சார்தாம் – இமயமலைப் பயணம்

chardham

சார்தாம் – இமயமலைப் பயணத்தில் பெற்ற இயற்கையின் பொக்கிஷ உணர்வுகள்

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டர் காட்டிய அருள் வழியில் நம் ஞானகுரு அவர்கள் கேதார்நாத் பத்ரிநாத் ஜோஸ்மத் காசி ஹரித்துவார் ரிஷிகேசம் போன்ற பல இடங்களுக்குச் சென்று பல அனுபவங்களையும் பல ஆற்றல்களையும் பெற்றார். அதை எல்லாம் உபதேச வாயிலாக வெளிப்படுத்தியும் உள்ளார்.

அவ்வாறு அவர் பெற்ற அந்த ஆற்றல்களை எல்லாம் பெறுவதற்காகவே இந்த இமயமலைப் பயணம் (சார்தாம் – நான்கு மலைகள் யமுனோத்ரி கங்கோத்ரி பத்ரிநாத் கேதார்நாத்) 19.08.19 முதல் 31.08.19 வரை மேற்கொள்ளப்பட்டது.

ஒவ்வொரு இடத்திற்குச் செல்லும் பொழுதும்
1.மகரிஷிகள் பாதுகாப்பாக வழி நடத்தியதை உணர முடிந்தது.
2.விண்ணின் ஆற்றலை உணரும் சந்தர்ப்பமும் கிடைத்தது.
3.விண்ணின் ஆற்றல் மண்ணுலகில் எப்படி வந்து சேர்கிறது…? என்பதைக் காணும் வாய்ப்பும் கிடைத்தது.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காசி கேதார்நாத் ஜோஸ்மத் உத்தரகாசி கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற இடங்களில் பல நல்ல அனுபவங்களும் ஆற்றல்களும் கிடைத்தது.

இமயமலையைப் பற்றிய இரகசியத்தையும் மகரிஷிகள் இங்கே செயல்படும் முக்கியத்துவத்தையும் அறிய முடிந்தது.
1.விண்ணின் ஆற்றல் நீராக மாறும் தன்மையைக் கங்கோத்ரியில் கண்கூடாகக் காண முடிந்தது.
2.கேதார்நாத்தில் விண்ணுலக சக்திகள் நமக்கு முன்னாடியே அங்கே உறைவதையும் ஆற்றலாக அலைகளாகப் படர்வதையும் காண முடிந்தது.
3.அதை நம் உயிராத்மாவில் சேர்த்து ஜோதியாக மாற்றும் உபாயமும் கிடைத்தது.

அந்த 14 நாட்களுமே மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை உடல் ஏற்றுக் கொண்டதும் பசியோ தாகமோ எல்லாமே ஒரு கட்டுக்குள் சீராக அமைந்ததும் ஒரு ஆச்சரியமான அனுபவம் தான்…!

இதன் மூலம் எந்த இடத்திற்குச் சென்றாலும் மாமகரிஷிகளின் அருளைப் பெற்று நாம் “நிலைத்திருக்க முடியும்…!” என்ற எண்ணம் வலுப் பெற்று விட்டது.

அங்கே உற்றுப் பார்த்து நுகர்ந்த இயற்கையின் பசுமையும்… மூலிகை வாசனைகளும்.. நீர் வளங்களும்… மலைகளும்… பனி படர்ந்த மலைகளும்… நீர் ஓடி வரும் வேகத்தில் அது கரைத்துக் கொண்டு வரும் ஸ்படிகக் கற்களும்.. மனதிலே ஆழமாகப் பதிவாகி விட்டது.

அதே போல் கந்தகப் பாறையில் நீர் ஓடி சுடு தண்ணீராக வருவதை யமுனோத்ரியிலும் கங்கோத்ரியிலும் காண முடிந்தது. குளிர்ந்த நீர் ஒரு பக்கம் ஓடினாலும் அதற்குப் பக்கத்திலேயே இந்தச் சுடு தண்ணீர் வருவது
1.நம் பூமித் தாயின் உள் சுவாச நிலைகளையும்
2.பூமியின் ஆற்றல்களையும் நேரடியாக அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது.

இவைகளை நினைக்கும் பொழுதெல்லாம் மலை உச்சிகளும் அவை கவரும் விண்ணின் ஆற்றல்களும் சுவாசத்தில் வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் உத்தரகாண்ட் மாநிலம் முழுவதுமே மலைகள் மட்டும் தான். சமமான பூமி அங்கே காண முடியவில்லை.

இன்னும் சொல்லப் போனால் இன்றைய விஞ்ஞான உலகில் உள்ள செயற்கைகளை அந்த மலைப்பகுதிகளில் அதிகம் காண முடியவில்லை.
1.இயற்கையை முழுமையாக ஸ்பரிசித்த உணர்ச்சிகளும் இனம் புரியாத மகிழ்ச்சியும் கிடைத்தது.
2.ஒரு வேளை அன்று அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் இப்படித்தான் பூமியெங்கிலும் இருந்திருக்குமோ…! என்ற உணர்ச்சிகளும் வந்தது.

நிறைவு நாளான 31.08.19 அன்று… இமயமலையில் பெற்ற சக்திகள் அனைத்தையும் குடும்பத்தைச் சார்ந்தோர்… இந்த நாட்டு மக்கள்… உலக மக்கள்… அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தோம்.

ரிஷிகேசத்தில் ஆயிரம் வருடத்திற்கு மேல் கடும் தவமிருந்த
1.அந்த ரிஷி விண் சென்ற ஆற்றலை
2.இந்தக் காற்று மண்டலத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிரான்மாவும் பெறவேண்டும் என்றும்
3.அந்த உயிராத்மாக்கள் அனைத்தும் விண்ணுலகம் செல்ல வேண்டும்… அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும்… என்று
4.விண் செலுத்தும் ஆற்றலைப் பெற தியானித்தோம்.

இந்தப் பயண அனுபவங்களைப் படிப்போர் அனைவரும் இமயமலையில் பாய்ந்து கொண்டிருக்கும் இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியும்… விண்ணின் ஆற்றலும்… விண் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தியும் பெறவேண்டும்… அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ வேண்டும்…! என்று எல்லா மகரிஷிகளிடமும் வேண்டுகிறேன்.

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…!

கேதார்நாத் ஆலயத்தில் தியானம்

Kedarnath temple

கேதார்நாத் ஆலயத்தில் தியான அனுபவம்

 

15.5 கி.மீ தூரத்தை ஐந்து மணி நேரத்தில் டோலி மூலம் மேலே சென்றேன். கீழிருந்து மலை மீது செல்லச் செல்ல என்னை அறியாமலே பலவிதமான ஆற்றல்கள் என் உடலுக்குள் புகுந்து கொண்டே இருந்ததை உணர முடிந்தது.

கோவிலுக்கு ஒரு கி.மீ. முன் இறங்கி நடக்கும் பொழுது
1.தலையிலிருந்து (குறிப்பாக சிறு மூளையில்) கால் வரை மின்னல் பாய்ந்து என்னை (உடலை) இரண்டாக வகுந்தது போல் இருந்தது.
2.அதற்குக் காரணம் என்ன…? என்று உடனே உணர முடியவில்லை
3.ஆகையினால் மெதுவாகத் தான் என்னால் அங்கே நடந்து செல்ல முடிந்தது.

ஆலயத்திற்குள் முதலில் ஒரு முறை வலம் வந்தேன். பின் இரண்டாவது முறை வலம் வரும் பொழுது இரண்டு கட்டுகளாக இருந்த அந்த ஆலயத்தின் முதல் கட்டில் பாண்டவர்களின் அனைத்துச் சிலைகளையும் காண முடிந்தது.

அந்தச் சிலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது திடீரென்று இளம் நீல நிறத்தில் ‘பளீர்…ர்ர்ர்…” என்று வெளிச்சம் மின்னல் போல் வெட்டியது.

வெளிச்சம் எங்கிருந்து வருகிறது…? என்று சுற்று முற்றும் பார்க்கும் பொழுது மறுபடியும் அதே வெளிச்சம் மின்னல் போல் இளம் நீல நிறத்தில் தெரிந்தது.

பின்னர் ஈஸ்வரபட்டர் தெளிவாக எனக்கு உணர்த்தினார். நீ ஏற்கனவே எடுத்து…
1.உனக்குள் வளர்த்துக் கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் கிளர்ந்தெழுந்து
2.இந்த மலையில் “அபரிதமாகப் பரவிக் கொண்டிருக்கும்…!” அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தியைத் தன்னிச்சையாக ஈர்த்ததால் தான்
3.இந்த நீல நிற ஒளிகள் உன்னிடமிருந்து வெளிப்பட்டது.
4.மேலும் உன் உடலையே இரண்டாகப் பிளப்பது போல் இருந்ததன் காரணமும் அதுவே தான்.

உன் உடலில் அந்த ஆற்றல்களைத் தாங்கக் கூடிய “காந்த சக்தி” இல்லாததால் தான் உனக்கு வலியும் அதனால் சோர்வும் வந்தது…! என்று தெளிவாக்கினார்.

அந்தக் காந்த சக்தியைக் கூட்டும் முறையையும் காட்டினார்…!

அங்கே இருந்த லட்சுமி நாராயணன் சிலை அருகில் ஒரு நெய் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அந்த ஒளியின் சுடரை இரண்டு கைகள் மூலம் எடுத்து வியாசகரையும் மற்ற மகரிஷிகளையும் எண்ணி என் முகத்தில் சுமார் நான்கு முறை ஒற்றி எடுக்கும்படி உணர்த்தல்கள் வந்தது.

அவ்வாறு செய்ததும் உடலில் சிறு மூளையில் இருந்த வலி… உடல் சோர்வு… அது எல்லாமே குறையத் தொடங்கியது.

பின்னர் உள் கட்டில் இருந்த முக்கோண வடிவில் மலை போல் உருவாகியிருந்த கேதாரின் சிலையை உற்றுப் பார்த்தேன். அதிலே தடவப்பட்டிருந்த நெய்யைப் பார்த்ததும் என் நினைவுகள் அனைத்தும் மகரிஷிகள் பால் சென்றது.

மனித வாழ்க்கையில் வந்த அனைத்து உணர்வுகளையும் உயிருடன் ஒன்றச் செய்து அந்த நல்ல சக்திகளை உயிராத்மாவில் வடித்துச் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.
1.அந்த உணர்வுகளைச் சுவாசித்ததும் அந்தக் கேதார் சிலையின் (முக்கோண வடிவில்) அடியில் இருக்கும்
2.அதன் ஈர்ப்பு நிலையையும்
3.விண்ணிலிருந்து கவரும் அதனின் ஆற்றலையும் உணர முடிந்தது.

பின் ஆலயத்திற்கு வெளியே வந்து அந்தக் கோவிலைத் தாங்கி நின்ற கம்பத்தில் என் உள்ளங்கையை வைத்தும்… தலையை வைத்தும் சுவாசிக்கத் தொடங்கினேன்.

உடல் முழுவதும் ஒரு புத்துணர்ச்சி தோன்றியது. பறப்பது போல் உணர்வுகள் வந்தது. மனதில் மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகள் தோன்றியது.

பின்னர் ஞானகுருவையும் மாமகரிஷி ஈஸ்வரபட்டரையும் எண்ணிக் கொண்டே கீழே இறங்கத் தொடங்கினேன். சுமார் ஐந்து கி.மீ சென்றதும் நீர் மேகங்கள் வேக வேகமாக மலைப் பகுதிகளை நோக்கி ஈர்க்கப்பட்டு நீராக மாறுவது தெரிந்தது.

பின்னர் மழைத் துளியும் விழத் தொடங்கியது. சிறிது தூரம் சென்றதும் மழை பெய்யத் தொடங்கியது. எங்கு பார்த்தாலும் வெண்மை நிற (மழை) மேகங்கள் தெரிந்தது. வானத்தில்….
1.அதாவது விண்ணுலகில் சஞ்சரிப்பது போல் உணர்வுகள் தோன்றியது.
2.ஏனென்றால் கண்ணுக்கு முன்னாடி இருப்பது எதையுமே தெளிவாகக் காண முடியவில்லை.
3.எங்கே பார்த்தாலும் அந்த வெண்மை நிறம் தான்…!

பின் அந்த மழை பொழிதலும்… மூலிகைகளின் வாசனைகளும்… சுவாசத்தில் இனிமையான உணர்வை ஊட்டியது. கீழே இறங்கும் வரை அதை அனுபவித்தேன்.
1.காணாத காட்சிகளை எல்லாம் காண முடிந்தது.
2.விண்ணையும் மண்ணையும் ஒன்றாகவே காண முடிந்தது.
3.அந்த விண்ணுலக ஆற்றல் எனக்குள் சேர்வதையும் உணர முடிந்தது.

பின்னர் பாண்டவர்களின் சிலைகளைப் பற்றி ஈஸ்வரபட்டர் உணர்த்தத் தொடங்கினார்.

நம் ஐம்புலன்கள் தான் பாண்டவர்கள். உயிரின் துணை கொண்டு ஐம்புலன்கள் வழியாக எடுக்கும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கொண்டு உடல் பெறும் உணர்வுகளைக் (கௌரவ உணர்வுகளை) கரைக்கும் பொழுது அது பேரொளியாக ஜோதிலிங்கமாக இந்த உடலே ஒளியின் உடலாக மாறுகின்றது…! என்று தெளிவாக்கினார்.

பாகீரதி நதியில் அமைந்துள்ள உத்தரகாசியில் 26.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்

Bhagiratha

பாகீரதி நதியில் அமைந்துள்ள உத்தரகாசியில் 26.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்

 

பண்டைய கால மகரிஷிகள் இங்கே அதிகம் செயல்பட்டதாக இந்த ஸ்தலத்தின் வரலாறு கூறுகிறது.

முன்னோரு காலத்தில் இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த சகரர் என்ற அரசன் அசுவமேதயாகம் நடத்தினார். அசுவமேதயாகம் முழுமை பெற்றால் தனது இந்திர பதவிக்கு ஆபத்து என்று அறிந்த இந்திரன் யாகக் குதிரையைக் களவாடி கபில முனிவர் தியானிக்கும் இடத்தில் மறைத்து விடுகின்றான்.

குதிரையைத் தேடி சகரரின் அறுபதினாயிரம் மகன்களும் செல்கின்றனர். கடைசியில் கபிலர் ஆசிரமத்தில் கண்டதும் குதிரையை அவரே பிடித்து வைத்திருப்பதாக எண்ணி அந்த முனிவரை ஏசுகின்றனர்.

ஏசியதும் அந்த முனிவர் கண் விழித்துப் பார்த்து அவர்களை எரித்துச் சாம்பலாக்கி விடுகின்றார். பின் யாகம் நடத்தும் அரசனின் மற்றோரு மகன் நடந்ததை அறிந்து கபில முனிவரிடம் மன்னிப்புக் கேட்டு யாகக் குதிரையை அழைத்துச் சென்றதாகக் காவியம் உண்டு.

1.அந்த அறுபதனாயிரம் பேரையும் மீட்க வேண்டும் என்றால்
2.ஆகாய கங்கையை இங்கே பூமிக்குக் கொண்டு வந்து
3.இறந்த அறுபதனாயிரம் பேரின் எலும்புகளில் அந்த நீர் பட்டால்
4.அவர்கள் எல்லோரும் சொர்க்கம் அடைவார்கள் என்று கபிலர் சொல்கிறார்.

திலீபனின் மகனான பகீரதன் அந்த அறுபதனாயிரம் பேரையும் மீட்க பெரும் முயற்சி எடுத்தான். அது குறித்து கங்கையை வேண்டி பகீரதன் தவம் செய்ய கங்கை ஒரு நாள் பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும்…? என்று கேட்கின்றது.

இங்கே பூமிக்குள் கங்கை வர வேண்டும் என்று பகீரதன் சொல்ல கங்கை எனக்கு இப்பொழுது வர விருப்பமில்லை….! என்று சொல்லி மறைந்து விடுகின்றது.

பின்னர் முனிவர்கள் பகீரதனிடம் நீ சிவபெருமானை நினைத்துத் தவமிருந்தால் அவர் சொன்னால் கங்கை நிச்சயம் பூமிக்குள் வரும் என்று சொல்கின்றனர்.

அவ்வாறே பகீரதன் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருக்கின்றார். பல காலம் தவமிருந்த பின் சிவபெருமானின் காட்சி கிடைக்கின்றது. கங்கையை பூமிக்கு வரச் செய்வதாக அவரும் ஆசி கொடுக்கின்றார்.

கங்கையின் வேகத்தைத் தன் ஜடாமுடியில் தாங்கி பூமிக்குள் கொண்டு வருகின்றார் சிவன். அதன் பின்னரும் பல சிக்கல்கள் உருவாகி அதில் ஒவ்வொன்றிலிருந்தும் கடும் தவம் இருந்து வென்று முடிவில் அறுபதனாயிரம் பேரின் எலும்புகளின் மீதும் கங்கையைப் படச் செய்து அவர்களை மீட்டதாக அந்தக் காவியம் சொல்கிறது.

பகீரதன் கங்கையைக் கொண்டு வந்து புண்ணியம் பெறச் செய்ததால் அந்த இடத்தைப் “பாகீரதி நதி…!” என்று அழைக்கின்றனர்.

இதனுடைய உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் பார்ப்போம்.

அசுவமேதயாகம் என்றால் விண்ணிலே தோன்றிய ஒரு உயிர் பூமிக்குள் வந்து பல கோடிச் சரீரங்கள் பெற்று… ஒன்றை ஒன்று வென்று… ஒன்றை ஒன்று கொன்று ஒன்றுக்கு இரையாகி… இப்படிப் பல நிலைகளை வென்று தான் மனிதச் சரீரம் பெறுகின்றது.

மனிதச் சரீரம் பெற்ற நிலையில் இராமாயணத்தில் தசரதச் சக்கரவரத்திக்கு அறுபதனாயிரம் மனைவிகள் என்று குறிப்பிட்டது போல்
1.உயிரால் நுகரப்பட்ட உணர்வுகள் அனைத்தும்
2.எண்ணிலடங்கா சக்திகளாக… உடலாக… மாறுகிறது…! என்று இங்கே காட்டுகின்றார்கள்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் அனைத்தும் இரத்தங்களில் கலந்து இந்திரலோகமாக… அணுக்களாக… அதனதன் வீரியத்திற்கொப்ப வலிமைக்கொப்ப உருப்பெருகின்றது.

அதிலே ஏதாவது ஒன்று உடலில் உள்ள மற்றதை எல்லாம் அடக்கி வீரியம் பெற்று ஆட்சிக்கு வந்து விட்டால் “இந்திரலோகம்” (இரத்தத்தில் உள்ள அணுக்கள்) மாறுகின்றது.

அப்படி மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இந்திரன் தன் பதவியைத் தக்க வைக்கப் பல வேலைகளைச் செய்கிறான்…! என்று காவியங்கள் கூறுகின்றது. (நாம் வளர்த்துக் கொண்ட குணங்கள் அனைத்தும் தன்னைக் காக்க அது அது முயற்சிக்கும்)

இவ்வாறு எடுத்துக் கொண்ட குணங்கள் மாறுபட்ட நிலையாகும் பொழுது
1.உடலை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ரிஷியிடம் சாபம் பெறுவதாக
2.இங்கே கபில முனிவரின் சாபத்தைக் காட்டுகின்றார்கள்.

மனிதனான நிலையில் அடுத்த நல்ல நிலையை அடைய முடியாத நிலையை அவ்வாறு காட்டுகின்றார்கள். ஆனால் பகீரதனோ எப்படியும் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று பல தடவைகள் முயற்சி செய்வதைக் காட்டுகின்றார்கள்.

1.இந்த மனித வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும்
2.எத்தனையோ கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாது
3.மனிதனுக்கு அடுத்த நிலையான பிறவியில்லா நிலையை அடைய வேண்டும் என்ற அவனின் முயற்சியைத் தான்
4.“பகீரதப் பிரயத்தனம்” என்று சொல்வார்கள்.

இதிலே “ஆகாய கங்கை” என்பது விண்ணிலிருந்து வரும் பேராற்றல் மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகள். அதன் வேகத்தை நாம் எடுக்க (தாங்க) வேண்டும் என்றால்
1.நம் உடலின் உச்சியில் உள்ள இரண்டு கண்ணின் நினைவையும் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
2.அதன் மூலமாக விண்ணிலிருந்து சுவாசிக்க வேண்டும் என்று தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் வலிமையாகச் சேர்த்து அதை வளர்க்கும் பொழுது அடுத்து வரும் தடைகளை எல்லாம் எண்ணாது “ஒரே நிலையில் அந்தச் சக்திகளைப் பெற வேண்டும்” என்பதையே பல காலம் கடும் தவமிருந்ததாகக் காட்டுகின்றார்கள்.

1.அருள் மகரிஷிகளின் ஆற்றலை நாம் சேமிக்க வேண்டிய இடம் நம் உடலில் உள்ள எலும்புகள் என்றும்
2.அதிலே இருக்கும் ஊழ்வினை என்ற வித்துகளை அருள் ஒளியின் உணர்வாக மாற்றும் பொழுது தான்
3.அனைத்து வகையான சாபங்களிலிருந்தும் (ஜென்ம வினை பாவ வினை சாப வினை தீய வினை) விடுபட்டு
4.எல்லா உணர்வுகளும் உயிருடன் ஒன்றி மனிதன் சொர்க்கம் அடைவதாக ஞானிகள் காட்டுகின்றார்கள்.

இந்தப் பேருண்மயை உணர்த்தியது வியாசக பகவான். அங்கே உத்தரகாசியில் வியாசகரை எண்ணித் தியானமிருக்கும் பொழுது இந்த விளக்கங்கள் எல்லாம் எனக்குக் கிடைத்தது.

வியாசகரின் அருள் சக்தி உலக மக்கள் எல்லோருக்கும் கிடைத்து பகீரதனைப் போன்று விடா முயற்சி எடுத்து அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உடலில் உள்ள அனைத்து உணர்வுகளையும் உயிருடன் ஒன்றச் செய்து பேரொளியாக அழியா ஒளிச் சரீரம் பெற அருள்வாய் ஈஸ்வரா.

“கங்கோத்ரி” – பூநீரான கங்கையின் புனிதத்தைப் பற்றி தியானத்தின் மூலம் பெற்ற அனுபவம் 24.08.19

gangotri

“கங்கோத்ரி” – பூநீரான கங்கையின் புனிதத்தைப் பற்றி தியானத்தின் மூலம் பெற்ற அனுபவம் 24.08.19

 

மகாபாரதத்தில் வியாசர் காட்டிய பேருண்மைப்படி சந்தனுவின் மனைவியாக வரும் கங்கை தனக்குப் பிறக்கும் ஏழு குழந்தைகளை கொல்கின்றாள்.

எட்டாவது குழந்தையான பீஷ்மர் பிறந்ததும் அதைக் கொல்லும் நேரம் அதைப் பொறுக்க முடியாத சந்தனு கங்கையிடம் “எனக்குக் குழந்தை வேண்டும்… கொல்லக் கூடாது…!” என்று சொன்னதும் குழந்தையைக் கொடுத்து விட்டு கங்கை சந்தனுவை விட்டு விலகிச் சென்று விடுகிறாள்.

இதனுடைய உட்பொருள் என்ன…? என்று தியானத்தில் கேட்கும் பொழுது கிடைத்த உணர்வுகள்….

இன்று நம் நாட்டின் புண்ணிய நதிகளில் மிக மிக முக்கியமான நதி கங்கை.
1.கங்கை என்ற பெயர் பல இடங்களில் ஒரு சிறப்பு மிக்கதாகப் பயன்படுத்துகின்றது.
2.“கங்கா ஸ்நானம்…” என்று சொல்வார்கள்.
3.அதன் உட்பொருளை முழுமையாக உணர்ந்தவர்கள் அதை ஆகாய கங்கை (அகண்ட அண்டம்) என்று சொல்வார்கள்.

அந்த ஆகாய கங்கையிலிருந்து தான் கண்ணுக்குப் புலப்படக்கூடிய பொருள்கள் அனைத்துமே உருவாகின்றது.
1.அணுக்கள் உயிரணுக்கள் எல்லாமே அந்த ஆகாய கங்கையின் அம்சமாக உருவானாலும்
2.அந்த உயிரணு என்பது ஒரு பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கினால் மட்டுமே
3.அது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதன் வரை வளர்கின்றது.
4.மனிதனாக ஆன பின் அந்த ஆகாய கங்கையைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பும் வருகின்றது.

அந்த உயிரணு ஆகாய கங்கையில் இருக்கும் வரை அதற்கு வளர்ச்சி இல்லை. பூமிக்குள் வந்தால் தான் வளர்ச்சி. (அது தான் எட்டாவது குழந்தையான பூஷ்மர்).

விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் வந்து உடல் பெற்ற பின் அதற்குள் உயிரின் சக்தி அடைப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாததால் அந்த ஆகாய கங்கையைப் பற்றி அறிய முடிவதில்லை.

அதே ஆகாய கங்கையின் ஆற்றல் பூமித் தாயால் தன்னுடைய வளர்ப்பான மலைகளில் ஈர்க்கப்பட்டு ஜீவ நீராக உருவாகின்றது. அத்தகைய நீர் இருந்தால் தான் தாவரங்களும் அதனால் உயிரினங்களும் வளர்ச்சி அடைய முடியும்.

அப்படி ஜீவ நீர் நதியாக ஓடவில்லை என்றால் அவைகள் எதுவுமே வளர முடியாது. வெறும் மணலும் மலைகளும் மட்டுமே இருக்கும்.

இன்று மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்த நிலையில்
1.அந்த ஆகாய கங்கையின் இயக்கத்தையும்
2.அதனால் உருவான ஜீவ நீரையும் பற்றி முழுமையாக அறிந்து கொண்டால்
3.உயிரின் இயக்கத்தையும் உயிருக்குள் சேர்க்க வேண்டிய அந்த ஆகாய கங்கையின் ஆற்றலையும் உணர்ந்து கொள்ளலாம்.

இதை முழுமையாக அறிந்த அக்கால மகரிஷிகள் கங்கையை “கங்கை மாதா” என்று உணர்த்தி அதன் ஆற்றலின் முக்கியத்துவத்தை உணர்ந்து… அந்த ஆற்றலைத் தனக்குள் வளர்த்து… ஆகாய கங்கையுடன் ஐக்கியமாகி… “ஒளி வீசும் நட்சத்திரங்களாக” அங்கே என்றும் அழியாத நிலையில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

தன்னைப் போன்று தன் இன மக்களும் அந்த ஆற்றலைப் பெறுவதற்காகத் தான் “கங்கோத்ரி” எனும் இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே “கங்கை மாதா” என்று காட்டியுள்ளார்கள்.

கங்கோத்ரியைச் சுற்றியுள்ள அத்தனை மலைகளிலும் நம் ஊனக் கண்களாலேயே
1.மலைகளும் அந்த நீரை உருவாக்கும் மேகங்களும் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என்றும்
2.அந்த மலை உச்சிகள் ஆகாய கங்கையின் ஆற்றலை (நீர்) மேகமாக இழுத்து
3.அதை எப்படிப் பருகி நீராக அருவியாகக் கொட்டுகிறது… என்றும் மிக மிகத் தெளிவாகக் காண முடிந்தது.

கங்கோத்ரிக்கு போகும் அந்தப் பாதைகள் முழுவதிலுமே (சுமார் 60 கிலோ மீட்டர் சுற்ற\ளவுக்கு) அதை உணர முடிந்தது.
1.அந்த கங்கை என்ற சொல்லின் புனிதத்தையும் அதனுடைய மணத்தையும்
2.கங்கை வளைந்து நெளிந்து ஆழத்திலும் அகலமாகவும் ஓடுவதையும் பார்க்கும் பொழுது
3.அது ஒரு பூநீராக… புனித நீராக… விண்ணும் இந்த மண்ணும் இரண்டறக் கலந்து
4.அதனால் ஏற்படும் சிருஷ்டியின் பிரம்மாண்டத்தையும்… படைப்பின் மூலத்தையும்… காணவும் உணரவும் முடிந்தது.

கங்கையின் புனிதத்தை உணர்ந்ததால் தான் நம்முடைய ஞானிகள் கங்கையில் மூழ்கிக் குளிக்க வேண்டும்… அதாவது அதனுடைய ஆற்றலை எடுத்து நம்முடைய தீமைகளை எல்லாம் (உடல் பெறும் உணர்வுகளை) கரைக்க வேண்டும்… என்றார்கள்.

ஞானிகள் உணர்த்திய அந்த உண்மையைத் தத்ரூபமாக என்னால் உணர முடிந்தது.

“இமயமலை இரகசியம்” – 22.08.19 அன்று மானசரோவர் சென்று தரிசனம் செய்த இடத்தில் ஸ்படிகங்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுபவம்

SPADIKA NAVARATHNA MALA

“இமயமலை இரகசியம்” – 22.08.19 அன்று மானசரோவர் சென்று தரிசனம் செய்த இடத்தில் ஸ்படிகங்களைப் பற்றி அறிந்து கொண்ட அனுபவம்

 

இந்த உலகையே சமப்படுத்திய அகஸ்தியமாமகரிஷி தென்னாட்டிலே தோன்றியிருந்தாலும் இமயமலையில் எண்ணிலடங்கா மகரிஷிகளின் செயலின் முக்கியத்துவத்துவத்தைப் பற்றிய கேள்வியை ஏற்கனவே ஈஸ்வரபட்டரிடம் கேட்டிருந்தேன்.

இமயமலைப் பிரயாணத்தின் பொழுது ஏற்கனவே அங்கே இமயமலையில் அதிகமாகச் சுற்றிய அன்பர் ஒருவர் இமயமலையில் பூகோள அமைப்பைப் பற்றி 20.8.19 அன்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

1.இமயமலைத் தொடர்ச்சியின் பாறைகள் (மண்) அமைப்பு
2.ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான நிறங்கள் இருப்பதாகவும்
3.நாம் நினைத்தே பார்க்க முடியாத அளவில் வர்ணங்கள் அதிலே உண்டு என்றும் சொல்லியிருந்தார்.

22.8.19 அன்று அங்கே மானசரோவர் (உத்தரகான்ட் மாநிலம்) சென்று வரும் வழியில் ஸ்படிகங்கள் பற்றிய அறிய ஒரு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கே பல வர்ணங்களில் அந்த ஸ்படிகங்களை மாலையாகவும் மற்ற வகைகளிலும் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு விதமான மாலையை அணிவதாலும்
1.மனிதனுக்குள் இருக்கும் சில மன குழப்பத்தை நீக்கும் சக்தியும்
2.உடல் நலம் பெறச் செய்யும் சக்தியும் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அது போக அந்த ஸ்படிகங்களின் உண்மைத் தன்மையை (ORIGINAL) எப்படிப் பரிசோதிப்பது..? என்று சொன்னார்கள். அதாவது
1.அதே நிறமுள்ள இரண்டு ஸ்படிகங்களை ஒன்றுடன் ஒன்று அழுத்தமாக மோதச் செய்தால்
2.அதிலே ஒளிக் கற்றைகள் வருகின்றது. எந்த நிற ஸ்படிகமோ அதே நிறம் வருகின்றது,
3.இப்படி ஒளி வந்தால் தான் அவைகள் உண்மையான ஸ்படிகங்கள்..!

உண்மையான ஸ்படிகள் அனைத்தும் இமயமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு பின்னர் அவை சுத்தம் செய்யப்பட்டு விதவிதமான வடிவங்களில் உருவாக்கப்படுகின்றது என்றும் அங்கே தெளிவுபடுத்தினார்கள்.

மேலும் அங்கே அந்தப் பாறையின் கல்களையும் வைத்திருந்தார்கள். வயலட் பச்சை மஞ்சள் போன்ற நிறக் கற்களைப் பார்த்தேன்.

அப்பொழுது தான் எனக்குள் இலேசாகப் பொறி தட்டியது. இதிலே ஏதோ முக்கியமான சூட்சமம் இருப்பது போல் தெரிந்தது.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பின்னர் ஈஸ்வரப்ட்டர் என்னிடம் “இங்கே என்ன பார்த்தாய்…? என்னிடம் கேட்ட கேள்விக்கு ஏதாவது உனக்குப் புரிந்ததா இல்லையா…? என்று கேட்கத் தொடங்கினார்.

சாமி…! ஏதோ சிறிது உண்மைகள் அறிய முடிகிறது. ஆனால் முழுமையும் அறிய முடியவில்லை. ஆனால் ஞானகுரு என்னிடம் கூறியது…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்கும் பொழுது நம் உயிர் ஒரு சூரியன் ஆகின்றது.
2.அதிலே எந்த உணர்வுகள் மோதுகிறதோ அதையெல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டேயிருக்கும்.
3.மகரிஷிகளின் உணர்வுகள் உயிரிலே ஆழமாகப் பதிவாக்கி அங்கே அதை உருவாக்கிவிட்டால்
4.எல்லா உணர்வுகளையுமே ஒளியாக மாற்றத் தொடங்கும் என்று என்னிடம் சுமார் 25 வருடம் முன் சொல்லியிருக்கின்றார் என்றேன்.

மேலும் 27 நட்சத்திரங்களும் 27 நிறங்கள் கொண்டது.. அதனுடைய ஒளிக்கற்றைகள் மண்ணிலே பதிந்து கருவாகி விளைந்தால் 27 வைரக்கற்களாக மாறும்..! என்றும் உபதேசத்தில் ஞானகுரு சொல்லியிருக்கின்றார். இது தான் சாமி எனக்குத் தெரியும்..! என்றேன்.

ஈஸ்வரபட்டர் சிரித்துவிட்டு “இன்னுமா உனக்குப் புரியவில்லை…?” என்று கேட்டுவிட்டு 27 நட்சத்திரங்களின் ஒளிக் கற்றைகள் இமயமலைத் தொடர்ச்சியில் அதன் பூகோளப் பகுதியில் அதிகமாகப் படர்ந்து கொண்டேயுள்ளது.

அது தான் அங்கே பல வித வரணங்களில் பாறைகளாக உருவாகிறது.
1.அந்த நட்சத்திரங்களின் கற்றைகள் ஒன்றுடன் ஒன்று மோதினால்
2.எப்படி மின்னலாகப் பளீர்… என்று ஒளியாகத் தோன்றுகிறதோ அதே போல்
3.அந்தக் கற்களையும் ஒன்றுடன் ஒனறு உராயும் பொழுது ஒளிக் கற்றைகள் தோன்றுகிறது.

இருந்தாலும் இது புற நிலை தான்..!

அதே 27 நட்சத்திரங்களின் சக்தியைக் “குருவின் துணை கொண்டு…” தன் உயிராத்மாவில் சேர்த்தால் அதாவது
1.இரண்டு இமைகளுக்கு மையத்தில் இருக்கும்
2.உடலின் உச்சியில் புருவ மத்தியில் இருக்கும் உயிர் பாகம் சேமித்தால் (இந்த உடலான இமயமலையில்)
3.உயிராத்மா பேரொளியாக மாறும்.

இங்கே இமயமலையில் திடப்பொருளாக கற்களாக உருவாகின்றது. ஆனால் அந்த 27 நட்சத்திரத்தின் சக்தியை உயிரின் பாகம் சேர்த்துக் கல்லாக ஆக்காமல்
ஒளியாக.. பேரொளியாக
ஒளிக் கற்றைகளாக
ஒளியின் கூட்டமைப்பாக
ஒளி வெள்ளமாக
ஒளியின் பிரவாகமாக உருவாக்க வேண்டும்.

இந்த உண்மையை அறிந்ததனால் தான்.. அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் அந்தச் சக்தியைத் தானும் பெற்று உலக மக்கள் எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் “இமயமலையில் மகரிஷிகளின் செயல்பாடுகள்… இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது..!” என்று எனக்குத் தெளிவுபடுத்தினார்.

இமயமலையின் இரகசியம் இது தான்…!

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019

Kasi viswanathar temple

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தியானத்தில் கிடைத்த அனுபவம் 20.08.2019

விஸ்வதரிசனம்

உயிரான ஈசனைப் புருவ மத்தியில் எண்ணி ஆதிசங்கரர் உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது விஸ்வ தரிசனமாகவும் அதற்குரிய உணர்வின் ஒலிகளும் (நாதங்களும்) கிடைத்தது.

ஆதிசங்கரர் வெளிப்படுத்திய அத்வைதம் என்ற தத்துவத்தின் படி காற்றில் மறைந்துள்ள மகோன்னதமான சூட்சம சக்திகளை எடுக்கும் தியானமாக இன்று அமைந்தது.

உயிரான ஈசனுக்குள் (சீவலிங்கத்திற்கு) பல அபிஷேக உணர்வுகளும் ஞானிகள் மகரிஷிகள் உணர்வுகளும் பரவிப் படர்ந்தது.

உலகம் முழுவதும் அந்த ஆதிசங்கரர் உணர்வுகள் பரவிட அருள்வாய் ஈஸ்வரா. ஒவ்வொரு உயிராத்மாவும் ஆதிசங்கரர் காட்டிய அருள் வழியில் காற்றில் மறைந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற அருள்வாய் ஈஸ்வரா.

1.காசி மாநகரில் ஆதிசங்கரர் நிரூபித்த உயிரின் ஆற்றலை
2.அந்த விஸ்வநாதனின் உயர்ந்த சக்திகளை
3.உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

அன்னபூரணி
உடலுக்கு மூன்று வேளை உண்ணும் நிலையிலிருந்து பூமி சமைத்து அதிலே விளைந்த உணவுகளைப் புசிப்பதிலிருந்து விடுபடும் நிலையாக விண்ணுலக ஆற்றலை எடுத்து உயிரான ஈசனுக்கு உணவு கொடுக்கும் தியானமாக இது அமைந்தது.

தேவர்கள் அமுதத்தை உண்டு அமரர்களாக இருப்பது போல் ஆதிசக்தியின் ஆற்றலை அதாவது அகண்ட அண்டத்தின் ஆற்றலை (தானமாக) பிச்சை எடுத்து வாங்கி உயிருக்கு ஊட்டும் தியானமாக இன்று இருந்தது.

1.பூரணத்துவம் பெற்ற… பூரண நிலையில் இருக்கும்…
2.பேரண்ட மகரிஷிகளின் துணை கொண்டு
3.அந்த விண்ணுலக ஆற்றலை அன்னபூரணியின் சக்தியை முழுமையாகப் பருகும் ஒரு சந்தர்ப்பமாக இந்தத் தியானம் அமைந்தது.

உலக மக்கள் அனைவரது உயிர்களுக்குள்ளும் அன்னபூரணியின் அருள் சக்தி படர்ந்து அனைவரும் மெய் ஞானிகளாக மகரிஷிகளாக வளர்ந்திட வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா..!

ஜோஸ்மத் நரசிம்மர் (பத்ரிநாத் அருகில்) ஆலயத்தில் 28.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்

take naraimha avatar

ஜோஸ்மத் நரசிம்மர் (பத்ரிநாத் அருகில்) ஆலயத்தில் 28.08.19 அன்று தியானத்தில் பெற்ற அனுபவம்

 

நரசிம்ம அவதாரத்தைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதிலுள்ள தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக அங்கே செய்த தியானம் அமைந்தது.

நரசிம்மரின் முகம் மிகவும் கோரமாகவும் கைகளில் உள்ள நகங்கள் கூர்மையாகவும் அது இரண்யனின் குடலைப் பிளந்து இரத்தக்களரியாக ஆவது போல் வியாசகர் உணர்த்தியுள்ளார்.

1.நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை
2.நாம் எந்த முறையைக் கையாண்டு
3.நம் ஆன்மாவிலிருந்து எப்படிப் பிளந்து வெளியேற்ற வேண்டும்…? என்பதைக் காட்டுவதற்கே அதைக் காட்டியுள்ளார்.

ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்தும் அருள் உணர்வுகளையும் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வரும் பேராற்றல்களையும் நமக்குள் சேர்த்துக் கொண்டே வருகின்றோம்.
1.அதன் மூலம் நரசிம்மரின் முகத்தில் காட்டப்பட்டது போல் வீரியமான உணர்வு கொண்டு
2.நரசிம்ம அவதாரமாக நாம் ஆகி
3.சுவாசத்தின் மூலம் வரும் தீமைகளை எல்லாம் ஊடுருவிப் பிளந்து வெளியே தள்ள வேண்டும்.

தீமைகளை எப்பொழுதெல்லாம் காணுகின்றோமோ… கேட்கின்றோமோ… நுகர்கின்றோமோ… அந்த நேரம் எல்லாம் நாம் “நரசிம்ம அவதாரமாக…!” ஆகிடல் வேண்டும்.

நாம் தான் தியானம் செய்கின்றோம்.. சக்திகளை எடுக்கின்றோம்.. அல்லவா..! அதுவே எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று சாதாரணமாக எண்ணி விடக் கூடாது. நாம் அந்த நரசிம்ம அவதாரமாக ஆக வேண்டும். ஆனால்…
1.தீமை செய்பவர்களை எண்ணாது தீமை செய்பவர்களைத் தாக்காது…
2.தீமை செய்யும் உணர்வுகளைப் பிளந்து அதை நம் ஆன்மாவிலிருந்து முழுவதும் அகற்றிடல் வேண்டும் என்ற இந்த வகையில் தான்
3.நரசிம்மராக மாற வேண்டும் என்று தெளிவாக அங்கே தியானத்தில் உணர முடிந்தது.

அதே போல் இன்று இந்த உலகில் நடக்கக்கூடிய தீவிரவாதம்… இயற்கையை அழித்தல்… ஆட்சியாளர்களின் அதிகாரச் செயல்கள்… போன்ற நிலைகளில்
1.அறியாத நிலைகளில் அந்தத் தீமை செய்வோர் அனைவரும்
2.அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற்று
3.அவர்கள் அனைவரும் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞான சக்தி பெற்று
4.அவர்கள் செயல் அனைத்தும் தன் நாட்டு மக்களைக் காத்திடும் நிலையாகவும்
5.இந்த உலகைக் காக்கும் சக்தியாகவும் மாறி உயர்ந்த நிலைகளில் வளர வேண்டும் என்றும்
6.நம் பூமித் தாயைக் காக்கும் நரசிம்ம அவதாரமாகவும் செயல்பட வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றியது.

அவ்வாறு தோன்றிய அந்த உணர்வுகள் மூச்சலைகளாகக் கூட்டுத் தியானத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு இந்தப் பரமாத்மாவில் உள்ள அனைத்து தீமைகளையும் பிளந்து அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் நம் பூமியை விட்டு அகற்றிடும் செயலாக உலகெங்கிலும் பரப்பப்பட்டது.

உடல் பெறும் வினைகளை அறுத்து பேரின்ப வாழ்க்கை வாழ்வது பற்றிய சித்தர்கள் பாடல் – 6

siddhas 6

உடல் பெறும் வினைகளை அறுத்து பேரின்ப வாழ்க்கை வாழ்வது பற்றிய சித்தர்கள் பாடல் – 6

 

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன் வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள்
பின் வினையைப் பிடித்துப் பிசைவார்கள்
எண்ணியதில் வைத்து ஈசன் அருளால் அன்றோ

நம் உயிரே ஈசனாக இருந்து கடவுளாக உள் நின்று இயக்குகின்றான். ஈசன் அமைத்த கோட்டையே இந்த உடல். ஈசன் வீற்றிருக்கும் இந்த உடலே ஆலயம். மனிதனை உருவாக்கிய நற்குணங்கள் அனைத்தும் தெய்வமாக அதற்குள் கொலு வீற்றிருக்கின்றது.

நாம் சுவாசிப்பது கேட்பது பார்ப்பது அனைத்தையும் அணுவாக உருவாக்கும் கருவாக நம் உயிர் உருவாக்கி உடலாக ஆக்கிக் கொண்டே இருக்கின்றது

1.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கொப்பத்தான் இந்த மனிதப் பிறவியே அமைந்துள்ளது.
2.அது மட்டுமல்லாது தாயின் கருவிலே இருக்கும் பொழுது தாய் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும்
3.பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பூர்வ புண்ணியமாக வந்து சேர்கிறது.

இந்த இரண்டும் சேர்ந்து தான் இந்த மனித உடல் வாழ்க்கையின் பாதையையே (நன்மை தீமைகளை) நிர்ணயிக்கின்றது. ஆகவே அதை எப்படி மாற்றியமைப்பது…? என்று அந்த பிரம்மத்தின் இரகசியத்தை உணர்ந்தவர்கள் தான் அந்த மெய் ஞானிகள்.

அதன் படி
1.இந்த உயிருக்கு அழிவில்லை.
2.ஆனால் உடல்கள் அழிகின்றது. உணர்வுகள் மாறுகின்றது.
3.நுகர்ந்த உணர்வுக்கொப்ப உயிர் அடுத்த உடலை உருவாக்குகின்றது என்று கண்டுணர்ந்து
4.உயிர்… உணர்வு… உடல்… என்ற நிலையில் தன்னைத் தான் அறிந்து
5.உயிரான ஈசனுடன் ஒன்றி “அவன் வேறல்ல… நான் வேறல்ல…!” என்று ஆகி உயிருடன் ஐக்கியமானவர்கள் மெய் ஞானிகள்.

உயிர் வழிச் சுவாசமாக விண்ணின் ஆற்றல்களைச் சுவாசித்து அதன் மூலம் தன் ஆன்மாவில் இருக்கும் முன் ஜென்ம வினைகளையும் தாய் கருவின் மூலம் வந்த தீய வினை சாப வினை பாவ வினைகளையும் அறுத்து தீமைகள் அனைத்தையும் சுட்டுப் பொசுக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார்கள் மெய் ஞானிகள்.

உடல் பெறும் உணர்வுகளை இந்த உடல் வாழ்க்கையிலேயே கருக்கி ஒளியின் சுடராகப் பெருக்கும் பொழுது உயிருடன் ஒன்றும் உணர்வுகள் அனைத்தும் வேகா நிலை பெறுகின்றது.

வேகா நிலை என்றால் என்ன…? அகண்ட அண்டத்தில் யாராலும் அதை அழிக்க முடியாது. சூரியனோ கோள்களோ மற்ற எது அழிந்தாலும் வேகா நிலையிலிருக்கும் இந்த உயிரான்மா அழியாது. அதை அழிப்பதற்குண்டான சக்தி கிடையாது.

1.எத்தகைய விஷமான உணர்வுகள் வந்தாலும் அதை அடக்கி
2.தனக்குள் உணவாக எடுத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டு அகண்ட அண்டத்தில் பேரொளியாக மாறி
3.அது என்றுமே ஏகாந்தமாக வாழும்.

நம்மை போன்று மனிதனாக வாழ்ந்தவர்கள் தான் அத்தகைய வேகா நிலையை அடைந்து துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

மனித உடலை உருவாக்கி இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனைப் பற்றி அறிந்து அந்த உயிர் இயங்கத் தேவையான ஆற்றலைத் தனக்குள் வளர்த்துப் பெருக்கிக் கொண்டதால்தான் அத்தகைய நிலையை அவர்கள் அடைந்துள்ளார்கள்.

1.உயிரை அறிவதே மெய்ப் பொருள் காணும் நிலை.
2.உயிருடன் ஒன்றி வாழ்வதே பேரின்ப வாழ்க்கை.

முன்னோர்களை விண்ணுக்கு அனுப்பும் வித்தை…!

Route for sapdharihi mandalam

கேள்வி:-

முன்னோர்களை விண்ணுக்கு அனுப்பும் வித்தை…! அதை எவ்வாறு செய்வது…?

பதில்:-

1.ஈஸ்வரா….! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி வடக்குத் திசையில் பூமியின் வட துருவத்தை எண்ணி அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று நமக்குள் அந்தச் சக்தியை ஏற்றிக் கொள்ள வேண்டும்.

2.ஞானகுருவையும் மாமகரிஷி ஈஸ்வரபட்டரையும் மற்ற மகரிஷிகளியும் எண்ணி அவர்கள் துணையுடன் நம் முன்னோர்களிடம் உணர்வு பூர்வமாக உயிரின் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்

3.விண்ணிலிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் சக்தியை இழுத்து அதை முன்னோர்களின் உயிரில் முகப்பாக இணைக்க வேண்டும்

4.வில்லில் ஒரு அம்பை ஏற்றி அதை இழுத்துச் சரியான குறி பார்த்து விடுவது போல் முன்னோர்களின் ஆன்மாக்களை உந்தித் தள்ள வேண்டும்.

5.அல்லது பந்து விளையாட்டில் குறி பார்த்து இலக்கை அடைய அந்தப் பந்தைத் தள்ளி விடுவது போல் முன்னோர்களின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுக்குள் தள்ளிவிட வேண்டும்.

6.இதெல்லாம் சூட்சமமாகத்தான் (கண்ணுக்குத் தெரியாமல்) செய்ய முடியும்.

7.விண்ணிலிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியை இழுக்க வேண்டும் கவர வேண்டும் நுகர வேண்டும் அதை உள்ளே இழுத்துச் சுவாசிக்க வேண்டும்

8.சுவாசித்த சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைக் கொண்டு முன்னோர்களின் ஆன்மாக்களைத் தள்ள வேண்டும் அதாவது மூச்சு வெளியே விடுவது போல் (அல்லது ஒரு பொருளைக் கையால் தள்ளுவது போல்) உந்த வேண்டும். முன்னோர்களின் ஆன்மாவைக் கவரக் கூடாது – இது முக்கியம்…!

9.இப்படித் தொடர்ந்து திரும்பத் திரும்ப உந்தித் தள்ள அந்த ஆன்மாக்கள் காற்றிலே எடை இல்லாது இருப்பதால் நம் உணர்வுகளின் காந்தத் தொடர்பு (இணைப்பு) கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பூமியின் ஈர்ப்பை விட்டுக் கடந்து மேலே செல்லும். ஒரு ராக்கெட் எப்படி மேலே போகின்றதோ அது போல் மேலே செல்லும்.

10.பூமியின் காற்று மண்டலத்திற்கு வெளியே சென்றதும் முன்னோர்களின் உயிரின் முகப்பில் நாம் இணைத்திருக்கும் சப்தரிஷி மண்டல உணர்வுகளும் ஏற்கனவே சப்தரிஷி மண்டலத்திலிருந்து பூமிக்குள் வந்து கொண்டிருக்கும் அலைகளும் சந்தித்தவுடன் இனம் இனத்தைக் கவரும் என்பது போல் அலுங்காமல் முன்னோர்களின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் இழுத்துச் செல்லபட்டு விடும்.

11.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் முன்னோர்களின் உயிரான்மாக்கள் இணைந்ததும் ஆன்மாவில் இருக்கும் மனித உடல் பெறும் உணர்வுகள் கருகிவிடும். தங்கத்தில் திரவகத்தை விட்டதும் தங்கத்தில் உள்ள அழுக்குகள் நீங்கித் தங்கம் பளிச் என்று தக தக என்று மின்னுவது போல் முன்னோர்களின் உயிரான்மாக்கள் ஒளியாக ஜொலிக்கும். முன்னோர்கள் கணவன் மனைவியாக அங்கே இரு உயிரான்மாக்களும் ஒன்றி வாழும்,

12.மீண்டும் மீண்டும் நாம் நம் முன்னோர்கள் சப்தரிஷி மண்டலங்களின் சக்தி பெறவேண்டும். அவர்கள் பிறவா நிலை பெறவேண்டும் என்று உணர்வுகளை உந்திச் செலுத்தச் செலுத்த நாம் செலுத்தும் உணர்வுகள் அவர்களுக்கு ஆகாரமாகச் செல்லும்.

13.அதாவது தாய் தந்தையர் நமக்குப் பாலூட்டி பின் பல உணவுகளைக் கொடுத்துக் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்த்தது போல் நம் முன்னோர்களின் உயிரான்மாக்கள் அங்கே வளர்ச்சி அடையத் தொடங்கும்.

14.அவர்கள் அருளாசி எங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஏங்கினால் அங்கிருந்து நாம் அவர்கள் மூலமாக இன்னும் நிறைய அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

குறிப்பு:-

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முன்னோர்கள் அங்கே இணைந்த நிலையை உணர முடியும். அதன் பின் உங்கள் ஆன்ம வலு கூடுவதையும் பார்க்கலாம்.

உங்கள் பேச்சும் மூச்சு செயல் எல்லாவற்றிலும் அந்த உயர்ந்த மாற்றங்களைக் காண முடியும். பேரருள் பேரொளியாக உங்கள் உடலிலிருந்தும் புருவ மத்தியிலிருந்தும் பாயும். கண்ணிலேயும் பார்க்கலாம். தீமைகளை அகற்றிடும் ஆற்றல்மிக்கவர்கள் ஆவீர்கள்.

 

 

மணம்… எண்ணம்… உணர்வு… மனம்… மனது… என்று ஆகி மனிதனாக எப்படி ஆனான்…! – சித்தர்கள் பாடல்

siddha 5

மனம்… மனது… என்று ஆகி மனிதனாக எப்படி ஆனான்…! – சித்தர்கள் பாடல் 

 

உயிரது வேறாய் உணர்வு எங்குமாகும்
உயிரை அறியில் உணர்வு எங்குமாகும்
உயிர் அன்று விழுங்கும் உணர்வை
அயரும் பெரும் பொருளாக ஆங்கு அறியாரே

நம் உயிர் எலெக்ட்ரிக்காக (இயக்கச் சக்தியாக) இருந்து நாம் நுகரும் உண்ர்வுகளை எல்லாம் எலக்ட்ரானிக்காக அதாவது உணர்ச்சிகளாக மாற்றிக் கொண்டே உள்ளது.

உயிரிலே பட்ட பின் தான் நமக்குள் எண்ணங்களும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் தோன்றுகின்றது.
1.அதனால் தான் உயிரை “அரங்கநாதன்…!” என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
2.இந்த உடலான அரங்கத்திற்குள் நாதங்களை எழுப்பி உணர்ச்சிகளை ஊட்டுகின்றது “ஆண்டாள்….”
3.அந்த உணர்ச்சிகளின் வழியே நாம் சென்றால் “ஆழ்வார்” ஆகின்றது.
4.காரணப் பெயர்களை நம் ஞானிகள் அவ்வளவு தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

ஆகவே நாம் சுவாசிக்கும் உணர்வின் எண்ணங்களை வைத்துத்தான் நம் உயிர் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிய வேண்டும். மனிதன் என்றாலே எண்ணங்கள் தான்…! எண்ணங்கள் இல்லாத மனிதன் கிடையாது. எண்ணம் இல்லை என்றால் மனிதனும் இல்லை..!

மணம்… மனம்… மனது… மனிதன்…!
1.அதாவது நம்முடைய சுவாசத்தில் வழியாக வருவது மணங்கள்.
2.மணம் உயிரிலே பட்டால் அந்தந்த மணத்திற்குத்தக்க எண்ணங்கள் மனம்.
3.எந்த எண்ணம் வலுவாக இருக்கின்றதோ அந்த மனமே நமக்கு முன்னாடி நின்று நம்மை இயக்கி
4.சிந்திக்கும்படியாகவும் அதன் வழியில் செயலாக்கும்படியாகவும் செய்கிறது.

இருந்தாலும் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் நாம் பார்ப்பது கேட்பது நுகர்வது இவை அனைத்தையும் நம் உயிர் நமக்குள் உணர்ச்சிகளாக இயக்கி அதன் வழியில் அதை எல்லாம் உடலாகச் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கிறது.

அதனின் பொருள் என்ன என்றால் ஒவ்வொரு உணர்வையும் உயிர் விழுங்கிக் கொண்டே உள்ளது. நம்மை அதுவாக ஆக்கிக் கொண்டே உள்ளது.
1.நான்… நான்..! என்று நாம் ஒவ்வொரு நொடியிலேயும் (அந்தந்தச் சந்தர்பங்களில்) எண்ணிச் சுவாசித்தாலும்
2.உயிரால் அது விழுங்கப்பட்டுக் கொண்டேயுள்ளது.
3.நம்முடைய குணத்தையும் செயலையும் அது மாற்றிக் கொண்டே வருகின்றது.

இதைத்தான் மாரியம்மன் கோவிலில் தெளிவாகக் காட்டுகின்றார்கள். அதாவது நாம் சுவாசிப்பது நமக்குள் மாறி நமதாக மாறுகின்றது. எதை அழுத்தமாக எண்ணிச் சுவாசிக்கின்றோமோ (விரும்பினாலும் விரும்பா விட்டாலும்) அது நமக்குள் மாறி – தாயாக (மாரியம்மா) நம்மை வளர்க்கிறது என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

இத்தனை நிலைகள் செயல்படும் நிலையில் நாம் என்ன நினைப்போம்…? நான் நல்லதைத் தான் நினைக்கின்றேன்… நல்லதைத்தான் செய்கின்றேன்….! யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லை.

ஆனால் ஆண்டவன் என்னை ஏனோ சோதிக்கின்றான் என்றால் அது எப்படிச் சரியாகும்..? நம் உயிரால் விழுங்கப்பட்ட உணர்வின் இயக்கம் அவ்வாறு தான் இயக்கும்.

ஏனென்றால் நம்முடைய எண்ணங்களைப் பற்றியோ உணர்வுகளைப் பற்றியோ பக்தி வழியில் செல்வோரும் சரி இன்றைய விஞ்ஞானமும் சரி ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை.
1.விஞ்ஞானம் புறப் பொருளைக் கண்டறிவதில் தான் குறியாக உள்ளது.
2.பக்தியில் உள்ளவர்களோ புறத்தில் எங்கோ இருக்கும் ஆண்டவனைத் தேடிக் கொண்டு
3.அவனால் நமக்கு நிறைய காரியங்கள் ஆக வேண்டும் என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் மெய் ஞானிகள் கண்டது…
1.நம் சுவாச நிலையையும் நம் எண்ணங்களையும் உயிர் அதை எப்படி உடலாக மாற்றுகின்றது…?
2.ஆகவே எதை நம் சுவாசமாக்க வேண்டும்…?
3.நம்முடைய எண்ணம் எதுவாக இருக்க வேண்டும்…?
4.நமக்குள் எதை உருவாக்க வேண்டும்…?
5.இந்த உடலுக்குப் பின் என்ன என்று அறிந்து
6.அரங்கநாதனாக இருக்கும் ஈசனாக இயக்கிக் கொண்டிருக்கும் உயிருடன் ஒன்றி விண்ணின் ஆற்றல்களைப் பருகி
7.உயிரைப் போன்றே நுகரும் உணர்வுகளை எல்லாம்… தான் சுவாசிப்பதை எல்லாம் ஒளியாகப் பேரொளியாக மாற்றி ஆத்ம ஜோதியாகி
8.இன்றும் விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும் முப்பத்து முக்கோடித் தேவாதி தேவர்கள் என்று சப்தரிஷி மண்டலமாகவும் அழியாத வாழ்க்கை வாழ்கின்றார்கள்.

மனிதனின் கடைசி எல்லை அது தான்…!