நமக்கு எது மரியாதை…? அந்த மரியாதை கிடைக்கின்றதா…!

Respect

நமக்கு எது மரியாதை…? அந்த மரியாதை கிடைக்கின்றதா…!

 

“பிறர் நம்மைத் திட்டுகிறார்கள்…! கேவலமாகப் பேசுகிறார்கள்..! என்றெல்லாம் நாம் எண்ணுகிறோம். அதனால் ஆத்திரப்படுகின்றோம்… வேதனையும் படுகின்றோம்.

ஆனால் “இந்த உடலைத்தான் திட்டுகிறார்கள்… கேவலப்படுத்துகிறார்கள்… நம்மை அல்ல…!” என்று ஞானகுரு சொல்கிறார்.

எப்படி…?

அதாவது மனிதனாக இருக்கும் நாம் ஒவ்வொருவருமே மற்றவரிடம் அதிகமாக எதிர்ப்பார்ப்பது என்ன..?

என்னிடம் “மரியாதையாகப் பேச வேண்டும்… மரியாதைக் குறைவாக நடக்கக் கூடாது…!”. மரியாதை இல்லாமல் பேசினால்… ஏதாவது செய்தால் எனக்குக் கோபம் கடுமையாக வரும்…! என்று எல்லோருமே தாராளமாக இப்படித்தான் நினைப்போம்.

இருந்தாலும்… உடலை விட்டு உயிர் போய்விட்டால் இந்த உடலுக்கு நாம் எந்த மரியாதை கொடுக்கின்றோம்…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.உடனே அந்த உடலை அழிக்க வேண்டும் என்பதிலே தான் குறியாக இருக்கின்றோம்.
2.ரொம்ப நேரம் இறந்த உடலை வீட்டிலே வைத்திருக்கக் கூடாது என்பதை “மிகவும்…….!” வலியுறுத்திச் சொல்கிறோம்.

யாராவது இல்லை என்று மறுக்க முடியுமா…? அப்பொழுது எங்கே செல்கிறது… “நாம் எதிர்பார்க்கும் நமக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை…?!”

அதனால் தான் ஞானகுரு சொல்கிறார்…! ஒருவர் நம்மைப் பழித்துப் பேசவோ திட்டவோ தவறாகவோச் சொல்கிறார் என்றால்
1.அது என்னை அல்ல…!
2.அழியக் கூடிய இந்த உடலைத்தான் சொல்கிறார்கள்…! என்று தெளிவாகப் பிரித்துக் காட்டுகிறார்.
3.அழியப் போகும் உடலுக்கு எந்த மரியாதையும் தேவையில்லை. இது உண்மை.

ஆனால் கிடைக்காத அந்த மாரியாதைக்காக நாம் எவ்வளவு கௌரவம் பார்க்கிறோம்….? எப்படி எல்லாம் உடலை அழகு பார்க்கிறோம்…? உடலுக்காக இன்னும் என்னென்னவோ பல சிரமங்களை ஒவ்வொரு நிமிடத்திலும் படுகின்றோம்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் அந்த மகரிஷிகளின் உணர்வைச் சேர்த்துக் கொண்டே வந்தால் அதை உயிருடன் ஒன்றிய நிலையாக விளைய வைத்துக் கொண்டே வந்தால்
1.அதற்குரிய மரியாதை இந்த உடலை விட்டுச் சென்ற பின்
2.அழியாத நிலையாக என்றுமே உயிருடன் ஒன்றி வாழ முடியும் என்று உணர்த்துகிறார் குரு.

உடலுக்குக் கொடுக்கும் அல்லது எதிர்பார்க்கும் மரியாதையை விட மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்ப்பதில் நமக்குக் கிடைக்கும் மரியாதையே என்றும் நிலைத்ததாகும்.

ஆகவே பிறரின் உணர்வுகளை நமக்குள் சேர்த்தால் நல்லதோ கெட்டதோ எதுவாக இருந்தாலும் அது மரியாதை கிடையாது. மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் சேர்த்தால் தான் நமக்கு (உயிராத்மாவிற்கு) மரியாதை.

உடலிலுள்ள நல்ல அணுக்களை எப்படிக் காக்க வேண்டும் – ஆத்ம சுத்தியின் மூலக்கூறு…!

Light atoms -divine

உடலிலுள்ள நல்ல அணுக்களை எப்படிக் காக்க வேண்டும் – ஆத்ம சுத்தியின் மூலக்கூறு…! 

நம் உடலில் நல்ல குணங்களால் உருவான அணுக்கள் இருக்கின்றது. ஆகவே நாம் நல்ல உடலாக ஆரோக்கியமாக இருக்கின்றோம்.

ஆனாலும் பிறிதொருவர் வெளிப்படுத்தும் கோபமோ ஆத்திரமோ வேதனையோ இவைகளை எல்லாம் சந்தர்ப்பத்தால் நாம் கேட்கவோ பார்க்கவோ நேருகிறது. அப்பொழுது
1.அவைகளை நேர்முகமாக நுகரும் பொழுது அந்த உணர்வலைகள் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
2.அதனால் நம் நல்ல அணுக்கள் அனைத்திற்கும் நல்ல உணர்வு செல்லாததால் சோர்வடைகிறது.. இயக்கம் குறைகிறது.
3.அந்த நேரத்தில் நம்மால் நல்லதை வலுவாக எண்ண முடிவதில்லை.
4.நுகர்ந்த உணர்ச்சிக்கொப்ப கடுமையான கோபமாகவோ அல்லது கடுமையான வேதனைக்கோ நாமும் ஆளாகின்றோம்.
5.இதனால் எந்தப் பலனும் நாம் அடையப் போவதில்லை.

வயலில் நல்ல விதைகளை விதைத்து அது வளரும் சமயம் வயலுக்குள் மறைந்துள்ள களைகள் முளைக்கின்றது. அது போல் நமக்குள் மறைந்த தீய குணங்களுக்கு ஆகாரம் கொடுப்பது போல் நம்முடைய அத்தகைய சந்தர்ப்பங்கள் அமைந்துவிடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை,

களைகளை அப்புறப்படுத்தவில்லை என்றால் நலல மகசூல் காண முடியாது. களை தான் வளரும். நல்ல பயிர்கள் வளர்வதில்லை.

இதை உணர்ந்து வெளியிலிருந்து எத்தகைய தீமைகள் வந்தாலும் அதைப் பற்றி எண்ணாது
1.என்னிடம் உள்ள நல்ல அணுக்களுக்கு நான் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கொடுப்பேன்.
2.அந்தத் தீமைகள் எனக்கு வேண்டாம்… என்று விலக்கி விட்டால்
3.பிறரின் உணர்வுகள் நம் உணர்ச்சிகளைத் தூண்டாது… அது நம்மை இயக்காது.
4.நம் ஆன்மா சுத்தமாகின்றது.

“நல்ல குணங்கள் வலுவாகும் பொழுது…” யார் நம் உணர்ச்சிகளைத் தூண்டும்படிச் செய்கிறார்களோ அவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகள் கிடைக்க வேண்டும்… அவர் உடலில் உள்ள நல்ல அணுக்கள் அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்…! என்று எண்ணுவதும் மிகவும் சுலபமாகின்றது.

பகைமைகளை மறக்கின்றோம். தீமைகளை மறக்கின்றோம். துன்பங்களை மறக்கின்றோம்.

ஆத்ம சுத்தி செய்யும் முறை இது தான். இதன் பலனை இருவருமே அடைய முடிகின்றது. எல்லோருக்கும் நல்லதாகின்றது.
1.நம் ஆன்மாவும் மற்றவருடைய ஆன்மாவும் சுத்தமாகும்
2,அந்த வலுவான நல்ல சந்தர்ப்பமாக அது அமைகின்றது.

 

அதிகாலைப் பிரார்த்தனையில் மிகவும் முக்கியமானது…!

Route for sapdharihi mandalam

அதிகாலைப் பிரார்த்தனையில் மிகவும் முக்கியமானது…!

 

ஞானகுருவின் (சாமிகள்) தந்தை தாய் இருவர் உடலை விட்டுப் பிரியும் நேரத்திலும் ஈஸ்வரபட்டர் அவரை *அருகில் விடாது…!* செய்தார்.

இருந்தாலும் ஆன்மாக்கள் வெளி வந்த பின் உடனடியாக சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து அதன் பின்தான் சப்தரிஷி மண்டல ஆற்றலை அதிகமாகப் பெற்றேன்.
1.சில “நுண்ணிய…!” நிலைகளையும் அங்கிருந்து பெற்று
2.உங்களிடம் நான் தைரியமாகச் சொல்ல முடிகிறது என்கிறார் ஞானகுரு.

உடல் மேல் தான் நாம் எல்லோரும் பாசம் வைத்திருக்கின்றோம். ஆனால் அந்த உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களை யார் ஈர்ப்புக்குள்ளும் செல்லாது “அலுங்காது…* விண் செலுத்த வேண்டும் என்று இதன் மூலம் உணர்த்துகிறார்.

1.மனிதனாகப் பிறந்து எவ்வளவோ கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும்
2.முடிவில் – மீண்டும் இன்னொரு உடலுக்குள் எக்காரணம் கொண்டும் போகவிடக்கூடாது என்பதை
3.மிகத் தெளிவாக அழுத்தம் திருத்தமாக அந்த அனுபவத்தின் மூலம் உணர்த்துகின்றார்.

ஆகவே காலை எழுந்ததும் “என்னுடைய முதல் பிரார்த்தனையே…!” உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்கள் அனைத்தும் அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும். அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்பது தான்.

1.பேய் பிசாசு ஆவி என்று மற்றவர்கள் சொல்கிற எதுவாக இருந்தாலும்
2.அந்த உயிரான்மாக்களும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்.
3.அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்… சப்தரிஷியாக வேண்டும் என்று உந்தி
4.குருநாதர் காட்டிய வழியில் அனுதினமும் செலுத்திக் கொண்டே இருக்கின்றேன்.

இது உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்குச் செய்யும் பிரார்த்தனை

உலக மக்கள் அனைவருக்கும் சப்தரிஷி மண்டல அலைத் தொடர்பு கிடைக்க வேண்டும். உடலை விட்டு அவர்கள் பிரிந்தால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்பது உடலுடன் இருப்பவர்களுக்குச் செய்யும் என்னுடைய பிரார்த்தனை.

ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசம் பற்றிய மிகப் பெரிய பேருண்மைகள் – என்னுடைய அனுபவம்

சாமிகள் உபதேசம்

ஞானகுருவின் (சாமிகள்) ஒலி உபதேசம் பற்றிய மிகப் பெரிய பேருண்மைகள் – என்னுடைய அனுபவம்

 

சாமிகள் உபதேசம் (audio) கேட்பதைப் பெரும்பாலும் மற்றவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்றால்
1.கேட்க நேரம் இல்லை…! என்பார்கள்
2.எத்தனை தடவை கேட்டாலும் புரியவில்லை…! என்பார்கள்
3.நமக்குச் சம்பந்தமில்லாததை எல்லாம் சொல்கிறார்…! என்பார்கள்
4.அப்படியே கேட்டாலும் தூக்கம் வருகிறது… என்பார்கள்
5.கடைசியில் சொன்னதயே திரும்பத் திரும்பச் சொல்கிறார்…! என்பார்கள்.

ஆனால் என்னுடைய அனுபவத்தில் சாமிகளின் உபதேசத்தை (audio) உற்றுக் கேட்பதன் மூலம் தான்
1.எனக்குள் வரும் எல்லாக் கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும்
2.உடனுக்குடன் விடை கிடைக்கிறது.
3.கிடைத்துக் கொண்டேயுள்ளது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி காட்சியாகவும் உணர்வலைகளாகவும் வந்து கொண்டேயுள்ளது. மகா ஞானிகளுடன் எளிதில் தொடர்பு கொள்ளவும் முடிகிறது.

உபதேச உணர்வின் இயக்கத்தால் மற்றவர்களின் உணர்வுகளோ அல்லது எற்கனவே நடந்த தீமைகளைப பற்றிய எண்ணங்களோ என்னை இயக்குவதில்லை.

ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பாக ஒரு புதிய மெய் உணர்வுடன் உத்வேகத்துடன் அருள் வழியில் முன்னேறிச் செல்லும் உணர்வுகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருகிறது.

சாமிகளின் உபதேச ஒலிகளுக்குள் அவ்வளவு பெரிய சூட்சம சக்திகள் மறைந்துள்ளது. சரியாகச் சொன்னால் ஞானிகளின் (அசைவுகள்) BODY LANGUAGE அதில் தான் உள்ளது.

ஞானியாக ஆக வேண்டும் என்றால் ஒலி உபதேசத்தை அவசியம் கேட்க வேண்டும். அதைக் கேட்க தனியாக என்று நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

மற்ற வேலைகள் செய்து கொண்டிருக்கும் பொழுதே அதைக் கேட்டு எளிதில் நமகுள் வளர்க்க முடியும்.

சாமிகள் உபதேசத்தை நான் அதிகமாகப் பதிவாக்கும் நேரம்
1.காலை எழுந்ததிலிருந்து வேலைக்குச் செல்லும் அந்த ஒரு மணி நேரம் கேட்பேன்
2.அதன் பின் வேலைக்குச் செல்லும் வழியிலும் வீட்டுக்கு வரும் வழியிலும் ஒரு மணி நேரம் கேட்பேன். (HEAD SET மூலம் காதில் மாட்டிக் கேட்பேன்)

இந்தக் காதில் மாட்டிக் கேட்கும் பொழுது தான் மகரிஷிகளுடன் அதிகமான நெருக்கம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இது இன்று வரையிலும் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது.

சாமிகள் “AUDIO WEB LINK” கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேட்க விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். https://wp.me/P3UBkg-1rP

“அகஸ்தியரிடமிருந்து வெளிப்பட்ட அவர் மூச்சலைகளையும் மணங்களையும்” தியானத்தின் மூலம் பெறலாம் – அனுபவம்

அகஸ்தியரின் அருள் மணம்

“அகஸ்தியரிடமிருந்து வெளிப்பட்ட அவர் மூச்சலைகளையும் மணங்களையும்” தியானத்தின் மூலம் பெறலாம் – அனுபவம்

 

1.விபூதி வாசனை
2.எலுமிச்சை வாசனை
3.முருக்கு வாசனை
4.இந்தப் பொருள்களே அருகில் இல்லாமல் உங்களுக்கு வாசனை வருகிறது என்றால் ஞானகுரு (சாமிகள்) அங்கே இருக்கிறார் என்று உணரலாம்.

சீராகத் தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போதும் அல்லது மிகவும் இக்கட்டான நேரத்தில் அதிலிருந்து விடுபட வலுவான எண்ணத்துடன் குருநாதரை நினைத்து அருள் உணர்வைச் சுவாசிக்கும் போதும் இந்த வாசனைகள் நிச்சயம் வரும்.

எனக்கு விபூதி வாசனையும் எலுமிச்சை வாசனையும் திருநெல்வேலி – வள்ளியூருக்கு அருகில் மலை மீது உள்ள “நம்பி கோவிலில்” அகஸ்தியரை எண்ணித் தியானிக்கும் பொழுது தான் வர ஆரம்பித்தது. அது எப்படி வந்தது என்றால்…
1.அங்கே தான் ஞானகுரு முதன் முதலாக (1988ல் எனக்கு)
2.”பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரின் உணர்வை…!”
3.தியானத்தின் மூலமாக ஆழமாகப் பதிவாக்கி அதைப் பெறும்படியும் செய்தார்.
4.(குபு… குபு… என்று விபூதி வாசனையும் எலுமிச்சை வாசனையும் மூச்சு முட்டும் அளவிற்கு வந்தது. ஒரு பத்துப் பதினைந்து நிமிடம் இருக்கும்)

தியானத்தில் சாமிகள் சொன்னது:-
1.இந்தப் பகுதி எல்லாம் அகஸ்தியன் வந்து சென்ற இடம்…! அவன் காலடி பட்ட இடம்.
2.ஆகவே அகஸ்தியன் வாழ்ந்த அக்காலத்திற்கு உங்கள் கண்ணின் நினைவாற்றலைக் கொண்டு செல்லுங்கள்
3,அகஸ்தியன் பெற்ற நஞ்சை வென்று ஒளியாக மாற்றிய பச்சிலை வாசனைகளும் மூலிகை மணங்களும் அருள் தாவர இனச் சத்துக்களும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள் என்று சொன்னார்.
4.ஒரு அரை மணி நேரம் தியானம் நடந்திருக்கும்.

தியானம் முடிந்ததும் என்னிடம் குருநாதர் கேட்டார். வாசனைகளாக வந்தது என்று கூறினேன்.

இதற்குப் பின் பெரும்பகுதி வருடம் தோறும் மார்கழி (நவம்பர் டிசம்பர்) மாதம் “வைகுண்ட ஏகாதசிக்கு முன்னாடி…!” குறைந்தது ஒரு மாதம் அளவிற்கு இன்னதென்று சொல்ல முடியாதபடியாக மூலிகை வாசனை போன்று விட்டு விட்டு வந்து கொண்டே இருக்கும். எங்கே… எந்த நிலையில்… இருந்தாலும் வரும்.

வருடம் தோறும் குறிப்பிட்ட அதே காலத்தில் வரும். அந்தச் சமயத்தில் இரவு நேரத்தில் 7 மணி அளவில் வட கிழக்குத் திசையில் சப்தரிஷி மண்டலம் உதயமாவதைப் பார்க்கலாம்

வாசனை வந்தபின் நான் மாதத்தையும் சப்தரிஷி மண்டலத்தையும் பார்த்துத் தெரிந்து கொள்வேன். 2018ல் இப்பொழுதும் இன்றும் வாசனை வந்து கொண்டுள்ளது.

இது என்னுடைய அனுபவம்.

தியானம் செய்யும் போது கொட்டாவி ஏன் வருகிறது…?

third-eye-agastyar

கேள்வி:-
தியானத்தின் போது அதிக உமிழ் நீர் சுரக்கின்றது. ஏன்…? இடையிடையே ஒரு சில நேரம் கொட்டாவியும் வருகிறது. இது ஏன்…?

பதில்:-
1.உமிழ் நீர் வருவதன் காரணம்
தியானிக்கும் பொழுது உமிழ் நீர் அதிகமாகச் சுரக்கின்றது என்றால் அந்த மெய் ஞானிகளின் அருள் சக்திகள் ஒளிக்கற்றைகளாக உயிரிலே மோதி வாயிலே அது கரைகின்றது என்று அர்த்தம்.

உங்கள் நினைவுகள் எந்த அளவுக்கு மகரிஷிகளுடன் ஒன்றியிருக்கின்றதோ அந்த அளவுக்கு அது வரும். அப்படிக் கரையும் உமிழ் நீர சுவையாக இருக்கும்.

நெல்லிக் கனியின் சுவை போன்றோ மலை மீது உருவாகும் நீரின் சுவையாகவோ அதாவது பல மூலிகைகள் கலந்ததாகவும் தெரியும்.

அந்த உமிழ் நீர் உங்கள் ஆகாரத்துடன் கலந்து உடலுக்குள் ஞானிகளின் உணர்வுகள் ஆற்றல்மிக்கதாக உருப் பெறத் தொடங்கும். நோய் நீக்கும் சக்தி கிடைக்கும். மன பலம் கிடைக்கும்.

தொடர்ந்து இந்த உமிழ் நீர் சுரந்து கொண்டே இருந்தால் மற்றவர்களுக்கு இயற்கையாக உடலில் வரக்கூடிய தொல்லைகள் (தலை வலி மேல் வலி சோர்வு) நம்மை எதுவும் பாதிக்காதபடி ஒரு பாதுகாப்பு நிலையாக உருவாகும்.

2.கொட்டாவி வருவதன் காரணம்
இன்று டி.வி ரேடியோ எப்படி அலைவரிசைகளில் செயல்படுகின்றதோ அது போல் தான் நம் உடலில் உள்ள ஒவ்வொரு குணங்கள் கொண்ட அணுக்களும் அதனதன் உணவை (உணர்வலைகளை) இந்தக் காற்று மண்டலத்திலிருந்து பிரித்து எடுக்கும் நிலையில் உயிர் மூலமாக இயக்கி மூக்கின் வழியாகச் சுவாசித்து வாழ்ந்து கொண்டுள்ளது.

பூமியில் மண் அடுக்குகள் எப்படிப் பல பல நிறங்களில் படிந்துள்ளதோ அதைப் போல் நம் உடலிலும் பல அடுக்குகள் கொண்ட நிலைகளில் அத்தகைய அணுக்கள் உண்டு.

நமக்குள் ஆழமாகப் பதிவான அத்தகைய குணங்களின் அணுக்கள் நம்மைக் கேட்காமலேயே நம்மை அறியாமலே சுவாசத்தின் மூலமாக சுவாசித்துத் தன் தன் இனத்தைப் பெருக்கி ஜீவித்து வாழ்கின்றது.
1.இதை ஊழ்வினை என்பார்கள்.
2.மூல வித்து என்றும் சொல்லலாம்.
3.ஆணி வேர் என்றும் சொல்லலாம்.

ஆனால் நாம் எடுக்கும் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகள் அதுவும் அலை வரிசையில் தான் வருகின்றது. அந்த அலை வரிசை சிறுகச் சிறுக உடலுக்குள் பெருக்கமாகும் பொழுது அது அத்தகைய ஊழ் வினைகளுக்குள் ஊடுருவி அதற்குள்ளும் கலக்கும்.

மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம் உடலில் ஏற்கனவே ஊழ் வினையாக உருவான ஊனுக்குள் ஊடுருவ ஊடுருவ அதனின் மூல இயக்கங்கள் மாறி அதற்குரிய உணவு கிடைக்காது தடையாகும்.

அதாவது
1.மகரிஷிகளின் அலை வரிசை நமக்குள் இயக்கமாகி
2.அந்தப் பழைய ஊனின் அலை வரிசைகளைத் தடைப்படுத்தும்.
3.அப்படி அதைத் தடைப்படுத்தும் பொழுது அதனுடைய வலிமை குன்றுகிறது.
4.அது வேக வைக்கப்பட்டு ஆவியாக வரும். அது தான் கொட்டாவி என்பது.

நாள் முழுவதும் நன்றாகத் தூங்கி இருந்தாலும் மகரிஷிகளின் அருள் உணர்வை நீங்கள் சீராக அந்த அலை வரிசையில் இழுத்துச் சுவாசித்தால் ஒரு ஐந்து நிமிடத்திலே கூட இத்தகை கொட்டாவி வரும். பார்க்கலாம்.

தியானம் ஆரம்பிக்கும் பொழுது உங்கள் உடல் வலுவாகத் தெரிந்தாலும் கொட்டாவி வர வர உடல் வலு குறைந்து தியானத்தை நிறுத்திவிட்டுத் தூங்கலாமா என்ற எண்ணம் கூட வரும்.

ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தியானத்தில் அமர்ந்தால் கொட்டாவி மீண்டும் வரும்.

ஒரு மைசூர் பாகு கிளறுகின்றோம் என்றால் எந்த அளவுக்கு நெய் விடுகின்றோமோ அது அடிபிடிக்காமல் அந்தப் பதார்த்தம் சரியாக வரும். நெய் குறைந்து விட்டால் அப்படியே கல் போன்று சட்டியில் ஒட்டிக் கொள்ளும். எடுக்க வராது. அது போல் தான்
1.நாம் எடுக்கும் அந்த உயர்ந்த ஆற்றல்கள் நம் உடலில் அதிக வெப்பத்தை உருவாக்கும்போது
2.நம் உடலில் ஏற்கனவே உருவான ஊழ் வினைகளை மாற்றும் பொழுது
3.அந்தக் கொட்டாவி வரத் தான் செய்யும்.

தியானத்தில் உட்கார முடியவில்லை என்றால் மீண்டும் ஞான உபதேசங்களைப் படிக்கலாம். அல்லது தியானத்தில் அமர்ந்து எடுக்கும் அருள் உணர்வுகளை மற்ற வேலைகளைச் செய்து கொண்டே எடுத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது வாழ்க்கையே தியானமாகின்றது. இப்படித்தான் பெருக்க முடியும். ஒரேயடியாகச் சக்தியைப் பெறவும் முடியாது. கூட்டவும் முடியாது. ஆனால் வாழ்க்கையுடன் இணைந்த நிலைகள் கொண்டு நம்மால் மகரிஷிகளின் அருள் சக்திகளை எளிதில் பெறலாம்.

சக்தியை நமக்குக் கூட்டிக் கொள்வதும் எளிது…! என்னுடைய அனுபவம் இது.

மெய் ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டிய முறை (ஒட்டுச் செடி போல்)

Image

galaxy near ursa major

மெய் ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டிய முறை (ஒட்டுச் செடி போல்)

 

இன்று ஒட்டுச் செடிகளை வைத்து விவசாயத்தில் தேவையான மகசூலைப் பெறவும் விதம்விதமான உணவுப் பொருள்களையும் உருவாக்கியுள்ளனர்.

அதே போன்று உயிரினங்களிலும் ஒரு கருவுக்குள் மற்ற உயிரினங்களின் ஜீன்களை எடுத்துப் புதுப் புது உயிரினங்களையும் உருவாக்கியுள்ளார்கள்.

அதே போல் குளோனிங் (CLONING) முறையிலும் ஒரே மாதிரி “மனிதர்களையே உருவாக்க முடியும்…!” என்றும் கண்டுபிடித்துள்ளார்கள்.

அதைப் போல நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஒட்டுச் செடி போல் ஒட்ட வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒட்ட வைத்துக் கொள்வது என்றால் நமக்குள் உள்ள எல்லா குணங்களுக்குள்ளும் ஒட்ட வைக்க வேண்டும்.

நல்லது…கெட்டது… பிடித்தது…பிடிக்காதது… வேண்டியது…வேண்டாதது…! என்று எதையும் பார்க்காமல்
1.எல்லா எண்ணங்களுக்குள்ளும்
2.எல்லா உணர்வுகளுக்குள்ளும்
3.ஞானிகளின் உணர்வை ஒட்ட வைக்க வேண்டும்.

அதாவது ஞானிகளின் உணர்வை நமக்குள் (நமக்குள் என்றால் எல்லாம் சேர்த்துத்தான் “நாம்…!”) கலக்கும் பருவத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு அணுக்களிலும் இவ்வாறு ஞானிகளின் உணர்வை இணைத்து விட்டால் ஞானிகளின் உணர்வுகள் கலந்து
1.புதுப் புதுக் கருக்களாகி
2.திரும்பத் திரும்ப எண்ணினால் முட்டையாகி
3.அந்த மெய் ஞானிகளையே எண்ணிக் கொண்டிருந்தால் அடை காத்தது போல் ஆகிவிடும்.

ஞானிகள் அவர்கள் உடலில் விளைய வைத்தது போல் நமக்குள்ளும் விளைந்து அதனின் பெருக்கம் அதிகமாகி நம் செயல்கள் ஞானிகளின் செயலாக மாறும்.

என்னிடம் அடிக்கடி ஈஸ்வரபட்டர் “நீ… கட்சி மாற வேண்டும்டா…!” என்பார்.

கட்சி மாற வேண்டும் என்றால் நம்மையறியாது தவறு செய்தாலும் (தெரிந்தோ அல்லது தெரியாமலோ…!) உடனடியாக அந்த மெய் ஞானிகளின் உணர்வுடன் ஒட்டிக் கொள்ள வேண்டும்.

அந்த ஞானிகளின் கட்சியாக மாற வேண்டும் என்பார். அதை ஒட்டிய செயலாக நாம் செயல்பட வேண்டும் என்பார்.

உதாரணமாக – நான் தவறு செய்துவிட்டேன். அந்தத் தவறு தேவையில்லை. அதனால் நான் ஞானிகள் சொன்னபடி நல்லதாக மாற்றிக் கொள்கிறேன் என்று அடுத்த கணமே தன் மனதை தன் எண்ணத்தை தன் உணர்வை தன் செயலை அப்படியே ஞானிகளுடன் ஒட்டிக் கொள்வது.

1.தவறு செய்ததில் அதிகம் நினைவைச் செலுத்தாதபடி
2.தவறு நடந்ததை வைத்து அல்லது தவறு செய்ததை வைத்து ஞானிகள் அருள் உணர்வுகளுடன் மிகவும் அதிகமாக ஒட்டிக் கொள்வது.

அப்படியே அவர்கள் செயலாகவே நான் இருக்க வேண்டும் என்று
1.எந்த அளவுக்கு அழுத்தமாகப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்த முடியுமோ செலுத்தி
2.அதன் மூலமாக அதிக அளவில் மெய் ஞானிகளின் உணர்வுகளை உறிஞ்சித் தனக்குள் சேர்த்துக் கொள்வது.

இப்படித்தான் செய்து கொண்டுள்ளேன். இது என்னுடைய அனுபவம்

தியானத்தில் “நம் உடலிலிருந்து ஒளிக்கற்றைகள் வெளிப்படும்…!”

dazzling soul lights

தியானத்தில் நம் உடலிலிருந்து ஒளிக்கற்றைகள் வெளிப்படும்…!

1.மின் மினிப் பூச்சி தன் உடலுக்குள் இருக்கும் கந்தகத்தால்
2.தான் சுவாசிக்கும் மூச்சலைகள் பட்டவுடன்
3.உடலிலிருந்தது ஒளிக்கற்றைகளை உமிழ்கின்றது.

அவ்வாறு உமிழ்த்தும் ஒளிக்கற்றைகள் மற்ற செடிகள் தாவர இனங்களின் இலைகளில் படும்பொழுது விஷ அணுக்கள் நகர்ந்து ஓடுகின்றது.

அதன் மூலம் தனக்குகந்த உணவை அது உட்கொள்கிறது. அதாவது ஒளிக் கற்றைகளை உமிழ்த்தி விஷத்தை நீக்கித் தான் வாழ்கிறது.

இதைப் போல் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் கவர்ந்து நம் உடலுக்குள் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை உணவாகக் கொடுக்க வேண்டும்.
3.ஒளியாக உருப்பெறும் அணுவின் கருவாக உருவாக்க வேண்டும்.
4.அந்த ஒளி நம் உடலிலும் பெருகும்… ஆன்மாவிலும் பெருகும்…!
5.நம் உயிரான்மாவிலும் பேரருள் பேரொளியாகப் பெருகும்…!

அது வளர வளர நம் உடலிலிருந்து நம் மூச்சலைகள் மூலமாக நாம் பார்க்கும் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று உணர்வை மின் மினிப் பூச்சி ஒளிக்கற்றைகளை உமிழ்த்துவது போல் நாமும் பாய்ச்ச வேண்டும்.

ஒவ்வொரு நிமிடமும் இவ்வாறு ஒளியான உணர்வை நம் மூச்சலைகள் மூலம் வெளிப்படுத்தினால்
1.எந்தத் தீமையான உணர்வும் நம் ஈர்ப்பிற்குள் நம் ஆன்மாவிற்குள் நம் உடலுக்குள் நுழைய முடியாது.
2.நமக்கு இது மிகப் பெரிய பாதுகாப்புக் கவசமாக மாறும்.

அதே சமயத்தில் மற்றவர்களும் நம் மூச்சலைகள் மூலம் பாயும் மகரிஷிகளின் உணர்வலைகளை நுகர்ந்தால் அவர்கள் இருளும் அகலும். அவர்கள் தீமைகளும் அகலும்.

 

விசாரணை… கேள்வி எழுப்புதல்… உணர்தல்…!

Image

Maharishi - Sabdharisi

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முறையைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.

கண்களின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பூமியின் வட கிழக்குப் பகுதியில் நினைவினை விண்ணிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாக ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

“கிரகணம்” பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். உதாரணமாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து முழுவதும் மறைத்தால் அந்த நேரத்தில் சூரியனின் சக்தி முழுவதும் தடைப்படுத்தப்படுகின்றது.

ஆனால் சந்திரனுக்கோ பூமிக்கு வந்து சேரும் சூரியனின் அனைத்து சக்திகளையும் பெற அந்தச் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது.

அதே சமயத்தில் பூமிக்கோ சூரியனின் சக்திக்குப் பதிலாகச் சந்திரனின் சக்தியை நுகர வேண்டிய கட்டாயமாகின்றது.

ஏனென்றால் இவை ஒரே நேர்கோட்டில் வருவதால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது. அதிக பலன் இதிலே சந்திரனுக்குத்தான்.

இதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வலைகள் வெளி வரும்போது அதை நாம் இடைவெளியில் “கிரகணம்” போன்று பிடிக்க வேண்டும்.

இதைத்தான் தடுத்து நிறுத்துவது என்பது. அப்பொழுது நம் ஆன்மாவில் உள்ள மற்ற உணர்வலைகளுக்கு ஆகாரம் கிடைக்காது துருவ நட்சத்திர உணர்வே ஆகாரம் ஆகின்றது.

ஆகவே இவ்வாறு தடுத்து நிறுத்தும்போது… தியானத்தில் சிலர் எனக்கு..
1.ஒளி அலைகள் தெரிந்தது
2.வெளிச்சமாக இருந்தது
3.புருவ மத்தியில் குறு..குறு.. என்று இருந்தது
4.சூடாகித் தலை பாரமானது
5.மிதப்பது போல் இருந்தது
6.நல்ல நறுமணங்கள் வந்தது
7.உமிழ் நீர் சுவையாகச் சுரந்தது
8.இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றெல்லாம் சொல்வார்கள்.

அதே போன்று மாறுபட்ட எண்ணம் கொண்ட சிலருக்கு
1.தொண்டை கர.. கர.. என்று ஆகிவிட்டது
2.சிந்தனைகள் ஒரு நிலைப்படுத்த முடியாமல் கட கட என்று எங்கெங்கோ செல்கிறது
3.என்னை உட்காரவே விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள்.

தடுக்கவும் இல்லை… நிறுத்தவும் இல்லை… என்பவர்களுக்கு – ஒரே வார்த்தையில் “அமைதியாக நன்றாக இருந்தது” என்று சொல்லிவிடுவார்கள்.

தன் ஆன்மாவில் உள்ளது மீண்டும் மீண்டும் சர்க்குலேசன் ஆகிக் கொண்டேயிருப்பதால் இவ்வாறு சொல்வார்கள்.

ஆகவே நாம் துருவ நட்சத்துரத்துடன் மோதியே ஆகவேண்டும். அதைத் தடுத்து நிறுத்தினால் தான் அது நமக்குள் வரும். உணர முடியும்.

ஆனாலும் அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மேலே சொன்ன (நல்லது 8 & கெட்டது 3) அந்த அத்தனை உணர்வலைகளையும் மறுபடியும் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும்.

1.“விசாரணை” என்பது தனக்குத் தானே கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி தானே உணர்தல் என்று பொருள்.

2.“கேள்வி எழுப்புதல்” என்றால் புருவ மத்தியில் உயிரின் தொடர்பு கொண்டு குரு உபதேசித்ததை (குருவை) எண்ணி மறுபடியும் துருவ நட்சத்திரத்துடன் 1, 10, 100, 100000 கோடி கோடி என்று மோதிக் கொண்டேயிருந்தால் உணர முடியும்.

3.“உணர்தல்” என்பது ஒரு வருடத்திலோ ஒரு மாதத்திலோ ஒரே நாளிலோ ஒரு நிமிடத்திலோ வரும். அதனின் வளர்ச்சி ஆக ஆக கணப்பொழுதில் (சுவிட்சைப் போட்டவுடன் லைட் எரிவது போல்) உணர முடியும்.

இந்த உணர்தல் வந்துவிட்டால் நாம் உணர்வது அனைத்துமே அல்லது அப்பொழுது நாம் “மகரிஷிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்” என்று அர்த்தம்.

நம் வாழ்க்கையில் வரும் எத்தகைய நிலைகளாக இருந்தாலும் கண்ணின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவினைச் செலுத்தி அதை அறிய வேண்டும் உணர வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்வி எழுப்பினால் அங்கிருந்து வரும் உணர்வலைகள் நமக்குள் உண்மையைத் தெளிவாக உணர்த்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.