பிரம்ம முகூர்த்தம்

பிரம்ம முகூர்த்தம்

விஞ்ஞான அறிவு கொண்டு இன்று எத்தனையோ புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் காணுகின்றார்கள்.
1.பல இரசாயண மருந்துகளைக் கொண்டு அதை இஞ்செக்சன் மூலம் மனிதனுக்குள் செலுத்தி இரத்தத்தில் கலக்கப்பட்டு
2.உடலில் இருக்கும் அணுக்களைச் சிறுகச் சிறுக மாற்றி
3.மனிதனை 1500 ஆண்டுகள் வாழ வைக்க முடியும் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்றனர்.

ஆனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தியானத்தின் மூலம் எடுத்து அந்த உணர்வை நுகர்ந்து இரத்தத்தில் கலக்கச் செய்து நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்கு அதைச் சேர்ப்போம் என்றால் அந்த ஒளியின் உணர்வாக வளர்ச்சி அடைகின்றது.

அது முழுமையடைந்த பின்…
1.உடலை விட்டு எப்போது சென்றாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் செல்கின்றோம்
2.என்றுமே அழியாத நிலைகள் கொண்டு ஒளி உடல் பெறுகின்றோம்.

அன்று வாழ்ந்த அகஸ்தியன் தன் உயிருடன் ஒன்றி உணர்வின் தன்மையை எப்படி ஒளியாக மாற்றினானோ… அதே உணர்வு “துருவ நட்சத்திரமாக இருக்கும்” அந்த உணர்வினை நாம் கவர்ந்தால் நாமும் ஒளி உடல் பெறலாம்.

உயிருடன் ஒன்றி ஏகாந்த நிலையாக இருளை மாற்றிப் பேரருள் என்ற ஒளியாக மாற்ற முடியும். அந்தத் திறனை நாம் எல்லோரும் பெற வேண்டும்.

அத்தகைய சக்திகளைத் தான் அதிகாலை துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

எந்த ஆலயத்தை எடுத்துக் கொண்டாலும் அதிகாலை நான்கிலிருந்து ஆறு மணிக்குள் தான் மணிகளை ஒலிப்பார்கள். ஆலய வழிபாடு என்று சட்டத்தை ஏற்றுவார்கள். எல்லா ஆலயங்களிலும் அந்த நேரத்தில் தான் பூஜைகள் எல்லாம் செயல்படுத்துகின்றனர்.

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை “பிரம்ம முகூர்த்தம்…” என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது பேரருள் பேரொளியாக நமக்குள் வளர்கின்றது. இதை மறவாது நாம் செய்து பழக வேண்டும்.

ஆனால் தீமைகளைச் செயல்படுத்தும் நேரம் இரவு பணிரெண்டு மணி என்று அந்த இரண்டுங்கெட்டான் நேரத்தில் செய்கின்றனர்.

மற்றொருவருக்குத் தீய நிலைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று அந்த இரவு 12 மணிக்குத் தீய தெய்வங்களை வணங்கி மந்திரவாதிகள் அதைச் செயல்படுத்துவார்கள்.

ஆனால் அதிகாலை நான்கு மணிக்கு அருள் உணர்வுகளை நல்வழிப்படுத்தும் நேரமாக இருக்கின்றது. அந்த நேரத்தை நல்லதை உருவாக்கும் காலமாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
1.ஆகவே உங்கள் உயிரைத் தயவு செய்து கடவுளாக மதியுங்கள்.
2.அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்று…!

அனைத்தையும் தெரிந்து கொள்ளும் உணர்வினை உயிர் ஈசனாக இருந்து நமக்குள் வெளிப்படுத்துகின்றான்.
1.அவன் நம்முள் இருக்கும் பொழுது அவனைப் போன்று நாம் ஆகவேண்டும்.
2.உணர்வுகளை எல்லாம் அருள் ஒளியாக மாற்ற வேண்டும்
3.இனி பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று எண்ணுங்கள்.

ஞானத்தின் வழியில் உயர வேண்டும் என்பதற்காக இரகசியங்கள் அனைத்தையும் கூறிக் கொண்டு வருகின்றேன் – ஈஸ்வரபட்டர்

ஞானத்தின் வழியில் உயர வேண்டும் என்பதற்காக இரகசியங்கள் அனைத்தையும் கூறிக் கொண்டு வருகின்றேன் – ஈஸ்வரபட்டர்

 

1.எண்ணிலடங்காத பிறவிகள் எடுத்து எடுத்து இளைக்கலுற்றேன் இறைவா…! என்றும்
2.ஏழு பிறப்பின் வினைகளும் அகல வேண்டும் என்றும் அன்று கவி புனைந்தார்கள்.

ஆனால்… அந்த எண்ணிலடங்காத பிறவிகளைப் பற்றியும் ஏழு பிறவிகளைப் பற்றியும் அந்த உண்மை நிலைகளை யாரப்பா அறிந்து கொண்டார்கள்…?

ஏனென்றால் இது விவாதம் கொண்டு உரையாட வேண்டிய விஷயம் அல்ல…! சிந்தனையில் கொள்ள வேண்டிய தனித்துவ நிலையப்பா இது.

உயிராத்மா தன் எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் செயலில் தனக்குள் சேர்த்துக் கொண்ட அமிலத் தன்மைகளில் குணங்களால் அதனுள் எழுந்திட்ட வீரிய நிலைக்கொப்ப சுவாசம் கொண்டே தனக்கொத்த தன்மைகளில் பிறப்பிற்கு வருகின்றது.

மனிதனாகப் பிறப்பிற்கு வரும் உயிராத்மா பிறவி என்ற மாயையில் தன் உண்மை நிலை மறக்கப்பட்டே பிறந்து வருகின்றது.

பூமி சமைத்து வெளிப்படுத்தும் சக்திகளைச் சுவாசமாக்கி அதன் வழி அறிவின் ஞானம் பெற்று அனுபவமாகப் பெறும் செயல்களில் மனித எண்ணத்தின் செயல்பாடே…
1.தனக்குத் தேவையான காரியங்களைச் செயல்படுத்தும் அனைத்திலும்
2.“நான்…!” என்ற உணர்வைக் கூட்டிக் கொண்டே வினை செயல் புரிகின்றது.

எந்த எண்ணம் வலுவோ அந்த எண்ணத்தின் வட்டச் சுழற்சியில் முதிர்வு நிலை பெற்றுப் புவி ஈர்ப்பின் பிடிப்பில் தான் வலுக் கொண்டிட்ட குணங்களுக்கொப்ப “மீண்டும்…மீண்டும்…” பிறப்பிற்கு வருகின்றது.

பிறவி எடுத்திட்டதனின் பயன் என்ன..? என்ற வினா எழும்பினால்…

தியான வழியில் அறிவின் ஞானம் உயர் ஞானமாக்கும் சிந்தனை கொண்டு… தெளிவு கொண்டிட முயற்சிக்கும் பக்குவத்தில் “அனைத்துமே சித்திக்குமப்பா…!”

ஞானத்திற்குத் தேவை ஒன்று உண்டு. அதுவே உயர் ஞானம் பெற்றிட முயலும் “முயற்சி…!”

1.தன் உயிராத்ம வலுவின் முலாமைக் கூட்டிக் கொண்டு
2.எண்ணத்தின் செயலுக்கு எது தேவையோ அதையே முயற்சித்து…
3.அந்தப் பேரருளைக் கூட்டி
4.இதற்கு முன் எடுத்துக் கொண்ட வினைப் பயனை மாற்றிடும் நல்லாக்கத்தின் செயலே
5.மனிதன் தெய்வத் தன்மை பெற முயற்சித்தால் அது திருவினையாக்கும்.

தெய்வத் தன்மை பெறுவதுவும் ஒரு பிறவியப்பா…!

என் (ஈஸ்வரபட்டர்) நிலைக்கு நீங்கள் ஒவ்வொருவரும் உயர்ந்திட வேண்டும் என்பதற்காகச் சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் கூறி வருகின்றேன்.
1.அது அனைத்தையும் நீங்கள் பெற்று
2.“என்னையும் முந்திச் செல்லவே ஆசி கூறுகின்றேன்…!”

மனிதன் என்ற பிறப்பில் தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு தன்னுள் உள்ள இறைச் சக்தியை வலுக் கூட்டும் முயற்சிக்குச் சங்கட அலைகளை வாழும் வாழ்க்கை மோதலிலிருந்து அறவே விலக்கிடல் வேண்டும்.

எண்ணத்தில் கடுமையும்… சொல்லில் உபதேசமும் உரைத்திடும்… எத்தகைய சக்தி பெற்ற ஞானவான்கள் யாராக இருந்தாலும்
1.சத்தியம் என்ற நேர் பாதை காட்டிடும் உண்மை நிலைக்கு
2.தனக்குள் இருக்கும் எண்ணத்தின் கடுமையை மாற்றிக் கொண்டால்
3.அவர்களும் நல் நிலை பெற்றிட முடிந்திடும்.

ஆகவே எல்லா உயிர்களையும் சமமாக… கடவுளாக மதிக்கும் உயர் ஞானத் தன்மையின் வலுவைக் கூட்டிக் கொண்டால் இந்த மனிதப் பிறவியிலேயே தெய்வப் பிறவி நிலை பெற்று விடலாமப்பா…!

எனது ஆசி உங்களுக்கு உறுதுணையாக இருக்குமப்பா…!