முன்னோர்களை விண் செலுத்துவதால் கிடைக்கும் பலன்

முன்னோர்களை விண் செலுத்துவதால் கிடைக்கும் பலன்

 

கேள்வி:-
தியானத்தின் மூலம் என் தந்தையை விண் செலுத்தினேன். அதனுடைய பலன் என் சகோதரர்களுக்குக் கிடைக்குமா…? ஆனால் அவர்கள் என்னைப் போன்று இந்தத் தியானத்தைச் செய்யவில்லை… அதிலே ஈடுபடவும் இல்லை

பதில்:-
இந்தத் தியான வழியினை நீங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள் அந்தச் சக்தி உங்களுக்குள் கூடிக் கொண்டிருக்கிறது
1.உங்கள் தந்தையின் உணர்வுகள் தான் உங்கள் உடல்.
2.உடலை விட்டுப் பிரிந்து சென்ற தந்தையின் உயிரான்மாவை தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்கின்றீர்கள்.
3.அவர் உடல் பெற்ற நஞ்சுகள் அங்கே கரைக்கப்படுகின்றது
4.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக தந்தையின் உயிரான்மா சுற்றிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தாய் இங்கே உடலுடன் இருக்கின்றார்கள். அவர்கள் பிரியும் போது இதே முறை கொண்டு தாயின் உயிரான்மாவையும் விண் செலுத்தினால் இரண்டு பேரும் ஒன்று சேர்த்து ஒரு உணர்வின் கருவாக உருவாகி என்றும் அழியா ஒளிச் சரீரமாக சப்தரிஷி மண்டலத்தில் இருப்பார்கள்.

அதே சமயத்தில் அவர் வாழ்ந்த காலங்களில் வெளிப்படுத்திய சில இருளான தன்மைகள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறப்படும் பொழுது அந்தச் சக்தி எளிதில் கிடைக்கின்றது.

அதாவது…
1.தீமைகளை நீக்கக்கூடிய சக்தியான அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
2.எனக்குக் கிடைக்கின்றது… குடும்பத்தில் என்னுடன் பிறந்த சகோதரர்களுக்கு அது ஏன் கிடைக்காமல் போகும்…? என்று நீங்கள் கேட்கலாம்.

அவர்களுடைய உணர்வு இதன் மேல் பற்று இல்லை.

உதாரணமாக ரேடியோ டிவி அலைகளை ஒலி… ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது எந்த ஸ்டேஷனை… எந்த அலைவரிசையைத் திருப்பி வைக்கின்றோமோ… அதைத்தான் அது இழுத்துக் கொண்டு வரும். அதைத்தான் நாம் பார்க்க அல்லது கேட்க முடியும் ஏனென்றால் இந்தக் காற்றிலே எல்லாமே இருக்கின்றது.

அது போல் தந்தையை நீங்கள் தியானத்தின் வழியில் விண் செலுத்தும் போது… “விண் செலுத்திய வலுவான உணர்வு” உங்களுக்குள் இருக்கின்றது அப்பொழுது எளிதில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று உங்களுக்குள் வரக்கூடிய சிரமங்களைப் போக்கிக் கொள்ள முடிகிறது.

போக்கிக் கொண்ட பிற்பாடு உங்களுடன் பிறந்த சகோதரர்கள்… அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்… மெய்ப்பொருள் காணும் அந்த திறன் பெற வேண்டும்… என்று “பிரார்த்திக்க வேண்டியது உங்களுடைய கடமை…!”

ஆனால்…
1.தியானிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறோம்… சகோதரர்கள் கேட்கவில்லை என்று வேதனைப்பட்டால்
2.நீங்கள் இப்பொழுது எடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சக்தியையும் இழக்க நேரும்.

ஏனென்றால் விஷத்தின் தன்மை வரப்படும் போது சிந்திக்கும் தன்மை இங்கே இழக்கப்படுகின்றது. உங்களை அறியாமல் அவர்கள் நிலைக்குத் தான் செல்கிறீர்கள்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா…!

அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… இந்த அருள் வழியில் வாழ வேண்டும் என்ற ஆசையை ஊட்டலாம் சகோதரர்களுக்கு…!
1.ஆனால் அவர்கள் பெறவில்லை… கடைப்பிடிக்கவில்லையே… என்று வருத்தப்பட வேண்டியதில்லை
2.அவர்கள் அதை பெற்று வளர வேண்டும் என்று நமக்குள் ஆசையைக் கூட்டுவதால் தவறில்லை.

இதைச் செய்யவில்லை என்கிற போது உங்கள் தந்தைக்கு எந்த நோய் வந்ததோ அது அவர்களுக்கு வரும். அது மட்டுமல்ல… அவர்கள் குழந்தைகளுக்கும் வரும்… பரம்பரை நோய் என்று…!

ஆனால் “நீங்கள் செய்யக்கூடிய தியானம்…” உங்களுக்கும் சரி… உங்கள் சார்புடையவர்களுக்கும் சரி… அந்தப் பரம்பரை நோய் வராதபடி தடுக்கும்.

முறைப்படி உங்கள் தாய் தந்தையரை விண் செலுத்தும் போது சப்தரிஷி மண்டலங்களின் சக்தி எளிதில் கிடைத்து அதன் மூலம்
1.சிந்திக்கக் கூடிய சக்தி உங்களுக்கு கிடைக்கும்.
2.தீமை என்றால் அதை முன் கூட்டியே உணர முடியும்.
3.தீமைகள் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய அந்த ஞானமும் உங்களுக்குள் வளரும்.

தாய் தந்தையரை விண் செலுத்தி அதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் உங்களுக்குள் வளரப்படும் பொழுது நாளடைவில்
1.உங்கள் குலதெய்வங்கள்… உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் இருந்தாலும்
2.தொடர்ந்து விண் செலுத்தும் உணர்வுடன் நீங்கள் செயல்படும் போது
3.அதனுடன் ஈர்க்கப்பட்டு… “என்னையும் நீ விண் செலுத்து…” என்று கேட்கும் உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்… பார்க்கலாம்.
4.அவர்கள் விண் சென்றதையும் நீங்கள் உணரலாம்… அதைக் காட்சியாகவும் கூடக் காண முடியும்.

சென்று விட்டார்களா…! இல்லையா…? என்று நீங்கள் தனித்துப் பார்க்க வேண்டியது இல்லை. தொடர்ந்து இந்த உணர்வுகளைச் செயல்படுத்தி வந்தால் “நான் விண்ணிலே இருக்கின்றேன்…!” என்று உங்களுக்கு உணர்த்துவார்கள்.

ஆகவே இத்தகைய விண் செலுத்தும் மார்க்கம் எல்லோருக்கு,ம் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவது உங்களுடைய கடமை…! அதை நீங்கள் செயல்படுத்த வேண்டும். மற்றவர்கள் செய்யவில்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தேவையில்லை.