உயிர் ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் ஆக வேண்டும்

உயிர் ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் அந்த உணர்வாக நாம் ஆக வேண்டும்

 

நாம் இந்த உடலில் இருக்கப்படும் பொழுதே மெய் ஒளியினை அந்த மகரிஷிகள் பெற்ற அருள் ஒளிகளைப் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

சாமியிடம் (ஞானகுரு) போனோம்… சாமி கொடுக்கவில்லை…! என்று எண்ணாதீர்கள்.
1.சாமியிடம் போய் அந்த அருள் ஒளியை வளர்ப்போம்.
2.அந்த அருள் ஒளியினுடைய நிலைகளில் ஒளி நிலை பெறுவோம்.
3.நாம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமையின் நிலைகளை நம் மூச்சாலே நம்மை அணுகாது பாதுகாப்போம்.

அந்த மெய் ஒளியின் நிலைகள் பெறப்படும் போது இருள் விலகும்… பொருள் தெரியும். இருள் விலகிப் பொருள் காணும் போது வாழ்க்கையிலும் நீங்கள் பொருள் காணலாம்.

நம் உடலில் எவ்வளவு வேதனைகள் நம்மைத் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதம்.

புலி நம்மைத் தாக்க வரும் போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும் அந்தத் தீய விஷ உணர்வுகளையும்
2.வேதனைப்படச் செய்யும் அந்த உணர்வின் தன்மைகளையும் வேட்டையாடுவதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி.

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மைகளை “மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள்…” அப்போது தான் அடங்கும்.

1.வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு
2.மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

மெய் ஞானிகள் அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அதே போல் அந்தத் தீமையான உணர்வை மாய்க்க அவர்கள் வழியிலே சென்றால்தான் முடியும்.

நிறையப் பேர் சாமியிடம் சென்று வந்தோம்… தலைவலியே இன்னும் போகவில்லை. சாமியிடம் சென்று என்ன கிடைக்கின்றது…? என்று எண்ணுவார்கள்.

அருள் வழியில் நன்றாக ஆகிவிட்டதென்றால் மீண்டும் வருவார்கள். அடுத்த முறை வந்து “சாமி” என்று கேட்பார்கள். மூன்றாம் முறை வரும் போது என்ன செய்கிறார்கள்…?

இந்த மனித வாழ்க்கையில் அடிக்கடி அசுத்தங்கள் வந்து கொண்டே இருக்கும். அப்போது என்ன செய்கின்றோம்…?

அன்று நடந்தது…! இன்று “யாம் சொன்ன வழிகளிலே நடந்தீர்களா?” என்று யாம் அவர்களிடம் கேட்டால்
1.ஆத்ம சுத்தி செய்ய “நேரம் இல்லைங்கே” என்று சொல்வார்கள்.
2.இது போன்று “நேரமில்லை…” என்ற நிலைக்கு வந்து விட்டார்கள் என்றால்
3.“சாமியிடம் ஒன்றுமே இல்லை” என்ற நிலைக்குப் போய்க் கொண்டிருப்பார்கள்.

நமது வாழ்க்கையினுடைய நிலைகள் அவ்வாறு பயனற்றதாகப் போய் விடாதபடி “நாம் மெய் வழி காண்போம்…” என்ற எண்ணத்திற்கு வர வேண்டும்.

உங்களுக்குள் இருக்கக் கூடிய துன்பத்தைப் போக்குவதற்குத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்பது.
1.யாம் கொடுக்கும் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்திற்குள்
2.பல இரகசியங்கள் இருக்கின்றது.

அனைவரும் இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு அவர்கள் உடலில் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க அவர்களையும் ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ இதைப் போன்று நீங்களும் செய்யுங்கள்.

1.உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள்.
2.இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உங்களை நம்புங்கள்.

நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியைப் பெற முடியும்.

யாரோ செய்து கொடுக்கிறார்… எவரோ செய்து கொடுப்பார்…! என்று எண்ணாதபடி நாம் இதைப் பெற முடியும். இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெற முடியும், என்ற நிலைக்கு நாம் வரவேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு…
1.அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது ஒவ்வொன்றும் நல்லதாகும்.
2.நம்மால் முடியுமா…? என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.
3.எண்ணியதைப் படைக்கும் சக்தி உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
4.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு.

அது எப்படி ஒளியாக நம்மை உருவாக்குகின்றதோ… உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் ஒளி அலைகளாக மாறி அது செயல்படும்.

ஆகவே… உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும் “அந்த உணர்வாக…” நாம் மாற்ற வேண்டும்.

ஒன்றை ஒன்று விழுங்கித்தான் ஒன்றுக்குள் மறைந்து வருகின்றது. ஆனால் எல்லாவற்றிருக்கும் ஞானம் உண்டு. இன்றைக்குக் காற்றாக வருகிறதென்றால் இந்தக் காற்றும் போர் முறைகளிலேதான் வருகின்றது.

பல அணுக்களின் நிலைகள் கொண்டு நம் பூமிக்குள் விளைந்த நிலைகள் கொண்டு எதிர் நிலையான அலைகள் பட்டவுடன் ஒன்றுக்கொன்று போர் செய்துதான் சுழிக்காற்றும் வருகின்றது. இவையெல்லாம் ஒன்றையொன்று வெல்லும் போது ஏற்படக்கூடிய மூச்சின் அலைகள்தான்.

ஆகையினாலே எல்லாமே இயற்கையின் செயல்தான்.

இவை அனைத்தையுமே அறிந்துணரக்கூடிய ஆற்றல் மனிதனுக்கு உண்டு. மனிதனாக இருக்கக் கூடிய நாம் எதைக் கொண்டு எதை வெல்ல வேண்டும்…?
1.நாம் இருளை வென்று ஒளியாக்க வேண்டும்.
2.இது தான் கடைசி நிலை.

அத்தகைய தன்மையை உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன். எமது குருநாதர் யாம் அதைப் பெறுவதற்கு எதைச் செய்தாரோ அதைப் போன்று எமக்குள் அவர் காட்டிய ஆற்றலை உங்களுக்குப் பாய்ச்சுகின்றேன்.

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து அந்த ஆற்றலை நீங்களும் பெறலாம். நீங்கள் பெறப் போகும்போது… உங்கள் மூச்சலைகளை நீங்கள் சந்திப்போரும் பெற்று அவர்களும் அந்த ஆற்றலைப் பெறலாம்.

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

நாம் எப்பொழுதும் “துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டே” இருக்க வேண்டும்

 

நாம் தவறு செய்யாமலேயே சில தவறுகள் நடக்கின்றது. நான் போனேன்… போகும் போது “அந்த இடத்தில் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது…” என்று ஒருவர் நம்மிடம் சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

உடனே ஆ…! என்று அதிர்ச்சியோடு நாம் கேட்போம். இந்த உணர்வுகள் நமக்குள் படப்பட்டு
1.“அவர் எந்த வகையில் அந்த விபத்து ஏற்பட்டது…” என்று சொன்னாரோ
2.அதே உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நம்மை அறியாமல் அது இயக்கும்.
3.ரோட்டில் நடந்து சென்றால் அறியாமலே நம்மை நடுரோட்டிற்கு அழைத்துச் சென்று விடும் ஓரத்தில் ஒதுங்கிச் சென்றாலும் கூட…!

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வு நம்மை அறியாதபடியே இவ்வாறு அழைத்துச் சென்று விடும்.

இது போன்ற சம்பவங்களைக் கேள்விப்பட்டால் அடுத்த கணமே ஆத்ம சுத்தி செய்து “அவர்கள் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்… அவர்கள் உடல் நலம் பெறும் சக்தியும் பெற வேண்டும்…” என்ற எண்ணங்களை நமக்குள் உருவாக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நல்ல குணத்துடன் நாம் பார்க்கும் பொழுது தான்… பிறருடைய தீமைகளை நுகர்ந்து நுகர்ந்து அந்த அணுக்கள் நமக்குள் பெருகிப் பெருகி நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

மனக் கவலையும் மனக் குழப்பமும் இனி எப்படி வாழ்வது…? என்ற நிலைகளில் பல திசைகளுக்கு நம்மை ஆளாக்கி விடுகின்றது.

ஆனால் உடனடியாக நாம் ஆத்ம சுத்தி செய்தோம் என்றால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொண்டே இருக்கின்றோம்.
2.அதைப் பற்றுடன் பற்றி வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே வருகின்றோம்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்து விட்டால்… அத்தகைய அணுக்கள் நமக்குள் வளர்ந்து விட்டால் நம்மை அறியாமலே “அந்தத் துருவ நட்சத்திரத்தின் சொல் வரும்…”

உதாரணமாக ஒரு பாடலை பாடிக் கொண்டே இருக்கின்றோம். அது ஆழமாகப் பதிவாகி விட்டால் பாடல் தொடர்ச்சியாக சரியாக வரும்.

ஆனால் பாடிக் கொண்டிருந்தாலும் இடைமறித்து அதிலே ஒன்றை தனியாகச் சொல்ல வேண்டும் என்று குறுக்காட்டினால் இரண்டாவது தடவை அது சரியாக நினைவுக்கு வராது.

மீண்டும் முதலில் இருந்து பாடிக் கொண்டு வர வேண்டும்.

ஏனென்றால்
1.வரிசைப்படுத்தி வரப்படும் பொழுது அதனுடைய தொடர் வரிசை வருகின்றது.
2.இடையிலே சிக்கிவிட்டால் அந்த நினைவு நமக்குள் வராது.
3.காரணம் அந்த உணர்வின் தன்மை நமக்குள் இயங்கி அடுத்தடுத்து அந்த அடுக்குகளிலேயே அது வருகின்றது.

இதனால்தான் நமது வாழ்க்கையில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும் என்று சொல்வது. சந்தர்ப்பத்தால் நாம் பார்க்கும் தீமைகள் உள்புகாதபடி விழித்திருந்து பழகுதல் வேண்டும்.

இதைத்தான் சிவன் ராத்திரி அன்று விழித்திரு என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டது.

பிறருடைய கஷ்டங்களும் நஷ்டங்களும் எப்பொழுது பார்த்தாலும்
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி
2.நம் நல்ல குணங்களை வலுப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

ஆத்ம சுத்தி என்ற கடும் ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

ஆத்ம சுத்தி என்ற கடும் ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்

 

நாம் கையிலே ஆயுதத்தை வைத்துக் கொண்டு ‘’புலி வருது… புலி வருது…’’ என்று சொன்னால் துப்பாக்கி எதற்கு வைத்திருக்கிறோம்…?

‘’துப்பாக்கியைக் கையில் கொடுத்திருக்கிறோம்’’ சுடுவதற்கும் சொல்லிக் கொடுக்கிறோம்…’’

‘’ஐய்யய்யோ…! புலி வருது… புலி வருது…!’’ என்று துப்பாக்கியை வைத்துக் கொண்டு சுடாமல் இருந்தால் என்ன பண்ணும்…? அது நம்மைத் தாக்கிவிடும்.

சந்தர்ப்பத்தில்
1.நீங்கள் பிறருடைய கஷ்டமான நிலைகளைக் கேட்டு அறியத்தான் வேண்டும்.
2.‘’நீங்கள் அவர்களுக்கு உதவி செய்துதான் ஆக வேண்டும்…”
3.உதவி செய்தாலும் அவர்கள் சொன்ன துன்பமான உணர்வுகள் உங்களுக்குள் ஆட்டிப்படைக்காதபடி தடுப்பதற்குத் தான்
4.”ஆத்ம சுத்தி…” என்ற ஆயுதத்தையே உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

‘’ஈஸ்வரா…’’ என்று உங்கள் உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி…‘’ அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர்ந்து இரத்தங்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று
1.கண் திறந்து ஒரு நிமிடமும் கண்ணை மூடி ஒரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்
2.பின் கண்ணைத் திறந்து துன்பப்பட்டவர்களிடம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் உங்கள் துன்பங்கள் நீங்கும்
4.நீங்கள் நலம் பெறுவீர்கள் என்று சொல்லி அந்தப் பொருளைக் கொடுத்துப் பாருங்கள்.
5.அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்க முடியும்.

நாம் நகை வாங்கியபின் அதை மீண்டும் அடுத்த நகையாகச் செய்யும் போது அதில் உள்ள வெள்ளியையும் செம்பையும் எப்படிச் சுத்தப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல
1.நாம் கேட்டறிந்த பிறருடைய கஷ்டத்தை அடுத்த நிமிடமே நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் ‘’தியானம்’’ என்பது
2.நமக்குள் தீயது சேராது தடுக்கும் ஆற்றல் மிக்க சக்தியினைப் பெறத் தியானமிருக்க வேண்டும்.

‘’தியானம்’’ என்பது எது…? நமக்குள் கெட்டது சேரவிடாது வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும். இது தான் தியானம் என்பது.

பக்தியில் என்ன செய்கின்றோம்…? ‘பக்தி என்பது நல்லதை நினைப்பது. நல்லதையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால், தியானம் என்பது நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை வளர்த்துக்கொள்வது.

தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்தியை எடுத்து நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது. இந்தச் சக்தி இல்லையேல் அதைச் செயல்படுத்த முடியாது.

நமக்கு முன்னால் சுழன்று கொண்டிருக்கும் அந்த ஞானிகளின் அருள் சக்தியை ‘’ஆத்ம சுத்தி’’ என்ற நிலைகளில் வலு கொண்டு உங்களுக்குள் பெறச் செய்ய வாக்கின் நிலையாக உங்களுக்குக் கடும் ஆயுதமாகக் கொடுத்துள்ளேன்.

நீங்கள் எப்பொழுது, கடுமையான நிலைகளில் துன்பம் என்று பார்க்கின்றீர்களோ நுகர்கின்றீர்களோ கேட்கின்றீர்களோ அவைகள் உங்களுக்குள் சேராமல் தடுப்பதற்காகத்தான் “ஆத்ம சுத்தி’’ என்ற ஆயுதம்.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு
1.‘’நாளை நடப்பவை யாவும் நல்லவைகளாக இருக்கவேண்டும்
2.நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
3.நாங்கள் பார்ப்போரெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்.
4.எங்கள் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பயக்கும் சக்தியாகப் படர வேண்டும் என்ற எண்ண அலைகளை நீங்கள் பரப்புங்கள்.

“தாயை வேதனைப்படுத்தினால்…” அந்த அலைகள் நம்மைக் கடுமையாகச் சாடும்

“தாயை வேதனைப்படுத்தினால்…” அந்த அலைகள் நம்மைக் கடுமையாகச் சாடும்

 

இது என்னுடைய இளம் வயதில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த நிகழ்ச்சி. பக்கத்து வீட்டில் நானும் என் நண்பனும் விளையாடுவோம். எனக்கும் அவருக்கும் 6 மாதம் தான் வயது வித்தியாசம்.

ஆனால் படிப்பிலே நான் மட்டம். அன்று அவர் எஸ்எஸ்எல்சி வரைக்கும் படித்தார். நான் சரியாகப் படிக்காததனால் அவருடைய அப்பா என்னுடன் சேரக்கூடாது என்று அவரிடம் சொல்வார். நான் அந்த வீட்டிற்குள் சென்றால் “நீ உள்ளே வரக்கூடாது ஓடு…!” என்பார் அவருடைய அப்பா.

இவர் அமீனாவில் வேலை செய்தார். இளம் வயதில் விளையாட்டுக்கு அவர்கள் வீட்டுக்குத் தான் நான் செல்வேன். ஆனால் அவருடைய அப்பா என்னைத் துரத்தி விடுவார்.

நண்பர் படிப்பிலே நன்றாகத் தேறி சர்வேயர் ஆகித் தமிழ் நாட்டு அளவில் உயர்ந்த சர்வேயராகக் கடைசியில் வளர்ச்சி பெற்று ரிட்டயர் ஆனார். அவருக்குப் பெண் குழந்தைகள் ஆறேழு பேர்.

அந்த பிள்ளைகளைக் கல்யாணம் செய்து கொடுக்க வைத்திருந்த பணத்தைச் செலவழித்தார். பையன்கள் இருவர்…
1.ஆனால் அவர்களுக்குப் புத்தி கொடுக்கவில்லை.
2.அவர்கள் செலவழித்துக் கடனை உருவாக்கி விட்டார்கள்.

அவருக்குப் பென்ஷன் வருமானம் 5000 ரூபாய் வருகின்றது. ஆனாலும் பையன்கள் இப்படிக் கடனாளியாக ஆக்கிவிட்டார்களே…! என்று என்ற எண்ணங்கள் வந்துவிட்டது.

அவர்கள் வாங்கிய கடன் ஒரு லட்சத்திற்கு மேல் சென்று விட்டது. தான் குடியிருக்கும் வீட்டையாவது சமாளித்து விற்று விட்டுக் கடனை அடைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றார்.

ஆனால் “தாய் தந்தையர் சம்பாதித்த இந்தச் சொத்து இப்படி ஆகிவிட்டதே…” என்று எண்ணுகின்றார்… வேதனைப்படுகின்றனர்…
1.அதையே வளர்த்துக் கொள்கிறார்.
2.வீட்டை விற்ற பின் எண்ணங்கள் சுருங்குகின்றது. நான்கு மாதத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார்.

காரணம் ஏழு எட்டு பெண்கள் இவருக்குக் குழந்தைகளாக இருக்கப்படும் பொழுது இவருடைய தாயை இவர் சரியாகக் கவனிக்கவில்லை.

நான் அவரிடம் செல்லும் பொழுது அந்த அம்மா என்னிடம் சொல்லும்.
1.அவனை நன்றாகப் படிக்க வைத்தேன் எல்லாம் செய்தேன் ஆனால் என்னைத் தெருவிலே விட்டுவிட்டானே…!
2.அதனால் தான் அவனுக்குப் பெண் பிள்ளைகளாகக் கிடைத்தது…
3.அவன் செலவழித்துப் பார்த்தால் தெரியும்… அவன் அனுபவிக்கின்றான் என்று சொல்கிறது.

காரணம் தன்னுடைய தாய்க்குச் செலவுக்குச் சிறிதளவு கூடப் பணம் கொடுக்கவில்லை. வீடு இருக்கின்றது எல்லாம் இருக்கின்றது. ஆனால் ஆப்பம் சுட்டு அதை விற்று வாழுகின்றது. அதை வைத்துத் தான் அது ஜீவனம் நடத்துகின்றது.
1.தாயினுடைய அந்த மனக்குமுறல் இங்கே விளைகின்றது.
2.ஏனென்றால் பையன் ஒரே பையன் தான்… வேற யாரும் இல்லை.

“இந்த அலைகள் இங்கே வரும் பொழுது…” தொடர்ந்து அதே உணர்வைத் தான் அவருடைய பையன்களும் அவருக்குச் செய்கின்றார்கள்.

பென்ஷன் வந்தது… இருந்தாலும் கடனாகி “வீட்டை விற்று விட்டோம்… பையன்கள் இப்படி செலவழித்து விட்டார்கள்…” என்ற உணர்வுகள் விளைந்து சீக்கிரம் ஆளை முடித்துவிட்டது.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் நடந்த நிகழ்ச்சியைச் சொல்கின்றேன்.

உயிர் – மெய் – மெய்ப்பொருள்

உயிர் – மெய் – மெய்ப்பொருள்

 

சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள மெய்ப்பொருளை நாம் உணர்வோம். “ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…” என்று நாம் அடிக்கடி முழக்கம் இடுகின்றோம். இந்த முழக்கத்தின் உட்பொருளைப் புதிதாக வந்தவர்களும் ஏற்கனவே உள்ளவர்களும் தெளிந்து கொள்ள… தெரிந்து கொள்வதே நல்லது… நலமும் கூட…!

உயிர் நமக்குள் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ
1.அந்தக் குணங்கள் அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி
2.ம்… என்று நம் உடலாக்கி ஜீவணுக்களை இயக்கிக் கொண்டே உள்ளது நம் உயிர்.
3.அதனால் தான் ஓ…ம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.

நாம் எத்தகைய எண்ணங்களை எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக நம் உடலுக்குள் உறையச் செய்து கொண்டே உள்ளது.

நாம் எண்ணியது அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டே உள்ளது. நாம் எத்தகைய குணங்களை எண்ணுகின்றோமோ உயிரின் இயக்கத்தால் அந்த உணர்வினைப் பிளந்து அதனின் அறிவின் இயக்கத்தையும் நம்மை அறியச் செய்கின்றது… மெய்ப்பொருளாக…!

கோபப்படுகிறோம் என்றால் அந்தக் கோபத்திற்குண்டான உணர்வின் செயலை அதன் உணர்வின் உண்மையை உணர்த்துகின்றது நமது உயிர்.

அதே போல்
1.மெய்ப்பொருளை… எத்தகைய பேரண்டத்தின் இயக்கமாக இருப்பினும்
2.நமது உயிர் அதனின் உள்பொருளையும் அகப்பொருளையும் மூலப் பொருளையும் பிரித்து
3.நமக்குள் அறிவின் இயக்கமாக இயக்கி நம்மை அறியச் செய்கின்றது… உணரச் செய்கின்றது… இயக்கச் செய்கின்றது…
4.உடலாக்கிக் கொண்டே உள்ளது… மெய் நமது உயிர்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதே மிகவும் நலம்.

அதே சமயத்தில் அன்னை தந்தையரை எண்னி முதல் தெய்வமாக வணங்கிட வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் முதலில் நம்மை மனிதனாக உருவாக்கியவர்கள். நமக்கு அறிவும் தெளிவும் ஊட்டியது நம் அன்னை தந்தையே. நமக்கு குருவாக இயக்கிக் கொண்டிருப்பதும் அன்னை தந்தையரே.

1.அன்னையின் உயிரே மெய்ப்பொருளாகி அதனின் வாழ்க்கையைக் கண்டுணர்ந்து மனிதனாக உருவாக்கி
2.அந்த மனிதன் நிலையில் தனக்குள் “தன் இனம் வளர வேண்டும்…” என்ற ஏக்க உணர்வின் உண்மைப் பொருளை உணர்த்தி
3.அதன் வழியில் நம்மை மனிதனாக உருவாக்கியது நமது தாய் தந்தை.

உயிர் கடவுள் என்றும் உணர்வால் அறிந்துணர்ந்த தன்மை கொண்டு தன் இனம் என்ற நிலைகள் தன் மக்கள்… உயிர் என்று அறிவுறுத்தப்பட்டு நம்மைக் காத்து நல்வழி காட்டி நல் உணர்வுகளை ஊட்டி நமது வாழ்க்கையை உயர்த்துவதற்கும்… மகிழ்ந்திடவும்… மனிதன் என்ற உண்மையை உணர்த்துவதற்கும்… நம் தாய் தந்தையே உயிர் கடவுளாக இருந்து… தெய்வமாக இருந்து நமக்கு நல்வழி புகட்டியது… அவர்கள் தான் முதல் குரு

ஆகவே நாம் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று முழக்கமிட்ட நிலைகளில் அவரவர்கள் தாய் தந்தையரை எண்ணி “அவருடைய அருள் பெற வேண்டும்…” என்று ஏங்குதல் வேண்டும்.

விஞ்ஞானிகள் கண்டறியும் வழியும் மெய் ஞானிகள் கண்டறியும் வழியும்

விஞ்ஞானிகள் கண்டறியும் வழியும் மெய் ஞானிகள் கண்டறியும் வழியும்

 

விஞ்ஞான அறிவில் இன்று எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகள் வருகிறது. கற்றறிந்த உணர்வுகள் பதிவாக்கப்படும் பொழுது நினைவின் ஆற்றலால் நுகர்ந்தறிந்து அந்தந்த உணர்வுக்குத்தக்க “எத்தனையோ நுண்ணிய நிலைகளில் செயல்படுத்தித் தான் புதிதாகக் கண்டு பிடிக்கின்றார்கள்…”

இதைப் போன்று தான்
1.ஒவ்வொரு நிலைகளிலும் மனிதன் எப்படி இயங்குகின்றான்…?
2.ஆதியிலே காட்டு விலங்குகளுடன் மனிதன் எப்படி வாழ்ந்தான்…?
3.அவன் விண்ணின் ஆற்றலை எப்படி எடுத்தான்…?
4.அன்று அகஸ்தியன் எவ்வாறு விண்ணின் ஆற்றலைப் பெற்றான்…?
5.அவனுடைய வளர்ச்சியில் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனான்…?

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இயற்கையில் பரவும் நிலைகள் கொண்டு நாம் அந்தப் பேராற்றல்களை நுகர்ந்தால் அந்த உணர்வினை உயிர் அணுவாக மாற்றுகின்றது.

கருத்தன்மை அடைந்து அணுத் தன்மை அடைந்தால் அந்த அணுவாக உருப்பெற்ற பின் அது உணவுக்காக உணர்ச்சிகளை உந்துகின்றது.
1.எந்த உயிரால் உணர்வுகள் நுகர்ந்து இந்த அணுவின் தன்மை பெற்றதோ
2.இந்த உணர்வின் எல்லை கடந்து அங்கே விண்ணுக்கே செல்கின்றது.

உயிருடன் ஒன்றிய பின் எந்தக் கண்களால் கவர்ந்து தன் உடலுக்குள் கவரும் சக்தி பெற்றதோ அதே கண்ணுக்கு மீண்டும் ஆணை இடும் பொழுது கண்ணின் காந்தப் புலனறிவு இந்த பூமியில் படர்ந்திருக்கும் சக்திகளை பரவி இருப்பதை நமக்கு முன் குவித்து ஆன்மாவாக்குகிறது.

அதிலிருந்து சுவாசித்து உயிரிலிருக்கும் காந்தப் புலனில் பட்டபின் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு உணவைக் கொடுத்து… அந்த உணர்வினை வளர்க்கவும்… அதை இயக்கவும் செய்கின்றது.

இயற்கை இவ்வாறு தான் இயக்குகின்றது.

இதைத்தான் குருநாதர்
1.உன்னை நீ அறிந்து பார்…! நீ இயக்குகின்றாயா…? நுகர்ந்த உணர்வு உன்னை இயக்குகின்றதா…?
2.எதை எண்ணி நீ நுகர்கின்றாயோ அதன் உணர்வு தான் உன்னை இயக்குகின்றது.
3.ஆகவே நீ எதை நுகர வேண்டும்…?

சந்தர்ப்பத்திலே பகைமையான உணர்வை நுகர்ந்து விட்டால் அந்த உணர்ச்சிகள் தாக்குகின்றது. உடலிலிருக்கும் நல்ல அணுக்களைச் சரியாக இயக்க விடுவதில்லை.

தீமையான அணுக்கள் உருவாகி விட்டால் இதனுடைய பெருக்கம் அதிகமாகும் பொழுது நல்ல அணுக்கள் சுருக்கம் அடைகின்றது. நல்ல அணுக்கள் குறையப்படும் பொழுது தீய அணுக்கள் வலிமை பெறுகின்றது.

அது வலிமை பெற்றால் அதனுடைய செயலாக்கங்கள் எதுவோ அதனுடைய அமிலங்கள் உடலில் படரப்படும் பொழுது நல்ல அணுக்களால் உருவாக்கப்பட்ட தசையின் பாகங்களைக் கரைத்து விடுகின்றது.

அப்படிக் கரைந்து விட்டால் அதனால் உடல் உறுப்புகள் எப்படிக் குறைகின்றது…? அந்த உணர்ச்சிகள் வரும் பொழுது
1.வேதனை என்ற சோக ஒலிகளைக் அலைகளை கேட்டால்
2.அந்த அதிர்வே நமக்குள்ளாகி… அதன் உணர்வுகள் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

அந்த அணுக்களை அதிகமாக வளர்த்து விட்டால் நல்ல அணுக்களுக்கு உணவு கிடைக்காதபடி தடைப்படுத்தி விடுகிறது. மனிதனைச் சீர்குலையைச் செய்து உடலுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது.

அத்தகைய தீமைகளை மாற்றுவதற்குத் தான் உன்னை நான் காட்டிற்குள் அழைத்துக் கொண்டு வந்தேன். இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது…? என்பதை நீ அறிந்து கொள்ள…!

அதிலிருந்து மீள எண்ணியவர்கள் எத்தனையோ பேர். அதிலே தோல்வி அடைந்தவரும் பலர்.

1.ஆனாலும் அதிலே முழுமை பெற்று விண் சென்ற துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்கே உனக்குள் இந்த உண்மைகளை உணர்த்துகின்றேன்
2.எல்லாரையும் நீ அதைப் பெறச் செய்…! என்றார் குருநாதர்.

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து சொல்வதற்கும் உண்டான வித்தியாசம்

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து சொல்வதற்கும் உண்டான வித்தியாசம்

 

தியானத்தில் வீற்றிருக்கும் குடும்பமெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் சேர்ந்து சொல்கின்றோம். ஒருவருக்கொருவர் பண்பட்ட நிலைகளில்
1.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்
2.அதே போல நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்.
3.உங்கள் உடல் நோய் நீங்க வேண்டும் என்று நான் சொல்கின்றேன்.
4.அதே போல என் உடல் நோய் நீங்க வேண்டும் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்.

இதை அனைவரும் சொல்லப்படும் பொழுது
1.செவி வழி இந்த உணர்ச்சிகள் உந்தப்பட்டு…
2.கண்ணிலே ஈர்க்கப்பட்டு ஆன்மாவாக மாற்றிச் சுவாசிக்கச் செய்து
3.ஒன்றுபட்ட உணர்வின் தன்மை உடலுக்குள் கருவாக மாற்றும்.

கூட்டுத் தியானங்களில் இதைப் போல் எடுத்தோம் என்றால் வலிமை கூடுகிறது. தீமைகளை நீக்கும் அந்த அருள் சக்தி கிடைக்கின்றது. கூட்டமைப்பாகச் சொல்லும் பொழுது இருளைப் போக்கும்.

சாதாரண மனிதன் சொல்வதற்கும் கூட்டுத் தியானத்தில் எல்லோரும் சேர்ந்து அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்று
1.ஏகோபித்த வலு கொண்டு சொல்லும் பொழுது கண் நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
2.உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளை உடலுக்குள் ஊட்டுகிறது… இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது
3.உடலுக்குள் அந்த அணுவின் தன்மை கருவாக மாற்றுகின்றது.

ஒவ்வொரு குடும்பதிற்கும் நாம் சென்று கூட்டுத் தியானங்களை அமைத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் தொழில் நலம் பெற வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்.

நமக்குள் அந்த வலிமை பெருகுகிறது. அந்தக் குடும்பத்திலும் இந்த உணர்வலைகள் அங்கே பதிவாகும் போது அவர்களுக்கு அது நன்மையாகின்றது.

ஒருவரால் தூக்க முடியாத பொருளை நான்கு பேர் சேர்ந்து அதைத் தூக்குகின்றோம் அல்லவா…! அதே போன்று அந்த அருள் உணர்வுகளை நாம் எடுத்து அந்த வலுவைக் கூட்டி
1.எல்லோரும் சேர்ந்து மகரிஷிகளின் ஒலிகளை வீட்டிற்குள் பரவச் செய்தோம் என்றால்
2.அந்த வீட்டிற்குள் ஏற்கனவே பதிவாகியுள்ள சங்கடம் சலிப்பு போன்ற உணர்வுகள் அது ஒடுங்கும்.

இந்த உடலுக்குள் மட்டுமல்ல…! எந்த வீட்டில் நாம் வாழுகின்றோமோ நமக்குள் விளைந்த உணர்வுகள் (எல்லா விதமான உணர்வுகள்) வீட்டிற்குள்ளும் பதிவாகி இருக்கின்றது.

அந்தப் பதிவை நாம் மாற்ற வேண்டும்.
1.அதை மாற்றுவதற்குத் தான் கூட்டுத் தியானங்களை இல்லம் தோறும் வைக்க வேண்டும் என்று சொல்வது.
2.இது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

தபோவனத்திலும் இது போன்று தான் கூட்டுத் தியானம் அமைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்களின் உணர்வுகள் அங்கே ஒன்று குவிக்கப்பட்டு எல்லோரும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று சொல்லிப் பதிவாக்குகின்றோம்.

அந்த உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து காற்று மண்டலத்தில் பரவச் செய்கின்றது, எல்லோரும் வெளிவிட்ட அந்த மூச்சலைகள் அங்கே படர்ந்திருக்கப்படும் பொழுது
1.அதை எப்பொழுது எண்ணினாலும் அந்த உணர்வலைகள் நமக்கு உடனே கிடைக்கிறது
2.அதை நுகர்ந்து உடலுக்குள் இயக்க சக்தியாக மாற்றும் போது தீமையிலிருந்து நம்மை அது விடுபடச் செய்யும்.

அந்தக் கூட்டமைப்பை அவசியம் உருவாக்க வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் எல்லோரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து இந்த உணர்வின் தன்மை நமக்குள் விளைய வைத்து நம் உடலுக்குள் கலக்கப்படும் பொழுது அனைத்தும் ஒன்றாகச் சேர்கிறது.
1.ஒன்றுபட்ட இயக்கமும் தெளிவான நிலைகள் பெறுவதற்கும் உதவுகிறது
2.தீமையை அகற்றிடும் சக்தியும் நமக்குக் கிடைக்கிறது.

குரு பூஜை அன்றும் பௌர்ணமி நாட்களிலும் மற்ற கூட்டுத் தியானம் இருக்கும் போதெல்லாம் துன்பங்களைப் போக்குவதற்கும்… பேரின்பம் பெறும் அந்த உணர்வை வளர்ப்பதற்கும்… அந்த அணுக்களைப் பெருக்குவதற்கும்… தீமையான அணுக்களைக் குறைப்பதற்கும் அது உதவும்.

தீமையான உணர்வுகள் ஒரு பத்து அணுக்கள் இருக்கிறது என்றால்
1.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி சேர்த்து அதைக் கூட்டிப் பெருக்க வேண்டும்.
2.இதனின் வலு கூடும் பொழுது அது குறையும்.

குரு வழியில்… மகிழ்ச்சியான உலகை நாம் உருவாக்குவோம்

குரு வழியில்… மகிழ்ச்சியான உலகை நாம் உருவாக்குவோம்

 

விஷத்தை வென்றிட்ட துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் பெற்று நமக்குள் வளர்த்து
1.இனி வரக்கூடிய ஆண்டுகளை மகிழ்ச்சி பெறும் ஆண்டுகளாக குரு வழியில் நாம் உருவாக்குவோம்
2.உடலில் பேரின்பத்தைப் பெருக்கும் அணுக்களாக உருவாக்குவோம்
3.பெருக்கி உலக மக்கள் அனைவரும் அதைப் பெறும் தகுதியாக வளரச் செய்வோம்… வளர்ப்போம்.
5..உலக மக்கள் தெளிந்து வாழ வாழ்த்துவோம்… தியானிப்போம்… தவமிருப்போம்
6.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை அனைவரையும் பெறச் செய்வோம்
7.மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ச்சி பெறும் நிலையினை அனைவருக்குள்ளும் உருப்பெறச் செய்வோம்
8.இந்த உலகம் முழுவதும் அதைப் பரவச் செய்து எல்லோருக்குள்ளும் வளர்க்கச் செய்து
9.அவர்களிடம் இருந்து வெளிப்படக்கூடிய அந்த உணர்வுகளை இந்த பூமி முழுவதும் பரவச் செய்வோம்.
10.அதன் மூலம் இந்தக் காற்று மண்டலத்தை பரிசுத்தப்படுத்துவோம்… அந்த பரிசுத்தமான உணர்வுகளை நமக்குள் வளர்ப்போம்
11.ஒன்றி வாழும் நிலையும் சகோதர தத்துவமும் சமத்துவமும் .மக்களுக்குள் வளர அருள் ஞானத்தைப் பெருக்குவோம்.

ஒன்றுபட்டு வாழ்வோம் தீமையை அகற்றுவோம் உலக மக்களைக் காக்கும் உணர்வை நமக்குள் வளர்ப்போம்.

உலக மக்கள் என்று சொன்னாலும் “அது உயிரான ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் தான்…”

“ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும்…” என்று நாம் அன்பு கொண்டு செய்தால்… மனிதன் என்ற பகைமைகளை அகற்றி ஒன்றுபட்டு வாழ்ந்திடும் உணர்வினை வளர்த்திட… அரும்பெரும் சக்தியாக நமக்குள் அது வளரும்.

இதற்கு வலிமை சேர்க்க… கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து தியானத்தில் வலுப்பெற்றால் அது அனைத்தும் கூடி வரும். பகைமை வராது தடுக்கலாம். உலக இருளை நீக்கும். நஞ்சினை மாற்றிடும் அருள் ஞான உணர்வுகள் உருப்பெறும்.

அருள் ஞானத்தைப் பெருக்கிடும் அந்த அருள் சக்தியை நாம் பெறுகின்றோம். அருள் சக்தி பெற மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் ஒவ்வொரு நொடிப் பொழுதும் தியானிப்போம்.

1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் நாம் இணைப்போம்
2.அவர்கள் உடல் பெறும் நஞ்சினை அங்கே கரைத்து உணர்வை ஒளியாக மாற்றும் நிலையைச் செயல்படுத்துவோம்.

அவர்கள் ஒளியான உணர்வுகளை நாமும் நுகர்வோம். நமக்குள் பேரருளைப் பெருக்குவோம். அறியாது சேர்ந்து இருளை மாற்றுவோம். ஒளியான உணர்வை உருவாக்குவோம். பிறவி இல்லாத நிலை அடைவோம். பேரருளை நமக்குள் ஏங்கிப் பெறுவோம்.

நம் உடலுக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளைப் பெருக்கி
1.நம் உயிரான ஈசனுக்கு அந்த மகிழ்ச்சியை ஊட்டுவோம்.
2.அவன் அருளை நாம் பெற்று…
3.அவனுடன் என்றும் பிரகாசமாக… என்றும் ஏகாந்தமாக… ஏகோபித்த நிலையாக உயிருடன் ஒன்றி
4.அவன் எவ்வாறோ… அவன் வழியே… நாமும் உடல் பெறும் உணர்வுகள் ஒளியாக மாறி
5.ஏகாந்த நிலையை… ஏகாதசி என்ற நிலையை… பத்தாவது நிலையை… அந்த முழுமையை நாம் அடைவோம்.

அருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை

அருள் ஞானச் சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை

 

குருநாதர் பிறவியில்லா நிலையை அடைந்தார். ஒளியின் சரீரமாக இருக்கின்றார். அதிலிருந்து வரக்கூடிய உணர்வை நமக்குள் சேர்த்து இருளைப் போக்கிப் பழக வேண்டும். அது ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

ஒவ்வொருவரும் துருவ தியானம் முடிந்தவுடன்
1.உங்களிடம் இருக்கும் அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்தீர்கள் என்றால்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஒளிகள் இதிலிருந்து வரும்.
3.நாளுக்கு நாள் அது வளர ஆரம்பிக்கும்… உங்கள் உணர்வுகளில் ஒரு தெளிவான மனம் கிடைக்கும்.
4.இதனுடைய வரிசையில் சில சமயங்களிலே பிரபஞ்சங்களும் தெரியலாம்.
5.அந்த மகரிஷிகள் யார்…? என்ற நிலைகளும் உங்களுக்குத் தெரியவரும்.

தெரிய வரும் என்று சொன்னவுடன்… தெரியவில்லையே…! என்ற உணர்வுக்குப் போய்விடாதீர்கள். அதை நாம் பெற வேண்டும் என்ற உணர்வை மட்டும் செலுத்திக் கொண்டு வந்தால் போதும். ஏனெனில் அந்த உணர்வு உங்களுக்குள் வளர்ச்சியாகும்.

ஒரு செடியை வைத்துவிட்டு உடனே பூ பூக்கவில்லை… காய் காய்க்கவில்லை என்றால் முடியுமோ…?

எத்தனையோ ஆண்டுகள் பல உடல்கள் பெற்று இப்பொழுது மனிதனாகப் பிறந்துள்ளோம். இவ்வாறு மனிதனாகப் பிறந்ததில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொன்றாகச் சேர்க்கிறோம்.

அந்த நினைவின் ஆற்றலும் ஈர்ப்பும் உங்களுக்குள் வருவதற்காகவே இந்த அருள் ஞானச்சக்கரத்தைக் குறைந்தது “மூன்று வருடமாக…” பூஜை அறையிலே வைத்து அதற்காகத் தியானம் பண்ணியுள்ளேன்.

எங்கே போக வேண்டும் என்றாலும் கொஞ்ச நேரம் சக்கரத்தின் முன் நின்று சக்கரத்தைப் பார்த்து, “ஈஸ்வரா” என்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும், பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு நன்றாகப் படிப்பு வரவேண்டும்… நல்ல ஞாபக சக்தி வரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

தொழிலுக்குப் போகும் பொழுது என் தொழில் நன்றாக இருக்க வேண்டும். என் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று, எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

அந்தச் சக்கரத்தினைச் சௌகரியப்படும் இடத்தில் வையுங்கள். உடகார்ந்து பார்ப்பதற்கோ நின்று பார்ப்பதற்கோ தகுந்த மாதிரி செய்து கொள்ளுங்கள்.

1.அதைப் பார்த்து விட்டு… உங்கள் காரியம் ஜெயமாக வேண்டும் என்று
2.இந்த உணர்வை மீண்டும் மீண்டும் வலுப் பெறச் செய்து கொள்ளுங்கள்.
3.மன உறுதி கிடைக்கும்… உங்கள் சொல் கேட்போருக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.
4.நாமும் நம் குழந்தைகளும் இந்த மாதிரிச் செய்து அதைக் கட்டாயாமாக்கி ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இந்தச் சக்திகளை நீங்கள் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ்ந்து… பிறரையும் மகிழ்வித்து வாழ்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.

“பிறர் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணினால் அது நமக்குள் நன்மையையே உருவாக்கும்

“பிறர் நன்றாக இருக்க வேண்டும்…” என்று எண்ணினால் அது நமக்குள் நன்மையையே உருவாக்கும்

 

மெய் ஞானிகள் தமது மனித வாழ்க்கைக் காலத்தில் பேரண்டத்தினுடைய சூட்சம இயக்கங்களை அறிந்துணர்ந்தார்கள்.
1.இந்த மனித வாழ்க்கையில் தன்னை அறியாது வரும் தீமையான நிலைகளிலிருந்தும் தம்மைக் காத்து
2.உயிருடன் ஒன்றிய உணர்வினை ஒளி பெறச் செய்யும் நிலையினையும் பெற்றனர்.

அந்த மெய் ஞானிகள் பேரண்டத்தின் பெரும் உண்மையினைக் கண்டுணர்ந்து உணர்வின் ஆற்றலைத் தம்முள் வளர்த்து வெளிப்படுத்தியது எல்லாம் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியெங்கும் படர்ந்து பரவியிருக்கின்றன.

மாமகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் அவர்கள் நமக்குக் காண்பித்த அருள் வழிகளை நாம் பின்பற்றுவதன் மூலம் இந்தப் பூமியில் படர்ந்துள்ள அந்த மெய் ஞானிகளின் உணர்வலைகளை நாம் பெற முடியும்.

நீங்கள் அனைவரும் மெய் ஞானிகளின் அருள் ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்காக யாம் உயர்ந்த உண்மைகளை உங்களுக்கு உபதேசித்து வருகிறோம்.

1.அதனைக் கேட்கும் நீங்கள் அந்தத் தத்துவங்களை உங்களுடைய அகத்தில் இருத்தி
2.அதனைத் திரும்பத் திரும்ப எண்ணுவீர்கள் என்றால் உங்களிடத்தில் மகிழ்ச்சியின் தன்மை பெருகுகின்றது.

அதன் வழியில் நீங்கள் உயர்ந்த செயல்களைச் செய்யும் பொழுது அதனின் உணர்வுகள் உங்களை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்கின்றது.

உதாரணமாக… நாம் கடைக்குச் செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு பொருளையும் தரம் பார்த்துத் தான் வாங்குகின்றோம்.

இருந்தாலும் வீடு வந்து சேர்ந்த பின் அந்தப் பொருள்களை எடுத்துப் பார்க்கும் பொழுது அவைகளில் ஒன்றிரண்டு பொருள்கள் உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டுப் போயிருப்பதை பார்த்து “வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா…?”

1.கெட்டதைத் தூக்கி எறிந்துவிட்டு இனி அடுத்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
2.ஆகாததைத் தூக்கிப் போட்டுவிட்டு இனி அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.

இந்த மனிதன் முழுமை அடைய வேண்டுமென்றால் “இந்த உடலில் எவ்வளவு குணச் செல்வங்கள் இருந்தாலும்… வேதனை என்ற நஞ்சான உணர்வானால் குணச் செல்வம் அழிந்து விடுகின்றது…”
1.வேதனையைக் கேட்டறியும் நிலையில் அது நம்முள் வளர்ந்து
2.நமது பொருள் செல்வத்தையும் இழக்கச் செய்யும் என்பதை நாம் அறிய வேண்டும்.

அழியாப் பேரின்பப் பெரு வாழ்வு என்ற அருள் ஞானியின் உணர்வை நாம் கவர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற முடியும்.

பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால் நம்முடைய சொல் செயல் புனிதம் பெறும். நம்மைப் பார்ப்பவர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் நிலை உண்டாகும். அறியாமை என்ற இருள் அகன்று அனைத்தும் அறியும் ஞானம் உருவாகும்.

சொல்லில் பொருள் இருப்பது போன்று நமது செயலில் நன்மைகள் இருக்க வேண்டும்.
1.நாமும் நமது சமுதாயமும் “ஒரே இனம்” என்ற நிலையில்
2.நமது நலத்தையும்.. பொது நலத்தையும் ஒன்றிணைப்பதாக நமது செயல்கள் இருக்க வேண்டும்.
3.ஏனெனில் பிறர் நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது
4.அதனின் உணர்வின் சத்து உங்களிடத்தில் விளைந்து நன்மையையே உங்களிடத்தில் விளையச் செய்யும்.

இவ்வாறு இதனின் உண்மைகளை அறிந்து அருள் ஞானிகள் வகுத்துக் கொடுத்த அறங்களை கடைப்பிடித்து அதனின் வழியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் அனைவருக்கும் எமது ஆசிகள்.