பிறக்கும் குழந்தைகள் எல்லாம் “அறிவின் சுடராகப் பிறக்க வேண்டும்…” என்று ஆசைப்பட வேண்டும்

பிறக்கும் குழந்தைகள் எல்லாம் “அறிவின் சுடராகப் பிறக்க வேண்டும்…” என்று ஆசைப்பட வேண்டும்

 

“கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்…” என்ற பொருள்படி கம்பராமாயணத்தை கம்பர் எழுதும்கால் அவரின் எண்ணம் நினைவு எல்லாமே அவர் எவ்வெண்ணத்தை ஈர்த்துச் செயல்படுத்துகிறாரோ அவ்வெண்ணத்தின் சுவாசக் காற்றுத்தான் அவர் உள்ள இடம் தனில் சுற்றிக் கொண்டிருக்கும்.

எவ்வில்லத்தில் எவ்வெண்ணத்தின் செயலுடன் துரிதமாகச் சுற்றிக் கொண்டுள்ளதோ அந்த நிலைக்கொப்பத்தான் அந்தந்த இடத்தில் உள்ள எல்லா நிலைகளும் நடந்திடும்.

அவ்வில்லத்தில் வாழ்பவரின் எண்ணமும் இவ்வெண்ணத்தின் சுவாசக் கலப்பினால் ஒவ்வோர் இல்லத்திலும் எச்சக்தியின் எண்ண நிலை ஓங்கி நிற்கின்றதோ அந்நிலை கொண்ட செயல்தான் நடந்திடும்.

கவி பாடும் கவிஞரின் இல்லம் மட்டுமல்ல…!
1.ஒவ்வொரு குடும்ப நிலையிலும் அக்குடும்பத்தில் உள்ள தனித்தன்மையின் நிலை
2.அக்குடும்பத்தில் உள்ளோரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்திடும்.

பிறக்கும் குழந்தைகளில் நல்லறிவு கொண்ட குழந்தைகளும்… சில குழந்தைகள் நல்லறிவு வளர்ச்சி பெறாமல் பிறப்பதுவும் கண்டிருப்பீர்.

முன் ஜென்மத்தில் செய்த வினைப்பயன் மட்டும் கொண்டு அனைத்து குழந்தைகளும் பிறப்பதில்லை. பிறக்கும் ஒவ்வொரு சிசுவுக்கும் முன் ஜென்மத் தொடர் தொடர்வதில்லை.

ஆதியில்… ஆதியில் என்பது இவ்வுலகம் கல்கியில் பிறந்த நாளில் இருந்த உயிர் அணுவிற்கும் இப்பொழுதுள்ள உயிரணுவிற்கும் பல கோடி கோடி நிலைகள் அதிகரித்துள்ளன.

அந்நிலையில் இப்பொழுது வாழும் அனைவருக்குமே முன் ஜென்மத்தில் வாழ்ந்ததின் தொடர் நிலைகள் எந்நிலையில் வந்திடும்…?

புதிய புதிய உயிரணுக்கள் தோன்றிக் கொண்டே உள்ளன. முன் பாடத்தில் சொல்லியபடி ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் உடலை அடக்கம் செய்த நிலையில் அவ்வுடலில் இருந்து பல உயிரணுக்கள் தோன்றி சுற்றிக் கொண்டு உள்ளன என்றேனல்லவா…?

1.அந்நிலை கொண்ட உயிரணுக்களெல்லாம் தாயின் கர்ப்பத்திற்கு ஜீவன் பெற வந்திடும் பொழுது
2.அவ்வுயிரணுக்களுக்கு எண்ண நிலைகளும் செயல் திறமையும் முழுமை பெறாததால்
3.அத்தகைய உயிரணுக்கள் தாயின் கர்ப்பத்திற்கு வரும் பொழுது தான்
4.சில குறைப் பிரசவங்களும் கருச்சிதைவுகளும் உண்டாவதெல்லாம்.

இவ்வுயிர் அணுக்கள் தன் ஜீவன் பெறும் துடிப்பில் எத்தாயின் கர்ப்பத்திற்கும் வந்து பிறக்கும் நிலையில் பிறப்பிற்கு வருகின்றது.

மனித உடலிலிருந்து உண்டான உயிரணுக்கள் எல்லாமே மனித சுவாசம் நிலை கொண்ட மனித கர்ப்பத்திற்குத்தான் வருகின்றது. மிருக நிலையும் இதைப் போன்ற நிலை கொண்டதுவே.

இப்புதிய உயிரணுக்கள் ஜீவன் பெற தாயின் வயிற்றில் உதித்து வளரும் பொழுது… எக்கரு எத்தாயின் வயிற்றில் வளர்கின்றதோ…
1.அத்தாயின் நிலை சமமான நிலை கொண்ட சஞ்சலம் கொள்ளாத நிலையிலிருந்தால்
2.அத்தாயின் ஆரோக்கிய நிலையும் நல் நிலையிலிருந்தால்
3.அத்தாயின் வயிற்றில் உள்ள கருவும் அத்தாயெடுக்கும் சுவாச நிலை கொண்ட புத்தியின் வளர்ச்சி நிலைக்கும்
4.அத்தாயின் வாழ்க்கையுடன் கலந்துள்ளவரின் சுவாச நிலைக்கும் அக்கருவையும் தன்னுள் வளர்த்துக் கொண்டு
5.நல் நிலை கொண்ட சிசுவாக வந்து பிறக்கின்றது.

இன்னும் பல சிசுக்கள் தாயின் கர்ப்பத்தில் உள்ள பொழுதே அத்தாயின் எண்ண நிலை கொண்டு அந்நிலையின் தாக்குதலினால் இச்சிசுக்கள் பிறந்தவுடன் பிறவியிலேயே பல நிலை கொண்ட வியாதியின் அணுவைத் தாங்கியே பிறக்கின்றது.

இவ்வுலகத்தாய் பெற்றெடுத்த தாயானவள் “தான் பெற்றெடுக்கும் சிசுக்களை…” நல்ல அறிவுள்ள பொக்கிஷமாகப் பெற்றெடுக்க சூலுண்ட நிலையில் உள்ள ஒவ்வொரு தாயும் தன் எண்ணத்தை அன்புடனும் ஆசையுடனும் பண்பாக்கிச் சம நிலையில் கொண்ட நிலையில் வாழ்ந்தே “அறிவுடன் கூடிய அன்புச் செல்வங்களை பெற்றெடுத்து மகிழ்ந்திடுங்கள்…”

சூலுண்ட நிலையில் அன்பு ஆசை பண்பு என்ற ஆண்டவன் ஜெபம் கொண்ட அமுதுண்டே அழகுடனே பெற்றிடுங்கள் அரும் செல்வங்களை.

1.ஆண்டவன் வந்து அளிப்பதல்ல நாம் பெறும் செல்வங்களை…!
2.நம்மை நாம் பக்குவம் கொண்டு வாழ்ந்திட்டாலே அவ்வாண்டவனின் செல்வம் நம்முள் வந்து பிறந்து
3.நாம் பெற்றெடுக்கும் செல்வமும் அவ்வாண்டவனின் சக்தி கொண்டு நமக்கு வந்து பிறக்கும்.
4.நமக்குப் பிறக்கும் செல்வங்கள் எல்லாம் “அறிவின் சுடராய் வந்து பிறந்திட வேண்டும்…” என்ற ஜெப நிலை கொண்டே பெற்றெடுங்கள்.

நம்மைக் காப்பதற்கும்… எதிர்காலச் சந்ததியினரைக் காப்பதற்கும் உண்டான வழி

நம்மைக் காப்பதற்கும்… எதிர்காலச் சந்ததியினரைக் காப்பதற்கும் உண்டான வழி

 

ஒரு தாய் கர்ப்பமுற்றிருக்கும் பொழுது… சர்க்கரைச் சத்து நோய் உள்ளவரை ஒன்றில் இருந்து தொண்ணூறு நாட்களுக்குள் உற்றுப் பார்த்தாலே போதும். இந்த உணர்வு தாயின் இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கும் குழந்தைக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

இது தாய்க்கு அதிகமாகச் சேர்வதில்லை. ஆனால் இந்த உணர்வு கருவுக்குள் சென்ற பின் குழந்தைக்கு இணைத்து விடுகின்றது. குழந்தையாக இருக்கும் போததே அதற்கு சர்க்கரைச் சத்து நோய் வந்து விடுகிறது.

அந்தக் குழந்தை தவறு செய்ததா…? இல்லை.

எங்கள் குழந்தைக்குச் சர்க்கரைச் சத்து நோய் இருக்கிறது.. சரி செய்ய வேண்டும் என்று சொல்லி என்னிடம் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள்.

1.தாய் உற்றுப் பார்த்து எடுத்துக் கொண்ட உணர்வினால் தான் குழந்தைக்கு அது வந்தது
2.ஆகையினால் தாய் தான் எண்ணி அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னேன்
3.மகரிஷிகளின் அருள் சக்தி என் குழந்தை பெற வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் குழந்தை உடல் முழுவதும் படர்ந்து சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் என்று
5.”குழந்தையின் கண்களைப் பார்த்து” அந்த உணர்வுகளைப் பாய்ச்சும்படி சொன்னேன்.

அப்படித்தான் அதைக் குறைக்க முடியும்… மருந்து கொடுத்து அல்ல. சிறிய வயதிலேயே இன்சுலின் இன்ஜெக்க்ஷன் போட்டுச் சர்க்கரை சத்தை மாற்றிக் கொண்டு வர வேண்டும் என்றால் முடியாது

காசு இருக்கிற வரைக்கும் செய்வார்கள். இன்சுலின் போட்டுக் குழந்தையைக் காக்க வேண்டும் என்று செய்தாலும் ஒரு நாளைக்கு இல்லை என்றால் மயக்கப்பட்டு அது கீழே விழுந்துவிடும்.

தாயின் கருவில் உருவாகக்கூடிய குழந்தைகளின் நிலை இன்று இப்படித்தான் இருக்கின்றது.

ஏனென்றால் வீட்டில் டிவி மற்ற எல்லாமே இருக்கின்றது. விளையாட்டுகளையும் கேளிக்கை நிகழ்ச்சிகளையும் எத்தனையோ அதிலே காட்டுகின்றார்கள்.

தாய் இதை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது பதிவாகி விடுகின்றது கருவிலே இது இணைந்து… குழந்தை பிறந்த பின் டிவி மற்ற சாதனங்களை சிறு வயதிலேயே அதைச் சீராக இயக்குவதும்… விளையாட்டுகளை ஆனந்தமாக விளையாண்டு ரசிப்பதும்… இதையெல்லாம் இன்று நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.
1.ஆனால் படிப்பையோ மற்ற நல்ல பழக்க வழக்கங்களையோ எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.
2.பெரும்பகுதி குழந்தைகள் டிவி மற்றும் அதைப் போன்ற சாதனங்களிலேயே இன்று நாட்டமாக இருப்பார்கள்.

காரணம்… தாய் கருவில் பதிவானது இப்படி வந்து விடுகின்றது. ஆனால் பார்த்தது வேடிக்கைதான்… குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாக அது அமைந்து அதன் வழியே அந்தக் குழந்தையை வழி நடத்துகின்றது

அதே போல் தான் காக்காய் வலிப்பு வந்த ஒரு குழந்தையை கருவுற்ற தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் அதே நோய் வருகின்றது.
1.வாழ்க்கையில் இது போன்று சுவாசிக்கும் உணர்வுகள் நம்மையும் பாதிக்கின்றது
2.எதிர்காலக் குழந்தைகளையும் பாதிக்கின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியனோ தாய் கருவிலே நஞ்சை முறிக்கும் ஆற்றல் பெற்றான். அகண்ட அண்டத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகளை அறியும் ஆற்றலும்… அதில் இருக்கக்கூடிய நஞ்சுகளை வெல்லக்கூடிய சக்தியும் அவனுக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கிறது.
1.இது அவனுடைய சந்தர்ப்பம்… நஞ்சை வெல்லக்கூடிய சக்தி அவனுக்குக் கிடைக்கின்றது
2.மற்ற மனிதர்களைக் காட்டிலும் இவன் அறிவில் வளர்ச்சி கொண்டவனாக வருகின்றான்.

வான் வீதியை உற்று நோக்குகின்றான். 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய துகள்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது மின்னலாக மாறுகின்றது… அந்த ஒளிக்கற்றைகளை அவன் தனக்குள் நுகர்கின்றான்.

நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும் பிற மண்டலங்களிலிருந்து வரக்கூடிய சக்திகள் இந்தப் பூமிக்குள் வந்தால் அது கடுமையான விஷத்தன்மையாக இருப்பதால் பல தீங்குகளைச் செய்கின்றது என்பதனை அறிகின்றான்.

ஆனால் அவன் உடலிலே அந்தத் தீங்கை மாற்றும் சக்தி இருப்பதால் அதை எல்லாம் நுகர்ந்து… தன் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு இரத்தத்தின் வழி அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்குகின்றான்.
1.மின் கதிர்களை ஜீரணிக்கக் கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது… அது வளர்ச்சி அடைகிறது
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிடும் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக அவனுள் வளர்ச்சி அடையத் தொடங்குகிறது.

27 நட்சத்திரங்கள் 27 விதமான நிலைகள் மோதும் போது அந்த மின் கதிர்கள் வெளிப்படுவதை அகஸ்தியன் சுவாசிக்கின்றான்… அது அவனுக்குள் அடங்குகிறது.

புறத்திலிருந்து வருவதைச் சூரியன் தனக்குள் கவர்ந்து அதிலுள்ள விஷத்தை ஒடுக்கிப் பாதரசமாக மாற்றி உமிழ்த்தப்படும் போது… “இந்த உலகிற்கே ஒளி தருவது போல…” 27 நட்சத்திரங்களின் ஆற்றலை அகஸ்தியன் நுகரப்படும் போது… இந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளியின் அறிவாக… அண்டத்தை அறியும் சக்தியாக அவனுக்குள் வந்து சேர்கின்றது

துருவத்தின் வழி இதையெல்லாம் அவன் உற்றுப் பார்த்துத் தனக்குள் அடக்கியதால் துருவன் என்ற காரணப் பெயரையும் வைக்கின்றார்கள். அந்த ஆற்றல்களை அவன் பெருக்கி வளர்ச்சியாகும் போது பதினாறாவது வயதில் அவனுக்குத் திருமணம் ஆகிறது..

செடி கொடியாக இருந்தாலும் கல் மண்ணாக இருந்தாலும் உயிராக இருந்தாலும் எல்லாமே “ஆண் நட்சத்திரம் பெண் நட்சத்திரம் என்ற இயக்கத் தொடர்கள் கொண்டது தான்” என்பதை உணர்கின்றான்.

தான் பெற்ற சக்திகளையும்… கண்ட பேருண்மைகளையும் மனைவிக்கு எடுத்துச் சொல்கிறான்… உணரும்படி செய்கிறான். அதன் வழி அவன் மனைவியும் நுகர்ந்தறிகிறது.

கணவன் மனைவியாக இருவருமே விண்ணின் ஆற்றலைத் தங்களுக்குள் வளர்த்து இரு உயிரும் ஒன்றாகி ஒளி உடலாகப் பெற்று துருவ நட்சத்திரமாக வாழ்கின்றார்கள்.

1.அந்த அகஸ்தியனைப் போன்று எல்லோரும் பேராற்றல்கள் பெற வேண்டும்…
2.அத்தகைய ஞானியாக நாம் உருவாக வேண்டும் என்பதற்குத் தான் இதை எல்லாம் உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

மன நிலையில் மாற்றமில்லாதவனுக்கு அமைதி கொண்டு வாழ்பவனுக்கு வலியும் பிணியும் அண்டாது

மன நிலையில் மாற்றமில்லாதவனுக்கு அமைதி கொண்டு வாழ்பவனுக்கு வலியும் பிணியும் அண்டாது

 

நல்நிலை பெற்று நாம் எந்நிலை கொண்ட சுவாசம் எடுக்கின்றோமோ அந்நிலைக்குகந்த உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் நம் ஆரோக்கிய நிலையும் நமக்குக் கிட்டுகின்றன.

நமக்கு வரும் பிணிகள் எல்லாம் நம்மை வந்து அண்டுவது பிறரிடத்தில் இருந்தோ அனைத்தும் வம்ச வழி கொண்டோ நமக்கு வந்து அடைகிறது என்பது மட்டுமல்ல.

வம்ச வழியில் வருகின்றது பல பிணிகள் என்கிறார்கள். வம்ச வழியில் உதிரத் தொடர்புடன் சில நிலைகள் நமக்கு வருகின்றன.

ஆனாலும் நம்முடைய உணர்வும் உணவும் செயலும் கொண்டு நம் எண்ணத்தினால்… அந்த வம்ச வழியின் தொடரில் வரும் பிணிகள் நம்மை அண்டாமல்… நம் உடல் நிலையை ஆரோக்கிய நிலையில்… “இஜ்ஜெப நிலை என்னும் ஆத்மீக வழிக்கு நம்மை நாம் வழி நடத்தி வரும் பொழுது… எப்பிணியும் நம்மை அண்டாது…!”

1.இவ்வுடல் பிணிகள் அனைத்துமே வருவதெல்லாம் இவ்வெண்ணத்திலிருந்துதான்
2.மனிதனின் குண நிலை கொண்டுதான் அவனுக்கு வரும் பிணி எல்லாம்.

தலை வலி எந்நிலை கொண்டு வருகின்றது…?

சமமான நிலையில் மன நிலை உள்ள பொழுது ஆரோக்கிய நிலையில் நாம் உள்ளோம். அப்படி இருந்தாலும்
1.எண்ணமுடன் எண்ணம் மோதும் பொழுது (எதிர் நிலை)
2.நாம் உட்கொள்ளும் ஆகாரம் நமக்குச் செரித்து நம் நிலையில் அவ்வுமிழ் நீர் சுரக்கும் தன்மை தடைப்படுகிறது.

இந்த உமிழ் நீர் சுரப்பியின் நிலை வேறுபடும் பொழுது நாம் உட்கொள்ளும் உணவும் நமக்குச் செரிப்பதில்லை. அந்த நிலையிலிருந்து தான் நமக்கு வருகிறது தலை வலி.

1.உடல் பிணி யாவற்றுக்குமே முன்னோடி இச்சிரசில் வரும் வலி தான்.
2.இதன் தொடர்நிலை தான் நமக்கு வரும் வாந்தி மயக்கம் காய்ச்சல் இப்படி வரும் அனைத்துப் பிணிகளுமே
3.இந்நிலையின் தொடர்தான் அடிக்கடி உடல் உபாதை உற்றவனுக்கு
4.அவன் உடலில் சில உறுப்புகள் செயல்படும் தன்மையை இழந்து விடுகின்றன.

சில உறுப்புகள் அதிகப் பிணி கொண்டு அதன் செயல் தன்மை இழந்த பிறகு எந்த விதமான வைத்தியத்தாலும் அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. நாமே நமக்கு வரவழைத்துக் கொள்ளுவதுதான் நமக்கு வரும் பிணிகளெல்லாம்.

1.மன நிலையில் மாற்றமில்லாதவனுக்கு
2.என்றும் அமைதி கொண்டு வாழ்பவனுக்கு இவ்வலியும் பிணியும் வந்து அண்டாது.

நாம் மாறுபட்ட உணவை உட்கொள்ளும் பொழுது அம்மாறுபட்ட உணவினால் தான் “நம் உடல் நிலை சீர் கெட்டது…!” என்று செப்புகின்றோம்.

1.மாறுபட்ட இடம்.. மாறுபட்ட உணவு… என்று எண்ணும் பொழுதே
2.நம் எண்ணத்தையும் மாறுபடக் கொள்கின்றோம்.

அந்நிலையின் கலக்கத்தினால் நம் எண்ணமே அவ்வுணவை உட்கொள்ளும் பொழுதே நாம் எடுக்கும் சுவாசத்தினால் நம் உமிழ் நீர் சுரக்கும் தன்மையும் மாறுபடுகிறது.

அந்நிலையிலேயே அவ்வுணவு செரிக்கும் பொழுது இவ்வுடலுக்கும் அதை ஏற்கும் தன்மை குறைபடுகிறது. உணவின் மேல் நாம் பாரத்தைப் போடுகின்றோம்.

நம் உடல் நிலைக்குப் புசிக்கும் உணவை நாம் விரும்பி உண்ணும் பொழுது அதன் சுவை “நமக்கு அமிர்தம் போல் உள்ள நிலையாக” உணர்ந்து உண்டிட வேண்டும்.

உணவின் நிலையைப் பற்றி நம் முன்னோர்கள் எழுதிய பல நூல்களில் உணவை உண்ணும் நிலையையும்… நாம் உண்ணும் உணவினால் நம் உடல் பெறும் நிலைகளைப் பற்றியும்… பல நிலைகளை நமக்கு உணர்த்தியுள்ளார்கள்.

1.நாம் உண்ணும் உணவையே நாம் சந்தோஷத்துடன் அவனளித்த அமிர்தத்தை அமிர்தமாகப் புசித்திடல் வேண்டும்.
2.“பசித்துப் புசி…!” என்று நம் முன்னோர் செப்பியுள்ளனர்.
3.பசித்த நிலையில் புசிப்பவனுக்குப் புசித்த உணவெல்லாம் அமிர்தம் போல் உட்சென்று
4.அதன் சத்தினை இவ் உடல் ஏற்கும் பக்குவ நிலைக்கு இருந்திடும்.

நம் முன்னோர்கள் நமக்குகந்த பல உணவுகளைப் பக்குவ நிலைப்படுத்தி நமக்கு உணர்த்திச் சென்றார்கள். உண்ணும் உணவை நாம் ஆசையுடன் புசித்திட்டாலே இவ்வுடல் நிலைக்கும் இவ்வுள்ள நிலைக்கும் எப்பிணியும் வந்து அண்டாது.

நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதற விட்டும் மோத விட்டும் நம் கோபத்தையும் அதி சந்தோஷ நிலையையும் வளரவிட்டும் அந்நிலையில் நாம் உண்ணும் எவ்வுணவையும் நம் உடல் நிலை ஏற்பதில்லை.

நமக்கு வரும் வலியும் பிணியும் இம்மாறுபட்ட சஞ்சல நிலை கொண்ட எண்ணத்தின் மோதலினால்தான் நமக்கு வருகிறது என்பதனை அறிந்திடல் வேண்டும்.

வியாதி உள்ளவனை நாம் சென்று பார்த்தால் அவன் உடல் நிலையிலுள்ள அவ்வியாதியின் அணுக்கள் நம்மையும் வந்து தாக்கி நமக்கும் அவ்வியாதி வரும் என்று சொல்கின்றோம்.

வியாதியஸ்தனைக் காணச் செல்பவனுக்கு…
1.நல்நிலையில்… ஆரோக்கிய நிலையில்… சமமான நிலையில்… அவன் எண்ணத்தில்
2.சிறு அணுவும் தனக்கு அந்த வியாதி அண்டிக் கொள்ளுமே என்ற பயமில்லாத நிலையில் செல்பவனுக்கு
3.எந்த வியாதிஸ்தனின் உடலிலுள்ள எவ்வியாதி அணுவும் வந்து அண்டாது.

ஆனால்… அவ்வியாதியஸ்தனின் “உதிரத் தொடர்புடையவருக்கு” எண்ண நிலையில் ஒரு நிலை கொண்டவருக்கு அவன் சுவாச நிலை பட்டாலே அக்கிருமிகள் வந்து தாக்கும் நிலை உள்ளன.

சில வகை ஜுரங்களின் அணுக்கள் அவ்வியாதியஸ்தன் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்துடனே அவனைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.உடல் நிலையில் ஆரோக்கியமில்லாதவரும்
2.எண்ண நிலையில் கலக்கமுள்ளவர்களும்
3.அந்நிலையிலுள்ள வியாதியஸ்தனின் சுவாசக் காற்று பட்டாலே
4.அவனின் வினையான இவ்வியாதி அணு இவர்களையும் வந்து அண்டிக் கொள்ளும்.

இப்படர்ந்த பூமியில் உள்ள அணுக்கள்தான் யாவையுமே. வியாதியின் அணுவும் இக்காற்றில்தான் உள்ளது. அவ்வியாதியைக் குணப்படுத்தும் மருந்தும் இக்காற்றில்தான் உள்ளது.

நாம் ஏற்கும் சுவாசம் கொண்டுதான் அனைத்து நிலைகளுமே நமக்கு வருகின்றன. “இவ்வெண்ணத்தினால் வருவதுதான் எல்லாப் பிணியும்…!”

இன்று பல புதிய புதிய வைத்தியமும் தான் வளர்ந்துள்ளன.

ஜீவராசிகளின் பெருக்கத்தினாலும் பல ஆலைகளிலிருந்து வெளிப்படும் கழிவின் புகையினாலும் விஞ்ஞானம் கொண்டு இப்பூமியின் பொக்கிஷத்தை நாம் பிரித்து எடுத்தினாலும் தாவர வர்க்கங்களின் நிலையின் குறைவினாலும் வந்த வினைதான் “இன்று இக்காற்றில் கலந்து வரும் புதிய புதிய பிணிகளெல்லாம்…!”

இன்று இவ்வுலகம் உள்ள நிலையில் ஜீவராசியின் அதிபெருக்கத்தைச் சமப்படுத்தினால்தான் இவ்வுலகம் இனி வரும் மாற்றத்திலாவது தாவரங்கள் செழித்து வளர்ந்திடும்.

1.தாவரங்களின் வளர்ச்சிதான் உலகத்தின் உண்மையான வளர்ச்சி.
2.விஞ்ஞானம் கொண்டு வளரும் வளர்ச்சியல்ல இவ்வுலக வளர்ச்சி.

ஜீவராசிகளின் இனப்பெருக்கத்தைச் சமப்படுத்திடும் நிலை உணர்ந்தே வந்திடுங்கள்.

தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

தீமையை நீக்கிய அனுபவங்கள் இல்லையென்றால் தியானத்தைச் செய்து பலனில்லை

 

படித்ததை மட்டும் வைத்துக் கொண்டு இன்ஜினியர் வேலை பார்த்தால் அவர் காரியத்திற்கு ஆகாது. அனுபவ சித்தி அவசியம் வேண்டும்.

அதைப் போன்று தான் யாம் சொன்னதை எல்லாம் வெறும் பாடமாக வைத்துக் கொண்டு “சாமி சொன்னார்…!” என்று மட்டும் எண்ணக் கூடாது.

உபதேசிப்பதை எல்லாம் முதலில் ஆழமாகப் பதிவு செய்து ஞாபகத்தில் வைத்து… அதை உங்களுக்குள் வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
1.சந்தர்ப்பத்திலே குறைபாடுகள் எப்படி வருகின்றது…? என்று அறிந்திடும் அந்த அனுபவம் வேண்டும்.
2.யாம் சொன்னதை எடுத்துப் பயன்படுத்தி அந்தக் குறைகளை மாற்றி அமைக்கக்கூடிய அனுபவம் பெற வேண்டும்.
3.”எது வந்தாலும்” அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து… நல்லதாக வேண்டும் என்று அதைத் தூய்மைப்படுத்தி…
4.அப்படித் தூய்மையாக்கிய அனுபவங்கள் கட்டாயம் வேண்டும்.

படித்துப் பட்டம் பெற்ற இன்ஜினியர் என்றாலும் அனுபவம் இல்லை என்றால் படித்த பாடத்தால் பலன் இல்லை. மருத்துவர்களாக வருபவர்கள் முதலிலே மருத்துவம் பற்றியதை முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்கின்றார்கள்.

படித்த படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு “நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது…” அவர்களுக்கு அனுபவத்திற்கு என்று தனியாகப் பயிற்சி கொடுப்பார்கள்.

ஏனென்றால் ஒருவருக்கு ஒரு நோய் இருக்கிறது என்றால் படித்ததன் பிரகாரம் மட்டும் மருந்து கொடுக்க முடியாது. காரணம்…
1.அவர் உடலில் மற்றொரு உபாதை இருக்கும்…
2.அதற்கு இந்த மருந்து எதிர்ப்பதம் ஆகிவிடும்.

அதாவது ஒருவருக்கு ஆஸ்த்மாவும் இருக்கும்… இரத்தக் கொதிப்பும் இருக்கும். ஆஸ்துமாவுக்கு மருந்து கொடுத்தால் இரத்தக் கொதிப்புக்கு ஆகாது. இரத்தக் கொதிப்புக்கு மருந்து கொடுத்தால் ஆஸ்துமாவுக்கு ஒத்துக் கொள்ளாது.

மீண்டும் அவருக்கு நோய் அதிகமாகும்… வேதனையாகி பாதிப்புகள் அதிகமாகும்.

ஆனால் இது இரண்டையும் சமப்படுத்தும் நிலையாக
1.அதற்கு எப்படிப்பட்ட மருந்து கொடுக்க வேண்டும்…? என்று அந்த மருத்துவர் சிந்தனை செய்து
2.தன்னுடைய அனுபவத்தால் செயல்படுத்தி இரண்டையும் சீராக்கினால் தான் அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆனால் “இன்ன நோய்க்கு… இன்ன மருந்து தான்” கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அந்த ஆஸ்துமாவிற்கு என்று அவர் தனித்து மருந்து கொடுத்தால் சீராக வராது இரத்தக் கொதிப்புக்குக் குளிர்ச்சியான நிலை உருவாக்கும்படி செய்தால் ஆஸ்துமாவுக்கு அதிகமாகிவிடும். கர்…புர்… என்று இழுத்துக் கொண்டிருக்கும்.

அப்பொழுது எந்த நோயை நீக்குவது…?

ஆகவே அனுபவரீதியிலே இதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று சிந்தித்து
1.ஆஸ்துமாவுக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த உஷ்ணத்தை மேலே ஏற்றி
2.அதனுடன் இரத்தக் கொதிப்பிற்கு குளிர்ச்சிக்குண்டானதைக் கொடுத்துச் சமப்படுத்திக் கொண்டு வந்தால் இரண்டும் சமமாகும்.
3.ஆஸ்துமாவையும் குறைக்கும்… இரத்தக் கொதிப்பையும் குறைக்கும்.

ஆனால் சமப்படுத்த முடியாத மருந்தைக் கொடுத்தால் அது வேலையாகாது. குளிர்ச்சியைக் கொடுத்துத்தான் கொதிப்பை அடக்க முடியும். ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமான செயலாக்கங்கள் வரும். அதனுடைய செயலாக்கங்களை அறிந்து அனுபவரீதியிலே கொண்டு வர வேண்டும்.

அதற்குத்தான்…
1.எம்முடைய (ஞானகுரு) அனுபவத்தை உபதேச வாயிலாக உங்களிடம் சொல்கின்றேன்.
2.அனுபவத்தைச் சொல்லி எந்த நிமிடத்தில்… அந்தக் குறைகள் எப்படி உங்களை இயக்குகின்றது…? என்றும்
3.அதை மாற்றி அமைக்க ஈஸ்வரா… என்று உங்கள் உயிரை எண்ணி அருள் சக்திகளை அங்கே நிலை நிறுத்தி
4.உங்கள் உடலுக்குள் அதை வலுவாக்க வேண்டும் என்று வாக்கினால் அதைப் பதிவு செய்கிறேன்.

அந்தப் பதிவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி நான் சொன்னதை எல்லாம் நீங்கள் கடைப்பிடித்து…
1.நான் செய்தேன் என்று செயல்படுத்தி அனுபவபூர்வமாக ஒவ்வொன்றாக்க் கொண்டு வந்தால்
2.அதன் வழி தான் இதை மாற்றியமைக்கக்கூடிய நிலையைக் கொண்டு வர முடியும்.

தொழிற்சாலையிலும் சரி… ஒரு இயந்திரத்தைச் சீராக்குவதிலும் சரி… அதைப் பற்றி அனுபவரீதியாகத் தெரிந்த பிட்டர்கள் (FITTER) இருப்பார்கள். படித்தவர்களைக் காட்டிலும் அவர்கள் அனுபவ அறிவு கொண்டவர்கள்.

ஆனால் இன்ஜினியரோ நான் சொன்னபடி செய்ய வேண்டும் என்று சொல்லலாம். அதன்படி செய்தும் விடலாம் ஆனால் அந்த இயந்திரம் வேலை செய்யும் போது அங்கே தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.

தேய்மானம் ஆகும் போது அங்கிருக்கும் பிட்டருக்கு அதை பற்றி அனுபவம் இருக்கிறது. இந்த இடத்தில் சாய்வாக இருக்கின்றது… சமமாக்கி நேராக்கினால் தேய்மானம் ஆகாது… சரியாகிவிடும் என்று அவன் சொல்கிறான்.

ஆனால் படித்தவன் நான் சொல்கின்றேன்..! பிட்டர் நீ இந்த மாதிரிச் சொல்கிறாயே என்று இஞ்சினியர் சொன்னால் சரியாக வருமா…?

சில பேர் இப்படித்தான் நான் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருக்கின்றேன்… தியானம் எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றேன். குண்டலினி யோகா செய்திருக்கின்றேன் என்றெல்லாம் சொல்வார்கள்.

1.ஆனால் “அந்த நுணுக்கம்…” எதிலிருந்து வருகின்றது…? என்று இல்லாதபடி சொன்ன பாடத்தை ஒப்படைக்கின்றார்கள்.
2.எப்படி மாற்றிக் கொண்டு வருவது…? என்பதை ஒதுக்கி அதை விட்டு விடுகிறார்கள்.

படித்தவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். படிக்காதவர்கள் தியானத்தைப் பற்றிச் சொல்லும் பொழுது நான் எத்தனையோ படித்திருக்கின்றேன் எனக்கு எல்லாம் தெரியும் என்னிடம் வந்து நீ சொல்கின்றாயா…? என்று சொல்வார்கள்.

இப்படிச் சொன்னால்
1.படிக்காதவர் கண்டுபிடித்துச் சொன்னதை
2.படித்தவர் அறிய முடியாது போய்விடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

(அந்த உணர்வின் தன்மை கொண்டு உணர்ச்சிகள் கொண்டு செய்தோம் என்றால் அது பக்குவமாகும்).

வீட்டில் வடை சுடுவார்கள். எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக் கொண்டு நாமும் சொல்லலாம் அட.. அடுப்பில் சட்டியை வைத்து எண்ணை காய்ச்சுகிறார்கள்… மாவைத் தட்டிப் போடுகிறார்கள்… அவ்வளவு தான்…! என்றும் நினைக்கலாம்.

தண்ணீரைத் தெளித்து அவர்கள் எண்ணையின் சூட்டைக் கணிப்பார்கள் அது சுய்… என்று சப்தமிடும். ஓ… இவ்வளவுதானா…! என்று இவர்களும் அதே போன்று செய்து பார்க்கும் போது சுய்… என்று சப்தமிடும்.

1.ஆனால் அந்தச் சப்தத்தின் வித்தியாசங்கள் அவர்களுக்குத் தெரியும்
2.எந்த அளவிற்கு எண்ணெய் காய்ந்திருக்கிறது என்று…!

அதற்குத் தகுந்தது போன்று அவர்கள் மாவை பிசைந்து கொண்டே இருப்பார்கள். அல்லது மற்ற வேலை செய்வார்கள் அதற்குப்பின் இந்த வடையைப் போடுவார்கள். சமமாக அவர்கள் 10 வடையைப் போட்டர்கள் என்றால் அந்தப் பத்திற்கும் சூடு சரியாக இருக்கும். வெந்து சீராக வரும்… ருசியாகவும் இருக்கும்.

ஆனால் புதிதாக வடை சுடுபவர்கள் தட்டிப் போட்டால் ரெண்டு அல்லது மூன்று வடையைப் போட்டதும் எண்னையிலிருக்கும் சூட்டை எல்லாம் அது எடுத்துக் கொள்ளும். அடுத்து வடையைத் தட்டிப் போட்டால் சரியாக வேகாது. எண்ணை எல்லாம் மாவிற்குள் புகுந்து விடும்… எண்ணெய் காணாது போய்விடும்.

ஆனால் அனுபவம் பெற்றவர்கள் சுட்டுப் போட்டால் வடையில் எண்ணெய் இல்லை… வடை மொறு மொறு என்று ருசியாக இருக்கிறது.

ஆனால் அவர்கள் சுட்டதில் எண்ணை இருக்கிறது. மாவாக இருக்கிறது என்று சூட்டைக் கூட்டினால் மேலே கருகிவிடும். ஐய்யய்யோ கருகிவிட்டதே என்று எடுத்தால் இந்தப் பக்குவம் தவறும் போது என்ன ஆகிறது…? சாப்பிட்டால் ருசி இல்லை.

காரணம் அந்தப் பக்குவம் தெரிய வேண்டும்…!

ஆக எதுவுமே… ஒரு சிறியதாக இருந்தாலும் எல்லாவற்றிலும் அந்தப் பக்குவம் வேண்டும்
1.ஆன்மீகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம் என்றால் “பக்குவ நிலை பெறுவதற்குத் தான்” உணர்வுகளை அனுபவித்துச் சொல்கின்றோம்.
2.எம்மைப் போன்று நீங்களும் அனுபவரீதியில் தியானத்தை எடுத்து வளர்ந்தால் “உங்களைக் காப்பதற்கு உங்கள் எண்ணம் உதவும்…”

நம்முடைய அந்தஸ்து

நம்முடைய அந்தஸ்து

 

வாழும் காலத்தில் அவரவர்களின் அந்தஸ்தைப் பொறுத்த வாழ்க்கை நிலை வாழ்வதாக இம்மனிதன் சொல்கின்றான். மனிதன் சொல்லும் அந்தஸ்து இப்பொருள் சுகத்தைக் கொண்ட அந்தஸ்து.

பொருளை வைத்து… அவரவர்களின் கையிலுள்ள செல்வத்தை வைத்து… இன்றுள்ள மனிதன் மனிதனை எப்படி எடை காண்கின்றானோ அந்நிலைக்கு மேல்…
1.இன்று நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நாம் பெற்ற வழி நெறிகளைக் கொண்டு
2.நம் ஆத்மா இவ்வுடலை விட்டுச் சென்ற பிறகும்
3.நம் ஆத்மாவிற்கும் அந்தஸ்து நிலையுண்டு (தர நிலையுண்டு).

வாழ்ந்த காலத்தில் மனிதன் தனத்தை வைத்துத் தரத்தை நிர்ணயிக்கின்றான். இத்தரம் எத்தரம்…? மனிதனே மனிதனுக்கு அளிக்கும் தரம் தான் இந்தத் தரம்.

வாழ்ந்த வாழ்க்கையில்… எண்ணம் செயல் அனைத்தையுமே ஆத்மீக நெறி கொண்ட அன்பு நிலை கொண்டு வாழ்பவனின் தரம்தான் உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகும் நிலைத்து நிற்கும் “நிர்மலமான ஜோதி நிலை கொண்ட தரம்…!”

அத்தகைய தரம் பெற்ற ஆத்மாவுக்கு ஆண்டவனாக வாழும் அரும் பெரும் பொக்கிஷ நிலை கிட்டுகிறது.
1.வாழும் காலத்தில் இவ்வாத்மீக நெறி கொண்டவன் அவ்வழிக்கு வந்துவிட்டால்
2.மற்ற அணுக்களுக்கும் வந்து தாக்கிடவும் செய்யாது.
3.முதலில் அவ்வுடலில் இருந்த மற்ற அணுக்களின் (ஊழ்வினைகள்) சக்தியும் செயலற்றுப் போகின்றன.

ஆத்மீக வழிக்கு வந்து… அறம் பெற்று… வாழும் தரம் கொண்டே வாழ்ந்திட்டால்… இவ்வுலக வாழ்க்கையில் மனிதன் வாழும் நாட்கள் தான் மிகவும் குறுகிய நாட்கள்.

இவ்வாவியான உலஎண்ணத்தையும் செயலையும் நன்றாக்கி வாழ்ந்திடுங்கள். தம் ஆத்மாவிற்கு நாம் சேர்க்கும் சொத்து அவைதாம்…! என்பதனை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.கில் ஆத்மாவுடன் ஆவி உலகில் வாழும் நாள் தான் நீடித்த நாள் இவ்வாத்மா இருக்கும் நாள்.

இவ்வுடலுடன் உள்ள நாட்களில் நாம் நமக்களித்த இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
1.நம் ஆத்மாவுடன் ஆவி உலகத்தில் வாழும் வாழ் நாட்களுக்கும்
2.இவ்வுடலுடன் உள்ள பொழுது நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்ட எண்ணமும் செயலும்தான் வந்து
3.நம்முடன் என்றும் சப்த அலைகளாக சத்து கொண்ட ஆத்மாவாக ஆவி உலகில் வாழப் போகின்றோம் என்பதை உணரல் வேண்டும்.

ஏனென்றால் நாம் சேர்க்கும் சொத்தும் சுகமுல்ல நம்முடன் வருவது.

நாம் உடலுடன் உள்ள நிலையில் நாம் இப்பிறவி எடுத்து நம் ஆத்மா என்று பிரிகிறதோ அன்று வரை “நம் சப்த அலைகள் அனைத்துமே” நம் ஆத்மாவுடன் நம் கூட வருகின்றன.

ஆகவே எண்ணத்தையும் செயலையும் நன்றாக்கி வாழ்ந்திடுங்கள். தம் ஆத்மாவிற்கு நாம் சேர்க்கும் சொத்து அவைதாம்…! என்பதனை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

ஞானிகள் வெளிப்படுத்தும் நல்ல அலைகளை ஈர்த்து வாழும் பக்குவத்திற்கு வாருங்கள். பல நிலை கொண்ட தீட்சண்ய ஆவிகளின் செயலில் இருந்து தப்பி வாருங்கள்.

இக்காற்றில்தான் அனைத்து சக்திகளும் உள்ளன என்று பல முறை உணர்த்தியுள்ளேன்.

நம் உடலுக்குத் தேவையான மருந்தும்… உணவும்… நீரும்… காற்றும்… உலோகமும்… பல நிலை கொண்ட திரவங்களும்… இப்பூமித்தாய் பதித்துள்ள அனைத்து சக்திகளும்… இக்காற்றினிலே கலந்துள்ள பொழுது
1.நமக்கு வேண்டிய நல் நிலைகளை
2.நாம் ஈர்த்து வாழும் பக்குவம் பெற வேண்டும்.

எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்

உயிரைக் கடவுளாக வணங்கி உடலை ஆலயமாக நாம் மதித்துப் பழக வேண்டும். மனிதனை உருவாக்கிய நல்ல குணங்களைத் தெய்வமாக மதிக்க வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடலைப் பெற்றிருக்கின்றோம்… உடல் சிவமாக இருக்கின்றது நம் கண்கள் கண்ணனாக இருக்கின்றது.

இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் வேதனை கோபம் போன்ற குணங்கள் அதிகமானால் இரத்தக் கொதிப்பாகிவிடுகிறது.

அந்தக் கோபத்துடன் ஒரு கணக்கைப் பார்த்தால் அது சரியாக வராது. சரியாக வரவில்லை என்றால் “எவன் எழுதி வைத்தானோ…?” என்று அடுத்தவன் மேல் தான் இந்தக் கோபம் செல்லும்.

நாளாக நாளாக இந்தக் கோபம் பெருகி….
1.சிறு மூளையில் இருக்கும் ட்ரான்சாக்சன் செய்யக்கூடிய அந்த நரம்புகள் வெடித்தால் மூக்கு வாய் வழியாக இரத்தம் வரும்.
2.அதே சமயத்தில் இருதயத்தை இயக்கக்கூடிய நுண்ணிய நரம்புகள் செயலிழந்து இருதய அடைப்பு (ஹார்ட் அட்டாக்) வரும்.

வேதனை வேதனை என்று எண்ணினால் கண்ணுக்குள் விஷத்தன்மை பாய்ந்து அது ஈர்க்கும் தன்மை இழந்து இருள் சூழும். கருவிழி நன்றாக இருந்தாலும் பார்வை மங்கிவிடும் மருத்துவரிடம் சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பார்கள்.

1.அப்படிப் பண்ணிவிட்டான்… இப்படிப் பண்ணி விட்டான் என்று அடிக்கடி வேதனைப்படும் பொழுதெல்லாம்
2.அந்த (வேதனை) நஞ்சு கண்ணிலே படர்ந்து ஆதை இருளாக்கிவிடுகிறது
3.இப்படி எல்லாம் கண்ணுக்கும் நாம் கெடுதல் செய்கின்றோம்.

ஆரம்பத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் புழு உடலாக இருக்கும் போதே துன்பங்களில் இருந்து விடுபடுவதற்காக… “பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும்…” என்று எடுத்துக் கொண்ட உணர்வு தான் வளர்ச்சியாகிக் கண்களாக உருப்பெற்றது.

கண்கள் உருப்பெற்ற பின் பார்த்து
1.தீமை என்ற உணர்வை எடுத்து… உணர்ச்சியைக் கூட்டி எண்ணங்கள் வருகிறது
2.அந்த எண்ணத்தின் உணர்ச்சி கொண்டு “தன்னைக் காக்கும் நிலை…” வருகிறது.
3.இது எல்லாம் நாம் நுகர்ந்த உணர்வு எண்ணங்களாக வந்து…
4.இந்த உணர்ச்சிகள் நம்மை இயக்கி அதன்வழி நம் உடலாகி…
5.அதன்வழி நம்மை (உரு)மாற்றிக் கொண்டே வருகின்றது.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் குரு காட்டிய அருள் வழியில் செயல்பட வேண்டும். காரணம் குறுகிய காலமே இந்த மனித உடலில் வாழ்கின்றோம்.

கோடிக் கோடி… கோடிக் கோடி சொத்துகளைச் சேர்த்து வைத்தாலும் அதைப் பார்த்த பின் மற்றவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டு விடுகிறது. பொறாமைகள் வந்த பின் என்ன நினிக்கின்றோம்…?
1.இவன் எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்… திரும்பத் திரும்ப இடைஞ்சல் செய்கின்றான்
2.என் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமையால் இப்படிச் செய்கின்றான் என்று
3.செல்வம் குவிந்திருந்தாலும் அதன் வழி விரோதிகளைத் தான் வளர்க்க முடிகிறது… பகைமைகளைத் தான் உருவாக்குகின்றோம்.
4.பகைமைகளை உடலில் சேர்த்து அந்த உணர்ச்சியோடு தான் ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டு ஆத்திரப்பட்டு வாழுகிறோம்
5.அதனால் உடலில் பல தொல்லைகள் தான் வளர்கின்றது

இதைப் போன்ற நிலையில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் முயற்சி எடுங்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் யாம் கொடுத்த அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து… துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழகுங்கள். “எங்கே வெளியே சென்றாலும் அதை உற்று நோக்கிப் பார்த்து ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்…”

பிறரின் துன்பங்களைக் கேட்டறிய நேர்ந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதன் வழி அதை அடக்கி… அறியாது வந்த தீமைகளிலிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்; பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்; நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து எடுத்து மாற்றிக் கொண்டே வேண்டும்

அது தான் தனுசுகோடி…! கோடிக்கரை என்ற மனித உடலில் இருக்கின்றோம்…. உடலை விட்டுச் சென்றால் உயிருடன் ஒன்றி ஒளியாக மாறி நாம் விண் செல்கின்றோம்… கல்கி.
1.இந்த உடலைக் கழட்டிவிட்டு
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாறுகின்றோம்

ஏனென்றால் விஞ்ஞான உலகில் எத்தனையோ விஷ அணுக்களாகக் பரவி “வைரஸ் என்ற கிருமிகள்” பல விதமான காய்ச்சல்களாகப் பரவிக் கொண்டிருக்கிறது சில உடலில் சில குடும்பங்களில் சில நாடுகளில் இது அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

ஒருவருக்கொருவர் சண்டையிடுதலும் வேதனைப்படுதலும் மந்திர ஜாலங்கள் செய்வதும் போன்ற செயல்கள் நடந்து கொண்டுள்ளது. மாயாஜாலங்களைச் செய்து அது நடக்கவில்லை… ஒன்றும் முடியவில்லை என்றால் சாப அலைகளை விட்டு உடலை விட்டுப் பிரிந்துவிடுகிறது.

இப்படி வெளிச் செல்லும் ஆன்மாக்கள் குடும்பத்தில் தெருக்களில் ஊர்களில் பல தொல்லைகள் கொடுக்கக்கூடியதாக மக்களுக்குத் துன்பம் விளைவிப்பதாக வந்து கொண்டிருக்கிறது.
1.அதிலிருந்து மீண்டிட நம் வீட்டிலும் சரி தெருவிலும் சரி ஊரிலும் சரி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை “அடர்த்தியாகப் பரவச் செய்ய வேண்டும்…”
3.மக்களை மீட்கக் கூடிய சக்தியாக வளர வேண்டும்
4.ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் நம் குருநாதர் உணர்த்திய வழியில் செயல்படுத்த வேண்டும்

இவ்வாறு செய்தால் உயிர் வீற்றிருக்கும் ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் நிலையாக வருகிறது. மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கு நல்ல அமுதாகக் கிடைக்கிறது.

எல்லா உயிரையும் கடவுளாக மதிக்கும் பொழுது… ஈசனாக மதிக்கும் பொழுது… அவர்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நமக்குள்ளும் அது பெருகுகிறது. இந்த வழியில் வளர்த்து நாம் ஆனந்தப்பட வேண்டும்.

கோடிக்கரையிலிருக்கும் நாம் தனுசுகோடியாக ஒளியாக…
1.எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக நாம் மாற வேண்டும்.
2.எதிலுமே இருள் என்ற நிலை வராதபடி பேரருள் பேரொளியாகப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

தியானத்தில் இருந்தாலும் குரு வழியில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்

தியானத்தில் இருந்தாலும் குரு வழியில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்

உடல் ஆசையை (முதன்மையாக) வைத்து “ரெக்ரியேசன் கிளப்” ( என்று அதில் ஆயுள் மெம்பராகச் சேர்வார்கள். தண்ணீ குடிப்பது (மது) போன்று எத்தனையோ பல தீய பழக்க வழக்கங்களை வைத்து அதிலே நாங்கள் ஒவ்வொருவரும் மெம்பராக இருக்கிறோம் என்கிறார்கள்.

வியாபாரமும் மற்றதுகளையும் அங்கே பேசுவார்கள். ஆனால் அதிலே ஏதாவது நஷ்டமாகிவிட்டால் என்ன ஆகும்…?

தவறான வழியில் சென்று… “எனக்குக் கெடுதல் செய்தான்… எனக்குத் துரோகம் செய்தான்…” என்று ஒருவருக்கொருவர் பகைமைகளை உருவாக்கி வெறுப்பையும் வேதனையையும் (அந்த ஆயுள் மெம்பர்கள்) வளர்த்துக் கொள்வார்கள்.

வேதனையை வளர்த்துக் கடைசியில் உடலை விட்டுப் பிரிந்த பின் ஆவியாக யார் கெடுதல் செய்தானோ அந்த உடலுக்குள் சென்று அவனையும் வீழ்த்தும்.. அதற்குப் பின் நாயோ நரியோ பாம்போ தேளோ அத்தகைய உடலைத் தான் பெற முடியும்.

இத்தகைய ஆயுள் மெம்பர் நமக்குத் தேவையில்லை…!

1.எப்பொழுதும் குருவுடன் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) நாம் இணைந்தே வாழ வேண்டும் என்ற நிலையில்
2.குரு காட்டிய அந்த அருள் வழியைப் பின்பற்றி
3.இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாமல் உடலுக்குள் உட்புகுந்த தீமைகள் இயக்காது தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆயுள் கால மெம்பர்கள் இதை முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும்.

1.குருவுடன் ஆயுள் கால மெம்பராக நான் (ஞானகுரு) இருக்கின்றேன்
2.அவர் எதையெல்லாம் பெற்றாரோ அவர் வழியினைக் கடைப்பிடித்து வருகின்றேன்.
3.குரு எனக்கு எதையெல்லாம் போதித்தாரோ… எவ்வாறு எனக்குள் அதைப் பதிவு செய்தாரோ.. அதைக் கடைப்பிடித்து வருகின்றேன்.

குருவுடன் இணைந்து ஆயுள் மெம்பராக இருக்கின்றேன் நீங்களும் என்னைப் போல் அவருடன் இணைந்து ஆயுள் மெம்பராக இணைதல் வேண்டும்.

குடும்பத்துடன் தான் நாங்கள் குருவுடன் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தோம். நீங்களும் குடும்பத்துடன் குருவுடன் இணைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளை குறைந்த காலமாவது உபதேசங்களைக் கேட்டிருப்பீர்கள். குருவின் அருள் வழியைக் கடைப்பிடிப்பதை நீங்கள் ஒரு கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

மெய் ஞானத் திருச்சபையின் அங்கத்தினர்களாக நாம் இருக்கின்றோம். நம் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளை நீக்க வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்தாக வேண்டும் அதற்குத் தான் அருள் ஞானச் சக்கரத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளோம்.

மாமாகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு… பேரருள் பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் அதில் ஆயுள் மெம்பராக நாம் சேர வேண்டும்.

அருள் ஞானச் சக்கரத்தைப் பார்க்கும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தச் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதன் பின் உங்களுக்கு எதுவெல்லாம் நல்லதாக வேண்டுமோ…
1.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது கிடைக்க வேண்டும்; நண்பர்களுக்குக் கிடைக்க வேண்டும்…
2.நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும்;
3.தொழில் செய்யும் இடத்தில் குற்றம் குறைகள் நீங்க வேண்டும்;
4.துருவ நட்சத்திரத்தின் சக்தி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்;
5.பொருளறிந்து செயல்படும் திறன் எல்லோரும் பெற வேண்டும்
6.உண்மையை உணர்ந்து… தெளிந்த நிலை எல்லோரும் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று
7.புருவ மத்தியில் உயிரை வேண்டி சக்கரத்திற்கு முன் இப்படி எண்ணும் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும்.

குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் சக்தி என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று தியானித்தால் நோய் நீங்கும்.

நோய் நீக்கும் சக்தியை எடுத்து நமக்குள் விளைய வைத்து அதன் வழி செயல்பட்டால் எல்லாம் நல்லதாகும். உங்களால் அடுத்தவருடைய நோய் போகும்… ஆனால் அவருடைய நோய் உங்களுக்கு வராது.

1.ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக “அருள் ஞானச் சக்கரம்” கொடுக்கின்றோம்.
2.உலகில் படர்ந்து கொண்டிருக்கக்கூடிய நச்சுத்தன்மையிலிருந்து உங்களை மீட்டிடும் சக்தியாக வரும்.

ஆகவே துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக என்றுமே நாம் இணைந்து இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதை ஒரு தலையாகக் கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து அதிலே நாம் ஆயுள் மெம்பராகச் சேரும் போது “நம்முடைய ஆயுள்” (வாழ்க்கை) அங்கே செல்கின்றது.

ஆவி உலகில் உள்ளவர்களும் “எண்ணமும் செயலும் கொண்டுதான் வாழ்கின்றார்கள்…”

ஆவி உலகில் உள்ளவர்களும் “எண்ணமும் செயலும் கொண்டுதான் வாழ்கின்றார்கள்…”

 

நம்மை நாம் பக்குவப்படுத்தி அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்கும் போது பல ஞானிகளும்… முன்னோர்களும்… நம் ஜெபத்துடன் வந்து அருள் தருகின்றார்கள்.

முன்னோர்கள் என்பது நம் குடும்பத்தில் நாம் பிறவி எடுத்த இப்பிறவியில் உதிரத் தொடர்புடைய பெரியோர்களின் ஆசியும் நமக்குக் கிட்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் அக்குடும்பத்தின் மூதாதையர்கள் இறந்த பிறகு உடனே மறு பிறப்பிற்கு வராமல் தனது உதிரத் தொடர்புடைய வம்ச வழிக்கு ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்து அக்குடும்பத்தைக் காக்கும் தெய்வமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

வாழ்ந்த நாளில் அக்குடும்பத்திற்காகச் செய்த நன்மையைக் காட்டிலும் ஆவி உலகில் இருந்து கொண்டே பல நற்செயல்களைச் செய்கின்றனர்.
1.தன் உதிரத் தொடர்பு உடையவர்கள் நிலையெல்லாம் மறைந்த பிறகுதான்
2.அவர்கள் மறு பிறப்பிற்கு வருகிறார்கள்.
3.இப்படி பிறப்பு இறப்பு என்னும் நிலைகளில் பல நிலைகள் உள்ளன.

நம் முன்னோரை வணங்கி நாம் ஆகாரம் படைத்து அவற்றைப் பட்சிகளுக்கு வைக்கின்றோம். அப்பட்சிகள் வந்து உண்ணும் நிலையில் நாம் நம் முன்னோரே அதை வந்து உண்டதாக மகிழ்கின்றோம்.

நம் முன்னோர் அப்பட்சியின் நிலைக்கு எப்படி வருகிறார்கள்…? அவர்களின் ஆத்மா அப்பட்சியின் உடலில் ஏறுவதல்ல.

ஞானிகளும் ரிஷிகளும் செயல்படுவதைப் போல் இந்நல்நிலை பெற்ற குடும்ப முன்னோர்களும் அப்பட்சியின் எண்ணமுடன் கலந்து அப்பட்சியையே தான் வருவதாக இயங்கச் செய்து அப்பட்சி உணவு எடுக்குங்கால் நாம் படைக்கும் அவ்வுணவில் உள்ள மணத்தை அவர்கள் ஈர்த்து எடுத்துச் செல்கிறார்கள்.

நாம் அவர்கள் எடுத்தார்கள் என்பதனை அறிய அப்பட்சியை ஒரு கருவியாக்கி அவர்களே அப்பட்சியுடன் வந்து எடுத்துச் செல்வதுதான் நாம் படைக்கும் நிலையெல்லாம்.

பறக்கும் நிலைகொண்ட அப்பட்சியின் உடலில் செயல்படுவது எளிது. அதன் நிலை கொண்டு தான் நம் முன்னோர்கள் நிலையும் இங்கு நடக்கின்றது.

எவ்வுடலையும் தன் செயலுக்குக் கட்டுப்படுத்திட எவ்வாவிகளுக்கும் முடியும். அவ்வாவிகளின் குண நிலைக்கு ஏற்பச் செயல்படுத்திடும் நிலை கொண்டவரின் நிலைக்கெல்லாம் அவ்வாவிகள் வருகின்றன.

குறிப்பிட்ட காலங்களில் இன்னும் பல இடங்களில் பட்சிகளுக்கு உணவு வைத்தால் அவ்வுணவை அதே நேரத்தில் வந்து அப்பட்சிகள் எடுத்துச் செல்வதைக் கண்டிருப்பீர்கள்.

இன்றும் அருணகிரிநாதர் தன் செயலை பட்சியின் மேல் வந்து அவருக்குப் படைக்கும் உணவை எடுத்துச் செல்கின்றார்.

இவ்வாவி உலக வாழ்க்கை ஒன்று உள்ளது.

மனித வாழ்க்கையில் உண்டு உறங்கி உழைத்து வாழ்கின்றோம். இவ்வாழ்க்கைக்கே ஆவி உலகில் உள்ளவரின் வாழ்க்கையும் கலந்துதான் செயல்படுகின்றது. அவ்வாவி உலகில் உள்ளவரும் நம்முடனே சுற்றிக் கொண்டுதான் உள்ளார்கள்.

இன்று மனிதனையும் இப்பிம்பப் பொருள்களையும் நிழல் படம் எடுப்பதைப் போல் ஆவி உலகில் உள்ளவர்களையும் எடுத்திடலாம்.

1.ஆவி உலகில் உள்ளவர்களும் எண்ணமும் செயலும் கொண்டுதான் வாழ்கின்றார்கள்
2.தன் ஆத்மாவிற்கு அவர்களும் நுகரும் தன்மை கொண்டு
3.பல சக்தி ஆகாரத்தை ஈர்த்துத்தான் ஆவி உலக ஆத்மாவும் வாழ்கிறது.

ஜீவ உடலில் உள்ள நாம் திடப்பொருளை உணவாக்கி உண்ணுகின்றோம்.
1.இவ்வுடலில்லாத ஆவி உலக ஆத்மாக்கள் தன் ஆத்மாவுக்கு வேண்டிய உணவை
2.ஆவியாகவே ஈர்த்துத் தன் ஆத்மாவுக்கு உணவாக்கிச் சுற்றிக் கொண்டுள்ளன.

நாம் படைக்கும் உணவையும் சில இல்லங்களில் அவ்வில்லங்களில் உணவைச் சமைத்து வைத்த நிலையிலும் அவ் இல்லத்தில் இறந்தோர்கள் தனக்கு வேண்டிய உணவை இன்றும் வந்து அதன் சுவையை ஈர்த்தெடுத்துச் செல்கின்றார்கள்.

சில இல்லங்களில் கேட்டிருப்பீர்…! உறக்கத்தில் உள்ள பொழுதே எழுந்து நடமாடி வீட்டு வேலைகள் செய்து உணவு சமைத்து உண்பதாக எல்லாம்.

உறக்கத்திலேயே அனைத்தையும் செய்துவிட்டு விழித்த பிறகு கேட்டால் மறந்துவிட்டதாகச் சொல்லுவார்கள்.

உறக்கத்துடன் பல நிலைகளை இன்றும் பலர் செய்கிறார்கள். இவையெல்லாம் தன் ஆசை அடங்காத நிலைகொண்ட ஆவிகளின் நிலைகள் தான்.

தன் நிலையைச் செயல்படுத்திட…
1.தன் ஆசைக்கு இவ் உடல்களைத் தன் எண்ணத்துடன் கலக்கச் செய்து
2.அவர்கள் நிலையை மறக்கச் செய்து தன் செயலை தன் ஆசையை இவ்வாவிகள் பூர்த்தி செய்து கொள்கின்றன.

இவ்வாவிகளுக்கு மனிதர்கள் விழித்துள்ள நிலையில் அவர்கள் எண்ணத்தை அடங்கச் செய்து தன் செயலைச் செயல்படுத்திட முடியாத நிலையில் தன் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளத்தான் பலர் இரவில் தன்னை அறியாமல் உறக்கத்தில் நடந்திடும் நிலையெல்லாம்.

இவ்வாவிகள் தன் ஆசையைச் செயல்படுத்திடும் எண்ணத்துடனேதான் இவ்வுலகினில் சுற்றிக் கொண்டே உள்ளன. ஆகவே
1.நாம் பெறும் ஜெபம் முதலில் பிற ஆவியின் அணுக்களின் உந்தலில் இருந்து தப்பி
2.நம் சக்தியை நாம் உணர்ந்து நல் சக்தியை ஓங்கச் செய்து நாம் வாழ வேண்டும்.

நம் ஆன்மாவில் எது அதிகமாக இருக்கிறதோ… “அதுவே நம்மை இயக்கக்கூடிய சக்தியாக இருக்கும்”

நம் ஆன்மாவில் எது அதிகமாக இருக்கிறதோ… “அதுவே நம்மை இயக்கக்கூடிய சக்தியாக இருக்கும்”

 

வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றார்கள். ஆனால் ஆண்கள் வெளியிலே வேலைக்குச் சென்று விட்டு வந்து வீட்டில் வெறுப்புடன் இருக்கின்றார்கள். அப்போது பெண்கள் ஏதாவது கேட்டால் உடனே வெறுப்பாகப் பதில் சொல்வார்கள்.

எப்பொழுது பார்த்தாலும் என்னிடம் இப்படியே பேசிக் கொண்டிருந்தால் என்ன செய்வது…! கொஞ்சம் அன்பாகச் சாந்தமாகச் சொல்லலாம் அல்லவா… என்பார்கள் பெண்கள்.

நானா கோபமாகப் பேசுகின்றேன்… நீ தான் எனக்குக் கோபத்தை உண்டாக்குகின்றாய்…! என்று மீண்டும் சண்டையைத்தான் ஆண்கள் போடுவார்கள்.

சண்டை போட்டவுடன்… சரி… கோபமாக இருக்கிறார்…! கொஞ்சம் பார்த்துச் செய்யலாம் என்று பெண்கள் வேலையைச் செய்தால் அடுத்து என்ன நடக்கும்…?

கணவர்… அவர் எண்ணிய வேகத்தில் அங்கே வேலை நடக்கவில்லை என்றால் “நான் சொல்வதை விட்டு விட்டு ஏறுக்கு மாறாகச் செய்கின்றாய்…! என்று பழையபடி சண்டை வரும்.

இதெல்லாம் உணர்வின் இயக்கங்கள்…! நம்மை அறியாமலே இயக்குவது.

இப்படிக் கணவர் கோபமாகப் பேசிய உணர்வுகள் என்ன செய்யும்…? அடுத்து அவர் சம்பாதிக்கப் போகும் இடங்களிலும் இதே உணர்வுகள் அங்கே தடையாக வந்து சேரும். அப்போது சம்பாதிக்கக்கூடிய நிலையைச் சரியாக வைத்துக் கொள்கிறோமா…?

காரணம்… இதெல்லாம் சந்தர்ப்பம் தான். மோதலினால் உராய்வாகி இப்படி வரப்படும்போது “இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் நம்மை மாற்றி அமைக்கின்றது…?” என்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி ஆனபின்…
1.எனக்கு எல்லாமே மீண்டும் மீண்டும் கஷ்டமாக வருகிறது
2.என் மனதில் நிம்மதியே இல்லை என்ற எண்ணத்தில் தொழிலை விட்டு விடுவார்கள்.
3.சிந்தித்துச் செயல்படவில்லை என்கிற போது வேலையிலும் எதிர்ப்பு… வீட்டிற்கு வந்தாலும் எதிர்ப்பு…!

இது எல்லாம் எதனால் வருகின்றது…?

கோபத்தையும் வெறுப்பையும் விளைய வைக்கின்றேன்
1.வீட்டிற்குள் வந்து பொறுமை இல்லாதபடி சொன்ன பின்… அங்கேயும் வருகின்றது
2.அதே சமயத்தில் பொறுப்பு இழந்து தொழிலே சொல்லப்படும் போது அங்கே நாம் பார்க்கும் வேலையை மட்டமாக்குகின்றது
3.மேலதிகாரியோ அல்லது நம்மிடம் வேலை பார்ப்பவர்களோ நம்மிடம் எதிர்மறையாகச் செயல்படும் நிலை வந்து விடுகின்றது

இது எல்லாம் எங்கிருந்து எப்படி.. வருகிறது…?

குடும்பப் பற்றில் ஒருவர் இப்படி ஆகிவிட்டால் இந்த உணர்வுகள் குடும்பம் முழுவதும் பரவுகிறது. இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

அப்பொழுது அந்த இடத்திலே சுதாரித்து… நமக்குக் கோபம் வருகின்றது… அது எதனால் வருகின்றது…? என்று அறிதல் வேண்டும். தியானத்தைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

1.நம்முடைய உணர்ச்சிகள் ஏன் மாறுகின்றது…? என்று அதை மடக்கித் திருப்பி
2.அடுத்த கணமே அதை மாற்றி அமைக்க… ஆத்ம சுத்தியும் செய்யச் சொல்லும்.

இதையெல்லாம் உங்கள் அனுபவத்திலே தெரிந்து கொள்ளலாம்

ஆனால் அந்தப் பழக்கம் இல்லை என்றால் மீண்டும் சண்டைக்குத் தான் செல்வோம். அதற்குப் பின் வீட்டில் சண்டை வருகின்றது… எங்கே போனாலும் ஒரே பிரச்சினையாக இருக்கின்றது… நான் சொன்னால் யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்…! என்று அப்படித்தான் போகும்

அதே சமயத்தில் முழுமையாகத் தெரியாதபடி “இந்தத் தியானத்தைத் தான் கடைபிடிக்கிறேன்” என்று ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் எனக்குத் தொல்லையே வருகிறது… தொல்லை விடமாட்டேன் என்கிறது…! என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

காரணம்… இது எல்லாம் தாய் கருவிலே பூர்வ புண்ணியத்தால் வருவது. அப்படிப் பூர்வ புண்ணியத்தில் வந்தாலும் கூட துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இந்த உணர்வைக் கூட்டி நாம் அதையும் மாற்ற முடியும்

நம்மை அறியாமல் இயக்கக்கூடிய அத்தகைய நிலைகளை அடக்குவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியே கொடுக்கப்படுகின்றது. செய்து பார்த்தேன் முடியவில்லை என்று விட்டுவிடக்கூடாது.

அடுப்பில் சமையல் செய்கின்றோம் என்று அவசரத்துக்கு வேக வைத்தால் எப்படி ஆகும்…?

நெருப்பைக் கூட்டியவுடன் அடியில் உள்ளது கருகிவிடும். நடுப்பகுதியில் உள்ளது ஒரு மாதிரி இருக்கும் மேலிருப்பது வேகாமலே போய்விடும். இப்படி மூன்று நிலை ஆகிவிடும். நெருப்பை வைப்பதில் இத்தனை நிலைகளும் இருக்கிறது.

அதாவது கனமாக இருக்க கூடிய பொருள்கள் கீழே சென்று விடுகின்றது.. கருகிவிடுகிறது. அதற்கு மேல் இருப்பது குழைந்து விடுகின்றது அதற்கு மேல் அப்படியே அரிசியாக இருக்கின்றது. சூட்டினுடைய இயக்கங்கள் இப்படி மூன்று விதமாக வருகின்றது. சமையலில் பக்குவம் இல்லை என்கிற பொழுது சாப்பிட முடியாது போய்விடுகின்றது.

கோபமாக இருக்கும் பொழுது பாருங்கள்… அடுப்பிலே சூட்டை அதிகமாக்கிக் கொண்டே செல்வார்கள். அப்போது (வேகமாக) கொதித்து வரும் பொழுது கோபத்துடனே மூடியை வெடுக் என்று எடுப்பார்கள்.
1.துணியை வைத்து எடுப்பதற்கு மாறாக அப்படியே கையில் எடுப்பார்கள்
2.சூடு கையில் தாக்கியவுடன் சனியன்…! எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தேன்
3.கடைசியில் என் கையில் சுட்டு விட்டது…! என்று யாரால் இவர்கள் கோபமானார்களோ அவர்களைத்தான் குற்றமாகச் சொல்வார்கள்.

காரணம்… இது எதைச் செய்கிறது என்றால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான். இயக்கச் சக்தியாக மாறி நம்மை அந்த வழிக்கு அழைத்துச் செல்கின்றது. இதை எல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா

இந்த மாதிரி உணர்வுகள் வந்தாலும் நம்மை அது ஆட்சி புரியக்கூடாது. ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று
1.எதனால் அந்தக் கோபம் வந்ததோ அந்த நிலையை மாற்ற
2.மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
3.என்னைப் பார்ப்பவர்களுக்கு எல்லாம் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும்
4.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… சிந்திக்கும் ஆற்றல் வர வேண்டும் என்று
5.இதை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

நம் சொல் அடங்கி அடுத்து மற்றவர்களுக்கு நாம் தெளிவான ஆலோசனைகளைச் சொல்லக்கூடிய… பக்குவமான நிலையாக அது வெளிப்படும்.

ஆண்கள் கோபமாகப் பேசினாலும் பெண்கள் இந்த முறைப்படி செய்து தன்னையும் சாந்தப்படுத்தி… கணவரையும் சாந்தப்படுத்த முடியும்

இல்லையென்றால் ஓம் நமச்சிவாய… சிவாயநம ஓம்… அதாவது அவர்கள் உணர்வு இங்கே இயக்கி “என் கணவர் என்னைப் பார்த்துக் கோபமாகவே பேசுகின்றார்… என்னை பார்த்தாலே அவருக்கு ஆக மாட்டேன் என்கிறது…! என்று இப்படி வந்துவிடும்

அதற்குப்பின் கணவரிடம் என்னதான் திருப்பிச் சொன்னாலும் அந்தச் சொல் அங்கு எடுபடாது. சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத் தான் பயிற்சியாகக் கொடுக்கின்றோம். ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று இந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்
1.என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் தோன்ற வேண்டும் என்று
2.இதை நாம் ஒரு கவசமாக ஆக்கி… நம் ஆன்மாவிலே அதை அதிகமாக்கி… முன் பகுதிக்குக் கொண்டு வர வேண்டும்.

சக்தியின் சொரூப நிலையை எண்ணியே வணங்கிடத்தான் முடியும்

சக்தியின் சொரூப நிலையை எண்ணியே வணங்கிடத்தான் முடியும்

 

இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள ஆவிகளின் சுமையுடன் நம்மை அறியாமலேயே அவற்றின் சக்திகள் பலவற்றை நம்முடலில் நாம் ஏற்றிக் கொண்டுள்ளதினால் தான் நம்முள் உள்ள குண நிலையை
1.நம் குண நிலைக்கு மேல் பிற அணுவின் செயலை நம்முள் ஏற்படுத்தி
2.அதனால் நமக்கு வரும் பல இன்னல்களின் நிலையுடன் வாழ்கின்றோம்.

நம் சக்தியின் செயலை நாம் பெற வேண்டும். பல அணுக்கள் நம் உடலிலிருந்து செயல்பட்டாலும்…
1.அவ்வணுக்களின் எண்ணத்திற்கு நம் புத்தியை அடிபணிந்து செல்லாத நிலைப்படுத்தி
2.நம் தியான சக்தியின் ஜெபத்தை நாம் பெற வேண்டும்.

எண்ணத்தில் கலக்கத்தை அண்ட விட்டால் நம் உடலிலிருக்கும் பிற அணுவின் துரிதம்தான் செயல்படும். நம் நிலை ஒரே நிலையிலிருந்தாலும் நம்முடன் கலந்து வாழ்பவர்களின் எண்ண நிலையின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் தாக்கும் பொழுது நம் நிலையும் மாறுபடும்.

சந்தோஷமான சூழ்நிலை உள்ள இடத்தில் நாம் உள்ள பொழுது நம் நிலையும் அங்குள்ளோரின் நிலையும் மகிழ்ச்சியுடன் உள்ளதல்லவா…? அதே நிலைபோல் துக்கம் உள்ள இடத்திலும் அங்குள்ளோரின் நிலையும் கவலை கொண்டதாக உள்ளதல்லவா…?

ஏனென்றால் இந்தக் காற்றினில் அனைத்து நிலைகளும் கலந்துள்ளன.

நாம் எந்நிலையில் உள்ளோமோ அந்நிலையில் சுற்றிக் கொண்டுள்ள சுவாசத்தின் துரித நிலை நம் நிலைக்கும் வந்து தாக்கி நம்மையும் அச்சூழ்நிலையில் கலக்கச் செய்கிறது.

இக்காற்றினில் உள்ள துரித நிலை கொண்டு எந்த இடத்தில் நாம் உள்ளோமோ அந்த நிலையின் சூழ்நிலைகேற்ப நம்மை அறியாமலே நாம் அடிமைப்பட்டு செயல்படுகின்றோம்.

இவ்வெண்ணத்தின் நிலைதான் இவ்வனைத்து நிலைகளுக்கும் நம்மை அடிகோலுகிறது.

நம்மில் வாழ்ந்த பெரியோர்கள் இந்நிலையிலிருந்து நாம் மாறுபடுவதற்குத்தான் இப்பக்தி நிலை… தியான நிலை… என்று நம்மை நல்வழியில் அழைத்துச் செல்லப் பல வழிகளை நமக்கு உணர்த்தினர்.

இந்நிலையை அறிந்த சிலரும் சில வினாக்களை எழுப்புகின்றனர். ஆண்டவன் அருள் பெற்று மகான் என்று பலரும் போற்றும் நிலையில் உள்ளவருக்கும் பல கஷ்டங்களும் பல உபாதைகளும் அவர் உடலில் வருகிறதல்லவா…? அது எதனால்…?

நம் கலியுடன் வாழ்ந்த மகான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற நாமம் கொண்டவர் வாழ்ந்த கடைசிக் காலத்தில் அவர் உடலில் பல உபாதைகள் இருந்தனவே.

அவர் தான் இவ்வுலகத்திற்கு இக்கலியில் வாழும் மனிதர்களுக்காக அவர்கள் நிலைக்கு புரியும்படி பல அருட்சொற்களை வெளியிட்டு பல ஜெபங்கள் இருந்து பல வழிகளைப் புகட்டினார். பலருக்குப் பல நல் நிலைகளைப் புகட்டிய அவர் உடலிலேயே பல நோய்கள் ஏன் தாக்கின..?

அவர் அவ்வுடலை அவரின் சொந்தமாகக் கருதவில்லை. மக்களுடன் மக்களாக வாழ்ந்தது தான் இவரின் நிலை.

இவரிடம் உபதேசம் பெற வருபவர்களின் எண்ணத்திற்கும் மற்ற நிலையில் வருபவர்களுக்கும் இவரின் நிலையை ஆண்டவனாக எண்ணி அவர்களின் கஷ்டத்தை இவரிடம் செப்பிடும் பொழுது இவரின் ஜெபத்தின் பயனால் இவரிடம் அருள் வேண்டி வருபவர்களின் உடல்களில் உள்ள உபாதைகளை இவர் ஈர்த்து இவர் உடலில் ஏற்றுக் கொண்டு அவர்களை நலமுடன் வாழும் நிலைப்படுத்தி அனுப்பினார்.

இவர் பெற்ற சக்தி இவரைக் காண்பவரின் நிலையிலுள்ள உபத்திரவத்தைத் தான் ஈர்த்து வெளிப்படுத்தும் நிலை பெற்றிருந்தார்.

ஆனால் அந்நிலையில் அஜ்ஜெப நிலை செய்யும் பொழுது ஈர்த்து உடனே வெளிப்படுத்தா விட்டால் இவர் இஜ்ஜெப நிலைக்கு வரும் காலத்திற்கு முதலில் இவர் உடலில் இருந்த அணுக்களின் வேகத்தினால் மற்றவரிடமிருந்து இவர் ஈர்த்த அவ்வியாதியின் அணுக்கள் இவர் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

இந்நிலையில் வந்ததுதான் அவரின் அந்திமக் காலத்தில் நடந்த நிலை. நிலை அறிந்தேதான் அவரும் வாழ்ந்தார். இத்தவயோக முனிவர்களின் நிலையெல்லாம் இதைப்போல்தான்.

உடல் உபாதையில் மற்றவர்கள் நிலை இருக்கும் பொழுது அவற்றைத் தான் ஈர்த்து வெளிப்படுத்திட முடியும். அவர்களைக் குணமாக்கிடவும் முடியும்.

இதுவே இவ்வுடல் தசைப் பாகத்தில் மட்டும் இந்நிலையைச் செய்திட முடியுமே தவிர இவ்வுடலிலுள்ள எலும்பின் நிலையில் உள்ள மாற்றத்தையும் பிணியையும் எம்முனிவனாலும் சித்தனாலும் ஈர்த்துச் செயலாக்கிட முடியாது.

ஆவி நிலைகொண்ட தசையில் உள்ள நிலைகளை மட்டும் தான் குணப்படுத்திட முடியும்.

1.சக்திக்கும் சக்தி வாய்ந்த அச்சக்தி தேவனின் அருளை வென்றிட
2.எந்த ரிஷி நிலை பெற்றாலும் அச்சக்தியேதான் ஓங்கி நிற்கும் நிலை உள்ளது.
3.அச்சக்தியின் சொரூப நிலையை எண்ணியே வணங்கிடத்தான் முடியும்.

ஆகவே… நம்மில் நம் எண்ணத்தை நல் நிலைப்படுத்தி
1.நமக்குள் இருக்கும் மற்ற அணுக்களின் செயல்களிலிருந்து
2.நம்மை நாம் பாதுகாப்புடன் வாழும் நிலைக்கு முதலில் பக்குவம் கொண்டு வந்திட வேண்டும்.