தன்னைத் தான் அறியும் (அகத்தியம்) நிலை பற்றிய சித்தர் பாடல் – 4

SIDDHA 3

தன்னைத் தான் அறியும் (அகத்தியம்) நிலை பற்றிய சித்தர் பாடல் – 4

 

நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்தது
கெடுகின்றது எம்பெருமானென்ன ஈசன்
நடுவுள அங்கி அகத்தியா நீபோய்
முடுகிய வையத்து முன்னிர் என்றேனே

மனித உடல் பெற்ற நிலையில் உயிரான ஈசன் இந்த உடலில் இல்லை என்றால் இந்த உடல் என்ற உலகம் நீசமாகின்றது. மண்ணுடன் மண்ணாகப் போய்விடுகின்றது.

அது மட்டுமல்லாது உயிரே ஈசனாக இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்ற மெய்யை நாம் அறியாது
1.உடலுக்காகவே வாழும் நிலையில்
2.நுகர்ந்த உணர்வின் இயக்கமாக வாழும் வாழ்க்கையில் எந்த நன்மையும் இல்லை.

அதாவது
1.தன்னையும் தான் அறியாது
2.தனக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலையும் அறிய முயற்சி செய்யாது
3.உண்டு கழித்து உறங்கி இறந்து… மீண்டும் பிறந்து வாழும் சுழற்சியிலேயே மீண்டும் மீண்டும் சுழன்று வரும் பொழுது
4.பரிணாம வளர்ச்சியில் நம்மை முழுமுதல் கடவுளாக உருவாக்கிய ஈசனின் சக்தியை
5.சரியான வழியில் பயன்படுத்தாது நாம் வீணாக்கிவிடுகின்றோம்.

வீணாக்குதல் என்றால் நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடலிலே விளைந்து அதனின் சத்தை வடித்து உயிர் தன்னுடைய அணைப்பில் உயிராத்மாவாக ஆக்கிக் கொண்டு அதற்குத் தக்க தான் அடுத்த உடலை உருவாக்குகின்றது.

உயிராத்மாவில் நல்ல மணங்கள் இருந்தால் தான் அடுத்து நல்ல உடல் பெற முடியும். சலிப்பையும் சஞ்சலத்தையும் விரக்தியையும் வேதனையும் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த நிறைவையும் அடையவில்லை என்றால் அடுத்து நாம் மனித உடலைக் கூடப் பெற முடியாது. விஷத் தன்மை கொண்ட உயிரினமாகத்தான் பெற முடியும்.

உடலில் வாழும் காலத்தில்
1.மனிதனுக்கு அடுத்த உயர்ந்த நிலையான ஞானத்தின் வழியில் சென்று
2.மெய் ஞானியாக வளர்ந்து ஒளியின் சுடராக ஆத்ம ஜோதியாகி
3.விண்ணிலே அழியாத நிலையில் ஒளிரும் நட்சத்திரமாக ஆகும் தகுதி பெற்றிருக்கிறோம் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்

ஏனென்றால் நம்மைப் போன்று மனிதனாக உருவான நிலையில்
தன்னை அறிந்து
அகத்தை அறிந்து
அணுவை அறிந்து
அண்டத்தை அறிந்து
ஆதிசக்தியின் இயக்கத்தை அறிந்த அகஸ்தியன் இன்று விண்ணிலே துருவ நட்சத்திரமாக உள்ளான், அகத்தை அறிந்துணர்ந்து அகத்தின் இயல்பை (அவன்) இயம்பியதே அகத்தியம்…!

அவனே நம் பூமியையும் முன்னொரு காலத்தில் சமப்படுத்தினான். விண் சென்ற முதல் மனிதனும் அவனே. இன்று மெய் ஞானத்தின் தத்துவத்தை மனிதனுக்கு வழி காட்டிக் கொண்டிருப்பவனும் அவனே.

நம்முடைய மூதாதையான ஆதியிலே தோன்றிய அந்த அகஸ்தியன் இந்த உலகுக்கே வழிகாட்டியாக ஒரு முன்னோடியாகத் திகழ்வது போல் நாம் ஒவ்வொருவருமே உலகுக்கு எடுத்துக் காட்டாக வளர வேண்டும்.

துன்பம் தரும் பிறவி நிலையைப் பற்றியும் பேரின்பம் தரும் பிறவியில்லா நிலையைப் பற்றியும் சித்தர்கள் பாடல் – 3

SIDDHAS WORLD

துன்பம் தரும் பிறவி நிலையைப் பற்றியும் பேரின்பம் தரும் பிறவியில்லா நிலையைப் பற்றியும் சித்தர்கள் பாடல் – 3

 

பிறந்தோர் கூறுவது பெருகிய துன்பம்
பிறவார் கூறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது – பின்னது
அற்றோர் கூறுவர் அறிக என்று அருளி

இன்று மனிதனாகப் பிறந்து வாழும் எந்த மனிதரைக் கேட்டாலும்
1.என் வாழ்க்கையில் அது கஷ்டம்… இது கஷ்டம்…!
2.உடல் நலம் சரியில்லை தொழில் சரியில்லை… அது சரியில்லை இது சரியில்லை… குடும்பத்தில் என்னை யாரும் மதிக்கவில்லை… என்று
3.தனக்கு வரும் சிறு சிறு துன்பங்களையே பெரிதாக எண்ணி துன்பப்படுவதையே வாழ்க்கையாக அமைத்து
4.இப்படி எதிலும் நிறைவடையாதபடி “என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லையே…!” என்ற ஏக்கத்திலேயே வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

பிறவா நிலை பெறும் எண்ணத்தில் வாழும் ஞானிகளோ தன் வாழ்க்கையில் வந்த அல்லது வரும் ஒவ்வொரு துன்பத்தையும் அதை எப்படி நல்லதாக மாற்ற வேண்டும்…? என்று அறிந்துணர்ந்தவர்கள்… அதிலே கை தேர்ந்தவர்கள்…!

மேலும் இந்த உடலில் வாழும் காலத்திற்குள் “தனக்குள் எதை நிறைவாக்க வேண்டும்…?” என்று அதைத் தனக்குள் முழுமைப்படுத்திக் கொண்டவர்கள்.

உதாரணமாக நெல் பயிரைப் பயிரிட்டு வளர்க்கிறோம் என்றால் அது விளைந்தவுடனே நான்கு மாதமோ ஐந்து மாதமோ ஆறு மாதமோ அதற்குள் அறுவடை செய்துவிடுகின்றோம்.
1.விளைந்த பயிரை முற்ற விட்டு விளைச்சலை வீணாக்குவதில்லை.
2.அதே சமயத்தில் நன்றாக விளைவதற்கு முன்னாடியே அதை அறுவடை செய்வதுமில்லை.

சரியாக விளையவில்லை என்றால் என்ன செய்கிறோம்…!

அது என்ன…? எதனால்…? என்று பார்த்து அதற்கு வேண்டியோ நீரோ உரமோ மற்ற சத்துக்களையோ கொடுத்து மகசூலை எப்படியாவது நல்ல முறையில் கொண்டு வர வேண்டும் என்று முழுமூச்சாகச் செயல்படுத்துகின்றோம்.

இதைப் போன்று தான் பிறந்ததன் பலனை வீணாக்கி விடக் கூடாது என்ற நிலையில் ஞானிகளின் செயல்கள் அமைகின்றது. அவர்கள் இந்த உடல் வாழ்க்கைக் காலத்தைப் (வயது) பெரிதாக எண்ணுவதில்லை.
1.சாதாரண மனிதர்களைப் போன்று சுகத்தையும் மரியாதையையும் கௌரவத்தையும் எண்ணி
2.அதைத் தேடிக் கொண்டு அல்லது அதை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு வாழ்வதில்லை.

உடலை உருவாக்கிய உயிரான ஈசனை அணுகி அவன் துணை கொண்டு
1.உயர்ந்த உணர்வுகளை இந்த உடல் என்ற சட்டியிலே சமைத்து
2.அதை ஒவ்வொரு நாளும் சுவையாகப் பருகி
3.உயிராத்மாவை அழியாததாக மாற்றிப் பேரொளியாக மாறி
4.இந்த உடல் என்ற கூட்டைப் பிளந்து (பிய்த்து)
5.உடல் பெறும் உணர்வுகளையே அறுத்துச் செல்கின்றார்கள்.

விளைந்த பயிரில் உள்ள நெல் மணிகளை அறுத்து எடுப்பது போல் உயிரிலே மணியான ஒளியான உணர்வுகளைச் சேர்த்து உடலை விட்டு அகன்று செல்கிறார்கள். அந்த எண்ணம் அதிகமாக இருப்பதால் அவர்களுக்குப் பேரின்ப வாழ்க்கையாக அமைகின்றது.

மனிதர்களாக வாழும் நாம் இந்த உடல் வாழ்க்கையை விரும்பி என் குடும்பத்திற்காக நான் வாழ்கிறேன் என்று சொல்லிக் கொண்டு
தன் குடும்பம்..
தன் மக்கள்..
தன் சொத்து… என்று ஏங்கிக் கொண்டு
உடலையே எண்ணி எண்ணித் துன்பத்தையே அனுபவிக்கின்றோம்.

ஆனால் ஞானிகளோ தன் உடலை (வெறும்) கருவியாகப் பயன்படுத்தித் தன் உயிராத்மாவை ஒளியாக (மணியாக) மாற்ற வேண்டும் என்ற அந்தக் குறிக்கோளுடன் வாழ்கின்றார்கள்.

நம்முடைய பற்று எப்படி இருக்கிறது…? “கிடைக்கவில்லையே…!” என்ற ஏக்கத்திலேயே வாழ்க்கை முடிந்து விடுகின்றது.
1.நினைப்பது நடக்கவில்லையே… என்று சிறு குழந்தையும் எண்ணுகிறது…!
2.வாழ்ந்து இறக்கும் தருவாயில் உள்ள மனிதனும் இதைத் தான் எண்ணுகின்றான்.

பிறந்தவர்கள் எல்லோரும் ஒரு நாள் இறக்கத்தான் போகின்றோம் என்று தெரிந்தாலும் காக்க முடியாத அந்த உடலைக் காக்கும் ஆசையிலேயே வாழ்வதால் துன்பம் தான் எல்லையாகின்றது.

இதை முழுமையாக உணர்ந்தறிந்தவனே மெய் ஞானியாக ஆகின்றான். அது மட்டுமல்ல…!

சிறிது காலமே வாழும் இந்த உடலிலிருந்து தான் பெற வேண்டிய மகத்துவமான சக்திகளைத் தனக்குள் சேமித்து
1.அந்த ஆற்றலைக் கொண்டு விண்ணுலகம் சென்று
2.என்றுமே ஏகாந்தமாக வாழும் அழியா ஒளி உடல் பெறுகின்றான்.
3.தன் அருளைப் பாய்ச்சி மற்ற மனிதருக்கும் அந்த மெய் வழியைக் காட்டுகின்றான்.
4.மெய் ஞான அறிவை ஊட்டுகின்றான்.

மெய் ஞானத்தின் வீரியத்தின் உண்மை இது…!

நமக்குள் இருக்கும் ஈசனின் கருத்தை ஒவ்வொரு செயலிலும் அறிவது பற்றிய சித்தர்கள் பாடல் – 2

Siddha 2

நமக்குள் இருக்கும் ஈசனின் கருத்தை ஒவ்வொரு செயலிலும் அறிவது பற்றிய சித்தர்கள் பாடல் – 2

உன்முதலாகிய ஊன் உயிர் உண்டெனும்
கண்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை
நன்முதல் ஏறிய நாம் அற நின்றால்
தன்முதல் ஆகிய தத்துவம் ஆமே

உயிர் தான் நாம் பார்ப்பதை கேட்பதை நுகர்வதை இயக்குகிறது நம் உடலாக உருவாக்குகிறது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்றாலும் அதை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

ஆதிமூலமாகிய உயிர் நமக்குள் கடவுளாக நின்று இயக்கிக் கொண்டிருக்கின்றான். அவனே இந்த உடலை உருவாக்கியுள்ளான். அந்த உயிர் இல்லை என்றால் நான் என்ற நிலை ஏதும் இல்லை என்பதை நாம் முதலில் அறிய வேண்டும்.

நுகர்ந்த உணர்வின் இயக்கமாக நான் என்ற நிலையில் இந்த வாழ்க்கையில்…
1.நான் தான் இதைச் செய்தேன்… அதைச் செய்தேன்..
2.அதைச் செய்யப் போகின்றேன் இதைச் செய்யப் போகின்றேன் என்ற நிலையில்
3.தன்னிச்சையாகச் செயல்படும் பழக்கம் தான் நம்மிடம் உள்ளது.
4.உயிரைப் பற்றிய சிந்தனை இல்லை.

எல்லோரிடமும் நாம் பேசுகின்றோம் சொல்கின்றோம் கேட்கின்றோம். ஆனால் நமக்குள் உள் நின்று இயக்கும் அந்த ஈசனைக் கண்டு அவன் கருத்தைச் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. அவனிடம் கேட்பதுமில்லை… அவனிடம் சொல்வதுமில்லை… அவனை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை…!

இறந்த பின்… உடலை விட்டு உயிர் போய்விட்டது…! என்ற நிலையில் உயிர் இருக்கிறதா… அல்லது போய்விட்டதா…? என்று அந்தக் கடைசி நேரம் மட்டும் தான் உயிரைப் பற்றி எண்ணிப் பார்க்கும் நிலையில் உள்ளோம்.

இந்த உடலில் உயிர் இருக்கும் பொழுதே “ஈஸ்வரா…! என்று அவனை மதித்து ஒவ்வொரு விஷயத்திலும் அவனுடன் கலந்து அவனின் கருத்தை அறிந்தால் அவனுடன் என்றுமே இணைந்து அழியாத வாழ்க்கை வாழலாம் என்பதை அறிய வேண்டும். இது தான் மெய் ஞானிகள் கண்ட அற வழி.

ஏனென்றால் உடல்கள் அழிகிறது. உயிர் என்றுமே அழிவதில்லை. சிறிது காலத்தில் அழிந்து போகும் இந்த உடலுக்காக வாழாமல் உயிருக்காக வாழ வேண்டும்.

இந்த உடலோ பூமிக்குச் சொந்தமானது. உயிரோ விண்ணிலே தோன்றியது. விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்கு விஜயம் செய்து உடல் பெறும் நிலையில் பரிணாம வளர்ச்சிக்கு வருகிறது.

1.பரிணாம வளர்ச்சியில் நம்மை மனிதனாக உருவாக்கிய உயிருக்கு…
2.நம்மை ஆளும் ஆண்டவனுக்குச் சேவை செய்வதே முதல் நம் கடமை ஆகும்.

சேவை என்பது இந்த உடல் வாழ்க்கையில் நாம் சொத்து சுகம் மக்கள் என்று வாழ்ந்து மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கு வாழ்வதல்ல…!

நம்மைப் போன்று மனிதனாகத் தோன்றி உயிருடன் ஒன்றிய ஒளியாக இருக்கும் விண்ணின் ஆற்றலைப் பெற்ற அந்த மெய் ஞானிகளின் அருளாற்றலை நம்முடைய உயிராத்மாவிற்குச் சொத்தாகச் சேமிக்க வேண்டும்.
1.படைப்பின் படைப்பை…
2.படைக்கப்பட்டவனின் படைப்பாக
3.பேரொளியாக நாம் ஆக வேண்டும்…!

இது தான் படைத்தவனின் தத்துவம்…!

உயிரையும் சுவாசத்தையும் பற்றிய சித்தர்கள் பாடல் – 1

Siddha 1

உயிரையும் சுவாசத்தையும் பற்றிய சித்தர்கள் பாடல் – 1

 

“மூக்கு முனையை… முழித்திருந்தும் பாராமல்
ஆக்கை கெட்டு… நானும் அறிவு இழந்தேன் பூரணமே…!”

மனிதனின் ஆணிவேரே சுவாசம் தான். சுவாசத்தின் வழியாக வரும் உணர்வலைகள் நாசி வழியாகப் போய் புருவ மத்தியில் இருக்கும் உயிரில் பட்ட பின் தான் எண்ணம்… சொல்… செயல்… எல்லாமே இயங்குகிறது. அதை எல்லாம் இயக்கக் காரணமாக இருப்பது நம் உயிர் தான்.

1.உயிரே கடவுளாக உள் நின்று அவ்வாறு இயக்கிக் கொண்டிருக்கின்றான் என்பதையும்
2.சுவாசத்தின் வழியாகப் போவது தான் உயிரால் இயக்கப்பட்டு
3.தெய்வமாக நின்று நம்மை இயக்குகிறது என்பதையும் அறியவில்லை என்றால் என்ன ஆகும்…?

கண்களால் பார்க்கும் உணர்வுகளும் சரி… அல்லது காதால் கேட்டு அதன் பின் கண்களின் நினைவுக்கு வந்து பார்த்தாலும் சரி… அது அனைத்தும் உடலுக்குள் ஊழ்வினையாகப் பதிவாகி அதன் வழியே சுவாசம் அமைகின்றது.

இதைப் பற்றி எதுவும் அறியாதபடி நாம் சுவாசித்த உணர்வுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு நம் சுவாசத்தின் வழியாகப் போவது எதையும் சீரபடுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்…?

நமக்குள் உள் நின்று கடவுளாக நம் உயிர் இயக்கினாலும்
1.தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் விளைந்து
2.நல்ல உடலை வீழ்த்தி
3.மீண்டும் மனிதனல்லாத வேறொரு உயிரினமாகத்தான் அடுத்து பிறக்க நேரும்.

பரிணாம வளர்ச்சியில் உயிர் நம்மை மனிதனாக வளர்ச்சி அடையச் செய்து வந்த நிலையில்
1.என்றுமே அழியாத நிலையில் ஒளியாக இருக்கும் உயிருடன் ஒன்றவில்லை எனும் பொழுது
2.நாம் தேய்பிறையாகி நம்முடைய வளர்ச்சி குன்றி
3.மனிதனுக்கு அடுத்த நிலையான பிறவா நிலை பெறும் தகுதியை இழந்து விடுவோம்.

இத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

“மூச்சோடு முனை நாசி முட்டி பாயும்…
முன்னின்றும் காணாது… விழிமேல் நோக்கும்
பாச்சென்றும் வேண்டாமே… தானே பாயும்…!”

நாம் சுவாசிக்கும் பிறிதொரு உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றதே தவிர நாம் இயங்கவில்லை.

அதாவது புறக் கண்களால் நாம் பார்ப்பது கேட்பது அனைத்தும் மூச்சின் வழியாக உயிரிலே மோதுகின்றது. அப்படிப் பிறிதொரு உணர்வுகள் மோதப்பட்டு இயக்கும் அந்த நிலையை மாற்றிட வேண்டும்.

ஏனென்றால் அவைகள் நமக்கு முன்னாடி ஆன்மாவாக வந்து இயக்கும் நிலையாக இருந்தாலும் அது நம்மை இயக்கவிடாதபடி புறக் கண்ணின் நினைவை புருவ மத்தியில் இருக்கும் உயிரான அகக்கண்ணுக்குக் கொண்டு வர வேண்டும்.

கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றப்படும் பொழுது முக்கண் ஆகின்றது. அந்த உயிர் வழியாக நம் நினைவுகள் விண்ணுக்குச் சென்று நஞ்சை வென்று பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி அதைக் கவர்தல் வேண்டும்.

இப்படி உள் உணர்வாக நாம் இயக்கினால் நாம் வெளியில் புறத்தில் அதிகமாக எதுவும் செயல்படுத்த வேண்டியதில்லை.
1.உயிர் வழியாக நாம் கவரும் அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள்ளும் பாய்ந்து அது மற்றவர்களுக்குள்ளும் பாயப்பட்டு
2.தீமைகளை அடக்கி நன்மையின் செயலாக ஒளியின் உணர்வாக மாற்றி அமைக்கும்.
3.(நாம் பாய வேண்டியதில்லை… அருள் உணர்வுகள் உயிரிலே பாய்ந்தால் “தானே” அது இயக்கும்)
4.இதை எல்லாம் அனுபவத்தில் நிச்சயம் பார்க்க முடியும்…!

ஒவ்வொரு நாளும் இதை வளர்க்க உயிருடன் ஒன்றி வாழும் நிலையும் நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றிடும் அந்தப் பூரணத்துவமும் நாம் அடைய முடியும்.

மனிதன் மகானாகி மெய் ஞானத்தின் முழுமை பெற்று மகரிஷிகளுடன் ஒன்றி வாழச் செய்யும் பக்குவத்தைத்தான் சித்தர்கள் அன்று பாடல்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள்.

நாம் அனைவரும் அந்தத் தகுதியை வளர்ப்போம்.

திரு அண்ணாமலையில் கிரி வலம் வர வேண்டும் என்று சுற்றி வருவதன் மூலம் என்ன…?

annamalai girivalam

திரு அண்ணாமலையில் கிரி வலம் வர வேண்டும் என்று சுற்றி வருவதன் மூலம் என்ன…?

 

உடலின் உச்சியிலே நம் உயிர் வீற்றிருக்கிறது. நம் உயிரே கடவுளாக உள் நின்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது அனைத்தையும் சதாசிவமாக உடலாக உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

1.உடலாக மாற்றினாலும் நாம் சுவாசிப்பது ஆன்மாவிலிருந்து தான்.
2.நம்முடைய ஈர்ப்பு வட்டமே ஆன்மாவாகும்.
3.இந்தப் பிறவியிலும் சரி… இதற்கு முன் எடுத்த பிறவிகளிலும் சரி… நாம் எடுத்துக் கொண்ட எண்ணிலடங்காத உணர்வின் அலைகள்
4.உடலைச் சுற்றி அமைந்துள்ள சுழன்று கொண்டிருக்கும் அந்த உணர்வலைகளே நம்முடைய ஈர்ப்பு வட்டம்…! (நம்முடைய காற்று மண்டலம்)

நம்முடைய ஆன்மாவில் நல் உணர்வுகள் அதிகம் இருந்தால் நம்மை அது நல் வழியில் இயக்கி நம் வாழ்க்கை சீராக இருக்கும். நம்மை நலமாக வாழச் செய்யும்.

ஆனால் சந்தர்ப்பவசத்தால் நுகர நேரும் தீமை செய்யும் உணர்வுகள் நம் ஆன்மாவில் பெருகி விட்டால் அதனுடைய அழுத்தத்தால் நம்மைத் தீமையின் வழிக்கே இயக்கி நமக்குத் துன்பம் தரும் நிலையாக ஆகிவிடும்.

ஆக நம்முடைய ஆன்மாவில் இருக்கும் உணர்வலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது அதை நாம் சுற்றிப் பார்க்க வேண்டும்.

1.நம் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் உணர்வலைகளை அறிந்திடும் நிலையாக
2.உயிரால் நுகரப்பட்ட உணர்வலைகள் ஆன்மாவாக இருப்பதை அது எது…! எது…? என்று அறியும் நிலையாக
3.நம் ஆன்மாவைத் தூய்மைபடுத்தும் நிலைக்காக
4.திரு அண்ணாமலையைக் கிரி வலம் வர வேண்டும் என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அவ்வாறு சுற்றிப் பார்த்த பின் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிர் வழியாக நுகர்ந்து உயிரிலே ஜோதிச் சுடராக ஏற்ற வேண்டும். இதை ஒவ்வொரு நிமிடமும் ஏற்ற வேண்டும்.

மகரிஷிகளின் உணர்வுகளை ஆத்ம ஜோதியாக உயிரிலே ஏற்றிக் கொண்டால் நாம் மற்றவர்களிடம் பேசும் பொழுதும் மற்றவர்கள் நம்மிடம் பேசும் பொழுதும் அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி வாழ்க்கையில் நாம் பொருளறிந்து செயல்படும் சக்தியாக நம்முடைய செயல்களை அமைத்துக் கொள்ள முடியும்.

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வரச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

third eye glow opening

புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் நினைவைக் கொண்டு வரச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

 

மகாபாரதத்தில் உயிரின் இயக்கத்தைப் பூஷ்மர் என்று வியாசகர் காட்டுகின்றார். பத்தாவது நாள் போரில் பூஷ்மர் வீழ்வதாகவும் ஆனால் அதே சமயத்தில் போர் முடியும் வரையிலும் அம்புப் படுக்கையில் படுத்திருப்பாதாகவும் காட்டியிருப்பார்.

பத்தாம் நாள் போரில் அர்ச்சுனன் பூஷ்மரை எப்படி வெல்கிறான் என்றால்
1.சிகண்டியைப் பீஷ்மருக்கு முன்னாடி நிறுத்தப்படும் பொழுது அவர் போர் செய்வதை நிறுத்திவிட்டு அம்பு எய்துவதைத் தாழ்த்துவார்.
2.அந்த நேரத்தில் நீ அம்பை எய்து அவரைக் கொல்ல வேண்டும் என்று தான் கண்ணன் அர்ச்சுனனிடம் சொல்வான்.

இதில் சிகண்டி என்பது துருவ நட்சத்திரம். கண்ணன் என்பது நமது கண்கள். அர்ச்சுனன் என்பது நம்முடைய கூர்மையான எண்ணங்கள்.

1.அதாவது நம்முடைய கூர்மை (இச்சைப்படும் எண்ணங்கள்) தீமையின் பக்கம் வலுவாக இருக்குமானால்
2.உயிர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து
3.அதை நமக்குள் கௌரவர்களாகச் சிருஷ்டிக்கின்றது.
4.நம்மால் நல்ல குணத்தைக் காக்க முடிவதில்லை.

அதே சமயத்தில் வலுவில்லாத உணர்வின் எண்ணங்களை எடுத்தோம் என்றால் உயிர் அதை நமக்குள் எடுத்து உடலாகச் சிருஷ்டிப்பதில்லை.

ஆனால் உடலுக்குள் 1008 குணங்களில் உருவான அத்தனை அணுக்களுக்கும் உயிர் உணவாக எடுத்து வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் நம்மால் நல்லதை வலுவாக நம் எண்ணத்தால் எண்ணி எடுக்க முடியுமா என்றால் முடியாது…! ஏனென்றால் உயிர் தாயாக இருந்து உடலில் இருக்கும் அணுக்களை வளர்க்கிறது.

பீஷ்மரை (உயிரின் இயக்கத்தை) நேரடியாக யாரும் போரில் வெல்ல முடியாது என்பதனால் தான் கண்ணன் திருட்டு வழியைக் காண்பிக்கின்றான் என்று வியாசகர் உணர்த்துகின்றார்.
1.நம் உடலில் உள்ள மற்ற தீமையான அணுக்களுக்கு ஆகாரம் செல்லாது தடைப்படுத்த வேண்டும் என்றால்
2.உயிரின் இத்தகைய செயலாக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும்.

அதனால் பேடியைப் (ஆணும் இல்லை பெண்ணும் இல்லை) போன்ற நிலையில் உள்ள சிகண்டியை பூஷ்மருக்கு முன் நிறுத்தச் சொல்கிறான் கண்ணன்.

உதாரணமாக நாம் கிரகணம் என்று சொல்கிறோம் அல்லவா. கிரகண நேரத்தில் எந்தக் கோள் இடைமறிக்கின்றதோ அந்த நேரத்தில் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருக்கும் சூரியனின் ஒளிக்கதிர்களை அது தடைப்படுத்துகின்றது.

தடைப்படும் சமயத்தில் சூரியனின் கதிர்களுக்குப் பதிலாக தடைப்படுத்தப்பட்ட கோளின் சத்துக்கள் போய்ச் சேர்கிறது.
1.கிரகணம் பிடிக்கும் கோள் நல்லதாக இருந்தால் பலன் கிடைக்கும்.
2.ஆனால் கேதுவோ ராகுவோ போன்ற கோள்கள் கிரகணம் பிடித்தால் விஷத் தன்மைகள் தான் பரவும்.
3.இது போன்று தான் நம் உயிர் வழியாக… உயிர் மூலமாக…
4.உடலுக்குள் புகும் தீமைகளை முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

தீமையை வென்ற… நஞ்சினை வென்ற… உணர்வினை ஒளியாக மாற்றிய… அந்தத் துருவ நட்சத்திரத்தினை உயிருக்கு முன்னாடி புருவ மத்தியில் அடைப்பாக… கிரகணமாகக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரம் என்ன செய்யும் என்று நமக்குத் தெரியாத நிலையில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அவருடைய துணையுடன் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உயிரிலே இணைக்கப்படும் பொழுது தீமைகள் முழுவதுமே தடைப்படுத்துகின்றது…!

எப்படி…?

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அந்த அகஸ்தியன் துருவனாகித் திருமணமானபின் துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனான். வேகா நிலை பெற்று விண்ணுலகம் சென்ற முதல் மனிதன் அகஸ்தியன் தான்.

தன்னுடைய வாழ்க்கையில் அவன் அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து சர்வ தீமைகளையும் வென்று சரவ நஞ்சினையும் வென்று எதையுமே ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நம்முடைய புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி
1.உயிரிலே மறைப்பாக அல்லது அடைப்பாகப் போடப்படும் பொழுது
2.அந்த அகஸ்தியன் எப்படி நஞ்சினை ஒளியாக மாற்றினானோ அதே போல் நாமும் அந்த நிலை பெற முடியும்.
3.உயிரின் செயலாக்கங்கள் தணிந்து
4.உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் மெய் ஞானிகளின் இயக்கமாக நமக்குள் ஆகி
5.வாழ்க்கையில் இருள் சூழும் நிலையை நாம் மாற்றிட முடியும்.

அதனால் தான் மகாபாரதத்தில் பத்தாம் நாள் போரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வியாசகர் உணர்த்திக் காட்டியிருப்பார்.

நம்முடைய வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளையும் துன்பங்களையும் சந்திக்கின்றோமோ அந்த நேரத்தில் எல்லாம் உடனடியாக
1.கண்ணன் காட்டும் அந்தத் திருட்டு வழியில் கண்களின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அங்கே நிலை நிறுத்தினோம் என்றால்
3.வெளியிலிருந்து வரும் எந்தத் தீமையும் நம்மை இயக்க முடியாது.

மாறாக நாம் எடுக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக நாம் இயங்கி நம்மையும் காத்து மற்றவரையும் காக்கக் கூடிய சக்தியாக நம்முடைய செயல்கள் அனைத்தும் அமையும்.

என்னுடைய அனுபவத்தில் இதைத்தான் செய்து கொண்டுள்ளேன்…!

அன்றாட வாழ்க்கையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்திக்கு எந்த அளவுக்குக் கொண்டு வருகின்றோமோ அந்த அளவிற்கு நாம் தீமைகளை அகற்றும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

அகஸ்தியனைப் பின்பற்றியவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை நிச்சயம் நாம் அனைவரும் அடைய முடியும்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்கு அடிக்கடி ஏன் கொண்டு வர வேண்டும்…?

om om eswara

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்கு அடிக்கடி ஏன் கொண்டு வர வேண்டும்…?

 

உதாரணமாக மைக் (MIC) மூலம் ஒருவர் பேசப் போகிறார் என்றால் அவர் பேசுவதற்கு முன் அதைப் பல முறை பரிசோதிப்பார்கள்.

சப்தம் எப்படி வருகிறது…? எக்கோ (ECHO) இல்லாமல் இருக்கிறதா..? எல்லா இடங்களிலும் சப்தம் கேட்கிறதா…? இரைச்சல் இல்லாமல் இருக்கிறதா…? என்றெல்லாம் பார்த்து அதைச் சரி செய்து வைப்பார்கள்.

ஏனென்றால் அது சரியாக இல்லை என்றால் பேசுபவர் முக்கியமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாலும் கேட்பர்களுக்கு அது முழுவதும் போய்ச் சேராது. அர்த்தமும் ஆகாது… எரிச்சலாகும் உணர்ச்சிகளைத் தான் தூண்டும்.

1.இது போல் தான் நம்முடைய குருநாதர் மூலம் (ஞானகுரு)
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அப்படியே தங்கு தடையில்லாது முழுமையாகப் பெறவேண்டும் என்றால்
3.அதைக் கிரகிப்பதற்கு நம் நினைவுகளைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.

எப்படி…?

ஓ…ம் ஈஸ்வரா.. குருதேவா…! என்று அடிக்கடி சொல்லச் சொல்வதே இதற்குத்தான். அதாவது
1.எங்கெங்கோ செல்லும் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.நம் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றும் பொழுது
3.நம் ஆன்மாவில் இருக்கும் மற்ற உணர்வுகள் உயிரிலே படாதபடி தடுக்கப்படுகின்றது.

அதே சமயத்தில் (கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றிய நிலையில்) ஞானகுரு உபதேசத்தைக் கேட்கும் பொழுதோ அல்லது படிக்கும் பொழுதோ அல்லது அதை எண்ணித் நினைத்துத் தியானிக்கும் பொழுதோ
1.அந்த அருள் உணர்வுகளை மட்டும்
2.காற்றிலிருந்து பிரித்துக் காட்டும்.

அந்த உபதேசக் கருத்துக்களில் உள்ள நுண்ணிய உணர்வுகள் உயிரிலே பட்ட பின் அதே உணர்ச்சிகள் தூண்டப்படுகிறது. அதன் மூலம் நாம் எந்த மகரிஷி அந்த உணர்வைத் தனக்குள் ஆற்றலாக வளர்த்துக் கொண்டாரோ அதை நேரடியாக நாம் பெறும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

அதன் மூலம் நமக்குள் மெய் ஞானத்தின் வளர்ச்சி கூடுவதற்கு ஏதுவாகின்றது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிந்தித்துச் செயல்படும் அறிவாற்றல் பெறுகின்றோம்.

இப்படி வளர்த்துக் கொண்டால் நம்முடைய அறிவாற்றல் முதலில் செயல்பட்டதற்கும் இப்பொழுது செயல்படும் தன்மையிலும் அதிகமான உயர்வைக் காண முடியும்.

1.சரியான ஆலோசனை கேட்பதற்காக யாரையோ (நமக்கு நம்பிக்கையானவர்களை) தேடுவதற்குப் பதிலாக
2.நமக்குள் நாமே அந்த மெய் வழியைக் கண்டுணர முடியும்.
3.அதைச் சீராகச் செயல்படுத்தி வெற்றியையும் அடைய முடியும்.

என்னுடைய அனுபவம் அது தான்…!

காவல் தெய்வங்கள்…!

dwarapalaka

தெய்வத்தைக் காவல் தெய்வங்கள்…!

 

துவாரபாலகர்கள் என்றால் நாம் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பகுதி ஆலயங்களில் முன்னாடி இது இருக்கும்.

துவாரபாலகர்களைக் காவல் தெய்வம் (வாயிலைக் காப்போர்) என்றும் சொல்வார்கள். சந்நிதானத்தில் இருக்கும் கடவுளைப் பார்க்கச் செல்லும் முன் துவாரபாலகர்களைக் கடந்து தான் செல்ல முடியும்.

1.நம் உயிரே ஈசனாக கடவுளாக உள் நின்று இயக்குகிறது.
2.அந்த உயிர் இருக்கும் இடம் நம் புருவ மத்தி.
3.அந்தப் புருவ மத்திக்குக் கீழே தான் நம் மூக்கின் இரு துவாரங்களும் இருக்கின்றது.. (துவாரபாலகர்கள்…!)
4.அதாவது… இரண்டு துவாரங்கள் (துவார) வழியாக நாம் சுவாசிப்பதை எல்லாம்
5.நம உயிர் அணுவாக உருவாக்கும் கருவாக (பாலகர்கள்) உடலுக்குள் மாற்றிக் கொண்டே இருக்கின்றது என்று
6.நாம் புரிந்து கொள்ள ஞானிகள் அவ்வாறு காட்டுகின்றார்கள்.

நாம் சுவாசிக்கும் உணர்வலைகள் (காற்று) மூக்கின் வழி கூடி புருவ மத்தியில் பட்டால் தான் எண்ணம்… உணர்வு… உணர்ச்சி… சொல்… செயல்… எல்லாமே இயங்கும்…!

சுவாசிக்கவில்லை என்றால் உயிரிலே எதுவும் படாது. உயிரிலே படவில்லை என்றால் எதையுமே நாம் அறியவோ உணரவோ முடியாது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம்முடைய சுவாசத்தை… அதாவது துவாரபாலகர்களை நாம் கொஞ்சமாவது எண்ணிப் பார்க்கின்றோமோ…? என்றால் இல்லை…!

ஏனென்றால் நம்முடைய சகஜ வாழ்க்கையில்
1.கண்களில் பார்ப்பதையும்
2.காதில் கேட்பதையும்
3.வாயில் சுவையை அறிவதையும்
4.உடலின் உணர்ச்சிகளையும் பரிசீலனை செய்கின்றோம்.
5.அதைச் சரி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்து கூடுமானவரை சரியாக்குகிறோம்.

ஆனால் இலவசமாக நாம் சுவாசிக்கும் இந்தக் காற்றைப் பற்றி துவாரபாலகர்களைச் சிறிது கூடக் கவலைப்படுவதில்லை. எது ஒன்று இலவசமாகக் கிடைக்கின்றதோ… அதை நாம் சிறிதும் சட்டை செய்ய மாட்டோம்… இது தான் நம்முடைய் வழக்கம்.

கெட்ட வாசனை ஏதாவது வந்தால் தான் என்ன…? என்று பார்ப்போம். மற்றபடி நாம் சுவாசிக்கும் சுவாசத்தில் எது வந்தாலும் எல்லாவற்றுக்கும் அனுமதி கொடுத்துவிடுகின்றோம்.

நம்முடைய சுவாசத்தின் வழி நல்ல உணர்வுகள் உடலுக்குள் செல்கிறதா… அல்லது தீமையான உணர்வுகள் செல்கிறதா…? என்று பரிசீலிப்பதும் இல்லை…! அதைப் பற்றிய சிந்தனையும் இல்லை.

நம் மூக்கின் வழியாகச் செல்லும் அந்த உணர்வுகளைத் தடுத்து நிறுத்தி உயரிய சுவாசமாக நல்ல உணர்வாக ஈசன் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் காவல் தெய்வமாக வைத்துக் காட்டியுள்ளார்கள்.

1.ஏனென்றால் மனிதனுடைய ஆணிவேரே இந்தச் சுவாசம் தான்.
2.நம்முடைய அந்தச் சுவாசத்தைச் சரி செய்தாலே
3.வாழ்க்கையில் வரும் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம்.

அத்தகைய சுவாசத்தைச் சரி செய்யத்தான் நம் குருநாதர் உயிர் வழி சுவாசம் என்று ஆத்ம சுத்திப் பயிற்சியைக் கொடுத்துள்ளார்.

உயிர் வழி சுவாசம் என்றால்
1.நமக்குள் ஈசன் இருக்கின்றான்… நம்மை அவன் தான் இயக்குகின்றான்… அவனுக்குள் எந்த அசுத்தத்தையும் கொடுக்கவே கூடாது..! என்ற எண்ணம் கொண்டு
2.புருவ மத்தியில் இருக்கும் நம் உயிரிடமே கண்ணின் நினைவைச் செலுத்தி அதை வேண்டி (ஏங்கி)
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
4.அந்த மகரிஷிகளீன் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று
6.இத்தகைய உணர்வுகளைத் திரும்பத் திரும்பச் சுவாசித்தால் இதுவே உயரிய சுவாசமாகும்… “உயிர் வழி சுவாசமாகும்…!”

இதனால் நம் ஈசனும் மகிழ்ச்சி அடைகின்றான். இந்த உடலான சிவமும் மகிழ்ச்சி அடைகின்றான். நாம் பார்க்கும் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆண்டவனுக்குச் செய்யும் பணி என்பது இது தான்.

இப்படிப்பட்ட சேவையை நம் உயிரான ஆண்டவனுக்குச் செய்தால் அவனுடன் ஐக்கியமாகலாம். அவனுடன் ஒன்றிடலாம். அவனைப் போன்றே அழியாத நிலை பெறலாம்.

ஏனென்றால் உயிருக்கு என்றுமே அழிவில்லை. உடல் தான் அழிகிறது. உயிர் போய்விட்டது என்று நாம் சாதாரணமாக விட்டுவிடுகின்றோம்.
1.உடலைக் காக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றோமே தவிர
2.உயிரைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லை.

ஆனால் மெய் ஞானிகள் உயிருடன் ஒன்றியே இன்றும் விண்ணிலே ஒளியாகப் பேரொளியாக ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் சென்ற வழியில் நாமும் நம்முடைய சுவாசத்தைச் (துவாரபாலகர்களை) சீர்படுத்தினால் நிச்சயம் அவர்கள் அடைந்த எல்லையை அடையலாம்.

ஆலயங்களில் அதனால் தான் உள்ளே இருக்கும் அந்தத் தெய்வத்தையே காக்கும் தெய்வமாகக் காவல் தெய்வமாகக் காட்டி நாம் எல்லாம் எளிதில் புரிந்து கொள்ளும்படி செய்தார்கள்.

இனியாவது அந்த ஞானிகள் சொன்ன முறைப்படி உயிரான ஈசனுக்கு உயர்ந்த சுவாசத்தைக் கொடுப்போம். உயிருடன் ஒன்றுவோம்…!

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதடா…! என்று அடிக்கடி சொல்வார் ஈஸ்வரபட்டர்

narad muni

முன்னே வைத்த காலைப் பின்னே வைக்காதடா…! என்று அடிக்கடி சொல்வார் ஈஸ்வரபட்டர்

 

நாம் சுவாசிக்கும் அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகள் உயிரிலே பட்ட பின் தான் நாம் எதையுமே உணர முடிகிறது. ஏனென்றால் அந்த உணர்ச்சிகள் மூலம் உணர வைப்பது நம் உயிர் தான்.

இருந்தாலும் இது இரண்டையும் உணர்த்தி நம்மை ஞானியாக உருவாக்கிக் கொண்டிருப்பது சப்தரிஷி மண்டலத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஒளியான அலைகள்.

1.அந்தச் சப்தரிஷி மண்டல அலைகளை நமக்குள் குருவாக இணைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
2.உயிரிடம் அதை உருவாக்கச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

வேப்ப மரம்… ரோஜா… விஷம்… இந்த மூன்று செடிகளின் மணமும் சேர்ந்து சேர்ந்து புதிதாக ஒரு கருவேப்பிலைச் செடியாக ஆனது போல்
1.நமக்குள் ஏற்கனவே விளைந்த உணர்வுகளுக்குள்ளும்
2.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் சுவாசிக்கும் உணர்வுகளுக்குள்ளும்
3.அருள் மகரிஷிகளின் உணர்வலைகளைச் சேர்த்து இணைத்துக் கொண்டே வந்தால் நாமும் அந்த மகரிஷியாக ஆக முடியும்.

இதைத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நம் சாமிகளுக்கு (ஞானகுருவிற்கு) “நாரதனை நீ நட்பாக்கிக் கொள்…! அவன் எல்லாவற்றையும் உனக்கு விளக்கிச் சொல்வான்…!” என்று சொன்னார்.

நட்பு என்றால் எதையுமே உடனுக்குடன் அங்கே மகரிஷிகளுடன் நாம் பகிர வேண்டும்.
1.அங்கே சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.
2.அங்கிருந்து நமக்கு ஞானமாக உயர் ஞானமாக மெய் ஞானமாகப் பதில் வந்து கொண்டேயிருக்கும்.
3.அதை உயிர் வழியாகச் சுவாசித்து உயிரான ஈசனிடம் வேண்டி நமக்குள் சிருஷ்டிக்க வேண்டும் என்று வேண்டிட வேண்டும்.

இவ்வாறு செய்தால் வாழ்க்கையில் வரும் எத்தகைய இன்னல்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் நாம் விடுபட்டு மகிழ்ச்சியாக ஏகாந்தமாக வாழ முடியும்.

முருகா… அழகா…! என்று பாம்பைக் காலடியில் வைத்து “மகிழ்வாகனா” என்று ஞானிகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

சற்று யோசித்துப் பாருங்கள்…! நாம் எத்தனை பேர் தினசரி வரும் தீமைகளை வென்று வேதனைகளை வென்று
1.நான் நன்றாக இருக்கின்றேன்
2.நேற்றை விட இன்று நன்றாக மகிழ்ச்சியாக இருக்கின்றேன்
3.நாளை இன்னும் இதைக் காட்டிலும் பேரானந்த பெரு மகிழ்ச்சியாக நான் இருப்பேன்…! என்று
4.மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம்… மனதளவில் இப்படிப்பட்ட உணர்வு வருகின்றதா…? சீராகச் செய்தால் நிச்சயம் அந்த மகிழ்ந்த நிலை கிடைக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அதற்குத்தான் நம் சாமிகளிடம் “முன்னே வைத்த காலை பின்னே வைக்காதடா…” என்று அடிக்கடி சொன்னார்.

குரு வாக்கு…! என்பது சாதாரணமானதல்ல.
1.குரு வாக்கை மதித்தால்
2.குரு வாக்கினை ஏற்றுக் கொண்டால்
3.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நடக்கும் ஒவ்வொரு நிலைகளையும் குருவை மறக்காது
4.அருள் மகரிஷிகள் உணர்வுகள நமக்குள் கலந்து எல்லாவற்றையும் நல்லதாக்கும் முயற்சிகளைச் செய்து கொண்டேயிருந்தால்
5.குருவுடன் நாம் என்றுமே ஒன்றிய நிலையில் மகிழ்ந்து மகிழ்ந்து பேரானந்த நிலை எய்திட முடியும்.
6.இது மெய்…!

“ஐக்கியத் தொடர் ஜெனிப்பினுள்ளே..
ஐக்கியமாகிவிடு ஈஸ்வரபட்டாய குருதேவா… ஈஸ்வரபட்டாய குருதேவா..”

ஒலியின் ஒலி நாத விந்தில்…
ஒளியின் ஒளி ஜீவ வித்தாய்…
*ஓங்கி நிற்கும் தெய்வச் செயலாய்…*
நான் ஓங்கிடவே *உமதருள் தாராய்*
குருதேவா… குருதேவா… குருதேவா…!

நம்மை மெய் ஞானியாக… மகரிஷியாக… ஆக்கச் செய்யும் பரிபாஷைகள்…!

guruji blessings

நம்மை மெய் ஞானியாக… மகரிஷியாக… ஆக்கச் செய்யும் பரிபாஷைகள்…!

 

சாமிகள் (ஞானகுரு) உபதேசம் கொடுக்கும் பொழுது அதிகமாக உபயோகப்படுத்தும் பரிபாஷைகளில் (உபதேசத்தில் அடிக்கடி வெளிப்படுத்தும் சொற்கள்)
1.”தன்மை” என்று இணைத்துப் பேசுவார்
2.”நிலைகள்” என்று இணைத்துப் பேசுவார்
3.சுமார் 15 நிமிடம் உபதேசத்தில் குறைந்தது 20 – 50 தடவை இதை உபயோகிப்பார்.
4.இது போக சில பரிபாஷைகள் ஒரு “இது… ஒரு அது”
5.அதே போல ஒரு… “இதை… அதை…” என்றும் சொல்வார்.
6.”ஆக..” “ஆகவே…” “நமக்குள்.., தனக்குள்…” என்றும் நிறையச் சொல்வார்.
7.இதற்கு முழுமையான அர்த்தங்களை அவரை எண்ணித் தியானித்தால் முழுவதும் தெரிந்து கொள்ள முடியும்.

எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

27 நட்சத்திரத்தின் ஆற்றல்கள் கொண்டு தான் எல்லாமே இந்தப் பிரபஞ்சத்திற்குள் கலவைகள் ஆகின்றது. ஒன்று ஏற்றுக் கொள்ளும் ஒன்று ஏற்றுக் கொள்ளாது.

இப்படிப் பல கலவைகள் மாறி மாறி… “சில காரணங்களுக்கு ஒத்துப் போவதும் சில காரணங்களுக்காக ஒத்துப் போகாதுமாக…!” இப்படி மாறி மாறி எண்ணத்தில் எண்ண முடியாத கலவைகள் ஒவ்வொரு நொடிப் பொழுதும் மாற்றங்கள் நமக்குள்ளும் சரி எல்லாவற்றிலும் சரி ஆகிக் கொண்டேயுள்ளது.

1.50 வருடத்திற்கு (1970க்கு முன்னாடி) முன்னால் ஞானகுரு சொன்ன உபதேசக் கருத்துக்களும்
2.தற்சமயம் 2019ல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உபதேசக் கருத்துக்களும்
3.பல கோடி கோடி கோடி ஆண்டுகளுக்கு முன்னாடி காலமே இல்லாத நிலையில் அந்த மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளும்
4.எல்லாவற்றையும் இணைத்து அதனுடன் நம்மையும் இணைக்கும் தன்மைக்கு
5.எல்லாவற்றுக்கும் பொருந்தும் தன்மைக்குத்தான் இந்தப் பரிபாஷைகள் உதவி செய்யும்.

யார் இந்த உபதேசத்தைக் கேட்டாலும்… “எனக்குத்தான் குருநாதர் இதைச் சொல்கிறார்…! எனக்காக வேண்டித்தான் சொல்கிறார்…! எனக்கு மட்டுமே தான் இதைச் சொல்கிறார்…! என்று அது இணைத்துச் சொல்ல வைக்கும்.

அது தான் குருவின் வேலை.

சாமிகள் தன் உபதேச வாயிலாக வெளிப்படுத்தும் பொழுது மெய் ஞானிகள் உணர்வை மட்டும் நான் சொல்லவில்லை…!
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 27 நட்சத்திரத்தின் ஆற்றலை எனக்குக் காட்டி
2.அந்தச் சக்தி வாய்ந்த அந்த ஆற்றல்களை எம்மைத் தொடச் செய்து
3.அந்த உணர்வுகளை எப்படிச் சேர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று உணர்த்தி அதை எம்மைப் பெறும்படி செய்தார்.

மேலும் அந்த 27 நட்சத்திரத்தின் ஆற்றல்களை ஞானிகளின் உணர்வுடன் எந்த அளவில் நீ கலக்க வேண்டும்…? எந்த அளவு கலந்து மற்றவர்களுக்கு அருள் ஞான வித்தாக ஊன்ற வேண்டும்…? எப்படி ஞானிகளின் உணர்வை உன்னை நாடி வருபவர்களுக்குள் விளையச் செய்ய வேண்டும்…? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாகக் காட்டினார். அவர் காட்டிய அருள் வழியில் தான் யாம் உபதேசிக்கின்றோம் என்கிறார் சாமிகள் (ஞானகுரு)

தன்மை… நிலைகள்… அது… இது… அதை… இதை… ஆக… நமக்குள்… தனக்குள்… இப்படி சாமிகள் உபதேச வாயிலாக வரும் இந்த ஒலிகள் சொல்லாக ஞானகுரு வெளிப்படுத்தும் பொழுது
1.அது நன்மை செய்பவனை ஞானியாக ஆக்க அவன் நல்லதுடன் கலந்து இயக்கும்.
2.அவன் வைத்திருக்கும் நல்லது மூலமாகவே அவன் வளர்வான்
3.அந்த நல்லதுக்கு உற்சாகம் ஊட்டி அவனைச் சிறுகச் சிறுகத் தெளிவாக்கி
4.அவன் வைத்திருப்பது நல்லது தானா,,,? இல்லையா? எது நல்லது…? எது கெட்டது ? என்று அவன் வழியிலேயே அவனை உணரும்படிச் செய்யும்.
5.இதைப் போன்று தான் கெட்டது வைத்திருப்பவனை ஞானியாக்க அவன் வைத்திருக்கும் கெட்டதுடன் கலந்து இயக்கும்
6.அந்தக் கெட்டது மூலமாக அவன் வளர்வான்.
7.அவனுக்கும் உற்சாகத்தை ஊட்டி அவனையும் கெட்டது எது…? நல்லது எது…? என்று அந்தக் கெட்டது மூலமாகவே உணரச் செய்து அவனையும் ஞானியாக்கும்.

அதற்குத்தான் இந்த ஒலியின் ஓசைகள் தன்மை/நிலைகள் எல்லாம்.

1.படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும்
2.பிடித்தவனுக்கும் பிடிக்காதவனுக்கும்
3.நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
4,தெரிய வேண்டும் என்று எண்ணுபவனுக்கும் எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனுக்கும்
5.இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் – எல்லோருக்கும் பொருந்தும்படியான உபதேசமாக அது அமைவதே அந்த ஒலிகள்.

அதாவது இப்படியும் இருக்கலாம்… அப்படியும் இருக்கலாம்… எப்படியும் இருக்கலாம்…! என்று எண்ணச் செய்துவிட்டு கடைசியில்
1.இப்படி இருந்தால்… இப்படித்தான் ஆகும்…! என்ற மெய் ஞானிகள் கண்டுணர்ந்த மூலத்தை அறியச் செய்யும் பரிபாஷைகள் அவைகள்.
2.இது தான் எனக்குத் தெரிந்தது என்னுடைய அனுபவத்தில்

இன்னும் நிறைய இருக்கின்றது அதையெல்லாம் எழுத்தில் பதிவு செய்ய முடியாது – அது “ஞான குருவின் உபதேச… BODY LANGUAGE” – அதைப் பிடித்தால்… நுகர்ந்தால்… கவர்ந்தால்… சுவாசித்தால்… மகரிஷியுடன் மகரிஷியாக நாமும் அவர்களுடன் ஐக்கியமாகலாம்.

ஞானகுருவின் உபதேசத்தின் மூலமாக நாம் எளிதில் ஞானியாக வளர முடியும். விண்ணின் ஆற்றலைப் பெற முடியும்.