மணிக்கணக்காக உட்கார்ந்து செய்வது தியானம் ஆகாது… ஏன்…?

siddhars

மணிக்கணக்காக உட்கார்ந்து செய்வது தியானம் ஆகாது… ஏன்…?

உங்களை அறியாமலே சந்தர்ப்பவசத்தால் கொஞ்சம் சோர்வடைந்திருந்தால் என்ன நடக்கின்றது…? அடுத்தவர்களை எண்ணி “இப்படிப் பேசுகிறானே… அப்படிப் பேசினானே…! என்று இதை எல்லாம் எண்ணி வளர்த்துக் கொள்வோம்.

1.அப்புறம் எத்தனை நல்லது சொன்னாலும் கேட்கவிடாது.
2.சங்கடமும் சலிப்பும் வெறுப்பும் எடுத்துக் கொண்டால் நாம் கேட்டுணர்ந்த உணர்வுகள் நல்லதை நினைக்க விடாது.
3.நல்லதைச் செய்யவும் விடாது. நல்ல சொல்லும் வராது. பார்வையிலும் சோர்வு இருக்கும்.

யாரைப் பார்த்தாலும் சோர்வுடனே பார்ப்போம். சோர்வுடன் வேலையைச் சொல்லும் பொழுது நம்மிடம் வேலை செய்பவர்களையும் பலவீனப்படுத்தும்.

ஏனென்றால் இவைகள் எல்லாம்
1.இயற்கையின் செயலாக அந்த உணர்விற்குத்தக்க அது அது இயக்கும்.
2.அந்த உணர்விற்குத் தக்க தான் அவர்கள் வாழ்ககையும்
3.அந்த உணர்விற்குத்தக்க தான் நம் தொழிலும் இருக்கும்.
3.இதற்குக் காரணம் நாம் அல்ல. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

காரணம் என்ன என்றால்… சும்மா ரோட்டில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு விஷச் செடியில் இருந்து வெளிப்படும் மணங்கள் அங்கே பரவிக் கொண்டு வருகிறது.

நமக்கு முன்னாடி நடந்து போனவர்களுக்கு ஒன்றும் இல்லை. நாம் பின்னால் போகிறோம். அந்தக் காற்று நம் மீது பட்டவுடனே நமக்கு எதிர் நிலையாகின்றது. மேலே பட்டவுடனே அரிப்பாகின்றது. உடலிலே தடிப்பாகின்றது.

என்ன என்றே தெரியவில்லை…! நான் ஒன்றுமே செய்யவில்லை. ரோட்டில் தான் நடந்து வந்தேன். எனக்கு அரிப்பாகி உடலில் தடிப்பாகிவிட்டது என்பார்கள். இதெல்லாம் காற்றலைகளில் இருந்து நமக்குள் வருவது.

அதே சமயத்தில் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட சில கெமிக்கல் கலந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக மாறி அதுவும் படர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் மாறி மாறி வெளிப்படுத்தும் பல கெமிக்கல் கலந்த அலைகளின் தொகுப்புகள் ஒன்றைக் கண்டு மற்றது அஞ்சி ஓடி இப்படி ஒன்றோடு ஒன்று மோதி வேகத் துடிப்பு அதிகமாகும்.

அது அடுக்கடுக்காக வரப்போகும் போது அந்தப் பக்கமாகச் சென்றால் யார் உடலில் இது அதிகமாகப் படுகிறதோ சுவாசித்த பின்
1.எனக்கு எப்படியோ மயக்கம் வருகிறது.. என் சிந்தனை எல்லாம் குறைகின்றது…! என்றெல்லாம் சொல்வார்கள்.
2.அந்த நேரத்தில் சுவாசித்த உணர்வுகளால் உடலில் நோயாகும் வாய்ப்பும் உருவாகின்றது.
3.ஏனென்றால் இன்று நம்முடைய காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மை அதிகமாகப் பரவி இருக்கிறது.

இதைப் போன்ற நிலைகள் எல்லாம் நமக்குள் வராமல் தடுக்க வேண்டும் என்றால் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும் போதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று எண்ணிவிட்டுத் தான் செல்ல வேண்டும்.

இந்த உபதேசத்தின் மூலம் பதிவு செய்ததை நினைவுக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தை எண்ணி ஒரு ஐந்து நிமிடம் அந்தச் சக்திகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐந்து நிமிடம் எடுத்து கொண்ட பின் அந்தச் சக்தி தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதே மாதிரி மனைவியும் தன் கணவர் வெளியில் போகிறார் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர் உடல் முழுவதும் படர வேண்டும். அவரைப் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி இந்த வலுவைக் கணவருக்குப் பாய்ச்ச வேண்டும். இத்தகைய வலு இருக்கும் போது மற்ற தீமைகளை விலக்கித் (REMOTE) தள்ளிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் நீங்கள் சோர்வாகப் போய்ப் பாருங்கள். நடந்து போகப் போக சோர்வு அதிகமாகும்.
1.மனக் கவலையுடன் இருந்தீர்கள் என்றால் உங்கள் காரியங்கள் தடைப்படும் நிலையாகிவிடும்.
2.நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் – “நம் சொல்லே…!” நமக்கு எதிர் நிலையாக வரக்கூடிய தன்மையிலே வரும்.

இதைப்போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்ததிரத்தின் சக்தியை அதிக அளவில் கொடுக்கிறோம். அதை நீங்கள் எடுத்து வளர்கக வேண்டும்.

ஒரு விதையைக் கொடுத்து வயலில் விதைத்து விளைவிக்கச் சொல்கிறோம். அந்த விதைக்குத் தக்கவாறு இன்னென்ன காலத்தில் இன்னென்ன பருவத்தில் இப்படிச் செய்…! என்று சொன்ன பிற்பாடு அதே முறைப்படி செய்தோம் என்றால் நன்றாக வெள்ளாமை வரும்.

இதைப் போன்று தான் யாம் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்தைக் கூர்மையாக உங்களுக்குள் ஊழ்வினையாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

பதிவான பின் வாழ்க்கையில் சிக்கல் வரும் பொழுதெல்லாம் அந்த ஞானிகளின் எண்ணங்களை எடுத்து எடுத்து அந்தப் பருவத்தினை ஏற்படுத்தினால் அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும். சாப்பாடு கிடைத்துக் கொண்டே இருக்கும்.

வெளியில் போகும் போதும் வியாபாரம் செய்யும் போதும் இரவிலே தூங்கப் போகும் எத்தனையோ பல தீமைகளைப் பார்க்கின்றீர்கள். அந்தத் தீமைகள் உங்களைச் சேராமல் அவ்வப்பொழுது அதைத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தான் உண்மையான தியானம்.

1.அது இல்லாதபடி… உட்கார்ந்து கொண்டு…!
2.”விடிய விடிய நான் தியானம் எடுப்பேன்…!” என்று சொன்னால் அது அர்த்தமில்லாத தியானம்
3.ஆகையினால் ஒவ்வொருவரும் இங்கே கொடுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை விரயம் ஆக்காது செயல்படுத்த வேண்டும்.

புறக்கண்ணின் இயக்கமும்… அகக்கண்ணின் செயலும்…!

Image

Third eye - Siva

புறக்கண்ணின் இயக்கமும்… அகக்கண்ணின் செயலும்…!

பிறருடைய வேதனைகளைக் கேட்டறிந்து பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து உதவி செய்யும் பண்புடன் நாம் சென்றாலும் இந்தப் பண்பால் கவரப்பட்ட உணர்வுகள் நம் உடலுக்குள் இயக்கித்தான் அந்தப் பண்பின் அன்பால் அவர்களுக்கு நன்மையைச் செய்கின்றோம்.

அதன் மூலம் நன்மைகளை அவர்களுக்குச் செய்தாலும் அவரின் உணர்வுகள் நமக்குள் வந்தபின்
1.சூரியன் எவ்வாறு தனக்குள் வரும் நஞ்சினை வெளியிலேயே மோதி வீழ்த்துகின்றதோ
2,மகரிஷிகள் எவ்வாறு தீமைகளை வீழ்த்தி உணர்வை ஒளியாக (நன்மையின் சக்தியாக) மாற்றிக் கொண்டார்களோ
3.அதைப் போல நாமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று அந்தத் தீமைகளை வீழ்த்திட வேண்டும்,

அது எவ்வாறு…?

நாம் கண் கொண்டு பார்க்கும் உணர்வின் தன்மைகள் வெளியிலிருந்து தான் நம் ஆன்மாவிற்குள் வருகின்றது. ஆன்மாவில் வந்த பின் தான் மூக்கின் வழியாகச் சுவாசிக்கச் செய்து அதைப் புருவ மத்தியிலிருக்கும் நம் உயிர் நுகர்கின்றது.

உயிரிலே பட்ட பின் இந்த உணர்வின் தன்மையை உணர்ச்சிகளாக இயக்கி நம் உடலுக்குள் அந்தச் சத்தைப் பரப்புகின்றது.

அதாவது தீங்கு செய்கின்றான்… தீங்குடன் இருக்கின்றான்… வேதனைப்படுகிறான்…! என்ற இந்த உணர்வுகளை எல்லாம் கண் கவர்ந்தாலும் இங்கே ஆன்மாவாக மாற்றி உயிரின் இயக்கத்தால் ஈர்த்து உணர்வின் அலைகளைப் பரப்பி “அகக்கண்ணாக…!” இருந்து நமக்குள் உணர்த்துகின்றது உயிர்.

1.புறக்கண்களால் நாம் பார்த்துக் கவர்ந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக மாற்றி
2.அது உயிருடன் ஒன்றும் பொழுது இதை அகக்கண்ணாக மாற்றி (உள் உணர்வாக) உடலுக்குள் உணர்த்துகின்றது.
3.இப்படித்தான் பிற தீமைகள் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

இதைப் போன்ற விளைவுகளிலிருந்து தப்புவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற வலுவான உணர்வைத் தனக்குள் பதிவு செய்து புறக்கண்ணின் நினைவை அகக்கண்ணான உயிருடன் ஒன்றி உள்முகமாகத் தனக்குள் பல முறை செலுத்த வேண்டும்.

இப்படிப் பல முறை சொல்லி உள்ளே செலுத்தும்போது நம்மை அறியாத தீமைகளை அகற்றுவதும் அந்த ஞானியின் உணர்வு இங்கே வரப்படும் போது தான் நம் ஆன்மாவில் இருக்கும் அந்தத் தீமைகளைப் பிளக்கவும் செய்கின்றது.

தீமையின் தன்மையை பிளக்கும் இந்த நிலையைத்தான் விநாயகர் தத்துவத்திலேயும் காட்டப்பட்டது. மாரியம்மன் ஆலயத்திலும் காட்டப்படுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் செலுத்தி நம் உடலில் உட்புகுந்த தீமைகளைப் பொசுக்க வேண்டும். அதாவது
1.வெகு தொலைவிலேயே…!
2.நம் ஆன்மாவில் வரும் போதே..!
3.அந்தத் தீமைகளை அகற்றிடல் வேண்டும் என்ற மகரிஷிகள் காட்டிய பேருண்மையை நாம் உணர்வோம் என்றால்
4.நமது வாழ்க்கையில் பேரின்பத்தை அடையும் நிலை பெறுகின்றோம்.

“எந்த மகரிஷியின் உணர்வை…!” நமக்குள் அதிகமாக வளர்க்கின்றமோ இந்த உடலை விட்டு நாம் அகன்ற பின் நாம் அங்கே அவர்களின் அருள் வட்டத்திற்குள் செல்கின்றோம்.

ஒருவன் நம்மை வேதனைப்படுத்துகின்றான் என்றால் அவனை எண்ணி எண்ணி “எனக்குத் துன்பம் செய்தான்…!” என்ற உணர்வை வளர்த்துக் கொண்டால் இறந்த பின் அவன் உடலிலே தான் சேர்கின்றோம்.

குடும்பத்தில் பாசத்தால் “என் பையன் அடுத்து என்ன செய்வான்…!” என்று எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டால் அந்த உணர்வின் தன்மை வரும் போது பையன் உடலிலே சென்று நாம் நோயைத் தான் உருவாக்க முடியும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விலகி அந்த மெய் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பெருக்கி மெய்ப் பொருளை நாம் காண வேண்டும்.

ஆகவே அந்த மகா ஞானிகள் நமக்குக் காட்டிய அந்தச் சாஸ்திரத்தைத் தெளிவாக எடுத்து அந்தச் சாஸ்திர விதிப்படி உங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றப் பழகிக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.

புருவ மத்தியில் ஈஸ்வரா… என்று எண்ணி
தீமைகளைச் சுட்டுப் பொசுக்குங்கள்…!

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

Image

Power and wisdom

வாழ்க்கையில் எது வந்தாலும் சமாளிக்கக்கூடிய சக்தியும்… யுக்தியும்

1.புற உலகில் உள்ள நிலைகளை நாம் எண்ணிப் பார்க்காது
2.புற உலகிலிருந்து நம்மைத் தாக்கும் சாபமோ… பாவமோ… கோபமோ…
3.மற்ற பழித்துப் பேசும் நிலையோ… இழுக்கான நிலைகள் பேசும் நிலைகளிலோ நாம் சிக்காது…
4.அவ்வப்பொழுது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி ஆத்ம சுத்தி செய்து
5.நம் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும் நம்மைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வர வேண்டும் என்று
6.இப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களைச் “சிக்கல்…!” என்று சொல்லாது அதிலிருந்து விடுபட ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி நாங்கள் இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற இந்த முறையைக் கையாண்டு பழக வேண்டும்.

இந்தப் பழக்கத்திற்கு நாம் அவசியம் வந்தே ஆக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழகி விட்டால் உங்கள் வாழ்க்கையில் உயர்வான நிலைகள் கிடைக்க ஏதுவாக இருக்கும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

ஆகவே
1.சங்கடம் என்ற எண்ணத்தை உங்கள் எண்ணத்திலிருந்து அறவே நீக்கிடல் வேண்டும்.
2.குடும்பத்தில் கஷ்டம் என்ற வார்த்தையே உங்கள் வாயில் வராதபடி அது தடுக்க வேண்டும்.
3.யார் எதைச் சொன்னாலும் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.எத்தகைய நோயாக இருப்பினும் “எனக்கு நோய் இருக்கிறது…!” என்று சொல்ல வேண்டாம்.
5.மகரிஷிகளின் அருள் சக்திகளை நான் பெற்று “என் நோயை நீக்குவேன்… நான் நலமடைவேன்…!” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை நீங்கள் எண்ணி வந்தாலே போதுமானது. கீதையிலே சொன்ன மாதிரி நீ எதை நினைக்கின்றாயோ அதுவாக ஆகின்றாய் என்பது போல் உங்கள் வாழ்க்கையில் அனைத்தும் நலம் பெறுவீர்கள்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் ஒளியைப் பெற்று அவர் சொன்ன முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றால் நாமும் அவரைப் போன்ற ஒளி நிலை பெறலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று தான் உடலை விட்டு அகன்று விண்ணுலகம் சென்றார். உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு இன்றும் ஒளியின் சரீரமாக ஏகாந்தமாக நிலை கொண்டுள்ளார்.

அவர் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி ஆத்ம சுத்தி என்ற நிலையைச் செய்து மகரிஷிகளின் அருள் ஒளியைப் பற்றுடன் பற்றிப் பிறவா நிலை என்ற பெரு நிலை அடையலாம்.

அதே சமயம் இந்த வாழ்க்கையில் வந்த சகல தீமைகளிலிருந்தும் விடுபட்டு நமது வாழ்க்கையில் எது வந்தாலும் அதைச் சமாளிக்கும் திறனும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் நிலைகளும் நோய்கள் வராது தடுக்கும் நிலைகளும் நிச்சயம் நாம் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னும் செய்ய வேண்டிய சிறு பிரார்த்தனை…!

chitra festival

எந்தக் காரியத்தைத் தொடங்கும் முன்னும் செய்ய வேண்டிய சிறு பிரார்த்தனை…!”

நம்மை யாராவது ஒருவர் திட்டினால் என்னைத் திட்டினார்… திட்டினார்…! என்று எண்ணும் போது அந்தக் காரமான அலைகள் நமக்குள் வந்து விடுகிறது.

அதே கோபமான எண்ணத்துடன் என்னை இப்படிப் பேசினார்களே இப்படிப் பேசினார்களே என்று எண்ணிக் கொண்டே நீங்கள் சமையல் வேலை செய்தா என்ன ஆகும்..?

1.எந்த அளவுக்குக் கோபமாக இருந்தீர்களோ குழ்ம்பிலே ஒரு மிளகாய் அதிகமாகிப் போகும். குழம்பு காரமாகிவிடும் உஷ்..உஷ்.. என்று தான் சாப்பிடுவார்கள்.
2.என்னை இப்படிப் பேசினார்கள் அப்படிப் பேசினார்கள் என்று சலிப்பான எண்ணத்துடன் சமைத்துப் பாருங்கள். குழ்ம்பில் புளியை நிச்சயம் அதிகமாக்கி விடுவீர்கள்.
3.எப்போது பார்த்தாலும் இப்படி “நச்..நச்…நச்…!” என்று இருக்கிறது என்று ஆத்திரத்துடன் சமைத்தீர்கள் என்றால் குழம்பில் உப்பை அள்ளி அதிகமாகப் போட்டு விடுவீர்கள்.
4.இப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
5.ஆனால் நீங்கள் அந்தந்த சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டி அதைச் செய்ய வைத்துவிடும்.

நாம் தவறு செய்யவில்லை. காரணம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகள் தான். அதை அவ்வப்பொழுது சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா…!

அதற்காகத்தான் ஆத்ம சுத்தி என்ற பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

ஓ…ம் ஈஸ்வரா…… குருதேவா…! என்று புருவ மத்தியில் நம் உயிரை எண்ணி அந்த உணர்வின் வேட்கையைக் கூட்ட வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று கண்களைத் திறந்து வானை நோக்கி ஏங்கிச் சுவாசியுங்கள்.

பின் கண்களை மூடித் திரும்பத் திரும்ப “மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!” என்று ஒரு நிமிடம் தியானிக்க வேண்டும்.

பிறகு மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா. மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா குருதேவா என்று ஒரு நிமிடம் இதைத் தியானிக்க வேண்டும்.

பின் கண்களைத் திறந்து மீண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி விட்டு கணவன் மனைவி இருவருமே ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் ஐந்து முறையாவது இது போல எண்ண வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி என் கணவரின்/ என் மனைவியின் ஜீவாத்மா பெறவேண்டும். அவர் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும். அவர் எத்தொழில் செய்தாலும் நலமும் வளமும் பெற வேண்டும். அவர் பேச்சும் மூச்சும் உலக மக்களுக்கு நன்மை தர வேண்டும். அவரைப் பார்ப்போரெல்லாம் நல்லது நினைக்க வேண்டும் இவ்வாறு கணவன் மனைவி கணவனை ஒருவருக்கொருவர் எண்ணுதல் வேண்டும். இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி என்பது.

சமையல் செய்யும் போதெல்லாம் பெண்கள் ஆத்ம சுத்தி செய்துவிட்டுத் தொடங்க வேண்டும்.
1.அரிசியையோ மற்ற பொருள்களைப் போடும் போதெல்லாம்
2.நாங்கள் சமைக்கும் இந்த உணவை உண்ணுவோர் அனைவரும்
3.மகரிஷிகளின் அருளால் நலமும் வளமும் மன பலம் பெற வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

இதே போல ஆகாரத்தைப் பரிமாறும் போதும் அந்த மகரிஷிகளின் உணர்வை ஒரு நிமிடம் ஏற்றி விட்டு ஆகாரத்தை எடுத்துப் பரிமாற வேண்டும்.

காரணம் அந்த ஒரு நிமிடம் என்பது மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்ன உடனே
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சூரியனுடைய காந்த அலைகள் கவர்ந்து
2.நமக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திவிடும். (அதற்காகத்தான் திரும்பத் திரும்ப எண்ணச் சொல்கிறோம்)
3.நம் ஆன்மாவில் அந்த அருள் சக்தி பெருகினால் மற்ற கோபமோ சலிப்போ வேதனையோ எல்லாம் அகன்று சென்றுவிடும்.

ஆகவே எந்தக் காரியத்தைச் செய்வதற்கு முன்னாடியும் இப்படி ஆத்ம சுத்தி செய்துவிட்டுத் தான் தொடங்க வேண்டும். ஒரு இரண்டு நிமிடத்திற்குள் இதைச் செய்து முடித்துவிடலாம்.

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டியது

sleeping meditation

இரவில் தூங்கச் செல்லும் முன் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டியது 

 

காலையிலிருந்து இரவு வரையிலும் கேட்டறிந்த பார்த்தறிந்த தீமைகளை அந்த அசுர குணங்களின் செயல்களை அகற்றும் நிலைக்காக மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் ஆத்ம சுத்தி என்ற இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றோம். இரவில் தூங்கச் செல்லும் போது இதை அவசியம் செய்து பழக வேண்டும்.

தினசரி நம் உடலிலே இருக்கும் அழுக்கைப் போக்க நல்ல நீரைக் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிக்கின்றோம். அது போல இரவிலே நாம் தூங்கச் செல்லும் போது சப்தரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று ஒரு நூறு முறை நம் உயிரை வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அன்றாடம் நாம் எத்தனையோ தீமையான செயல்களை டி.வி. பத்திரிக்கை கம்ப்யூட்டர் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் நாம் பார்க்க நேர்கின்றது.

1.அவை அனைத்தும் நம் கண்களால் கவரப்பட்டு உயிருடன் இணைக்கப்படும் பொழுது
2.நம் உயிர் அதை எல்லாம் இயக்கச் செய்யும் பொழுது
3.தவறு செய்கின்றான்… குற்றம் செய்கின்றான்… கொலை செய்கிறார்கள்… வேதனையால் துடிக்கின்றார்கள்…! என்று உணர்கின்றோம்.

இவ்வாறு உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிந்து கொண்டாலும்
1.இயக்கிய உணர்வின் சக்தி ஜீவன் பெற்று
2.நமக்குள்ளும் அதே தீமைகளை விளைவித்து விடுகின்றது.

கொலைகாரனயோ தவறு செய்பவனையோ வேதனைப்படுபவனையோ பார்த்து நுகர்ந்தறிந்த உணர்வுகள்
1.நம் உயிரின் நிலைகளைத் திரை மறைவாக மறைத்துக் கொண்டு
2.நம் சிந்திக்கும் உணர்வினைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

அத்தகைய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் எண்ணங்களைச் செலுத்த வேண்டும். உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவான்மாக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று நூறு முறை நம் உடலுக்குள் செலுத்துவது நல்லது.

சப்தரிஷி மண்டலங்களாக இருப்பினும் துருவ நட்சத்திரமாக இருப்பினும் அவர்கள் அனைவரும் தங்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள் கொண்டு ஒளியாக மாற்றிச் சப்தரிஷிகளாக ஆனவர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று உடலுக்குள் பல முறை கண்ணின் நினைவாற்றலைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.

ஆக நம் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவினை உள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீமையின் உணர்வுகளைச் செயலற்றதாக மாற்றச் செய்வது தான் “சூரசம்ஹாரம்…!” என்பது.

ஒரு விளக்கை மறைத்துக் கொண்டிருக்கும் இருளைப் பிளந்து விட்டால் விளக்கின் வெளிச்சம் அருகிலே இருக்கக்கூடிய அனைத்துப் பொருளையும் தெரிவிக்கின்றது.

அது போலத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வுகளை நம் ஆன்மாவாக்கி மீண்டும் சுவாசிக்கும் பொழுது இருள் சூழச் செய்யும் அந்த இருள் சக்தியை அது அகற்றச் செய்யும்.

தீமையான செயல்ளைச் செயல்படுத்தும் அந்த கொடூர சக்தி கண்ணின் நினைவு கொண்டு அகற்றப்படுகின்றது. ஆகவே தான்
1.இரவிலே தூங்கச் செல்லும் போது நூறு முறையாவது சப்த ரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் உள்ள தீமையான உணர்வுகள் மடிய வேண்டும்
3.சப்தரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த தீயவினைகள் அனைத்தும் நீங்க வேண்டும்
5.எங்கள் விவசாய நிலங்களில் அறியாது சேர்ந்த தீய அணுக்களின் நிலைகள் மறைய வேண்டும்
6.சப்தரிஷிகளின் அருள் சக்தி விவசாய நிலங்களில் படர்ந்து நல்ல அணுக்கள் உரு பெற வேண்டும்
7.அதனின் மலத்தின் தன்மை கொண்டு தாவர இனங்கள் செழித்து வளர்தல் வேண்டும்
8.சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் தொழில் வளாகம் அனைத்திலும் படர வேண்டும்
9..எங்கள் வளாகத்தில் தொழில் செய்யும் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும்
10.அவர்கள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கிப் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று
11.இந்த ஏக்க உணர்வினை நாம் நம் நினைவால் பரவச் செய்து நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டும்.

நம் ஆன்மாவைத் தூய்மை செய்வது போல் வீட்டைத் தூய்மைப்படுத்துவதும் நம் தொழில்களிலுள்ள தீமையான உணர்வுகளை நீக்குவதும் விவசாய நிலங்களில் நல்ல உணர்வுகளைப் பரவச் செய்வதும் வேண்டும்.

தினசரி இரவு இவ்வாறு எண்ணி ஆத்ம சுத்தி செய்து இந்தக் கணக்கைக் கூட்டிக் கொண்டு வந்தாலே போதுமானது. நம் வாழ்க்கைப் பாதை சீராகும். நம் பயணம் அழியா ஒளிச் சரீரம் பெறுவதாக அமையும்.

துன்பங்களை நீக்கக்கூடிய சரியான சந்தர்ப்பமும்… கூர்மையான ஆயுதமும்…!

Soul protection tool

துன்பங்களை நீக்கக்கூடிய சரியான சந்தர்ப்பமும்… கூர்மையான ஆயுதமும்…!

வாழ்க்கையில் சங்கடம் வரப்போகும் போது என்ன செய்யும்…? சங்கடம் வந்து விட்டாலும் பரவாயில்லை..! அடுத்து வேதனை வந்துவிடுகின்றது.

வேதனை வந்து விட்டது என்றால் எல்லாமே விஷமாக மாறிவிடுகிறது. நாம் சம்பாதித்த சொத்தெல்லாம் கரையத் தொடங்குகிறது.

அதாவது நாம் சுவையான பதார்த்தத்தைச் செய்து வைத்திருந்தாலும் அதில் விஷத்தைப் போட்டால் விஷம் என்ன செய்கிறது…? பதார்த்தத்திலுள்ள அதனுடைய ருசி சத்து எல்லாவற்றையும் அது கவர்ந்து கொள்கிறது. விஷம் வலுவாகின்றது. அதை மாற்ற வேண்டுமா இல்லையா…!

போகமாமகரிஷியின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டோம் என்றால்
1.ஏழ்மையில் வாடப்படும் போது
2.அவருடைய ஏக்க உணர்விற்குள் தான் விண்ணின் ஆற்றல் சிக்கியது அதனால் உண்மையை அறிய முடிந்தது.
3.ஒவ்வொரு சக்தியும் அவருடைய சந்தர்ப்பத்தால் தான் அறிந்து கொண்டார்.

இராமலிங்க அடிகள் ஞானத்தைப் பெற்றதும் சந்தர்ப்பம்தான். வியாசர் வான்மீகி ஆதிசங்கரர் திருமூலர் ஏனைய ஞானிகள் ஞானத்தைப் பெற்றதும் சந்தர்ப்பம் தான்.

ஆகவே யாரும் தெரிந்து கொண்ட பிற்பாடு ஞானத்தை எடுக்கவில்லை. அதே மாதிரியான சந்தர்ப்பத்தைத் தான் இப்போது உங்களிடம் இப்போது ஊட்டுகின்றோம்.

கஷ்டம் என்று வந்து விட்டால் அந்த சமயத்தில் அதை விட்டு விட்டு ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அந்தக் கஷ்டமான சந்தர்ப்பத்தில் இதை எடுத்தால் அந்த ஞானிகளைப் போன்று மெய் ஞானத்தைப் பெறும் சந்தர்ப்பமாக இது மாறிவிடுகிறது.

ஆனால் அந்தக் கஷ்டத்தையே எண்ணிக் கொண்டு அந்தச் சங்கடத்திலேயே நீங்கள் இருந்தால் நல்ல எண்ணம் எது இருந்தாலும் அது விஷத்திற்குள் போய்ச் சிக்கிக் கொள்கிறது.

சங்கடம்… கஷ்டம்…! என்று வரும் பொழுதெல்லாம் அதை மாற்றும் சக்தியைப் பெறச் செய்வதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் (ஞானகுரு)
1.”பன்னிரண்டு வருட காலம்… உருட்டி…உருட்டி உருட்டி…உருட்டி உருட்டி…உருட்டி
2.அதாவது பலவிதமான இன்னல்களைச் செயற்கையாக உண்டு பண்ணி
3.அதிலிருந்து மீட்டிடும் அனுபவத்தைப் பெறச் செய்து
4..மெய் ஞானிகளின் ஆற்றலைப் பெறச் செய்தார்.
5.அப்படி அனுபவபூர்வமாகப் பெற்றதைத்தான் ஆத்ம சுத்தி என்ற வாக்காக ஆயுதமாகக் கொடுக்கின்றோம்.

ஆரம்பத்தில் யாருக்கும் இதைப் பயன்படுத்தவே இல்லை.

(1987-88க்குப் பிற்பாடு தான்) ஆத்ம சுத்தி என்ற அந்த வாக்கைக் கொடுத்து அதை ஏற்றுக் கொள்ளும் நிலைகள் வரும் போது அதற்குள் பல ஆற்றல்களைச் செருகி வைத்து நீங்கள் ஆத்ம சுத்தி செய்யும் போது அந்தப் பவர் (POWER) கிடைக்கும்படியாகச் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆத்ம சுத்தி என்கிற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்து விட்டுத் தான் அந்த மகரிஷிகளின் ஆற்றல்களை எல்லாம் உங்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றோம்.

1.பல இன்னல்களைத் தாங்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி
2.அந்த ஒவ்வொரு இன்னலையும் நீக்குவதற்கு
3.பேரண்டத்தின் ஆற்றலையும் மகரிஷிகளின் உணர்வலைகளையும் சுவாசித்து
4.அதை உங்கள் உடலுக்குள் அணுக்களாக மாற்றுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்.

ஒரு துன்பம் வரும் பொழுது, “ஓம் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்ற உணர்வைச் சுவாசிக்க வேண்டும்.

அப்படிச் சுவாசிக்கும் பொழுது அந்த மெய் ஞானிகள் விளைய வைத்த ஞானத்தின அருள் ஒளிகள் நீங்கள் நினைத்த மாத்திரத்தில் சுலபத்தில் வரும். அத்தகைய தன்மைதான் யாம் கொடுக்கும் இந்த வாக்கு இந்த ஆத்ம சுத்தி என்பது.

இது துன்பங்களை நீக்கக்கூடிய கடுமையான ஆயுதம்.

இதை நீங்கள் எடுக்கும் பொழுது துன்பம் நீங்கும்… நோய்கள் நீங்கும்… பகைமைகள் அகலும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கூடும்…! இந்த மனித வாழ்க்கையில் நீங்கள் புனிதம் பெற முடியும்.

தயவு செய்து இதை அலட்சியப்படுத்தி விடாதீர்கள்…!

 

மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வழி

Light atoms -divine

மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வழி 

அன்று வாழ்ந்த மெய் ஞானிகள்
1.தாவர இனத்தினுடைய சத்துக்களைத் தன் சுவாசத்தில் எவ்வாறு ஈர்த்துக் கொண்டார்கள்…?
2.அதனின் துணை கொண்டு விண்ணின் ஆற்றல்களைத் தங்கள் புலனறிவால் எவ்வாறு நுகர்ந்தார்கள்…?
3.விண்ணின் ஆற்றலைப் பெருக்கி ஒளியாக மாறி எவ்வாறு விண்ணுலகம் சென்றார்கள்..? என்ற இந்தப் பேருண்மைகளை உணர்வதற்காக வேண்டி
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைக் (ஞானகுரு) காட்டிலே சுற்றச் சொன்னார்.

உன் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உன்னை அறியாது வரும் இன்னல்களிலிருந்து விடுபட விண்ணுலகம் சென்ற அந்த மெய் ஞானிகளின் உணர்வை நீ எவ்வாறு எடுக்க வேண்டும்…? என்ற அந்தப் பழக்கத்தையும் ஏற்படுத்தினார்.

5300 ஆண்டுகளுக்கு முன் போகன் புவனேஸ்வரி என்ற நிலையில் இந்தப் பூமி தனக்குள் உருவாக்கும் சக்திகள் அனைத்தையும் (கல் மண் உலோகங்கள் தாவர இனங்கள்)
1.அதாவது இந்தப் புவனத்தின் சக்தியைத் தனக்குள் எப்படி மோகித்தானோ
2.அந்த உணர்வின் ஆற்றலை அவனுக்குள் எப்படிப் பெருக்கிக் கொண்டானோ
3.அவனைப் போன்றே அந்த மோகத்தின் தன்மைகள் உங்களுக்குள்ளும் ஊடுருவி
4.மெய் ஒளியின் தன்மையாக அது ஓங்கி வளர வேண்டும்.

இவைகளையெல்லாம் உங்களுக்குள் ஏன் இவ்வளவு தூரம் சொல்கிறோம் என்றால் நீங்கள் தெரிந்து எடுப்பதற்கல்ல…!
1.இந்த உபதேசத்தின் உணர்வுகளை நீங்கள் எந்த அளவுக்குக் கூர்ந்து கேட்டு ரசித்து
2.அந்த மெய் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஆவலில் வருகின்றீர்களோ
3.உங்களுக்குள் அந்த மெய் ஞானிகளின் வித்து பதிந்துவிடும்.
4.இரண்டு தரம் மூன்று தரம் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அந்த உணர்வு ஆழமாகப் பதிவாகிவிடும்.

அடுத்து நீங்கள் ஓ…ம் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உங்கள் உயிரான ஈசனை எண்ணினீர்கள் என்றால் மகரிஷிகளின் அருள் ஒளி கலந்த உணர்வுகள் உங்களுக்குள் தூண்டப்படும்.

அவ்வாறு தூண்டப்பட்டு மகரிஷிகளின் ஒளியான உணர்வுகளை நீங்கள் சுவாசிக்கும் போது எவ்வளவு கவலையாக இருந்தாலும் சரி “டக்…” என்று அதை மாற்றிக் கொடுக்கும். அப்பொழுது உங்கள் எண்ணத்தின் வலுவை அனுபவத்தில் பார்க்கலாம்.

ஏனென்றால் பிறர் மேல் பிரியம் கொண்டு வாழும் நிலையில் சந்தர்ப்ப வசத்தால் வேதனையும் சங்கடத்தையும் சந்திக்கும்போது அந்த உணர்வுகள் நம்மைச் சோர்வடையச் செய்து விடுகின்றது.

அதைப் போன்று வரும் தீமைகளை ஒவ்வொரு நிமிடத்திலும் தடுத்துக் கொள்ளும் பழக்கத்தை உங்கள் அனுபவத்திற்குக் கொண்டு வருவதற்குத் தான்
1.இந்த உபதேச வாயிலாக மகரிஷிகளின் உணர்வுகளை இரத்த ஓட்டமாகக் கொடுத்து
2.அதை ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக… வாக்காகக் கொடுக்கின்றோம்.

இந்த வாக்கின் வன்மையின் நிலைகளைக் கொடுக்கப்படும் பொழுது மகரிஷியின் எண்ண ஓட்டத்தை உங்களுக்குள் செருகச் செய்து உங்கள் முந்தைய அழுக்குகளையும் போக்கச் செய்து விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையையும் மாய்க்கச் செய்யப் பழக்கிக் கொடுக்கின்றோம்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்…!

உலகை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபடும் மக்களாக நீ உருவாக்கு…! என்றார் ஈஸ்வரபட்டர்

Sages chacra

உலகை ஆட்டிப் படைக்கும் தீமைகளிலிருந்து விடுபடும் மக்களாக நீ உருவாக்கு…! என்றார் ஈஸ்வரபட்டர் 

வேதனை… வேதனை… வேதனை…! என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் அந்த விஷத்தின் அளவுகோல் அதிகமானால் அது நம் உடலுக்குள் கேன்சராக மாறுகின்றது. (வேதனை என்றாலே விஷம்..!)

நம் உடலுக்குள் அத்தகைய விஷமான அணுக்கள் பெருகிய பின் தன் விழுதுகளைப் பாய்ச்சி மற்ற நல்ல அணுக்களுக்குப் போகும் விஷத்தை இது கவர்ந்து கொண்டபின் இந்த மனித உடலை உருவாக்கும் அணுக்களெல்லாம் “நீர் சத்தாக…!” மாறுகின்றது.

நல்ல அணுக்களின் இயக்கச் சக்தி குறைக்கப்படும் பொழுது இந்த இரத்தத்தின் தன்மை குறைகின்றது. இரத்தக் கேன்சராக மாறும் போது இந்த அணுக்களிலுள்ள விஷம் மற்ற அணுக்களுக்குக் கொண்டு போய் இதே வேதனைகளை உருவாக்கிவிடுகின்றது.

இதைத் தெளிவாக எமக்குக் காட்டுகின்றார் குருநாதர்.

விஷத்தன்மை அதிகமாகிக் கேன்சராக மாறும்போது அதற்கு மருந்து இல்லை. ஆனால் அக்காலங்களில் இந்தக் கேன்சர் என்ற நிலை இல்லை.

பச்சிலையை எடுத்து அரைத்து அந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு துளி எங்கே புற்று நோய் இருக்கின்றதோ அங்கே தடவி விட்டால் அந்தக் கண்களின் (புற்றின்) வழி கொண்டு அந்தப் புற்றை உருவாக்கிய அணுக்கள் மடிந்துவிடுகின்றது.

இதைக் காட்டுவதற்காக வேண்டி எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று
1.சில பச்சிலைகளையும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டினார்.
2.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்து கொள்.
3.இந்த உணர்வினை “வாக்காக” நீ அவர்களுக்குள் கொடு.
4.அதே அணுவின் தன்மை அங்கே விளையும்.

அவர் தொடர்ந்து எடுத்தார் என்றால் அவர் செய்த தீமைகளைப் போக்கும் நிலை அங்கே வருகின்றது. அவர் எண்ணியதை அவர் உயிர் உருவாக்குகின்றது. அந்த அணுக்களைப் பெருக்குகின்றது.

ஒருவர் கோபமாகப் பேசுவதை நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தால் நமக்குள் அது இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது. அதைப் போல
1.நான் உனக்குக் காட்டியபடி கேன்சர் நோயை நீக்கிடும் உணர்வை நீ நுகர்ந்தாய்.
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு கேன்சர் செயலற்றதாக ஆகவேண்டும் என்ற ஒரு வாக்கினை அவர்களுக்குக் கொடு.

யாரொருவர் இந்தப் பதிவினை நினைவு கொண்டு தியானிக்கின்றனரோ நஞ்சினை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பெருகும். அப்பொழுது அவருக்குள் இருக்கும் அந்தக் கேனசர் ஒடுங்கும்.

அவர்கள் எதை எண்ணுகின்றார்களோ அதை “அவர்கள் உயிர் தான்… இயக்குகின்றது…” “நான் செய்கின்றேன்…” என்று நீ இதைச் செய்தால் அவர்கள் செய்யும் உணர்விலிருந்து தீமையிலிருந்து விடுபட மாட்டாய்.

1.உடல் நல்லதாகிவிட்டால் நல்லதான பின் மீண்டும் வேதனைப்படும் செயல்களைத்தான் செய்வார்கள்.
2.அந்த வேதனை உணர்வைத்தான் நுகர்வார்கள்… மீண்டும் அதே நோய் உருவாகும்.

அவரில் விளைந்த உணர்வுகள் மற்றவர்கள் அவருடன் உறவாடும்போது அங்கே பதியும். பதிந்த உணர்வே மீண்டும் செயலாகும். இதை மாற்றும் நிலை இல்லை.

இதை மாற்றவேண்டும் என்றால் விஷத் தன்மை பரவாது தடுக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நுகரச் செய். இந்த உணர்வின் தன்மை இருளை மாய்க்கச் செய்…!

உணர்வின் துணை கொண்டு பிறவியில்லா நிலை அடையச் செய்யும் பருவம் பெற்றது இந்த மனித உடல்.

அவர்களின் உயிரை நீ ஈசனாக மதி. அந்த உடலைக் கோவிலாக மதி. உடலைச் சிவமாக மதி. அதற்கு “அருள் சேவை…!” என்ற நிலைகள் கொண்டு அருள் ஞானத்தை வினையாகச் சேர்க்க ஊழ்வினை என்ற வித்தாக ஊன்று.

1.அந்த வித்தினை எவர் வளர்த்துக் கொள்கின்றனரோ
2.அவர் இந்தப் பாவ வினையும் சாப வினையும் நீக்கும் நிலை பெறுகின்றார்கள்.
3.தீய வினைகளிலிருந்தும் விடுபடுகின்றனர்.

இதை வளர்க்க எண்ணினால் உயிருடன் ஒன்றி ஒளியின் தன்மை வளர்கின்றது. இதை வளர்த்தால் தான் அதைப் பெற முடியும்.

ஆனால் உன் கையால் நீ பலருக்கு மருந்தைக் கொடுத்து நோய்களை நீக்கி நன்மை செய்தாலும் அடுத்த கணம் நல்லதானாலும் அந்த நேரத்திற்குத்தான் நல்லதை எண்ணுவார்கள்.

அடுத்தாற் போல் இவர்கள் என்ன செய்வார்கள்…? மீண்டும் பிறர் வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தறிவார்கள். நுகர்ந்த உணர்வுகள் அந்த வேதனைப்படுத்தும் சொல்லாக மீண்டும் இவருக்குள் வரும்.

அந்த வேதனை இவருக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவான பின் நிலை மீண்டும் அதை நுகர்ந்து தீய அணுக்களைத்தான் உருவாக்கும். நீ செய்த நன்மையும் பயனற்றுப் போகும்…! என்று தெளிவாக்கினார் குருநாதர்.

ஆகவே
1.ஞானிகள் விளைய வைத்த ஞான வித்தை அவர்களுக்குள் ஊன்றிவிடு.
2.அதை வளர்க்கும் உபாயத்தைக் கூறு.
3.அதன் வழியே அவர்கள் நுகரட்டும்.
4.அருள் பெறட்டும். இருளை அகற்றட்டும்.

மனிதனான பின் இதுதான் விநாயகர் தத்துவத்தில் முழு முதல் கடவுள். ஆகவே தீமைகளை அகற்றிடும் உணர்வுகளை விளைய வைத்துத் தீமைகள் அகன்றிட வேண்டும் என்று கூட்டுத் தியானங்கள் இருந்து இந்த உணர்வுகளைப் பரவச் செய்தோம் என்றால் “தீமைகளிலிருந்து விடுபடும் மக்களும்… அதிகரிப்பார்கள்…!”

இவ்வாறு இதைப் போன்ற உணர்வின் தன்மை விளையப்படும் பொழுது நினைவுகள் அங்கே பயன்படுத்தக் கூடிய நிலைகள் இருக்கும். இதை நீ செய்…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதைத்தான் யாம் இப்பொழுது செய்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெறவேண்டும் என்று அந்த அருள் உணர்வை நுகர்ந்தால் தீய வினைகளை மாற்றும் திறன் நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்கள்.

ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி…!

om-shanti-brahma

ஒரு நிமிடத்திற்குள் உங்களுக்குள் ஆற்றல்மிக்க நல்ல சக்திகளைப் பெறச் செய்யும் பயிற்சி…!

பசிக்கு உண்ணுகின்றோம். அதற்குகந்த “காலம் வரட்டும்” என்று பசித்திருப்பவர் காத்திருப்பதில்லை.

அதே போல் எந்தச் செயல் செய்பவராக இருந்தாலும் எந்தச் சூழ்நிலையில் சிக்குண்டிருந்தாலும் உடலில் இயற்கையாக வெளிப்படும் கழிவை வெளியேற்றக் “காலம் வரட்டும்” என்று பொறுத்திருக்க முடிகின்றதா…? இல்லை…!

இப்படி உடலுக்காக உண்டு கழித்து வாழும் நாம் இந்த உடலுக்குப் பின் அடைய வேண்டிய நிலையை அந்த உயர் ஞானத்தைப் பெறுவதற்காக மட்டும் கால நிலையையும் வயது வரம்பையும் நீட்டிக் கொண்டே வருகின்றோம்.

கடைசியிலே பெறாமலே மீண்டும் வேதனைப்பட்டே வாழும் இன்னொரு உடலுக்குள் தான் போகின்றோம். பேரின்பப் பெரு வாழ்வு எனும் அழியாத நிலையாகப் பிறவியில்லா நிலை அடைவதில்லை.

அந்த நிலையைச் சாதாரணமாகவே பெறுவதற்காகத்தான் உங்கள் எண்ன நிலையைச் சீராக்கி
1.இந்த வாழ்க்கையில் வாழும் காலத்தில்
2.அவ்வப்பொழுது மோதும் ஒவ்வொரு எண்ணத்திலும் ஒவ்வொரு உணர்விலும்
3.மகரிஷிகளின் அருள் உணர்வைச் சேர்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்…! உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்…! என்று சொல்லிக் கொண்டே வருகிறோம்.

ஒரு நிமிடத்திற்குள்ளேயே இந்தச் சக்தியை எடுத்துக் கொள்ளலாம். அமைதியான இடமோ பூஜை அறையோ ஒன்றும் தேவையில்லை.

நீங்கள் எந்த இடத்தில் எந்த நிலையில் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும்
1.புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணுங்கள்
2.பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே நினைவைச் செலுத்துங்கள்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் தலையிலிருந்து கால் வரை நினைவைச் செலுத்துங்கள்.
5.சர்குலேசன் (CIRCULATION) மாதிரி திரும்பத் திரும்ப இதைச் செய்யுங்கள்.
6.ஒரு நிமிடத்திற்குள் எத்தனையோ தடவை இந்த மாதிரிச் செய்து ஆன்மாவையும் மனதையும் உடலையும் தூய்மைபடுத்த முடியும்.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டாலே போதுமானது. உங்களுக்கு வேண்டிய மன பலம் கிடைக்கும் மன அமைதி கிடைக்கும். மகிழ்ச்சி தன்னாலே வரும்.

பிறகு பசி வந்ததும் உணவை உட்கொள்வது போல் துன்பமோ துயரமோ கஷ்டமோ தீமைகளோ மற்ற எது வந்தாலும் உடனடியாக நீங்கள் எடுத்துப் பழக்கப்படுத்திய துருவ நட்சத்திரத்தின் நினைவுகள் முன்னாடி வந்து நிற்கும்.

அந்தச் சக்தியை அதிகமாகக் கவரச் செய்யும். உயர் ஞானம் உங்களுக்குள் விளையத் தொடங்கும். நீங்கள் அதுவாக மாறுவீர்கள். உடலுக்குப் பின் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாவது நிச்சயம்.

வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தியானம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சி முறைகள்

Soul serene cleaning

வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தியானம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற பயிற்சி முறைகள் 

சாதாரணமாக ஒரு நண்பன் உங்களிடம் துன்பம் என்று சொல்லும் போது கேட்டுணர்ந்து நுகர்ந்து அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் சேராவண்ணம் தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

உதாரணமாக
1.இரும்புக்குள் இருக்கும் வலுவான சத்தை இழக்கச் செய்யாமல்
2.அதைப் புடம் போட்டுப் பஸ்பமாக்கி
3.அதை ஆற்றல்மிக்க ஆக்கச் சக்தியாக மாற்றிப் பயன்படுத்துகின்றோம்.

அதைப் போல உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டறிந்த அந்தத் துன்ப உணர்வுகள் உங்களுக்குள் தீய விளைவுகள் உருவாக்காதபடி மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த மாமகரிஷிகள் தங்கள் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி விஷமான சக்திகளைப் புடமிட்டு அந்த உணர்வின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள். நமக்கு முன்னாடி இருக்கின்றது.

அந்த உணர்வுகளை உங்கள் உடலுக்குள் சேர்த்தவுடனே புடம் போட்டு எடுத்தது போன்றே உங்களையும் உங்கள் ஆன்மாவையும் பரிசுத்தப்படுத்துகின்றது.

ஒரு ஆன்டென்னாவைச் சரியான முறையில் வைத்தபின் வெகு தொலைவில் இருந்து வரும் டி.வி. அலைகளையும் மற்ற அதைப் போன்ற அலைகளையும் அது கவர்ந்து தெளிவாக உணர்த்துகின்றது. அதைப் போல
1.உங்கள் நினைவாற்றல் அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கும் போதெல்லாம்
2.அந்த அருள் சக்தியை நீங்கள் கவர்ந்து
3.அந்த நன்மையின் சக்தியை என்றும் நிலைத்திருக்கச் செய்ய முடியும்.

நாம் கெட்டதைக் கேட்டாலும் கெட்டதைப் பார்த்தாலும் கெட்டதை எண்ணினாலும் கெட்டதைப் பேசி விட்டாலும் அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஒரு நிமிடம் தியானியுங்கள்.
2.பின் மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்களை மூடி ஒரு நிமிடம் தியானியுங்கள்.
3.கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி கவர்ந்த அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்.
4.இப்படித் திரும்பத் திரும்பச் செய்தால் இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி.

(1) வெளியில் செல்லும் பொழுது:-
நீங்கள் வீட்டை விட்டுச் செல்லும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து விட்டு வெளியிலே செல்லுங்கள். எந்த காரியத்திற்காக யாரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்கிறீர்களோ அவரை எண்ணி
1.எங்கள் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும்.
2.எங்கள் சொல் இனிமை பெற வேண்டும்.
3.எங்களைப் பார்க்கும் போது அவர் நல்லது செய்து தரக்கூடிய எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
4.இப்படி எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

(2) கடைக்கு வியாபாரத்திற்குச் செல்லும் பொழுது:-
நீங்கள் கடையில் வியாபாரத்திற்குப் போகும் முன் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் உடல்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

கடைக்குப் போனபின் இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்கள் கடையில் உள்ள சரக்குகள் அனைத்தையும் பார்த்து இதைப் பயன்படுத்துவோர் அனைவரும்
1.மகரிஷியின் அருள் சக்தியால் அவர்கள் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும்.
2.அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு வியாபாரத்தைத் தொடங்குங்கள்.

(3) தொழிலுக்குச் செல்லும் பொழுது:-
தொழிலுக்குப் போனாலும் ஆத்ம சுத்தி செய்து விட்டுப் புறப்படுங்கள். அங்கே அமர்ந்து தொழில் செய்யப் போகும் போது ஆத்ம சுத்தி செய்து விட்டு உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை எண்ணி
1.அவர்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்.
2.என் பார்வையால் அவர்கள் மன பலமும் உடல் நலமும் பெற வேண்டும்.
3.தொழிலைத் திறம்படச் செய்யும் சக்தியாக எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்.
4.எங்கள் சொல் அவர்களை இனிமை பெறச் செய்ய வேண்டும்.
5.எங்கள் செயல் அவர்களைப் புனிதப்படுத்த வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே மாதிரி எங்கள் பார்வை மேலதிகாரிக்கு நல்லதாக இருக்க வேண்டும். எங்கள் செயல் அவர் போற்றும் நிலைக்கு வர வேண்டும். எங்கள் சொல் அவருக்கு இனிமையாக இருக்க வேண்டும். அவர்கள் எங்களைப் பார்க்கும் போது நல்ல செயல்கள் செய்து தரும் நிலைகள் வர வேண்டும் என்று எண்ணுங்கள்.

நாங்கள் உற்பத்தி செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இதை மாதிரி எண்ணிவிட்டுத் தொழில் செய்யுங்கள்.

(4) நோயாளிகளைப் பார்க்கும் பொழுது:-
நோயாளிகளைப் பார்த்தால் உடனே அடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்கள் நோய்கள் நீங்கும். நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று இந்த வாக்கைச் சொல்லுங்கள்.

(5) குழந்தைகளுக்கு:-
உங்கள் குழந்தைகளைப் பார்க்கப்படும் போது அவர்கள் மேல் வெறுப்பு வந்தால் ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி குழந்தைகள் பெற வேண்டும். அவர்கள் பெறுவார்கள்.
1.அதன் வழி அவர்கள் எதிர்காலம் சிறந்திருக்கும்.
2.கல்வியில் அவர்கள் உயர்வார்கள்.
3.எங்கள் பார்வை அவர்களை உயர்த்த வேண்டும் என்று இப்படி உங்கள் குழந்தைகளை எண்ணிச் செயல்படுத்துங்கள்.

அந்த உணர்வுடன் குழந்தைகளுடன் பேச முற்படுங்கள். நல்லதாகும்.

(6) சமையல் செய்யும்போது… பரிமாறும்போது… சாப்பிடும் பொழுது:-
பெண்கள் சமையல் செய்யும் போதெல்லாம் ஆத்ம சுத்தி செய்து விட்டுத் தொடங்குங்கள். நாங்கள் சமைக்கும் இந்த ஆகாரத்தைச் சாப்பிடும் அனைவரும் உடல் நலமும் மன பலமும் பெற வேண்டும் என்று எண்ணிச் சமையல் செய்யுங்கள்.

ஆகாரம் பரிமாறும் போதும் நாங்கள் பரிமாறும் இந்த ஆகாரத்தை உட்கொள்ளும் அனைவருக்கும் மன வளம் உடல் நலம் கிடைக்க வேண்டும் என்று எண்ணி விட்டுப் பரிமாறுங்கள்.

சாப்பிடும் போதும் ஆத்ம சுத்தி செய்து விட்டு
1.நாங்கள் சாப்பிடும் ஆகாரத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர்ந்து
2.அது எங்கள் உடலில் நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும் என்ற எண்ணத்துடன் சாப்பிடுங்கள்.

(7) இரவிலே படுக்கும்போது:-
இரவிலே படுக்கப்போகும் போது இதே மாதிரி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். எதையெல்லாம் நல்லவைகளாக நிறைவேற வேண்டும் என்று எண்ணினீர்களோ
1.உங்கள் உணர்வின் ஓட்டம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
2.அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்

சப்தரிஷிகளின் அருள் ஒளி எங்கள் ஈர்ப்பு வட்டத்திற்குள் இருக்க வேண்டும். அந்த உணர்வின் சக்தி எங்களுக்குள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடனே படுங்கள். ஆனந்தமான தூக்கமாக அமையும். காலையில் எழும் பொழுதும் அந்த ஆனந்தம் இருக்கும்.

(8) காலையில் எழும் பொழுது:-
காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். எங்கள் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும். எங்கள் சொல்லைக் கேட்போர் அனைவரும் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்கள் பேச்சைக் கேட்போர் உணர்வுகளில் மெய் ஒளியாகப் படர வேண்டும். நாங்கள் பார்ப்போர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணி எழுந்து கொள்ளுங்கள்.

(9) வர வேண்டிய பாக்கிப் பணம் திரும்ப வருவதற்கு:-
உங்களிடம் வாங்கிச் சென்றவர் ஒருவர் பாக்கி பணத்தைக் கொடுக்கவில்லை என்றால் உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.
1.பின் அவர்கள் வியாபாரம் செழித்து வர வேண்டும்.
2.அவர்களுக்கு வருமானம் வர வேண்டும்.
3.எங்கள் பணத்தைச் சீக்கிரம் திருப்பித் தரும் சக்தி அவர் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இந்த உணர்வுகள் இயக்கப்பட்டு பணம் சீக்கிரமே வந்து சேரும். வராது என்று எண்ணியிருந்தால் கூட வந்து சேரும். அனுபவத்தில் பார்க்கலாம்.

(10) ஒருவர் மேல் உள்ள வெறுப்பை அகற்ற:-
ஒருவரை நாம் எண்ணும் போது கோபமோ வெறுப்போ வந்தால் அந்த வெறுப்பான உணர்வுகள் நமக்குள் வராது தடுக்க ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

யார் உங்கள் மேல் வெறுப்பு வருகின்றதோ எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும். அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். வெறுப்பு மாறி ஒன்றி வாழும் இயக்கமாக மாறும்.

(11) நோயை நீக்குவதற்கு:-
உங்கள் உடலிலே எத்தகைய நோய் இருந்தாலும் அந்த நோயைப் பற்றிய வேதனைகளை சஞ்சலங்களை மறந்திடுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலிலே படர்ந்து நோய்கள் நீங்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்களுக்குள் என்றும் நிலைத்திருக்க வேண்டும். எங்கள் நோய்கள் அனைத்தும் பறந்திட வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.அது எந்த நோயாக இருந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று
2.உடலுக்குள் அங்கங்கே கண்ணின் நினைவைச் செலுத்தி
3.நோய் நீங்க வேண்டும். நீங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து அது நலம் பெறும் சக்தியாக வளர்கின்றது. நாங்கள் நலம் பெற்று வருகின்றோம்.
1.மகரிஷிகளின் அருள்வட்டத்தில் எங்கள் எண்ணங்கள் சுழல்கின்றது.
2.எங்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெறுவோம்…! மகிழ்ச்சி பெறுவோம்…! என்ற எண்ணங்களை அடிக்கடி எண்ணிப் பாருங்கள்.

(12) வெளியிலிருந்து மீண்டும் வீட்டுக்குள் வரும் பொழுது
நாம் வெளியிலே எங்கே சுற்றி விட்டுக்கு வரும் பொழுது எத்தனையோ எண்ணங்கள் கொண்டு தான் வருகின்றோம். வீட்டிற்கு வந்த பின் இதைப் போல ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் வீட்டிலே படர வேண்டும். எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும்.
1.குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் சக்திகள் படர வேண்டும்.
2.வீட்டுக்கு வருகின்றவர்கள் எல்லாம் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு
3.அதற்கப்புறம் மற்ற விஷயங்களைப் பேசுங்கள்.

இதைப் போல அடிக்கடி ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் வட்டத்திலேயே சுழலச் செய்யுங்கள்.

நீங்கள் எண்ணிக் கொடுப்பதை எல்லாவற்றையுமே உங்கள் உயிர் படைக்கின்றது… இயக்குகின்றது… உடலாக்குகின்றது…. விளைய வைக்கின்றது…! அந்த உணர்வைத்தான் தனக்குள் (உயிராத்மாவாக) இணைத்துக் கொள்கின்றது.

1.இந்த உடலை விட்டு நாம் எப்போது போவோம்…?
2.அது எந்த நேரம் என்று அது எப்படி…? என்று தெரியாது.

ஆனால் நாம் இந்த உடலில் இருக்கும் போதே அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டே வந்தால் எந்த நேரத்தில் இந்த. உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தாலும் அந்த நினைவுடன் நாம் அங்கே செல்கின்றோம். இது நிச்சயம்…!

ஒளிச் சரீரமாக நம்மை அங்கே நிலைக்கச் செய்கின்றது. இந்த நிலைகள் பெற வேண்டும் என்று ஏங்கி இதைப் போல நீங்கள் எண்ணிச் செயல்படுத்துங்கள்.