பரமபதத்தின் இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

பரமபதத்தின் இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 

1.எதிலேயும் யாரிடமும் வெறுப்பு விருப்பு என்ற உணர்வுகள் இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று
2.அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் நாம் செல்வதுதான் ஏகாதசி என்பது.

அன்று தான் பரமபதம் அடையும் நாள் என்றும்… சொர்க்கவாசல் என்றும் கோயில்களில் வடக்கு வாசலைத் திறந்து வைப்பார்கள்.

வாழ்க்கையில் நாம் எல்லாம் நல்லதைத்தான் செய்வோம். ஆனால் நம்மை அறியாதபடியே வேதனை என்று வரப்படும் பொழுது அந்த விஷமான நிலை தாக்கப்பட்ட பின் (“பரமபத விளையாட்டில் பாம்புகள் கொத்துவது போல்”) நம் உடலுக்குள் பல விதமான நோய்களாகி விடுகிறது

1.நோய்கள் ஆன பின் மனித சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரங்களைப் பெற்று
2.அதிலிருந்து மீண்டு… மீண்டும் மனித நிலைக்கு வந்து மீண்டும் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி…
3.இப்படிப் பல கோடிச் சரீரங்களை நாம் எடுத்து இழந்து… எடுத்து இழந்து…
4.இந்தச் சுற்றிலேயே தான் இன்று இருக்கின்றோம்.

மெய் வழியின் தன்மையை அடையும் மார்க்கம் இல்லாது நாம் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறோம்

அந்த மெய் வழியில் நாம் செல்வதற்கு என்ன வழி…? என்ற நிலையைத்தான் குருநாதர் அன்று ஏனக்கு (ஞானகுரு) உணர்த்தினார்.

இந்த மார்கழி மாதம் ஏகாதசி அன்று தான் உடலை விட்டுக் குருநாதர் விண் சென்றார். விண் சென்றபின் முதல் நிலையாக என்னை இயக்கியதும் பேசச் செய்ததும் அவருடைய ஆன்மாவின் உணர்வின் நிலைகள் தான்.

பல உண்மைகளை உணர்வதற்கு அவர் உணர்வின் தொடர் வழி கொண்டு நான் செல்ல 12 வருட காலம் பல அனுபவங்களைக் கொடுத்துக் கொடுத்து அவர் எப்படிச் சூட்சும நிலைகள் கொண்டு இருக்கின்றாரோ அந்த சூட்சும நிலையைக் கண்டுணரும்படிச் செய்தார்.

1.அவர் ஒளி முன் செல்ல நான் பின் சென்று அவர் காட்டிய அருள் நெறியின் நிலைகள் கொண்டு
2.ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு உடலின் உறுப்புகளும் அது எவ்வாறு உருவானது…?
3.இயற்கையின் நிலைகள் கொண்டு என்பதை இது எல்லாம் எவ்வாறு ஆனது என்ற மெய் உணர்வைக் காட்டி
4.அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரக்கூடிய ஆற்றல்மிக்க சக்திகளை எவ்வாறு பெற வேண்டும்…? என்று எனக்குக் காட்டினார்.

அவர் எனக்கு அருளிய அந்த ஆற்றல்மிக்க நிலைகளை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதை இன்று உபதேசிப்பது. ஆக… மார்கழி மாதம் இந்தப் பௌர்ணமி மிக முக்கியமான நாள்.

ஈஸ்வரபட்டர் என்ற நாமம் கொண்ட உடலிலிருந்து குருநாதர் விண் சென்றாலும்
1.இதற்கு முந்தி எத்தனையோ கோடி லட்சம் ஆண்டுகள் முன்னாடி விண் சென்று சப்தரிஷி மண்டலங்களாக அடைந்தது
2.அவருடைய (ஈஸ்வராய குருதேவர்) உணர்வின் தன்மை அந்த அலைகள் வரும் பொழுது தான்
3.பூமிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதர்களின் உள்ளத்திலும் இது பட்டு
4.அதன் வழி இந்த மெய் உணர்வின் ஒளிகள் வளர்ந்து வளர்ந்து இன்றும் பரப்பிக் கொண்டிருக்கின்றது
4.இந்த பூமி என்ற நிலையில் பல பாகங்களிலும் இது பரவிக் கொண்டிருக்கின்றது.

உடலை விட்டு சென்ற ஒரு உயிரான்மா… பூமியின் பிடிப்பில் இருப்பதை… அதை எவ்வாறு விண் செலுத்த வேண்டும்…? என்ற பேருண்மையை எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

தாய் தந்தையர்கள் எண்ணத்தால் தான் நாம் கருவானோம்.. உடல் பெற்றோம்.. ஆகவே நம்மை ஈன்றெடுத்த முதல் தெய்வங்கள் அவர்கள் தான். உடலை விட்டுச் சென்ற பின் அந்த ஆன்மாக்களை எவ்வாறு விண் செலுத்துவது என்றும்… அவர்களை விண் செலுத்தினால் தான் விண்ணில் இருக்கக்கூடிய சப்தரிஷி மண்டலத்துடன் நாமும் இணைய முடியும் என்றும் குருநாதர் உணர்த்தினார்.

சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படும் அந்த ஆற்றல்மிக்க சக்தியை நாம் தாய் தந்தையரின் உயிரான்மாக்களுக்கு உணவாக ஊட்டச் செய்து
1.அந்த உனர்வின் சத்து கொண்டு ஒளி சரீரமாக அங்கே வளர்க்கச் செய்ய வேண்டும்
2.அவ்வாறு வளர்க்கச் செய்ய்யும் போது தான் “நம்முடைய எண்ண அலைகள் விண்ணை நோக்கிச் செல்லும்…” என்ற இந்த உண்மை நிலைகளை உணர்த்தினார்.

அதே சமயத்தில் சப்தரிஷிகளாக ஆவதற்கு முன் இந்த மனித உடலிலிருந்து எவ்வாறு அந்த நிலையைப் பெற்றார்கள்…? என்று ஈஸ்வரபட்டர் என்ற நாமத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அந்தப் பேருண்மைகளை எமக்கு வழிகாட்டினார்.

குருநாதர் அவர் வழி காட்டிய அறநெறிகள் கொண்டு… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையையும் எனக்கு எப்படிக் காட்டினாரோ இந்த உபதேச வாயிலாக உங்களுக்கும் அதை ஊட்டுகின்றோம்.

தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக இருக்கின்றேன் – ஈஸ்வரபட்டர்

தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக இருக்கின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

நமது குரு அவருடைய வாழ் நாளில் பல நஞ்சான உணர்வுகளை நீக்கி ஒரு பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார். ஆனால் மக்கள் பித்துப் பிடித்த நிலையில் தான் இந்த உலகிலே வாழுகின்றனர். அதிலிருந்து அவர்கள் அகல வேண்டும் என்ற நிலையைத் தான் எனக்கு குருநாதர் சொன்னார்.

ஏன் சாமி…? பைத்தியம் பிடித்த மாதிரி போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள்…! என்று நான் அவரிடம் கேட்டேன்.

நீ தான்டா கேட்டாய்…! வேறு யாரும் கேட்கவில்லை…!
1.பைத்தியம் என்று சொல்லுகின்றாய்… என்னிடமே நீ அதைக் கேட்கின்றாய்
2.என் செயலை நீ அறிய விரும்புகின்றாய்
3.நீ நாளடைவில் அறிந்து கொள்வாய்
4.அதைப் போன்று நீ செயல்படு…! என்று காட்டினார்.

உலக மக்கள் தான் நுகர்ந்த உணர்வின் ஆசைகள் கொண்டு பித்தரைப் போன்று தான் வாழ்கின்றனரே தவிர தனக்குள் இருளை நீக்கிடும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

தீமைகள் எனக்குள் வராதபடி பித்தனாக நான் இருக்கின்றேன்…!
1.தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக நான் இருக்கப்படும் போது எனது உயிர் ஒளியின் சரீரம் பெறுகின்றது
2.ஒளி பெறும் சரீரத்தை அதனின் உண்மை ரகசியத்தை நீ அறிந்து கொள்…
3.என்னுடன் இணைந்து வா…! என்றார்.

தாவர இனங்களின் மணங்கள் எப்படி இயங்குகின்றது…? தாவர இனம் பேசுமா…! என்று குருநாதர் என்னிடம் கேட்டார்.

பேசாது…! என்று நான் சொன்னேன்.

அப்போது காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்களின் உணர்வின் சத்தை நுகரும்படி செய்து அனுபவமாகக் காட்டினார்.
1.தாவரங்களின் மணமே நம் எண்ணங்களாக வருவதும்… நம்மை இயக்கச் செய்வதும்
2.அது தான் நம்மைப் பேச வைக்கின்றதே தவிர… நாம் அல்ல…!

எந்த உணர்வின் சத்து நம்முள் உண்டோ… அதனின் உணர்வின் மணங்கள் நமக்குள் எப்படி உண்டோ அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்கிக் காட்டுவது உயிருடைய வேலை. அந்த உணர்வின் தன்மை உடல் ஆக்குவதே உயிரின் வேலை.
1.உணர்வின் தன்மை எது அதிகமோ
2.அதன் வழி தான் நம்முடைய இயக்கமும்… அடுத்த உடல் வாழ்க்கையும் என்று குரு தெளிவாக்கினார்.

காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அலைந்து உண்மையின் உணர்வுகள் அறிந்ததை… பல காலம் பல தொல்லைகளுக்கு மத்தியில் அவர் ஊட்டிய உணர்வின் தன்மைகளை அறிந்து கொண்டோம்.

அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குரு சொன்னார். ஏன் அதைச் சொன்னார்…?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணி… அந்த உடலை உயிர் தான் உருவாக்கியது என்ற நிலையில் அதை ஆலயமாக மதித்து
1.ஒவ்வொரு மனிதனையும் கடவுளாக மதித்தால்
2.அவர்கள் செய்யும் குறைகள் உன்னைச் சாடாது என்றார் குரு.

அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்று உணர்வினை நீ எடுத்தால் இந்த உணர்வலைகள் காற்றலைகளில் பரவுகின்றது. நம் பூமியிலே பரமாத்மாவிலே படர்கின்றது.

அவர்கள் குறைகளை எண்ணாதபடி அவர்கள் நல்ல மனம் நிறைவு பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால்
1.நமது உயிரான கடவுளுக்கும் சேவை செய்கின்றோம்
2.இந்த உடலான ஆலயத்திற்குள் அசுத்தத்தை நீக்கிடும் சக்தி பெறுகின்றோம்
3.நல்ல உணர்வைக் காக்கும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே பேரருள் என்ற உணர்வுகளைச் சேர்த்துப் பழகி ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று “ஆலயங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்று… ஒவ்வொரு உயிருக்கும் அதை நீ செய்ய வேண்டும்…!” என்று எனக்கு உபதேசித்தருளினார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

குருநாதரின் சங்கேத பாஷை

குருநாதரின் சங்கேத பாஷை

 

குருநாதர் எந்தெந்த வழிகளில் எல்லாவற்றையும் தெரிந்து இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு (ஞானகுரு) அது தெரியவில்லை என்றாலும் அறிய வைக்கின்றார்.

குருநாதர் டெலிஃபோன் கம்பத்தை அடிப்பார்… எலக்ட்ரிக் கம்பத்தை அடிப்பார். அடித்த உடனே
1.இந்த லயன் அந்த லயன்…
2.இந்த லயன் இந்த லைன்…! என்று சொல்லிக் கொண்டே வருவார்.

இப்படி என்னத்தைக் கிரகத்தைச் சொல்லுகின்றாரோ…! பைத்தியம் போன்று பேசிக் கொண்டிருக்கின்றார்…! என்று நான் (ஞானகுரு) நினைப்பேன். அவர் சொல்வது ஒன்றும் புரியாது.

டேய்… மிளகாய் ஒரு லட்சம்…! கோடி… கோடி… என்று சொல்வார். அவர் எல்லா பாஷைகளும் பேசுவார்.

நான் என்ன சொல்வேன்…? கோடி (கோழி) இங்கே இருக்கிறது சாமி…! என்பேன் (தெலுங்கிலே).

அந்தக் கோடி இல்லைடா… “ஈகோடி” என்பார். மிளகாய் கோடி… அந்தக் கோடி… காரம் கோடி… அது… இது… என்று என்னென்னமோ கோடி… கோடி… என்று சொல்வார். எனக்கு அர்த்தம் புரிய மாட்டேன் என்கிறது.

இந்த லைன் அந்த லயன் அந்த லயன் அந்த லைன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். அர்த்தமே புரியாது…!

அப்புறம் அந்த உணர்வுகளை எல்லாம் சொன்ன பிற்பாடு…
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து
1.உணர்வுகள் எத்தனை கோடியாக மாறுகின்றது…?
2.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது…?
3.எதன் செயலை மாற்றுகின்றது…? – அப்படி என்றால் அந்த லயன்…!

அதாவது நட்சத்திரத்திலிருந்து மின்னலாகப் பாயும் பொழுது
1.இந்த உணர்வுகள் எதனுடன் எப்படிச் சேர்கின்றது…?
2.உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற நிலையை உள் உணர்விலே அதை உணர்த்துகின்றார்.

முதலிலே சொல்லிவிடுவார்… பின் புரிய வைப்பார்.

அதே போன்று தான் உங்களிடம் இதைச் சொல்லிப் புரிய வைக்கின்றேன் குருநாதர் எனக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதே போல உங்களிடமும் அதைப் பதிவு செய்கின்றேன்.

சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் இந்த நினைவுகள் உங்களுக்கு வரும்.

காரணம்… தீமைகளை அகற்றக் கூடிய சக்தி உங்களுக்குள் வளர வேண்டும். இந்த உலகம் விஷத்தன்மையாகப் பரவும் நேரத்திலே விஞ்ஞானத்தால் வந்த விஷத்தை வெல்லக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் மூச்சு பிறரைக் காக்கும் சக்தியாகப் பரவ வேண்டும் என்பதற்குத்தான் இந்த நேரத்திலே இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை… குருநாதருடைய உணர்வு தான் பேசுகின்றது.
2.அந்த உணர்வு தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றது.

இதை நிலை நிறுத்தி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களையும் நீங்கள் காக்கின்றீர்கள்… இந்த நாட்டையும் காக்கின்றீர்கள்… மக்களையும் காக்கின்றீர்கள்… இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்.

இப்படிப் பல முறை லயன் லயன் லயன் என்று புரியாத உணர்வுகளைச் சொல்லிச் சொல்லித் தான் குருநாதர் கண்டுணர்ந்த எல்லாவற்றையும் என் உடலுக்குள்ளே பதிவு செய்தார்.

குரு வழியில் நான் எதை எதைப் பதிவு செய்தேனோ அதை மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.
1.பதிவு செய்ததை நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் எண்ணினால்
2.குருநாதர் எனக்கு உணர்த்தியது அனைத்தும் உங்களுக்குள் நிச்சயம் வரும்… வளரும்.

பித்துப் பிள்ளையான (பித்துக்குளி) ஈஸ்வரபட்டர்

பித்துப் பிள்ளையான (பித்துக்குளி) ஈஸ்வரபட்டர்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பித்தனைப் போன்று தான் இருந்தார். புற உலகிற்கு அவரைப் பார்க்கும் பொழுது ஒன்றுமறியாத பித்தன் என்றே எண்ணினோம். ஆனால்
1.பித்தான உடலுக்குள் நின்று
2.ஒளியான சத்தை தனக்குள் வளர்த்து உலகின் தன்மை அறிந்துணர்ந்து
3.அறிந்திட்ட உணர்வின் சத்தைத் தனக்குள் ஒளியாக மாற்றி விண்ணுலகம் சென்றார்.

மாமரத்தில் உருவாகும் காய் முதலில் புளிப்பின் தன்மை அடைந்தாலும் முதிர்வில் கனியாகி மற்றவர்கள் ரசித்து உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.

அதைப் போன்று நம் குருநாதர் இந்த மனித வாழ்க்கையில் வந்த
1.நஞ்சினை நுகராது இனித்த வாழ்க்கை என்ற நிலையைத் தனக்குள் எடுத்து
2.நஞ்சினை வெறுத்து மெய் உணர்வினைத் தனக்குள் வளர்த்து
3.”தன்னிச்சையாக…” மகிழ்ந்திடும் உணர்வுடன் செயல்பட்டார்.
4.அப்படி இருக்கும் நிலையை… அவரைப் பார்ப்போருக்கு பித்தனைப் போன்று காணப்பட்டார்.

பிற்காலங்களில் அவர் உணர்த்திய உணர்வின் ஒலிகள் கொண்டு தான் அதை அறிய முடிந்தது.

இந்தப் பூமியில் வாழ்ந்த உடல் பற்றை அவர் அகற்றிவிட்டு அந்த மெய் ஞானிகள் மீது பற்று கொண்டு அந்த அருள் உணர்வுகளை அவர் வளர்த்துக் கொண்டு ஒளியின் தன்மை பெற்றார்.

நமக்குள் எதைப் பற்ற வேண்டும் எதைப் பற்றற்றதாக மாற்ற வேண்டும் என்று எமக்குத் (ஞானகுரு) தெளிவாக உணர்த்தினார்.

வெறுப்பு வேதனை கோபம் குரோதம் என்ற நிலையும் பிறரை வெறுத்திடும் நிலையும் பிறரை அழித்திடும் உணர்வுகளையும் நமக்குள் இணையவிடாது அதை வெறுத்து அந்தத் தீமைகளைப் பற்றிடாது அருள் ஞானியுடன் பற்று கொண்ட உணர்வுகளை வளர்த்து அதைக் காத்திடும் நிலையாக நீ எவ்வாறு இருக்க வேண்டும்…? என்றும் உணர்த்தினார்.

என்னைப் பிறர் காணும் பொழுது நான் பித்தனாக இருக்கின்றேன். காரணம்
1.இந்தப் புவியின் ஆசை கொண்ட நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கும் பொழுது
2.என்னைப் பித்தன் என்று அவர்கள் எண்ணுகின்றார்கள்
3.ஆனால் ஆசையின் நிலைகள் கொண்டு அவர்கள் தான் பித்தராக இருக்கிறார்கள் என்று அவர்கள் உணரவில்லை.

பித்தனாகி… இந்த உடலின் தன்மைக்கோ பித்தைப் போன்ற உடலின் உணர்ச்சிகளுக்கோ… நான் அடிமையாவதில்லை. உணர்ச்சிகளை அடக்கி
1.அந்த மெய் ஞானிகளின் உணர்வை நான் பெற வேண்டும் என்று
2.அந்தப் பித்துப் பிள்ளையாகத்தான் (பித்துக்குளி) நான் இருக்கிறேனே தவிர
3.இவர்களைப் போன்று உடலின் பித்துப் பிள்ளையாக நான் இல்லை…! என்று எம்மைத் தெளிவாக்கினார் குருதேவர்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் சக்தியை நாம் பயன்படுத்த வேண்டிய நெறி

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் சக்தியை நாம் பயன்படுத்த வேண்டிய நெறி

 

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) சக்தி கொடுத்தாலும்… நமக்குச் சும்மா கொடுக்கவில்லை. அவர் கொடுத்த பவரை என்னென்ன செய்யலாம்…? என்று கொடுத்திருக்கின்றார்.

நெருப்பை உபயோக்கின்றோம் என்றால்
1.வெளிச்சத்திற்குத் தீபமாக வைக்கின்றோம்…
2.சமையல் செய்யவும் அந்த நெருப்பை வைத்துக் கொள்கிறோம்…
3.அதே நெருப்பை வைத்து இரும்பையும் உருக்குகின்றோம்.

அதைப் போன்று தான் குருநாதர் கொடுத்த சக்தியை ஆக்கச் சக்தியாக மாற்றலாம்… அழிக்கும் சக்தியாகவும் மாற்றலாம். அந்த சக்தியின் உணர்வின் செயல்கள் எப்படி…? என்கிற வகையில்தான் குருநாதர் உணர்த்தினார்.

காரணம்… மனிதனுடைய ஆசையின் உணர்வுகள் பல நிலைகளிலும் தூண்டுகின்றது…
1.முதலில் இதை அழிக்கப் பழக வேண்டும்…
2.அந்த மெய் ஒளியை வளர்த்து பழக வேண்டும்

அதைக் காட்டுவதற்காகத் தான் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று குரு அனுபவமாகக் கொடுத்தார். அதைத் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன்.

இந்த வாழ்க்கையில் எத்தனையோ சங்கடங்கள் வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு நொடியிலேயும் நீங்கள் எண்ணி எடுக்க வேண்டும்.

கஷ்டமோ நஷ்டமோ அல்லது மற்றொருவர் தவறு செய்வதையோ அன்றாடம் நாம் பார்க்க நேர்கிறது… அதை நுகர்ந்து அறிகின்றோம்.

இருந்தாலும் அது எல்லாம் நம்மை இயக்காது தடுக்க அடுத்த கணமே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்தப் பவர் (சக்தி) உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

உதாரணமாக ஒருவர் கெடுதல் செய்கிறார் என்றால் அவர் குடும்பம் தொலைந்து போக வேண்டும்… என்று சொன்னால் அவர்கள் கெட்டுப் போய்விடுவார்கள்.

1.ஆனால் அந்தத் தொலைந்து போகும் உணர்வு முதலில் நம்மிடம் தான் விளைகின்றது.
2.அப்போது நம் நல்ல குணங்கள் கெடுகின்றது… அவனும் கெடுகின்றான்… நாமும் கெடுகின்றோம்.

அதற்குப் பதிலாக அந்த மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணி அந்த அருள் உணர்வின் தன்மையை இங்கே விளையச் செய்ய வேண்டும். அறியாது வரும் இருளை நீக்க வேண்டும்.

உதாரணமாக ஒரு போக்கிரி தவறு செய்கின்றான்… நமக்கு இடைஞ்சல் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நம்மிடம் சக்தி இருக்கிறது என்ற வகைகளில் அவனுக்கு ஏதாவது கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கடும் ஆயுதமாக எடுத்து நாம் பயன்படுத்தும் பொழுது அது நம் நல்ல குணங்களை எல்லாம் அடக்கிவிடும்.

அவனை அடக்கும் உணர்வை எடுத்துத் தான் அங்கே பாய்ச்சுகின்றோம். அதனால் அவனுக்கு அந்தக் கெடுதல் வருகின்றது… ஆக இங்கே விளைந்து தான் அங்கே போகின்றது. நம்மிடம் முதலில் அது விளையாது தடுக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை இங்கே வளர்த்து… அந்தத் தீமைகளை… அந்தக் களைகளை நீக்க வேண்டும்.
1.எப்பொழுதுமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று
2.இதைத்தான் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலே எல்லாம் செய்து கொண்டே வருவோம். குடும்பத்தில் ஒற்றுமையாகவும் இருப்போம். அதிலே ஒரே ஒரு பையன் நம் சொன்னபடி கேட்கவில்லை என்றால் அவனை எண்ணி வேதனைப்படுவோம்.

நாம் எடுக்கும் வேதனை உணர்வுகள் வீடு முழுவதும் பரவும். அப்படிப் பரவும் போது நம் எண்ணங்களும் மாறுபட்டு விடுகின்றது. அந்த நேரத்தில்
1.“சடார்… என்று அவன் தொலைந்து போக வேண்டும்…” என்ற எண்ணம் தான் வரும்
2.ஆனால் அவனிடம் இருக்கும் கெடுமதி தொலைய வேண்டும் என்ற எண்ணம் வராது.

நானே (ஞானகுரு) திடீரென்று உங்களிடம் கோபிக்கிறேன் என்றால் உங்களிடம் இருக்கும் கெட்ட புத்தி போக வேண்டும் என்று தான் கோபித்துச் சொல்வது.

சாதாரண வாழ்க்கையில் பார்த்தால் “தொலைந்து போகிறவன் இப்படிச் செய்கின்றானே…!” என்ற இந்த உணர்வு தான் இங்கே வரும்.

இப்படி நாம் எடுக்கும் இந்த எண்ணத்தில் “இரண்டு பிரிவாக” இருக்கின்றது.
1.கெட்டது தொலைய வேண்டும் என்று எண்ணினால் அது நல்லது
2.கெடுதல் செய்பவர்கள் தொலைந்து போக வேண்டும் என்று எண்ணினால் அது கெட்டதாகிறது.

ஆகவே… எந்த நேரம் எந்தச் சந்தர்ப்பத்தில் யார் மீது நமக்கு வெறுப்பு வந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் வலுவாக்க வேண்டும்.

அதை வலுவாக்கிக் கொண்ட பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடல்களில் படர்ந்து அவரின் தீமையான செயல்கள் மறைய வேண்டும்… அதிலிருந்து அவர்கள் காக்கப்பட வேண்டும்… என்று நாம் எண்ண வேண்டும்.

இப்படி நாம் தியானித்து அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சும் போது
1.அவரின் தீமைகள் நமக்குள் வருவதில்லை
2.அதே சமயத்தில் அவரையும் நாம் தீமையிலிருந்து விடுபடச் செய்கின்றோம்.

இத்தகைய பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியினைக் கடைப்பிடித்தால் விண்ணின் ஆற்றல்கள் உங்களுக்குள் வ(ள)ரும்

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியினைக் கடைப்பிடித்தால் விண்ணின் ஆற்றல்கள் உங்களுக்குள் வ(ள)ரும்

 

அகஸ்தியன் தன்னுடைய கூர்மையான எண்ண வலு கொண்டு விண்ணுலகை உற்றுப் பார்த்து அதிலிருந்து வரும் பேராற்றல்களை எடுத்துத் தன் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் ஒளிக் கதிர்களாக மாற்றிக் கொண்டான்.

1.அதைத்தான் குருநாதர் எனக்குள்ளும் (ஞானகுரு) பதிவு செய்தார்…
2.எடுத்து அதை வளர்க்கும்படியும் செய்தார்.

நான் (ஈஸ்வரபட்டர்) சொன்ன வழியில் நீ இதைப் பெற்றால் உனக்குள் அந்த அகஸ்தியனின் ஆற்றல்கள் வளரும் என்றார்.

இதையே மற்ற மக்கள் மத்தியில் நீ பதிவு செய்யப்படும் பொழுது அவர்களும் அதே எண்ணம் கொண்டு எடுத்தால் அவர்களாலும் அதைப் பெருக்கிக் கொள்ள முடியும். இப்படி ஒரு கூட்டமைப்பின் நிலைகளை நீ உருவாக்க வேண்டும்… என்றார்.

1.எனது வலிமை கொண்டு… பல ஆயிரம் மடங்கு வலிமை கொண்டுதான்
2.எனக்குள் பெற்ற சக்தியை… உனக்குள் கொடுத்து… அதை எடுக்கச் செய்கின்றேன்
3.ஆனாலும் நீ ஒருவனே இதனுடைய பலனைப் பெற முடிகின்றது…!

ஆனால் பலரும் இந்தப் பலனை பெற வேண்டுமென்றால் நீ இதை எவ்வாறு செய்ய வேண்டும்…? என்று எனக்கு உபதேசித்து அருளினார்.

நீ கண்ட அந்த ஞான வித்தை ஒவ்வொரு உடல்களிலும் விதைக்கப்படும் பொழுது அது பதிந்து அந்த அருள் உணர்வுகள் அங்கே பெருகி விண்ணுலக ஆற்றலை அவர்கள் பெறும்படி செய்ய வேண்டும் என்றார்.

1.அவர்களுக்குள் அந்த வளர்ச்சி பெற வேண்டுமென்று
2.நீ எடுத்துக் கொண்ட சக்தியால் நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னார்.

நீ தியானிக்கின்றாய்… உனக்குள் விளைய வைத்தாய்…! ஒவ்வொரு உடலிலும் அது இணைந்து கொண்ட பின் அவர்கள் அவ்வழியில் அந்த சக்தி பெற வேண்டும் என்ற நிலையை என்னைத் தவம் இருக்கும்படி செய்கின்றார் குருநாதர்.

அவர் சொன்ன வழிப்படித் தான் இன்று வரையிலும் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு) நீங்கள் எல்லாம் அருள் ஞானிகளாக ஆக வேண்டும் என்று…!

இன்றைய மனிதர்கள்… தனக்குள் இருக்கும் உன்னத சக்தியை அறிய முற்படவில்லை

இன்றைய மனிதர்கள்… தனக்குள் இருக்கும் உன்னத சக்தியை அறிய முற்படவில்லை

 

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிந்தது என்றால் அந்த உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ… எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ… அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.

1.இந்த உலகையும்..
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்..
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்…!” என்ற ஆவலுடன் பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.

ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல் பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்… அண்டசராசரங்கள்… எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.

அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்… பெண்… குழந்தைகள்… முதியவர்கள்… என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.

மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதி தீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதி விரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.

படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இருந்தாலும் அறிவு வளர வேண்டும்…
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.

படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்… கல்வி புகட்டுபவருக்குமே… உள்ளது.

அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.

இந்த உடல் என்னும் கூட்டை… ஆத்மாவின் நிலை கொண்டு… நம் எண்ணம் என்ற செயலினால்…! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

ஈஸ்வரபட்டர் தன்னைப் பற்றிச் சொன்னது

ஈஸ்வரபட்டர் தன்னைப் பற்றிச் சொன்னது

 

“ஈஸ்வரப்பட்டர்…” என்ற நாமமுடைய சூட்சும நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய…
1.எம் நிலையென்பது ஈஸ்வரப்பட்டர் என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் “யாம் செயல் கொண்டதையும்…”
2.எம் சக்தி நிலையை எந்த நிலையில் உணர்த்தி வருகின்றோம் என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசையுண்டு.

கர்நாடக மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில் பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம் அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம் அங்குள்ள குடும்பங்களின் நாமம் எல்லாமே ஈஸ்வர நாமத்தை முதன்மை பெற்று உள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வி அறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன்.

கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் அவ்வாண்டவனே அனைத்தும் என்ற நிலையில்… எண்ணம் குன்றி… ஜீவதித்திற்கு வழியறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில் என் உடலை ஒரு மகான் ஏற்றுக் கொண்டார். என்னை என்பது
1.பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
2.அந்த உடலை விட்டு நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் மீண்டும் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
3.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி…
4.எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம். வந்தோம் என்பதின் பொருள் புரிந்ததா…?

என் உடலை ஏற்ற அம்மகானின் செயல் நிலை வெளிப்படும் நிலையிலிருந்து “நான் வேறல்ல அம் மகான் வேறல்ல…” என்ற நிலையில் அம்மகானேதான் எல்லாமில் எல்லாமாய்ச் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான். இவ்வுடலை ஏற்றுச் செயல் கொண்டார்.
1.இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
2.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்…. அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்…!

மகான்களின் நிலையெல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இப்பூமியில் இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய்ச் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

அவ்வாத்மாக்களின் நிலைபெற்ற மகான்களெல்லாம் அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் ஒவ்வொரு ரூபத்தில் இன்றளவும் வெளிபடுத்திக் கொண்டேதான் உள்ளனர்.
1.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான்
2.அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே… அருளைப் பாய்ச்சி அந்த அருள் வழியில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம்… அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி… இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.

முருகா…! என்ற அந்த நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார் போகர்.

ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்கள்.

1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2.அந்த நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.நாம் வணங்கிக் கொண்டிருக்கும் பல ஆண்டவன்களின் நிலை…!

பித்தனைப் போன்று சுழன்று கொண்டிருக்கும் ஈஸ்வரபட்டரின் பூர்வீகம்

eswarpattar and agastyar

பித்தனைப் போன்று சுழன்று கொண்டிருக்கும் ஈஸ்வரபட்டரின் பூர்வீகம்

 

நமது குருநாதர் ஈஸ்வரபட்டர்… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய்ப் பொருளை கண்டுணர்ந்து உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார்.

அவர் விண் சென்ற நாள் தான் வைகுண்ட ஏகாதசி. எந்த உடலுக்குள்ளும் புகாது… எதற்குள்ளும் சிக்காது பேரண்டத்தின் உணர்வைத் தனக்குள் உணர்வின் ஒளியாக மாற்றி என்றும் ஏகாந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது குருநாதர்.

அதற்கு முந்திய மகரிஷிகளும் உயிருடன் ஒன்றிடும் உணர்வினை ஒளியாக மாற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

நமது குருநாதர் அவர் வாழ்க்கையில் எத்தனை சரீரங்களை எடுத்தாரோ… எத்தனை வேதனைகளைப்பட்டாரோ… எத்தனை இன்னல்களை அவர் பட்டாரோ… அந்த உணர்வுகளிலிருந்து நீங்கும் எண்ணத்தைக் கொண்டு தான் வளர்ந்தார். ஏனென்றால் அவரும் பல இன்னல்களைச் சந்தித்தவர் தான்…!

மங்களம் என்ற ஊர் ஒன்று உண்டு. அதிலே ஒரு குக்கிராமம் அதாவது கேரளா எல்லையும் கர்நாடக எல்லைக்கு அருகிலே அமைந்தது தான் ஈஸ்வர மங்களா…! என்ற ஊர்.. அந்தக் குக்கிராமம்.

குறைந்தபட்சம் அதிலே பத்து வீடுகள் இருப்பதே அதிகம் தான். ஆக தனித்துத் தனித்து இருக்கும் நிலைகளில் நமது குருநாதரின் பூர்வீகம் அதுவாக இருப்பினும் அவருடைய தாய் தந்தையர்கள் அங்குள்ள ஆலயத்தில் சேவை செய்து பூஜை செய்து அங்கே மந்திர ஒலிகளை ஒலித்துக் கொண்டிருந்தவர்கள்தான்.

அக்காலத்தில் அகஸ்தியன் தனது ஐந்தாவது வயது அடையப்படும் போது தன் அன்னை தந்தையை இழந்த நிலையில் அன்னை தந்தையின் ஏக்கம் கொண்டு இருக்கப்படும் போது அந்த இரண்டு ஆன்மாக்களும் அகஸ்தியன் உடலுக்குள் புகுந்து… அவர்கள் கண்டுணர்ந்த உணர்குகளை எல்லாம் இந்த உடலுக்குள் நின்று அந்ப் பச்சிளங்குழந்தையைக் காத்து மெய் உணர்வைப் பெறும் தகுதி ஏற்படுத்தினரோ அதே போன்றுதான் நமது குருநாதர் வாழ்க்கையிலும் ஏற்பட்டது.

குருநாதருடைய தாய் தந்தையர்கள் கோயில்களில் பூஜை செய்து கொண்டிருக்கும்போது இவர் ஐந்து வயது அடையப்படும் போது அவரது அன்னை தந்தை இருவரும் சந்தர்ப்ப பேதத்தால் உடலை விட்டுப் பிரிந்து விடுகின்றார்கள்.

தவித்துக் கொண்டிருந்த இந்தப் பச்சிளங்குழந்தை தன் அன்னை தந்தையைக் காக்க வேண்டுமென்ற ஏக்க உணர்வு கொண்டு ஏங்கிய நிலையில் அந்த ஆன்மாக்கள் இவர் உடலில் புகுந்து விடுகின்றது.

தாய் தந்தையரோ பல மந்திர ஒலிகளை எழுப்பிப் பல யாகங்களும் பல வேள்விகளும் செய்தவர்கள் தான். அந்த உணர்வின் ஞானத்தால் பல உண்மைகளை அறியும் ஆற்றலும் பெறுகின்றார்.

அதன் வழியில் அன்றைய மகாபாரதப் போரின் நிலைகள் எவ்வாறு…? என்று வியாசகர் வெளிப்படுத்திய தத்துவ நிலைகள் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் கவரப்படுகின்றது.

மகாபாரதமும் அதனின் தொடர் வரிசையில்…
1.சாஸ்திரங்களில் கூறப்பட்டிருந்த உணர்வுகள் அனைத்தும் இந்த பிஞ்சு உள்ளங்களிலே கவரப்பட்டு
2.அந்த உணர்வின் துணையால் இந்த பூமியின் எந்த மூலைக்கும் தன்னிச்சையாகச் செல்லும் சக்தியும் திறனையும் பெற்றார்.

அதன் வழியிலேயே தான் அவருக்குள் அன்னை தந்தையரின் உணர்வுகள் இயக்கப் பெற்றுப் “பேரண்டத்தை அறியும் ஆற்றலும்…” அவருக்குள் கிட்டியது.

சாங்கிய சாஸ்திரப் பிடிப்பில் சிக்கிய அந்தக் குடும்பத்தில் அத்தகைய நிலைகள் கொண்டு கண்டுணர்ந்தாலும்…
1.மந்திர ஒலியில் சிக்காது அவருடைய எண்ணங்கள் விண்ணை நோக்கி ஏகி
2.அந்த உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களின் உணர்வினைப் பெறும் தகுதியைப் பெறுகின்றார் நமது குருநாதர்.
3.அதுவும் அவருடைய சந்தர்ப்ப பேதங்கள்தான்.

தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு உலகம் எங்கிலும் சுற்றி வந்து… உலகில் உள்ள சாங்கிய நிலைளைத் தனக்குள் கண்டுணர்ந்து… சாங்கியத்தால் பெற்ற அந்த தீமையில் இருந்து விடுபட வேண்டுமென்ற உணர்வினைத் தன்னுள் பதியச் செய்து…
1.விண்ணுலக ஆற்றலைப் பெற்றுணர்ந்த நமது குருநாதர்
2.அந்த உண்மைகள் மக்கள் அனைவருக்கும் கிடைக்கப் பெற வேண்டும் என்றுதான்
3.பித்தனைப் போலவே அவர் பல காலம் பல நிலைகளிலும் சுழன்று கொண்டுள்ளார்…!

கடலின் உப்புத் தன்மையும் மனித உடலின் உப்புத் தன்மையும் ஒன்று தான் – ஈஸ்வரபட்டர்

empowering nature

கடலின் உப்புத் தன்மையும் மனித உடலின் உப்புத் தன்மையும் ஒன்று தான் – ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியின் நிலை இரண்டும் பாகம் நீரும் ஒரு பாகம் நிலமும் உள்ளது. அவற்றிலும் ஒரு பாகத்தில் ஏரி குளம் கிணறு ஆறு இப்படி நீர் நிலைகள் உள்ளன.

இன்று நில அதிர்வு ஏற்படுவது நிலத்தில் மட்டுமல்ல. பூகம்பமும் எரிமலையும் இப்பூமியின் நீர் நிலை இல்லாத இடங்களில் மட்டும் ஏற்படுவது அல்ல. பூமியுடன் கலந்த கடலிலும் இப்பூகம்ப நிலை அதிகமாக ஏற்பட்டுக் கொண்டேதான் உள்ளது.

கடலில் சில நிலைகளில் இப்பூகம்ப நிலை ஏற்பட்டு அதனால் அக்கடலுக்குள் திடீர் திடீரென்று மலைகள் வளர்கின்றன என்கின்றனர். கடலுக்கடியில் வளர்ந்திடும் மலையின் நிலையென்ன…?

இப்பூமித்தாய் வெளியிடும் உஷ்ண அலைகள் வெளிப்படும் தன்மையினால் பூமியில் ஏற்படுவதைப் போன்ற நில அதிர்வு இக்கடலிலும் ஏற்படுவதினால் அந்நிலையில் பொங்கும் நிலையில் வளர்வது தான் இப்படி திடீர் திடீரென்று தோன்றிடும் மலைகளின் நிலையெல்லாம்.

கடல் நீரிற்கும் இம்மனித ஜீவ ஆத்மாவின் உடல் தன்மைக்கும் அநேக ஒற்றுமை நிலைகள் உண்டு.
1.இம் மனித உடலின் சுவாசத் தன்மை உப்புக் கலந்த அமிலத்தைத் தான் அதிகமாக ஈர்த்து சுவாசிக்கின்றது.
2.கடல் நீரின் உப்புத் தன்மையும் இம் மனித ஜீவாத்மாவின் உடல் தன்மையும் ஒன்றுபட்டதே
3.இம்மனித உடலைப் புதைத்தால் அவ்வுடலின் மேல் மற்றத் தாவர இன வர்க்கங்கள் வளர்ந்திடாது.

இன்று தாவரங்களுக்குப் பல இரசாயன உரங்களைச் செய்வித்து வளரச் செய்கின்றனர். அவற்றினுள் இம் மனிதனின் உடல் தன்மையை ஓர் இரசாயனத்திற்கும் பயன்படுத்திட முடியாது.

இன்று சில இடங்களில் சில தாவர வர்க்கங்களுக்கு நாய் நரி இவற்றின் உடல்களை அத்தாவரங்களின் வேர்களுக்கு உரமாக இட்டால் அத்தாவரம் செழித்து வளர்ந்திடும் என்ற நிலையில் பயிர் செய்கிறார்கள்.

1.ஆனால் மனித உடல் உப்புக் கலந்த அமிலத் தன்மை பெற்றதினால் எத்தாவரமும் இவ்வுடலில் இருந்து வளராது
2.இவற்றைப் போன்றே தாவரங்களுக்கு இப்பூமியில் மூன்றில் இரண்டு பாகமாக உள்ள கடல் நீரைப் பயன்படுத்திட முடிவதில்லை.

கடலிலேயே அச் சுவாசமுடனேயே வளர்ந்திடும் சில தாவர வர்க்கங்கள் உண்டு. ஆனால் அதே இனம் கொண்ட இத்தரையுடன் உள்ள நீர் நிலையில் வளர்ந்திடாது. இயற்கையிலேயே இப்படிப் பல பல மாற்றங்கள் கலந்தே உள்ளன.

இயற்கையின் சக்திக்குட்பட்ட… இயற்கை எய்தும் ஜீவ ஆத்மா பெற்ற நாம்… நம் சக்தியை இயற்கையுடன் கலக்கவிடும் நிலை பெற வேண்டும்…!