகவே நாம் விண் செல்ல வேண்டும்.

அந்த மெய்ஞானி காட்டிய உணர்வுகளை நாம் பெறவேண்டும் எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும். இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

அனைத்து மக்களின் உணர்வுகளும் நமக்குள் உண்டு. அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு நமக்குள் வருகின்றது.

நாமும் ஒளி நிலை பெறுகின்றோம் மற்றவரும் ஒளியாகின்றார்கள். பிறவி என்ற நிலையை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கையாக அமைகின்றது.

இருளை அகற்றும் சக்தியாக அந்த “அகஸ்தியரைப் போன்ற… மகா ஞானியாக…” நாம் அனைவரும் மாறவேண்டும்.