பிறவியின் ஓட்டத்தில் செல்வதா…? அல்லது சித்தர்கள் மகரிஷிகள் செல்லும் வழியில் செல்வதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

SIDDHAS WORLD

பிறவியின் ஓட்டத்தில் செல்வதா…? அல்லது சித்தர்கள் மகரிஷிகள் செல்லும் வழியில் செல்வதா…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒரு கொசு எப்படித் தனக்குகந்த ஆகாரம் உள்ள இடத்தில் சுற்றிக் கொண்டுள்ளதோ அப்படித்தானப்பா இந்த மனித மனங்களும் எண்ணங்களும் பிறவிப் பயனை வைத்து அடுத்த பிறவிக்கு வர முற்படுகிறது.

ஒரு அரசனின் வயிற்றில் அவதரிக்கின்றான் அரச குமாரன். தன் நிலைக்கு உகந்த இடமாகத்தான் ஆவி நிலையிலிருந்து அவதரிக்கின்றான் அந்தக் குமாரன்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாக அந்த அரசன் செல்வத்தைத் தேடி வைத்திருந்தாலும் இந்த அரச குமாரன் அந்தச் செல்வத்தை அவன் வழியில் அழித்துவிடுவதில்லையா…? அப்பொழுது அரசனும் ஆண்டியாகிவிடுகின்றான்.

ஆனால் ஏழ்மை நிலையில் பிறக்கும் சில குழந்தைகள் தன் ஏழ்மையை எண்ணிடாமல் எப்படியும் உயர்ந்த நிலை அடைந்திடலாம் என்று எண்ணும் பொழுது தன் எண்ணத்திலேயே செல்வ நிலைக்கும் உயருகிறது.
1.இந்நிலைக்கு அந்நிலையிலிருந்து உயரும் குழந்தையின் நிலைக்கும்
2.பூர்வ புண்ணிய நிலையிருந்தால் தான் உயர முடியும்.
3.எண்ணமே அப்பொழுது தான் தோன்றிட முடியும்.

உங்கள் எண்ணத்தில் சில சந்தேகங்கள் தோன்றியிருக்கும். ஏன் ஆவி நிலையில் இருந்து கொண்டே எல்லோரும் செல்வம் உள்ளவரின் வயிற்றில் அவதரிக்கலாமே….! என்று எண்ணலாம். இந்நிலையில் தானப்பா அந்த ஆண்டவனின் சக்தி உள்ளது.

உடலிலிருந்து ஆவி பிரியும் பொழுது அந்த ஆவியின் ஆசை நிலையை வைத்துத்தான் பிறக்கின்றது… “மறு பிறப்பு” என்றேன் முதலிலேயே.

அந்த ஆசை நிலை என்பது பல ரூபத்தில் உள்ளது. பணம் காசு மட்டுமல்ல…! பந்தபாசம் கோபதாபம் எல்லா நிலைகளிலுமே அந்த ஆசை நிலைகள் உள்ளன. ஆவி நிலையில் இருந்து கொண்டு அவ் ஏழ்மை நிலையை அறிந்து தான் அந்தக் குழந்தை பிறக்கின்றது.

தன் நிலையில் உயர்ந்திடலாம் என்ற எண்ணத்திலும் தன்னால் அந்தக் குடும்பத்தை உயர்த்திடலாம் என்ற நிலையிலும் எண்ணிப் பிறக்கிறது.
1.ஆனால் பிறந்தவுடன் தான் எல்லாமே மறைக்கப்படுகிறதே…!
2.அச்சக்தியின் நிலையிலிருந்து அங்கு தான் இருக்கிறதப்பா ஆண்டவனின் சக்தி.

அந்தச் சக்தி நிலையைப் பெறத்தான் சித்தர்கள் தவமிருந்து பல பேறுகளைப் பெற்றார்கள். ஆனாலும் அந்த ஆதி சக்தியின் அண்ட கோடிகளில் அடங்கி உள்ள அந்த முழுச் சக்தி நிலையையும் இன்னும் எந்தச் சித்தனாலும் பெற முடியவில்லையப்பா…!

சித்தர்கள் மகரிஷிகள் எல்லோருமே அந்தச் சக்தியின் நிலையைப் பெறத்தான் இன்னும் தவமிருந்து ஜெபமிருந்து கொண்டுள்ளார்கள்.

இப்பொழுது தான் நீங்கள் கடுகளவிலிருந்து மிளகளவு வந்துள்ளீர்கள்.
1.இன்னும் உலக நிலையையே என்ன…? என்று தெரிந்திடாமல் குடும்ப நிலையிலேயே கலங்கியுள்ளீர்கள்.
2.ஜெப நிலையைக் கூடிய விரைவில் உயர்த்திக் கொள்ளுங்கள்.
3.இந்தப் பாட நிலையிலிருந்து பலவும் பல வழியிலும் புரிய வைக்கின்றேன்.

நான் (ஈஸ்வரபட்டர்) பெற்ற ஜெப அருளிலிருந்து என் வழிக்குத் தெரிந்ததை உங்கள் வழிக்கும் புகட்டுகின்றேன். என் வழிக்கு நீங்களும் மேலும் வந்திடலாம்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து.. அதிலே விட்ட குறைய இந்த ஜென்மத்தில் முடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Ultimate destination

பூர்வ ஜென்மப் பயனை வைத்து.. அதிலே விட்ட குறைய இந்த ஜென்மத்தில் முடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால் தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே…!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

ஈஸ்வரபட்டரின் பொன்மொழிகள்

Positive Thinking

ஈஸ்வரபட்டரின் பொன்மொழிகள்

 

1.அகத்தினை அன்பு கொண்டால்… “ஜெகத்தினை” வென்று வாழ்ந்திடலாம்.

2.தங்க வந்த கூட்டினில்… தரணி ஆண்ட வாழ்க்கையில்… தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

3.ஆண்டவன் என்ற ஆத்மாவை அடக்கி ஆளப் பார்க்காமல் “ஆத்மலிங்க தேவனை” அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

4.பகவான் படைத்த படைப்பே நாம்… பகவான் எங்கே உள்ளான்…? என்று பகுத்தறியும் ஆற்றலைத்தான் “பகவான் அருளால் பெற்றுள்ளோமே…!”

5.உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்… உள்ள அழுக்கைப் போக்க எந்நீர்…?

6.திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்… திருநீறு அணிந்தே…!

7.ஈசன் அருளில் உதித்த நாம்… ஈன்றெடுத்த தெய்வமாக.. “ஈன்றெடுத்த அன்னை தந்தையை ஈசனாக்கி வணங்கிடுவோம்…”

8.நம்மை ஈன்றவர்.. படைத்தவர் யார்…? நம் முற்பிறவி இப்பிறவி மறுபிறவியில் யார்…?

9.நம்மில் பலவும் உள்ள பொழுது “நான்” என்பது யார்…?

10.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றிலிருந்து ஒன்றாக ஓங்கி நிற்கும் சக்தியிலே ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்.

11.பல ஆசை நிலைகளிலே பல நிலை அடைவதற்கே… பயம் என்ற பேய்க்கு நாம் பயந்து வாழ்வது எதற்காக…?

12.நிலையில்லா வாழ்வினிலே “நித்திய நிலை பெற்றிடவே…!” நிலையான அன்பைக் காட்டி நிலை பெற்று வாழ்ந்திடுவோம்…!

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்
ஏற்றமும் தாழ்வும் அமைகிறது…! என்று உணர்ந்தே வாழ்ந்திடுவோம்.

ஞானக்கண் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Gnana eye

ஞானக்கண் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.
4.இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெறவேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்.

ஈஸ்வரபட்டர் ஒளியான உணர்வுகளையே நாம் பெறுதல் வேண்டும்…! ஏன்…?

Eaganthanilais

ஈஸ்வரபட்டர் ஒளியான உணர்வுகளையே நாம் பெறுதல் வேண்டும்…! ஏன்…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.

அவருடைய நிலைகளைப் பிறர் பார்க்கும் போது
1.தன்னைப் பைத்தியக்காரனாகத்தான் காட்டினார்.
2.ஆனால் அந்தப் பைத்தியக்கார நிலையில்
3.அவருக்குள் “எவ்வளவு பெரிய ரகசியங்கள் இருந்தது…? என்பது நமக்குத் தெரியாது.

அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்…. ரசமணி செய்கிறேன்…! என்று மந்திரங்கள்… தந்திரங்கள் என்று அவர் பேரைச் சொல்லிக் கொண்டு இப்படியும் சிலர் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணரந்த நிலைகளிலும் அவர் உடலை விட்டுச் சென்றார்.
1.அவர் உடலில் இருந்து பிணைத்த உணர்வுகள் உண்டு.
2.அதன் வழியில் தீமையை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்.

ஆனால் குருநாதர் காட்டிய அந்த மெய் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த அருள் ஒளி கிடைக்கும்.
1.அவரின் அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் மெய் வழி காணும் நிலைகள் கிடைக்கும்.
2.நாம் இந்த உடலில் இருக்கும்போது அந்த அருளைப் பெற்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.
3.கணவன் மனைவியும் இதைப் போல் எண்ணுதல் வேண்டும்.

அன்று அகஸ்தியன் காட்டிய நிலைகள் துருவத்தில் பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தை அடைவோம்.

நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை பெறுவோம் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு)

மகரிஷிகள் விரும்பும் செயலும்… ஈஸ்வரபட்டர் விரும்பும் செயலும்…!

Sage Agastiyar

மகரிஷிகள் விரும்பும் செயலும்… ஈஸ்வரபட்டர் விரும்பும் செயலும்…!

 

ஈஸ்வரபட்டர் குளவியைக் காட்டுகின்றார். குளவி புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து, தனக்குள் இருக்கும் விஷத்தின் தன்மை கொண்டு புழுவைத் தாக்கித் தன் இனமாக மாற்ற விரும்புகின்றது. காட்டிற்குள் இதையெல்லாம் காட்டுகின்றார்.
1.அதாவது மகரிஷிகள் ஒளியாதவற்கும்
2.தன் இனமாக (மகரிஷிகளாக) மாற்ற விரும்பும் நிலையையும், அங்கே காட்டுகின்றார்.

உயிரினங்களில் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில்
1.இனச் சேர்க்கை வேறு.
2.இனத்தை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் வேறு.

குளவி தனக்குள் எண்ணிய உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூடாகக் கட்டி அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.

இதற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை தாங்காது புழுவுக்கு அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உணர்வுகளுக்கு அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அதிலே பதிந்து விடுகின்றது.

1.அப்பொழுது திடீரென்று ஓங்கி எம்மை (ஞானகுரு) அடிக்கிறார் குருநாதர்.
2.அடித்தவுடன் குளவியைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது
3.”குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது…!”

அந்தக் குளவியைப் பற்றிக் காண்பித்துக் கொண்டிருக்கும் பொழுது, குளவி அதனுடைய விஷத்தால் புழுவின் மேல் தாக்கப்படும் பொழுது, புழுவின் நினைவலைகள்
1.குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு எவ்வாறு இணைக்கின்றது…?
2.அந்த உணர்வுகள் அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு எவ்வாறு இயக்குகின்றது…?
3.எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது…? என்பதை உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் எம்மை ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன்… அவரைத் திடீரென்று பார்க்கின்றேன்.

திடீரென்று திரும்பியவுடன்… அவர் உணர்த்திய உணர்வின் அலையை…
1.அந்த மெய்ஞான உணர்வை எடுத்து எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார்.
2.இழுக்கச் செய்கின்றார்.
3.இப்படி அவர் உணர்த்தும் மெய் உணர்வை யாம் கவர்ந்து எமக்குள் இழுத்தவுடன்… சிரிக்கின்றார் குருநாதர்.

குளவிக்கும் மனித வாழ்க்கைக்கும் எடுத்துச் சொல்லப்படும் பொழுது சாதாரண மனிதன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒருவனைத் தாக்கபடும் பொழுது இந்த உணர்வுகள் அவன் மேல் பாய்ச்சப்பட்டு அதே நிலைகளில், எதிர் பதிலாக ”அவனை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது.

இந்த மூன்றுக்கும் உண்டான வித்தியாசங்களைக் காட்டுகின்றார்.

குருநாதர் எம்மை அடித்தவுடன் திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள் அவர் எண்ணத்தால் வெளியிடுவதை உடனே உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வுகள் வருகின்றது.

அப்பொழுது அவர் விளைய வைத்த உணர்வுகள் அவரை எண்ணியபின்
1.அவர் எம்மை அடித்த அடியை மறந்து
2.குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின் அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டுக் குளைவியையே எண்ணுகின்றதோ
3.அதே மாதிரி குருநாதருடைய எண்ணத்தை வைத்து குருநாதருடைய நிலைகளை எண்ணுகின்றேன்,

அப்படி எண்ணப்படும் பொழுது…
1.அவர் அந்த “மூல உணர்வுகளின் நிலைகள்” அவருக்குள் இணைத்ததை எமக்குள் இணைக்கின்றார்.
2.இப்படித்தான் குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.

இதைப் போன்று நீங்களும் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ உங்கள் நல்ல உணர்வுகள் மாறுகின்றதோ
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் திருப்பமாகி நினைவச் செலுத்தும் பொழுது
2.அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியைச் சுவாசிக்கும் பொழுது
3.பிறருடைய தீமையான உணர்வுகள் உங்களுக்குள் வருவதில்லை.

அதே சமயத்தில் அந்த அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக நஞ்சினை வென்று உணர்வினை ஒளீயாக மாற்றி என்றும் பதினாறு என்று கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்து வளர்ந்து கொண்டு, தன் இன மக்களை வளர்க்கச் செய்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் உணர்வுகளை, நாம் நமக்குள் கூட்டும் சந்தர்ப்பம் உருவாகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில், நாம் இணைந்து வாழும் நிலை உருவாகின்றது.
1.இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைந்து
2.அழியா ஒளி சரீரம் நாம் அனைவரும் பெறுகின்றோம்.

கோடி கோடி… தேடித் தேடி… நாடி நாடி…!

Eswara

கோடி கோடி… தேடித் தேடி… நாடி நாடி…! 

 

“நீ (ஞானகுரு) வேதனையை அறிகின்றாய்…!: அதே போல நான் (ஈஸ்வரபட்டர்) கொடுக்கும் அடியின் தன்மை உனக்கு எப்படி வருகின்றது..?

உதாரணமாக ஒரு பாசத்தால் அடிக்கும்போது நண்பன் மேல் வெறுப்பு வருவதில்லை. நீங்கள் தமாஷாக அடித்துப் பாருங்கள், கோபம் வருகிறதா…? என்று பார்க்கலாம்,

அதே சமயத்தில் தமாஷாக அடித்துக் கொண்டிருக்கும்போது
1.ஒரு சொல்லை மட்டும் இலேசாகக் குறையாகச் சொல்லி அதற்கப்புறம் அடித்துப் பாருங்கள்
2.இந்த உணர்வுகள் மாறும்.

ஈஸ்வரபட்டர் எனக்குக் காட்டும் நிலைகள் கொண்டு, அவர் என்னை அடிக்கப்படும்பொழுது, அந்த உணர்வின் தன்மை, “எது…?”

“அடித்தவுடன் சிரிப்பார்… சிரித்தவுடன் பார்த்தால் அது தெரியும்…!”

உனக்குள் எத்தனை கோடி உணர்வுகள் சேர்த்து நான் அடிக்கும்.. அதாவது அடிக்கும் உணர்வுக்குள் இருப்பதை,
1.என் (ஈஸ்வரபட்டர்) அடிக்குள் கலந்திருந்த நினைவும்
2.அந்த நினைவால் கலந்த உணர்வும் உன்னுடன் எப்படி அது சேர்ந்து
3.அண்டத்தை எப்படி அறிகின்றாய் என்று நீ பார்…! என்று குரு காட்டுகின்றார்.
4.நீ அண்டத்தை அறிந்துவிடு…!

மனிதனின் உணர்வுக்குள் நீ அருள் ஞானத்தைப் சொல்லைப் பாய்ச்சிவிடு, அங்கே கிளரும் உணர்வின் தன்மை நுகர்ந்தறி, நுகர்ந்தறிந்தால் அவனுள் விளைந்த உணர்வின் தன்மை உன்னை இயக்கும், ஆனால் அவனை மாற்ற முடியாது”.

1.ஒரு செடியின் நிலைகள் காரத்தின் தன்மை கொண்டதோ கசப்பின் தன்மை கொண்டதோ அதன் நிலை மாறாது.
2.அதைப்போல அவரின் உணர்வின் தன்மை மாறாது,
3.மாறாத நிலைகள் கொண்டு நீ நல்ல சொல்லாகச் சொன்னாலும் அவருக்கு எதிர்மறைதான் ஆகும்
4.ஆனால் இதை எவ்வாறு மாற்றுவது…? என்று குருநாதர் என்னிடம் கேட்கிறார்.

இப்படித்தான் இதைப்போன்று கேள்விகள் கேட்டுப் பின் விளக்கங்கள் கொடுத்து “விண்ணின் ஆற்றலின் சக்தி உன்னில் எவ்வாறு இயக்குகிறது…? என்றும் இது கோடி உணர்வுகள் சேர்த்து உணர்வின் நிலைகள் என்று அவர் சொல்வார்,

1.“கோடி…கோடி” “கோடி….கோடி” “கோடி…கோடி”, என்ற நிலையில்
2.தேடித் தேடி… தேடித் தேடி…! இதை நான் பெற்றேன்
3.கோடி…கோடி என்ற நிலைகளில் தேடித் தேடித் தேடிச் சென்று பெற்றேன்
4.உன்னை நாடி…நாடி…நாடி வருகின்றது…!
5.ஆனால் நீ தேடித் தேடி அதைப் பெறவேண்டும்…! என்று இப்படிச் சொல்வார்.

அவருடைய சொல்லுக்குள் பார்த்தோமென்றால் இப்படி என்னை அடித்தவுடன்… “உன்னை தேடித் தேடி வருகின்றது… நீ நாடி நாடி அதைப் பெறுகின்றாய்…!” என்று இப்படிச் சொல்வார்.

ஏனென்றால் இதெல்லாம் குருநாதருடைய சொல்லுக்குள் சூட்சமம். இது அனைத்தும் சூட்சமம் தான்.

இந்தப் பொருள் காணும் தன்மை இந்த கோடி என்ற நிலைகள் எவ்வாறு இது இயக்குகின்றது…? என்ற நிலையைத்தான் இந்த கோடியின் நிலைகளை
1.நீங்கள் பல கோடி உணர்வின் நிலைகளை உங்களுக்குள் அறியும் தன்மையாக,
2.குரு கொடுத்ததை உங்களுக்கும் கொடுக்கின்றேன்.
3.அவர் பெற்ற அந்த மெய் உணர்வைக் கவரும் ஆற்றலும்
4.அவர் (ஈஸ்வரபட்டர்) பிறவா நிலைகள் பெற்ற நிலையில்
5.நாமும் பிறவா நிலைகள் அடையும் மார்க்கமும் இதிலே அடங்கியுள்ளது.

சுகமாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Siva meditating.jpg

சுகமாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இந்த மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான்.

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?
1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

மனிதனின் “விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

Good and bad bate

மனிதனின் “விதி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

விதியை மதியால் வென்றிடலாம். வினை விதைத்தவன் வினை அறுப்பான்… விதை விதைத்தவன் விதையறுப்பான்…! என்ற பெரியோர்களின் வாக்கிலேயே கலந்துள்ளது
மனிதனின் விதி முறை…!”

வினையின் எண்ண\த்திலே விளைவதெல்லாம் வினையேதான்.
1.பிறரைக் கவிழ்க்க வினை செய்கின்றான்.
2.அந்த வினை அவனைக் கவிழ்ப்பதற்காகச் செய்த வினை
3.இவனைத் தான் வந்து சுற்றும்.
4.வினை செய்த காலத்தில் வருவது அல்ல அந்த வினை.
5.இவன் எண்ணத்திலே ஊன்றியுள்ள வினையினால் இவனையே அந்த வினை சுற்றுகிறது பெரும் பயத்தினால்.

அந்த நிலையில் உள்ளவனின் ஆவி பிரியும் பொழுது வினையின் எண்ணத்திலேயே ஆவி உலகத்திலும் தன் வினையை முடித்துக் கொள்ள ஒரு உடலை எடுக்கின்றான்.

வினைப் பயனை முடித்திடுவது தான் அவ்வாவிகளின் எண்ணமெல்லாம். வினையின் எண்ணத்தை மனதினுள் சிறு அளவு ஊன்றச் செய்தாலும் அந்த வினையின் பயன் பல கோடி ஆண்டுகளுக்கு முடிவுறுவதில்லை.

ஜென்மப் பிறவியில் எல்லாம் அவனுடனே தான் சுற்றிக் கொண்டு வருகிறது காலப் போக்கில். அந்த எண்ணம் உடையவனை எந்தச் சொல்லும் சொல்லி மாற்றிட முடியாதப்பா.
1.கர்ம பயன் என்பதெல்லாம் இதுவேதான்.
2.அவன் செய்த கர்மம் அவனை அழிக்கின்றது என்பதெல்லாம் இதுவே தான்.
3.எந்தப் பிறவி எடுத்தாலும் இக்கர்ம பயன் முடிவதில்லை. (புழுவாகப் பூச்சியாக உருவெடுக்கின்றான்)

வினை விதைத்தவனுக்கு என்றுமே சுற்றிக் கொண்டே தானிருக்கும். எந்த நற்சொற்களும் அந்த வினையுள்ள எண்ணத்திலே பதிந்திடாதப்பா. பாவ புண்ணியம் எண்ண மாட்டான். ஆகவே நரக லோகம் செல்கின்றான்

நரகலோகம் என்பதுவே கர்ம பயன் செய்தவன்… வினையின் நெஞ்சம் உள்ளவன்…! எல்லாம் செல்லுமிடம் நரகலோகம்தான்.

விதி என்பது எதப்பா…?

விதியையும் மதியினால் வெல்லலாம் என்பது வினையின் எண்ணம் உள்ளவனை நல்லெண்ணம் கொண்டவன் வென்றிட முடியுமப்பா.

வினையில் உள்ளவன் அவனைத் தாக்கும் பொழுது நல்லெண்ணம் கொண்டவன் அந்த “ஈசனை…” நினைத்திட்டால் அவ்வினையின் எண்ணத்தை ஈசனே பார்த்துக் கொள்வான்.

எந்த வடிவில் ஈசன் பார்த்திடுவான் என்றிடுவாய்…!

வழக்கின் வழியைப் புரியும்படிச் சொல்கின்றேன்.

வினையெண்ணம் உள்ளவனும் நல்லெண்ணம் படைத்தவனும் ஒரு இடத்தில் இருவரும் சேர்ந்து செய்யும் தொழிலில் அந்நிலையில் உள்ள பணத்தை எல்லாம் வினைப்பயன் உள்ளவன் எடுத்துக் கொள்கின்றான். அந்தப் பழியை நல்லவனின் மேல் சுமத்துகின்றான்.

நல்லவனுக்குப் பக்கபலமும் இல்லை. அந்த நிலையில் வழக்காடும் இடத்திற்குச் சென்றால் அந்த நிலையிலும் தன்னுடைய செல்வத்தை வைத்து ஜெயித்து விடுகின்றான் இவ்வினையுள்ளவன்.

பெரும் வழக்கறிஞர்கள் வைத்து வழக்காட நல்லெண்ணம் உள்ளவனுக்கு நாதியில்லை என்பார்கள். ஏனப்பா இல்லை…?

சில காலம் உள்ள இந்த ஜென்மத்தில் நாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவன் எண்ணத்திலே ஒரு நிலையில்
1.ஒரு உயர்வின் தன்மையிலே சுற்றிக் கொண்டு உள்ளது…
2.“நல்லொழுக்கங்கள் நற்சொற்கள் எல்லாமே…!”

அப்படி இருக்கும் நிலையில்
1.அவன் மனதில் சோர்வை எண்ணிடாமல்
2.அவ்வாண்டவனை நினைத்துச் சத்திய நியாயத்தை வேண்டிட்டால்
3.அவன் ஜென்மப் பயன் எல்லாமே… அவன் எண்ணத்தில்… அவன் விடும் சுவாசத்தில்…
4.உயர்ந்த தன்மையிலேயே ஜென்மங்கள் மாறும் பொழுதும் வந்தடைகிறது.
5.கடைசியில் ஜெயிப்பது நல்லெண்ணம் கொண்டவன்தான் என்பது இம்மானிடர்களுக்குப் புரிவது இல்லை.

வினை விதைத்தவன் இவன் காலத்தில் வழக்கில் ஜெயித்தாலும் அவன் எண்ணத்தில் சுற்றிக் கொண்டு இருக்கும் அவன் செய்த வினையின் பயன் அவன் காலம் முடிந்து அவன் எந்த நிலைக்குச் சென்றாலும் அவனைச் சுற்றிக் கொண்டே தான் வருகிறது.
1.வினைப்பயன் செய்தவன் நரகலோகத்திற்கே செல்கின்றான்.
2.இந்த நல்லோரின் இதயம் செல்லும் இடம் தான் சொர்க்க லோகம் என்பது.

அவன் செல்லும் நரக லோகத்திற்கும் இவன் செல்லும் சொர்க்க லோகத்திற்கும் தான் “விதியை மதியால் வெல்லலாம்…!” என்பது.

“குரு பலம்…” பெறுவது எப்படி…?

Eswara

“குரு பலம்…” பெறுவது எப்படி…?

நான் தியானமிருந்து விட்டேன். ஆகையினால் குருநாதரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று எண்ணக் கூடாது.
1.என் நினைவு புருவ மத்தியிலிருக்கும் உயிரின் பால் சென்றது.
2.உயிரான ஈசனிடம் வேண்டினேன்.
3.குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை உயிரின் துணையால் நான் சுவாசிக்க நேர்ந்தது.
4.அந்தச் சக்திகளை என் உடலுக்குள் பாய்ச்சி என் தீமைகளை நீக்கினேன் என்று இப்படி வர வேண்டும்.

அதே போல் மற்றவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சினேன். அவர்கள் தீமை அகன்றது.. நோய் நீங்கியது…! என்பது சிறப்பாகும். இப்படிப்பட்ட தொடர்பு… வரிசையாக… சரியான முறையில் இருந்தால் தான் நம் காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.

மகரிஷிகள் உணர்வை குருநாதர் மூலமாகப் பெற்று நம் உயிர் வழியாகக் கவர்ந்தால் குரு உபதேசித்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று இயங்கும்.

குருவே பார்த்துக் கொள்வார் என்று பொதுவாகச் சொல்லி விட்டால் அவர் என்ன சொல்கிறார்…?
1.நான் எல்லோருக்கும் தான் கொடுக்கின்றேன்.
2.அவர்கள் உயிர் வழியாகக் கவர்ந்து எடுக்க வேண்டும் அல்லவா.
3.அவர்கள் எடுக்கவில்லை என்றால் நான் எப்படிப் பார்க்க முடியும்…?

ஆகவே குருநாதர் சக்திகளைக் கொடுத்தாலும் நாம் நுகர்ந்து அதை எடுக்க வேண்டும். இந்த எண்ணம் நமக்கு வலுவாக இருக்க வேண்டும்.
1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறார்.
2.என்னை நீங்கள் நம்புங்கள் நான் காப்பாற்றித் தருவேன்…! என்று சொல்லவில்லை.

அவர் செய்வார்…! என்றால் நம் உயிருக்குள் நாம் இணைப்புக் கொடுத்தால் தான் அவரும் நமக்குள் அபிஷேகம் செய்ய முடியும்.

நம்முடைய எண்ணம் குருநாதர் கொடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்வதில் அழுத்தமாக இருக்க வேண்டும்.
1.அது தான் குரு பலம் என்பது.
2.அந்தப் “பிடிப்பு..” இருக்க வேண்டும்.
3.அந்தப் பிடிப்புக்குப் பேர் தான் பற்று…!
4.அதில் நமக்குப் பற்றுதல் வேண்டும்.

குருநாதர் பார்த்துக் கொள்வார் என்றால் அவர் வேலையை அவர் சரியாகச் செய்கிறார். அவர் கொடுக்கும் சத்தை நாம் சரியாக எடுக்க வேண்டுமா இல்லையா…?

இது மிகவும் முக்கியம்…!