மகரிஷிகள் சுவாசிக்கும் விண்ணின் ஆற்றலை நாமும் விண்ணிலிருந்தே சுவாசிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகள் சுவாசிக்கும் விண்ணின் ஆற்றலை நாமும் விண்ணிலிருந்தே சுவாசிக்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.

அது எந்த நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்துப் பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அதிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் நிலையைத் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம்.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அதிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.அதை எவ்வளவு உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி…? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் அழிக்கும் தன்மை என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சித்தர்களால் மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலக்கும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் அதிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்… உந்தல்கள்…!
2.தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவர்கள் பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி நான் என்றால் என்ன…? என்பதை அன்றே உணர்ந்தார்கள். பின் வரும் மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.

அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்… வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் உடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமிக்க வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்துப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அதே போல் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்கள் கைலாசமோ வைகுண்டமோ சொர்க்கமோ அடைவதில்லை – ஈஸ்வரபட்டர்

உடலை விட்டுப் பிரிந்து செல்பவர்கள் கைலாசமோ வைகுண்டமோ சொர்க்கமோ அடைவதில்லை – ஈஸ்வரபட்டர்

 

மனிதர்கள் பிறந்து வளர்ந்து இந்த உலக வாழ்க்கையை விட்டு அந்தந்த உடலிலிருந்து ஆத்மா பிரிந்து சென்ற பிறகு
1.அந்த ஆத்மாக்கள் எந்த நிலையில் இருக்கின்றன…?
2.அவ்வாத்மாக்களின் நிலை என்ன..? என்ற உண்மை நிலையை
3.ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும்…! என்பதன் பொருளில் தான்
4.ஆத்மாவிற்கு முதலிடம் தந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றவுடன் பரலோகத்திற்குச் செல்கிறது…! என்கிறார்கள். இப்பரந்த உலகிலே அந்த ஆத்மாக்கள் அபிலாஷையுடன் (ஆசாபாசத்துடன்) சென்றிருந்தால் பரந்த உலகில் சுற்றிக் கொண்டிருப்பதில்லை.

தன் ஆத்ம நிலை கொண்டு எந்த இடத்தில் அதன் ஆன்மா பிரிந்ததோ அந்த நிலையிலேயே
1.அந்த ஆத்மா பிரிந்து செல்வதற்கு முதலில் இருந்த உடல்
2.எந்த இடத்தில் எந்த நிலையில் வாழ்ந்ததோ அங்கேயே தான் சுற்றிக் கொண்டுள்ளது.

அதனுடைய ஆசைகளும் அதனுடைய எண்ணங்களும் செயல்படும் வரை அதற்குக் கால நிலைகள் இல்லை.
1.எவ்வளவு காலம் வேண்டுமாகிலும்
2.அதன் ஆசை முடியும் வரை
3.அங்கே தான் சுற்றிக் கொண்டு தான் இருக்கும்.

அந்த ஆத்மாவின் உருவம் என்பது அவ்வாத்ம ஜோதியின் நிலை அதாவது உருவமில்லாத அந்த உயிராத்மா எப்படி இருக்கும்…?

அது சிறிய அணுவாகத்தான் உள்ளது. அவ்வாத்மாவைச் சுற்றி அது வாழ்ந்த நாட்களில் அதன் சுவாச நிலையைக் கொண்டு அவை பேசிய பேச்சுக்களும் விட்ட சுவாச நிலையும் அதே நிலையில் தான் சுற்றிக் கொண்டேயுள்ளது.

இந்த உலகினிலே “பல கோடி ஆத்மாக்கள்” காற்றிலே பரந்து பரவியுள்ளன. ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு நிலை கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய உலகில் வாழ்ந்திடும் மக்களில் நம் (உடலுடன் உள்ளவர்கள்) ஒவ்வொருவரின் சுவாச நிலை எப்படி உள்ளதோ அந்நிலைக்கு ஏற்ப
1.நாம் விடும் சுவாச நிலை கொண்டு
2.நாம் விடும் சுவாச நிலை என்று சொல்லும் பொழுது கோபம் மகிழ்ச்சி சாந்தம் இப்படிப் பல உணர்ச்சிகள் நமக்கு வரும் பொழுது
3.அத்தகைய உணர்ச்சிகளுக்கும் உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாவின் ஆசைக்கும் ஒத்த நிலை வரும் பொழுது
4.மனிதர்கள் (நம்) உடலில் அந்த உயிராத்மாக்கள் புகுந்து தன் எண்ணத்தையும் தன் ஆசைகளையும் செயல்படுத்திக் கொள்கிறது.

ஆனால் அதே சமயம் உள்ளே புகும் உயிரான்மாக்கள் வெளியேறும் வழியே இல்லை. புகுந்த உடலை விட்டு எப்பொழுது அந்த உடலுக்குச் சொந்தமான உயிரான்மா பிரிகிறதோ அன்று தான் அந்த உடலில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் வெளியே வர முடியும்.

ஆகவே அந்த உயிரான்மாக்களின் செயல்களிலிருந்து தப்ப வேண்டும் என்றால்
1.தியான நிலை மிகவும் முக்கியமான ஒன்றப்பா…!
2.அதைத் தவிர வேறு வழி இல்லை.

பிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்

பிறந்த குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தை ஜாதகக்காரர்களால் சொல்ல முடியாது – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் இன்றைய நாள் வரை பல உண்மைகளை அறிந்து கொள்ள நாம் எல்லோருமே ஆர்வம் கொண்டுள்ளோம்.

1.பிற்கால வாழ்க்கையை எண்ணி
2.இனி நடக்கப் போகும் நிலை என்ன…? என்பதை அறிய எல்லோரும் விரும்புகின்றோம்.

இருந்தாலும் நம்முள் உள்ள பரமாத்மாவை மறந்து விட்டு “பரலோகத்திலுள்ள பரமாத்மா…!” என்று வேண்டி ஜாதகங்கள்… ஏட்டுச் சுவடிகள்.. என்று இப்படிப் பல வழிகளில் ஆரூடம் பார்த்து “அறிதல்” என்றெல்லாம் நம் காலத்தைச் சிதறவிட்டு விடுகின்றோம்.

சூரியனின் சக்தியிலிருந்து அந்தச் சூரியனைச் சுற்றியுள்ள பல மண்டலங்களின் நிலையை வைத்து அம்மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியனில் பட்டுச் சூரியனிலிருந்து நம் பூமிக்கு வந்திடும் ஒளியின் தன்மையை வைத்துப் பல நிலைகள் நடக்கின்றன.

அந்தச் சூரிய சக்தியின் பிம்பத்தில் பல மண்டலங்களின் ஒளி பட்டு “அது பூமிக்குக் கிடைக்கும் நேரத்தைத்தான்” அன்றைய சித்தர்கள் ஜாதகங்கள் என்ற நிலையில் கண்டனர்.

1.சந்திரனின் பார்வை… சூரியனின் பார்வை… என்றும்
2.கேது… இராகு… என்ற ஒவ்வொரு மண்டலங்களின் ஒளிக் கதிர்கள் சூரியன் மேல் படும் பொழுதும்
3.அந்த ஒளிக் கதிரின் தன்மை பூமியின் மேல் படும் காலத்தை வைத்துத்தான் சித்தர்கள் ஜாதகம் கணித்தார்கள்.

ஜென்ம நட்சத்திரம் என்கிறார்கள். எந்தக் குழந்தைக்கும் ஜென்ம நட்சத்திரத்தை இன்றைய ஜாதகக்காரர்களால் அறிய முடியாது. குழந்தை பிறந்த நேரத்தை வைத்து ஜென்ம நட்சத்திரம் குறிக்கின்றார்கள்.

அதுவல்ல ஜென்ம நட்சத்திரம்…!

1.அது தன் தாயின் வயிற்றில் “என்று உதயம் பெற்றதோ…” அந்த நேரம் தான் அதற்கு ஜென்ம நட்சத்திரம்.
2.அந்த நிலையைக் கணித்திட இன்றைய ஜாதகக்காரர்களால் முடியாது.

இராமர் இராம நவமி அன்று பிறந்தார்… என்றும் முருகன் பிறந்த நாளை வைகாசி விசாகம்…! என்றும் கணிக்கின்றார்கள் பாட நிலைப்படித்தான்…!

இராமர்… கிருஷ்ணர்… முருகன்… எல்லாம் பிறவி எடுக்கவில்லை. அவர்களின் குணாதிசயங்களை வைத்துத்தான் நம் சித்தர்கள் அவர்களுக்கு நாமங்கள் இட்டார்கள்.

அப்படி இருக்கும் பொழுது இராமர் பிறந்த நேரத்தையும் முருகன் பிறந்த நேரத்தையும் எப்படிக் கொண்டாடுகின்றார்கள்…? என்று நீங்கள் நினைக்கலாம்.

அன்றையச் சித்தர்கள் மற்ற மண்டலங்களின் ஒளிக்கதிர்கள் சூரியனில் பட்டு பூமியைத் தாக்கும் பொழுது…
1.என்றென்று அந்த நல்ல நிலை பெறும் நாளோ அந்த நாட்களின் குணா அம்சங்களை வைத்து
2.அந்த நாட்களை அந்த ஒளியிலிருந்து வரும் சக்தியின் நிலை கொண்டு
3.முருகருக்கும் இராமருக்கும் பிறந்த நாட்கள் என்று கணித்தார்கள்.

கணித்தார்கள் என்றால் அந்த நிலை பெறும் நேரத்தை நல்ல நேரமாக ஏற்று அந்த நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் உகந்த நாள்…! என்று மக்களுக்கு ஏற்றுக் கொள்ளப் பல வழிகளைச் சொல்லிச் சென்றார்கள்.

ஆனால் அந்த உண்மைகளை எல்லாம் காலப்போக்கிலே சிதறடித்து விட்டார்கள்.

மற்ற மண்டலங்களின் ஒளி சூரியனில் எப்பொழுது கிடைக்கப் பெறுகிறது…? மற்ற மண்டலங்களில் உள்ள சக்தி சூரியன் மேல் பட்டு அதன் பின் அச்சூரியன் நமக்கு அளிக்கின்றது.

சந்திரனில் ஒளிக் கதிர்கள் இல்லா விட்டால் “இன்றைய வண்ணங்கள்… சுவைகள்…” இவை எவையுமே நாம் பெற்றிருக்க முடிந்திடாது.

அதைப் போல் தான் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் நமக்குப் பலவித இயற்கைத் தன்மை வாய்ந்த சக்தியெல்லாம் கிடைக்கின்றது.

பெரும் பேறு வாய்ந்த சக்தியுள்ள பூமியப்பா…! இன்று நாம் வாழ்ந்திடும் பூமி. இந்தப் பூமித் தாயின் உயிரோட்ட உண்மைகளை உணர்ந்து கொண்டு உலகினிலே உதித்த நாம் எல்லோருமே உண்மையுடன்… “உன்னதமாக வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

ஒவ்வொருவரும் அவரவர்கள் கடந்த காலத்தை எண்ணிக் கலங்கிடாமல் நம்முள் உள்ள பரமாத்மாவின் நிலையை அறிந்து வாழ்ந்திடுங்கள்.

1.தவறின் நிலையை எல்லாம் மறந்துவிட்டு
2.இனி தவறில்லாத வாழ்க்கையை வாழ்ந்து
3.பிறந்த பயனை இக்கலியின் கடைசியில் கல்கியில் ஒவ்வொருவரும் ஒளி நிலை அடையத்தான் இதை உணர்த்துகின்றேன்.
4.என்னுடைய (ஈஸ்வரபட்டன்) ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்

அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான் ஆண்டவனின் சக்தி செயல்படுகிறது – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய உலகில் உள்ள பெரும்பகுதியானோர் தன் உயிரின் உண்மை நிலையையும்… கடவுளின் நிலையையும்… தான் வாழும் வாழ்க்கை நிலையையும்… புரியாத நிலையில் தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஈஸ்வர சக்தி பெற்ற… பிறப்பிலிருந்து நல்லவர்… கெட்டவர்… என்ற பாகுபாடு இல்லாமல் அச்சக்தியில் இருந்து அவர்களுக்கு அளித்த மாபெரும் சந்தர்ப்பத்தை “நலமாக வாழ்ந்திடத்தான்” ஒவ்வொருவரும் பிறக்கின்றார்கள்.

பிறவி எடுத்த நிலையில் அவரவர்கள் வளர்ந்த நிலை… மண் வாக்கு… மன நிலை… சுவாச நிலையைக் கொண்டு வாழும் பொழுது “தன் சுவாச நிலையிலே தான்” அவர்களுடைய நிலை எல்லாமே நடக்கின்றன.

1.இன்றைய காலத்தில் மக்கள் ஆண்டவனை வணங்குவது என்பதே
2.தன் கஷ்டங்களுக்கு மீட்கும் வழியை வகுத்துத் தரத்தான் பல கோவில்களுக்குச் சென்று வணங்குகிறார்கள்.
3.பல காணிக்கைகளைக் கட்டி பல வேண்டுதல்களையும் செய்து
4.ஆண்டவனையும் இவர்கள் செய்யும் வியாபாரத்தில் பாகஸ்தனாக்கி
5.இவர்கள் செய்யும் பாவத்திற்கும் ஆண்டவனின் பெயரை உபயோகித்துக் கொள்கிறார்கள்.

நான் அள்ளி அள்ளி ஆண்டவனுக்கு அளித்தேன்… எல்லா ஆண்டவனுக்கும் பல நிலையில் பூஜை செய்கிறேன்… அந்த ஆண்டவனுக்குக் கண்ணில்லையா…? என்றெல்லாம்
1.இவர்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது
2.அந்த ஆண்டவனையே எதிரியாகவும் ஆக்கிவிடுகின்றார்கள்.

இவர்கள் எண்ணி ஏங்கும் பொருள் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் எந்தக் கோவிலுக்காவது சென்று வந்தால் அந்த நிலையிலிருந்து பொருள் வந்தவுடன் ஆண்டவனை… “எல்லாம் அவன் தான்…!” என்கிறார்கள்.

(ஆனால்) இவர்கள் மன நிலையில் இருந்து தான் அவ்வாண்டவனின் சக்தியே செயல்படுகிறது.

அந்தச் சூரிய சக்தியிலிருந்து இவர்கள் ஈர்க்கும் நிலையிலிருந்து தான் அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை இதைப் படிக்கும் அனைவரும் உணர்ந்து
1.அவரவர்கள் எண்ணத்திலிருந்து தான்…
2.அவ்வாண்டவனின் சக்தி செயல்படுகிறது என்ற உண்மையை உணருங்கள்.

நம் சித்தர்கள் பல வழிகளில் பல உண்மைகளைச் செய்யுள்களின் (பாடல்கள்) வடிவில் மனிதர்களின் எண்ணத்திற்குப் பதியும்படி முதலிலேயே வெளியிட்டுள்ளார்கள்.

ஆட்டை வெட்டுபவனுக்கு… ஒவ்வொரு நாளும் பல ஆடுகளை அடித்து வியாபார நிலைக்கு அவன் அதை விற்கிறான். ஆட்டை வெட்டுபவனுக்குத் தான் பாவம்… உண்ணுபவனுக்கு அல்ல…! என்று எண்ணுகின்றோம்.

அவன் எதற்காக ஆட்டை அடிக்கின்றான்…?

அவன் எண்ணமெல்லாம் அவனுக்கு வேண்டிய பொருள் கிடைத்திடத்தான்…! அதைச் செய்கிறான். பாவ புண்ணியத்தை அவன் எண்ணத்தில் கொண்டு வருவதில்லை.

பாவ புண்ணியத்தை அவன் எண்ணி விட்டால் அவன் எண்ணத்திலேயே அது ஊன்றி.. அவன் அந்தத் தொழிலை ஒரு நாளும் செய்திட முடியாது.

பல தண்டனைகள் பெற்ற கைதிகளை ஒருவன் தூக்கிலிடுகின்றான். ஒரே நாளில் அவன் பலரைத் தூக்கிலிட்டாலும்.. அவனுக்கு அந்தப் பாவம் அண்டுவதில்லை.

அவன் பொருள் வாங்க அந்தப் பணியைச் செய்கிறான். தன் மேல் தவறை எண்ணும் பொழுது தான் அவனுக்கு அந்நிலை தோன்றிடும். அவன் தொழில் அது தான்; அவன் ஊதியத்தைப் பெறுகின்றான்; அவன் எண்ணமெல்லாம் அந்த ஊதியத்தின் மேல் தான் உள்ளது.

அவன் ஆத்மாவில் அவன் நல்ல நிலைகள் பெற்றிருந்தால் அவனை எந்தப் பாவ புண்ணியங்களும் அண்டுவதில்லை. அவன் நிலையும் உயர்ந்து நிற்கிறது.

1.பல பாவங்கள் செய்துவிட்டு
2.செய்த பாவங்களைத் தன் எண்ணத்திலேயே கலக்கவிட்டு
3.தன் சுவாச நிலையை மேலும் கடினமாக்கிக் கொண்டு
4.பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் இன்றைய மனிதர்கள்.

இந்நிலையிலிருந்தெல்லாம் விடுபட்டு நம் உயிரணுவிற்கு ஊட்டம் தந்து அவ்வுயிரணுவிற்கு அழியாச் செல்வத்தைத் தேடத்தான் இந்தப் பாட நிலையை எடுத்து இயம்புகிறோம்.

1.உயிரணுவின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்
2.இனி வாழும் நாட்களை நல்ல நிலையில் வாழ்ந்திடுங்கள் என்பதற்கே இதை வெளியிடுகின்றோம்,

வேதனைப்பட்டே வாழ்வது நல்லதா… அல்லது அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி வாழ்வது நல்லதா…? – ஈஸ்வரபட்டர்

வேதனைப்பட்டே வாழ்வது நல்லதா… அல்லது அதிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணி வாழ்வது நல்லதா…? – ஈஸ்வரபட்டர்

 

எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் “உயர்வு… தாழ்வு…” என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அழியாச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்து விட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அதையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்த நிலையில் நம் உயிரணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். அதையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு… இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இதையெல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெற ஈஸ்வர தியானங்கள் பெற்று அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைக்க வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…!

ஒரே எண்ணத்தில் இருப்பதும்… தன்னை மறந்து இருப்பதும் தான் தியானம்…! என்று எண்ணுகின்றனர் – ஈஸ்வரபட்டர்

ஒரே எண்ணத்தில் இருப்பதும்… தன்னை மறந்து இருப்பதும் தான் தியானம்…! என்று எண்ணுகின்றனர் – ஈஸ்வரபட்டர்

 

தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகளைச் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது – நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..! அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.

ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும். எண்ண அலைகள் மற்ற அணுக்களுடைய நிலைகள் உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது. நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.

அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது. அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.

அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகள் நம் உயிரணுவிற்கு உயிருக்கு ஊட்டமாகக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும் உங்கள் ஜெபத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கவலையிலிருந்து மீள வேண்டும் என்பது போல் அதி சந்தோஷத்திலிருந்தும் மீள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

கவலையிலிருந்து மீள வேண்டும் என்பது போல் அதி சந்தோஷத்திலிருந்தும் மீள வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளையும் பாவங்களையும் நடைமுறையில் நாம் எல்லோருமே செய்கின்றோம்.
1.அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு
2.“தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் உயிரான ஈஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு… நம் ஆத்மாவிற்கு… இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்கின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிவிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து…!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!

கதைகளிலும் காவியங்களிலும் வடித்த உருவம் தான் கடவுள்..! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்

கதைகளிலும் காவியங்களிலும் வடித்த உருவம் தான் கடவுள்..! என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் – ஈஸ்வரபட்டர்

 

இன்றைய மக்களுக்கு… நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட… புரியாத நிலைகளில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.

ஆதியில் இருந்து…
1.இம் மனித ஆரம்ப காலத்திலிருந்தே… உதயத்திலிருந்தே வந்த பல சித்தர்கள் கொடுத்த உண்மை நிலைகளை எல்லாம்
2.அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டுவிட்டார்கள்.

பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகில் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிட்டதை
1.அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படியாக வெளியிட்டதை
2.காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்ற ஒன்றே தான்.

அதை வைத்துத்தான் பலர் பல வழிகளில் பல கதைகளைக் கட்டி… உண்மை இரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்து
1.கதையையே கடவுளாகக் காட்டி…
2.மக்களுக்குக் கடவுள் என்றாலே “கதையில் வடித்த உருவம் தான்…!” என்ற எண்ணம் வரும்படிச் செய்துவிட்டார்கள்.

எல்லா மக்களுமே தான் உயர வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். ஆனாலும் அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில் தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.

நல்வழியில் நடத்திச் சென்றிடத்தான் அன்றையச் சித்தர்கள் பல அரும்பாடுபட்டுத் தவமிருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இராமாவதாரத்தில் வந்த வான்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணக் காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

அதில் உள்ள குணா அம்சங்களை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படிக் குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
1.அந்தக் கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
2.இது தான் உண்மை… இது எல்லாம் தவறு…! என்று சுட்டிக் காட்டும் நிலையில் அன்றே சிலர் திருத்திவிட்டார்கள்.

அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது.

இராமாயணத்தின் மகத்துவத்தை அதிலுள்ள உண்மை நிலைகளை உலகிலுள்ள மக்கள் எல்லோரும் புரிந்து கொண்டால் இன்று உலகில் நடந்திடும் இக்குழப்ப நிலைகளும்… மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா…!

எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் பல நல்ல நிலைகளை எல்லாம் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்திற்கு உகந்தபடி சிதறடித்து விட்டார்கள்.

1.ஒருவனே தேவன் ஒன்றே குலம்…
2.அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான்… நாம் எல்லோருமே…
3.எந்த மதத்திற்கும் யாரும் அடிமையில்லை…! என்ற சொல்லெல்லாம் இந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.

ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் அது எல்லாம் இப்பொழுது உகந்ததாக உள்ளது.

ஆண்டவனையே… “தனக்கு மட்டும் தான் சொந்தம்…!” என்ற எண்ணத்தில் கோவில்களுக்குச் செல்பவர் தான் பலர் உள்ளனர் இன்றும்.

ஆயுளை நிர்ணையிப்பது யார்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஆயுளை நிர்ணையிப்பது யார்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.எந்த ஆண்டவனும்… எந்தக் கடவுளும்… நம் ஆயுளை நிர்ணயிக்கவில்லை.
2.அவனவன் எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…!

அவனவன் சுவாச நிலையைக் கொண்டு அவனவனுக்கு வரும் வியாதிக்கும் பிணிக்கும் வித்திட்டவன் ஆண்டவனா…?

இவன் உண்ணும் உணவிலும் சுவாச நிலையிலும் உடல் என்னும் கூட்டிற்கு “இவனே தேடிக் கொள்கின்றான் பல வினைகளை…!”

இவன் உடலில் வரும் வியாதியில் இவன் உடல் படும் அல்லலைக் கண்டு இந்த உடலிலிருந்து பிரிந்து செல்கிறது அந்த ஆத்மா.

எந்த நிலையிலும் இவன் அந்த ஆத்மாவை ஆண்டவனாக எண்ணி இந்த உடலில் தங்கி இருக்க வேண்டும் என்ற அவா வைத்து “ஆண்டவனே தான் இவ்வாத்மா…!” என்ற எண்ணம் தோன்றி வேண்டிக் கொண்டால் இந்த உடலை விட்டு இவ்வாத்மா எந்தக் காலத்திலும் பிரிந்து செல்லாது.

1.ஆத்மா என்னும் ஜோதி தான் எல்லா உயிரினத்திலும் உள்ளதப்பா..!
2.பெரும் சித்தர்களும் ரிஷிகளும் அவர்கள் உடலில் உள்ள ஆத்ம சக்தியைப் புரிந்து கொண்டு தானப்பா
3.அவர்கள் அந்த உன்னத நிலையைப் பெற்றார்கள்.

மனித உடலில் தான் அந்த உன்னத நிலையைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் உள்ளது. மனித உடலை மாற்றிக் கொண்டால் இன்னும் பல கோடி ஆண்டுகளாகுமப்பா அந்த ஆத்மா ஜோதியுடன் ஜோதியாகக் கலப்பதற்கு…!

ஒவ்வொரு மனிதனும் “தன்னுள் ஆண்டவன் இருக்கின்றான்…!” என்ற எண்ணமுடன் வாழ்ந்திட்டால் இன்றையக் கலியில் நடக்கும் கூத்துக்கள் எல்லாம் இருக்காதப்பா…!

ஆண்டவனின் சக்தியைக் கல்லிலும் மண்ணிலும் பார்த்துத்தான் வணங்குகிறார்கள்.
1.இவர்கள் வேண்டுவதெல்லாம்…
2.அக்கல்லின் உருவத்தில் இவர்களுக்கு ஆண்டவன் வந்து அருள் செய்ய வேண்டும்…! என்ற எண்ணம் தான்
3.இன்றும் அப்படித்தான் உள்ளது.

நம் ஆத்மாவில் உள்ள அருளை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமப்பா…! நம் ஆத்மாவின் மூலமாக நாம் ஜெப நிலையில் இருக்கும் பொழுது எல்லா நிலையையும் அறிந்து கொள்ளலாம்.

1.நாம் யார்…?
2.நம் ஆத்மாவின் நிலை என்ன…?
3.நம்முள் இருக்கும் ஈசனின் சக்தி என்ன…? என்ற எல்லா உண்மையுமே அறிந்து கொள்ளலாம்.

நாம் பாவம் செய்து விட்டோம்…! அதனால் நமக்கு இனி இந்த ஜென்மத்தில் என்ன பேறு கிடைக்கப் போகிறது…? என்ற எண்ணம் என்றுமே எண்ணிடலாகாதப்பா…!
1.தவறை எண்ணி வருந்தும் பொழுதே
2.நம் ஆத்மா நம் தவறுக்கு மன்னிப்பு அளிக்கின்றதப்பா…!

நம் ஆத்மாவின் நிலையேதான் ஆண்டவன் என்ற ஒரே எண்ணம் மக்களுக்கு வந்து தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டுமப்பா..! அழியும் யுகத்தில் அழியாச் செல்வம்… ஒரே செல்வம்… இவ்வாத்மா தானப்பா…!

கலியின் கடைசியில் கல்கியின் ஆரம்பமான நாளில் “கடைசிச் சந்தர்ப்பத்தை…” ஒவ்வொரு மனிதனும் பயன்படுத்திக் கொண்டு தன் ஆத்ம ஜோதியை அவ்வாண்டவனுடன் கலக்க விட்டு ஆண்டவனுடன் ஆண்டவனாக அச்சூட்சம உலகத்திற்கு அழைத்துச் செல்லத்தான் இந்தப் பாடங்கள் எல்லாமே…!

இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் இவ்வாத்மா என்னும் ஆண்டவனின் சக்தியைப் புரிந்து கொண்டு
1.ஆத்ம ஜோதியாகக் கலந்திட வேண்டும் என்பது தான்
2.இவ் ஈஸ்வரபட்டனாகிய உங்கள் குருவின் குருநாதனாகிய நான் அளித்திடும் “பொக்கிஷம்…!”